நானோ எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன் (சங்கீதம் 73 : 23)
(ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை)
நான் எனது உலகப்பிரகாரமான தேயிலைத்தோட்ட குமஸ்தா வேலையை 1976 ஆம் ஆண்டு விட்டுவிட்டு கோத்தகிரி பட்டணத்திலுள்ள பாப்திஸ்து (Baptist Church) குருவானவர் துரைராஜ் ஐயா அவர்களின் வீட்டில் மாதம் ரூபாய் 60 வாடகைக்கு வந்து அமர்ந்தோம். ஐயா அவர்கள் நல்ல உண்மையான தேவ மனிதர். சில மாதங்கள் கடந்த பின்னர் அவர்கள் என்னை ஒரு நாள் சந்தித்து “நீங்கள் என்னுடைய வீட்டில் வாடகைக்கு வந்து சில மாதங்கள் கடந்து சென்றுவிட்டன. கர்த்தருடைய திட்டமான அழைப்பின் பேரில் நான் எனது உலக வேலையை ராஜிநாமா பண்ணினேன் என்று நீங்கள் ஆரம்பத்தில் என்னிடம் கூறினீர்கள். உங்கள் வார்த்தை உண்மைதானா என்பதை கடந்த சில மாதங்களாக நான் தேவ சமூகத்தில் உன்னிப்பாக கவனித்து வந்திருக்கின்றேன். எந்த ஒரு தடுமாற்றமுமின்றி உங்கள் குடும்ப வாழ்க்கை சீராக சென்று கொண்டிருப்பதை நான் ஆச்சரியத்துடன் கவனிக்கின்றேன். உண்மையாகவே தேவன் தமது ஊழியத்திற்காக உங்கள் உலக அலுவலிலிருந்து உங்களை அழைத்தது நிச்சயமான உண்மைதான், அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. தொடர்ந்து ஜெபத்தோடு ஆண்டவரைச் சார்ந்து முன் செல்லுங்கள். கர்த்தர் உங்களை ஒருக்காலும் கைவிடார்” என்று சொன்னார்கள். கர்த்தருக்கே மகிமை. அவர்கள் வீட்டில் நாங்கள் 5 முழுமையான ஆண்டுகள் குடியிருந்தோம். அதற்கப்பால் அந்த வீட்டை அவர்கள் விற்று விட்டார்கள்.
அவர்கள் எங்களுக்குத் தந்த வாடகை வீட்டிற்கு நேராக மேலேதான் கோத்தகிரியின் முக்கியமான இடமான “சக்தி மலை” என்ற ஒரு உயரமான மலை உள்ளது. ஆரம்பத்தில் அந்த மலையில் எந்த ஒரு கட்டிடங்களும் கிடையாது. மலை உச்சியில் ஒரு சிறிய கோயில் மட்டும் இருந்தது. அந்த மலையில் இருந்து பார்த்தால் கோத்தகிரி பட்டணம் முழுமையும் அப்படியே அழகாகத் தெரியும். மலை முழுவதும் கருங்கற் பாறைகளாலும் புதர்களாலும் நிறைந்து காணப்பட்டது. இப்பொழுது அந்த மலையின் நிலை வேறு. அதைக்குறித்து நான் இங்கு விளக்க விரும்பவில்லை.. அந்த மலை எனக்கு “சீயோன் மலை” ஆகும்.
“சீயோன் மலை” என்னும் “என் ஜெப மலை”
அந்த சீயோன் மலையைச் சுற்றித்தான் எங்களது 3 வாடகை வீடுகள் அமைந்தன. அந்த மலைக்கு அருகில் அவைகள் கட்டப்பட்டிருந்தன. அவைகளில் நாங்கள் மொத்தம் 10 ஆண்டுகள் குடியிருந்தோம். எனவே 10 ஆண்டு காலம் நான் அந்த சீயோன் மலையில் அநேகமாக ஒவ்வொரு நாளும் ஜெபத்திற்காக மலை ஏறிச் செல்லுவேன். மாலைச் சூரியன் தனது செங்கதிர்களை வீச வீச நான் மலை ஏறிச்சென்று அந்த உயரமான பெரிய மலையில் ஏதோ ஒரு பாறையில் என் முழங்கால்களை முடக்குவேன். கரும் பாறை என் கால்களில் வேதனை கொடாமல் இருக்க நான் எனது கம்பளி மஃப்ளரை நன்றாக மடித்து முழங்கால்களுக்கு கீழாகப் போட்டுக் கொள்ளுவேன். வானில் நட்சத்திரங்கள் தோன்றும் வரை நான் அங்கு ஜெபநிலையில் நின்று விட்டு இரவில் எனது டார்ச் விளக்கின் ஒளியின் உதவியால் வீடு வந்து சேருவேன்.
