நேப்பாள தேசத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களின் நினைவுகள் (பாகம் 3)
தேவ ஊழியத்தின் பாதையில் மனைவி, மக்களையும், அருமைத் தாய் தந்தையரையும், உயிருக்குயிராய் நேசிக்கும் அருமையான தேவ மக்களையும் ஒரு பக்கம் அப்படியே தள்ளி ஒதுக்கி வைத்துவிட்டு முன்பின் அறிமுகமற்ற வேற்று நாட்டு மக்களண்டை வழியிலுள்ள எண்ணற்ற பிராண மோசங்கள், இடர்பாடுகளைத் துச்சமாக மதித்துச் செல்லுவது என்பது மனுஷீகத்தில் அத்தனை எளிதானதொரு காரியமல்ல. உன்னதத்தின் பெலனும், தேவ கிருபையுமின்றி இவ்வித ஊழியங்களை எந்த ஒரு மனிதனும் எக்காலத்தும் எடுத்துச் செய்யவியலாது. முதலில் குடும்பத்தை விட்டுப் பிரிந்து அவர்களிடம் விடைபெறுவதே ஒரு பெரும் காரியமாகிவிடுகின்றது. அநேக தடவைகள் நான் என் சுவிசேஷ பயணத்தைக் கண்ணீருடன் ஆரம்பித்திருக்கின்றேன். கடந்த ஆண்டுகளில் எனது பிள்ளைகள் இருவரும் சிறுவர்களாகவிருந்தபோது அவர்கள் என்னைக் கண்ணீர் வடிய வடிய அழுது கொண்டுதான் பேருந்துவில் வழி அனுப்பி வைத்துவிட்டுச் செல்லுவார்கள். இப்பொழுது அவர்கள் கல்லூரிகளிலிருந்தாலும் நான் பயணப்படும் தேதி நெருங்கி வருகிறதைக் கண்டு உள்ளம் பொங்கி எழுதும் கடிதத்தின் வரிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அவர்களின் கண்ணீர்த் துளிகளை என்னால் நன்கு காண முடிகின்றது.
எனினும், இவற்றிற்காக இருளான இடங்களில் வாழும் மாந்தருக்குச் சுவிசேஷத்தை எடுத்துச் செல்லுவதை கைவிட்டுவிட்டு மனைவி மக்களையும், அருமைப் பெற்றோரையும், அன்பு நிறைந்த தேவப்பிள்ளைகளையும் பிரியப்படுத்திக் கொண்டு வீட்டிலே அடைபட்டுக்கிடக்க முடியுமா? தங்கள் வாழ்நாட் காலத்தில் ஒரே ஒரு தடவைகூட இயேசு இரட்சகரைக் குறித்துக் கேள்விப்படாத மாந்தர் பல கோடி பேர் இந்தியாவிலும், வடக்கிலுள்ள இமயமலை நாடுகளிலும் இன்றும் கூட உள்ளனரே! இவர்களுக்குக் கர்த்தாவின் மகிமையின் சுவிசேஷத்தைக் கொண்டு செல்லும் பொறுப்பை அன்பின் நேசர் மாற்கு 16 : 15 ன்படி நம்முடைய கரங்களில்தானே ஒப்புவித்திருக்கின்றார். இப்படியிருக்க ஆண்டவரைவிட அதிகமாக குடும்பத்தை நேசிப்பது எப்படி? தகப்பனையாவது, தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல” (மத் 10 : 37 ) என்று அவர் திட்டமாய்க் கூறியிருக்கின்றாரே! மெய்தான், தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான்.
