நேப்பாள தேசத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களின் நினைவுகள் (பாகம் 5)
சாம்ராங் கோலா கிராமம் நோக்கி
கர்த்தாவின் அளவற்ற சுத்தக் கிருபையால் நானும் எனது மகன் சுந்தர்சிங் அவர்களும் நேப்பாளத்திலுள்ள இமாலயா என்ற இடத்திலிருந்து காலை சுமார் 8 மணிக்கு ஜெபத்துடன் சாம்ராங் கிராமம் நோக்கிப் புறப்பட்டோம். உலகில் மானிடனாகப் பிறந்த யாவருக்கும் அளிக்காத அற்புத வாய்ப்புகளை பாவிகளாகிய எங்களைத் தகுதி உள்ளவர்கள் என்று எண்ணி எங்களுக்குத் தந்தருளிய அன்பின் பரஞ்ஜோதியாம் கர்த்தரை ஸ்தோத்திரித்துக் கொண்டே நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக எங்களுக்கு இரவில் இளைப்பாற இடமும், உண்ண உணவும் அளித்த இம் பகாதூர் குரூங் என்ற நேப்பாள மனிதனுக்கு நாங்கள் எங்கள் உள்ளத்தின் ஆழ்ந்த அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டு ஓரிரு நேப்பாள சுவிசேஷப் பங்குகளையும் “மனுஷனின் இருதயம்” என்ற நேப்பாளி சிறு புத்தகத்தையும் ஜெபத்துடன் அளித்தோம்.
சுமார் 6 மணி நேர கடினமான கால்நடைப் பயணத்திற்குப் பின்னர் நாங்கள் சாம்ராங் கோலா என்ற அழகிய கிராமம் வந்து சேர்ந்தோம். இங்கிருந்துதான் நாங்கள் எங்கள் பயணத்தை சில நாட்களுக்கு முன்னர் இமாலயா என்ற இடத்திற்கு தொடங்கியிருந்தோம். வருகிற வழியிலும் ஆண்டவர் எங்களுக்கு சில நல்ல ஊழிய வாய்ப்புகளைத் தந்தார். டோவன் என்ற ஒரு குக்கிராமத்தில் ஒரு வீட்டிலிருந்த குமார் என்ற நேப்பாள வாலிபனுக்கு நாங்கள் லூக்கா சுவிசேஷம் ஒன்றையும், “மனுஷனின் இருதயம்” என்ற சுவிசேஷப் பிரசுரத்தையும் அளித்தோம். நாங்கள் கொடுத்துக் கொண்டிருந்ததைக் கவனித்துக்கொண்டிருந்த அந்த வாலிபனின் மனைவி துரிதமாக சமையல் அறையிலிருந்து வந்து அவனுடைய கரத்திலிருந்த அவற்றைப் பிடுங்கி தன் மட்டாக அவள் ஆசை ஆவலோடு வாசிக்கத் தொடங்கிவிட்டாள். கர்த்தருக்கே துதி உண்டாகட்டும்.
அங்கிருந்து நாங்கள் சாம்ராங் கிராமத்திற்குள் வந்து சேரும்பொழுது எங்கள் உடம்பெல்லாம் வியர்வையால் தண்ணீராக ஓடிக்கொண்டிருந்தது. மிகவும் களைப்போடிருந்தோம். வெயிலின் கடுமையும், களைப்பும் காரணமாக எங்கள் தலை நீங்கலாகக் குளிர்ந்த நீரிலேயே நன்கு ஸ்நானம் பண்ணிக்கொண்டோம். அழுக்காக இருந்த எங்கள் வஸ்திரங்கள் சிலவற்றையும் தோய்த்து சுத்தம்பண்ணி எடுத்துக்கொண்டோம். அந்த நாளின் மீதியான பகற்காலத்தில் அந்தக் சாம்ராங் கிராமத்தில் இருந்துவிட்டு நன்கு ஓய்வு எடுத்துக்கொண்ட பின்னர் மறு நாள் காலை 7 மணிக்கு நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம்.
அந்த நாளின் தேவ ஆசீர்வாதத்திற்காகவும், கர்த்தருடைய ஆலோசனை, வழிநடத்துதல், பாதுகாவலுக்காகவும், அநேக ஊழிய வாய்ப்புகளைத் தரும்படியாகவும் ஜெபித்த பின்னர் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் அன்பான மென் பகாதூர் என்ற நேப்பாள மனிதனுக்கு “பண்டிதை ராமாபாய்” “சந்திர லீலாள்” “மனுஷனின் இருதயம்” போன்ற நேப்பாள மொழிப் புத்தகங்களையும் ஓரிரு சுவிசேஷப்பங்குகளையும் ஜெபித்துக்கொடுத்துவிட்டு எங்கள் பிரயாணத்தை ஆரம்பித்தோம். வழிப்பயணத்தில் உண்பதற்காக கொஞ்சம் சப்பாத்திகளையும் நாங்கள் மேற்கண்ட மனிதனின் வீட்டில் விலை கொடுத்து வாங்கிக் கொண்டோம்.
மென் பகாதூர் என்ற அந்த மனிதனுக்கும் அவனுடைய குடும்பத்தினருக்கும் நன்றி கூறி பிரியாவிடை பெற்றுக்கொண்டு நானும், மகனும் எங்கள் மூட்டை முடிச்சுகளுடன் செங்குத்தாக மலை ஏறி மலையின் உச்சியில் வந்து நின்றோம். சாம்ராங் கோலா கிராமத்தின் வரிசை வரிசையான வீடுகள் பார்ப்பதற்கு பட்டாளத்து சிப்பாய்கள் வரிசை வரிசையாக நேர்த்தியாக அணிவகுத்து நிற்பது போல இருந்தது. ஊருக்கு அப்பால் சாம்ராங்கோலா பனி ஆற்றை ஒட்டி அந்த முழு கிராமத்திற்கும் மாவு அரைத்துக்கொடுக்கும் பெருங்கல் உருளைகள் உள்ளதான குடில்கள் எங்களுக்கு மேட்டிலிருந்து பார்ப்பதற்கு நன்றாகத் தெரிந்தன. நாங்கள் தங்கி தாபரித்த மைன்பகாதூரின் வீடும் அங்கே காணப்படுகின்றது. அவனுடைய வீட்டின் மேல் பரப்பப்பட்டிருந்த தட்டையான கருங்கல் பாளங்கள் அவனுடைய வீட்டை எங்களுக்கு தனிமைப்படுத்திக் காண்பிக்கின்றது. அதிகாலையில் பால் கறக்கப்பட்ட பெரிய நேப்பாள எருமை மாடுகள் ஆடி அசைந்து ஊருக்கு அப்பால் நதியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையும் எங்கள் கண்கள் காண்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக அன்னபூரணா வெண்பனி மலைச் சிகரம் கண்கொள்ளாக் காட்சியாக எழுந்து நிற்கின்றது. எங்கள் கண்களால் தேவனின் அந்த படைப்பின் மாட்சியை கடைசி முறையாக நன்கு பார்த்துவிட்டு அதைப்பார்க்க எங்களுக்கு கிருபை அளித்த அன்பின் தேவனுக்கு நன்றி செலுத்திவிட்டு எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அந்த அழகிய சாம்ராங் கோலா ஊரின் படத்தை நீங்களும் காணலாம்.
