நித்திய கன்மலையாம் தேவன் சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக
தேவ எக்காள ஊழியங்களை கடந்த பல்லாண்டு காலமாக உங்கள் உருக்கமான ஜெபங்களாலும், உதாரத்துவமான தியாக அன்பின் காணிக்கைகளினாலும் தாங்கி ஆதரித்து வந்த அன்பின் தேவப்பிள்ளைகளாகிய உங்களை பரலோகத்தின் தேவன் தாமே தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி நிறைபூரணமாக ஆசீர்வதிப்பாராக. மாதந்தோறும் இந்த எளிய தேவ ஊழியத்தை உங்கள் தியாக அன்பின் காணிக்கைகளினால் ஆதரிப்போர் உங்களில் உண்டு. ஆண்டுக்கொரு முறை காணிக்கை அனுப்பி ஊழியத்தை தாங்குவோரும், அவ்வப்போது கர்த்தர் உங்கள் உள்ளத்தில் ஏவுகின்றபடி ஊழியத்திற்கு உதவிகள் அனுப்புவோரும் உங்களில் உண்டு. கடந்த கால ஆண்டுகளில் இந்த எளிய தேவ ஊழியத்திற்கு எவ்வளவோ உதவி செய்து எதிர்பாராத சூழ்நிலைகளின் காரணமாக தொடர்ந்து உதவி செய்ய இயலாமற் போன தேவ மக்களும் உங்களில் இருக்கின்றீர்கள். உங்கள் அனைவருக்கும் நான் கர்த்தரில் பெரிதும் நன்றி கடன்பட்டுள்ளேன். அதற்கான பிரதி பலன் விரைவில் நாம் சுதந்திரிக்கப்போகும் நம்முடைய மோட்சானந்த பேரின்ப வீட்டில் நிச்சயமாக உங்களுக்கு இருக்கின்றது.
உங்களுடைய தியாக அன்பால் பரதேசிகளாகிய நாங்கள் இத்தனை நீண்ட ஆண்டு காலங்களாக போஷிக்கப்பட்டு, உடுத்துவிக்கப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வந்திருக்கின்றோம். உங்களுடைய அளவிடற்கரிய தேவ அன்பால் எனது ஆண் மக்கள் சுந்தர்சிங் அவர்களும், சார்லஸ் ஃபின்னியும் படித்துப் பட்டம் பெற்று ஆசிரியர்களானார்கள். அந்த அன்பை அவர்கள் நன்றி நிறைந்த உள்ளத்துடன் நினைவு கூர்ந்தவர்களாக தேவ கிருபையால் நமது தேவ எக்காள ஊழியங்களுக்கு 2007 ஆம் ஆண்டிலிருந்து இருவரும் சில ஆயிரங்களை மாதந்தோறும் காணிக்கையாகக் கொடுத்து நமது ஊழியங்களை ஆதரித்து வருகின்றார்கள். தங்கள் பணிகளில் எதிர்பாராதவிதமாக கூடுதலான வருமானம் கிடைக்கும்போது அதிலும் நமக்கு ஒரு காணிக்கை கொடுத்து உதவுகின்றார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. பிள்ளைகள் இருவரும் ஆண்டவருடைய மெய்யான இரட்சிப்பின் பாத்திரங்களானதால் அவர்களுடைய லீவு நாட்களிலும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதும் அன்பின் ஆண்டவருக்கு ஊழியமும் செய்து வருகின்றனர். கர்த்தர் ஒருவருக்கே துதி, கனம், மகிமை உண்டாவதாக.
ஆண்டவருடைய பரிசுத்த பிள்ளைகளாகிய நீங்கள் உங்களை ஒடுக்கி, தியாகித்து, அனுப்புகின்ற உங்கள் கண்ணீரின் பணங்களை நீங்கள் கர்த்தருக்குள் நன்கு அறிந்தபடி முழுமையாக தேவ நாம மகிமைக்காகவே நான் ஜெபத்துடன் செலவிட்டு வருகின்றேன். காணிக்கைகள் அனுப்புகின்ற தேவப்பிள்ளைகளுக்கு வெறும் அச்சிடப்பட்ட நன்றி தெரிவிப்பு கடிதங்களை கடமைக்காக ஏனோதானோவென்று அனுப்பாமல் நானே எனது கரத்தால் நன்றி கடிதம் எழுதுவதுடன் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக இருக்கக்கூடிய நல்ல விலை உயர்ந்த கிறிஸ்தவ புத்தகங்களை விலைக்கு வாங்கி எனது அன்பளிப்பாக அனுப்புகின்றேன். அநேக தேவ மக்களின் வீடுகளில் கடந்த நாட்களில் நான் அனுப்பிய இந்தவிதமான புத்தகங்களைக் கொண்டு ஒரு சிறிய கிறிஸ்தவ நூலகமே வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டன. என்ன என்ன புத்தகங்கள் இங்கிருந்து அனுப்பப்பட்டன என்பதைக் குறித்த தெளிவான விபரங்களை நான் எழுதிக்கொண்டபடியால் ஒவ்வொரு தடவையும் வித்தியாசமான புத்தகங்கள் அவர்களுக்குப்போய்ச் சேர்ந்தன. கர்த்தருக்கே மகிமை.
