அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்
அவர்கள் படுத்துத் தூங்கின இடத்திற்குச் சமீபத்திலேயே ஒரு அரண்மனை இருந்தது. அதற்குச் சந்தேக துருக்கம் 1 என்று பேர். இந்த அரண்மனையும் பிரயாணிகள் படுத்திருந்த பூமியும் அகோர பயங்கர ராட்சதன் 2 என்று அழைக்கப்பட்ட ஒரு அரசனுக்கு சொந்தமாய் இருந்தது. அவன் மறுநாள் அருணோதயத்தில் எழுந்திருந்து தனது மைதானத்தில் அங்குமிங்கும் உலாவி சுகத்தை அனுபவிக்கிற வேளையில் பிரயாணிகள் இருவரும் தன் நிலத்தில் நித்திரை பண்ணுகிறதைக் கண்டு கொண்டான். உடனே அவன் உக்கிரக கோபத்தோடு முகத்தைச் சுளித்துக்கொண்டு, அவர்களண்டை போய், யார் இங்கே? எழும்புங்கள் என்று பெருஞ்சத்தம் போட்டான். அவர்கள்துடித்து விழித்து எழுந்தார்கள். நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள்? என் பூமியில் என்ன செய்கிறீர்கள்? என்று ராட்சதன் அவர்களைக் கேட்டான். அதற்குஅவர்கள்: ஐயா! நாங்கள் மோட்ச பிரயாணிகள், வழிதப்பி உமது பூமியில் வந்துவிட்டோம் என்று சொன்னார்கள். உடனே ராட்சதன் முன்னிலும் அதிக மூர்க்கமாகி, நீங்கள் எவ்வளவேனும் நம்மை மதியாமல் நமது பூமியில் வந்து அதை காலாகோலமாய் மிதித்து, கெடுத்து, அதிலே உறங்கிப் பாழாக்கிப் போட்டீர்கள்.
ஆகையால் நடவுங்கள், முன்னே நடவுங்கள் என்று ஓட்டினான். ராட்சதன்அவர்களைவிட அதிக பராக்கிரமசாலியாக இருந்தபடியால் அவர்கள்ஏதும் பேசாமல் அவனுக்கு முன்னே நடந்து போனார்கள். மேலும் தப்பிதம் தங்கள்மேல் இருக்கிறதென்று உணர்ந்தபடியால் ஒன்றும் பேச அவர்கள் துணியவில்லை. ராட்சதன் அவர்களை நடத்திக்கொண்டு போய் தன் கோட்டைக்குள் இருந்த ஒரு அரண்மனைக்குள் கொண்டு போய் அடைத்து வைத்தான். அது மகா இருளும் நாற்றமுள்ள ஒரு கிடங்காயும் அவ்விருவருடைய மனதுக்கு எவ்வளவேனும் பொருந்தாத இடமாயும் இருந்தது. இவ்விடத்தில் அவர்கள் புதன் கிழமை காலை முதல் சனிக்கிழமை இரவுமட்டும் அடைபட்டுக் கிடந்தார்கள். ஒரு பிடி அன்னமாவது, ஒரு சொட்டு தண்ணீராவது அவர்களுக்கு அகப்படவில்லை. மின் மினிப்புழுவுக் கொத்த வெளிச்சமாவது வீசவில்லை. என்னமாய் இருக்கிறீர்கள் என்று வந்து விசாரிப்பாரும் இல்லாதிருந்தார்கள். ஆகையால் அவர்கள் நிலைமை மகா நிர்ப்பந்தத்தில் இருந்தது. தங்கள் சிநேகிதருக்கும் அறிமுகமானவர்களுக்கும் விலகி வெகு தூரத்தில் இருந்தார்கள். (சங்கீதம் 88 : 18) இவ்விடத்தில் கிறிஸ்தியானுக்கு இரண்டு மடங்கு துக்கம் இருந்தது. சிறைச்சாலையின் துன்பத்தோடு நம்முடைய விவேகத் தாழ்ச்சியி னாலும் ஆத்திரப்புத்தியினாலுந்தானே இவ்வளவு சங்கடம் நேரிட்ட தென்கிற கவலையும் அவனை வேதனைப்படுத்திற்று.