ஜூனு கிராமத்தை வந்தடைந்தோம்
எங்கள் பயணப்பாதையானது போகப் போக உயர்ந்து கொண்டே சென்றது. இதமான காலை வேளையின் கால நிலை எங்கள் பிரயாணத்திற்கு மிகவும் அனுகூலமாக இருந்தது. இடையிடையே வீசிய காற்று எங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி எல்லாம் கொஞ்ச நேரத்திற்குள்ளாக விடைபெற்றுச் சென்றுவிட்டது. இப்பொழுது எங்கள் பாதை கெடு பாதாளத்திற்குள் செல்லுவதாக இருந்தது. ஒவ்வொரு அடியையும் மிகவும் பாதுகாப்புடன் நாங்கள் எடுத்து வைக்க வேண்டியதாயிருந்தது. சில இடங்களில் நாங்கள் உட்கார்ந்து மெதுவாக நகரக்கூடிய நிலைகூட ஏற்பட்டது. ஆனால், அங்கு வாழும் அந்த இடத்து மக்களுக்கு அந்த வழிகளெல்லாம் அத்தனை கஷ்டமானதாக இருக்கவில்லை. மான்களைப்போலக் குதித்துக் கொண்டு விரைந்து கீழே ஓடிச் செல்லுகின்றார்கள். அப்படியே செங்குத்து மலை ஏற்றங்களையும் களைப்பின்றி, மூச்சுத் திணறலில்லாமல் ஒரே சீராக ஏறிக்கொண்டு போகின்றார்கள். மீனைத் தண்ணீருக்கென்று படைத்த தேவன் அந்த மக்களை அந்தக் கரடு முரடான பனி மலைகளுக்கென்றே படைத்திருக்கின்றார் என்று நாம் உறுதியாக நம்பலாம். சமவெளிகளில் ஜீவித்துப் பழக்கப்பட்ட நாம் அந்த இடத்து மக்களைப்போல நானும் விரைந்து செல்லுவேன் என்று நடக்க முயற்சித்தால் நடப்பது வேறாக இருக்கும். நாங்கள் அந்த மலைகளில் சந்தித்த பல மேல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் கால் கரங்களை அவ்விதமாக நடந்ததால் உடைத்துப் பெரிய கட்டுகள் போட்டுக்கொண்டு பரிதாபகரமாகவும், துயரத்தோடும் செல்லுவதையும், அவர்களில் பலத்த அடிபட்டவர்கள் கூடைகளில் வைக்கப்பட்டுத் தூக்கிச் சுமந்து செல்லப்படுவதையும் நாங்கள் கண்டிருக்கின்றோம். அந்த துயரக்காட்சியைக் காண்கின்ற ஒவ்வொரு சமயமும் நான் என் முகத்தை வானத்திற்கு நேராக ஏறெடுத்து பாவிகளாகிய எங்களைக் கண்மணி போலக் காத்து வருகிற அவருக்குத் தவறாமல் ஸ்தோத்திரம் செலுத்தியிருக்கின்றேன்.
சாம்ராங் கோலாவிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் சுமார் 3 மணி நேர மிக கடினமான பயணத்திற்குப் பின்னர் வேர்த்து, வியர்த்து ஜூனு என்ற அழகியதோர் நேப்பாள கிராமத்தை வந்தடைந்தோம். சுற்றிலும் பெரிய நிழல் தரும் மரங்கள் சூழ்ந்த குளுமையான கிராமமாக அந்த ஊர் அமைந்திருந்தது. ஜூனு என்ற அந்த அழகிய கிராமத்தை நீங்கள் படத்தில் காணலாம்.
ஜூனு கிராமத்தில் நடைபெற்ற தேவ ஊழியம்
மிகவும் பசியோடிருந்த நாங்கள் எங்களுடன் கொண்டு வந்திருந்த சப்பாத்திகளில் சிலவற்றை எடுத்துப் புசித்தோம். நாங்கள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு நின்ற மூன்று ஏழை கிராமவாசிகளுக்கும் நாங்கள் எங்கள் சொற்பமான சப்பாத்திகளைக் கொடுக்க இயலாதவர்களாக இருந்தபோதினும் 3 கோப்பை தேயிலைப்பானம் வாங்கி அவர்களுக்குக் கொடுத்து, அவர்களின் உள்ளங்களை மகிழ்ச்சிப்படுத்தினோம்.
எங்கள் வசமிருந்த தேவனுடைய பிரசுரங்களையும் நாங்கள் அந்த மக்களுக்கு அளித்தோம். அந்த மூவரில் சம் பகாதூர் என்ற வாலிபன் நாங்கள் கொடுத்தவற்றை மிகவும் ஆர்வத்துடன் எங்களுக்கு முன்பாக வாசிக்கிறவனாகக் காணப்பட்டான். அவன் ஆசை ஆவலாக படிப்பதைக் கண்ணுற்ற அந்த ஊரிலுள்ள நேப்பாள பெண் ஒருவர் எங்களிடம் வலிய வந்து தனக்கும் படிப்பதற்கு புத்தகங்கள் தரும்படி வேண்டி நின்றாள். எங்கள் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ஜெபத்தோடு அந்த மகளுக்கும் சில அருமையான பிரசுரங்களை அளித்தோம். இப்படியாக அந்தச் சின்னக் கிராமத்தில் அந்த காலை நேரம் அன்பின் தேவன் நல்லதோர் ஊழிய வாய்ப்பை எங்களுக்கு உருவாக்கித் தந்தார். அவருக்கே துதி உண்டாகட்டும். அந்த ஜூனு கிராமத்தில் தேவனுடைய வார்த்தைகளைப் பெற்று வாசித்தவர்களில் மற்றொரு வாலிபன் பிசோ குரூங் என்பவனாவான்.
