பிரயாணிகள் மாயாபுரி சேருதல்
அப்புறம் நான் என் சொப்பனத்தில் கண்டது என்னவென்றால், கிறிஸ்தியானும், உண்மையும் அந்த வனத்தை முற்றிலும் கடந்த பிற்பாடு, தங்களுக்கு எதிரே இருக்கிற பட்டணத்தைக் கண்டார்கள். அதற்கு மாயாபுரி என்று பேர் வழங்கப்பட்டது. அவ்விடத்தில் மாயச் சந்தை 1 என்று அழைக்கப்படுகிற ஒரு சந்தைக் கடையும் இருந்தது. அது மற்ற சந்தைகளைப்போல ஒரு வேளா வேளை கூடுகிறதா யிராமல், வருஷ முழுவதிலும் நாள்தோறும் கூடி, நிமிஷந்தோறும் அதில் வியாபாரம் நடந்து வந்தது. அந்தச் சந்தை கூடுகிற பட்டணமானது மாயையிலும் இலேசாய் இருக்கிறபடியினாலும், (சங்கீதம் 62 : 9) “வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே” என்று ஞானி சொல்லுகிற பிரகாரம் அவ்விடத்தில் விற்கப்படுகிற சரக்குகளும் வந்து சேருகிற சரக்குகளும் எல்லாம் மாயையாய் இருப்பதினாலும் அச்சந்தைக்கு மாயச்சந்தை என்று பேர் வழங்கப் படுகிறது. (பிரசங்கி 11 : 8, 1 : 2-14, 2 11-17, ஏசாயா 40 :17)
இவ்விடத்தில் சந்தை நடப்பது நூதன ஏற்பாடு அல்ல, ஆதிபூர்வமாய் இது நடந்து வருகிறது. இச்சந்தையின் பூர்வோத்தி ரங்களை சொல்லுகிறேன் கேள்:
சுமார் ஐயாயிரம் வருஷங்களுக்கு முன்னே, இந்த இரண்டு உத்தமரைப்போல சில பிரயாணிகள் மோட்ச பட்டணத்துக்குப் பயணம் போனார்கள். மோட்ச பிரயாணிகளின் காலடிகள் மாயாபுரி வழியாகவே போயிருக்கிறது என்பதை பெயெல்செபூலும், அப்பொல் லியோன், லேகியோன் என்பவர்களும், அவர்களுடைய படை பண்டாரங்களும் கண்டு பிடித்து, இவ்விடத்தில் சகலவிதமான மாய்கைகளும் விற்பனை ஆகும்படியான ஒரு சந்தையை ஸ்தாபித்து, வருஷம் முந்நூற்றறுபத்தைந்து நாட்களும் நடந்துவரும்படி திட்டம் செய்து இருக்கிறார்கள். ஆகையால் இந்தச் சந்தையில் வீடுகள், பூமிகள், வர்த்தகங்கள், அந்தஸ்துகள், மகிமைகள்,உத்தியோகங்கள், பட்டப்பேர்கள், தேசங்கள், ராஜ்யங்கள், இச்சைகள், இன்பங்கள் ஆகிய இவைபோன்ற வியாபாரங்களும், வேசிகள், மனைவிகள், புருஷர், பிள்ளைகள், எஜமான்கள், வேலைக்காரர், ஜீவன்கள், இரத்தங்கள், சரீரங்கள், ஆத்துமாக்கள், வெள்ளிகள், பொன்கள், முத்துக்கள், விலையேறப்பெற்ற ரத்தினாதிகள் ஆகிய சகலவித சந்தோசத்துக்கேற்ற சரக்குகளும் வியாபாரம் செய்யப்படுகின்றன.
அதுவும் அல்லாமல் இந்தச் சந்தையில், இந்திரஜாலம், தந்திர ஜாலம், சூதாட்டம், கூத்தாட்டம், குரங்காட்டம், மடையர் கூட்டம், வஞ்சகர் கூட்டம், படுக்காளிகளின் கூட்டம் இவை முதலியவைகளை எந்த வேளையிலும் பார்க்கலாம்.
இவை மாத்திரமோ? அல்ல, அல்ல, இந்தச் சந்தையில் களவு களையும், கொலைகளையும், விபச்சாரங்களையும், பொய்யாணை களையும் அதினதன் பூரண கோலங்களோடு விலையுமின்றிப் பணமு மின்றிப் பார்க்கலாம்.
இந்தப் பெரிய சந்தைக்கூட்டத்தையல்லாமல், அவைகள் விற்கப்படுகிற அநேக சில்லறை கடைத்தெருக்களும் இருந்தன. அந்த தெருக்களில் இன்னின்ன வஸ்துக்கள் விற்பனை ஆகிறது என்பதை வழிப்போக்கர் இலகுவாய் கண்டறிந்து கொள்ளும்படியாக பலகை களில் பெரிய எழுத்தாய் எழுதி வைக்கப்பட்டிருந்தன. எந்த தேசத்தின் சரக்கு வேண்டுமோ அந்த தேசத்தின் சரக்கை இலகுவில் கண்டு கொள்ளும்படியாக, இவ்விடத்தில் தேசங்கள், நாடுகள், நகரங்களாகிய வீதிகளின் பெயரையும், தெருக்களின் பெயரையும் காணலாம். இங்கே பிரித்தானியா தெருவையும் 2 பிரான்சிய தெருவையும், ஜெர்மானிய தெருவையும், இத்தாலிய தெருவையும், ஸ்பானிய தெருவையும் பார்க்கலாம். அந்தந்த பெயருடைய தெருக்களில் அந்தந்த தேசத்து மாயச் சரக்குகள் விற்பனையாகி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு சந்தைகளிலும் ஏதாவது ஒரு இடத்துச் சரக்கு அதிக மேன்மையாக எண்ணப்பட்டு பலராலும் பிரியமாக வாங்கப்படுகிறது போலவே இவ்விடத்தில் ரோமாபுரிச் சரக்கு 3 அதிகப் பிரியமாய் வாங்கப் படுகிறது. இங்கிலாந்து ஜாதியும், வேறு சில தேசத்தாரும் மாத்திரம் அதை ஒரு பொருட்டாய் எண்ணுகிறதில்லை.
நான் முன்னே சொன்னபடி மோட்ச பட்டணத்து பிரயாணிகளின் பாதை சிற்றின்பங்களால் நிறைந்திருக்கிற இந்த மாயச் சந்தை வழியாகவே போகிறது. ஆகையால் எந்தப் பிரயாணி மோட்ச பட்டணத்துக்கு யாத்திரை போகிறானோ அவன் இதின் வழியாய்ப் போகாதிருந்தால் “உலகத்தை விட்டு நீங்கிப்போக வேண்டிய தாயிருக்கும்” (1 கொரிந்தியர் 5 : 10) பிரபுக்களின் ஏகாதிபதி முதலாய் இவ்வுலகத்திலிருந்து தமது தேசத்துக்குப் புறப்பட்டபோது இந்தச் சந்தைப் பாதையாகவே வழி நடந்து போனார். அவர் இந்த இடத்தை கடந்து போன அன்று மாயச்சந்தை தன் சகல மகிமையோடுங்கூட தன்னுடைய வியாபாரத்தை நடத்தினது.
