[மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவனத்தில் (Cold Desert) நடைபெற்ற தேவ ஊழியங்களின் நீங்காத நினைவுகள் – பாகம் 5]
ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் என்னைக் கவர்ந்ததொரு நிகழ்ச்சி என்னவெனில் உழவுத் தொழிலில் பயன்படுத்தப்படும் யாக் எருமைகளின் மூக்கில் சரடு (மூக்கு கயிறு) போட்டு ஒரு மனிதன் முன்னால் இழுத்துக்கொண்டு போக மற்றொருவன் ஏரை ஓட்டிக்கொண்டு பின்னால் செல்லுவதுதான். அந்தக்காட்சியை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். தமிழ் நாட்டில் கழுத்தில் கயிற்றைக் கட்டி காளைகளை ஏரில் பயன்படுத்துகின்றனர். ஆனால், முரட்டுத்தனமும், சோம்பல் தனமும் கொண்டதுமான யாக் எருமையின் மூக்கில் வளையத்தைப் போட்டு கயிற்றை அத்துடன் இணைத்துக் கட்டி வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்றால்தான் அந்த எருமைகள் பயன் அளிக்கக் கூடியவைகளாகவிருக்கும்.
அதைப்போலக் கர்த்தருக்கும் யார் யாருடைய கழுத்தில் கயிற்றைக் கட்டி அவர்களை இவ்வுலகில் தம்முடைய நாம மகிமைக்காகப் பயன்படுத்த வேண்டுமென்றும், யார் யாருடைய மூக்கில் துவாரமிட்டு வளையம் மாட்டிக் கயிறு கட்டி இழுத்துச்சென்று பயன்படுத்த வேண்டுமென்றும் அவருக்கு நன்றாகத் தெரியும். சோம்பலும், பிடிவாதமும், முரட்டுத்தனமும், கீழ்ப்படியாமையும் கொண்ட தம்முடைய பிள்ளைகளின் விஷயத்தில் கர்த்தர் மூக்குச் சரட்டைத்தான் போட வேண்டியதாயிருக்கின்றது. அது அவர்களின் நித்திய நன்மைக்கு அனுகூலமாகவே செய்யப் படுகின்றது. ஆனபடியால்தானே தாவீது இராஜா “நான் உபத்திரவப்பட்டது நல்லது” என்று திட்டமாகக் குறிப்பிட்டார் (சங் 119 : 71) அவர் தமது வாழ் நாளெல்லாம் மூக்குச் சரடு போட்டு இழுக்கப்பட்ட தேவப்பிள்ளையாவார்.
“தனிமை தைரியசாலிகளின் தாய் நாடு” (Solitude is the mother country of the strong) என்று டென்னிசன் என்ற ஆங்கிலப் புலவர் எழுதினார். ஆனால், மேற்கு தீபெத்தின் ஸன்ஸ்கார் பனிப்பள்ளத்தாக்கில் தனியனாக இருந்த எனக்கு அந்த உறை பனிப் பிராந்தியம் அந்நிய தேசமாகவே தெரிந்தது. பாபிலோன் ஆறுகள்அருகே நாங்கள் உட்கார்ந்து அங்கே சீயோனை நினைத்து அழுதோம் என்ற சிறைப்பட்ட சீயோனின் வாசிகளைப்போலத் தேவ மக்களும், தேவ ஊழியங்களும், அன்பும், பாசமும் நிறைந்த நம்அருமைத் தமிழ் நாட்டைக்குறித்து நான் அதிகமான வாஞ்சையும் தவனமும் உடையவனாயிருந்தேன். அந்த தனித்த பூமியில் தினந்தோறும் என்னை அளவிடற்கரிய விதத்தில் அரவணைத்து ஆறுதல்படுத்தியது கர்த்தாவின் வசனங்கள் மாத்திரமேதான். “உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்” (சங் 119 : 92 ) என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுகின்றேன். எனது தினசரி நாட் குறிப்பில் அவ்விடத்திலிருந்தபோது நான் எழுதியதை அப்படியே உங்களுக்கு எழுதுகின்றேன்:-
(இந்த தனித்த பூமியிலே, யாரும் அறிமுகமற்ற இந்தச் சா நிழலின் பள்ளத்தாக்கிலே ஆண்டவரின் வேத வசனங்கள் மாத்திரம் தான் எனக்கு ஆறுதல். அது ஒன்றே என் உற்ற நண்பன். நாள் முழுவதும் அது என்னுடனே பேசிக் கொண்டே இருந்தது. அது என்னை ஆறுதல் படுத்தின விதத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகளில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவ வசனம் எனக்குப் புதிய பரலோக அர்த்தத்தை எனக்கு அளித்தது. நான் படுத்திருந்தபோதும் அது என்னுடன் சம்பாஷித்துக் கொண்டேயிருந்தது. தேவனுடைய வசனங்கள் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால் நான் நிச்சயமாகவே நிலைகுலைந்து போயிருப்பேன்)
ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் கர்த்தர் எனக்குக் கொடுத்த தேவ ஊழியங்கள் அனைத்தையும் அவரது திருவுளச் சித்தப்படி மிகுந்த ஜெபத்தோடு நான் செய்து முடித்து அமர்ந்திருந்தேன். மலைகள் எல்லாம் உறை பனியால் மூடத் தொடங்கின. எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் இல்லை. பள்ளத்தாக்கைவிட்டு வெளிக் கிழம்பி காஷ்மீரிலுள்ள கார்க்கிலுக்குச் செல்ல ஆவலோடு நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால், எந்த ஒரு வாகனமும் பாதம் என்ற நான் தங்கியிருந்த இடத்திற்கு வரவே இல்லை. ஒவ்வொரு நாளும் நான் பாதத்திற்கு ஏதாகிலும் வாகனம் வருகின்றதா என்று மிகவும் ஆவலுடன் ரஸ்தாவைப் பார்த்துக் காத்திருந்தும் எனது எதிர்பார்ப்பு இலவு காத்த கிளியின் கதையாகத்தானிருந்தது. கர்த்தர் எப்படியாவது கிருபையாக இரங்கி ஒரு வாகனத்தை உடனே அனுப்பி வைக்கும்படியாக நான்அவரை நோக்கி ஊக்கமாக ஜெபித்துக் கொண்டேயிருந்தேன்.
