சார்லஸ் ஹட்டன் ஸ்பர்ஜன் (1834 – 1892)
“அருமை இரட்சகர் இயேசுவை அவரது பணப்பைக்காக பின்பற்றிச் செல்லும் தேவ ஊழியன் முதல் தரமான யூதாஸ் காரியோத் ஆவான்”
“தேவனை தன் பிராண சிநேகிதனாகக் கொண்டிருக்கும் மனிதன் இந்த உலகத்தில் இழந்து போவதற்கு ஒன்றுமே இல்லை”
“இந்த உலகத்தில் பரலோகத்திற்காக தங்களை நன்கு ஆயத்தப்படுத்திக் கொண்ட மக்களுக்காக தேவனால் நன்கு ஆயத்தம் செய்யப்பட்டுள்ள இடம் பரலோகமாகும்”
“நீ மோட்சம் சென்று அங்கு வாழும் முன்னர், மோட்சம் உன் இருதயத்தில் ஆரம்பித்து அதின் பாக்கியங்களை உன்னளவில் பூலோகத்திலேயே நீ அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்”
“உன்னைச் சந்திக்கக்கூடிய எதிர்பாராத திடீர் மரணத்திற்காக நீ உன்னை நன்கு ஆயத்தப்படுத்திக் கொள். மரணம் உன்னை சடுதியாக திடீர் என்று சந்திக்காத போதினும் அது சீக்கிரமாக உன்னை வந்து சந்தித்து விட்டு சீக்கிரமாகவே போய்விடும்”
“பேசுவதற்கு ஒன்றுமே இல்லாவிட்டால், ஒன்றுமே பேசாமல் அப்படியே அமைதியாக இருந்துவிடு”
“நரகம் என்பது நரகத்தைப் பற்றிய நிச்சயமான உண்மையை காலம் தாழ்த்திக் கண்டு பிடிப்பதாகும்”
“நீ இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே உனது சொந்த சாவுப் பிரசங்கத்தை நீயே பிரசங்கித்துவிடு”
“நீ ஜெபிக்கவில்லை என்றால் நீ கிறிஸ்தவனே இல்லை. ஜெபிக்காத ஆத்துமா கிறிஸ்து இல்லாத ஆத்துமாவாகும். உடன்படிக்கையின் தூதனானவருடன் போராடி வெற்றி வீரனாக நீ வெளி வராத பட்சத்தில் தேவ ஜனத்தோடு உனக்கு எந்த ஒரு சுதந்திர வீதமும் கிடையாது. ஜெபம், ஒரு மெய்யான தேவ பிள்ளையின் அழிக்க இயலாத பளிச்சிடும் நெற்றிப் பொட்டு அடையாளமாகும்”
“நாம் எல்லாரும் பெருமை உள்ளவர்களாக இருக்கின்றோம். பெருமையானது, பிச்சைக்காரனின் கந்தை துணிகளுக்குள்ளும், அதே சமயம் பட்டணத்து நகராண்மைத் தலைவரின் அங்கிகளுக்குள்ளும் தன்னை மறைத்துக் கொள்ளக் கூடிய மிகுந்த சாமர்த்தியமுள்ளது. பெருமை என்ற அந்த நச்சுக் களையானது, நாற்றமான சாணிக் குழியிலும், அதே சமயம் மன்னரின் பூங்காவனத்திலும் செழித்தோங்கி வளரக்கூடியது. ஆனால் எந்த ஒரு நிலையிலும் ஒரு கிறிஸ்தவனின் இருதயத்தில் அதை வளர அனுமதித்துவிடக் கூடவே கூடாது”
“நான் மோட்சத்தைக் குறித்து மிகவும் நிச்சயமுடையனாக இருக்கின்றேன். அதைக் குறித்து நான் பெருமைப்படுகின்றேன்” என்று ஒருவன் தன்னைக் குறித்து மிகைப்படுத்திச் சொல்லுவானானால் “அவன் எரி நரகத்திற்கு மிகவும் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டவன்” என்ற எனது வார்த்தையை ஏற்றுக் கொள்ளுவானாக. உனது பக்தி உன்னை அப்படிப் பேசச் செய்யுமானால் அந்த பக்தியை உன்னை விட்டு தூக்கி எறிந்து போடு. அது பேசத்தகுதியான ஒரு வார்த்தையல்ல”
“கிறிஸ்தவனே, கிறிஸ்துவானவர் உன்னைத் தமக்கென்று உருவாக்கினார். உண்மைதான், அவர் உன்னை இரண்டு தடவைகள் தமக்கென்று உருவாக்கினார். எனவே, உனது ஆவி, ஆத்துமா, சரீரத்தை அவரது ஆளுகைக்கு ஒப்புவி. உனது காலம், உனது பெலன், உனது உடமைகள் யாவையும் அந்த இரட்சகரின் மகிமைக்காக, ஆம், அவருக்காகவே செலவிடு. நீ அப்படிச் செய்வாயானால் உன்னைச் சிருஷ்டித்த கர்த்தாவின் மாபெரும் தேவ நோக்கத்தை நீ நிறைவு செய்கின்றாய் என்பதை திட்டமாக உன் மனதில் வைத்துக்கொள்”
“நீ கிறிஸ்தவனானால் உன்னை ஒரு கிறிஸ்தவனாக உலகத்துக்குக் காண்பி. நீ கிறிஸ்து இரட்சகரைப் பின்பற்றுவாயானால் பாளையத்துக்குப் புறம்பாகச் சென்று கிறிஸ்துவுக்குள்ளான உனது அச்ச அடையாளத்தை உலகுக்கு வெளிப்படுத்து. உனக்கும், உன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும், வேறுபாடும் காணப்படாத பட்சத்தில் ராஜா கலியாண வீட்டிற்கு வரும் நாளில் மற்றவர்களிடமிருந்து உன்னை வேறுபடுத்திக் காண்பிக்கும் உனது கலியாண வஸ்திரம் உனக்கு இல்லாததைக் குறித்து நீ அவருக்கு என்ன பதில் கூறப்போகின்றாய்?”
“ஆண்டவரை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு பெண்ணிடம் “மனந்திரும்புவதற்கு முன்பும், மனந்திரும்பிய பின்னரும் அவள் ஏறெடுத்த ஜெபத்தின் வித்தியாசம் என்ன?” என்று கேட்ட போது அவள் இவ்வாறு பதிலளித்தாள். “மனந்திரும்புவதற்கு முன்னால் எனது அம்மா எனக்கு எப்படி ஜெபிக்க வேண்டுமென்று கற்பித்தார்களோ அப்படியே நான் ஜெபித்தேன். ஆனால் நான் மறுபடியும் பிறந்து ஆண்டவருடைய பிள்ளையான பின்னர் அவர் என் உள்ளத்தில் ஏவுகின்ற விதத்தில் அவர் எனக்குப் போதிக்கும் வண்ணமாக ஜெபிக்கின்றேன்” என்று பதில் அளித்தாள். ஆ, எத்தனை ஆசீர்வதிக்கப்பட்ட மகத்தான மாறுதல் பாருங்கள்!”
“கிறிஸ்தவன் என்றால் தனது வீட்டுக்குள் கதவைப் பூட்டி அமர்ந்து ஒரு சந்நியாசி ஆகி அதின் மூலம் பரிசுத்தத்தை உருவாக்குவது என்று அவன் நினைப்பானானால் அது பரிசுத்தமாகாது. அது பரிசுத்த குலைச்சலானது. கிறிஸ்தவ பரிசுத்தம் என்பது வெளியே சமுதாயத்துக்கு வரக்கூடியது. அது உலகத்துக்கு ஒளியானது. அது பூமிக்கு உப்பானது. நாம் உலகத்தாராக இல்லாவிட்டாலும் உலகத்தில்தான் இருக்க வேண்டும். நமது ஆசாரியத்துவம் தெருக்களிலும், வீதிகளிலும், குடும்பத்திலும், குழுவாகக் கூடி அமரும் கணப்பு அடுப்பண்டையிலும் நிரூபித்துக் காட்டப்பட வேண்டியதொன்றாகும். இரவும், பகலும், ஜெபங்களிலும், துதி ஸ்தோத்திரங்களிலும், நன்றி பலிகளை ஏறெடுப்பதன் மூலமாக அவன் ஒரு பூரணமான ஆசாரியனாகின்றான்”
இப்படி ஏராளமான பரிசுத்த மணி மொழிகளை உதிர்த்தவர்தான் மாபெரும் பரிசுத்தவானும், பிரசங்க மன்னாதி மன்னரான (Prince of Preachers) சார்லஸ் ஹட்டன் ஸ்பர்ஜன் ஆவார்.
19 ஆம் நுற்றாண்டில் டி.எல். மூடி எவ்வண்ணமாக அமெரிக்காவில் தன் அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காக எரிந்து ஜொலித்து பிரகாசித்தாரோ அவ்வாறே சார்லஸ் ஹட்டன் ஸ்பர்ஜன், இங்கிலாந்து தேசத்தில் தன் நேச இரட்சகர் இயேசுவுக்காக ஒளி வீசிப் பிரகாசித்தார். ஸ்பர்ஜன் எந்த ஒரு வேதாகம கல்லூரிக்கும் சென்று வேதசாஸ்திரம் படித்தவர் அல்ல. எனினும், தனது 21 ஆம் வயதில் லண்டன் மாநகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பிரசங்கியானார். லண்டனிலுள்ள எக்ஸ்டர் ஹாலிலும், சர்ரே மியூசிக் ஹாலிலும் 10000 க்கும் அதிகமான மக்கள் கூட்டங்களில் அவர் பேசியிருக்கின்றார். அதின் பின்னர் மெட்ரோ போலிட்டன் தேவாலயத்தை அவர் தோற்றுவித்ததின் பின்னர் ஒவ்வொரு ஓய்வு நாளிலும் பல்லாயிரம் மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கும் பிரசங்கியாக நீண்ட 40 ஆண்டுகள் அவர் தேவனுக்கு ஊழியம் செய்தார்.
தனது பொறுப்பான குருவானவர் ஊழியத்தின் மத்தியில் அவர் ஓய்வு நாள் பள்ளிகளையும், தேவாலயங்களையும் தோற்றுவித்து நடத்தினார். அநாதை குழந்தைகளுக்காக ஒரு அநாதை இல்லத்தையும், தேவ ஊழியர்கள் இறையியல் கற்பதற்காக ஒரு வேதாகம கல்லூரியையும் அவர் தோற்றுவித்து நடத்தி வந்தார். “பட்டயமும், சாந்துக்கரண்டியும்” (Sword and the Trowel) என்ற பிரபல்யமான ஆவிக்குரிய மாதாந்திர கிறிஸ்தவ பத்திரிக்கையை தனது மரணபரியந்தம் அதாவது 25 ஆண்டு காலமாக அவர் அச்சிட்டு வெளியிட்டார். அவர் எழுதிய கிறிஸ்தவ புத்தகங்கள் ஏராளம் ஏராளமாகும். அவருடைய வேதாகம வியாக்கியான புத்தகங்கள் (Bible Commentaries) தேவ ஊழியர்களால் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. நல்ல தரமான கிறிஸ்தவ துண்டு பிரதிகளையும், இலட்சாதி இலட்சம் கிறிஸ்தவ பிரசுரங்களையும் அவர் பிரசுரித்து உலகமெங்கும் விநியோகித்தார். அவர் மக்களுக்கு பிரசங்கித்த பிரசங்கங்கள் புத்தகங்களாக அச்சடிக்கப்பட்டு கிறிஸ்தவ உலகமெங்கும் இன்றும் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகத்தின் பல்வேறு மொழிகளிலும் அவைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
ஸ்பர்ஜன் தனது 16 ஆம் வயதில் தன்னைத் தமது பரிசுத்த நாம் மகிமைக்காக தெரிந்து கொண்ட தன் அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காக மிகுந்த உண்மையோடும், உத்தமத்தோடும் இராப்பகலாக அயராது பாடுபட்டு உழைத்து அநேக ஆயிரம் மக்களை ஆண்டவரண்டை வழி நடத்தினார். அந்த மாபெரும் தேவ மனிதரின் வாழ்க்கைச் சரித்திரத்தின் இரத்தினச் சுருக்கத்தை கீழே உங்களுக்கு ஜெபத்தோடு மொழி பெயர்த்து தந்திருக்கின்றேன். ஜெப நிலையில் நீங்களும் அதை வாசித்து உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை ஆசீர்வாதமாக்கிக் கொள்ளுங்கள். அந்தப் பரிசுத்தவானைப்போல நீங்களும் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக தேவ பெலத்தால் எழும்பிப் பிரகாசியுங்கள்.
ஸ்பர்ஜனின் பிறப்பு
இங்கிலாந்து தேசத்திலுள்ள எஸ்ஸக்ஸ் என்ற குக்கிராமத்தில் கெல்விடன் என்ற பகுதியிலுள்ள 200 ஆண்டு பழமையான பண்டைய காலத்து வீட்டில் இந்தியாவிலுள்ள மாபெரும் மிஷனரி வில்லியம் கேரி என்பவர் இறந்த 10 நாட்களில் அதாவது 1834 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் நாள் சார்லஸ் ஹட்டன் ஸ்பர்ஜன் பிறந்தார். ஸ்பர்ஜன் பிறந்த வீட்டை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
ஸ்பர்ஜனின் தாயாருடைய பெயர் எலிசா ஜார்விஸ் என்பதாகும். அந்த அம்மையாருக்குத் திருமணமாகும் போது 19 வயதுக்கும் சற்றே கூடுதலாக இருக்கும். அவருடைய தந்தை தாமஸ் ஸ்பர்ஜனுக்கு அப்பொழுது 24 வயதாக இருந்தது. அவருடைய பெற்றோருக்கு 17 பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் 9 பேர் சிசு பிராயங்களிலேயே மரணம் அடைந்து விட்டனர். ஸ்பர்ஜன் உலகப்புகழ் பெற்ற பிரசங்கியாராக தேவனால் முன் குறிக்கப்பட்டு விட்டார். அதின் முன் அடையாளங்கள் அவர் சிறுவனாக இருந்த நாட்களிலிருந்தே வெளி உலகுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது. அவர் சிறுவனாக இருக்கும்போதே தன்னுடைய பெற்றோரின் கோல் ஷெஸ்டர் என்ற இடத்திலிருந்த வீட்டில் தனது சகோதரர்களையும், சகோதரிகளையும் தனக்கு முன்பாகக் கூடி வரச் செய்து தேவாலயத்தில் நடக்கும் ஆராதனைகளைப்போன்ற ஆராதனைகளை அரங்கேற்றம் செய்து பிரசங்கிப்பார். அவரது வாழ்வின் அனுபவங்களை அவரது வாயாலேயே சொல்ல நாம் கேட்போம்.
எனது குழந்தைப் பருவ நினைவுகள்
(1)
எனது தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஸ்டாம்போர்ன் என்ற இடத்தில் நான் செலவிட்ட எனது அநேக விடுமுறை நாட்களில் ஒரு தடவை நான் அவர்களுடன் செலவிட்ட லீவு நாட்களை என்னால் என்றும் மறக்கவே இயலாது. தேவ மனிதர் ஐசக் வாட்ஸ் என்பவர் எழுதிய ஞானப்பாடல்கள் எனது தாத்தாவுக்கு மிகவும் விருப்பமாகும். அந்தப் பாடல்களை நான் மனப்பாடமாகப் படிக்கவும் அப்படி மனப்பாடமாகப் படிக்கின்ற ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பென்னி நாணயம் வெகுமதியாக தருவதாகவும் எனது பாட்டி என்னிடம் சொன்னார்கள். பணம் சம்பாதிப்பதற்கு மிகுந்த எளிமையான வழி எனக்கு கிடைத்ததை எண்ணி மனம் மகிழ்ந்து அநேகம் பாடல்களை நான் மனப்பாடமாகப் படித்து முடித்து பாட்டியிடம் சொல்லி நிறைய காசுகள் சம்பாதித்தேன். நான் விரைவாக ஞானப்பாடல்களை மனப்பாடமாக படிப்பதைக் கண்ட எனது பாட்டியம்மா பாடல் ஒன்றுக்கு இனி அரை பென்னி நாணயம் மட்டுமே எனக்குத் தருவதாக சொன்னார்கள். அதிலும் நான் துரிதம் காண்பிக்கவே ஒரு பார்திங் நாணயமாக அதைக் குறைத்தார்கள். இந்தச் சமயம் எலிகளின் தொல்லையால் கஷ்டப்பட்ட எனது தாத்தா நான் கொல்லுகின்ற ஒவ்வொரு 12 எலிகளுக்கு ஒரு ஷில்லிங் நாணயம் தருவதாக எனக்கு உறுதி கொடுத்தார்கள். அதினால் ஞானப்பாடல்களை மனப்பாடமாக படிப்பதிலிருந்து எலிகளைக் கொல்லும் வேலைக்கு நான் திரும்பினேன். அதின் மூலம் எனக்கு நிறைய காசு கிடைத்தது. அந்த வேலையின் மூலம் அப்பொழுது எனக்கு நிறைய பணம் கிடைத்த போதினும் நான் மனப்பாடமாக ஒப்புவித்த பாடல்களின் மூலமாக நான் அடைந்த ஞான நன்மை மிகப் பெரிதாகும். அது இன்று வரை என் உள்ளத்தில் அப்படியே நிலைத்து நிற்கின்றது. எனது பிரசங்கங்களின் போது அன்று நான் பாராமல் படித்த அந்த ஞானப்பாட்டுகளின் அடிகளையும் குறிப்பிட்டு மக்களுக்குப் பிரசங்கிக்கின்றேன். அது மக்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றது. கர்த்தருக்கே மகிமை.
(2)
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எங்களுடைய தோட்டத்திலுள்ள நிலத்தில் விதைகளை முளைக்கும்படியாக ஊன்றுவோம். அப்படி ஊன்றிய விதைகள் முளைத்திருக்கின்றதா என்று அடுத்த நாளிலேயே நான் தோட்டத்திற்குச் சென்று மண்ணைக் கிளறி விதையைப் பார்ப்பேன். இப்படி ஒவ்வொரு நாளும் நான் மண்ணைத் தோண்டி விதைகளைப் பார்த்தவனாக இருப்பேன். அந்தச் செயல் “சிறு பிள்ளைத்தனமானது” என்று நீங்கள் கட்டாயம் சொல்லுவீர்கள். அதை அப்படியே நானும் ஒத்துக் கொள்ளுகின்றேன்.
ஆனால், நீங்களும் அப்படித்தான் தேவனை நோக்கி உங்கள் காரியங்களுக்காக ஜெபம் ஏறெடுத்துவிட்டு தேவன் தம்முடைய வேளையில் அதற்கான பதிலைத் தருவார் என்று விசுவாசித்து கர்த்தருக்கு பொறுமையாக காத்திராமல் உங்கள் இஷ்டம் போல உடனே அதற்கு உத்தரவு கொடுக்கும்படியாக அவரை நீங்கள் எதிர் நோக்குகின்றீர்கள் அல்லவா?
(3)
நாங்கள் பள்ளிக்குச் செல்லும்போது எங்கள் சிலேட்டுகளில் வீடு, குதிரை போன்றவைகளை வரைந்து அவைகளுக்குக் கீழாக “வீடு” “குதிரை” என்று எழுதி விடுவோம். நாங்கள் வரைந்த குதிரையானது வீட்டைப்போல இருக்கின்றதே என்று அதைப் பார்க்கின்றவர்கள் எண்ணிக் கொள்ளக் கூடாது என்பதற்காக நாங்கள் அப்படி எழுதுவோம். அதைப் போலவே இன்று கிறிஸ்தவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களுக்குரிய எந்த ஒரு பரிசுத்த குண நலன்கள் கொண்டவர்கள் அல்லவே அல்ல என்று மற்றவர்களால் அடையாளம் கண்டு கொள்ளுவதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்படியாக தங்கள் கழுத்தைச் சுற்றிலும் “கிறிஸ்தவர்கள்” என்ற அடையாள அட்டையைக் கட்டி தொங்கவிட்டுக் கொண்டு அலைகின்றனர். மற்றபடி நாம் அவர்களை அவர்கள் சீர்கெட்ட வாழ்க்கையின் நடத்தையைக் கொண்டு “துன்மார்க்கர்” “பாவிகள்” “அக்கிரமக்காரர்” என்று அழைத்துவிடுவோம் அல்லவா?
(4)
நான் மிகவும் சிறுவனாகப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது சிலேட்டில் எழுதுகின்ற ஒரு சிலேட் பென்சில் (எழுதுகோல்) எனக்குத் தேவைப்பட்டது. அடிக்கடி நான் எனது சிலேட் பென்சில்களைத் தொலைத்து வந்த காரணத்தால் அதற்காக வீட்டில் அதைக் கேட்பதற்கும் நான் பயப்பட்டு ஊரிலுள்ள பாட்டியம்மா பியர்சன் வைத்திருக்கும் பெட்டிக் கடையில் ஒரு சிலேட் பென்சில் கடனுக்காக வாங்கிவிடலாம் என்று என் மனதில் எண்ணினேன். வருகிற கிறிஸ்மஸ் கால நாட்களில் நமக்குக் கிடைக்கும் ஒரு பென்னி அல்லது நமது அதிர்ஷ்டம் 6 பென்னிகளைக் கொண்ட ஒரு வெள்ளிப் பணம் கிடைத்துவிட்டால் அதிலிருந்து நாம் நமது கடனை வெகு சுலபமாக அடைத்துவிடலாம் என்று நான் என் மனதில் எண்ணிக்கொண்டு கடைக்குச் சென்று ஒரு சிலேட் பென்சிலுக்காக கடன்பட்டுவிட்டேன். நான் பட்ட கடன் ஒரு பார்த்திங் மட்டுமேதான் இதற்கு முன்பாக நான் எவரிடமும் கடன்பட்டதே கிடையாது. அந்தச் செயல் என் உள்ளத்தை அலைக்கழிப்பதாகவும், ஏதோ நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதான ஒரு குற்ற உணர்வையும் எனக்குள் ஏற்படுத்திற்று. நான் கடனுக்காக ஒரு சிலேட் பென்சில் வாங்கியிருக்கின்றேன் என்ற செய்தியை யாரோ அல்லது எந்த ஒரு சின்னப் பறவையோ, அல்லது யாரோ ஒரு தேவ தூதனோ எனது தந்தையின் காதிற்குள் கூறிவிட்டார்கள். அவ்வளவுதான், உடனே அவர்கள் என்னண்டை ஓடி வந்து எனது மண்டையில் ஒரு அடி கொடுத்து ஒரு பெரிய பிரசங்கமே அன்று எனக்குச் செய்துவிட்டார்கள். கடன் வாங்குவது என்பது திருடுவது போன்ற கொடும் பாவத்திற்குச் சமானமாகும். இன்று ஒரு பார்திங் கடன்படலாம், நாளை இதே அனுபவம் 100 பவுண்டுகள் கடன்பட்டுக் கொடுக்க முடியாத காரணத்தால் தீய வழிகளுக்குச் சென்று சிறைக்கூடத்திற்கு அது நம்மை வழி நடத்திச் செல்லும். அத்துடன் நமது கண்ணியமான குடும்பத்திற்கு அது அவமானத்தைக் கொண்டு வரும் என்று அப்பா செய்த அந்தப் பிரசங்கத்தை நான்இன்றும் எனது காதுகளில் கேட்கின்றவனாக இருக்கின்றேன்.
