பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்
அவன் அண்ணாந்து பார்க்கவே சற்று அப்பால் மா உயரமும் விநோதமுமாய் கட்டப்பட்டிருந்த ஒரு அரண்மனை காணப்பட்டது, அதற்கு சிங்கார மாளிகை1 என்று பெயர். (வெளி 3 : 2, 1 தெசலோ 5 : 7, 8.) அதைக் கண்டவுடனே கிறிஸ்தியான், இங்கே சேர்ந்தாவது இராத்தங்கலாம் என்று கடுக நடந்து போகிறதை நான் என் சொப்பனத்தில் கண்டேன். சற்று நேரத்தில் மகா இடுக்கமான ஒரு வழியில் அவன் நடக்கவேண்டியதாய் இருந்தது; அப்படிப்பட்ட வழி ஒரு கூப்பிடு தூரத்தில் இருக்கலாம். அங்கே அரண்மனை வாசற்காப்போனுடைய குடிசை இருந்தது. அந்த இடுக்கு வழியில் அவன் கூர்மையாகப் பார்த்து நடந்து போகவே வழியில் இரண்டு சிங்கங்கள்2 படுத்திருக்கக் கண்டான்; ஆகா, அச்சனும், சந்தேகியும் பார்த்து பயந்து திரும்பிவிட்ட இடம் இதுதானாக்கும் என்று எண்ணிக் கொண்டான். அந்தச் சிங்கங்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தன, அந்தச் சங்கிலிகளை கிறிஸ்தி யான் காணவில்லை. சிங்கங்களைக் கண்ட உடனே இவனும் அவர்களைப் போலத் திரும்பிவிடலாமோ என்று யோசித்தான்; ஏனெனில் இனிமேல் சாவே அல்லாமல் ஜீவன் ஏது என்று அவன் மனதில் தோன்றிற்று. கிறிஸ்தியான் பின் வாங்க யோசனையாய் இருப்பதை விழிப்பாளன்3 என்கிற பெயரை உடைய வாசல் காக்கிறவன் கண்டு, நீ அவ்வளவு தெம்மாடியா? (மாற்கு 4 : 40) இந்தச் சிங்கங்களுக்கு சங்கிலிகள் மாட்டப் பட்டிருக்கின்றன; இவ்விடத்தில் வருகிறவர் களிடத்தில் விசுவாசம் கொஞ்சமாவது உண்டோ, முற்றிலும் இல்லையோ என்று கண்டறிந்து கொள்ளும்படி இது சோதனைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. நீ அங்கும் இங்கும் விலகாமல் நடுமத்தியில் நடந்து வந்தால் யாதொரு சேதமும் உனக்கு வராது என்று சொன்னான்.
அவன் தான் எச்சரிக்கப்பட்டபடியே கவனமாய் நடந்து போனான். சிங்கங்கள் அவனைக் கண்டு கர்ச்சித்ததே அல்லாமல் வேறொரு சேதமும் செய்ய இடம் இருந்ததில்லை. சிங்கங்களைக் கடந்த உடனே அவன் ஆனந்தத்தால் கைதட்டி, பிழைத்தேன், பிழைத்தேன் என்று சொல்லிக் காவல் சேவகனண்டை வந்து சேர்ந்தான். சேர்ந்தவுடன் கிறிஸ்தியான்: ஐயா, இது என்ன மாளிகை? இங்கே நான் இராத்தங்கலாமா? என்று கேட்டான். அதற்குச் சேவகன்: இம்மலையின் அதிபதி சீயோனுக்குப் போகும் பிரயாணிகளுடைய இளைப்பாறுதலுக்காகவே இதைக் கட்டுவித்தார் என்று சொன்ன தோடு, நீ எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்றும் கேட்டான்.
கிறி: நான் நாசபுரியில் இருந்து புறப்பட்டு சீயோன்மலைக்குப் போகிறேன்; பொழுதடைந்து போனதால் இன்றிரவு இவ்விடத்தில் இராத்தங்கலாமோ என்றுதான் கேட்கிறேன்.
வாசற்காக்கும் சேவகன்: உன் பேர் என்ன?
கிறி: என் பேர் இப்போது கிறிஸ்தியான்; ஆனால் என் பழைய பேர் பக்தியற்றோன். நான் யாப்பேத்தின் சந்ததியில் பிறந்தவன். அந்த யாப்பேத்தை தேவன் சேமுடைய கூடாரங்களில் போய்க் குடியேறும் படி ஏவிவிடுகிறவராய் இருக்கிறார். (ஆதியாகமம் 9 : 27)
வாச-சேவ: இப்படி இராவிருட்டில் வந்த காரணம் என்ன? பொழுது அஸ்தமித்துப் போயிற்றே.
கிறி: பொழுது அஸ்தமிக்கிறதற்கு வெகு நேரத்துக்கு முன்னே வந்துவிடுவேன்; ஆனால் நான் ஒரு நீசன்தான். மலைக்கு அந்தப் பக்கத்தில் இருக்கிறதே, அந்த நந்தவனத்தில் தூங்கிவிட்டேன். அப்படியும் முந்தி வந்திருப்பேன். ஆனால் நான் தூங்கினபோது என் சாட்சிப்பத்திரத்தை இழந்துவிட்டு உச்சிமலைமட்டும் வந்துவிட்டேன். அங்கே வந்து பத்திரத்தை தேடினேன், காணோம். உடனே நான் மறுபடியும் திரும்பி, தூங்கின நந்தவனமட்டும் ஓடி, பத்திரத்தைக் கண்டெடுத்துக் கொண்டு வருகிறேன்; அதனாலேதான் இப்படி தாமதமாய் வந்து சேரும்படி ஆயிற்று.
வாச-சேவ: நல்லது, நான் இந்த மாளிகையில் இருக்கும் கன்னியாப் பெண்களில் ஒருத்தியை அழைப்பிக்கின்றேன்; அவள் வந்து உன்னோடே பேசுவாள்; உன் பேச்சு அவள் மனதுக்குச் சரியாய் இருந்தால், இந்த மாளிகையின் சட்டப்படி, மற்றக் கன்னியாப் பெண்களுடன் உன்னைக் குறித்து சிபாரிசுபண்ணி, உனக்காக வேண்டிய உபசரணைகளைச் செய்வார்கள் என்று சொல்லி, விழிப்பாளன் ஒரு மணியை அடித்தான். மணிச்சத்தம் கேட்டவுடனே யூகி4 என்கின்ற நாமதேயமுடைய சிறப்பும் சௌந்தரியமுமுள்ள ஒரு மாது புறப்பட்டு வாசலண்டை வந்து ஏது விசேஷம் என்று கேட்டாள்.
