தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய “தேவ எக்காளம்” பத்திரிக்கை
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. அன்பின் ஆண்டவருடைய திட்டவட்டமான ஆலோசனையின்படி தேவ எக்காளம் பத்திரிக்கையை நான் 1968 ஆம் ஆண்டு தொடங்கினேன். தேவ ஜனத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்கு அனுகூலமாக அதை ஆரம்பிக்க விரும்பியபோது அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை நான்அதிகமாக தேவ சமூகத்தில் யோசித்துக் கொண்டிருக்கையில் ஒரு தேவ ஊழியரின் விருப்பப்படி அதற்கு “தேவ எக்காளம்” என்ற பெயரை வைத்தேன்.
அந்த நாட்களில் நம் தமிழ் நாட்டில் இன்றைக்கு உள்ளது போல திரள் திரளான கிறிஸ்தவ தமிழ் பத்திரிக்கைகள் எதுவும் கிடையாது. விரல்விட்டு எண்ணக்கூடிய “வருகையின் தூதன்” “நல்ல சமாரியன்” “வேத ஆராய்ச்சி மாலிகை” “புத்துயிர்” “உயிர் மீட்சி” “சுவிசேஷ பிரபல்லிய வர்த்தமானி” போன்ற கொஞ்சம் பத்திரிக்கைகளே இருந்தன.
1968 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் நான் தேவ எக்காளத்தை ஆரம்பித்த போது வெறும் ஆறு மட்டமான தாட்களில் 12 பக்கங்களில் அது வெளி வந்தது. பாளையங்கோட்டையிலுள்ள “பென்ட்லாண்ட்” அச்சுக்கூடத்தினர் அதை நமக்கு அச்சிட்டுத் தந்தார்கள். அதின் பின்னர் நீண்ட ஆண்டுகளாக “வருகையின் தூதன்” பத்திரிக்கைக்குச் சொந்தமான நாகர்கோவிலிலுள்ள “தூதன்” அச்சுக்கூடத்தினர் நமது தேவ எக்காளத்தை அச்சிட்டார்கள். அதற்கப்பால் வாணியம்பாடியிலுள்ள “கண் கார்டியா” மற்றும் சென்னையிலுள்ள “பாபுஜி ” அச்சகத்தினர் எல்லாம் தேவ எக்காளத்தை சில காலம் மட்டும் அச்சிட்டார்கள். அதற்கப்பால் வெகு சிறப்பாக பல்லாண்டு காலமாக “குன்னூர் பிரிண்டிங் பிரஸ்” அச்சகத்தார் நமது அச்சுப்திப்பு வேலையை செய்து தந்து கொண்டிருக்கின்றார்கள்.
வெறும் 6 கந்தை தாட்களில் அச்சாக ஆரம்பித்த தேவ எக்காளம் நாளடைவில் நிறைவான பக்கங்களுடன் நல்ல பழபழப்பான ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்டு வெளி வந்தது. ஒவ்வொரு தேவ எக்காளமும் விலையுயர்ந்த காகிதத்தில் வண்ண வண்ண முகப்பு அட்டையுடன் சிறப்பாக அச்சிடப்பட்டு ஆண்டாண்டு காலமாக வெளி வந்ததை தேவப்பிள்ளைகள் நன்கு அறிவார்கள்.
