என் வாழ்வில் என்னைப் பிரமிக்கச் செய்த தேவனின் மூன்று ஆச்சரிய அற்புதங்கள்
ஆங்கில அறிவைத் தந்த அற்புதர்
எனது உலகக் கல்வி வெறும் பத்தாம் வகுப்பு மாத்திரமே. பத்தாம் வகுப்பு அரசாங்க தேர்வில் நான் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்கள் வெறும் 45 மட்டுமே. உயர்நிலைப் பள்ளியில் எனக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்த ஆங்கில ஆசிரியருக்கு என்னோடு போதும், போதும் என்றே ஆகியிருக்கும் என்று நான் நினைக்கின்றேன். Should, Would, Could போன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் ஏன் பயன்படுத்த வேண்டும் என்று நான் ஆங்கில ஆசிரியரோடு எனது அறிவின்மை காரணமாக வாதாடுவேன்.
அந்தவிதமான ஆங்கில அறிவின் சூன்யத்தோடு நான் முழுமையும் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான நீலகிரி மலை களிலுள்ள கோத்தகிரிக்கு அருகாமையிலுள்ள கில்மெல்போர்ட் என்ற தேயிலைத் தோட்டத்தில் வேலைக்கு வந்து சேர்ந்து அலுவலகத்துக்குள் காலடி எடுத்து வைத்ததும் அவர்கள் கேட்ட Export, Import ஏற்றுமதி, இறக்குமதி போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் விழித்ததும், எந்த ஒரு நிலையிலும் பயனற்ற இந்த வாலிபனைக் கொண்டு நமக்கு என்ன பிரயோஜனம் என்று என்னை எப்படியும் வீட்டுக்கு உடனே அனுப்ப நிர்வாகத்தினர் வெகுவாக முயற்சித்தும் அவர்களால் ஒன்றும் செய்யக்கூடாற் போயிற்று. காரணம், வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் படைத்த சர்வ வல்ல தேவனிடமிருந்து நான் சிபாரிசு (Recommendation) கடிதத்தை பெற்று வந்திருப்பதுடன் வரப்போகும் நீண்ட 19 ஆண்டுகள் 8 மாதங்கள் அந்த தேயிலைத்தோட்டத்தில் நான் வேலை செய்தே ஆகவேண்டும் எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னைப் பணி நீக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனை அந்த சிபாரிசு கடிதத்தில் சர்வ வல்ல தேவனால் எழுதப்பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியாதிருந்தது. அல்லேலூயா.
கர்த்தாவின் ஆலோசனைப்படி தமிழ், ஆங்கில வேதாகமங்களை ஒப்பிட்டுப்படித்ததின் காரணமாகவும், எனது கண்ணீரின் ஜெபங்கள் காரணமாகவும் அன்பின் ஆண்டவர் எனக்கு ஆச்சரியமான ஆங்கில அறிவைக் கொடுத்து என்னை உயர்த்தினார். எந்த அலுவலகத்தில் ஆங்கில அறிவில் நான் சூன்யமாக இருந்தேனோ அதே அலுவலகத்தில் உள்ள மூத்த அலுவலகர்கள் ஆங்கிலத்தில் தங்களுக்குத் தெரியாத சந்தேகமான வார்த்தைகளுக்கு என்னிடமே விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளும்படியான நிலைக்கு தேவன் பின் வந்த நாட்களில் என்னை மேன்மைப்படுத்தினார்.