வாச-சேவ: அதற்கு வாசல் சேவகன் சொல்லுகிறான்: இந்த ஏழை மனுஷன் நாசபுரியிலிருந்து புறப்பட்டு சீயோன் மலைக்குப் போகிறானாம்; பிரயாணத்தால் இளைப்பாய் இருக்கிறதினாலும், நேரம் இருட்டிப் போனபடியினாலும் இவ்விடத்தில் இராத்தங்கி விட்டுப் போகலாமா ஐயா, என்று என்னைக் கேட்டான். நான் இந்த அரண்மனைச் சட்டத்தின்படி உன்னைக் கூப்பிடுவேன், அந்த அம்மாள் தனக்கு நலமாய்த் தோன்றுகிறபடி உன்னை நடத்துவாள் என்று சொல்லி மணி அடித்தேன் என்று சொன்னான்.
அப்பொழுது யூகி மாது நீ எவ்விடத்தான் என்றும், எங்கே போகிறாய் என்றும் கேட்டாள். அதற்கு அவன் தான் சொல்ல வேண்டியதைச் சொன்னான். அப்புறம் அவள் நீ வழியில் கண்ட காட்சிகளும், பட்ட பாடுகளும் என்ன என்று கேட்டாள்; அதற்கும் உத்தரவு சொன்னான். கடைசியாக உன் பேர் என்ன என்று கேட்டாள். அதற்கு அவன்: என் பேர் கிறிஸ்தியான்; இங்கே இராத்தங்கி இளைப்பாறிக் கொள்ளும்படியாக எனக்கு மகா ஆவல் இருக்கிறது; சீயோனின் பிரயாணிகள்இளைப்பாறிக்கொள்ளும்படி இந்த மாளிகை சீயோன் மலைநாதரால் கட்டப்பட்டிருக்கிறதென்று கேள்விப்பட்டேன் என்று சொன்னான். இப்படிச் சொன்னவுடனே அவன் முகத்தில் புன்னகை தோன்றினாலும், கண்களில் கண்ணீர் ததும்பிற்று. சற்று நேரமானபின், நல்லது நான் என் தோழிப் பெண்களில் இரண்டு மூன்று பேரைக் கூட்டி வருகிறேன் என்று சொல்லி வீட்டுக்குள்ளே போய், விவேகி! பயபக்தி! நேசமணி! என்று கூப்பிட்டாள். அந்தச் சத்தம் கேட்டு மணிமாதுகள் மூவரும் வாசலண்டை வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் மூவரும் கிறிஸ்தியா னுடன் சற்று நேரம் சம்பாஷித்த பின்பு,5 உள்ளே வா என்று அழைத்துக் கொண்டு போனார்கள். அந்த மாளிகைக்குள் இருந்த கன்னிமாடத்து முற்றத்தில் கிறிஸ்தியான் போனவுடன் அங்கிருந்த கன்னியாஸ்திரீகள் எல்லாரும் அவனைச் சந்தித்து: “கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவனே, உள்ளே வா” என்று வாழ்த்தி, இந்த மலையின் அதிபதி உன்னைப் போலொத்த பிரயாணிகளுடைய நன்மைக்கென்றே இந்த அரண்மனையைக் கட்டுவித்தார் என்று சொன்னார்கள். கிறிஸ்தியான் அதைக் கேட்டு தலை வணங்கிக் கொண்டான். அப்புறம் அவர்களைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் போய் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்தான்; உடனே தாகத்துக்குக் கொடுத்தார்கள். அவன் தாகம் தீர்ந்த பின்பு, இராச் சாப்பாடு தயாராகும் மட்டும் காலம் வீணாய் கழியாதபடி நம்மில் யாராவது பிரயோஜனமான சில விஷயங்களைப்பற்றி இவனோடு பேசிக்கொண்டிருப்பது நல்லதல்லவா என்று ஆலோசித்து, விவேகி, பயபக்தி, நேசமணி ஆகிய மூவரும் தீர்மானித்தார்கள். அப்படியே மேற் சொல்லிய மூன்று மாதரும் சம்பாஷிக்கத் தொடங்கினார்கள்.
பயபக்தி: கிறிஸ்தியான் என்னும் சிநேகிதனே! இந்த நடு இராத்திரியில் உனக்கு எங்கள் வீட்டில் மிகுந்த அன்போடு இடங் கொடுத்திருக்கிறோமே, உன்னுடைய நீண்ட பிரயாண விசேஷங் களைச் சொல்லி எங்களை எழுப்புதல் அடையச் செய்தால் நாங்கள் மிகவும் சந்தோசப்படுவோம் என்றாள்.
கிறி: நான் பட்ட பாடுகளை எல்லாம் மெத்த சந்தோஷத்தோடு சொல்லுகிறேன்; நீங்கள் கேட்கிறதே பெரிய காரியம்.
பயபக்தி: நீ தேசம்விட்டுத் தேசம் பயணப்பட்ட காரணம் என்ன?
கிறி: என் காதில் தொனித்த பயங்கரமான ஒரு சப்தமே என்னைப் பரதேசியைப்போல் பயணம் புறப்படச் செய்தது. நான் என் பிறந்த ஊரில் இருப்பது மெய்யானால் அழிவு என்மேல் வரும் என்றும், அதைத் தடுக்க என்னால் இயலாதென்றும் அச்சத்தம் தொனித்தது.
பயபக்தி: ஊரை விட்டது சரிதான்; இந்த வழியை எப்படி கண்டு பிடித்தாய்?
கிறி: அது தேவச்செயல் என்றுதான் சொல்ல வேண்டும். நான் அழிவின் செய்தியைக்கேட்டு மனக்கவலை கொண்டு, எங்கே போக வேண்டும் என்று அறியாதிருந்தேன்; ஒரு நாள் நான் நடுநடுங்கி அழுது கொண்டிருக்கையில் சுவிசேஷகன் என்கிற பேருடைய ஒருவர் தற்செயலாய் என்னண்டை வந்து, திட்டிவாசலின் திசையைக் காட்டி வழி திருப்பிவிட்டார். மற்றப்படி எனக்கு வழி தெரியாது. நான் திட்டிவாசலைச் சேர்ந்தது முதல் இந்தப் பாதையாய்க் கடந்து, இன்றிரவு உங்கள் நடுவில் சந்தோசமாய் தங்கி இளைப்பாறுகிறேன்.
பயபக்தி: நீ வியாக்கியானி வீட்டு வழியாக வரவில்லையா?