நாங்கள் எங்கள் மூன்றாம் வாடகை வீட்டில் குடியிருந்தபோது எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டிலுள்ள நாயும் என்னுடன் மாலையில் சீயோன் மலைக்கு தவறாது வந்து எனக்கு அருகில் அமைதியாகப் படுத்திருக்கும். நான் எனது ஜெபத்தை முடித்து வீட்டிற்கு புறப்படும் வரை அதுவும் என்னுடனேயே இருக்கும். வீடு வந்து சேரும் வரை அதுவும் என்னைப் பின் தொடர்ந்து வரும்.
அந்த மலையைச் சுற்றிச் சுற்றி ஜெபிப்பதற்கு மறைவான இடத்தை நான் தெரிந்து கொண்டு அங்கு ஒழுங்காக முழங்காலூன்றுவேன். கொஞ்ச நாட்கள் அந்த மலையின் கற்பாறைகள் வெட்டி எடுக்கப்பட்ட ஓரிடத்திலுள்ள கற்பாறை குழிக்குள் எனது இடம் அமையும். அல்லது மலை உச்சியின் மொட்டைப் பாறையில் நான் முழங்கால்களில் நின்று ஜெபிப்பேன், அல்லது மலையின் ஒரு மறைவான சரிவில் நான் தேவனுக்கு முன்பாக நின்று கொண்டிருப்பேன். உண்மைதான், பத்து ஆண்டு காலம் நான் அந்த மலையில் அங்குமிங்குமாக ஜெபித்து தேவனிடமிருந்து எத்தனையோ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டேன். அநேக தடவைகள் எனக்குள்ள முழு ஐவேசான ஒரே ஒரு நயா பைசாவை எடுத்துச் சென்று தேவ சமூகத்தில் எனக்கு முன்பாக உள்ள கற் பாறையில் வைத்து ஒத்தாசையின் பர்வதத்தை நோக்கி மன்றாடுவேன். அந்த நயாபைசாவை நான் இன்றுவரை என் வசம் பத்திரமாக வைத்திருக்கின்றேன். எனது மூத்த மகன் சுந்தர்சிங் அவர்களின் இரட்சிப்பு அந்த சீயோன் மலையில் ஏறெடுத்த எனது கண்ணீரின் ஜெபங்களாகும். வடமாநில தேவ ஊழியங்களுக்குத் தேவையான சில ஆண்டு பொருளாதாரங்களையும் அந்த சீயோன் மலை ஜெபங்களே பரத்திலிருந்து கொண்டு வந்தது.
ஒரு நாள் நான் அப்படி அந்த சீயோன் மலையிலுள்ள மொட்டைப் பாறையில் ஒரு மாலை நேரம் ஜெபித்துக் கொண்டிருந்த போது “சகோதரனே, அங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?” என்று ஆங்கிலத்தில் எனக்கு நேராக வரும் ஒரு குரலை நான் கவனித்தேன். அவர் ஒரு மேல் நாட்டு கர்த்தருடைய பிள்ளை. சுற்றுலா பயணியாக கோத்தகிரி வந்த இடத்தில் நான் ஜெபிக்கும் உயரமான மலையை பார்க்க தன்னிஷ்டப்படி வந்திருக்கின்றார். நான் ஜெபிப்பதை எப்படியோ தூரத்திலிருந்து அவர் நன்கு கண்டு கொண்டு விட்டார். “இது என்னுடைய பெத்தேல்” என்று நான் ஆங்கிலத்தில் அவருக்கு விடை கொடுத்தேன். அந்த கர்த்தருடைய பிள்ளையைக் கொண்டு ஒரு வீட்டு ஜெபக்கூட்டம் ஒரு நாள் மாலையில் கோத்தகிரியில் உடனே ஒழுங்கு செய்து அவரைக் கொண்டு தேவச் செய்தி கொடுக்க வைத்தேன். அந்த கூட்டம் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது மாலை நேரம் ஆனால் போதும் எங்கோ ஒரு தனியிடம் சென்று தேவ சமூகத்தில் முழங்காலூன்ற என் உள்ளம் கதறிக் கொண்டிருக்கும்.. நாங்கள் எங்கள் நான்காம் வாடகை வீட்டுக்கு வந்தபோது “சீயோன்” மலைக்குச் செல்லும் வழி அதிக தூரமானாதால் அங்கு செல்ல இயலாமல் அருகிலுள்ள இரண்டு அடர்ந்த சோலைகளுக்குள் மாறி மாறிச் சென்று ஜெபித்து வந்தேன். உண்மைதான், மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவதுபோல என் ஆத்துமா தேவனை வாஞ்சித்து கதறியது. அதே கதறுதல்தான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அல்லேலூயா. ஆனால், முன்பு போல இப்பொழுது சீயோன் மலைக்கும், சோலைகளுக்கும் நான் செல்ல இயலவில்லை.