ஆண்டவருடைய ஊழியத்தின் பாதையில் கஷ்டம், கண்ணீர்கள், எதிர்ப்புகள், பாடுகள் அனுபவித்து அந்தப் பாடுகளிலே அன்பரின் பிரத்தியட்ச பிரசன்னத்தையும், அவரின் தாயடைவான அன்பின் அரவணைப்பையும், இரட்சகரின் அமர்ந்த மெல்லிய குரல்களையும் கேட்டு அனுபவித்த ஒரு தேவ ஊழியன் எக்காலத்தும் அந்த ஊழியத்தைச் செய்யவே துடிதுடித்து நிற்பான். அதிலிருந்து அவனைத் தடைசெய்து பின்னால் நிறுத்தி வைக்க இந்த வையகத்தின் எந்த ஒன்றாலும் ஒருக்காலும் கூடாது. பஞ்சாப் மாநிலம் உலகிற்கு வழங்கிய உலகம் போற்றும் உத்தம தேவ பக்தன் சாதுசுந்தர்சிங்கின் ஜீவிய விருத்தாந்தம் இதனையேதானே நமக்கு நன்கு மெய்ப்பித்துக் காண்பித்து நிற்கின்றது.
தாராமாராங் (TARAMARANG) என்ற நேப்பாள கிராமத்திலிருந்து காலை 6 மணிக்கு என் பயணம் ஆரம்பமாயிற்று. வழக்கம்போல விடிபகல் எழுந்து என் வழிகளையும், என்னையும் நேசருடைய பாதார விந்தங்களில் சமர்ப்பணம் செய்தேன். அந்த இடத்தில் எனக்கு ஆண்டவர் ஒருவர்தான் தஞ்சம். எனக்கு முன்னாலுள்ள வழியில் என்னென்ன ஆபத்துக்கள் இருக்கின்றன என்பது எனக்குத்தெரியாது. நான் இராத்தங்கக் கூடிய வீட்டின் மக்கள் கள்ளர்களா அல்லது நல்லவர்களா என்று எனக்குத்தெரியாது. வழிப்பாதையில் எனக்கு ஒரு நோய் துன்பம் வந்தால் எனக்காகப் பரிதாபப்பட்டு என்னைக் கவனிப்போர் எவரும் கிடையாது. அந்த கானக வழிகளில் மக்கள் போக்கு வரத்தும் அபூர்வம். எந்தவித வாகன வசதிகளுமே கிடையாது. மின் வசதிகள் அறவே இல்லை. அவ்விடத்தில் மட்டுமல்ல, நேப்பாள நாட்டின் பெரும்பாலான இடங்கள் இந்த நிலையிலேதான் உள்ளன.
வழிப்பாதையில் ஓரிடத்தில் கால் ஒடிந்துபோன தன் வாலிப மகனைக் கூடை ஒன்றினுக்குள் வைத்து தன் முதுகின் மேல் தூக்கிக்கொண்டு கடும் சிரமத்துடன் தூர இடத்திலுள்ள ஆஸ்பத்திரி ஒன்றினுக்குக் கொண்டு செல்லும் ஒரு ஏழைத்தாயை நான் கண்டேன். ஆம், அப்படிப்பட்ட இடர்பாடுகள் நிரம்பிய பாதைகள் எல்லாம் எனக்கு முன்னர் உண்டு. ஆண்டவரின் பாதங்களை மாத்திரம் என் தஞ்சமாகப் பிடித்துக் கொண்டு கடந்து சென்றேன். அழகான வயல் வெளிகள் ஒரு பக்கம், ஆறும் மலையும் மற்றொரு பக்கம். தேவனின் சிருஷ்ப்பின் அழகிற்குப் பஞ்சமே கிடையாது. வெயில் அதிகமாகு முன்னர் நெடுந்தூரம் சென்றுவிட வேண்டுமென்று துரிதமாக நடந்து கொண்டிருந்தேன். வாழை மரங்கள் நிறைந்த சேரா என்றதொரு கிராமம் வந்தது. அந்தக் கிராமத்தின் மக்கள் பலருக்கும் நேப்பாள சுவிசேஷ துண்டு பிரதிகள், சிறு புத்தகங்கள் போன்றவற்றை ஜெபத்தடன் விநியோகித்துக் கொண்டே சென்றேன்.