அந்தக் கணமே தனது ராணுவத்துக்கு துரோகம் செய்த ஒரு போர் வீரன் வெட்கத்தோடு தனது பாளையத்துக்குத் திரும்பிச் செல்லுபவனைப்போன்று நான் கோவென்று தெரு வழியாக அழுது கொண்டே எனது கடனை திருப்பிச் செலுத்தச் சென்றேன். அநேக எச்சரிப்புகளின் மத்தியில் எனது தகப்பனார் அந்த ஒரு பார்திங்கை எனக்குக் கொடுத்திருந்தார். நான் கடன்பட்ட காரியம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்று எண்ணி நான் பயந்து நடுங்கினேன். நான் போய் அந்தக் கடனை செலுத்தியபோது என் உள்ளம் கூண்டிலிருந்து விடுபட்ட பறவையைப் போல எனக்குள் சுதந்திரம் அடைந்தது. எந்த ஒரு சூழ்நிலையிலும் எவருக்கும் இனி கடன்பட மாட்டேன் என்று உறுதியான ஒரு தீர்மானத்தை அந்த நாளில் நான் எடுத்தேன். அதை இந்நாள் வரைக்கும் தேவ பெலத்தால் மிகவும் உறுதியாக கடைப் பிடித்து வருகின்றேன். மார்ட்டின் லூத்தர், போப் ஆண்டவரை எப்படி வெறுத்துத் தள்ளினாரோ அதைப் போன்று நானும் கடன்படுவதை வெறுத்துத் தள்ளுகின்றேன். அதுதான் நான் என் வாழ்வில் பட்ட முதலும் கடைசி கடனுமாகும். அன்பின் ஆண்டவர் எனது பரிசுத்த தகப்பனாரை ஆசீர்வதிப்பாராக.
(5)
நான் ஆறு வயது சிறுவனாக இருந்தபோது எங்கள் குடும்ப ஜெபத்தில் என்னை தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும்படியாகச் சொல்லுவார்கள். அப்படி நான் ஒரு தடவை வாசித்தபோது வெளிப்படுத்தின விசேஷத்தில் பாதாளக் குழி (The Bottomless Pit) (வெளி 9 : 1) என்ற வார்த்தையைக் கண்டு அருகிலிருந்த தாத்தாவிடம் அது குறித்துக் கேட்டேன். ” பூ……………………பூ……………………. குழந்தாய் தொடர்ந்து வாசி” என்று சொல்லி எனது கேள்விக்கு பதில் சொல்லாமல் வேண்டுமென்றே அவர்கள் இருந்துவிட்டார்கள். நானும் காலையிலும், மாலையிலும் அதே பகுதியை எடுத்து வாசித்து தாத்தாவிடம் தொடர்ந்து அதற்கு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தேன்.
எனது குழந்தை உள்ளம் பயத்தால் திகிலடையத்தக்கதாக தாத்தா ஒரு நாள் அதற்கான விளக்கம் கொடுத்தார்கள். பாதாளக் குழி என்றால் அது ஒரு மிக ஆழமான இருண்ட குழியாகும். அதில் போடப்படும் நஷ்டப்பட்ட ஆத்துமா வெகு வேகமாக அதில் விழும். அந்த ஆத்துமா குழியிலிருந்து மேலே பார்க்கும் போது அந்தக் குழியின் முகப்பிலுள்ள ஒளி தெரிந்து கொண்டே இருக்கும். அந்த ஆத்துமா அந்தப் பாதாளக் குழியின் அடியில் வேகமாகச் செல்லச் செல்ல குழியின் முகப்பு ஒளி கொஞ்சம் கொஞ்சமாக பூரணமாக மறைந்து இருளுக்குள் அது சென்று கொண்டே இருக்கும். ஒரு ஆயிரம் ஆண்டுகள் கடந்து சென்ற போதினும் அந்த ஆத்துமா குழிக்குள் இன்னும் போய்க் கொண்டே இருக்கும். 10 லட்சம் ஆண்டுகளானாலும் அந்த ஆத்துமா குழிக்குள் இன்னும் அடித்தளம் வந்து சேராமல் தனது பிரயாணத்திலேயே இருக்கும். ஆம், அந்த ஆத்துமா அடித்தளம் இல்லாத அந்த குழிக்குள் காலாகாலங்களாக ஒரு முடிவு வந்தது என்ற நம்பிக்கை இல்லாமல் விரைந்து சென்று கொண்டே இருக்கும் என்று கூறினார். தாத்தாவின் அந்த வார்த்தைகள் என்னைக் கதிகலங்கப்பண்ணுவதாகவும், நடுநடுங்கப் பண்ணுவதாகவும் இருந்தது.
(6)
எனது தாத்தா குருவானவராக பணி செய்து கொண்டிருந்த ஸ்டாம்போர்ன் என்ற இடத்திலுள்ள திருச்சபையில் ரோட்ஸ் என்ற ஒருவர் திருச்சபையின் அங்கத்தினராக இருந்தார். அவர் ஒரு குடிகாரர். அத்துடன் அவர் தனது புகையிலை குழலையும் நன்கு பயன்படுத்தி புகை பிடிப்பார். ரோட்ஸ் என்பவரின் தேவனுக்கு பிரியமற்ற நடபடிகளால் எனது தாத்தா மிகவும் மனமடிவானார்கள். அந்த மனிதரின் ஆத்துமத்தின் நிலை குறித்து அவர்கள் அடிக்கடி பெருமூச்செறிவார்கள்.
தனது தாத்தாவின் கவலையை உணர்ந்த ஸ்பர்ஜன் ஒரு நாள் திடீரென அவருக்கு முன்பாக வந்து நின்று “தாத்தா, நான் அந்த கிழவர் ரோட்ஸ் ஐ கொல்லுவேன், ஆம், அப்படியே நான் செய்யப் போகின்றேன்” என்றார். “என் அன்பே, சப்தம் செய்யாதே, நீ அந்தவிதமாக ஒருக்காலும் பேசக்கூடாது. அது முற்றும் தவறாகும். நீ அப்படிப் பேசினால் போலீஸார் வந்து உன்னைப் பிடித்துக் கொண்டு சென்று விடுவார்கள்” என்றார் அந்த நல்ல போதகர். “நான் எந்த ஒரு கெட்ட காரியமும் செய்ய மாட்டேன். ஆனால், நான் அந்த மனிதரை கொல்லவே செய்வேன்” என்றார் ஸ்பர்ஜன். அவருடைய தாத்தாவுக்கு ஸ்பர்ஜனின் வார்த்தைகள் ஆச்சரியத்தைக் கொடுத்ததுடன் தனது பேரக் குழந்தை தான் தவறு என்று உணர்ந்த எந்த ஒரு காரியத்தையும் கட்டாயம் செய்யவே மாட்டான் என்று அந்தக் காரியத்தை அப்படியே விட்டுவிட்டார்கள்.
சில நாட்களுக்குப் பின்னர் ஸ்பர்ஜன் தனது தாத்தாவுக்கு முன்பாக வந்து நின்று “நான் அந்த கிழவர் ரோட்ஸ் ஐ நான் உங்களிடம் சொன்னபடியே கொன்றுவிட்டேன். இனி அந்த மனிதன் உங்கள் உள்ளத்தை ஒருக்காலும் புண்படுத்த மாட்டார்” என்றார் ஸ்பர்ஜன். “என் அன்புக் குழந்தாய், நீ என்ன காரியம் செய்தாய்? நீ எங்கு சென்றிருந்தாய்?” என்று அவருடைய தாத்தா கேட்டார். “நான் எவருக்கும் தீங்கு செய்யமாட்டேன். நான் ஆண்டவருடைய காரியமாகவே சென்றிருந்தேன்” என்றார் ஸ்பர்ஜன். மேற்கொண்டு எந்த ஒரு விபரத்தையும் அந்த தேவ மனிதரால் தனது பேரக் குழந்தை ஸ்பர்ஜனிடமிருந்து பெறவே முடியவில்லை.
ஆனால், நீண்ட நாட்கள் கடந்து செல்லுவதற்கு முன்பதாகவே அந்தக் குடிகார மனிதர் ரோட்ஸ் என்பவர் தனது குருவானவரைக் காண அவரது வீட்டிற்கு ஒரு நாள் வந்து சேர்ந்தார். தான் சிறுவன் ஸ்பர்ஜனால் எப்படிக் கொல்லப்பட்டேன் என்பதைச் சொல்ல அவர்அங்கு வந்திருந்தார். “என் அருமை குருவானவரே, நான் மிகவும் வருத்தமடைகின்றேன். நான் உங்களை வெகுவாக துயரத்துக்குள்ளாக்கி விட்டேன். அது மிகவும் தவறாகும் என்பதை நான் அறிவேன். ஆனால், நான் உங்களை அதிகமாக நேசிக்கின்றேன். அந்தக் காரியம் உங்கள் உள்ளத்தை இந்த அளவுக்கு புண்படுத்தும் என்பதை நான் அறிந்திருந்தால் நான் அந்த தவறைச் செய்திருக்க மாட்டேன்” என்றார் ரோட்ஸ். ” நான் வழக்கம் போல அன்று மதுபானக் கடையில் உட்கார்ந்து மதுபானம் அருந்திவிட்டு எனது புகையிலைக் குழலைப் புகைத்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் உங்கள் பேரக் குழந்தை எனக்கு முன்பாக வந்து நின்று தனது விரலை எனக்கு நேராக சுட்டிக் காண்பித்து “எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்? துன்மார்க்கருடன் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றாய். நீ கர்த்தருடைய சபையின் அங்கத்தினன். நிச்சயமாக உனது குருவானவருடைய உள்ளத்தை நீ உடைத்துக் கொண்டிருக்கின்றாய்” என்று கூறிவிட்டுப் போய்விட்டான். அந்த வார்த்தைகள் எனக்கு கடுமையான எரிச்சலை மூட்டியது உண்மையாயினும் குழந்தை சொன்ன வார்த்தை உண்மை என்பதை நான் என்னளவில் உணர்ந்து, என் இருதயத்தில் குத்துண்டு எனது கரத்திலிருந்த எனது புகை பிடிக்கும் குழலை வீசி எறிந்துவிட்டு, இனிமேல் மதுபானம் அருந்துவதில்லை என்றும் எனக்குள்ளாகப் பொருத்தனை செய்து கொண்டு ஒரு மறைவான இடத்திற்குச் சென்று எனது பாவங்களை அறிக்கையிட்டு தேவனுடைய இரக்கத்திற்காக அவரிடம் கெஞ்சினேன். தேவன் என் பாவங்களை எனக்கு மன்னித்து என்னைத் தமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்று நான் நிச்சயமாக நம்புகின்றேன்” என்று அந்தக் கிழவரான ரோட்ஸ் தனது குருவானவரிடம் கூறினார்.
எனது குழந்தைப் பருவ பக்தி நினைவுகள்
கர்த்தருடைய பேரன்பால் எனக்கு மிகவும் பக்தியுள்ள பெற்றோர் கிடைத்திருந்தனர். அவர்களுடைய பரிசுத்தமான கண்கள் என்னை எப்பொழுதும் கவனித்த வண்ணமாக இருந்தன. நான் ஏதாவது கெட்ட தோழர்களுடன் சேர்ந்து கெட்ட பழக்க வழக்கங்களை கைக்கொள்ளுகின்றேனா என்பதை அந்தக் கண்கள் கவனித்த வண்ணமாக இருந்தன. அத்துடன் சிறு பிரயாத்திலேயே நான் தேவனுடைய பரிசுத்த பாதையில் செல்லும்படியாக அவர்களால் போதிக்கப்பட்டேன். கர்த்தருக்குள் நான் என் அருமைப் பெற்றோருக்கு மிகவும் நன்றி கடன்பட்டுள்ளேன்.
ஓய்வு நாட்களின் மாலை வேளைகளில் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது எனது பக்தியுள்ள தாயார் எங்களோடு தனது நேரத்தை செலவிடுவார்கள். நாங்கள் எல்லாரும் மேஜையைச் சுற்றி அமர்ந்திருப்போம். எனது தாயார் பரிசுத்த வேதாகமத்தைத் திறந்து அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை தியானத்துக்காக எடுத்து ஒவ்வொரு வசனமாக வாசித்து அதை எங்களுக்கு விவரித்துக் காண்பிப்பார்கள். அதின் பின்னர், பரிசுத்த தேவ பக்தர்களான “ஜோசப் ஆலைன்” (Joseph Alleine) ” ரிச்சர்ட் பாக்ஸ்டர்” (Richard Baxter) என்ற பரிசுத்த பக்தர்கள் எழுதிய “எச்சரிக்கை” “மனந்திரும்பாதோருக்கு அவசர அழைப்பு” என்ற 2 புத்தகங்களிலிருந்தும், தனிப்பட்ட விதத்தில் எங்களுக்குப் பொருந்தக் கூடிய பகுதிகளை வாசித்து எங்களுடைய இரட்சிப்பின் காரியத்தைக் குறித்து எங்களிடம் கேள்விகள் கேட்பார்கள். எங்களுடைய ஆத்துமத்தின் காரியம் எப்படியிருக்கின்றது என்றும், எப்பொழுது நாங்கள் எங்களை கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப் போகின்றோம் என்றும் அவர்கள் எங்களிடம் கேட்பார்கள். அதற்கப்பால் என் அருமைத் தாயாரின் கண்ணீரின் ஜெபம் தொடரும். நான் வயதாகி நரைத்த ரோமங்களுடன் காணப்படும் இந்த நாட்களிலும் அவர்கள் ஒரு தடவை ஜெபித்த ஜெப வார்த்தைகளை இன்றும் நான் என் நினைவில் வைத்துள்ளேன். “தேவனே, எனது பிள்ளைகள் தங்களது பாவ வழிகளிலேயே தொடர்ந்து செல்லுவார்களானால் அவர்களது முடிவு அறியாமையின் காரணமாக இருப்பதற்கில்லை. காரணம், அவர்கள் சத்தியத்தை என் மூலமாக நன்கு அறிந்திருக்கின்றார்கள். உம்மை அவர்கள் பற்றிப்பிடித்துக் கொள்ளவில்லை என்றால் நியாயத்தீர்ப்பு நாளிலே நானே அவர்களுக்கு எதிரான உடனடி சாட்சியாக உமது சமூகத்தில் காணப்படுவேன்” என்று ஜெபித்தார்கள். அம்மா, அப்படி ஜெபித்த அவர்களின் ஜெபமானது எனது உள்ளத்தை ஊடுறுவக்குத்துவதாக இருந்தது. அந்த வார்த்தைகள் என் இருதயத்தை கிழர்ந்தெழும்பப் பண்ணிற்று. அதின் காரணமாக, நான் ஏதாவது எனது மனச் சாட்சிக்கு விரோதமாக அந்த நாளில் தவறு செய்திருந்தால் தேவனுக்கு முன்பாக எனது மன்னிப்புக்காக நான் கண்ணீர் சிந்தி அழுவேன். நான் ஆண்டவருடைய இரட்சிப்புக்குள் வந்த போது அவர் எனக்கு கொடுத்த மென்மையான உருகும் மனச்சாட்சிக்காக நான் அவருக்கு மிகுந்த நன்றியுடையோனாய் இருக்கின்றேன்.
பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராக வழிநடத்துவதில் பெற்ற தாய் தந்தையர் தேவனுடைய பிரதிநிதிகளாக இருக்கின்றனர். எனது வாலிபத்தில் எனது பக்தியுள்ள தாயாருடைய போதனைகளே யல்லாமல் வேறு எந்த ஒரு கிறிஸ்தவ பக்தி முயற்சிகளின் காரணமாக நான் இரட்சகர் இயேசுவின் மேல் ஒரு ஆழமான பக்தி உணர்வை பெற்றுக் கொள்ளவில்லை என்று நான் ஆணித்தரமாகக் கூறுவேன்.
எனக்கு முன்பாக தனது முழங்கால்களை முடக்கி எனது தோளின் மேல் தனது இரு கரங்களையும் போட்டு என்னை அப்படியே அரவணைத்துப் பிடித்து “தேவனே, எனது குமாரன் உமக்கு முன்பாக பரிசுத்தமாக வாழ வேண்டும்” என்ற அவர்களின் வார்த்தைகளை நான் எப்படி மறக்கக்கூடும்?
குருவானவராக பணி செய்த எனது பரிசுத்த தகப்பனார் எங்களுக்குச் சொன்ன ஒரு சம்பவத்தை நான் இன்றும் நினைவில் வைத்திருக்கின்றேன். குருவானவரான அவர்கள் பிரசங்கங்களுக்காக அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே போய்விடுவார்கள். அப்படி ஒரு நாள் ஒரு இடத்திற்குப் பிரசங்கத்துக்காகச் சென்று கொண்டிருந்த வேளை தனது பிள்ளைகளாகிய எங்களின் இரட்சிப்பைக்குறித்த காரியத்தில் நாம் அக்கரை கொள்ளாமல் அவர்களைப் புறக்கணித்து ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற மக்களின் இரட்சிப்பையே நாடுகின்றோமே, அப்படியானால் நம் பிள்ளைகளின் காரியம் என்னஆவது என்ற மனக்கவலையால் உந்தப்பட்டவர்களாக அவர்கள் உடனடியாக வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். வீட்டிற்கு வந்த அவர்கள் வீட்டின் அடித்தளப் பகுதியில் நாங்கள் ஒருவரும் இல்லாதிருப்பதைக் கண்டு எங்களைத் தேடிக் கொண்டு மேல் மாடிக்கு வந்திருக்கின்றார்கள். அங்கே வந்து எங்கள் அறையின் கதவண்டை வந்து நின்று அங்கே யாரோ ஜெபிப்பதைக் கவனித்திருக்கின்றார்கள். ஆம், எனது தாயார்தான் தனது அருமைப் பிள்ளைகளாகிய எங்களுடைய இரட்சிப்புக்காக தேவனிடம் பரிந்து மன்றாடி ஜெபிப்பதையும், விசேஷமாக தனது மூத்த குமாரனும், உறுதியான உள்ள வலிமை கொண்ட சார்லஸ் ஸ்பர்ஜனாகிய எனக்காக அவர்கள் ஜெபித்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள். அதைக் கண்ட எனது தகப்பனார் தனது பிள்ளைகளுடைய இரட்சிப்புக்காக போராடி ஜெபிக்க அவர்களுடைய பரிசுத்த தாயார் இருப்பதைக் கண்டு மிகுந்த களிகூருதலோடு தனது பரம தகப்பனின் ஊழியத்தைச் செய்ய மீண்டும் சென்றிருக்கின்றார்கள்.
“ஆ, என் அருமை மகன் சார்லசே, ஆண்டவர் உன்னை ஒரு மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாக மாற்ற வேண்டும் என்று ஜெபிப்பதுடன், எந்த ஒரு நிலையிலும் வெறுமனே உன்னை ஒரு பாப்திஸ்து (Baptist) சபை பிரிவைச் சேர்ந்தவனாக மாத்திரம் ஆக்கிவிடக்கூடாது” என்று நான் ஜெபித்து வருகின்றேன்” என்று ஒரு தடவை எனது தாயார் என்னிடம் சொன்னார்கள். உண்மைதான், அந்த சபை பிரிவைச் சேர்ந்த மக்கள் தேவனுக்கு முன்பாக ஒரு நல்ல சாட்சியின் ஜீவியம் செய்யவில்லை என்பதை அவர்கள் நன்கு கவனித்திருந்தார்கள்.
எங்கள் வீட்டில் கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாள் மிகவும் கண்டிப்பாக அனுசரிக்கப்பட்டது. அந்த நாளில் வீட்டில் எந்த ஒரு சமையல் வேலைகளும் இருக்காது. சனிக்கிழமையே ஆகாரம் சமைத்து விடுவார்கள். அதுவும் மிகவும் எளிமையான ஆகாரமாகவே இருக்கும்.
என்னைக் குறித்து ரிச்சர்ட் நீல் என்ற பரிசுத்த தேவ மனிதர் சொன்ன தீர்க்கத்தரிசனம்
ரிச்சர்ட் நீல் என்ற போதகர் இரட்சகர் இயேசுவுக்காக எரிந்து பிரகாசிக்கும் ஒரு ஒளியாக அந்த நாட்களில் இங்கிலாந்து தேசத்தில் விளங்கினார். அவருடைய சரித்திரத்தை மிகவும் இரத்தினச் சுருக்கமாக இந்த இடத்தில் கூறுவது மிகவும் அவசியமாகும். அவர் தேவனுடைய சுவிசேஷத்தை சுமந்து கொண்டு இந்தியாவுக்குச் செல்லப் போவதாக அவருடைய தாயாரிடம் சொன்ன போது அவருடைய தாயார் அக்கினி கனலாக அவர் மேல் எரிந்து விழுந்து “நானும் உனது தகப்பனாரும் மண்ணோடு மண்ணாக கலக்கும் நாள் வரை நீ பொறுத்திருந்து அதின் பின்னர் இந்தியாவுக்குச் செல்லலாம்” என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டார்கள். அதின் பின்னர் அந்த அம்மையார் தனது எண்ணத்தை முற்றுமாக மாற்றிக் கொண்டு அவரை இந்தியாவுக்கு போவதற்கு சம்மதித்தது மாத்திரமல்ல, அவரைப் போவதற்கு கட்டாயமும் படுத்தினார்கள். கர்த்தர் தனக்குக் கொடுத்த ஈசாக்கை பலிபீடத்தில் பலியிடவும் இப்பொழுது ஆயத்தமாக இருப்பதாகக் கூறினார்கள்.
ரிச்சர்ட் நீல் இந்தியாவுக்குப் புறப்பட்ட நாள் அன்று அவருடைய தாயார் தனது திருமண மோதிரத்தை தனது விரலிலிருந்து கழற்றி “எனது இருதயத்திற்கு மிகவும் அருமையான இந்தப் பொருளை இதுவரை நான் என் வசம் வைத்திருந்தேன். உனது தகப்பனார் தனது அன்புக்கு அடையாளமாக இந்த மோதிரத்தை எங்களது கலியாண தினத்தன்று எனக்கு அணிவித்தார்கள். கடந்த 40 ஆண்டு காலமாக நான் அதை அணிந்து வந்திருக்கின்றேன். இந்தியாவுக்கு மிஷனரியாகச் செல்லும் உன்னை நான் இனி இந்த உலகத்தில் சந்திக்கப் போவதில்லையாதலால் அந்தப் பொருளை உனது தந்தையின் முன்னிலையில் எங்களுடைய ஒருமித்த அன்பின் அடையாளமாக உனக்கே தந்துவிடுகின்றோம்” என்று கூறி அந்த மோதிரத்தை கழற்றிக் கொடுத்துவிட்டார்கள். ரிச்சர்ட் நீல் என்ற அந்த தேவ மனிதரின் உருவப்படம் இங்கிலாந்து தேசத்திலுள்ள (Queen Street) என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் உள்ளது. அவரது படத்திற்குக் கீழாக “சகோதரரே, புற ஜாதிகள் அன்பின் ஆண்டவர் இயேசுவை அறியாதவர்களாக தங்கள் பாவத்தில் அழிந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அழிந்து போவதை நாம் அனுமதிக்க முடியுமா? கர்த்தர் அந்தக் காரியத்திலிருந்து நம்மைப் பாதுகாப்பாராக” என்று அவரே எழுதியிருக்கின்றார்.
