அலங்கார மாளிகைப் பிரயாணம்
அப்புறம் நான் என் சொப்பனத்தில் தைரிய நெஞ்சன் முன்பாகவும் இவர்கள் பின்னாகவும் நடந்து போகிறதை கண்டேன். அவர்கள் தங்கள் வழியிலே வருகையில் கிறிஸ்தியானுடைய முதுகின் பாரம் தானாய் அறுந்து விழுந்து பக்கத்தில் இருந்த கல்லறைக்குள் உருண்டு காணாமலே போன இடத்துக்கு வந்தார்கள். இவ்விடத்திலும் அவர்கள் சற்று நேரம் தாமதித்து நின்று தேவனை ஸ்தோத்திரித் தார்கள். இப்பொழுது கிறிஸ்தீனாள் சொல்லுகிறாள்: ஆகா! திட்டி வாசலண்டை கேட்ட போதனை இப்போது என் மனதில் வருகிறது. அதாவது வார்த்தையாலும், செய்கையாலும் நமக்குப் பாவ மன்னிப்பு கிடைக்க வேண்டியது என்றும், பாவமன்னிப்பைப் பற்றிய வாக்குத் தத்தங்களைக் கொண்டு வார்த்தையாலும் அந்த மன்னிப்பை சம்பாதித்த வகையைக் கொண்டு செய்கையாலும் அருளப் படுகிறதென்றும் சொன்ன செய்தியை நான் நினைவுகூருகின்றேன். அந்த வாக்குத்தத்தங்களில் சில இன்னதென்று எனக்கு சுமாராய் தெரியும். ஆனால் செய்கையால் உண்டான பாவமன்னிப்பைப் பற்றி, அல்லது அந்த மன்னிப்பு சம்பாதிக்கப்பட்ட வகையைக் குறித்து, ஐயா தைரிய நெஞ்சனே, நீர் நன்றாய் அறிவீர் என்று நினைக்கின்றேன். ஆதலால் அதின் விபரங்களை எங்களுக்குச் சொல்லும்படி மன்றாடுகிறோம் என்றாள்.
தைரிய நெஞ்சன்: அதற்கு தைரிய நெஞ்சன் சொல்லுகிறான்: செய்கையால் உண்டான பாவமன்னிப்பு என்றால், அந்த மன்னிப்பு வேண்டிய ஒருவனுக்காக அது வேண்டாத வேறொருவரால் சம்பாதிக்கப்பட்டதையே குறிக்கும். இன்னும் இதை சற்று விளக்கிச் சொல்ல வேண்டுமானால் நீயும் தயாளியும் இந்தப் பிள்ளைகளும் பெற்றுக் கொண்டீர்களே அந்த மன்னிப்பு வேறொருவரால் சம்பாதிக்கப்பட்டது. உங்களை திட்டிவாசலண்டை ஏற்றுக் கொண்டாரே, அவரே அதைச் சம்பாதித்தவர். அவர் இரண்டு வழியாய் பாவ மன்னிப்பை உங்களுக்கு உண்டு பண்ணியிருக்கிறார். உங்களை மூடும்படியாக அவர் நீதியை நடப்பித்து உங்களைக் கழுவும்படியாக தமது இரத்தத்தை சிந்தியிருக்கிறார்.
கிறி: அவர் தமது நீதியை எங்களுக்குத் தந்துவிட்டால் தமக்கு என்ன செய்வார்?
தைரி: உங்களுக்கு வேண்டியதைப் பார்க்கிலும் அல்லது அவர் தமக்கே வேண்டியதைப் பார்க்கிலும் அதிகமான நீதி அவருக்கு உண்டு.
கிறி: அது எப்படி உண்டு? அதை தயவுசெய்து விளக்கிச் சொல்லமாட்டீரா?
