ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசின குரல் கேட்கும் பாக்கியம் பெற்றேன்
மனிதனை தமது சாயலாகவும், தமது ரூபமாகவும் உருவாக்கின தேவன் அவனோடு பேசவும், அவனோடு உறவாடவும் அதிகமாக விரும்புவதை வேதாகமம் முழுமையிலும் நாம் காணலாம் பகலின் குளிர்ச்சியான வேளைகளில் நமது ஆதி தாய் தந்தையருடன் ஏதேன் பூங்காவிலே பேசி உறவாடி மகிழ்ந்த தேவனாகிய கர்த்தர் அதைத் தொடர்ந்து தனி மனிதர்கள், தீர்க்கத் தரிசிகள், நியாதிபதிகள், ராஜாக்கள் என்று பலதரப்பட்ட மக்களோடும் அவ்வப்போது பேசியதை நாம் ஆச்சரியத்துடன் கவனிக்கின்றோம். வேதாகம காலத்தில் மாத்திரமல்ல உலக திருச்சபை சரித்திரத்திலும், இது நாள் பரியந்தமும் தேவன் தம்முடைய பிள்ளைகளோடு பேசிக்கொண்டு வருவதை நாம் மிகுந்த ஆச்சரியஅதிசயத்துடன் வாசித்து உள்ளம் பூரிக்கின்றோம். ஆம், இன்றும் தேவன் தமது பிள்ளைகளோடு பேசுகின்றார். அதுமாத்திரமல்ல, “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாகவிருக்கின்றார்” (சங்கீதம் 145 : 18)
வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் படைத்த சர்வ வல்ல தேவன் உங்கள் சகோதரனாகிய என்னோடும் பல தடவைகளும் பேசி வந்திருக்கின்றார் என்று சொன்னால் நீங்கள் நிச்சயமாக ஆச்சரியமடைவீர்கள். ஆனால், என்னுடைய வார்த்தையை நீங்கள் மறுப்பின்றி அப்படியே நம்புவீர்கள். காரணம், அந்த சர்வ வல்ல தேவன் தம்முடைய நாமத்திற்கு மகிமையாக என்னை கடந்த 46 நீண்ட ஆண்டு காலமாக அதிசயம் அற்புதமாக பயன்படுத்தி வந்ததை நீங்களே உங்கள் சொந்தக் கண்களால் கண்டு வந்திருக்கின்றீர்கள். கர்த்தருக்கே துதி உண்டாவதாக. இந்த எனது சுய சரிதையில் கர்த்தர் என்னோடு பேசிய சில சந்தர்ப்பங்களை மாத்திரம் தேவப்பிள்ளைகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவது உங்கள் விசுவாச வாழ்வுக்கு நிச்சயமாக மிகவும் ஆசீர்வாதமாக அமையும் என்று நான் கர்த்தரில் விசுவாசிக்கின்றேன். கடந்த நாட்களில் நமது தேவ எக்காள பத்திரிக்கையில் இந்த எனது தாழ்மையான அனுபவங்கள் குறித்து அவ்வப்போது நான் எழுதினதுண்டு. உங்களுடைய ஆசீர்வாதத் திற்காக நான் அவைகளை திரும்பவும் எழுதுகின்றேன்.
சர்வ வல்ல தேவன் எப்படிப் பேசுவார்? அவர் குரல் எப்படியிருக்கும்? இடி முழக்கம்போல முழங்கி தமது சத்தத்தை தொனிக்கப்பண்ணுவாரா? அல்லது அமர்ந்த மெல்லிய குரலில் பேசுவாரா? அவருடைய வார்த்தைகள் எதை அடிப்படையாக கொண்டதாயிருக்கும்? என்றெல்லாம் நீங்கள் என்னிடம் கேட்க ஆசைப்படுவீர்கள் என்பதை நான் நன்கறிவேன். எனது வாழ்வின் தாழ்மையான அனுபவங்கள் உங்கள் கேள்விகளுக்கு முழுமையாக விடை அளிக்கும் என்று நான் விசுவாசிக்கின்றேன்.