எனது விருத்தாப்பியம், மற்றும் கடுமையான உடல் நலக் குறைவின் காரணமாக இந்த நாட்களில் நான் வட மாநில தேவ ஊழியங்களை மேற்கொள்ள முடியாதவனாகவும், தேவ எக்காளம் பத்திரிக்கையை தொடர்ந்து அச்சிட்டு வெளியிட முடியாதவனாகவிருந்தபோதினும் அன்பின் ஆண்டவர் எனக்குக் கிருபையாக கொடுத்த ஒரு சிறிய தேவ பெலனைக்கொண்டு நல்ல தரமான கிறிஸ்தவ துண்டு பிரசுரங்களை எழுதி அச்சிட்டு தேவ ஊழியர்களுக்கு இலவசமாக அனுப்புவது, பள்ளிகளில் படிக்கும் கிறிஸ்தவரல்லாத பிள்ளைகளுக்கு வேதாகமங்கள், புதிய ஏற்பாடுகள், லூக்கா சுவிசேஷங்கள் போன்றவைகளை விலைக்கு வாங்கி முற்றும் இலவசமாக கொடுப்பது போன்ற இதர தேவப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றேன்.
உண்மைதான், ஒரு மெய்யான இரட்சிப்பின் பாத்திரமாகிய தேவப்பிள்ளை தன்னை தனது பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சித்து தனது உள்ளத்தில் இரட்சிப்பின் சந்தோசத்தை ஊற்றி, உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தால் தன்னைப் பூரிக்கச் செய்த தன் அன்பின் ஆண்டவரின் எல்லையற்ற கல்வாரி அன்பை தனது மூச்சு ஒடுங்கும் இறுதி நிமிஷம் வரை தேவ பெலத்தால் இருளில் வாழும் ஜனத்திற்கு பறைசாற்றிக் கொண்டேதானிருக்கும். அதினின்று அதைத் தடுத்து நிறுத்த யாராலும், எவராலும் எக்காலத்தும் முடியவே முடியாது.
ஆண்டவருடைய பரிசுத்த பிள்ளைகளாகிய நீங்கள் பாவியாகிய என்னை உங்கள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினனாக கர்த்தருக்குள் முழுமையாக எண்ணி என்னை அருமையாக நேசிக்கின்றீர்கள். எனக்காக ஒழுங்காக ஜெபித்து வருகின்றீர்கள். இந்த நாட்களில் விசேஷமாக எனது சரீர சுகத்தில் நீங்கள் அதிகமாக அக்கரை காட்டுகின்றீர்கள். எனது நீண்ட ஆயுட்காலத்துக்காக தேவ சமூகத்தில் மன்றாடி வருகின்றீர்கள். நான் நீண்ட நாட்கள் உலகில் உயிரோடிருந்து அன்பின் ஆண்டவருக்கு தேவப்பணி செய்ய மனதார விரும்புகின்றீர்கள். உண்மைதான், உங்களுடைய உருக்கமான ஜெபங்களே இந்நாள் வரை என்னை அதிசயமாகப் பாதுகாத்து வந்திருக்கின்றது என்பதை நானும் திட்டமாகக் கர்த்தரில் விசுவாசிக்கின்றேன்.
கர்த்தருக்குள் நீங்கள் நன்கு அறிந்தபடி பாவியாகிய நானும் தேவ பிள்ளைகளாகிய உங்களுடைய அன்பை அதிகமாக நினைவு கூர்ந்தவனாக எனது அன்றாடக ஜெபங்களிலும், தேவ சமூகத்தில் நான் எனது முழங்கால்களை ஊன்றும் சமயங்களிலும், ஆகாரம் எனக்கு முன்பாக இருக்கும்போதும், கர்த்தர் என் உள்ளத்தில் உணர்த்துகின்ற வேளைகளில் எல்லாம் தேவ மக்களாகிய உங்களை நன்றி நிறைந்த உள்ளத்தோடு நினைவுகூர்ந்து கர்த்தர் உங்கள் இருதயத்தின் வாஞ்சைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றி, உங்கள் வியாதி வேதனை, துன்பங்களிலிருந்து உங்களை விடுவித்து, உங்கள் கவலை கண்ணீர்களைத் துடைத்து, உங்கள் கிறிஸ்தவ ஓட்டத்தை நீங்கள் தேவ கிருபையால் பாதுகாப்பாக ஓடி முடித்து தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணியுள்ள ஜீவ கிரீடத்தை சுதந்தரித்துக் கொள்ள தேவ அன்பின் பாரத்தோடு தொடர்ந்து ஜெபித்து வருகின்றேன்.