ஸன்ஸ்காரின் பாதம் என்ற இடத்திற்கு வரும் புழுதி நிறைந்த ரஸ்தாவில் தூரத்தில் ஏதாகிலும் வண்டி வருகின்றதா என்று நான் ஒவ்வொரு நாளின் மாலை நேரத்திலும் நோக்கிக் கொண்டே இருந்தேன். அந்தக் குறிப்பிட்ட நாளின் காலை வேளையில் நான் தேவனுடைய மனுஷனாகிய நெகேமியாவின் புஸ்தகம் 2 ஆம் அதிகாரத்தை மிகவும் ஜெபத்தோடு வாசித்து தியானித்துக் கொண்டிருந்தேன். அந்த அதிகாரத்தின் 8 ஆம் வசனத்தின் கடைசிப் பகுதியான “என் தேவனுடைய தயவுள்ள கரம் என் மேல் இருந்தபடியால் ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்” என்ற வாசகம் என் இருதயத்தை மிகவும் ஆழமாகத் தொட்டது. அது என் உள்ளத்தில் திரும்பத் திரும்ப ஒலித்தபடியால் நெகேமியாவுக்கு ஒத்தாசை அளித்த தேவன் அந்த நாளில் எனக்கும் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்புவார் என்று நான் மிகவும் உறுதியாக விசுவாசித்தேன். அந்த நாளின் மாலை நேரம் தொலைவில் ஒரு வாகனம் புழுதியை எழுப்பிக்கொண்டு நான் தங்கியிருந்த பாதம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட எனது சந்தோசத்திற்கு அளவே இல்லை. அன்பின் கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்திரித்தேன். ஆனால், அந்த எனது சந்தோசம் நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. காரணம், அந்த வாகனம் நான் தங்கியிருந்த பாதத்திற்கு வராமல் தொலைவிலுள்ள மற்றொரு கிராமத்திற்குச் சென்று விட்டது. எனினும் எனது அளவற்ற ஆச்சரியத்திற்கு ஏதுவாக அந்த லாரி இரவு சுமார் 9 மணிக்கு பாதம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி உண்டாவதாக.
இரவோடிரவாக லாரியின் டிரைவரான காஷ்மீரி வாலிபன் யாசீனை அணுகினேன். பாதத்திலிருந்து கார்க்கில் வரையிலான பயணக் கட்டணத்தை முன்கூட்டியே நான் அவனிடம் கொடுத்துவிட்டேன். வண்டி அதிகாலை 4 மணிக்கே புறப்படுவதாக அவன் என்னிடம் கூறினான். அந்த இரவில் கர்த்தர் என் சொப்பனத்தில் முட்கள் நிறைந்து கிடக்கும் கானகத்தில் நான் செருப்பின்றி வெறும் காலால் வெகு கஷ்டத்துடன் நடந்து செல்லுவதை எனக்குக் காண்பித்தார். அந்த சொப்பனத்தின்படி பின் வந்த எனது லாரிப் பயணம் கண்ணீரின் பயணமாக அமைந்தது.
மிகவும் விடிபகலான காலை 2 : 45 மணிக்கே நான் படுக்கையிலிருந்து எழுந்து என் உள்ளத்தை தேவ சமூகத்தில் ஊற்றத் தொடங்கிவிட்டேன். எனது தினசரி நாட்குறிப்பு புத்தகத்தில் “பாதம் மலைத் தொடர்களுக்கு மேலாகச் சந்திரன் பூரண அழகுடன் பிரகாசித்துக் கொண்டிருந்த போதினும் ஆங்காங்குள்ள தீபெத்திய கிராமங்கள் அனைத்தும் சாத்தானின் அந்தகார இருளில்தான் மூழ்கிக்கிடக்கின்றது” என்று எழுதி வைத்துள்ளேன்.
