சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோசத்தை நான் கண்டுகொண்டேன் (1 பேதுரு 1 : 8)
பாவியாகிய என்னை தேவனுடைய இரட்சிப்பின் சந்தோசத்துக்குள் வழி நடத்திய தேவ மனிதரின் பெயர் பாஸ்டர் Y.S.தேவசுந்தரம் என்பதாகும். பெந்தெகோஸ்தே சபையைச் சேர்ந்த அவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் ஆலன்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர்களாவார்கள். அந்த நாட்களில் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்து அங்குள்ள வீடுகளை சந்தித்து மக்களை ஆண்டவருடைய இரட்சிப்பின் சத்தியத்துக்குள் வழி நடத்தி வந்தார்கள். அவர்களுடன் இரண்டு சகோதரிகளும் இணைந்திருந்தனர். பரிசுத்த ஆவியானவரால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்ட அந்த தேவ தாசன் எங்கள் வீட்டிற்கும் அவ்வப்போது மூவராக வந்து பாட்டுகள் பாடி தேவனைத் துதித்து, தேவச்செய்தியையும் கொடுத்துவிட்டுச் செல்லுவார்கள்.
அந்த தேவ மனிதர் தேவச்செய்தியை பகிர்ந்து கொண்டால் அது பரலோகத்திலிருந்து வரும் நேரடிச் செய்தியாக இருக்கும். கர்த்தருடைய ஆவியானவரால் அவர்கள் முழுவதுமாக ஆட்கொள்ளப்படும்போது எபிரேய பாஷையில் கூட பேசி அதற்கான தமிழ் அர்த்தத்தை தெளிவாக எங்களுக்கு விளக்கிக் கூறுவார்கள். அதைக்கேட்க மிகவும் பரவசமாகவும், ஆவியில் அனல் பற்றி எரிவதாகவும் இருக்கும். தேவ ஆவியானவர் அவர்களோடு கூட அக்கினியாக இருந்தார்.
ஒரு நாள் நடு மத்தியான நேரம் அந்த தேவ தாசன் தன்னுடைய உடன் ஊழிய சகோதரிகளை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட எனது தாயார் மத்தியான நேரம் வந்திருக்கும் இவர்களுக்கு நாம் எப்படி உணவு ஆயத்தம் செய்ய முடியும் என்று தனது உள்ளத்திற்குள்ளாக எண்ணி மிகவும் துக்கமடைந்திருக்கின்றார்கள். தாயார் தனது உள்ளத்திற்குள்ளாக நினைத்த எல்லா நினைவுகளையும் சற்று நேரத்திற்குப் பின்னர் ஜெபிக்க நாங்கள் முழங்காலூன்றியபோது அந்த கர்த்தருடைய தாசன் அப்படியே தனது ஜெபத்தில் சொன்னபோது எனது தாயாருக்கு ஒரு பக்கம் மிகுந்த ஆச்சரியமும் அடுத்த பக்கம் ஏன் அப்படி நினைத்தோம் என்று மகா துயரமுமாகிவிட்டது.
ஒரு நாள் இரவில் அந்த தேவ மக்கள் எங்கள் வீட்டில் வந்து ஜெபக்கூட்டம் நடத்தின சமயம் நான் எனது பாலியத்திற்குரிய கோப தாபத்தில் ஏதோ ஒரு காரியத்திற்காக பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்று இருளில் மறைந்து கொண்டேன். எங்கெல்லாம் தேடியும் அவர்களால் என்னைக் கண்டு பிடிக்க முடியவில்லை. என்னைக் காணாததினால் எல்லாருக்கும் பயம் ஆகிவிட்டது. இருள் சூழ்ந்த நேரம் அது. வீட்டில் நிலவும் குழப்பமான நிலையைக் கவனித்த அந்த கர்த்தருடைய தாசன் தேவனை நோக்கிப் பார்த்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். உடனே கர்த்தருடைய ஆவியானவர் நான் எங்கே மறைந்திருக்கின்றேன் என்பதை அவர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்திவிட்டார். “நாசரேத்துக்கு செல்லும் பேருந்து ரஸ்தாவின் ஓரமாக ஒரு பனை மரத்தின் அடியில் நான் மறைந்திருக்கின்றேன்” என்று அவர்கள் என்னுடைய பெற்றோரிடம் கூறவே எனது தகப்பனார் உடனே என்னண்டை வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். நான் எனது வாழ்வில் சந்தித்த கர்த்தருடைய தாசர்களில் தேவசுந்தரம் பாஸ்டர் ஐயா அவர்கள் ஒரு சிறந்த தேவ மனிதர் ஆவார்கள். தூய்மையான வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளை ஜிப்பா போட்டு, மெல்லியதான வெண் சால்வையால் தன்னை மூடிக்கொண்டிருப்பார்கள்.
