பிரயாணிகள் அறிவீனனைச் சந்தித்தல்
மறுபடியும் நான் நித்திரை போய்த் திரும்பவும் சொப்பனம் கண்டேன். நான் முன்னே கண்ட பிரயாணிகள் இருவருமே ஆனந்த மலைத்தொடர்களை கடந்து, உச்சித பட்டணத்துக்குப் போகும் ராஜ பாதையாக நடந்து போனார்கள். அந்த மலை அடிவாரத்தில் ராஜ பாதைக்கு இடது பக்கமாக ஏமாப்பு தேசம் எனப்பட்ட ஒரு ராஜ்யம் இருக்கிறது. அங்கிருந்து ராஜ பாதையில் வந்து சேர்ந்த ஒரு கோணலான வழி இருந்தது.
அந்த இடத்தில் அவர்கள் ஒரு துடுக்குள்ள வாலிபனைச் சந்தித்தார்கள். அவனுக்கு அறிவீனன் 1 என்று பேர்.
கிறி: கிறிஸ்தியான் அவனைச் சந்தித்தவுடனே, தம்பி! எவ்விடம் இருந்து, எவ்விடம் போகிறாய்? என்று கேட்டான்.
அறிவீனன்: ஐயா, நான் இதோ இடது பக்கத்தில் இருக்கிறதே அந்த தேசத்தில் பிறந்து வளர்ந்தேன். இப்பொழுது மோட்ச பட்டணத்துக்கு பயணம் போகிறேன்.
கிறி: அதின் வாசலுக்குள் எப்படிப் பிரவேசிப்பாய்? அங்கே போனபின் உனக்கு சங்கடங்கள் நேரிட்டாலோ?
அறிவீ: மற்ற நல்லவர்கள் புகுவது போல நானும் புகுந்து கொள்ளுவேன்.
கிறி: வாசலைத் திறந்து உன்னை உள்ளே சேர்த்துக்கொள்ளும் படியாக நீ காண்பிக்கும் அத்தாட்சி பத்திரங்கள் ஏதாவது உண்டா?
அறிவீ: அத்தாட்சி பத்திரங்கள் என்னத்துக்கு? என் ஆண்டவருடைய சித்தம் இன்னதென்று அறிவேன். அவனவனுக்கு செலுத்த வேண்டியதை செலுத்திவிடுகிறேன். நான் ஜெபம் பண்ணுகிறேன். தபம் பண்ணுகிறேன். தசமபாகதானம் பண்ணுகிறேன். என் தர்மசகாயங்களுக்கு ஒரு குறைவுண்டா? இப்போதும் நான் என் பிறந்த ஜென்ம தேசத்தை மறந்து மோட்ச லோக யாத்திரை செய்கிறேன். இப்படி இவை எல்லாம் இருக்க அத்தாட்சி பத்திரங்கள் என்னத்துக்கு?
கிறி: ஆனால், நீ ராஜ பாதையின் துவக்கத்தில் இருக்கிற திட்டிவாசல் வழியாய் வரவில்லையே; இதோ இந்த குறுக்குப் பாதை வழியாய் அல்லவா வந்தாய். ஆகையினாலே நீ உன்னைப் பற்றி எப்படி எண்ணிக்கொண்டாலும் சரி, எனக்கு அச்சம் அச்சந்தான். கணக்கு ஒப்புவிக்கவேண்டிய கடைசி நாள் வரும்போது மோட்சபட்டணத்தில் நீ சேரஇடம் கிடையாமல், திருடனும், கொள்ளைக்காரனுமாய் இருக்கிறாய் என்று உன்பேரில் குற்றஞ் சாட்டப்படும்.
அறிவீ: துரைகளே! நீங்கள் எனக்கு முற்றிலும் அந்நியர்.
உங்களை நான்அறியமாட்டேன். நீங்கள் உங்கள் நாட்டு மார்க்கத்தை அனுசரித்து நடவுங்கள். நான் என் நாட்டு மார்க்கத்தின்படி நடக்கிறேன். எல்லாம் நன்றாய் முடியும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒரு வாசலைப்பற்றி சொல்லுகிறீர்களே அது எங்கள் நாட்டுக்கு அதிக தூரத்தில் இருக்கிறது என்பது உலகத்துக்கே தெரிந்த விஷயம். எங்கள்நாட்டான் ஒருவனுக்கும் அதற்குப் போகும் பாதை தெரியவே தெரியாது என்று எண்ணுகிறேன். அது தெரிந்திருந்தாலும் சரி, தெரியாதிருந்தாலும் சரி, அதைப்பற்றி அக்கறை இல்லை. எங்கள் நாட்டில் இருந்து மோட்ச லோகப்பாதையில் வந்து சேரும்படி நீங்கள் பார்க்கிறதுபோல நேர்த்தியான ஒரு வழி, பசும்புல் மைதான வழியாக இருக்கிறதே அதுவே போதுமானது என்றான்.
கிறி: அவன் தன் சுயபெருமைக்கேற்ற புத்திமான்போல் விளங்கினதை கிறிஸ்தியான் அறிந்துகொண்டு தன் தோழனாகிய திடநம்பிக்கையண்டை போய் மெதுவாக “இவனைப் பார்க்கிலும் மூடனைக் குறித்து அதிக நம்பிக்கையாய் இருக்கலாம்” (நீதிமொழிகள் 26 : 12) என்று காதுக்குள் கூறிவிட்டு பின்னும் சொல்லுகிறான்: “மூடன் வழியிலே நடக்கும்போதும் மதிகெட்டவனாய் இருக்கிறான். தான் மூடன் என்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான்” (பிரசங்கி 10 : 3) உம்முடைய யோசனை என்ன? அவனோடு இன்னும் பேச்சு கொடுக்கலாமா? அல்லது தற்சமயத்துக்கு நாம் எட்டி நடந்து, இம்மட்டும் அவன் நம்மிடத்தில் கேட்ட போதனைகளை உணரும்படி விட்டு விட்டு மறுபடியும் நின்று அவனுடன் பேசி, படிப்படியாக அவனுக்கு நன்மைசெய்யக்கூடுமா என்று பிரயத்தனம் செய்யலாமா? என்று கேட்டான். அதற்கு திடநம்பிக்கை:
அறிவீனன் கேட்டதை
ஆய்ந்தோய்ந்து பார்க்கட்டும்.
