பிரயாணிகள் திரவியகிரி சேருதல்
அப்பால் நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால்: கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் எட்டி நடந்து ஒரு மைதானத்தில் சேர்ந்தார்கள். அதற்கு முசிப்பாற்றி 1 என்று பேர் வழங்கப்பட்டது. அங்கே வெகு சந்தோசமாய் வழிநடந்து போனார்கள். அந்த வனம் மிகவும் சிறியதாக இருந்தமையால் அவர்கள் சீக்கிரம் அதைக் கடந்துவிட்டார்கள். அந்த மைதானத்தின் முடிவில் ஒரு பரம்பு இருந்தது. அதற்கு திரவியகிரி 2 என்று பேர். அதிலே ஒரு வெள்ளிச் சுரங்கம் இருந்தது. அதின் சிறப்பைப் பார்க்கும்படியாக ஆசை கொண்டு, அவ்வழியாய் முன்னே போன பலர் சுரங்கத்தின் விழிம்பு மட்டும் போனதில் அதின் கீழுள்ள மண் எல்லாம் குடைந்து போடப்பட்டதால் இடிந்து விழுந்து அவர்களில் சிலர் மாண்டார்கள், சிலர் கை கால் ஒடிந்து பழைய சீருக்குவராமல் சாகுமட்டும் முடவராய்ப் போய்விட்டார்கள்.
அந்த பாதைக்கு சற்று தூரத்தில் வெள்ளிக் கேணிக்கு எதிராக பிரபுவைப் போலக் காணப்பட்ட தேமாஸ் 3 என்ற ஒரு மனிதன் பிரயாணிகள் வெள்ளிச் சுரங்கத்தை வந்து பார்க்கும்படியாக கூப்பிடுகிறதற்கு நின்று கொண்டிருக்கிறதை நான் என் சொப்பனத்தில் கண்டேன். அவன் கிறிஸ்தியானையும் அவன் கூட்டாளியையும் கண்டவுடனே ஏகோ-கோ-ஓகோ- வாருங்கோ- வந்து பாருங்கோ! அதிசயம் காட்டுவேன் திரும்புங்கோ என்று சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
கிறி: அப்படி வழியைவிட்டுத் திரும்பி வந்து பார்க்கும்படியான அதிசயம் என்ன இருக்கிறது?
தேமாஸ்: இங்கே ஒரு வெள்ளிச் சுரங்கம், சுத்த வெள்ளிச் சுரங்கம் இருக்கிறது. அநேகர் புதையல் எடுக்கும்படி தோண்டுகிறார்கள். நீங்களும் வந்து கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தோண்டினால் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள் என்றான்.
திடநம்பிக்கை: அப்படியானால் போய்ப் பார்ப்போமே என்று திடநம்பிக்கை சொன்னான்.
கிறி: நான் வரமாட்டேன். இந்த இடத்தைக் குறித்து நான் முன்னமே கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே மாண்டவர்களுக்கு ஒரு கணக்கில்லை. அதுவும் அல்லாமல் அந்தப் புதையலைத் தேடிப் போகிறவர்களுக்கு அதுவே கண்ணியாய் இருக்கிறது. ஏனெனில் அவர்கள்பிரயாணத்துக்கு அது மெத்த தடையாய் இருக்கிறது என்று சொன்னான்.
அப்புறம் கிறிஸ்தியான் தேமாசைக் கூப்பிட்டு: அந்த இடம் மோசமானதல்லவோ? இது அநேக பிரயாணிகளை தடைசெய்து போட்டதல்லவோ? என்று சொன்னான். (ஓசியா 4 : 16 – 19)
தேமாஸ்: அப்பொழுது தேமாஸ்: கவலையீனமாய் இருக்கிறவர் களுக்குத் தவிர மற்றவர்களுக்கு அது அவ்வளவு மோசமானதல்ல வென்று மகா சத்தத்தோடு சொன்னான்.