நான் அதிசயிக்கத்தக்கதான விதத்தில் தேவன் ஒரு நாள் நள்ளிரவு 12 ஆம் மணி வேளை என்னோடு பேசினார். அது ஒரு செப்டம்பர் மாதம் சனிக்கிழமை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். திட்டமான ஆண்டு எனக்குத் தெரியாதபோதினும் 1959 அல்லது 1960 ஆம் ஆண்டாகஅது இருக்கலாம் என்று நான் நம்புகின்றேன். அப்பொழுது நான் உலகப்பிரகாரமாக நீலகிரி மலைகளிலுள்ள ஒரு தேயிலைத்தோட்டத்தின் அலுவலகத்தில் கடைநிலை குமஸ்தாவாகப் பணி செய்து கொண்டிருந்தேன்.
ஒரு நாள் நான் எனது அலுவலக வேலை முடிந்ததும் மாலை நேரத்தில் எனது பெட்ரோமாக்ஸ் விளக்கை எடுத்துக் கொண்டு எங்கள் தேயிலைத் தோட்டத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலுள்ள “வார்விக் எஸ்டேட்” (Warwick Estate) என்ற இடத்திலுள்ள மற்றொரு தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்யும் கிறிஸ்தவ மற்றும் இந்து தொழிலாளர்கள் மத்தியில் தேவனுடைய சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளுவதற்காக நடந்து சென்றுவிட்டு ஊழியத்தை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் அந்த இடத்திலிருந்து புறப்பட்டேன். எனது கரத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.
நான் குடியிருந்த வீட்டிற்கு வர இன்னும் 2 கி.மீ. தூரம் இருக்கும் சமயத்தில் நான் ஒரு இருண்ட கானகப் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். பகல் நேரத்திலேயே அந்த இடத்தின் வழியாக வருவது சற்று அச்சமாக இருக்கும். அந்த இடம் முழுவதும் சேறு நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும். அந்தக் கானகப் பகுதியிலிருந்து ஓடிவரும் நீரோடை ஒன்று ரஸ்தாவின் குறுக்கே ஓடி பாறைகளின் ஊடாகச் சென்று கீழே ஒரு மலை அருவியாக விழுந்து கொண்டிருக்கும். அந்த நீரோடையின் சத்தம் அந்த நள்ளிரவு வேளை கானகத்தில் பலமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. எனது கடிகாரத்தின் முள் சரியாக நள்ளிரவு 12 ஆம் மணி வேளையைக் காண்பித்துக் கொண்டிருந்தது. அந்த வேளையில் இருவர் கூடி ஒரே நேரத்தில் சப்தமாக சிரிக்கும் ஒரு சிரிப்பொலி எனக்குக் கேட்டது. நீலகிரி மலைகளில் உருளைக் கிழங்கு பயிரிடும் விவசாயிகள் தங்கள் பயிரை காட்டுப் பன்றிகளுக்கு பாதுகாத்துக் கொள்ள காவலுக்காக தங்கியிருக்கும் இருவர் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நான் ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டேன். அதை