லோகஞானி சந்திப்பு
கிறிஸ்தியான் சகாயரால் உளையிலிருந்து தூக்கிவிடப்பட்ட பின்பு, ஒண்டியாய் அந்த வனத்தில் நடந்தான். அவன் போகையில், வேறொரு குறுக்கு வழியாய் ஒரு மனுஷன், அவனை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று நோக்கங்கொண்டு வருகிறதை நான் என் சொப்பனத்தில் கண்டேன். அவ்விருவரும் எதிர்க்கெதிராய் ஒருவரை யொருவர் சந்தித்தார்கள். இப்படிச் சந்தித்தவன் பேர் லோகஞானி.1 இவன் மாமிசநேசபுரி என்னும் ஒரு பெரிய பட்டணத்தில் உள்ளவன். கிறிஸ்தியானுடைய ஊருக்கும் இதற்கும் மெத்தவும் சமீபம்தான். இவன் கிறிஸ்தியானுடைய சமாசாரங்களைப் பற்றி ஜாடையாய்க் கேள்விப்பட்டிருந்தான். ஏனெனில் அவன் ஊர் விட்டுப் புறப்பட்ட செய்தி நாசபுரியில் மாத்திரமல்ல, நாசதேச முழுவதிலும் பேசிக் கொள்ளப்பட்டது. ஆகையால் லோகஞானி ஆளுடைய ஆயாசத் தையும், பெருமூச்சையும், வியாகுலத்தையும், இவை போன்ற வேறு சில குறிப்புகளையும் கண்டவுடனே, இவன் நாசபுரியைவிட்டு சீயோன் மலையை நாடிச்செல்லும் கிறிஸ்தியானாய்த்தான் இருக்க வேண்டும் என்று உத்தேசித்துக் கொண்டு, அவனுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.
லோகஞானி:- ஏன் அப்பா இந்த அவஸ்தை? இந்தப் பாரத்தோடு எந்த ஊருக்குப் போகிறாய் அப்பா?
கிறி:- ஐயா பெரியவரே, எனக்கு எப்போதும் இந்தப் பாரமே கெதியாய் இருக்கிறது; நான் மெத்த நிர்ப்பந்தன் ஐயா, மெத்த நிர்ப்பந்தன்; நான் எங்கே போகிறேன் என்றா கேட்கிறீர்? அதோ அப்பாலே ஒரு வாசல் இருக்கிறதாம், அதற்குப் போகிறேன்; அங்கே போனால் என் பாரம் தொலைந்து போவதற்கு ஏற்ற வகை இன்ன தென்று அறிந்து கொள்ளுவேன், ஆகையால் அங்கேதான் போகிறேன்.
லோக: உனக்கு பெண்ஜாதி பிள்ளைகள் உண்டா அப்பா?
கிறி: பெண்ஜாதியும் உண்டு, பிள்ளைகளும் உண்டு. என் முதுகில் இந்தப் பாரச் சுமை இருப்பதால், அந்த இன்பங்கiளை எல்லாம் நான் முன்பு போல விரும்புகிறதில்லை. இப்போது எனக்கு மனைவியும் இல்லை, மக்களும் இல்லை என்றுதான் எண்ணம் உண்டாகிறது. (1 கொரிந்தியர் 7 : 29)
லோக: நான் ஆலோசனை சொன்னால் கேட்பாயா?
கிறி: ஆலோசனை சொல்ல ஆள் கிடையாமல்தானே இப்பாடு படுகிறேன்; உமது ஆலோசனை நல்லதானால் அதின்படியே செய்கிறேன் ஐயா!
லோக: அப்பா! நீ உன்னால் ஆன சீக்கிரத்துக்குள் உன் முதுகிலுள்ள அந்தப் பாரத்தை இறக்கிப் போட்டுவிடு. அதை நீ இறக்குமட்டும் உன் மனம் ஒரு நிலையில் இருக்காது. அதுவுமல்லாமல், கடவுள் உனக்கு அருளும்படி பிரியமாயிருக்கும் ஆசீர்வாதங்களை நீ அநுபவிக்கவும் மாட்டாய்.
