பிரயாணிகள் மோட்சம் ஏறுதல்
மோட்ச பட்டணமோ மகா உன்னதமான ஒரு மலையின்மேல் இருந்தது. அந்த ஒளிமயரூபிகள் கைலாகு கொடுத்ததால் கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் வெகு லேசாய் மலை ஏறிவிட்டார்கள். அவர்கள் தங்கள் அழிவுக்குரிய அங்கியை ஆற்றோடு விட்டுவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அந்த அங்கியோடு ஆற்றில் இறங்கினாலும், அங்கியில்லாமல் அக்கரை சேர்ந்தார்கள். அப்பட்டணத்தின் அஸ்திபாரம் மேக மண்டலத்துக்கு மேலாக இருந்தபோதினும் அழிவுக்குரிய அங்கியை அவர்கள் களைந்து விட்டதால் அவர்கள் வாயு வேகமாய் ஏறினார்கள். அவர்கள் ஆகாய மண்டலங்களை தாண்டிப் போகும்பொழுது ஆபத்துக்கள் நீங்கி ஆற்றைக் கடந்ததையும் ஆறுதலை அளிக்க இப்படிப்பட்ட மகிமை யுள்ள தோழர் கிடைத்ததையும் குறித்துப் பல காரியங்களையும் இன்பமாய் பேசிக்கொண்டே போனார்கள்.
அவர்கள் மேகமண்டல யாத்திரை செய்கையில் ஒளிமய ரூபிகளோடு பேசின பேச்செல்லாம் ராஜ அரண்மனையின் மகத்துவங் களை குறித்ததாகவே இருந்தது. அங்கே சீயோன் மலையும், தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களும், முதற்பேரானவர்களின் சர்வசங்கமாகிய சபையும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளும் இருக்கின்றன வென்று அவர்கள் சொன்னார்கள். (எபரேயர் 12 : 22 -24) பின்னும் அவர்கள் நீங்கள் இப்பொழுது தேவனுடைய பரதீசுக்குப் போகிறீர்கள். அங்கே ஒருக்காலும் வாடாத ஜீவ விருட்சத்தைக் கண்டு அதின் கனிகளைப் புசிப்பீர்கள். அங்கே போனவுடனே உங்களுக்கு வெள்ளை அங்கி கொடுக்கப்படும். நாள்தோறும் நீடூழி காலமாய் மகா ராஜாவோடு கூடி உலாவிப் பேசிக்கொண்டிருப்பீர்கள். ( வெளி 2 : 7) நீங்கள் தாழ்ந்த பூலோகத்தில் இருந்த காலத்தில் கண்டனுபவித்த துக்கம், வியாதி, துன்பம், சாவு முதலியவைகள் ஒன்றையும் இனி காணமாட்டீர்கள். ஏனெனில் முந்தினவைகள் ஒழிந்து போயின. (ஏசாயா 65 : 16 – 17) நீங்கள் இப்பொழுது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களிடத்திற்கும், தீர்க்கத் தரிசிகள் அண்டைக்கும் இப்பொழுதிருக்கிற பொல்லாப்புக்கும் இனி வரப்போகிற பொல்லாப்புக்கும் நீங்கலாக தேவனால் எடுத்துக் கொள்ளப்பட்டு, சமாதானத்துக்குட் பிரவேசித்து தங்கள் படுக்கை களில் இளைப்பாறுகிறவர்களிடத்திற்கும் போகிறீர்கள் என்று சொன்னார்கள். அந்தப் பரிசுத்த ஸ்தலத்தில் நாங்கள் சேரும்போது செய்ய வேண்டியது என்ன? என்று இந்த பிரயாணிகள் கேட்டார்கள்.
