தேவனுடைய சுவிசேஷத்திற்கு தனது கதவுகளை மூடிக்கொண்டுள்ள பூட்டான் தேசத்தில் சர்வ வல்ல தேவன் என்னைக்கொண்டு நடத்திய தேவ ஊழியங்களின் நீங்காத நினைவுகள்
“என் ஆண்டவருடைய சேவையின் பொருட்டும், அவர் நாம மகிமையின் பொருட்டும் எனது வாழ்க்கையானது கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து, கரைந்து அப்படியே அது மறைந்து போவதை நான் காண அதிக ஆவலுள்ளவனாகவிருக்கின்றேன்” (பரிசுத்தவான் டேவிட் பிரைய்னார்ட்)
புதிய ஒரு நாட்டிற்குள் நாம் முதன் முதலாவதாகச் செல்லும்போது அந்த நாட்டில் நாம் எப்படி, எப்படி காரியங்களை செய்யப்போகின்றோம், மக்கள் நம்முடன் எந்தச் சூழ்நிலையில் பேசிப் பழகியிருக்கப்போகின்றார்கள், நாம் எங்கே தங்குவது என்பது போன்ற அநேகம் கேள்விகள் நம் உள்ளத்தில் அலையலையாய்த் தோன்றி நமக்குச் சற்றுக் கலக்கத்தையும், பயத்தையும் கொடுக்கத்தான் செய்கின்றது. அதிலும் ஒரு நாட்டின் கண்டிப்பான சட்டத்தை மீறி அந்த நாட்டில் ஆண்டவருடைய சுவிசேஷத்தை பிரசங்கிக்கச் செல்லும் எனது மனதில் ஒன்றன் பின் ஒன்றாக அநேக பயத்தின் கேள்விகள் எழும்பிக் கொண்டேதான் இருந்தது.
மேற்கு வங்காளத்தின் “சிலிகுடி” என்ற நகரத்திலிருந்து பூட்டான் தேசத்தின் அடிவாரப்பட்டணமான “புன்ஸோலிங்” (Phuntsholing) செல்லும் முதல் பேருந்தில் நான் மிகுந்த ஜெப நிலையில் என் பிரயாணத்தைஆரம்பித்தேன். காலை 7 : 30 மணிக்கு சிலிகுடியில் ஏதோ ஒரு இடத்தில் பூட்டான் தேச டப்பா பேருந்து ஒன்று வந்து நின்றது. காத்துக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் தங்கள் தங்கள் கரத்திலுள்ள எண்ணின்படி பேருந்தின் இருக்கைகளில் அமரத் தொடங்கினர். சற்று நேரத்தில் பூட்டானிய குள்ள மனிதர் ஒருவர் பேருந்துவில் டிரைவராக ஏறி அமர்ந்தார். உடனே, பேருந்து பட்டணத்தின் ஜன நெரிசல் நிறைந்த தெருக்களைக் கடந்து ஓட ஆரம்பித்தது. சில நிமிட ஓட்டத்திற்குள்ளாக பட்டணத்தின் எல்கையைத் தாண்டி அது வயல்வெளிகளின் ஊடாக ஓடத் தொடங்கியது. கம்மியூனிசத்தின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கும் மேற்கு வங்காளத்தின் விவசாயிகள் நீண்ட காம்புகளைக் கொண்ட மண் வெட்டிகளுடன் தங்கள் வயல்களில் அந்த காலை வேளையிலேயே வேலை செய்து கொண்டிருந்தனர். வாழ்க்கையின் முதன் முறையாக மேற்கு வங்காளத்தின் கிராமங்களைக் கண்ட நான் மிகவும் வியப்படைந்தேன். குறிப்பாக தனித்தனியான கிராமப்புற வீடுகள் ஆண்டவருடைய சிருஷ்டிப்பின் அழகைக் கூறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் மா, பலா, கமுகு, வாழை மரங்களும், மூங்கில் புதர்களுமிருந்தன. ஏழை மக்களின் வீடுகள் நாணற் புதர்களாலும் சற்று வசதிமிக்க மாந்தர்களின் வீடுகள் மரப்பலகைகளாலும் அழகாக உருவாக்கப்பட்டிருந்தன.