கிறி: ஆம், அம்மா! அந்த வழியாய்த்தான் நான் வந்தேன். அங்கே கண்ட காட்சிகளின் மகத்துவங்களை நான் என்ன சொல்ல! என் ஜீவகாலம் மட்டும் நான் அந்தக் காட்சிகளை மறக்கக்கூடுமா? அப்பேர்ப்பட்ட காட்சிகளெல்லாம் கண்டேன். விசேஷமாக, கிறிஸ்துநாதர் பிசாசின் அந்தகாரங்களோடு தமது கிருபையின் கிரியையை நடத்திக் கொண்டு வருகிறார் என்பதைக் காட்டும் காட்சியும், பாவ விலங்கில் அடைபட்டு தேவனுடைய இரக்கத்தைப் பற்றி நம்பிக்கையற்றுப்போன இருப்புக்கூட்டுக் காட்சியும், நடுத் தீர்வை நாள் வந்துவிட்டது போலக் கனாக் கண்டவனுடைய காட்சியும் ஆகிய இந்த மூன்றும் என் மனதிலிருந்து ஒரு நாளும் மாறிப் போகமாட்டாது.
பயபக்தி: அவன் கண்ட சொப்பனத்தைச் சொல்லக் கேட் டாயோ?
கிறி: அவன் தன் சொப்பனத்தைச் சொல்லச் சொல்லக் காது கொடுத்துக் கேட்டேன். ஆகா! என்ன பயங்கரமான சொப்பனம் ! அதைக் கேட்க கேட்க என் இருதயம் நடுக்கம் கொண்டது, என்றாலும் அதைக் கேட்டதற்காகச் சந்தோசப்படுகிறேன்.
பயபக்தி: வியாக்கியானி வீட்டில் கண்டவை இவ்வளவுதானா?
கிறி: இவ்வளவா? அவர் என்னைக்கூட்டிக் கொண்டு ஒரு சிங்காரமான மாளிகையண்டை போய் அதை எனக்குக் காட்டினார்; அதிலுள்ளவர்கள் பொற்சரிகை உடுப்பு உடுத்தினவர்களாய் இலங்கி னார்கள். ஒரு பராக்கிரமன் அதினுள் பிரவேசிக்கும்படி புறப்பட்டு, வழியில் ஆயுதபாணிகளாய் நின்று தடுத்தவர்களை எல்லாம் கண்ட துண்டமாக்கிப் போட்டுக் கொண்டு உள்ளே சென்றான். உடனே அங்கே இருந்தவர்கள் உள்ளே வரவும் நித்திய மகிமையைப் பெற்றுக் கொள்ளவும் அவனை வாழ்த்தினார்கள். அந்தக் காட்சிகள் எல்லாம் என் மனதுக்கு அவ்வளவு சந்தோஷத்தை தந்ததால், வியாக்கியானி வீட்டிலேயே இன்னும் ஒரு வருஷம் இருக்கலாமோ என்று முதலாய் எண்ணம் வந்தது. ஆனால் நான் பின்னும் பிரயாணம் பண்ண வேண்டியதிருந்ததால் அந்த ஆசையை விட்டுவிட்டேன்.
பயபக்தி: வேறு ஏதாவது காட்சியை வழியில் கண்டதுண்டா?
கிறி: வேறு காட்சியா? அங்கிருந்து சற்று தூரம் போன உடனே இரத்த சோரையாய் ஒரு மரத்தில் தொங்கும் ஆளைக் கண்டேன். அவரைப் பார்த்ததுதான் தோஷம், உடனே என் முதுகில் இருந்த பாரச்சுமை விழுந்துவிட்டது; ஏனெனில் நான் ஒரு பாரச்சுமையால் வெகு காலம் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்; அந்த மரத்தடியில் அது விழுந்து போயிற்று. இது எனக்கு மகா ஆச்சரியமாய் இருந்தது. இப்படிப்பட்ட அதிசயத்தை நான் என் ஜீவகாலத்தில் கண்டதே இல்லை. அந்த அதிசயத்தால் நான் பிரமை கொண்டு அண்ணாந்து பார்த்தேன். அண்ணாந்து பாராமலிருக்கத்தான் எனக்கு மனம் இருக்குமா? அண்ணாந்து பார்க்கவே, ஒளிமய ரூபிகள் மூவர் என்னிடத்தில் வந்தார்கள். அவர்களில் ஒருவர், என் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சாட்சி பகர்ந்தார். வேறொருவர், என்னுடைய பழைய கந்தைகளை என்னைவிட்டு எடுத்துப்போட்டு, இதோ நான் அணிந்திருக்கும், பொற்சரிகை ஓரமுள்ள இந்த அங்கியைத் தந்தார். இன்னொருவர், என் நெற்றியில் நீங்கள் பார்க்கிற இந்த அடையாளத்iப் போட்டு, முத்திரை பதிக்கப்பட்ட இந்தச் சுருளையும் தந்தார் என்று சொல்லி, மடியில் கைபோட்டு அந்தச் சுருளையும் எடுத்துக் காட்டினான்.
பயபக்தி: இம்மட்டும் நீ சொன்னவைகளை அல்லாமல் இன்னும் அநேக காட்சிகளையும் கண்டிருப்பாய்அல்லவா?
கிறி: நான் கண்டவைகளில் முதல்தரமான காட்சிகள் இவைகள்தான்; ஆனால் வேறு சில விஷயங்களையும் கண்டதுண்டு. நான் வருகிற வழியில் பேதை, சோம்பன், துணிகரன் என்னும் மூன்று பேர் சங்கிலியும் காலுமாய் படுத்துத் தூங்குகிறதைக் கண்டேன்; அம்மணி! அவர்களை எழுப்பிவிட என்னால் ஆகுமா, நீயே சொல்லு. அப்புறம் வேஷக்காரன், மாயக்காரன் என்னும் இருவர் சுவர் ஏறிக் குதித்து என்னுடன் வழியில் கூடி, நாங்களும் சீயோனுக்குத்தான் போகிறோம் என்று சொன்னார்கள். கடைசியாக அவர்கள் போன வழியும் தெரியாது, தொலைந்த வகையும் தெரியாது; நீங்கள் போகும் வழி சரியல்ல என்று நான்அவர்களுக்குச் சொன்னதுண்டு. அவர்கள் என் பேச்சை நம்புவார்களா? அதற்கப்பால் இந்த மலை ஏற நான் பட்டபாடுதான் என்ன? மலை தாண்டி இறங்கும்போது சிங்கங்களைக் கண்டு கலங்கின கலக்கத்துக்கு ஒரு கணக்குண்டா? வாசல் சேவக னாகிய விழிப்பாளன் இருக்கிறானே! அந்தப் புண்ணியவாளன் மாத்திரம் சத்தங்காட்டி, எனக்குத் தைரியம் சொல்லாவிட்டால், இதற்குள்ளாகத் திரும்பி வெகு தூரம் போயிருப்பேன். இப்போது தேவன் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்ததற்காகவும், நீங்கள் என்னைப் பட்சமாய் ஏற்றுக்கொண்டு உபசரிக்கிறதற்காகவும் தேவனை ஸ்தோத்திரிக்கின்றேன் என்றான்.