“தேல் வாலா”………………..”தேல் வாலா”
எனது தாடியும் தலைமீதுள்ள கைப்பிரதிகள் நிறைந்த எனது பெரிய தோள் பையும், கிராமத்து மக்களுக்கு குறிப்பாக கிராமத்து நேப்பாள பெண்களுக்கு ஆச்சரியத்தை அளித்தன. நாம் நமது பொருட்களை கூடைகளில் போட்டுக்கொண்டு நம் தோள் மீது சுமந்து கொண்டு செல்லுகின்றோம். ஆனால், இந்தப் பைத்தியக்காரன் தன் சுமையை எதிர்மாறாக தலையில் வைத்துக்கொண்டு செல்லுகின்றானே என்றெண்ணி கைதட்டி “தேல்வாலா” “தேல்வாலா” என்று கூறி கைதட்டிச் சத்தமிட்டுச் சிரித்தார்கள். தேல்வாலா என்றால் “எண்ணெய் வியாபாரி” என்று பொருளாகும். சில இடங்களில் பெண்கள் தங்கள் அண்டை அயலகப் பெண்களையும் தங்கள் சந்தோசத்தில் பங்கடைய வேண்டும் என்ற ஆவலின் காரணமாக துரிதம் துரிதமாக அவர்களையும் கூப்பிட்டு வெளிவரச்செய்து கூச்சலிட்டு என்னைக் கேலி செய்து மகிழ்ந்தனர். ஒரு நேப்பாள கிராமத்தில் நான் சென்று கொண்டிருந்தபோது சின்னஞ்சிறார்கள் “நாராயணா” “நாராயணா” என்று கூறிக்கொண்டே என் பின் வந்தனர். காத்மாண்டுவுக்குப் பக்கத்திலுள்ள கிராமங்களில் ஓரிரு இடங்களில் இந்தவிதமான பரிகாசங்கள் எனக்கு கிடைத்தன.
எருசலேம் வீதி வழியாக எனக்காக கோரக் குருசை சுமந்து கொண்டு, ரோமர்களின் கொடிய சாட்டை அடிகளை அன்பாக வாங்கிக் கொண்டு, எச்சிலுக்கும், நிந்தைக்கும், நிந்தை அவமானங்களுக்கும் தன் முகத்தை மறைக்காது மிகுந்த அன்புடன் கொலைக்காவனம் சென்ற தேவ ஆட்டுக் குட்டியை மனதில் நினைத்துக்கொண்டு என் வழியே சென்று கொண்டிருந்தேன்.
பிராண மோசம் நிறைந்த ஆபத்தான பாதைகள்
அந்த நாளில் என் பயணப்பாதை மிக, மிக கடினமாகவிருந்தது. காரணம் என்னவெனில், போகப்போக என் பாதை ஒரே செங்குத்தான ஏறுமுகமாகவே இருந்ததுதான். சில இடங்களில் சில ஒற்றையடி மலைப் பாதைகள் தரையில் நாட்டப்பட்ட உயரமான கம்பத்தின் மேல் ஏறுவதைப் போன்ற கடுங்கஷ்டமாவிருந்தது. சற்று ஏமாந்தால், இல்லை கால் இடறினால் நாம் கீழே விழுந்து சிதைந்து சின்னாபின்னமாகி விடுவோம். செங்குத்தாக ஏறி நேர்ப்பாதையாகப் போனாலும் மிகவும் ஜாக்கிரதையாக நாம் நமது பாதங்களைத் தூக்கி வைத்து செல்ல வேண்டும். கொஞ்ச கவனக்குறைவாக வழி நடந்து தடுமாறினோமானால் பல்லாயிரம் அடிகள் உருண்டு, உருண்டு போய் கீழே பேரிரைச்சல் போட்டு நுரை தள்ளிக்கொண்டு ஓடும் நதியுடன் நாம் கலந்து விடுவோம். அந்த உயரமான ஆபத்து நிறைந்த பாதைகளில் வினாடிதோறும் கர்த்தரைக் கூப்பிட்டுக்கொண்டே சென்றேன். ஓரிடத்தில் வழிப்பாதையில் ஆழமான மண் அரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. நான் எதனையும் கவனிக்காமல் மிக