ஆண்டவர் என்னைச் சரியான நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுப்பியிருந்தார். நான் சற்று அயர்ந்து தூங்கியிருந்தாலும் லாரியை நான் தவற விட்டிருப்பேன். அந்தோ, எனது அனைத்து பயண ஒழுங்குகளும் சீர் குலைந்து போயிருக்கும். அந்த நேரத்தில் படுக்கையிலிருந்து எழுந்த நான் பாதம் என்ற ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் நான் கண்ணீரோடு விதைத்த வேத வசன வித்துக்களையும், எனது ஜீவ மரணப் போராட்டமான எனது கடுமையான பிரயாசங்களையும் பரம தகப்பனின் பரிசுத்த பாதங்களில் மிகுந்த அங்கலாய்போடு ஒப்புவித்து எனது பிரயாசங்களின் பலனை மோட்சத்தில் ஒரு நாள் நான் காணத் தயை புரிய மன்றாடி நின்றேன்.
பல நுற்றுக்கணக்கான தீபெத்திய மொழிச் சுவிசேஷப் பிரசுரங்கள் தவனமுள்ள தீபெத்திய மக்களின் கரங்களைச் சென்றடைந்திருந்தது. இந்த பொறுப்பான பணியை நான் செய்ய கடுங்கஷ்டங்களுக்கு உட்பட வேண்டியதாயிருந்தது. என் கால்கள் இரண்டும் அநேக மைல்கள் நடந்து களைத்துப் போயிருந்தன. ஸன்ஸ்காரில் நான் தங்கியிருந்த நாட்களிலெல்லாம் நல்ல ஆகாரம் என்பது எனக்குக் கிடைக்கவே இல்லை. காசு கொடுத்தாலும் ஆகாரத்தைப் பெற முடியாத சூழ்நிலை வந்து சேர்ந்தது. இதில் அன்பின் ஆண்டவரும் எனக்கு ஒரு வேடிக்கை யான ஒரு காரியத்தை செய்து வைத்தார். கார்க்கிலிலிருந்து நான் சுகயீனமாக ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கிற்கு வந்த சில நாட்களாக என் வாய் கசந்து ஆகாரம் எதுவும் சாப்பிட மனமற்றவனாகவிருந்தேன். பின்னர் காய்ச்சல் மறைந்து சுகம் திரும்பி வர வர எனக்குப் பசி உண்டாயிற்று. அந்த நாட்களில் எனக்கு ஒரு ஆசை உண்டானது. யாராகிலும் சூடான கஞ்சியும், ஊறுகாயும் தரமாட்டார்களா என்று நான் அதிகமாக உள்ளத்தில் ஆவல் கொண்டேன். அந்த எனது ஆவல் ஆண்டவருக்குப் பிரியமற்ற ஆவலோ என்னவோ தெரியவில்லை. அங்கிருந்த நாட்களிலெல்லாம் கஞ்சியும், ஊறுகாயும்தான் என் ஆகாரமாயிற்று. அந்தக் கஞ்சி ஆகாரமான வெறுஞ்சோறும் இரவு ஒரு வேளை மாத்திரம்தான் கிடைத்தது. ஒரு பாட்டல் காஷ்மீரி ஊறுகாய் தெய்வாதீனமாக அங்குள்ள கடை ஒன்றில் எனக்குக் கிடைத்தது.
எத்தனை எத்தனையோ வாஞ்சையும், தவனமுமுள்ள ஆத்துமாக்கள் பாவியாகிய என்னுடைய கரங்களிலிருந்து ஜீவனும், வல்லமையுள்ளதும், வெறுமையாய்த் திரும்பி வராததுமான தேவனுடைய வார்த்தைகளை ஆவலுடன் பெற்றுக்கொண்ட நினைவு அப்பொழுது என் கண் முன் ஓடோடி வந்தது. பள்ளியில் கல்வி பயிலும் இளம் தீபெத்திய மாணவர்களும் தேவனின் நற்செய்திப் புத்தகங்களை என்னிடமிருந்து தாகத்துடன் பெற்றிருந்தனர். அந்த மாணவர்களில் இருவரை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அவர்களுடைய கரங்களில் தேவனுடைய பிரசுரங்கள் இருக்கின்றன. அந்த மாணவர்களின் அன்பின் உருவங்களும் என் கண்களுக்கு முன்பாக வந்து நின்றன. என் கரங்களிலிருந்து கர்த்தருடைய வார்த்தைகளைப் பெற்று என்னை அன்புடன் தங்கள் அழுக்கடைந்த வீட்டினுள் அழைத்துச் சென்று உபசரித்த மக்களின் நினைவும், தன் வாழ் நாளில் அதுவரை ஒரு தடவை கூட ஆண்டவர் இயேசுவின் அன்பைக் குறித்துக் கேள்விப்படவே இல்லை என்று கூறித் தேவனுடைய வார்த்தைகளைத் தானும் பெற்றுத் தன்னுடைய கிராமத்திலுள்ள தன் நண்பர்களுக்கும் சுவிசேஷப் பிரசுரங்களைக் கொண்டு சென்ற லோப்ஸங்கின் உருவம் என் முன்பாக வந்து நின்றது. நான் கொடுத்த தீபெத்திய பிரசுரங்களை மிகுந்த தாகத்துடன் பெற்று அவற்றைப் பாட்டாக சைகை காட்டிப் படித்து ஆனந்தித்த நாநாங் என்ற லாசா பட்டணத்தின் தீபெத்திய அகதி மனிதனின் சாயலும் எனக்கு முன்பாக வந்து நின்றது. எல்லா அன்புள்ள ஆத்துமாக்களையும் மோட்சத்தில் ஒரு நாள் சந்திக்க தேவன் உதவி செய்ய அவரை நோக்கி உள்ளமுருகி மன்றாடினேன்.