நான் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவே இல்லை. ஓரிரு நிமிடங்கள் கூட கடந்து சென்றிருக்காது. அதற்குள்ளாக எனக்கு முன்பாக சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த உயர்ந்த பச்சைப் பசேரென்ற அடர்த்தியான கானக மரங்களிலிருந்து நான் முதலில் கேட்ட சிரிப்பொலியைவிட சற்று பலமாக மற்றொரு சிரிப்பொலி கேட்டது. அதைக் கேட்கவும் நான் பயமடைந்தேன். வினாடிப் பொழுதிற்குள்ளாக என் சரீரம் முழுவதும் வியர்வையால் நனைந்து வியர்வை எனது கால்கள் வழியாக வழிந்தோட ஆரம்பித்தது. சாத்தானாம் பிசாசுதான் என்னைப் பயமுறுத்துவதற்காக அப்படிச் சிரிக்கின்றான் என்பதை நான் நினைத்துப் பார்க்கும் வேளையில் நான் சற்றும் எதிர்பாராதவிதத்தில் என் இருதயத்திற்குள்ளிருந்து “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்……………..” என்ற 23 ஆம் சங்கீதத்தின் நான்காம் வசனம் முதல் ஆறாம் வசனம் வரையான வார்த்தைகள் என் காதுகளில் கணீர் என்று தொடர்ந்து தொனித்துக் கொண்டிருப்பதைக் கேட்டு ஆவிக்குள்ளாக நான் மிகவும் அனல் கொண்டு அந்தக்காட்டில் நின்று கொண்டு பலத்த சத்தமிட்டு சாத்தானாம் பிசாசை நான் கடிந்து எச்சரித்துவிட்டு அந்த இடத்திலிருந்து ஒரு ஆச்சரியமான தேவ பெலத்தோடு என் வீட்டிற்கு நடந்து வந்து சேர்ந்தேன். கர்த்தர் தம்முடைய வார்த்தைகளைக் கொண்டு அந்த இடத்தில் என்னைப் பெலப்படுத்தியிருக்காத பட்சத்தில் நான் அந்த இடத்தில் பயத்தால் உறைந்து போயிருப்பேன்.
ஒரு காலத்தில் இருண்ட கானகமாக இருந்த அந்த இடத்தை அரசாங்கம் இன்று வெட்டி அழித்து தேயிலை பயிரை சாகுபடி செய்து ஏராளமான மக்களை அந்த இடத்தில் குடி அமர்த்தியிருக்கின்றது. நள்ளிரவு நேரம் கர்த்தர் என்னோடு பேசி என்னைப் பெலப்படுத்திய அந்த இடத்தின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம். படத்தில் நீங்கள் காண்கின்ற அடர்ந்த மரத்திற்கு கீழாக இடது கைப்பக்கமாக உள்ள ரஸ்தாவில்தான் கர்த்தர் என்னோடு பேசினார்.
நான் வேலைசெய்து கொண்டிருந்த கில்மெல்போர்ட் தேயிலைத்தோட்டத்தின் தொழிற்கூடம் அருகில் வீடு இல்லாத காரணத்தால் சுமார் 5 அல்லது 6 கி.மீ. தொலைவில் அடுத்த ஒரு டிவிசனான பாரஸ்ட்ஹில் என்ற இடத்தில் இருந்த ஒரு பழைய பங்களாவை மூன்று வீடுகளாக மாற்றி அமைத்து அதில் ஒரு வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். வீட்டைச் சுற்றிலும் கானக விலங்குகள் குறிப்பாக புலிகள், செந்நாய்கள், காட்டுப்பன்றிகள், விதவிதமான மான்கள் எல்லாம் வாழ்ந்து கொண்டிருந்தன.
