சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை
கிறி: நல்லது, அப்படியே ஆகட்டும். உங்கள் நாட்டில் சுமார் பத்து வருஷத்துக்கு முன்னே மகா பக்திமானைப்போல் காணப்பட்ட சொற்பகாலம் 1 என்பவரை அறிவாயா?
திடநம்: அவனையா? அறிவேன், அறிவேன். நாணயபுரத்திற்கு சுமார் இரண்டு மைல் தூரத்திற்கு அப்பால் இருக்கிற சீர்கேடு என்ற ஊரில் பின்வாங்கி என்கிற ஒருவன் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தான்.
கிறி: சரி, சரி. இவனும் அவனும் ஒரே வீட்டில்தான் குடியிருந் தார்கள். அந்த மனிதன் ஒரு காலத்தில் தேவபக்திக்கேற்ற எழுப்புதலை அடைந்தான். அவன் தன் பாவங்களைப்பற்றிய அறிவும், அதற்கு வரவேண்டிய லாபம் இன்னது என்றும் அவனுக்குத் தெரிய வந்தது என்று நம்புகிறேன்.
திடநம்: நீர் சொல்லுகிறதை நானும் நம்புகிறேன். அவன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் இரண்டு நாழிகை வழி முதலாய் இல்லை. அவன் அடிக்கடி என் வீட்டிற்கு வந்ததுமுண்டு. வந்தபோதெல்லாம் அழுத கண்ணும், சிந்திய மூக்குமாகவே இருப்பான். அவனுக்காக நான் மெத்தவும் பரிதாபப்பட்டதும் உண்டு. அவனைக் குறித்துக் கொஞ்சம் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்லுகிறவர்கள் எல்லாரும் நல்லவர்களோ என்பதை இவன் விஷயத்தில் பார்க்கலாம்.
கிறி: அவன் ஒருதரம் என்னைக்கண்டு நம்மைப்போல அவனும் மோட்ச பிரயாணம் செய்யும்படி தீர்மானித்திருக்கிறதாய் சொன்னான். அப்படி இருக்கவே அவன் சுயரட்சை 2 என்ற ஒருவனோடு சிநேகம் பண்ணிக்கொண்டான். அதுமுதல் என்னுடைய உறவும் அற்றுப்போயிற்று.
திடநம்: நாம் இப்பொழுது அவனைக்குறித்து பேசுகிறதினாலே அவனும் அவனைப்போல் ஒத்தவர்களும் திடீரென்று பின்வாங்கிப் போகிறதற்கு முகாந்தரங்கள் என்னவென்று சற்று விசாரிப்போம்.
கிறி: அது மிகவும் பிரயோஜனமாய் இருக்கும். ஆதலால் நீ அதைப் பற்றி பேசத் துவக்கு.
திடநம்: எனக்குத் தோன்றுகிறபடி அப்படிப் பின்வாங்கிப் போவதற்கு நான்கு முகாந்திரங்கள் உண்டு.
1. அவர்களுடைய மனச்சாட்சியில் விழிப்பு உண்டானாலும் அவர்கள் மனம் இன்னும் மாறுதலடையாமல் இருக்கிறது. ஆதலால் அவர்கள் குற்றஞ் சாட்டப்பட்டதால் உண்டான பயத்தின் வல்லமை குறைந்து தேவபக்தியாய் நடக்கும்படி தூண்டின ஆவல் ஓய்ந்து போகிறது. அதினாலே அவர்கள் தங்கள் பழைய வழிகளில் மறுபடியும் திரும்பிவிடுகிறார்கள். மட்டுக்குமிஞ்சித் தின்ற நாயானது தன் வயிற்றுக்குள் இருக்கிறதை எல்லாம் வெளிப்படுத்திவிடுமட்டும் கக்குறது. தான் தின்றதை பத்திரப்படுத்திக் கொள்ளும்படியான மனதிருந்தாலும் அது தன் மனதின்படி செய்யாமல் குடலைப் புரட்டு கிறதினாலே அப்படிக் கக்குகிறது. அதின் அரோசிப்பு நீங்கி வயிறு தணிந்த பின்பு, தான் கக்கினதை எவ்வளவேனும் அருவருக்காமல் மறுபடியும்போல் அதை எல்லாம் நக்கித் தின்றுவிடுகிறது. “நாய் தான் கக்கினதை தின்னும்” (2 பேதுரு 2 : 22) என்ற பழமொழி உள்ளதுதான். அதுபோல சிலருக்கு நரகத்தைப் பற்றிய எண்ணமும், அதன் வேதனைகளைப் பற்றிய பயங்கரங்களும் குளிரக் குளிர, மோட்சத்தையும், இரட்சிப் பையும் பற்றி உண்டான ஆசையின் அனலும் குளிர்ந்து போகிறது. அவர்களைக் குற்றஞ்சாட்டும் மனச்சாட்சியும், உணர்த்தும் பயமும் நீங்கிப் போகிறதால் மோட்சத்தையும், பரம பாக்கியங்களையும் பற்றிய ஆசை செத்து தங்கள் பழைய வழிகளில் மறுபடியும் போய் விடுகிறார்கள்.