தைரி: அதை என் முழு மனதோடும் விளக்கிச் சொல்ல ஆசையாய் இருக்கிறேன். ஆனால் ஏற்கெனவே உங்களுக்குச் சொல்ல வேண்டிய குறிப்பு உண்டு. அதாவது, நாம் இப்பொழுது யாரைக் குறித்துப் பேசப் போகிறோமோ அவருக்குச் சமமான ஆள் வேறொருவரும் இல்லை என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது. ஒரே ஆளுக்குள் அமைந்திருக்கும் இரு தன்மைகள் அவருக்கு உண்டு. அந்த தன்மைகள்இரண்டும் அறியக்கூடிய தெளிவாயும் பிரிக்கக்கூடாதபடி ஒன்றாயும் இருக்கின்றன. இந்த தன்மைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நீதி உண்டு. அந்த ஒவ்வொரு நீதியும் அந்தந்த தன்மைக்கு இன்றியமையாத அவசியமானது. ஆகவே அந்த நீதிகளில் ஒன்று தன்னைப் பிரத்தியேகப்படுத்திக் கொள்ளுகிறதால் அந்த ஆளின் தன்மையை அதோடு ஒழித்துவிடக்கூடுமானதாகும். இந்த நீதிகளில் நாம் பங்காளிகள் ஆகிறதும் இல்லை, இவைகள் ஒன்றினாலும் நாம் நீதிமான்கள் ஆக்கப்பட்டு பிழைக்கும்படி அவைகள் நமக்கு சாட்டப்படுகிறதும் இல்லை. அந்த இரண்டு தன்மைகளும் அவரில் ஒன்றாகப் பொருந்தியிருப்பதினால் இந்த நீதிகளை அல்லாமல் வேறொரு நீதியும் அவரிடத்தில் இருக்கிறது. இது மனுஷீக தன்மையை விட்டு முற்றிலும் பிரிந்திருக்கிற தேவ தன்மையின் நீதியாய் இராமலும் தெய்வீக தன்மையை விட்டு முற்றிலும் பிரிந்திருக்கிற மனுஷீக தன்மையின் நீதியாய் இராமலும் இரு தன்மைகளும் பொருந்தினதில் இருக்கிற நீதியாய் இருக்கிறது. இந்த நீதியானது அவருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட மத்தியஸ்த ஊழியத்துக்கு தகுந்ததும் தேவனால் அங்கீகரிக்கப்படத் தக்கதுமான ஒரு நீதியாய் இருக்கிறதென்றே சொல்ல வேண்டியது. அவர் முதலாம் நீதியைவிட்டு தம்மைப் பிரித்துக் கொள்ளுவது தமது தெய்வத் துவத்தை விட்டுப் பிரிதல் ஆகும். இரண்டாம் நீதியைவிட்டு விட்டுத் தம்மைப் பிரித்துக் கொள்ளுவது தமது பூரண மனுஷத்துவத்தை விட்டுப் பிரிதல் ஆகும். மூன்றாம் நீதியில் இருந்து தம்மைப் பிரித்துக் கொண்டால் தமது மத்தியஸ்த ஊழியத்தின் தகுதியை விட்டுப் பிரிதல் ஆகும். ஆதலால் வெளிப்படுத்தப்பட்ட தேவ சித்தத்துக்கு அடங்கினதான வேறொரு நீதி அவரிடத்தில் இருக்கிறது. இதையே அவர் பாவிகளுக்கு அளிக்கின்றார். இந்த நீதியினாலேதான் அவர்களுடைய பாவங்கள் மூடப்படுகின்றன. ஆனதினாலேதான், “ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக் கப்பட்டது போல ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்” (ரோமர் 5 : 19) என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது என்றார்.
கிறி: அப்படியானால் மற்ற நீதிகள் நமக்கு பிரயோஜன முள்ளவைகள் அல்லவோ?
தைரி: பிரயோஜனமுள்ளவைகள்தான். அவைகள் அவருடைய தன்மைகளுக்கும், ஊழியங்களுக்கும் மாத்திரம் தனிப்பட்ட அவசியமாயிருந்து பிறருக்கு சாட்டப்படக் கூடாததான போதிலும் அவற்றின் வல்லமையானது நீதிமானாக்கும் நீதியினால் உண்டாகும் புண்ணிய பலன்களை பலிக்கப்பண்ணுகிறவைகளாய் இருக்கின்றன. அவருக்கு இருக்கும் தெய்வீக நீதியானது அவருடைய கீழ்ப்படிதலை சித்திபெறச் செய்கிறது. மனுஷீக நீதியானது நீதிமானாக்கும்படியாக அவருடைய கீழ்ப்படிதலுக்குத் தகுதியைக் கொடுக்கிறது. இந்த இரண்டு தன்மை பொருந்தினதினால் உண்டாகிற அவருடைய மத்தியஸ்த ஊழியத்தின் நீதியானது தாம் அபிஷேகம் பெற்ற வேலையை நிறைவேற்றும்படியான ஆதிக்கத்தை உண்டாக்குகிறது.
