மேற்கு தீபெத் (லடாக்) சுவிசேஷ பிரயாண நினைவுகள் (2)
கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமத்திற்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஆமென்.
காலையில் கண்விழித்ததும் கடந்த இரவில் நாங்கள் தங்கியிருந்த கார்க்கில் என்ற இடம் இப்படியுமா இருந்திருக்கின்றது என்பதைக் குறித்து மிகவும் வியப்படைய வேண்டியதாயிற்று. உலகத்தின் உயரமான பீடபூமி “தீபெத் பீடபூமி” என்று பூகோளத்தில் படித்தது இதைக் குறித்துத்தானா என்ற நினைவு அப்பொழுது எனக்கு வந்தது. கார்க்கில் என்ற இடம் ஒருவிதமான தூசி மலை. மலையிலெங்கும் ஒரு தாவரங்கள் கூட கிடையாது.
அதிகாலையில் நான் மாத்திரம் தனித்து ஊரைத் தாண்டி சற்று தூரம் கீழே பள்ளத்தில் சென்றேன். அங்கே ஒரு நதி பேரிரைச்சல் போட்டு ஓடிக்கொண்டிருந்தது. பாக்கிஸ்தான் நாட்டை செழிப்படையச் செய்யும் சிந்து நதிதான் அது என்று ஒருவர் என்னிடம் சொன்னார்.
அந்த நதிக்கரையிலுள்ள அடர்த்தியான உயர்ந்த புல்லுக்குள் அந்த அதிகாலை வேளையில் நான் கண்ட காட்சியை என் ஜீவகாலபரியந்தம் மறக்கவே மாட்டேன். அந்த அதிகாலை வேளையில் கார்க்கில் ஊரிலுள்ள இஸ்லாமிய மக்களில் சிலர் அந்த புல்லுக்குள் தங்கள் கால்களை நீட்டி முகங்குப்புற படுத்திருந்தும், சிலர் மண்டியிட்டும் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அந்தக் காட்சி என்னை மெய்சிலிர்க்கப்பண்ணச் செய்வதாக இருந்தது.
காலை 8 மணி வரை ஜெபிக்காமல் கட்டிலில் படுத்திருக்கும் பெயர் கிறிஸ்தவ மக்கள் ஆண்டவருக்கு என்ன கணக்கு கொடுப்பார்களோ? நியாயத்தீர்ப்பு நாளில் இந்த கார்க்கில் ஊரிலுள்ள மக்கள் இவர்களைக் குற்றப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நானும் அந்த நேரத்தில் சிந்து நதிக்கரையில் முழங்காலூன்றி கார்க்கிலிலுள்ள மக்களை ஆண்டவர் சந்திக்கும்படியாக ஜெபித்து விட்டுச் சென்றேன்.
காஷ்மீரத்தின் ஸ்ரீநகரிலிருந்து 213 கி.மீ. தொலைவில் 9000 அடி உயரத்தில் இந்த கார்க்கில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் முக்கியத்துவமான வியாபார ஸ்தலமாக இது இருந்ததாம். ஆனால் இன்று கார்க்கில் ஒரு இராணுவ கேந்திர ஸ்தானமாக விளங்குகின்றது. ஊருக்கு சற்று தூரத்தில் நமது இராணுவம் தனக்கு அருகாமையிலுள்ள பாக்கிஸ்தானைப் பார்த்த வண்ணமாக எதிரும், புதிருமாக நின்று கொண்டிருக்கின்றது. பாக்கிஸ்தானுடன் 1965 ஆம் ஆண்டு இவ்விடத்தில் கடுஞ்சமர் நடந்ததாம். தன்னுடைய இந்திய நாட்டிற்காகத் தன் உயிரைத் தத்தம்செய்த ஒரு மனிதனுக்கு ஒரு சிறிய நினைவுச் சின்னம் அங்கு எழுப்பியுள்ளார்கள். அந்தப் பெயரை வாசித்ததும் நான் என் கர்த்தாவுக்கு என்னையே அவ்விடத்தில் தலையை தாழ்த்தி அர்ப்பணம் செய்தேன். காரணம், அந்த ராணுவ வீரரின் பெயரும் எனது பெயரான “சாமுவேல்” என்பதே.
நாங்கள் முந்திய இரவு வந்த பேருந்து காலை 6 : 30 மணிக்கெல்லாம் கார்க்கிலிலிருந்து லடாக்கிற்குப் புறப்பட்டுவிட்டது. சமதரையான பீடபூமி ரஸ்தாவில் பல மைல்கள் பேருந்து ஓடினது. ஆங்காங்கு வெகு தொலைவில் நித்திய பனிமலைகள் தென்படுகின்றன.