எனது தனிப்பட்ட ஜெப வாழ்க்கை
“He who has learned to pray has learned the greatest secret of a holy and happy life” “ஜெபிக்கக் கற்றுக்கொண்ட ஒரு மனிதன் பரிசுத்தம், சந்தோசம் இருக்கக்கூடியதான வாழ்வின் மாபெரும் இரகசியத்தையும் கூடக் கற்றுக்கொண்டுவிடுகின்றான்” என்றார் அயர்லாந்து தேச தேவ மனிதர் வில்லியம் லா (William Law) என்பவர். “A lot of kneeling will keep you in good standing” “தேவ சமூகத்தில் நீ ஊன்றும் அதிகமான முழங்காலூன்றுதல்கள் உன்னை வாழ்வின் மேலான நிலையில் எப்பொழுதும் வைத்துக் காத்துக் கொள்ளும்” என்றார் மற்றொரு தேவ மனிதர். “Pray much that you may be taught of God” “நீ தேவனால் போதிக்கப்படுவதற்கு அதிகமாக ஜெபத்தில் தரித்திரு” என்றார் ஜாண் எலியாஸ் (John Elias) என்ற பரிசுத்த பக்தன். நம்மை ஆவிக்குள்ளாகப் பரவசப்படுத்தி ஆரவாரிக்கச் செய்யும் ஆனந்த வரிகள்! ஆம், தனி ஜெபம் ஒரு மனிதனின் வாழ்வில் ஆச்சரிய அற்புதங்களை அன்றும், இன்றும், என்றும் செய்ய வல்லது.
நான் நமது தேவ எக்காளம் பத்திரிக்கையில் கடந்த நாட்களில் எழுதியது போல முழுமையான 2 மணி நேர காலை ஜெபம் இல்லாமல் நான் என் அறையிலிருந்து வெளியே வருவதில்லை. எதிர்பாராத சூழ்நிலைகளில் அந்த ஜெப வேளை தடைப்படும் பட்சத்தில் அடுத்து வரும் மணி நேரங்களில் நான் அதை ஈடு செய்து கொள்ளுவேன். பின்னர், மத்தியான நேரம், மாலை நேரங்களில் சில மணி நேரங்களை ஜெபத்தில் செலவிடுவேன். இராக்காலங்களிலும் கர்த்தர் என் உள்ளத்தில் உணர்த்தும் வேளைகளில் எழுந்து ஜெபிப்பேன். எனது ஒவ்வொரு நாளின் பெரும் பகுதியான நேரம் இந்த நாட்களில் தேவ சமூகத்தில் ஜெபத்திலேயே செலவிடப்படுகின்றது. நான் கடந்த நாட்களில் நமது தேவ எக்காளம் பத்திரிக்கையில் எழுதினது போல நான் முழங்காலூன்றி ஜெபிப்பதற்கு வசதியாக எனது மகன் சுந்தர்சிங் அவர்கள் எனது கட்டில் அருகில் ஒன்றிற்கு மேலாக ஒன்றாக தற்பொழுது 6 மிருதுவான படுதாக்களை போட்டிருக்கின்றார்கள். வாரந்தோறும் அவைகளை தூசி தட்டுவதும் எனது அறையை சுத்தப்படுத்துவதும் அவர்கள்தான். எனது மணிக்கணக்கான நேரங்கள் அந்த இடத்தில்தான் தேவனோடு செலவிடப்படுகின்றது. ஆம், வரப்போகும் எனது நித்திய பேரின்ப இளைப்பாறுதலுக்கு நான் என்னை தேவனுக்கு முன்பாக பாத்திரவானாக ஆக்கிக் கொள்ள நான் என்னை பயத்தோடும், நடுக்கத்தோடும், கண்ணீரோடும் ஆயத்தம் செய்து கொள்ள அன்பின் தேவன் எனக்கு கிருபையாக அளித்த அருமையான வாய்ப்பு. கர்த்தருக்கே மகிமை.
