பண ஆசை, பெயர் புகழ்ச்சிக்கு என் வாழ்வில் இடம் அளிக்கவில்லை
“நான் யாருடைய எருதை எடுத்துக் கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக் கொண்டேன்? யாருக்கு அநியாயஞ் செய்தேன்? யாருக்கு இடுக்கண் செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக் கொண்டு கண் சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன்” (1 சாமுவேல் 12 : 3)
“ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிற படி, எனக்கும் என்னுடனே கூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலை செய்தது” (அப்போஸ்தலர் 20 : 33-34)
“என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால் அவரை ஸ்தோத்திரிக்கிறேன்” (1 தீமோ 1 : 12)
கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தில் என்னை மிகவும் பிரமிக்கப்பண்ணவைத்த மூன்று தேவ வசனங்களை மேலே நான் குறிப்பிட்டிருக்கின்றேன். இந்த தேவ வசனங்களை விடிவெள்ளி நட்சத்திரங்களாகக் கொண்டே நான் எனது தேவ ஊழியங்களை கறை திறையின்றி இத்தனை நீண்ட ஆண்டு காலங்களாக தேவ பெலத்தால் நடத்திக் கொண்டு வந்திருக்கின்றேன்.
நம் அருமை இரட்சகர் இந்த உலகத்தில் மானிடனாக இருந்த நாட்களில் பணத்தை தமது கையினால் கூட தொடவில்லை என்பதை நாம் அதிக ஆச்சரியத்துடன் கவனிக்க வேண்டும். ராயனுக்கு வரி கொடுப்பது நியாயமா? என்று கேட்டபோது ஒரு பணத்தை எனக்கு காண்பியுங்கள் என்று சொன்னாரே தவிர தமது கைவசமிருந்த பணம் ஒன்றை எடுத்து அவர்களுக்கு காண்பிக்கவில்லை என்பதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அது மாத்திரமல்ல, தமது அப்போஸ்தல குழுவின் செலவுகளுக்கு பணம் செலவிட பணப் பொறுப்பை வைத்துக் கொள்ள தாம் தெரிந்து கொண்ட பொருத்தமான நபர் ஒரு “பிசாசு” (யோவான் 6 : 70) என்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக இருக்கின்றது.
பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்கும் தமது அன்பின் இரட்சகரைப் போன்று பணத்தை தன் கையினால் தொடக் கூட விரும்புவதில்லை என்பதை அவருடைய புத்தகங்களை நாம் வாசித்தால் நமக்கு நன்கு தெரியும். தான் செல்லக்கூடிய இடத்திற்கு ஒரு ரயில் டிக்கெட் மட்டும் எடுத்துத் தரச் சொல்லி கேட்பாரே தவிர பணத்தை எடுத்து தனது காவி அங்கியின் பையில் போட்டுக் கொண்டு செலவிடும் பழக்கம் அவருக்கு இல்லாதிருந்தது.
கர்த்தருடைய மாமாட்சியான பரிசுத்த தேவ ஊழியத்தை பணம் காசுகளுக்காக செய்யும் மக்களை நாம் இந்த நாட்களில் வேதனையுடன் காண்கின்றோம். அதற்காக அவர்கள் செய்யும் செப்படி வித்தைகள் எல்லாம் நமக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான். அது இப்பொழுதல்ல முதலாம் நூற்றாண்டிலிருந்தே ஆரம்பமாகி (அப்போஸ்தலர் 8 : 18 – 20) இன்றும் தொடருகின்றது. இன்னும் தொடரும். அதைக் குறித்து நாம் இங்கு வர்ணிக்க அவசியமில்லை. அது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேவனுடைய வார்த்தை ஒன்றை மட்டும் இரத்தினச் சுருக்கமாக சொல்லி வைக்கின்றது. அது இந்த தேவ வசனம்தான். “அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது” (வெளி 22 : 11-12)
