தேவனது பயிற்சிப்பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்
“எந்த சிட்சையும் தற்காலத்தில் சந்தோசமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபி 12 : 11)
நீலகிரி மலைகளிலுள்ள அழகான கோத்தகிரி என்ற பட்டணத்திற்கு சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள 6500 அடி உயரமுள்ள கில்மெல்போர்ட் (Kilmelfort) என்ற ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தில் கடைநிலை குமஸ்தாவாக (Junior Assistant) 19 வருடங்களும் 8 மாதங்களும் நான் வேலை செய்தேன். 1957 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் நான் அந்த நிறுவனத்தில் போய்ச் சேர்ந்த பொழுது அந்த தேயிலைத் தோட்டம் ஆங்கிலேயருக்கு சொந்தமானதாக இருந்தது. அவர்கள் எல்லாரும் இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். அப்பொழுது எனது சம்பளம் வெறும் 96 ரூபாய் 50 பைசாவாகும். நான் 1976 ஆம் ஆண்டு எனது வேலையை ஆண்டவருடைய திட்டமான அழைப்புக்கு கீழ்ப்படிந்து விட்டுவிட்டபோது எனது சம்பளம் சுமார் 400 ரூபாயாகும். அந்த நாட்களில் அந்தச் சம்பளம் பெரியதொரு தொகையாகும். வருடாந்திர லீவில் நான் ஊருக்குச் செல்லும்போது எனது தயாரின் கரத்தில் ஒவ்வொரு ரூபாய் அடங்கிய 100 ரூபாய் கொண்ட ஒரு புதுக்கட்டை கொடுப்பேன். அதைப் பெற்றுக் கொண்ட எனது தாயாரின் சந்தோசம் அதிகமாக இருக்கும். அந்த தேயிலைத் தோட்டத்தில் நான் இருந்த சுமார் 20 ஆண்டு காலமும் வரப்போகும் நாட்களில் தேவன் தமது ஊழியத்தின் பாதையில் என்னை பயன்படுத்துவதற்கான ஒரு பயிற்சி பள்ளியாக அது எனக்கு அமைந்தது. எப்படி தமது ஜனமாகிய இஸ்ரவேலரை எகிப்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்து வர மோசே தீர்க்கனுக்கு தேவன் பார்வோனின் அரண்மனையில் 40 ஆண்டு காலம் பயற்சி அளித்தாரோ அதேபோல அந்த தேயிலை தோட்டத்தில் தேவன் எனக்கும் 20 ஆண்டு காலம் பயிற்சி அளித்தார்.
நீண்ட நாட்கள் உபவாசிக்கும் பரலோக கலையை அந்த அன்பர் எனக்கு அந்த தேயிலைத் தோட்டத்தில்தான் கற்றுத் தந்தார். ஆங்கில அறிவை எனக்குப் போதுமான அளவிற்கு தரும் பயிற்சிப் பள்ளியாகவும் அந்த தேயிலை தோட்டப் பணி எனக்கு அமைந்தது. கடைநிலை குமஸ்தா வேலையில் நான் சேர வரும் போது ஆங்கிலத்தில் ஏற்றுமதி, இறக்குமதி, கவர் (Export, Import, Envelope) என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் விழித்த என்னை ஆங்கிலத்தில் சந்தேகமான வார்த்தைகளுக்கு அதே அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்த இதர மூத்த பணியாளர்கள் என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படியான நிலைக்கு பின் வந்த நாட்களில்ஆண்டவர் என்னை உயர்த்தி ஆசீர்வதித்ததும் அங்கேதான். அதின் காரணமாகவே தான் தேவ எக்காளம் பத்திரிக்கையில் பக்த சிரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை கர்த்தருக்கு மகிமையாக சிறப்பாக என்னால் மொழிபெயர்த்து வெளியிட முடிந்தது.