அந்த நாட்களில் கோத்தகிரியைச் சுற்றிலும் இருந்த தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமாக இருந்தன. அதின் காரணமாக நிறைய ஆங்கிலேய மக்கள் கோத்தகிரியில் வாழ்ந்து வந்தனர். கோடை கால சுக வாசஸ்தலமான இந்த இடத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ மிஷனரிகள் பலரும் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் படித்து முடித்த கிறிஸ்தவ புத்தகங்கள் மற்றும் உலகப் புத்தகங்கள் கோத்தகிரியிலுள்ள வாராந்திர மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும். விலையும் சொற்பமாக இருக்கும். அந்த அழகான புத்தகங்களில் சிலவற்றை நான் விலைக்கு வாங்கி வருவேன். அதில் வேடிக்கையான காரியம் என்னவெனில் அதிலே ஒரு வரியைக்கூட என்னால் வாசித்து அர்த்தம் புரிந்து கொள்ள முடியாததுதான். “இந்தப் புஸ்தகங்களை எல்லாம் நான் ஒரு நாளில் வாசித்து மனமகிழ என்ஆண்டவர் எனக்கு கட்டாயம் உதவி செய்வார்” என்று நான் எனக்குள்ளாக அப்பொழுது கூறிக் கொள்ளுவேன். நான் எனக்குள்ளாக நினைத்தவாறே அந்த புத்தகங்களை எல்லாம் வாசித்து ஆனந்திக்க பின் வந்த ஆண்டுகளில் பரம தகப்பன் எனக்கு உதவி செய்தார். இப்பொழுதும் கூட அந்த நாட்களில் நான் வாங்கிய புத்தகங்களில் சில என் வசம் உண்டு. நான் மட்டும் அவைகளை வாசித்து மனமகிழ அன்பின் ஆண்டவர் தயைபுரியாமல் மற்ற தேவ பிள்ளைகளும் என்னுடன் கூட ஆனந்திக்க உதவி செய்தார். அப்படி வாங்கப்பட்ட அந்தப் புத்தகங்கள் ஒன்றிலிருந்து பின் வந்த நாட்களில் நான் மொழிபெயர்த்து “உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது” என்ற தலைப்பில் நமது தேவ எக்காளம் பத்திரிக்கையில் பல ஆண்டுகளுக்கு முன்பாக வெளியிடப்பட்ட ஒரு பரவசமான செய்தியை நீங்களும் வாசித்து ஆண்டவருக்கு துதி செலுத்துங்கள்:-
ஜப்பான் தேசத்தில் மிஷனரியாகப் பணி செய்த ஒரு மிஷனரி அங்குள்ள பட்டணங்கள் ஒன்றிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் மேலாளரை அணுகி அவருடைய மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தேவனுடைய சுவிசேஷம் அறிவிக்க அனுமதி கேட்டபோது அந்த ஜப்பானிய மேலாளர் எந்த ஒரு மறுப்புமின்றி உடனே சம்மதம் தெரிவித்தார். அவர் அப்படியாக உடனே அனுமதி அளித்த செயல் அந்த மிஷனரிக்கு அளவுகடந்த ஆச்சரியமாக இருந்தது. அப்பொழுது அவர் அந்த மருத்துவ மேலாளரைப்பார்த்து “டாக்டர் நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?” என்று கேட்டார். அதற்கு அவர் “நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல, எனினும், நான் உங்களுக்கு ஏன் அனுமதி அளித்தேன் என்பதை இரண்டு சம்பவங்களால் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்” என்று கூறிவிட்டு அவர் தனது வார்த்தைகளைத் தொடர்ந்தார்.
“20 வருடங்களுக்கு முன்னர் நான் இங்கிலாந்து தேசத்தில் இருந்தேன். ஒரு நாள், நான் எந்த ஒரு ஜனசந்தடி இல்லாத அமைதியான லண்டன் மாநகரத்தின் மேற்கு முனை தெரு ஒன்றின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தேன். எனக்கு முன்பாக ஒரு பள்ளிப் பையன் தனது கரத்தில் ஒரு சிறிய கோலை அங்குமிங்கும் சுழற்றிக்கொண்டும், சீட்டி அடித்துக்கொண்டும் மிகுந்த மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தான். திடீரென அவனது கரத்திலிருந்த அந்தக்கோல் அவனது கரங்களிலிருந்து நழுவி வேகமாகச் சென்று பக்கத்திலிருந்த வீட்டின் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் போய் விழுந்து விட்டது. உடனே அந்தப் பையன் தனது செயலுக்காக திகில் அடைந்தவனாக சற்று நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தான். அவனுடைய காரியத்தை அவனுக்குத் தெரியாமல் மறைவாக கவனித்த நான் அடுத்து அவன் என்ன செய்யப் போகின்றான் என்பதை அறிய விரும்பியவனாக அமைதியாக நின்று கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் தாமதத்திற்குப் பின்னர் நான் ஆச்சரியப்படும் விதத்தில் அந்தப் பையன் அந்த வீட்டின் படிக்கட்டுகளில் விரைந்து ஏறி சுவரிலிருந்த பொத்தானை அழுத்தி அந்த வீட்டின் மணியை அடித்தான். சற்று நேரத்தில் அவன் அந்த வீட்டிற்குள் இருப்பதை நான் கவனித்தேன். கொஞ்ச நேரம் கடந்த பின்னர் அவன் மகிழ்ச்சியோடு அந்த வீட்டிலிருந்து திரும்பி வந்தான். எனக்கு அந்தப் பையனோடு பேச அதிக ஆசையாக இருந்தது.