உங்கள் சகோதரனாகிய நான் தேவ அழைப்பின் பேரில் எனது உலக வேலையை விட்டுவிட்ட ஆரம்ப நாட்கள் ஒன்றில் ஐசுவரியமுள்ள ஒரு கிறிஸ்தவ அம்மாள் என்னைப்பார்த்து “நீங்கள் உங்கள் தேயிலைத் தோட்ட வேலையை விட்டுவிட்டதாக நான் கேள்விப்பட்டேன். (ஹவுஸ் விசிட் பண்ணியா காரியம் நடக்கின்றது) கிறிஸ்தவ வீடுகளை சந்தித்து உங்கள் காரியத்தை நடத்து கின்றீர்களோ?” என்று என்னைப் பார்த்துப் பரிகாசமாகக் கேட்டார்கள். நான் அந்த அம்மாளைப் பார்த்து “நீங்கள் நினைப்பது போன்ற தேவ ஊழியன் நான் அல்ல, கர்த்தரைச் சார்ந்து அவரை நம்பி வாழ்பவன் நான். எனக்கும் வீடு சந்தித்து பணம் வாங்குவதற்கும் வெகு தூரம்” என்றேன். ஐசுவரியமுள்ள தனது வீட்டுக்கும் காணிக்கைக்காக நான் கட்டாயம் பின் நாட்களில் வருவேன் என்ற உள் நோக்கத்தில் அவர்கள் அப்படிச் சொன்னார்கள். அவர்கள் வீட்டிற்கு நான் ஒரு நாள் கூட செல்லாதபடி கர்த்தர் என்னை கிருபையாக விலக்கிக் காத்துக் கொண்டார். பின் நாட்களில் தேவன் என்னை உயர்த்தி ஆசீர்வதித்தபோது அந்த அம்மா தனது வீட்டிற்கு வந்து ஜெபிக்க என்னை மிகவும் வருந்திக் கேட்டார்கள். ஆனால், அன்பின் கர்த்தர் அங்கு செல்ல கடைசிவரை என்னை அனுமதிக்கவே இல்லை.
பண ஆசை என்பது ஒரு மனிதனுக்கு அவனுடைய குழந்தைப் பருவத்திலிருந்து ஆரம்பமாகும் ஒன்றாகும். எனது குழந்தைப் பருவ நாட்களிலிருந்தே எனக்கு பணத்தின் மேல் எந்த ஒரு பற்றும், பாசமும் கிடையாது. நான் சிறுவனாக இருந்த நாட்களில் எனது பரிசுத்த தகப்பனார் தனது இரத்தத்தை சிந்தி அடிமாடாக உழைத்த பணத்தை தந்திரமாக திருடி எங்கள் ஊரிலுள்ள பசி பட்டினியினால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்துவிடுவேன். நான் எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மெய்ஞ்ஞானபுரம் என்ற ஊரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் கால் நடையாக நடந்து படிக்கும் நாட்களில் எனது தாயார் எனக்குத் தந்தனுப்பும் மதிய ஆகாரத்தை கூட வழியில் பசியால் வாடும் ஏதாவது ஏழை எளியவர்களைக் கண்டால் அவர்களுக்கு கொடுத்துவிட்டு நான் காலியான பாத்திரத்தை எடுத்துச் சென்று பள்ளியில் பட்டினியாகக் கிடப்பேன். தெருவில் அழுது கொண்டு செல்லும் ஒரு ஏழை குழந்தையின் அழு குரலைக்கேட்டால் நான் என் உள்ளத்தில் அழுவேன். பசி, பட்டினி, வறுமை, கந்தை வஸ்திரம் கட்டிச் செல்லும் ஏழை எளியோரைக் கண்டால் என் உள்ளத்திற்குள் உருகுவேன். சிறு பிராயத்திலிருந்தே என் உள்ளத்தில் இரக்கம், ஈகை, அன்பை என்னைத் தமக்கென தெரிந்து கொண்ட என் அன்பின் நேசர் ஊற்றிவிட்டார். அதற்காக நான் அந்த அன்பரை துதித்து ஸ்தோத்திரிக்கின்றேன். உண்மைதான், ஒரு பரிசுத்தவான் சொன்னது போல (If you are not very kind you are not very holy) ” நீ அதிக இரக்கமுடையவனாக இருக்காத பட்சத்தில் நீ அதிக பரிசுத்தவானாக இருக்க வாய்ப்பில்லை” .
எனது நீண்ட தேவ ஊழியத்தின் பாதையில் என் கரங்களைக் கடந்து சென்ற திரளான பணங்களைக் கொண்டு நான் எனக்கென்றும், என் பின் சந்ததிக்கென்றும் உலகப்பிரகாரமாக எதை எதையோ செய்ய எனக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், பக்தன் நெகேமியா சொன்னது போல “நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை” (நெகேமியா 5 : 15) என்ற தேவ வாக்கின்படி தேவ பெலத்தால் என்னை விலக்கிக் காத்துக் கொண்டேன்.