ஓரிரு மணி ஓட்டத்திற்குப் பின்னர் பெரிய காடு ஒன்றின் ஊடாகப் பேருந்து விரைந்து சென்றது. அஸ்ஸாம் மாநிலத்தின் தலை நகர் கௌகாத்திக்கு செல்லும் ரயில் பாதை அந்தக் கானகத்தின் வழியாகத்தான் செல்லுகின்றது. சற்று நேரத்தில் வயல்வெளிகளைப் போன்ற பசுமையான தோட்டங்களைக் கண்டேன். என் கண்களையே என்னால் நம்ப இயலவில்லை. இந்தியாவிலேயே மிகப் பெரிய தேயிலைத் தோட்டங்கள் சம தரைப் பிரதேசங்களில் பெரிய பெரிய விசாலமான மரங்களின் நிழலில் விரிந்து வியாபித்துக் கிடப்பதை நான் கண்ணுற்றேன்.
பூட்டான் தேசம் எப்படிப்பட்டதாயிருக்கும்? அது எந்தவிடத்தில் எத்தகைய இயற்கை அமைப்புகளின் சூழலில் இருக்கும் என்று நான் எனக்குள் பலவாறு கற்பனை செய்து கொண்டிருந்தேன். பேருந்து ஏறத்தாழ 4 மணி நேர ஓட்டத்திற்குப்பின்னர் மேற்கு வங்காளத்திலிலுள்ள ஜெய்கான் என்ற இடத்தை வந்தடைந்தது. இன்னும் பேருந்து நெடுந்தூரம் ஓடிய பின்னர் இமயமலைகளில் ஏறிக்கடந்து சென்றதன் பின்னர் பூட்டான் தேசம் வரும் என்று எண்ணியிருந்த நான் பெரிதும் ஏமாற்றம் அடைந்தேன். ஜெய்கானின் சில கடைத்தெருக்களும் உண்டு. ஜெய்கானை ஒட்டியே பூட்டானின் அடிவாரப் பட்டணமான புன்ஸோலிங்கும் உள்ளது. மேற்கு ஜெர்மனியையும், கிழக்கு ஜெர்மனியையும் மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள் வேலிகள் ஒரு காலத்தில் பிரித்து நின்றன என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால், பூட்டானின் புன்ஸோலிங்கையும் இந்தியாவின் ஜெய்கானையும் ஒரு நீளமான தடுப்பு சுவர் பிரிக்கின்றது. சுவரில் கதவுகள் இல்லாத வாசல்கள் இருக்கின்றன. அந்த வாசல்களின் வழியாகப் பூட்டானியர்களும், இந்தியர்களும் இங்குமங்கும் போய் வந்து கொண்டிருக்கின்றனர். என்ன ஆச்சரியம், பேருந்து ஜெய்கானின் கடைத் தெருக்களைக் கடந்து வருகையில் ஓரிடத்தில் வளைந்து திரும்புகின்றது. அந்த வளைவில் பூட்டானின் நுழை வாயில் கெம்பீரமாக நிற்கின்றது. அந்த நுழை வாயிலை படத்தில் நீங்கள் காணலாம்.
அந்த நுழை வாயிலை ஒட்டியே பூட்டானிய போலீசார் பலர் நிற்கின்றனர். நான் சென்ற பேருந்தை சோதனையிட்ட பின்னர் பயணிகள் பூட்டான் நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஜெபத்துடன் நான் பேருந்துவிலிருந்து இறங்கி அடுத்து செய்ய வேண்டியதைக் குறித்து ஆண்டவரிடம் ஆலோசனை கலந்து கொண்டேன். “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக் கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி 3 : 6) என்று அவர் திருவுள்ளம் பற்றியுள்ளார் அல்லவா?
இப்பொழுது நான் ஒரு புதிய நாட்டிற்க்குள் நேச கர்த்தரின் மகிமையின் சுவிசேஷத்தின் பொருட்டு என் பாதங்களை எடுத்து வைத்திருக்கின்றேன். அந்த நாட்டுக்குள் சுவிசேஷத்தினிமித்தம் எனக்கு என்ன என்ன நேரிடுமோ என்ற மனுஷீக அச்சத்தால் என் இருதயம் விரைந்து துடிக்கின்றது. அடுத்த கோணத்தில் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல கர்த்தருக்குப் பணிபுரியும் என்னுடன் அந்த சர்வ வல்ல கர்த்தரே பிரத்தியட்சமாக இருக்கின்றார் என்ற சந்தோசத்தால் என் உள்ளம் பொங்கிப் பூரிப்படைகின்றது.