எளிதாக அதைத் தாவிக்குதித்துக் கடந்து சென்று பக்கவாட்டில் பார்த்தபோது, ஆ, நான் எத்தனை ஆபத்தான பாதையைக் கடந்திருக்கின்றேன் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். ஆரம்பத்தில் நான் அதைக் கண்டிருந்தால் அதைக்கடந்து செல்லவே எனக்குத் துணிவு ஏற்பட்டிருக்காது. அன்பின் தேவன் என்னை ஒரு தகப்பன் தனது சிறு குழந்தையின் கரம் பிடித்து அது தன் ஒவ்வொரு பாதத்தை எடுத்து வைக்கும் வரைப் பொறுமையுடன் காத்திருந்து மெள்ள, மெள்ள அழைத்துச் செல்லுவதைப் போல என்னை அத்தனை அன்புடன் வழிநடத்திச் சென்றார். இரு வழி பிரியும் இடத்தில் அற்புதமாக நான் சரியான பாதையை தெரிந்து கொள்ள எனக்கு ஆலோசனை தந்தார். இல்லை, தக்க சமயம் வழிகாட்ட ஆட்களை அங்கு அனுப்பிக் கொடுத்தார். “அவரைப்போலப் போதிக்கிறவன் யார்?” (யோபு 36 : 22 ) தாராமாராங்கிலிருந்து 3 மைல்கள் தூரம் நடந்து 4800 அடிகள் உயரமான மஹன்கல் என்றவிடம் வந்து அங்கிருந்து 4 மைல்கள் தூரம் நடந்து 5000 அடி உயரமான கீயுல் (KEUL) என்றவிடம் வந்து சேர்ந்தேன்.. நல்ல வெயில், கடும் பசி, வழியில் ஆகாரம் கிடைக்கவில்லை. கையிலிருந்த ரொட்டி, அவுல், பேரீச்சம் பழம் போன்றவற்றில் கொஞ்சம், கொஞ்சம் சாப்பிட்டு மலை நீரோடைத் தண்ணீரை வயிறு நிரம்ப மொண்டு குடித்துப் பசியைப் போக்கினேன். கீயூல் கிராமத்தில் இரண்டு ஆத்துமாக்களை சந்தித்துக் கைப்பிரதிகளை வழங்கினேன். அதில் ஒருவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். அடுத்தவர் சோம் பிரசாத் ரிமால். அவர் ஒரு எழுத்தறிவுள்ள குடியானவர். நான் எங்கு செல்லுகின்றேன், எங்கிருந்து வந்திருக்கின்றேன் என்ற விபரங்கள் அனைத்தையும் அவர்கள் இருவரும் என்னிடம் கேட்டார்கள். தேசம் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலாப் பயணி என்ற வழக்கமான பல்லவியைத்தான் நான் முதலில் அவர்களிடம் கூறிவிட்டு அவர்கள் குடும்ப நலன்கள், செய்யும் தொழில்கள் யாவையும் அன்புடன் கேட்டு முடித்துக் கடைசியாகப் பேச்சை இயேசு இரட்சகர்பால் திருப்பிக் கொண்டு வந்தேன். ஆத்தும ஆதாயப்பணியிலும் எத்தனை ஞானம் எத்தனை விவேகம் எல்லாம் நமக்கு வேண்டியதாயிருக்கின்றது. நாம் அவர்களோடு உரையாடினாலும் அம்மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ற பதில்களைப்பெற்றுக் கொள்ள நாம் உடனுக்குடன் நம் ஆண்டவரிடமே நம் இருதயத்தைத் தொடர்ந்து ஏறெடுத்துக் கொண்டே இருக்க வேண்டியது எத்தனை அவசியமாய் இருக்கின்றது! மேற்கண்ட இரு மக்களுடனான எனது சம்பாஷணையும் அவ்விதமாகவே அமைந்திருந்தது.