இந்த அகோர பயங்கர ராட்சதனுக்கு கூச்சம் 3 என்னப்பட்ட ஒரு மனைவி இருந்தாள். அவன் அன்று படுத்துக்கொள்ளப் போகும் போது தன் மனைவியை நோக்கி: ஆ என் நேச கூச்சமே! இன்று பகல் நடந்த ஓர் சமாச்சாரத்தைக் கேள்; நமது பூமியில் இரண்டு பிரயாணிகள் படுத்திருந்தார்கள். அவர்களை நான் கையோடு பிடித்து நமது காவற்கிடங்கு ஒன்றில் அடைத்து வைத்திருக்கின்றேன் என்று சொல்லி இன்னும் அவர்களுக்குச் செய்யவேண்டிய சிட்சை ஏதாவது உண்டானால், உன் கூச்சாலோசனையோடு சொல்லுவாயாக என்று கேட்டான். அதைக் கேட்ட கூச்சம்: ஆ, என் ராட்சத மன்னரே, அவர்கள் யார்? எவ்விடத்தார்? எங்கே போகிறார்கள்? என்று கேட்டாள். அதற்கு ராட்சதன்: சொல்ல வேண்டியதை சொன்னான்.
அது கேட்ட கூச்சம் சொல்லுவாள்: நீர் அதிகாலையில் விழித்தெழுந்தவுடனே போய், அவர்கள் இருவரையும் இரக்க மில்லாமல் அடிக்கிறதைப்போல் நல்ல யோசனை வேறொன்றில்லை என்று சிந்திக்கிறேன் என்றாள். அந்த ஆலோசனையின் பிரகாரம் ராட்சதன் மறுநாள் பலார் என்று விடிகிற சமயத்தில் எழுந்து, கணுக்கணுவாய் இருந்த ஒரு கனத்த தடியை எடுத்துக் கொண்டு பிரயாணிகள் அடைபட்டிருந்த கிடங்கினுள்ளே போய் உக்கிரக கோபத்தோடு கூச்சலிட்டு அவர்களை நாய்களைப் போலவே பாவித்து மானபங்கமாய்த் திட்டினான். இப்படி அவன் திட்டும்படியாக அவர்கள் ஒரு வார்த்தையாகிலும் பேசினதே இல்லை. அப்புறம் அவன் அவர்கள் மேல் விழுந்து அடிதண்டமாய் அடித்தான். அவர்கள் அவனை எதிர்த்து மடக்கவாவது, அக்கம் பக்கம் புரளவாவது சத்துவமில்லாமல் போனார்கள். அப்புறம் அவர்கள் தங்கள் நிர்ப்பந்த ஸ்திதியைப் பற்றிப் புலம்பவும், தங்களுக்கு உண்டான வருத்தத்தை உணர்ந்து துக்கிக்கவும் அவர்களை தனியே விட்டுப்போட்டு போய்விட்டான். ஆகவே அந்த நாள் முழுவதையும் அவர்கள் பெருமூச்சு விடுவதிலும் அங்கலாய்த்து ஏங்குவதிலுமே காலம் கழித்தார்கள்.
மறு நாள் இரவு கூச்சம் அவர்களைக் குறித்து தன் எஜமானிடத்தில் விசாரித்தபோது, அவர்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு: என் கணவரே! நீர் நாளையத்தினம் அதிகாலையில் போய், அவர்கள் தங்கள் உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளும் படியாக ஆலோசனை சொல்லும் என்று சொல்லிக் கொடுத்தாள். அதின்படியே அகோர பயங்கர ராட்சதன் மறு நாள் அருணோதயத்தில் எழுந்து புறப்பட்டு, அவர்களண்டை முன்போல கோபாக்கினியோடு போய்த் தான் முந்தின நாள் அடித்த அடிகளால் அவர்கள் படுகாயப் பட்டு படுத்த இடம் மாறாமல் அப்படியே கிடக்கிறதை கண்டு அவர்களைக்கூப்பிட்டு, நீங்கள் இந்த கிடங்கைவிட்டு வெளியேறப் பிரியம் இல்லாதிருக்கிறபடியால், ஒரு கத்தியால் குத்திக்கொண்டாவது, கயிற்றால் நான்று கொண்டாவது, வச்சநாவியால் நஞ்சிட்டாவது உங்கள் உயிரை மாய்த்துக் கொண்டாலன்றி வேறு வழி உங்களுக்கு இல்லை. உங்கள் ஜீவன் இவ்வளவு கசப்பாய் இருக்கிறதென்று நீங்கள் கண்டும், அதைக் காப்பாற்றிக் கொள்ள கருத்தாய் இருப்பதானால் என்ன பலன்? என்று சொன்னான். ஆனால் அவர்கள் தங்களை அனுப்பிவிடும்படி அவனைக் கேட்டார்கள். உடனே அவன் தன் முகத்தை சுளித்துக் கொண்டு, மூர்க்கத்தோடு அவர்கள்மேல் பாய்ந்தான்.