“இமாலயா புதுப்பாலம்” கிராமத்தில் நடைபெற்ற தேவ ஊழியம்
நாங்கள் அழகிய ஜூனு கிராமத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தோம். எங்கும் மரம், செடி, கொடிகள் தாவரங்களாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அடர்த்தியும், பசுமையுமான காடுகள் எங்கும் வியாபித்துக் கிடந்தன. நாங்கள் அந்த மலைப்பாதை வழியாக நடந்து, நடந்து இறுதியாக “இமாலயா புதுப்பாலம்” என்ற சின்னஞ்சிறு கானக கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். மோடி கோலா நதியும், கும்ராங் கோலா நதியும் இங்கு ஒன்றாக சங்கமமாகின்றது. இரு நதிகளும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய நதியாக மோடி கோலா என்ற பெயரில் இங்கிருந்து செல்லுகின்றது. அங்கு மோடி கோலாவுக்கு மேலாக ஒரு புதிய பாலத்தைக் கட்டியிருக்கின்றார்கள். அந்தப் புதுப்பாலத்தை ஊரின் பெயருடன் சேர்த்து வைத்திருக்கின்றார்கள்.
அந்த “இமாலயா புதுப்பாலம்” கிராமம் மிகவும் சின்ன ஊராகும். மோடிகோலா நதிக்கரையில் கொஞ்சம் வீடுகள் வரிசையாக உள்ளன. அவ்வளவுதான். ஊரின் முகப்பில் ஒரு டீ கடை உண்டு. ஆனால் இயற்கையின் அழகான பின்னணியத்தில் அமைந்துள்ள அந்த கிராமத்திற்குப் பெரிய நேப்பாள கிராமங்கள்கூட ஈடு கொடுக்க முடியாது. பல்லாண்டு கால வயதுடைய முதிர்ந்த மரங்கள் தங்கள் மரக் கிளைகளை மோடி கோலா நதிக்கு மேலாக விசாலமாகப் பரப்பி கம்பீரமாக நின்று கொண்டிருந்தன. அதின் கிளைகளிலும், சுற்றியுள்ள மரங்களின் கிளைகளிலும் அமர்ந்து நேப்பாள தேசத்தின் பற்பலவிதமான வண்ண வண்ணப் பறவைகள் பாடிக் களித்துக் கொண்டிருந்தன. பறவைகளின் சாம்ராஜ்யத்திற்கே வந்து விட்டோமோ என்று எண்ணும் அளவிற்கு அத்தனை பறவைகள் அந்த இடத்தில் ஒன்றுகூடித் தங்கள் சிருஷ்டிகரைப் பாடித் துதித்துக் கொண்டிருந்தன. பறவைகளை நேசிக்கும் பறவைப் பிரியனான நான் அவற்றின் குரல்களால் சற்று நேரம் அப்படியே என்னை மறந்து ஆண்டவரின் படைப்பின் மகத்துவத்தையும் அவருடைய ஞானத்தையும் அந்த இடத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
அந்த இடத்தில் டீ கடை வைத்திருந்த சந்திரசிங் என்ற பழுத்த விருத்தாப்பியனுக்கு ஆண்டவர் இயேசுவின் உவமைகள் மற்றும் அவர் செய்த அற்புதங்கள் சிலவற்றைக் குறித்து எழுதப்பட்டிருந்த சிறிய நேப்பாள புத்தகம் ஒன்றை அவருக்கு ஜெபத்துடன் நாங்கள் வழங்கினோம். மிகுந்த சந்தோசத்துடன் அவர் அதை வாங்கி வாசிக்கத் தொடங்கினார். அங்கிருந்த மற்ற வீடுகளை நோக்கி நாங்கள் சென்றோம். அங்கிருந்த சில வாலிபர் எங்களைப் பார்த்து தங்களுக்குள் பரியாசம் பேசுவதைக்கண்டு அவர்களுக்கு முன்பாக முத்துக்களைப் போடாதபடி நதிக்கு மேலாகக் கட்டப்பட்டிருந்த பாலத்தைக் கடந்து எங்கள் வழியே சென்றோம்.
லாண்ட்ரூக் கிராமம் நோக்கி
மோடி கோலா நதிக்கரையின் ஓரமாக இருந்த நெல், ராகி, கோதுமை போன்ற தானியப் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த வயல்களின் வழியாக எங்கள் பாதை சென்றது. எங்களுக்கு இடது கைப்பக்கத்தில் பிரமாண்டமான கரிய மலைத் தொடர் ஒன்று எழுந்து நின்றது. நாங்கள் செல்லச் செல்ல அதுவும் எங்களுடனே கூட பயணப்பட்டு வருவதைப்போல எங்களுடன் வந்து கொண்டே இருந்தது. சில இடங்களில் மழைத் தண்ணீர் நீர் வீழ்ச்சிகள் போல அந்த மலைத் தொடரிலிருந்து கீழே விழுந்து வலது கைப்பக்கம் ஓடிக்கொண்டிருந்த மோடி கோலா நதியுடன் சேர்ந்து கொண்டிருந்தது. சுமார் 6 மணி நேர கடினமான கால் நடைப் பயணத்திற்குப்பின்னர் நாங்கள் 5575 அடிகள் உயரத்தில் அமைந்துள்ள லாண்ட்ரூக் கிராமத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தோம். அந்தக் கிராமத்து விவசாயிகள் கோதுமை, ராகி போன்ற தானியப் பயிர்களை அறுவடை செய்து அவற்றைக் கட்டுகளாகக் கட்டித் தங்கள் தோளின்மேல் சுமந்து கொண்டு தங்களுடைய வீடுகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் மத்தியானத்தின் காட்டமான வெயிலில் வியர்வை தாராளமாக வழிந்தோட மலை முகட்டில் அமைந்திருந்த லாண்ட்ரூக் கிராமத்தை நண்பகல் ஒரு மணிக்கு வந்தடைந்தோம்.
லாண்ட்ரூக் கிராமத்தை படத்தில் நீங்கள் காணலாம். ஒரு மேல் மாடியைக்கொண்ட ஒரு வீட்டில் அன்று நாங்கள் இராத் தங்கினோம். மாலைப்பொழுது நெருங்க, நெருங்க அவ்விடத்தின் குளிர் எங்களைத் தாக்கத் தொடங்கினது. மகன் சுந்தர்சிங் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கார மனிதர் தேஜ்மான் குரூங் என்பவரைக் கெஞ்சி அவர் வீட்டிலிருந்து ஒரு ரசாயைத் தனக்குப் போர்த்திக்கொள்ள வாங்கியிருந்தான். அதை நான் பயன்படுத்தும்படியாக எனக்குத் தந்தான். ஆனால், அதின் துர் வாசனை எனக்குப் பிடிக்காததால் அதை அவனே இறுதியில் பயன்படுத்தினான். மகன் அதைக் கொண்டு தன்னை நன்றாக மூடிக்கொண்டு மிகவும் நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்தான். மெய்தான், கர்த்தர் தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார். ஆனால், அவ்விடத்தில் அப்பொழுதிருந்த கொடுங்குளிர் காரணமாக நான் இரவில் நன்கு இளைப்பாற இயலவில்லை.