நான் எனது உலகப் பிரகாரமான வேலையை தேவ அழைப்பின்பேரில் விட்டுவிட்ட ஆரம்ப நாட்களில் தேவ மக்கள் ஊழியங்களுக்காக எனக்கு அனுப்பிய பணத்தில்தான் நாங்கள் போஷிக்கப்பட்டோம், உடுத்துவிக்கப்பட்டோம், எனது பிள்ளைகள் இருவரும் படித்துப் பட்டமும் பெற்றனர். “சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாக வேண்டுமென்று கர்த்தரும் கட்டளை யிட்டிருக்கிறார்” ( 1 கொரி 9 : 14 ) என்ற தேவ வாக்கின்படி எங்கள் காரியங்கள் நடந்தன. பின் நாட்களில் பிள்ளைகள் இருவரும் அவர்களின் மனைவியரும் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்களாக பணிகளில் அமர்ந்தபோது கர்த்தருடைய பணம் முழுமையும் தேவ ஊழியத்திற்காகவே செலவிடப்பட்டது. பிள்ளைகள் தேவ ஊழியங்களுக்காக நமக்கு மாதந்தோறும் காணிக்கைகளைத் தர ஆரம்பித்தார்கள். கோத்தகிரியில் மொத்தம் 33 நீண்ட ஆண்டு காலங்களாக நான்கு வாடகை வீடுகளில் நாங்கள் குடியிருந்தோம். அந்த வாடகை வீடுகளின் வாழ்க்கை எகிப்தின் அடிமைத்தனம், பாபிலோனின் அடிமைத்தனத்தைவிட மிகவும் கொடியதாக எங்களுக்கு இருந்தது. வாடகை வீடுகளில் வசிக்கும் தேவப்பிள்ளைகளுக்கு அந்த கசப்பான அனுபவங்கள் கட்டாயம் இருக்கும். நாங்கள் எங்கள் இரண்டாவது வாடகை வீட்டில் குடியிருந்தபோது ஒரு நாள் எனது இளைய மகன் தான் விளையாடிக் கொண்டிருந்த தனது சிறிய பந்தை வீட்டின் ஓட்டு கூரையில் எப்படியோ வீசி எறிந்துவிட்டான். அவ்வளவுதான், அந்த வீட்டின் கிறிஸ்தவ சொந்தக்கார அம்மாள் அதைக் கண்டு அப்படியாக எங்களிடம் சண்டைக்கு வந்துவிட்டார்கள். ஒரு நாள் காலையில் அந்த வீட்டின் சொந்தக்கார மனிதர் என்னண்டை வந்து வீட்டை உடனடியாக காலிபண்ணிவிட்டு வேறு வீட்டுக்குப் போகக் கேட்டுக் கொண்டார். நான் விபரம் கேட்டபோது “நீங்கள் டெலிபோன் இணைப்பு கேட்டு மனு செய்திருப்பதை நான் கேள்விப்பட்டேன். நீங்கள் டெலிபோன் எடுத்துவிட்டால் எனது வீடு உங்களுக்கு சொந்தமாகிவிடும். நான் அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்றார். அந்த கிறிஸ்தவ மனிதருக்கு சொல்ல என்ன இருக்கின்றது? நாங்கள் உடனே அந்த வீட்டை காலி பண்ணி மூன்றாவது வாடகை வீட்டுக்கு வந்தோம். அந்த லைன் வீட்டில் சந்தோசமாக 2 ஆண்டுகள் தான் குடியிருந்தோம். எதிர்பாராதவிதமாக ஒரு நாள் அந்த வீட்டுக்கார மனிதர் 2 வாலிபர்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பியிருந்தார். அவர்கள் இருவரும் கைகளில் டேப்பை பிடித்துக்கொண்டு நாங்கள் குடியிருந்த வீட்டை குறுக்கும் நெடுக்குமாக அளவிட்டார்கள். உண்மையாகவே, அவர்கள் அதை அளவிடவில்லை, அளவிடுவது போல எங்களுக்கு முன்பாக நடித்திருக்கின்றார்கள். அளவிட்டு