தொலைக்காட்சி, செய்தி தாட்களுக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்
“உனது பரிசுத்தத்திற்கு தக்கதாக உனது வெற்றி வாழ்வு அமையும்” “According to your holiness so shall be your success” என்றார் ஸ்காட்லாந்து தேச பரிசுத்த பக்தன் மர்ரே மச்செயின் (Murray McCheyne) என்பவர். உண்மையும், சத்தியமுமான வார்த்தைகள். நமது கிறிஸ்தவ பக்தி வாழ்வில் தேவனுடைய பரிசுத்த ஐக்கியத்திலிருந்து நம்மை பிரிக்கக்கூடிய எந்த ஒரு காரியத்திற்கும் நம்மை தேவ பெலத்தால் விலக்கிக் காத்துக் கொள்ளும் போது தேவன் நம்மை அநேகருக்கு ஆசீர்வாதமாக எடுத்து பயன்படுத்துவார். அன்பின் ஆண்டவருடைய உறவிலிருந்து நம்மை துண்டாடிப் போட சத்துருவாகிய பிசாசானவன் இந்த கடைசி நாட்களில் தனது கரத்தில் எடுத்திருக்கும் மகா பயங்கரமான ஆயுதம் தொலைக்காட்சி மற்றும் செய்தி தாட்களாகும். இந்த தொலைக்காட்சி என்ற சாதனத்தின் மூலமாக சாத்தானாம் பிசாசு கோடிக்கணக்கான மக்களை எரி நரகத்திற்கு மிகவும் எளிதாக வழிநடத்திக்கொண்டிருக்கின்றான். இந்தக் கடைசி நாட்களில் தொலைக்காட்சி பெட்டி இல்லாத வீடுகளே கிடையாது. சத்துருவானவன் ஒவ்வொரு வீட்டிற்கும் காசு பணம் இல்லாமலே தொலைக்காட்சி பெட்டிகளை முற்றும் இலவசமாக பலவந்தமாகக் கொடுத்து அவர்களை அழிவுக்கு நேராக வழிகாட்டி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றான். இதில் முற்றும் அடிமைப்பட்டிருக்கும் மக்கள் கிறிஸ்தவர்களே. வசதியான கிறிஸ்தவ மக்கள் தொலைக்காட்சி பெட்டிக்கு மாற்றாக படங்களை மிகவும் பெரிதாக காண்பிக்கும் கருந்திரை போர்ட்டுகளை தங்கள் வீட்டின் உட்காரும் அறையின் சுவரில் மாட்டி வைத்திருக்கின்றார்கள். அதின் காரணமாக அந்த வீடே ஒரு குட்டி திரை அரங்கமாக மாறியிருக்கின்றது. கரும் பெட்டிக்குத் தேவையான கேபிள் கனக்ஷன் எடுத்துவிட்டால் முழு உலகமே வீட்டுக்குள் வந்து விடும். விருத்தாப்பியர்கள் முதல் பாலகர் வரை யாவரும் அந்த திரைக்கு முன் ஆசை ஆவலாக அமர்ந்திருக்கின்றனர். சிறுவர், சிறுமியர், இளம் வயதுள்ளோர் வருடத்தின் குறிப்பிட்ட மாதங்களில் தெருக்களில் ஆனந்த களிப்போடு விளையாடும் கடந்த கால நாட்களின் அழகான விளையாட்டுகள் கோலாட்டம், கும்மி, சடுகுடு, கிளித்தட்டு, போன்றவைகள்எல்லாம் எப்பொழுதோ மாயமாய் மறைந்துவிட்டன. அந்த இடத்தை இப்பொழுது கம்பியூட்டர் விளையாட்டுகள் (Computer Games) ஆக்கிரமித்து விட்டன.