பூட்டானின் தலைநகரம் “திம்பு” (THIMPU) விற்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வழக்கப்படி காலையில் புறப்பட்டுச் சென்றுவிட்டமையால் நான் அன்றை தினம் புன்ஸோலிங் என்ற அந்த பூட்டானிய அடிவாரப்பட்டணத்திலேயே தங்க வேண்டியதாயிற்று. அங்குள்ள ஒரு விடுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அன்றைய தினம் நான் அங்கு செலவிட்டேன். சில நாட்கள் ஸ்நானம் செய்யாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நான் அந்த இடத்தில் நன்கு ஸ்நானம் செய்து அழுக்கடைந்த என் வஸ்திரங்களையும் தோய்த்து சுத்தம் பண்ணிக் கொண்டேன். தங்கியிருந்த விடுதியின் தனித்த அறை ஆண்டவருடன் அளவளாவி மகிழ அனுகூலமாகவிருந்தது. அடுத்த நாள் காலையில் பூட்டானின் தலைநகருக்குச் செல்லத் தேவையான அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டாக புன்ஸோலிங்கிலுள்ள நமது இந்திய ஸ்தானிகராலயத்திற்குச் சென்றேன். அங்கே பஞ்சாபிலிருந்து வந்தொரு 24 வயதிய சீக்கிய வாலிபனைச் சந்தித்தேன். அவன் உலகம் சுற்றும் ஒரு ஐசுவரியமுள்ள வாலிபன். இதுவரை 12 நாடுகளைச் சுற்றி வந்திருப்பதாக என்னிடம் கூறித் தன் பாஸ்போர்ட்டையும் எனக்குக் காண்பித்தான். அருமை ஆண்டவரின் கல்வாரி அன்பை எப்படியாவது அந்த சீக்கிய வாலிபனுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற தாகத்தில் நான் அவனுடன் பழகிக் கொண்டேன். அடுத்த நாள் காலைப் பயணத்திற்கான டிக்கெட்டை நானும், அந்த சீக்கிய வாலிபனும் பெற்றுக்கொள்ள பூட்டானிய பேருந்து போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்றோம். அடுத்த நாள் பயணத்திற்கு இரண்டு டிக்கெட்டுகள் மாத்திரமே பாக்கி உள்ளது என்று அங்கு எங்களுக்கு கூறப்பட்டது. பேருந்து பிரயாணத்தின் போது வெளிக்காட்சிகளைக் காண அந்த சீக்கிய வாலிபன் அதிகமாக ஆசைப்பட்டபடியால் ஜன்னல் பக்கம் தனக்கு டிக்கெட் தரும்படியாகக் கேட்டான். இரண்டு டிக்கெட்டுகள் எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டது. அந்த வாலிபன் ஜன்னல் அருகாமையில் அமரக்கூடிய டிக்கெட்டை மிகவும் விவேகத்தோடு தனக்கென்று எடுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலை 8:30 மணிக்குப் பேருந்து திம்புவிற்குச் செல்லுவதாகவிருந்தது. காலை எட்டு மணிக்கு முன்னதாக நான் பேருந்து நிலயத்திற்குச் சென்றபோது 8 : 30 மணிக்குப் புறப்பட வேண்டிய பேருந்து முழுமையாக நிரம்பிவிட்டது. பூட்டானிய மக்கள் பேருந்தில் அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டனர். நான் மிகவும் கஷ்டப்பட்டு எனது இருக்கையில் என்னுடைய சாமான்களை எல்லாம் என் மடி மீது வைத்து அமர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பேருந்து மிகவும் சிறியது. மக்கள் கூட்டமோ மிகுதி. உட்காரக்கூட இடவசதியற்றதொரு சூழ்நிலையில் என் பொருட்களையும் என் மடி மீது வைத்து அமருவது என்பது எனக்குச் சொல்லொண்ணா வேதனையின் அனுபவமாகவிருந்தது. இதற்கிடையில் அழுக்குப்படிந்த, சுத்தமற்ற கிராமப்புற பூட்டானிய மக்களின் சரீரங்களிலிருந்து எழுந்த நாற்றம் என்னைத் திக்குமுக்காடச் செய்தது. பிரயாணம் செய்ய வேண்டிய தூரமோ 179 கில்லோ மீட்டர் தொலைவாகும். மாலையில்தான் பேருந்து தலை நகரம் போய்ச் சேரவியலும். இந்த நிலையில் வாய் திறந்து சப்தமாக ஒரு குழந்தையைப்போல அழுதுதான் விடலாமா என்ற நிலை எனக்கு ஏற்பட்டது. அன்பின் ஆண்டவர்தான் தம்முடைய மிகுந்த கிருபையினால் என்னைத் தாங்கி அரவணைத்து அந்த இக்கட்டான சூழ் நிலையில் எனக்கு வேண்டிய பெலத்தையும், பாடுகளை முறுமுறுப்பின்றிச் சகிக்க தேவையான தமது அன்பின் கிருபையையும்தந்தருளினார். அல்லேலூயா.
மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகின்றது (மத்தேயு 26 : 23)
நாம் மெய்யான ஆண்டவருடைய பிள்ளைகளானால் மற்றவர்கள் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் கண்டு பிடிப்பது அத்தனை கஷ்டமல்ல. திம்புவை நோக்கி பேருந்து மலையின் மீது வளைந்து, வளைந்து சென்று கொண்டிருந்தது. சில கில்லோ மீட்டர் தூர ஓட்டத்திற்குள்ளாகவே அது “ரிஞ்சண்டிங்” (RINCHHENDING) என்றவிடத்தில் வந்து நின்றது. இவ்விடத்தில் பூட்டானிய போலீசார் பூட்டானியரல்லாத அனைத்து வெளி நாட்டவர்களையும் நன்கு சோதனையிட்டுப் போதிய அத்தாட்சியில்லாதவர்களை மேலே தலைநகருக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. நான் ஜெபத்தோடும், மனதின் கலக்கத்தோடும் அதிகாரிகளுக்கு முன்னர் நின்று கொண்டிருந்தேன். எனது படுக்கைக்குள்ளும், பெட்டிக்குள்ளும் நான் மறைத்து வைத்திருக்கும் கிறிஸ்தவ கைப்பிரதிகளைப் பார்த்தால் உடனே என்னை பூட்டானை விட்டே விரட்டி அடித்துவிடுவார்களே என்ற அச்சம் என்னை வாட்டி வதைத்தது. பூட்டானிய போலீஸ் அதிகாரிகளின் கரங்களில் நான் விழுந்துவிடாதபடி கர்த்தர் என்னைத் தயவாகக் காத்துக்கொள்ள அந்த நாளின் அதிகாலையில் என் உள்ளத்தை உடைத்து ஊற்றி தேவ சமூகத்தில் நான் மன்றாடியிருந்தேன். எனினும், பிசாசு அவிசுவாசத்தையும், மனச்சோர்பையும் அடுத்த கோணத்திலிருந்து எனக்கு அளித்துக் கொண்டு தான் இருந்தான். சில மேல் நாட்டு ஐரோப்பியர்களுடன் அந்த ரிஞ்சண்டிங் என்ற இடத்தில் நான் நின்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னால் ஒருவர் வந்து “நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்?” என்று நல்ல சுத்த தமிழில் என்னிடம் கேட்டார். பூட்டான் தேசத்தில் ஒரு தமிழ்க் குரலை திடீரென நான் கேட்டது என் உள்ளத்திற்குள் மிகவும் பூரிப்பாகவிருந்தது. கேள்வியைக் கேட்ட சகோதரனின் பெயர் நாரயணா என்பதாகும். ஆந்திராவில் ராஜமுந்திரி என்ற இடத்தைச் சேர்ந்தவர். பூட்டான் காடுகள் வழியாக உயர் அழுத்த மின் கம்பங்களை நாட்டி மின்சாரத்தைக் கொண்டு செல்லும் இந்திய கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராகப் பணிபுரிபவர் அவர். “நான் தமிழ் நாட்டிலிருந்து வருகின்றேன்” என்று கூறியதும் அடுத்தக் கேள்வியாக “நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” என்றும் கேட்டார். “என்னை ஒரு கிறிஸ்தவன் என்று நீங்கள் எப்படி அடையாளம் கண்டு கொண்டுவிட்டீர்கள்?” என்று நான் அவர்களிடம் திருப்பிக் கேட்டேன். “உங்கள் முகத்தினில் நான் அதினைக் காண முடிகின்றது” என்று அந்த அன்பு சகோதரன் பதிலளித்தார்கள். எல்லா மகிமையும் ஆண்டவருக்கே. நாராயணன் ஒரு இந்து சகோதரன். ஆனால் ஆண்டவரை தன் இதய நாயகராக ஏற்று அவருடைய அன்பில் களிகூரும் ஒரு சகோதரன். அவருடைய அனுபவங்களில் சிலவற்றை இவ்வாறு கூறினார்கள்:-