பயபக்தி: மாது இவ்வளவு நேரம் சம்பாஷித்த பின்பு, விவேகி மாது கிறிஸ்தியானுடன் சில காரியங்களைப் பேச ஆசைப்பட்டாள்.
விவேகி: ஒரு வேளா வேளை நீ உன் பிறந்த ஊரை நினைப்பாயா?
கிறி: நான் புறப்பட்ட ஊரின் நினைவு சில வேளை வரும். அந்த நினைவு வந்தவுடனே என் மனம் குன்றி, மூஞ்சி செத்துப்போகும். அந்த ஊருக்கு மறுபடியும் ஒரு தரம் போக வேண்டும் என்கின்ற நாட்டம் இருந்தால் அப்போதே திரும்பிப்போய் இருப்பேனே! இப்போதோ நான் ஒரு நல்ல தேசத்தையும், ஒரு பரம நாட்டையும் அல்லவோ நாடுகிறேன்! (எபிரேயர் 11 : 15, 16)
விவேகி: உன் பழைய வாடிக்கைகளில் சிலவற்றையும் நீ கூடவே கொண்டு வந்திருக்கின்றாய் அல்லவா?
கிறி: கொண்டு வந்தது உள்ளதுதான். ஆனால் அப்படிக் கொண்டு வருகிறது என் மனதுக்குப் பிரியமாய் இருக்கவில்லை. என் தேசத்தார் அனைவரும், நானும் கூடப் பிரியமாய் வளர்த்துவந்த மாமிச இச்சை என்னோடு வந்தது நிஜம்தான்; இப்பொழுது அவைகள் எல்லாம் எனக்கு மனஸ்தாபமாய் இருக்கின்றன. என் வாழ்வுக்கேற்ற விஷயங்களை நானே தெரிந்து கொள்ளுகிறதாய் இருந்தால், அந்தப் பழையவைகளில் ஒன்றையும் வேண்டும் என்று விரும்பவேமாட்டேன். நன்மையானதைச் செய்ய வேண்டும் என்கிற விருப்பம் எனக்கு இருக்கும்பொழுதே தீமையானதைச் செய்யும் விருப்பமும் இருக்கிற தென்று காண்கின்றேன். (ரோமர் 7 : 15 – 21)
விவேகி: ஒரு வேளையில் உன் மனதைக் கலங்கச் செய்யும் காரியங்கள் இன்னொரு வேளையில் கடந்து போனது போலக் காண்கின்றாயா?
கிறி: ஆம், ஆனால் அடிக்கடி அல்ல; எப்போதாவது ஒரு சமயத்தில் அப்படிக் காண்கின்றேன்; அப்படி உணருகிற நேரம் எனக்குப் பொன் போல் அருமையாயிருக்கும் காலம் என்று சொல்ல வேண்டும்.
விவேகி: எப்போதாவது ஒரு சமயாசமயங்களில் உன் மனக்கவலை மாறிப்போனது போலத் தோன்றுகிறதாகச் சொன்னாயே; அதற்கு ஏதாவது முகாந்தரங்கள் உண்டா?
கிறி: உண்டு; நான் சிலுவையண்டை பார்த்தவைகளை நினைவு கூருகையில் அது விலகும்; நான் என் சரிகை ஓரமுள்ள அங்கியை கூர்மையாய் நோக்குகையிலும் அது விலகும்; என் மடியில் இருக்கும் இந்தச் சுருளை எடுத்துப் பார்த்தாலும் விலகும். நான் எந்த மாட்சிமை யான இடத்தை நோக்கிப்பயணம் செய்கிறேன் என்று சற்று ஆழமாய் யோசித்தாலும் உடனே அது விலகுகிறது.
விவேகி: சீயோன் மேல் உனக்கு ஏன் நாட்டம் இருக்கிறது?
கிறி: நாட்டம் இராதா? எனக்காக சிலுவையில் தொங்கினவர் ஜீவனோடிருக்கிறாரே! இந்த என் கண்களால் நான் அவரைக் காண்பேனே! இந்த நாளில் என் மனதைக் கலக்குகிறவைகளெல்லாம் ஓய்ந்து அங்கே சுகமாய் இருப்பேன்; அங்கே சாவே இல்லையாம். (ஏசாயா 25 : 8, வெளி 21 : 4) என் மனதுக்கேற்ற சிநேகிதரோடு கூடி உறவாடுவேன். அம்மணி! சத்தியத்தைச் சொல்லுகிறேன் கேள். அவரால் என் பாவ பாரச் சுமை நீங்கிவிட்டதால், அவர்மேல் எனக்கிருக்கும் நேசம் கொஞ்சம் அல்ல; என் உள் நோயை இட்டு மெத்தவும் இளைத்துப் போகிறேன்; சீயோனுக்கு நான் போனால் ஒரு நாளும் சாகாமல் இருந்து, ஓயாமல் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று பாடிக்கொண்டிருக்கும் கூட்டத்தோடு சேர்ந்து வாழுவேன் என்றான்.
நேசமணி: விவேகி மாது இம்மட்டும் சம்பாஷித்த பின்பு, நேசமணி சம்பாஷிக்கத் தொடங்கி: உனக்குச் சம்சாரம் உண்டா? நீ கலியாணம் செய்திருக்கிறாயா?6 என்று கேட்டாள்.
கிறி: எனக்கு ஒரு பெண்சாதியும், நான்கு பிள்ளைகளும் உண்டு.
நேசமணி: உண்டா? பின்னை நீ ஏன் அவர்களை உன்னோடு கூட்டிக் கொண்டு வரவில்லை?
கிறி: இப்படிக் கேட்டவுடனே கிறிஸ்தியான் அழுதுவிட்டான். அப்புறம் சொல்லுகிறான்: அவர்கள் கூடி வந்திருந்தால் எனக்கு எவ்வளவோ சந்தோசமாய் இருந்திருக்கும்! நான் மோட்ச பிரயாணம் செய்வது அவர்களுக்கு முற்றிலும் விரோதமாய் இருந்தது.
நேசமணி: நீ அவர்களோடே பேசி, இப்படி நீங்கள் என்னோடு கூட வராவிட்டால் இன்ன மோசம் வரும் என்று அவர்களுக்கு உணர்த்திக் காட்ட வேண்டியதாய் இருந்ததல்லவா?
கிறி: அப்படியே சொன்னேன்; தேவன் இந்தப் பட்டணத்தை அழிக்கும்படி தீர்மானித்திருக்கிறதைப் பற்றி எனக்கு வெளிப்படுத்தி யிருக்கிறார், ஆகையால் என்னோடு சீயோனுக்கு பயணப்படுங்கள் என்று அடிக்கடிச் சொன்னேன். கிழவன் சொல் கின்னரத்துக் கிசையுமா? என்கிறபடி, என் பேச்சு அவர்கள் மனதுக்கு ஏற்கவில்லை. என்னைப் பயித்தியக்காரன் என்றே தீர்மானித்துப் போட்டார்கள். (ஆதியாகமம் 19 : 14) அப்புறம் நான் என்ன செய்ய?
