சுவிசேஷகனின் இரண்டாம் சந்திப்பு
அதுவுமல்லாமல் முன் அவனுக்கு வழிகாட்டின சுவிசேஷகன் என்றவர்1 அவனைச் சந்திக்க வருகிறதையும் கண்டான். மலைச்சிகர மலைவோடும், அக்கினிச் சுடரின் அலைசடியோடும், ஏதுமறியாத ஏக்கத்தோடும் இருந்த கிறிஸ்தியானுக்கு அவர் காணப்பட்டது அதிகப் பயத்தையும், வெட்கத்தையும் கொடுத்தது. அவன் சுவிசேஷகனைக் கண்ட உடனே குற்றவாளியைப் போல நின்றான். சுவிசேஷகன் மெதுவாக அவன் கிட்ட வந்து சேர்ந்து, கோபதாப முகத்தோடு அவனைக் கீழும் மேலும் பார்த்தார்; உடனே கிறிஸ்தியான் கிடு கிடுவென்று நடுங்கினான்.
சுவி: கிறிஸ்தியானே! நீ இங்கே என்ன செய்கிறாய்? என்று சுவிசேஷன் கேட்டார். அவன் பதில் சொல்ல மதியில்லாமல், மவுனமாய் நின்றான்; பின்னும் அவர் அவனைப்பர்த்து: நாசபுரியின் கோட்டைக்கு வெளியே அழுது கொண்டு அலைந்து திரிய நான் கண்டவன் நீதான் அல்லவா? என்று கேட்டார்.
கிறி: அவன் நான்தான், அன்புள்ள ஐயாவே! என்று கிறிஸ்தியான் சொன்னான்.
சுவி: நான் உனக்குத் திட்டிவாசலின் திசையைக் காட்டி, அந்த வாசலுக்குப் போகிற பாதையாய் நடந்து போகச் சொல்லவில்லையா?
கிறி: ஆம் ஐயா! தாங்கள் காட்டின வழி அப்படித்தான்.
சுவி: பின்னை இவ்வளவு சீக்கிரத்துக்குள்ளாக அந்த வழியை விட்டுவிட்டதென்ன? இது வேறு வழி ஆயிற்றே!
கிறி: ஐயா, நான் நம்பிக்கையிழவிலிருந்து தப்பிக் கரை சேர்ந்த உடனே, ஒரு துரை என்னைக் கண்டு, அதோ முன்னே தெரிகிற ஊரில் என் பாரத்தை இறக்கிவிடத்தக்க ஒரு புண்ணியவான் உண்டென்று சொல்லி, இங்கே போகும்படி வருந்திச் சொன்னார். அவர் பேச்சைக் கேட்டு இந்த வழி திரும்பினேன்.
சுவி: அவன் எப்படிப்பட்டவன்?
கிறி: அவரைப் பார்த்தால் ஒரு பெரியவர் போல் தோன்றிற்று; வெகு நேரம் என்னோடே வாதாடி, நான் என் வழியை விட்டுத் திரும்பச் செய்தார்; அதனாலேதான் நான் இங்கே வந்திருக்கிறேன். இந்த மலையின் உச்சியையும், இது என் மேல் விழுகிறாப்போல் இருக்கிற தையும் பார்த்து எங்கே விழுந்துவிடுமோ என்று பயந்து, இங்கே நின்று கொண்டிருக்கின்றேன்.
சுவி: அந்தக் பெரியவன் உன்னிடத்தில் என்ன கேட்டான்?
கிறி: அவர் கேட்டவைகளுக்கு கணக்கில்லை; நீ எங்கே போகிறாய் என்று கேட்டார், நான்இன்ன இடத்துக்குப் போகிறேன் என்று சொன்னேன்.
சுவி: பின்னும் என்ன கேட்டான்?