தங்கள் உலகப்பிரகாரமான வேலைகளிலிருந்து ஓய்வுபெற்ற பெரும்பாலான கிறிஸ்தவ விருத்தாப்பிய மக்களுக்கு மீதமுள்ள தங்கள் சொற்பமான விலையேறப்பெற்ற காலத்தை இரவும், பகலும் மிகவும் இலகுவாக வீணடித்து பாழாக்குவதற்கு தொலைக்காட்சியைவிட வேறு எந்த சாதனங்களும் கிடையாது. இரவில் நீண்ட மணி நேரம் வரை அவர்கள் தொலைக்காட்சி முன்னர் தங்கள் நேரத்தை செலவிடுகின்றார்கள். நாம் கேட்டால் “நாங்கள் சினிமா எல்லாம் பார்க்கமாட்டோம், உலகச் செய்திகள் நமக்கு அவசியம் தானே, ஆகையால் செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு உடனே பெட்டியை மூடிவிடுவோம்” என்கின்றார்கள். எத்தனை ஜாலமான வார்த்தைகளை ஆத்தும அழிம்பனாம் பிசாசு அவர்கள் வாயிலிருந்து பேசுகின்றான் பாருங்கள்! அந்தச் செய்திகளை பார்த்து முடிப்பதற்குள் எத்தனை விளம்பரங்கள்? எத்தனை தேவையில்லாத நமது இருதயத்தை கறைப்படுத்தும் காட்சிகளை எல்லாம் நாம் பார்க்க வேண்டியதாக இருக்கின்றது? நமது ஆத்துமாக்களை தேவ அன்பிலிருந்து துண்டாடிப் போட அவைகளே போதுமானதாக உள்ளதே!
ஓய்வு நாட்களில் சபையார் ஆலயத்தின் முதல் காலை ஆராதனையில் கடமைக்காக துரிதம் துரிமாக கலந்து கொண்டுவிட்டு எத்தனை ஜாக்கிரதையாக தொலைக்காட்சியில் வரும் சினிமா தொடர்களைப் பார்ப்பதற்கு தொலைக்காட்சி முன் வந்து அமருகின்றார்கள்! இந்த விஷயத்தில் ஆராதனையை நடத்தும் சபையின் குருவானவர் சபையினரை விட மிகவும் முந்திக் கொள்ளுகின்றார்! ஒரு குருவானவரை அவருடைய குருமனையில் நான் காணச் சென்றிருந்தேன். குருமனையிலிருந்து பணிப் பெண் வெளியே வந்து “ஐயா இளைப்பாறிக் கொண்டிருக்கின்றார். பின்னர் வந்து ஐயாவைப் பாருங்கள்” என்றாள். நான் கண்ணாடி போட்ட அவரது வீட்டின் முன் அறை வழியாக பார்த்த போது ஐயர்வாள் தொலைக்காட்சி பெட்டி முன்னர் அமர்ந்து சினிமா படம் பார்த்துக் கொண்டிருந்தது தெளிவாக எனக்குத் தெரிந்தது. நான் எதுவும் பேசாமல் அமைதியாக வந்துவிட்டேன். அதின் பின்னர் கடைசி வரை தேவன் அவரைப் பார்க்க என்னை அனுமதிக்கவே இல்லை. கடைசியாக, அந்த குருவானவரின் அடக்கத்தில்தான் நான் அவரது மரித்த ஜீவனற்ற சடலத்தைப் பார்த்தேன்.
புற்று நோயால் பீடிக்கப்பட்டு மரணத்தின் விழிம்பில் இருந்த ஒரு வயதான கிறிஸ்தவ மனிதரை நான் காணச் சென்றிருந்தேன். தனது இறுதி மணி நேரத்தில் அவர் முழங்கால்களில் நின்று தன்னை தேவனுடைய நித்திய இளைப்பாறுதலுக்கு பயத்தோடும், நடுக்கத்தோடும், கண்ணீரோடும் ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பார் என்று நான் அதிகமாக எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், நான் அவரது வீட்டிற்குச் சென்று அவரது அறைக்குள் பிரவேசித்தபோது நான் கண்ட காட்சி என்னை நடு நடுங்கப்பண்ணுவதாக இருந்தது.