அவன் அந்த வீட்டிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவனிடம் “தம்பி, இப்பொழுது நடந்த சம்பவத்தை நான் கவனித்துக்கொண்டே இருக்கின்றேன். உன்னைச் சுற்றிலும் எவருமே கிடையாது. நீ இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு எளிதாக ஓட்டம் பிடித்திருக்கலாமே. உனது கோல் விழுந்த வீட்டிற்குள் நீ போய் அந்தக் காரியத்தை சரிசெய்ய வேண்டிய அவசியமே இல்லையே” என்று நான் அவனிடம் கேட்டேன். அதற்கு அந்தப் பையன் அளித்த பதிலை நான் என் வாழ்வில் என்றுமே மறவேன். “நல்லது ஐயா, நான் அப்படியும் செய்திருக்கலாம் தான். ஆனால், நான் ஒரு கிறிஸ்தவன் என்பதை நீங்கள் உங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று அவன் பதில் சொன்னான்.
இந்த சம்பவத்தை அந்தப் பள்ளி மாணவன் எப்பொழுதோ மறந்து போயிருப்பான். ஆனால், தேவன் இந்தச் சம்பவம் நடக்க அனுமதித்து அந்த தேவனற்ற புறமதஸ்தனான டாக்டர் தனது மருத்துவமனையில் சுவிசேஷம் அறிவிக்கும்படியான ஒரு சந்தர்ப்பத்திற்கு வாசலைத் திறந்து கொடுத்தார்.
மற்றொரு நிகழ்ச்சியையும் அந்த ஜப்பானிய டாக்டர் இவ்வாறு கூறினார். ” நான் இங்கிலாந்து தேசத்தை விட்டு ஜப்பானுக்குத் திரும்புவதற்கு முன்பாக மற்றுமொரு காரியமும் நடந்தது. அந்தக் காரியமும் எனது உள்ளத்தில் நான் என்றும் மறக்க முடியாத நீங்காத நினைவை தோற்றுவித்துவிட்டுச் சென்றது. ஒரு சமயம் எனது சப்பாத்துக்களுக்கு பாலீஷ் தேவைப்பட்டது. நான் ஒரு பாலீஷ் போடும் பையனை கண்டுபிடித்து எனது சப்பாத்துக்களை பாலீஷ் போடும்படியாக அவனிடம் கொடுத்தேன். அந்தச் சிறிய வேலைக்கு அவன் எடுத்துக் கொண்ட முயற்சியை நான் மறக்கவே முடியாது. அவன் எனது சப்பாத்துக்களை மிகுந்த சிரமம் எடுத்து ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை என்று அத்தனையான பிரயாசம் எடுத்து அவைகளை பிரகாசிக்கும்படியாக பாலீஷ் போட்டுக் கொடுத்தான்.
“என் பையனே, எனது சப்பாத்துக்களுக்காக நீ இத்தனையான சிரமத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லையே” என்று நான் கேட்டபோது அவன் தனது வேர்வை வடிந்த சிவந்த முகத்தை எனக்கு நேராக காண்பித்தவனாக “ஐயா, நான் அந்த வேலையை உங்களுக்காக அல்ல என் இயேசு இரட்சகருக்காகச் செய்தேன்” என்று பதில் அளித்தான். அந்த நாளிலிருந்து, கிறிஸ்தவ மார்க்கத்தில் கட்டாயம் ஏதோ இருக்கின்றது என்ற வெகு திட்டமான முடிவுக்கு நான் வந்தேன்” என்று அந்த மருத்துவ மேலாளரான டாக்டர் கூறினார்.