கிறி: உனக்கு பெண்சாதி பிள்ளைகள் உண்டா அப்பா என்று கேட்டார்; ஆம் உண்டென்று சொல்லி, இந்தப் பாரச்சுமை ஏற்றப் பட்டது முதல் அந்த சந்தோசங்கள் எல்லாம் ஒன்றையும் நான் முன்போல ஆசிக்கிறதில்லை என்றும் சொன்னேன்.
சுவி: அப்புறம் ஏதாவது சொன்னானா?
கிறி: உன் பாரத்தை கூடிய சீக்கிரத்தில் எறிந்துபோடு என்று சொன்னார். அப்போது நான்: அதிலிருந்து விடுதலையாகும்படியாக தானே திட்டிவாசலை நோக்கிப் போகிறேன்; அங்கே போனால் என் பாரம் நீங்கும் வழியை அறிவேன் என்றேன். அதற்கு அவன்: உன் பாரம் தொலைந்து போக, நீர் காட்டின வழியைப் பார்க்கிலும் சமீபமும், நலமும், தொல்லையற்றதுமான ஒரு பாதையை காட்டுகிறேன் என்று இந்தப் பாதையைக் காட்டி, இந்த வழியாப் போனால் உன் பாரத்தை லேசில் நீக்கிப்போடத்தக்க ஒரு புண்ணியவானுடைய வீட்டைக் காண்பாய் என்று வழி திருப்பிவிட்டான். ஐயா! நானும் அவன் பேச்சை நம்பி எப்படியாவது பாரம் லேசானால் சரி என்று இம்மட்டும் வந்தேன். வந்தும் பாரம் பழையபடியேதான் இருக்கிறது; ஆகையால் நான் முன் சொன்னது போல, எங்கே அழிந்து போவேனோ என்று அஞ்சி என்ன செய்யலாம் என்று தெரியாமல், இப்படி நிற்கின்றேன் தர்ம துரையே!
சுவி: அப்படியானால் உனக்குச் சொல்ல வேண்டிய தேவனுடைய வார்த்தைகளைக் காண்பிக்கும்படி கைகட்டி, கால்கூட்டி நில் என்று சுவிசேஷகன் சொன்னார். அவன் நடுநடுங்கி நின்றான். அப்போது சுவிசேஷகன் சொல்லுகிறார்:- “பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்க மாட்டோம் என்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் பூமியிலே பேசினவருக்கு செவி கொடுக்க மாட்டோம் என்று விலகின வர்கள் தப்பிப் போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டு விலகினால் எப்படித் தப்பிப் போவோம்” (எபிரேயர் 12 : 25) என்று சொன்னதுமல்லாமல், “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமா யிராது” (எபிரேயர் 10 : 38) என்றும் சொல்லி, அவ்வாக்கியங்களின் கருத்து அவன் மனதில் படும்படி: நீதான் அந்த மனுஷன், நிர்ப்பாக்கியத்தை நாடிப் போகிறவன் நீதான்; உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணவும், சமாதானத்தின் பாதையை விட்டு உன் பாதங்களை விலக்கிப் பின் வாங்கவும், அழிவுக்கு நெருங்கவும் நீ துவங்கிவிட்டாய் என்று கடிந்து கொண்டார்.
அந்த வார்த்தைகள் அவனை எச்சரிக்கும் இடிபோல இருந்தன. அவன் திடீரென்று சுவிசேஷகனுடைய பாதத்தில் விழுந்து: ஐயோ, நான் நிர்ப்பாக்கியன், ஐயோ! அதமானேன் என்று அலறினான். உடனே சுவிசேஷகன் அவன் வலது கையைப் பிடித்துத் தூக்கி “எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்” (மத்தேயு 12 : 31) “அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு” (யோவான் 20 : 27) என்று சொல்லி அவனை தைரியப்படுத்தினார். அப்புறம் அவன் காலூன்றி, சுவிசேஷகனுக்கு முன்பாகப் பழையபடி நடுக்கத்தோடு நிற்க நான் என் சொப்பனத்தில் கண்டேன்.