நீண்ட நாட்கள் உபவாசித்து ஜெபிக்கக் கற்றுக் கொண்டேன்
நான் குமஸ்தா பணி செய்த கில்மெல்போர்ட் என்ற இடத்தில் நான் தங்குவதற்கு வீடு வசதி இல்லாத காரணத்தால் அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள கம்பெனிக்கு சொந்தமான பாரஸ்ட் ஹில் (Forest Hill) என்ற இடத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் எனக்கு ஒரு வீடு கொடுக்கப்பட்டது. அதில் நாங்கள் மொத்தம் 3 குடும்பங்கள் குடியிருந்தோம். மூன்று திசைகளிலும் இருண்ட கானகங்கள் அங்கு உண்டு. அந்த கானக வீட்டைச் சுற்றிலும் புலிகள், செந்நாய்கள், காட்டுப்பன்றிகள், பலவிதமான மான்கள் வாழ்ந்தன. நான் தினமும் காலையில் அங்கிருந்து புறப்பட்டு கில்மெல்போர்ட் என்ற இடத்தில் வந்து வேலை செய்துவிட்டு மாலை திரும்பிவிடுவேன். நான் பாரஸ்ட் ஹில்லில் தங்கியிருந்த வீட்டிற்கு மேலாக உள்ள செங்குத்தான உயரமான மலை ஏறி எனது பணி இடத்திற்கு வருவேன். ஒரு பக்கம் செங்குத்தான மலை ஏற்றம், அடுத்த பக்கம் செங்குத்தான மலைச் சரிவு. ஒரு நாளில் 2 ஏற்றங்கள் 2 இறக்கங்கள் உண்டு. காரணம், சில சமயங்களில் மத்தியான ஆகாரத்திற்காக நான் வீட்டிற்குச் சென்று திரும்புவேன். மாதக்கணக்காக நான் இப்படி நடந்தேன். அதிலும் ஒரு மறைவான தேவ அன்பும், ஆசீர்வாதமும் இருந்தது என்பதை சற்று பின்னர் நான் எழுதுகின்றேன்.
காலையில் வரும்போது நான் எனது மதிய ஆகாரத்தை என்னுடன் எடுத்து வருவேன். அதிகாலையில் நான் வீட்டைவிட்டுப் புறப்பட வேண்டியதாக இருந்ததாலும், மனைவியின் சுகயீனம் காரணமாகவும் பல நாட்களும் நான் ஆகாரம் கொண்டு வர இயலாத நிலை எனக்கு ஏற்பட்டது. நான் வெறுமையாக வந்தால் என்னுடன் அலுவலகத்தில் பணி செய்யும் அன்பான மக்கள் தங்களுடைய இல்லத்திற்கு வந்து சாப்பிட என்னை வருந்தி அழைப்பார்கள். அந்த அன்பான மக்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காக என்னுடன் மறவாது எனது சாப்பாட்டு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன். சாப்பாட்டுடன் அல்ல, வெறுமையான காலிப்பாத்திரமாக! பாத்திரம் சுத்தமாக விளக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் நான் ஆகாரம் கொண்டு வந்திருக்கின்றேன் என்று அவர்கள் கண்டு கொள்ளுவார்கள். ஆனால், பாத்திரத்தில் ஆகாரம் எதுவும் இருக்காது. அநேக நாட்களில் எனது மத்தியான ஆகாரம் நல்ல குளிர்ந்த தண்ணீராகவே இருந்திருக்கும். அப்படி நான் ஆகாரமின்றி இருந்த காரணத்தால் பின் வந்த நாட்களில் நீண்ட நாட்கள் கஷ்டமில்லாமல் உபவாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அந்தப் பயிற்சியின் காரணமாக வாரந்தோறும் ஒழுங்காக உபவாசிக்கவும், ஆண்டிற்கு ஒரு தடவை தேவ பெலத்தால் தொடர்ச்சியாக 40 நாட்கள் உபவாசிக்கவும் தேவ கிருபை பெற்றேன். வர வர அந்த 40 நாட்கள் உபவாசம் 2 மாத காலம் வரை கூடநீடித்தது. பரத்திலிருந்து உடனடி ஒத்தாசை தேவைப்படும் பட்சத்தில் உடனே உபவாசம் எடுக்கத் தொடங்கிவிடுவேன். தேவ எக்காள வடமாநில ஊழியங்களுக்குத் தேவையான ஏராளமான பணம் அந்த உபவாச ஜெபங்களின் மூலமாக பரத்திலிருந்து வந்தது.
நான் வேலைசெய்த தேயிலைத் தொழிற்கூடத்தில் 3 மாடிகள் உண்டு. அந்த தொழிற்கூடத்தின் மூன்றாம் மாடிக்கு நான் ஏறிச்சென்று எனக்கு கிடைத்த மத்தியானம் ஒன்றரை மணி நேர ஓய்வு இடை வேளையை ஜெபத்தில் செலவிட்டேன். ஆகாரம் இல்லாமல் இருந்த நேரங்கள் என் உபவாச ஜெப வேளையாயிற்று. நான் வேலை செய்த தேயிலை தொழிற்கூடத்தையும், என்னுடன் அலுவலகத்திலும், தொழிற்சாலையிலும் வேலைசெய்த சில மக்களையும் நீங்கள் படங்களில் காணலாம்.