பாயவே, வெயில் காலத்தில் அவனுக்கு வழக்கமாய் வருகிற வலிப்பு வந்துவிட்டது.4 இந்த வலிப்பு மாத்திரம் வராவிட்டால் அவர்களைத் தப்பாமல் கொன்று போட்டிருப்பான். வலிப்பு வந்துவிட்டதால் அவன் நிதானம் தப்பி தொப்பென்று விழுந்து, கை கால் செயல்படாமல் கிடந்தான். ஆதலால் அவன் அவர்களை முன்போல் கிடங்கில் விட்டுவிட்டு இன்னும் இவர்களை என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கும்படி போய்விட்டான். அவன் போனவுடனே அவர்கள் இருவரும்: நாம் அகோர பயங்கர ராட்சதனுடைய தீர்மானத்தின்படி செய்யலாமா, செய்யக்கூடாதா என்று ஆலோசிக்கத் தொடங்கி னார்கள்.
கிறி: கிறிஸ்தியான் தன் தோழனைப் பார்த்து: தம்பி, நாம் இனி என்ன செய்யலாம்? 5 இந்த பிழைப்பைப் போல நிர்ப்பந்தமான பிழைப்பு இல்லையே. இப்படியே காலத்தை தள்ளிவிடலாமோ அல்லது நாமே நமது உயிரை மாய்த்துக்கொள்ளலாமோ என்பதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. இப்படியே நாளைத்தள்ளாமல் நான்றுகொண்டு சாவதற்கே என் ஆத்துமா விரும்புகிறது. இந்தச் சிறைச்சாலையைவிட கல்லறைக்குழியையே என் மனம் தெரிந்து கொள்ளுகிறது. (யோபு 7 : 15) ஆதலால் ராட்சதனுடைய யோசனையின்படியே செய்வோமா என்ன? என்று கேட்டான்.
திடநம்: அதற்குத் திடநம்பிக்கை சொல்லுகிறான்: இப்பொழுது இருக்கிற நம்முடைய நிலைமை பயங்கரமானது என்பது நிஜம்தான். இப்படி எக்காலமும் அவதிப்படுவதைப் பார்க்கிலும் சாவே எனக்கு சந்தோசமாய் இருக்கிறது. ஆனால் நாம் நாடிப்போகும் நாட்டின் ஆண்டவர் “கொலை செய்யாதிருப்பாயாக” என்று பிரகடனப் படுத்தியிருக்கிற கட்டளையை சற்றே கவனித்துக் கொள்ளுவோமாக. நாம் மற்றவர்களை கொல்லக்கூடாதென்று கட்டளை பெற்றிருப் போமானால் அவன் பேச்சைக் கேட்டு நமது உயிரை நாமே மாய்த்துக் கொள்ளக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டிருக்கிறது என்றும் உணர்ந்து கொள்ள வேண்டியது. மேலும் மற்றவர்களை கொலை செய்தவன் அவனுடைய சரீரத்தை கொன்ற கொலையை மாத்திரம் கட்டிக்கொள்ளுகிறான். ஆனால், தன்னைத்தானே கொன்று கொண்டால் அது