கிறி: இறக்கிவிடத்தானே நான் இந்தப் பாடுபடுகிறேன்; என் முதுகின் பாரச்சுமை எப்படி இறங்கிவிடும்? அதை நானே எடுத்து எறிந்துவிட என்னால் கூடவில்லை. அப்படி எடுத்துவிடத்தக்க சாமர்த்தியன் எவனாவது நமது தேசத்தில் உண்டா? அதுவும் இல்லையே; அதினாலேதான் நான் உமக்குச் சொன்னது போல என் பாரச்சுமையை இறக்கிவிடும்படியாக இந்த வழியாய்ப் போகிறேன் ஐயா!
லோக: உன் பாரச்சுமை தொலையும்படி இந்த வழியை உனக்குக் காட்டினது யார் அப்பா?
கிறி: மேன்மை பொருந்தியவராய்த் தோன்றின ஒரு மகாத்துமா இந்த வழியைக் காட்டினார்; அவருடைய பேர் சுவிசேஷகன் என்று சொன்னதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது.
லோக: அவன் நாசமாய்ப் போகட்டும்; அவன் காட்டியிருக்கிற வழியைப்போல மோசமும், நாசமுமான பாதை இந்தப் பூலோகத்தில் கிடையாது. இன்னும் அவன் சொல்லியபடியே நீ நடந்தால் நான் சொல்லுவது மெய் என்று அறிவாய். ஏது, முதுகெல்லாம் சேறு; முகமெல்லாம் மண் அப்பா! இதற்குள்ளாகவே வெகு சங்கடப் பட்டிருக்கிறாய் போலத் தோன்றுகின்றதே? நம்பிக்கையிழவில் அகப்பட்டாயாக்கும்; இவ்வழி நடப்போருக்கு சம்பவிக்கும் துன்பங் களில் அதுதான் துவக்கம். உன்னைப் பார்த்தால் நல்லவன் என்று தெரியவருகிறது; அந்தச் சண்டாளனாகிய சுவிசேஷன் உன்னை மோசம் பண்ணிப் போட்டான் அப்பா! என் பேச்சைக் கேள், நான் உன்னிலும் வயதானவன், பல காரியங்களையும் அறிந்து தெளிந்த ஞானி, லோக ஞானி என்றால் இவ்வகண்ட பூலோகமும் நடுங்கும், இப்பூலோக ஞானம் எல்லாம் என் நகத்துக்குள் அடக்கி வைத்திருக் கின்றேன் என்று எண்ணிக் கொள். இவ்வழியே நீ போவது மெய்யா னால் இளைப்பு, நோவு, பசிதாகம், அபாயம், அம்மணம், அம்பு, பட்டயம், சிங்கங்கள், வலுசர்ப்பங்கள், அந்தகாரங்கள் மொத்தமாய் சொன்னால் மரணமே சம்பவிக்கும். வேறென்னதான் சம்பவியாது? இவையெல்லாம் நிச்சயமாகவே நேரிடும் என்பதற்குப் பல உண்மை யுள்ள சாட்சிகளும் இருக்கின்றன. முன்பின் முகமறியாத ஒருவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஏன் இந்தச் சங்கடப்பட வேண்டும்?
கிறி: நீர் சொன்ன எல்லாவற்றிலும் என் சுமையின் பழுவே பெருந்துன்பம் என்று எனக்குத் தோன்றுகின்றது; இவ்வளவு பாடுகள் பட்டாலும் கடைசியாக இந்தச் சுமை நீங்கிப் போனால் நலமா யிருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.
லோக: இந்தச் சுமை எப்போது உன்மேல் ஏற்றப்பட்டது அப்பா?
கிறி: இதோ, இந்தப் புஸ்தகத்தை வாசிக்க வாசிக்க ஏற்பட்டது ஐயா!
லோக: நானும் அப்படியே நினைத்தேன். உன்னைப் போல இன்னும் சில பலவீனர் இப்படியே தங்களுக்கு அடாத காரியத்தில் தலையிட்டு பிடரி முறிந்து மாண்டதை அறிவேன்; உனக்கும் அந்த வாழ்வுதான் கிட்டும். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு நேரிடும் நாசங்களை அறியாமல் ஒரே போக்காய் போகிறார்கள்.
கிறி: எனக்கு அகப்படவேண்டும் என்று விரும்புகிற வாழ்வு இன்னதென்று நான் அறிவேன்; இந்தப் பாரச் சுமையினின்று விடுதலை யாவதேயே நான் எதிர்பார்க்கிறேன்; அதே என் வாழ்வு.