2. அவர்கள் தங்களை அடிமைப்படுத்தி ஆளுகிற பயங்கரங்களால் அப்படிச் செய்கிறார்கள். மனிதரைப்பற்றி அவர்களுக்குள் இருக்கிற பயத்தைக் குறித்தே இப்பொழுது பேசுகிறேன். “மனுஷருக்குப் பயப் படும் பயம் கண்ணியை வருவிக்கும்” (நீதிமொழிகள் 29 : 25) நரக அக்கினி ஜூவாலையின் இரைச்சல் அவர்கள் காதுகளில் தொனிக்கும் மட்டும், மோட் சானந்தத்தின் மேலுள்ள ஆசை அனலாக இருந்தாலும் அந்தப் பயம் சற்று நீங்கினபின் அவர்கள் வேறு நினைவாகி நாம் உள்ளதையும் இழந்து நஷ்டப்படுகிறதைவிட ஞானமாய் நடந்துகொள்ளுவது நலம் என்றாவது, நீங்கமாட்டாத தொல்லைகளையும், அவசியமில்லாத உபத்திரவங்களையும் நான் ஏன் வருவித்துக்கொள்ள வேண்டும் என்றாவது எண்ணுகிறார்கள். கடைசியாக அவர்கள் அப்படியே உலகத்தோடு மறுபடியும் சார்ந்து போகிறார்கள்.
3. தேவபக்தியாய் இருப்பதினால் உண்டாகிற வெட்கமும், அவர்கள் வழிக்கு ஒரு இடறு கட்டைபோல் இருக்கிறது. அவர்கள் அகந்தையும் இறுமாப்பும் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் பார்வைக்கு தேவபக்தியானது அற்பமும் ஈனமுமாய் இருக்கிறது. ஆதலால் நரகத்தைப் பற்றிய உணர்வும் வருங்கோபத்தைப் பற்றிய பயமும் நீங்கிப் போகிறபொழுது அவர்கள் மறுபடியும் பழைய பாவ வழியிலேயே போய்விடுகிறார்கள்.
4. பாவக் குற்றத்தையும் அதின் பயத்தையும் குறித்து தியானிப்பது அவர்கள் மனதுக்கு மகா சஞ்சலமாய் இருக்கிறது. தங்கள் நிர்ப்பாக்கியமும் தங்களைப் பிடிக்குமட்டும் அதைக் கவனிக்க அவர்களுக்குப் பிரியம் இல்லை. பிடிக்குமுன் அவர்கள் அதைக் கண்டுகொள்ள விரும்பினால் அந்தக் காட்சி நீதிமான்கள் போய் ஒதுங்கும் இடத்துக்கு அவர்களைப் போகும்படி ஏவித் தப்பிக் கொள்ளச் செய்யும். ஆனால் அவர்கள் நான் முன் சொன்ன பிரகாரம் பாவக்குற்றத்தையும் அதைப் பற்றிய பயத்தையும் தங்கள் மனதிலிருந்து நீக்கிவிடுகிறார்கள். ஆதலால் தேவனுடைய பயங்கரங்களையும், கோபாக்கினையையும் குறித்து மனதில் உண்டாகும் ஏவுதல் நீங்கும் பொழுதே அவர்கள் மனச் சந்தோசத்தோடு தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துகிறதும் அல்லாமல் மேலும் மேலும் கடினப்படுத்துகிற தற்கான வழியைத் தெரிந்து கொள்ளுகிறார்கள்.
கிறி: நீர் சொல்லியதெல்லாம் பின்வாங்குதலின் தன்மையைக் கொஞ்சம் குறைய நன்றாக விளக்குகிறது. அவர்கள் மனமும் உள்ளமும் மாறுதல் அடைந்திருக்கிறதே இவ்வளவுக்கும் காரணமாய் இருக்கிறது. அவர்கள் நியாயாதிபதிக்கு முன்பாக நிற்கிற ஒரு குற்றவாளிக்கு ஒப்பாய் இருக்கிறார்கள். அவன் பயந்து நடுநடுங்கி தான் செய்த குற்றத்திற்காக முழுமனதோடு துக்கப்படுகிறவனைப்போல் காணப் படுகிறான். அவன் நடுக்கத்துக்கு எல்லாம் காரணம் தூக்கு மரத்தைப் பற்றிய பயமே அல்லாமல் தான் செய்த குற்றத்தை அருவருக்கிற தனாலே அல்ல. அப்படிப்பட்ட மனுஷனை விட்டுவிட்டால் அவன் பழையபடி திருடனும் கொலை பாதகனுமாகவே இருப்பான். ஆனால் மனதில் மாறுதல் உண்டாகி இருந்தால் அவன் காரியம் வேறு விதமாய் இருக்கும்.