மலை ஏற்றப் பயிற்சி அளித்த கன்மலை
நான் இந்த தேயிலைத் தோட்டத்தில் பணி செய்த காலத்தில் வரப்போகும் நாட்களில் நேப்பாளத்தின் உயரமான பனி மலைச் சிகரங்களில் எல்லாம் ஏறி தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தைச் செய்ய தேவையான மலை ஏற்றப் பயிற்சியையும் தேவன் இங்கு எனக்கு அளித்தார். அது குறித்து இதே செய்தியின் ஆரம்பத்தில் நான் எழுதியிருக்கின்றேன். அதின் காரணமாக, பின் வந்த நாட்களில் நான் கஷ்டமின்றி மலைகளில் ஏறி ஊழியம் செய்ய பெலன் பெற்றேன். 1987 ஆம் ஆண்டு நானும் எனது மகன் சுந்தர்சிங் அவர்களும் நேப்பாளத்திலுள்ள உலகின் எட்டாவது உயரமான சிகரம் அன்னபூரணாவின் பனி மூடிய அடிவாரம் (Annapurna Base Camp) வரை நாங்கள் தேவ ஊழியம் செய்துகொண்டே செல்லவும், ஊழியம் செய்து கொண்டே திரும்பி வரவும் கர்த்தர் உதவி செய்தார். நாங்கள் ஊழியம் செய்த பனி மூடிய 13540 அடி உயரமுள்ள அன்னபூரணா அடிவாரத்தை நீங்கள் படத்தில் காணலாம்.
அந்த இடத்திற்கு கால்நடையாகச் செல்ல முழுமையான ஒரு வார காலம் எடுத்தது. அதைப்போல தேவ ஊழியத்தின் பாதையில் சகோதரன் D.T.நார்ட்டன் அவர்களும் நானும் உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள 6500 அடி உயரமுள்ள கௌரிகுண்ட் என்ற இடத்திலிருந்து 11755 அடி உயரமுள்ள கேதார்நாத் என்ற இடம் வரை 14 கி.மீ. தொலைவை ஒரே நாளில் ஏறி அன்றே திரும்பிவிட்டோம். அன்று நாங்கள் ஒரே நாளில் மொத்தம் 28 கி.மீ. பிரயாணம் செய்திருந்தோம். அதைப்போன்ற சாநிழலின் பள்ளத்தாக்கு எதுவும் கிடையாது. நாங்கள் சென்ற கேதார்நாத்தை நீங்கள் படத்தில் காணலாம்.
ஊழியத்திற்கு தேவையான இந்தி மொழி பயிற்சியை அளித்த கர்த்தர்
வடமாநில தேவ ஊழியங்களுக்கு இந்தி மொழி மிகவும் அவசியமாகும். நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது இந்தியில் “பிராத்மிக்” “மத்தியமா” போன்ற ஆரம்ப படிப்பு மட்டும் படித்திருந்தேன். இப்பொழுது “ராஷ்ட்டிரபாஷா” என்ற நல்ல கூடுதலான படிப்பை இந்தியில் படிக்க கர்த்தர் என் உள்ளத்தில் ஏவினார். அவரது உணர்த்துதலின்படி நான் எந்த ஒரு ஆசிரியரின் உதவியின்றி இந்தி-தமிழ் மொழி அகராதியை மட்டும் வாங்கி கர்த்தரை துணையாகக் கொண்டு தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்தேன். எனக்குக் கிடைத்த மத்தியான ஒன்றரை மணி நேர ஓய்வு வேளை இந்திப் படிப்புக்கும் எனக்கு உறு துணையாக இருந்தது.