அதற்கு ஒளிமய ரூபிகள் சொல்லுகிறார்கள்: நீங்கள் உங்கள் வருத்தங்கள் எல்லாவற்றிற்கும் ஆறுதலையும், துக்கங்கள் எல்லா வற்றிற்கும் சந்தோசத்தையும் அடைய வேண்டியது. நீங்கள் விதைத்ததை அறுக்க வேண்டியதிருக்கும். உங்கள் ஜெபங்கள், கண்ணீர்கள், மகாராஜாவின் நிமித்தமாக அனுபவித்த பாடுகள் முதலிய இவைகளுக்கும் உரிய பலனை அறுப்பீர்கள். (கலாத்தியர் 6 : 7-8) அந்த இடத்தில் நீங்கள் பொற்கிரீடம் தரித்தோராய் பரிசுத்தருடைய சமூகத்தில் வரவேண்டியது. ஏனெனில் அவர் இருக்கிறவண்ணமாகவே நீங்கள்அவரைத் தரிசிப்பீர்கள். (1 யோவான் 3 : 2) நீங்கள் பூமியில் இருக்கையில் அவருக்கு ஊழியம் செய்ய ஆசைப்பட்டும் உங்கள் மாம்ச பெலவீனத்தின் நிமித்தம் பல வருத்தங்களோடு ஊழியம் செய்வதற்குப் பதிலாக, அங்கு சந்தோசத்தோடும், ஸ்தோத்திரத்தோடும், ஆர்ப்பரிப் போடும் என்றென்றைக்கும் ஊழியம் செய்வீர்கள். அங்கே உங்கள் கண்கள் சர்வ வல்லவரைக் காண்பதால் களிக்கும், உங்கள் காதுகள் அவருடைய இன்ப சத்தத்தைக் கேட்டுக் களிகூரும். உங்களுக்கு முன்பதாக அவ்விடத்திற்குப் போயிருக்கிற உங்கள் சிநேகிதரை மறுபடியும் அங்கே சந்தித்து மனமகிழ்வீர்கள். உங்களுக்குப் பின்னாக அவ்விடத்திற்கு இனி வருகிறவர்களையும் அங்கே நீங்கள் ஆனந்தத்தோடு ஏற்றுக் கொள்வீர்கள். நீங்கள் மகிமையின் ராஜா வோடுகூடி உலாவத்தக்கதாக அங்கே மகிமையினாலும், மகத்துவத்தினாலும் உடுத்தப்படுவீர்கள். அவர் மேகாசனபதியாய் எக்காள சத்தத்தோடு காற்றின் செட்டைகளின் மீதில் பறந்து வந்தாற்போல எழுந்தருளி வரும்பொழுது நீங்களும் கூடவே வருவீர்கள். அவர் நியாதிபதியாக சிங்காசனத்தில் வீற்றிருக்கையில் நீங்களும் அவர் அருகில் உட்காருவீர்கள். இதுமாத்திரமோ? அவர் அக்கிரமம் செய்தவர்கள் எல்லாருக்கும் விரோதமாய் தீர்ப்புச் சொல்லும் போது அந்த அக்கிரமக்காரர் அவருக்கு சத்துருக்களாய் இருப்பதுபோல உங்களுக்கும் சத்துருக்கள் ஆகையால், அவர்கள் தூதரானாலும் சரி மனுஷரானாலும் சரி அந்தத் தீர்ப்பை நீங்களும் அவரோடு கூடியே கூறுவீர்கள். அதின்பின் அவர் தமது பட்டணத்துக்கு மறுபடியும் எழுந்தருளிப் போகும்போது நீங்களும் எழுந்தவிதமாக எக்காளத் தொனியோடு ஏகமாய் ஏறிப்போய் அவரோடு என்றென்றைக்கும் வாழுவீர்கள் (1 கொரிந்தியர் 6 : 2 – 3) என்றார்கள்.