நல்லாலோசனைகளை
அல்லத்தட்டிவிட்டால்
மா மேலான லாபத்தை
காணாமலே போவான்.
மூடர் அனைவரையும்
ஏகன் படைத்தாலும்
மூடர் ஒருவரையும்
இரட்சியோம் என்கிறார்!
என்று கவிபோல் சொல்லி, பின்னும் சொல்லுகிறான்: எனக்குத் தோன்றுகிறபடி அவனுக்கு எல்லாவற்றையும் ஒரேமட்டாய் சொல்லி விடுகிறது நல்லதல்ல. இவனைவிட்டுவிட்டு நாம் முந்திப்போய் விடுவோம். இவனுடைய திராணிக்குத் தக்கதாக அப்பால் கொஞ்சங் கொஞ்சமாய் இவனுக்குச் சொல்லலாம் என்றான்.
அப்படியே அவர்கள் இருவரும் முந்தினார்கள். அறிவீனன் தன் மட்டில் பிந்தி நடந்து போனான். அவர்கள் அவனை விட்டு பிரிந்து சற்று தூரம் போகவே பக்கத்தில் இருந்த இருட்டான ஒரு சந்துக்குள் சேர்ந்தார்கள். அங்கே ஒரு மனுஷனை ஏழு பிசாசுகள் கூடி பலமான ஏழு கயிறுகளால் கட்டி இழுத்து ஒரு பள்ளத்தாக்கின் சரிவில் முன்கண்ட வாசலுக்கு நேராய் கொண்டு போகிறதைப் பார்த்தார்கள். (மத்தேயு 12 : 45 நீதிமொழிகள் 5 : 22) பார்த்தவுடனே கிறிஸ்தியான் பயந்து கிடுகிடுவென்று ஆடி விட்டான். திடநம்பிக்கையும் திடுக்கிட்டுப் போனான். ஆனாலும், பிசாசுகள் இழுத்துக்கொண்டு போகிறபோதே, இவன் பாதித்திய பட்டணத்தில் குடியிருந்த மறுதலிப்பு 2 என்கிறவனாய் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு இவனை நான் அறிவேனோ என்று கிறிஸ்தியான் கூர்மையாய் கவனித்தான். என்றாலும் கையும் மெய்யு மாய் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு திருடனைப்போல், தலை கவிழ்ந்து கொண்டு போனதால் கிறிஸ்தியான் அவனை இன்னான் என்று இனங்கண்டு கொள்ளவில்லை. அவன் சற்று தூரம் கடந்த பிற்பாடு திடநம்பிக்கை திரும்பிப் பார்க்கவே அவனுடைய முதுகின் மேல் வீண் மதவெறி கொண்டவன் – பாழ் நரகப் படுதோஷி என்று எழுதப் பட்டிருக்கிறதைக் கண்டான்.
அப்பொழுது கிறிஸ்தியான் தன் தோழனோடு சொல்லுகிறான்: ஒரு நல்ல மனுஷன் இந்த திசையில் நடந்ததாக நான் கேள்விப் பட்டிருக்கிற செய்தி என் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த நல்ல மனுஷனுக்கு அற்ப விசுவாசி 3 என்று பேர். ஆனால் அவன் குணத்துக்கு வெகு கெட்டிக்காரன் தான். யதார்த்தபுரியிலே குடியிருந் தான். அவன் சமாச்சாரத்தை சொல்லுகிறேன் கேளும்: இந்தத் தெருவின் முகப்பிலே விசாலவழி வாசலிலிருந்து வருகிற ஒரு சிறு வழி இருக்கிறது. அதற்கு இறந்தோர் சந்து 4 என்று பேர். அந்த இடத்தில் நடக்கிற படுகொலைகளை முன்னிட்டு அதற்கு இந்தப் பேர் வழங்கப்படுகிறது. இந்த அற்ப விசுவாசி என்பவன் இப்படி நம்மைப்போல் மோட்ச பிரயாணம் போகையில் அந்த தெருவில் சற்று உட்கார்ந்து தூங்கினான் 5. அந்த சமயத்தில் விசால வழி வாசலில் இருந்து புறப்பட்ட மூன்று கள்ளர் 6 இறந்தோர் சந்து வழியாய் வந்தார்கள். அவர்களுக்கு அதைரியன், சந்தேகி, பாவப்பழி 7 என்ற பேர் வழங்கப்பட்டது. இவர்கள் மூவரும் அண்ணன் தம்பிமார்கள் தான். அற்ப விசுவாசி உட்கார்ந்திருக்கிறதை அவர்கள் தூரத்திலே கண்டு கும்மாளம் போட்டுக்கொண்டு வெகு வேகமாய் வந்தார்கள். அப்போதுதான் அந்த நல்ல மனுஷன் தூங்கி விழித்து பிரயாணம் போகும்படி ஆயத்தப்பட்டான். அவர்கள் வந்தவுடன் பெருஞ்சத்தம் போட்டு நில்லுடா என்றார்கள். உடனே அவன் முகம் வெளுத்துப் போயிற்று. எதிர்த்து சண்டை போடவாவது, மறைவாக ஒளித்து ஓடவாவது அவனால் கூடாமற்போயிற்று. அப்போது அதைரியன் என்பவன் உன் பணப்பையை அவிழ்த்து வை என்றன். அவன் பணத்தை எப்படி இழந்து போகிறது என்று சற்றுப் பின் தங்கினான். சந்தேகி உடனே அவன்மடியில் கைப்போட்டு வெள்ளி நாணயங்கள் நிறைந்திருந்த ஒரு பையைப் பிடுங்கி