அந்த கர்த்தருடைய தாசன்தான் நித்திய ஜீவனை நான் சுதந்தரித்துக் கொள்ளும்படியாக என்னை வழிநடத்திய விடிவெள்ளி நட்சத்திரமுமாவார்கள். அன்று அவர்கள் என்னை இரட்சிப்புக்கு நேராக வழிநடத்தியிராத பட்சத்தில் முடிவில்லாத நித்திய அக்கினிக்கடலை நான் சுதந்தரித்து இப்பொழுது பல்லாண்டு காலங்கள் கடந்து சென்றிருக்கும். அதில் சந்தேகமே கிடையாது. ஆ, அந்த தேவ தாசனுக்கு நான் எத்தனையாக நன்றி கடன் பட்டிருக்கின்றேன்! நித்திய ஜீவனுக்கு என்னை சுதந்திரவாளியாக்கிய அந்த பரிசுத்த தேவ பக்தனின் படத்தை நீங்கள் இந்த செய்தியில் காண்பீர்கள். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பெந்தெகொஸ்தே சபைகளின் தலைமை ஸ்தான பொறுப்பில் அவர்கள் தற்பொழுது இருக்கின்றார்கள். கர்த்தருக்கே மகிமை.
ஒரு நாள் அந்த தேவ மனிதர் என்னைப் பார்த்து “சாமுவேல், நீ செய்த பாவங்கள் எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதி என்னிடம் கொண்டு வா” என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன வார்த்தைக்கு அப்படியே நான் கீழ்ப்படிந்து நான் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் ஒரு தாளில் எழுத ஆரம்பித்தேன். நான் அப்படி எழுத ஆரம்பித்தும் பரிசுத்த ஆவியானவர் நான் அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், இருளிலும், வெளிச்சத்திலும் செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் எனது கண்களுக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினார். ஒரு பாவத்தை எழுதி முடித்ததும் நான் செய்த எனது அடுத்த பாவம் எனது கண்களுக்கு முன்பாக திரைப்படத்தில் நாம் காண்பது போல என் கண்களுக்கு முன்பாக ஒரு படம் போல வந்து நின்றது. இப்படியாக எனக்கு முன்பாக வந்து நின்ற அனைத்துப் பாவங்களையும் நான் எழுதினேன். தாட்கள் முடிந்தவண்ணமாக இருந்தன. கொஞ்சம் தாட்கள் எழுதி முடித்திருந்தேன். அதின் பின்னர் எனது கண்களுக்கு முன்பாக வேறே பாவங்கள் எதுவும் வந்து நிழலிடவில்லை.
நான் எழுதிய பாவங்களின் பட்டியலை தேவ மனிதரிடம் எடுத்துக்கொண்டு சென்று “ஐயா, நான் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் எழுதி முடித்துவிட்டேன். இதோ இத்தனை தாட்களில் எனது பாவங்கள் எழுதப்பட்டுள்ளன. வேறே பாவங்கள் எதுவும் எனக்கு தெரியவில்லை” என்று சொன்னேன். “நல்லது, இப்பொழுது நீ செய்ய வேண்டிய காரியம் யாதெனில் தாளிலுள்ள ஒரு பாவத்தை தேவனுக்கு முன்பாக கண்ணீரோடு அறிக்கையிட்டு அதை மன்னிக்கும்படியாக அவரிடம் அழுது கெஞ்ச வேண்டியதுதான். ஒரு பாவத்தை தேவனுக்கு முன்பாக கண்ணீரோடு அறிக்கையிட்டதும் 51 ஆம் சங்கீதத்தை வாசி. தொடர்ந்து ஒவ்வொரு பாவமாக அறிக்கையிட்டு 51 ஆம் சங்கீதத்தையும் வாசித்து வாசித்து தேவனுடைய இரட்சிப்புக்காக அழுது கெஞ்சி மன்றாடு” என்று கூறினார்கள். அவர்கள் வார்த்தைகளுக்கு நான் அப்படியே கீழ்ப்படிந்தேன். உலகத் தோற்றத்திற்கு முன்பாக என்னை தமக்கென தெரிந்து கொண்ட அன்பின் தேவனுடைய ஆச்சரியமான வழிநடத்துதலாக அந்தக் காரியம் இருந்தது.