50 மைல்கள் பேருந்து ஓட்டத்திற்குப் பின்னர் கர்கான் என்ற இடம் வருகின்றது. ரஸ்தா ஓரமாக சில கற்சிலைகளும், தூண்களும் உள்ளன. இந்த தேவர்கள்தான் 1200 ஆண்டு காலமாக மேற்கு தீபெத் பாதையைப் பாதுகாத்து வருகின்றனவாம். இந்த கர்கான் என்ற இடத்திலுள்ள மக்கள்தான் உலகிலேயே மிகவும் சுத்தமான ஆரிய பரம்பரையாகக் கூறுகின்றனராம். ஆனால் மிக வியப்புக்குரிய காரியம் என்னவெனில் இந்த அன்பான மக்கள் தங்கள் வாழ்நாள் முழுமையும் குளிப்பதில்லையாம்.
கார்க்கில் பட்டணத்திலிருந்து 25 மைல்கள் தொலைவில் முல்பெக் என்ற இடம் வருகின்றது. இங்கு 500 அடி உயரமுள்ள மலை உச்சியில் புத்த மடாலயம் ஒன்றுள்ளது. ரஸ்தாவின் ஓரமாக பிரமாண்டமான புத்த சிலை ஒன்று உள்ளது. ஸ்ரீநரிலிருந்து இந்த முல்பெக் வரை அநேகமாக முகமதிய மக்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனராம். முல்பெக்கிலிருந்து லடாக் வரை புத்தர்களே பெரும்பான்மையினராம். முல்பெக்கைத் தாண்டியதும் தீபெத்திய கிராமங்களை நாம் காணலாம். கிராமங்களின் வீடுகளில் எண்ணற்ற புத்தமதக் கொடிகள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு வித வெள்ளைக் களிமண்ணினால் கட்டப்பட்ட சதுரமும், தட்டையுமான வீடுகளை நாம் கிராமங்களில் காணலாம். அந்தக் கிராமங்களைப் பேருந்து கடந்து செல்லும் பொழுதெல்லாம் என் உள்ளம் சோர்படைந்து துவண்டது. இந்தக் கிராமங்களுக்கெல்லாம் யார் வந்து என் இயேசு இரட்சகரின் அன்பை கூறுவார்? என்று என் உள்ளத்தில் கேள்விகள் எழுந்தன. கிராமங்களையடுத்து நதியின் ஓரமாக கோதுமை, பார்லி வயல்களும், ஆப்ரிகாட், போப்லார் மரங்களும் வளர்ந்து நிற்கின்றன.
நண்பகல் நேரம் பேருந்து மிகவும் வளைந்து, வளைந்து செங்குத்தாக ஏறிக்கொண்டு சென்றது. இறுதியாக “நாமி கலா” (NAMIKALA-PASS) கணவாயை வந்தடைந்தது. இவ்விடத்தின் உயரம் 12,200 அடிகளாகும். இங்கிருந்து பேருந்து சற்று தாழ்வாக ஒரு நதியின் ஓரமாகச் சற்று தூரம் சென்று மீண்டும் வளைந்து, வளைந்து செங்குத்தாக ஏறி “ஃபாட்டுலா” (FATU-LA) கணவாயை வந்தடைகின்றது. இவ்விடத்தின் உயரம் 13,480 அடிகளாகும். இவ்விடத்தில் “உலகத்திலேயே மிக உயரமான ரஸ்தா” (HIGHEST ROAD OF THE WORLD) என்று ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் எழுதியுள்ளார்கள். மிகவும் உயரமான இந்த இடத்தில் குளிர் காற்று கடுமையான வேகத்தில் மோதி அடிக்கின்றது. இங்கும் நமது ராணுவத்தினர் கனமான கம்பளி ஆடைகளை உடுத்திக்கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு நிற்பதைக் கண்டேன். பேருந்து இவ்விடத்தில் சற்று நேரம் நிற்கின்றது. சில எளிய புத்தமத சிறுவர்கள், சிறுமிகள் பேருந்து பயணிகளிடம் வந்து பிச்சை கேட்கின்றனர். நமது நாட்டின் வறுமையும், ஏழ்மையும் உலகத்தின் கூரை வரைக்கும் வளர்ந்துள்ளதை எண்ணித் துக்கமுற்றேன்.