அவர் இதைக் கடக்கிற சமயத்தில் எனக்குத் தோன்றுகிறபடி இந்தச் சந்தைக்கு அதிபதியாய் இருக்கிற பெயெல்செபூல் என்பவனே கூடவந்து தன் மாய மகத்துவ சரக்குகளில் சிலதை அவர் வாங்கிக் கொள்ளும்படி வருந்தி அழைத்தான். அவர் அவனுடைய மனதின்படி சில சரக்குகளை வாங்கி இவ்விதமாய் அவனைக் கனப்படுத்தினது மெய்யானால், அவன் அவரையே அந்தச் சந்தைக்கு ஆண்டவனாக்கி யிருப்பான். அவர் அவ்வளவு கர்த்தத்துமுடைய பிரபு ஆகையால், பெயெல்செபூல் தெருத் தெருவாய் அவரைக் கூட்டிப்போய், கொஞ்ச நேரத்துக்குள் உலகம் முழுவதையும் அவருக்கு காண்பித்து, அந்த மகத்துவர் தன் மாயையில் சிலவற்றையாவது வாங்கிக் கொள்ள மாட்டாரா என்று மிகவும் பிரயாசப்பட்டான். ஆனால், அந்தச் சரக்குகள் ஒன்றின் மேலும் அவர் பிரியப்பட்டதும் இல்லை; அந்த மாயைகளின்மேல் ஒரு காசும் 4 அவர் செலவிட்டதும் இல்லை. (மத்தேயு 4 : 8 – 10. லூக்கா 4 : 5 – 8) இவைகளினால் இந்தச் சந்தை வெகு பூர்வமானதும், பிரமாண்ட மானதுமாய் இருக்கிறதென்பதை நீ நன்றாய் அறிந்து கொள்ள வேண்டியது.
இந்தப் பிரயாணிகளும் இந்தச் சந்தையின் ஊடே நடந்துதான் போக வேண்டும் என்று முன் சொன்னேனே அப்படியே அவர்கள் அதைக் கடந்து போனார்கள். இதோ அவர்கள் சந்தைக்குள் சேரவே சந்தைக்குள் இருந்த ஜனம் முழுவதும் தத்தளித்தது. அவர்களையிட்டு மாயாபுரி எங்கும் அமளி குமளியானது. 5 இந்த அமளிக்கு சில முகாந்தரங்கள் இருந்தன. எப்படியெனில்:
முதலாவது, இந்தப் பிரயாணிகள் உடுத்தியிருந்த உடை அந்தச் சந்தையில் இருந்தவர்களுடைய உடைக்கு முற்றிலும் வேறு பட்டிருந்தது. ஆகையால் இந்த விபரீத உடுப்போடே இங்கே அலைந்து திரிகிறது யார் என்று எல்லாரும் அவர்களை ஏறிட்டுப் பார்த்தார்கள். சிலர் அவர்களை பைத்தியக்காரர் என்று சொன்னார்கள். வேறு சிலர் அவர்களைப் பித்தங்கொண்டவர்கள் என்று தீர்மானித்தார்கள். மற்றும் சிலர் மற்ற தேசத்து மதிகேடர் என்று சொன்னார்கள். இப்படி அவர்கள் உடையே அமளிக்கு ஒரு காரணமாய் இருந்தது.
இரண்டாவது: உடை வித்தியாசத்தோடு அவர்கள் பேச்சும் வித்தியாசப்பட்டதால் அமளிக்கு ஆதாரம் ஆயிற்று. இவர்கள் பேசினதை அறிந்து கொண்டவர்கள் மெத்தக் கொஞ்சம் பேர். ஏனெனில் அவர்கள் கானான் பாஷையைப் பேசுகிறவர்களாய் இருந்தார்கள். சந்தையின் வியாபாரிகளோ இவ்வுலகத்தின் மக்களாய் இருந்தார்கள். ஆகையால் அந்த சந்தையின் துவக்க முதல் கடைசி வரையும் இந்தப்பிரயாணிகளும் அவர்களும் ஒருவருக்கொருவர் அந்நியரும், அறியப்படாதவர்களும் போலவே இருந்தார்கள். (1 கொரி)
மூன்றாவது, இந்தப் பிரயாணிகள் மாயாபுரி வியாபாரிகளின் சரக்குகளை எவ்வளவேனும் சட்டைபண்ணாததே அமளிக்கு விசேஷ காரணமாய் இருந்தது என்று சொல்ல வேண்டும். இவர்கள் அந்தச் சரக்குகளை எட்டிப் பார்க்க முதலாய் பிரியங் கொள்ளவில்லை. யாராவது அவர்களைக்கூப்பிட்டு, இங்கே வாருங்கள், நல்ல சரக்கு நயமாய்த் தருகிறோம் என்று சொன்னால் அவர்கள் தங்கள் காதுகளில் விரலைவிட்டு அடைத்துக்கொண்டு “மாயைப் பாராதபடிக்கு நீர் என் கண்களை விலக்கும்” என்று சத்தமிட்டுச் சொல்லிக் கொண்டு (சங் 119 : 37) தாங்கள் கொள்ளும் சரக்கும், செய்யும் வியாபாரமும் எல்லாம் பரலோகத்தில் இருக்கிறது என்பதைக் காட்டும்படி கண்களை ஏறெடுத்து வானத்தை அண்ணாந்து பார்ப்பார்கள். (பிலி 3 : 20-21)
இப்படி அவர்கள் கொஞ்ச தூரம் கடந்து போகவே, ஒரு பரியாசக்காரன்வந்து “என்ன பொருள் தேவை அப்பா” என்று கேட்டான். அவனைப் பிரயாணிகள் சற்று மூர்க்கமாய்ப் பார்த்து: “நாங்கள் சத்தியத்தை வாங்குவோம்” (நீதி 23 : 23) என்று சொன்னார்கள். இந்த வார்த்தையானது அந்த ஊரார் அவர்களை முன்னிலும் அதிகமாய் அவமதிக்க ஏதுவாய் இருந்தது. உடனே அவர்களில் சிலர் பரியாசம்பண்ணினார்கள். சிலர் நையாண்டி செய்தார்கள். சிலர் பழிப்பாய் பேசினார்கள். சிலர் இந்தப் பயல்களை உதையுங்கள் என்று சொன்னார்கள். இவைகள் எல்லாவற்றாலும் கடைசியாக ஊர் முழுவதிலும் அமளி உண்டாயிற்று.
சந்தை முழுவதிலும் சந்தடி அதிகப்பட்டது. சந்தை வியாபாரம் எல்லாம் அலங்கோலப்பட்டுப் போயிற்று. இந்தச் செய்தி அனைத்து சந்தைக்கும் எஜமானுடைய காதில் போய்விழுந்தது. அவரும் உடனே புறப்பட்டு வந்து இவ்வளவு தாறுமாறுக்கும் காரணமாயிருந்த பிரயாணிகள் இருவரையும் பிடித்துக்கட்டி, விசாரணை செய்யும்படி தமக்கு நம்பிக்கையாய் இருந்த சில ஆட்களுக்கு உத்தரவு கொடுத்தார்.