பல்லாண்டு காலங்களுக்கு முன்பாக இங்கிலாந்து தேசத்தில் நடந்த அந்த இரு பையன்களின் கிறிஸ்தவ நற்செயல்கள் ஜப்பானிலுள்ள தேவனற்ற மருத்துவமனையிலுள்ள நோயாளிகள் சுவிசேஷ நற்செய்தியை கேட்கும்படியான வழிவாசலை தாராளமாக திறந்து கொடுத்தது. புஸ்தகங்கள் பரலோகில் திறக்கப்பட்டு நாம் நமது கிரியைகளுக்கான பலனை ஆண்டவர் இயேசுவுடைய கரங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும்படியாக நிற்கும் வேளையில் மேலே நாம் கண்ட அந்த இரு பையன்களும் தங்கள் ஆண்டவர்இயேசுவுக்காக செய்த செயல்களுக்கான பிரதி பலனை பெற்றுக்கொள்ள நின்று கொண்டிருப்பதை நாம் காண்போம். நாம் செய்யும், சின்னச் சின்ன கனிவான செயல்கள், நாம் பேசுகின்ற சிறிய சிறிய அன்பான வார்த்தைகள் கூட அநேக ஆத்துமாக்களின் நித்திய நன்மைக்காக அமைந்துவிடும் என்பதை நாம் ஒருக்காலும் மறந்துவிடக்கூடாது. (Taken from the Book “JOY IN HARVEST”)
எனது கரங்களுக்குக் கிடைத்த அருமையான ஆங்கில கிறிஸ்தவ புத்தகங்கள்
தேவ எக்காளத்தில் நான் மொழிபெயர்த்து எழுதின பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள் அடங்கிய அருமையான கிறிஸ்தவ புத்தகங்கள் அனைத்தும் மேல் நாட்டிலிருந்து குறிப்பாக இங்கிலாந்து தேசத்திலிருந்து வாங்கியவைகளாகும். “பேனர் ஆப் ட்ருத் ட்ரஸ்ட் ” (The Banner of Truth Trust) என்ற அந்த புத்தக நிறுவனம் நான் அவர்களிடம் வாங்கிய விலையுயர்ந்த புத்தகங்களுக்கு அதிகமான தள்ளுபடி அளித்து எனக்குத் தந்தார்கள். அந்த தள்ளுபடியை அவர்கள் எனக்கு அளித்திராத பட்சத்தில் நான் அவைகளை கட்டாயம் வாங்கியிருக்க முடியாது. அதிலும் தேவனுடைய அன்பு வெளிப்பட்டது. அடுத்து ஒரு விசேஷித்த காரியம் என்னவெனில் அந்தப் புத்தகங்களை நான் வாங்கியதே ஒரு ஆச்சரியமான காரியமாகும். அந்தப் புத்தகங்களுக்கான பணத்தை நான் இங்கிருந்து விலை கொடுத்து வாங்குவது முற்றும் இயலாத காரியமாகும். புத்தகங்களுக்கான பணத்தை இங்கிருந்து இங்கிலாந்துக்கு அனுப்ப முடியாது. பயனுள்ள அந்த புத்தகங்களுக்கான விலைப்பட்டியல் எனது கரத்தில் உள்ளது. ஆனால், பணத்தை அந்த நாட்டிற்கு அனுப்புவது எப்படி? இந்தச் சிக்கலைத் தீர்க்க அன்பின் தேவன் ஒரு வாசலைத் திறந்தார்.
மிஸ்.கோல் என்ற ஒரு பரிசுத்த மிஷனரி தாயார் அப்பொழுது இங்கு கோத்தகிரியில் வசித்து வந்தார்கள். அந்த அன்பான தாயார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு லண்டன் நகரத்திலுள்ள ஒரு பெரிய வங்கியில் கணக்கு இருந்தது. புத்தக விலைப் பட்டியலில் எனக்குத் தேவையான புத்தகங்களுக்குரிய விலை மதிப்புக்கான பவுண்டுகளை இந்திய நாட்டின் பண மதிப்பு என்னவென்பதை கண்டு பிடித்து அந்தப்பணத்தை நான் மேற்கண்ட தாயாரிடம் கொடுத்தவுடன் அவர்கள் எனக்கு லண்டனில் மாற்றிக் கொள்ளக் கூடிய செக்குகளை புத்தக நிறுவனத்தின் பெயரில் எனக்கு எழுதி கொடுத்தார்கள். அவைகளை நான் இங்கிலாந்திலுள்ள புத்தக நிறுவனத்திற்கு அனுப்பி தேவையான புத்தகங்களை பெற்றுக் கொண்டேன். இவ்விதமாக நான் வாங்கிய புத்தகங்கள் அநேகமாகும்.