நான் மூன்றாம் இந்தி தேர்வுக்கு ஆயத்தமாகி உதகமண்டலத்தில் உள்ள ஒரு அரசாங்க பள்ளியில் தேர்வு எழுதச் சென்றிருந்தேன். தேர்வு எழுதுபவர்களை கண்காணிப்பவர் என்னைக் கண்டதும் “நீங்கள் தனியாக ஆசிரியர் உதவியில்லாமல் உங்கள் மட்டாகப்படித்து இந்த கடினமான தேர்வில் வெற்றிபெறுவது மிகவும் கடினம்” என்றார். நான் அவருக்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. நான் ஆண்டவரிடம் ” தகப்பனே, எனக்கு இத்தனை பெரிய பாட அட்டவணை முழுவதையும் படித்து முடிப்பது என்பது முற்றும் கூடாத காரியம். நான் எதை எதை என் மனவிருப்பப்படி தெரிந்து எடுத்துப் படிக்கின்றேனோ அதிலிருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்கப் பண்ணியருளும்” என்று தேர்வுக்குப் படிக்க தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே தேவ சமூகத்தில் மன்றாடி வந்திருந்தேன்.
அந்தப்படியே நான் படித்த பாடங்களிலிருந்தே கேள்விகள் கேட்கப்பட்டன. கர்த்தருடைய கிருபையால் நான் “தஷிண் பாரத் இந்தி பிரச்சார் சபா” நடத்திய அந்த ராஷ்ட்டிரபாஷா தேர்வில் இரண்டாம் இடத்தில் வெற்றிபெற்றேன். நான் பெற்ற எனது சான்றிதழை தேவப்பிள்ளைகளாகிய நீங்களும் காண வேண்டும் என்பதற்காக இத்துடன் வெளியிடுகின்றேன்.
இந்தவித இந்தி மொழி அறிவின் காரணமாக நான் வடக்கே தனியனாகச் சென்று தேவனுடைய ஊழியங்களைச் செய்யவும், எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வட இந்திய மக்களுடன் பேசிப் பழகி அவர்களுடைய வீடுகளில் இரவில் தங்கிக்கொள்ளவும் எனக்கு பேருதவியாக இருந்தது. அன்பின் ஆண்டவருடைய ஆச்சரியமான வழிநடத்துதல்களைப் பாருங்கள்!
ஆங்கில அறிவைத்தந்த அற்புதநாதர்
ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டது போல ஆங்கிலத்தில் சுத்த சூன்யமாக என்னைக்கண்ட தேயிலைத்தோட்ட நிறுவனத்தினர் என்னை எப்படியும் அங்கிருந்து வீட்டுக்கு அனுப்ப திட்டமாகத் தீர்மானித்துவிட்டனர். அதற்கு அவர்கள் மறைவான யுக்தியைக்கூட கையாள முயற்சித்தனர். நான் சர்வ வல்ல தேவனால் அவருடைய அநாதி தீர்மனத்தின்படி அங்கே அனுப்பப்பட்டிருக்கும்போது யாரால் அந்த இடத்திலிருந்து என்னை அனுப்ப முடியும்? என்னை வீட்டுக்கு அனுப்ப தீர்மானித்தபோது தேவன் கடலிலே பெருங் கொந்தளிப்பை அந்த இடத்தில் அனுப்பினார். அந்த நாட்களில் யாரும் சற்றும் எதிர்பாராதவிதமாக அலுவலகத்தின் தலைமை குமஸ்தா திடீரென ஒரு நாள் மாரடைப்பில் காலமானார்கள். அந்த துயரமான சூழ்நிலையில் என்னை எந்த ஒரு நிலையிலும் வீட்டுக்கு அனுப்பக்கூடாதவாறு நிலைமை தலை கீழாக மாற்றம் அடைந்தது.
நானும் ஏனோதானோவென்று இருக்காமல் கர்த்தருடைய ஏவுதலின்படி எனது ஆங்கில அறிவைப் பெருக்கிக் கொள்ள பெரிதும் முயற்சிகள் எடுத்தேன். விசேஷமாக தமிழ், ஆங்கில வேதாகமங்களை ஒப்பிட்டுப் படிக்கத் தொடங்கினேன். தமிழ் வேதாகமத்தில் ஏதாவது ஒரு சரித்திரத்தை குறிப்பாக யோசப்பு, தானியேல் போன்ற பகுதிகள், மலைப்பிரசங்கம், சுவிசேஷ பகுதிகளை தமிழில் வாசித்துவிட்டு அதை அப்படியே ஆங்கிலத்தில் வாசித்து ஆங்கில பதங்கள் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதை நான் கூர்ந்து கவனித்தேன். இப்படி நான் தொடர்ந்து நீண்ட நாட்கள் வாசித்துவிட்டு ஒரு நாள் ஆங்கில “இந்து” பேப்பரை நான் வாசித்தபோது அது எனக்கு மிகவும் சுலபமாக விளங்கிற்று. அதின் காரணமாக நான் தொடர்ந்து அந்த பத்திரிக்கையையும் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.