முடிந்ததும் என்னிடம் வந்து “வீட்டை இடித்துப் புதிதாகக் கட்டப்போகின்றோம், உடனே வேறு வீடு பார்த்துப் போய்விடுங்கள்” என்றார்கள். அந்தவிதமாக அந்த நாளில் அளவு எடுத்தவர்கள் நீண்ட 40 ஆண்டு காலம் ஆகியும் இதுவரை அந்த வீட்டை இடிக்கவுமில்லை, வேறு வீடு கட்டவுமில்லை என்பதுதான் ஆச்சரியமான காரியம். அப்படியே 4 ஆம் வாடகை வீட்டுக்கு குடி வந்தோம். அங்கு நாங்கள் 23 (இருபத்திமூன்று) நீண்ட ஆண்டுகள் எந்த ஒரு தொந்தரவுமின்றி அமைதியாகக் குடியிருந்தோம். ஆண்டாண்டு தோறும் வாடகையை நானே அதிகமாக கூட்டி கூட்டி கொடுத்து வந்தேன். வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொண்டோம். அழகான சிறிய பூந்தோட்டம் ஒன்றையும் அமைத்தோம். இனி கடைசி வரை இந்த வாடகை வீட்டுடன் நாம் நமது பூவுலக ஓட்டத்தை ஓடி முடித்துக்கொள்ளலாம் என்று நான் அதிகமாக ஆசைப்பட்டேன். ஆனால் அந்தோ! ஒரு நாள் வீட்டுச் சொந்தக்கார கிறிஸ்தவ மனிதர் எங்கள் வீட்டுக்கு வரும் பஞ்சாயத்து போர்டு தண்ணீர் இணைப்பை எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி துண்டித்து விட்டார். அத்துடன் அந்த வாடகை வீட்டுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. இந்தவிதமான கொடிய சூழ்நிலைகளின் மத்தியிலும் கர்த்தருடைய பணத்தைக் கொண்டு ஒரு வீட்டை எனக்கென்று சொந்தமாகக் கொள்ள நான் கடைசி வரை விரும்பவும், முயற்சிக்கவும் இல்லை. நான் எனது உலக பிரகாரமான தேயிலை தோட்ட வேலையை விடும்போது நான் வேலை செய்த இடத்தில் எனக்குக் கிடைத்த பணத்தில் சில செண்டுகள் நிலம் கோத்தகிரியில் வாங்கிப் போடும்படியாக எங்களை அன்பாக நேசித்த சிலர் ஆலோசனை சொன்னார்கள். அப்பொழுது கோத்தகிரியில் ஒரு சென்ட் நிலத்தின் விலை வெறும் ரூபாய் 400 மாத்திரம்தான். அப்படி நிலம் வாங்கினால் கர்த்தருடைய பணத்தைக் கொண்டு நிலம் வாங்கினான், வீடு கட்டினான்என்ற வார்த்தை எழும்பும். அது கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக இருக்காது என்று அதை முற்றுமாக நிராகரித்து விட்டேன். இன்று அதே நிலத்தின் மதிப்பு 1000 மடங்குகள் உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
இறுதியாக ஆண்டவருடைய வேளை வந்தது. பிள்ளைகளின் கைகள் வலுவடைந்து அவர்களாகவே வங்கிகளில் கடன் வாங்கி தங்களுக்கென்று சொந்தமாக வீடுகளைக்கட்டிக் கொண்டனர். காரியங்கள் இந்த அளவிற்குச் சென்றிருந்தாலும் தேவப்பகைஞரான பொல்லாத கிறிஸ்தவ மக்கள் எதை எதையோ பேசுகின்றனர். அதைப்பற்றி நான் சற்றும் கவலைப்படவில்லை. தாவீது இராஜா சொன்னது போல “தேவரீர் உமது அடியானை அறிவீர்” (1 நாளா 17 : 18) என்ற கர்த்தருடைய வார்த்தையில் நான் மிகவும் சந்தோசமடைகின்றேன்.