தேவ எக்காளம் பத்திரிக்கை ஆரம்பித்து சில மாதங்கள்தான் கடந்து சென்றிருக்கும். அந்த நாட்களில் நான் தேவ எக்காளத்திற்கான செய்திகளை எனது மடியில் வைத்துத்தான் எழுதுவேன். அந்த கானக பங்களாவின் முன்பாக இருந்த புல் வெளியில் நான் ஒரு நாள் மத்தியானம் உட்கார்ந்து தேவ எக்காள இதழுக்கான செய்திகளை எழுதிக்கொண்டிருந்தேன். அதை எழுத எழுத இன்னும் எத்தனை மாதங்கள் நாம் தேவ எக்காளத்தை எழுதி வெளியிடப் போகின்றோமோ, அதற்கான பொருளாதாரங்கள் தடங்கலின்றி ஒழுங்காக வந்து கிடைக்குமா என்று நான் என் உள்ளத்தில் ஆழ்ந்த கவலையுடன் யோசித்துக் கொண்டிருக்கும்போது “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான், கர்த்தராகிய நான் ஏற்ற காலத்தில் இதைத்தீவிரமாய் நடப்பிப்பேன்” (ஏசாயா 60 : 22) என்ற வார்த்தையை தேவன் என் உள்ளத்தில் சட்டென்று உணர்த்தினார். அந்த தேவ வாக்கின்படி கடந்த நீண்ட 46 ஆண்டு காலம் தேவன் இந்த எளிய பத்திரிக்கையை அதிசய அற்புதமாக அநேகருக்கு ஆசீர்வாதமாக ஒரு பைசா கூட கடனின்றி அச்சிட்டு வெளியிட கிருபை செய்து வந்திருக்கின்றார். அவருக்கு நாம் என்னஈட்டை செலுத்த முடியும்? அன்பின் பரம தகப்பன் என்னோடு பேசிய அந்த கானக பங்களாவை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.
நான் எனது தேயிலைத்தோட்ட குமஸ்தா பணியில் இருந்த நாட்களில் நான் கடைசியாக தங்கி இருந்த வீட்டை நான் என் வாழ்வில் என்றும் மறக்கவே மாட்டேன். காரணம், கர்த்தர் அந்த வீட்டில் என்னுடன் மூன்று தடவைகள் பேசியிருக்கின்றார். ஒரு நாள் நான் மிகவும் மனச்சோர்படைந்து எனது துக்க மிகுதியால் நான் ஆண்டவருடைய வேதத்தை வாசியாமலும், ஜெபிக்காமலும் மனச்சோர்புடன் இரவில் படுத்துக்கொண்டேன். நான் படுத்து நித்திரை செய்து அயர்ந்த தூக்கத்தில் இருந்தபோது கர்த்தர் என்னுடன் அசரீரீயாகப் பேசினார் “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகள் எல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” (சங்கீதம் 34 : 19) என்ற அந்த வார்த்தையை என் தூக்கத்தில் நான் கேட்டு திடீரென்று படுக்கையினின்று கண் விழித்து என் கட்டிலில் அமர்ந்தபோது எனது கட்டிலும் நான் படுத்திருந்த சிறிய அறையும் பூமியதிர்ச்சிக்குள்ளானதைப் போன்று பலமாக நடுங்குவதை நான் அதிர்ச்சியுடன் கவனித்தேன். கர்த்தர் பேசினால் வீடு அதிர்ச்சியடையுமோ என்று நான் ஆச்சரியத்துடன் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில்தானே “கர்த்தருடைய சத்தம் காதேஸ் வனாந்திரத்தை அதிரப்பண்ணும்” (சங் 29 : 8) என்ற தேவ வார்த்தை உடன்தானே தொடர்ந்து என் உள்ளத்தில் தொனிப்பதை நான் கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
இந்த வீட்டிலிருந்தபோது தான் அன்பின் ஆண்டவர் நான் எனது உலகப்பிரகாரமான தேயிலைத்தோட்ட குமஸ்தா வேலையை உடனே விட்டு விட்டு தம்முடைய பரிசுத்த பணியை முழு நேரமாக எடுத்துச் செய்யும்படியாக என்னோடு பேசி அதற்கு அனுகூலமாக எனக்கு ஏசாயா 60: 19 -20 ஆம் வசனங்களிலுள்ள வாக்குத்தத்தத்தை நான் அவரிடம் கேட்டுக் கொண்டதற்கு மாறுத்தரமாகத் தந்தார். அவருடைய அற்புத வாக்குத்தத்தத்தைக் கவனியுங்கள். “இனிச் சூரியன் உனக்கு பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், உன் துக்க நாட்கள் முடிந்துபோம்”
ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு நான் அப்படியே கீழ்ப்படிந்து உடனே எனது வேலையை நான் ராஜிநாமா செய்தேன். அந்த நாட்களில் தேயிலைத்தோட்டங்களில் வேலை பார்ப்பது என்பது மிகவும் உயர்வாகக் கருதப்பட்டது. நல்ல சம்பளம், போனஸ், ஆண்டுக்கு ஒரு முறை ஒரு மாத சம்பளத்துடனும், போக்குவரத்து படியுடனும் கூடிய லீவு, போன்ற பல சலுகைகளும் அந்த வேலைக்குக் கொடுத்தார்கள்.
