பிரயாணி சுருளை இழத்தல்
ஐயோ அதைக் காணோம்1 என்று கண்டான். அத்தருணத்தில் அவன் மனதில் உண்டான துக்கத்தை என் வாயால் சொல்லி முடியாது. என்ன செய்வேன் என்று அறியாமல் திகைத்து நின்றான்; ஏனெனில் அந்தச் சுருள் இல்லாமல் முடியாது; வழியில் அவனுக்கு தேறுதலைக் கொடுக்கவும், உன்னத நகரத்தின் வாசலில் காட்டி உட்பிரவேசிக்கவும் அது அவசியம் வேண்டியதாய் இருந்தது. இதையெல்லாம் அவன் நினைத்து மிகவும் கலக்கம் அடைந்தான்; கலக்கத்தோடு கலக்கமாய் ஆகா, நான் கஷ்டகிரி சிகரத்தில் இருக்கிற நந்தவனத்தில் படுத்து தூங்கினேனே, சுருள் விழுந்தால் அங்கேதான் விழுந்திருக்கும் என்கிற நினைவு வந்தது. உடனே அவன் முழங்கால் படியிட்டுத் தன் புத்தியீனத்துக்காக தேவனை நோக்கி மன்றாடி மறுபடியும் திரும்பி சுருளைத்தேடி வந்தான். கிறிஸ்தியான் வழியில் இருந்த நந்தவனத்தில் தூங்கினபோது அது அவனை அறியாமல் மடியில் இருந்து விலகி விழுந்து போயிற்று. அவன் சுருளைத் தேடி திரும்பி வந்தபோது அவனுக்கு உண்டாயிருந்த கவலையையும், மன நோவையும் யார்தான் சரியாய்ச் சொல்லக்கூடும்? ஐயோ! அவன் சில தரம் பெருமூச்சு விடுவான், சில தரம் புலம்புவான், சில தரம் அழுவான், சிலதரம் தலையோடு அடித்துக்கொள்ளுவான், சில தரம் கையை உதறிக் கொள்ளுவான்; இளைப்பாறும்படி ஏற்படுத்தப்பட்ட நந்தவனத்தைப் பஞ்சுமெத்தை என்று எண்ணி அங்கே தூங்கின என்னைப்போல் புத்தியீனன் உண்டோ என்று தன்னைக் கடிந்து கொள்ளுவான். அவன் போகப் போக இந்தச் செடி மறைவில்தான் கிடக்குமோ, இந்தக் கல்லுக்குள்தான் காற்று கொண்டு போய்ச் சேர்த்து விட்டதோ என்று அங்கும் இங்கும் கூர்மையாய் பார்த்துக் கொண்டே போனான். கடைசியாக அந்த நந்தவனம் அவன் கண்ணுக்குத் தோன்றிற்று. தோன்றவே அவன் மன நோவு அதிகப்பட்டது. அது தன் அஜாக்கிரதை யையும், சோம்பேறித் தனத்தையும் மறுபடியும் புதுப்பிக்கிறது போல இருந்தது. (வெளி 2 : 4, 1 தெச 5 : 6-8) அவன் தன்னைக் குறித்து, ஐயோ நிர்ப்பாக்கிய மனுஷன் நான்; பாதி ராத்திரியில் தூங்குவதைப்போல பட்டப்பகலில் தூங்கின என்னிலும் மூடன் உண்டோ? இவ்வளவு வருத்தங்கள் இருந்தும் தூங்கினேனே! இம்மலையின் ஆண்டவர் பிரயாணிகளுடைய ஆவியின் இளைப்பாறுதலுக்கென்று ஸ்தாபித்த இந்த நந்தவனத்தில் மாமிச இளைப்பாறுதலுக்கு இடம் கொடுத்தேனே; எவ்வளவு தூரம் வீண் நடை நடந்தேன்.
இப்படித்தானே இஸ்ரவேலருக்கும் ஒரு காலத்தில் சம்பவித்தது. அவர்கள் தங்கள் பாவத்தின் நிமித்தம் சிவந்திர சமுத்திர பாதையாய் அலைந்து திரிய அனுப்பப்பட்டார்கள். இப்போது இந்த பாதையை துக்கத்தோடு மிதிக்கிற நான் தூங்காமல் இருந்தால் எவ்வளவு சந்தோசத்தோடு நடந்து கடந்திருப்பேன். நான் தூங்காதிருந்தால் இதற்குள்ளாக எவ்வளவோ தூரம் போயிருப்பேன்; ஒரே தரம் மாத்திரம் நடக்க வேண்டிய இந்த வழியில் என் புத்தியீனத்தால் மூன்று தரம் கால் மிதிக்க வேண்டியது ஆயிற்றே; ஐயோ பொழுதும் அஸ்தமித்து இருட்டாகப் போகிறதே, நான் தூங்காதிருந்தால் இவ்வளவு கஷ்டங்களில் ஒன்றும் எனக்கு வந்து சம்பவித்திராதே என்று சொல்லிக் கொண்டான்.