தேவ எக்காளம் பத்திரிக்கையில் ஊழியத்திற்கான பணத் தேவைகளைக் குறித்து நான் ஒருக்காலும் எழுதவில்லை என்பதை அதை வாசித்தவர்கள் நன்கு அறிவார்கள். இந்த நாட்களில் கிறிஸ்தவ பத்திரிக்கைகளில் தாங்கள் செய்யும் ஊழியங்களுக்கு தேவையான பணத்தை வங்கிகளில் செலுத்தும்படியாக தங்கள் வங்கி கணக்கு எண்களை தடித்த எழுத்துக்களில் எழுதுவதை நாம் பார்க்கலாம். ஒரே பத்திரிக்கையில் 2 இடங்களில் கூட அதை எழுதி வலியுறுத்து கின்றார்கள். தேவ எக்காளம் வெளியிடப்பட்ட 46 நீண்ட ஆண்டு காலத்தில் எனது வங்கி கணக்கு எண்ணை ஒரு தடவை கூட பத்திரிக்கையில் நான் எழுதவில்லை என்பதை கர்த்தருடைய பிள்ளைகள் நன்கு அறிவார்கள். கர்த்தருக்கே மகிமை.
2007 ஆம் ஆண்டிலிருந்து நமது தேவ எக்காளத்தை நாம் இணைய தளத்திலும் (Internet) devaekkalam.com வெளியிட்டு வருகின்றோம். எத்தனை பேர் அதைப் பார்த்து பயனடைந்தார்கள் என்பதை நீங்கள் அதில் காணலாம். இணைய தளம் ஆனதால் உலகம் முழுவதிலுமுள்ள தேவ பிள்ளைகள் அதை வாசிப்பார்கள். ஊழியத்திற்கு உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற தமிழ் கிறிஸ்தவ மக்கள் காணிக்கை அனுப்ப நிச்சயமான வாய்ப்பு இருக்கின்றது. அந்த நமது இணைய தளத்தில் “தொடர்புக்கு” என்ற தலைப்பின் கீழ் “அன்புகூர்ந்து இந்த ஊழியத்திற்கு காணிக்கைகளோ அல்லது பத்திரிக்கைக்கு சந்தாவோ எதுவும் அனுப்ப வேண்டாம்” என்ற வார்த்தைகள் தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். எந்த ஒரு தேவ ஊழியனும் இப்படி எழுத துணிய மாட்டார்கள் என்பதை தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.
அநேகரிடத்தில் ஊழியத்திற்காக அவர்கள் தரும் காணிக்கையை நான் வாங்குவதே இல்லை. யாராவது என்னை காண்பதற்காக இங்கு வந்தால் இங்கு வந்து காணிக்கை எதுவும் எனக்குத் தரக்கூடாது என்று முன்கூட்டியே அவர்களுக்கு நான் தகவல் தெரிவித்துவிடுகின்றேன். எனக்கு தேவ ஊழியத்திற்காக காணிக்கை கொடுக்க வந்தவர்கள் பலர் தங்கள் காணிக்கை பணத்துடன் திரும்பிச் சென்றிருக்கின்றார்கள். தவறான வழியில் பணம் சம்பாதிப்போருடைய காணிக்கையை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளுவதில்லை. ஒரு சமயம் மூக்குப்பொடி விற்பனையாளர் (பராபரன் மூக்குப் பொடி வியாபாரம்) என்ற பெயரிலிருந்து வந்த காணிக்கையை நான் வாங்க மறுத்துவிட்டேன். அப்படியே லஞ்சம் வாங்குவோருடைய பணத்தையும் நான் ஏற்றுக் கொள்ளுவதில்லை. எனது மூத்த மகன் சுந்தர்சிங் அவர்களுடைய பள்ளிப் படிப்புக்காக இங்கு கோத்தகிரியில் உதவி செய்து வந்த ஒரு அன்பான ஐயா அவர்கள் பின் நாட்களில் பாவ ஜீவியத்தில் விழுந்துவிட்டார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் அதை திட்டமாக என்னிடம் வந்து ஊர்ஜிதம் செய்தார்கள். அடுத்த தடவை அந்த ஐயா பணம் எனக்குக் கொடுத்த போது “ஐயா, இத்தனை நாட்களும் நீங்கள் மகனுக்கு செய்த அன்புக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் வாழ்வின் தவறான காரியம் அறிந்தேன். இனி உங்கள் உதவியை நான் விரும்பவில்லை” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டேன்.