பின்னும் சுவிசேஷகன் சொல்லுகிறார்: கிறிஸ்தியானே! நான் உனக்குச் சொல்லும் விஷயங்களைக் காதுகொடுத்து மகா கவனமாய்க் கேள்; உன்னை மோசம் போக்கினவன் யார் என்றும், உன்னை எவனிடத்தில் போகச் சொன்னான் என்றும் சொல்லுகிறேன். உன்னைச் சந்தித்தானே அவன் லோகஞானி என்ற பேருடையவன். அது அவனுக்கு ஏற்ற பேர்தான். ஏனெனில் அவன் பூலோக ஞானோப தேசங்களால் தன்னை மணமேற்றிக் கொண்டு, (1 யோவான் 4 : 5) அதின் சாரத்தால் ஊறிப்போகும்படி நல்லறத்தின் கோவிலுக்குப் போகிறான். மேலும் அவ்வுபதேசங்கள் சிலுவையின் உபதேசத்திலிருந்து அவனை விலக்கிப் போடுகிறதால், (கலாத்தியர் 6 : 12) அவனுக்கு அதின்மேல் பிரீதியாய் இருக்கிறது. அவன் மாமிச குணமுடையவன் ஆகையால், நான் காட்டும் வழி செவ்வையான தாயிருந்தாலும், அதிலிருந்து ஆட்களை விலகிப் போகும்படி செய்கிறான். இவனுடைய ஆலோசனையில் நீ அடியோடு வெறுத்துப் போட வேண்டிய மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அவையாவன: 1. வழியைவிட்டு உன்னைத் திருப்பினதும், 2. சிலுவையைப் பற்றி உனக்குள் வெறுப்பை உண்டாக்க முயன்றதும், 3. மரண வழியில் உன் பாதங்களைப் பிடித்து வைத்ததுமே.
முதலாவது: உன்னை வழியை விட்டுத் திரும்பினதையும், நீ அவன் பேச்சைக் கேட்டுத் திரும்பினதையும் அருவருக்க வேண்டும். ஏனெனில் இப்படிச் செய்வது, உலகத்திலுள்ள ஒரு சாஸ்திரியின் புத்தியை ஏற்றுக் கொள்ளும்படியாக, சர்வ ஞானமுள்ள தேவனின் ஆலோசனையை அசட்டை செய்கிற முண்டுத்தனமாய் இருக்கிறது.
“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப் படுங்கள்” என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். (லூக்கா 13 : 24) அந்த இடுக்கமான வாசலுக்குப் போகவே நான் உனக்கு வழிகாட்டினேன்; ஏனெனில், “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்க முமாய் இருக்கிறது; அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர், (மத்தேயு 7 : 13, 14) இந்த இடுக்கமான வாசலைவிட்டும், அதற்குப் போகும் வழியிலிருந்தும் அந்தப் படுதோஷி உன்னை விலக்கி, அழிவின் ஓரத்தில் உன்னைக் கொண்டு வந்து விட்டான். ஆகையால் உன்னை வழிவிட்டுத் திருப்பின அவனையும், அவன் போதனையைக் கேட்டுத் திரும்பின உன்னையும் முழுப் பகையாய்ப் பகைக்க வேண்டும்.
