“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர்” (1 இரா 8 : 23)
“அன்பரின் நேசம்” என்ற தலைப்பிலான எனது சுயசரிதையை வாசிக்கப்போகும் உங்களை கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் வாழ்த்துகின்றேன். இதை வாசிக்கப் போகின்ற உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. பாவியாகிய எனது எளிமையான ஜீவிய சரிதையை வாசிக்கப் போகும் உங்களின் இருதயத்தை அன்பின் ஆண்டவர் தமது பரிசுத்த பிரசன்னத்தால் நிரப்புவாராக. ஜெப நிலையில், தாழ்மையான, கற்றுக்கொள்ளும் வாஞ்சையோடு கர்த்தர் இந்த சரிதையின் மூலமாக உங்களுடன் பேச வேண்டுமென்ற அன்பின் தாகத்தோடு வாசியுங்கள். மாம்ச பிரகாரமான எந்த ஒரு உலக சிந்தைக்கும் நான் இடம் கொடுக்காமல் அதிகமான ஜெபத்தோடும், தேவ ஒத்தாசையோடும், அடிக்கடி பரத்தை நோக்கி, நோக்கிப் பார்த்து இந்த சுயசரிதையை எழுதி முடித்தேன்.
“தேவ எக்காளம்” பத்திரிக்கையை பல்லாண்டு காலமாக வாசித்து அதினால் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்ட தேவ பிள்ளைகள் சிலர் நான் எனது சுயசரிதையை புத்தக ரூபமாக எழுதினால் அது அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்கள். நான் அவர்களின் விருப்பத்திற்கு உடனே இணங்கவில்லை. காரணம், நாமே நமது சுயசரிதையை எழுதினால் அது நம்மை நாமே உயர்த்தி பெருமைப்படுத்துவது போலாகிவிடும் என்று நினைத்து அந்த எண்ணத்தை நான் முற்றுமாக கைவிட்டுவிட்டேன். ஆனால், தேவ மக்கள் அவ்வப்போது அந்தக் காரியத்தை தொடர்ந்து என்னிடம் நினைப்பூட்டி என்னைக் கேட்டுக்கொண்டபடியால் அந்தக் காரியத்தை ஆண்டவருடைய சமூகத்திற்கு கொண்டு வந்து அவருடைய சித்தத்தை கண்டுகொள்ள நான் அதிகமாக என் இருதயத்தை அவருக்கு நேராக ஏறெடுத்தேன்.
அன்பின் ஆண்டவர் எனது 18 ஆம் வயதில் என்னைத் தமது சொந்தப் பிள்ளையாக தெரிந்து கொண்டு என்னைக்கொண்டு இதுநாள் வரைஅவர் கிருபையாக நடத்திய அவருடைய அதிசயமான செயல்களை எல்லாம் நான் தேவ சமூகத்தில் அதிகமாக நினைவு கூர்ந்தேன். அந்த சர்வ வல்ல கர்த்தர் என்னோடு நேருக்கு நேர் தமது வார்த்தைகளின் மூலமாக பேசிய சந்தர்ப்பங்கள், வேதாகமத்திலிருந்து தமது வாக்கைக் கொடுத்து உலக வேலையிலிருந்து என்னை அழைத்த காரியம், தாம் கொடுத்த தமது வார்த்தையின்படி சற்றும் பிசகாமல் அதிசய அற்புதமாக நிறைவான தேவ ஆசீர்வாதத்துடன் என்னை ஆதரித்து வழிநடத்திய அவரது காருண்யம், அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக நீண்ட 46 ஆண்டு காலம் தேவ எக்காளம் பத்திரிக்கையை அச்சிட்டு வெளியிட அவர் பாராட்டின இரக்கம், வட இந்திய மாநிலங்களிலும், இமயமலையின் கடையாந்திர பகுதிகள் வரை தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை அறிவிக்க அவர் எனக்குப் பாராட்டின தயை, பல்லாயிரக்கணக்கான தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்கள், வேதாகமங்கள், புதிய ஏற்பாடுகள், சுவிசேஷ பங்குகள் போன்றவற்றை தேவனை அறியாத மக்களின் கரங்களில் விசேஷமாக அநேக பள்ளி மாணவ மாணவியரின் கரங்களில் அளிக்க அவர் செய்த அற்புதம் எல்லாவற்றையும் நான் அவர் சமூகத்தில் அதிகமாக நினைவுகூர்ந்தேன். தமிழ் நாட்டில் எந்த ஒரு சுவிசேஷகனுடைய பாதங்களும் பட்டிராத பனி மூடிய இமயத்தின் கடைமுனை மட்டும் அவர் என்னை அழைத்துச்சென்று தமது ஜீவனுள்ள நல்ல நாமத்தை பிரசித்தப்படுத்தின அவருடைய ஆச்சரியமான செயல்களை எல்லாம் எண்ணி அந்த அன்பரின் பாதங்களில் கண்ணீரோடு என்னைத் தாழ்த்தினேன்.