எந்த ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்தையும், எந்த ஒரு தனி மனிதனின் ஆதரவையும் நம்பிக்கையாகக் கொண்டு நான் எனது வேலையை விடாமல் கர்த்தர் ஒருவரையும், அவர் எனக்குக் கொடுத்த வாக்குத் தத்தத்தையும் பற்றிப் பிடித்தவனாக நான் எனது வேலையை விட்டேன். “அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை” (1 சாமுவேல் 3 : 19) என்ற தேவ வாக்கின்படி தேவன் எனக்குக் கொடுத்த வாக்கை அப்படியே நிறைவேற்றினார். கர்த்தருக்கே துதி உண்டாவதாக. கர்த்தர் என்னோடு மூன்று தடவைகள் பேசினதும் நாங்கள் கடைசியாகத் தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்ததுமான வீட்டையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
தேவனுடைய திட்டவட்டமான வழிநடத்துதலின்படி எனது உலகப்பிரகாரமான வேலையை 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி நான் விட்டுவிட்டு கோத்தகிரியில் மாதம் 60 ரூபாய் வாடகைக்கு ஒரு வீட்டில் குடியிருந்தோம். நான் வேலை செய்த தேயிலைத் தோட்டத்தில் எனக்குக் கிடைத்த சொற்பமான பணத்தை கோத்தகிரியிலுள்ள ஒரு வங்கியில் (Central Bank of India) போட்டுவிட்டு எங்களது தேவைகளுக்கு காசோலை எழுதி பணம் பெற்று வந்து செலவு செய்து கொண்டிருந்தேன். ஒரு நாள் அப்படி நான் ஒரு காசோலையை எழுதி வங்கிக்குக் கொண்டு சென்றபோது எனது கணக்கில் பணம் இல்லை என்று கூறி நான் கொடுத்த காசோலையை எனது கரத்தில் திருப்பிக் கொடுத்தார்கள். எனக்கு என்ன செய்வதென்று ஒன்றும் தெரியவில்லை. அந்த நாளிலிருந்து நான் முழுமையாக ஆண்டவர் சார்பில் விழுந்தேன். அடுத்த நேர ஆகாரத்திற்கு நாங்கள் கர்த்தரின் முகம் நோக்கிக் காத்திருக்க வேண்டியதாகவிருந்தது. அது ஒரு கடினமான விசுவாச வாழ்க்கை.