ஆகவே, தேவனாக கிறிஸ்துவுக்குத் தேவையில்லாத ஒரு நீதி இருக்கிறது. ஏனெனில் அது இல்லாமலே அவர் தேவனாய் இருக்கிறார். அதோடு மனுஷனாக கிறிஸ்துவை நீதியுள்ளவராக்கும் படியாக அவசியம் இல்லாத வேறொரு நீதியும் இருக்கிறது.
ஏனெனில் அது இல்லாமலே அவர் பூரண மனுஷனாய் இருக்கிறார். அதுவும் அன்றி தேவ மனுஷனாக கிறிஸ்துவுக்குத் தேவையில்லாத இன்னொரு நீதியும் இருக்கிறது. ஏனெனில் அந்த நீதி இல்லாமலே அவர் தேவ மனுஷனாய் இருக்கிறார். இந்த இடத்தில் தேவனாகவும் கிறிஸ்துவுக்கு பிதாவாய் வேண்டியதல்லாத ஒரு நீதி இருக்கிறது. ஆதலால் அவர் அதை மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடும். நீதிமானாக்கும் நீதியாய் இருக்கிற அது தமக்கு தேவையில்லாதபடியால் அதை அவர் மற்றவர்களுக்கு கொடுத்து விடுகிறார். அதினாலேதான் அதை நீதியாகிய ஈவின் பரிபூரணம் என்று அழைத்திருக்கிறது. (ரோமர் 5 : 17) இந்த நீதியை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நியாயப் பிரமாணத்தின் கீழ் உண்டுபண்ணினதால் அது மற்றவர்களுக்கு கொடுத்துவிடப்பட வேண்டிய நீதிதான். ஏனெனில் அந்த நியாயப் பிரமாணமானது தன் கீழ் இருக்கும் அவர் நீதியாய் நடக்கும்படி மாத்திரம் அல்ல, மற்றவர்களுக்கு நேசம் பாராட்டும்படிக்கும் அது அவருக்கு இடம் கொடுக்கிறது. ஆதலால் நியாயப் பிரமாணத்தின்படி அவருக்கு இரண்டு அங்கிகள் இருக்குமானால் அங்கியில்லாதவனுக்கு அவர் ஒன்றைக் கொடுக்க வேண்டியதுதான். அப்படிக் கொடுக்க அவர் கடமைப்பட்டிருக்கிறார். மெய்யாகவே இப்பொழுது நமது ஆண்டவருக்கு இரண்டு அங்கிகள் இருக்கின்றன என்று வெளி யாகிறது. அதில் ஒன்று அவருக்காக, மற்றொன்று மற்றவர்களுக்குக் கொடுக்கும்படியாக. ஆதலால் அவர் அங்கியே இல்லாதவர்களுக்கு ஒன்றை இலவசமாய்க் கொடுக்கிறார். இந்த வண்ணமாக கிறிஸ்தீ னாளும், தயாளியும் மற்றும் இவ்விடத்தில் இருக்கிற யாவரும் செய்கையால்தான் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். அதாவது, வேறொருவருடைய செய்கையினாலே நீதியைச் சம்பாதிக் கிறீர்கள். உங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவே அந்த நீதியை நிறை வேற்றினவர். அவர் தாம் நிறைவேற்றின நீதியை தம்மை அடுத்து வரும் ஏழை எவனோ அவனுக்கு கொடுத்துவிடுகிறார்.
பின்னும் செய்கையால் மன்னிப்பை சம்பாதிக்கும்படியாக தேவனுக்கு கிரயம் போல ஒரு தொகை செலுத்தப்படவும் நமக்கு மூடி போன்ற ஒரு உடுப்பு செய்யப்படவும் வேண்டியது. பாவமானது நம்மை நேர்மையுள்ள பிரமாணத்தின்படியான நீதியுள்ள சாபத்துக்கு உட்படுத்தி விட்டது. இரட்சிப்பின் வழியாக மாத்திரம் நாம் இந்த சாபத்திலிருந்து விடுதலையாக்கப்படக்கூடும். நாம் செய்த பொல்லாப்புகளுக்குத் தகுந்த அபராதம் செலுத்தப்பட வேண்டும்.