குறைவான பக்கங்களுடன் பல்லாயிரக்கணக்கான பத்திரிக்கைகளை அச்சிட்டு மேல் உறை கூட ஒட்டாமல் முகவரி லேபலை மட்டும் ஒட்டி ஏனோதானோ என்று நிர்விசாரமாக பத்திரிக்கைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மக்களை இந்த நாட்களில் நாம் துயரத்துடன் கவனிக்கின்றோம். ஆனால், கர்த்தருடைய கிருபையால் தேவ எக்காளத்தை உங்களண்டை சுமந்து கொண்டு வந்த அதின் கவருக்கு கூட ஒரு விலை இருந்தது. கர்த்தருக்கே மகிமை. நீண்ட 46 ஆண்டு கால தேவ எக்காள வெளியீட்டில் பணத்தேவைகள் குறித்து எதுவும் குறிப்பிடாமல், எனது வங்கி கணக்கு எண்ணை ஒரு தடவை கூட தேவ எக்காளத்தில் எழுதாமல், எனது தொலைபேசி நம்பரை ஒருக்காலும் தெரிவிக்காமல், எனது புகைப்படங்களை அதிகமாக வெளியிடாமல் அன்பின் ஆண்டவரை மாத்திரம் தேவ ஜனத்திற்கு உயர்த்திக் காண்பிக்க கிருபை பெற்றேன். பரிசுத்த பக்த சுரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை கடந்தகால நாட்களில் சுமந்து வந்த தேவ எக்காள பிரசுரங்கள் சிலவற்றைப் படத்தில் நீங்கள் காண்பீர்கள்.











“தேவ எக்காளம் – தேவனுடைய பத்திரிக்கை” என்ற தலைப்பில் 40 ஆம் ஆண்டு தேவ எக்காள ஸ்தோத்திர மலரில் நான் எழுதியுள்ள செய்தியை தேவ நாம மகிமைக்காக திரும்பவும் நான் இங்கு எழுத விரும்புகின்றேன். அது உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும்.
தேவ எக்காளம் தேவனுடைய பத்திரிக்கை என்று குறிப்பிட்டு எனக்கு கடிதம் எழுதும் தேவப்பிள்ளைகள் உண்டு. உண்மைதான், தேவ எக்காளம், தேவனுடைய பத்திரிக்கைதான். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. தேவ எக்காளம், ஜீவனுள்ள பரிசுத்த தேவனை மாத்திரம் உயர்த்திக்காண்பிக்கும் பத்திரிக்கை. முழுமையாக அவருடைய பரிசுத்த நாமத்தை மட்டும் மகிமைப்படுத்தும் ஒரு பத்திரிக்கை. மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், சிலுவையையும், சிலுவைப்பாதையையும் தேவ ஜனத்திற்கு பிரசங்கிக்கும் பத்திரிக்கை. ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய கடந்த கால பாவ அக்கிரமங்களுக்காக தன் மார்பில் அடித்துப் புலம்பி நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு தேவ சமூகத்தில் தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்று யோவான் 3 : 3 ன்படி மறுபடியும் பிறந்த திட்டமான புது சிருஷ்டிப்பின் (2 கொரி 5 : 17) பரலோக அனுபவத்துக்குள் வந்தே ஆகவேண்டும் என்பதை எந்த ஒரு சாக்குப்போக்குக்கும் இடமின்றி திட்டமும் தெளிவுமாக அடித்துக்கூறும் பத்திரிக்கை. பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை (எபிரேயர் 12 : 14) என்பதை அடிக்கோடிட்டுக் காண்பிக்கும் பத்திரிக்கை. ஒரு மெய்க் கிறிஸ்தவன் இந்த உலக வாழ்வில் பாடுகளையும், துன்பங்களையும், துயரங்களையும், கண்ணீர்களையும், உபத்திரவங்களையும் அனுபவித்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு கண்ணீர் நிறைந்த கண்களோடு தன் பரம பிதாவின் நித்திய விண் வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும் (உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு (யோவான் 16 : 33) நாம் அநேக உபத்திரவங்களின் வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் (அப் 14 : 22) என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறும் பத்திரிக்கை. இந்த உலக வாழ்வில் நோய் நொடிகளின்றி, சீரும் சிறப்புமாக, செல்வச் செழிப்பில் மிதந்து வாழ்ந்து, திரேகமதின் இன்ப சுகத்தைக் கருத்தோடு பேணிப் பாதுகாக்கும் கிறிஸ்தவ வாழ்வுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்திக் காண்பிக்கும் பத்திரிக்கை. தேவன் தம்முடைய சுய இரத்தத்தால் சம்பாதித்த தேவ ஜனத்திற்கு முன்பாக நிலையில்லா சரீர சுகத்தையும், வியாதி துன்பமற்ற 100 ஆண்டு கால சுகபோக வாழ்வையும், ஆஸ்தி ஐசுவரியம், பங்களாக்கள், தோட்டங்கள், ஆடம்பர சுகபோக வாழ்வுகள், மாம்சத்தின்இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமையாகிய உலக மாயாபுரிச் சந்தைச் சரக்குகளைக் காண்பித்து, உலக வாழ்வுக்குப் பின்னர் தேவ ஜனம் தேவனால் ஆயத்தம் பண்ணப்பட்டுள்ள நித்திய இளைப்பாறுதலுக்குள் (எபி 4 : 9) பிரவேசிக்கக்கூடாமல், பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினிக்கு (மத்தேயு 25 : 41) பெருங்கூட்டம் மக்களை ஒட்டு மொத்தமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் ஆசீர்வாதப் பிரசங்கிகளை கடும் வன்மையாக கண்டித்து எச்சரிக்கும் பத்திரிக்கை.
