மேற்கு தீபெத் (லடாக்) சுவிசேஷ பிரயாண நினைவுகள் (4)
கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமத்திற்கே துதி, கனம், மகிமை உண்டாவதாக.
அருமை நேச இரட்சகர் இயேசுதாமே தம்முடைய திட்டமான வெளிப்பாட்டைக் கொடுத்துத் தமது ஊழியத்திற்காக மேற்கு தீபெத்தினுக்குள் என்னை அழைத்துக்கொண்டு சென்றிருந்தமையால் ஊழியத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவர் அபரிதமாக ஆசீர்வதித்தார். கர்த்தாவின் திட்டமான ஆலோசனை ஊழியத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தவறாமல் கிடைத்து வந்தது.
ஒரு நாள் வழக்கம்போல அன்றைய ஊழியத்திற்குத் தேவையான சுவிசேஷகைப்பிரதிகளை எனது தோள் பையினுள் எடுத்துவைத்துக் கொண்டு ஊழியத்திற்குச் செல்ல ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். உருது மொழி வேதாகமம் ஒன்றையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும் படியாகக் கர்த்தர் என் உள்ளத்தில் மிகவும் பலமாக உணர்த்தியதால் ஒரு உருது மொழி வேதபுத்தகத்தையும் எடுத்துக்கொண்டேன்.
“லே” பட்டணத்தில் கர்த்தர் நமக்குக் கொடுத்த ஒரு கனி
அந்த நாளில் மேற்கு தீபெத்தின் “லே” பட்டணத்திலுள்ள புத்தகசாலைக்குச் செல்லும்படியாக கர்த்தர் என் உள்ளத்தில் ஏவினபடியால் அங்கு நான் சென்றிருந்தேன். பெரிய புத்தகசாலையான அதில் அபூர்வமான பண்டைய புத்தகங்களும் உள்ளன. நான் வாசித்துக்கொண்டிருந்த மேஜைக்கு அருகில் ஒரு வாலிபனும் புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தான். அவன் எப்பொழுதும் என்னையே கவனித்துக்கொண்டிருந்தான். இது எனக்கு மிகவும் வியப்பை அளித்தது. நான் புத்தகசாலையைவிட்டு வெளியேறுகையில் அவனும் என்னைப் பின் தொடர்ந்தான். நான் எங்கிருந்து வந்திருக்கின்றேன் என்ற விபரங்களையெல்லாம் அவன் என்னிடம் கேட்டு விசாரித்ததன் பின்னர் அவன் என்னைத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவன் என்னை அன்புடன் உபசரித்து நான் சாப்பிடுவதற்கு மிக இனிமையான ஆப்ரிகாட் பழங்களை எனக்களித்தான்.
M.Sc., (Agri) பட்டதாரியான அவன் வாழ்க்கையில் சமாதானத்தைத் தேடிக்கொண்டிருப்பதாக என்னிடம் கூறினான். அவனது அறை முழுவதும் பல நூற்றுக்கணக்கான ரூபாய்கள் செலவிட்டு வாங்கியதான புத்தகங்களால் நிறைந்து கிடந்தது. பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல, கிடைத்த இந்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கிறிஸ்து பெருமானைக் குறித்தும், அவர் மூலமாக மாத்திரம் உள்ளதான விலையேறப்பெற்ற இரட்சிப்பைக் குறித்தும், பாவ மன்னிப்பு, நிலையான பேரின்ப சமாதானம் குறித்தும் ஜெபத்தோடும், தேவ ஒத்தாசையோடும் நான் அவனிடம் கூறினேன். எனது தாழ்மையான மறுபிறப்பின் அனுபவ சாட்சியையும், இரட்சகர் இயேசுவில் நான் பெற்றுக்கொண்ட உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும் நான் அவனுடன் பகிர்ந்து கொண்டேன். அவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை.
தனக்கு ஒரு உருது மொழி வேதாகமம் தரும்படியாக அவன் என்னிடத்தில் கேட்டான். தேவ ஏவுதலின்படி நான் என்னுடன் கொண்டு சென்றிருந்த உருது மொழி வேதாகமத்தை நான் அவனுக்குக் கொடுத்தபோது அவன் மிகவும் மகிழ்ச்சியுற்று அதனை முத்தமிட்டுப் பெற்றுக்கொண்டான். காஷ்மீரின் ஜம்மு பட்டணத்தைச் சேர்ந்த இந்த வாலிபனின் பெயர் K.C.பகத் என்பதாகும். இந்த ஆத்துமாவை ஆண்டவர் எப்படியும் கட்டாயம் சந்திப்பார் என்ற பூரண விசுவாசம் எனக்குண்டு. இந்த வாலிபனுக்காக நாம் ஜெபிப்போம். “லே” பட்டணத்தில் ஒரு விவசாய அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருப்பதாக அவன் என்னிடம் சொன்னான்.