உங்களுக்குப் பதிலாக வந்து உங்கள் ஸ்தானத்தில் நின்று உங்கள் பாவங்களுக்காக நீங்கள் அடைய வேண்டிய மரணத்தையும் அடைந்த உங்கள் ஆண்டவருடைய இரத்தமே அபராதமாக செலுத்தப்பட்ட தொகையாய் இருக்கிறது. இவ்வண்ணம் அவர் உங்கள் அக்கிரமங் களிலிருந்து உங்களைத் தமது இரத்தத்தால் மீட்டுக் கொண்டு அழுக்கும் அங்கவீனமுமான உங்கள் ஆத்துமாக்களை நீதியினால் மூடியிருக்கிறார். (ரோமர் 8 : 34 கலாத்தியர் 3 : 13) தேவன் உலகத்தை நியாயந்தீர்க்க வரும்போது அந்த நீதியின் நிமித்தமே அவர் உங்களுக்கு ஒன்றும் செய்யாதபடி சும்மா கடந்து போய்விடுகிறார்.
கிறி: இது ஒரு சிறந்த வீரத்துவம்தான்! நாம் வாக்கினாலும், செய்கையினாலும் மன்னிப்பைப் பெறுகிறோம் என்பது இப்போது எனக்கு விளங்குகிறது. பிரியமுள்ள தயாளி! இதை மறவாதிருப்போமாக. என் மக்களே, நீங்களும் இதை ஞாபகம் பண்ணிக் கொள்ளுவீர்களாக. ஐயாவே, என் கணவர் களிகூரவும் அவர் பாரம் இறங்கினதால் அவர் மும்முறை களிப்போடு குதிக்கவும் செய்ததும் இதுதான் அல்லவோ?
தைரி: ஆம், வேறொன்றினாலும் வெட்டப்படமாட்டாத அந்தக் கயிறுகளை இதைப்பற்றிய விசுவாசமே வெட்டிப்போட்டது. இந்த இரட்சிப்பின் வல்லமையை அவனுக்குத் திருஷ்டாந்தப் படுத்தும்படிக்கே அவனுடைய பாவபாரத்தை சுமந்து கொண்டு சிலுவைமட்டும் போகும்படி தேவன் சித்தம் கொண்டார்.
கிறி: நானும் அப்படியே நினைத்தேன். என் இருதயம் முன் அனுபவித்த சந்தோசத்திலும் பதின் மடங்கு சந்தோசத்தை இப்போது அனுபவிக்கிறதை நான் அறிகிறேன். நான் இன்னும் அதை சரியாய் உணர்ந்து கொள்ளாவிட்டாலும் இம்மட்டும் உணர்ந்திருக்கிற வரைக்கும் சொல்லவேண்டுமானால் இந்த உலகத்திலுள்ள எல்லாரிலும் பெரும் பாரம் சுமந்தோன் ஒருவன் என்னைப்போல் உணர்ந்து விசுவாசிப்பானேயானால், அது அவன் மனதுக்கு ஆனந்த களிப்பை உண்டாக்கும் என்று நன்றாய் அறிவேன்.
தைரி: இப்படிப்பட்ட காரியங்களைப் பார்ப்பதினாலும் இதைப்பற்றிப் பேசிக் கொள்ளுவதினாலும் ஆறுதலும் சுமையின் இலேசும் நமக்கு தோன்றுகிறதும் அல்லாமல், ஒரு வித அந்நியோந்நிய முள்ள குணமும் நமது மனதில் உண்டாகிறது.