மனதை மயக்கும் பேச்சிலும், பிரசங்கத்திலும், எழுத்திலும் அல்ல ஒரு தேவ ஊழியன் தனது பரிசுத்தமான, பிரகாசமான வாழ்க்கையால் மட்டுமே தனது பரிசுத்த கர்த்தரை இருளில் வாழும் மாந்தருக்கு எடுத்துக் காண்பிக்க வேண்டும் என்பதை அடித்துக்கூறும் பத்திரிக்கை. ஜெபம், உபவாசம், சரீர ஒடுக்கமின்றி மெய் பக்தி வாழ்க்கை ஒருக்காலும் கிட்டாது என்பதை ஆணித்தரமாகக் கூறும் பத்திரிக்கை. பெருமை, ஆவிக்குரிய அகந்தை, தான் பெரிய தேவ ஊழியன் என்ற மேட்டிமைக்கு எதிராகப்போராடும் பத்திரிக்கை. பூமிக்குரியவைகளையல்ல, தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்காக ஆயத்தம் பண்ணின மேலானவைகளை (1 கொரி 2 : 9) நோக்கும்படியாக தேவ ஜனத்தின் கண்களுக்கு கலிக்கம்போடும் பத்திரிக்கை. இந்த உலக வாழ்வின் அனைத்துக் காரியங்களும் முதல்தரமான மாயை என்பதையும், வேஷமாகவே மனுஷன் திரிந்து விருதாகவே சஞ்சலப்பட்டு, ஆஸ்தியை சேர்த்து, யார் அதை வாரிக் கொள்ளுவான் என்று அறியாமல் செத்து மடிவதை (சங் 39 : 6) திட்டமும், தெளிவுமாக காண்பிக்கும் பத்திரிக்கை. இன்னும் எழுதிக்கொண்டே செல்லலாம். இந்தவிதமான அனைத்து சத்தியங்களையும் தேவ எக்காளம் சுமந்து வருவதால் அது தேவனுடைய பத்திரிக்கையேதான். அதில் ஒரு துளிதானும் சந்தேகமே கிடையாது. அல்லேலூயா.