உலகத்திலேயே மிகப் பெரிய சபை மக்களுக்கு ரோலண்ட் ஹில் என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் நான் பிரசிங்கிக்கப் போகின்றேன் என்று மேலே நாம் கண்ட ரிச்சர்ட் நீல் என்ற போதகர் என்னைக் குறித்துச் சொன்ன தீர்க்கத்தரிசனமானது அநேகமாக எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான். அந்த தேவ பக்தன் 1844 ஆம் ஆண்டு எஸ்ஸக்ஸ் என்ற ஜில்லாவுக்கு லண்டன் மிஷனரி ஸ்தாபனத்தின் சுவிசேஷகராக வந்திருந்து அந்த ஜில்லாவிலுள்ள பட்டணங்கள்தோறும், அங்குள்ள கிராமங்கள்தோறும் கால் நடையாக நடந்து சிறியோருக்கும், பெரியோருக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அவர் ஒரு பெரிய ஆத்தும ஆதாயகன் ஆவார். அவர் தம்முடைய பயணத்தின் பாதையில் ஸ்டாம்போர்ன் என்ற நான் தங்கியிருந்த எனது தாத்தாவின் சபைக்கும் வந்திருந்தார். அங்குள்ள குருமனையில்தான் அவர் சில நாட்கள் அப்பொழுது தங்கியிருந்தார். அவர் சிறுவனான என்னை தேவ ஆவியானவரின் தூண்டுதலால் அடையாளம் கண்டு பிடித்தார். “குழந்தாய், நீ எங்கு நித்திரை செய்கின்றாய்? நாளைய தினம் காலையில் நான் உன்னைச் சந்திக்க விரும்புகின்றேன்” என்று அவர் என்னிடம் சொன்னார். நான் படுத்திருக்கும் சின்ன அறையை நான் அவருக்கு காண்பித்தபோது அதை கவனமாக அடையாளம் செய்து கொண்டார். அடுத்த நாள் காலை 6 மணிக்கெல்லாம் அவர் எனது அறைக்கு வந்துவிட்டார். நான் படுத்திருந்த அறையின் பக்கத்திலுள்ள அழகிய பூப்பந்தலுக்கு என்னை அழைத்துச் சென்று மிகவும் மதுரமான குரலில் இயேசு இரட்சகரின் அன்பையும், அவர் பேரில் நம்பிக்கை வைப்பதின் ஆசீர்வாதத்தையும், குழந்தைப் பருவத்திலேயே ஆண்டவர் இயேசுவை நேசிப்பதிலுமுள்ள மாட்சிமையையும் அவர் எனக்குச் சொன்னார். அருமை இரட்சகர் அவருடைய வாழ்வில் எத்தனை நல்லவராக இருந்து வந்திருக்கின்றார் என்பதையும் அவர் என்னிடம் கூறினார்.
அதின் பின்னர் நான் ஆண்டவரை அறிந்து கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்றும் கூறி அந்தப் பூப்பந்தலிலேயே தனது முழங்கால்களை ஊன்றி எனது தோளின் மேல் தனது கரங்களைப் போட்டு எனக்காக உள்ளம் உருகி ஜெபித்தார். அப்பொழுது நான் அவரிடம் பேசிய எனது குழந்தைப் பருவ வார்த்தைகளை மிகவும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்ததுடன் கிருபை நிறைந்த போதனைகளையும் அவர் எனக்குக் கொடுத்தார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ரிச்சர்ட் நீல் இந்தவிதமாகச் செய்து வந்தார். அதற்கப்பால் எனது தாத்தாவையும், குடும்பத்தின் மக்கள் யாவரையும் ஒன்றாகக் கூடி வரச் செய்து அவர்கள் முன்னிலையில் என்னைத் தனது முழங்கால்களில் அமரப்பண்ணி எல்லாரையும் பார்த்து “இந்தக் குழந்தை ஒரு நாள் தேவனுடைய மகிமையின் சுவிசேஷதத்தை திரள் கூட்டமான ஜனங்களுக்குப் பிரசிங்கிப்பான். நான் இப்பொழுது குருவானவராக இருக்கும் ரோலண்ட் ஹில் என்ற இடத்திலுள்ள பிரமாண்டமான தேவாலயத்தில் தானே அவன் பிரசிங்கிப்பான்” என்று கூறினார். கர்த்தருக்குள் சாந்தமாகவும் அதே சமயம் மிகவும் உறுதியாகவும் அவர் அந்த வார்த்தைகளைக் கூறிவிட்டு நான் சொன்ன எனது வார்த்தைகளுக்கு உங்கள்எல்லாரையும் இந்த நாளில் சாட்சியாக வைக்கின்றேன் என்றும் சொன்னார். பின்னர் அவர் 6 பென்ஸ் நாணயம் ஒன்றை எடுத்து அதை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்து கீழ்க்கண்ட ஞானப்பாடலை நான் மனப்பாடமாகப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்தப் பரிசுத்தவான் சொன்னபடியே நான் அந்தப் பாடலை உடனே மனப்பாடமாகப் படித்துக் கொண்டதுடன் அவருடைய தீர்க்கத்தரிசன வார்த்தைகளின்படி நான் பின் நாட்களில் தேவ ஊழியம் செய்த ரோலண்ட் ஹில் என்ற இடத்திலுள்ள அவர் முன்பு தேவ ஊழியம் செய்த பெரிய தேவாலயத்தின் திரள் கூட்டத்தினரை முதலாவது அவர்களை அந்தப் பாடலைப் பாடச் செய்து அதின் பின்னர் எனது பிரசங்கத்தைத் தொடங்கினேன்.
கர்த்தாவின் அற்புதச் செய்கை
புத்திக் கெட்டாததாம்
பொங்கு கடல் கடுங்காற்றை
அடக்கி ஆள்வோராம்
தம் வல்ல ஞான நோக்கத்தை
மா ஆழமாகவே
மறைத்து வைத்தும், தம் வேளை
முடியச் செய்வாரே.
பின் வந்த நாட்களில் மேற்கண்ட பரிசுத்தவான் தேவப்பணி செய்த செஷ்டர் என்ற நகரத்திலுள்ள தேவாலயத்தில் அந்த தேவ மனிதருக்கும் திரளான கூட்டத்தினருக்கும் முன்பாக நான் நின்று பிரசங்கிக்கும் சிலாக்கியத்தையும் கூட தேவன் எனக்குத் தந்தார்.
எனது மனந்திரும்புதல்
“மனந்திரும்பாத பாவிகளுக்கு ஓர் எச்சரிப்பு” “எழுந்திரு, ஆத்துமாவின் பக்தி வாழ்வில் முன்னேறு” “மனந்திரும்பாதவர்களுக்கு ஒரு அழைப்பு” போன்ற எனது மனந்திரும்புதலுக்கு ஏற்ற அருமையான புத்தகங்கள் எங்கள் வீட்டில் இருந்ததற்காக நான் தேவனைத் துதிக்கின்றேன். ஆனால், அந்த அருமையான புத்தகங்கள் மூலமாக நான் என் இரட்சிப்பைக் கண்டு கொள்ளாமல், கல்வியறிவில்லாத, தேவ ஊழியத்திற்காகப் பயிற்றுவிக்கப்படாத, உலகப்பிரகாரமான ஒரு தொழிலைச் செய்து கொண்டு வந்த ஒரு ஏழை மனிதருடைய பிரசங்க வார்த்தைகளால் நான் எனது மனந்திரும்புதலைக் கண்டு கொள்ள வேண்டுமென்பது தேவனுடைய அநாதி தீர்மானமாகவிருந்தது. நான் எனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்காக நான் வாழ்ந்து கொண்டிருந்த பட்டணத்திலுள்ள அநேக ஆலயங்களுக்குச் சென்று கொண்டிருந்தேன். எனது ஆத்துமாவைக் குறித்த பாரத்தின் காரணமாக பட்டணத்திலுள்ள எல்லா தேவாலயங்களுக்கும் சென்று எப்படியாவது இரட்சிப்பின் வழியைக் கண்டு கொள்ள விரும்பினேன். அப்படியே நான் எல்லா தேவாலயங்களுக்கும் சென்றேன். ஆனால், நான் ஒவ்வொரு முறையும் வெறுமையாய்த் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அதற்காக நான் சென்று வந்த ஆலயங்களிலுள்ள குருவானவர்களை குறை சொல்லவில்லை. ஆராதனைக்குப் பின் ஆராதனையாக நான் எல்லா ஆராதனைகளுக்கும் மிகுந்த ஜெபத்தோடு சென்று கொண்டிருந்தேன். இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்ற மெய்யான தாகத்தோடும், வாஞ்சையோடும் நான் அந்த நாட்களில் கதறிக் கொண்டிருந்தேன்.
இப்படியிருக்கும் நாட்கள் ஒன்றில் ஒரு ஓய்வு நாளின் காலை வேளையில் ஒரு குறிப்பிட்ட ஆலயத்துக்கு நான் கர்த்தரைத் தொழுது கொள்ளுவதற்காக ஆயத்தமாகிப் போய்க் கொண்டிருந்தேன். ஆனால், நான் அந்த இடத்திற்குச் செல்லக்கூடாதபடி கடுமையான பனிப்புயல் வீசவே நான் அங்கு செல்லுவதை விட்டுவிட்டு பக்க வழியாக ஒரு தெருவின் வழியாகச் சென்று அங்கிருந்த ஒரு பழைய காலத்து மெதடிஸ்ட் சிற்றாலயத்துக்குள் சென்று அமர்ந்தேன். நான் அங்கு சென்றபோது அந்த ஆலயத்தில் 12 அல்லது 15 பேர்கள் மாத்திரமே அமர்ந்திருந்தனர். அந்த மெதடிஸ்ட் தேவாலயத்தில் அமர்ந்திருந்த மக்கள் எனக்குத் தலை வலி வரும் அளவிற்கு தங்கள் சத்தத்தை மிகவும் உயர்த்தி கர்த்தரைத் துதித்துப் பாடிக் கொண்டிருந்தார்கள். அதைக் குறித்து நான் ஒன்றும் எண்ணிக் கொள்ளவில்லை. எப்படியாவது நான் இரட்சிக்கப்படவேண்டும் என்ற தாகத்தோடேயே நான் அங்கு சென்று அமர்ந்திருந்தேன். அன்றைய தினம் அந்த ஆலயத்தின் ஆராதனையை எடுத்து நடத்த வேண்டிய குருவானவர் அன்று வீசிய பனிப் புயலின் காரணமாக வரவில்லை. அதற்குப் பதிலாக ஒரு ஒடிசலான மனிதர், அவர் ஒரு தையற்காரரோ இல்லை செருப்பு தைப்பவரோ அல்லது வேறு எந்த ஒரு தொழிலைச் செய்பவரோ ஒருவர் பிரசங்க பீடத்தில் ஏறி தேவச் செய்தியைக் கொடுக்க ஆயத்தமானார். அவர் பேசிய பிரசங்க வாக்கியமானது “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள். அப்பொழுது இரட்சிக்கப் படுவீர்கள்” (ஏசாயா 45 : 22) என்பதுதான்.
தான் தெரிந்து கொண்ட தனது பிரசங்க வாக்கியத்தை சரியான விதத்தில் கூட உச்சரிக்க அவருக்கு முடியாதிருந்தது. அவர் தெரிந்து கொண்ட அந்த பிரசங்க வாக்கியமானது எனக்கு எனது ஆத்துமாவில் ஒரு நம்பிக்கையைக் கொடுப்பதாக இருந்தது. அந்த பிரசங்கியார் தனது பிரசங்கத்தை “அன்பான நண்பரே, “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள், அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்” என்ற வாசகம் மிகவும் எளிமையான வாக்கியமாகும். அந்த வசனம் சொல்லுவது நாம் நமது கண்களால் பார்க்கும்படியாக மாத்திரமே. உங்கள் காலையோ அல்லது கையின் விரலையோ உயர்த்துங்கள் என்று அந்த வசனம் சொல்லவில்லை. எந்த ஒரு கஷ்டமும் படாமல் நமது கண்களை மாத்திரம் நோக்கிப் பார்க்கச் சொல்லுகின்றது. கண்களால் பார்ப்பதற்கு ஒரு மனிதன் கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உலகத்தில் நீ ஒரு மாபெரும் மூடனாக இருந்தாலும் கண்களால் பார்ப்பதற்கு உனக்கு எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. பார்ப்பதற்கு ஒரு ஆயிரம் ஆண்டு காலம் காத்திருக்க அவசியமில்லை. நினைத்த உடனே பார்க்கலாம், யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், ஏன் ஒரு குழந்தை கூட பார்க்கலாம். “என்னை நோக்கிப் பாருங்கள்” என்று அந்த மனிதர் தனது விசாலமான எஸ்ஸெக்ஸ் மொழியில் பேசினார். “உங்களில் அநேகர் உங்களையே நோக்கிப் பார்க்கின்றீர்கள்” அங்கே பார்ப்பதினால் யாதொரு பயனுமில்லை. உங்களையே நீங்கள் நோக்கிப் பார்ப்பதினால் எந்த ஒரு நன்மையையும் நீங்கள் ஒருக்காலும் கண்டடையப் போவதில்லை. “என்னை நோக்கிப் பாருங்கள்” என்று இயேசு கிறிஸ்து சொல்லுகின்றார். உங்களில் சிலர் “பரிசுத்த ஆவியானவர் எங்களில் கிரியை செய்யும் வரை நாங்கள் பொறுத்திருப்போம்” என்று சொல்லுகின்றீர்கள். நீங்கள் அப்படிச் செய்ய எந்த ஒரு தேவையும் கிடையாது. இயேசுவை நோக்கிப் பாருங்கள். தேவனுடைய வார்த்தை “என்னை நோக்கிப் பாருங்கள்” என்று சொல்லுகின்றது.
அதற்கப்பால் அந்த நல்ல மனிதர் தனது செய்திக்கு இவ்விதமாகத் திரும்பினார். “என்னை நோக்கிப் பாருங்கள், நான் எனது இரத்தத்தை பெருந்துளிகளாக சிந்திக் கொண்டிருக்கின்றேன். என்னை நோக்கிப் பாருங்கள், நான் சிலுவை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றேன். என்னை நோக்கிப் பாருங்கள், நான் மரித்து அடக்கம்பண்ணப்பட்டேன். என்னை நோக்கிப் பாருங்கள், நான் திரும்பவும் உயிர்த்தெழுந்தேன். என்னை நோக்கிப் பாருங்கள், நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றேன். என்னை நோக்கிப் பாருங்கள், நான் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கின்றேன். ஓ, ஏழைப்பாவியே என்னை நோக்கிப் பார், என்னை நோக்கிப் பார். இவ்விதமாக 10 நிமிட நேரங்களுக்கு அந்த மனிதர் அந்த வட்டத்துக்குள்ளேயே சுற்றிவிட்டு தனது பார்வையை என்னை நோக்கித் திருப்பினார்.
தங்களுடைய சபைக்கு நான் புதியவன் என்று கண்டு கொண்ட அவர் தனது பார்வையை என் மீது முழுமையாகப் பதித்தவராக “பரிதாபகரமாக காணப்படும் இளம் வாலிபனே” என்று குறிப்பிட்டுவிட்டு “நீ எனது பிரசங்க வாக்கியத்தின்படி இரட்சகர் இயேசுவை நோக்கிப் பார்த்து அவருக்குக் கீழ்ப்படியாவிட்டால் நீ எப்பொழுதும் பரிதாபகரமாக, உன் வாழ் நாள் முழுவதும் பரிதாபகரமாக, உனது மரணத்திலும் பரிதாபகரமாக காணப்படுவாய். ஆனால், நீ இந்தக் கணத்திலேயே கிறிஸ்து இரட்சகரை நோக்கிப் பார்ப்பாயானால் நீ இரட்சிக்கப்படுவாய். இளம் வாலிபனே, இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார், அவரையே நோக்கிப்பார், நீ எதுவும் செய்ய வேண்டியதில்லை, அவரை நோக்கிப் பார்த்து வாழ வேண்டியதைத் தவிர நீ செய்ய வேண்டியது வேறு எதுவுமே இல்லை”
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் நான் எனது இரட்சிப்பின் வழியை உடனே கண்டு கொண்டேன். அந்த மனிதர் தனது பிரசங்கத்தில் சொன்ன வேறு எதையும் நான் கவனிக்கவே இல்லை. என் இருதயம் ஒரே ஒரு எண்ணத்தால் பூரணமாக நிறைந்திருந்தது. வனாந்திரத்தில் மோசே வெண்கல சர்ப்பத்தை உயர்த்தின போது அதை நோக்கிப் பார்த்தவர்கள் எல்லாரும் பிழைத்துக் கொண்டது போலவே எனது காரியமும் அமைந்தது. தேவனுடைய வார்த்தையை நான் கவனித்தேன். அந்த வார்த்தை கிறிஸ்து இரட்சகரின் சிலுவைக்கு நேராக என்னை அழைத்துச் சென்றது. அந்த மனமகிழ்ச்சியின் நாளில் நான் இரட்சகரைக் கண்டு கொண்டேன். அவருடைய அன்பான பாதங்களையும் பற்றிக் கொள்ள தேவ கிருபை பெற்றேன். அந்த நாளில் நான் பெற்ற சந்தோசத்தின் காரணமாக நான் துள்ளிக் குதித்திருக்கலாம், ஆனந்த நடனமாடியிருக்கலாம், நான் என்ன என்ன காரியங்கள் அந்த பரலோக ஆனந்த மகிழ்ச்சிக்காக செய்திருந்தாலும் அது எதுவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கமாட்டாது. அந்த நாளில் நான் பெற்ற சந்தோசத்தையும், சமாதானத்தையும் வெறும் வார்த்தைகளால் சொல்லி முடியாது. நான் மன்னிக்கப்பட்டேன், நான் எனது பாவங்களற கழுவப்பட்டேன். ஒரு பாவி இயேசு இரட்சகரின் பரிசுத்த இரத்தத்தால் இரட்சிப்பைப் பெற்றுக் கொண்டான். இரட்சகர் இயேசுவின் சிலுவைப் புண்ணியத்திற்கு நான் ஒரு ஞாபகச் சின்னம்! என் பாவச் சங்கிலிகளெல்லாம் என்னிலிருந்து தெறிப்புண்டு போவதைக் கண்டேன். கிறிஸ்து இரட்சகரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவனாகவும், பரலோக ராஜ்யத்தின் சுதந்திரவாளியாகவும், பயங்கரமான குழியிலும், உழையான பாவச் சேற்றிலுமிருந்து தூக்கி எடுக்கப்பட்டவனாகவும், நித்திய கன்மலையின் மேல் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டவனாகவும் நான் என்னைக் கண்டேன். அந்தச் சிற்றாலயத்தில் நான் கண்டு கொண்ட சொல்லி முடியாதததும், மகிமையால் நிறைந்ததுமான மகிழ்ச்சியின் காரணமாக நான் எனது வீடு வரைக்கும் தாவீது ராஜாவைப் போல நடனமாடிக் கொண்டே செல்ல விரும்பினேன். மோட்ச பிரயாண புத்தகத்தின் ஆக்கியோன் ஜாண் பன்னியன் என்ற பரிசுத்த பக்தன் தனது மனந்திரும்புதலின் ஆனந்த செய்தியை உழுத நிலத்தில் காணப்பட்டக் காக்கைக் கூட்டத்திற்குக் கூட சொல்ல ஆசைப்பட்டதாகக் கூறிய அந்த தேவ மனிதரின் உள்ளத்தை அன்று என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. (ஸ்பர்ஜன் மனந்திரும்பிய மெதடிஸ்ட் சிற்றாலயத்தின் படத்தையும், அவர் அன்று அமர்ந்திருந்த இடத்தை நினைவுகூரும்பொருட்டு இடது கைப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள சதுர வடிவமான நினைவுக் கல்லையும் படத்தில் நீங்கள் காணலாம்)
1850 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 : 30 மணிக்கு நான் ஆர்ட்டில்லரி தெருவிலுள்ள அந்த மெதடிஸ்ட் சிற்றாலயத்திற்குச் சென்று மனந்திரும்பி இரட்சிப்பின் பாத்திரமாக காலை 12 : 30 மணிக்கு நான் வீடு வந்து சேர்ந்தேன். இருளின் அந்தகாரத்திலிருந்து தேவனுடைய ஆச்சரியமான ஒளிக்குள் வந்து சேர்ந்தேன். சிலுவை மரத்தில் தொங்கிய அன்பின் இரட்சகரை வெறுமனே நோக்கிப்பார்த்த ஒரே பார்வையில் அந்த மகத்தான இரட்சிப்பு எனக்குக் கிடைத்தது. அந்த நேரத்தில் பரலோகத்திலுள்ள தேவ தூதர்கள் எல்லாரும் தங்கள் கின்னரங்களை எடுத்து ஆனந்த மகிழ்ச்சியால் இசைத்திருப்பார்கள். ஆம், பரலோகமே நிச்சயமாக அன்று களிகூர்ந்திருக்கும். நான் தேவாலயத்திலிருந்து வீடு வந்தபோது வீட்டிலுள்ள யாவரும் என்னைப் பார்த்ததும் “ஏதோ ஒரு ஆச்சரியமான காரியம் உன்னில் நடந்திருக்கின்றது” என்று சொன்னார்கள். அன்று நடந்த இரட்சிப்பின் காரியத்தை நான் எங்கள்வீட்டிலுள்ள அனைவருக்கும் சொன்னேன். வீட்டின் தலை மகன் ஆண்டவருடைய இரட்சிப்பின் பாத்திரமாகிவிட்டான் என்ற களிகூருதலின் செய்தி அந்த நாளில் எங்கள் வீட்டை ஆனந்த மகிழ்ச்சியால் நிறைத்தது.