லோக: அப்படியானால் இப்படிப்பட்ட நாச வழியை நாடலாமா? இவ்வளவு துன்பங்களும், துயரங்ளும் இருக்கின்றனவே? இவ்வளவு பொறுமையோடு நின்று என் பேச்சைக் கேட்கிற உனக்கு நான் வெகு சுலபமான ஒரு வழியைக்காட்டி, உன் பாரச்சுமையை இறக்கிவிடக்கூடியவனாயிருக்க, இப்படி அவஸ்தைப்படுவானேன்? உன் ஆசை நிறைவேறும் வழியும் வகையும் கிட்ட இருக்கிறது. அதுவுமல்லாமல் அந்த வழியில் இந்த வழியைப் போல அபாயங்கள் ஏதாவதுண்டா? இல்லை, இல்லவே இல்லை; நீ போகப் போக ஷேமம், சிநேகிதர், திருப்தி எல்லாம் உண்டு.
கிறி: ஐயா பெரியவரே, அந்த இரகசியத்தை சற்றே சொல்லும் ஐயா, சொல்லும் துரையே, சொல்லும் பிரபுவே!
லோக: நல்லதப்பா, அந்த இரகசியத்தைக் கேள்: அதோ சற்றப்பால் ஒரு பட்டணம் இருக்கிறது. அதற்கு நல்லறம்2 என்று பெயர். அவ்விடத்தில் நியாயப்பிரமாணிக்கன்3 என்று அழைக்கப் படுகிற ஒரு பிரபு இருக்கிறார். அவர் மகா திட்டவட்டம் அறிந்தவரும், பேரெடுப்புள்ளவருமாய் இருக்கிறார். உன்னைப்போல பாரஞ்சுமந்து பிரலாபப்படுகிறவர்கள் எவர்களோ அவர்கள் பளுவை இறக்கி விடும்படி தகுதியான முறைகளைச் சொல்ல அவர் மகா சமர்த்தர். நான் அறிந்தமட்டும் அனந்தம் பேர் அவரிடத்தில் போய் பாரம் நீங்கித் திரும்பினதுண்டு. அது மாத்திரமா? தங்கள் முதுகின் பாரத்தால் புத்தி மாறிப்போனவர்களையும் திருத்தி செவ்வைப்படுத்த அவருக்குப் பக்குவமும் தெரியும். அவரண்டை மாத்திரம் நீ போவது மெய்யா னால், உன் பாரம் அந்நிமிஷமே நீங்கிப் போகும்; அவர் வீட்டுக்கு இதிலிருந்து ஒரு நாழிகை வழி முதலாய் இல்லை, மெத்தவும் சமீபம்; நீ போகிற நேரத்தில் அவர் வீட்டில் இல்லாவிட்டாலும், மரியாதை4 என்னும் அவருடைய மகன் இருப்பான், அவன் இருந்தாலும் சரிதான்; அங்கே போய் உன் காரியங்களைச் சொன்னால் உன் முதுகின் பாரம் அறுந்து விழும்படியான சகாயம் உடனே கிட்டும். அப்புறம் நீ உன்னுடைய பழைய ஊருக்குப் போக எனக்குப் பிரியம் இல்லை; உனக்கும் அது பிரியப்படாவிட்டால் அந்த நல்லறத்திலேயே அநேக வீடுகள் காலியாகக் கிடக்கின்றன. சொற்ப வாடகைக்கு ஒரு வீடு எடுத்து, உன் மனைவி மக்களை அவ்விடம் வந்து சேரும்படி திட்டம்செய்து, அங்கேயே குடியிருந்து கொள்ளலாம். அந்த ஊரிலே அகவிலை மெத்த நயம், அங்கேயே கொடுக்கல் வாங்கல் செய்து, பயிர் பச்சையிட்டுக் காலந் தள்ளலாம்.
கிறி: இவை எல்லாவற்றையும் கேட்ட உடனே கிறிஸ்தியான் மனம் சற்றே மாறிற்று. இந்தப் பெரியவர் சொல்வது நிஜமானால், இதுதானே சரியானதாகத் தோன்றுகிறது; இதின்படி செய்கிறதல்லவா புத்தி என்று தனக்குள்ளே ஆலோசித்துக் கொண்டு, நியாயப் பிரமாணிக்கன் வீட்டுக்கு வழி எப்படி ஐயா என்று கேட்டான்.
லோக: அதோ இருக்கிறதே, அந்த மலைச் சிகரம் தெரியுதா?
கிறி: ஆம் ஐயா, நன்றாய்த் தெரிகிறது.