அந்த வீட்டில் 1977 ஆம் ஆண்டு ஜனுவரி மாதத்தின் ஒரு நாள் “நான் சர்வ வல்லiயுள்ள தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு” (ஆதியாகமம் 17 : 1) என்று கர்த்தர் பேசினார். அவரது வார்த்தை ஒரு நாள் அதிகாலை எனது உள்ளத்திலிருந்து தொனித்தது. அதே ஆண்டு ஆரம்ப மாதங்கள் ஒன்றில் ஒரு நாள் அதிகாலை நான் குளிரான சிமெண்ட் தரையில் ஒரு கோரம் பாயை விரித்துப் படுத்திருந்தேன். எனது மனைவியும், எனது சிறு பையன்கள் இருவரும் நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் அன்பான பாஸ்டர் ஐயா அவர்கள் எங்களுக்குக் கொடுத்திருந்த இரவல் கட்டிலில் படுத்திருந்தார்கள். அது ஒரு கம்பி வலைக்கட்டில் (Spring Cot). நீண்ட ஆண்டுகள் அதைப் பயன்படுத்தியிருந்ததால் மிகவும் பழமையாக அது இருந்தது. அந்த பழைய கட்டிலைத்தான் எங்களுக்குக் கொடுத்திருந்தார்கள். மனைவி, பிள்ளைகள் இருவரின் பழுவைத்தாங்க இயலாத அந்த தொங்கு கட்டில் தூக்கணாங் குருவி கூடு போல பூமியை ஒட்டித் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கண்ணீரின் காட்சியையும், எனக்குப் படுக்க ஒரு கட்டில் கூட இல்லாத துயர நிலையையும், எங்களுக்கு முன்னாலுள்ள எங்கள் நீண்ட எதிர் கால நாட்களையும், பிள்ளைகளின் கல்வி, ஊரிலுள்ள எனது ஏழைப் பெற்றோரின் பராமரிப்பு போன்ற அனைத்துக் காரியங்களையும் நான் நினைத்தபோது கலங்கினேன். என் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்து கொண்டிருந்தது. அப்பொழுது நான் முழங்காலில் நின்று ஜெபித்துக் கொண்டிருந்தேன்.
அந்த ஜெப வேளையில் தேவன் என்னோடு பேசினார். அவருடைய வார்த்தைகள் என்னை ஆறுதல்படுத்தும் வார்த்தைகளாகவும், என்னை அரவணைக்கும் வார்த்தைகளாகவும், எனது விசுவாசத்தில் நான் உறுதியாக நின்று அவரையே நான் விடாமல் பற்றிக்கொள்ளத் தூண்டும் பரலோக வார்த்தைகளாகவுமிருந்தன. தேவன் என்னோடு என்ன பேசினார்? “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்கீதம் 23: 6) தேவன் தம்முடைய வார்த்தைகளின் மூலமாகவே என்னோடு பேசினார். ஆ, அந்த தேவ வார்த்தைகளுக்குப் பின்னர் கர்த்தர் என்னை ஒரு வித்தியாசமான விதத்தில், ஒரு வித்தியாசமான ஆசீர்வாதத்தின் பாதையில் அற்புதமாக என்னை வழிநடத்திக்கொண்டு சென்றதை நான் ஆச்சரியத்துடன் கவனித்தேன். அல்லேலூயா.
கோத்தகிரியிலுள்ள அந்த எங்கள் முதல் வாடகை வீட்டில் வைத்துத்தான் கர்த்தர் மூன்றாம் முறையாக என்னோடு பேசினார். அந்தச் சமயம் எனது மூத்த மகன் சுந்தர்சிங் அவர்கள் தனது பத்தாம் ஆம் வகுப்பு அரசாங்க தேர்வை எழுத ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். தேர்வு எழுத இன்னும் சொற்ப நாட்களே இருக்கும் நேரத்தில் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த வீட்டுக்காரரின் பிள்ளைகள் ஒருவர் மாற்றி ஒருவர் அம்மை நோய் தாக்குதலினால் படுக்கையிலானார்கள். எங்கள் வீட்டை ஒட்டிய வீடாக அது இருந்தமையாலும், பிள்ளைகள் அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த காரணத்தாலும் எனது பிள்ளைகளுக்கும் விசேஷமாக அரசாங்க தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த மூத்த மகனுக்கு அம்மை நோய் தொற்றிக் கொள்ளும் என்ற அச்சத்தில் நான் தேவ சமூகத்தில் ஊக்கமாக மன்றாடிக் கொண்டிருந்தேன். அந்த நாட்கள் மாலை நேரம் ஒன்றில் கர்த்தர் என் உள்ளத்தில் “வாதை உன் கூடாரத்தை அணுகாது” (சங்கீதம் 91 : 10) என்று பேசினார். ஆ, ஆண்டவருடைய வார்த்தைகளின்படியே அந்த அம்மை நோய் பிள்ளைகளை அணுகவே இல்லை. மகன் சுந்தர் தனது அரசாங்க தேர்வை எழுதி தேர்ச்சியடைந்தார்கள். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. நாங்கள் முழுமையான 5 ஆண்டு காலம் வாழ்ந்த வீடு மிகவும் பழமையான நாளி ஒடுகள் பதித்த ஒன்றாகும். நான் அதை எப்படியோ ஒரு புகைப்படம் எடுக்க தவறிவிட்டேன். நீண்ட நாட்களுக்கு முன்பாகவே அந்த வீட்டை ஒருவர் வாங்கி இடித்து புதிதாக ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டுவிட்டார்.