இந்த இடங்களிலுள்ள பயங்கரமான மலை ரஸ்தாவில் பயணம் செய்யும் ஒருவன் ரஸ்தா ஓரமாக மோட்டார் ஓட்டிகளின் கவனத்திற்காக நாட்டப்பட்டுள்ள எச்சரிக்கை கல் தூண்களைப் பார்க்காமல் இருக்க முடியாது. “உனது பாதுகாப்பை நிச்சயப்படுத்திக்கொள்” என்ற வாசகத்தை வழிநெடுகிலும் நாம் காணலாம். “உனது கவனம் உன் ஜீவனைப் பாதுகாக்கும்” “உனது நரம்புகளை தளரவிட்டுவிடாதே” “ஆத்திரப்பட்டு அழிந்து போகாதே” “உனது ஆத்திரம் மற்றவர்களின் துயரம்” “மகா எச்சரிக்கையாக முன்னே செல்”. இவ்விதமான எச்சரிப்புகள் மோட்ச பயணிகளான நமக்கும் பொருந்தும்தானே!
மலைகளில்தான் எத்தனை விதவிதங்கள்! சில இடங்களில் மலைகள் பச்சையாகவும், நீல நிறமாகவும், சிகப்பாகவும், மஞ்சளாகவும் தெரிகின்றன. சில மலைகள் முழுவதுமாகச் சாணம் வைத்து மெழுகினதைப்போன்று விரித்து வைத்த பெருங்குடைகளாகக் காட்சி தருகின்றன. சில மலைகள் ஆயிரங்கால் மண்டபம்போல் கல் தூண்களாகக்காட்சி தருகின்றன. சில மலைகள் அஜந்தா, எல்லோரா குகைக்கோயில் சிற்பக் கலைகளின் செதுக்கு வேலைப்பாடுகளாகத் தென்படுகின்றன. ஆ, மகத்துவ தேவனின் அதிசய படைப்புகளை என்னவென்று சொல்லுவது! வாயின் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாற்பட்ட விதத்தில் இந்த தீபெத் பீடபூமி காட்சி அளிக்கின்றது. Land of Broken Moon (உடைந்த சந்திரனின் நாடு) என்று இந்த மேற்கு தீபெத் பீடபூமி அழைக்கப்படுவது முற்றும் பொருத்தமாகும். சாலொமோன் ராஜா தனது உன்னதப்பாட்டுகளின் புத்தகத்தில் குறிப்பிடும் கன்மலையின் வெடிப்புகளிலும், சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிறதான புறாக்களை நான் இங்கு கண்டேன்.
ஸ்ரீநகர்-லடாக் ரஸ்தாவை சவக்குழி ரஸ்தாவென்று அழைக்கின்றார்கள். காரணம் என்னவெனில், இந்தப் பாதையை அமைப்பதில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒருவர் வீதம் 450 மக்கள் தவறி விழுந்து மாண்டுபோனது மாத்திரமல்ல, இந்தப் பாதையில் பயணப்பட்ட எண்ணற்ற மக்கள் குறிப்பாக நமது இராணுவத்தினர் டிரக்குகளிலிருந்து கும்பல் கும்பலாக விழுந்து ஆண்டுதோறும் மடிந்து வருகின்றனர். ரஸ்தாவின் ஓரங்களில் இங்குமங்குமாக அவர்கள் விழுந்து மடிந்த இடங்களில் சிறிய ஞாபகச் சின்னங்களை எல்லாம் பேருந்து கடந்து செல்லுகையில் மனதில் ஒரு சிறிய அச்சம் எழும்பத்தான் செய்கின்றது.