மேற்கண்ட ஒவ்வொரு ஊழியத்தை மேற்கொள்ளுவதற்கு முன்பும் பல மணி நேரங்களை நான் ஆண்டவரின் பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டேன். ஒவ்வொரு ஊழியமும் ஆண்டவரின் திட்டமான வழிநடத்துதலோடேயே மேற்கொள்ளப்பட்டது. என்னைத் தமது நிச்சயமான திட்டத்தின்படி அழைத்து வந்த கன்மலை என்னைக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய பணிகளையெல்லாம் அதினதின் பாதையில் நேர்த்தியாகச் செய்து முடித்தார். அல்லேலூயா.
எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க தமது பாபிலோனிய சிறையிருப்பின் அறையிலிருந்து மன்றாடிய தீர்க்கனைப்போல நானும் பாதம் என்ற அந்த ஸன்ஸ்கார் பனிப்பள்ளத்தாக்கு கிராமத்து வீட்டின் மாடியின் பலகணியைத் திறந்து மன்றாடிக் கொண்டிருந்தேன். அதில் ஆண்டவரின் திவ்விய பிரசன்னம் எப்பொழுதும் நிறைந்திருந்தது. ஆரம்பத்தில் அது அந்தகார லோகாதிபதியின் இருளின் ஆளுகை அதில் குடி கொண்டிருந்தது. தினமும் ஜெபிக்க, ஜெபிக்க இருளின் ஆதிக்கம் விலகியோடி அந்த அறை கர்த்தரின் பிரசன்னத்தின் ஒளியால் நிரம்பி நின்றது. நான் தங்கியிருந்த அறையிலிருந்து எடுக்கப்பட்டதோர் புகைப்படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
பாதம் என்ற இடத்திலிருந்து கார்க்கில் என்ற இடத்திற்கு புறப்படவிருந்த லாரியின் எரி பொருளான டீசல் எண்ணெய் டாங்கை அதிகாலை வெகு நேரத்திலேயே நெருப்பிட்டு உருக்கத் தொடங்கினார்கள். சரியாக காலை 4 மணிக்கு லாரி புறப்பட்டது. அந்த அதிகாலை வேளை அங்கு மிகவும் கடுமையான குளிர் இருந்தது. குளிர் என்றால் நம் இரத்தத்தை உறைய வைக்கும் குளிர் அது. நான் இரண்டு கம்பளிச் சட்டைகள் அணிந்து தலையைக் கனமான கம்பளி குல்லாவால் மூடி கால்களுக்கும் கால் உறைகளைப்போட்டிருந்தேன். கை விரல்களுக்கு போடக்கூடிய கை உறைகளையும் அன்பின் ஆண்டவர் என்னுடைய துணிப்பையினுள் வைத்திருந்தார். அவற்றையும் நான் அணிந்து கொண்டேன். இவை அனைத்தையும் நான் என் சரீரத்தில் போட்டிருந்தும் சுற்றியிருந்த வெள்ளிப்பனி மலைகளிலிருந்து வந்த குளிர் மிகவும் கொடியதாகவிருந்தது. லாரியின் உச்சியிலுள்ள சிறிய இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். என்னுடன் மற்றும் நான்கு பேரும் அமர்ந்திருந்தனர். உறை பனிக் காற்றை லாரி கிழித்துக் கொண்டு செல்லுகையில் அந்தக் காற்று முழுமையும் நேராக என் மீது வந்து மோதியது. நான் இருந்த இடத்திற்குப் பின்னால் என் முதுகுக்குப் பக்கம் லாரியின் இரும்புக் கம்பிகள் இருந்தன. லாரி ஒவ்வொரு சிறிய பள்ளத்தில் இறங்கி ஏறும் போதும் அந்தக் கம்பிகள் என் முதுகில் பலமாக அடித்தன. அந்தக் கம்பிகளின் அடிகளால் என் முதுகு அன்று மாலை நேரம் கோவம் பழமாக கன்னிவிட்டது. அதின் வேதனை ஒரு மாத காலத்திற்கும் மேலாக என்னிலிருந்தது. அந்தக் கம்பிகளின் அடிகளிலிருந்து தப்ப எனக்கு எவ்வித வழியுமில்லாதிருந்தது. லாரியின் உட்புறத்திலும், டிரைவர் அமரும் இடத்திலும் நிறைய பேர் அமர்ந்திருந்தனர். பணம் சம்பாதிக்க அப்படி எல்லாம் செய்கின்றனர்.
