தேவ ஜனமே, உனக்கு முன்பாக உள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்!
ஆர்தர் ஸ்டேஸ் (ARTHUR STACE) என்ற மனிதர் 1884 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தகப்பனார் ஊறிப்போன ஒரு குடிகாரன். அவருடைய குடும்பம் ஒருக்காலும் வீட்டிலே குடியிருந்ததில்லை. குடியிருக்க வீடு வாசல் இல்லாத காரணத்தால் அவர்கள் தெருக்களில்தான் குடியிருந்தனர். தெருக்களிலுள்ள வீடுகளில் முந்தின இராக்காலத்தில் கதவண்டையில் வைக்கப்படும் ரொட்டி மற்றும் பால் போன்ற பொருட்களை மேற்கண்ட குடும்பத்தின் குழந்தைகள் தங்களுடைய காலை ஆகாரத்திற்காகத் திருடினார்கள்.
நம்முடைய ஆர்தர் ஸ்டேசும் தனது தந்தையைப் போலவே முழுமையான குடிகாரனாக மாறி தெருக்களில்தான் வசித்து வந்தார். ஆர்தர் தம்முடைய 40 ஆம் வயது பிராயத்தில் இருந்தபோது பசியாயிருக்கும் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவுஅளிக்கின்ற ஒரு மிஷன் தேவாலயத்திற்குச் சென்றார். இலவசமாக வயிறார அங்கு உணவு உட்கொண்டார். அந்த நாளின் இராக்காலத்தில் குருவானவர் தேவ ஆலயத்தில் சர்வ வல்ல தேவனைக்குறித்து பிரசங்கித்த தேவ செய்தியை ஆர்தர் கவனமாகக் கேட்டார். அதின் காரணமாக அவர் அந்த இராக்காலத்திலேயே இனி கர்த்தருக்கென்று தான் வாழப் போவதாக திட்டமான தீர்மானம் எடுத்தார். அன்றிலிருந்து அவர் தமது குடிப்பழக்கத்தை முற்றுமாக விட்டுவிட்டு செஞ்சிலுவை சங்கத்தில் ஒரு வேலையில் அமர்ந்தார். ஆர்தர் எழுதப்படிக்கத் தெரியாத கல்வி ஞானமற்ற மனிதராக இருந்தமையால் செஞ்சிலுவை சங்கத்தில் கிடைத்த வேலையும் ஓர் கீழான வேலையாகத்தான் இருந்தது.
இதற்குப்பின் சில காலம் கழித்து 1930 ஆம் வருஷத்தின் பிந்திய பகுதியில் “நித்தியத்தை” குறித்து பிரசங்கித்த ஒரு பிரசங்கியாரின் பிரசங்கத்தை ஆர்தர் கேட்டார். “ஆஸ்திரேலியாவின் தலை நகர் சிட்னி பட்டணத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதரிடத்திலும் “நித்தியம்” “நித்தியம்” என்று நான் என் தொண்டை கிழிய சத்தமிட ஆசைப்படுகின்றேன் என்று பிரசங்கியார் தனது பிரசங்கத்தில் உள்ளமுருகிக் கதறினார். “முடிவில்லா நித்தியத்துடன் மாந்தரின் வாழ்நாட் காலத்தை ஒப்பிடும்போது அது எத்தனை, எத்தனை குறுகியது. எனவே, பூமியில் வாழும் ஒவ்வொரு நாளையும் தனது வாழ்வின் கடைசி நாள் என்று எண்ணி கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடும், நடுக்கத்தோடும் மனிதன் ஜீவிப்பது எத்தனை தீராத அவசியமானது” என்று பிரசங்கியார் தொடர்ந்து பேசினார்.
அந்த தேவச்செய்தியைக் கேட்ட ஆர்தர் மேலே குறிப்பிட்ட பிரசங்கியாரின் ஆசை ஆவலை பூர்த்தி செய்ய தேவன் தன்னைத் தெரிந்து கொண்டார் என்ற முழுமையான நிச்சயத்தோடு அந்தக் கூட்டத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆர்தர், ஒரு சாக்பீசை (கரும் பலகையில் எழுதும் சீமைச்சுண்ணாம்பு குச்சி) கண்டெடுத்து அதை தேவனிடம் காண்பித்து “ஆண்டவரே, இந்த சாக்பீசைக்கொண்டு “நித்தியம்” என்ற வார்த்தையை ஒரு காங்க்ரீட் நடைபாதையில் எழுத எனக்கு உதவி செய்யும்” என்று ஜெபித்துவிட்டு எழுதினார். எத்தனை ஆச்சரியம்! “நித்தியம்” என்ற வார்த்தை அழகான வடிவமைப்பில் காங்க்ரீட் நடை பாதையில் காணப்பட்டது.