சீனர்களால் துரத்தப்பட்ட தீபெத் நாட்டின் தீபெத்திய அகதிகள் மத்தியில் நடைபெற்ற தேவ ஊழியம்
லே பட்டணத்தைச் சுற்றியுள்ள மேற்கு தீபெத் கிராமங்களில் கர்த்தருடைய சுவிசேஷ பணியை நாங்கள் முடித்துக்கொண்டதன் பின்னர் பட்டணத்திற்குள் சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டோம். பட்டணத்தின் ஒவ்வொரு சந்து சந்தாக நாங்கள் நுழைந்து தீபெத் மொழி சுவிசேஷ பிரசுரங்களையும். உருது மொழி பிரசுரங்களையும் ஜெபத்துடன் நாங்கள் விநியோகித்தோம். சாது கந்தையானந்து ஐயா அவர்கள் இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். பிரதிகளை இலவசமாகக் கொடாமல் அவற்றைக் கட்டாயம் படிக்கத்தக்கதாகச் சிறிய விலைக்கே அவர்கள் கொடுத்தார்கள்.
லே பட்டணத்தில் நாம் பார்ப்போமானால் சீனர்களால் தீபெத் நாட்டிலிருந்து துரத்தப்பட்டத் தீபெத்திய அகதிகள் அநேகரை நாம் காணலாம். தங்கள் நாட்டைவிட்டுத் தப்பி வந்த இந்த மக்கள் தங்களுடன் தங்கள் நாட்டின் பற்பலவிதமான விலையுயர்ந்த கற்கள், பவளங்கள், விசித்திர வேலைப்பாடுகள் கொண்ட வெண்கல பாத்திரங்கள், கரண்டிகள், நூதனமான இசை எழுப்பும் குழல்கள் (மனிதனின் தொடை எலும்பால் செய்யப்பட்டவைகளும் இதிலுண்டு) தீபெத் நாட்டின் நாணயங்கள், பூ வேலைப்பாடுகள் கொண்ட படுதாக்கள் போன்றவைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கு வியாபாரம் செய்கின்றனர். இவ்விதமான வியாபாரம் செய்யும் மக்கள் அநேகர் இங்குண்டு. இந்த மக்களுக்கெல்லாம் தேவனின் வார்த்தைகளடங்கிய புத்தகங்களை அளித்தோம்.
சில தீபெத்திய வியாபாரிகள் புத்தகங்களை வாங்கிக்கொண்டு அதற்கு விலைக்கிரயமாக பவளம் போன்றவற்றைக் கொடுத்தனர். அவற்றையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம். எப்படியாவது மக்கள் ஒவ்வொருவருடைய கரங்களிலும் தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியைக் கொடுத்து அவர்கள் எந்தவிதத்திலும் அவற்றை வாசிக்கும்படியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதே எங்கள் இதயத்தின் கதறுதலாக இருந்தது.
“லே” பட்டணத்தின் பெரிய நீதிபதியையும் கூட நமது சாது கந்தையானந்து ஐயா அவர்கள் தைரியமாக போய்த் தனித்துச் சென்று சந்தித்து ஒரு உருது மொழி வேதாகமத்தை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார்கள். மட்டற்ற மகிழ்ச்சியடைந்த அந்த நீதிபதி, சாது ஐயா அவர்கள் காஷ்மீரத்தின் ஸ்ரீநகர் பட்டணம் வரை
திரும்பிச் செல்லுவதற்கான பிரயாண ஏற்பாடுகளைத் தானே ஏற்றுக்கொள்ளுவதாக வாக்களித்து அப்படியே லே பட்டணத்திலிருந்து காஷ்மீருக்கு ஒரு பைசா கூடச் செலவின்றி அவர்களை அனுப்பி வைத்தார். மற்றப்படி ரூபாய் 50 பேருந்து கட்டணம் கொடுத்திருக்க வேண்டும். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்.