கிறி: கிறிஸ்தியான் திடநம்பிக்கையைப் பார்த்து, நாம் நமது வழியே போவோமாக. அங்கே ஒரு அடி முதலாய் எடுத்து வைக்க வேண்டாம் என்று சொன்னான்.
திடநம்: உபாயி இவ்விடம் வரும்போது, தேமாஸ் நம்மைக் கூப்பிட்டதுபோல அவனையும் கூப்பிடுவது மெய்யானால், அவன் போய் அதைப் பாராமல் இருக்கமாட்டான் என்று நான் சத்தியம் செய்யக்கூடும்.
கிறி: அதற்குச் சந்தேகம் இல்லை, அவன் உள்ளத்தின் ஆவல் அந்த வழியாக அவனை கொண்டு போகும் என்பது நிஜம். அங்கேயே அவன் சாவான் என்பது முக்காலே மூன்று வீசம் நிஜம் என்று சொல்ல வேண்டியது என்றான்.
தேமாஸ்: அப்புறம் தேமாஸ்: நீங்கள் வந்து பார்த்துவிட்டுப் போகமாட்டீர்களாக்கும் என்று மறுபடியும் கேட்டான்.
கிறி: அப்போது கிறிஸ்தியான்: நீ செம்மை மார்க்கமாகிய இந்த வழிக்கு ஆண்டவரின் விரோதியாய் இருக்கிறாய். அவருடைய நியாயாதிபதிகளில் ஒருவரால் நீ முன்னமே ஆக்கினைத் தீர்ப்பு அடைந்திருக்கிறாய். (2 தீமோ 4 : 10) எங்களையும் அந்த அழிவுக்கு வரும்படி ஏன் தேடுகிறாய்? அதுவும் அன்றி நாங்கள் வழியைவிட்டு அக்கம்பக்கம் விலகினால் ஆண்டவராகிய இராஜா கேள்விப்படுவார். அங்கே அவருக்கு முன்பாகத் தைரியமாய் நிற்கக்கூடிய நாங்கள், அவரால் வெட்கத்துக்கு உட்படவேண்டியதாய் இருக்கும் என்று தெளிவாய்ச் சொன்னான்.
தேமாஸ்: அதற்கு தேமாஸ்: நானும் உங்களோடு சேர்ந்த ஒரு மோட்ச பிரயாணிதான்; சற்றே தாமதித்தால் நானும் உங்களுடன் கூடிவருவேன் என்றும் சொன்னான்.
கிறி: அப்பொழுது கிறிஸ்தியான்: உன் பேர் தேமாஸ்தானே.
தேமாஸ்: ஆம், என் பேர் தேமாஸ்தான், நான்ஆபிரகாமின் புத்திரனாயும் இருக்கிறேன்.
கிறி: நான் உன்னைஅறிவேன், அறிவேன். யூதாஸ் உன் தகப்பன், கேயாசி உன் பாட்டன் அல்லவா? அவர்களுடைய வழிகளை நீ பின்பற்றியிருக்கிறாய். இப்பொழுது நீ செய்கிற உபாய தந்திரங்கள் பிசாசுக்கடுத்தவைகள். உன் தகப்பன் குருத்துரோகத்தால் தூக்கப் பட்டான். நீயும் அதற்கே பாத்திரனாய் இருக்கிறாய். (2 இராஜா 5 : 20 – 27, மத்தேயு 26 : 14 – 15; 27 : 3 – 5) நாங்கள் ராஜாவை தரிசிக்கும்போது நீ செய்த மோசத்தைக்குறித்து திட்டமாய்ச் சொல்லுவோம் என்று அறிந்துகொள் என்று சொல்லி விட்டு தங்கள் வழியே போய்விட்டார்கள்.
