கிறிஸ்தீனாளின் பிரயாண ஏவுதல்கள்
கிறிஸ்தியானுடைய மனைவிக்கு அவள் மோட்ச பிரயாணம் செய்ய துவக்கினது முதல் கிறிஸ்தீனாள் என்ற பேர் வழங்கப்பட்டது. அவளுடைய புருஷன் ஆற்றைக் கடந்த நாள் முதல் இவனைப் பற்றிய செய்தி ஒன்றும் அவளுக்கு வந்து எட்டவில்லை. இந்தச் செய்தி அவள் மனதை வதைத்துக் கொண்டிருந்தது. நம்முடைய அருமை நாயகனும் போனார், நமது இல்லற சம்பந்தமும் அறுபட்டுப் போயிற்று என்ற எண்ணம் அவள் மனதில் வந்தது. ஏனென்றால் நீ அறிந்திருக்கிற பிரகாரம் ஜீவனுள்ளோர் மரித்தோருடைய சாவினால் உண்டான நஷ்டங்களை அன்பினால் நிiனைவுகூர்ந்து அனுதாபப் படுகிறது இயல்புதானே! அதைத் தடுக்க யாரால் ஆகும்? அவள் தன் புருஷனைப் பற்றி நினைத்த இப்படிப்பட்ட செய்திகள் அவளை அடிக்கடி கண்ணீர்விடப்பண்ணிற்று. இதுமாத்திரம் அல்ல, அவள் தனக்குள்ளே, என் கணவனை அப்புறம் ஒருக்காலும் காணாதது, நான் அவருக்குக் காட்டின கீழ்ப்படியாமையின் குணத்திலேதானோ! அதினாலேதான் இவ்வண்ணம் திடீர் என்று நம்மைவிட்டுப் பிரிந்து போனாரோ என்று அடிக்கடி ஆலோசிப்பாள். இப்படி ஆலோசிக்க, ஆலோசிக்க அவள் தன் புருஷனை நேசியாதது, அவன் பேச்சை அவமதித்தது, அவபக்தியை காட்டினது முதலான இவை எல்லாம் ஈக்கள் மொய்த்தால் போல் அவள் மனதில் கூடி, மனச்சாட்சியை குத்தி அவளைக் குற்றவாளியாகத் தீர்த்தது. அதோடுகூட தன் புருஷன் இரவும் பகலும் இளைப்பாறாமல் இட்ட பெருமூச்சுகளும் அவன் விட்ட கண்ணீரும் அவன் பேசின வியாகுல வார்த்தைகளும் அவளையும் அவள் பிள்ளைகளையும் அவன் தன்னுடனே கூடப் புறப்படும்படியாக கெஞ்சிக் கூப்பிட்டும் அவள் கடின இருதயமாய் இருந்ததும் மொத்தமாய்ச் சொன்னால் கிறிஸ்தியான் சுமையோடு அலைந்து திரிந்த காலத்தில் அவளிடத்தில் என்ன பேசினானோ அவள் முன்பாக என்ன செய்தானோ அவை ஒவ்வொன்றும் அவள் மனதில் மின்னல்போல் பாய்ந்து அவள் நெஞ்சின் ஜவ்வை கிழித்துவிட்டது. விசேஷமாய் “நான் இரட்சிக்கப்படும்படி என்ன செய்வேன்?” என்று அவள் புருஷன் மனங்கசந்து அழுத சத்தம் அவள் காதில் துயரமாய் தொனித்தது.
அப்பொழுது அவள் தன் மக்களைக் கூப்பிட்டு, ஐயோ என் கண்மணிகளே, நாம் கெட்டோம், கெட்டோம் நான் உங்கள் தகப்பனுக்கு விரோதமாய் துரோகஞ் செய்தேன். அவரும் தமது காலத்தை தள்ளிக் கடந்து போய்விட்டார். அவர் தம்மோடு நம்மையும் புறப்பட விரும்பினார். ஆனால் நான் போகப் பிரியப்படவும் இல்லை, உங்களுடைய ஜீவனிலிருந்து உங்களையும் தடைசெய்துவிட்டேன் என்று சொன்னாள். அதைக் கேட்ட மக்கள் எல்லாரும் தங்கள் தகப்பனுக்கு பின்னாலே புறப்பட்டுப்போக வேண்டுமென்று கூவென்று அலறி அழுதார்கள். அதற்குக் கிறிஸ்தினாள் சொல்லுவாள்: ஆ ! நாம் அவரோடு கூடப்போகும் பாக்கியத்தை பெற்றிருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும். இனி தனித்துப் பயணம் பண்ணுவதிலும் அப்படிச் செய்திருந்தால் அதிக சந்தோசமாய் முடிந்திருக்கும். ஏனெனில் நான் முன்பு உங்கள் தகப்பனாருடைய எண்ணமும் பேச்சும் எல்லாம் புத்தி மாறாட்டத்தால் உண்டானது என்றும் அல்லது அவர் தமது மனோ ராஜ்யத்தால் உண்டான வீண் எண்ணங்களின்படி புலம்புகிறார் என்றும் புத்தியீனமாய் நினைத்த போதிலும், இப்போது அவை எல்லாம் வேறொரு முகாந்தரத்தால் உண்டானது என்றும், ஜீவ ஒளி அவருக்குள் வீசினதால் அதின் உதவியைக் கொண்டு அவர் (யாக்கோபு 1 : 23 – 25 யோவான் 8 : 12) மரணக் கண்ணிகளுக்கு விலகிக் கொண்டார் என்றும் எனக்குத் தெரிய வருகிறது என்றாள். அதைக் கேட்ட பொழுது அவர்கள் எல்லாரும் மறுபடியும் அழுது, ஆ, அந்த நாளில் நாம் புறப்பட்டோம் இல்லையே, ஐயோ, என்று புலம்பினார்கள்.
அடுத்த இரவில் கிறிஸ்தீனாள் ஒரு சொப்பனம் கண்டாள். அவள் தன் சொப்பனத்தில், இதோ ஒரு அகலமான தோற் சுருள் அவளுக்கு முன்பாக விரிக்கப்பட்டிருக்கவும் அதில் அவளுடைய குற்றமுள்ள நினைவுகள், பேச்சுக்கள், செய்கைகளாகிய சகல நடபடிகளும் எழுதப்பட்டு கரேலென்று விளங்கவும் கண்டாள். கண்டபோது அந்த நித்திரையிலேயே அவள் சத்தமிட்டு “தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாய் இரும்” (லூக்கா 18 : 13) என்று கதறினாள். அவள் அலறிச் சொன்ன சத்தத்தை அவளுடைய பிள்ளைகள் கேட்டார்கள்.
அப்புறம் அவள் தன் கட்டிலின் ஓரமாய் இரண்டு இருள் மயரூபிகள் நின்றுகொண்டு இவள் நடக்கும்போதும், தூங்கும்போதும் இரக்கம் இரக்கம் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறாளே, இந்த மனுஷியை நாம் என்ன செய்யலாம்? இப்படியே செய்து கொண்டு வரும்படி நாம் இடங்கொடுத்துவிட்டால் இவள் புருஷனை நாம் இழந்து போனது போல இவளையும் இழந்து போகவேண்டிய திருக்குமே; ஆகையால் ஒரு வழியால் ஆகாவிட்டால் வேறு வழியிலாவது இந்தக் கவலையை அவளைவிட்டு பிரித்துப் போட வேண்டும், அப்படிச் செய்யாவிட்டால் உலகம் முழுதும் கூடிப் பிரயாசப்பட்டாலும் அவள் தன் மோட்ச பிரயாணத்தை நிறுத்த மாட்டாள் என்று பேசிக்கொண்டதையும் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள். விழிக்கவே அவள் தேகம் எல்லாம் வேர்வையால் நனைந்தது. கைகால் அவயவங்கள் எல்லாம் ஆட்டங் கொடுத்தது.
சற்று நேரத்துக்குப் பின்பு அவள் மறுபடியும் நித்திரைக்குப் போனாள். அப்போது தன் புருஷன் சிரஞ்சீவிகளான ஒரு பெருங் கூட்டத்தோடு பாக்கியமான ஒரு இடத்தில் நின்றுகொண்டு, தமது சிரசுக்குமேல் வான வில்லுடையவராய் சிம்மாசனபதியாய் சிறந்து வீற்றிருக்கும் ஒருவருக்குமுன்பாக சுரமண்டலம் ஏந்தி கீத வாத்தியங் களை வாசிக்கிறதுபோலவும் கண்டாள். அதுவுமின்றி தன் கணவன் அவருடைய பாதபடி மட்டும் குனிந்து வணங்கி “என் ஆண்டவராகிய ராஜாவே! அடியேனை இந்த இடத்திற்குள் கொண்டு வந்து சேர்த்ததற்காக நான் உம்மை துதித்து ஸ்தோத்திரிக்கிறேன்” என்று சொல்லுகிறதாகவும் அந்தச்சமயத்தில் அந்த மன்னருக்கு முன்பாக நின்ற ஒரு கூட்டம் தங்கள் தங்கள் சுரமண்டலங்களை வாசித்து முழக்கமாய் பாடுகிறதையும் கண்டாள். ஆனால் அவர்கள் பாடினது இன்னதென்று கிறிஸ்தியானுக்கும் அவன் தோழருக்கும் தெரியுமே அன்றி ஜீவனுள்ளோரின் தேசத்திலுள்ள வேறொருவருக்கும் தெரியமாட்டாது.