அந்த உத்தரவின் பிரகாரம் அந்த இருவரும் கைதிகளாக்கப்பட்டு விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களை விசாரணை செய்யும்படி நிமிக்கப்பட்டவர்கள் அந்தப் பிரயாணிகள் எங்கே இருந்து வந்தார்கள் என்றும், எங்கே போகிறார்கள் என்றும், மாயாபுரியின் ஆச்சாரத்துக்கு விரோதமான உடுப்போடு தெரு வீதிகளில் நடப்பித்த கலகங்கள் எவை என்றும் பல கேள்விகளைக் கேட்டார்கள். அந்த மனிதரோ: தாங்கள் மறு உலகத்துப் பிரயாணிகள் என்றும் இந்த உலகத்துக்கு அந்நியரும் பரதேசிகளுமாயிருக்கிறோம் என்றும், பரம எருசலேமாகிய தங்கள் சொந்த நாட்டுக்குப் பயணப் பட்டுப் புறப்பட்டுப் போகிறோம் என்றும், (எபிரேயர் 11 : 13 – 16) நகரத்தாரும், வியாபாரிகளும் தங்களை ஏசவும், இப்படி ஈனமாய் நடத்தவும், பிரயாணத்தைத் தடுக்கவும் தாங்கள் யாதொரு விதத்திலும் தவறு செய்யவில்லை என்றும் சொன்னதோடு, இந்த நகரத்து வியாபாரி ஒருவன் உங்களுக்கு என்ன சரக்குத் தேவை என்று கேட்டபோது சத்தியம் இருந்தால் வாங்கிக்கொள்ளுகிறோம் என்று சொன்னதே யன்றி, வேறே எவர்களுடனேயும் பேச நாங்கள் வாய் திறந்ததில்லை என்றும் சொன்னார்கள். ஆனால் விசாரணை செய்த அதிபதிகள் அவர்கள் பேச்சை அணுவளவும் நம்பாமல் இவர்கள் ஒன்று பித்தம்பிடித்த பைத்தியக்காரராய் இருக்க வேண்டும், அல்லது மாயாபுரியின் சீரையும் சிறப்பையும் தாறுமாறாக்கும்படி துணிந்து வந்த சண்டாளராய் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்கள். ஆதலால் அவர்கள் அந்த இரு பிரயாணிகளையும் பிடித்து அடிதண்டமாய் அடித்து, அவர்கள் உடல்முழுவதும் சேற்றைப் பூசி சந்தைக்கு வந்தவர்கள் எல்லாருக்கும் இவர்கள் விந்தைக்காட்சியாய் இருக்கும்படி ஒரு கூண்டுக்குள் அடைத்துப் போட்டார்கள்.
அந்தக் கூண்டுக்குள் இருந்த கொஞ்ச நேரமும் அவர்கள் எல்லா மனுஷருடைய நிந்தைக்கும், அவமானத்துக்கும், பரியாசத்துக்கும் ஆளானார்கள். அவர்களுக்கு நேரிடுகிற அவமானங்களை எல்லாம் சந்தைக்கு எஜமான் ஆனவர் சற்று தூரத்தில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு சிரித்து சிரித்து அகமகிழ்ந்தார். சத்துருக்கள் அவர்களுக்கு என்னதான் செய்தபோதினும் அவர்கள் இருவரும் பொறுமையோடு சகித்துக்கொண்டு “தீமைக்குத் தீமையையும் உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல்” அதற்குப்பதிலாக ஆசீர்வதிக்கிறதையும், தீமைசெய்தலை நன்மை செய்தலாலும், அநியாயத்தை அன்பு பாராட்டுதலாலும் ஜெயித்துக் கொண்டு வருகிறதையும் அச்சந்தையில் நின்றவர்களில் சிலர் கண்டு, அனுதாபப்பட்டு, அவர்களை இம்சை பண்ணுகிறவர்கள் மேல் கோபம் அடைந்து அப்படி நிஷ்டூரங்கள் செய்ய வேண்டாம் என்று கோபித்துக் கடிந்துகொண்டு தடுத்தார்கள். உடனே அந்த துஷ்டர்கள் அவர்கள் மேல் சீறி விழுந்து கூண்டுக்குள் இருந்தவர்களைப்போல நீங்களும் கெட்டவர்கள் என்று தீர்த்து அவர்களும் நீங்களும் ஒன்றாகையால் அவர்களுக்குச் சம்பவிப்பதே உங்களுக்கும் சம்பவிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அதற்கு அவர்கள்: அப்படி அல்ல, இந்த மனிதர்கள் மகா அமைதலும் மரியாதையும் உள்ளவர்கள். ஒருவனுக்கும் தீமை செய்ய இவர்கள் நினைக்கவில்லை. இவர்களைக் கூண்டில் அடைத்து இப்படி அநியாயம் செய்வதைப்பார்க்கிலும் இந்தச் சந்தை வியாபாரிகளில் அநேகரை இப்படி அடைக்கிறது மாத்திரம் அல்ல, கழுமரத்தில் ஏற்றுவதுங்கூட நியாயமாய் இருக்கிறது என்று மறுமொழி சொன்னார்கள். இதின் பின்பு பேச்சு வளர்ந்து விட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர் வாதாடிக் கொண்டு சண்டையை அதிகப்படுத்தினார்கள்(இந்தச் சமயத்தில் மோட்ச பிரயாணிகள் கிறிஸ்தியானும், உண்மையும் வெகு விவேகமாயும் ஞானமாயும் நடந்து கொண்டார்கள்) அந்த இரு பட்சத்தாரும் ஒருவரோடொருவர் மோதி ஒருவரையொருவர் அடிக்கவும், மிதிக்கவும், குத்தவும், உதைக்கவும் ஆரம்பித்ததால் இரு பட்சத்திலும் பலத்த சேதம் உண்டாயிற்று. அப்புறம் நகரத்தில் உண்டான அடிபிடிகளுக்கும், மண்டை உடைவுகளுக்கும் மோட்சபிரயாணிகளே காரணர் என்று மறுபடியும் விசாரணைக்கு கொண்டு போகப் பட்டார்கள். அந்த விசாரணைக்காரன் பின்னும் அவர்களை அநேக அடிகளால்அடித்து, பளுவான இரும்புக் குண்டுகளை அவர்கள் கழுத்திலே தொங்க வைத்து, ஒருவரும் இவர்களுக்கு இரங்கிப் பேசாதபடிக்கும், அல்லது இவர்கள் பட்சமாய் திரும்பாதபடிக்கும் எச்சரிப்பு உண்டாகும்படியாக விலங்கு மாட்டப்பட்டவர்களாக மாயாபுரி வீதிக்கு வீதி அங்குமிங்கும் நடத்திக்கொண்டு போகப் பட்டார்கள். கிறிஸ்தியானும் உண்மையுமோ இந்தச்சமயத்தில் முன்னிலும் அதிக ஞானமுள்ளவர்களாய் நடந்து கொண்டு, தங்களுக்கு விரோதமாய் பேசப்பட்ட நிந்தைகளையும், செய்யப்பட்ட அவமானங்களையும் அவ்வளவு சாந்தத்தோடும், பொறுமையோடும் சகித்துக் கொண்டபடியால் அந்த ஊராரில் அநேகரை தங்கள் பட்சத்துக்கு இழுத்துக்கொண்டார்கள். இப்படி அவர்கள் பட்சம் திரும்பின மாயாபுரியாரின் தொகை அவ்விடத்துத் துன்மார்க் கருடைய தொகையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் கொஞ்சமாய் இருந்தது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியது.