இதற்குள்ளாக உபாயியும் அவன் தோழரும் வருகிறது தூரத்தில் தெரிந்தது. அவர்களைத் தேமாஸ் கூப்பிட்டான். முதல் சத்தம் கேட்டவுடனே அவர்கள் தேமாசண்டை போனார்கள். அவர்கள் சுரங்கத்தின் கரையோரத்தில் போனவுடன் அது இடிந்து விழுந்துதான் மாண்டார்களோ அல்லது உள்ளே போய் புதையலைத்தான் தோண்டினார்களோ, அல்லது அதின் அடியிலிருந்து எழும்புகிற திரண்ட புகையினாலே தான் திக்குமுக்காடிச் செத்தார்களோ என்பதைப்பற்றி எனக்கு ஒன்றும் தீர்மானமாய்த் தெரியாது. ஆனால் ஒன்றை மாத்திரம் கவனித்தேன். அவர்கள் மறுபடியும் தங்கள் வழியில் தலை காட்டவே இல்லை. அப்புறம் கிறிஸ்தியான்:
உபாயி என்பவனுமே
வெள்ளி நேசத்தேமாவோடே
பங்குபெற புதையலில்
ஒத்து இணங்கிப்போனார்கள்,
தேமாவும் நின்று கூப்பிட்டான்
அவனும் விரைந்தோடினான்
அதுவே முடிவாயிற்று
அப்பாலே செல்லார் மோட்சத்திற்கு
என்று பாடினான்.
இப்பொழுது நான் என் சொப்பனத்தில் கண்டது என்ன வென்றால்: இந்த மைதானத்திற்கு அப்பால் ராஜ வீதியோரமாய் நின்ற ஒரு பழைய ஞாபகச் சிலையண்டை பிரயாணிகள் இருவரும் வந்து சேர்ந்தார்கள். அந்தச் சிலுவையின் உருவம் அவர்களுக்கு மகா விந்தையாக தோன்றினதால் அதைக் கண்டவுடன் அவர்கள் இருவருக்கும் கலக்கம் உண்டாயிற்று. ஏனெனில் ஒரு ஸ்திரீ சிலை ரூபமாய் மாறிப்போனது போல அது காணப்பட்டது. ஆகையால் அவர்கள் அதின் ஓரம் நின்று கொண்டு அதை ஏறிட்டுப்பார்த்து பிரமித்து, அதின் தாற்பரியம் என்னவென்று அறிந்து கொள்ளக் கூடாமல் இருந்தார்கள். கடைசியாக அதின் நெற்றியில் கைபழகாத ஒருவனால் எழுதப்பட்டது போல் காணப்பட்ட சில எழுத்துக்களை திடநம்பிக்கை என்பவன் கண்டான். அவன் கல்லாதவனாய் இருந்த படியால் படித்து தேறின வித்துவானாய் இருந்த கிறிஸ்தியானைக் கூப்பிட்டு எவனாவது அதின் கருத்தைக் கண்டு பிடிப்பானா என்று கேட்டான். கிறிஸ்தியான் வந்து அந்த எழுத்துக்களை ஒவ்வொன்றாய் கூட்டிப் பார்த்து “லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டு இருக்கிறதாக வாசித்தான். உடனே அவர்கள் இருவரும் ஓகோ, லோத்து சோதோமில் இருந்து துரத்தப்பட்டபோது அவன் மனைவி பொருள் ஆசையினாலே பின்னிட்டு திரும்பி உப்புத் தூண் ஆனாளே (ஆதியாகமம் 19 : 26) இதுதான் அந்த உப்புத் தூண் என்று தீர்மானமாய் அறிந்து கொண்டார்கள். சடுதியாய் காணப்பட்ட இந்த விந்தையான காட்சி பின்வரும் சம்பாஷணைக்கு ஏதுகரம் ஆயிற்று.
கிறி: ஆ, என் சகோதரனே! இது காலத்துக்கேற்ற காட்சிதான். திரவியகிரியைப் பார்க்கும்படி தேமாஸ் நம்மை கூப்பிட்ட சமயத்துக்குத் தகுந்தாற்போல இங்கே இது காணப்படுகின்றது. அவன் நம்மை விரும்பி அழைத்தபடிக்கும், என் சிநேகிதனே நீ போக வேண்டும் என்று விரும்பிக் கூப்பிட்டபடிக்கும் நாம் போயிருந்தது மெய்யானால், நமக்குப் பின் வருகிறவர்களுக்கு எச்சரிப்பு உண்டாக நாமும் இப்படியே நிறுத்தப்பட்டு இருப்போம் என்று நான் நன்றாய் அறிவேன் என்று சொன்னான்.