நண்பகல் 2 மணி சுமாருக்கு பேருந்து லாமாயூரு என்ற இடத்தை வந்தடைந்தது. பேருந்து பாதையிலிருந்து சற்று தூரத்திற்கு அப்பால் தாழ்வான பள்ளத்தாக்கிலுள்ள மலையின் உச்சியில் பெரியதோர் புத்த மடாலயமும், அதையொட்டி தீபெத்திய கிராமமும் உள்ளது. லாமாயூரைத் தாண்டியதும் எந்த தைரியசாலியையும் திகைப்பூட்டக்கூடியதான மரண நிழலின் பள்ளத்தாக்கு வருகின்றது. இந்த இடத்தைக் கடந்து செல்லுகையில் பேருந்து பிரயாணிகள் அனைவரின் முகங்களும் திகில் பிடித்த நிலையில் காணப்படுகின்றது. பேருந்தில் இருந்த ஓரிரு பெண்கள் பயத்தால் நடுங்கி, மயக்கமடைந்து பேருந்துக்குள்ளேயே விழுந்துவிட்டனர். உடனே அவர்கள் முகங்களில் தண்ணீர் தெளித்து முதலுதவிகளைச் செய்தனர். பல ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழாகப் பருந்துகள் வட்டமிட்டுப் பறப்பதை நாம் காணலாம். பேருந்து விபத்துக்குள்ளாகிவிடில் பயணிகளின் மாம்சத்தைத் தின்ன அவைகள் எப்பொழுதும் ஆயத்த நிலையில் காணப்படுகின்றன. பேருந்து டிரைவர் சோகமே உருவெடுத்தவராக மகா விழிப்புடன் பேருந்தை ஓட்டிச் செல்லுகின்றார். அங்குள்ள மகா பயங்கரமான பாதைகள் இரண்டின் காட்சிகளை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
இந்த இடத்திலிருந்து பேருந்து மடமடவென்று 2500 அடிகள் இறங்க ஆரம்பிக்கின்றது. மிகவும் குறுகலான நூற்றுக்கும் அதிகமான வளைவுகளை அடுத்தடுத்து தொடர்ச்சியாக அது கடந்து செல்லுகின்றது. சற்று தவறு ஏற்படினும் பேருந்து கெடு பாதாளமான அடித்தளத்துக்குள் சென்று மறைந்துவிடும். இந்த ஜீவ மரண போராட்டத்தில் பேருந்தின் கண்டக்டரும் டிரைவருடன் சேர்ந்து பேருந்தின் சுக்கானைப் பிடித்து மகா துயரத்துடன் வளைத்து, வளைத்து ஓட்டிக்கொண்டு வந்து இறுதியாக கல்சே (KHALSE) என்ற இடம் கொண்டு வந்து சேர்த்தனர்.
தீபெத் பீடபூமியின் வறண்ட பிராந்தியத்தில் கல்சே ஒரு பாலைவன நீர்த்தடாகமாக காட்சி அளிக்கின்றது. சிந்து நதிக்கரை ஓரமாக அமைந்துள்ள இந்த கிராமத்தைச் சுற்றி மிகவும் இனிமையான பழங்களைத்தரும் ஆப்ரிகாட் மரங்களிருக்கின்றன. பேருந்து பயணிகளான நாங்கள் இங்கு எங்களது நண்பகல் ஆகாரத்தை உட்கொண்டோம்.
இந்த இடத்திலிருந்து பேருந்து ஒரே தாழ்வான சமதரைப் பிரதேசத்தில் சிந்து நதியை ஒட்டி எவ்வித தாவரங்களும், விருட்சங்களும் இல்லாத வறண்ட பூமியில் பல மைல்கள் ஓடி நருலா என்ற இடத்தைக் கடந்து சஸ்பூல் வந்து சேர்ந்தது. சஸ்பூல் கிராமம் பசுமையாகக் காட்சியளிக்கின்றது. காரணம், சிந்து நதிக்கரையில் அது அமைந்துள்ளபடியால்தான். ஆப்பிள், ஆப்ரிகாட், வால்நட் போன்ற மரங்கள் இங்குள்ளன. தீபெத்திய மக்கள் வாழும் அவர்கள் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் புத்தமத கொடிகள் பறக்கின்றன. சில வீடுகளில் சிறு சிறு குச்சிகளை நாட்டி கொடிகளை அதிலே பறக்கவிட்டிருக்கின்றனர். அநேக வீடுகளில் நீண்ட கயிற்றில் பற்பலவித வர்ணங்களில் புத்த மந்திரம் எழுதப்பட்ட கொடிகள் பறக்கின்றன. தீபெத்திய மக்கள் எவ்வளவான அக இருளிலும், புற இருளிலும் வாழ்கின்றனர் என்பதை அதின் மூலம் நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகின்றது.
சாதுசுந்தர்சிங் தம்முடைய புத்தகங்களில் எழுதியுள்ளதைப் போன்று தீபெத்திய கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் நீண்ட தூரம் இடைவெளி இருக்கின்றது. யாக் என்னும் சடை எருமைகளை இங்கு நாம் காணலாம்.