திடநம்: அவர்கள் பின்வாங்கிப்போவதின் காரணங்களைப் பற்றிச் சொன்னேனே, நீர் அவர்கள் பின்வாங்கிப்போகும் மாதிரியைப் பற்றிக் கொஞ்சம் சொல்லமாட்டீரா?
கிறி: மெத்தவும் சந்தோஷத்தோடு சொல்லுவேன்.
1. அவர்கள் தேவனையும், மரணத்தையும், நியாயத்தீர்ப்பையும் குறித்து தங்கள் மனதில் உண்டாகும் நினைவுகளை எல்லாம் விலக்கிப் போடுகிறார்கள்.
2. அப்புறம் அவர்கள் தனி ஜெபம், இச்சையடக்கம், விழிப்பு, உத்தம மனஸ்தாபம் ஆகிய இவை போன்ற அந்தரங்க கடமைகளை செய்யாதபடி வரவர நிறுத்திப் போடுகிறார்கள்.
3. அப்பால் அவர்கள், உத்தம பக்தியும், ஞான அனலுமுள்ள கிறிஸ்தவர்களுடைய சகவாசத்தில் இருந்து தங்களைப் பிரித்துக் கொள்ளுகிறார்கள்.
4. அதின்பின்பு அவர்கள் தேவ வசனத்தைக் கேட்டல், வாசித்தல், பக்திக்கடுத்த சம்பாஷணை ஆகிய இவைபோன்ற வெளியரங்க கடமைகளில் குளிர்ந்து போகிறார்கள்.
5. அப்புறம் அவர்கள் தேவபக்தியை தங்கள் முதுகுக்குப் பின்னாலே எறிந்துவிடும்படியாக தங்களுக்கு ஒரு போக்குவேண்டும் என்று தேவபக்தி உள்ளவர்களிடத்தில் நாமும் பார்க்கிற சில குறைவுகளைக் கண்டுபிடித்துக்கொண்டு பேய்த்தனமாய் அவைகளை அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லி அவர்களை கரைப்படுத்துகிறார்கள்.
6. அப்பால் அவர்கள் மாம்ச சிந்தையும், உல்லாசமும், சிற்றின்பமும் உள்ளவர்ளோடே கூடி சகவாசஞ் செய்கிறார்கள்.
7. அதின்பின்பு அவர்கள் மாம்ச சிந்தைக்கும், சிற்றின்பத்துக்கும் ஏதுவான சம்பாஷணைகளை அந்தரங்கத்தில் செய்கிறதோடுகூட உத்தமரில் சிலர் இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யப் பார்க்கிற பொழுது ஆனந்தங்கொண்டு தாங்கள் அவர்கள் மாதிரியைப் பார்த்துத் தைரியமாய்ச் செய்யும்படி ஏவப்படுகிறார்கள்.
8. இதின் பின் சில அற்பமான பாவங்களை விளையாட்டுப் போல வெளியரங்கமாய்ச் செய்கிறார்கள்.
9. கடைசியாக, அவர்கள் இருதயம் கடினப்பட்டு தாங்கள் இன்னார் என்று துலக்கமாய்க் காட்டுகிறார்கள். கிருபையினாலே அற்புதமாய் அவர்கள் தடுக்கப்படாவிட்டால் அப்படியே கேட்டின் சமுத்திரத்தில் விழுந்து, தாங்களே வரவழைத்துக் கொண்ட மோசத் தினால் என்றென்றைக்கும் அழிந்தே போகிறார்கள் என்றான்.
1. சொற்பகாலம் என்பவர் என்பது, கொஞ்ச காலத்துக்கு மாத்திரம் தேவபக்தியைப் பிடித்திருந்து அப்புறம் அதிலிருந்து விழுந்து போகிறவர்களைக் குறிக்கிறது.
2. சுயரட்சை என்பது இயேசு கிறிஸ்துவின் மூலமாய் இரட்சிப்படைகிறதற்குப் பதிலாக தான் நற்கிரியைகள் என்று எண்ணிக்கொள்ளுகிற செயல்களினாலே இரட்சிப்பு கிட்டும் என்று நம்புகிறவர்களைக் குறிக்கிறது.