திடநம்பி: நான் அத்தனை புத்தியீனனாய் இருந்ததையிட்டு மிகவும் துக்கப்படுகிறேன். லோத்தின் மனைவியைப் போல நான் சபிக்கப் பட்ட ஒரு ஸ்தம்பம் ஆகாமல் போனதை நினைத்து அதிசயப் படுகிறேன். ஏனெனில், அவள் பாவத்துக்கும் என் பாவத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அவள் பின்னிட்டு மாத்திரம் திரும்பினாள். நானோ போய்ப் பார்க்கும்படி ஆசைப்பட்டேன். தேவ கிருபைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. இப்படிப்பட்ட ஆசை என் மனதில் வந்ததால் நான் வெட்கப் படுவேனாக என்று சொல்லி விசனப்பட்டான்.
கிறி: அதற்கு கிறிஸ்தியான்: இனி நாம் எச்சரிக்கையாய் நடந்து கொள்ளத்தக்கதாக இப்போது பார்க்கிறவைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுவோமாக. இந்த ஸ்திரீ ஒரு தண்டனைக்கு தப்பினாள். மறு தண்டனைக்குள் அகப்பட்டாள். ஏனெனில், சோதோமின் அழிவுக்குத் தப்பின இவள் நாம் பார்க்கிறபடி இங்கே உப்புத் தூணாய் நிற்கிறாள் என்று சொன்னான்.
திடநம்: மெய், இவள் நமக்கு எச்சரிப்பும், அடையாளமுமாய் இருக்கலாம். நாம் அவளுடைய பாவத்துக்கு விலகிக்கொள்ளும்படிக்கு எச்சரிப்பாகவும், அந்த எச்சரிப்பை உணர்ந்து கொள்ளாதவர்களுக்கு வரும் தண்டனைக்கு அடையாளமாகவும் அவள் நிறுத்தப் பட்டிருக்கிறாள். அப்படியே கோராகு, தாத்தான், அபிராம் என்பவர் களும் அவர்களுடைய பாவத்திலே அதமான இருநூற்றம்பது பேரும் மற்றவர்களுக்கு எச்சரிப்பாய் இருக்கும் படியான அடையாளமாய் அல்லது திருஷ்டாந்தமாய் இருக்கிறார்கள். (எண்ணாகமம் 16 : 31, 32 26 : 9,10) ஆனால் எல்லாவற்றிலும் என்னை பிரமிக்கச் செய்கிற ஒரு விஷயம் இருக்கிறது. அதென்ன வென்றால், இந்த ஸ்திரீ தான் திரும்பிப்பார்த்த இடத்துக் கப்பால் ஒரு அடி முதலாய் எடுத்து வைக்கவில்லையே. அந்த இடத்திலேயே உப்புத்தூணாய்ப் போனாளே. அப்படியிருக்க இந்தத் தேமாசும் அவனுடைய தோழரும் அதைப்பார்க்கும்படி இவ்வளவு தைரியத் தோடு நாடிப்போகிறார்களே, அதிலும் விசேஷமாக, அவள் யாவருக்கும் திருஷ்டாந்தமாக உப்புத் தூணான இந்த ஸ்தம்பம் அவர்கள் கண்ணெட்டும் தூரத்துக்குள்ளேதான் இருக்கிறது. அவர்கள் சற்றே தங்கள் தலையை நிமிர்த்திப் பார்த்தார்களானால் இதைக்கண்டு கொள்ளக்கூடுமே, இதுதான் என் மனதுக்கு பலத்த யோசனையாய் இருக்கிறது என்றான்.