மாயாபுரியாரில் பலர் அவர்கள் பட்சம் சேர்ந்ததே மறுபட்சத் தாருடைய மூர்க்கத்தை அதிகமாய் எழுப்பிவிட ஏதுவாய் இருந்தது. ஆதலால்அந்த துன்மார்க்கர் பிரயாணிகள் இருவரையும் கொன்று போடுவதே நலம் என்று கடைசியாகத் தீர்மானித்தார்கள். அப்புறம் அவர்கள் இந்த மனுஷர் கலகம் உண்டாக்கினதோடு ஊராரில் அநேகரையும் ஏமாற்றித் தங்கள் பட்சம் திருப்பிக் கொண்டார்கள், ஆகையால் இவர்களை அடைக்கிறதும், அடிக்கிறதும் மாத்திரம் போதாது, இவர்கள் கொலை செய்யப்படவும் வேண்டும் என்று சொல்லி பயமுறுத்தினார்கள்.
அதின் பின்பு அவர்களை மறுபடியும் கூண்டில் அடைத்து வைத்து வேறுகட்டளை பிறக்குமட்டும் வெளியே விடக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானத்தின்படியே அவர்கள் இருவரும் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் கால்கள் தொழு மரத்தில் மாட்டப் பட்டன.
இந்தச் சமயத்தில் பிரயாணிகள் தங்கள் சிநேகிதராகிய சுவிசேஷகன் என்பவரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து: அவர் சொன்னவைகளில் ஒன்றும் தப்பவில்லை, எல்லாம் நிறைவேறி வருகிறது என்று எண்ணிக் கொண்டார்கள். அதுவுமன்றி அவ்விரு வரும் நம்மில் எவன் இங்கே சாக வேண்டியதிருக்குமோ அவனே அதிக பாக்கியவான் என்று ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டு அவரவர் உள்ளுக்குள்ளாக தனக்கே அந்தப் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்கிற ஆசையுடையவர்களாய் இருந்தார்கள். கடைசியாக, சகலத்தையும் ஆளுகிற சர்வ ஞானியின் திருவுள தீர்மானத்துக்கு தங்களை ஒப்புவித்து தீர்ப்பு பிறக்குமட்டும் மன திருப்தியோடு காலங்கழித்தார்கள்.
அதிபதிகளுக்கு சாவகாசமான காலம் வந்தபோது பிரயாணிகளை மரண ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தும்படியாக கடைசி விசாரணை நாளைக் குறித்து அவ்விருவரையும் நியாயாதிபதியின் சிம்மாசனத்துக்கு முன்பாகக் கொண்டு போய் நிறுத்தினார்கள். அவர்களை விசாரணை செய்த நியாதிபதிக்கு நன்மை வெறுப்போன் 6 என்று பேர். இவர்கள் மேல் சாட்டப்பட்ட குற்றங்கள் வார்த்தைகளில் சற்று வேறுபட்டி ருந்தாலும், பொருளில் ஒன்றாகவே இருந்தது.
அதை மொத்தமாய் சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் மாயாபுரி வியாபாரங்களின் விரோதிகளாயும், சரக்குகளைத் தாறுமாறு செய்கிறவர்களாயும் இருக்கிறார்கள். இவர்கள் நகரத்துக்குள் சச்சரவுகளையும், அமளிகளையும் உண்டாக்கி, ராஜ சட்டங்களை அவமதிக்கும்படி குடிகளில் சிலரை தங்கள் பட்சமாக்கிக் கொண்டார் கள் என்பதுதான்.
இவர்கள் மேல் சாட்டப்பட்ட குற்றங்கள் இவைகள் என்று மொத்தமாய்ச் சொல்லப்பட்ட உடனே, உண்மை அதற்கு மறு உத்தரவு சொல்லத் துவக்கினான். அவன் சொன்ன உத்தரவாவது: நான் உன்னதமானவைகளுக்கு எல்லாம் மேலான மகா உன்னதமானவருக்கு விரோதமாய் எதிர்த்து நின்றவனோடு எதிர்த்து நிற்கின்றேனே அல்லாமல் வேறென்றும் செய்யவில்லை. நடந்ததாகச் சொல்லப்படுகிற தாறுமாறுகளைப் பற்றியோ, நான் ஒன்றும் செய்ததில்லை. நானோ சமாதான புருஷனாய் இருக்கிறேன். எங்கள் பட்சம் திரும்பின ஆட்கள் எங்களுடைய உண்மையையும், குற்றமில்லாமையையும் பார்த்துச் சேர்ந்தார்களேயன்றி மற்றப்படி அல்ல. மேலும் அவர்கள் நஷ்டத் திலிருந்து நலத்துக்கே திரும்பி இருக்கிறார்கள். உங்கள் ராஜாவை வெகுவாய் உயர்த்துகிறீர்களே, ஆனால் அவன் எங்கள் ஆண்டவருடைய பகைஞனாகிய பெயல்செபூல் ஆனபடியால் நான் அவனையும், அவனுடைய தூதர்கள் அனைவரையும் “சீ” என்று அருவருக்கிறேன் என்றான்.
அதைக் கேட்டவுடனே நன்மை வெறுப்பான் உக்கிர கோபமாகி, இந்தக் கைதிகளுக்கு விரோதமாய் மகா ராஜாவின் பட்சம் நின்று குற்றம்சாட்டக்கூடியவர்கள் இந்த க்ஷணமே நியாய சபை முன் வந்து ஆஜராக வேண்டியது என்று விளம்பரம் பண்ணினான். அச்செய்தி ஊரெங்கும் பறைசாற்றப்பட்டவுடனே: வன்கண்ணன், 7 அவபக்தி, 8 இச்சகன் 9 என்னும் மூவர், அடியார் மூவரும் இதோ சாட்சி சொல்ல தயாராய்இருக்கிறோம் என்று புறப்பட்டு வந்தார்கள். அதின் பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிற கைதிகளை அவரவர் அறிவார்களா என்றும், கைதிகளுக்கு விரோதமாகவும், ராஜாவின் பட்சமாயும் சொல்லத்தக்க சாட்சிகள் ஏதாவது உண்டா என்றும் வினாவப்பட்டார்கள்.