புத்த மார்க்க கோயிலை (GOMPA) நோக்கிய எங்கள் சுவிசேஷ பயணம்
லே பட்டணத்திற்கு மேலாக மலையின் மிகவும் செங்குத்தான உச்சியில் ஒரு புத்தமதக் கோயில் உள்ளது. இதனைக் கோம்பா என்று அழைக்கின்றனர். வானத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றாற்போல் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்குள்ளும் யாராவது உள்ளிருந்து புத்தமத ஜெபமந்திர சக்கரத்தைச் சுழற்றிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் எப்படியாவது சுவிசேஷத்தை கொடுத்துவிட வேண்டுமென்ற தாகத்தில் நாங்கள் இருவரும் ஒரு நாள் காலையிலேயே ஜெபத்துடன் மலை ஏறத்தொடங்கினோம். எனது வாழ்வில் அதைப்போலொத்த செங்குத்து மலையை நான் அதுவரை ஏறியது கிடையாது. பிராண வாயு குறைவான இடமாகையால் மூச்சு மிகவும் திணறியது. மலையைச் சுற்றிச் சுற்றி ஏறிக்கொண்டிருந்தோம். கால் சற்று தவறினால் நாம் அதோகதியாகிவிடக்கூடிய செங்குத்துப் பாதை அது. இறுதியாக நாங்கள் மத்தியான வேளை புத்த மத கோம்பா எனப்படும் கோயிலை வந்தடைந்தோம். எப்படித்தான் அதினைக் கட்டினார்களோ தெரியவில்லை. கட்டுமான பணியில் அநேகர் விழுந்து மடிந்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. அந்த உயரமான இடத்தில் நிற்பதற்கே நமக்குப் பயமாக இருக்கின்றது. கால்கள் நம்மை அறியாமல் நடுங்குகின்றன. அந்தக் கோயிலின் கோபுரத்தில் எண்ணற்ற புத்தமதக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. அந்த உயரமான புத்த கோம்பாவை படத்தில் நீங்கள் பார்க்கலாம்.
நாங்கள் சென்ற சமயம் கோயிலின் கதவு பெரிய இரும்பு பூட்டால் பூட்டப்பட்டிருந்தது. அந்தக் கோயிலின் நுழை வாயிலுக்கருகில் நாங்கள் கொண்டு சென்ற தீபெத் மொழி சுவிசேஷ பங்குகளையும், துண்டுப்பிரதிகள் போன்றவற்றில் சிலவற்றையும் பத்திரமாக வைத்து, அவைகளை காற்று அடித்துக்கொண்டு போய்விடாதபடி ஒரு கல்லைப் பாரத்திற்காக வைத்துவிட்டு ஜெபத்துடன் திரும்பினோம். எப்படியாவது தேவன் அவற்றைப் பயன்படுத்துவார் என்பதை நாங்கள் மனதார விசுவாசித்தோம்.
“லே” பட்டணத்து புத்தகசாலையில் நடைபெற்ற ஊழியம்
ஒரு நாள் நாங்கள் இருவரும் லே பட்டணத்திலுள்ள புத்தகசாலைக்குச் சென்று மிகவும் இரகசியமாக மேஜைகளில் கிடந்த சஞ்சிகைகள் (PERIODICALS) ஒவ்வொன்றிற்குள்ளும் தீபெத்திய மற்றும் உருது மொழித் துண்டுப்பிரதிகளை வைத்துவிட்டுக்கடந்து வந்தோம்.