மனந்திரும்புதலுக்கு பின்னர் என்னிலுண்டான பரிசுத்த அனுபவங்கள்
எனது கண்கள் முதன் முதலாவதாக கிறிஸ்துவைப் பார்த்த போது அவர் எனக்கு மிகவும் முழு நிச்சயமான கிறிஸ்து இரட்சகராகக் காணப்பட்டார். எனது பாவப் பாரங்கள் எனது முதுகிலிருந்து உருண்டோடியபோது அது ஒரு நிச்சயமான பாவ மன்னிப்பின் நிச்சயமாக எனக்கு இருந்தது. அந்த நாளில் நான் என் வாழ்வில் முதன் முதலாவதாக “என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்” என்று கூறினேன். ஆம், என் அன்பின் இரட்சகரை நான் முழுமையாக்கிக் கொண்ட நாள் அது. நான் எனது ஜெபத்திற்காக அந்த நாளின் அதிகாலை வேளை எனது இளவயதின் பக்தியோடு தேவ சமூகத்தில் முழங்காலூன்றியபோது நான் பாடிய ஒவ்வொரு பாடலும் மெய்யாகவே ஒரு சங்கீதமாக அமைந்தது. நான் ஏறெடுத்த ஜெபத்தின் ஒவ்வொரு வரியும் என்னைக் களிப்பூட்டுவதாக இருந்தது. ஆம், அதுவேதான் ஜெபம் என்பது! அந்த ஜெப வேளையானது மிகவும் அமைதி வேளையாக இருந்தது. ஏதோ ஒரு கடமைக்கான வேளையாக இல்லாமல் என்னைத் தமக்கெனத் தெரிந்து கொண்ட என் பரம தகப்பனோடு பேசி அளவளாவி ஆனந்தித்து மகிழும் இன்ப வேளையாக அது இருந்தது. ஆ, நான் என் அருமை இரட்சகரை எத்தனையாக நேசிக்கின்றேன். எனக்குள்ள யாவற்றையும் அவருக்கே கொடுக்கின்றேன். மனந்திரும்பாத பாவ மாந்தரின் இரட்சிப்புக்காக நான் அன்றைய தினம் எத்தனையாக என்னில் பாரம் கொண்டேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்! நான் என் அன்பின் ஆண்டவரை முதன் முதலாவதாக என் வாழ்வில் கண்டு கொண்டதும் எனக்குள் உண்டான ஒரு மா பெரும் துயரம் யாதெனில், நான் அதற்குமுன்பாக எனது ஆண்டவருடைய உள்ளத்திற்குப் பிரியமில்லாத காரியங்களை அறியாமல் செய்த நினைவுகளைக் குறித்ததுதான். எத்தனையோ பேர்களை பாவம் செய்ய நான் தூண்டினேன். தேவனுக்குப் பிரியமற்ற பாவ சம்பாஷணைகளை நான் செய்தேன். அந்த பழைய நினைவுகள் என்னை மிகவும் துக்கப்படுத்துவதாக இருந்தது.
நான் என் அன்பின் இரட்சகரைக் கண்டு கொண்ட முதல் ஒரு வாரம் நான் எனது பாதங்களை எடுத்து வைத்து வெளியே செல்லுவதற்குக்கூட நான் மிகவும் பயப்பட்டேன். காரணம், நான் என் தேவனுடைய உள்ளத்திற்கு விருப்பமில்லாத எதையும் செய்துவிடுவேனோ என்று நான் மிகவும் அஞ்சினேன். ஒவ்வொரு நாளின் முடிவிலும் நான் என் இருதயத்தை அதிகமாக ஆராய்ந்து பார்த்தேன். அந்த நாளில் நான் எனது கோபத்தில் ஏதாவது பேசினேனா என்றும், எனது ஆத்திர அவசரத்தில் ஆண்டவருடைய திருவுளத்திற்கு விருப்பமில்லாத எதையாகிலும் செய்தேனா என்றும், கர்த்தருடைய சித்தம் மட்டும் என்னில் நிறைவேறியிருக்கின்றதா என்பதையும் நான் அதிகமாக அலசி ஆராய்ந்தேன். எனது வாழ்வின் காரியங்கள் எல்லாம் தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் அமைந்திருக்கின்றதா என்பதையும் நான் நெருக்கமாகக் கண்காணித்து வந்தேன்.
ஆண்டவர் இயேசுவை நான் என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதும் நான் செய்த முதல் தேவ ஊழியம் நல்ல தரமான கிறிஸ்தவ துண்டுப்பிரதிகளைப் பெற்று அவைகளை கவரில் வைத்து எனக்குத் தெரிந்த மக்களுக்கு அனுப்பியதுதான். அதைப் பெற்றுக் கொண்ட ஆத்துமாக்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். அத்துடன் நான் மற்ற கைப்பிரதிகளை எடுத்துக் கொண்டு நியூமார்க்கெட் என்ற இடத்திலுள்ள சில ஜில்லாக்களில் வீடு வீடாகச் bன்று அவைகளை நான் மக்களுக்குக் கொடுத்தேன். தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அந்த மக்களுக்கு எனக்குத் தெரிந்த எளிமையான விதத்தில் நான் சொன்னேன். அதற்கப்பால் நான் தேவனுடைய வசனங்களை சிறு சிறு காகிதங்களில் எழுதி மக்கள் கூடுகின்ற இடங்களில் போட்டேன். அப்படியே ரயில் நிலையத்துக்குள்ளும் சென்று ரயில் பெட்டிகளில் நான் அவைகளைப் போடுவதுண்டு. தேவனுடைய பணியில் நான் மிகவும் சுறு சுறுப்பாகக் காணப்பட்டேன். ஒரு 5 நிமிட நேரத்தைக்கூட நான் வீண் விரயமாக்காமல் கர்த்தருடைய ஊழியத்தின் பாதையில் செலவிட்டேன். கொஞ்ச நேரம் இருந்தாலும் அதை நான் ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டேன் அல்லது அவருடைய வார்த்தைகளை வாசிப்பதில் கவனம் செலுத்தினேன்.
வாட்டர்பீச் கிராமத்தில் குருவானவரானேன்
1851 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் எனது 17 ஆம் வயதில் வாட்டர்பீச் என்ற கிராமத்திலுள்ள சிற்றாலயத்தின் குருவானவராக ஆனேன்.
குடிவெறிக்கும், தூஷணத்துக்கும் பேர்போன ஒரு கிராமத்தின் வழியாக நீங்கள் எப்பொழுதாவது நடந்து சென்றிருக்கின்றீர்களா? நிர்ப்பந்தமான ஏழை எளிய மக்கள் மதுபானக் கடைகளின் கம்பங்களில் சாய்ந்து கொண்டு நிற்பதையும் அல்லது அவர்கள் தள்ளாடிய நிலையில் தெருவில் நடந்து சென்று கொண்டிருப்பதையும் நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கின்றீர்களா? இப்படிப்பட்ட மக்களின் வீடுகளை நீங்கள் உற்று நோக்கிப் பார்த்திருக்கின்றீர்களா? பாவ அசுசிகளும், அக்கிரமங்களும் நிறைந்த அந்தக் குகையான வீடுகளை நீங்கள் பார்த்து உங்கள் ஆவிக்குள்ளாக பெருமூச்சின் வியாகுலங்களை எழுப்பியிருக்கின்றீர்களா? தரித்திரம், ஏழ்மை, மக்களால் புறக்கணித்துத் தள்ளப்பட்ட பரிதாபகரமான நிலைமை, துக்கம், கிலேசம் நிறைந்த அந்த மக்களின் நிலை கண்டு உங்களுக்குள் புலம்பியிருக்கின்றீர்களா? “ஆம்” என்றே நீங்கள் சொல்லுவீர்கள். ஆனால், அப்படிப்பட்ட ஒரு கிராமத்தின் வழியாக தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக நான் பல தடவைகளிலும் பின் வந்த ஆண்டுகளில் நடந்து செல்லும் பாக்கியத்தை தேவன் எனக்குத் தந்தார். இங்கிலாந்து நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அந்தக் கிராமம் உள்ளது என்று நான் எனக்குள் நினைத்ததுண்டு. அரசாங்கத்துக்கு வரி கொடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில் அங்கு மலிந்திருந்ததால் எல்லாவித பாவங்களும், கலகங்களும், சண்டைகளும் அங்கு நிறைந்து காணப்பட்டன.
அந்தக் கிராமத்துக்குள்தான் ஒரு வாலிபன் சென்றான். அவனுக்கு எந்த ஒரு மேதா விலாசமும் (பட்டப் படி ப்புகளும்) கிடையாது. இருப்பினும், ஆத்துமாக்களைத் தேடிக்கொண்டு அவன் அங்கு சென்றான். அவன் அந்தக் கிராமத்தில் பிரவேசித்தபோது அந்தக் கிராமம் முழுவதையும் தலை கீழாக மாற்ற வேண்டுமென்பது தேவனுடைய தீர்மானமாயிற்று. கொஞ்ச நாட்களுக்குள்ளாக அந்தக் கிராமத்திலிருந்த சிறிய கூரை ஓலை பரப்பிய சிற்றாலயம் அந்தக் கிராமத்தில் அங்குமிங்கும் ஊதாரிகளாகச் சுற்றியலைந்த தீய பாவிகளான வாலிப மக்களால் நிரம்பி வழிந்தது. அவர்கள் அந்த சிற்றாலயத்துக்கு வந்து அங்கு தேவச் செய்தி கொடுத்த வாலிபனுடைய செய்திகளால் தொடப்பட்டு, பாவ உணர்வடைந்து கண்ணீர்விட்டுக் கதறி அழுதார்கள். கொஞ்ச காலத்திற்கு முன்பாக அந்தக் கிராமத்திலுள்ள திருச்சபைக்கு சாபத்தையும், வேதனையையும் கொண்டு வந்த அதே வாலிப மக்கள் ஒரு பெரிய ஆசீர்வாதத்தை இப்பொழுது அதற்குக் கொண்டு வந்தார்கள். எங்கே களவுகளும், வழிப்பறிகளும், துஷ்டத்தனங்களும், விபச்சார வேசித்தனங்களும் மலிந்து காணப்பட்டதோ அவை எல்லாம் மறைந்து அந்தக் கிராமம் பரிசுத்த ஒளி வீசும் கிராமமாயிற்று. காரணம், அந்த தீய காரியங்களை எல்லாம் செய்த மக்கள் சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவராகிய இயேசுஇரட்சகரைக் குறித்து கொடுக்கப்பட்ட தேவச் செய்திகளை ஆனந்த களிகூருதலோடு கேட்க அந்தச் சிற்றாலயத்துக்குக் கூடி வந்து விட்டார்கள்.
ஒரு மிகைப்படுத்தப்பட்ட கதையை நான் இங்கே உங்களுக்குச் சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, நான் அறியாததையும் சொல்லவில்லை. அந்தக் கிராமத்தில் அன்பின் தேவன் என்னை தமது நாம மகிமைக்காக எடுத்துப்பயன்படுத்தின காரியத்தைத்தான் நான் இங்கே உங்களுக்கு எழுதுகின்றேன். அன்பின் இரட்சகருக்காக அந்தக் கிராமத்தில் நான் தேவப்பணி செய்வது எனது களிகூருதலாயிற்று. குடிவெறிகளெல்லாம் அந்தக் கிராமத்திலிருந்து வேர் அறுப்புண்டு, துர் நடத்தையான அனைத்து காரியங்களும் அங்கிருந்து விலகின பின்பு நான் அந்தக் கிராமத்தின் வழியாக நடந்து செல்லுவது எனக்கு இன்பமாயிற்று. அந்தக் கிராமத்து மக்கள் என்றும் ஜீவிக்கின்ற தங்கள் தேவனைத் துதித்துப் பாடிக் கொண்டு தங்கள் வேலைகளுக்கும், தங்கள் பண்ணைகளுக்கும் செல்லுவதை நான் காண்பது என்பது எனக்கு ஒரு ஆச்சரியமான அனுபவமாயிற்று. மாலைச் சூரியன் மேல் வானில் அஸ்தனமாகி இருள் தனது செட்டைகளை அந்தக் கிராமத்தில் பரப்பினபோது அந்தக் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுத் தலைவனும் தனது குடும்பத்தை தன்னண்டை கூடி வரச் செய்து தேவனுடைய வேத புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்த பின்னர் கணவனும், மனைவியும் முழங்காற்படியிட தங்கள் ஜெப மன்றாட்டுகளை ஏறெடுப்பார்கள். சூரிய அஸ்தமனமான அந்த மாலை வேளியில் அந்தக் கிராமத்தின் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரை உள்ள அத்தனை வீடுகளின் கூரைகளிலும் கர்த்தரைத் துதித்துப் பாடும் பாடல்களும், ஜெபங்களும் கேட்டுக் கொண்டேயிருக்கும். கர்த்தருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக நான் இந்தக் காரியத்தை குறித்து மிகவும் களிகூருதலோடு நான் இங்கு சாட்சி கொடுக்க முடியும். என் மூலமாக அங்கு பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷத்தின் ஒளியின் காரணமாக பாவத்தின் பிடியில் வாழ்ந்த அங்குள்ள ஆண்களும், பெண்களும் மனந்திரும்பி தேவனுடைய சாயலுக்கொப்பாக மாற்றமடைந்தார்கள். நான் இங்கு குறிப்பிடும் கிராமத்தின் பெயர் வாட்டர்பீச் என்பதாகும். வாட்டர்பீச் கிராமத்தில் ஸ்பர்ஜன் 17 வயது குருவானவராக பணி செய்த நூதனமான சிற்றாலயத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
வாட்டர்பீச் கிராமத்தில் நான் கர்த்தருக்காக பிடித்த ஒரு பெரிய மீன்
நான் வாட்டர்பீச் கிராமத்தில் தேவ ஊழியம் செய்து கொண்டிருந்தபோது குறிப்பிட்ட ஒரு மனிதன் தனது தீச்செயல்களால் என்னை இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்து கொண்டிருந்தான். நான் முதல் முதலாவது அவனைக் குறித்துக் கேள்விப்பட்டபோது துஷ்டத்தனங்களை செய்கிற அந்தக் கிராமத்திலுள்ள அனைவருக்கும் அவன்தான் தலைவன் என்று கேள்விப்பட்டேன். நல்ல உயரமும், கட்டு மஸ்தான உடற்கட்டைக் கொண்ட அவன் தனது கிராமத்தைச் சுற்றிப் பல மைல்கள் தொலைவுக்கு வாழ்ந்த அநேகரைக் காட்டிலும் அதிகமாக மதுபானம் குடிப்பவனாகக் காணப்பட்டான். தேவனைப் பற்றிய ஒரு துளிதானும் பயமும், நடுக்கமும் இல்லாமல் மக்களைச் சபித்து சத்தியம் பண்ணுவான். தான் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் அவன் ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கினான். அந்த நாட்களில் கிராமங்களிலே திடீரென நெருப்புகள் பற்றி எரிந்தது. பல வீடுகளும் அந்த நெருப்பினாலே எரிந்து நாசமானது. மக்கள் அதின் காரணமாக நஷ்டங்களுக்குள்ளும், கண்ணீர்களுக்குள்ளும் உள்ளானார்கள். அந்த நெருப்புகளை எல்லாம் மேற்கண்ட மனிதன் தான் வேண்டுமென்றே பற்ற வைத்தான் என்பது பின்னர்தான் கண்டு பிடிக்கப்பட்டது. அப்படிப்பட்ட பஞ்சமா பாதகன் அவன். குடிக்க ஆரம்பித்தால் சில வாரங்களாக தொடர்ந்து குடித்துவிட்டு கிராமங்கள் தோறும் பைத்தியக்காரனைப் போல தள்ளாடி, தள்ளாடி நடந்து செல்லுவான்.
அப்படிப்பட்ட கொடிய மனிதன் ஒரு நாள் எனது பிரசங்கத்தைக் கேட்பதற்காக எங்களுடைய வாட்டர்பீச் ஆலயத்துக்கு வந்தான். சற்றும் எதிர்பாராத அவனது வருகையால் ஆலயத்திலுள்ள மக்கள் அனைவரின் கண்களும் அவன்மேல் நோக்கமாயிருப்பதை நான் கவனித்தேன். அவன் எனது பிரசங்கத்தைக் கேட்டு ஆச்சரிய அற்புதமாக மனந்திரும்பினான். அவனது உள்ளான மனந்திரும்புதல் அவனுடைய வெளிப்படையான வாழ்விலும் எதிரொலிக்கத் தொடங்கியது. அவன்தனது குடிப் பழக்கத்திலிருந்து விடுபட்டான். அவனது சபித்தலும், சத்தியம்பண்ணுவதெல்லாம் அவனை விட்டுப் போய்விட்டது. ஒரு மெய்யான மனந்திரும்புதல் அவனில் காணப்பட்டடது. வாட்டர்பீச் கிராம சபை மக்களெல்லாம் அந்த மனிதனது மனந்திரும்புதலைக் கண்டு அதிசயித்தனர். அதின் பின்னர் அவன் ஒழுங்காக ஆலயத்துக்கு வந்து தேவனுடைய செய்திகளைக் கேட்டு வந்தான். வாட்டர்பீச் கிராமத்திலுள்ள மதுபானக் கடைகள் தனது கண்ணியமான ஒரு வாடிக்கையாளரை இழந்துவிட்டது. அதின் பின்னர், அவன் ஆண்டவருடைய ஊழியங்களில் எனக்கு மிகவும் பிரயோஜனமான உடன் ஊழியனாக இருந்தான். கர்த்தருக்கே மகிமை.
காட்டன்ஹாமில் நான் சந்தித்த ஒரு விந்தையான தேவ மனிதர்
வாட்டர்பீச் கிராமத்தில் நான் பணி செய்த ஆரம்ப காலத்தில் நான் சந்தித்த ஒரு விந்தையான தேவ மனிதர் சட்டன் என்பவராவார். அவர் என்னைப் பார்த்ததில்லை. எனினும், நான் ஒரு பிரசித்தி பெற்ற இளவயது வாலிப பிரசங்கியார் என்று என்னைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கின்றார். எனவே, தனது சபையின் வருடாந்திர கன்வென்ஷன் கூட்டங்களில் நான் பேசும்படியாக என்னை அழைத்திருந்தார். நான் அவரது ஆலயத்திற்குச்சென்று அன்றைய நாளின் காலை வேளையில் நடைபெறவிருந்த ஆராதனையில் பங்குபெறும்படியாக குருவானவருடைய அறையில் நான் அமர்ந்திருந்தேன். அப்பொழுது வயதான சட்டன் குருவானவர் நான் இருந்த அறைக்கு வந்து என்னைச் சந்தித்தார். நான் மிகவும் இளவயதுள்ள வாலிபனாக இருப்பதைக் கண்டு அவர் மிகவும் ஆச்சரியம்அடைந்தார். “நீங்கள் இத்தனை சின்ன வயதில் இருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் உங்களை கட்டாயம் இங்கு அழைத்திருக்கமாட்டேன். காலையிலிருந்தே எனது திருச்சபையின் மக்கள் குதிரை வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும் மற்றும் இதர வாகனங்களிலும் ஆலயத்திற்கு வந்து குவிந்த வண்ணமாக இருக்கின்றனர். அந்த அதிகமான முட்டாள்கள் உங்களிடமிருந்து என்னத்தைக் கேட்பார்களோ என்று எனக்குத் தெரியாது” என்று மிகுந்த மனச்சோர்புடன் அவர் என்னைப் பார்த்துக் கூறினார்.
அவருடைய வார்த்தைகளால் நான் கோபப்படாமல் ” ஐயா, உங்கள் வருடாந்திர கன்வென்ஷன் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. நான் வேண்டுமானால் இப்பொழுதே போய் விடுகின்றேன். நான் வந்த வழியே எனக்குப் போகத் தெரியும். நான் ஊழியம் செய்கின்ற வாட்டர்பீச் திருச்சபையிலுள்ள மக்கள் என்னைப் பார்ப்பதற்கும், எனது தேவச்செய்திகளை கேட்பதற்கும் மிகவும் ஆசை ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்றேன். “இல்லை, இல்லை நீங்கள் இங்கு வந்துவிட்டீர்கள், உங்களால் முடிந்த அளவு நல்லவிதமாக தேவச்செய்தியைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். உங்களுக்கு உதவியாக கேம்பிரிட்ஜ் பட்டணத்திலிருந்து வந்திருக்கும் உங்களைப்போன்ற ஒரு வாலிபனையே ஏற்படுத்தியிருக்கின்றேன். உங்கள் இளம் வயதின் கரணமாக நான் உங்களிடமிருந்து அதிகமாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை” என்றார் அவர். அதின் பின்னர் அவர் அறையின் சுவர் பக்கமாகத் திரும்பி “ஓ என்அன்பே, உலகம் எத்தனையாக மாறிப் போய்க் கொண்டிருக்கின்றது! நாங்கள் எங்கள் பிரசங்கிகளாக தங்கள் தாயின் பாலைச் சூப்பிக் குடித்துக் கொண்டிருக்கும் ஒரு பொட்டலம் பையன்களைப் பெற வேண்டியதாகவிருக்கின்றதே!” என்றார்.
அதற்கப்பால் நான் பிரசங்க பீடத்திற்கு அருகில் அழைத்துச் செல்லப்பட்டேன். அந்த வயதான தேவ ஊழியர் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டார். ஒருக்கால் நான் எனது பிரசங்கத்தை முடிக்கத் தெரியாமல் திணறி அரை குறையாக இடையில் முடித்துவிட்டால் அதைத் தொடர்ந்து அவர் அதை எடுத்து நடத்தும் விதத்தில் அவர் ஆயத்தமாக என்னருகில் வந்து அமர்ந்திருந்தார். பாட்டும், ஜெபமும் முடிந்ததும் நான் பிரசங்க பீடத்திற்கு ஏறிச்சென்று நீதிமொழிகளின் புத்தகத்தில் “நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்” (நீதி 16 : 31 ) என்று என் பிரசங்கத்தை ஆரம்பித்தேன். அந்த வார்த்தையில் “நரை மயிரானது மகிமையின் கிரீடம்” என்று நான் சொன்னதும் அப்படியே நிறுத்திவிட்டு “இந்த நாளின் காலை வேளையில் நான் அந்த வார்த்தையைக் குறித்து அதிகமாக சந்தேகப்பட ஆரம்பித்தேன். காரணம், இன்று காலையில் நான் முதிர் வயதான ஒரு மனிதரைச் சந்தித்தேன். அந்த மனிதர் தனது சக தேவ ஊழியர்களை எந்தவிதமான மரியாதையான வார்த்தைகளுடன் நடத்த வேண்டும் என்ற சாதாரண நடை முறையைக்கூட அறியாதவராக இருந்தார்” நான் எனது பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து “வெறும் நரை மயிரானது மட்டும் மகிமையின் கிரீடமாகிவிடாது. அந்த நரை மயிரானது நீதியினால் உண்டாகியிருக்கும் பட்சத்தில் மகிமையான கிரீடமாகும். அந்த தலையானது சிகப்புத் தலையோ அல்லது கருப்புத் தலையோ அல்லது வேறு எந்த நிறமாகவோ இருந்தாலும் பரவாயில்லை, அந்தத் தலையானது “நீதியின் வழியில் உண்டாகும் தலை மயிரைக் கொண்டதாக இருந்தால் மட்டுமே மகிமையான கிரீடமாகும்” என்று நான் என்பிரசங்கத்தை தொடர்ந்து தேவ ஆவியானவரின் பெலத்தால் என்னாலியன்ற ஒரு அருமையான பிரசங்கத்தைச் செய்துவிட்டு பிரசங்க பீடத்தை விட்டு கீழே இறங்கி வந்து நாற்காலியில் அமர்ந்தேன். அந்த நேரம் அந்த சட்டன் என்ற குருவானவர் எனது முதுகில் தட்டிக் கொடுத்து “நான் எனது 40 ஆண்டு கால குருத்துவ தேவ ஊழியத்தில் இப்படிப்பட்டதொரு அருமையான பிரசங்கத்தை கேட்கவே இல்லை என்றும், அந்த நாளின் காலை வேளையில் தான் என்னிடம் தவறாகப் பேசிய காரியத்திற்காக தான் மிகவும் மனம் வருந்துவதாகவும் கூறினார்”. எனது பிரசங்கத்தைக் கேட்டுச் சென்ற திருச்சபை மக்கள் எல்லாரும் தெருக்களில் கூட்டம் கூட்டமாக நின்று எனது பிரசங்கத்தைக் குறித்து ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டு நின்றனர். கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக. அந்த நாளிலிருந்து சட்டன் குருவானவர் எனது நெருங்கிய ஆவிக்குரிய நண்பரானார்.