லாரி ஆங்காங்குள்ள தீபெத்திய கிராமங்களுக்குச் சென்று சில அரசாங்க அதிகாரிகளையும் ஏற்றிக் கொண்டது. அதிகாலை 4 மணியிலிருந்து சூரிய ஒளி நான் ஏறியிருந்த லாரி முழுவதுமாய்ப் பிரகாசிக்கும் வரை நான் அடைந்த உபாதையை வெறும் வாயின் வார்த்தைகளால் கூற முடியாது. என்அருகிலிருந்த தீபெத்திய மனிதன் தான் மூடியிருந்த கனமான கம்பளிப் போர்வையை என் மீதும் விரித்து மூடாமலிருந்தால் என் நிலைமை மகா மோசமாயிருந்திருக்கும். பூட்டான் நாட்டில் நான் ஒரு நாள் இரவு அனுபவித்தக் குளிரைக் காட்டிலும் இந்தக் குளிர் கொடியதாகவிருந்தது. ஆயிரம் ஊசிகளை ஒரே சமயம் காலில் குத்தினால் ஏற்படும் தாங்கொண்ணா வேதனையைப்போல கொடிய குளிர் சப்பாத்து அணிந்த என் கால்களின் பாதங்களின் வழியாக விஷம் போல ஏறி உடம்பைத் தாக்கிக் கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக என்னருகிலிருந்த தீபெத்திய வாலிபன் இந்த இக்கட்டான சமயத்தில் வாந்தி எடுக்கத் தொடங்கிவிட்டான். இதனால் என் துயரம் இரட்டிப்பானது. இறுதியாக சில மணி நேர ஓட்டத்திற்குப்பின்னர் சூரிய ஒளி பிரகாசிக்கத் தொடங்கியது. அது எனக்கு அளித்த சந்தோசத்திற்கு அளவில்லை. அல்லேலூயா.
மத்தியானம் 11 மணி சுமாருக்கு என்னை ஏற்றி வந்த லாரி ரங்க்டம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தது. நல்ல பசியோடிருந்த எனக்கு அந்த இடத்தில் சாப்பிட ஒன்றுமில்லை. ஆனாலும், அன்பின் ஆண்டவர் என் மேல் கருத்தாயிருந்தபடியால் வனாந்திரத்தில் தமது ஜனத்தை வானத்தின் மன்னாவால் போஷித்த வண்ணமாக என்னையும் அற்புதமாக அந்த இடத்தில் போஷித்தார். என்னுடன் லாரியில் பயணம் செய்து வந்த காஷ்மீரி முகமதிய வாலிபன் ஒருவன் தனக்கென செய்து கொண்டு வந்த சப்பாத்திகளை தனது திடீர் சுகயீனம் காரணமாகச் சாப்பிடக்கூடாதவனாக மிகவும் அன்புடன் அவற்றை எனக்கு அளித்தான். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
இந்த ரங்க்டத்தில் பாதம் என்ற இடத்திலிருந்து என்னுடன் லாரியில் பிரயாணப்பட்டு வந்த தீபெத்தியர் சிலர் ரங்க்டத்திலுள்ள பிரதான லாமாவிடம் நான் பாதத்தை சுற்றியுள்ள தீபெத்திய கிராமங்களில் கிறிஸ்தவ மார்க்கத்தை பிரச்சாரம் செய்த காரியங்களைக் குறித்துப் புகார் கொடுத்து அவரும், தீபெத்திய மக்களும் என்னை நெருங்கி வந்தனர். ஆனால், என்னை ஆட்கொண்டவரும், நான் சேவிக்கிறவருமான என் தேவனுடைய தூதனானவர் என்னைத் தப்பிவித்துக் காத்துக்கொண்டார். அல்லேலூயா.