அடுத்து வந்த கொஞ்ச வருட காலம் ஒவ்வொரு நாள் இரவும் யாரும் அறியாமல் சிட்னி பட்டணத்தின் தெருக்களுக்கு ஆர்தர் நழுவிச் சென்றார். தான் இளைஞனாக இருந்தபோதும் அவர்அப்படி அந்தப் பட்டணத்தின் தெருக்களுக்கு நழுவிச் செல்லுவதுண்டு. ஆனால், முந்தைய ஆண்டுகளில் இளைஞனான அவர் குடித்து வெறிப்பதற்கும், திருடுவதற்கும், தான் நித்திரை செய்வதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டு பிடிப்பதற்கும் செல்லுவார். ஆனால், இப்பொழுது அவர் “நித்தியம்” என்ற வார்த்தையை நமது இந்தியாவின் சென்னைப் பட்டணம் போன்ற பட்டணத்திற்குச் சமமான ஒரு மாபெரும் பட்டணத்தின் தெருக்கள் அனைத்திலும் எழுதும் ஒரு முக்கியமான தேவப்பணியை நிறைவேற்றும் தேவ நோக்கத்தோடு செல்லுகின்றார்.
சிட்னி பட்டண மக்கள் யாவரும் “நித்தியம்” என்ற அந்த ஆச்சரியமான வார்த்தையைக் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆர்தர் தனது எழுத்துப்பணியை மிகவும் உண்மையாகச் செய்ததால் எந்த ஒரு மழைக்குப் பின்னரும், தெருக்களை சுத்தம் செய்வோர் எத்தனை தான் தண்ணீர் அடித்து சுத்தம் செய்தபோதினும் அந்த “நித்தியம்” என்ற எழுத்துக்கள் துலக்கமாகத் தெரிந்தன. ஆர்தர் ஸ்டேஸ் இராக்காலங்களில் தனது சாக்பீசால் தனது பிடித்தமான “நித்தியம்” என்ற வார்த்தையை அழுத்தமாக அழகாக எழுதிக் கொண்டிருக்கும் போது வெகு சிலர் மாத்திரமே பார்த்திருக்கின்றனர். ஆனால், அவர் யார்? அவர் பெயர் என்ன? அவர் எங்கு வசிக்கின்றார்? என்ற விபரம் எதுவும் அவர்களில் எவருக்கும் தெரியாது. ஆஸ்திரேலியாவிலுள்ள செய்தி தாட்கள் அவருக்கு திருவாளர் நித்தியம் என்று பெயர் சூட்டி அழைத்தன. ஆர்தர் ஸ்டேஸ் “நித்தியம்” என்ற வார்த்தையை எழுதிக்கொண்டிருக்கும் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
ஆர்தர் தனது “நித்தியம்” என்ற வார்த்தையை தெருக்கள், திண்ணைகள், வீதிகள் போன்ற இடங்களில் மாத்திரம் அல்ல, வெகு அசாதாரணமான இடங்களிலும் எழுதினார். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று, சிட்னி பட்டணத்தின் டவுண்ஹால் மணிக் கூண்டாகும். டவுண்ஹால் கோபுரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த பெரிய மணி அந்தக் குறிப்பிட்ட நாள் இராக்காலம் கீழே தரையில் தான் இருந்தது. அடுத்த நாள் காலைதான் அந்த மணியை புதிய மணிக்கூட்டுக்கு உயர்த்த தீர்மானித்திருந்தனர். அந்தப் பெரிய மணிக்கு உட்புறமாக ஆர்தர் தனது கை வண்ணத்தைக் காட்டி “நித்தியம்” என்ற எழுத்தை சாக்பீசால் யாரும் காணாதவாறு அந்த இராக்காலத்தில் அச்சரமாக எழுதிவிட்டுச் சென்றார். 60 ஆண்டுகள் கடந்துவிட்ட போதினும் அந்த எழுத்து இன்று வரை அப்படியே இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