“நான் தெலுங்கு நாடான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவன். எனது குடும்பம் யாவும் இந்துக்களேதான். ஆனால், நான் மாத்திரம் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்று அவருக்குள் ஜீவித்து வருகின்றேன். அந்த இயேசு இரட்சகர் என் வாழ்க்கையில் எனக்கு நல்லவரும், போதுமானவருமாக இருக்கின்றார். தேவ கிருபையால் எனக்கு மனைவியும், இரண்டு பையன்களுமுள்ளனர். நான் இந்த பூட்டான் தேசக்காடுகளில் பல ஆண்டுகளாக மின்சாரக் கம்பிகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். இங்குள்ள இருண்ட காடுகளில் வெள்ளை யானைகள் உண்டு. நரமாமிச பட்சிணிகளான காட்டு மனிதர்கள் கூட இருப்பதாகக் கூறப்படுகின்றது. இங்கு எனக்கு ஆண்டவரும், அவர் அருளிய வேதமும், ஒரு பாட்டுப் புத்தகமும்தான் துணையாக இருக்கின்றன. ஆண்டவர் என்னை அதிகமாக நேசிக்கின்றதை நான் இங்கு காண்கின்றேன். சமீபத்தில் பூட்டான் கானகத்தில் நாங்கள் போட்டிருந்த எங்கள் கூடாரங்களில் எப்படியோ தீப்பற்றி எல்லாப் பொருட்களும் எரிந்து அழிந்து போயிற்று. அப்பொழுது நான் மின் கம்பங்களை நாட்டும் வேலையின் பொருட்டுக் காட்டினுக்குள் நெடுந்தூரம் சென்றுவிட்டேன். திரும்பி வந்து பார்த்த பொழுது ரூபாய் 5000 விலைமதிப்புள்ள எனது டெரிக்காட்டன் வஸ்திரங்கள், குளிர் ஆடைகள் எல்லாம் எரிந்து போயிருப்பதைக் கண்டேன். ஆனால், எத்தனை ஆச்சரியம், நான் எரிந்து போன குப்பையைக் கிளறினபோது என் அருமை வேத புத்தகமும், எனது தனிமை நேரங்களில் நான் பாடி மகிழும் எனது பாட்டுப் புத்தகமும் தீயில் எரிந்து சாம்பலாகாமல் அப்படியே இருந்தன. அதின் இரகசியத்தை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. வேதப் புத்தகமும், பாட்டுப் புத்தகமும் தீயில் வெந்து போகாதிருப்பதை நான் கண்டு மட்டில்லாத சந்தோசம் அடைந்தேன். என் பொன் இயேசு இன்றும் ஜீவிக்கின்றார் என்பதையும், அவர் என்னை அதிகமாக நேசிக்கின்றார் என்பதையும் இதன் மூலம் நான் துலாம்பரமாகக் கண்டு கொண்டேன். ஐயாயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள எனது விலையுயர்ந்த துணிகள் எரிந்து போனதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை. இந்தச் சம்பவம் ஒரு விதத்தில் கர்த்தர் மேலுள்ள என்னுடைய விசுவாசத்தை வலுப்படுத்தி அவரை நான் இன்னும் அதிகமாக நேசிக்க வகை செய்தது.