மேற்கண்ட சிறந்த கிறிஸ்தவ புத்தகங்கள் இங்கிலாந்து தேசத்திலிருந்து எனக்கு ஒருக்கால் கிடைத்திராதபட்சத்தில் தேவ எக்காளத்தை தேவநாம மகிமைக்காக இத்தனை சிறப்பாக நான் வெளியிட்டிருக்க முடியாது.
ஒரு ஆங்கில புத்தகத்திலிருந்து ஒரு பரிசுத்தவானின் வாழ்க்கைச் வரலாற்றை நான் தமிழில் மொழி பெயர்ப்பதானால் மொழிபெயர்ப்புக்கு முன்னர் அந்தப் புத்தகத்தை நான் தேவ சமூகத்தில் வைத்து நெடுஞ்சாண் கிடையாக முகம் குப்புற தரையில் விழுந்து கிடந்து மொழி பெயர்ப்பு வேலையை கர்த்தரே பொறுப்பெடுத்து செய்யும்படியாகவும், எனது சொந்த அறிவு, திறமை, ஞானம் எதுவும் அதில் துளிதானும் கலந்துவிடக்கூடாது என்றும் உள்ளம் உருகி மன்றாடுவேன். அதோடு அதைப்படிக்கும் மக்களை தேவன் தொடும்படியாகவும் அதின் மூலம் அவர்கள் திரண்ட ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளும்படியாகவும் உள்ளம் உருகி ஜெபிப்பேன்.
அதின் காரணமாக நான் மொழிபெயர்த்து வெளியிட்ட பரிசுத்தவான்களின் வாழ்க்கைச் சரித்திரத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் ஏராளம், ஏராளமாகும். எல்லா துதி ஸ்தோத்திரத்துக்கும் பாத்திரமானவர் நம் தேவன் ஒருவரே.
“இருக்கிறவராக இருக்கிறேன்” என்று கூறிய சர்வ வல்ல தேவன் அனுப்பிய தமிழ் டைப் ரைட்டர்
நமது தேவ எக்காள பத்திரிக்கையின் மேல் சர்வ வல்ல தேவனுக்கு எத்தனையான ஒரு கண்ணும் கருத்துமான அக்கறை இருக்கின்றது என்பதற்கு நான் உங்களுக்கு பல காரியங்களை எழுத முடியும். ஆனால் இரண்டு காரியங்களை மாத்திரம் நான் உங்களுக்கு முன்பாக வைக்க விரும்புகின்றேன்.
தேவ எக்காளம் ஆரம்பிக்கப்பட்டு 22 ஆண்டுகள் பூர்த்தியாகி 23 ஆம் ஆண்டின் ஒரு பெப்ரவரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு தமிழ் டைப்ரைட்டர் மிஷனுக்காக நான் ஆண்டவரிடத்தில் அதிகமாக கெஞ்சி மன்றாடி ஜெபித்தேன். காரணம், 22 ஆண்டுகளும் தேவ எக்காள பத்திரிக்கைக்காக செய்திகளை நான் எழுதி எழுதி எனது கரம் மிகவும் பெலவீனமாகிவிட்டது. செய்திகளை ஒரு தடவை மேலெழுந்தவாரியாக எழுதிவிட்டு அதிலுள்ள பிழைகள் யாவையும் சரிசெய்து மாற்றம் செய்யப்பட வேண்டியவைகளை மாற்றம் செய்து அச்சுக்கோப்புக்கு வசதியாக அழகாக பிழையின்றி இரண்டாம் தடவை நான் எழுதுவேன். அது ஒரு மகா கடினமான வேலையாகும்.
ஒரு தமிழ் டைப்ரைட்டர் உதவியின்றி இனி தேவ எக்காளத்தை எழுதுவது என்பது நம்மால் முற்றும் கூடாத காரியம் என்ற நிலைக்கு நான் இறுதியில் வந்து சேர்ந்தேன். அது ஒரு மத்தியான நேரம். வீட்டுக்குள் இருந்து ஜெபித்தால் மிகவும் குளிராக இருக்கின்றது என்று எண்ணியவனாக வெளியே எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்துக்குள் இருந்த கிணற்றண்டை காணப்பட்ட சிறிய புல்தரையில் முழங்காலூன்றி வெயிலிலிருந்து ஜெபித்தேன். பின்னர் அங்கிருந்து எழுந்து அருகிலிருந்த ஒரு பேரிக்காய் மரத்தின் கீழே முழங்காலூன்றினேன். தமிழ் டைப்ரைட்டருக்காக பரத்தை நோக்கிக் கெஞ்சினேன்.
