“நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவ தூதர்களிடத்திற்கும், பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேரானவர்களின் சர்வ சங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளிடத்திற்கும், புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நன்மையானவைகளை பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்”
(எபிரேயர் 12 : 22 – 24)
கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,
நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.
நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் தேவப் பிள்ளைகளாகிய உங்களை “மோட்ச பிரயாணம்” என்ற இந்த களிப்பூட்டும் பரிசுத்த புத்தகத்தின் மூலம் திரும்பவும் சந்திக்க கிருபையளித்த நம் அன்பின் ஆண்டவரை நன்றி நிறைந்த உள்ளத்துடன் துதித்து ஸ்தோத்திரிக்கின்றேன்.
நான் மிகவும் சிறுவனாக இருந்த நாட்களில் எனது கல்வி ஞானமற்ற ஏழை பட்டிக்காட்டுத் தாயார் என்னைத் தனக்கு முன்பாக நிறுத்தி எனக்காக கண்ணீர் சிந்தி அழுது ஜெபித்ததை நான் இன்றும் பசுமையாக என் நினைவில் வைத்துள்ளேன். அவர்களின் அழுகையின் கண்ணீர்த் துளிகள் மேல் சட்டையில்லாத எனது வெறும் உடலின் தோள் பட்டையில் விழுந்து அதை ஈரமாக்கியதை நான் இன்றும் மறக்கவில்லை. எங்கள் வீட்டின் முன் வராந்தாவின் மணல் தரையில் இந்த சம்பவம் நடந்தது. அந்த வீட்டை நீங்கள் படத்தில் காணலாம்.
எனது பரிசுத்த தாயாருக்கு நான் அவர்களின் ஒரே ஒரு ஆண் மகன். பெண் மக்கள் மூவர் உண்டு. அவர்களின் கண்ணீரின் ஜெபங்களில் அவர்கள் தேவனுக்கு நேராக ஏறெடுத்த ஒரு உருக்கமான மன்றாட்டு “ஆண்டவரே, சாலொமோன் ராஜாவுக்கு கொடுத்த ஞானத்தை எனது மகனுக்கும் கொடும்” என்பதே.
அன்று அவர்கள் ஏறெடுத்த அந்த கண்ணீரின் ஜெபம் அன்பின் கன்மலையாம் நம் தேவனின் திருவுளத்திற்கு ஏற்றதும் பிரியமுமாக இருந்திருக்கின்றது. அதின் காரணமாக இந்த எனது முதிர்ந்த வயதில் எனக்கு முன்பாக கணிப்பொறியை (Computer) வைத்து விரைவாக டைப் செய்து கொண்டிருக்கின்றேன். கணிப்பொறியின் “கீ போர்ட்” (Key Board) இல் எனது கரங்களை வைத்ததும் விரல்கள் தாங்களாவே சுழன்று எழுத்துக்களை டைப் செய்கின்றன. “கீபோர்ட்”ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழ் எழுத்துக்களை விரைவாக என்னால் டைப் செய்ய முடிகின்றது. எல்லா துதியும் நம் நேசருக்கே. இது எனக்கு எட்டாத ஆச்சரியமாக இருக்கின்றது. உங்கள் கரங்களில் உள்ள “மோட்ச பிரயாணம்” புத்தகத்தின் சுமார் 500 பக்கங்களையும் தேவ கிருபையால் நானே உட்கார்ந்து டைப் செய்து முடித்தேன் என்றால் கர்த்தருக்குள் நீங்கள் ஆச்சரியமும், சந்தோசமும் அடைவீர்கள். இந்தக் காரியத்தை நான் செய்ய எனக்கு முன்னாலுள்ள கணிப்பொறியின் அநேக பொத்தான்களையும், கருவிகளையும் நான் மிகவும் கவனமாகவும் ஞானத்தோடும் இயக்க வேண்டும் என்பதை தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். மகிமை நம் ஆண்டவர் ஒருவருக்கே. எனது 10 ஆம் வயதில் எனது கரங்களுக்குக் கிடைத்த எனது தந்தையின் 77 ஆண்டு கால பண்டைய அன்பளிப்பு புத்தகத்தையே நான் எனக்கு முன்பாக திறந்து வைத்து ஒவ்வொரு வரியாக நான் ஜெபத்துடன் டைப் செய்து முடித்தேன். அது மிகவும் கடினமான ஒரு தேவ பணி.