எப்படியெனில் பாவ மன்னிப்பானது வார்த்தையால் மாத்திரம் அல்ல, செய்கையாலும் நமக்கு அருளப்படுகிறது என்பதை கேள்விப்படுகிற ஒருவன் அந்த இரட்சண்ய செய்கையின் விபரங்கள் இப்படி என்று கேள்விப்படும்போது செய்கையால் மன்னிப்பைச் சம்பாதித்த ஆளின்பேரில் அன்புகூராமல் இருப்பானா? 1
கிறி: அது மெய்; அவர் எனக்காக இரத்தம் சிந்தினார் என்ற செய்தி என் இரத்தத்தை பிழிந்து எடுத்தாற்போல் இருக்கிறது. ஆ, அன்புள்ள நேசரே! துதிகளுக்குப் பாத்திரரே! நீர் என்னை ஆட்கொள்ள வேண்டியவர்தான். நீர் என்னை உமது இரத்தக் கிரயத்தால் வாங்கினீர். என்னைச் சமூலமாய் ஆட்கொள்ள உமக்கு நியாயம் இருக்கிறது. நான் பெறும் விலையிலும் பதினாயிரம் மடங்கு அதிகமான விலையை எனக்காகச் செலுத்தியிருக்கிறீர்! இந்தச் செய்தி என் கணவரின் கண்களை அழச் செய்ததும், காலைத் தள்ளாடி நடக்கச் செய்ததும் அதிசயம் அல்ல. அவர் என்னை தம்மோடு பயணப்படும்படி பிரயத்தனம் செய்தாலும் படுதோஷியாகிய நான் அவரைத் தனியே பயணம் செய்ய விட்டுவிட்டேன். ஆ தயாளியே, உன் தந்தையும், தாயும் இங்கே வந்திருந்தால் எத்தனை ஆனந்தம்! கோழையும் வந்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமே, மோகினியும் வந்திருந்தாலும் மெத்தவோ நலமாய் இருக்கும். மெய்யாகவே மெய்யாகவே நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் வந்தது மெய்யானால் அவர்கள் மனதிலே நல்லுணர்வு உண்டாகும் என்பதற்கு சந்தேகம் இல்லை. அவர்களில் ஒருத்தியுடைய கோழைத்தனமாவது மற்றவளின் சிற்றின்ப ஆசையாவது அவர்கள் மனதை மாற்றி ஊருக்குத் திரும்பிப் போகப் பண்ணமாட்டாது என்றே உணருகிறேன்.
தைரி: நீ உன் அன்பின் அனலினால் இப்படி எல்லாம் சொல்லுகிறாய். இப்படியே எப்போதும் உனக்கு உணர்ச்சி இருக்கும் என்று நினைக்கிறாயா? இந்தப் பாக்கியத்தை எல்லாரும் அனுபவித்தவர்கள் அல்ல. அல்லது உங்கள் இயேசுவை இரத்தச் சோரையாகக் கண்ணோக்கும் ஒவ்வொருவனுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுகிறதும் இல்லை.
அவர் சிலுவையில் தொங்கின சமயத்தில் எத்தனையோ பேர் அவர் சமீபத்தில் நின்றார்கள். அவர் விலாவில் இரத்தம் ஓடினவராக தலை சாய்த்தபோது எத்தனையோ பேர் தங்கள் கண்களால் அதைக் கண்டார்கள். அப்படி இருந்தும், இப்படி நீ அன்பின் அனலால் பொங்குவது போல் அவர்கள் உள்ளம் பொங்கினதில்லை. அவர்கள் புலம்புவதற்குப் பதிலாக நகைத்து, அவருடைய தாசராகிறதற்குப் பதிலாக தங்கள் இருதயங்களை அவருக்கு விரோதமாய் கடினப் படுத்தினார்கள். ஆதலால் என் மக்களே! இப்பொழுது உங்களுக்கு உண்டாகிற ஆவியின் அனலும், உணர்ச்சியும் எல்லாம் நான் சொன்ன விஷயங்களை நீங்கள் தெய்வீக அருளால் தியானிப்பதினாலேதான் உண்டாகிறது. ஒரு தாய் கோழி தன் பொதுக் குரலால் தன் குஞ்சுகளுக்கு யாதொரு இரையையும் கொடுக்கிறதில்லை என்று நீங்கள் கேள்விப்பட்டதை மறந்து போக வேண்டாம். ஆகையால் இந்த உணர்ச்சி ஒரு விசேஷித்த கிருபையால் கிடைத்திருக்கிறது என்றார்.