தேவ எக்காளத்தின் வட மாநில சுவிசேஷ ஊழியங்களுக்கு பணம் தர விரும்புபவர்களுக்கு பணமாக அதை எனக்குத் தராமல் நான் விரும்பும் நபர்களுக்கு அவர்களது பெயரில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்பும்படியாகக் கேட்டிருக்கின்றேன். குறிப்பாக, இந்தி மொழி வேதாகமங்கள், லூக்கா சுவிசேஷங்கள் போன்றவற்றை அச்சிட்டுத் தரும் இந்திய வேதாகம சங்கம், அலகாபாத் என்ற பெயருக்கு டி.டி.எடுத்து அனுப்பும்படியாகவும், இந்தி மொழி சுவிசேஷ கைப்பிரதிகளை அச்சிட்டுத் தருகிறவர்களின் பெயர்களுக்கும், வாகனங்களை நமக்கு வாடகைக்குத் தரும் வாகன உரிமையாளர்களுடைய பெயருக்கும் டி.டி. எடுக்கவும் கேட்டிருக்கின்றேன். கூடுமானவரை பணங்களை எனது கைகளில் எடுக்காமல் அதிலிருந்து அப்படியே விலகியிருக்க நான்அதிகமாக வாஞ்சித்தேன். இந்த எனது செயல் தேவ மக்களின் உள்ளத்தில் என்னைக் குறித்த ஒரு ஆழமான நம்பிக்கையையும், தேவ அன்பையும் உருவாக்கிவிட்டது. இறுதியாக, தேவப்பிள்ளைகளாகிய உங்களுக்கு இந்தச் சமயம் ஒரு சம்பவத்தை நினைப்பூட்ட ஆசைப்படுகின்றேன். காலஞ்சென்ற எனது அருமை மனைவியின் தங்க நகைகளை எல்லாம் என்னோடு வடமாநில தேவ ஊழியங்களில் கலந்து கொண்ட மிகவும் ஏழையான தேவ ஊழியர் பாஸ்டர் ஜேம்ஸ் அவர்களின் மூத்த மகள் ரமாபாயின் திருமணத்திற்காக எனது பிள்ளைகள் இருவரின் அனுமதி கேட்டு அனைத்து நகைகளையும் அப்படியே அவர்களுக்கே எடுத்துக் கொடுத்துவிட்டேன். கர்த்தருக்கே மகிமை.
கர்த்தருடைய ஊழியங்களுக்குத் தேவையான பெரும் பணத் தேவைகளுக்கு உபவாசம் எடுத்து முழங்கால்களில் நின்று பெற்றுக்கொண்டேன். எந்த ஒரு தனி மனிதருக்கும் நான் எனது தேவைகளை கூற விரும்புவதே இல்லை. 10000 அநாதை குழந்தைகளை எந்த ஒரு மனித ஆதரவும் தேடாமல் கர்த்தர் ஒருவரையே நோக்கிப் பார்த்து பரத்திலிருந்து பெற்று வந்த தேவ மனிதர் ஜியார்ஜ் முல்லர் அவர்களைப் போல நானும் எனது ஊழியத் தேவைகளுக்கு வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவர் ஒருவரையே முழுமையாக சார்ந்து கொண்டேன். அந்த நித்திய கன்மலை கடைசிவரை என்னைக் கைவிடவே இல்லை. பண ஆசை என்ற பேச்சுக்கே என் வாழ்வில் முழுமையாக இடமில்லாமற் போயிற்று. அல்லேலூயா.
பெயர் புகழ்ச்சி
“எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ” (லூக்கா 6 : 26 ) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. ஒரு மெய்யான பரிசுத்த தேவ பிள்ளை மனுஷ புகழ்ச்சியை ஒருக்காலும் விரும்பவும் செய்யாது, அதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டாது. இரட்சகரின் பரிசுத்த இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்டு மெய்யான இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொண்ட அந்த தேவ பிள்ளை மனுஷருடைய புகழ் வார்த்தைகளில் மயங்கி அதில் ஆனந்தம் அடையாமல் தனது இரட்சிப்பின் தேவனுக்குள் மட்டுமே களிகூரும் (ஆபகூக் 3 : 18 ) அதில் மாத்திரமே மகிழ்ந்து களிகூர தேவனுடைய வார்த்தையும் அவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கின்றது. “இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவும் கடவர்கள்” (சங்கீதம் 149 : 2)
“எல்லா மனுஷ புகழ்ச்சியையும் பகைத்து அருவருத்து புறம்பே தள்ளிப்போடு. அந்த மனுஷ புகழ்ச்சியானது வெறும் மனுஷீக மதிகேடேயன்றிப் பிறிதொன்றுமில்லை. நீ நன்றாக நினைவில் வைத்துக்கொள், மனுஷ புகழ்ச்சியானது உன் ஆத்துமாவின் ஒரு பெரிய கண்ணி, அதுமட்டுமா, உன் உடனிருந்தே நயம்பண்ணிப் பின்னர் உன்னையே உனது அழிவுக்குக் காட்டிக்கொடுக்கும் ஒரு கொடிய நயவஞ்சகன் என்பதை நீ மறந்துவிடாதே” (Hate and despise all human glory; for it is nothing else but human foolishness. Remember, it is the biggest trap and the greatest betrayer) என்று “வில்லியம் லா” என்ற ஸ்காட்லாந்து தேச பரிசுத்தவான் கூறியிருக்கின்றார்.