ஆம், அவர் படுக்கையில் இருந்தவாறே நல்ல பூரண மன நிலையோடு அந்த நாட்களில் நடந்து கொண்டிருந்த உலகக் கால் பந்துப் போட்டியை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் வந்ததைக் குறித்து அவருக்கு அத்தனை மகிழ்ச்சி ஏற்படவில்லை. காரணம், தனது சுவையான நிகழ்ச்சியை கவனிப்பதற்கு நான் இடையூறாக இருக்கின்றேன் என்பதை அவர் அதிகமாக உணர்வதாக எனக்குத் தெரிந்தது. நான் அதிக கால தாமதம் பண்ணாமல் அந்த மனிதருக்கு அன்பின் ஆண்டவரை கண்ணீரோடு உடனே நோக்கிப் பார்க்கவும், அவரை அண்டிக்கொள்ளவும் ஆலோசனை கூறி ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்துவிட்டு விரைவாக வெளியே வந்து விட்டேன். அவர்களுடைய மனைவி, பிள்ளைகள் கிறிஸ்தவ தேவாலய கல்லறைத் தோட்டத்தில் அந்த மனிதருடைய சடலத்தை மரித்த பின் எந்த இடத்தில் அடக்கம் செய்யலாம் என்று இடம் தேடிக் கொண்டிருப்பதாக என்னிடம் சொன்னார்கள். எத்தனை துயரம் பாருங்கள்! ஆ, சாத்தான் தேவ ஜனத்தை எத்தனையாக தொலைக்காட்சி மூலமாக தன் வசமாக்கிக் கொண்டான்!
நமது தேவ எக்காளம் பத்திரிக்கையில் கர்த்தருடைய கிருபையால் தொலைக்காட்சியை பார்ப்பதிலிருந்து தேவ மக்கள் விலகி வாழ்வதன் அவசியத்தை கடந்த நாட்களில் நான் அதிகமாக வற்புறுத்தி வந்திருக்கின்றேன். தொலைக்காட்சி பெட்டியை “கரும் பெட்டி” என்று குறிப்பிட்டு “கரும் பெட்டி அது உங்கள் ஆத்துமாவின் சவப் பெட்டி” என்று நான் மிக வன்மையாக கண்டித்து எழுதியிருக்கின்றேன். அதின் காரணமாக நமது தேவ எக்காளம் சந்தாதாரர் பலரும் கர்த்தருக்குள் விழிப்படைந்து தங்கள் வீடுகளிலுள்ள தொலைக்காட்சி பெட்டிகளை அப்புறப்படுத்தினர்.
ஒரு தடவை நான் பவானி என்ற இடத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள கிறிஸ்தவ வீடு ஒன்றுக்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த வீட்டார் தேவ எக்காளம் சந்தாதாரர் ஆவார்கள். அவர்கள் என்னை தங்கள் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று ஒரு பெரிய மூட்டையை எனக்கு சுட்டிக் காண்பித்து, நாங்கள் நீண்ட நாட்களாக பார்த்து மகிழ்ந்து வந்த எங்கள் வீட்டு டி.வி.பெட்டி அதில் இருக்கின்றது. தேவ எக்காளத்தில் தொலைக்காட்சி குறித்து நீங்கள் எழுதியசெய்தியால் கர்த்தருக்குள் நாங்கள் விழிப்படைந்து எங்கள் தொலைக்காட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்று ஆனந்தப் பெருக்குடன் கூறினார்கள். எல்லா துதிக்கும் பாத்திரர் நம் தேவன் ஒருவரே. அநேக கிறிஸ்தவ தேவ மக்கள் வீட்டில் கர்த்தரை கனம்பண்ணும்விதமாக தொலைக்காட்சி பெட்டியை வைக்காமல் இருக்கின்றார்கள். அதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் பாக்கியசாலிகள்.