எடுத்தான். உடனே அவன் கூவோ கூ! கூவோ கூ! கள்ளன்,கள்ளன் என்று கத்தினான். அந்த சமயத்தில் பாவப்பழி தன்கையில் இருந்த பெரிய தடியினால் அவன்மண்டையில் அடித்தான். அற்ப விசுவாசி அப்பாடா என்று கீழே விழுந்தான். அவனைப் பார்த்தவர்கள் எல்லாரும் இவன் ஏது பிழைப்பது என்று சொல்லத்தக்கதாக அவ்வளவு இரத்தம் அவன் மண்டையிலிருந்து வடிந்தது. இம்மட்டும் அந்தத் திருடர் கிட்டவே நின்றார்கள். கடைசியாக யாரோ பிரயாணிகள் வருகிற சத்தம் கேட்டது. அப்போது அவர்கள் திடநம்பிக்கை ஊரில் வசிக்கும் அருளாதிக்கன் 8 வந்தாலும் வருவார் என்று பயந்து இவன் எப்படியேனும் நாசமாய் போகட்டும், நாம் ஓடிவிடுவோம் என்று சொல்லிக்கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் போய் கொஞ்ச நேரத்திற்குள்ளாக அற்ப விசுவாசிக்கு புத்தி தெளிந்து மெதுவாய் எழுந்திருந்து தன் வழியே போனான். இதுதான் நான் கேள்விப்பட்ட சமாச்சாரம் என்று சொன்னான்.
திடநம்: அவனுக்குள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அடியோடே பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்களோ?
கிறி: அவனுடைய நகைநட்டுகள் 9 இருந்த இடத்தை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆதலால் அவைகள் இன்னும் அவன் வசத்தில் இருக்கின்றன. ஆனால் நான் முன் சொன்னபடி வழிச்செலவு பணம் எல்லாம் கள்ளர் கைக்கு பறிமுதலாய் போனதையிட்டு அவனுக்கு ஆறாத் துயரம் இருந்தது. நகைகள் எல்லாம் தப்பிக் கொண்டது. அதோடு கொஞ்சம் முதலும் இருந்தது. அது அவன் பிரயாணம் முடியுமட்டும் செலவுக்குப் பற்றாது. அதனாலே (நான் கேள்விப்பட்ட செய்தி நிஜமானால்) அவன் தன் நகைகளை விற்றுப் போடக்கூடாதிருந்தபடியால் 10 தன் ஜீவனைப் பிழைப்பூட்டும்படி வழி நெடுக பிச்சைவாங்கி சாப்பிட்டுக்கொண்டு போனானாம். எத்தனைதான் பிச்சை எடுத்தால் என்ன அவன் அடிக்கடி வயிறு காய்ந்துதான் போயிருப்பான். (1 பேதுரு 4 : 18)
திடநம்: அவனை மோட்ச வாசலுக்கு சேர்க்கிறதற்கு உதவியான பத்திரம் கள்ளர் கையில் அகப்படாதது பெரிய அதிசயம் அல்லவா?
கிறி: அது அதிசயம் என்று ஒரு தரமா சொல்ல வேண்டும்? அந்த அத்தாட்சி பத்திரங்கள் கள்ளர் கையில் அகப்படாதது அவன் அதை மறைக்கும்படி செய்த சாமர்த்தியத்தினால் என்று அதை சொல்லல் ஆகாது. கள்ளர் வந்து அவனைக் கொள்ளையிட விழுந்தபோது அவன் விதிமறந்து போனான். பத்திரத்தை மறைக்க வேண்டுமே என்ற யூகமாவது, வல்லமையாவது அவனுக்கு இல்லாமற் போயிற்று. ஆனாலும் எப்படியோ தெய்வ செயலாகத்தான் அது அவர்கள் கையில் அகப்படவில்லை என்று சொல்லவேண்டியது. (2 தீமோத்தேயு 1 : 12, 14 1 பேதுரு 1 : 5, 9)
திடநம்: எப்படியும் அந்த நகைகள் கள்ளர் கையில் அகப் படாதது அவனுக்கு பெரிய ஆறுதலாய் இருக்க வேண்டியது அல்லவா?
கிறி: அவன் அந்த நகைகளை பயன்படுத்த வேண்டியபிரகாரம் பயன்படுத்தியிருந்தானாகில் அது ஆறுதலாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இந்தச் சமாச்சாரத்தை எனக்குச் சொன்னவர்களால் அவன் துவக்கத்தில் பணத்தைப் பறிகொடுத்த பயங்கரத்தினாலே மீதியான வழியில் அவன் தன் நகைகளை அவ்வளவாய் பயன்படுத்த நாடவில்லை என்று கேள்விப்பட்டேன். உள்ளபடி தன் பிரயாணத்தின் வெகு தூரம் மட்டும் அவன் தன் நகைகளை மறந்தே போய்விட்டானாம். எப்போதாவது நகையைப்பற்றிய நினைவு வந்தால் அதோடு பணம் பறிபோன நினைவும் வந்து அவன் மனதை வாதிக்கிறதாய் பண நினைவு, நகை நினைவைப் பறந்தோடிப் போகச் செய்யுமாம்.
திடநம்: ஐயோ எத்தனை பரிதாபம்! இது அவன் மனதுக்கு துயரமாய் இருக்கும் என்பதற்கு ஐயம் இல்லை.