காகங்களையும், கைம் பெண்ணையும் கொண்டு எலியாவை போஷித்த தேவன் என்னையும் கரம் பிடித்து வழி நடத்தினார்.
வாட்டர்பீச் கிராம சபையில் உள்ள சிறிய தேவாலயத்தில் நான் பாஸ்டராக இருந்தபோது அந்தச் சபையின் மக்கள் மிகவும் கொஞ்சமாகவே எனக்கு உதவி செய்ய முடிந்தது. எனது பற்றாக் குறையின் காரணமாக கேம்பிரிட்ஜ் பட்டணத்திலுள்ள ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு நான் உதவியாளனாக வேலை பார்த்துக் கொண்டே திருச்சபை ஊழியத்தையும் கவனித்து வந்தேன். சில காலத்திற்குப் பின்னர் நான் அந்த வேலையை விட்டு விட்டு முழுமையாக பாஸ்டராகவே பணி புரிந்தேன். வாட்டர்பீச் சபையினர் எனக்கு ஆண்டுக்கு அதாவது 12 மாதங்களுக்கு 45 பவுண்டுகள் மட்டுமே சம்பளமாகக் கொடுத்தனர். அந்தச் சொற்பமான சம்பளத்தில் நான் தங்கியிருந்த இரண்டு அறைகளுக்கும் நானே வாடகை கொடுக்க வேண்டியதாகவிருந்தது. அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. சபை மக்களிடம் பணம் இல்லாததால் அவர்கள் எனக்குக் கொடுக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன். எனினும், அந்த அன்பான மக்கள் எனக்கு அவ்வப்போது ரொட்டி, இறைச்சி போன்றவைகளைக் கொடுத்தபடியால் அதை நான் தங்கியிருந்த வீட்டுச் சொந்தக்காரருக்கு கொடுத்து எனது வாடகைப் பணத்தை அதில் ஓரளவு சரிக்கட்டி வந்தேன்.
நான் தேவ ஊழியம் செய்த வாட்டர்பீச் சபையில் ஒரு விருத்தாப்பிய மனிதர் இருந்தார். அவர் ஒரு மாபெரும் கஞ்சப்பிரபு. அவருடைய மரணத்திற்கு முன்பு அவரே தனக்கு ஒரு படுக்கையை செய்து அந்தப் படுக்கையில் தன்னை வைத்துப் புதைக்க வேண்டும் என்றும், தனது கல்லறையானது தனது வீட்டையொட்டி ஜன்னல் பக்கமாகவே தோண்டப்பட்ட குழியாக இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாராம். அதாவது தனது அடக்கச் செலவுகள் எந்த நிலையிலும் அதிகமாகிவிடக்கூடாது என்பதற்காக அப்படி ஒரு ஏற்பாட்டை அவர் செய்தாராம். “அந்த மனிதர் யாருக்காவது, எதையாவது தனது வாழ்க்கையில் கை நீட்டிக் கொடுத்ததை நான் ஒருக்காலும் கேள்விப்படவில்லை” என்று அந்தச் சபையிலுள்ள ஒருவர் என்னிடம் கூறினார். “அவரைக் குறித்து உங்களைவிட எனக்கு அதிகமாகத் தெரியும். ஒரு ஓய்வு நாளின் மத்தியான வேளை அவர் எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார். அந்தச் சமயம் எனக்கு ஒரு தொப்பி அவசியமாகத் தேவைப்பட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு நான் ஒரு தொப்பி வாங்கிக் கொண்டேன்” என்று நான் அவரிடம் சொன்னேன். “நிச்சயமாக அந்த மனிதர் தான் செய்த செலவுக்காக தன்னை மன்னித்திருக்கவேமாட்டார். உங்களுக்குக் கொடுத்த பணம் தனக்கு எப்படியாவது திரும்பக் கிடைத்துவிடாதா என்று அவர் மிகவும் கவலைப்பட்டிருப்பார்” என்று அவர் எனக்குப் பதில் சொன்னார். “அந்த முழுச் சரித்திரத்தை குறித்தும் நீங்கள் கேள்விப்படவில்லை. அந்த முதியவர் அடுத்து வந்த ஓய்வு நாளில் திரும்பவும் என்னண்டை வந்து திரும்பவும் கொஞ்சம் பணத்தை எனக்குக் கொடுத்து தனது பொருளாசையானது தன்னைவிட்டு மாறும்படியாக கர்த்தரிடத்தில் தனக்காக ஜெபிக்கும்படியாகக் கேட்டுக் கொண்டார். ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும்படியாக சொன்ன பணத்தில் பாதியைத்தான் நான் கடந்த வாரம் உங்களுக்குக் கொடுத்தேன். அடுத்த பாதியை நான் உங்களுக்குக் கொடுக்காததினாலே மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். இரவில் ஒரு கண்ணுக்கும் என்னால் தூங்கவே முடியவில்லை” என்று அந்த முதியவர் சொன்னதாக நான் சொன்னபோது அந்த மனிதர் ஆச்சரியத்தால் பிரமிப்படைந்தார். கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களை ஆச்சரியமான வழிகளில் எல்லாம் வழிநடத்தி அவர்களைப் போஷிக்கின்றார் என்பதை நாம் மறப்பதிற்கில்லை.
நெருப்பு, நெருப்பு, நெருப்பு
ஒரு தடவை நான் வாட்டர்பீச் தேவாலயத்தில் ஒரு ஓய்வு நாளின் மத்தியான வேளை பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது சபையின் மக்கள் மிகவும் தூக்க மயக்கத்திலிருந்தனர். மாட்டிறைச்சி பொரியல் மற்றும் ஆவியில் வேக வைக்கப்பட்ட பதார்த்தங்களை நன்கு சாப்பிட்டுவிட்டு அந்த மக்கள் என் முன் அமர்ந்திருந்தபடியால் தூக்கம் அவர்களை சும்மா உட்காரவிடாததைக் குறித்து நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. அநேக மக்கள் எனக்கு முன்பாக அமர்ந்து தூக்கத்தில் தலையசைத்து சாய்ந்து சாய்ந்து விழுந்து கொண்டிருந்தார்கள். அவர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காக பண்டைய காலத்தில் பூர்வ பரிசுத்தவான்கள் செய்தது போல நான் எனது முழு பெலத்தையும் ஒன்று சேர்த்து “நெருப்பு” “நெருப்பு” என்று சத்தமிட்டேன். அவ்வளவுதான், அவர்கள் அனைவரும் தங்கள் தூக்கத்திலிருந்து உடனே கண்விழித்துக் கொண்டார்கள். நெருப்பு எங்கே? என்று அவர்களில் பலர் என்னிடம் கேட்டனர். “ஆண்டவரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத பாவிகளுக்காக நரகத்தில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைத்தான் நான் இங்கு சொல்லுகின்றேன்” என்று கூறி நான் அமைதியாகிவிட்டேன்.
நெஞ்சிலிருந்து நீங்காத ஓர் பிரசங்கம்
1853 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பட்டணத்திலுள்ள கில்ட்ஹாலில் நடந்த ஓய்வு நாள் பள்ளி யூனியன் வருடாந்திர கூட்டத்தில் நான் தேவச் செய்தி கொடுக்கும்படியாக அழைக்கப்பட்டிருந்தேன். என்னோடு கூட மற்ற இரண்டு குருவானவர்களும் பேசும்படியாக அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் வயதில் என்னைவிட மிகவும் மூத்தவர்கள் ஆவார்கள். வயதில் நான் மிகவும் குறைந்தவனாக இருந்தபடியால் உலக வழக்கத்தின்படி என்னை முதலில் பேசும்படியாகக் கேட்டுக் கொண்டார்கள். அந்த நாளில் நான் பேசிய செய்தியைக் குறித்து நான் எந்த ஒரு விபரத்தையும் இங்கு குறிப்பிட இயலாதவனாக இருக்கின்றேன். எனினும், வழக்கம்போல நான் எனது தேவச் செய்தியை கர்த்தருக்கு மகிமையாக நேர்மையான விதத்தில் கூடி வந்திருந்த ஏராளமான தேவ ஜனத்திற்கு முன்பாகக் கொடுத்தேன். நான் எனது பிரசங்கத்தில் என்னோடு கூட பேச அழைக்கப்பட்டிருந்த என்னிலும் வயது முதிர்ந்த சக பிரசங்கிமார்களைக் குறித்து எந்த ஒரு கனவீனமான வார்த்தையும் நான் பேசவே இல்லை. ஆனால், அந்த பிரசங்கிமார்களின் பிரசங்கிக்கும் முறை வந்தபோது அவர்கள் இருவரும் அங்கு கூடியிருந்த திரளான கூட்டத்தினருக்கு முன்பாக என்னை மிகவும் இழிவான விதத்தில் பேசிவிட்டனர். குறிப்பாக அவர்களில் ஒருவர் என் இளமையைக் குறித்து என் உள்ளம் மிகவும் வேதனைப்படும்படியான விதத்தில் பேசினார். அவர் தனது பேச்சில் “பையன்கள் தங்களது தாடி வளருமட்டும் எரிகோவில் காத்திருந்து பிற்பாடு வந்து பெரியோருக்கு பிரசங்கம் பண்ணுவதை விட்டுவிட்டு வேதாகம ஒழுங்கிற்கு நேர் விரோதமாகப் பேசுவது பரிதாபகரமான காரியம்” என்று குறிப்பிட்டார்.
அதைக் கேட்ட நான் என்னை பிரசங்கிக்கும்படியாக அழைத்த கமிட்டி தலைவரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு கூடி வந்த திரளான மக்களைப் பார்த்து “எரிகோவில் தாடி வளரும் மட்டாகத் தரித்திருக்கும்படியாக கேட்டுக் கொள்ளப்பட்டவர்கள் பையன்கள் அல்ல, நன்கு பூரணமாக வளர்ந்த முழு மனிதராவார்கள். அவர்களுடைய தாடியின் ரோமங்கள் அவர்களுடைய சத்துருக்களால் சிரைக்கப்பட்டதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்தக் காரியத்தின் சரி நிகரான உவமானம் என்னவெனில் ஒரு தேவ ஊழியன் தனது பரிசுத்த அழைப்பின் பாதையில் தேவனுக்கு விரோதமாக கொடிய பாவம் செய்து தேவ கிருபையிலிருந்து விழுந்து போவானாகில் அவன் தனிமைக்குச் சென்று தேவனோடு தனது காரியங்களை சரிப்படுத்தி ஒப்புரவாகி மனந்திரும்புவதுதான். எந்த ஒரு காரணமுமின்றி, அநீதியாக என்னைக் குற்றப்படுத்தி பேசிய மனிதருக்கு இந்த திரள் கூட்டத்திற்கு முன்பாக நான் கொடுக்கும் பதில் இதுவேதான்” என்றேன்.
அந்த நாள் மாலை வேளை கூட்டத்தில் பங்கு பெற்றிருந்த எஸ்ஸக்ஸ் என்ற இடத்திலிருந்து வந்த ஜியார்ஜ் கோல்ட் என்பவர் எந்த ஒரு காரணமுமின்றி நான் அநீதியான விதத்தில் மற்ற பிரசங்கி மார்களினால் தாக்கப்படுவதைக் கண்டு மிகவும் மனம் வருந்தினார். அந்த அன்பான மனிதர்தான் பின் வந்த நாட்களில் நான் லண்டன் மா நகரத்திலுள்ள நியூபார்க் என்ற பெரிய தேவாலயத்தில் நான் குருவானவராக நியமனம் பெறுவதற்கு எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
லண்டனிலிருந்து எனக்கு வந்த கடிதம்
1853 ஆம் வருடம் நவம்பர் மாதம் கடைசி ஓய்வு நாளின் காலை வேளை நான் வழக்கம்போல கேம்பிரிட்ஜ் என்ற இடத்திலிருந்து வாட்டர்பீச் என்ற கிராமத்திற்கு அந்த நாளின் காலை வேளை ஆராதனையை அங்கு நடத்துவதற்காக வந்து கொண்டிருந்தேன். அது ஒரு கிராமப்புற பாதை. ஐந்து அல்லது ஆறு மைல்கள் தொலைவுள்ள பாதை அது. ஒவ்வொரு ஓய்வு நாளிலும் ஒவ்வொரு காலடியாக நான் எடுத்து வைத்து வருவேன். ஒவ்வொரு சமயம் பாதி தூரத்தில் ஒரு குதிரை வண்டி வரும். அதில் நான் ஏறிச்செல்லுவேன். குதிரை வண்டியில் நான் ஏறிச்சென்றால் மில்ட்டன் என்ற இடத்திலுள்ள சுங்கச் சாவடியில் நான் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். அந்த வரிப்பணம் கட்டக்கூட என்னிடம் பணம் இல்லாமல் பெரும்பாலும் கால் நடையாகவே நான் நடந்து செல்லுவேன். குறிப்பிட்ட அந்தப் பனிப் பொழிவின் காலை நேரம் எனது இருதயம் தேவ அன்பால் சுடரொளி விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த நிலையில் நான் ஆனந்தமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்த நாளில் நான் ஆராதனையை ஆரம்பிப்பதற்கு முன்பாக லண்டனில் முத்திரை பதிப்பிக்கப்பட்டிருந்த ஒரு கடிதம் எனக்கு வந்திருந்ததை நான் கவனித்தேன். அப்படி ஒரு கடிதம் லண்டனிலிருந்து எனக்கு வர அவசியமில்லை. மிகவும் பரபரப்புடன் நான் அந்தக் கடிதத்தை திறந்து பார்த்தேன். லண்டனிலுள்ள புகழ்பெற்ற நியூபார்க் தேவாலயத்தில் நான் வந்து பிரசங்கிக்கும்படியாக அதில் எனக்கு அழைப்பு வந்திருந்தது. ஒரு வேளை அந்த அழைப்பு தவறுதலாக எனக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டு எனக்கு அருகிலிருந்த தேவாலய மூப்பரிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்தேன். அவர் அதை படித்துப் பார்த்துவிட்டு அது எனக்கேதான் வந்திருக்கின்றது என்றும், என்றாவது ஒரு நாள் தங்கள் சிறிய வாட்டர்பீச் சபையை விட்டு விட்டு ஒரு பெரிய தேவாலயத்தின் குருவானவர் பொறுப்பை நான் எடுத்துக் கொள்ளுவேன் என்ற பயத்திலேயே தான் இருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார்.
நான் லண்டனுக்கு வரும்படியாக திட்டமான தேதி குறிப்பிட்டு மற்றொரு கடிதமும் துரிதமாகவே எனக்கு வந்தது. அந்த அழைப்பை நான் ஏற்றுக் கொண்டு உடனே லண்டனுக்கு பயணமானேன். லண்டனிலுள்ள ராணி சதுக்கத்திலுள்ள ஒரு ஓய்வு விடுதியில் நான் தங்குவதற்கு ஒழுங்கு செய்திருந்தார்கள். நான் ஒரு பெரிய பழபழப்பான கருப்பு நிற கோட் அணிந்திருந்தேன். வெள்ளைப் புள்ளிகள் போடப்பட்ட ஒரு நீல நிற கைக்குட்டையையும் என் மீது போட்டிருந்தேன். என்னைப் பார்த்த அந்த ஓய்வு விடுதியின் மேற்பார்வையாளர் எனது அசாதாரணமான இளமையையும், நான் வந்திருந்த கிராமப்புற பட்டிக்காட்டு நிலையையும் பார்த்து இந்த இளைஞனா லண்டனில் பிரசங்கிக்கப்போகின்றான் என்று ஆச்சரியப்பட்டார்.
நான் தங்கியிருந்த அறையானது மிகவும் சிறியதாகவிருந்தது. அந்த அறையில் போடப்பட்டிருந்த சிறிய கட்டிலில் சனி இரவு முழுவதும் நான் அங்கும் இங்கும் உருண்டு புரண்டு கொண்டிருந்தேன். எனது நிலைக்காகப் பரிதாபப்படுவோர் எவருமில்லை. நான் முழங்காலூன்றி ஜெபிப்பதற்குக் கூட அந்த அறையில் இடம் இல்லாதிருந்தது. அந்த லண்டன் பட்டணம் முழுவதும் மானிடர்களால் நிறைந்திருந்தபோதினும் அங்கு எனக்கு ஒரு நண்பரும் இல்லாதிருந்தனர். அந்நியர்கள் நடுவில் ஒரு அந்நியனாக நான் அந்த இடத்தில் இருந்தேன். குளிரான ஓய்வு நாள் காலையில் நான் பலசந்துக்களையும், தெருக்களையும் கஷ்டப்பட்டுக் கடந்து கடைசியாக நான் பிரசிங்கக்கூடிய நியூபார்க் தேவாலயத்துக்கு வந்து சேர்ந்தேன். 1853 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் நாள் நான் எனது பிரசங்கத்தை லண்டன் பட்டணத்திலுள்ள அந்த தேவாலயத்தில் செய்தேன். அந்த நாளில் எனக்கு முன்பாக கூடியிருந்த மக்களின் எண்ணிக்கை 80 (எண்பது) பேர்கள் மட்டுமே. “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது” ( யாக்கோபு 1 : 17 ) என்ற தேவ வசனத்தின் பேரில் நான் பிரசிங்கித்தேன். அந்த நாளின் ஆராதனையில் பரிசுத்த ஆவியானவரின் ஒரு விசேஷித்த அசைவாடுதலை வந்திருந்தோர் அனைவரும் உணர்ந்திருக்கின்றனர். அந்த தேவாலயத்தின் மூப்பர் ஒருவர் எனது பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு நான் அந்த ஆலயத்தில் தொடர்ந்து 3 மாத காலம் பிரசிங்கித்து வந்தால் திரளான மக்கள் அந்த ஆலயத்துக்கு வர ஆரம்பித்து விடுவார்கள் என்று சொன்னார்.
லண்டன் பட்டணத்தின் நியூபார்க் தேவாலய குருவானவரானேன்
எனது பரிசுத்த பக்தி வாழ்க்கை, ஆத்தும பாரம், எனது பிரசங்கிக்கும் தேவ கிருபை யாவையும் மனதில் கொண்டு நியூபார்க் தேவாலய கமிட்டியினர் என்னைத் தங்கள் பிரமாண்டமான தேவாலயத்தின் குருவானவராக ஏற்றுக் கொண்டனர். 1854 ஆம் ஆண்டு நான் குருவானவராக அந்த பெரும் தேவாலயத்தின் பொறுப்பினை எடுத்தேன். அப்பொழுது எனது வயது 20 மாத்திரமே. அந்த தேவாலயத்தின் குருவானவராக நான் பொறுப்பேற்று எனது முதல் பிரசங்கத்தை செய்தபோது சுமார் 200 பேர்கள் அங்கு கூடியிருந்தனர். அந்த மக்கள் எத்தனையான உள்ளத்தின் பாரத்தோடு ஜெபித்தார்கள் என்பதை நான் மறப்பதற்கில்லை.
சில சமயங்களில் உடன்படிக்கையின் தேவ தூதனானவர் தங்கள் நடுவில் இருப்பதாகவும், அவரிடமிருந்து ஆசீர்வாதத்தை பரிந்து மன்றாடிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுகிறவர்களைப் போலவும் அவர்கள் காணப்பட்டார்கள். தேவாலயத்தில் கூடி வந்திருந்த நாங்கள் எல்லாரும் அமைதியான தேவ பிரசன்னத்தின் வல்லமை எங்கள் எல்லாரையும் முற்றுகையிட்டிருப்பதைக் கண்டு பிரமித்திருக்கின்றோம். அந்த தேவ பிரசன்னத்தின் ஆளுகையில் நாங்கள் அப்படியே அமர்ந்திருப்பதைத் தவிர வேறு எதையுமே எங்களால் செய்யக்கூடாது போயிற்று என்று அவர்கள் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் நான் “அன்பான சகோதரர்களே, தேவனுடைய ஆவியானவர் மிகவும் பிரத்தியட்சமாக இந்த நாளின் இராக்காலத்தில் நம் மத்தியில் அசைவாடினார். இப்பொழுது நாம் நமது வீடுகளுக்குச் செல்லுவோம். நாம் பெற்று அனுபவித்த அவருடைய கிருபை நிறைந்த தேவப் பிரசன்னத்தின் ஒளியை அப்படியே நம்முடன் பாதுகாத்து வைத்திருந்து அதை எந்த விதத்திலும் இழந்து விடாமல் காத்துக் கொள்ளுவோம்” என்ற முடிவுரை ஆசீர்வாத ஜெபத்துடன் நான் கூட்டத்தை முடித்தேன். அதைத் தொடர்ந்து பரத்திலிருந்து ஆசீர்வாதம் இறங்கி வந்தது. தேவாலயம் மக்களால் நிறைந்து வழிந்தது. அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். ஜெபிக்கும் ஒரு பரிசுத்த ஜனக்கூட்டத்திற்கே நான் ஊழியம் செய்யும்படியாக ஆண்டவர் எனக்கு ஆரம்பத்திலிருந்தே கிருபைகளைத் தந்ததற்காக நான் அவருக்கு எப்பொழுதும் மகிமையைச் செலுத்துகின்றேன். தேவாலயத்தில் நாங்கள் நடத்தின ஜெபக்கூட்டங்கள் எங்கள் ஒவ்வொருவருடைய ஆத்துமாவையும் அசைப்பதாக இருந்தது. எங்கள் ஜெபக் கூட்டங்களில் பங்கு பெற்ற ஒவ்வொருவரும் தேவனுடைய புதிய எருசலேமை முற்றுகையிடும் சிலுவை வீரராகக் காணப்பட்டனர். ஒவ்வொருவரும் பரிந்து மன்றாடும் ஜெபத்தின் வல்லமையால் உச்சிதப் பட்டணத்தைக் கைப்பற்றிக் கொள்ளுகிறவர்களைப் போலவிருந்தனர். அதின் காரணமாக சீக்கிரமாகவே அருளின் மாமழை பரத்திலிருந்து இறங்கிற்று. சபையில் பலத்த உயிர்மீட்சி உண்டாயிற்று. நியூபார்க் தேவாலயத்தையும் அதின் குருவானவராக ஸ்பர்ஜன் தனது 20 ஆம் வயதில் இருப்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
நியூபார்க் தேவாலய குருவானவராக இருந்த எனது தேவ ஊழியத்தில் மறக்க முடியாத அனுபவங்கள்
நான் நியூபார்க் தேவாலயத்தில் குருவானவராக இருந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள் நான் தேவாலயத்தின் குருவானவர் அறையில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது ஒரு அயர்லாந்து தேசத்து மனிதன் என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தான். அவன் மிகவும் தாழ்மையான குரலில் “மேன்மை தங்கிய ரெவரெண்ட் அவர்களே, ஒரு கேள்வியால் நான் உங்களை வீழ்த்துவதற்காக இங்கு வந்திருக்கின்றேன்” என்றான். “ஓ சகோதரனே, நான் ஒரு ரெவரெண்ட் அல்ல, அந்தப்பட்டத்தை நான் விரும்புபவனுமல்ல, நல்லது, உங்கள் கேள்வியைச் சொல்லுங்கள்” என்றேன். “தேவன் நீதியுள்ளவர், அப்படி அவர் நீதியுள்ளவராக இருந்தால் அவர் கட்டாயம் எனது பாவங்களுக்காக என்னைத் தண்டிக்க வேண்டும். நான் தண்டிக்கப்படுவதற்கு பாத்திரவானாக இருக்கின்றேன். அவர் உண்மையாகவே ஒரு நீதியுள்ள கடவுளாக இருப்பாரானால் என்னை தண்டித்தே ஆகவேண்டும். எனினும், நீங்கள் கடவுள் இரக்கம் உள்ளவர், அவர் பாவங்களை மன்னிக்கிறவர் என்று சொல்லுகின்றீர்கள். அது சரியாக எனது மனதுக்குப்படவில்லை. அப்படிச் செய்வதற்கு அவருக்கு அதிகாரம் கிடையாது. அவர் நீதியுள்ளவராக இருந்து, பாவஞ்செய்து அதற்குரிய தண்டனைக்கு பாத்திரமானவர்களை கட்டாயம் தண்டித்தே ஆக வேண்டும். கடவுள் நீதியுள்ளவராக இருந்து கொண்டு எந்தவிதத்தில் இரக்கம் உள்ளவராக இருக்க முடியும்?” என்று அவன் என்னிடம் கேட்டான். “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக அது சாத்தியமாகும்” என்று நான் அவனுக்குப் பதில் அளித்தேன். “ஆம்” என்று அவன் பதில் அளித்தான். “எனது குருவானவரும் உங்களைப் போலத்தான் பதில் அளித்தார். உங்கள் இருவருடைய பதிலும் ஒன்றாக இருக்கின்றது. அந்த சுருக்கமான பதிலை நான் விரும்பவில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக தேவன் தமது நீதியை நிலைநாட்டி அதே சமயம் எந்தவிதத்தில் அவர் இரக்கமுள்ளவராக தன்னைக் காட்ட முடியும்?” என்று அவன் என்னைக் கேட்டான்.