இரண்டாவது: சிலுவையைப் பற்றி உனக்கு வெறுப்புண்டாக்க முயன்றதை நீ முற்றிலும் வெறுக்க வேண்டும். ஏனெனில் எகிப்தின் பொக்கிஷங்களைப் பார்க்கிலும் அதையே நாட வேண்டியது. (எபிரேயர் 11 : 25, 26) அதுவுமன்றி, “தன் ஜீவனை இரட்சித்துக் கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான்” என்றும், “தம்மைப் பின்பற்றுகிற ஒருவன் தன்னுடைய தகப்பனையும், தாயையும், மனைவியையும், பிள்ளை களையும், சகோதரரையும், சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் தமது சீஷனாய் இருக்கமாட்டான்” என்றும் மகிமையின் இராஜா சொல்லியும் இருக்கிறார். (மாற்கு 8 : 38 யோவான் 12 : 25 மத்தேயு 10 : 39 லூக்கா 14 : 26) ஆகையால் கிறிஸ்தியானே, சத்திய தேவனின் வழியை அபத்தமாக்கி, அந்த வழியில் அழிவும் நாசமும் உண்டென்று ஒரு மனுஷன் உணர்த்தினால் அவன் காட்டும் வழியில் நீ நித்திய ஜீவனைக் கண்டடையமாட்டாய். இந்தப் போதனையையும் நீ தள்ளிவிட வேண்டும்.
மூன்றாவது: மரண வழியில் உன்னை உட்படுத்தினதையும் நீ அருவருக்க வேண்டும். லோகஞானி உன்னை யாரிடத்தில் போகச் சொன்னான் என்பதையும், அவன் உன் பாரத்தை நீக்கிவிட எள்ளளவும் சக்தியற்றவன் என்பதையும் நீ அறிந்து கொண்டால் அது விளங்கும்.
உன்னை இளைப்பாறச் செய்வான் என்று குறிப்பித்தவன் யார் தெரியுமா? அவன்தான் இப்பொழுதிருக்கிற அடிமைப் பெண் ணின் குமாரனாகிய நியாயப்பிரமாணிக்கன் என்பவன்; அவன் தன் பிள்ளைகளோடுகூட அடிமைத் தனத்தில் இருக்கிறான். (கலாத்தியர் 4 : 21, 27) உன் தலைமேல் விழுந்துவிடும் என்று நீ பயந்து கொண்டிருக்கிற இந்த மலை அந்தரங்க அர்த்தப்படி, சீனாய் மலையைக் குறிக்கிறது. அவளே தன் பிள்ளைகளோடு இப்பொழுது அடிமைத்தனத்தில் இருக்கிறதானால், உன்னை விடுதலையாக்க அவளால் ஆகும் என்று எதிர்பார்க்கலாமா? ஆதலால் உன் பாரத்தை இறக்கிவிட அந்த நியாயப் பிரமாணிக்கனால் கூடாது. உலகம் உண்டானதுமுதல் இதுவரையும் ஒருவனை அவன் கரையேற்றினதுமில்லை, இனிக் கரையேற்றப் போகிறதும் இல்லை; இதை நம்பிக் கொள். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் ஒருவனும் நீதிமானாகக்கூடாது; ஏனெனில் நியாயப் பிரமாணத்தின் படி நடக்கிறதால் எந்த நர ஜீவியும் தன் பாரத்தினின்று விடுதலையாகிக் கொள்ளமாட்டான். ஆகையால் உனக்கு இந்த வழியைக்காட்டிய லோகஞானி எதிரி; நியாயப்பிரமாணிக்கனோ எத்தன்; அவன் மகன் மரியாதையா! அவனை வெளியே சொல்லக்கூடாது; கண்ணைச் சொருகுவான், தலையைச் சரிப்பான், ஆனால் அவனைப்போலொத்த மாயக்காரன் ஒருவனும் இல்லை. உனக்கு உதவி செய்ய அவனாலும் ஆகாது. நான் சொல்லுவதை நம்பு; இந்த உதவாத பயல்களைப் பற்றி நீ கேள்விப்பட்ட பெரும் பேச்செல்லாம் வெறும் பேச்சேயன்றி சாரமுள்ளதல்ல. இரட்சண்யத்தை நீ அடையாதபடி நான் காட்டிய வழியிலிருந்து உன்னை