பல்லாண்டு காலம் ஆர்தர் இவ்வண்ணமாக “நித்தியம்” என்ற வார்த்தையை சிட்னி பட்டணத்தின் தெருக்களிலே இரகசியமாக எழுதிக்கொண்டிருந்தார். இதன் பின்னர் ஒரு நாள் ஒரு தேவ ஆலயத்தின் வெளிப்புற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஒரு நண்பர் “நித்தியம்” என்ற வார்த்தை மேற்கண்ட தேவ ஆலயத்தின் குறுக்கு வழித்தடத்தில் எழுதப்பட்டிருப்பதையும் ஆலய ஆராதனை நடந்து கொண்டிருந்த சமயம் ஆர்தர் ஸ்டேஸ் அதின் அருகே நின்று கொண்டிருப்பதையும் கவனித்தார். “நீங்கள்தான் திருவாளர் நித்தியமா?” என்று மேற்கண்ட மனிதர் ஆர்தரைக் கேட்டார். இனி தனது உண்மை நிலையை மூடி மறைக்க முடியாது என்பதை உணர்ந்த ஆர்தர், தனது உள்ளத்தில் குற்ற உணர்வுடன் “மேன்மை தங்கிய கனவானே, அந்த திருவாளர் நித்தியம் நானேதான்” என்று பதில் கூறினார். அத்துடன் அந்த மனிதரைப்பார்த்து “இந்தக் காரியத்தை இரகசியமாக உங்கள் மட்டாக வைத்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து யாருக்கும் சொல்லி விடாதேயுங்கள்” என்று அவரை மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அதற்குள்ளாக அந்த வார்த்தை ஆலய குருவானவருடைய காதுகளுக்கு எட்டவே அவர் நமது ஆர்தரைப் பார்த்து பத்திரிக்கை அலுவலகங்களுக்குச் சென்று தனது வாழ்க்கை சரிதையை கூறும்படிச் சொன்னார். ஆஸ்திரேலியாவின் செய்தித்தாட்கள் ஆர்தரை வெகு அன்போடு வரவேற்று அவரை ஒரு மறக்கமுடியாத சரித்திரமாகவே செய்துவிட்டன. பத்திரிக்கையாளர்கள் ஆர்தர் ஸ்டேசின் வாழ்க்கை வரலாற்றை வெகு தெளிவாகக் கேட்டறிந்து “நித்தியம்” என்று யாரும் அறியாவண்ணம் இத்தனை நீண்ட ஆண்டு காலம் எழுதிக்கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும் அந்த வார்த்தை அவரது வாழ்க்கையை எப்படி இவ்வண்ணமாக எழுதும்படி ஏவிவிட்டது? என்றும் கேட்டு தெளிவான விளக்கம் பெற்றுக் கொண்டனர். இப்பொழுது, ஆர்தர் ஸ்டேஸ், ஆஸ்திரேலியா நாட்டின் புகழ்பெற்ற மனிதராக வெகு கண்ணியமாக மதிக்கப்பட்டார். கடந்து சென்ற ஆண்டுகளில் மற்ற மனிதருக்கு பயந்து இராக்காலங்களில் மாத்திரம் தனது இருதயத்திற்குகந்த “நித்தியம்” என்ற வார்த்தையை எழுதினது போல ஆர்தர் இனி எழுத வேண்டிய அவசியமில்லாமற் போயிற்று. இப்பொழுது அவர் தனது மனவிருப்பப்படி சிட்னி பட்டணத்தில் மாத்திரம் அல்ல, ஆஸ்திரேலியாவின் எந்த ஒரு பட்டணத்தின் எந்த ஒரு தெருவிலும் சென்று எழுத அரசாங்கம் அவருக்கு பூரண அனுமதி கொடுத்தது. அவரது அந்த பரிசுத்தமான பணியை இனி ஆஸ்திரேலியா போலீசார் கூட தடுக்கவியலாது.
அந்த பொன்னான வாய்ப்பை நமது ஆர்தர் ஸ்டேஸ் நல்லவிதமாக பயன்படுத்திக்கொண்டார். உடனடியாக தனது அற்பமான உலக வேலையை விட்டுவிட்டு தனக்கு மாதந்தோறும் கிடைத்த சொற்பமான முதிர் வயது பென்சன் பணத்தைக்கொண்டு வாழ்ந்தபடியே தனது பரிசுத்தமான தேவ ஊழியத்தைத் தொடர்ந்தார்.