சரீரத்தையும் ஆத்துமாவையும் ஒருமிக்க கொலை செய்கிறதாய் இருக்கிறது. அதுவும் அன்றி என் சகோதரனே, நீர் கல்லறையில் அல்லல் இல்லாமல் கிடப்பதை நினைத்தீரே, கொலைகாரர் எல்லாரும் போய்ச் சேருகிற நரக பாதாளத்தை மறந்து போனீரோ? ஏனெனில் கொலை பாதகன் ஒருவனுக்கும் நித்திய ஜீவனில் பங்கில்லை. அது தவிர நாம் பின்னும் யோசிப்போம்; சர்வ அதிகாரமும் அகோர பயங்கர ராட்சதனுடைய சக்கரத்துக்குள்ளாக இருக்கிறதில்லையே. நம்மைப்போல் எத்தனையோ பேர் இந்த அரக்கன் கையில் அகப்பட்டு அடைபட்டாலும், மறுபடியும் அவன் கைக்கு தப்பிப்போய் இருக்கிறார்கள் என்று நான் அறிந்திருக்கிறேன். அண்டசராசரங்களையும் படைத்த ஆண்டவராகிய தேவன் இந்த அகோர பயங்கர ராட்சதனைக் கொன்றாலும் கொல்லலாமே யாருக்குத் தெரியும்? அல்லது எப்போதாவது ஒரு வேளை அவன் நமக்கு தனது கதவை மூடாதபடிக்கு மறந்துபோய்விடச் செய்தாலும் தேவன் செய்யலாமே. அல்லது நமக்கு முன்பாக முன்வந்த வலிப்புப்போல வந்து அவன் கால் கைகளை முடக்கிப்போட்டாலும் போடலாமே. அதை யார் அறிவார்? மறுபடியும் எப்போதாவது அப்படிப்பட்ட வலிப்பு வந்தது மெய்யானால், நான் உடனே ஆண் பிள்ளையைப் போல் தைரியங்கொண்டு அவனுடைய கைக்குத் தப்பும்படி ஒரு கை பார்க்கலாம் என்றுதான் என் மட்டுக்கும் தீர்மானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு மூடன் என்றே சொல்ல வேண்டும்; அன்றைக்கு வலிப்பெடுத்து விழுந்தானே, அப்போதே தப்பி ஓட பிரயத்தனப்பட்டேன் இல்லையே, எப்படி இருந்தபோதிலும் என் உத்தம சகோதரனே! நாம் சில காலம் பொறுமையாயிருந்து வரும் கஷ்டத்தை எல்லாம் சகித்துக்கொள்ளுவோமாக. நாம் சந்தோசத்தோடே வெளியேறி விடும்படியான நற்காலம் பிறக்கும். நம்முடைய உயிரை நாமே மாய்த்துக் கொள்ளுகிற கொலை பாதகர் ஆக வேண்டாம் என்று சொன்னான். இந்த வார்த்தைகளால் திடநம்பிக்கை கிறிஸ்தியானுக்கு உண்டாகிய கொதித்த மனதைக் குளிரப்பண்ணினான். ஆதலால் இருவரும் அன்றையத் தினமும் முன்போல தங்கள் துக்கமும் மனநோவுமான ஸ்திதியோடு அந்த இருட்டறையில் இருந்தார்கள்.