கிறி: துயரமா? ஆறாத் துயரம் என்று சொல்ல வேண்டியது. நம்மில் யாருக்காவது இப்படி நேரிட்டு நம்முடைய பணமும் போய், படுகாயமும் அடைந்து அந்நிய இடத்தில் இவ்வளவு நஷ்டமும் நேரிட்டால் நமக்குத் துயரம் இருக்கமாட்டாதா? அந்த ஏழை மனுஷன் விசனத்தினாலே சாகாமல் இருந்தது பெரிய அதிசயம். அவன் தன் மீதியான வழி முழுவதும் நிர்ப்பந்தப்பட்டுத் துக்கத்தோடு அலைந்து திரிந்தான் என்றே கேள்விப்பட்டேன். போகப் போக வழியில் சந்தித்த ஆட்களிடத்திலும் வந்து கூடின மனிதரிடத்திலும் இப்படி இன்ன இடத்தில் இன்னாரால் அடியும், மிதியும் பட்டு மடியில் இருந்த பணத்தையும் பறிகொடுத்து மண்டையில் இந்தக் காயத்தை வாங்கிக் கொண்டேன். நான் பிழைத்ததே மறுபிழைப்பு என்று சொல்லுவானாம்.
திடநம்: இப்படி எல்லாம் அவதிப்பட்ட சமயத்தில் அவன் தன் நகைகளில் இரண்டொன்றை விற்றாவது, அடைமானம் வைத்தாவது வழிப்பிரயாணத்தில் செலவு செய்து தனக்கு சௌக்கியத்தைத் தேடாமல் மதிமயங்கிப்போனது என்ன அதிசயம்!
கிறி: நீ என்ன? இன்னும் முட்டைக்குள் இருக்கிற குருவிக்குஞ்சு போல பேசுகிறாயே. என்னத்துக்காக அதை அடைமானம் வைப்பான்? அல்லது அதை யாருக்கு விற்பான்? அவன் அடிபட்ட தேசத்திலுள்ள ஒருவனும் இவனுடைய நகைகளை ஒரு பைசாவுக்கும் மதிக்க மாட்டானே. மேலும் அந்த விதமாய் தனக்கு சகாயத்தை சம்பாதிக்க அவன் விரும்பவுமில்லை. அதுவும் அல்லாமல் அவனுடைய நகை நட்டுகள் மோட்ச வாசலண்டை அவனிடத்தில் இல்லாவிட்டால் அவ்விடத்து சுதந்திரத்துக்கு புறம்பாக்கப்படுவான் என்பது அவனுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. பதினாயிரம் திருடர் கூடி அவனைக் கொள்ளையிட்டு நஷ்டப்படுத்தினாலும் என்ன, மோட்ச சுதந்திரத்தை இழந்துபோவது அல்லவா பெரிய நஷ்டமாய் இருக்கும்.
திடநம்: ஏது சகோதரனே! இவ்வளவு கடினமாய் பேசுகிறீர்? ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை எவ்வளவுக்கு விற்றான்? கொஞ்சம் பயற்றங்கூழுக்குத்தானே, அந்த சேஷ்டபுத்திரபாகம் அவனுடைய விசேஷித்த பொக்கிஷமாய் இருந்தது. (எபிரேயர் 12 : 16) அவன் அதையே விற்றானானால் அற்ப விசுவாசி ஏன் அவனைப்போல் செய்யக்கூடாது?
கிறி: ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை விற்றது நிஜம்தான். அவனைப்போல வேறே அநேகரும் விற்கிறார்கள் என்பதும் மெய்தான். அப்படிச் செய்வதால் அவர்கள் அந்தக் கெடுகாலனைப்போல் தங்களுக்கு அகப்பட வேண்டிய பிரதான ஆசீர்வாதத்திலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளுகிறார்கள். ஆனால் நீ ஏசாவையும் அற்ப விசுவசாசியையும், அவன் சொத்தையும் இவன் சொத்தையும் வித்தியாசப்படுத்தி யோசிக்க வேண்டியது. ஏசாவின் சேஷ்டபுத்திர பாகம் ஒரு முன்னடையாளமாய் மாத்திரம் இருந்தது. அற்ப விசுவாசியின் ஆபரணங்களோ அப்படியல்ல. ஏசாவின் வயிறே அவனுக்கு தேவனாயிருந்தது. அற்ப விசுவாசியின் தேவன் அப்படி அல்ல. ஏசாவின் ஆவல் அவன் மாமிச பசியில் இருந்தது. அற்ப விசுவாசியின் ஆவல் அப்படி அல்ல. மேலும் ஏசா தன் இச்சை நிறைவேறுகிறது எப்படி என்று கவனித்தானே அல்லாமல் அதற்கப் பால் ஒன்றையும் கவனிக்கவில்லை. “இதோ நான் சாகப் போகிறேனே இந்த சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்துக்கு” (ஆதியாகமம் 25 : 32) என்று சொன்னான். அற்ப விசுவாசியின் காரியம் அப்படி அல்ல, அவனுக்கு அகப்பட்ட விசுவாச அளவு அற்பமாய் இருந்தபோதினும் அந்த அற்ப விசுவாசத்தை கொண்டு தன் வரம்பு தப்பி நடவாமல் தன்னைக் காத்துக்கொண்டு, ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை விற்றதுபோல் இவன் தன் நகைகளை