எங்கள் நடபடிகள் இறுதியாக வெளிக்கு வந்துவிட்டது. மக்கள் எங்களை நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள். ஒருநாள் மாலைப் பொழுது எனது தோள் பை நிறைய தீபெத் மொழி சுவிசேஷப் பிரதிகள், புத்தகங்களை எடுத்துக்கொண்டு பட்டணத்தின் தெரு வழியாக நான் சென்று கொண்டிருந்தேன். திடீரென ஒரு சிறு கூட்டம் தீபெத்திய வாலிபப் பெண்கள் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். கிறிஸ்தவப் புத்தகங்களைத் தங்களுக்குத் தரும்படியாகக் கேட்டனர். அனைவருக்கும் ஜெபத்துடன் கொடுத்தேன். அளவற்ற மகிழ்ச்சியுடன் பெற்றுப் படித்துக்கொண்டே சென்றனர். பெண் பிள்ளைகள் என்னைச்சுற்றி வளைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து பட்டணத்தின் இதர அநேகம் புத்த மக்களும் என்னிடம் கூடிவிட்டனர். சற்று நேரத்திற்குள்ளாக எனது ஜோல்னா தோள் பை காலியாயிற்று. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
“நாங்கள் கிறிஸ்தவர்களாக விரும்புகின்றோம்”
ஒரு நாள் ஒரு கிராமத்தில் இரு தீபெத்திய பெண்களுக்கு தீபெத் மொழிச் சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தேன். அதை வாங்கிப்படித்த அவர்கள் “நாங்கள் கிறிஸ்தவர்களாக விரும்புகின்றோம்” என்று மனமகிழ்ச்சியுடன் சொன்னார்கள். “உங்கள் புத்தமார்க்கத்தை விட்டுக் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவிக்கொள்ள உண்மையாய் ஆசைப்படுகின்றீர்களா?” என்று நான் அவர்களிடம் திருப்பிக் கேட்டேன். “புத்த மார்க்கத்தை நாங்கள் விரும்பவில்லை” என்று அவர்கள் அளித்த பதில் என் இருதயத்தைக் கர்த்தருக்குள் களிகூரப்பண்ணிற்று. தொடர்ந்து நான் அவர்களுடன் சம்பாஷிக்க ஆரம்பிக்கையில்தானே ஒரு இந்திய ராணுவ டிரக் வண்டி வந்தது. அதில் அவர்கள் ஏறிச்செல்ல வேண்டியதாயிற்று. இவ்விதமான தவனமுள்ள ஆத்துமாக்களால் மேற்கு தீபெத் என்ற லடாக் நிறைந்து கிடக்கின்றது.
தங்கள் சொந்த தாய் நாட்டைக் காண தவித்துக்கொண்டிருக்கும் மக்கள்
மேற்கு தீபெத் கிராமங்களில் நாங்கள் சீனர்களால் துரத்திவிடப்பட்ட அநேக தீபெத்திய அகதிகளைக் கண்டோம். தங்கள் சொந்த நாடான தீபெத்திற்கு எப்பொழுது திரும்பிச் செல்லலாம் என்று அவர்கள் ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர். தாங்கள் தங்கியிருக்கின்றதான தங்கள் சிறிய வீடுகளில் தங்கள் கடவுள் அரசர் தலாய் லாமாவின் படத்தையும், தீபெத்தின் தலை நகர் லாசா பட்டணத்தின் படத்தையும் வைத்து வணங்கித் தங்கள் தாய் நாட்டைக் காணக் கண்ணீரோடு எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு என் உள்ளத்தை ஆழமாகத் தொட்டது. ஒரு தீபெத்திய அகதியினிடம் அவனது சொந்த நாடான தீபெத்தைக் குறித்து நான் பேசினபோது அவனுடைய கண்களில் கண்ணீர் பெருகிற்று.
இவ்விதமான அகதிகள் மத்தியில் நாங்கள் அதிகமாக ஊழியஞ்செய்தோம். அநேக தீபெத்திய வாலிபர்களுக்குத் தனித்தனியாக இரட்சிப்பின் சுவிசேஷத்தைக் கூறினோம். இவர்களில் யாண்டூப் ஷெரிங், டென்சிங் ஷெர்பா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேற்கு தீபெத் (லடாக்) நமது இந்திய ராணுவத்தின் கேந்திர ஸ்தானமாகவிருப்பதால் பல்வேறு மாநிலங்களிலுள்ள அநேக ராணுவ வீரர்களைச் சந்திக்கும்படியான சந்தர்ப்பம் அங்கு எங்களுக்கு கிடைத்தது. அவர்களுக்கும் தேவ கிருபையால் இரட்சகர் இயேசுவைப்பற்றிக் கூறினோம். அநேக சுவிசேஷ பிரதிகளையும் நாங்கள் அவர்களுக்கு விநியோகித்தோம்.
ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களை ஊழியத்திற்குச் செல்லுவதற்கு முன்னால் ஆண்டவர் சமூகத்தில் ஜெபத்தில் செலவிட்ட பின்னரே கர்த்தரின் திட்டமான வழிநடத்துதலோடு நாங்கள் கடந்து சென்றோம். ஊழியம் முடித்துவிட்டு திரும்பி வந்த பின்னரும் செய்யப்பட்ட ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபித்தோம்.