இந்தக் காரியங்களை எல்லாம் பாவியாகிய என்னைக் கொண்டு நிறைவேற்ற தேவன் என்னில் கண்ட பரிசுத்த நடபடிகள் என்ன என்பதை இந்த எனது சுயசரிதையில் நான் ஜெபத்தோடும், மிகுந்த மனத்தாழ்மையோடும் உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். நான் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கும் கிறிஸ்துவுக்குள்ளான எனது அனுபவங்கள் அனைத்தும் முற்றும் உண்மையானவைகள். எதையும் நான் எனது பெருமைக்காக மிகைப்படுத்தி எழுதவில்லை. “நீர் என்னைக் காண்கின்ற தேவன்” (ஆதி 16 : 13) என்ற தேவ வார்த்தைக்கு நான் நடுநடுங்குகின்றேன். எனது சுயசரிதையில் காணப்படும் அநேக காரியங்களை நான் ஏற்கெனவே நமது தேவ எக்காளம் பத்திரிக்கையில் அவ்வப்போது கடந்த நாட்களில் எழுதி வந்திருப்பதை நீங்கள் காணக்கூடும்.
எந்த ஒரு தனி மனிதனையும் தமது பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக பயன்படுத்த தேவன் அவனில் எதிர்பார்ப்பது என்ன என்பதை முகப்பில் நான் குறிப்பிட்டிருக்கும் (1 இரா 8 : 23) ஆம் தேவ வசனம் நமக்கு தெள்ளந்தெளிவாக கோடிட்டுக்காண்பிக்கின்றது. இதே கர்த்தருடைய வசனத்தை நீங்கள் (2 நாளா 6 : 14) ஆம் வசனத்திலும் காணலாம். ஆனால் பின்னாலுள்ள தேவ வசனத்தில் “மேலே வானத்திலும், கீழே பூமியிலும்” என்ற ஆர்ப்பரிப்பின் வார்த்தைகள் இடம்பெறவில்லை.
வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவன் நீசப்பாவியாகிய என்னை தமக்கென்று தெரிந்து கொண்டு என்னைக் கொண்டு தமது பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தினதற்கான சில காரணங்களை நான் இந்த எனது சுயசரிதையில் விபரமாக எழுதியிருக்கின்றேன். அதில் பிரதானமான ஒரே ஒரு காரியம் “முற்றும் ஒப்புக்கொடுத்தல்” (Full Surrender) என்பது மட்டுமே. தேவன் தமது சொந்த இரத்தக் கிரயத்தால் தமக்கென மீட்டுக் கொண்ட தமது அடியார்களிடம் எதிர்பார்ப்பது இது ஒன்று மட்டுமேதான் என்பதை நீங்கள் திட்டமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அமெரிக்காவின் ராட்சத தேவ பக்தன் மூடி பிரசங்கியாரை (D.L.Moody) அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக தேவன் பயன்படுத்த காரணமாக இருந்தது அவரது முழுமையான ஒப்புக்கொடுத்தல் ஆகும். ஒரு மாலை நேரம் அவரும் அவருடைய ஆவிக்குரிய நண்பர் ஹென்றி வார்லி (Henry Varley) என்பவரும் ஒரு நதிக்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருக்கையில் அவரது நண்பர் அவரைப் பார்த்து (The world has yet to see what God can do with and for and through and in and by the man who is fully and wholly consecrated to Him) “தன்னை முற்றிலுமாக தேவனுக்கு ஒப்புவித்த ஒரு மனிதனை அவர் பயன்படுத்தும் விதத்தை உலகம் இன்னும் காணவில்லை” என்று கூறினார். சற்று நேர அமைதிக்குப்பின்னர் மூடி தனது நண்பரைப் பார்த்து கர்த்தருடைய பெலத்தால் அப்படி முற்றும் ஒப்புக் கொடுத்த மனிதன் நானாகவே இருப்பேன் என்று கூறி அந்த நாளிலேயே அவர் தன்னை தன் கர்த்தாவுக்கு முழுமையாக அர்ப்பணித்தார். அதின் விளைவாக தேவன் மூடி பிரசங்கியாரைக் கொண்டு ஒரு பெரிய உயிர் மீட்சியை அமெரிக்காவுக்கு கொண்டு வந்தார். அவருடைய ஊழியங்களின் மூலமாக ஆயிரம், பதினாயிரங்களை தேவன் தமது மந்தையில் சேர்த்தார். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.
பாவியாகிய என்னை கிருபையாக தமது நாமத்திற்கு மகிமையாக எடுத்து பயன்படுத்திய சர்வ வல்ல தேவன் தாமே உங்களையும் தமது ஆசீர்வாதத்தின் பாத்திரமாக தெரிந்து கொண்டு அநேகரை நீதிக்குட்படுத்தும் பாக்கியத்தை உங்களுக்குத் தந்தருள்வாராக. ஆமென்.
உங்களுக்காக ஜெபிக்கும் உங்கள் அன்புள்ள சகோதரன்,
N. SAMUEL,
Editor “Deva Ekkalam”
KOTAGIRI 643 217 Nilgiris:
email:- nsamuel236@gmail.com
Website:- devaekkalam.com