விற்றுப்போடாமல் அவைகள் விலைமதிக்கப் படாதவைகள் என்று எண்ணி இருக்கிறான். ஏசாவுக்கு விசுவாசம் இருந்தது என்று நீ எந்த இடத்திலாவது வாசிக்கிறதில்லை. அவனுக்கு ஒரு அணுவளவு விசுவாச முதலாய் இருந்ததில்லை. ஆதலால் எதிர்த்து நிற்கத்தக்கதான விசுவாசம் இல்லாமல், மாமிச இச்சையினால் ஆளப்படுகிற மனிதன், தன் சேஷ்டபுத்திரபாகத்தையும், தன்னுடைய ஆத்துமாவையும், மற்றெல்லாவற்றையும் கூட நரகத்துப் பிசாசுக்கு விற்றுப் போட்டானானால் அது அதிசயம் அல்லவே. மதவெறி கொண்டோடும் கழுதையை திருப்பக்கூடாதது போல, இப்படிக் கொத்தவனுடைய மனதையும் திருப்பக்கூடாது. அவர்கள் மனம் அவர்கள் இச்சைகளின் பேரில் ஓடுகையில் அதினால் எவ்வளவு நஷ்டமானாலும் சரி அதைக் கவனியாமல் தங்கள் இச்சை நிறைவேற வேண்டும் என்றே கவலையாய் இருப்பார்கள். ஆனால் அற்ப விசுவாசியின் காரியம் முற்றிலும் வேறாக இருந்தது. அவன் மனம் தெய்வீக விஷயங்களின் மேல் இருந்தது. அவன் ஜீவனார்த்தம் உன்னதத்திலிருந்து வரும் ஆவிக்குரிய விஷயங்களின் மேல் இருந்தது. ஆகையால் இப்படிப்பட்ட குணங்களைக்கொண்ட அவன் தன் ஆபரணங்களை விலைக்கு வாங்கிக்கொள்ளத்தக்க ஒருவன் அவ்விடத்தில் இருந்தாலும் என்ன லாபத்துக்காக தன் நகைகளை விற்பான்? தன் மனதை வீணானவைகளிலே நிரப்பவா? ஒரு மனிதன் தன் வயிற்றை நிரப்பும்படி வைக்கோலுக்குப் பணம் கொடுப்பானா? அல்லது ஒரு மணிப் புறாவை, காகத்தைப் போல் பிணம் பிடுங்கித் தின்ன உன்னால் பழக்கக்கூடுமா? விசுவாசமில்லாதவர்கள் மாமிச இச்சையினிமித்தம் தங்களுக்குண்டானதை மாற்றிக்கொண்டு அல்லது அடைமானம் வைத்து அல்லது விற்று தங்களையும் சமூலமாய் விலைப்படுத்திவிட்டாலும், விசுவாசமுள்ளவர்கள் இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் தங்களுக்கு அணுவளவு மாத்திரம் இருந்தபோதிலும் இப்படிச் செய்யமாட்டார்கள். இதைப்பற்றித்தான் என் சகோதரனே உன்னிடத்தில் தப்பிதம் இருக்கிறது.
திடநம்: அது சரி ஒத்துக்கொள்ளுகிறேன், என்றாலும் உம்முடைய கடுமையான வார்த்தைகள் என்னைக் கொஞ்சங்குறையக் கோபதாபங் கொள்ளச் செய்துவிட்டது.
கிறி: அப்படி கோபதாபப்படுவானேன்? நான் உம்மை முட்டைத் தோட்டோடு நகர்ந்து போகிற சில துடுக்கான குருவிக்குஞ்சுகளுக்கு ஒப்பிட்டதுண்டு. அதை மனதில் வைக்க வேண்டாம். நாம் சம்பாஷிக்கிற பொருளின் ஆழ்ந்த கருத்தைப் பிடித்துக்கொண்டு ஆராய்ந்து பார்த்தால் நம் இருவருக்கும் இணக்கமாய் இருக்கும்.
திடநம்: அந்த மூன்று திருட்டுப்பயல்களும் என் மனதுக்கு தோன்றுகிறபடி தெம்மாடிகளாக்கும். 11 மற்றபடி ஆள்வருகிற அரவங்கேட்டவுடனே ஓட்டம் பிடிப்பார்கள் என்று நீர் நினைக்கிறீரா? அற்ப விசுவாசி ஏன் தன்னுடைய வீரத்துவத்தை காட்ட வில்லை? ஒரு கை பார்த்துக்கொண்டு, அப்புறம் முடியாதானால் தாழ்ந்து கொள்ள வேண்டியதாயிருந்தது என்று எனக்கு தோன்றுகிறது.
கிறி: அவர் தெம்மாடி என்று பலரும் சொல்லக் கேட்டிருக் கின்றேன். ஆனால், உபத்திரவகாலத்தில் அவர்கள் தெம்மாடிகள்தான் என்று கண்டு பிடித்தவர்கள் மெத்தக் கொஞ்சபேர்தான். அற்ப விசுவாசி வீரத்துவம் காட்டுவதைப்பற்றிச் சொன்னால் அவனுக்கு அப்படிப்பட்ட தைரியமே இல்லை. என் சகோதரா, நீர் சொல்லு கிறதைப் பார்த்தால் இப்படிப்பட்ட சங்கடம் உமக்கு நேரிட்டால் நீர் ஒரு கை பார்த்து, பலிக்கவில்லையானால் அவர்கள் பாதத்தில் படுத்துக்கொள்ளுவீர் போல இருக்கிறது. அவர்கள் இப்போது நமக்குத் தூரத்தில் இருக்கிறபடியினாலே நீர் இந்த தைரியம் பேசுகிறீர். இப்போதே கிட்டவந்து அற்ப விசுவாசிக்கு செய்தபடியே உமக்கும் செய்தால் இந்த நினைவெல்லாம் பறந்து வேறு எண்ணமாகிவிடும்.