மறக்க முடியாத மாலை நேரம்
குளிரின் கடுமை காரணமாக நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கார மனிதர் எங்கள் இருவருக்கும், எங்களுடன் அந்த வீட்டில் அந்த நாளில் தங்கியிருந்த வேறு சில மேல் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் சாயங்காலத்திலேயே இரவு சாப்பாட்டைத் தந்துவிட்டார். சாப்பாடு என்றதும் சுவையான ராஜபோஜனம் எங்களுக்கு கிடைத்தது என்று நீங்கள் எண்ணிவிட வேண்டாம். அரிசி சோறும், வேக வைத்த பருப்புடன் கூடிய தண்ணீர் மாத்திரமேதான். நிறம் கிடைப்பதற்காக மஞ்சள் பொடி மறவாமல் சேர்க்கப்பட்டிருந்தது. பகற் காலத்தில் கால் கடுக்க நடந்த பிரயாணக் களைப்பால் பசியோடிருந்த எங்களுக்கு அந்த ஆகாரமானது சுவையான மன்னாவாக இருந்தது. கர்த்தருக்குத் துதி செலுத்தி நாங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஆகாரம் சாப்பிட்டுக்கொண்டிருந்த வேளையில் ஒரு ஏழை நேப்பாள சிறுமி கந்தை கட்டிய கோலத்தில் சற்று தொலைவிலிருந்து எங்களை விழிகளை மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன்.
மிகவும் சிறியவர்களாகிய இவர்களுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்
பசியால் அவள் துவண்டு நின்று கொண்டிருந்தாள். நான் எங்களுக்கு உணவளித்த வீட்டுக்கார மனிதரிடம் ரூபாய் 12/- கொடுத்து ஒரு தட்டு ஆகாரத்தை வாங்கி அந்த அன்புக் குழந்தையை எங்களருகில் அழைத்து உட்கார வைத்து ஆகாரம் உண்ணும்படியாகச் செய்தோம். அந்த அன்பு குழந்தை சாப்பிட்டு ஓரிரு நாட்கள் ஆகியிருந்தாலும் ஆச்சரியம் கொள்ளுவதற்கில்லை. அத்தனை கொடும் பசி அவளுக்கு. எங்களுடனேயே வெகு விரைவாக அந்தச் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டுக் கடைசி பிடி சோற்றை உண்பதற்காக கையில் எடுக்கும் நேரத்தில் அவளுடைய சிறிய அக்காள் கடைசி தம்பியைத் தன் இடுப்பில் சுமந்து கொண்டு அங்கு வந்து சேர்ந்தாள். சாப்பிட்டு அப்பொழுதுதான் முடித்திருந்த அந்த மகள் தான் உண்பதற்காக எடுத்த அந்தக் கடைசி பிடிச்சோற்றை கடும் பசியோடிருந்த தன் தம்பியின் வாயில் ஊட்டிவிட்டாள். இப்பொழுது அவள் தான் சாப்பிட்ட தட்டைத் தண்ணீரில் கழுவத்தொடங்கினாள். அதைக் கண்ணுற்ற அந்தச் சின்னக் குழந்தை துயரத்தால் துடி துடித்துக் கதறினான். “எனக்கு ஒரே ஒரு பிடி சோறு மட்டும்தானா? வேறு எனக்கு உணவில்லையா? நான் பசியால் வாடுகிறேனே” என்பது போல அவனுடைய கதறலின் அழுகை இருந்தது. அதைக் கண்ணுற்ற நாங்கள் மனதுருகி திரும்பவுமாக ரூபாய் 12/- கொடுத்து மற்றொரு தட்டு சாதம் வாங்கி அந்தச் சின்னஞ்சிறு குழந்தைக்கும், அவனைத் தூக்கிக் கொண்டு வந்த அவனுடைய அக்காளுக்கும் கொடுத்தோம். அந்த சோகமான பசியின் காட்சி என்றும் எங்கள் நினைவில் இருக்கும். நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கார மனிதரிடம் அடுத்த நாளுக்கும் அந்த ஏழைப் பிள்ளைகளுக்கு ஆகாரம் கொடுத்துவிடும்படியாகப் பணம் கொடுத்துவிட்டு வந்தோம்.
அன்பான தேவப்பிள்ளையே, நேப்பாளம் மிகவும் ஏழை நாடு. கிராமப்புற அழகான ஏழை இளம் பெண்கள் செய்வதற்கு வேலையில்லாமல், பிழைக்க வழியில்லாமல், தங்களுடைய ஒரு வேளை உணவுக்காகத் தங்கள் சரீரங்களை பட்டணவாசிகளுக்கு விற்பனை செய்ய அங்குள்ள விடுதி ஒன்றுக்கு வந்துள்ள ஓரிரு பெண் மக்களை நேப்பாள பட்டணங்களில் ஒன்றான தான்சேனில் ஒரு படித்த மனிதர் எனக்குச் சுட்டிக் காண்பித்தார். அந்தக் காட்சியை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. துடி துடித்துப் போனேன். ஓ தேவ ஜனமே, நாம் எத்தனையான பாக்கியசாலிகள்! நாம் நம் அன்பின் ஆண்டவருக்கு எத்தனை நன்றி நிறைந்த இருதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்!
வாசிக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளை இராக்காலத்தில் கேட்டுக்கொண்டிருந்த அமைதியான காதுகள்
நானும், மகனும் உணவருந்திவிட்டு அந்த நாள் முழுவதும் கண்ணின்மணி போலக் காத்த கர்த்தாவுக்கு துதி ஸ்தோத்திரம் செலுத்திவிட்டுப் படுத்துக்கொண்டோம். அந்த அறைக்கு மின்சார விளக்கோ, வேறு எந்த வெளிச்சமோ கிடையாது. வீட்டுக்காரன் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய மெழுகுவர்த்தியைக் கொடுத்துவிட்டுத் தன் மனைவி பிள்ளைகளுடன் கீழ் வீட்டில் போய்ப்படுத்துக் கொண்டான்.