சஸ்பூலைக் கடந்து தாங்க், நிமோ என்ற கிராமங்களின் ஊடாக பேருந்து சென்று லடாக் என்பதான மேற்கு தீபெத்தின் எல்கைக்குள் நாங்கள் போய்ச் சேருகையில் இரவு 7 மணி ஆகிவிட்டது. லடாக்கின் தலை நகரம் லே (LEH) என்ற பட்டணம் போய்ச் சேர இன்னும் சில மைல்கள் உண்டு என்று கூறினார்கள். பேருந்து அந்த இடத்தில் சற்று நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு வீசும் காற்று எத்தனை பயங்கரமான வேகத்தில் ஊளையிட்டுக்கொண்டு வீசுகின்றது என்பதை அப்பொழுதுதான் உணர முடிந்தது. “இவ்விதமான இமாலயக் காற்றுகள் சில சமயங்களில் புல்மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளைக்கூட தூக்கிச் சென்றுவிடுவதுண்டு” என்று என்னருகில் உட்கார்ந்து இருந்த சாது கந்தையானந்து ஐயா அவர்கள் என்னிடம் சொன்னார்கள். உண்மைதான், அதின் வேகம் அத்தனையாக இருந்தது.
“லே” பட்டணம் வந்து சேர்ந்தோம்
லே பட்டணத்திற்குள் எங்கள் பேருந்து வந்து சேரும்போது இரவு 7:30 மணி ஆகியிருந்தபோதினும் நல்ல வெளிச்சமாகவிருந்தது. தீபெத் நாட்டின் லாசா பட்டணத்திற்குள் நாங்கள் வந்து சேர்ந்து விட்டதைப் போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. பட்டணத்திற்கு மேலாகச் செங்குத்தான மலையில் புத்த மடாலயங்கள்இருந்தன. லே பட்டணத்தை படத்தில் நீங்கள் காணலாம்.
மிகுந்த ஜெபத்துடன் பேருந்திலிருந்து நாங்கள் இறங்கி ஒரு தீபெத்திய போட்டரைக்கூலிக்கு அமர்த்திக் கொண்டு எங்கள் பழுவான சாமான்களுடன் நேராக லே பட்டணத்து குருவானவர் வீட்டிற்குச் சென்றோம். ஆனால், குருவானவர் இங்கிலாந்துக்குப் போய்விட்டார். எனினும், அவரது மகனிடம் எங்கள் காரியத்தை விளக்கிக்கூறினோம். அந்த அன்புள்ளம் கொண்ட மனிதனும், அவரது மனைவியும் அந்த இரவு வேளை எங்களை அன்புடன் ஏற்றுக் கொண்டு அவர்களது வீட்டிலேயே ஒரு அறையில் எங்களைத் தங்கும்படிக் கூறி அந்த இரவுக்கான ஆகாரத்தையும் எங்கள் இருவருக்கும் ஆயத்தம் செய்து கொடுத்தனர். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.
அந்த நாளின் சா நிழல் பேருந்து பிரயாணத்தில் கண்ணின்மணி போலக் காத்த கர்த்தருக்கு துதி ஸ்தோத்திங்களை ஏறெடுத்துக் களைப்பின் மிகுதியால் எங்கள் நித்திரைக்குச் சென்றோம். நாங்கள் ஒருவருக்கொருவர் இனமறியா மக்களாகவிருந்தபோதினும், கிறிஸ்துபெருமானின் விலையேறப்பெற்ற இரத்தப் புண்ணியத்தின் காரணத்தால் ஒரே குடும்பத்தின் பிள்ளைகளாய்ப் பழக, ஜெபிக்க, புசிக்க, தங்கி இளைப்பாற அனுகூலமளிக்கும் எல்லையற்ற தேவ அன்பின் பெருக்கத்தை கண்ணீரோடு அந்த இரவு நினைவுகூர்ந்து அந்த தட்டையான தீபெத் வீட்டில் படுத்திருந்தோம். நல்ல நிலவு காலமாக இருந்தமையால் வெளியே தூரத்திலிருந்த உயரமான பனிமலைச் சிகரங்களை வீட்டின் ஜன்னல் வழியாக நன்கு பார்த்துக் கர்த்தரைத் துதிக்க முடிந்தது.
மேற்கு தீபெத்தில் மேற்கொள்ளவிருந்த சுவிசேஷப் பணிகளைக் கர்த்தர் முன்னின்று மிகுந்த ஆசீர்வாதத்துடன் நடத்தித் தரும்படியாகவும், எங்களையும் ஏற்ற சமயங்களில் சுகபத்திரமாக இருப்பிடங்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்கவும் இரவில் நன்றாக ஜெபித்தோம். பின் வந்த நாட்களிலும் கூட ஜெபத்தில் இரவு நீண்ட மணி நேரங்களை செலவிட வசதியாக நாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்த மிகுதியான தெள்ளுப்பூச்சிகள் எங்களுக்கு உதவியாக இருந்தன. உண்மைதான், அவைகள் எங்கள் சரீரத்தை கடித்து துளைத்துவிட்டன. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.