பொழுது சாய்கிற வேளையில் ராட்சதன் மறுபடியும் அவ்விருவரும் இருந்த கிடங்குக்குப் போய் தன் ஆலோசனையின்படி அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்களா, இல்லையா என்று பார்த்தான். பார்க்கவே அவர்கள் பின்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்று கண்டு கொண்டான். என்ன உயிர்? அரை குறையான உயிர்தான். அன்னந் தண்ணீர் இல்லாமையினாலும் அடிபட்ட காயங்களாலும் அவர்களுக்கு மூச்சுவிட பெலன் இருந்ததே ஒழிய வேறு பெலன் இருந்ததில்லை. எப்படியும் அவர்களுக்கு உயிர் இருந்தது. அதைக் கண்ட ராட்சதன் கோபாக்கினியால் பொங்கி நீங்கள் என் ஆலோசனையின்படி செய்யாதபடியினால் உங்களுக்கு ஒருக்காலும் சம்பவியாத கேட்டைப் பார்க்கிலும் பெருங் கேடு இனி சம்பவிக்கும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அதைக் கேட்டவுடனே அவ்விருவருக்கும் உண்டான நடுக்கத்துக்கு ஒரு அளவு கிடையாது. கிறிஸ்தியான் மயங்கி விழுந்துவிட்டான் போல தோன்றுகிறது. அப்புறம் அவன் சற்று தெளிவடைந்து மறுபடியும் ராட்சதனுடைய ஆலோசனையைக் குறித்து இருவரும் ஆலோசிக்க தொடங்கினார்கள். கிறிஸ்தியானுக்கு இந்தச் சங்கடத்தைப் படுவதைப் பார்க்கிலும் உயிரை மாய்த்துக்கொள்ளுகிறதே நலம் என்று காணப் பட்டது. ஆனால் திடநம்பிக்கையோ அதற்கு இணங்காமல் இந்த இரண்டாம் உத்தரவை அவனுக்குச் சொல்லுகிறான்:
திடநம்: என் உத்தம சகோதரரே, இம்மட்டும் நீர் எவ்வளவு வீரசூரனாய் விளங்கினீர் என்பதை நினைத்தீர் இல்லையே? அப்பொல்லியோன் முதலாய் உம்மை அடக்கக்கூடாமல் போயிற்று. அவனை நீர் அதோகதியாக்கிவிட்டீர். மரண நிழலின் பள்ளத்தாக்கில் நீர் கேட்ட கெடுதிகளும் பார்த்த பயங்கரங்களும் உம்மை அசைக்கக் கூடாமற் போயிற்று. இம்மட்டாக நீர் சகித்த சங்கடங்கள் எவ்வளவு? பயங்கரங்கள் எவ்வளவு? அதிசயங்கள் எவ்வளவு? இப்பொழுது உமக்குப் பயமா கதி? சுபாவத்தின்படி உம்மிலும் பெலவீனனாய் இருக்கிற நான் உம்மோடுகூட கிடங்கில் இருக்கிறதைப் பார்க்கிறீரே. அந்த ராட்சதன் உம்மைப்போல என்னையும் படுகாயப்படுத்தினானே. உம்மைப்போல நானும் அன்னந்தண்ணீர் இல்லாமல்தானே இருக்கிறேன். உம்மைப்போல நானும் இந்தக் கிடங்கின் காரிருளுக்குள் காலங்கழிக்கின்றேனே. ஆகையால் நாம் இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துக் கொள்ளுவோமாக. மாயாபுரிச் சந்தையில் நீர் எவ்வளவு புருஷ லட்சணம் காண்பித்தீர் என்பதை நினைத்துக் கொள்ளும். அங்கு நீர் விலங்குகளையாவது, கூண்டையாவது, பயங்கரமான மரணத்தை யாவது ஒரு பொருட்டாக எண்ணவில்லையே. ஆதலால் எந்தக் கிறிஸ்தவனுக்கும் நேரிடக்கூடாத வெட்கம் நமக்கு வந்து நேரிடாத படிக்கு நம்மால் ஆனமட்டும் பொறுத்துக் கொள்ளுவோமாக என்றான்.
அன்று இரவு ராட்சதன் தன் மனைவியோடு பள்ளி அறையில் இருக்கையில் அவள் மறுபடியும் இந்தக் கைதிகளைப் பற்றி அவனிடத்தில் விசாரித்து, அவர்கள் தன் ஆலோசனையின்படி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்களா இல்லையா என்று கேட்டாள். அதற்கு அவன் சொல்லுகிறான்: அவர்கள் முரட்டுக் குணமுள்ள திருட்டுப் பயல்கள். தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுவதைப் பார்க்கிலும் வந்ததை எல்லாம் சகிக்கும்படி துணிந்திருக்கிறார்கள் என்றான். அதற்கு அவள்: அப்படியானால் நீர் நாளைய தினம் அவர்களை அரண்மனைக் கொல்லைப்புறத்துக்குக் கூட்டிக்கொண்டு போய் இம்மட்டும் உம்மாலே கொலை செய்யப்பட்டிருக்கிறவர்களின் எலும்புகளையும், மண்டை ஓடுகளையும் காண்பித்து 6 இன்னும் ஒரு கிழமைக்குள்ளாக முன்னே அவர்கள் கூட்டாளிகளுக்குச் செய்யப் பட்டது போல் இவர்களையும் சந்துசந்தாய் கிழித்துப்போடுவதாய் பயமுறுத்தி, அவர்கள் மனதில் நன்றாய்ப் படும்படி சொல்லும் என்று சொன்னாள்.