இதை எழுதும் உங்கள் சகோதரனாகிய நான் என் ஜீவ காலம் முழுமையும் அந்த கரும் பெட்டியில்லாமல் வாழ்ந்து வந்திருக்கின்றேன் என்றால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியம் அடைவீர்கள். கர்த்தர் ஒருவருக்கே மகிமையுண்டாவதாக. நான் இதைக் குறித்து தேவ எக்காளத்தில் கடந்த நாட்களில் எழுதியதை மனதில் வைத்துக் கொண்டு என்னைப் பார்க்க இங்கு வரும் தேவ பிள்ளைகளில் சிலர் எங்கள் வீட்டின் அறைகளை எல்லாம் அப்படியே ஒரு கண்ணோட்டம் விட்டுப் பார்த்து எனது வார்த்தைகளை உறுதிப்படுத்திக் கொள்ளுகின்றனர். அதையிட்டு நான் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
தேவ ஜனமே, தொலைக்காட்சிக்கு முன்பாக நீங்கள் செலவிடும் நேரத்தை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிடுங்கள். திரண்ட தேவ ஆசீர்வாதம் காண்பீர்கள். அநேக கிறிஸ்தவர்கள் “நாங்கள் தொலைக்காட்சியில் வரும் அருமையான கிறிஸ்தவ பாடல்கள், பிரசங்கங்கள், சாட்சிகள், ஜெபங்கள், ஆண்டவரைத் துதித்துப்பாடி ஆர்ப்பரிக்கும் ஆடல், பாடல் பரவசக்காட்சிகளை எல்லாம் கண்டு ஆனந்திக்கின்றோம்” என்கின்றார்கள். நன்றாகப் பார்த்து ஆனந்தித்து மகிழுங்கள். ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பொன்னான காலத்தை ஆண்டவருடைய பாதங்களில் அல்ல தொலைக்காட்சி பெட்டி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் மட்டும் செலவிடுகின்றீர்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுடைய ஆத்துமாவுக்கு எந்த ஒரு ஆசீர்வாதத்தையும் கொண்டு வராது. ஒரு பரிசுத்தவான் இப்படிச் சொன்னார் Time spent with God, Time well spent. “தேவனோடு செலவிடப்பட்ட நேரம் பயனுள்ளவிதமாக கர்த்தருடைய நாம மகிமைக்காக செலவிடப்பட்ட நேரமாகும்”. தொலைக்காட்சியில் வரும் உலக செய்திகளையோ அல்லது கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையோ பார்த்துவிட்டு ஜெபத்திற்காக உங்கள் முழங்கால்களை தேவ சமூகத்தில் முடக்குங்கள். உங்களால் ஜெபிக்க முடியாமல் தேவனுடைய பிரசன்னம் உங்களை விட்டு விலகியிருப்பதை நீங்கள் நிச்சமயமாக உணருவீர்கள். நீங்களே உங்கள் மட்டாக இதை சோதித்துப் பார்த்து நலமானதை தெரிந்து கொள்ளுங்கள்.
தொலைக்காட்சியை விட நம் ஆத்துமாவுக்கு அதிக கேடு விளைவிக்கக்கூடிய ஒரு சாதனம் உண்டு. அதுதான் நெட் வசதியுள்ள நமது கம்பியூட்டர் ஆகும். கம்பியூட்டரில் வலைத்தளத்தை (Internet) நீங்கள் திறந்துவிட்டால் நீங்கள் விரும்பிய எந்த ஒரு தகவல்களையும் அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். Youtube.com, Godtube.com, Google.com போன்றவைகளை நீங்கள் திறந்து பார்த்தால் ஆழம் காணா பெருஞ்சமுத்திரமாக உலகச் செய்திகளும், கிறிஸ்தவ செய்திகளும் நிறைந்து கிடக்கின்றன. FaceBook.com என்றழைக்கப்படும் வதன நூல் அல்லது முகநூல் வலைத்தளத்தை நாம் திறந்தால் நமது விலையேறப்பெற்ற நீண்ட மணி நேரங்களை மலைப்பாம்பு, மானை விழுங்குவது போல தந்திர சாத்தான் நிதானமாக விழுங்கி ஏப்பமிடுவதை கண்கூடாகக் காணலாம். எண்ணிலடங்கா குறும் படங்கள் இங்கே உண்டு. அதில் கிறிஸ்தவ படங்களும் ஏராளம், ஏராளம் உண்டு, நமது ஆத்துமாவை கறைப்படுத்தி அழிக்கக் கூடிய கொடிய ஆபாச படங்களும் இங்கு உண்டு. இந்த நச்சுப்படங்கள் எண்ணற்ற இளைஞர்களை இன்று உலகம் முழுமையிலும் அழித்துக் கொண்டிருக்கின்றன. தேவனுடைய கோபத்திற்கு ஏதுவானவர்கள் இதிலே விழுந்து அழிவது திண்ணம். ஆனால், ஆண்டவருடைய மெய்யான தேவ மக்கள் இவைகளை எல்லாம் கண்ணேறிட்டுக் கூட பார்க்காமல் மோட்ச பிரயாணி கிறிஸ்தியானைப்போல தன் காதுக்குள் விரலை இட்டுக்கொண்டு, ஜீவனே! நித்திய ஜீவனே! என்று கதறிக்கொண்டு தீவிரமாக ஓடி தப்பித்துக் கொள்ளுவார்கள்.