அப்புறம் அவர்கள் எல்லாரும் ஏகமாய் வழிநடந்து, கிறிஸ்தியான் பயணம் செய்தபோது பேதை, சோம்பன், துணிகரன் ஆகிய மூவரும் படுத்துத் தூங்கினதாக அவன் சந்தித்த இடத்துக்கு வந்து சேர நான் என் சொப்பனத்தில் கண்டேன். வழிக்கு அப்பாலே அம்மூவரும் இரும்புச் சங்கிலிகளில் தொங்குகிறவர்களாக அவர்களுக்கு காணப்பட்டார்கள்.
தயா: அதைக் கண்ட உடனே தயாளி தங்களுக்கு வழித் துணையாய் வந்தவரை நோக்கி: ஐயா, இம்மூவரும் யார்? இப்படி இவர்கள் இங்கே தொங்க வைக்கப்பட்டிருப்பதின் அந்தரங்கம் என்ன? என்று கேட்டாள்.
தைரி: அதற்கு அவர்: இந்த மூவரும் தங்கள் துன்மார்க்கத்தில் பேர்போனவர்கள். மோட்ச பிரயாணிகளாக அவர்களுக்கு மனமும் இல்லை, மோட்ச பிரயாணிகளானவர்களை கெடுக்கக்கூடுமானால் அதற்கு வேண்டிய பிரயத்தனங்களை மனந்தளராது செய்ய இவர்கள் பின் வாங்குகிறதும் இல்லை. பேதமையும், சோம்பலும், துணிகரமுமே இவர்களை ஆட்கொண்டிருக்கிறது. சுறுசுறுப்பும், விடா முயற்சியும் உள்ள பிரயாணிகளை இவர்கள் தங்களுடைய துர்க்குணங்களினால் மேற்கொண்டு கெடுத்துவிட மகா சமர்த்தர். மோட்ச பிரயாணிகள் தங்களைப் போலொத்த குணங்கள் உடையவர்களாய் இருந்தாலும் கடைசியில் அவர்களுக்கு மோட்சம் கிட்டும் என்று ஏமாற்றி மோசம் பண்ண வல்லவர்கள். கிறிஸ்தியான் இவ்வழியே முன் போகையில் இவர்கள் எல்லாரும் பாதையின் பக்கத்தில் படுத்திருந்து தூங்கினார்கள். இப்போதோ நீங்கள் இவர்களைத் தொங்குகிற வர்களாக காண்கின்றீர்கள் என்றார்.
தயா: இவர்கள் மற்றவர்களுடைய பயணத்தை தடுத்துப் போட அவ்வளவு சமர்த்தரா?
தைரி: ஆம், ஆம். இவர்கள் அநேகரை வழியைவிட்டுத் திருப்பி விட்டார்கள். மந்த நடையனை இவர்கள் தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். அதுவும் அல்லாமல் மூச்சிளைத்தான், விரகதாபன், திருற்சாகம், தூக்கத்தலையன் ஆகிய இவர்களும் மந்தமகள் என்ற பேருடைய ஒரு பெண்ணும் இவர்கள் வலையில் சிக்கிக் கொண்டார்கள். மேலும் இவர்கள் உங்கள் ஆண்டவரைக் குறித்துப் பொய்யான சமாச்சாரங்களை பிரசித்திப்படுத்தி அவர் மகா கடினமுள்ள எஜமான் என்று சொல்லி அநேகருடைய மனதை மாற்றிப் போட்டார்கள். நீங்கள் போகும் நல்ல நாட்டைக் குறித்தும் இவர்கள் பல அபாண்டங்களை பரப்பி, அந்த நாடு சிலர் எண்ணுகிற வாழ்விலும் அரைவாசியுள்ளதல்ல என்று சொல்லி பலருடைய இருதயங்களை கலக்கிப் போட்டார்கள். இவர்கள் உங்கள் ஆண்டவரின் தாசரைப்பற்றி அவதூறுகளை பேசி அவர்களில் முதல் தரமானவர்கள் வம்பரும், தும்பரும், வண்டரும், துஷ்டருமானவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். இதுவும் அன்றி இவர்கள் தேவனுடைய அப்பத்தை தவிடு என்றும் அவர் தமது பிள்ளைகளுக்கு அருளும் ஆறுதல்களை மனக்கற்பனைகளேயன்றி மற்றொன்றும் இல்லை என்றும் மோட்ச பிரயாணிகளின் யாத்திரையினாலும் அவர்கள் படும் கஷ்ட நஷ்டங்களினாலும் யாதொரு லாபமும் கிடையாது என்றும் சொல்லுகிறவர்களாய் இருந்தார்கள் என்றார்.