நேசமணி: நீ அவர்களுக்குச் சொன்ன ஆலோசனையை தேவன் பலிக்கச்செய்யும்படி அவரை நோக்கி மன்றாடினதுண்டா?
கிறி: ஆம், மிகுந்த கனிவோடு ஜெபஞ் செய்ததுண்டு; ஏனெனில் என் மனைவியும் மக்களும் என்மேல் மட்டற்ற அன்பு பாரட்டி வந்தார்கள் என்பதை நீ நினைத்துக் கொள்ள வேண்டியது.
நேசமணி: சரிதான், ஆனால் உன் ஊர் நாசமாவதைப் பற்றிய அறிவு உனக்குத் தெளிவாய்த் தெரிந்ததுபோல் இருக்கிறதே; அந்த அழிவைப்பற்றி உன் மனதில் இருக்கிற துக்கத்தையும், பயத்தையும் எப்போதாவது அவர்களுக்குச் சொன்னாயா?
கிறி: ஒரு தரமா? இரண்டு தரமா? நானும் சொல்லிச் சொல்லி, என் மண்டையும் நொந்து, தொண்டையும் கம்மிப் போயிற்று. என் முகச் சாயலை அவர்கள் பார்த்தால் தெரியும். என் கண்ணீராவது காட்டும்; அழிவும் நியாயத்தீர்ப்பும் என் தலைமேல் இறங்கினாற் போல நான் நடுக்கங்கொண்டு திரிந்ததினாலே அவர்கள் அறியலாம். நான் எவ்வளவு சொன்னாலும் என்ன? என்னோடு கூடப் புறப்படும்படி அவர்கள் மனதை ஏவுகிறதற்கு இவை எல்லாம் போதுமானதாய் இருக்கவில்லை.
நேசமணி: அவர்கள் கூட வராததற்கு என்ன முகாந்தரம் சொல்லக்கூடும்?
கிறி: முகாந்தரமா? என் மனைவி உலகத்தை விடுகிறதற்குப் பயந்தாள்; என் மக்களோ புத்தியீனமான வாலிப இன்பங்களில் பிரியங் கொண்டிருந்தார்கள்; இப்படி ஒருவருக்கு ஒரு வழி, இன்னொருவருக்கு வேறு நோக்கமாகி, என்னை இப்படித் தனியே பிரயாணம் பண்ணும்படி விட்டுவிட்டார்கள்.
நேசமணி: சரிதான், ஆனால் அவர்களை உன்னோடே வரும்படியாக உன் போதனைகளினால் சொன்னதெல்லாம், அவர்கள் மனதில் பலங்கொள்ளாதபடி உன் துர் நடக்கையால் கெடுத்துப் போட்டாயாக்கும்?
கிறி: என் நடக்கையைக் குறித்து நான் மெச்சிக்கொள்ளக் கூடாதென்பது மெய். அடிக்கடி நான் தீய வழிகளில் விழுவதுண்டு, ஒருவன் தன் வாய்மொழிகளால் வற்புறுத்தி உணர்த்தின சத்தியங்களை, அதற்கு விரோதமான தன் நடக்கையினால் அபத்தமாக்கக்கூடும் என்றும் அறிவேன். என்றாலும் நான் ஒன்று சொல்லக்கூடும்; பரதேச பிரயாணம் போகும் ஆசையைக் கெடுத்துப் போடுவதற்கு ஏதுவான எந்த தகாத காரியத்தையும் செய்து, அவர்களுக்கு இடறலாய் இருந்ததில்லை என்பது நிஜம். இந்தக் காரியத்துக்காக நான் எவ்வளவோ கண்டிப்பாய் இருந்தேன் என்று அவர்களே என்னைக் குறித்து சாட்சி சொல்லக் கூடும். அவர்கள் மனதில் தீமை அல்ல என்று காணப்பட்ட கிரியைகளை முதலாய், அவர்கள் நிமித்தம் நான் செய்யாமல் இருந்தேன் என்றும் அவர்களே அறிக்கைiயிடுவார்கள். அதுவுமன்றி அவர்களுக்குத் தடை உண்டாக என்னிடத்தில் காணப் பட்ட செய்கை ஏதாவது இருக்கும் என்று சொன்னால், அவை பரிசுத்தமுள்ள தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடி பிரயாசப்பட்டதும், என்னுடைய பிறருக்கு எந்த விஷயத்திலும் பொல்லாப்பு செய்யாதபடி நடக்க முயன்றதுமேயன்றி வேறொன்றும் இல்லை என்று நான் சொல்லக்கூடும் என்று எண்ணுகிறேன்.
நேசமணி: மெய்தான்; காயீன் தன் சகோதரனைப் பகைத்தான். (1 யோவான் 3 : 12.) ஏன் பகைத்தான்? “தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரன் கிரியைகள் நீதியுள்ளவைகளுமாய் இருந்ததினாலேதான்” பகைத்தான். உன் மனைவியும் மக்களும் நீ பொல்லாப்பை வெறுத் ததையிட்டு உன்னை வெறுத்து, உன்மேல் கோபமுடையவர்களாய் இருந்தால், அவர்கள் நன்மையை நாடுகிறவர்கள் அல்லவென்று அதினாலே வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள்; நீ இரத்தப் பழியினின்று உன் ஆத்துமாவைத் தப்புவித்துக்கொண்டாய் (எசேக்கியேல் 3 : 19) என்று சொன்னாள்.
இவ்வண்ணமான பல பேச்சுக்களையும் பேசி இராச்சாப்பாடு ஆயத்தம் ஆகுமட்டும் 7 அவர்கள் காலங்கழித்ததை நான் என் சொப்பனத்தில் கண்டேன். சாப்பாடு தயாரானவுடனே பந்தியில் உட்கார்ந்தார்கள். பந்தி மேஜை கொழுத்த பதார்த்தங்களாலும், வடிகட்டித் தெளிவாக்கப்பட்ட திராட்சர சத்தாலும் நிறைந்திருந்தது. போஜன வேளையில் அவர்கள் பேசினதெல்லாம், அந்த மலையின் அதிபதியைக் குறித்த விஷயங்கள்தான். அவர் செய்த பல கிரியைகளும், அந்த கிரியைகளைச் செய்த அவருடைய நோக்கமும், அந்த மாளிகையைக் கட்டின முகாந்தரமும் இன்னதென்று பேசினதுமன்றி, அவரைக்குறித்து அவர்கள் பேசின வார்த்தைகளால் அந்த மலைக்கு எஜமான் மா பராக்கிரம வீரர் என்றும், அவர் தமது வீரத்துவத்தால், மரணத்துக்கு அதிபதியாகிய பெரிய அரக்கனோடு போர்புரிந்து அவனைக் கொன்றார் என்றும், (எபிரேயர் 2 : 14, 15) அந்தக் கடும்போரில் அவர் அடைந்த சங்கடங்களுக்கும், அவருக்குண்டான அபாயங்களுக்கும் கணக் கில்லை என்றும் அறிந்து கொண்டேன். இதினாலே நானும்கூட அவரை அதிகமாய் நேசிக்கும்படி ஏவப்பட்டேன்.