குதிரை லாயத்தில் சிறிய மறைப்புகளுடன் குதிரைகள் தங்க கட்டப்பட்டிருக்கும் தடுப்பு அறைகளைப் போன்ற மூங்கில் அறைகளில் குதிரைகளைப்போன்று அந்தச் சின்னஞ்சிறு வீட்டின் சிறிய மேல் மாடியில் நாங்கள் படுத்திருந்தோம். எங்களுடன் சில மேல் நாட்டு சுற்றுலாப் பயணிகளும் படுத்திருந்தனர். அதில் இஸ்ரவேல் நாட்டிலிருந்து வந்த ஒரு டாக்டரும் ஒரு இஸ்ரவேல் நாட்டுப் பெண்ணும் இருந்தாள். அவள் ஒரு நிமிஷ நேரம்கூட இடைவெளி இல்லாமல் சிகரெட்டுகளை ஊதித் தள்ளிக்கொண்டே இருந்தாள். கருணை, இரக்கம், அன்பு, மனிதத் தன்மை எல்லாம் அந்த இஸ்ரவேலிய தம்பதியினருக்கு என்னவென்றே தெரியாது என்பதை நான் கண்டறிந்தேன்.
அப்பொழுது இரவு 8 மணி கூட ஆகி இருந்திருக்காது. ஆனால் நாங்கள் யாவரும் ஆங்காங்கு மூங்கில் தட்டி மறைப்புக்குள் படுத்துக்கொண்டோம். யார் யார் எங்ககெங்கே படுத்திருக்கின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் படுத்திருந்த அந்த மேல் மாடியில் மேற்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இரு வாலிபர்களும் படுத்திருக்கின்றார்கள். அது அப்பொழுது எங்களுக்குத் தெரியவில்லை. வெளியே கடுங்குளிர் இருந்தது.
எனக்குக் கொடுக்கப்பட்ட மெழுகுவர்த்தியை நான் எரிய வைத்துக் “கல்வாரிப் பாதை” என்ற அருமையான புத்தகத்தை எழுதின ராய் ஹெசியன் என்ற தேவ பக்தன் எழுதின “இயேசுவைக் காண விரும்புகின்றோம்” (We would see Jesus) என்ற மற்றொரு அருமையான ஆங்கில புத்தகத்தை சற்று சப்தமாக நான் வாசித்துக்கொண்டிருந்தேன். நான் சப்தமாக வாசிப்பதைக் கண்ட மகன் சுந்தர்சிங் என்னை மிகவும் அமைதியாக வாசிக்கும்படியாகவும், சுற்றிலும் படுத்திருக்கிற மற்ற மக்களுக்கு எந்தவிதத்திலும் நாம் ஒரு சிறிய தொந்தரவு கூட கொடுக்காதிருக்கும்படியாகவும் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், நான் மகன் வார்த்தைகளுக்கு இணங்கவில்லை. நான் மகனிடம் “நம்மைச்சுற்றிலும் படுத்திருக்கிற மக்கள் தேவனற்ற நாஸ்தீகர்களும், இருதயமற்ற கல் நெஞ்சத்தவர்களுமாயிருக்கிறார்கள். அவர்களை எந்தவிதத்திலும் நம்மால் கர்த்தரண்டை திருப்ப இயலாது. நான் வாசிக்கும் இந்த வார்த்தைகளையாவது அவர்கள் தங்கள் காதுகளால் கேட்டுக்கொண்டே அமைதியாகப்படுத்திருக்கட்டும். ஒருக்கால் தேவன் இந்த வார்த்தைகளின் மூலமாக அவர்களுடன் பேசுவார்” என்று கூறிக்கொண்டே தொடர்ந்து நான் அந்த ஆங்கிலப் புத்தகத்தை சத்தமாகவும், தெளிவாகவும் வாசித்துக்கொண்டிருந்தேன்.
நான் வாசித்த அந்தப் புத்தகத்தின் வார்த்தைகளை நாங்கள் படுத்திருந்த மாடியில் எங்கோ ஒரு மூலையில் படுத்திருந்த இரண்டு மேற்கு ஜெர்மானியர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டே படுத்திருக்கின்றனர். அவர்கள் இருவரும் கிறிஸ்தவ வாலிபர்கள். அதைப்பற்றிய விபரம் இந்தச் செய்தியின் கடைசிப்பகுதியில் நான் எழுதியிருக்கின்றேன். தவறாது வாசித்துவிடுங்கள்.
லாண்ட்ரூக் கிராமத்தில் நடைபெற்ற சிறிய தேவ ஊழியம்
லாண்ட்ரூக் கிராமத்தின் அந்த வீட்டின் மேல் மாடியில் நான் நன்றாகத் தூங்கி இளைப்பாற இயலவில்லை. எனினும், அந்த தூக்கமற்ற இராக்காலத்தின் நேரத்தை ஜெபமணி நேரங்களாக்கிக் கொண்டு என்னை என் தாயின் வயிற்றிலேயே தமக்கென்று வேறு பிரித்தவரும், என்னை வெகு அன்பாக நேசிக்கிறவருமான என் பரிசுத்த தேவனோடு என் இருதயத்தில் சம்பாஷித்துக்கொண்டு படுத்திருந்தேன். நள்ளிரவுக்குப் பின்னால் ஓரிரு மணி நேர தூக்கம் மாத்திரம் எனக்குக் கிடைத்தது.
லாண்ட்ரூக் கிராமத்தில் தேஜ்மான் குரூங் என்ற மனிதனுக்கு ஆண்டவருடைய வார்த்தைகள் அடங்கிய சுவிசேஷ பங்குகளை அளித்தோம். அவன் எங்களிடம் வாங்கிப்படிப்பதைக் கண்ட மற்றொரு நேப்பாள வாலிபன் தனக்கும் தேவனுடைய புத்தகங்களைத் தரும்படியாக அன்புடன் வேண்டி நின்றான். அந்த வாலிபனுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் சுவிசேஷப் பிரதிகளை ஜெபத்துடன் கொடுத்தோம்.