லோக: அந்த மலை அடிவாரமாய்த்தான் நீ போக வேண்டும், அவ்விடத்தில் தென்படுகிற முதல் வீடுதான் நியாயாதிக்கன் வீடு என்று சொன்னான்.
அதுமுதல் கிறிஸ்தியான் தன் வழியைவிட்டுத் திரும்பி, நியாயப் பிரமாணிக்கன் வீட்டுப் பாதையாய்ப் போனதை நான் என் சொப்பனத்தில் கண்டேன்.5 அவன் அதின் அடிவாரம் சேரவே, அதின் சிகரம் வழியோரமாய் மிகவும் சாய்ந்து தலைமேல் விழுகிறாப்போலக் காணப்பட்டதால்,6 கிறிஸ்தியான் பயந்து ஓகோ நாம் தொலைந்து போகும் நாள் இதுதான், இனி என்ன செய்யலாம் என்று புலம்பி ஏதும் அறியாதவனாக நின்றான். அவன் பாரம் முன் போன வழியைப் பார்க்கிலும் அந்த மலையடிவார வழியில் அதிகப் பளுவாகக் காணப்பட்டது; அம்மலையிலிருந்து இடைக்கிடையே அக்கினி ஜூவாலைகளும் வீசின. (யாத்திராகமம் 19 : 16, 18) அதைக்கண்ட கிறிஸ்தியான், நான் வெந்தே போவேன் என்று கலங்கினான். அவனுடைய கலக்கத்தால் தேகம் குலுங்கிற்று, சரீரமெல்லாம் வேர்வையாய்ப் பொழிந்தது. (எபிரேயர் 12 : 21) ஐயோ லோகஞானி மோசம் அல்லோ பண்ணிவிட்டான், நான் அவன் பேச்சைக் கேட்டு என் வழியைவிட்டுத் திரும்பினது மகா புத்தியீனம் என்று உணர்ந்தான்.
1. லோகஞானி என்பது, தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்யும்படி பிரயாசப்படுகிறவர்களைக் குறிக்கிறது. அவர்கள் உலக விஷயங்களில் விவேகமுடையவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் கூடிய மட்டிலும் சன்மார்க்கராய் நடந்து, தேவ பக்திக்கடுத்த சில கடமைகளை அநுசரித்து வரலாம்; ஆனால் தங்களுடைய லோக வாழ்வைத் தடுக்கும் விஷயங்கள் எவைகளோ அல்லது அவர்கள் மனதை அதிலிருந்து பிரியப் பண்ணும் எத்தனங்கள் எவைகளோ அவைகளுக்கு அவர்கள் நேர் விரோதம் பண்ணுவார்கள்.
2. நல்லறம்: இது வெளியரங்கமான பாவங்களுக்கு விலகி, இருதயத்தில் தேவ அன்பில்லாமல், சன்மார்க்கர் போல காணப்படுகிறவர்களைக் குறிக்கிறது.
3. நியாயப்பிரமாணிக்கன்: இது மனுஷர் தங்கள் நற்கிரியைகளினாலே இரட்சிப்பை அடையலாம் என்று போதிக்கிறவர்களைக் குறிக்கிறது.
4. மரியாதை: இது பட்சங்காட்டி, மரியாதை செய்து இவ்வுலகத்தில் ஜீவனம் செய்து வருவதே நரக தண்டனைக்கு நம்மைத் தப்புவித்து மோட்ச லோகத்தில் சேர்க்கும் என்று எண்ணுகிறவர்களின் அடையாளமாய் இருக்கிறது.
5. கிறிஸ்தியான் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் ஆத்தும இரட்சிப்பைத் தேட வேண்டிதாயிருக்க, தன் சொந்தக் கிரியைகளின் மூலமாய் அதைச் சம்பாதிக்கப் பிரயாசப்படுகிறான்.
6. மலைச்சிகரம் இது சீனாய் மலைமேல் கொடுக்கப்பட்ட நியாயப் பிரமாணத்தைக் குறிக்கிறது. இரட்சண்ய விழிப்படைந்த பாவி தன் சொந்த நீதியின் மூலமாய் இரட்சிப்பை பெற முயலும்போது, தன் நடக்கையை தேவனுடைய பிரமாணங்களுடன் ஒத்துப் பார்த்து, அதின் சாபம் தன்னை எங்கே பட்சிக்குமோ வென்று அஞ்சி நடுங்குகின்றான்.