அப்போது வன்கண்ணன் எழுந்து நின்று பின் வருகிறபடி சாட்சி சொன்னான், அதாவது: தரும துரைகளே! அடியேன் இவனை வெகு நாளாய் அறிவேன். இந்த நியாய சபைக்கு முன்பாக நான் இந்த மனுஷனைக் குறித்து சத்திய பிரமாணத்தோடு சொல்லுகிற…………
நியாயாதிபதி: பொறு, பொறு; இவனைச் சத்தியம் வாங்கு. அப்படியே அவன் சத்தியம் செய்த பின்பு சொல்லுகிறான்: என் ஆண்டவனே, இவனுக்கு உண்மை என்ற சிறந்த பேர் இருந்தாலும், இவனைப்போலொத்த உண்மைத் துரோகி நமது தேசத்தில் எவனும் இல்லை, இவனுக்கு அரசன் என்றும் இல்லை, குடிகள் என்றும் இல்லை, இவனுக்கு மகாராஜாவின் கட்டளை என்றும் இல்லை, மாமூல் வழக்கம் என்றும் இல்லை, எல்லாவற்றையும் அசட்டை செய்து அவமதிக்கிறான். இவன் தனக்குள் இருக்கும் ராஜ துரோக கருத்துக்களை உண்மைக்கும் பரிசுத்தத்திற்கும் ஏற்ற சட்டங்கள் என்று பெயரிட்டுக்கொண்டு மற்றவர்களுக்குப் போதிக்கும்படியாக வெகுவாய் பிரயாசப்படுகிறான். அதுவுமல்லாமல் ஒரு நாள் இவன் வந்து நின்று கொண்டு கிறிஸ்து மார்க்கத்திற்கும், நமது மாயாபுரியின் மாமூல் சட்டங்களுக்கும் ஒன்றுக்கொன்று நேர் விரோதமாய் இருக்கிறது, அந்த விரோதத்தை சமரசப்படுத்தக் கூடவே கூடாது என்று சொல்ல என் இரண்டு காதாலும் கேட்டேன். இப்படி இவன் சொல்வதனாலே, என் ஆண்டவனே! இவன் நமது நகரத்தின் சிறந்த சட்டங்களை குற்றமாகத் தீர்க்கிறது மாத்திரம் அல்ல, அச்சட்டங் களைத் தங்கப்பிரமாணமாக எண்ணி அதின்படி செய்து வருகிற நம் எல்லாரையும் குற்றவாளிகளாய்த் தீர்க்கிறவனாய் இருக்கிறான்.
நியாயா: இன்னும் நீ சொல்ல வேண்டிய சமாச்சாரங்கள் உண்டா?
வன்கண்ணன்: என் ஆண்டவனே, நான் இன்னும் சொல்ல வேண்டுமானால் அதிகம் உண்டு. என்றாலும் அது நியாய சபையை அலட்டுகிறதாய் இருக்கும் என்றே சொல்லாதிருக்கிறேன். ஆனாலும், வேறு சாட்சிக்காரர் சாட்சி சொன்ன பிற்பாடு இவனை மரணாக்கினை செய்வதற்கு பின்னும் சாட்சிகள் குறைவாய் இருக்குமானால் அடியேன் சொல்லத் தயாராய் இருக்கிறேன் என்று சொன்னான். அப்போது அவனை ஒரு பக்கத்தில் கொண்டு போய் நிற்க வைத்தார்கள்.
அப்புறம் அவபக்தியை கூப்பிட்டார்கள். உடனே அவன் நியாயசபை முன் வந்து கைகட்டி நின்றான். நியாயாதிபதி அவனை நோக்கி: கிராதிக்குள் நிற்கும் கைதியைப் பார்த்துக் கொள். அவனுக்கு விரோதமாக அரசர் பட்சத்தில் நீ சொல்ல வேண்டிய சாட்சிகளை சொல்ல வேண்டியது என்று சொன்னான். அப்புறம் அவனிடத்தில் சத்தியம் வாங்கினார்கள். சத்தியம் பண்ணி ஆனவுடன் அவன் சொல்லுகிறான்:-
அவபக்தி: என் ஆண்டவனே! இவனோடு எனக்கு அதிகப் பழக்கமும் இல்லை, இனிமேல் இவனுடனே அதிகப் பழக்கமாக எனக்கு மனமும் இல்லை. என்றாலும் சில தினங்களுக்கு முன்னே இவனுடன் நான் பேசிக்கொண்டிருந்த சம்பாஷணையினால் இவன் தொத்து வியாதியைப் போலொத்த நாசகாலன் என்று தீர்மானமாய் அறிந்து கொண்டேன். எப்படியெனில் நாங்கள் சம்பாஷித்துக் கொண்டிருக்கையில் உங்கள் மார்க்கம் ஒரு காசுக்கும் உதவாது, அதின்படி நடக்கிறதினாலே ஒரு மனுஷனும் தேவ தயவைப் பெற்றுக் கொள்ளமாட்டான் என்று இவன் சொல்லக் கேட்டேன். இப்படி இவன் சொன்ன வார்த்தைகளின் கடைசித் தீர்மானம் எப்படி முடியவேண்டுமென்பது, என் ஆண்டவனே, தாங்களே நன்றாய் அறிவீர்கள். அது எதுபோல் இருக்கிறதென்றால் நாம் இன்னும் வீணான ஆராதனை செய்து கொண்டு வருகிறோம் என்றும், இன்னும் நமது பாவங்களோடேயே இருக்கிறோம் என்றும், கடைசியாக நாம் அனைவரும் நாசமாய் போவோம் என்றும் சொன்னது போலத்தான் இருக்கிறது. அடியேன் சொல்லக்கூடிய வாக்குமூலம் இவ்வளவுதான் சுவாமி! என்று சொல்லி முடித்தான்.
அப்புறம் இச்சகனைக் கூப்பிட்டு சத்தியம் வாங்கி அவன் தன் ராஜன் பட்சமாகவும், குற்றம்சாட்டப்பட்டிருக்கிற கைதிக்கு விரோத மாகவும் சொல்லத்தக்க சாட்சியை வெளியிடச் சொன்னார்கள். அப்படியே இச்சகன் பின்வருகிற பிரகாரம் சாட்சி சொல்லத் தொடங்குகின்றான்:
இச்சகன்: மகா பிரபுவே! மற்றப் பிரதானிகளே! கேளுங்கள்: இந்தத் துரோகிப் பயலை வெகுகாலமாக நான் அறிந்தும் இருக்கிறேன். பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் இவன் துணிந்து பேசினதைக் கேட்டும் இருக்கிறேன். மாட்சிமை தங்கிய மகா மன்னராகிய பெயெல்செபூல் என்னும் நமது அதிபதியை இவன் தூஷித்ததுமின்றி அவருடைய பட்டவர்த்தனாராகிய பழைய மனித நாயனார், மாம்ச இச்சை நாயனார், சம்பிரமநாதர், இடம்பநாதன், காமாதிபதி, லோபதுரை முதலிய அவருடைய உத்தம சிநேகிதராகிய பிரபுக்களையும் மற்றும் துரைமக்களையும் பற்றி பல அவதூறுகளைச் சொல்லியும் இருக்கிறான். அதுவுமின்றி, இந்த நகரத்தில் உள்ளவர்கள் எல்லாரும் தன் மனம் போல் ஏகமனமுடையவர்களாய் இருந்தால், இப்பிரபுக்கள் ஒருவரையும் இவ்விடத்தில் தங்க இடமில்லாமலும், தாபரிக்க ஸ்தலம் இல்லாமலும் ஓட்டிவிடுவேன் என்றும் இவன் சொன்னது உண்டு. அதுவுமின்றி என் ஆண்டவனே! உமக்காவது மரியாதை செய்திருப்பானா? இல்லவே இல்லை. அவனை நியாயம் தீர்க்கும்படி ஏற்படுத்தி இருக்கிற உம்மையே பக்தியற்ற படுசண்டாளன் என்றும், இன்னும் இவைபோலொத்த துர்ச்சன வார்த்தைகளாலும் இவன் திட்டும்படி அஞ்சவில்லை. இப்படியாக இவன் மாயாபுரியின் பெரிய மனுஷாளை எல்லாம் அவதூறு பண்ணியிருக்கிறான் என்று சொல்லி முடித்தான்.