அந்த ரங்க்டத்தில் மற்றொரு சம்பவமும் எனக்கு நிகழ்ந்தது. ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கை சுற்றிப் பார்க்க வந்திருந்த தானியேல் என்ற நாஸ்தீகனான பிரெஞ்சு நாட்டுச் சுற்றுலாப் பயணிக்கும் எனக்கும் காட்டசாட்டாமான விவாதம் நடந்தது. நான் ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் கர்த்தருடைய ஊழியத்தை அல்லும், பகலும் செய்து கொண்டு வந்ததை அவன் நன்றாய்க் கவனித்துக் கொண்டு வந்திருந்திருக்கின்றான். அது எனக்குத் தெரியாது. எங்கள் சம்பாஷணையின் இரத்தினச் சுருக்கத்தைக் கவனியுங்கள்:-
தானியேல்:- “நான் உங்களிடம் ஒரு கடுமையான கேள்வியைக் கேட்கப் போகின்றேன். அதினால் நீங்கள் வருத்தமடைய மாட்டீர்களா?”
பதில்:- “நீங்கள் எந்த வினாவை வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம். நான் கொஞ்சம் கூட வருத்தமடையமாட்டேன்.”
தானியேல்:- “ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கில் நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்.”
பதில்:- ” பாவியாக இருந்த எனது 18 ஆம் வயதில் என்னைத் தமது சொந்தமாக ஆட்கொண்ட என் இயேசு இரட்சகரைக் குறித்த சுவிசேஷப் பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தேன்.”
தானியேல்:- “இந்தக் காரியத்தை நீங்கள் அங்கு கட்டாயம் செய்திருக்கக் கூடாது. ஏற்கெனவே புத்த மார்க்கத்தினராகவிருக்கும் அம்மக்களின் மனப்போங்கிற்கு விரோதமாக அவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நீங்கள் அந்தக் காரியத்தைச் செய்தது முற்றும் தவறாகும்.”
பதில்:- “உங்கள் கூற்றை நான் ஏற்கமாட்டேன். நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்று கட்டளையிட்ட என் ஆண்டவரின் வார்த்தையின்படி நான் அந்தக் காரியத்தைச் செய்தேன்.”
தானியேல்:- “புத்தருடைய போதனைகளின்படி அவர் ஒருவரேதான் மெய்யான கடவுள் என்று நான் நிச்சயமாக நம்புகின்றேன்”
பதில்:- “உங்களின் கருத்து முற்றும் தவறு. மனுக்குலத்திற்காகப் புத்தர் தனது ஜீவனைக் கொடுத்ததுண்டோ? பாவிகளின் மீட்புக்காகப் புத்தர் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தினாரோ? மூன்றாம் நாள் அவர் மரித்தோரிலிருந்து உயிரோடே எழும்பினதுண்டோ?”
தானியேல்:- “இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழும்பினதாக நீங்கள் சொல்லுகின்றீர்கள். ஆனால், அவர் உயிரோடு எழும்பினதற்கு என்ன அத்தாட்சி, ஆதாரம் இருக்கின்றது?”
பதில்:- “அதற்கு நானே சாட்சியாக இருக்கின்றேன். ஏனெனில் அந்த இயேசு இரட்சகர் தம்முடைய வார்த்தைகளின் மூலமாக தினந்தோறும் என்னுடன் பேசுகின்றார். இந்த நிமிஸமும் அவர் என் இருதயத்தில் வாசம் செய்து கொண்டு இருக்கின்றார்”
தானியேல்:- “அப்படியானால் நான் உங்களுடன் வாதாடுவதற்கு ஒன்றுமே இல்லை”
பதில்:- “உங்கள் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?”
தானியேல்:- “என் பெயர் தானியேல்”
பதில்:- “நீங்கள் ஒரு கிறிஸ்தவனாக இருந்து கொண்டு அதிலும் பழைய ஏற்பாட்டிலுள்ள மாபெரும் தீர்க்கனுடைய பெயரை வைத்தக் கொண்டு இந்தவிதமான தப்பரையான நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் வெட்கத்திற்குரிய காரியமாகும். புத்தர் வட இந்தியாவில் வாழ்ந்து மறைந்த சாதாரணமான ஒரு இளவரசனேயன்றி மற்றபடி வேறு யாருமில்லை. இனி இவ்விதமாக அவரை தெய்வம் என்று கூறாதீர்கள்”
என்னுடைய தாழ்மையான சம்பாஷணை தானியேலின் உள்ளத்தில் கிரியை செய்வதை நான் கவனித்தேன். கர்த்தர் அந்த மனிதனோடு தொடர்ந்து பேசி அவனை தம்முடைய பிள்ளையாக்க நீங்களும் அன்புடன் ஜெபித்துக்கொள்ளுங்கள்.