அப்படியே மறு நாள் கிழக்கு வெளுத்தவுடனே ராட்சதன் எழுந்திருந்து கைதிகளண்டை போய் தன் மனைவி தனக்குச் சொன்னபடியே அவர்களைக் கூட்டிக்கொண்டு அரண்மனை கொல்லைப்புறம் போய் அவர்களுக்குக் காட்டவேண்டிய எலும்புக் குவியல்களை எல்லாம் காட்டினான். காட்டுகிறபோதே அவன் சொல்லுகிறான்: உங்களைப்போலவே முன்னொரு காலத்தில் பிரயாணம்போன மோட்ச பிரயாணிகளில் பலர், உங்களைப்போலவே நியாயமின்றி என் பூமியில் நுழைந்தார்கள். அவர்களை எனது மனதுக்கேற்ற சமயத்தில் சந்துசந்தாகக் கிழித்துவிட்டேன். அப்படியே உங்களை இன்னும் பத்து நாளைக்குள்ளாக செய்யவே செய்வேன். கிடங்கில் போய் கிடவுங்கள் என்று சொல்லி அடித்தடித்துத் துரத்திக்கொண்டு கிடங்குக்குள் சேர்த்தான். ஆகையால் அவர்கள் சனி பகல் முழுவதும் முன்போல் புலம்பித் தவித்துக்கொண்டே இருந்தார்கள். அன்று இரவாகி ராட்சதனும், அவன் மனைவி கூச்சமும் தங்கள் பள்ளியறைக்குப் போனபோது திரும்பவும் இந்தக் கைதிகளைப்பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித் தார்கள். அந்தக் கிழ ராட்சதன் அதிசயத்தோடு சொல்லுகிறான்: ஆ, என் நேசக்கூச்சமே, நான் எவ்வளவாய் அடித்தாலும் எப்படி ஆலோசனை சொன்னாலும் அவர்கள் சட்டைபண்ணக் காணோம். இதுவே எனக்கு அதிசயமாயிருக்கிறது என்றான். அதற்கு அவள் சொல்லுகிறாள்: ஓ, அதிவீர பராக்கிரம ராட்சதரே! கேளும், அடியாளுக்கு அவர்களையிட்டு ஒரு அச்சம் தோன்றுகிறது; யாரோ ஒருவர் வந்து அவர்களை விடுதலையாக்குவார் என்கிற நம்பிக்கையோடு அவர்கள் காத்து இருக்கிறார்களாக்கும். இல்லையென்றால் அவர்கள் மடிக்குள்ளேயே பலமாதிரியான திறவுகோல்கள் இருக்கிறதாக்கும். அதைக்கொண்டு அவர்கள் திறந்து வெளியேறிவிடலாம் என்ற தைரியத்தோடு இருக்கிறார்களாக்கும் என்று சொன்னாள். உனக்கு அப்படியா தோன்றுகிறது? என் நேச கூச்சமே! பொறுத்தது பொறுத் தோம், இனி விடியுமட்டும் பொறுப்போம். விடிந்தவுடன் நான் போய் அவர்கள் மடிகளைப் பரிசோதனை செய்து போடுகிறேன் என்று சொல்லி முடித்தான்.