ஒரு சமயம் நானும் ஒரு என்ஜினியரும் மின் கம்பம் ஒன்றிலிருந்து திடீரென ஒன்று போல கீழே விழுந்தோம். நான் மலையிலிருந்து சரிவான பகுதியில் உருண்டு, உருண்டு சுமார் 300 அடி தூரம் கீழே சென்று விழுந்து ஆண்டவரின் அற்புத கிருபையால் ஒரு காயமுமின்றி எழுந்திருந்தேன். ஆனால், என்னுடன் விழுந்த அந்த என்ஜினியர் 10 அடி தூரம் மட்டும்தான் உருண்டிருந்தார். அதற்குள்ளாக அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. இவ்வித காரியங்கள் எல்லாம் என் இயேசுவை நான் இன்னும் அதிகமாக நேசிக்கவும், என்னை அவருக்கு முற்றுமாக ஒப்புக் கொடுக்கவும் வழி செய்து கொடுத்தது” என்று கூறக் கூற அவருடைய முகம் கிறிஸ்துவுக்குள்ளாகப் பரிசுத்த மலர்ச்சியடைந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
தேவன் வனாந்திரத்தில் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக் கூடுமோ?” (சங் 78 : 19)
தமிழ் நாட்டிலிருந்தால் அன்புள்ள தமிழ்க் கிறிஸ்தவ மக்கள் ஊழியத்தின் பாதையில் அன்புக் கரம் நீட்டி உதவுவார்கள். ஆனால், புத்தமத நாடான பூட்டானில், எங்கும் காடுகள் நிரம்பிய கானகத்தில் நமக்கு உதவி செய்வது யார்? நமக்கு இரக்கம் காட்டி நம்மை ஆதரிப்பது யார்? ஒருவருமே இல்லை என்றுதான் நாம் மனுஷீகத்தில் நினைப்போம். அப்படித்தானே? ஆனால் அங்கும் தேவன் நம்மைக் கன்மலையின் தேனினால் போஷிக்க வல்லவராயிருக்கின்றார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அல்லேலூயா.
மேலே குறிப்பிட்ட நாராயணா என்ற அந்த அன்பு சகோதரன் நான் பூட்டானுக்குள் செல்லும் நோக்கத்தை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியுற்று தன் கரத்தில் பத்து ரூபாயை எடுத்து என் சட்டைப்பையில் அன்புடன் திணித்து வைத்து விட்டார். 1983 ஆம் ஆண்டில் ரூபாய் 10 என்பது பெரிய தொகையாகும். எங்கள் சம்பாஷணைகள் யாவும் பேருந்தில் நடந்தவையாகும். பேருந்து நின்ற ரிஞ்சண்டிங் என்ற இடத்திலுள்ள பூட்டானிய போலீஸ் அதிகாரிகள் எனது கரத்திலிருந்த இந்திய அரசாங்க அத்தாட்சியை (எனது பாஸ்போர்ட்டை) பார்த்து அதில் அரசு முத்திரையை குத்தி தேதியையும் போட்டு என்னைத் தலை நகரான திம்புவுக்குள் செல்ல அனுமதியளித்தனர். எனது பாஸ்போர்ட் மற்றும் பூட்டான் அரசாங்க அதிகாரிகள் குத்திய முத்திரையை நீங்கள் படத்தில் காண்பீர்கள்.
தேவ தயவால் எனது பெட்டி படுக்கைகளைப் காவல் துறை அதிகாரிகள் சோதனை போடவில்லை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
முதலில் குறிப்பிட்ட நாராயணா என்ற அந்த சகோதரன் ஓரிரு மணி நேர பேருந்து ஓட்டத்திற்குப் பின்னர் இடையில் காட்டிலேயே இறங்கிக் கொண்டார்கள். பேருந்து, பூட்டானின் அடர்த்தியான காடுகளையும், மலை உச்சிகளையும், பள்ளத்தாக்குகளையும் துரிதம் துரிதமாகக் கடந்து சென்று கொண்டிருந்தது. பூட்டான் நாட்டுக்கே உரித்தான விதவிதமான வண்ணப் பறவைகளை இக்கானகத்தில் நான் கண்டு கர்த்தரைத் துதித்தேன்.
முதன் முதலாவதாக கும்பல் கும்பலான காட்டு வாழை மரங்களை நான் இந்தக் காடுகளில் தான் கண்டேன். பார்ப்பதற்கு அசலான நீண்ட இலைகளுடன் கூடிய செழுமையான வாழை மரங்கள். அவற்றில் அநேகம் குலைகளையும் போட்டிருந்தன. ஆனால் மனிதனின் உபயோகத்திற்கு சற்றும் பிரயோஜனமற்ற காட்டு வாழை மரங்கள் அவை. இந்தியாவின் பற்பல மலைகளில் நான் காட்டு முருங்கை, காட்டுப் புளி, காட்டு மிளகு, காட்டு கருவேப்பிலை போன்றவற்றைக் கண்டிருக்கின்றேன். ஆனால், காட்டு வாழையைக் கண்டது இதுவே முதல் தடவையாகும். இந்தக் காட்டு வாழைகளின் மூலம் ஆண்டவர் என்னுடன் பேசினார்.