சாது கந்தையானந்து ஐயா அவர்கள் தனது விருத்தாப்பிய வயதின் பெலவீனம் காரணமாக சில தினங்கள் முன்கூட்டியே காஷ்மீரம் சென்று எனக்காக அங்கு காத்துக் கொண்டிருந்தார்கள். நான் மேலும் ஒரு வாரம் தங்கி கர்த்தருடைய ஊழியத்தைச் செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் தெருவில் நான் கைப்பிரதிகளை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு வாலிபன் மூர்க்கத்துடன் வந்து என்னைத் தடுத்தான், என்னைத் திட்டினான். நான் அதைச் சட்டை செய்யாமல் என் தேவப் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன். அந்த நாளில் அவ்விதமானதோர் சத்துரு போராட்டம் வருமென்று முந்தின நாள் இரவே சொப்பனத்தில் தேவன் எனக்கு வெளிப்படுத்தியிருந்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
சில புத்தமத லாமாக்கள் எவ்வளவோ அன்புடன் வற்புறுத்தியும் தேவனுடைய சுவிசேஷப் பிரசுரங்களை இறுதி வரை வாங்க மறுத்துவிட்டார்கள். ஆனால், அன்புள்ள லாமாக்கள் பலர் மனமகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டதுண்டு.
மேற்கு தீபெத் ஊழியத்தின் எனது கடைசி நாள்
நான் மேற்கு தீபெத்தை விட்டுப் பிரியும் இறுதி நாள் வந்தது. முந்தின நாள் சாயங்காலம் பட்டணத்தின் உயர்ந்த புத்த ஞாபகச்சின்னம் அருகில் போய் நான் அமர்ந்தேன். லே பட்டணத்திலுள்ள மக்கள் மாலைப்பொழுதில் அங்கு வருவது வழக்கம். அவ்விடத்திலும் நாங்கள் ஊழியம் செய்திருக்கின்றோம். அன்று நான் எனக்கு முன்பாகவிருந்த நித்திய பனி மலைகளையும் “திரிசூலம்” என்ற பனி மலைச்சிகரத்தையும், பின்னாலுள்ள லே பட்டணத்தையும் பல தடவைகள் கண்ணோக்கினேன். எனக்கு அருகாமையில் பள்ளியில் கல்வி பயிலும் புத்தச் சிறுவர்களும், முஸ்லீம் சிறுவர்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு நான் துண்டுப்பிரதிகளை கொடுத்திருந்தமையால் என் மீது அவர்களுக்கு அளவற்ற பிரியம் உண்டாயிற்று. தினமும் மாலையில் அந்த இடத்தில் என்னைச் சந்திக்க வந்துவிடுவார்கள். நானும் அவர்களுக்கு நல்ல புத்திமதிகள் சொல்லி, ஆண்டவர் இயேசுவைப்பற்றியும் கூறுவேன். அடுத்த நாள் காலையில் நான் புறப்படவிருப்பதை அறிந்த அவர்கள் “நீங்கள் இனி எங்கள் இடத்திற்கு ஒருபோதும் வரமாட்டீர்களா?” என்று மிகுந்த சோகத்துடன் கேட்ட கேள்வியை என் இதயத்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் காசு கொடுத்து அவர்களைச் சந்தோசப்படுத்தி விடைபெற்றுக் கொண்டேன்.
அடுத்த நாள் காலையிலேயே மேற்கு தீபெத்தின் லே பட்டணத்திலிருந்து நான் ஜெபத்துடன் பறப்பட்டேன். அந்தப் பட்டணம் என் கண்களிலிருந்து மறையும் வரை ஆத்தும பாரத்தோடு அதைப் பேருந்திலிருந்து திரும்பித் திரும்பி நோக்கினேன். என் கண்களில் கண்ணீர் பெருகிவிட்டது.
மேற்கு தீபெத்திலுள்ள அந்த தாழ்வான வீட்டில் தெள்ளுப் பூச்சிகளின் கடிகளுக்கு மத்தியில் சுருண்டு படுத்திருந்ததையும், தேவனது சுவிசேஷத்திற்கு தனது வாயை மட்டில்லாமல் ஆ வென்று திறந்து நிற்கும் மேற்கு தீபெத்திய கிராமங்களையும், அதின் அன்பான மக்களையும் என் மரணபரியந்தம் மறக்கவேமாட்டேன்.
மேற்கு தீபெத்தின் பாதை என்னவோ நிச்சயமான மரணப்பாதைதான். அங்கு சென்றுவிட்டு உயிருடன் திரும்புவது என்பது நூற்றுக்கு நூறு சந்தேகமே! இருப்பினும், அந்த நாட்டின் மக்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவர் மேல் விழுந்த தலையாய கடமையாகும். அந்த இடங்களுக்கு தேவனுடைய சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் ஆத்தும பாரத்தை தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் தந்தருள்வாராக. ஆமென்.