காரியம் இப்படியிருக்கவே, கைதிகள் இருவரும் சனிக்கிழமை நள்ளிரவிலேயே ஜெபம் செய்யத் தொடங்கி, கொஞ்சங்குறைய விடியுமட்டும் ஜெபம் செய்து கொண்டிருந்தார்கள். விடிகிறதற்கு சற்று முன் கிறிஸ்தியான் ஏதோ ஒரு பேரதிசயம் கண்டவன்போல படபடப்போடு பேசி சொல்லுகிறான்: நான் தடையின்றி வெளியே போய் ஒரு துரையைப்போல உலாவுகிறதற்கு வழி இருக்கும்போது, இந்த நாற்றம் பிடித்த இருட்டறையில் நாளெல்லாம் கிடக்கிற என்னைப்போல பைத்தியக்காரன் உண்டா? என் மடிக்குள்ளே வாக்குத்தத்தம் 7 என்று பேர் வழங்கப்படுகிற திறவுகோல் இருக்கிறது. அதைக்கொண்டு சந்தேகத் துருக்கத்தின் எந்த பூட்டையும் திறந்துவிடலாம் என்பதற்கு தடையில்லையே என்றான். அப்படியானால் அதைப்போல் சந்தோச செய்தி வேறொன்றும் இல்லை, இனி வேறு யோசனை என்னத்துக்கு? மடியில் இருக்கிற திறவுகோலை எடுத்துத் திறவும் என்று திடநம்பிக்கை சொன்னான்.
அப்படியே கிறிஸ்தியான் திறவுகோலை எடுத்து சிறைச் சாலையின் கதவுகளை ஒவ்வொன்றாய்த் திறந்தான். திறவுகோலை திருப்பின வுடனே தாழ்ப்பாள்கள் எல்லாம் தானாய் திறக்கிறாற்போல லேசாக திறந்துவிட்டது. உடனே கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் கிடங்கை விட்டு வெளியே வந்தார்கள். அப்புறம் அரண்மனை முற்றத்துக்குப் போகும் வெளி வாசலின் கதவைக் கிறிஸ்தியான் திறந்தான். அதுவும் திறந்துவிட்டது. அதைக் கடந்து கடைசியாகத் திறக்க வேண்டிய இரும்புக்கதவண்டைபோனார்கள். அதின் பூட்டு துருப்பிடித்து வெகு சிக்குப்பட்டு இருந்தது. என்றாலும் திறவுகோல் அதையும் திறந்து விட்டது. கதவு “படீர்” என்று திறந்தபோது “கிரீச்” என்று ஒரு இரைச்சல் உண்டாயிற்று. அந்த இரைச்சல் அயர்ந்து தூங்கின ராட்சதன் காதுக்குள் சங்கு ஊதி எழுப்பினால் போல ஆயிற்று. அவன் அந்த ஷணமே ஓடி கைதிகளைப் பிடிக்கும்படி குதித்து எழும்பப் போனான். ஆனால், அவன் கை, கால் வழங்கவில்லை. அவனுடைய பழைய வலிப்பு அவனுக்கு வந்துவிட்டது. ஆகையால் அவர்களை பின் தொடர்ந்து பிடிக்கக்கூடாமல் போயிற்று. அப்புறம் அவர்கள் சற்று தூரம் வழி நடந்து ராஜபாதையில் 8 மறுபடியும் வந்து சேர்ந்து கொண்டார்கள். அகோர பயங்கர ராட்சதனுடைய அரசாட்சிக்கு உட்பட்ட பூமியை அவர்கள் கடந்துவிட்டதால் அப்புறம் அவனால் அவர்களுக்கு யாதொரு ஆபத்தும் நேரிடக்கூடாதிருந்தது.
பிரயாணிகள் இருவரும் அகோர பயங்கர ராட்சதனுடைய அரண்மனை பூமிக்குத் திரும்பின படிக்கட்டை ஏறி ராஜ பாதையில் சேர்ந்தவுடனே: இனி பயணம்பண்ணி வரும் பிரயாணிகள் சந்தேக துருக்கத்தின் கைதிகளாகிவிடாதபடி என்ன பிரயத்தனம் செய்யலாம் என்று இருவரும் ஆலோசித்தபோது அந்த இடத்தில் ஒரு ஸ்தம்பம் எழுப்பி அதில் பிரயாணிகளுக்கு எச்சரிப்பு உண்டாகச் சில வரிகளை எழுதி வைப்பது உத்தமம் என்று தீர்மானித்தார்கள். அந்த தீர்மானத்தின்படியே படிக்கட்டு அண்டை அவர்கள் ஒரு ஸ்தம்பம் நிறுத்தி அதன்மேல்:
இந்தப் படிக்கட்டு பாதையை
பயங்கர ராட்சதன் கட்டி இருக்கிறான்;
இப்படி ஏறி நீ போனால்,
சந்தேக துருக்கம்சேருவாய்.