சோம் பிரசாத் ரிமால் ஒரு தவனமுள்ள ஆத்துமா
என் வாயிலிருந்து புறப்பட்ட தேவ வார்த்தைகளை மேற்கண்ட இருவரும் கேட்டபோதும் சோம் பிரசாத் ரிமால் தனது உள்ளத்தில் அதிகமாக உணர்த்தப்பட்டார். இயேசு இரட்சகர் யார்? அவர் மனிதனுடைய வாழ்க்கையில் என்ன செய்யக்கூடியவர்? அந்த அன்பின் இரட்சகர் எனக்கு என்ன செய்தார்? என்ற விபரங்களை நான் அவர்களுக்கு தேவ அன்பின் பாரத்தோடு கூறினேன். அவர்கள் என் வார்த்தைகளால் மிகவும் உள்ள உணர்வடைந்தார்கள். அருமை இரட்சகரின் அன்பைக்குறித்து நான் கூறினபோது சோம் பிரசாத்தின் கண்களில் கண்ணீர் பெருகி நின்றது. சோம் பிரசாத் நல்ல உடற்கட்டான மனிதன். அவரின் தோற்றமும், மீசையும் சம்பல் பள்ளத்தாக்கு கொடிய கொள்ளைக்காரன் மான்சிங் போன்ற தோற்றமுடையவர். அப்பேர்ப்பட்ட மனிதர் குழந்தையைப்போல அழப்போகின்றார். காரணம், அவர் கேட்கும் வார்த்தைகள் அவரை சிருஷ்டித்த கர்த்தாவிடமிருந்து வந்து கொண்டிருப்பதுதான். அவருடன் பேசும் நாவு மனிதனுடையதானாலும், அந்த நாவில் வார்த்தைகளைப்போடுகிறவர் அவரை நேசிக்கும், அவருக்காக தனது ஜீவனையே கொடுத்த அன்பின் ஆண்டவருடைய வார்த்தைகளாகும். அதற்காகத் தானே பாவியாகிய என்னை அவர் தென் இந்தியாவின் தென் கோடிமுனையிலிருந்து அங்கு கொண்டு சென்றிருக்கின்றார்.
சோம் பிரசாத் ரிமால் ஒரே பிடிவாதமாக என்னைத் தன்னுடைய வீட்டிற்கு வந்து தங்கிச் செல்ல வற்புறுத்தினார். கூடுதலாக பயனுள்ள நேப்பாளி மொழியிலான சிறு புத்தகங்கள் போன்றவற்றை ஜெபத்துடன் அவர்கள் இருவருக்கும் கொடுத்து, எனது நீண்ட பயணத்தின் அவசர நிலையையும், எனக்கு முன்னாலுள்ள ஏராளமான ஆண்டவரின் பணிகளையும் அவர்களிடம் கூறிக் கண்ணீர் மல்க நான் அவர்களிடம் விடைபெற்றேன். உள்ளத்தில் வெகுவாக உணர்த்தப் பட்ட சோம் பிரசாத் ரிமாலை உங்கள் அன்பின் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள்.
கீயுல் கிராமத்திலிருந்து 4 மைல்கள் செங்குத்து மலை ஏறி 5800 அடி உயரமான டிம்பு (TIMBU) என்ற இடத்திற்கு வந்து அங்கு இருந்த ஒரு ஏழைக் குடும்பத்தினர் வீட்டில் இராத்தங்கினேன். அவர்கள் வீடு பல்லாயிரம் அடிகள் உயரத்தில் ஒரு கழுகுக்கூட்டைப்போல இருந்தது. அதல பாதாளத்தில் ஒரு நதி ஓடுகின்றது. அதின் பெயர் மிலம்ஸிகோலா என்பதாகும். வீட்டிற்கு எதிராக இருந்த கரிய மலையானது கானகங்களால் நிறைந்து மண்டிக்கிடந்தது. இரவில் ஒரு சிறிய அறையில் நாங்கள் அனைவரும் ஒன்றாகப் படுத்திருந்தோம். வீட்டு நாயும் எங்களுடன் படுத்துக் கொண்டது. அந்த இரவு அந்த வீட்டில் நான் தேவனைத் துதித்துப் பாடினேன். மிகவும் சுத்தமற்ற ஏழை மக்களாக இருந்தபோதினும் அவர்களின் அன்பு மிகவும் விசாலமானது.