எனது ஏழைத் தாயாரின் கண்ணீரின் ஜெபம் கேட்டு சிறு பிராயத்திலேயே தேவன் என்னைத் தமது சொந்தமாக்கிக் கொண்டார். பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்களின் ஒளி நிறைந்த பரிசுத்த வாழ்க்கை சரித்திரத்தினை எனது பரிசுத்த தந்தையின் மூலமாக அடிக்கடி நான் கேட்டு அந்த மகாத்துமாவைப் போல நாமும் பரிசுத்தமாக வாழ வேண்டும், தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்ய வேண்டும், ஆத்துமாக்களை ஆண்டவருக்கென்று ஆதாயம் செய்ய வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆவல் எனது சிறு பிராயத் திலேயே என்னை ஆட்கொண்டுவிட்டது.
அந்த சிறு வயதிலேயே என் இருதயத்தை முழுமையாக கவர்ந்து கொண்ட ஒரு பரிசுத்த புத்தகம் “மோட்ச பிரயாணம்” ஆகும். இங்கிலாந்து தேசத்தின் மாபெரும் தேவ மனிதர் ஜாண் பன்னியன் என்பவர் எழுதிய அந்தப் புத்தகம் எனது கரங்களுக்கு நான் 10 வயது சிறுவனாக இருந்த 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிடைத்தது. எனது பரிசுத்த தகப்பனாரின் உடன் பிறந்த அண்ணன் ஆரோன் அப்பாத்துரை அவர்கள் தனது அன்புத் தம்பியாகிய எனது தகப்ப னாருக்கு அந்தப் புத்தகத்தை அந்த ஆண்டின் கிறிஸ்மஸ் கால அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்கள்.
அதை ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்த்த சிறந்த ஞானவானான பரிசுத்த தேவ மனிதர் சாமுவேல் பவுல் ஐயர் அவர்களின் முகவுரையும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. எவரும் இத்தனை சிறப்பாகவும், பரிசுத்த அலங்காரத்தோடும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மோட்ச பிரயாணத்தை மொழி பெயர்க்க இயலாது. 1942 ஆம் ஆண்டில் அதனை அச்சிட்டோர் நிறைய எழுத்துப் பிழைகள் தவறான வாக்கிய பிழைகளைச் செய்திருக்கின்றனர். ஒவ்வொரு வரியாக கம்பியூட்டரில் டைப் செய்த நான் என்னால் முடிந்தவரை ஜெபத்துடன் பிழைகளை நீக்கி வாக்கியங்களை சரி செய்திருக்கின்றேன். எனினும் சில இடங்களில் என்னால் ஒன்றும் செய்ய இயலாத நிலையும் ஏற்பட்டது. மிகவும் துக்கமடைகின்றேன்.
எனது கரங்களுக்கு கிடைத்த அந்த பழைய மோட்ச பிரயாண புத்தகத்தை நான் மிகவும் பத்திரமாக என் வசம் வைத்திருந்து ஒரு வரி கூட விடாமல் அதை நான் முழுமையாக சில தடவைகள் வாசித்திருந்ததுடன் அதின் குறிப்பிட்ட பகுதிகளை கலர் பென்சில் களால் அடிக்கோடிட்டு வாசித்ததுடன் புத்தகத்தின் அழகான படங்களை எல்லாம் தண்ணீர் கலர்களால் வர்ணம் தீட்டியும் வைத்திருந்தேன்.