கோத்தகிரியில் நாங்கள் குடியிருந்த எங்கள் இரண்டாம் வாடகை வீட்டில் நான் அதிகமாக நம் அன்பின் ஆண்டவரைப் பாடித் துதித்தேன். மிகவும் விடிபகலிலேயே நான் கர்த்தரைப் பாடித் துதிக்க ஆரம்பித்து விடுவேன். எனது பாடல் குரல் கேட்டு அடுத்த வீட்டிலுள்ள ஒரு தேவப்பிள்ளையும் தனது குடும்பத்தினரோடு தங்கள்அதிகாலை குடும்ப ஜெபத்தை ஆரம்பிப்பார்கள். அவர்களுடைய வீட்டில்தான் நாங்கள் வாடகைக்கு இருந்தோம். அந்த வீட்டில் நாங்கள் இருந்த நாட்கள் ஒன்றில் என் ஜெப வேளையின்போது கர்த்தர் “உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருப்பதற்காக சந்தோசப்படுங்கள்” (லூக்கா 10 : 20) என்று பேசினார். ஆ, எத்தனை பரவசமான பரலோக வார்த்தைகள் அவை. நாங்கள் வாழ்ந்த அந்தச் சிறிய வீட்டை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
எனது எளிமையான கிறிஸ்தவ வாழ்வில் மேலே நான் குறிப்பிட்ட சில இடங்களிலும், சில சமயங்களிலும் தான் கர்த்தர் பேசினார். அதற்கப்பால் அவர் என்னுடன் எதுவும் பேசவே இல்லை என்று என்று நீங்கள் எண்ணிவிடாதீர்கள். அனுதினமும் அவர் தமது வசனங்களின் மூலமாகவும், உள்ளத்தின் உணர்த்துதல்களின் மூலமாகவும் என்னுடன் பேசி என்னைத் தமது ஜீவப்பாதையில் வழிநடத்தி வருகின்றார். “தேவனே உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள், அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால் மணலைப் பார்க்கிலும் அதிகமாம்…….” (சங் 139 : 17, 18) என்ற தாவீது ராஜாவின் அனுபவமே பரதேசியாகிய எனது தாழ்மையான அனுபவமாகும். கர்த்தர் ஒருவருக்கே துதி உண்டாவதாக.
இந்தச் செய்தியை ஆர்வமாக வாசிக்கும் தேவப்பிள்ளைகளாகிய உங்களுடன் கர்த்தர் பேச ஆவலாக இருக்கின்றார். மனுமக்களில் ஒரு சாராருடன் பேசி மகிழ்ந்து உறவாடி அடுத்த சாராரை புறக்கணித்துத் தள்ளும் ஆண்டவர் நம்முடையவர் அல்ல. “தேவன் பட்சபாத முள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்” (அப் 10 : 34, 3) என்ற பேதுரு அப்போஸ்தலனின் வார்த்தைகளின்படி தேவன் தம்மைப்பற்றி உத்தம இருயத்தோடிருக்கும் மக்கள் எவரோடும் இன்றும் பேசுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றார்.