ஏனெனில் அவர்கள் பந்தியில் பேசிக்கொண்டபடிக்கும், நான் நம்புகிறபடிக்கும் அவர் அந்தப் போரில் அதிகமாய் இரத்தம் சிந்தினார் என்று கிறிஸ்தியான் சொன்னான். ஆனால் அவர் பட்ட அவஸ்தை களெல்லாம் இந்த தேசத்தின் மேலுள்ள பூரண அன்பினால் பட்டார் என்கிற செய்தி அவருடைய எல்லாக் கிரியைகளையும் கிருபையின் மகிமையால் அலங்கரித்துச் சிறப்பிக்கிறது. மேலும் அந்த மாளிகை யில் இருந்த சிலர், அந்தப் புண்ணியவான் சிலுவையில் மரணமடைந்த பிற்பாடு அவரைக் கண்டு அவரோடு பேசிக்கொண்டிருந்ததாகவும், நான் ஏழைப் பரதேசிகளையே நேசிக்கிறேன் என்றுஅவர் தமது திருவாயால் சொன்னதை தங்கள் காதாரக் கேட்டதாகவும் சொன்னது மன்றி சூரியன் உதிக்கும் திசை துவக்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் அவரைப்போலொத்த நேசர் அகப்படவேமாட்டார் என்றும் சொன்னார்கள். இப்படி அவர்கள் சொன்னது நிஜம் என்பதைத் திருஷ்டாந்தப்படுத்தும் ஒரு சமாச்சாரமும் சொன்னார்கள்; அதாவது: ஏழைகளுக்கு இந்தச் சகாயத்தை செய்யும்படியாக அவர் தமது மகத்துவங்களை எல்லாம் உரிந்து போட்டாராம். மேலும் அவர் சீயோன் மலையில் தனிமையாக வாசஞ்செய்யமாட்டேன் என்று சொன்னதையும் கேட்டார்களாம். மேலும் இந்த மலையின் அதிபதி யானவர், சுபாவத்தின்படி தரித்திரரும் குப்பைமேட்டில் வசிக்கிறவர் களுமாய் இருந்த அநேக பரதேசிகளை பிரபுக்களாக்கிவிட்டார் என்றும் சொன்னார்கள். (1 சாமுவேல் 2 : 8, சங்கீதம் 113 : 7.)
இப்படிப் பலவாறாக அவர்கள் வெகுநேரமட்டும் சம்பாஷணை செய்து கொண்டிருந்தார்கள். அப்புறம் தேவ பராமரிப்புக்குள் தங்களை ஒப்புவித்துக் கொண்டு அவரவர்மட்டில் இளைப்பாறும்படி எழுந்திருந்தார்கள்.
வந்த பிரயாணிக்கு ஒரு பெரிய மேலறையைக் காட்டினார்கள், அந்த மேலறையின் ஜன்னல் சூரியன் உதிக்கும் திசையில் இருந்தது. அந்த மேல் அறைக்கு சமாதானம்8 என்று பேர் வழங்கப்பட்டது. கிறிஸ்தியான் அதினுள் படுத்திருந்து தூங்கி, கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து பின் வரும் பாட்டைப் பாடினான்:-
நான் இங்கே இருப்பது
இயேசு காட்டும் பட்சமா?
இந்த வீடு கிடைத்தது
இயேசு தந்த தயவா?
நீசப் பரதேசிக்கு
பாவத்தையும் மன்னித்தார்;
மோட்ச பேரானந்த வீட்டிற்கு
என்னையுங் கொண்டு வந்து சேர்த்தார்.
அந்த மாளிகையில் உள்ளவர்கள் எல்லாரும் விழித்தெழுந்த பிற்பாடு வேறு சில சம்பாஷணைகளை செய்தார்கள். அப்புறம் அவ்விடத்து அதிசயங்களை எல்லாம் அவனுக்கு காண்பித்த பின்பு தான், அவன் பயணம் புறப்பட வேண்டும் என்று அவனைக் கேட்டுக் கொண்டார்கள். அதின் பின்பு முதலாவது அந்த அரண்மனையின் புஸ்தகசாலைக்குக் கூட்டிக்கொண்டு போய் வெகு பூர்வமான நாளாகமங்களெல்லாவற்றையும்9 காட்டினார்கள். அந்த ஆகமங்களில் என் சொப்பனத்தில் நான் கண்டதாக ஞாபகம் இருக்கிறபடி அந்த மலையின் ஆண்டவருடைய வமிசவரிசை அட்டவணை இருந்தது. அந்த அட்டவணையிலே மலை அதிபர் நீண்ட ஆயுசுள்ள வருடைய குமாரன் என்றும், அநாதி தலைமுறையாய்த் தோன்றினவர் என்றும் அவர்கள் காட்டினார்கள். மேலும் அதிலே அவருடைய கிரியைகள் விரிவாய் காட்டப்பட்டிருந்ததோடு, அவர் தமது ஊழியத்தில் அமர்த்திக் கொண்ட அநேகருடைய நாமங்களும், வருஷாதி வருஷங்கள் சென்றாலும், பருவ காலங்கள் மாறினாலும், அழியாமலும் மாறாமலும் இருக்கிற வாசஸ்தலங்களில் அவர்களைக் குடியேற்றினதுமான விஷயங்களும் எழுதப்பட்டிருந்தன என்று கண்டேன்.
அப்பால் அவர்கள் மலையதிபரின் தாசர் சிலருடைய மகிமை யான ஊழியங்களில் சிலவற்றை வாசித்தார்கள். அதிலே அவர்கள் எவ்விதமாய் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத் தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், கட்கத்தின் கூருக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலங்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்கள் ஆனார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள் (எபிரேயர் 11 : 13, 34) என்று நன்றாய் விளக்கப்பட்டிருந்தது.