கிறி: அது அதிசயிக்கப்படத்தக்க ஒரு காரியமாய்த்தான் இருக்கிறது. இந்தக் காரியத்தில் அவர்கள்இருதயம் முற்றிலும் சீர்கெட்டுப் போயிற்றென்று வெளியாகிறது. இவர்களை யாருக்கு ஒப்பிடலாம் என்றால் , நியாயாதிபதிக்கு முன்பாக நின்று முடிச்சு அவிழ்க்கிற திருடருக்கும், கழுமரத்தின் கீழ் நின்று கத்தரிக்கோலால் பணப் பைகளைக் கத்தரிக்கிற கள்ளருக்கும் தான் ஒப்பிட வேண்டியது. சோதோம் பட்டணத்தார் பஞ்சமாபாவிகள் என்று காட்டும்படியாக அவர்களுடைய பாவம் கர்த்தருடைய சமூகத்தில் பெரிதாய் இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அவர் அவர்களுக்கு பல கிருபைகளைச் செய்திருந்தும், அவருடைய முகத்துக்கு முன்பாக பாவஞ்செய்தார்கள். ஏனெனில் சோதோமின் பூமி முன் இருந்த ஏதேன் என்னும் சிங்காரத் தோப்பு போல இருந்தது. (ஆதியாகமம் 13 : 10 – 13) இதுவே தேவ கோபத்தை அவர்கள் மேல் அதிகரிக்கச் செய்து, கர்த்தருடைய அக்கினி வானத்திலிருந்து வந்தால் எவ்வளவு அழிவை உண்டாக்கக் கூடுமோ அவ்வளவு பெரிய வாதைகள் அவர்கள்மேல் இறங்கிற்று. தேமாசும் அவன் கூட்டாளிகளும் தங்கள் கண்களுக்கு முன்பாக எச்சரிப்புக்கென்று நாட்டப்பட்டிருக்கிற இந்த வகையான அடையாளங்களை எல்லாம் அசட்டைப்பண்ணி அவர்களைப்போல பாவஞ்செய்கிறபடியால் இவைபோலொத்த கடூரமான தண்டனைகளை அடையப் பாத்திராய் இருக்கிறார்கள் என்று தீர்மானமாகச் சொல்ல வேண்டியது என்று சொன்னான்.
திடநம்: அதற்கு திடநம்பிக்கை: சந்தேகமில்லாமல் நீர் சத்தியத்தையே சொன்னீர் என்பது நிஜம். ஆனால் நீராவது, விசேஷமாக, நானாவது இந்தத் திருஷ்டாந்தமாய் இராதது எவ்வளவு பெரிய இரக்கம்! இந்த ஞாபகச் சிலை நாம் தேவனை ஸ்தோத்தரிக்கவும், அவருக்கு அஞ்சி நடக்கவும், எப்போதும் லோத்தின் மனைவியை நமக்கு நினைப்பூட்டவும் ஏதுவாய் இருக்கிறது என்று சொன்னான்.
1. முசிப்பாற்றி: இது சபை தேவ சமாதானத்தோடு இருக்கும் காலத்தைக் குறிக்கிறது.
2. திரவியகிரி: இது லோக ஆதாயத்தைக்குறிக்கிறது. பண ஆசையினால் உண்டாகும் நஷ்டம் இன்னதென்று 1 தீமோதேயு 6 : 10 ல் சொல்லியிருக்கிறது.
3. தேமாஸ்: இவன் பவுல் அப்போஸ்தலனோடு சில காலம் தேவ ஊழியம் செய்துவந்து அப்புறம் லோக ஆதாயத்தை நாடி அதை விட்டுவிட்டான். இந்தக் காலத்தில் அநேகர் சர்க்கார் உத்தியோகத்தையும் அதிகச் சம்பளத்தையும் நாடி சுவிசேஷ பிரபல்லியக்கடுத்த வேலைகளை விட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் மாற்றிக்கொண்ட ஊழியம் மகா நிர்ப்பந்தமானது என்பதை கடைசியாக கண்ணீரோடு உணருவார்கள்.