மேலும் நீர் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர்கள் வழிப்பறிகாரர், அடியற்ற பாதாளத்தரசனுடைய ஏவலாட்கள், அவசரம் நேரிட்டால் அவனே அவர்களுக்கு ஒத்தாசையாக வந்து சேருவான். அவன் சத்தம் சிங்கக் கெர்ச்சிப்புக்கு ஒத்தது. (1 பேதுரு 5 : 8) இந்த அற்ப விசுவாசி பட்டபாடெல்லாம் நானும் ஒருதரம் அவர்களிடத்தில் பட்டேன்.
அப்போது என் பிராணனே போய்விட்டது என்று எண்ணிக் கொண்டேன். இந்த மூன்று துஷ்டரும் என்மேல் வந்து விழுந்தார்கள். நானோ ஒரு கிறிஸ்தவனைப்போல எதிர்த்து நிற்க ஆரம்பித்தேன். உடனே அவர்கள் ஒரு முழக்கமிட்டுக்கூப்பிடவே அவர்கள் அதிபதி வந்துவிட்டான். அப்போது என் நிலைமை “ஒரு காசுக்கு உயிரையும் விட்டானாம்” என்ற பழமொழிக்கு ஏற்றாற்போலவே இருந்தது. ஆனால் என் ஜீவன் கர்த்தருக்கென்று தப்பும்படியாக ஒரு தலைச்சீரா எனக்கு இருந்தது. எத்தனை காபந்து எனக்கு இருந்தாலும் என்ன? நான் அவர்களிடத்தில் என் புருஷத்துவத்தை காட்டுவது வெகு கஷ்டத்தில் இருந்தது. அப்படிப்பட்ட போரில் இருந்தவனுக்கு அது
தெரியுமே தவிர மற்றொரு மனுஷனும் அந்தச் சங்கடங்களை அறியமாட்டான்.
திடநம்: எப்படியும் அருளாதிக்கன் வந்தாலும் வருவார் என்று அவர்கள் பயந்து ஓடிவிட்டார்கள் அல்லவா?
கிறி: அது நிஜம்தான், அவர்களும் அவர்கள் எஜமானும் கூட அருளாதிக்கன் வந்தவுடனே அடிக்கடி ஓடியிருக்கிறார்கள். அது அதிசயம் அல்ல, அவர் ராஜாவின் சேனைத் தலைவன். அற்ப விசுவாசிக்கும், ராஜாவின் சேனைத் தலைவனுக்கும் நீ சற்று வித்தியாசம் பண்ணிக் கொள்ளுவாய் என்று நம்புகிறேன். அரசனுடைய குடிகள் எல்லாம் அவனுடைய சேனாதிபதி ஆவார்களா? யுத்தப் பரீட்ஷையில் அவர்கள் சேனாபதியைப்போல போர்புரியவும் கூடாது. தாவீது கோலியாத்தை மடங்கடித்தது போல் ஒரு குழந்தையும் மடங்கடித்து விடலாம் என்று சொல்லுவது சரியா? சிலர் பலவான்களாய் இருக்கிறார்கள். சிலர் பலவீனராய் இருக்கிறார்கள். சிலருக்கு அதிக அளவிலான விசுவாசம் இருக்கலாம். சிலருக்கு அணுவளவான விசுவாசம் இருக்கலாம். இந்த மனிதன் பலவீனரோடு சேர்ந்தவன். ஆகையினாலேதான் தோற்றுப் போனான்.
திடநம்: அவர்களை உதைக்கும்படி அருளாதிக்கன் வந்திருந்தா ரானால் நன்றாய் இருந்திருக்கும்.
கிறி: அவர் வந்திருந்தாலும் மடிநிறைய வாங்கிக் கொண்டுதான் போயிருப்பார். ஏனென்றால் அருளாதிக்கன் ஆயுதப்பரீட்ஷையில் சமர்ததராய் இருந்து பட்டய நுனியின் தூரத்துக்குள்ளே அவர்கள் நெருங்காதபடி காபந்து பண்ணிக்கொள்ளுமட்டும் அவர் காரியம் ஜெயமாய்த்தான் இருக்கும். ஆனால் அதைரியனாவது, சந்தேகியாவது, பாவப்பழியாவது கைக்குக் கையாய் நெருங்கிவிட்டாலோ அப்போது அவர் காரியமும் அப்படி அப்படித்தான். காலைவாரித் தரையில் அடித்து விடுவார்கள். ஒருவன் கீழே விழுந்துவிட்டால் அப்புறம் அவனால் என்ன செய்யக்கூடும்? என்பது உமக்கே தெரியுமே.
அருளாதிக்கருடைய முகத்தை கூர்ந்து பார்க்கிறவன் எவனோ அவன் அவர் முகத்தில் இருக்கிற கீறலையும், காயங்களையும் கண்டுகொண்டு நான் சொன்னதெல்லாம் நிஜம் என்று நம்பிக் கொள்ளுவான். அவர் ஒரு தரம் போர்புரிந்தபோது நாங்கள் செத்தோம் என்றே நினைத்தோம் என்று அவர் சொன்னதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஐயோ இந்தத் திருட்டு சண்டாளரும், அவர்கள் தோழரும் தாவீது என்பவரை எவ்வளவாய் அழுது புலம்பி அங்கலாய்க்கச் செய்துவிட்டார்கள். ஏமானும், எசேக்கியா ராஜனும் தங்கள் காலத்தில் வீரபராக்கிரமாய் இருந்தபோதினும் இந்த திருடரால் சூழப்பட்ட சமயத்தில் அவர்களோடு போர்செய்வது அவசியமாய் இருந்தது. அந்தச் சமயத்தில் அவர்களை காபந்து செய்து கொள்ளத் தக்கதான மேலுடுப்பு அவர்களுக்கு இருந்தாலும் அதை எல்லாம் கந்தை கந்தையாக பீற்றலாக்கிவிட்டார்கள். ஒரு காலத்தில் பேதுருவும் தம்மாலான சாமர்த்தியங்கொண்டு அந்த துஷ்டரை மடக்கிவிடலாம் என்று போய்ப் பார்த்தார். சிலர் அவரை அப்போஸ்தலரின் பிரபு என்று சொல்லுகிறார்கள். ஆனால் அவர்பட்ட பாடு கடும்பாடு. அவர்கள் ஒரு nலைக்காரப் பெண்ணைக் கொண்டு அவரைப் பயப்படுத்தி அப்படி அவரைக் காலா கோலப்படுத்தி விட்டார்கள்.