1967 ஆம் ஆண்டு தமது 83 ஆம் வயது நிறைவடையும் போது ஆர்தர் ஸ்டேஸ் “நித்தியம்” என்ற வார்த்தைய 5 (ஐந்து) லட்சம் தடவைகள் சாக்பீசால் எழுதி முடித்திருப்பது கணக்கிடப்பட்டது. சித்திரக் கலைஞன் என்றும், சிறந்த பாடலாசிரியர் என்றும் மக்கள் அவரை புகழ்ந்து பேசினர். ஆர்தர் முழுமையானதொரு கல்லா பேதையாயினும் ஒரு பத்திரிக்கை ஆசிரியர் அவரை ஆஸ்திரேலியா நாட்டின் சிறப்பான எழுத்தாளர்களில் ஒருவர் என்று கூறினார். ஆர்தரைப்பற்றி ஆஸ்திரேலிய மக்கள் பாடல்கள் எழுதலாயினர். நாவலாசிரியர்கள் தங்கள் நவீனங்களில் அவரது பெயரைக் குறிப்பிட்டனர். புலவர்கள் தங்கள் பாடல்களிலும், அறிவு ஜீவிகள் தங்களது அற்புத இலக்கிய படைப்புகளிலும் அவருக்கு சிறந்த இடம் அளித்தனர்.
ஆர்தர் ஸ்டேஸ் என்ற அந்த தேவ பக்தன் இறந்து பல்லாண்டு காலம் கடந்து சென்ற பின்னரும் அவர் விட்டுச் சென்ற முடிவில்லாத நித்தியத்தை குறித்த அவரது சாக்பீஸ் தேவச்செய்தி இன்றும் சிட்னி பட்டணத்தில் நிலைத்திருக்கின்றது. மனிதனின் வாழ்நாட்காலம் எத்தனை குறுகியது என்றும் அந்த குறுகிய வாழ்நாட் காலத்தில் அவன் தனது ஆத்தும இரட்சிப்புக்கும், தனது இரட்சா பெருமானுக்கும், தனது சகமாந்தருக்கும் தன்னாலியன்றதை செய்து முடித்துவிட வேண்டும் என்ற காரியத்தை அந்த கல்வி அறிவற்ற ஏழை தேவ மனிதனின் வாழ்க்கை பலமாக பறைசாற்றுவதாக உள்ளது.
வாசிப்போனே, நித்தியம் எவ்வளவு நீளமானது? நீ உனது நித்தியத்தை எங்கே செலவிடப்போகின்றாய்?
மேலே நாம் கண்ட ஆர்தர் ஸ்டேஸ் என்ற தேவ மனிதர் பல்லாண்டு காலமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி பட்டணத்திலும் மற்றும் இதர பட்டணங்களிலும் “நித்தியம்” என்ற வார்த்தையை 5 லட்சம் தடவைகள் பைத்தியக்காரனைப் போல எழுதினாரே, அந்த நித்தியம் எவ்வளவு நீளமானது என்று உங்களுக்குத் தெரியுமா? நித்தியத்தின் முடிவில்லா தன்மையைக் குறித்து பல உதாரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்றை மட்டும் நான் இங்கு குறிப்பிட ஆசைப்படுகின்றேன்.
100 மைல்கள் நீளம், 100 மைல்கள் அகலம், 100 மைல்கள் உயரமுள்ள ஒரு மா பிரமாண்டமான இரும்பைப் போன்ற கருங்கல் பாறைக்கு 1000 ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒரு சின்னஞ்சிறு அடைக்கலான் குருவி வந்து தனது சிறிய அலகால் அந்தப் பாறையை ஒரு தீட்டு தீட்டிவிட்டுச் செல்லும். இப்படி ஒவ்வொரு 1000 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அந்த அடைக்கலான்குருவி திரும்பத் திரும்ப அந்தப் பாறைக்கு வந்து, வந்து தனது சின்னஞ்சிறு அலகால் அந்தப் பாறையை உராய்ந்து, உராய்ந்து அதை இருந்தஇடம் தெரியாமல் செய்துவிடுமானால் அப்படி அந்தப் பாறையை முழுமையாக தீட்டிக் கரைத்து விட்ட நாள்தான் முடிவில்லாத நித்தியத்தில் ஒரே ஒரு நாளாகும். நன்றாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு அடைக்கலான்குருவியின் அலகு எவ்வளவு சிறியது! அந்தச் சின்ன அலகால் அந்த 100 மைல்கள் நீள, அகல, உயரம் கொண்ட கருங்கற் பாறையை தீட்டி கரைக்க முடியுமா? முற்றும் முடியாத காரியம். அவ்வளவு பெரிய பிரமாண்டமான பாறை எதற்கு? சிறுவர்கள் விளையாடும் ஒரு சிறிய கோலி உருண்டை அளவான கல்லைக்கூட அதினால் தீட்டிக் கரைக்க முடியாது. எத்தனை கோடானு கோடி ஆண்டுகள் ஆனாலும் அந்தப் பாறை அப்படியேதான் அங்கிருக்கும். அப்படி அதை தனது அலகால் 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து தீட்டி, தீட்டி கரைத்துவிட்டாலும் கூட அதின் ஆண்டுகளை தாட்களிலே எழுதி கணக்கிட மனிதனால் முடியுமா? அப்படி கணக்கிட்டால் அந்த வருடங்கள் எத்தனையோ கோடானு, கோடானு கோடி வருடங்களாக இருக்குமல்லவா? அந்த கோடானு கோடி வருடங்கள்தான் முடிவில்லா நித்தியத்தில் ஒரே ஒரு நாளாம். நித்தியம் முடிவில்லாதது என்பதை நமக்கு விளக்கிக் காண்பிக்கவே இந்த உதாரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆ, நித்தியமே! ஐயோ முடிவில்லா நித்தியமே!!