முந்தைய நாள் சாயங்காலம் அந்த ஏழைக் குழந்தைகளுக்கு நாங்கள் உணவு வாங்கிக் கொடுத்ததைக் கண்டு மனங்கசிந்த நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கார மனிதன் அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்களைக் கூப்பிட்டு நாங்கள் கொடுத்த ஆண்டவருடைய பிரசுரங்களைத் தாராளமாக வாங்கிப்படிக்கும் படியாகக் கூறினான். “அந்த மனிதனின் உள்ளம் அன்பு நிறைந்த உள்ளமாகும். எனவே, அவர் கொடுக்கும் புத்தகங்களிலும் நமக்கு நன்மை கட்டாயம் இருக்கும்” என்று அவன் அந்த மக்களிடம் கூறினான். அதின் காரணமாக அன்பின் ஆண்டவர் அவ்விடத்தில் ஒரு சிறிய ஊழியத்தை எங்களுக்குத் தந்து எங்கள் உள்ளங்களை மகிழ்ச்சிப்படுத்தினார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
தாம்பூஸ் கிராமம் நோக்கி வந்தோம்
லாண்ட்ரூக் கிராமத்தை காலை 7 மணிக்கு விட்டு தாம்பூஸ் என்ற கிராமம் நோக்கி நாங்கள் எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். பூமியின் நிலப்பரப்பு முழுவதையும் சாம்பல் நிறமான எரி பனி மூடியிருந்தது. அந்த எரி பனி எங்கள் கால்கள் கைகள் எல்லாவற்றையும் அக்கினியாக காந்த வைத்தது. கால்கள், கைகள் யாவற்றிற்கும் தகுந்த குளிர் மேல் உறைகளை நாங்கள் போட்டுக்கொண்ட போதினும் உறை பனியின் கடுங்குளிர் அந்தக்காலை வேளை எங்களை நடுநடுங்கப் பண்ணினது. எங்கள் பற்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. கணிசமான தூரம் நாங்கள் நடந்த பின்பு எங்கள் உடம்பு நன்றாக சூடாகிக் கொண்டதும் எங்களை வாட்டிக்கொண்டிருந்த குளிர் எங்களைவிட்டு அகன்றது. தாம்பூஸ் கிராமம் செல்லுகின்ற பாதையிலும் அன்பின் தேவன் எங்களுக்கு நல்ல ஊழியங்களைத் தந்தார். போகப் போக நாங்கள் ஜெபத்துடன் சுவிசேஷப் பிரதிகளை விநியோகித்துக் கொண்டே சென்றோம். தொடர்ச்சியான ஐந்து மணி நேர பிரயாணத்திற்குப் பின்னர் நாங்கள் 5700 அடி உயரத்தில் அமைந்துள்ள அழகான தாம்பூஸ் கிராமத்தை வந்தடைந்தோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தின் பாதையில் தனிமையில் இந்த கிராமத்திற்கு வந்து இராத்தங்கி சென்றிருக்கின்றேன். நான் முன்பு இராத்தங்கிய அதே வீட்டிற்கு வந்து அந்த வீட்டிலிருந்த அன்பான பெண் மக்களிடம் மத்தியான உணவு கேட்டோம். 5 மணி நேர கடின பயணம் நாங்கள் செய்திருந்தபடியால் பசி எங்கள் வயிற்றை கிள்ளுவதாக இருந்தது. கொஞ்ச நேரம் எங்களைத் தாமதிக்கும் படியாகக் கூறி எங்கள் இருவருக்கென்றே ஆகாரம் தயாரித்துக் கொடுத்தார்கள். சாப்பாட்டிற்கான பணத்தை அவர்கள் எங்களிடமிருந்து பெற்று கொண்ட போதினும் ஆகாரம் நல்ல அருமையான விதத்தில் இருந்தது.
எங்கள் வயிற்றுப் பசியை ஆற்றிய அந்த அன்புள்ள மக்களுக்கு தேவனுடைய பரிசுத்த பிரசுரங்களை மனதுக்குள் ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்த பின்னர் நாங்கள் கொடுத்தோம். மிகவும் சந்தோசப்பட்டு அவற்றைப்பெற்று உடனே வாசிக்கத் தொடங்கினார்கள். அந்தப் பெண் மக்களுக்கு சுவிசேஷப் பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு நாங்கள் வெளியே வந்து தற்செயலாகப் பார்த்தபோது அவர்களுடைய வீட்டு மேல் மாடியில்தான் போலீஸ் காவல் நிலையம் இருப்பதையும், அங்கு நேப்பாள போலீசார் பணியில் இருப்பதையும் நாங்கள் கவனித்தோம். அந்தப் போலீசார் எங்களைக் கவனித்துக் கொள்ளவில்லை. தாம்பூஸ் கிராமத்தை நீங்கள் செய்தியில் காணலாம்.
குரங்குகளைப் போலக் கூச்சலிடும் விந்தைப் பறவைகள்
நாங்கள் தாம்பூஸ் கிராமத்தைக் கடந்து கீழே இறக்கத்தில் வந்து கொஞ்ச தூர நடை பயணத்திற்குப் பின்னர் ஒரு சிறிய நேப்பாளக் கிராமத்திற்குள் வந்து சேர்ந்தோம். ஊரிலுள்ள பெண்கள் கிராமத்தின் பொது தண்ணீர் குழாயில் அப்பொழுது தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அதற்குச் சமீபமாக ஒரு மரத்தில் குரங்கு கூட்டம் ஒன்று தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு கூக்குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைப் போன்று திட்டமான குரல் ஒலி கேட்டது. குரங்குகள் எப்படி இங்கே வந்தன? இவ்விதமான அடிவார நேப்பாளக் கிராமங்களில் நாம் குரங்குகளைக் கண்டதே இல்லையே என்ற சந்தேகத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பெண் ஒருத்தியிடம் அதின் விபரம் கேட்டேன். அவள் என்னுடைய கேள்வியை நன்கு புரிந்து கொண்டு ஒரே வார்த்தையில் “பந்தர் நஹி, சிடியான்” (குரங்கு அல்ல பறவைகள்) என்று தெளிவாகப் பதில் கூறினாள். மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். அவள் சொன்னது போல அவைகள் பறவைகள்தான் என்பதை சற்று தொலைவிலிருந்து நன்கு அடையாளம் கண்டு கொண்டேன். விலங்கினத்தின் குரல் ஒலிப்பெட்டியை பறவைகளுக்கும் பொருத்தி தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணின கர்த்தரைத் துதித்துக்கொண்டே வழிநடந்து சென்றோம். “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்” (யோபு 42 : 2 ) என்ற யோபு பக்தனின் வார்த்தைகள்தான் அப்பொழுது என் நினைவுக்கு வந்தது.
தாம்பூஸ் கிராமத்திலிருந்து எங்கள் பாதை ஒரே செங்குத்து இறங்கு முகமாக கீழே சென்றது. அந்த வழிப்பாதையிலும் நாங்கள் சந்தித்த மக்களிடம் கர்த்தருடைய பிரதிகளைக் கொடுத்துக் கொண்டே சென்றோம். நாங்கள் மலையிலிருந்து சமதரைக்கு வந்து சேரும்போது, அதாவது நாங்கள் மலை ஏற்றத்தை ஆரம்பித்த பேதி கோலா என்ற சின்ன நேப்பாள கிராமம் இன்னும் சற்று தொலைவில் இருக்கும்போதே மகன் சுந்தர் சிங் “நான் விரைந்து கால் நடையாகவே பொக்ரா பட்டணம் சென்று விடுகின்றேன். அப்படியானால் டிரக் வண்டிக்குக் கொடுக்க வேண்டிய பெரிய பணம் மீதமாகும்” என்று கூறிக்கொண்டு என்னிடம் விடைபெற்றுக்கொண்டு துரிதம் துரிதமாக எனக்கு முன்னதாகப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.