அதுவுமல்லாமல் ஒரு கூப்பிடு தூரத்துக்குள்தான் அவர்கள் அரசனும் இருக்கிறான். ஒரு சத்தம் போட்டவுடனே அவன் கேட்டுக்கொள்ளுகிறான். தன் சேனாபதிகள் கை தாழ்ந்து போகி றார்கள் என்று கண்டால் அந்நிமிஷம் அவனே வந்து ஒத்தாசை செய்கிறான். “அவனைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லயம், கவசம் ஒன்றும் அவனுக்கு முன் நிற்காது; அவன்இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உழுத்த மரமாகவும் எண்ணுகிறான். அம்பு அவனைத் துரத்தாது, கவண் கற்கள் அவனுக்குத் துரும்பாகும். அவன் பெருந்தடிகளை தாளடிகளாக எண்ணி ஈட்டியின் அசைவை இகழுவான்”. (யோபு 41 : 26-29) என்று அவனைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கிற விஷயத்தில் ஒரு மனுஷனாலே என்ன செய்யக்கூடும்? மெய்தான் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு மனுஷனுக்கு யோபுவின் குதிரை அகப்பட்டு அதின்மேல் ஏறுகிற தைரியமும், அதை நடத்துகிற சாமர்த்தியமும் இருந்தால் அப்போது பெருங்காரியங்களையும் செய்துவிடலாம். ஏனெனில் அந்தக் குதிரையின் தொண்டையில் குமுறல் இருக்கிறது. ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுவதைப் போல அதை மிரட்டலாகாது. அதினுடைய நாசியின் செருக்கு பயங்கரமாய் இருக்கிறது. அது தரையிலே தாளடித்து தாளடித்து தன் பலத்தில் களித்து ஆயுதங்களை தரித்தவர்களுக்கு எதிராகப் புறப்படும். அது கலங்காமலும், பட்டயத்துக்கு பின்வாங்காமலும் இருந்தது. பயப் படுதலை அலட்சியம்பண்ணும். அம்பறாத் துணியும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின் மேல் கலகலக்கும்போது கர்வமும், மூர்க்கமும் கொண்டு தரையை விழுங்கிவிடுகிறது போல அனு மானித்து, எக்காளத்தின் தொனிக்கு அஞ்சாமல் பாயும். எக்காளம் தொனிக்கும்போது அது நிகி என்று கனைக்கும்.
யுத்தத்தையும், படைத் தலைவரின் ஆர்பரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்தில் இருந்து மோப்பம் பிடிக்கும். (யோபு 39 : 19-25)
ஆனால், கால்நடைப் பிரயாணிகளாகிய நீயும் நானும் சத்துரு வருகிறான் இல்லையே என்று எதிர்பார்க்கவேண்டாம். அவதிப்பட்ட பலரைப்பற்றி கேள்விப்படும்போது நாம் அவர்களைப்பார்க்கிலும் பராக்கிரமம் காட்டலாம் என்று வீம்பு பாராட்டி மனம் மகிழவும் தகாது. சோதனை உண்டாகிற சமயத்தில் சற்றாகிலும் எதிர்த்து நிற்க இயலாமல் தோற்றுப்போய் ஓடுகிறவர்கள் வாயிலேதான் இப்படிப் பட்ட வார்த்தைகள் எல்லாம் வரும். இது மெய் என்பதற்கு முன்னே நான் சொன்ன பேதுருவே அத்தாட்சி. அவன் இல்லாத சாமர்த்தியம் எல்லாம் பேசவே பேசுவான். அவனுடைய வீணான மனம் ஏவினபடி எல்லா மனிதரைப்பார்க்கிலும் நான்தான் என் ஆண்டவருக்காக வந்ததை எல்லாம் சகிப்பேன் என்று சொல்லுவான். ஆனால் இவனைப் போல துஷ்டரைக் கண்டவுடன் அவன் அப்படித் தெம்மாடித்தனமாய் ஓட்டம் பிடிப்பான்!