இதற்குள்ளாக அவன் அந்த நந்தவனம் சேர்ந்து சற்று நேரம் அழுதான்; அப்புறம் தான் தூங்கின இடத்தில் போய்த் தேடவே சுருள் அகப்பட்டது. அவன் அதை மிகுந்த ஆவலோடும், பதஷ்டத்தோடும் எடுத்து மடியில் வைத்துக் கொண்டான்.2 அந்தச் சுருளைக் கண்டு பிடித்த உடனே அவனுக்குள் உண்டான சந்தோசத்துக்கு ஒரு கணக்கில்லை. இந்தச் சுருள்அவனுடைய ஜீவனின் நிச்சயமும், மோட்சத்தில் சேர்க்கப்படுதலின் சீட்டும் போல் இருந்தது. ஆதலால் அது கண்டுபிடிக்கப்பட்டவுடனே, தன் கண்ணுக்கு அதைக் காட்டிக் கொடுத்த தேவனுடைய தயவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, ஆனந்த கண்ணீர் சொரிந்து கொண்டு தன் வழியே மறுபடியும் ஏறிப்போனான். அவன் எவ்வளவு விசையாய்த்தான் ஏறி ஏறிப் போனான் அப்பா! என்றாலும் அவன் மலையின் உச்சியில் சேருமுன்னே பொழுதடைந்து போயிற்று. இப்படிப் பொழுது போனதும் அவனுடைய பழைய தூக்கத்தை மறுபடியும் நினைப் பூட்டிற்று. அவன் மறுபடியும் பெருமூச்சுவிட்டு, ஆ! பாவத் தூக்கமே! உன் நிமித்தம் என் பிரயாணம் எவ்வளவாய்த் தடைப்பட்டுப் போயிற்று! என்னைப் பகலின் வெளிச்சத்தில் அல்ல, இருளின் நிழலில் நடக்கப்பண்ணிவிட்டாயே, நரிகளின் ஊளையையும், சிங்கங்களின் கெர்ச்சிப்பையும், புலிகளின் சீறலையும், வண்டுகளின் இரைச்சலையும் நான் கேட்கப்பண்ணிவிட்டாயே. ஆ, தூக்கமே! பாவத்தூக்கமே என்று புலம்பினான். இந்த விசனத்தோடு விசனமாய் அச்சன், சந்தேகி என்னும் இரண்டுபேரும் சொன்ன சிங்கங்களின் செய்தியும் அவன் மனதில் வந்தது; அவன் சொல்லுகிறான்: பொழுது அஸ்தமிக்கும் முன் சிங்கங்களின் கெபியையாவது கடந்திருந்தால் நன்மையாய் இருந்திருக்குமே! அப்போது அவைகள் கண்மூடித் தூங்கினாலும் தூங்கும்; இப்பொழுதோ அவைகள் விழித்து இரை தேடுகிற சமயம்; ஒரு வேளை அவை இரண்டும் என்னைக் கண்டு பட்சிக்கும்படி வரவே வந்தால் அவைகளைத் துரத்த என்னால் ஆகுமா? அவைகளின் பல்லுக்கு விழுந்தாவேனேயன்றி வேறு வழி உண்டா? என்று பிரலாபித்துக் கடைசியாக உயிர் நின்றாலும் நிற்கட்டும், போனாலும் போகட்டும், அணுவளவும் அடி விலகமாட்டேன் என்று தீர்மானம் பண்ணி, பெருமூச்சு விட்டு, அண்ணாந்து பார்த்து, வானமே நீயே துணை என்றான்.
1. சுருளை இழந்தது: கிறிஸ்தவனுக்கு கிடைத்து இருந்த சந்தோசமும், சமாதானமும், சோம்பேறித்தனத்தினாலும், அசமந்தத்தினாலும் இல்லாமல் போகிறதைக் குறிக்கிறது. இந்தக் காணாமல் போன நல்ல ஸ்திதியை திரும்பத் தேட வேண்டியது.
2. இழந்த சுருளைக் கண்டுபிடித்தல் என்பது, தேவனுடைய பாவமன்னிப்பின் அன்பையும், பரிசுத்த ஆவியின் சந்தோசத்தையும், மறுபடியும் புதிதாய் உணரும் உணர்ச்சியையும் காட்டுகிறது.