பசும் பொன்னும் சொக்க வெள்ளியுமான என் பரம தகப்பன் இயேசு அப்பா எனக்குப் போதுமானவர்
நேப்பாளத்தின் மிக உயரமான மலைச் சிகரங்களில் ஒன்றான அன்னபூரணா சிகரத்தின் அடிவாரம் வரை (Annapurna Base Camp) நாங்கள் கால் நடையாகச் சென்று போக வர சுமார் 15 நாட்களை செலவிட்டு அந்த நாட்களில் நாங்கள் தேவனுடைய ஊழியத்தை அங்குள்ள அநேக மலைக் கிராமங்களில் செய்து முடித்து இப்பொழுது நாங்கள் சமதரை பரப்பிற்கு வந்து சேர்ந்திருந்தோம். மேலே நான் குறிப்பிட்டது போல மகன் சுந்தர் பொக்ரா பட்டணத்துக்கு முன் கூட்டியே கால் நடையாகப் போய்விட்டார்கள். நான் சமதரையிலுள்ள பேதி கோலாவிலிருந்து ஒரு டிரக்கில் ஏறி பொக்ரா பட்டணத்திற்கு வந்து கொண்டிருந்தேன். வழியில் சில நேப்பாளக் கிராமங்களைக் கடந்து டிரக் விரைந்து சென்று கொண்டிருந்தது.
நான் ஏறிச்சென்ற டிரக் ஒரு குறிப்பிட்டக் கிராமத்தைகடந்து செல்ல முயற்சிக்கையில் அங்குள்ள கிராமவாசிகள் எங்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி அதில் வந்திருந்த எங்கள் அனைவரையும் கீழே இறங்கச் சொன்னார்கள். எங்களுக்கு முன்பாகச் சென்ற சில டிரக்குகளும் அவ்விதமாகவே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பெரிய ஜனக்கூட்டம் ஊருக்கு மத்தியில் கூடியிருந்தது. கூட்டத்திற்கு மத்தியில் ஒரு அழுக்கடைந்த துணியால் 12 வயது மதிக்கத்தக்க ஒரு பாலகனின் சடலம் மூடப்பட்டுக்கிடந்தது. அந்த சடலத்தைச் சுற்றிச் சில ஏழை மக்கள் “ஓ பாபு, ஓ பாபு” என்று அழுது புலம்பிக்கொண்டிருப்பதை நான் கண்டேன். எங்களுக்கு முன்னால் புறப்பட்டு வந்த டிரக்குகளில் ஒன்று அந்தப் பையன் மீது ஏறிக்கொன்றிருந்தது.
அதின் காரணமாக அந்தக் கிராம மக்கள் எந்த ஒரு வாகனத்தையும் அங்கிருந்து செல்லவிடாமல் தடுத்துவிட்டபடியால் டிரக்குகளில் வந்த அனைவரும் அந்தக் கிராமத்திலிருந்து ஓரிரு மைல்கள் தூரத்திலுள்ள பொக்ரா பட்டணத்திற்கு கால் நடையாகவே நடந்து செல்ல வேண்டியதான நிலை ஏற்பட்டது. நானும், என் மூட்டை முடிச்சுகளுடன் கால் நடையாகவே கஷ்டத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். கொஞ்ச தூரம் செல்லவும், ஒரு லாரி எங்கேயோ ஒரு திசை வழியாக வந்தது. அந்த அன்பான லாரி டிரைவர் அன்பு கொண்டு எங்களுக்காக லாரியை நிறுத்தி அதில் நடந்து கொண்டிருந்த எங்களில் சிலரை ஏறும்படிச் சொன்னான். அதில் பாவியாகிய நானும் ஒருவன். முதலாவது திடகார்த்தமான, நல்ல உயரமான இரண்டு மேல் நாட்டு வாலிபர்கள் குதித்து ஏறிக்கொண்டனர். அந்த அன்புள்ளம் கொண்டவர்கள் என்னுடைய மூட்டை முடிச்சுகளை லாரியில் வாங்கிப் போட்டுக்கொண்டு எனக்கும் கை கொடுத்து மேலே இழுத்துக்கொண்டார்கள். ஏன் அந்த மேல் நாட்டு வாலிபர்கள் குறிப்பாக என் மீது மாத்திரம் அந்த அன்பு பாராட்டினார்கள் என்பது பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது.
குறிப்பிட்ட ஒரு தூரம் வந்ததும் எங்களை ஏற்றி வந்த லாரி எங்களை ஓரிடத்தில் இறக்கிவிட்டு மற்றொரு பாதை வழியாகச் சென்றது. என்னை லாரியில் ஏற உதவி செய்த அந்த அன்பான வாலிபர்கள்தான் நான் லாரியிலிருந்து கீழே இறங்கவும் எனக்கு அன்புடன் உதவி புரிந்தனர். நாங்கள் மூவரும் மாலை மயங்கும் நேரத்தில் பொக்ரா பட்டணத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தோம். இப்பொழுது எங்கள் சம்பாஷணையை தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் கவனியுங்கள்:-
வாலிபர்களில் ஒருவன்:- “நீங்கள் நேற்றைய தினம் இரவில் நாம் படுத்திருந்த கிராமத்தின் வீட்டில் வாசித்தது வேத புத்தகமாக? நீங்கள் வாசித்ததை நாங்கள் இருவரும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
நான்:- “நான் வேத புத்தகம் வாசிக்கவில்லை. தேவனுடைய மனிதர் ராய் ஹெசியன் என்பவர் எழுதிய “இயேசுவைக் காண விரும்புகின்றோம்” என்ற அருமையான புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன்.
வாலிபன்:- “நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?”
நான்:- “என்னுடைய தேசம் இந்தியா”
வாலிபன்:- “இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணத்திற்காக வந்தீர்களா? நீங்கள் இங்கு வந்ததின் நோக்கம்?”