வடக்கே தேவ ஊழியத்தின் பாதையில் ஊழியங்களுக்குச் செல்லும் இடங்களில் நான் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நமது ஊழியங்களுக்காக அதிகமான நேரம் முழங்கால்களிலேயே நிற்பேன். கடைசியாக 2012 ஆம் ஆண்டு நாங்கள் உத்தராஞ்சல் மாநிலம் சென்றிருந்தபோது அங்குள்ள கேர்னா என்ற ஊரின் சிறிய கடை வீதியிலுள்ள ஒரு லாட்ஜின் அறைகளில் நாங்கள் தங்கியிருந்தோம். நம்முடைய சக ஊழியர்கள் லாட்ஜின் பணியாளர்களை எப்படியோ இணங்கப்பண்ணி ஒரு கருமையான, பெரிய தடித்த கம்பளியை நான் முழங்காலூன்றி ஜெபிக்க எனக்குக் கொண்டு வந்து தந்தார்கள்.
தினமும் ஊழியம் முடித்து நாங்கள் 2 அல்லது 3 மணிக்கு லாட்ஜ்க்கு வந்து சேருவோம். எங்கள் ஆகாரத்திற்குப் பின்னர் நான் தேவ சமூகத்தில் 4 மணிக்கு ஜெபிப்பதற்காக எனது முழங்கால்களை மேலே நான் குறிப்பிட்ட கருமையான கம்பளி போர்வையில் ஊன்றினால் இரவு 8 மணி வரைக்கும் அங்கேயேதான் இருப்பேன். இரவு சாப்பாட்டுக்கு என்னை அழைக்கும்போதுதான் நான் ஜெபத்தை முடித்து எழும்புவேன். ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்தது. இந்த ஜெபங்கள்தான் நமது வட மாநில தேவ ஊழியங்களில் ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தது. கர்த்தர் ஒருவருக்கே மகிமைஉண்டாவதாக.
நாங்கள் எங்கள் மூன்றாம் வாடகை வீட்டில் இருந்தபோது ஒரு நாள் எனது இளைய மகன் சார்லஸ் ஃபின்னி அவர்கள் நான் படுத்திருக்கும் கட்டிலின் அருகிலுள்ள சிமெண்ட் தரையின் பழபழப்பான பகுதியை எனக்கு சுட்டிக்காண்பித்து “அப்பா, இந்த இடம் மட்டும் ஏன் இத்தனை பழபழப்பாகஇருக்கின்றதே? ” என்று என்னைக் கேட்டார்கள். நானும், ஆம் உண்மைதான் மற்ற இடத்தைக்காட்டிலும் அது வித்தியாசமாகத்தான் இருக்கின்றது” என்றேன். “அப்பா, நீங்கள் ஒவ்வொரு நாளும் ஜெபிக்க முழங்காலூன்றும் இடம் அதுதானே” என்றார்கள். அப்பொழுது தான் எனக்கு நினைவு வந்தது. உண்மைதான், தேவ சமூகத்தில் மணிக்கணக்காக முழங்கால்களில் நிற்பது எனக்கு அத்தனை ஆனந்த மகிழ்ச்சி.
நீங்கள் நன்கு அறிந்தபடி தொலைக்காட்சி, செய்தி தாட்களை நான் பார்ப்பதில்லை. அப்படியே கிறிஸ்தவ நிகழ்ச்சிகளையும், பிரசங்கங்களையும் கிறிஸ்தவ பாடல்கள் அடங்கிய கேசட்டுகளையும் நான் போட்டுக் கேட்க விரும்புவதுமில்லை. கம்பியூட்டரில் வரும் ஃப்பேஸ் புக் (Face Book) செய்திகளையும் நான் பார்க்கமாட்டேன். இணைய தளத்தில் காணப்படும் எதிலும் நான் எனது பொன் போன்ற தேவனுடைய நேரத்தை விரயம் பண்ண ஆசைப்படுவதில்லை. ஜெபம், வேத வசன தியானம், கர்த்தரைப் பாடித் துதிப்பதில் எனது நேரத்தை செலவிடுகின்றேன்.