அது முடிந்தபின்பு அந்தப் புஸ்தகசாலையின் வேறெரு இடத்திலிருந்து ஒரு நாளாகம புஸ்தகத்தை எடுத்து வாசித்தார்கள்; அதிலே தங்கள் ஆண்டவரை முன்னொரு காலத்தில் அவமதித்து, அற்பமாய் எண்ணின யாரானாலும் சரி அவர்களையும் அவர் திரும்ப ஏற்றுக்கொண்டு தமது தயவுக்குப் பாத்திரராக்கும்படி பிரியமுடை யவராய் இருக்கிறார் என்கின்ற காரியம் எழுதப்பட்டிருந்தது. இவைகளையல்லாமல், பகைஞரை பயந்து நடுங்கச் செய்கிறதும், பிரயாணிகளுக்கு ஆறுதலை அளித்து அவர்களைப் பிரியப்படுத்தி ஏவுகிறதுமான முற்கால சரித்திரங்களும், பிற்கால நடபடிகளுமாகிய தீர்க்கத்தரிசனங்கள், முன் அடையாளங்கள், அவைகளின் நிறைவேறு தல்கள் முதலியவைகள் அடங்கிய பல சரித்திர ஆகமங்களையும் கிறிஸ்தியானுக்குக் காட்டினார்கள். அவைகளை எல்லாம் அவன் பார்த்தான்.
மறுநாள் அவர்கள் கிறிஸ்தியானை ஆயுதசாலைக்கு கூட்டிக் கொண்டு போய், பிரயாணிகளுக்கென்று அம்மலையதிபர் சம்பாதித்து வைத்திருக்கிற பல ஆயுதங்களாகிய பட்டயம், கேடகம், தலைச்சீரா, மார்க்கவசம், சருவ ஜெபமாலை, ஒரு நாளும் தேய்ந்து போகாத பாதரட்சை முதலிய அனைத்தையும் காட்டினார்கள். அங்கிருந்த ஆயுதங்களின் தொகையைப் பார்த்தால், வானத்தின் நட்சத்திரங்களின் தொகை அவ்வளவு ஆட்களைப் போர் வீரராக ஆயுதந்தரிக்க வேண்டியதாய் இருந்தபோதிலும் போதுமானதாய் இருந்தது.
மலைநாதருடைய தாசரில் சிலர் மகத்துவமான கிரியைகளைச் செய்து முடிக்கும்படியாகப் பிரயோகித்த பல இயந்திரங்களையும் கிறிஸ்தியானுக்குக் காட்டினார்கள். மோசேயின் கோலையும், யாகேல், சிசெராவின் சிரசில் கடாவிக் கொன்ற கூடார முளையையும், சுத்தியையும், கிதியோன் மீதியானியரைக் கலங்கடிக்கச் செய்த பந்தங்களையும் அவனுக்குக் காட்டினார்கள். அப்பால் ஷம்கார் அறுநூறுபேரை மடங்கடித்த தாற்றுக்கோலைக் காட்டினார்கள். சிம்சோன் பெலிஸ்தியரை முறியடித்த தாடை எலும்பையும் காட்டினார்கள். தாவீது காத் ஊரானாகிய கோலியாத்தை ஜெயித்த கவணையும், கூழாங்கற்களையும் காட்டினார்கள். இவைகளை யல்லாமல் அவர்களுடைய ஆண்டவர் தமது கோபத்தின் நாளிலே பாவ மனுஷனை சங்காரம் செய்யும்படி பிரயோகிக்கும் பட்டயத் தையும் கிறிஸ்தியானுக்குக் காட்டினார்கள். இன்னும் இவைபோன்ற அநேகவிதமான ஆயுதங்களையும் அவர்கள் கிறிஸ்தியானுக்குக் காட்டினார்கள்; அவன் அவை அனைத்தையும் கண்டு மிகுந்த சந்தோசப்பட்டான். அதற்கப்பால் அவரவர் இடத்திற்குப்போய் இளைப்பாறினார்கள்.
அதின்பின்பு நான் என் சொப்பனத்தில் கண்டதாவது: மறுநாள் அதிகாலையில் கிறிஸ்தியான் எழுந்து பிரயாணம் புறப்பட ஆயத்தமானான். அப்போது அவர்கள் இல்லை இல்லை, இன்றைக்கு நின்று போ, மேகமந்தாரம் இல்லாவிட்டால் ஆனந்த மலைத் தொடரை10 உனக்குக் காட்டுவோம். ஆனந்த மலைக்கும், மோட்ச லோகத்துக்கும் இதைவிட வெகு சமீபம்; அதையும் நீ பார்த்துக் கொண்டால் உன் மனதுக்கு மெத்த ஆறுதலாய் இருக்கும் என்றார்கள். அது கேட்டு கிறிஸ்தியான், உங்கள் மனதின்படியே ஆகட்டும் என்று பயணத்தை நிறுத்தி விட்டான். மறுநாள் அதிகாலையில் அவர்கள் அவனை வீட்டின் மேல் மெத்தையின் தளவரிசைக்குக்கூட்டிக் கொண்டு போய்த் தெற்கே பார் என்றார்கள்; அப்படியே அவன் பார்த்தபோது, மகா மகிமையுள்ள காட்சிகளைத் தரும் இன்பமான மலை நாடு காணப்பட்டது. வானத்தை அளாவிய விருட்சங்களும், ஆகாயத்தை மூடிய கொடிமுந்திரிகைத் தோட்டங்களும், பலமாதிரி கனிவர்க்கங்களும், பூமியை அலங்கரிக்கும் புஷ்பாதிகளும் அவன் கண்ணுக்குத் தெரிந்தன. அந்த மலைச்சாரலில் வெள்ளிக் கம்பிகள் போன்ற கால்வாய்களும், வெள்ளை துப்பட்டி விரித்தாற்போன்ற சுனைகளும், தடாகங்களும் தெரிந்தன. (ஏசாயா 33 : 16, 17) நிச்சயமாக அதைப் பார்ப்பதே ஆனந்தமாய் இருந்தது. அந்த மலை நாட்டின் பேர் என்ன என்று கிறிஸ்தியான் கேட்டான். அதற்கு அவர்கள் மனுவேலர் மண்டலம் என்பதே அதின் பெயர். இந்த மலையைப்போல் அந்த மலைநாடு முழுவதும் மோட்ச பிரயாணிகளுக்குப் பொது ஸ்தலமாய் இருக்கிறது; நீ அங்கே சேரும்போது தேவநகரமாகிய மோட்ச பட்டணத்தின் வாசல்கள் தெரியும், அங்குள்ள மேய்ப்பர் வெளிப்பட்டு நடமாடும் காட்சியால் அது உனக்குத்தெரிய வரும் என்று சொன்னார்கள்.
இதின்பின்பு கிறிஸ்தியான் தன் பிரயாணத்தை நடத்தும்படி ஆசைப்பட்டான்; ஆம் ஆம், புறப்படு என்று சொல்லி, ஆனால் மறுபடியும் ஒரு தரம் ஆயுதசாலையின் வழியாய் போவோம் வா என்று அழைத்துக்கொண்டு போய் ஏதாவது அபாயம் நேரிட்டால் அவனைப் பாதுகாக்கும்படியான பல ஆயுதங்களை அவன் உச்சிமுதல் உள்ளங் கால் வரையும் தரிப்பித்தார்கள்.11 அவன் சர்வாயுதபாணியாய் அவர் களுடன் வாசலண்டை வந்து சேவகனைப் பார்த்து, பிரயாணிகள் யாராவது இவ்வழி போனார்களா என்று கேட்டான். ஆம், ஒருவன் போனான் என்று வாசல் சேவகன் சொன்னான்.