ஒரு கையில் கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம், அடுத்த கரத்தில் நான் செய்த பாவ அக்கிரமங்களின் பட்டியலான தாட்கள். எங்கள் ஊருக்கு தென் திசையிலுள்ள வயல் வெளிகளுக்குச் சென்று பாவப்பட்டியலில் உள்ள ஒரு பாவத்தை தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு அழுவது, தாவீது இராஜா பத்சேபாளிடத்தில் பாவத்தில் பிரவேசித்த பின்னர் தேவனுக்கு முன்பாக கதறி அழுது பாவ மன்னிப்புக்காக கெஞ்சிய 51 ஆம் சங்கீதத்தை முழுமையாக வாசிப்பது. இப்படியாக நான் ஒவ்வொரு பாவத்தையும் தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு, 51 ஆம் சங்கீதத்தையும் வாசித்துக் கொண்டிருந்தேன். வீட்டிலும் ஒரு அறையினுள் பிரவேசித்து அறையின் கதவை மூடிக்கொண்டு முழங்காலில் வீழ்ந்து பாவங்களை அறிக்கையிட்டு, சங்கீதத்தை வாசித்து தேவன் என்னுடைய பாவங்களை எனக்கு மன்னித்து தமது இரட்சிப்பின் சந்தோசத்தை எனக்குத் தரும்படியாக கெஞ்சி கதறி அழுது கொண்டிருந்தேன். துக்கம் நிறைந்த முகத்தினனாக பாவங்கள் எழுதப்பட்ட தாட்களுடன் வயல் வெளிகளில் சென்று அழுது ஜெபிப்பது, வீட்டிற்கு வந்து அறையின் கதவை மூடிக்கொண்டு அறையில் தேவ சமூகத்தில் உள்ளம் உருகி மன்றாடுவது சில நாட்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. எனது தாயார் எனது நடபடிகளை உன்னிப்பாகவும், ஆச்சரியத்துடனும் கவனித்ததை நான் காண முடிந்தது.
இப்படி நான் எனது பாவங்களுக்காக கண்ணீர் சிந்தி அழுது ஜெபித்துக் கொண்டிருந்த நாட்கள் ஒன்றில், எனது கரத்திலுள்ள தாட்களில் எழுதப்பட்ட பாவங்கள் யாவையும் நான் முழுமையாக தேவனுக்கு முன்பாக இன்னும் அறிக்கை செய்வதற்கு முன்னதாகவே ஒரு நாளில் “யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களை கார்மேகத்தைப்போலவும் அகற்றி விட்டேன், என்னிடத்தில் திரும்பு, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்” (ஏசாயா 44 : 21, 22) என்று தொனிக்கும் தேவ வாக்கை என் உள்ளத்தில் கேட்டேன். அன்றைய நாளில் தானே உலகம் தரக்கூடாததும், உலகம் எடுத்துக்கொள்ளக்கூடாததுமான பொங்கி வழியும் தேவ சமாதானத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் நான் பெற்றுக் கொண்டேன். வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவன் ஏழைப்பாவியாம் என் உள்ளத்தில் தமது நித்திய வாசஸ்தலத்தை அன்றைய தினம் ஸ்தாபித்து நிமிஷந்தோறும் என்னுடன் உறவாடும் பரிசுத்தராக என் உள்ளத்தில் பிரவேசித்தார். எனது பெற்றோர் எனக்கு வைத்த பெயர் “சாமுவேல் இஸ்ரவேல் கோவில்பிள்ளை” என்பதாகும். அந்த இஸ்ரவேல் என்ற எனது பெயரை