விலக்கிப் போடும்படியாகவே அவன் தன்னால் ஆனமட்டும் பிரயாசப்பட்டான் என்று சொல்லி; தாம் அவனுக்கு சொன்னவை எல்லாம் மெய் என்பதற்கு வானங்களைச் சாட்சியாகக் கோரினார். உடனே அவன் நின்ற மலையின் கீழிருந்து அக்கினியும், அதிரடியுள்ள சத்தமும் புறப்பட்டன. அவன் மிகவும் பயந்தான், அவன் தேகத்தின் ரோமங்கள் நட்டுநின்றன. அந்தச் சத்தமானது: “நியாயப் பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்துக்குட்பட்டிருக் கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப் பட்டவைகளை எல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன்” (கலாத்தியர் 3 : 10)
இந்தச் சத்தத்தைக் கேட்ட கிறிஸ்தியான்: இனி நமக்கு ஜீவன் ஏது? சாவுதான் நமது பங்கென்று எண்ணிக்கொண்டு, மாலை மாலையாய்க் கண்ணீர் சொரிந்து, கதறி அழுது, லோகஞானியையும் அவனைக்கண்டு சந்தித்த நேரத்தையும் சபித்து, அவன் பேச்சையும் பிரியமாய்க் கேட்ட என்னிலும் பெரும் மூடன் உண்டோ! என்னிலும் பெரும் பித்தன் உண்டோ! என்று புலம்பினான். அவன் பின்னும் ஆகா, அந்த ஞானியின் முகாந்தரங்களெல்லாம் என் மாமிசத்துக் கேற்றபடி இருந்ததினால் அல்லவா, நான் அவன் பேச்சின்படி சரியான பாதையைவிட்டு வழி விலகி இந்த கதி ஆனேன் என்று நினைத்து வெட்கப்பட்டான். இதின் பின்னர் அவன் கனிந்த குரலோடும், பணிந்த முகத்தோடும் பின் வருகிற வார்த்தைகளைச் சுவிசேஷகனிடத்தில் கேட்கிறான்.
கிறி: தருமதுரைகளே! அடியேனுக்கு இன்னும் நம்பிக்கை உண்டா? நான் மறுபடியும் திரும்பித் திட்டிவாசல் நோக்கிப் போகலாமா? போனாலும் இப்படி வழிவிலகினதின் நிமித்தம் உனக்கு இங்கே இடம் இல்லை, ஓடிப்போ என்பார்களோ? நான் வெட்கத் தோடு திரும்பிவிட வேண்டுமோ? அந்த மனுஷனுடைய ஆலோசனை யின்படி நான் நடந்ததற்காக ஆறாத் துயரம் அடைகிறேன். ஆனால் பரம நாதர் என் படுதோஷங்களை மன்னிப்பாரா? உமக்கு எப்படித் தோன்றுகின்றது? என்று கேட்டான்.
சுவி: அதற்கு சுவிசேஷகன்: உன் பாவம் மா கொடிது, அதினால் நீ இரண்டு தீமைகளைச் செய்தாய்; விதிக்கப்பட்ட வழியிலிருந்து உன் காலை எடுத்துவிட்டாய், விலக்கப்பட்ட வழியில் உன் பாதங்களை வைத்துக் கொண்டாய்; என்றாலும் வாசலண்டை இருக்கிற மனிதன் உன்னை ஏற்றுக் கொள்ளுவார். ஏனெனில் மனுஷர் மேல் அவருக்குப் பிரியம் உண்டு; ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன் கேள்: நீ வழியிலே அழியாதபடிக்கு இந்த திசையை நோக்காதபடி மாத்திரம் கவனமாயிரு. ஏனெனில், கொஞ்ச காலத்திலே அவருடைய கோபம் பற்றி எரியும் (சங்கீதம் 2 : 12) என்று சொன்னார். உடனே கிறிஸ்தியான் திட்டிவாசல் வழியைச் சேரும்படி பயணப்பட்டான். சுவிசேஷகர் அவனை முத்தமிட்டு, ஒரு புன்சிரிப்பு சிரித்து, கடவுள் உன் பயணத்தை வாய்க்கச் செய்வாராக என்று ஆசீர்வதித்து வழிவிட்டு அனுப்பினார்.