பட்டணத்தில் கிறிஸ்தவ பெரு விழாக்கள் நடந்தால் கலந்து கொள்ளும் ஊழியர்களின் படங்கள் பேனர்களில் (Banners) வரையப்பட்டு பட்டணத்தார் யாவரும் எளிதில் கண்டுகொள்ளும்படியாக வானில் பட்டொளி வீசி ப் பறக்கின்றது. உங்கள் சகோதரனாகிய நான் அதை கண்ணாரக் கண்டிருக்கின்றேன். அந்த பட்டணத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் அவர்களின் படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அந்தப் பொறுப்பை ஊழியரை அழைக்கும் சபையினர் அல்ல கலந்து கொள்ளும் ஊழியரே தனது கட்டுப்பாட்டில் பொறுப்பு எடுத்து தனது படத்தை அழகாக சிவகாசியில் உள்ள சிறப்பான அச்சகம் ஒன்றில் அச்சுப்போட்டுக் கொடுத்து விடுகின்றார்.
இலங்கை தேசத்துக்கு தேவ ஊழியத்தின் பாதையில் சாதுசுந்தர்சிங் சென்றிருந்தபோது அங்குள்ள பட்டணம் ஒன்றின் சுவற்றில் “உலகப் புகழ்பெற்ற தேவ ஊழியர் சாதுசுந்தர்சிங் அவர்கள் பேசுகின்றார்” என்ற ஒரு சுவரொட்டியை அவர் கண்டு தனக்குள்ளாக பயத்தால் நடுநடுங்கியதாகவும், அவரது உடம்பிலிருந்து வியர்வை தானாக வடிந்ததாகவும் அவர் தனது புத்தகத்தில் எழுதுகின்றார். சுந்தருக்கும் நமக்குமுள்ள வித்தியாசத்தை கவனித்தீர்களா? உண்மைதான், அவரைக் கண்டவர்கள் இரட்சகர் இயேசுவை அவரில் கண்டார்கள். அவருடைய முகம் தேவ பிரசன்னத்தால் பிரகாசித்தது. தேவ மகிமையால் பிரகாசிக்கும் அவருடைய முகத்தைக் கண்டு புறமதஸ்தர் திரள் திரளாக ஆண்டவருடைய அடியாரானார்கள். ஆனால், விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் அச்சிட்டுக் கொடுக்கும் நம்மைக் காண்பவர்கள் வெறும் ஏமாற்றுக்கார மனிதனைக் கண்டு ஏமாந்து போகின்றார்கள்.
எப்பொழுது ஒரு தேவ ஊழியன் தனக்காக சிலுவையில் உயர்த்தப்பட்ட தன் இரட்சகர் இயேசுவை மாத்திரம் உலகோருக்கு உயர்த்திக்காட்டுவதற்குப் பதிலாக தன்னை உயர்த்திக் காண்பிப்பானோ அவன் நிமித்தமாக தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கு ஒருக்காலும் புகழ்ச்சி உண்டாகவே உண்டாகாது.
எந்த ஒரு தேவ ஊழியன் பெயர், புகழை விரும்புவானோ அவன் ஆண்டவருடைய ஊழியன் அல்லவே அல்லன். “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்” (பிலிப்பியர் 2 : 6) என்று வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். தேவ மைந்தனே தம்மை வெறுமையாக்கி, அடிமையாக்கி இருக்கும்போது அந்த அடிமையின் பிள்ளைகளாகிய நமக்குப் பெயர், புகழ், ஆரவாரம், ஆர்ப்பரிப்பு எல்லாம் வேண்டியதாக இருக்கின்றதா? அது நமக்கு அவசியம்தானா?