நான் எனது கண்களை ஒத்தாசையின் பர்வதத்திற்கு நேராக வானத்துக்கு ஏறெடுத்த போது மென்மையான இளந்துளிர்களை அப்பொழுதுதானே விட்டுக்கொண்டிருந்த அந்தப் பேரி மரத்தைப் பார்த்ததும் “இயேசு அப்பா, இந்த பேரிக்காய் மரம் தனது இலைகளை எல்லாம் சில மாதங்களுக்கு முன்னர்தான் உதிர்த்துவிட்டு பட்ட மரம் போல நின்று கொண்டிருந்தது. இப்பொழுது இளந்தளிர்கள் அதில் துளிர்த்துக் கொண்டிருக்கின்றன. இனி மரம் முழுவதும் வெண் பூக்கள் மலர்ந்து அவைகள் காய்களாக மாற்றம் பெற்று இந்த மரமே பாரம் தாங்க முடியாமல் முழுவதும் பேரிக்காய்களாக நிறைந்திருக்கும். ஒரு பட்ட மரமாகக் காணப்பட்ட மரத்திலிருந்து இத்தனையான ஒரு பெரிய மாட்சியான மாற்றங்களை நிகழ்த்தக்கூடியவராகிய சர்வ சக்திமானாகிய உமக்கு ஒரு தமிழ் டைப்ரைட்டர் மிஷனை எனக்குக் கொடுப்பது என்பது கடினமான காரியமே அல்ல. நீர் அதை எனக்கு எப்படியும் தந்தே ஆகவேண்டும். நீர் ஒருக்கால் தாமதித்தால் நான் கடன்பட்டாவது அதை வாங்கிவிடுவேன். இனி எனக்கு கரம் வலிக்க எழுதுவது என்பது முற்றும் இயலாத காரியம்” என்று கூறி ஜெபத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். எனது ஜெபத்தை முடித்து 15 நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அந்த நாளில் எனக்கு வந்த தபாலில் ஒரு சிறிய கவரில் அனுப்புபவர் பெயர் எதுவும் இல்லாமல் கவரின் உள்ளே கடிதம் எதுவும் இல்லாமல் ரூபாய் 10000 (பத்தாயிரம்) க்கான டிராப்ட் வைக்கப்பட்டிருந்தது. அந்த டிராப்ட்டை சுற்றி ஒரு சிறிய வெள்ளைத் தாளில் “அனுப்புதல்” “இருக்கிறவராக இருக்கிறேன்” என்ற ஒரே ஒரு சிறிய வரி மாத்திரம் எழுதியிருந்தது. இந்த தேவ வார்த்தை யாத்திராகமம் 3 : 14 லில் காணப்படுவதுநம் எல்லாருக்கும் தெரியும். அது கூறப்பட்ட சந்தர்ப்பமும் தெரியும்.
நான் பல்லாண்டு காலங்களுக்கு முன்னர் ஜெபம் ஏறெடுத்த மேற்கண்ட பேரி மரத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். அந்த பேரி மரம் இன்றைய தேதி வரை என் கண்களுக்கு முன்பாக சற்று தொலைவில் தேயிலைத் தோட்டத்தினுள் நின்று கொண்டிருக்கின்றது. அதின் கிளைகள் பலவும் காற்றில் முறிந்து விழுந்துவிட்டது. அதைப் பார்க்கும் ஒவ்வொரு சமயமும் ஜெபத்தை கேட்கும் ஜீவனுள்ள தேவன் என்னோடிருக்கின்றார் என்பதை ஆனந்த களிகூருதலோடு எண்ணி மகிழுகின்றேன்.
“இருக்கிறவராக இருக்கிறேன்” என்ற அதிசய கர்த்தர் அனுப்பிய பணத்தைக் கொண்டு உடனடியாக கோவை சென்று ஒரு தமிழ் டைப் ரைட்டர் வாங்கினேன். தமிழில் ஒரு வார்த்தை கூட டைப் செய்ய தெரியாத எனக்கு தேவனே அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுத்தார். வெகு குறுகிய நாட்களுக்குள் தமிழில் துரிதமாக டைப் செய்யக் கற்றுக்கொண்டேன். அதின் பின்னர் தேவ எக்காளத்தின் செய்திகளை முழுமையாக தமிழிலேயே நான் டைப் செய்து நமது அச்சகத்தாருக்கு கொடுத்து வந்தேன்.