அதுமுதல் அவன் வெகு விரைவாய் நடந்து தனக்கு எதிரே வந்தவர்கள் ஒருவரோடும் பேசவும் இல்லை. அவர்கள் பேசினாலும் இவன் பேச்சுக் கொடுக்கவும் இல்லை. அவன் லோகஞானியைச் சந்தித்த இடத்துக்கு வருமட்டும் சுடுமணலில் நடக்கிறவனைப்போல கடுக நடந்து, திட்டிவாசல் மார்க்கம் சேர்ந்து, அவ்வழியாய்த் திட்டிவாசல் படிகளின்மேல் ஏறினான். அந்த வாசல் நிலையின் மேல், “தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்” (மத்தேயு 7 : 7) என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்தது. கிறிஸ்தியான் வாசலண்டை போய் நின்று கொண்டு:
பல்லவி
ஐயையா, நான் பாவி! திட்டிவாசல் திறவும் ஐயா!
நாசபுரி நீசன் கிறிஸ்தியானும் இதோ,
பாரஞ் சுமந்து வந்தேன்-ஐயா!
நேசமாய் வாசல் திறந்திடுவீரானால்
பாரம் இறக்கிக் கொள்வேன், – ஐயையா!
பாவி, துரோகி, விரோதி, சண்டாளன் நான்
படுதோஷி ஆனாலும்; ஐயா!
பாடிப்புகழுவேன் பரனாரை எந்நாளும்
வாசலுள் வந்துவிட்டால்,- ஐயையா!
என்று புலம்பி இரண்டு மூன்றுதரம் கதவைத்தட்டினான்.2 தட்டவே, பட்சதாபன்3 என்ற பேருடைய ஒரு மகாத்துமா வாசலண்டை வந்து நின்று: யார் அங்கே? எங்கிருந்து வந்தாய்? என்ன விசேஷம் என்று கேட்டார்.
கிறி: நான் பாரம் சுமந்த பாவி ஐயா! நாசபுரியிலிருந்து வருகிறேன், வருங்கோபத்துக்குத் தப்பிப் பிழைக்கும்படி சீயோன் பர்வதத்திற்குப் போகிறேன்; மா பிரபுவே! இந்த வாசல் வழியாகவே நான் சீயோனுக்குப் போக வேண்டும் என்று கேள்விப்பட்டேன்; நான் போக வழிவிடுவீரா ஐயா! என்று கிறிஸ்தியான் கேட்டான்.
பட்ச: சந்தேகமில்லாமல் வா அப்பா, கதவைத் திறக்கிறேன் என்று பட்சதாபன் சொல்லி, வாசலைத் திறந்தார்.4
1. இரட்சண்ய வழியைத் தேடுகிறவர்கள் வழிதப்பிப் போகிறதை கிறிஸ்துவின் ஊழியக்காரர் அறிந்து, அவர்கள் போகும் பாதையின் அழிவைக்காட்டி, அவன் தன் மாறுபாடான நடத்தையைவிட்டு அஞ்சாமல், மறுபடியும் கிறிஸ்து வினிடத்திலே போகும்படி வழிகாட்டுகிறார்கள்.
2. தட்டுகிறது என்பது, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பாவ மன்னிப்பைப் பெற வேண்டும் என்று கனிவோடு ஜெபம் செய்வதைக் குறிக்கிறது.
3. பட்சதாபன் என்பது, தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாய்ப் பாவிகள் மேல் வைத்த அன்பைக் குறிக்கிறது.
4. வாசல் திறக்கப்படுகிறது, சரியான வழியாக இயேசுவினிடத்தில் வருகிற ஒவ்வொருவனும் ஏற்றுக் கொள்ளப்படுவான் என்பதைக் குறிக்கிறது.