சத்துருவாகிய தந்திர பிசாசு இரண்டு காரியங்களைக் குறித்து சிந்திக்கவிடாமல் மாந்தரின் மனக் கண்களை அப்படியே குருடாக்கி வைத்திருக்கின்றான். அந்த இரண்டு காரியங்களை அவன் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கிவிட்டால் அவன் தேவனுடைய பிள்ளையாக மாறி பரிசுத்த ஜீவி ஆகிவிடுவான் என்பது சாத்தானுக்கு நன்கு தெரியும். அவை யாதெனில், ஒன்று மனிதனை அவன் நினையாத நேரத்தில் சந்திக்கும் அவனது மரணம். மற்றொன்று மரணத்துக்குப்பின்னர் அவனது ஆத்துமா வாழப்போகின்ற முடிவில்லாத நித்தியம். வாசிப்போனே, விழிப்படைந்து கொள். இன்று நீ மரித்தால் உனது ஊழி ஊழி காலமான, காலம்காட்டும் கடிகாரமில்லாத முடிவே இல்லாத நித்தியத்தை எங்கே செலவிடுவாய்? ஆண்டவர் இயேசுவை நீ உனது வாழ்வின் சொந்த இரட்சகராக ஏற்று, உனது பாவங்களுக்காக மனங்கசந்து அழுது, கண்ணீர் சிந்தி, பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்று, யோவான் 3 : 3 ன்படி மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தை கண்டடைந்து தினந்தோறும் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமுள்ளதொரு வாழ்க்கை நடத்தி, மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல உனது ஆத்துமா எப்பொழுதும் தேவனை வாஞ்சித்து கதறிக்கொண்டிருக்கும் ஒரு ஆத்துமாவாகவும், தேவன் ஒருவரைத் தவிர பூலோகின் எந்த ஒரு மாயைகளிலும் உனக்கு விருப்பம் இல்லாதிருக்கும் பட்சத்தில் (சங் 42 : 1, சங்கீதம் 73 : 25)
நீ உனது யுகாயுகமான, முடிவு என்று ஒன்று இல்லாத நீண்ட நீண்ட நித்தியத்தை ஆண்டவர் இயேசுவோடும், அவரது பரிசுத்தவான்கள், தீர்க்கர்கள், இரத்தசாட்சிகள், திரள் சேனை தேவ பக்தர்கள், பரம சேனையான தேவ தூதர்களோடும் கைவேலையில்லாத நித்திய பேரின்ப வாசஸ்தலங்களில் ஆனந்தக் களிப்போடு செலவிடுவாய். தேவன் உன்னை தனது மார்போடு அணைத்து உனது கண்ணீர் யாவையும் துடைப்பார். எந்த ஒரு சூழ்நிலையிலும் உனது நீண்ட நித்தியம் பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப் பட்டிருக்கும் அக்கினியும், கந்தகமும் கலந்து எரியும் நரக பாதாள தீச்சூழைக்குள் செலவிடாதபடிக்கு மகா விழிப்போடும், பயத்தோடும், நடுக்கத்தோடும் உன் ஆத்துமாவைக் காத்துக்கொள். தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணியுள்ள இன்ப பரதீசில் உனது நீண்ட நித்தியம் ஆனந்தக் களிப்போடு செலவிடப்பட தேவன் தாமே உனக்கும், எனக்கும் தயை புரிவாராக. ஆமென்.