கம்பியூட்டரை பயன்படுத்த என்னை பயிற்றுவித்த தேவன்
13 நீண்ட ஆண்டு காலமாக தமிழ் டைப் ரைட்டரில் செய்திகளை டைப் செய்து வந்த எனக்கு தேவன் இரங்கி “மகனே, டைப் ரைட்டரில் செய்திகளை அடிப்பது என்பது உனது விரல்களை பலமாக அழுத்தி கஷ்டப்பட வேண்டும். உனக்கு வெகு வெகு சுலபமாக உனது விரல்கள் தொட்ட மாத்திரத்திலேயே எழுத்துக்கள் பதியும்படியான ஒரு அற்புத சாதனத்தை நான் உனக்குத் தருகின்றேன்” என்று சொன்னது போல (அப்படி அவர் என்னிடம் கூறாதபோதினும் அவருடைய திருவுளத்தில் அப்படித்தான் ஒரு எண்ணம் இருந்திருக்க வேண்டும்) இப்பொழுது ஒரு கம்பியூட்டரை எனக்குக் கொடுத்திருக்கின்றார். கர்த்தருடைய பரிசுத்த ஊழியத்திற்காக எனது பிள்ளைகள் ஒரு கம்பியூட்டரை எனக்கு வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். அதை அவர்கள் எனக்கு வாங்கித்தர ஆசைப்பட்டபோது நான் வேண்டவே வேண்டாம் என்று அவர்களோடு வெகுவாக போராடினேன். ஆனால் பிள்ளைகள் என்னை விட்டபாடில்லை. “அப்பா, நீங்கள் இதை சீக்கிரமாக கற்றுக்கொண்டு விடுவீர்கள். கம்பியூட்டர் உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும்” என்று கூறி அதை எனக்கு வாங்கி தந்தனர்.
தமிழ் டைப்ரைட்டரைப் போல கம்பியூட்டர் சாதனத்தை நான் வெகு துரிதமாக கற்றுக்கொள்ள இயலாத போதினும் சீக்கிரமாகவே தேவ ஒத்தாசையோடு கடிதங்களை டைப் செய்யக் கற்றுக்கொண்டேன். எனினும், நமது தேவ எக்காள பத்திரிக்கைக்கான செய்திகளை முதன் முதலில் டைப் செய்து கொடுக்க இயலாத நிலை சுமார் 9 மாதங்கள் வரை நீடித்தது. அதற்கப்பால், கர்த்தருடைய மட்டற்ற கிருபையால் தேவ எக்காள செய்திகள் முழுமையையும் கம்பியூட்டரிலேயே டைப் செய்து அச்சகத்தாருக்குக் கொடுக்க நம் அருமை இரட்சகர் எனக்கு கிருபை செய்துவிட்டார். எனக்கு முன்பாக ஆங்கில கீ போர்டு (English Key Board) இருந்தபோதினும் அதில் தமிழ் எழுத்துக்களை துரிதம் துரிதமாக டைப் செய்து விடுகின்றேன். இந்த எனது சுயசரிதை முழுவதையும் நானே உட்கார்ந்து ஜெபத்தோடு கம்பியூட்டரிலேயே டைப் செய்து முடித்தேன் என்றால் தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் கர்த்தரில் சந்தோசம் அடைவீர்கள். ஆச்சரியமும் அடைவீர்கள். ஒரு மனிதனோடு தேவன் இல்லாத பட்சத்தில் இப்படிப்பட்ட அற்புத செயல்கள் எல்லாம் நடக்கவே முடியாது அல்லவா!
தேவ எக்காளம் பத்திரிக்கையை 46 நீண்ட ஆண்டு காலம் வெளியிட தேவன் அளித்த அவருடைய அநாதி அன்பு
தனி மனிதனாக ஒருவன் ஒரு பத்திரிக்கையை நீண்ட 46 ஆண்டு காலம் அச்சிட்டு வெளியிடுவது என்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. அதிலும் ஒரு பைசா கூட கடன்இல்லாமல் அதை அச்சிட்டு வெளிக்கொண்டு வருவது என்பது முற்றும் இயலாத காரியமாகும். வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவன் என்னோடு கூட இருந்த ஒரே காரணத்தால் நான் அதை சுலபமாக செய்ய முடிந்தது.