அந்தப் புத்தகத்தை நான் அதிகமாக நேசித்தேன். நமது “தேவ எக்காளம்” பத்திரிக்கையில் கூட ஆரம்ப நாட்களில் நான் அதை சில ஆண்டு காலங்களாக தொடர்ச்சியாக ஒழுங்காக அச்சிட்டு வெளியிட்டேன். அநேகருக்கு அது மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது.
அந்த புத்தகத்தில் நான் வாசித்த சில பகுதிகளும் காட்சிகளும் என் இருதயத்தை விட்டு இன்று வரை விலகவே இல்லை. மோட்ச பிரயாணி கிறிஸ்தியான் வியாக்கியானி முனிவர் வீட்டில் கண்ட காட்சிகளில் “தலையில் பொற்கிரீடம் தரித்தவராய், கையில் சிறந்த புத்தகமாம் வேதத்தை வைத்துக்கொண்டு, இப்பூலோக இன்பங்களை ஒரு பொருட்டாக எண்ணாமல், பரலோக பாக்கியங்களையே தன் பலனாக நினைத்து வானத்தை நோக்கி நிற்கும் காட்சி” , பூமியிலுள்ள குப்பைகளையும், செத்தைகளையும் (மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை போன்ற உலக மாய்கைகளின் குப்பைகள்) வாரிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனண்டை தனது கரத்தில் பொற்கிரீடத்தை ஏந்தினவராய் வந்து நின்று “அப்பா, துடைப்பத்தை எறிந்துபோட்டு இந்தக் கிரீடத்தை தரித்துக்கொள்” என்று சொல்லி நீட்டியதை சட்டைபண்ணாமல் பழையபடி வைக்கோலையும், குப்பைகளையும், செத்தைகளையும் வாரிக்கொண்டே இருந்த ஒரு மனிதனின் காட்சி”
“மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமையாகிய மாய லோகச் சரக்குகள்” விற்பனை செய்யப்பட்ட மாயாபுரிச் சந்தையில் கிறிஸ்தியானும், அவரது தோழர் உண்மை யும் அவைகளை கண் ஏறிட்டுக்கூட பார்க்காமல் சென்ற காட்சிகள் போன்றவைகள் என் உள்ளத்தைவிட்டு விலகவே இல்லை. ஆனந்தமலை மேய்ப்பர்கள் தங்கள் வசமிருந்த தொலை நோக்கு கண்ணாடி மூலமாக உச்சித பட்டணத்தின் அலங்கார வாசலை மோட்ச பிரயாணிகளுக்கு காட்டின காட்சி எல்லாம் என் உள்ளத்தில் நீங்காமல் நிலைத்துவிட்டது. “உம்மோடிருக்கவும், உம்மைப் போற்றவும் இதோ வருகிறேன்” என்று கிறிஸ்தியானின் மனைவி கிறிஸ்தீனாள் மோட்ச பிரயாண யாத்திரையின் முடிவில் பாடிக் கொண்டு மோட்சத்திற்கு பறந்து சென்ற காட்சியின் படம் என்னை வெகுவாக கவர்ந்தது. கிறிஸ்தீனாள் பாடிப் பறந்து சென்ற அந்த மோட்ச காட்சியை நீங்கள் இங்கு காணலாம் இந்தக் காட்சிகள் எல்லாம் பசுமரத்தாணி போல என் உள்ளத்தில் பதிந்துவிட்டது.