மோட்ச லோக ராஜாவுக்கு,
அவன் பலத்த விரோதி;
அவன் பரிசுத்த பிரயாணிகளை
அழிக்க வகை தேடுகிறான்
என்று பெரிய எழுத்தில் வெட்டி வைத்தார்கள்.
பின்னே வந்த அநேக பிரயாணிகள் அந்த வாசகத்தைப்படித்து பார்த்து வழிவிலகாமல் நேர் பாதை நடந்து, மோசம் இன்றி மோட்ச லோகப் பிரயாணத்தில் சென்றார்கள். அப்புறம் தாங்கள் அகோர பயங்கர ராட்சதன் கைக்கு தப்பினதை நினைவுகூர்ந்து:-
வழிதப்பிப் போனோமே வந்த பலன் கண்டோமே,
விழிப்பாய் நடப்பீரே! மோட்ச பிரயாணிகளே;
ராஜ வழிவிட்டு பக்க வழியாய் நடந்தால்
சந்தேகத் துருக்கத்து சத்துராதி பிடிப்பான்,
அவன் பேர் பயங்கரமாம், அவன் அரண் பேர் சந்தேகம்
விழிப்பாய் நடப்பீரே, சொல்லிவிட்டோம், சொல்லிவிட்டோம்
என்று பாடினார்கள்.
1. சந்தேக துருக்கம் என்பது, மெய்க்கிறிஸ்தவர்கள் முதலாய் பாவத்துக்கு இடம் கொடுத்த பின்பு தங்களுடைய ஆத்தும இரட்சிப்பை குறித்து பயந்து சந்தேகிப்பதை குறிக்கிறது.
2. அகோர பயங்கர ராட்சதன் என்பது, எல்லா நம்பிக்கையும் அற்றுப்போகிறதைக் குறிக்கிறது. இது ஒரு பலத்த ராட்சதனைப் போல அவிசுவாசிகளைக் கடைசியாகப் பிடித்துக்கொள்ளும்.
3. கூச்சம் என்பது தேவனுடைய வாக்குத்தத்தங்களைப்பற்றி உண்டாகும் அவநம்பிக்கையைக் குறிக்கிறது.
4. ராட்சதனுக்கு வலிப்பு வருகிறது என்பது மகா நிர்ப்பந்த நிலைமையில் இருக்கும்பொழுது விசுவாசிகள் முற்றிலும் திகைத்துப் போய்விடாதபடி வேளா வேளை சில ஆறுதல்களை அடைகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.
5. கிறிஸ்தவர்கள் பாவத்தின் நிமித்தம் சில தரம் மனம் கசந்து பச்சாதாபப்படுகையில் தற்கொலை செய்து கொள்ளுவோமா என்ற எண்ணம் அவர்கள் மனதில் படுகிறதும் உண்டு.
6. இது அவர்கள் யூதாஸ்காரியோத்தையும் மற்றவர்களையும் போல தங்கள் பாவங்களிலேயே சாகும்படி போதிக்கப்பட்டதை குறிக்கிறது.
7. வாக்குத்தத்தம் என்னும் திறவுகோல்: இது விசுவாசிக்கிற ஒவ்வொருவனுக்கும் நித்திய ஜீவன் உண்டென்று சொல்லப்பட்ட கிறிஸ்துவின் வாக்குத்தத்தங்களைக் குறிக்கின்றன. கிறிஸ்தியான் அவைகளை மறந்துபோனான். “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” என்ற வாசகம் இரட்சிப்பைப்பற்றித் திகைக்கும் ஒவ்வொருவனையும் உற்சாகப்படுத்த போதுமானதாய் இருக்கின்றது.
8. ராஜபாதையில் மறுபடியும் வந்து சேர்ந்து கொண்டது: எல்லாப் பாவங்களையும் விட்டுவிட்டு நீதியின் பாதையில் நடக்கிறதைக் குறிக்கிறது.