நம்முடைய பூவுலக வாழ்வில் கர்த்தர் நம்மோடு கட்டாயம் பேசவேண்டும். அது நமது கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அளவிடற்கரிய ஆசீர்வாதங்களை அள்ளிக் கொண்டு வரும். ஒருக்கால், தேவன் என்னோடு இவ்விதமாக அவ்வப்போது பேசியிருக்காத பட்சத்தில் நான் எனது துன்ப துக்கத்தில் மூழ்கி சிதறுண்டு சின்னா பின்னமாகியிருப்பேன். இந்தவிதமாக ஆண்டவருடைய குரல்களை நான் பிரத்தியட்சமாகக் கேட்டு வந்தபடியால் அவர் பேரிலுள்ள எனது அன்பு கட்டுக்கடங்காமல் வளர்ந்தது. அத்துடன் எப்பொழுதும் அவருடைய பாதங்களில் ஜெபத்தில் தரித்திருக்க அது எனக்கு மிகவும் ஒத்தாசையாயிற்று. அதுமாத்திரமல்ல, என்னுடன் இவ்விதமாகப் பேசி ஆவியில் என்னை உற்சாகப்படுத்தி வரும் என் அன்பின் இரட்சா பெருமானுக்கு எந்த ஒரு நிலையிலும் நான் துரோகம் செய்யாமல் என்னைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டது. அதின் காரணமாக ஆண்டவருடைய உள்ளத்தை என் நெஞ்சறிய துக்கப்படுத்த நான் இடம் கொடுக்கவே இல்லை. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
எனது விசுவாசம் தளரும் ஒவ்வொரு சமயங்களிலும் கர்த்தர் என்னோடு பேசிய இடங்களும், நான் தங்கியிருந்த வீடுகளும், இத்தனை நீண்ட ஆண்டு காலம் அற்புதம் அதிசயமாக இந்த வனாந்திர யாத்திரையில் எங்களை கரம் பிடித்து வழிநடத்தி வந்த ஞானக்கன்மலையின் வழிநடத்துதல்களும் என் கண்களுக்கு முன்னர் ஓடோடி வருகின்றன. “கர்த்தர் உன்னை மறந்துவிட்டார் அல்லது உன்மேல் கோபமாயிருக்கின்றார், அவர் உன்னை நேசிக்கவில்லை” என்பது போன்ற சோர்பான வார்த்தைகளை சாத்தான் என் காதுகளில் பேசும் சமயங்களில் தேவன் எனக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களையும், கொடுக்கப்பட்ட இடங்களையும் அவனுக்குச் சுட்டிக் காண்பித்து அவனை என்னைவிட்டு அப்பால் கடந்து போகச் செய்கின்றேன்.
என்னோடு பேசிய அன்பின் இரட்சகர் உங்களோடும் பேச அவருக்கு வழிகளை செவ்வைப்படுத்திக் கொடுங்கள். இதுவரை நீங்கள் மனந்திரும்பாமல் சன்மார்க்கமாக வாழ்ந்து வந்திருந்தால் உடனே மனந்திரும்புங்கள், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்துக்குள் கட்டாயம் கடந்து வாருங்கள். தேவனுடைய பரலோக உறவிலிருந்து உங்களைப் பிரிக்கும் காரியங்கள் எதுவாயினும் சாமுவேல் தீர்க்கன் ஆகாகை கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக துண்டித்துப் போட்டதுபோல நீங்களும் துண்டித்துப் போடுங்கள். அவரை உங்கள் முழு இருதயத்தோடும் நேசியுங்கள் (மாற் 12 : 30) கர்த்தர் உங்களோடு நிச்சயமாகப் பேசுவார். அதற்கான கிருபைகளைத் தேவன் தாமே உங்களுக்குத் தந்தருள்வாராக. ஆமென்.