தேவ எக்காளம் செய்திகளை வாசித்து மனந்திரும்பி இரட்சிப்பின் பாத்திரங்களான மக்கள் அநேகருண்டு. தேவ எக்காளம் பத்திரிக்கையை வாசித்து அதின் மிஷனரி செய்திகளால் தொடப்பட்டு தங்கள் வாழ்வை கர்த்தருக்கு ஒப்புவித்து மிஷனரிகளாக வட இந்திய மாநிலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற தேவ மக்கள் உண்டு. தேவ எக்காளத்தை வாசித்ததின் காரணமாக பரமசிவம் என்ற கர்த்தருடைய பிள்ளை மாவோயிஸ்ட்டுகளின் மத்தியில் மிஷனரியாக பணி செய்ய ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றார்கள். மகிமை நம் தேவன் ஒருவருக்கே. தேவ எக்காளத்தின் செய்திகளால் தொடப்பட்டு தொலைக்காட்சி, செய்தி தாட்களை வீசி எறிந்த கர்த்தருடைய பிள்ளைகள் பலருண்டு. ஜெபம், உபவாசமில்லாமல் வறண்ட பாலைவன கிறிஸ்தவ வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த அநேக கிறிஸ்தவ மக்கள் தேவ எக்காள செய்திகளை வாசித்து ஒழுங்கான ஜெப உபவாச வாழ்க்கையை மேற்கொண்டு இப்பொழுது கர்த்தரில் களிகூரும் ஆசீர்வாதமான தேவ மக்களாக காணப்படுகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டிணம் என்ற ஊரில் பார்வதி என்ற ஒரு கிறிஸ்தவ சகோதரி தேவ எக்காளம் பத்திரிக்கையை வாசித்ததின் காரணமாக தனது நிச்சயமான தற்கொலை முயற்சியிலிருந்து கர்த்தர் தன்னைக் காத்துக்கொண்டதை பல்லாண்டு காலத்திற்கு முன்பாக எனக்கு எழுதியிருந்தார்கள். அன்பின் ஆண்டவருக்கு துதி செலுத்துவோம்.
தேவ எக்காளத்தின் அருமையான தேவச் செய்திகளை, கடந்தகால பக்தசிரோன்மணிகளின் அற்புதமான வாழ்க்கை வரலாறுகளை, பறவைகள், பாம்புகள், காட்டு விலங்கினங்கள் போன்றவைகளிலிருந்து நான் எழுதும் எடுத்துக்காட்டுகளை தங்கள் பிரசங்கங்களில் குறிப்பிடும் குருவானவர்கள், பாஸ்டர்கள், தன்னார்வ தேவ ஊழியர்கள் ஏராளமுண்டு. அந்தச் செய்திகளால் மக்கள் தொடப்படுவதாகவும் எழுதுகின்றனர். வீடுகளில் நடக்கும் ஜெபக்கூட்டங்களில், ஓய்வு நாள் பள்ளிகளில் தேவ எக்காளத்தின் செய்திகள் பரவலாக பயன்படுத்தப்படுவதை நினைத்து கர்த்தரைத் துதிக்கின்றேன். தேவ எக்காளத்தின் ஆவிக்குரிய செய்திகளையும், அதில் காணப்படும் பரிசுத்த பக்தர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் தங்கள் கிறிஸ்தவ பத்திரிக்கைகளில் தேவ எக்காளத்தின் பெயர் குறிப்பிடாமல் தாங்களே அவைகளை எழுதுவது போல வெளியிடும் தேவ மக்கள் உண்டு. எந்தவிதத்திலும் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுகின்றது. கர்த்தர் அந்த மக்களை ஆசீர்வதிப்பாராக.
மெய்யான தேவ பிள்ளைகள் தேவ எக்காளத்தை மிகவும் வாஞ்சையோடு நேசித்து வாசிக்கின்றனர். தேவ எக்காளம் எப்பொழுது வரும் என்று ஆவலோடு காத்திருந்து அது வந்தவுடன் அது 100 க்கும் அதிகமான பக்கங்களாக இருந்தாலும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு, சமயம் கிடைக்கும்போது திரும்பவும் அதை நிதானமாக படிக்கும் வாஞ்சையுள்ள ஆத்துமாக்கள் பலருண்டு. தேவ எக்காளம் வந்ததும் தங்களுக்குள் போட்டிப்போட்டுக் கொண்டு குடும்பத்தின் ஒவ்வொரு நபரும் வாசிக்கின்றனர். வாசித்து முடிந்ததும் தங்கள் வீட்டுக்குவரும் மற்ற கிறிஸ்தவர்கள் தாங்கள் வாசிப்பதற்காக