இந்தவிதமாக மூவரும் அவரவர் சொல்ல வேண்டிய சாட்சிகளை சொல்லி முடித்த பின்பு, நியாதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட கைதியைப் பார்த்து: அடா வேதப்புரட்டா, அடா பதிதா, அடா துரோகி, இந்த உத்தம புருஷர் உனக்கு விரோதமாய் சொன்ன சாட்சியைக் கேட்டாயா? என்று சொன்னான்.
உண்மை: அப்போது உண்மை: நியாயாதிபதியே! என் குற்றமில்லாமையை விளக்கும்படியாக நான் பேச விரும்பும் சில காரியங்களைச் சொல்லும்படி உத்தரவுதானா? என்று கேட்டான்.
நியாயா: அதற்கு நியாயாதிபதி போடா, போடா. இனி நீ பிழைத்திருக்க பாத்திரன் அல்ல, இந்த இடத்திலேயே உன் தலையைக் கொய்து போட வேண்டியது நியாயம், என்றாலும் நாங்கள் உன்மட்டில் பாராட்டுகிற தயாளகுணத்தை உலகமே அறியட்டும், நீ சொல்ல வேண்டியதை சொல்லு.
உண்மை: 1 வன்கண்ணன் எனக்கு விரோதமாய் சொன்ன சாட்சியைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இதுதான்:- தேவ வசனத்துக்கு இசைவாய் இராத எந்தக் கட்டளையாவது, பிரமாண மாவது, வழக்கமாவது, ஜனக்கூட்டமாவது கிறிஸ்து மார்க்கத்துக்கு நேர் விரோதம் என்று நான் சொன்னதேயல்லாமல் வேறொன்றும் சொன்னதில்லை என்று அறிக்கையிடுகிறேன். இப்படி நான்சொன்னது தப்பிதமேயானால், அந்த தப்பிதத்தை எனக்கு உணர்த்திக் காட்டுங்கள், அப்போது நான் சொன்னது சரி அல்ல என்று ஒத்துக்கொண்டு அறிக்கையிட ஆயத்தமாய் இருக்கிறேன்.
2. அவபக்தி எனக்கு விரோதமாய் சாட்சி சொன்னதைப்பற்றி நான் சொல்ல வேண்டிய காரியம் என்னவென்றால், தேவ வணக்கத்தில் தெய்வீக விசுவாசம் வேண்டியது அவசியம். ஆனால் கடவுளுடைய சித்தத்தைப்பற்றிய தெய்வீக வெளிப்படுத்தல் ஒன்று இல்லாவிட்டால், தெய்வீக விசுவாசம் உண்டாக வழி இல்லை. ஆதலால் தேவ வணக் கத்தில் தெய்வீக வெளிப்படுதலுக்கு இசையாததான எவைகள் நுழைக்கப்பட்டு இருக்குமோ, அவைகள் மனுஷீக விசுவாசத்தின்படி அன்றி வேறு வகையாய் நுழைக்கப்பட்டு இருக்கமாட்டாது. இப்படிப்பட்ட விசுவாசம் நித்திய ஜீவனுக்கு உதவமாட்டாது என்று சொன்னதற்கு மிஞ்சி வேறென்றும் சொன்னது இல்லை என்று அறிக்கையிடுகிறேன்.
3. இச்சகன் எனக்கு விரோதமாய் சொன்ன சாட்சியில் நான் பேசினதாக அவன் குறித்த தூஷணங்களும், அவதூறான வார்த்தை களும் என் வாயிலிருந்து வந்ததே இல்லை. ஆனால், இந்த நகரத்தின் அதிபதியும், அவருடைய பட்டவர்த்தனராக இச்சகன் பேர்சொன்ன பிரபுக்களும், மற்றும் துரைமக்களும் இந்த நாட்டுக்கும் நகரத்துக்கும் ஏற்றவர்களாய் இராமல், நடுநரகத்தில் இருக்கவே தகுந்தவர்கள் என்று மாத்திரம் சொன்னது உண்டு. கடவுள் என்மேல் கிருபையாய் இருப்பாராக என்று சொல்லி முடித்தான்.
அப்புறம் நியாயாதிபதியானவர், இம்மட்டும் தமது சிங்கா சனத்தின் பக்கத்தில் நின்று நடந்த விசாரணையைக் கவனித்துக் கொண்டு இருந்த பல பொது மனுஷரைப்பார்த்து: ஓ! ஜூரிமாராகிய துரைமாரே, கேளுங்கள்: இந்த நகரம் முழுவதையும் கலாபனை செய்து குற்றஞ்சாட்டப்பட்டு நிற்கிற கைதியை நீங்கள் உங்களுக்கு முன்னே பார்க்கிறீர்கள். இவனுக்கு விரோதமாய் ஊரிலுள்ள கனவான்களில் சிலர் சாட்சி சொன்னவைகளைக் கேட்டும் இருக்கிறீர்கள். அந்தச் சாட்சிகளை மறுத்து கைதி பேசின வார்த்தைகளையும், அவன் பண்ணின அறிக்கையையும் கேட்டீர்கள். அவனைத் தூக்கில் போடுகிறதோ, விடுதலை செய்கிறதோ என்பது உங்கள் மனதுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எப்படி இருந்தபோதினும் நீங்கள் உங்கள் தீர்மானத்தை வெளியிடுமுன், உங்களுக்கு நமது ராஜ்யபாரத்து நியாயப்பிரமாணங்களின் சாரத்தை ஊட்டிவைப்பது நமக்கு அவசரமாகத் தோன்றுகிறது.