ஹெலம்பு கிராமம் நோக்கி
அடுத்த நாள் அதிகாலை டிம்புவிலிருந்து புறப்பட்டு மீண்டும் செங்குத்தாக 2 மைல்கள் தூரம் மலை ஏறி 6900 அடிகள் உயரமான எம்பாலாமா (YEMBA LAMA) என்ற இடம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து மீண்டும் மலை ஏற்றம் தொடர்ந்தது. 2 மைல்கள் பிரயாணப்பட்டுக் கக்கானி என்ற கிராமம் வந்து சேர்ந்தேன். இவ்விடத்தின் உயரம் 7500 அடிகளாகும். பாதாளத்தில் மிலம்ஸி கோலா நதியை நாம் நன்கு காணலாம். பெரிய மலை இடுக்கு வழியாக அந்த நதி ஓடிக்கொண்டிருக்கின்றது. தண்ணீருக்கு மேலாகப் பாறைகளில் வண்டிச் சக்கரங்கள் போல் மலைத் தேன் கூடுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இத்தனையான பாதுகாப்பான இடங்களில் தங்கள் தேன் கூடுகளை அமைத்து பாதுகாப்பாக வாழ இந்த தேன் ஈக்களுக்கு ஞானமளித்த தேவன் வருங்கோபத்திற்கு தப்பும் முகமாகத் தமது சொந்தக் குமாரனையே ஈவாக கல்வாரி சிலுவையில் தந்து வருங்கோபத்திற்குத் தப்பும்படியாகத் தமது குமாரனை முத்தம் செய்யும்படியாக (சங் 2 : 12 ) மனுமக்களுக்குப் புத்தி கூறியும் தங்கள் பிடரிகளைக் கடினப்படுத்தி வாழ்ந்து ஏகமாக அழிந்து கொண்டிருப்பதை அந்த உச்சிமலையில் துயரத்தோடு நினைவு கூர்ந்தேன். அந்த இடத்தில் நான் கண்ட பிரமாண்டமான மலைத் தேன் கூடு ஒன்றை நீங்களும் செய்தியில் பார்க்கின்றீர்கள்.
கக்கானியிலிருந்து 400 அடிகள் இறங்கு முகமாகச் சென்று தார்க்கா சாஸா என்றவிடம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து மிகச் செங்குத்தாக மலை ஏறி “தாஸிதாங்” (TASSI THANG) என்ற அழகிய இடத்தை வந்தடைந்தேன். இந்த பூமியின் உயரம் 8500 அடிகளாகும். குளிர் காற்று சில்லென்று வீசிற்று. வெகு தொலைவில் வெள்ளிப் பனி மலைகள் அழகுறத் தோற்றமளிக்கின்றன. இந்த இடத்திலிருந்து எனது கடுiயான மலை ஏற்றம் தொடங்கிற்று. எனது இருதயத் துடிப்பின் டங்………………….டங்……………… என்ற சப்தம் என் காதில் விழுவதைக் கேட்டேன். உட்கார்ந்து, உட்கார்ந்து மூச்சு வாங்கிக் கொண்டு இறுதியாக தார்க்கே கேயாங் (TARKA GHYANG) வந்து சேர்ந்தேன். இதனை ஹெலம்பு (HELEMBU) என்றும் அழைக்கின்றார்கள். இவ்விடத்தின் உயரம் 9300 அடிகளாகும். ஊரைச்சுற்றி பூ மரங்கள் பூத்துக்குலுங்கி நிற்கின்றன. முழுமையும் புத்தர்கள் வாழ்கின்ற புத்த கிராமம் அது. ஊர் முழுவதும் புத்த மார்க்க ஜெப மந்திரக் கொடிகளால் நிறைந்து கிடக்கின்றன. ஊர் முகப்பில் ஒரு புத்த கோயில் உள்ளது. அதின் பக்கத்தில் எண்ணெய் செக்கு போல ஒரு பெரிய ஜெப மந்திர உருளை, ஒரு புத்த மார்க்க பாட்டி அதைச் சுற்றிக்கொண்டே இருக்கின்றார்கள். அதைப் பார்ப்பதற்கு எனக்கு மிகவும் துயரமாகவிருந்தது. அரை குறையான உயிருடன் தான் கவ்விப்பிடித்த எலியைச் சாப்பிடுவதற்கு முன்னர் அதினை சற்று நேரம் ஓடவிட்டு விளையாட்டுக் காட்டி அப்புறம் லபக் என்று கவ்வி விழுங்கும் பூனையின் விளையாட்டைத்தான் மனுஷ கொலைபாதகனான பெரும் பூனை அந்தப் பாட்டியிடமும் செய்து கொண்டிருந்தான். அழகிய ஹெலம்பு என்ற அந்த புத்த மார்க்க கிராமத்தை படத்தில் நீங்கள் காணலாம்.