“அவரைப்போல போதிக்கிறவர் யார்?” (யோபு 36 : 22)
பேருந்தில் என் அருகில் ஜன்னல் ஓரமாக 30 ஆம் நம்பர் இருக்கையில் நான்ஆரம்பத்தில் குறிப்பிட்ட சீக்கிய வாலிபன் மகிழ்ச்சியோடு அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒரே சந்தோசம், காரணம் வெளிக்காட்சிகளை எல்லாம் பார்க்க வசதியான நல்ல இடம் பெற்றிருந்ததுதான். அவனுக்குண்டான சந்தோசத்தைப் பார்த்தபோது நமக்கு முன்பாக 29, 30 ஆகிய இரண்டு டிக்கெட்டுகளைப் போட்ட போது நாம் 30 ஆம் நம்பர் சீட்டை கை நீட்டி எடுத்திருக்கலாமே என்ற ஒரு துக்க உணர்வையும் பிசாசு எனக்குத் தந்துதான் கொண்டிருந்தான். ஆனால், நான் அங்கு பதஷ்டம் கொண்டு அந்த டிக்கெட்டை எடுக்க பரிசுத்த ஆவியானவர் என்னை அனுமதிக்கவில்லையே! இதன் தார்ப்பரியம் என்ன?
பேருந்து ஓட, ஓட ஒரு காரியம் நிகழ்ந்தது. பேருந்தின் மேலேயிருந்து இரத்தத் துளிகள் ஒவ்வொன்றாகச் சொட்டுப் போட்டுக் கொண்டிருந்தது. இது என்ன இரத்தம்? மாடுகளை வெட்டி பெரிய சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மேலே ஏற்றியிருந்தனர். அந்த இரத்தம்தான் அது! வர வர இரத்த ஒழுக்கு அதிகமாகி அந்த சீக்கிய வாலிபனின் வஸ்திரத்தை நனைத்தது. என்றைக்கு வெட்டிய மாடுகளோ? அந்த இரத்தம் நாற்றமெடுத்தது. அந்த வாலிபன் பட்ட பாடுகளை அத்தனை எளிதாக சில வரிகளில் நான் இங்கு எழுதிவிட முடியாது. தன் மேல் விழுந்த இரத்தத் துளிகளை தனது கைக்குட்டைகளால் தடுத்து நிறுத்தினான். அதன் காரணமாக அவனது இரண்டு கைக்குட்டைகள் முற்றும் நனைந்து நாசமாயிற்று. தனது பரிதாப நிலையை பேருந்து கண்டக்டரிடம் சொல்லிப் பார்த்தான். ஆனால், கண்டக்டர் தன்னால் எதுவும் செய்யவியலாது என்று கூறிவிட்டார். ஜன்னலண்டை தான் அமரும் இடத்தை தெரிந்து கொண்டதை எண்ணி, எண்ணி அவன் அளவில்லா துயரம் அடைந்தான். மிகவும் மேடு பள்ளங்களுள்ள இடங்களில் பேருந்து போகும்போது இரத்த ஒழுக்கு மிகவும் அதிகமாகவிருந்தது. தேவ ஆலோசனைக்குக் கீழ்ப்படியாமல் ஆத்திரமுற்று எனக்கு முன்பாக கிடந்த 30 ஆம் நம்பர் சீட்டை நான் எடுத்து ஜன்னல் பக்கமாக நான் அமர்ந்திருப்பேனானால் எத்தனையாக நான் அல்லல் பட்டிருப்பேன் என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளலாம்.
நம்முடைய அன்றாடக வாழ்க்கைக்கு கர்த்தருடைய ஆலோசனைகளும், அவருடைய வழி நடத்துதல்களும் எவ்வளவு அவசியமானது! நம் இஷ்டப்படியும், நம் மன விருப்பத்தின்படியும் நாம் நமது காரியங்களை தெரிந்து கொள்ளுவோமானால் அதின் முடிவு எத்தனை வேதனையில் முடிவடையும்! எப்பொழுதும் நாம் ஆண்டவருடைய ஆலோசனைகளுக்கும், அவருடைய நீதியின் வழிநடத்துதலுக்கும் மிகவும் பொறுமையுடன் காத்திருந்து அவர் காண்பிக்கும் பாதையில் செல்லும் பட்சத்தில் அதின் முடிவு பாக்கியமும், ஆசீர்வாதமும் நிரம்பியதாக இருக்கும். அல்லேலூயா. “தேவனுடைய வழி உத்தமமானது ……………… தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்” (சங் 18 : 30)