கிறி: அவன் இன்னான் என்று உமக்குத் தெரியுமா?
வாச-சேவ: உன் பேர் என்ன என்று கேட்டேன்; என் பேர் உண்மை என்று சொன்னான்.
கிறி: உண்மையா போகிறான்? அவனை நான் அறிவேன்; என் ஊரான்தான்; என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன்தான். நான் பிறந்த ஊரிலிருந்துதான் வருகிறான், இதற்குள்ளாக அவன் எவ்வளவு தூரம் போயிருப்பான் என்று நீர் நினைக்கிறீர்?
வாச-சேவ: இதற்குள்ளாக அவன் மலை இறக்கத்துக்குப் போயிருப்பான் என்று நினைக்கின்றேன்.
கிறி: நல்லது சேவகரே! கர்த்தர் உம்மோடு இருப்பாராக. நீர் எனக்கு காட்டின அன்புக்காக தேவன் உம்மை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக என்று கிறிஸ்தியான் சொன்னான்.
இதன்பின்பு அவன் விரைவாய்ப் பிரயாணம் செய்யும்படி அவர்களை வழி அனுப்பினான். அப்போது யூகி, பயபக்தி, நேசமணி, விவேகி முதலிய கன்னிமாப் பெண்கள் அல்ல,அல்ல, இம்மலையின் அடிவாரம் மட்டும் நாங்கள் உன்னோடு கூட வந்து, அப்புறம் திரும்புகிறோம் என்றார்கள். அப்படியே ஆகட்டும் என்று அவன் சம்மதித்து, எல்லாரும் ஏகமாய் முன் பேசின விஷயங்களைக் குறித்தே சம்பாஷித்துக் கொண்டு, அடிவாரம் மட்டும் போனார்கள். இந்த மலையில் ஏறும்பொழுது எவ்வளவு வருத்தமோ அவ்வளவு இறங்கும்போதும் இருக்கிறது என்று சொன்னான். அதற்கு விவேகி: அது மெய்யான வார்த்தை, இப்போது நீ போகிறாயே; அதைப்போல தாழ்மை என்கிற பள்ளத்தாக்கைக் கடந்து போகிற எவனும் சறுக்கி விழாமல் இருக்கமாட்டான். ஆதலால் தான் நாங்கள் அடிவாரமட்டும் உனக்குத் துணையாக வரும்படி ஆசைப்பட்டோம் என்றாள். அவன் எவ்வளவு எச்சரிக்கையோடு காலெடுத்து வைத்து இறங்கினபோதினும் இரண்டொரு இடங்களில் சறுக்கி விழுந்தான்.
மலையடிவாரம் சேர்ந்தபின்பு அவர்கள் கிறிஸ்தியானுக்கு ஒரு ரொட்டியும், ஒரு புட்டி திராட்சரசமும், ஒரு கொத்து முந்திரிக்கைக் குலையும் கொடுத்து வழியனுப்பிவிட்டுத் திரும்பினார்கள்.
1. சிங்கார மாளிகை: இது ஒரு கிறிஸ்து சபையைக் குறிக்கிறது. அதினுள் பிரவேசித்தல் என்பது, கிறிஸ்து சபையில் சேர்ந்து கொள்ளுகிறதைக் காட்டும் வெளியரங்கமான அறிக்கையைக் குறிக்கிறது.
2. இரண்டு சிங்கங்கள்: என்பது, மனிதரை கிறிஸ்து சபையோடு சேரவிடாமல் தடைபண்ணுகிற பிசாசு, உலகம் என்னும் இரண்டு சத்துருக்களையும் குறிக்கலாம். ஆனால் அவைகள் தேவனால் தடுக்கப் பட்டிருக்கிறபடியால் மெய் விசுவாசிகளுக்கு நஷ்டத்தை உண்டாக்க அவைகளால் கூடாது.
3. உண்மையுள்ள தேவ பணிவிடைக்காரர், வாசல் காக்கிறவனைப் போல விழித்திருந்து, அதைரியமுள்ள விசுவாசிகளைத் தைரியப்படுத்துகிறார்கள்.
4. யூகியை அழைத்த விஷயம், மகா ஞானத்தோடு ஒருவனைக் கிறிஸ்து சபையில் சேர்க்க வேண்டியது என்பதை உணர்த்துகிறது.
5. சம்பாஷணை செய்த விஷயம், கிறிஸ்தவர்கள் கிருபையில் வளரும்படியாக ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி, ஏவி எழுப்ப வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மேலும், கிறிஸ்து மார்க்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறவர்கள் பக்தியும், விவேகமும், நேசமுமுள்ள சபையின் அவயவங்களாய் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் உணர்த்து கிறது.
6. ஒரு மனுஷன் தன் ஆத்துமாவின் அருமையை உணர்ந்து கொண்ட உடனே தன் வீட்டாருடைய இரட்சிப்புக்காக முதலாவது பிரயாசப்பட வேண்டும். என்ன பிரயத்தினத்திலாவது அவர்கள் நித்திய அழிவுக்குத் தப்பும்படி இயேசுவினிடத்திற்கு வர அவர்களை வழி நடத்த வேண்டியது.
7. இராச்சாப்பாடு: இது கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூருதலும் விசுவாசிகளின் ஞானபோஜனமாகிய கர்த்தருடைய ராப்போஜனத்தைக் குறிக்கிறது.
8. சமாதானம் என்னும் மாடம்; இயேசு கிறிஸ்துவினால் நீதிமானாக்கப்படுகிறவர்கள் அனுபவிக்கிற மனச்சாட்சியின் சமாதானத்தைக் குறிக்கிறது. ரோமர் 5 : 1.
9. பூர்வ நாளாகமங்கள் என்பது: இந்த பூலோக ஆகமங்கள் எல்லாவற்றிலும் முந்தி எழுதப்பட்வைகளாய் இருக்கிற வேதாகம பங்குகளைக் குறிக்கிறது.
10. ஆனந்த மலைத் தொடர் என்பது இந்த உலகத்தில் விசுவாசிகளுக்கு சில தரம் அருளப்படுகிற மெய் தேவ பக்தியின் பாக்கியங்களைப் பற்றிய பல பரவசமான எண்ணங்களைக் காட்டுகிறது.
11. கிறிஸ்தவனுடைய சர்வாயுதவர்க்கத்தை குறித்து எபேசியர் 6 : 10 -18 வரையும் பார்.