நான்:- ” நான் ஒரு கிறிஸ்தவன். இரட்சகர் இயேசுவின் சுவிசேஷ நற்செய்தியை இந்த நாட்டில் அறிவிப்பதற்காக இங்கு வந்தேன்”
வாலிபன்:- “நாங்கள் உங்களைப் பார்த்ததும் நீங்கள் ஒருக்காலும் சுற்றுலாப்பயணியாக இருக்கவே முடியாது என்று எங்களுக்குள் பேசிக் கொண்டதும் சரிதான். கிறிஸ்தவ மார்க்கப் பிரச்சாரத்திற்கு இந்த நாட்டில் கடுமையான தடை உண்டே, நீங்கள் எப்படி இங்கு பிரச்சாரம் செய்ய முடிகின்றது?”
நான்:- “மிகவும் இரகசியமாக கிறிஸ்தவ துண்டுப் பிரசுரங்களை இந்த நாட்டு மக்கள் மத்தியில் விநியோகிப்பதே என் வேலை”
வாலிபன்:- “இப்பொழுது உங்கள் வசம் அந்தவிதமான கிறிஸ்தவப் பிரசுரங்கள் உள்ளனவா?”
நான்:- “இதோ, என் கை வசம் உள்ளது பாருங்கள்” (என் பையைத் திறந்து அவற்றை அவர்களுக்குக் காண்பிக்கின்றேன். மிகவும் ஆச்சரியம் அடைகின்றார்கள்)
(இப்பொழுது நான் அவர்களிடம் கேள்விகளைக் கேட்கின்றேன்)
நான்:- “நீங்கள் இருவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? நேப்பாள நாட்டிற்கு வந்ததின் நோக்கம்?”
வாலிபன்:- “நாங்கள் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இருவரும் எங்கள் நாட்டில் கண் மருத்துவர்களாகக் கல்வி பயின்று கொண்டிருக்கின்றோம். கண் மருத்துத் துறையில் நேரிடைப் பயிற்சிகளுக்காக ஹாங்காங், சீனா நாடுகளுக்குச் செல்லும் பாதையில் இங்கு நேப்பாளத்திற்கும் வந்தோம்”
நான்:- ” நீங்கள் இருவரும் கிறிஸ்தவர்களா?”
வாலிபன்:- “ஆம். மெய்யான கிறிஸ்தவர்கள்”
நான்:- “மெய்யான கிறிஸ்தவர்கள் என்றால் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்தானா?”
வாலிபன்:- “அதில் சந்தேகம் ஏது? நாங்கள் இருவரும் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களே. நான் ஒரு குருவானவரின் மகன். என் பெயர் “ரினக்” என் தந்தை உங்களைப்போல சுவிசேஷப் பிரபல்லிய முயற்சியில் கடுமையான வாஞ்சை கொண்டவர். நீங்கள் நேப்பாள தேசத்திற்குள் இரகசியமாக சுவிசேஷப் பிரசுரங்களை கடத்திக்கொண்டு வந்து இரட்சகரின் பரிசுத்த பணியைச் செய்கின்றீர்கள். என் தந்தை, கிழக்கு ஜெர்மனி, போலந்து, பல்கேரியா போன்ற சுவிசேஷத்திற்கு தடைசெய்யப்பட்ட நாடுகளுக்குச் சுவிசேஷத்தைக் கடத்திச் சென்று ஆண்டவரின் பணியைச் செய்கின்றார்கள். என் தந்தை உங்களை நேரில் கண்டால் தன்னுடைய பொங்கும் சந்தோசம் காரணமாக உங்களை அப்படியே கட்டிப் பிடித்து அரவணைத்து முத்தமிடுவார்கள். உங்களைப்போன்ற தேவ மக்கள் என்றால் அவர்களுக்கு உயிர்தான். உங்களுடைய இந்தவிதமான முயற்சிகளுக்கு அவர்கள் ஏராளம், தாராளமாக உதவி செய்யக்கூடிய தேவ மனிதர். நான் அவர்களுடைய முகவரியை உங்களுக்குத் தருகின்றேன். நீங்கள் அவர்களுடன் கட்டாயம் கடிதத் தொடர்பு கொள்ளுங்கள். நாங்களும் எங்கள் கண்களால் நேரில் கண்ட உங்கள் பரிசுத்த பணிகளைப்பற்றி அவர்களுக்கு விபரம் சொல்லுவோம். அதற்கு உதவியாக உங்களை ஒரு புகைப்படம் எடுப்பதுடன் உங்கள் கைவசமுள்ள இந்த சுவிசேஷ பிரசுரங்களையும் நாங்கள் படம் எடுத்துச் சென்று என் தந்தையிடம் காண்பிப்போம்”
நான்:- “என் ரினக் சகோதரன் அவர்களே, என்னைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மனதார விரும்புகிறபடி என் கைவசமுள்ள தேவனுடைய பிரசுரங்களை எல்லாம் படம் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை உங்கள் தேவ பக்தனான உங்கள் அருமைத் தந்தைக்கு காண்பியுங்கள். அவர்களை பாவியாகிய எனக்காகவும், நான் செய்யும் அற்பமான ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளச் சொல்லுங்கள்.
நான் உங்கள் பரிசுத்த தந்தையிடம் எந்த ஒரு உதவியும் கேட்கப்போவதில்லை. காரணம், என் தேவைகளைச் சந்திக்க என் அன்பின் இரட்சகர் எனக்குப் போதுமானவர். அவர் எனக்குப் பசும் பொன்னும், சொக்க வெள்ளியுமான தேவன் (யோபு 22 : 25) உங்கள் பரிசுத்த தந்தைக்கு என் இருதயம் நிறைந்த தேவ அன்பையும், கிறிஸ்தவ வாழ்த்துக்களையும் கூறுங்கள் ” (ரினக் சகோதரன் என்னுடைய பையிலுள்ள தேவனுடைய பிரசுரங்கள் யாவையும் பூமியிலே பரப்பி வைத்து சில புகைப்படங்களை எடுத்துக்கொள்ளுகின்றார்கள். அவர்கள் இருவரின் புகைப்படங்களை எனக்குத் தருவதுடன் அவர்களின் முகவரியையும் எனக்குத் தருகின்றார்கள். இதுகாலபரியந்தம் எந்த ஒரு உதவி கேட்டோ அல்லது கடிதத் தொடர்போ நான் அவர்களுடன் கொண்டதே கிடையாது. நாங்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதற்கு முன்பாக நான் அந்த அன்புள்ளம் கொண்ட தேவ மக்களுக்கு சில அருமையான தேவ ஆலோசனைகளை சொல்லி அனுப்பினேன். முடிவில்லா நித்தியம் அதின் பலாபலன்ளை ஒரு நாள் நமக்கு வெளிப்படுத்தும். அல்லேலூயா.