அந்த நாட்களில் நான் படித்த அவை எல்லாவற்றையும் நீங்கள் உங்கள் கரத்திலுள்ள “மோட்ச பிரயாணம்” புத்தகத்தில் இப்பொழுது படிக்கப் போகின்றீர்கள். நீங்கள் பாக்கியசாலிகள். கிறிஸ்தியானும் கிறிஸ்தீனாளும் அவர்களோடு சென்ற மோட்ச பிரயாணிகள் யாவரும் பாதுகாப்பாக சென்றடைந்த உச்சித பட்டணம் சென்றடைந்து விடவேண்டும் என்ற மிகுந்த தாகத்தோடும், ஏக்கத் தோடும், ஜெபத்தோடும் இந்தப் புஸ்தகத்தை வாசியுங்கள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகத்தை திரும்பத் திரும்ப வாசியுங்கள். இங்கிலாந்து தேச ராட்சத தேவ மனிதர் சார்லஸ் ஸ்பர்ஜன் இந்தப் புத்தகத்தை 100 தடவைகள் வாசித்திருக்கின்றாராம். ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா! அந்த மோட்ச பிரயாண புத்தகத்தின் எந்த ஒரு இடத்தில் நீங்கள் ஊசியால் குத்தினாலும் தேவனுடைய வார்த்தை என்ற BIBILINE சுரந்து வருவதை நீங்கள் காண்பீர்கள் என்று அவர் மிகவும் பரவசமாக அதைக் குறித்து எழுதியிருக்கின்றார்.
பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்படும் இந்த அருமையான பரிசுத்த புத்தகம் உலகத்தின் எல்லா மொழிகளிலும் தேவ நாம மகிமைக்காக மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் ஒரு மாட்சிமையான சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்தப் புத்தகம் முழுவதையும் அதின் ஆக்கியோன் ஜாண் பன்னியன் என்பவர் தேவனுடைய பரிசுத்த வசனங்களால் அலங்கரித்திருக்கின்றார் என்பதுதான். மோட்ச பிரயாணத்தை எழுதிய அந்த பரிசுத்த பக்தன் ஜாண் பன்னியன் அவர்களின் வாழ்க்கைச் சரித்திரம் இந்தப் புத்தகத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதையும் தவறாது வாசித்து விடுங்கள். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் a, b, c, d என்ற ஆங்கில எழுத்துக் களின் அடைமொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தேவனுடைய வசனங்களையும் 1, 2, 3, 4 என்ற தலைப்பில் விளக்கம் தரப்பட்டுள்ள பகுதிகளையும் மறவாது எடுத்து வாசித்துக் கொள்ளுங்கள். திரண்ட தேவ ஆசீர்வாதம் காண்பீர்கள்.
கடந்த நாட்களில் “அன்பரின் நேசம்” “பரிசுத்த பக்த சிரோன்மணிகள்” என்ற இரண்டு புத்தகங்களை நான் உங்களுக்கு அன்பளிப்பாக தந்தது போல இந்த மோட்ச பிரயாணம் புத்தகத்தையும் எனது முழுமையான அன்பளிப்பு புத்தகமாக மிகுந்த மகிழ்ச்சியோடும், ஜெபத்தோடும் உங்கள் கரங்களில் தருகின்றேன். இதை அச்சிட்டு வெளியிட ஒரு பெருந் தொகை நமக்கு தேவைப் பட்டது. ஐசுவரிய சம்மன்னராம் நம் அன்பின் தேவன் தாமே நமது தேவைகளை எல்லாம் தமது பரிசுத்த பிள்ளைகளின் மூலமாக ஆச்சரியம் அற்புதமாக சந்தித்தார்.
இந்த பரிசுத்த புத்தகத்தை நீங்கள் வாசித்த பின்பு உங்களுக்கு அருமையானவர்களும் வாசித்து அவர்களும் உச்சித மோட்ச பட்டணவாசிகளாகிவிடும் பாக்கியத்தை பெற்றுக் கொள்ளும்படியாக அவர்களும் வாசிக்கும்படியாக இதனை ஜெபத்தோடு அவர்களுக்கும் கொடுங்கள். தேவகிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
உங்கள் அன்புள்ள சகோதரன்,
N.சாமுவேல்
ஆசிரியர் “தேவ எக்காளம்”
கோத்தகிரி
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்