பரதேசியின்
மோட்ச பிரயாணம்
(சொப்பனப் பாங்கு)
பிரயாண ஆவல்
இவ்வகண்ட லோக வனத்திலே நான் சஞ்சாரம் செய்த காலத்தில், ஒரு தரம் ஒரு மலையடிவாரத்தில் தங்கினேன். அங்கே ஒரு கெபி1 இருந்தது அதினுள் போய்ப் படுத்து நித்திரை செய்தேன். நான் அயர்ந்து நித்திரை செய்கையில் மா மகிமையான ஒரு சொப்பனம் கண்டேன். அந்தச் சொப்பனத்தைச் சொல்லுகிறேன் கேள்.
இதோ ஒரு மனுஷன் கந்தை2 கட்டிக் கொண்டு தன் வீட்டைப் பாராமல் வேறோர் திசையை நோக்கிக் கொண்டு நின்றான். அவன் கையில் ஒரு புஸ்தகமும், முதுகில் ஒரு பாரச்சுமையும் இருந்தது. (ஏசாயா 64 : 6, லூக்கா 14 : 33) நான் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவன் தன் புஸ்தகத்தை திறந்து வாசித்தான். வாசிக்க, வாசிக்க மாலை மாலையாய்க் கண்ணீர் சொரிந்தான். அவன் உடம்பும் சிலிர்த்தது, கடைசியாக அவன் தன்னை அடக்கிக் கொள்ள சக்தியற்று உரத்த சத்தமாய்: ஐயோ, நான் என்ன செய்வேன்? என்று வாய்விட்டுக் கதறி அழுது புலம்பினான். (அப்போஸ்தலர் 2 : 37, 16 : 30, ஆபகூக் 1 : 2, 3)
இவ்வளவு வியாகுலத்தோடு அவன் தன் வீட்டு முகமாய்த் திரும்பி நடந்து, தன் கிலேசத்தையும், கண்ணீரையும் வீட்டார் ஒருவரும் அறியாதபடி செய்து கொள்ள வேண்டும் என்று முகத்தை நன்றாய்த் துடைத்து, மனக்கவலை ஒன்றும் இல்லாதவனைப் போல வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்து தன்னால் ஆனமட்டும் தன் மன வேதனையை அவர்கள் கண்டு கொள்ளாதபடி செய்தான். அவன் தன்னை வெகு நேரம் அடக்கிக் கொள்ளக்கூடாமல் போயிற்று. ஏனெனில், அவனுடைய கிலேசம் வரவர அதிகப்பட்டது. அவன் தன் மனைவி யையும், மக்களையும் கூப்பிட்டுச் சொல்லுகிறான்: ஆ, என் நேச மனைவியே! கேள், என் கர்ப்பக் கனிகளே! செவி கொடுங்கள், உங்கள் மகா பிரியமுள்ள சிநேகிதனாகிய நான், இதோ என் முதுகில் இருக்கும் சுமை வரவரப் பளுவாகிறதால் மெத்தவும் அவதிப்படுகிறேன், அது என்னை நசுக்கிப்போடும் போல் இருக்கிறது. அதுவுமின்றி நாம் வாசம் செய்யும் இந்தப் பட்டணம்3 வானத் திலிருந்து வரும் அக்கினியால் தகனிக்கப்படும் என்று திட்டமாய் அறிந்தேன். நாம் தப்பிக் கொள்ளுகிறதற்கு யாதொரு வழிவகையும் இல்லையானால், நானும், என் அருமை மனைவியே! நீயும், என் கண்மணிகளே! நீங்களும் ஏகமாய் அந்த அக்கினியில் அழிந்து போவோம். நாம் தப்ப ஒரு வழி இருக்கிறதென்று இன்னும் எனக்குத் தோன்றவில்லை என்று சொன்னான்.