நமது அதிபதியின் உத்தம ஊழியக்காரரில் ஒருவனாகிய பெரிய பார்வோன் என்பவன் காலத்தில், எதிர்மார்க்கத்தார் பலுகிப் பெருகி பலத்தில் வளர்ந்து விடாதபடிக்கு அவர்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை எல்லாம் ஆற்றில் போட்டுவிட வேண்டும் என்று ஒரு கட்டளை பிறந்தது. (மத்தேயு 1 : 22) அவருடைய தாசரில் வேறொருவனாகிய மகா நேபுகாத்நேச்சாருடைய நாட்களில், அரசன் நிறுத்தின பொற்சிலையை முகம் குப்புற விழுந்து கும்பிடாதவன் எவனோ அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் போடப்படும்படி ஒரு சட்டம் பிறப்பிக்கப் பட்டது. (தானியேல் 3 : 6) அதுவும் அல்லாமல் தரியு மகாராஜாவின் காலத்தில் குறிக்கப்பட்ட ஒரு காலத்துக்கு, எந்த மனுஷனும் அந்த அரசனை அல்லாமல் வேறு தேவனையாவது, எந்த மனுஷனையாவது நோக்கி ஜெபம் செய்கிறது உண்டானால் அப்படிப்பட்டவனைச் சிங்கங்களின் குகையிலே போட வேண்டும் என்று தாக்கீதும் பிறந்தது. (தானியேல் 6 : 7) நமது அரசரின் ஆளுகைச் சட்டங்கள் இப்படியிருக்க, இப்பொழுது இந்தக் கைதி அவைகளின் சாரத்தை நினைவினால் மாத்திரம் மீறி இருந்தாலும் அதைச் சகிக்ககூடாது, இவனோ வார்த்தையினாலும், கிரியையினாலும் மீறி இருக்கிறான் என்று தெரிய வருகிறது. இந்த அநியாயத்தை யார்தான் சகிக்கக்கூடும்!
பார்வோனின் கட்டளையைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது ஒரு குற்றமும் நடவாதிருந்த காலத்தில் சம்பவிக்கிறதற்கு இடமான பொல்லாப்பை விலக்கிப்போடும்படி சந்தேகத்தால் மாத்திரம் ஏற்படுத்தப்பட்டது. இப்போதோ ஒரு துரோகம் வெளிப்படையாய் நடந்திருக்கிறது. இரண்டாம் மூன்றாம் சட்டங்களைப்பற்றி சொல்ல வேண்டுமானால் இவன் நமது மார்க்கத்தை அடியோடு ஆட்சேபிக் கிறதாகத் தெரிய வருகிறது. ஆகையால் அவன் அறிக்கையிடுகிற ராஜதுரோகத்திற்காக அவன் மரணமடையப் பாத்திரனாய் இருக்கி றான். இவைகளை நீங்கள் மனதில் ஆராய்ந்து, ஓ பிரபுக்களே! துரை மக்களே! கனவான்களே! ஜூரிமாரே! உங்கள் தீர்ப்பைத் தீர்க்க ஆலோசனையோடு கூறக்கடவீர்கள் என்று சொன்னான்.
நியாயாதிபதியாகிய நன்மை வெறுப்போன் இவ்வளவும் சொன்னவுடனே, அவரைச்சுற்றிலும் நின்ற ஜூரிமாராகிய கபோதி, நலமில்லான், குரோதி, காமி, நெறிகேடன், குறும்புத்தனன். மனமேட்டிமை, விரோதி, பொய்யன், நிஷ்டூரன், ஜோதிப்பகை, தீராப்பகை 10 ஆகிய பன்னிருவரும் தங்களுக்குள் அந்தரங்க ஆலோசனை செய்து கொள்ளும்படி நியாய சபையை விட்டு வெளியே போய் தனித்திருந்து அவரவர் தீர்மானங்களைப்பற்றி ஆலோசித்துக் கொண்டு கடைசியாக எல்லாரும் கைதியை மரணாக்கினை தீர்ப்புச்செய்யும்படி ஏக மனதுடையவர்கள் ஆனார்கள். ஜூரிமாரில் முதல்வராகிய கபோதி: இவன் பதிதன் என்று பரிஷ்காரமாய்ப் பார்க்கிறேன் என்றார். அப்புறம் நலமில்லான் என்பவர்: இப்படிப் பட்ட பயலை பூமியில் இருந்து அகற்றவேண்டும் என்றார். அப்பால் குரோதி: ஆம், ஆம் அவன் தொலைந்தால் நலம், அவன் முகத்தைப் பார்க்கவே எனக்கு அவ்வளவு வெறுப்பு உண்டாகிறது என்றார். அதன்பின் காமி: நான் அவனைச்சகிக்க மாட்டேன் என்றார். பின்பு நெறிகேடன்: நானும் சகிக்கமாட்டேன், இவனை விட்டுவிட்டது நிஜமானால் என் வழிகளை எல்லாம் குற்றப்படுத்தத் துணிவான் என்றார். அப்பால் குறும்புத்தனன்: இனி ஆலோசனை என்ன, பயலைக்கழுவில் ஏற்றுங்கள், கழுவில் ஏற்றுங்கள் என்றார். அதின்பின் மனமேட்டிமை: இவன் ஒரு காசும் பெறாத பயல் என்றார். என் மனம் இவனுக்கு விரோதமாய் கொதிக்கிறது என்று விரோதி எழும்பினார். இவன் மகா திருட்டுப்பயல் என்று பொய்யன் சொன்னார். இவனைக் கழுவில் ஏற்றுவதுகூடப் பற்றாது என்று நிஷ்டூரன் சொன்னார். இவனை நமது நடுவில் இராதபடிக்கு நிர்மூலம்பண்ணவேண்டியது என்று ஜோதிப்பகை என்பவர் சொன்னார். இந்த உலகம் முழுவதையும் எனக்குத் தந்துவிட்டபோதிலும் அவன் சங்காத்தம் செய்யமாட்டேன். ஆகையால் அவனுக்கு மரணாக்கினைத் தீர்ப்பிடுவோமாக என்று தீராப்பகை விளம்பினார்.
ஜூரிமாருடைய தீர்மானத்தின்படியே தீர்ப்பும் பிறந்தது. அந்தத் தீர்ப்பாவது: “இவனை இப்பொழுதிருக்கிற இடத்திலிருந்து இவன் புறப்பட்டு வந்த இடத்துக்குக் கொண்டுபோய், அவ்விடத்திலே தங்களால் செய்யக்கூடிய குரூரமான மரணாக்கினையை அவனுக்கு செய்யவேண்டியது” என்பதே.
அவர்கள் தங்கள் நியாயப்பிரமாணத்தின்படி அவனை வெளியே கொண்டுவந்த பிற்பாடு முதலாவது வாரால் அடித்தார்கள். அப்புறம் அவனைக் குட்டினார்கள். பின்பு கத்திகளால் அவன் சதையில் குத்தினார்கள். அப்பால் அவன்மேல் கல்லெறிந்தார்கள். அதன்பின்பு தங்கள் ஈட்டிகளால் அவனைக்குத்தினார்கள். கடைசியாக கட்டைகளை அடுக்கி அதின்மேல் அவனைக் கட்டி வைத்து அக்கினியைக் கொளுத்தி சாம்பலாக்கினார்கள். இவ்வண்ணமாய் உண்மையின் சமாசாரம் முடிந்தது. 11
அப்புறம் நான் உண்மையைக் கொலை செய்த ஜனக்கூட்டத்தின் பின்னே ஒரு ரதமும் இரண்டு குதிரைகளும் அவனுக்காக காத்துக் கொண்டு நிற்கக் கண்டேன். சத்துருக்கள் அவனுக்குச் செய்யவேண்டிய ஆக்கினை அனைத்தும் முடிந்தவுடனே, அவன் அதின்மேல் ஏற்றிக்கொள்ளப்பட்டு உன்னத நகரத்தின் வாசலுக்கு நேர் வழியாக எக்காள சத்தத்தோடு மேகங்களுக்கு ஊடே கொண்டு போகப் பட்டான். கிறிஸ்தியானோ மறுபடியும் சிலகாலம் காவலில் அடைக்கப்பட்டிருந்தான். ஆனால் எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிற தேவன் துஷ்டர்களின் நிஷ்டூரங்களையும் தமது கையின்கீழ் அடக்கிக்கொண்டு தமது கிரியையை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் கிறிஸ்தியான் தெய்வாதீனமாய் எப்படியோ தப்பிப் பிழைத்துத் தன் வழியே நடந்து பிராயணம் போனான்.