ராஜ பாதையிலே இப்படிக்கொத்த கொள்ளைகள் நடக்கிறது என்று கேள்விப்படும்போது நாம் செய்ய வேண்டிய காரியங்கள் இரண்டு உண்டு. அவையாவன:-
முதலாவது: நாம் ஆயுதம் தரித்தவர்களாய் புறப்படவும், கேடகம் இல்லாமல் கால் எடுத்து வைக்காமல் இருக்கவும் வேண்டும். ஏனெனில் இவைகள் இல்லாமையினால் லிவியாதான் மேல் விழுந்த ஒருவன் அதை தனக்கு கீழ்ப்படுத்தும்படி கூடாமற் போயிற்று. இவைகள் நமக்கு இல்லாவிட்டால் அது நமக்கும் அஞ்சமாட்டாது என்பது நிச்சயம். அதினாலேதான் ஞானமுள்ள ஒருவர்: “பொல்லாங்கன் எய்யும் அக்கினி அஸ்திரங்களை எல்லாம் அவித்துப்போடத்தக்கதாக எல்லா வற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடகத்தை பிடித்துக் கொண்டவர்களாய் நில்லுங்கள்” (எபேசியர் 6 : 16) என்று சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது: ராஜ சேவகன் ஒருவன் நம்மோடு அனுப்பப் படவும், ராஜாவே நம்மோடு கூட இருக்கவும் நாம் கேட்டுக் கொள்ளுவது நலமாய் இருக்கும். தாவீது என்பவர் மரணப் பள்ளத்தாக்கில் இருக்கையில் இந்தத் துணையால் மிகவும் சந்தோசப் பட்டார். மோசே என்பவரும் தேவ துணையில்லாமல் ஒரு அடி வைக்கிறதைவிட நின்ற இடத்திலேயே செத்துப்போகிறேன் என்று சொன்னார். (யாத்திராகமம் 33 : 15) ஆ! என் சகோதரனே, அவர் ஒருவர் மாத்திரம் நம்மோடு வருவாரானால் நமக்கு விரோதமாய் எழும்புகிற பதினாயிரம் பேருக்கும் பயப்படோம். (சங்கீதம் 3 : 5-8 27 : 1-3) அவருடைய துணை இல்லாவிட்டால் உதவி செய்வதாய் வரும் அகங்காரிகள் எல்லாரும் கொலை செய்யப்பட்டவர் களுக்குள் விழுவார்கள். (ஏசாயா 10 : 4)
என் மட்டுக்கு நான் ஒரு தரம் அந்த சங்கடத்தைப்பட்டேன். சர்வ தயாளருடைய காருண்யத்தினால் நீர் பார்க்கிற பிரகாரம் இன்னும் உயிரோடு இருக்கிறேன். என்றாலும் நான் என் புருஷத்துவத்தையிட்டு மேன்மைபாரட்டல் ஆகாது. இப்படிப்பட்ட துஷ்டரை நான் மறுபடியும் சந்தியாவிட்டால் அதைப்போல சந்தோசம் இல்லை. இன்னும் நாம் மோசங்கள் உண்டாகும் எல்லையைக் கடந்து தீரவில்லை. எப்படியும் சிங்கமும், கரடியும் என்னை விழுங்கிப் போடாததினாலே, தேவன் அடுத்த சத்துருவாகிய விருத்த சேதனமில்லாத பெலிஸ்தன் கையிலே என்னை ஒப்புக்கொடுக்க மாட்டார் என்றும் நம்புகிறேன் என்று சொன்னதும் அல்லாமல்,
கள்ளர் கையில் விழுந்தாயோ?
அற்ப விசுவாசியே!
நீ கொள்ளையிடப்பட்டாயோ?
அற்ப விசுவாசியே இதை நினை!
விசுவாசித்தவனே
உனக்குள்ளே விசுவாசம்
வரவர ஏறினால்
பதினாயிரம் பேரையும்
அதமாக்கிப்போடுவாய்;
அல்லாவிட்டால்
மூவரை வெல்லமாட்டாய்
என்று பாடினான்.
1. அறிவீனன் என்பது, தங்களுடைய நற்கிரியைகளின் மூலமாய் இரட்சிக்கப் படலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற அறிவீனரைக் குறிக்கிறது.
2. மறுதலிப்பு. இது துன்பத்தினாலே கிறிஸ்து மார்க்கத்தை மறுதலித்துவிட்ட ஒரு பேர் கிறிஸ்தவனை குறிக்கிறது.
3. அற்பவிசுவாசி. இது விசுவாசத்திலே நடந்தாலும் உண்மையாய் நிலைத்திருக்கிற கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது.
4. இறந்தோர் சந்து. இது பேர் கிறிஸ்தவர்களில் அநேகர் அழிவுக்குப்போகும் விஸ்தாரமான பாதையில் வெளியரங்கமாய் பிரவேசித்து நடப்பதை விளக்குகிறது.
5. அற்பவிசுவாசி தூங்குவது. ஒருவன் தான் பற்றிக்கொண்டிருக்கும் கிறிஸ்துமார்க்க பக்திவிநயங்களை அடக்கி மறைத்துக்கொண்டு அதின் வழிபாடுகளில் முயற்சியோடு நடவாமல் இருக்கிறதை குறிக்கிறது.
6. மூன்று திருடர் என்பது, மனிதர் பாவத்துக்குச் சாயும்போது அவர்கள் மனதை வேதனைப்படுத்தும் பயங்கரங்களை குறிக்கிறது.
7. அற்பவிசுவாசி தன் பணப்பையைப் பறிகொடுத்தது: இவ்வுலகத்தில் சுவிசேஷத்தினால் கிடைக்கிற ஆறுதல்களை இழந்துபோகிறதைக் காட்டுகிறது.
8. அருளாதிக்கன். இது சோதனையினாலே விழுந்து போனவர்களை தூக்கி எடுத்து தேவனுடைய இரட்சண்ய இரக்கத்தின் மேல் நம்பிக்கை வைக்கும்படி உற்சாகப்படுத்துகிற உண்மையுள்ள கிறிஸ்தவன் ஒருவனைக் குறிக்கிறது.
9. நகைகள் என்பது, விசுவாசிகள் கிறிஸ்துவோடிருக்கும் ஐக்கியத்தையும், ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலையும் குறிக்கிறது.
10. அற்பவிசுவாசி தன் நகை விற்கக்கூடாதிருந்தது. அவன் இவ்வுலக இன்பங்களின் நிமித்தம் தேவபக்தியை விட்டுவிடாததைக் குறிக்கிறது.
11. இளமையான விசுவாசிகள் தாங்கள் சோதனைகளை இலேசாய் ஜெயித்துவிடக்கூடும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் அனுபோகப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆத்துமாவின் பலவீனம் நன்றாய்த் தெரிகிறது.