சொல்லி என்னை அழைத்து எனது பாவங்களை மன்னித்து என்னைத் தமது சொந்த பிள்ளையாக தெரிந்து கொண்டது எனக்கு ஆனந்த சந்தோசமாக இருந்தது. அந்த இரட்சிப்பின் ஆனந்த சந்தோசத்தோடு நான் எனது S.S.L.C. வகுப்புக்குள் காலடி எடுத்து வைத்தேன். எனது இரட்சிப்பின்காரியம் 1955 ஆம் ஆண்டு கோடை கால பள்ளி விடுமுறை நாட்களில் நடைபெற்றது. அப்பொழுது நான் எனது ஒன்பதாம் வகுப்பை படித்து முடித்திருந்தேன். வகுப்பறையில் என்னைக் கண்ட எனது அன்பான தமிழ் வித்துவானான ஆசிரியர் S.M.R.Samuel Daniel (சாமுவேல் தானியேல்) ஐயா அவர்கள் “சாமுவேல் உன் முகத்தில் ஒரு பிரகாசத்தை நான் காண்கின்றேன்” என்று சொன்னதை நான் இன்றும் மறக்கவில்லை. அந்த அன்பான ஐயா அவர்கள்தான் தனக்கு கீழ் எத்தனையோ மாணவர்கள் படித்திருந்தபோதினும், எத்தனையோ மாணவர்கள் தனக்கு தெரிந்திருந்த போதினும் பாவியாகிய என்னை நேசித்து எனக்கு மாத்திரமே நீலகிரி மலைகளிலுள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் குமஸ்தா பணியை எடுத்துக் கொடுத்தார்கள். அந்த அன்பான ஐயாவின் பேரன்பால் நான் அந்தப்பணியில் 19 ஆண்டு காலம் 8 மாதங்கள் வேலை செய்து இறுதியாக நிச்சயமான தேவ அழைப்பின் பேரில் அந்த வேலையை ராஜிநாமா செய்தேன்.
அந்த நாளில் நான் பெற்றுக்கொண்ட இரட்சிப்பின் சந்தோசத்தை “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்த வல்லமையுள்ள அன்பின் தேவன்” (யூதா 24 ஆம் வசனம்) இந்நாள் வரை தமது அநாதி அன்பின் கிருபையால் காத்துக்கொண்டார். அறிந்தும், அறியாமலும் பாவம் செய்து, நேசரைவிட்டு தூரமாக அவ்வப்போது நான் வழிவிலகிச் சென்றாலும், அதற்கேற்ற சிட்சைகளை தப்பாது எனக்கு கொடுத்து அவைகளை எல்லாம் தன் மனதில் கொள்ளாமலும், என்னைத் தமது சமூகத்திலிருந்து தள்ளிப்போடாமலும், நீசனாம் என்மேல் எல்லையற்ற அன்பு கொண்ட கர்த்தராக ஒரு தாய் தன் சேயை அள்ளி அரவணைப்பது போல அரவணைத்து தன்னைவிட்டு நான் நீங்காமல் செடியும் கொடியுமாக அவரது அன்பில் நிலைத்து நின்று ஜீவிக்க என்னை கிருபையாக பெலப்படுத்தி, வழிநடத்தி வந்திருக்கின்றார்.
பாவியாகிய என்னைத் தமது சொந்த பிள்ளையாக கிருபையாக தெரிந்து கொண்ட அன்பின் ஆண்டவருக்கு விரோதமாக நானும் எந்த ஒரு துரோகச் செயலும் செய்யாதபடி தேவ பெலத்தால் இது நாள் வரை நான் என்னைக் காத்துக் கொண்டேன். “கர்த்தருடைய வழிகளை கைக்கொண்டு வந்தேன், நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை” (சங் 18 : 21) என்ற சங்கீதக்காரரின் அனுபவத்தை நான் களிகூர்ந்து மகிழும் வண்ணம் தேவன் எனக்கு தந்திருக்கின்றார். அந்த அன்பருக்கு நான் என்ன ஈட்டை செலுத்த முடியும்!