தேவ எக்காளம் பத்திரிக்கையை நீங்கள் நன்கு கவனித்தீர் களானால் ஒரு காரியத்தை நீங்கள் துரிதமாகக் கண்டு கொள்ளுவீர்கள். உங்கள் சகோதரனாகிய என்னுடைய படத்தை அதில் நீங்கள் காணவே முடியாது. நீண்ட 46 ஆண்டுகள் பத்திரிக்கை வெளியீட்டில் எனது புகைப்படத்தை சில இடங்களில் மட்டுமே நீங்கள் காணக்கூடும். ஆனால், பெயர் புகழ், பணத்தை வாஞ்சித்து கதறும் ஊழியர்களின் பத்திரிக்கைகளை வாங்கிப்பாருங்கள். வெளிவரும் ஒவ்வொரு பத்திரிக்கையின் தலையங்க செய்தியிலும் அவர்களின் படங்கள் யௌனவ தோற்றத்துடன் அழகாக பிரசுரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். அத்துடன் பத்திரிக்கையின் இதர பக்கங்களிலும் அவர்களின் படங்கள் நிறைவாக இடம் பெற்றிருக்கும். “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” (மத் 12 : 34) என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. அவர்களின் இருதயத்திலிருக்கும் பெயர் புகழ், பெருமை, பணத்தை விரும்பும் கட்டுக்கடங்கா கொந்தளிக்கும் ஆசை, ஆவல் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகின்றது.
இந்த எனது சுயசரிதையின் முகப்பில் கூட எனது பெரியதோர் புகைப்படத்தை நான் கட்டாயம் அச்சிடவேண்டும். அதுதான் திட்டமான ஒழுங்கு. ஆனால், அதைக்கூட நான் விரும்பாமல் இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொண்ட மோட்ச பிரயாணியின் படத்தையேதான் நான் வெளியிட்டிருக்கின்றேன். தலையங்க செய்தியில் காணப்படும் எனது சிறிய புகைப்படத்தைக் கூட நான் அச்சிட தயங்கியபோது ஒரு சில தேவ மக்களின் வலுமையான வற்புறுத்தலால் அதை நான் அச்சிட வேண்டியதானது.
கடந்த நாட்களில் கன்வென்ஷன் கூட்டங்களில் நான் பேச அழைக்கப்பட்டிருக்கின்றேன். என்னை சபை மக்களுக்கு அறிமுகப்படுத்தும்போது என்னைக் குறித்து எந்த ஒரு புகழ் வார்த்தையும் சொல்லக்கூடாது என்று என்னை அழைக்கும் சபையினரை திட்டமாகக் கேட்டுக்கொள்ளுவேன். ஆலயத்தில் பிரசங்கிக்க அழைக்கப்பட்டிருந்தால் நான் அமருவதற்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் தனி ஆசனத்தில் அமராமல் தரையில் சபை மக்களுடன் போய் அமர்ந்து பிரசங்கிக்கும் வேளை வரும்போது அங்கிருந்து எழுந்து செல்லுவேன். கன்வென்ஷன் கூட்டத்தின் மேடையில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பிரத்தியேக ஆசனத்தில் அமராமல் பாடல்கள் முடிந்து செய்தி வேளை வரும் வரை மேடையின் ஒரு ஓரத்தில் முழங்கால்களிலேயே நிற்பேன். கன்வென்ஷன் கூட்ட மூன்று நாட்களிலும் முழுமையான உபவாசத்தில் இருப்பேன். பகலில் தண்ணீர் கூட குடிக்கமாட்டேன். இரவில் மட்டும் ஒரு ஆகாரம் சாப்பிடுவேன். இந்த பரிசுத்த குணநலன்கள் எல்லாம் தேவ தயவால் என்னில் உருவாயின. பெருமை, பெயர், புகழ் போன்ற காரியங்களை எல்லாம் நான் என் வாழ்வில் அனுமதிக்கவே இல்லை. அதை என் முழு மனதார வெறுத்தேன். கர்த்தருடைய பெலத்தால் நான் மேற்கொண்ட எனது வலுவான உபவாச ஜெப வாழ்க்கை தேவன் அருவருக்கும் அந்தக் காரியங்களை எல்லாம் எனது வாழ்வின் எல்கைகளிலிருந்து அப்பால் விலகி ஓடப்பண்ணச் செய்தது. கர்த்தருக்கே மகிமை.