இதைக் கேட்ட அவன் மனைவியும் மக்களும், உற்றாரும் பெற்றோரும் அதிசயப்பட்டார்கள்.4 அவன் சொன்ன மோசங்கள் மெய்யாகவே நடக்கும் என்று நம்பி அஞ்சினதினால் அல்ல, பித்தம் சிரசில் ஏறிப் பிதற்றுகிறான். பித்தம் முற்றினால் பைத்தியக்காரனாகி விடுவானே என்றெண்ணி கலக்கமுற்றார்கள். இப்படி அவன் பிரலாபித்தது பொழுது சாயப்போகிற நேரமாயிருந்தது. அவனுடைய பந்துக்கள் இவனுக்கு நல்ல தூக்கமில்லாமல் மண்டை கொதிப்பேறி புத்திமாறி இருக்கிறது. இவன் நித்திரை செய்து எழுந்திருந்தால் சிரசில் ஏறிய பித்தம் விடியுமுன் வடியும், புத்தி சீராகும் என்று அவர்கள் எண்ணி அவன் தூங்குகிறதற்கேற்ற பிரயத்தனங்களை விரைவில் செய்தார்கள். அன்றிரவிலும் அவன் முந்தின பகலைப் போலவே உபத்திரவப்பட்டான். எல்லாரும் முக்காரம் போட்டுத் தூங்கினார்கள். இவனோ பெருமூச்சுவிட்டு, கண்ணீர் சொரிந்து காலத்தைக் கடத்தினான். பொழுது விடிந்தவுடனே, அயல் வீட்டுக் காரரும் அறிந்த சிநேகிதரும் வந்து, அண்ணா! நன்றாய்த் தூங்கினீரா? தம்பி, இப்போது சுகம் எப்படி என்று கேட்டார்கள். அவனோ, முன்னிலும் கேடு, முன்னிலும் கிலேசம் என்று சொல்லி: தன் மனதின் பயங்கரங்களை குறித்து அவர்களோடு பேசும்படி ஆரம்பித்தான். அவர்கள் அதைக் காது கொடுத்துக் கேளாமல் கடின இருதயமுள்ளவர்களாய் இருந்தார்கள். அவர்களில் சிலர் கூடி, கனிவுள்ள வார்த்தைகள் இவனுக்கு ஆகாது, கடிந்து கடிந்து பேசவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு, சில தரம் அவனைக் கேலி பண்ணுவார்கள், சில தரம் கடுப்பாய்ப் பேசுவார்கள், சில தரம் பித்தா! நீ கெட்டாய் என்று கதவைப் பூட்டி ஒண்டியாய்க் கிடவென்று சொல்லி விட்டுப் போய்விடுவார்கள். அவன் தன் மட்டாயிருந்து, தன் ஊராருக்காக பரிதபித்து, ஜெபம் செய்து தன்னுடைய சொந்த நிர்ப்பந்தத்தையும் உணர்ந்து கொண்டிருப்பான். அடிக்கடி அவன் வீடுவிட்டு காடு போய், அங்குள்ள வயல் வெளிகளில் ஒண்டியாய் உலாவி: சில தரம் வாசிப்பான், சில தரம் ஜெபம் பண்ணுவான், சில தரம் அழுவான், சில தரம் புலம்புவான். இப்படி சில நாட்களை அவன் கழித்தான்.
கவனிப்பு:- ஆங்காங்கு குறிக்கப்பட்டிருக்கிற வேத ஒத்து வாக்கியங்களை வாசித்துக் கொண்டால், இந்தப்புஸ்தகத்தில் அடங்கிய சங்கதிகள் அதிகத் தெளிவாக விளங்கும்.
1. கெபி: இது பன்னியன் என்பவர் அடைபட்டிருந்த சிறைச்சாலையைக் குறிக்கிறது. இங்கே இருந்த காலத்திலேயே இந்தப்பிரபந்தம் எழுதப்பட்டது.
2. கந்தை கட்டிப் பாரம் சுமந்த மனுஷன் என்பது, சத்திய வேதத்தை வாசிக்கிற ஒருவன் தன் முதல்தரமான கிரியைகள் முதலாய்க் கந்தைக்குச் சமமாய் இருக்கிறதென்றும், பாவமானது ஒரு பாரச்சுமையைப்போல் தன்னை இருத்துகிறது என்றும் அறிந்து உணருகிறதைக் காட்டுகிறது.
3. பட்டணம் என்பது கடைசியில் அக்கினியால் தகனிக்கப்படப்போகும் இந்த பொல்லாத உலகத்தைக் குறிக்கிறது.
4. அநேக ஜனங்கள் தங்கள் ஆத்தும இரட்சிப்பைக் குறித்து எவ்வளவும் கவலைப்படாமலிருக்கிறதுமன்றி, கவலைப்படுகிறவர்கள் பைத்தியங் கொண்டவர்கள் என்று எண்ணிக் கொள்ளுகிறார்கள்.