ரங்க்டத்திலிருந்து எனது லாரிப் பிரயாணம் கிறிஸ்துவுக்குள்ளாக சற்று இலகுவாயிருந்தது. ஆண்டவரின் படைப்பின் மாட்சிகளைக்கண்டு என் உள்ளம் அவரைத் துதித்துக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் வரவும் ஒரு பெரிய பனி மலைக் குகை அந்தரத்தில் தொங்குவதைப்போல அமைந்திருந்தது. அதற்குள்ளிருந்து ஒரு பனி ஆறு புறப்பட்டு வந்தது. எத்தனை எத்தனையோ தீபெத்திய கிராமங்கள் ஆண்டவர் இயேசுவை அறியாமல் பிசாசின் கோரப் பிடியில் சிக்குண்டு கிடப்பதைக் கண்டு மன துயரம் அடைந்தேன். அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்ட லாரி இன்னும் விரைந்து ஓடிக்கொண்டே இருந்தது. மாலை 6 மணி சுமாருக்கு அது “பணிக்கர்” என்ற இடம் வந்து சேர்ந்தது. அந்த நாள் முழுவதும் பனி மலைகளின் கொடும் குளிர் காற்றை நான் என் நெஞ்சிலே தாங்கி எதிரிட்டு வந்தபடியால் பணிக்கர் என்ற அந்த இடத்தில் என் நாசியிலிருந்து இரத்தம் கொட்டத் தொடங்கினது. இரத்தம் நிற்க வழியில்லை. எனக்கு என்ன செய்வதென்று ஒன்றும் தெரியவில்லை. உடனே ஸ்தோத்திரம் பண்ணி ஒத்தாசையின் பர்வதத்தை நோக்கி மன்றாடினேன். உடன் தானே இரத்த ஒழுக்கு நின்று போயிற்று. கர்த்தருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்?
மாலை மயங்கும் நேரத்தில் லாரி கார்க்கில் என்ற இடத்தை வந்தடைந்தது. லாரியிலிருந்து ஜெபத்துடன் இறங்கிய நான் லாரியின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த என்னுடைய பை காணாமற் போனதைக் கண்டேன். எந்தனின் துயரத்திற்கு அளவே இல்லை. எனது துணிமணிகள், பணம், நாட்குறிப்புப் புத்தகம், புகைப்படக் கருவி, குளிர் ஆடைகள் எல்லாம் அதற்குள்ளாகத்தானிருந்தது. அழுகை என்னை நெருங்கிக் கொண்டிருந்தது. பை காணாமற் போன விபரத்தை உடனே லாரியின் டிரைவர் யாசீனிடம் தெரிவித்தேன். என் மேல் பட்சமுள்ள அவன் தன் உதவியாளுடன் லாரியின் அனைத்துப் பகுதிகளையும் நன்கு தேடி இறுதியாக ஒரு மூலையில் அது மற்றப் பொருட்களுக்கு அடியில் இருப்பதைக் கண்டெடுத்துக் கொடுத்தான். என் ஆண்டவர் இயேசுவுக்கு எப்படி துதி செலுத்துவது? எனது இக்கட்டில் எனக்கு உதவி செய்த யாசீனுக்கு நான் மனமார நன்றி கூறிவிட்டு எனது பையை எடுத்துக் கொண்டு நேராக அலி உசைனின் “எவர் கிரீன்” என்ற ஹோட்டலுக்குச் சென்றேன். என்னைக்கண்ட அலி உசைன் மிகவும் சந்தோசமுற்றான். இப்பொழுது அவனுடைய ஹோட்டல் எனது சொந்த வீடு போலாயிற்று. அவன் என்னைக் கருத்துடன் கவனித்தான். ஜீவ மரணப் போராட்ட பயணத்தின் கடுமையான களைப்பின் காரணமாக நான் ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டேன்.
அலி உசைன் என்னைப் பக்கத்துக் கிராமத்திலுள்ள தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அன்புடன் அழைத்தான். அதை நான் ஏற்றுக்கொள்ள இயலாதவனானேன். நான் ஊழியம் முடித்து இங்கு வந்த பின்னர் அலி உசைனுக்கு ஜெபத்தடன் உருது மொழி சுவிசேஷ பிரசுரங்கள் எல்லாம் அனுப்பி வைத்தேன்.