பொருளாதாரங்கள் வர தடைகள் ஏற்படும்பொழுது தேவ சமூகத்தில் புசியாமலும், குடியாமலும் அமர்ந்து உபவாசம் எடுத்து ஜெபிப்பேன். அச்சகத்தாருக்கான அச்சுக்கூலிகளை கைவசம் வைத்துக்கொண்டு தான் பத்திரிக்கை செய்திகளை எழுதத் தொடங்குவேன். தேவ எக்காளத்தை அச்சகத்தார் அச்சிட்டு நமது கரங்களுக்கு கொடுத்த அடுத்த நிமிடமே அவர்களது அச்சுப்பணத்தைக் கொடுத்து விடுவேன். கடன் என்ற பேச்சுக்கே எங்கும் இடம் கிடையாது. “கர்த்தருடைய ஊழியம், கர்த்தர் விரும்பும் பாதையில் செய்யப்படும்போது அதற்கு கர்த்தருடைய ஒத்தாசை கட்டாயம் உண்டு” (God’s work done in God’s way will never lack God’s supplies) என்ற சீன தேச மிஷனரி தேவ பக்தன் ஹட்சன் டெயிலர் அவர்கள் கூறியவண்ணமாக இந்த எளிய தேவ ஊழியத்தையும் தேவன் எந்த சிறிய தாழ்ச்சியும் கடனும் இல்லாமல் அதிசயஅற்புதமாக கடந்த 46 ஆண்டு காலம் வழிநடத்திக் கொண்டு வந்திருக்கின்றார்.
தேவையான பண வசதிகள் பெரிதுமாக தடைப்படும் போது “அப்பா, இது என்னுடைய ஊழியம் அல்ல, உம்முடைய மகத்தான ஊழியம். தாயின் கர்ப்பத்தில் நான் உருவாகுமுன்னரே நீர் என்னை இந்த ஊழியத்துக்காக தெரிந்து கொண்டு இந்த ஊழியத்தை நீரே உமது நாம மகிமைக்காக நடத்தி வந்திருக்கின்றீர். நீர் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் அதை என்னால் செய்ய முடியும். நீர் உமது முகத்தை மறைத்தால் நான் சும்மாயிருப்பதைத் தவிர வேறு வழி எனக்குக் கிடையாது. உலகத்தில் நான் உயிர் வாழ கொழுமையான ஆகாரங்கள் எனக்குத் தேவையில்லை. உம்மை அறிகிற அறிவின் மேன்மைக்காக மாமிசம், மச்சங்கள் போன்றவைகளை எல்லாம் எப்பொழுதோ நஷ்டமும் குப்பையுமாக எண்ணி விட்டுவிட்டேன். ஒரு நாளில் ஒரு தடவை கொஞ்சம் கஞ்சியும் அதைச் சாப்பிட சற்று ஊறுகாய் கிடைத்தால் அது எனக்குப் போதுமானது” என்று சொல்லி நான் ஜெபித்த நாட்கள் கூட உண்டு. இப்படி நான்ஆண்டவரிடம் ஜெபித்தது சரியோ தவறோ என்று எனக்குத் தெரியவில்லை. உடன்தானே பரம தகப்பன் அதிசயமாக இரக்கம் பாராட்டுவார். வழிவாசல்களை திறப்பார்.
ஒரு பெரிய அதிசயமான காரியம் என்னவெனில், தேவ எக்காளம் செய்திகளை எழுதி தயாரிப்பதிலிருந்து, அதை உறையிட்டு தபால் அலுவலகம் கொண்டு போய்ச் சேர்ப்பது வரை அத்தனை பணிகளையும் செய்வது, வருகின்ற கடிதங்களுக்கு பதில் எழுதுவது எல்லாம் நான் மட்டுமேதான். உதவிக்கு எவரையும் நான் கடைசி வரை வைத்துக்கொள்ளவில்லை. இத்தனை காரியங்களையும் செய்ய எனக்கு பெலன் கொடுத்தவர் தேவனே. “காண்டா மிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு” (எண் 23 : 22 ) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது.
தேவ எக்காளம் பத்திரிக்கையானது அதைப்படிக்கும் மக்களுக்கெல்லாம் ஆசீர்வாதத்தையும், உயிர் மீட்சியையும் அள்ளிக் கொண்டு வந்ததை என்னண்டை வந்த ஏராளமான கடிதங்களின் மூலமாக அறிந்து அன்பின் ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றேன்.