“சகோதரனே, நீங்கள் ஒரு கொலையைச் செய்துவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். நியாயாதிபதி உங்களுக்குத் தூக்குத் தண்டனையை வழங்கிவிட்டார். அந்த அயர்லாந்து தேசத்து மனிதன் கட்டாயம் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படவேண்டும்” என்று அவர் உத்தரவு கொடுத்துவிட்டார். “கட்டாயம் நான் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட வேவேண்டும்” என்று அவன் பதில் அளித்தான். “நான் உங்களை அதிகமாக நேசிக்கின்றேன். நீங்கள் எந்த ஒரு நிலையிலும் தூக்கிலிடப்படக்கூடாது என்று நான் விரும்புகின்றேன். அதற்கான பிரயாசங்களை எடுத்து உங்களைக் காப்பாற்ற முயற்சிக்கின்றேன். அது சாத்தியமாகுமா?” என்றேன் நான். “ஒருக்காலும் அது நடக்காது” என்றான் அவன். “நல்லது, அப்படியானால் நான் நமது இங்கிலாந்து தேசத்தை ஆட்சி செய்கின்ற மகா ராணியிடம் சென்று “மகா ராணி அவர்களே, நான் இந்த அயர்லாந்துக்காரரை என் உயிரினும் அதிகமாக நேசிக்கின்றேன். அந்த நியாதிபதி அவன் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படவேண்டும் என்ற சரியான தண்டனையை அவனுக்கு வழங்கிவிட்டார். அந்த மனிதருக்குப் பதிலாக என்னைத் தூக்கிலிட்டு நீதியை நிலைநிறுத்துங்கள் என்று சொல்லுகின்றேன். ராணியார் எனது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒருக்கால், அவர்கள் எனது விண்ணப்பத்தை அங்கீகரித்தால் நான் உங்களுக்குப் பதிலாக தூக்கிலிடப்படுவேன். அதற்கப்பால் போலீஸ்காரர் உங்களண்டை வந்து உங்களை தூக்கு மேடைக்கு அழைத்தால் நீங்கள் செல்லுவீர்களா?” என்றேன் நான். “ஓ, நான் அதற்கு எப்படிச் சம்மதிப்பேன்? “நீங்கள் செய்கின்ற காரியம் என்ன? அந்த மதிப்பிற்குரியவர் எனக்காக மரித்துவிட்டாரே, அதின் பின்னர் என்னுடைய விஷயத்தில் தலையிட உங்களுக்குஎன்ன வந்தது? என்னைவிட்டு விலகிப் போங்கள்” என்று நான் கூறுவேன் என்றான். “ஆ சிநேகிதனே, சரியான பதிலைச் சொன்னீர்கள். அந்த வழியின் மூலமாகத்தான் நாம் நமது இரட்சிப்பைக் கண்டடைந்தோம். தேவன் பாவத்தை கட்டாயம் தண்டிக்க வேண்டும். இரட்சகர் இயேசுதமது பிதாவிடம் “என் தகப்பனே, பாவிக்குப் பதிலாக நீர் என்னை அவனது ஸ்தானத்தில் தண்டியும்” என்று கூறினார். அவருடைய பிதா அவரது விருப்பத்தை நிறைவேற்றினார். நம் எல்லாருடைய பாவப் பாரங்களையும், நம் எல்லார் மேலும் நியாயமாக வரவேண்டிய தண்டனை யாவையும் பிதாவானவர் தமது ஒரேபேரான தமது அருமைக் குமாரன் மேல் வைத்துவிட்டார். நமது பாவங்களுக்காக தேவ மைந்தன் தண்டிக்கப்பட்டுவிட்டார். யார் யார் ஆண்டவர் இயேசுவை விசுவாசிப்பார்களோ அவர்களை தண்டிப்பது பிதாவாகிய தேவனுக்கு நீதியாகாது. அப்படியே நீங்களும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேவனுடைய ஒரேபேரான குமாரனை விசுவாசித்தால் இரட்சிக்கப்படவர்களாக உங்கள் பாதையில் களிகூர்ந்தவர்களாக செல்லலாம்” என்றேன். அந்த மனிதர் அந்த இடத்திலேயே இரட்சிப்பைப் பெற்ற மனிதராக தனது கரங்களைத் தட்டிக் கொண்டே சென்றான்.
(2)
அடுத்து ஒரு சம்பவம் நியூபார்க் தேவாலயத்தில்தான் நடந்தது. ஒரு குடிகார மனிதன் ஒரு ஓய்வு நாளின் மாலை வேளையில் குடிப்பதற்காக “ஜின்” என்ற மதுபானத்தை வாங்கிக்கொண்டு தேவாலயத்தின் வாசல் வழியாக தனது வீட்டுக்குச் செல்லச் சென்றவன் எப்பபடியோ மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவன் தெய்வாதீனமாக தேவாலயத்துக்குள் தள்ளப்பட்டு தேவாலயத்தின் உச்சி காலரியில் வந்து நின்று கொண்டிருந்தான். அப்பொழுது, தேவ ஆவியானவர் என்னில் பலமாகக் கிரியை செய்து கொண்டிருந்த படியால் நான் அவன் நின்று கொண்டிருந்த திசைக்கு நேராகத் திரும்பி நமது தேவாலயத்தின் காலரியில் அதோ ஒரு மனிதன் நின்று கொண்டிருக்கின்றான். அவன் தேவாலயத்துக்குள் தேவனுடைய வார்த்தையை கேட்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு வரவில்லை. அவனது பாக்கெட்டில் ஜின் என்ற மதுபானப்பாட்டல் இப்பொழுது உள்ளது என்றேன். நான் தனி மனிதன் ஒருவனை குறிப்பிட்டு சுட்டிக்காட்டி பேசியதால் அந்த மனிதன் தனது ஆவியில் குத்தப்பட்டவனானான். எனது பிரசங்கத்தில் அடுத்து வந்த எச்சரிப்பின் வார்த்தைகளும் அவனைத் தொட்டது. அவன் உடன்தானே ஆண்டவருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து இரட்சிப்பின் பாத்திரமானான்.
(3)
மற்றொரு சம்பவத்தில் ஒரு ஏழை விலை மாது (Prostitute) அதே தேவாலயத்தில் இரட்சிப்பைக் கண்டடைந்த காரியமாகும். அந்தப் பெண் அன்றைய தினம் பிளாக் பிரையர்ஸ் (Blackfriars Bridge) பாலத்திலிருந்து தேம்ஸ் நதிக்குள் குதித்து தற்கொலை செய்வதற்காக அந்த ஓய்வு நாளின் மாலை நேரம் சென்று கொண்டிருந்தாள். தேவாலயத்தில் அப்பொழுது ஆராதனை நடந்து கொண்டிருந்ததால் தற்கொலை செய்யு முன்னர் தேவனுடைய வார்த்தையையும் கேட்டுவிட்டு போய்விடலாம் என்ற ஒரு பலமான தூண்டுதலால் ஆலயத்துக்குள் வந்தாள். ஆலயத்துக்குள் வந்த அவள் திரும்பவுமாக வெளியே செல்ல அவளால் கூடாமற் போயிற்று. அந்த நாளின் மாலை வேளையில் நான் “இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே” (லூக்கா 7 : 44) என்ற தேவ வசனத்தின் பேரில் நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். பட்டணத்திலே பாவியான ஸ்திரீயாக வாழ்ந்து கொண்டிருந்த அந்த பெரும்பாவியான பெண்ணை தேவன் கிருபையாக மன்னித்து அவளைத் தமது அடியாளாக மாற்றின விதத்தையும், அவள் தனது கண்ணீரால் அன்பரின் பாதங்களை நனைத்து தனது தலை மயிரால் அவைகளைத் துடைத்து அந்த பொற் பாதங்களுக்கு பரிமள தைலம் பூசிய சம்பவத்தையும் நான் விவரித்துப் பேசிக்கொண்டிருந்தேன். எனது வாயிலிருந்து புறப்பட்ட தேவனுடைய வார்த்தைகளால் தொடப்பட்ட அந்த வேசிப் பெண் தனது பாவ வாழ்க்கையே அந்த நாளில் தேவனால் விஸ்தரித்துக் காட்டப்பட்டது என்பதை தனது உள்ளத்தில் உளமார உணர்ந்து குத்தப்பட்டு, உள்ளம் உருகி தனது சொந்த பாவ வாழ்க்கையை நினைத்து கண்ணீர் சிந்தி அழுது தேவனுடைய இரட்சிப்பின் பாத்திரமானாள். அந்தப்பெண்ணின் மனம் மாறுதல் எனக்கு மிகுந்த சந்தோசத்தை அளிப்பதாக இருந்தது. முதலாவது அந்த ஏழைப் பெண்ணை கொடிய தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றியது இரண்டாவது நித்திய நரகாக்கினையின் அழிவிலிருந்து அவளது விலையேறப்பெற்ற ஆத்துமாவை தப்புவிப்பதில் நான் ஒரு கருவியாக தேவனால் பயன்படுத்தப்பட்டதை எண்ணி ஆனந்த மகிழ்ச்சியடைந்தேன்.
(4)
நியூபார்க் தேவாலயத்தில் கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாள் மாலையில் 1864 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் நாள் நான் பிரசிங்கித்துக் கொண்டிருந்தேன். நியூவிங்க்டன் என்ற இடத்தில் வசிக்கும் ஒரு மனிதர் எனது பிரசங்கத்தைக் கேட்டு ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருந்தார். அதற்கப்பால் அவர் எனது ஆராதனைகளுக்கு ஒழுங்காக வந்து கலந்து கொண்டிருந்தார். அவர் எனது ஆலய ஆராதனைகளுக்கு வந்து கலந்து கொள்ளுவது இங்கிலாந்து தேச திருச்சபையின் அங்கத்தினராகவிருந்த அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதின் காரணமாக அந்தஅம்மையார் அவரை ஒவ்வொரு தடவையும் போகவிடாதபடி தடுத்து வந்திருக்கின்றார்கள்.
அந்த குறிப்பிட்ட ஓய்வு நாளின் இரவில் அந்த அம்மையாரின் கணவர் எனது தேவாலய ஆராதனைக்கு வந்ததின் பின்னர் என்னுடைய ஆராதனையில் என்னதான் நடக்கின்றது என்பதை கண்டறிய தனக்குள் தீர்மானித்து தன்னை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக முகத்தை ஒரு தடிப்பமான முகமூடியால் மறைத்துக் கொண்டு தன்னையும் ஒரு கனத்த சால்வையால் மூடிக்கொண்டு ஆராதனை ஆரம்பித்து சற்று நேர கால தாமதத்திற்குப் பின்னர் தேவாலயத்தின் மேல் காலரிக்கு ஏறிச்சென்று அமைதியாக அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் அங்கு வந்து அமரவும் எனது பிரசங்க வாக்கியமாக “யெரோபெயாமின் மனைவியே, உள்ளே வா, உன்னை அந்நிய ஸ்திரீயாக காண்பிப்பது என்ன? துக்க செய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்” (1 இரா 14 : 6) என்ற எனது பிரங்க வாக்கியம் அவர்களின் காதுகளில் அவர்கள் அதிர்ச்சியடையத் தக்கவிதத்தில் விழுந்தது. நான் தொடர்ந்து பேசிய வார்த்தைகள் அந்த அம்மையாரின் வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டியது போல இருந்தமையால் அவர்களும் தன்னைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவருடைய அடியாளானார்கள். அவர்களுடைய கணவன் வீடு வந்ததும், தான் வேஷம் மாறி தேவாலயம் வந்த விபரத்தையும், அந்த நாளின் இரவில் கொடுக்கப்பட்ட தேவ செய்தியால் தான் தொடப்பட்டதையும் குருவானவராகிய என்னிடம் சொல்லிவிடும் படியாக தனது கணவரைக் கேட்டுக் கொண்டதையும் நான் பின்னர் அறிந்து கர்த்தருக்குள் மிகுந்த சந்தோசம் அடைந்தேன்.
(5)
அடுத்த நாள் அதாவது முன் நடந்த சம்பவம் நடந்த மறு நாள் திங்கட் கிழமை மாலை தேவாலய ஆராதனை கூட்டத்தில் நான் தேவச் செய்தியைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது நான் எனது பிரசங்கத்தை நடுவில் நிறுத்திவிட்டு குறிப்பிட்ட ஒரு திசைக்கு நேராக நான் எனது கரத்தை நீட்டி “ஓ வாலிபனே, நீ உனது கைகளில் அணிந்திருக்கும் கை உறைகளுக்கு நீ பணம் கொடுக்கவில்லை. அவைகளை உனது முதலாளியின் கடையிலிருந்து நீ திருடியிருக்கின்றாய்” என்று கூறினேன். அந்த ஆராதனையின் முடிவில் ஒரு வாலிபன் எனது அறைக்கு வந்தான். அவனது முகம் வெளிறிப் போயிருந்தது. அவன் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டான். நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு முன்னாலுள்ள மேஜையில் தனது இரண்டு கையுறைகளையும் அப்படியே கழற்றி வைத்துவிட்டு தன் கண்களில் கண்ணீரை வடித்தவனாக ” நான் என் வாழ்க்கையில் முதல் தடவையாக இந்தக் கையுறைகளை திருடிவிட்டேன். இனிமேல் நான் என் வாழ்வில் இந்தக் காரியத்தை திரும்பவுமாக செய்ய மாட்டேன். ஐயா, இந்தக் காரியத்தை நீங்கள் வெளியே எங்கும் சொல்லிவிடாதீர்கள். அப்படித்தானே? நான் திருடின இந்தக் காரியம் எனது பக்தியுள்ள தாயாரின் காதுகளுக்கு தெரியும் பட்சத்தில் அவர்கள் அதிர்ச்சியில் உடனே மரித்துப்போய் விடுவார்கள்” என்று அவன் என்னிடம் கெஞ்சினான்.
லண்டனில் கொள்ளை நோய் காலரா
நான் நியூபார்க் தேவாலயத்தில் குருவானவராக பதவி ஏற்று அநேகமாக 12 மாதங்கள்தான் ஆகியிருக்கும். லண்டனுக்குப் பக்கத்து இடங்களில் காலரா என்ற கொடிய கொள்ளை நோய் பரவிவிட்டது. அந்த கொள்ளை நோய் எனது திருச்சபையிலும் பலமான அழிவை உண்டு பண்ணிவிட்டது. குடும்பம் குடும்பமாக கொள்ளை நோய் தாக்கியது. ஒவ்வொரு குடும்பத்தினரும் காலரா நோயால் தாக்குண்ட தங்களது அருமையானவர்களைக் காண வரும்படியாக எனக்கு அழைப்பு விடுத்தார்கள். தினந்தோறும் கல்லறைத் தோட்டத்தில் நான் அடக்க ஆராதனை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. சரீரத்தில் வாலிபத்தின் பெலனும், தெம்பும் இருந்தமையால் ஆரம்ப நாட்களில் காலரா நோய் பிடித்த குடும்பங்களையும், நண்பர்களையும் மூலை முடுக்குகள் எல்லாம் சுற்றிச் சென்று பார்த்து அவர்களுக்காக ஜெபம்பண்ணி அவர்களுக்கு ஆறுதல், தேறுதல் சொல்லி வந்தேன். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நான் எனது ஆவி ஆத்துமா சரீரத்தில் மிகவும் சோர்படைந்து மனந்தளர்ந்து போனேன். எனது அருமையான நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக காலரா நோயினால் மரணமடைந்து கொண்டிருந்தார்கள். என்னைச் சுற்றிலும் காலரா நோயினால் பீடிக்கப்பட்டவர்களைப்போல நானும் அந்த நோயால் தாக்கப்படாவிட்டாலும் சரீரப் பிரகாரமாக நான் மிகவும் பெலவீனமடைந்து சீக்கிரம் நாமும் கூட விழுந்துவிடுவோமோ என்ற ஒரு மன பயம் என்னைத் தாக்கத் தொடங்கிற்று. இன்னும் கொஞ்ச நாட்கள் மாத்திரம் அந்த நிலை நீடித்திருந்தால், அந்த அழுகையும், கண்ணீரும் இன்னும் சொற்ப நாட்கள் தொடர்ந்திருந்தால் நானும் கூட அவர்களுடன் சேர்ந்து விழுந்திருப்பேன். அந்தவித பாரத்தையும், பழுவையும் என்னால் தாங்கக்கூடாது போயிற்று.
ஒரு நாள் காலரா நோயால் பீடிக்கப்பட்டு மரித்துப் போன ஒருவரின் அடக்க ஆராதனையை நான் நடத்தி முடித்து விட்டு மிகவும் துயரத்தோடு டோவர் என்ற தெரு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரம், தேவன் எனது பார்வையை ஒரு திசைக்கு நேராகத் திருப்பினார். அங்கே ஒரு செருப்பு தைக்கும் மனிதன் தனது கடை ஜன்னலில் ஒரு பேப்பரை ஒட்டி வைத்திருந்தான். அதில் ஏதோ எழுதப்பட்டிருப்பதை நான் கவனித்தேன். அந்த எழுத்து நல்ல தெளிவாகவும் தடித்த உருவத்திலும் எழுதப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் நான் அதில் ஏதோ வர்த்தக விளம்பரம்தான் எழுதியிருக்கின்றது என்று எண்ணிக் கொண்டேன். ஆனால், அருகில் வந்து பார்த்தபோது கீழ்க்கண்ட தேவ வார்த்தைகள் அதில் காணப்பட்டன:-
“எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்கு தாபரமாகக் கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது”
(சங்கீதம் 91 : 9, 10)
அந்த வார்த்தைகளை நான் வாசித்ததும் எனது ஆவிக்குள்ளாக உடனடியாகத்தானே பெலப்படுத்தப்பட்டேன். நான் தேவனுடைய கரத்துக்குள் முழுமையான பாதுகாப்புக்குள் இருப்பதையும், தேவன் சாவாமையை எனக்குத் தரித்துவிட்டார் என்ற ஆணித்தரமான நம்பிக்கையும் அந்த இடத்திலேயே எனக்கு உண்டாயிற்று. அதற்கப்பால், நான் காலரா நோயால் பீடிக்கப்பட்ட மக்களை எந்த ஒரு பயமும், கலக்கமும் இல்லாமல், சமாதானமான ஆவியுடன் எங்கும் தைரியமாகச் சுற்றித்திரிந்து பார்த்து அவர்களுக்கு ஆறுதலும், தைரியமும் கூறி அவர்களுக்காக ஜெபித்து வந்தேன். அந்தச் செருப்பு தைக்கும் மனிதனின் உள்ளத்தில் கர்த்தர் அந்த தேவ வார்த்தைகளை தனது கடையின் ஜன்னலில் சோர்படைந்த தமது தாசனாகிய எனக்காக எழுதி வைக்கும்படியாக அவன் உள்ளத்தை ஏவி எழுப்பிய என் தேவாதி தேவனை துதித்து ஸ்தோத்திரிக்கின்றேன்.
லண்டன் நகரத்தைச் சுற்றிலும் உள்ள மக்களை வாரிக்கொண்டிருந்த அந்தக் கொடிய கொள்ளை நோயின் நாட்களில் நான் பயத்தின் காரணமாக எங்கும் ஓடி எனது ஜீவனைப் பாதுகாத்துக்கொள்ள ஒளித்துக் கொள்ளாமல் லண்டன் பட்டணத்திலேயே தரித்திருந்து காலரா நோயினால் தாக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, மரித்தவர்களைப் பார்த்து வந்தேன். அடக்க ஆராதனைகளையும் அனுதினமும் ஒழுங்காக நடத்திக் கொண்டிருந்தேன். கர்த்தருடைய ஊழியனாகிய நான் எனது தேவ ஊழியத்தின் பாதையில் கர்த்தருடைய பிள்ளைகளின் துன்ப துக்க நேரத்தில் அவர்கள் அருகில் இருந்து அவர்களை ஆறுதல்படுத்துவது எனது இன்றியமையாத கடமை என்பதை நான் பலமாக உணர்ந்தேன்.