ஒரு குழந்தை அதின் பெற்ற தாயையே எப்பொழுதும் அண்டிக் கொண்டிருப்பது போல நானும் எனது பாவ அடிமைத்தனத்திலிருந்து எனது வாலிபத்தில் என்னை விடுவித்து தமது இரட்சிப்பின் சந்தோசத்தை என் உள்ளத்தில் ஊற்றிய அன்பின் நேசரையே எப்பொழுதும் அண்டி நிற்கின்றேன். அவருடைய பரிசுத்த சமூகமேயல்லாமல் வேறே எதுவும் இந்த நாட்களில் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதில்லை.
தேவ கிருபையால் தினமும் மணிக்கணக்காக முழங்காலூன்றி ஜெபிப்பதால் என் இருதயம் தேவ சமாதானத்தால் நிறைந்து காணப்படுகின்றது. இருதயத்தை கலங்கப்பண்ணக் கூடிய எந்த ஒரு நினைவுகளும் என் உள்ளத்தில் தோன்றுவதில்லை. எனது இராக்கால இளைப்பாறுதல்கள் தேவ சமாதானம் நிறைந்ததாகக் காணப் படுகின்றது. “நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்” (நீதி 3 : 24) “சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன்” (சங் 4 : 8) “என் நித்திரை எனக்கு இன்பமாக இருந்தது” (எரேமியா 31 : 26) என்று தேவனுடைய வார்த்தைகள் நமக்குக்கூறுகின்றன அல்லவா!
தங்களது ஜீவ சுவாசத்தை தம்முடைய கரத்தில் வைத்திருப்பவரை (தானியேல் 5 : 23) ஒரு நாளில் ஒரு தடவை கூட நினைத்துப் பாராமல், தங்களது முடிவில்லா நித்தியத்தை ஆண்டவர் இயேசுவோடு பரலோகில் வாழும் ஆனந்த பாக்கிய வாழ்வுக்காக தங்களை இரவும், பகலும் பயத்தோடும், நடுக்கத்தோடும் ஆயத்தம் செய்ய மனமற்று இராப்பகலாக தொலைக்காட்சிகளைப் பார்த்து, செய்தித் தாட்களை திரும்பத் திரும்ப வாசித்து, அங்குமிங்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் வீடுகளைத் தேடி ஓடி அலைந்து, தேவையில்லாத வீண் வார்த்தைகளைப் பேசி சம்பாஷித்து தங்கள் பொன்னான நேரத்தை கிறிஸ்தவ மக்கள் துணிந்து வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர். கர்த்தர்தான் அவர்களுக்கு இரங்க வேண்டும். அவர்களின் இருதயக் கண்களைத் திறக்கவேண்டும்.
“உனக்கு இரண்டு மோட்சங்கள் இல்லாதபட்சத்தில் ஒரு மோட்சமும் இல்லை. பூவுலகில் உனக்கு மோட்சம் இல்லாதபட்சத்தில் அப்பாலுள்ள பரலோகத்திலும் உனக்கு மோட்சம் கிடையாது” என்றார் ஸ்காட்லாந்து தேச பரிசுத்த குருவானவர் ஆண்ட்ரூ போனர். உண்மையும், சத்தியமுமான வார்த்தைகள். ஒரு மெய்யான கர்த்தருடைய பரிசுத்த பிள்ளைக்கு பூலோகத்திலேயே மோட்சம் ஆரம்பித்து விடுகின்றது. அதின் காரணமாகத்தான் அந்த தேவ பிள்ளை எப்பொழுதும் தேவ சமூகத்தை வாஞ்சித்து கதறுகின்றதாக இருக்கின்றது. எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் அது முழங்கால்களிலேயே நின்று கொண்டிருக்கும். தனக்கு சமயம் கிடைக்கும்போதெல்லாம் அது மரியாளைப்போல ஆண்டவருடைய பாதங்களையே நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் (லூக்கா 10 : 42) உண்மைதான், மோட்சம் அதின் உள்ளத்திலே ஆரம்பித்துவிட்டது. “ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான்; தேவன் அவனை எடுத்துக் கொண்டார்” (ஆதி 5 : 24) என்ற பரவசமான வரிகளை நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். ஒரு பரலோக மனிதன் எப்பொழுதும் ஜெபத்தை வாஞ்சித்துக் கதறும் தேவ மனிதனாக இருப்பான். ஜெபமே, அவன் வாழ்வின் உயிர் மூச்சு.