நான் வேலை செய்த அலுவலகத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளில் முக்கியமான ஒன்று அலுவலகத்துக்கு வரும் நூற்றுக்கணக்கான ஆங்கில மற்றும் தமிழ் கடிதங்கள் எல்லாவற்றையும் நான் கவனமாக வாசித்து அவைகளை அந்தந்த ஃபைல்களில் போட்டு வைக்க வேண்டும். நிர்வாகத்தினர் அவைகளைக் கேட்கும்போது நான் அதை எடுத்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். சில சமயங்களில் இப்படி எழுதப்பட்ட ஒரு கடிதம் என்று அவர்கள் என்னிடம் ஒரு சிறிய விளக்கம் கூறியதும் நான் அதை கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும். எங்களது பைலின் கேபினில் சுமார் 90 க்கும் கூடுதலான பைல்கள்இருந்தன. அவை ஒவ்வொன்றும் எந்தெந்த கடிதங்களை தாங்கி நிற்கின்றது என்பது எல்லாம் எனக்கு நன்கு தெரியும். நான் எனது உலக வேலையைவிட்டுவிட்டு 40 ஆண்டு காலம் கடந்து சென்று விட்டபோதினும் இன்றும் கூட அந்த பைல்களின் நினைவு எனக்கு உள்ளது. இப்படி நான் ஏராளமான ஆங்கில கடிதங்களை நன்கு வாசித்து அவைகளை அந்தந்த பைல்களில் போட்டதால் எனது ஆங்கில அறிவை கணிசமாகப் பெருக்கிக் கொள்ள அதுவும் எனக்கு தேவ கிருபையால் பொன்னான வாய்ப்பாக அமைந்தது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக.
ஆங்கில அறிவுக்காக நான் சிந்திய கண்ணீர்
ஆங்கிலம் தெரியாத காரணத்தால் நம்மை வேலையிலிருந்து வெளியேற்றப் போகின்றார்கள் என்பதை என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. நாம் வேலையைவிட்டு விட்டு ஊருக்குச் சென்று என்ன செய்வது? எனது கண்ணீரின் பிரச்சினையை தேவ சமூகத்துக்குக் கொண்டு சென்றேன். நான் அந்த தேயிலை தோட்டத்தில் பணி செய்த நாட்களில் இரவில்தான் ஸ்நானம் செய்து கொள்ளுவேன். அந்த இராக்காலத்தில் நான் என் உடம்பில் சூடான நீரை ஊற்றிக்கொள்ளும்போது அத்துடன் என் கண்களிலிருந்து வடியும் கண்ணீரும் சேர்ந்து கொள்ளும். ஆம், ஆங்கில அறிவை ஆண்டவர் எனக்குத் தந்து எந்த ஒரு நிலையிலும் நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிடாமல் காத்துக்கொள்ளும்படியாக அழுது ஜெபித்தேன். நான் எனது ஆங்கில அறிவிற்காக கண்ணீர்விட்டு அழுத வீட்டை நீங்கள் இந்தப்படத்தில் காண்கின்றீர்கள்.
நான் வேலைக்கு வந்ததும் எனக்கும் என்னுடன் அலுவலகத்தில் பணி செய்த மற்றொரு மூத்த பணியாளருக்கும் இந்த வீடு கொடுக்கப்பட்டது.
நாட்கள் செல்லச் செல்ல எனது ஆங்கில அறிவு தேவ கிருபையால் கணிசமான அளவு வளர்ந்தது. பின் வந்த நாட்களில் என்னுடன் பணி செய்த மூத்த பணியாளர்கள் ஆங்கிலத்தில் தங்களுக்கு தெரியாத சந்தேகமான வார்த்தைகளை என்னிடமே கேட்டு தெரிந்து கொள்ளும் அளவிற்கு என்னை ஆட்கொண்ட கர்த்தர் அந்த இடத்தில் என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தார். இன்று என்னுடைய புத்தக அலமாரிகளில் இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட சில நூறு ஆவிக்குரிய அருமையான கிறிஸ்தவ புத்தகங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்பட்டவையாகும் என்றால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியம் அடைவீர்கள். தமிழ் புத்தகங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில புத்தகங்கள்தான் இருக்கும். எல்லா துதி ஸ்தோத்திரத்துக்கும் பாத்திரமானவர் நம் அன்பின் தேவன் ஒருவரே.