ஒரு திங்கட் கிழமை அதிகாலை எனது வீட்டின் கதவின் மணி பலமாக ஒலித்தது. நான் எனது ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழும்பினேன். அப்பொழுது அதிகாலை மூன்று மணி. காலரா நோயினால் மரித்துக்கொண்டிருந்த ஒரு மனிதரை நான் உடனடியாகப் பார்க்க வரும்படியாக அழைக்கப்பட்டேன். நான் செல்ல வேண்டிய இடம் லண்டன் பாலத்துக்கு அருகாமையில் எனது இருப்பிடத்திற்கு சமீபத்தில்தான் இருந்தது. நான் அந்த இடத்திற்குச் சென்று சில படிக்கட்டுகள் ஏறி காலரா நோயால் தாக்கப்பட்டிருந்த மனிதன் படுத்திருந்த அறைக்குள் சென்றேன். “ஓ ஐயா, அரை மணி நேரத்திற்கு முன்னர்தான் இந்த மனிதர் தன்னை நீங்கள் வந்து பார்க்கும்படியாக என்னைக் கெஞ்சி மன்றாடினார்” என்று அவருக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த தாதிப்பெண் என்னிடம் கூறினாள். “அவருக்கு என்ன வேண்டும்?” என்று நான் கேட்டேன். “அவர் மரித்துக்கொண்டிருக்கின்றார்” என்று அவள் பதிலளித்தாள். “அவர் மரித்துக்கொண்டிருப்பதை நானும் பார்க்கின்றேன்” “பிரைட்டனிலிருந்துநேற்று இரவுதான் அவர் வீட்டிற்கு வந்திருக்கின்றார். பகற் காலம் முழுவதும் வெளியேதான் இருந்திருக்கின்றார். அவருக்கு கொடுப்பதற்காக ஒரு வேதாகமத்துக்காக நான் தேடிக்கொண்டிருக்கின்றேன். இங்கு வீட்டிலும் வேதாகமம் எதுவும் இல்லை. எனினும், நீங்கள் ஒரு வேதாகமம் கட்டாயம் கொண்டு வந்திருப்பீர்கள் என்று நான் நம்புகின்றேன்” என்று அவள் கூறினாள். “ஓ”, ஒரு வேதாகமம் இந்த நேரம் அவருக்கு பிரயோஜனப்படாது. அவர் சுய நினைவோடிருந்தால் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை வேத வசனங்களிலிருந்தே நான் அவருக்குச் சொல்லுவேன்”என்று நான் கூறினேன். நான் மரித்துக் கொண்டிருந்த அந்த மனிதரின் அருகிலிருந்து அவரிடம் பேசினேன். ஆனால், அவரால் எனக்கு எந்த ஒரு பதிலும் கொடுக்கக் கூடாதிருந்தது. திரும்பவும் நான் அவரிடம் பேசினபோது அவருக்கிருந்த கொஞ்ச தன்னறிவையும், தன்னை விரைந்து நெருங்கி வரும் சாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதையும் நான் கவனித்தேன். நான் அவரண்டை சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தேன். அதற்குள்ளாக அவருடைய ஜீவன் பிரிந்து சென்றுவிட்டது.
இந்த மனிதர் தான் உயிரோடிருந்த நாட்களெல்லாம் என்னைப் பரிகாசம் பண்ணுவதையே பழக்கமாக வைத்திருந்தார். மிகவும் கடினமான வார்த்தைகளால் மாய்மாலக்காரன் என்று அடிக்கடி இவர் என்னை அழைத்து வந்தார். எனினும் நான் அவரண்டை வருவதையும், நான் அவருக்கு ஆலோசனை கொடுப்பதையும் இறுதி வேளையில் விரும்பிய அவரை மரணத்தின் அம்புகள் ஊடுருவிப் பாய்ந்து வீழ்த்திவிட்டது. அந்த மனிதன் என்னை ஒரு தேவனுடைய மனிதன் என்பதை தனது உள்ளத்தால் சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்து வைத்திருந்தாலும் அதை தனது சொந்த நாவினால் பாதுகாக்க கவலைப்படவில்லை. அந்த மனிதரின் மரித்த சடலத்தண்டை அவருக்கு எந்த ஒரு உதவியும் நான் செய்ய இயலாதவனாக நின்று கொண்டிருந்தேன். அவர் விடுத்த அவசர அழைப்புக்கு நான் உடனடியாக செவி கொடுத்து வந்தாலும் அவரது மரித்துப்போன சரீரத்தையும், நஷ்டப்பட்டுப்போன ஒரு ஆத்துமாவையும் தான் என்னால் காண முடிந்தது. நல்ல ஆரோக்கியமான உடல் நலத்தை தேவன் அந்த மனிதருக்குக் கொடுத்திருந்த நாட்களில் கிறிஸ்து இரட்சகரை வலுக்கட்டாயமாக வெளியே தள்ளிப்போட்டு மரணத்தின் விழிம்பிற்கு வந்த கடைசி நேரத்தில் எனக்கு ஆள் அனுப்பினார். காலம் பிந்திப்போன பின்னர், என்றுமாக மூடப்பட்ட கதவின் வழியாக தனது ஒப்புரவாக்குதலின் காரியத்தைச் செய்ய பெருமூச்சு விட்டார். ஆனால், அவரால் அதை செய்யக்கூடாது போயிற்று. அவரது மனந்திரும்புதலுக்கு ஒரு துளிதானும் இடம் இப்பொழுது இல்லாமற் போயிற்று. காரணம், தேவன் அவருக்கு கடந்த காலத்தில் மனந்திரும்புதலுக்காக கொடுத்திருந்த அருமையான தருணங்களை எல்லாம் அவர் பாழாக்கிவிட்டார்.
நான் அங்கிருந்து எனது வீட்டிற்குத் திரும்பினேன். நான் வீடு திரும்பிய சற்று நேரத்திற்கெல்லாம் வேறு ஒரு இடத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. இந்தச் சமயம் ஒரு வாலிபப் பெண்ணை நான் வந்து பார்க்க வரும்படியாகக் கேட்டுக் கொள்ளப்பட்டேன். மேலே நாம் பார்த்த மனிதரைப்போன்று இந்தப் பெண்ணும் மரணத்தின் விழிம்பில்தான் இருந்தாள். ஆனால், ஒரு வெகு அழகான பரவசமான காட்சி அது. தான் மரணமடையப்போவதை அவள் திட்டமாக தன்னளவில் அறிந்திருந்தாலும் அவள் தன் அன்பின் ஆண்டவரை துதித்துப் பாடிக் கொண்டிருந்தாள். அதுமட்டுமல்ல, தன்னைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த தனது சகோதரர்களையும், தனது சகோதரிகளையும் பார்த்து தான் செல்லப்போகின்ற பரலோக இன்ப வீட்டிற்கு தன்னைத் தொடர்ந்து அவர்களும் வரும்படியாக அவள் வருந்தி கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்தாள். தனது தாய் தந்தையர் மற்றும் தன்னைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்த அனைவரிடமும் அவள் விடைபெற்றுக்கொண்டாள். தனது திருமண நாளன்று அவள் எத்தனை மனமகிழ்ச்சியாக காணப்படுவாளோ அத்தனை ஆனந்த மகிழ்ச்சி அவளில் காணப்பட்டது. அந்தக் காலை வேளையில் அவள் சந்தோசமுடையவளாகவும், ஆசீர்வதிக்கப்பட்ட வளாகவும் காணப்பட்டாள். எனது வாழ்வில் அப்படிப்பட்டதோர் ஆனந்த களிகூருதலின் காட்சியை நான் ஒருக்காலும் கண்டதே இல்லை. மேலே நாம் கண்ட காட்சிகள் இரண்டில் அந்த மனிதர் ஆண்டவருக்குப் பயப்படவில்லை, அதின் பரிதாபகரமான முடிவை அவர் சந்தித்து என்றென்றைக்குமுள்ள காரிருளுக்குள் கடந்து சென்றார். ஆனால், கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடந்த அந்த இளம் பெண் மிகுந்த ஆர்ப்பரிப்போடு தனது பரம எஜமானருடைய நித்திய சந்தோசத்துக்குள் பிரவேசித்தாள்.
லண்டனில் நான் மேற்கொண்ட எனது ஆரம்ப கால ஊழிய நாட்களில் தேவனுடைய அபரிதமான ஆசீர்வாதங்கள் என்னோடு இருந்தது. எனது ஊழியத்தின் மூலமாக இரட்சிப்பின் சந்தோசத்தைக் கண்டு கொண்ட ஆத்துமாக்கள் மற்றும் ஆவிக்குரிய தேவ ஆலோசனைகளைப் பெற விரும்புவோர் என்னிடம் வரலாம் என்று நான் ஒரு குறிப்பிட்ட நாளைக்குறித்து அந்த நாளில் நியூபார்க் தேவாலயத்தை திறந்து வைத்திருந்து காத்திருந்தால் போதும். எனது காத்திருப்பு ஒருக்காலும் வீண் போவதே இல்லை. காலையிலிருந்து நான் அமர்ந்திருந்தால் ஒருவர் பின் ஒருவராக மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் தாங்கள் தங்கள் ஆண்டவரண்டை வந்த விதத்தை கதை கதையாகச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. அந்த அன்பான மக்களைச் சந்தித்து நான் எனது காலை ஆகாரத்தையும் மறந்து இறுதியாக எனது மத்தியான சாப்பாட்டையும் விட்டுவிட்ட நாட்கள் பல உண்டு. எனினும், ஆத்துமாக்கள் பேரில் இருந்த எனது வாஞ்சையால் அந்த ஆகாரங்களைப் பற்றிய நினைவுகள் எல்லாம் என்னைவிட்டுப் பறந்தோடிப் போய்விட்டன.
பூலோகின் இறுதி ஆண்டு
உலகத்தின் மாபெரும் தேவ மனிதர்களான ஜாண் பன்னியன், ஜியார்ஜ் விட் ஃபில்ட், ஜாண் கால்வின் போன்றவர்களைப் போன்று நல்ல நடுத்தரமான வயதிலேயே ஸ்பர்ஜனும் கர்த்தருடைய பரம இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார். நீண்ட நாட்கள் கட்டில் கிடையாகக் கிடந்து அவதிப்படாமல், மற்றவர்களுக்கு எந்த ஒரு தொந்தரவும், சிரமமும் கொடாமல் அவருடைய ஆவி மிகுந்த தேவ சமாதானத்தோடு தான் அதிகமாக நேசித்த தன் அருமை நேசரண்டை கடந்து சென்றது.
1891 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி காலையில் அதாவது புத்தாண்டுக்கு முந்தின தினம் ஸ்பர்ஜன் தனது முக்கியமான நண்பர்களுக்கு தனது வீட்டின் அறையில் இருந்தவாறே இரண்டு தேவச் செய்திகளைக் கொடுத்தார். தனது வீட்டின் அறையில் இருந்தவாறே 1892 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 10 ஆம் தேதியும் 17 ஆம் தேதியும் 2 சிறிய ஆராதனைகளையும் அவர் நடத்தினார். இந்த உலகத்தில் அவர் கடைசியாக நடத்திய 17 ஆம் தேதி ஆராதனையில் அவரே முடிவுரையாக ஆசீர்வாதம் கூறி முடித்தார். அடுத்த 15 நாட்களில் தனக்கு என்ன நேரிடப் போகின்றது என்பதை மனதில் தீர்க்கத்தரிசனமாக முன் அறிந்தவரைப் போன்று தனது இறுதி விடைபெறும் பாடலையும் அவரே தெரிந்து கொண்டார். அந்த ஆங்கிலப்பாடலின் வரிகள் கீழ்க்கண்டவாறு இருந்தது:-
The Sands of time are sinking
The dawn of heaven breaks,
The summer morn I have sighed for,
The fair sweet morn awakes,
Dark, dark hath been the midnight,
But dayspring is at hand,
And glory, glory dwelleth
In Immanuel’s land.
அடுத்து வந்த 2 நாட்களும் காற்று பலமாக வீசியது. அதின் காரணமாக அவரால் கொஞ்ச தூரமே நடக்க முடிந்தது. எனினும், அடுத்த நாளான புதன் கிழமை “மான்றி” என்ற ஒரு சிறிய கிராமம் வரை அவரால் நடந்து செல்ல முடிந்தது. அந்த நாளின் பிற்பகுதியில் அவரது வலது கையில் வீக்கம் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற பெரிய நோயின் அறிகுறிகளும் அவரது உடலில் தென்பட்டன. துரிதமாகவே அவர் தனது படுக்கைக்குச் சென்றார். அதிலிருந்து அவர் ஜீவனோடு எழும்ப முடியாமற் போயிற்று. அந்த வாரத்தின் கடைசியில் அவர் தனது காரியதரிசியிடம் “எனது தேவ ஊழியம் முற்றுபெற்றுவிட்டது. நான் பெலவீனப்பட்டிருக்கும் இந்த நோயிலிருந்து நான் இனி சுகமடையப்போவதில்லை” என்று கூறி மற்றும் பல காரியங்களையும் சொல்லியிருக்கின்றார்.
பிரசங்க வேந்தரின் பரம கானான் பிரவேசம்
1892 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 30 ஆம் தேதி ஓய்வு நாளின் நள்ளிரவு 11 மணி ஆகி ஐந்து நிமிடங்கள்கடந்து சென்றிருந்த நேரத்தில் “மோட்ச பிரயாணம்” புஸ்தகத்தில் நாம் வாசிக்கின்ற சத்திய வீர தீரர் உச்சித பட்டணத்திற்குள் பிரவேசித்தபோது அந்தப்பட்டணத்தின் எக்காளங்கள் எல்லாம் அவரை வாழ்த்தும்படி முழங்கினது என்ற வாசகத்தின்படி தேவ பக்தன் பரம கானானுக்குள் பிரவேசித்தார். அவருடைய மரணச் செய்தியை மக்களுக்கு அறிவிக்க பட்டணத்தின் எக்காளங்கள் எல்லாம் உடனே முழங்கின. வேல்ஸ் நாட்டு இளவரசரும், இராணியும் தங்கள் இரங்கல் செய்தியை முதலாவதாக அவருடைய மனைவி சூசன்னா ஸ்பர்ஜனுக்குத் தெரிவித்தார்கள்.
ஸ்பர்ஜன் மரித்த அன்றைய தினம் இரவு 10 மணிக்கு சற்று பின்னால் ஒரு கூட்டம் தேவதூதர்கள் அவர் மரணப்படுக்கையிலிருந்த மென்டன் என்ற இடத்திலுள்ள அவரது வீட்டிற்கு மேலாகப் பறந்து கொண்டிருந்ததை தான் பார்த்ததாக ஜோசப் ஹெரால்ட் என்ற பரிசுத்தவான் கூறினார்.
தெற்கு லண்டன் பட்டணம் இத்தனையானதொரு ஜனத்திரள் ஊர்வலத்தை அதின் சரித்திரத்திலேயே கண்டிருக்காது. 100000 (ஒரு லட்சம்) மக்களுக்கும் குறைவில்லாமல் அந்தக் கூட்டம் இருந்தது. 1892 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் நாள் ஸ்பர்ஜனின் பிரேத ஊர்வலம் கூடார தேவாலயத்திலிருந்து 5 மைல்கள் தொலைவில் இருந்த நார்வுட் கல்லறைத் தோட்டத்திற்கு மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அந்த பரம கானான் ஊர்வலக் காட்சியை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
சரியாக 18 வருடங்ளுக்கு முன்பாக இந்த ஊர்வலத்தைக் குறித்து தேவ மனிதர் தனது பிரசங்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்:-
1874 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியாகிய கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாள் ஆராதனையின் பிரசங்கத்தின் போது இன்னும் கொஞ்ச காலத்தில் தெருக்களில் கூட்டமாக கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தைக் கண்டு “இவ்விதமாக இன்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்களே அதின் காரணம் என்ன?” என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்பார்கள். அதில் ஒருவர் “உங்களுக்குத் தெரியாதா? இன்று அவர் அடக்கம் செய்யப்படக் கொண்டு போகப்படுகின்றார்” என்பார். “யார் அவர்?” என்று அடுத்தவர் கேட்பார். “ஆம், அவர்தான் ஸ்பர்ஜன்” “கூடார தேவாலயத்தில் பிரசிங்கிப்பவரா?” என்பார் அடுத்தவர். “ஆம் அவர்தான் இன்று அடக்கம் செய்யப்படப் போகின்றார்” என்று மற்றவர் கூறுவார். அந்த நாள் நெடுந்தூரத்தில் இல்லை. அது விரைந்து வரப்போகின்றது. என்னுடைய ஜீவனற்ற சடலம் அமைதியான கல்லறைக்குக் கொண்டு செல்லப்படப் போகும் போது நீங்கள் மனந்திரும்பியவர்களாக இருந்தாலும், இல்லாதவர்களாயிருந்தாலும் “அந்த மனிதர் நித்தியத்துக்கு அடுத்த காரியங்களை பின்னுக்கு என்று ஒரு போதும் தள்ளிப் போடாதேயுங்கள் என்று எத்தனை எளியதும், சாதாரணமுமான வார்த்தைகளில் நம்மைப் பார்த்துக் கூறி கெஞ்சி மன்றாடினார்” என்பதைக் கட்டாயம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இப்பொழுது அவர் கல்லறைக்குச் செல்லுகின்றார். நாம் நமது பாவத்தில் மடிந்தால் நமது இரத்தப்பழிக்கு அவர் உத்தரவாதி அல்ல” என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள். “வாழ்நாட் காலம் மிகவும் குறுகியது”
ஸ்பர்ஜனின் மரணச் செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்பட்டது. அந்தச் செய்தி அறிவிக்கப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் இந்த உலகத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள் எல்லாரும் அந்த மரணச் செய்தியை தங்கள் சொந்த வீட்டின் மரணச் செய்தியாக எடுத்துக் கொண்டு கண்ணீர் சிந்தினார்கள். மென்டன் பட்டணத்திலுள்ள தபால் நிலையத்தில் ஸ்பர்ஜனின் மனைவி சூசன்னா ஸ்பர்ஜனுக்கு இரங்கல் செய்திகள் உலகமெங்கிலுமிருந்து வந்து குவிந்த வண்ணமாக இருந்தன.
பற்பலவிதமான வண்ண வண்ண மலர்க்கொத்துகள் சூசன்னா ஸ்பர்ஜனுக்கு அவர்களது சிநேதிகளாலும், நண்பர்களாலும் அனுப்பப்பட்டிருந்தன. அவைகளை அவர்கள் அதிகமாக விரும்பாமல் தன்னுடைய பிதாவின் சந்நிதிக்கு ஜெய வீரனாகப் பிரவேசிக்கும் தனது கணவருக்கு அதற்கு அடையாளமாக குருத்தோலைகளை மாத்திரம் கொண்டு வரும்படியாக அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
ஒலிவமர பிரேதப் பெட்டியின் கால் மற்றும் தலைமாட்டில் கீழ்க்கண்ட வாசகங்கள் எழுதப்பட்ட தட்டுகள் வைக்கப் பட்டிருந்தன:-
என்றும் எங்கள் அன்பின் நினைவில் நிலைத்திருக்கும்,
சார்லஸ் ஹட்டன் ஸ்பர்ஜன்
பிறப்பு:- கெல்விட்டன், 1834 ஆம் ஆண்டு
ஜூன் மாதம் 19 ஆம் நாள்
கர்த்தரில் நித்திரை:- மென்டன், 1892 ஆம் ஆண்டு
ஜனுவரி 31 ஆம் நாள்.
“நல்ல போராட்டத்தைப் போராடினேன்,
ஓட்டத்தை முடித்தேன்,
விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்”
தேவ மனிதர் ஸபர்ஜனின் ஞாபகார்த்த ஆராதனையும், அடக்க ஆராதனையும் 7/2/1892 முதல் 11/2/1892 வரை கூடார தேவாலயத்தில் வைத்து நடத்தப்பட்டது. கூடார தேவாலயத்தில் அவர் நீண்ட நாட்கள் பயன்படுத்தியிருந்த அவருடைய பரிசுத்த வேதாகமம் பிரேதப் பெட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தது. “பூமியின் எல்லையெங்கு முள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள், அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்” (ஏசாயா 45 : 22 ) என்ற பகுதி திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த தேவ வார்த்தையின் மூலமாகத்தான் அவர் 1850 ஆம் ஆண்டு தனது இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றிருந்தார்.
ஸ்பர்ஜனின் அடக்க ஆராதனையின் பிரதான இறுதிப் பகுதியை பாஸ்டர் ஆர்ச்பால்ட் ஜி. ப்ரவுண் என்ற தேவ மனிதர் எடுத்து நடத்தினார். அவர் பேசிய வெகு அருமையான பொருத்தமான வார்த்தைகள் எல்லாம் அவருடைய இருதயத்திலிருந்து நேரடியாக வருவதாக இருந்தது. அவர் தனக்கு முன்பாக பிரேதப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஜீவனற்ற ஸ்பர்ஜனின் சடலத்தைப் பார்த்து இவ்விதமாகப் பேசினார்:-
“அருமையான தலைவர் அவர்களே, உண்மையுள்ள பாஸ்டர் அவர்களே, பிரசங்க மன்னன் அவர்களே, அருமை சகோதரன் அன்பு ஸ்பர்ஜன் அவர்களே, நாங்கள் உங்களுக்கு இறுதி விடை கொடுப்பதற்காக அல்ல, கொஞ்ச காலம் மட்டும் பிரிந்து பின்னர் ஒன்று கூடிக்கொள்ளும் “நல் இரவு வந்தனம்” சொல்லுவதற்காகவே இங்கு கூடி வந்துள்ளோம். மீட்கப்பட்டவர்கள் உயிர்த்தெழும்பக் கூடிய அந்த முதலாம் நாள் அதிகாலையில் நீங்கள் விரைந்து எழுவீர்கள். அந்த “நல் இரவு” வாழ்த்தை நாங்கள் அல்ல, நீங்கள்தான் கூறிக்கொண்டு உங்கள் தூக்கத்திற்கு செல்லுகின்றீர்கள். நாங்கள் பொல்லாங்கனுடைய இருளுக்குள் கிடந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது நீங்கள் தேவனுடைய ஆச்சரியமான ஒளியில் இருக்கின்றீர்கள். எங்களுடைய இராக்காலமும், அத்துடன் கூடவே எங்களுடைய அழுகையும், அங்கலாய்ப்பும் வெகு சீக்கிரமாகவே கடந்து செல்லும். அதற்கப்பால் நாங்களும், எங்கள் பாடல்களும் உங்களுடன் இணைந்து உயிர்த்தெழுதலின் காலை வேளையை ஒன்றாகச் சந்திப்போம். அதற்குப்பின்னர் இருளும், இராக்காலமும், கார் மேகங்களும் எக்காலத்தும் கிடையாது.
பணிக்களத்தின் கடினமான உழைப்பாளியே, உங்களுடைய பிரயாசங்கள், பாடுகள் முடிந்துவிட்டது. உங்கள் உழவு கோலை நேராக உழுதீர்கள். கலப்பையில் கை வைத்த உங்களது பார்வையை இந்த உலகத்தில் எதுவுமே பிரிக்க இயலாது போயிற்று. உங்களது பொறுமையான விதைப்பின் காரணமாக அறுவடைகள் தொடர்ந்த வண்ணமாக இருந்தது. உங்களது அரிக்கட்டுகளால் பரலோகம் நிரம்பியுள்ளது. வருகிற ஆண்டுகளிலும் அந்த அரிக்கட்டுகள் அங்கு சென்று கொண்டே இருக்கும்.