அதை எடுத்துச் சென்றுவிடாதபடி அதைப் பத்திரப்படுத்திக் கொள்ளுகின்றனர். காரணம், அதை எடுத்துப் போகின்றவர்கள் கட்டாயம் திரும்பவும் கொண்டு வந்து தரமாட்டார்கள் என்பதை அவர்கள் நன்கு கண்டு வைத்திருக்கின்றனர். அதை யார் யார் வாசிப்பார்களோ அந்த மக்களுக்கெல்லாம் அது தேனிட்ட பரலோக மன்னாவாக இருக்கும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அநேக கிறிஸ்தவ வீடுகளில் தேவ எக்காளத்தின் பிரதிகளை புத்தகரூபமாக பைண்ட் செய்து அதை திரும்பத் திரும்ப வாசிக்கின்றனர். சில தேவ மக்கள் அப்படிப் பைண்ட் செய்த புத்தகங்களை தங்களுடைய பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்து வரும்போது படித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும்படியாக விலையுயர்ந்த பொன் ஆபரணங்களைப்போல பொக்கிஷமாக வைத்துக் கொள்ளுகின்றனர். சில தேவ பிள்ளைகள் அப்படி பைண்ட் செய்த புத்தகங்களை தங்கள் ஊரிலுள்ள மற்ற கிறிஸ்தவ மக்களும் வாசித்துப் பயன் அடைவதற்காக சுற்றுக்கு விடுகின்றனர். ஒருவர் வாசித்து முடித்ததும் அடுத்தவர் வாசிப்புக்காக அது போகின்றது. அப்படியே அது ஊர் முழுவதும் சுற்றி வருகின்றது. ஒரு விருத்தாப்பிய பரிசுத்தவாட்டியான தாயார் சமீபத்தில் “நான் செல்லும் கிறிஸ்தவ வீடுகளில் எல்லாம் தேவ எக்காளம் மிகவும் பத்திரமாகப் பேணி பாதுகாக்கப்பட்டு வருவதை நான் ஆச்சரியத்துடன் காண்கின்றேன்” என்று என்னிடம் சொன்னார்கள். “தேவ எக்காளத்தை கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்து வாசித்து பயன் அடைகின்றேன்” என்று எழுதுகின்றவர்களும், “கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம், மோட்ச பிரயாணம், அடுத்தபடியாக தேவ எக்காளத்தை மூன்றாம் இடத்தில் வைத்து நேசித்து பயன் அடைகின்றேன்” என்று எழுதும் தேவ மக்கள் உண்டு. கர்த்தருக்கே மகிமை.
தேவ எக்காளத்தை தங்கள் கண்களில் கண்ணீர் வடிய வடிய அழுதுகொண்டே வாசித்ததாக எனக்கு வந்த கடிதங்கள் ஏராளம். “தேவ எக்காளத்தை என் கரங்களில் எடுக்கும் ஒவ்வொரு சமயமும் நான் நடுநடுங்குகின்றேன். காரணம், அது எனது நிலையில்லா அநித்தியமான உலக வாழ்வின் காரியங்களையும், நான் ஆண்டவரைச் சந்திக்க உடனே ஆயத்தப்பட வேண்டும் என்பதையும் எச்சரிப்புடன் நினைப்பூட்டுகின்றது” என்று ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ வாலிப மகள் ஒரு தடவை என்னிடம் சொன்னாள்.
தேவ எக்காளம் இப்படி அநேகருக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்து வருவதின் ஒரே காரணம், அது முழங்கால்களில் அதிகமான ஜெபத்தோடும், அவ்வப்போது உபவாசத்தோடும், மிகுந்த ஆத்தும பாரத்தோடும் தயாரிக்கப்படும் பத்திரிக்கையாகும். அதை எழுதும் ஏழை மோட்ச பிரயாணியாகிய நானே அதை அடிக்கடி எடுத்து வாசித்து பரிசுத்த ஆவியானவர் என்னை தமது கரத்தின் கருவியாக எத்தனை அருமையாக எடுத்துப் பயன்படுத்தியிருக்கின்றார் என்று நினைத்து ஆச்சரியத்துடன் உள்ளம் கசிவேன். எல்லா துதி, கனம், மகிமை நம்மைத் தமது இரத்தக் கிரயத்தால் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட நம் அன்பின் ஆண்டவர் ஒருவருக்கே உண்டாவதாக. ஆமென்.