பிரயாணிகள் இருவரும் மோட்ச வாசலண்டை கிட்டிச் சேர்ந்தவுடனே அவர்களை வாழ்த்தும்படி பரம சேனையின் ஒரு கூட்டம் எதிர் கொண்டு வந்தது. பிரயாணிகளுடன் கூடப்போன ஒளிமயரூபிகள் இருவரும் அவர்களை நோக்கி, இவர்கள் பூமியில் இருந்த காலத்தில் நமது ஆண்டவரை நேசித்து அவருடைய பரிசுத்த நாமத்துக்காகச் சகலத்தையும் வெறுத்தவர்களாய் இருக்கிறார்கள், இவர்களை அழைத்துக்கொண்டு வரும்படியாக அவர் எங்களை அனுப்பினார். இவர்கள் தங்கள் மீட்பரைப் போய் முகமுகமாய்க் கண்டு களிகூரும்படி புறப்பட்ட பயணத்தில் இம்மட்டாக நாங்கள் இவர்களை கூட்டிக்கொண்டு வந்தோம் என்றார்கள். அப்போது அந்த பரம சேனை உரத்த சத்தத்தோடு “ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” (வெளி 19 : 9) என்று சொன்னார்கள். மேலும் அங்கே ராஜாவின் எக்காளக்காரரில் பலர் வெண்மையும் பிரகாசமும் உள்ள வஸ்திரம் தரித்தவர்களாய் வந்து பரமண்டலம் முழுவதிலும் எதிரொலி கேட்கும்படியாகத் தங்கள் எக்காளங்களை ஊதி இன்பமான கவிகளை பாடினதோடு கிறிஸ்தியானையும் அவன் கூட்டாளியாகிய திடநம்பிக்கையையும் வாழ்த்தி நீங்கள் பூலோகத்தை விட்டது பதினாயிரம் மடங்கு சந்தோசமாய் இருக்கிறது என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
அப்புறம் அவர்களில் சிலர் முன்னும், சிலர் பின்னும், சிலர் வலது பக்கமும், சிலர் இடது பக்கமுமாய் பிரிந்து நின்று, பிரயாணிகள் நடுவில் இருக்கும்படி அவர்களைச் சூழ்ந்து கொண்டு, வானவெளியின் காவலாளர் போல் நாலா பக்கத்திலும் சுற்றிக்கொண்டு, எக்காளத்தை உன்னத தொனியோடு ஓயாமல் இன்பமாய் முழக்கிக் கொண்டே போனார்கள். அதைக் கண்ட பிரயாணிகளுக்கு பரமண்டலங்களும் அவைகளிலுள்ள அதிகாரங்கள் அனைத்தும் தங்களைச் சந்திக்கும்படி தாழ்ந்து வருகிறாற் போலக் காணப்பட்டது. இந்தவிதமாக இவர்கள் ஏகோபித்துப் போகையில் எக்காளக்காரர் மலர்ந்த முகத்தோடும் இசைந்த கீதத்தோடும் ஆடி, அசைந்து எக்காளம் ஊதின ஜாடையால் கிறிஸ்தியானும் அவனுடைய கூட்டாளியும் தாங்கள் தோழரானதும் அவர்களைச் சந்திக்கும்படி தாங்கள் வந்ததும் எவ்வளவோ சந்தோசமும் ஆனந்தமுமாய் இருக்கிறது என்று காட்டினாற்போல் இருந்தது. அந்தப் பிரயாணிகள் இருவரும் பரமசேனையின் பவிஞ்சுகளையும் அவர்களுடைய இன்ப ஓசையுள்ள கீதங்களையும் பார்க்கவே பரலோகத்தில் இன்னும் சேராவிட்டாலும் அங்கே வாசம்பண்ணுகிறது போலவே பரவசம் கொண்டார்கள். மோட்ச பட்டணமும் இங்கே அவர்களுக்கு தெரிந்தது. அவர்களைச் சந்திக்கும் படியாக மோட்சலோகத்து மணிகள் எல்லாம் சந்தோசத்தோடு தங்கள் நாதங்களை ஏகமாய் முழங்குகிறாற்போல் அவர்கள் நினைத்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு அகப்படப்போகிற நல்ல வாசஸ்தலங்களின் மகத்துவங்களும் இப்படிப்பட்ட சிநேகிதரின் கூட்டுறவும் அங்கே என்றென்றைக்கும் வீற்றிருப்போம் என்கின்ற எண்ணமும் அவர்கள் இருதயத்தை மட்டுக்கு மிஞ்சி பூரிக்கச் செய்தது. ஆ ! அவர்களுடைய ஆனந்தத்தின் மகத்துவம் இன்னதென்று நாவால் சொல்லவாவது எழுத்தாணியால் எழுதவாவது முடியாது. இவ் வண்ணமாய் அவர்கள் வான வெளிகளைக் கடந்து வாசலண்டை வந்து சேர்ந்தார்கள்.