தேவனின் வெற்றி வீரனே, உங்கள் யுத்தம் நீளமானதும், உங்கள் வெற்றி அனைவராலும் புகழ் பாடக் கூடியதுமாகவிருந்தது. நீங்கள் உங்கள் கரத்தில் பிடித்திருந்த உங்கள் கருக்கான பட்டயம் இறுதியாக உங்கள் கரத்திலிருந்து விழுந்தபோது அந்தக் கரத்தில் வெற்றி பவனியின் குருத்தோலை அமர்ந்து கொண்டது. யுத்தக்களத்துக்காக நீங்கள் உங்கள் தலையில் அணிந்திருந்த உங்கள் தலைச் சீரா இனி உங்களுடைய கண்ணின் புருவத்தை அழுத்தி உங்களுக்கு வேதனையைக் கொடுக்காது. யுத்தத்தைக் குறித்த எண்ணங்களால் நீங்கள் இனி ஆயாசமடையத் தேவையில்லை. ஜெயங்கொள்ளு கிறவனுக்கான முழு வெற்றி வாகையையும் உங்கள் மாபெரும் தளபதியாம் கர்த்தர் ஏற்கெனவே உங்கள் சிரசில் நேர்த்தியாக சூட்டிவிட்டார்.
உங்கள் மண்ணுக்குரிய சரீரமான உங்கள் அருமையான தூசி இந்த மண்ணுலகத்தில் கொஞ்ச காலம் இளைப்பாறட்டும். அதற்கப்பால் உங்கள் அருமை நேசர் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காள தொனியோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது உங்களுடைய சரீரம் வானவருடைய சாயலுக்கொப்பாக மறுரூபம் அடைந்து தனது மண்ணறையிலிருந்து ஆனந்த களிப்போடு பாடிப் பறந்து செல்லும். அந்த நாள் வரை எங்கள் அருமை சகோதரனே, தூங்கி இளைப்பாறுங்கள். நாங்கள் உங்கள் பரிசுத்தமான வாழ்வுக்காகவும், மாபெரும் தேவ ஊழியங்களுக்காகவும், ஆண்டவருடைய ராஜ்யத்துக்காக நீங்கள் ஆதாயம் செய்த ஆத்துமாக்களுக்காகவும் நம் ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம். நம்முடைய கர்த்தரின் நித்திய இரத்த உடன்படிக்கையின் காரணமாக நாங்களும் உங்களுடன் சேர்ந்து அந்த அன்பின் ஆண்டவரை நித்திய காலமாக துதித்து ஸ்தோத்தரித்து ஆர்ப்பரிப்போம் என்று நிச்சயமாக நம்புகின்றோம். அந்த பாக்கிய நாளை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.
ஸ்பர்ஜன் மாதந்தோறும் அச்சிட்டு வெளியிட்ட “பட்டயமும், சாந்துக் கரண்டியும்” “Sword And The Trowel” என்ற அவரது பத்திரிக்கையானது அவரது மரணத்தைக் குறித்த விசேஷித்த பதிப்பை வெளியிட்டது. அந்த பதிப்பில் இப்படி ஒரு செய்தி வெளியாகியிருந்தது:-
“நாங்கள் ஸ்பர்ஜனின் கல்லறையைச் சுற்றிக்கூடியிருந்தோம். மேகம் நிறைந்த வானில் ஒரு நீல நிற வெற்றிடம் காணப்பட்டது. பரலோகில் உள்ள மகிமையின் தேசத்தை அது எங்களுக்கு நினைப்பூட்டுவதாக இருந்தது. பாஸ்டர் ஆர்ச்பால்ட் ஜி. ப்ரவுண் தனது இறுதிச் செய்தியைக் கொடுக்கையில் ஒரு புறா கூடார தேவாலயத்திலிருந்து பறந்து வந்து கல்லறையைச் சூழ்ந்து நின்ற திரளான கூட்டத்திற்கு மேலாக சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது. அடக்க ஆராதனை நடந்து கொண்டிருந்த வேளையில் தனது நெஞ்சில் சிகப்பு பட்டை நிறத்தைக் கொண்டிருந்த ஒரு ராபின் பறவை பக்கத்து கல்லறை ஒன்றிலிருந்து தனது இனிய நாதத்தைப் பாடிப் பொழிந்து கொண்டே இருந்தது. அன்பின் ஆண்டவர் இயேசுவின் நெற்றிப் புருவத்தில் குத்தி அவருக்கு வேதனை கொடுத்துக் கொண்டிருந்த ஒரு முள்ளை அது பறந்து சென்று கொத்தி எடுத்ததால் அதின் நெஞ்சில் பட்ட இரட்சகரின் இரத்த துளி காரணமாக அந்த சிகப்பு நிறம் உண்டானதாக ஒரு கதை உண்டு. அதை எல்லாம் நாங்கள் நம்பாவிட்டாலும் தேவனுடைய சத்தியத்தை பிரசிங்கிப்பதற்காக ஸ்பர்ஜன் வாழ்ந்ததையும், அதைக் காப்பதற்காக தனது ஆயுட் காலத்தை அர்ப்பணித்ததையும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். “ஸ்பர்ஜனுடைய அடக்க ஆராதனையானது எளிமையைப் பிரதிபலிப்பதாகவும், அவருடைய உள்ளம் விரும்பத்தக்க விதத்தில் இருதயப்பூர்வமாகவும் அமைந்திருந்தது” என்று அதில் கலந்து கொண்ட பலரும் பேசிக்கொண்டனர். ஒலிவ மரத்தால் செய்யப்பட்ட அவருடைய பிரேதப்பெட்டி கல்லறைக் குழிக்குள் இறக்கப்படும் பொழுது அந்த மேன்மையான தேவ மனிதரின் பெயர் காணப்படாமல், பெட்டியின் மேலுள்ள தேவனுடைய வசனம்தான் காணப்பட்டது. பெட்டியின் மேல் திறந்த வேதாகமம் இருந்தது. அதை வைத்துப் புதைக்கவில்லை. இறுதியில் அதை வெளியே எடுத்துவிட்டார்கள். ஸ்பர்ஜனின் கல்லறையை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
தேவ மனிதர் ஸ்பர்ஜனின் ஆவிக்குரிய பரிசுத்த குணாதிசயங்கள்
“எனது பரம எஜமானரின் சத்தியத்தை நான் இந்த ஜனங்களுக்கு கவலையீனமாக பிரசிங்கித்தாலோ அல்லது அதில் ஒரு பகுதியையாவது நான் மறைத்து வைத்து அறிவித்தாலோ நான் இந்த உலகத்தில் பிறவாதிருந்தால் எனக்கு நலமாயிருக்கும். தேவனுடைய வார்த்தையை நான் இந்த ஜனங்களுக்கு வேடிக்கை விளையாட்டாகப் பிரசிங்கித்து இந்த மக்களின் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை நான் அழிப்பவனாக இருப்பேனானால் நான் ஒரு பிரசங்கியாக இருப்பதைக் காட்டிலும் ஒரு பிசாசாக இருப்பது எனக்கு நலமாயிருக்கும். எல்லா மனிதர்களின் இரத்தப் பழிகளுக்கும் நான் நீங்கலாகி நான் எனது கரங்களை சுத்தமாகக் காத்துக் கொள்ளுவதே எனது ஆசைகளில் எல்லாம் உயர்ந்த ஆசையாகும். ஜியார்ஜ் பாக்ஸ் என்ற பரிசுத்தவான் தான் மரிக்கும்போது “நான் சுத்தமுள்ளவனாக இருக்கின்றேன்” “நான் சுத்தமுள்ளவனாக இருக்கின்றேன்” என்ற வார்த்தைகளுடன் மரித்தது போல நானும் என் முழு மனதார அந்த வார்த்தைகளுடன் மரிக்கவே கதறுகின்றேன்” என்றார் ஸ்பர்ஜன்.
இயேசு இரட்சகரே அவரின் வாழ்வின் உயிர்நாடியாக இருந்தார். 1855 ஆம் ஆண்டு தனது 20 ஆம் வயதில் எக்ஸ்டர் ஹால் என்ற இடத்தில் “நித்திய நாமம்” என்ற பொருளில் பிரசிங்கித்தபோது “கிறிஸ்து தேவனுடைய வல்லமையும், ஞானமுமானவர்” “உயர்த்தப்பட்ட கிறிஸ்து” “நம்முடைய பஸ்காவாம் கிறிஸ்து” “உடன்படிக்கையின் கிறிஸ்து” “உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த கிறிஸ்து” என்றெல்லாம் பேசிவிட்டு தனது பிரசங்கத்தின் முடிவில் “ஸ்பர்ஜனின் நாமம் அழிந்து ஒழியட்டும், இயேசுவின் நாமம் என்றும் நிலைத்திருக்கட்டும், இயேசு! இயேசு! இயேசு! எல்லாருக்கும் மா உன்னத கர்த்தராக அவரை முடிசூட்டுங்கள் என்று கூறிவிட்டு தனக்குப் பின்னாலுள்ள நாற்காலியில் மயங்கி விழுந்துவிட்டார்.
ஒவ்வொரு ஓய்வு நாளிலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் பிரசிங்கித்த அவர் ஒரு மாபெரும் ஜெப மாந்தனாக இருந்தார். ஸ்பர்ஜன் தோற்றுவித்த அவரது “கூடார தேவாலயத்தை” (Metropolitan Tabernacle) படத்தில் நீங்கள் காண்பீர்கள். அடுத்து வரும் ஓய்வு நாளில் மக்களுக்கு தேவச்செய்தி கொடுப்பதற்காக சனிக்கிழமையே தேவனோடு போராடி அவரிடமிருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுவதற்காக தனிமைக்குச் சென்றுவிடுவார். அவர் அங்கு எவ்விதமாக தன் ஆண்டவரோடு போராடினார் என்பதை எந்த ஒரு மனித கண்களும் கண்டதே கிடையாது. நமது முற்பிதா யாக்கோபு, யாப்போக்கு ஆற்றங்கரையில் தன் கர்த்தரோடு போராடி ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டது போல ஸ்பர்ஜனும் ஜெபத்தில் போராடி தேவனுடைய சமூகத்திலிருந்து அவர் கொண்டு வந்த தேவச் செய்திகள் மூலமாக ஏராளம், ஏராளமான மக்கள் அன்பின் ஆண்டவருடைய இரட்சிப்பின் பாத்திரங்களாக மாற்றம் பெற்றனர். அப்படி அவர் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு ஓய்வு நாளில் பிரசிங்கிப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
ஸ்பர்ஜனின் ஆண் மக்களான இரட்டைப் புதல்வர்கள் (Twins) சார்லியும், தாமசும், பிரைட்டன் என்ற இடத்திலுள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவருடைய மகன்களில் ஒருவன் “அப்பா, நாங்கள் எங்கள் பள்ளியில் உள்ள எங்கள் வகுப்பு ஆசிரியரின் வரவேற்பு அறையில் நாங்கள் சில மாணவர்களாகக் கூடி ஜெபித்து வருகின்றோம்” என்று ஸ்பர்ஜனுக்கு கடிதம் எழுதியபோது அவர் தனது பதிலில் “உங்களுடைய பள்ளியில் ஜெப ஆவி அசைவாடுவதையும் அதில் நீங்கள் பங்கு பெறுவதையும் நான் கேள்விப்படும் போது என் உள்ளம் ஆனந்த சந்தோசத்தால் பொங்குகின்றது. நீங்கள் ஆண்டவர் இயேசுவை அதிகமாக நேசிப்பதையும், நீங்கள் ஜெப மாந்தராக இருப்பதையும் அறிவதே எனது சந்தோசங்களுக் கெல்லாம் கிரீடமான சந்தோசமாகும். நீங்கள் ஆண்டவரை பிரசிங்கிக்க வேண்டுமென்பதை நான் அதிகமாக விரும்புகின்றேன். ஆனால், ஜெபிப்பதே மிகவும் அருமையான காரியமாகும். ஜெபிக்காமல் பிரசங்கித்த அநேக பிரசங்கிமார்கள் உதவாக் கரைகளாகத் தேவனால் தள்ளப்பட்டுப் போனார்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் உத்தம இருதயத்தோடு ஜெபிக்கக் கற்றுக் கொண்டு பிரசிங்கித்த எந்த ஒரு தேவ ஊழியனும் தன் தேவனால் கனத்தையும், மகிமையையும் பெற்றுக் கொள்ளத் தவறியதில்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது” என்று எழுதினார்.
ஸ்பர்ஜன் தன் ஆண்டவருடைய ஊழியத்தின் பாதையில் கடும் உழைப்பாளியாக விளங்கினார். “பகலுக்கு 12 மணி நேரம் உண்டு. அந்த 12 மணி நேரத்தை கர்த்தருக்காக நீங்கள் செலவிடுகின்றீர்களா?” என்று ஒரு கனம் பொருந்திய மனிதர் ஒரு சமயம் அவரைக் கேட்ட போது “நான் என் கர்த்தருக்காக நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் பாடுபடுகின்றேன்” என்று ஸ்பர்ஜன் பதில் சொன்னார். ஆம், அவர் அப்படிப் பாடுபட்ட காரணத்தினால்தான் ஏராளமான புத்தகங்களை அவரால் எழுத முடிந்தது. பல்லாயிரக்கணக்கான எழுப்புதல் பிரசங்கங்ளை அவரால் பிரசிங்கிக்க முடிந்தது. அவரால் வாசித்து முடிக்கப்பட்ட ஆவிக்குரிய புத்தகங்கள் கணக்கில் அடங்காது. “மோட்ச பிரயாணம்” என்ற புத்தகத்தை மட்டும் அவர் 100 தடவைகள் வாசித்து முடித்திருந்தார் என்றால் நமக்கு ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை அவர் எத்தனை தடவைகள் வாசித்திருப்பாரோ நமக்குத் தெரியாது. ஆயிரக்கணக்கான அங்கத்தினர்கள் கொண்ட தனது திருச்சபையின் ஆராதனை ஒழுங்குகள், சபை மக்களைச் சந்தித்தல் போன்ற காரியங்களுடன் அநாதை இல்லம், பாஸ்டர்கள் கல்லூரி காரியங்களை கவனித்தல், அத்துடன் அவருடைய மாதாந்திர ஆவிக்குரிய “பட்டயமும், சாந்துக் கரண்டியும்” என்ற பத்திரிக்கைக்கு செய்திகள் எழுதி தயாரித்து அதை அச்சிட்டு வெளியிடுதல் போன்ற அநேக காரியங்களை எல்லாம் அவரே கவனித்தார். தனது உதவிக்காக அவர் ஆட்களை வைத்திருந்த போதினும் அவர்கள் அனைவருக்கும் மேலாக அவரே அதின் பிரதான பாத்திரமாக விளங்கினார். அநேக மெய்யான பரிசுத்த தேவ ஊழியர்களை பயிற்றுவித்து உருவாக்கிய அவரது பாஸ்டர்கள் இறையியல் கல்லூரியையும் நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.
ஸ்பர்ஜன் மிகவும் சிறுவனாக 17 வயதினனாக இருந்த போதிலிருந்தே வாட்டர் பீச் என்ற இடத்திலிருந்த சிறிய ஆலயத்தின் குருவானவராகி பின் நாட்களில் உலகப் புகழ் பெற்ற பிரசங்கியாரானார். அவருடைய பிரசங்க வல்லமை உலகமெங்கும் கொடி கட்டிப் பறந்தது. நிகழ்ச்சிகளை உண்மையாக தத்ரூபமாக தனக்கு முன்பாகக் கூடி வந்திருக்கும் மக்களுக்கு முன்பாகக் காண்பிக்கும் ஆற்றல், பொருத்தமான உவமானங்களையும், சம்பவங்களையும் பிரசங்கங்களில் அற்புதமாக புகுத்துகின்ற தேவ கிருபை, மா சிறந்த வேத அறிவு, சிறந்த பேச்சுத் திறமை, அபிநயத்துடன் சைகை காட்டி பிரசங்கிக்கும் மேலான ஆற்றல் எல்லாம் அவரிடமிருந்தது. உலகப் பிரசங்கிமார்கள் யாவரிலும் மேலான ஒரு பிரசங்க மன்னராக அவர் விளங்கினார். இத்தனை தேவ கிருபைகள் அவருக்கு இருந்தபோதினும் அதைக் கொண்டு ஒரு சிறிய பெருமை கூட அவர் கொண்டதில்லை. தேவ மக்கள் யாவரும் அவரைத் தங்கள் தலைமேல் தூக்கி வைத்து துதி பாடினபோதினும் அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை. ஸ்பர்ஜன் மிகவும் மனத்தாழ்மையுடையோனாய் தன்னுடைய ஆண்டவர் சொன்னது போல “நான் சாந்தமும் மனத்தாழ்மையும் உடையவனா யிருக்கிறேன்” என்ற வார்த்தையின்படி சாந்தமுடையவராகவும், கிறிஸ்து பெருமானின் சாயலைத் தரித்தவராகவும் காணப்பட்டார். அவரைக் குறித்து பேசப்படும் துதி பாடும் வார்த்தைகளை அவர் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். அதற்காக அவர் வேதனைப்படுவார். அவரது வாழ்வின் வாசகம் “இனி நானல்ல, கிறிஸ்துவே” என்பதாக இருந்தது. அவரது கறைதிரையற்ற பரிசுத்த வாழ்க்கை,அவரது ஞானமுள்ள தேவ ஆலோசனை, மக்களை மகிழ்விக்கும் குணநலன், மரணமே வந்தாலும் அஞ்சாமல் தேவ மக்களின் மரணம், நோவு துக்கங்களில் கலந்து கொள்ளும் அவரது கல்வாரி அன்பு, தாராளமான ஈகை மனப்பான்மை, தேவனுடைய சத்தியத்தை திட்டவட்டமாக ஒளிவு மறைவின்றி தைரிய நெஞ்சினனாக பிரசங்கித்தல் போன்ற மேலான தேவ சீலங்கள் எல்லாம் அவரில் நிறைந்து காணப்பட்டன.
தேவனுடைய பண விசயங்களில் அவர் மிகவும் உண்மையுடை யோனாய் இருந்தார். கர்த்தருடைய ஊழியங்களுக்காக வரும் பணங்களில் தனக்கு வீடு வாசல்களைக்கட்டி தனக்கு ஜெய ஸ்தம்பத்தை நாட்டி, தனது பின் சந்ததிக்கு ஆஸ்தி ஐசுவரியங்களை அவர் விட்டுச் செல்லவில்லை. அவரது கிறிஸ்தவ பரிசுத்த வாழ்க்கை ஒளிவு மறைவின்றி அனைவரும் கண்ணாடியில் திறந்த முகமாய் பார்க்கும் வண்ணமாக இருந்தது. அவர் அநாதைகளுக்காக ஒரு அநாதை இல்லம் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த உடன்தானே ஒரு அன்பான தாயார் 20000 பவுண்டுகளை உடனே அவருக்குக் கொடுத்தார்கள். இந்த நாட்களில் அந்த தொகை ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ஒரு பெருந்தொகையாகும். தேவ மனிதரின் உண்மையும், உத்தமமும் மக்களை அத்தனை நம்பிக்கையுடன் அவருக்குக் கொடுக்க வைத்தது.
அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலுக்கு பின்னர் தேவ மனிதர் ஹட்டன் சார்லஸ் ஸ்பர்ஜனையே தேவன் அத்தனை வல்லமையாகப் பயன்படுத்தியிருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது. அந்த பரிசுத்த தேவ மனிதர் தனது இரட்டை குமாரர்களில் ஒரு மகனுக்கு எழுதின கடிதத்தின் சில வரிகளோடு தேவ மனிதரின் வாழ்க்கை சரித்திரத்தை முடிக்கின்றேன்.
“எனக்கு அன்பான எனது சொந்த மகனே, உனது அன்பின் ஆண்டவர் இயேசுவுக்காக நீ செய்ய நினைத்திருக்கும் காரியத்துக்காக நான் மிகவும் சந்தோசம் அடைகின்றேன். உண்மையாகவே நீ அதைச் செய்யும் போது எனது உள்ளம் இன்னும் அதிகமான சந்தோசத்துக்குள்ளாகும். காலங்கள் விரைந்தோடிக் கொண்டிருக்கின்றது. அத்துடன் பொன்னான சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும் பறந்தோடிச் சென்று கொண்டிருக்கின்றன. வரும் காலங்களில் நீ எத்தனை ஜாக்கிரதையும், விழிப்புமாக காரியங்களைச் செய்தாலும் 1875 ஆம் ஆண்டில் செய்யக்கூடிய காரியங்களை 1875 ஆம் ஆண்டிலேயேதான் செய்தாக வேண்டும். அந்த ஆண்டில் செய்யாமல் விட்டுவிட்டதை எக்காலத்தும், நித்தியத்தின் முழுமையிலும் உன்னால் செய்யவே முடியாது. உனது தனிப்பட்ட வாழ்வின் பரிசுத்தத்திற்காக நீ அதிகமான கவனம் செலுத்த வேண்டும். இரட்சகர் இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்ட நீ அவருக்கே சொந்தமாவாய். தேவனுடைய ராஜ்யத்தை இந்த உலகத்தில் பரவச் செய்வதின் மூலமாகவும், அவர் ஆசீர்வதிக்க விரும்பும் பாவ மாந்தரை அவரண்டை கூட்டிக் கொண்டு வருவதன் மூலமும் உனது அன்பை நேரடியாக நீ அவருக்கு காண்பிக்கலாம். ஒரு தடவை இந்த பரிசுத்த முயற்சிகள் உன்னில் தொடங்கிவிட்டால் அது உனக்கு மிகவும் இலகு ஆகிவிடுவதுடன் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்ற பசி தாகமும் உன்னில் அதிகரித்துவிடும். அது ஒரு கடினமான வேலையல்ல. அது ஒரு ஆனந்த மகிழ்ச்சியாகும். “உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ அதை உன் முழு பெலத்தோடும் செய்” உனது ஜெப வாழ்க்கையில் நீ களிகூருவதாக எழுதியிருந்தாய். அது எனக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. அந்த ஜெப வாழ்வில்தான் நீ வரும் நாட்களில் அதிகம் அதிகமாக களிகூர வேண்டும். அந்த ஜெப வாழ்க்கையைப்போல உனது கிறிஸ்தவ வாழ்க்கையில் உனக்கு வல்லமையைக் கொடுப்பதும், வழிக்குத் தேவையான ஒளியைக் கொடுப்பதும் வேறு எதுவுமே கிடையாது. தேவனுடைய சேனை வீரர்களில் நான் உன்னை எப்பொழுதும் தலைவனாகக் காண விரும்புகின்றேன். அது எப்படியாகுமென்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் அப்படி நீ இருக்க வேண்டுமென்பதே நான் உனக்காக தொடர்ந்து செய்யும் எனது கண்ணீரின் மன்றாட்டாகும்”
(உனது அன்புள்ள தந்தை ஸ்பர்ஜன்)