கார்க்கிலில் ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர் அலி உசைனிடம் கண்ணீர் மல்க விடை பெற்று காஷ்மீரத்தின் தலை நகர் ஸ்ரீநகருக்குப் பயணமானேன். நான் கார்க்கிலில் அலி உசைனின் ஹோட்டல் அறையின் ஜன்னலைத் திறந்தால் சற்று தூரத்தில் ஓடும் “சுரு” நதியின் இரைச்சலும், என் ஜன்னலண்டை நின்று கொண்டிருந்த வில்லோ மரங்களின் பசுமை அழகுக்காட்சியும், அவைகளின் கிளைகளின் மேல் தங்களுக்கே உரித்தான குரலை எழுப்பிக் கொண்டு அங்குமிங்கும் பறந்து திரிந்த நம் தமிழ் நாட்டு செம்புகம் பறவையின் அளவிலான கருப்பு வெள்ளை நிறப் பறவைகளையும், நம்முடைய அருமை இரட்சகர் இயேசுவின் கல்வாரி அன்பைக் குறித்து சற்றும் அறியாமல் வாழும் வைராக்கியமான ஷைட் வகுப்பைச் சேர்ந்த முகமதிய மக்களின் சாயல்களையும் இதை எழுதும் சமயத்தில் என்னால் நன்கு யூகிக்க முடிகின்றது. அதிகாலை ஐந்து மணிக்கே புறப்படுவதாகவிருந்த பேருந்து ஒரு மணி நேர கால தாமதமாகப் புறப்பட்டது. பேருந்து கார்க்கில் ஊரைக் கடந்து சில கிலோ மீட்டர்கள் ஓடியதும் நமது இராணுவ வீரர்களைக் கண்டேன். பனித் துளிகள் மரங்களிலிருந்து சொட்டு சொட்டாக விழுந்து கொண்டிருக்கும் மிகவும் குளிரான அந்த காலை வேளையிலும் சிறு சிறு குழுக்களாகத் தங்கள் தங்கள் பீரங்கிகளண்டையில் விழிப்புடன் அமர்ந்தவர்களாக தங்களுக்கு எதிராக உள்ள மலையில் இருக்கும் சத்துருக்களின் இலக்குகளைக் கவனமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அவர்களைப்போல நமது விலையேறப்பெற்ற ஆத்துமாவை நித்திய அக்கினிக் கடலுக்குக் கொண்டு செல்ல இராப்பகலாகப் போராடிக்கொண்டிருக்கும் சத்துருவாகிய பிசாசின் வல்லடிக்கு நாம் நம்மைக் காத்துக் கொள்ள நாமும் அந்தி சந்தி மத்தியான வேளைகளில் (சங் 55 : 17 ) தியானம்பண்ணி முறையிட்டு பரம எருசலேமுக்கு நேராக நம் இருதயத்தின் பலகணிகளைத் திறந்து தினமும் மூன்று வேளையும் நம் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, ஜெபம் பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தி (தானி 6 : 10) மாம்சத்தின் கிரியைகளை மேற்கொள்ள விழித்திருந்து ஜெபிக்க வேண்டுமென்பதை (மத் 26 : 41) நமது ராணுவ வீரர்களின் செயல் எனக்கு நினைப்பூட்டி நின்றது.
உலகின் உயரமான பனி மலைக் கணவாய்களில் ஒன்றான “ஸோஜிலா” பனி மலைக் கணவாயான அந்த மரண நிழலின் பள்ளத்தாக்கை நான் ஏறிச்சென்ற பேருந்து கடந்து மாலை நேரம் ஸ்ரீநகர் பட்டணத்தை வந்தடைந்தேன். ஸ்ரீநகர் வந்து சேர்ந்த நான் ஒரு நாள் தங்கி பிரயாண ஆயத்தங்களைச் செய்து கொண்டு பேருந்து மார்க்கமாக ஜம்மு பட்டணம் வந்து சேர்ந்து அங்கிருந்து புது டில்லிக்குப் பயணமானேன். எனது வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கர்த்தருடைய அருமைப் பிள்ளை ஒருவர் புது டில்லி இரயில் நிலையத்திலிருந்து என்னைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று மிகவும் அன்புடன் உபசரித்தார்கள். பல நாட்கள் குளியாமலும், நல்ல ஆகாரங்கள் புசியாமலுமிருந்த நான் அன்றைய தினம் அந்த தேவப்பிள்ளையின் வீட்டில் நன்கு ஸ்நானம் பண்ணி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் நாட்டின் மணமான ஆகாரத்தை மனங்குளிர அருந்தி கர்த்தருக்குள் மன மகிழ்ச்சியாயிருந்தேன்.
புது டில்லியிலுள்ள கர்த்தருடைய அருமைப் பிள்ளைகள் எனக்குப் பாராட்டிய அன்பை நான் அத்தனை எளிதாக சில வரிகளில் இங்கு எழுதிவிட முடியாது. அவர்கள் என்னை கர்த்தருக்குள் மிகவும் அதிகமாக நேசித்து அடுத்து வந்த எனது நீண்ட தூரப் பிரயாணத்திற்கான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். இரயிலில் நான் புசிப்பதற்காக இரண்டு நாட்கள் ஆகாரத்தையும்கூட அந்த அன்பான மக்கள் ஆயத்தம் பண்ணித் தந்தார்கள்.
அந்த அன்பான மக்களுடன் சேர்ந்து நான் ஜெபித்த பின்னர் “டின் சுக்கியா” என்ற இரயிலில் இரவு 7 மணிக்கு எனது நேப்பாள ஊழியத்தைத் தொடர்ந்தேன். ஒரு அருமையான தேவப்பிள்ளை இரயில் புறப்படும் வரை எனது பெட்டிக்கு அருகில் நின்று என்னை வழியனுப்பிவிட்டுச் சென்றார்கள். இந்த அருமையான மக்களுக்கெல்லாம் பரலோகத்தில் அவர்கள் பலன் மிகுதியாக இருப்பதற்காக ஆண்டவரை நான் நன்றியோடு ஸ்தோத்திரிக்கின்றேன்.