அவன் தன் வழியே போகப்போக ஆனந்த பரவசங்கொண்டு:-
உண்மை என்னும் வீரனே நீ
வெற்றி கொண்டாய் ஜெயம்பாடி
துதி கீதம் முழக்குவாய் – அல்லேலூயா
பிதாமுகம் தரிசித்தாய்
தூதருடன் கூடிக்கொண்டாய்
துதி கீதம் பாடுகிறாய் – அல்லேலூயா
பாவிகள்தான் பாதாளத்தில்
புலம்பியே அழுகையில்
பரிசுத்தர் பாடுகிறார் – அல்லேலூயா
உன்னைக் கொன்றுபோட்டாலுமே
இன்னும் உயிர் உனக்குண்டே
துதி கீதம் முழக்குவாய் – அல்லேலூயா
என்று பாடிக்கொண்டே போனான்.
இப்பொழுது நான் என் சொப்பனத்திலே கிறிஸ்தியான் தனிமையாய் அல்ல திடநம்பிக்கை 1 என்னும் ஒரு தோழனோடு பயணம்பண்ணுகிறதைக் கண்டேன். மாயச்சந்தையின் குடிகளில் ஒருவனாகிய இவன், கிறிஸ்தியானும், உண்மையும் மாயாபுரியில் மானபங்கப்பட்டபோது பேசின சாந்தத்தையும், காட்டின சகிப்பையும் கவனித்துக் கிறிஸ்தியானுடன் சேர்ந்து பயணம் செய்யும்படி தீர்மானித்து உடன்படிக்கை பண்ணிக்கொண்டவனாய் இருந்தான். இவ்விதமாக ஒருவன் சத்தியத்திற்கு சாட்சியாக மரித்தான். வேறொருவன் கிறிஸ்தியானுக்கு தோழனாகி மோட்ச பிரயாணம் செய்யும்படிக்கு அவனுடைய சாம்பலில் இருந்து எழுந்தருளி ஆகிறான். தன்னையல்லாமல் இன்னும் அனந்தம் பேர் மாயச்சந்தையில் இருந்து அவர்களுக்கு பின்னாலே வரும்படி ஆசையாய் இருக்கிறதாகவும் திடநம்பிக்கை கிறிஸ்தியானிடம் சொன்னான்.
1. மாயச்சந்தை: இது உலகத்தையும், அதின் பலவித ஆசைகளையும், இன்பங்களையும் குறிக்கிறது. இவ்வுலகத்திலுள்ளவைகளெல்லாம் வெறுமையாயும், ஆத்துமாவை திருப்தி செய்ய மாட்டாததாயும் இருக்கிறபடியால், இது மாயச்சந்தை என்று அழைக்கப்படுகிறது. என்றாலும், உலக இன்பங்கள், ஐசுவரியம், கனம் இவற்றின்மேல் மனுஷருக்கு இருக்கிற கட்டுக்கடங்கா ஆசை சந்தைச் சரக்கு வியாபாரத்துக்கு ஒப்பாயிருக்கிறது.
2. பிரித்தானியா தெரு: இது வெவ்வேறு தேசங்களைக் காட்டுகிறது.
3. ரோமாபுரிச் சரக்கு: இது ரோமான் மார்க்கத்தைக் குறிக்கிறது. சுமார் முந்நூறு வருஷங்களுங்களுக்கு முன்னே ஆங்கிலேயரில் அநேகர் ரோமான் கத்தோலிக்க சபையாராய் இருந்தார்கள். இப்பொழுது அந்த ரோமான் கத்தோலிக்கரில் அதிகமான பேர் புராட்டஸ்டெண்ட் மார்க்கத்தினராக இருக்கிறார்கள்.
4. இது கிறிஸ்து சாத்தானால் சோதிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
5. மெய் விசுவாசிகள் தேவனுடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளப் பிரயாசப்படுகிற பொழுது உலகத்தார் அவர்கள் தங்களைப்போல நடவாததினாலே அவர்களைப் பார்த்து நகைக்கவும், நிந்திக்கவும் இடம் ஆவார்கள்.
6. நன்மை வெறுப்போன் என்பது, தேவனுக்குப்பிரியமில்லாததும், நன்மைக்கு விரோதமானதுமே துன்பத்துக்கு ஆரம்பம் என்பதைக் காட்டுகிறது.
7. வன்கண்ணன்: பொறாமையே துன்பப்படுதலுக்கு ஒரு காரணம். இயேசு பிலாத்துவின் முன் குற்றஞ் சாட்டப்பட்டு நிற்கையில் அவன் இதின் முகாந்தரம் பொறாமையே என்று அறிந்திருந்தான் (மத்தேயு 27 : 18 )
8. அவபக்தி: இது புறம்பான சடங்குகளிலே நம்பிக்கையை வைத்து அதின் போதாமையைப் பற்றிப் பேசுகிறவர்கள் மேல் தீரா விரோதம் உடையவர்களாய் இருக்கிறதை உணர்த்துகிறது.
9. இச்சகன்: மெய் தேவ பக்தியில்லாத அதிகாரிகளிடத்தில் விசுவாசிகளைத் தூஷித்துப்பேசி அவர்கள் தயவை சம்பாதித்துக்கொள்ளும்படி முயற்சிக்கின்றவர்களை இது குறிப்பிடுகின்றது.
10. ஜூரிமார் பேர்: நல்லோரைத் துன்பப்படுத்தும்படி பொல்லாதவர்களை ஏவி நடத்துகிற துர்க்குணங்களைக் காட்டுகிறது.
11. முந்தின காலங்களில் கிறிஸ்து மார்க்கத்தைப் பற்றிக்கொண்டதின் நிமித்தம் எண்ணிறந்தவர்கள் கொலை செய்யப்பட்டபோதினும், இப்பொழுது அந்தப்படி இந்த தேசத்தில் நடக்க இடம் இல்லை. என்றாலும் சுவிசேஷத்தின் நிமித்தம் சிலர் தகப்பனையும், தாயையும், வீட்டையும், சிநேகிதரையும் விட்டுவிட வேண்டியதாய் இருக்கிறது. ஏதாவதொருவிதமான துன்பத்தை எல்லாரும் எதிர்கொள்ள வேண்டியதாகிறது.
12. திடநம்பிக்கை என்பது பழைய கிறிஸ்தவர்கள் பூரண நம்பிக்கை கொள்ளும்படியாக, கிறிஸ்து மார்க்கத்தின் வழிகளில் நடந்துவருகிற புதுக் கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது.