யதார்த்தனுடன் கூடுதல்
போகிற வழியில் ஒரு கருவாலி மரம் இருந்தது. அந்த மரத்தண்டை போகவே, அதின் கீழ் பழைய பிரயாணி ஒருவன் படுத்திருந்து அயர்ந்து நித்திரை செய்யக் கண்டார்கள். 1 அவனுடைய உடுப்பினாலும், தடியினாலும், கச்சையினாலும் இவன் மோட்ச பிரயாணிதான் என்று அவர்கள் திட்டமாய் அடையாளம் கண்டு கொண்டார்கள்.
வழிகாட்டியாகிய தைரிய நெஞ்சன் அந்த ஆளை தட்டி எழுப்பினார். உடனே அந்த கிழட்டு பிரயாணி திடுக்கென்று எழுந்து கண்ணை ஏறடுத்துப் பார்த்து, என்ன செய்தி அப்பா? நீ யார்? என்ன காரியமாய் வந்தாய்? என்று கத்தினான்.
தைரி: வா மனுஷனே வா! ஏன் அவ்வளவு கோபம்? இங்கே உனக்கு சத்துருக்கள் ஒருவரும் இல்லை, எல்லாரும் சிநேகிதர்கள்தான் என்றார். அப்போது கிழவன் மெதுவாக எழுந்து சண்டைபோடப் போகிற வனைப் போல் கால் வைத்து முறுக்கிப் பார்த்துக் கொண்டு, நீங்கள் யார்? என்று கேட்டான். அதற்கு வழிகாட்டி: என் பேர் தைரிய நெஞ்சன், உச்சித பட்டணத்துக்கு போகும் இந்தப் பிரயாணிகளை நான் வழி நடத்திக்கொண்டு போகிறேன் என்றார்.
யதார்த்தன்: அதற்கு யதார்த்தன் என்னும் அந்தக் கிழவன்: என் குற்றம் மன்னிக்கும்படி மன்றாடுகிறேன். சில காலத்துக்கு முன்னர் அற்ப விசுவாசியின் பணங்களை பறி முதல் செய்த கொள்ளைகாரருடைய கூட்டத்தை நீங்கள் சேர்ந்தவர்களாக்கும் என்று நான் நினைத்து பயந்தேன். இப்போது காரியம் வேறே என்று கண்டு கொள்ளுகிறேன். நீங்கள் எல்லாரும் மகா யோக்கியர் போல காணப்படுகின்றீர்கள். 2
தைரி: நாங்கள் அந்தக் கொள்ளைக்காரராகவே இருந்தால் நீஎன்னதான் செய்வாய்? உன்னால் என்ன ஆகும்?
யதா: ஆகிறதா! என் மூச்சுப்போகும் அந்தக் கடைசி மட்டும் ஒரு கை பார்த்துத்தான் இருப்பேன். அப்படியே நடந்து இருக்குமானால் நான் தோற்றுப் போவேன் என்று மாத்திரம் கனவிலும் எண்ண வேண்டாம். எனெனில் ஒரு கிறிஸ்தவன் தானே இடம் கொடுத்தால் அன்றி மற்றப்படி தோல்வி அடையவே மாட்டான்.
தைரி: பெரியவரே, நன்றாய்ச் சொன்னீர். நீர் இவ்வளவு யதார்த்தத்தோடு பேசினதினால் உம்மைச் சேவல் கோழியிலும் ஜாதி சேவல் கோழி என்று சொல்லுவேன்.
யதா: இதினாலே நீரும் மெய்யான மோட்ச பிரயாணம் இன்னதென்று அறிந்த ஆசாமி என்று நான் கண்டு கொண்டேன். ஏனெனில் நம்மைப்பற்றி இவர்கள் மெத்த லேசாய் யாராலும் கீழ்ப்படுத்தப்படலாம் என்று பலர் எண்ணிக் கொள்ளுகிறார்கள்.
தைரி: நாம் இங்கே ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டது சந்தோசமான காரியம்தான். ஆனால் தயவுசெய்து தங்கள் நாமதேயம் என்னவென்றும் தங்களுடைய பிறப்பிடம் இன்னது என்றும் நான் அறிந்து கொள்ளலாமா?
யதா: என் பேரை நான் சொல்லமாட்டேன். ஆனால் மூடத்தனம் என்னும் ஊரில் இருந்து வந்தேன். அது நாசபுரிக்கு நான்கு மைல் களுக்கு அப்பால் இருக்கிறது.
தைரி: ஓகோ, நீர் அந்த ஊர்க்காரரா? அப்படியானால் நான் உம்மை அரைவாசி அறிவேன் போல் இருக்கிறது. உம்முடைய பேர் யதார்த்தன் அல்லவா?
யதா: அப்படிச் சொன்ன உடனே பெரியவர் முகம் சுண்டிப் போயிற்று. அவர் சொல்வார்: நான் என் பேரின் அர்த்தப்படியுள்ள யதார்த்தன் அல்ல. வெறும் பேருடைய யதார்த்தன். 3 என் பேரின் பிரகாரம் என் குணமும் இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் ஐயா! நான் என்னுடைய ஊரின் பேரை சொன்ன உடனே நீர் ஆளின் பேரை உத்தேசித்துச் சொல்லி விட்டீரே, அது எவ்விதம்?
தைரி: என் எஜமான் உம்மைக் குறித்து முன்னமே சொல்லி இருக்கிறார். ஏனெனில் அவருக்கு இந்த பூலோகத்தில் நடந்தேறுவது எல்லாம் நன்றாய்த் தெரியும். ஆனால் உங்கள் ஊர் நாசபுரியைவிட நாணங்கெட்டதாச்சுதே! அதில் இருந்து யாராவது மோட்ச பிரயாணி கள் எழும்புவார்களா என்று நான் அடிக்கடி அதிசயப்பட்டது உண்டு.
யதா: எங்கள் ஊர் நிரக்ஷரேகைக்கு வெகு தூரத்தில் இருக்கிறதால் 4 சூரியனின் வெப்பம் இல்லாமல் நாங்கள் குளிர் பிடித்து மடமையாகி இருக்கிறோம். என்றாலும் ஒரு மனுஷன் பனிக்கட்டி உறைந்திருக்கும் மலையில் வசித்தாலும் நீதியின் சூரியன் அவன்மேல் தன் கதிர்களை வீசினால் உறைந்துபோன அவன்இருதயம் உருகிவிடும் அல்லவா? என் விஷயமும் அப்படியே இருக்கிறது.
தைரி: அந்த வார்த்தையை நம்புகிறேன், பெரியவரே! நான் நம்புகிறேன், அது வாஸ்தவம் என்று எனக்குத் தெரிந்தும் இருக்கிறது என்றார்.
இதின் பின் அந்தப் பெரியவர் பிரயாணிகள் எல்லாரையும் அன்பின் பரிசுத்த முத்தத்தால் முத்தம் இட்டு அவரவர் பேர் என்னவென்றும், அவர்கள் பயணம் புறப்பட்டது முதல் பட்டபாடுகள் என்னவென்றும் விசாரித்தார்.
கிறி: அப்பொழுது கிறிஸ்தீனாள்: என் பேரை நீர் கேள்விப்பட்டு இருக்கலாம் என்று நம்புகின்றேன். மகாத்துமாவாகிய கிறிஸ்தியானே எனது கணவன், இந்த நான்கும் அவருடைய பிள்ளைகள் தான் என்றாள். அவள் தன்னை இன்னார் என்று இனம் சொன்ன உடனே அந்தப் பெரியவர் எவ்வளவு அதிசயப்பட்டார் தெரியுமா? அவர் தரையிலே துள்ளிக் குதித்தார், சிரித்தார், அவர் பின்னும்சொல்லுகிறார்.
யதா: அவனைப்பற்றி மெத்த மெத்த கேள்விப்பட்டது உண்டு. அவன் தன் ஜீவ காலத்தில் பண்ணின பிரயாணமும் அந்த பிரயாணத்தில் அவன் செய்த யுத்தங்கள் முதலியவைகளைப்பற்றியும் நான் வெகுவாக கேள்விப்பட்டிருக்கின்றேன். உன் மனதின் ஆறுதலுக்காக சொல்லுகிறேன். அவனுடைய பேர் இந்த இடங்களில் எல்லாம் தொனிக்கிறது. அவனுடைய விசுவாசம், அவனுடைய துணிவு, அவனுடைய சகிப்புத்தன்மை, சகல நிலைகளிலும் அவன் காட்டிய உண்மை இவை முதலானதெல்லாம் அவன் பேரை பிரபலப்படுத்தி விட்டது என்று சொல்லி அந்தப் பையன்களுடைய பேரைக் கேட்டார். அவனவன் தன் தன் பேரைச் சொன்னான். அவர் மத்தேயுவைப் பார்த்து: நீ ஆயக்காரனாகிய மத்தேயுவைப்போல் சிற்றின்பத்தில் அல்ல, பேரின்பத்தில் நாட்டமாய் இரு என்றார். (மத்தேயு 10 : 3) அவர் சாமுவேலைப் பார்த்து, சாமுவேலே! நீ தீர்க்கத்தரிசியாகிய சாமுவேலைப்போல் விசுவாசியாகவும், ஜெப தியானம் செய்கிறவனாகவும் இரு என்றார். (சங்கீதம் 99 : 6) யோசேப்பைப் பார்த்து, நீ போத்திப்பார் வீட்டில் இருந்த யோசேப்பைப்போல் கற்புள்ளவனும், தீமைக்கு விலகி ஓடுகிறவனுமாய் இரு என்றார். (ஆதியாகமம் 39 : 12) அவர் யாக்கோபைப் பார்த்து, நீ நீதியுள்ள யாக்கோபைப் போலவும் கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைப் போலவும் இரு என்றார். (அப்போஸ்தலர் 1 : 13, 14) அப்பால் அவர்கள் தயாளியின் காரியங்களை அவருக்குச் சொல்லி, அவள் எவ்விதமாய் தன் ஊரையும், உறவினரையும் வெறுத்து கிறிஸ்தீனாளோடும் அவளுடைய பிள்ளைகளோடும் புறப்பட்டாள் என்று விவரித்துக் காட்டினார்கள்.
உடனே அந்தப் பெரியவர்: மாதே! உன் பேரே தயாளி தாயாமே. தயையே உன்னை ஆதரித்து, தயையின் ஊற்றைக் கண்ணாரக் கண்டு களிகூரும் மட்டும், உன் வழியில் நேரிடும் சகல துன்பங்களிலும் இருந்து அந்த தயை உன்னை வழிநடத்துவதாக என்று வாழ்த்தினார். இந்த விருத்தாப்பிய மகானுபாவர் அவரவரை வாழ்த்தும் வார்த்தைகளை எல்லாம் தைரிய நெஞ்சன் கேட்டு, அகமகிழ்ந்து புன்னகை கொண்டார்.
1. இந்த விஷயத்தில் நித்திரைபண்ணினது தப்பிதம் அல்ல, பிரயாணியானவன் நியாயப் பிரகாரமே இங்கு இளைப்பாறினான்.
2. நாம் தோழமை பிடிக்கும் எல்லாரும் மெய்யாய் நம்பிக்கொள்ளப் படத்தக்கவர்கள் என்று நாம் எண்ணலாகாது. நாம் படபடப்புடன் சிநேகிதரை சம்பாதிக்காதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியது. பக்தி வாழ்வு சம்பந்தமாய் இது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
3. இந்த தேசத்தில் அநேக கிறிஸ்தவர்கள் நல்ல அர்த்தமுள்ள பேர்களை தரித்துக் கொள்ளுகிறார்கள். அவர்கள் ஜீவியமும் அவர்கள் பேர்களுக்கு இசைந்தாற்போல் இருக்க அவர்கள் பிரயாசப்பட வேண்டும்.
4. சில ஜனங்கள் தங்களைச் சூழ்ந்திருக்கும் பல காரியங்களின் ஏதுவால் மற்றவர்களுக்கு ஒப்பும் நன்மை அடையாமல் தடைப்பட்டு இருக்கிறாப்போல் தோன்றுகிறது. பக்தியுள்ளவர்கள் மத்தியில் இருக்கும் ஒரு பொல்லாதவன் வெளிச்சத்துக்கும், அனலுக்கும் அருகில் இருக்கிறான். ஆனால் அவன் தன்னைப்போல ஒத்தவர்களின் கூட்டத்தில் இருந்தால் இருளும் குளிர்ச்சியும் அவனை வளைந்து கொள்ளுகிறது. என்றாலும் தேவன் அப்படிப்பட்டவர்களுக்கும் கிருபை உள்ளவராய் இருக்கிறார்.