கிறி: அதைக் கேட்ட கிறிஸ்தீனாள்: இவர்கள் இப்படிப்பட்ட பாதகரானால் இவர்களுக்காக என் மனம் இரங்கவே மாட்டாது. இவர்களுக்கு வரவேண்டியதே வந்து நேரிட்டிருக்கிறது. மோட்ச பிரயாணிகள் பார்த்து எச்சரிப்படைந்து கொள்ளும்படி வழியின் ஓரத்தில் அவர்கள் தொங்க வைக்கப்பட்டிருப்பது நல்லதுதான்; 2 இப்படித் தொங்கவிட்டிருப்பதோடு கூட இவர்களுடைய நட படிகளை எல்லாம் இரும்புத் தகட்டிலாவது பித்தளைத் தகட்டிலாவது தீட்டி இனி வரும் மோட்ச பிரயாணிகள் எச்சரிப்படையும்படி இவ்விடத்தில் பதித்தால் நலமாய் இருக்கும் அல்லவா? என்றாள்.
தைரி: நீங்கள் சற்று எட்டி நடந்து போய்ப் பார்த்தால் அப்படியே தகட்டில் தீட்டிப் பதிக்கப்பட்டிருப்பதை காணலாம் என்று தைரிய நெஞ்சன் சொன்னார்.
தயா: அப்போது தயாளி: ஆம், ஆம்; அவர்கள் தொங்கட்டும். அவர்கள் பேர் நாற்றமும் அவர்களின் கிரியை அவர்களுக்கு விரோதமான சாட்சியுமாய் இருக்கட்டும். நாம் வருவதற்கு முன்பே அவர்கள் தூக்கிப் போடப்பட்டது நமக்கு கிடைத்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டியது. மற்றப்படி நம்மைப் போல ஏமாந்த பெண் களுக்கு இவர்கள் என்னதான் செய்வார்களோ, யாருக்குத் தெரியும்? என்று சொல்லி விட்டு ஆனந்தம் கொண்டு
ஆனந்தக் கும்மி
சத்திய பாதைக்கு முற்றும் விரோதமாய்
சர்ப்பனைசெய்வோர் எல்லாம் உணர
ஆடுங்கள் மூவரும், ஏல ஏலம்போட்டு
ஆடுங்கள் அடையாளமாக.
பாலியரும் கிறிஸ்தீனாளும்
தயாளிகளும் கும்மி பாடுகிறார்
துணிகரவேலோடு சோம்பன் அண்ணனும்
பேதையும் அங்குதான் தொங்குகிறார்.
ஆத்துமமே பரிசுத்தாங்கத்துக்கு
யார் துரோகஞ்செய்யப் பார்ப்பாரோ,
அத்தனை பேருக்கும் எச்சரிப்பாயிரு,
அப்போ கிரீடம் ஜெயிப்பாயே!
என்று பாடினாள். அப்புறம் அவர்கள் வழிநடந்து கஷ்டகிரியின் அடிவாரம் வந்து சேர்ந்ததை நான் என் சொப்பனத்தில் கண்டேன்.
1. கிறிஸ்து நமக்காக மரித்ததினால் தமது அன்பைத் தெளிவாய்க் காண்பித்திருக்கிறார். நாம் இந்த அன்பை கவனித்து அது நமது இருதயங்களில் நடப்பித்திருக்கிற கிரியைகளை நாம் உணரும்போது அவருக்கு நன்றி துதி செலுத்தவும் நாம் பதிலுக்கு அவரில் அன்புகூரவும் ஏவப்படுகிறோம். 1 யோவான் 4 : 19 “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்”
2. சில பேர்க் கிறிஸ்தவர்களின் பயங்கரமான விழுதலும் சஞ்சலமுமான முடிவும் லோத்தின் மனைவியாகிய உப்புத் தூணைப் போல் மற்றவர்களுக்கு எச்சரிப்பாக நடக்கின்றன. அவர்களுடைய விழுதலுக்கு காரணமாய் இருந்த அந்த பாவங்களுக்கு நாம் மிகவும் விழிப்பாய் இருக்க வேண்டும்.