செய்தித்தாட்கள்
எனது கிறிஸ்தவ வாழ்வில் செய்தி தாட்கள் வாசிப்பு நீண்ட நெடுங்காலமாக இடம் பெற்றிருந்தது. நான் பெரும்பாலும் ஆசை ஆவலாக வாசித்தது (The Hindu) “தி இந்து” என்ற ஆங்கில தினசரி பத்திரிக்கையாகும். சொல்லப்போனால் கர்த்தருடைய கிருபையால் இந்த பத்திரிக்கை தான் நான் ஆங்கிலத்தில் என் அறிவைப் பெருக்கிக் கொள்ள எனக்கு உறுதுணையாக இருந்தது. இந்தப் பத்திரிக்கையில் வந்த சில பிரயோஜனமான கிறிஸ்தவ செய்திகளை மொழி பெயர்த்து நமது தேவ எக்காளம் பத்திரிக்கையிலும் கூட கடந்த நாட்களில் நான் வெளியிட்டிருக்கின்றேன். இந்த பத்திரிக்கையின் மேல் உள்ள என்னுடைய அதிகமான ஆவலின் காரணமாக எனது திருமண நாளன்று கூட அந்தப் பத்திரிக்கையை நான் வாங்கி வந்து வாசித்தேன் என்றால் எனது வெறியான ஆவலை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளுவீர்கள்.
உண்மைதான், செய்தி தாளில் ஒருவருக்கு அதிக ஆசை வந்துவிட்டால் அது எங்கெல்லாமோ நம்மைக் கொண்டு சென்றுவிடும். ஒரு குருவானவர் அந்த கட்டுக்கடங்கா ஆவலின் காரணமாக ஒரு நாள் காலையில் தனது செய்தி தாளுடன் கழிப்பறைக்குச் சென்று அங்கே அதை வாசித்துக் கொண்டிருந்தார். அங்கேயே அவருக்கு சடுதியான மாரடைப்பு ஏற்பட்டது. கதவைத் திறந்து பார்த்தபோது அவர் தனது செய்தி தாளுடன் தரையில் வீழ்ந்து மரித்துக் கிடந்தார்.
இந்த நாட்களில் செய்தி தாட்களில் வரும் செய்திகள் நம்மை கதி கலங்கப்பண்ணுவதாக இருக்கின்றன. அதைக் குறித்து நான் இங்கு உங்களுக்கு கூடுதலாக விளக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதை நாம் வாசித்தால் நமது சிந்தை நிலை குலைந்து நமது இராக்கால தூக்கம் நிச்சயமாகவே கலைந்து போகும். நாம் நினைத்தே பார்க்க முடியாத அந்த அளவுக்கு உலகம் கொடுமையினால் நிறைந்துள்ளது. “பூமியானது கொடுமையினால் நிறைந்தது” (ஆதி 6 : 13 ) என்று தேவனுடைய வார்த்தை அதை உறுதிப்படுத்திக் கூறுகின்றது.
செய்தி தாள் வாசிப்பை விடும்படியாக ஆண்டவர் நீண்ட நாட்களாகவே என்னுடன் பேசி வந்தார். ஆனால், நான் அவருக்கு கீழ்ப்படிய மிகவும் தாமதித்தேன். கொஞ்ச நாட்கள் விடுவேன்.
பின்னர் எரிமலை அவ்வப்போது கொந்தளித்துப் பொங்குவது போல என் உள்ளத்தில் எழும்பும் ஆசை ஆவலால் திரும்பவும் பேப்பர் கடைக்குச் சென்று செய்தி தாளை வாங்கி வந்து வாசிப்பேன். சில தினங்கள் அந்த வாசிப்பு தொடரும். பின்னர் நான் அதை நிறுத்துவேன். இறுதியாக, கர்த்தருடைய பேரன்பால் அதற்கு நிரந்தரமான ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன். ஒரு காலத்தில் நான் வாசித்த பழைய பேப்பர்களை கில்லோ கணக்காக மளிகைக் கடையில் போடுவேன். இப்பொழுது கிறிஸ்தவ புத்தகங்களை சுற்றி தபாலில் அனுப்ப தேவையான பழைய பேப்பர்களுக்காக மளிகைக் கடையில் பழைய பேப்பரை விலைகொடுத்து வாங்குகின்றேன். அது எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது.
உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது.? நம் தமிழ் நாட்டின் காரியங்கள் என்ன என்று நான் எவரையும் கேட்பதில்லை. அதில் எனக்கு எந்த ஒரு ஆசையும், விருப்பமும் இல்லாமற் போயிற்று. யாராவது ஒரு தேவப்பிள்ளை சமயாசமயங்களில் நாட்டின் செய்திகளைத் தாங்களாகவே என்னிடம் கூறுவார்கள். செய்தியின் தொடர்ச்சி, அல்லது அதின் முடிவு என்ன என்று நான் அவர்களை ஒருக்காலும் திரும்பவும் கேட்பதே இல்லை.
கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து தொலைக்காட்சி, செய்தி தாட்களை விலக்கியிருப்பதால் எனது ஜெப வேளை எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றது. அன்பின் ஆண்டவருடைய நிறைவான தேவப்பிரசன்னத்தை ஜெப வேளைகளிலும், இதர சமயங்களிலும் அதிகமாக நான் உணருகின்றேன். இதைக் கருத்தோடு வாசிக்கின்ற தேவப்பிள்ளையாகிய உங்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ளுவது என்னவெனில் என்னைப்போல நீங்களும் தேவ பெலத்தால் தொலைக்காட்சி, செய்தி தாட்களுக்கு உங்களை விலக்கிக் காத்துக்கொள்ளுங்கள்.
மரித்தோரையும் கூட உயிரோடு எழுப்பிய இங்கிலாந்து தேச பரிசுத்த அப்போஸ்தலன் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்தை காண்பதற்காக ஒரு மனிதர் அவருடைய வீட்டிற்கு ஒரு சமயம் வந்தார். வீட்டிற்கு சற்று தூரத்தில் வரும்போதே அந்த மனிதரின் கரத்தில் செய்தி தாள் இருப்பதை தேவ மனிதர் எப்படியோ கண்டு கொண்டுவிட்டார். எனினும், அந்த மனிதரின் கரத்தில் இருப்பது என்ன என்று குரல் எழுப்பி விக்கிள்ஸ்வொர்த் கேட்டார். அன்றைய நாளின் செய்தி தாள் என்றுஅந்த மனிதர் பதில் சொன்னபோது “அந்த தீட்டை வெளியே வீசி எறிந்து விட்டு வீட்டிற்குள் வாருங்கள்” என்று விக்கிள்ஸ்வொர்த் அவரை அன்புடன் கேட்டுக் கொண்டார். ஆம் உண்மைதான், செய்தி தாட்கள் தீட்டுதான். அது நமது விலையேறப்பெற்ற ஆத்துமாவைச் சூழ்ந்திருக்கும் தேவனுடைய பரிசுத்த பிரசன்னத்தை உடனே அப்புறப்படுத்தி இருளின் அந்தகாரத்தை கொண்டு வந்து விடும். நன்றாக செய்தி தாள் வாசித்துவிட்டு தேவ சமூகத்தில் ஜெபிப்பதற்காக நீங்கள் முழங்காலூன்றுங்கள். உங்களால் இருதயத்தை ஒருமுகப் படுத்த முடியாமல் திகைப்பதை நீங்களே உணருவீர்கள். சாமுவேல் அமலேக்கின் ராஜா ஆகாகை கில்காலில் கர்த்தருக்கு முன்பாக துண்டித்துப்போட்டது போல (1 சாமுவேல் 15 : 33) நீங்களும் தேவனுடைய பரலோக உறவிலிருந்து உங்களை வேறு பிரிக்கும் தொலைக்காட்சி பார்த்தல், கம்பியூட்டர் இணைய தளத்தில் முகநூல் பார்த்தல், செய்தி தாட்கள் வாசித்தல் போன்றவற்றை தேவ பெலத்தால் கர்த்தருக்கு முன்பாகத் துண்டித்துப்போடுங்கள். நிறைவான பரலோக தேவ ஆசீர்வாதம் காண்பீர்கள். அல்லேலூயா.