“மோட்ச பிரயாணம்” புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்த்த பக்த சிரோன்மணி சாமுவேல் பவுல் ஐயர் அவர்களின் முகவுரை
“பரதேசியின் மோட்ச பிரயாணம்” என்று அழைக்கப்படுகிற இந்தச் சொப்பன பிரபந்தம் ஆங்கிலேய பாஷையில் முதலாவது எழுதப்பட்டு ஏறக்குறைய இருநூற்றிருபது வருடங்கள் ஆகிறது. இத்தனை வருஷங் களுக்குள்ளாக இது அநேக பாஷைகளில் திருப்பப்பட்டு உலகம் எங்கும் பிரபலம் பெற்றிருக்கிறது என்பதை யாவரும் ஒத்துக் கொள்ளுவார்கள்.
ஜாண் பன்னியன் என்பவர் எழுதிய இப்பிரபந்தம், காகித பிரதியாய் இருந்த காலத்தில் “அச்சிடு” என்று சிலரும் “அச்சிடாதே” என்று சிலரும், “இது நன்மை செய்யும்” என்று சிலரும் “நன்மை செய்யாது” என்று சிலரும் சொன்னபோதினும், இப்பொழுதோ பூலோக பாஷைகளில் எல்லாம் இது அச்சிடப்பட வேண்டும் என்று யாவராலும் சொல்லப்பட வேண்டிய ஒரு நூலாகவே இருக்கிறது.
இங்கிலாந்து தேசத்து சன்மார்க்க புஸ்தக சங்கத்தார் மாத்திரம் இதைச்சுமார் முப்பது பாஷைகளில் அச்சிட்டிருக்கிறார்கள். இந்தியா தேசத்திலுள்ள ஒரியர், தெலுங்கர், தமிழர், மலையாளர், இந்துஸ்தானியர், வங்காளர், மராட்டியர், கன்னடர், குஜராத்தியர், இலங்கைச் சிங்களர் ஆகிய இத்தியாதிபேரும் இப்பிரபந்தத்தை தம் தம் சொந்த பாஷையில் வாசிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
இதற்கு முன் இந்தப் புஸ்தகத்தை தமிழ்ப்படுத்தினவர்கள் இதில் உள்ளவைகளில் சிலவற்றை குறைத்தும் இதினோடு சிலவற்றை கூட்டியும், மாற்றியும் அச்சிட்டிருக்கிறோம் என்று சொன்னது போல நான் இப்பொழுது சொல்ல வேண்டியஅவசியமில்லை. இதில் உள்ளவைகளை நான் குறைத்ததும் இல்லை, மாற்றினதும் இல்லை. இதின் ஆதி முதல் அந்தமட்டுமுள்ள சுவிசேஷ போதனைகளை மனதில் வற்புறுத்தவும், இதை வாசிப்போர் இதின்மேல் பிரியங்கொள்ளவுமான இனிய நடையில் இதை எழுதி முடிக்க வேண்டும் என்பதே என் பிரதான நோக்கமாயிருந்தது.
இந்த புஸ்தகத்தின் ஊடே ஊடே வருகிற கவிப்போங்குகள் பெரும்பாலும் தமிழ் இராகங்களில் இயற்றப்பட்டிருக்கிறது. அக் கவிகள் இலக்கண விதிப்படி இருப்பதைப் பற்றி அவ்வளவாய் கவனியாமல் மூலத்தில் இருக்கும் கருத்துகளுக்கு எவ்வளவேனும் வேறுபடாமல் இருக்க வேண்டுமென்பதையே என் கருத்தில் கொண்டேன். ஆங்காங்கு வரும் பாடல்களை அதினதின் ராகப்படியே பாடிக்கொண்டு வாசிக்கப்பிரயாசப்படுவோர், வெறும் வாசிப்பாய் தாட்களை திருப்பிக்கொண்டு போகிறவர்களை விட அதிக ஆவிக்குரிய ஆசீர்வாதம் அடைவார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது.
இப்புஸ்தகத்தை பிரதிபண்ணுவதில் எனக்கு மிகுந்த உதவிசெய்த சாமுவேல் ஸ்தேவான் உபதேசியாருக்கு நான் மிகவும் நன்றியறிதலுள்ளவனாயிருக்கிறேன்.
பெட்போஃர்ட் பட்டணத்து சிறைச்சாலையில் கிடந்த பன்னிய னின் ஆத்துமாவை உச்சித பட்டணம் மட்டும் பரவசப்படுத்தி விட்ட பரிசுத்த ஆவியானவரின் அருள் உன்மேலும் தங்கி, நாசபுரியின் பாவ சிறைச்சாலைக்குள் கிடக்கும் உன் ஆத்துமாவை பரிசுத்த மோட்சம் போய் தரிசிக்கும்படி பயணப்படுத்த வேண்டும் என்பதே என் இருதயத்தின் கதறுதல்.
கடைசியாக, இப்புஸ்தகத்தை எழுதின பன்னியன் என்பவர் இதின் முதலாம் பாகத்தின் முடிவில் கவிப்போங்காய் சொல்லியிருக்கும் வாசகங்களின் சாரத்தையே இவ்விடத்தில் சொல்லி முகவுரையை முடிக்கிறது எனக்கு நலமாய்த் தோன்றுகிறது. அவர் சொல்லுகிறார்:-
வாசிக்கிறவனே, இப்பொழுது என் சொப்பனத்தை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். அதின் தாற்பரியத்தை எனக்காவது உனக்காவது, உன் பிறனுக்காவது விவரிக்கக்கூடுமா என்று பார். ஆனால் தப்பாய் மாத்திரம் தாற்பரியம் பண்ணாதே. தப்புத் தாற்பரியம் உனக்கு நன்மையை உண்டாக்குகிறதற்குப் பதிலாக தீமையையே உண்டாக்கும். மேலும் என் சொப்பனத்தின் வெளித் தோற்றங்களிலே உன் மனதை அதிகமாக செலுத்திவிட வேண்டாம். என் உபமானங்களும், ஒப்பனைகளும் உன்னைச் சிரிக்கப்பண்ணவும், உன் மனதைக் குழப்பிப்போடவும் வேண்டாம். இந்தக் குணத்தை பையன்களுக்கும், பைத்தியக்காரருக்கும் விட்டு விட்டு, நான் எழுதும் சங்கதிகளின் சாரத்தை மாத்திரம் பிடித்துக்கொள். திரையை நீக்கிவிட்டு திரைச்சீலைக்குள்ளே பார். என் ஒப்பனைகளை உருட்டிப்புரட்டி பரிசோதனை செய். அப்போது உத்தம இருதயத்தை ஏவும்படியான ஆதாரங்களை கண்டடைவாய். அதில் ஏதாவது மாசுகளைக் கண்டு பிடித்தால் அவைகளை தூர எறிந்துவிட அஞ்சவேண்டாம். ஆனால் அதிலுள்ள பொன் பொடிகளை கூட எறிந்து போடாதே. என் பொன் கல்லோடு கலந்திருந்தால் என்ன? கொட்டையைத் தொட்டு பழத்தை எறிந்துவிடுவார் இல்லையே. ஆனால், எல்லாவற்றையும் நீ எறிந்து விடுவது உண்டானால் நான் மறுபடியும் ஒரு தரம் சொப்பனம் காண வேண்டியதே அல்லாமல் வேறு வழி இன்னதென்று எனக்கே தெரியவில்லை.
சாமுவேல் பவுல்
உதகமண்டலம்
1882 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்.