ஹெலம்புவில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
ஹெலம்புவில் வீடுகள் அனைத்தும் பாளம், பாளமான கரிய மலைக்கற்களால் கட்டப்பட்டவையாகும். வீட்டிற்கு வெளியே வர முடியாத கடுங்குளிர் வீசிக்கொண்டே இருக்கின்றது. சற்று தொலைவில் வெள்ளி உருகி ஓடுவதைப் போல இமயத்தின் பனி மலைகள் மின்னிக் கொண்டிருக்கின்றன. பகல் வேளைகளிலும் கூட மக்கள் நெருப்பைச் சுற்றித்தான் உட்கார வேண்டும். அதற்கு வசதியாக ஒவ்வொரு வீட்டின் மத்தியிலும் குழிகள் உள்ளன. இந்த இடத்தில் நான் பெரிய ஊழியங்கள் எதுவும் ஆண்டவருக்காக செய்யவில்லை. மிக முக்கியமான காரணம் இங்கு வாழ்வோர் அனைவரும் தீபெத் நாட்டிலிருந்து வந்த புத்தர்கள். தீபெத் மொழியிலான கைப்பிரதிகள் என்னிடம் இல்லாதபடியால் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. எனினும், அன்பின் பரம தகப்பன் சில ஊழியங்களை எனக்குத் தந்தார். நிமாலாமா என்பவன் நேப்பாளி பாஷையை எழுதப்படிக்க நன்கு கற்றவன். அவனுக்கு என்னால் முடிந்தவரை சுவிசேஷம் கூறி எனது சாட்சியையும் சொல்லி நேப்பாள பிரதிகள் மற்றும் சிறு புத்தகங்களை ஜெபத்துடன் அளித்தேன். நேப்பாளி தெரிந்த மற்றும் ஒரிரு ஆத்துமாக்களுக்கு இங்கு நான் ஊழியம் செய்துவிட்டு ஒரு இராக்காலத்தை இந்தக் கடுங்குளிரான இவ்விடத்தில் நான் செலவிட்டு விட்டு காத்மாண்டுக்குப் புறப்பட்டுச் சென்றேன். வழியிலெல்லாம் அன்பின் ஆண்டவர் எனக்கு அருமையான ஊழியங்களையும், சந்திப்புக்களையும் தந்தார். ஒரு வார காலத்தில் மாத்திரம் சுமார் நூறு மைல்கள் நான் நடந்திருந்தேன். அன்பின் ஆண்டவர்தான் அந்த அற்புத பெலனை எனக்குத் தந்திருந்தார்.
ஆண்டவருடைய அருமைப் பிள்ளைகளாகிய நீங்கள்தான் பாவியாகிய என்னை உங்கள் பதிலாளாக நேப்பாளம், பூட்டானுக்கு அனுப்பி வைத்தீர்கள். அதின் முழுமையான பலனும், தேவ ஆசீர்வாதமும் உங்களுக்குத்தான். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.