என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்
(1 சாமுவேல் 2 : 30)
அன்பின் கன்மலையாம் தேவன் என்னைத் தனது சொந்த பிள்ளையாக எனது 18 ஆம் வயதில் தமக்கென தெரிந்து கொண்டதும் நான் பெற்ற எனது இரட்சிப்பின் சந்தோசத்தை எல்லாரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆசை ஆவலால் எங்கள் ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள தேவாலயங்களுக்கெல்லாம் நான் சென்று அந்த இரட்சிப்பின் நற்செய்தியை கூறி அறிவித்தேன். ஒட்டுப்படங்களின் (Flannel Graph Pictures) உதவியால் ஓய்வுநாள் பள்ளி குழந்தைகளுக்கு கர்த்தாவின் அன்பைப் பகிர்ந்து கொண்டேன்.
பின் வந்த ஆண்டுகளில் தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை வட மாநிலங்களுக்கும், பனி மூடிய உயரமான இமய மலைப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கும் ஆண்டாண்டு தோறும் சென்று அறிவித்து வந்தேன். அதற்காக நான் எனது ஜீவனையே அர்ப்பணம் செய்து அந்த இடங்களுக்கெல்லாம் சென்றேன். அந்த ஊழியங்களுக்காக தேவ மக்கள் எனக்கு அனுப்பிய தியாக அன்பின் காணிக்கைகளை எல்லாம் கர்த்தருக்காகவே செலவிட்டேன். எந்த ஒரு நிலையிலும் நான் அந்தப் பணங்களை தந்திரமாக வங்கிகளில் எனது பிள்ளைகளுக்காகப் பதுக்கி வைக்கவில்லை. தேவனுக்கு முன்பாக நான் என்னை உத்தமனாகக் காத்துக் கொண்டேன். சொந்த வீடு வாசல்களின்றி நீண்ட ஆண்டு காலமாக வாடகை வீடுகளில் எவ்வளவோ கஷ்டம் கண்ணீர்களை நாங்கள் அனுபவித்தாலும் தேவ மக்களின் காணிக்கை பணங்களைக் கொண்டு வீடு வாசல்களைக் கொள்ளவோ, அல்லது எனது வசதிக்காக வாகனங்களை வாங்கவோ நான் கடைசி வரை விரும்பவே இல்லை.
யாவுக்கும் மேலாக, தேவ பெலத்தால் நான் என்னை எனது கிறிஸ்தவ வாழ்வின் கடைசிவரை பரிசுத்தமாகப் பாதுகாத்துக் கொண்டேன். இங்கு கோத்தகிரியிலும், நான் தேவ ஊழியங்களுக்காக வடக்கே சென்ற இடங்களிலும் என்னைச் சந்தித்த சிற்றின்ப பாவச் சோதனைகள் எத்தனை எத்தனையோ உண்டு. அவைகளில் என்னை விழ வைத்து நான் கர்த்தருக்காகச் செய்த எனது அனைத்து அருமையான தேவ ஊழியங்களையும் நொடிப் பொழுதில் அதம்பண்ணி அத்துடன் என்னையும் எரி நரகத்திற்குத் தள்ள தந்திர சாத்தான் தனது சேனைத் திரளோடு தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தான். ஆனால், எனது தாயின் கர்ப்பத்தில் நான் உருவாகு முன்னே என்னைத் தமக்கென தெரிந்து கொண்ட சர்வ வல்ல தேவன் என்னைக் கண்ணின்மணி போலக் கடைசி வரைக் காத்துக் கொண்டார். என்னோடு தேவ ஊழியம் ஆரம்பித்த, எனக்கு நன்கு தெரிந்த சில கர்த்தருடைய பிள்ளைகள் தேவன் அருவருக்கும் இந்தக் கொடிய பாவத்தில் தங்கள் வாழ்வின் அஸ்தமன நாட்களில் நொடிப் பொழுதில் வீழ்ந்து சிதறிப்போனார்கள். அவர்கள் திரும்பவும் எழும்பவே இல்லை. அதை அவர்கள் தங்கள் வாயினால் என்னிடம் சொல்லி கதறி அழுதிருக்கின்றார்கள்.
கர்த்தருடைய சுவிசேஷ ஊழியத்தில் நான் காண்பித்த பலத்த வைராக்கியம், பண விஷயங்களில் என்னில் காணப்பட்ட உண்மை, தேவன் அரோசிக்கும் கொடிய சிற்றின்ப பாவங்களுக்கு விலகியோடி என்னைப் பரிசுத்தமாகக் காத்துக் கொண்ட எனது பரிசுத்த வைராக்கியம் போன்றவை காரணமாக அன்பின் ஆண்டவர் என்னை கனம் பண்ணி ஆசீர்வதித்தார்.
கர்த்தர் எனக்கு கொடுத்த எனது இரண்டு புதல்வர்களும் அவர்களது மனைவியரும் அவர்கள் பிள்ளைகள் நால்வரும் மெய்யான இரட்சிப்பின் பாத்திரங்களாவார்கள். அன்பின் ஆண்டவர் பாராட்டிய இந்த சொல்லி முடியாத ஈவுக்காக நான் அவருடைய பொற்பாதங்களை என் கண்ணீரால் நனைத்து முத்தமிடுகின்றேன். இதைவிட வேறு சந்தோசம் உலகில் என்ன வேண்டியதாக இருக்கின்றது?
பெற்ற பிள்ளைகள் என்ற பாசத்தில் என் பிள்ளைகள் பண விசயமாக கஷ்டப்படும் நாட்களில் நான் அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தால் அதை அவர்கள் ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளுவதில்லை. “கர்த்தருடைய பிள்ளைகள் தங்களை ஒடுக்கி, வெறுத்து கண்ணீரோடும், கஷ்டத்தோடும் தேவ ஊழியங்களுக்காக அனுப்பும் பணங்களை அந்தக் காரியங்களுக்காகவே முழுமையாக பயன்படுத்திவிடுங்கள். அந்தப் பணத்தை எங்களுக்குத் தந்து எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகளின் மேலும் தேவ கோபாக்கினையை கொண்டு வந்து விடாதீர்கள். அது எங்களுக்கு ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தையே கொண்டு வரும்” என்று கூறி என்னை தங்கள் அருகில் நெருங்கவே விடமாட்டார்கள். அவசரத்திற்கு என்னிடம் கடன்கூட அவர்கள் வாங்க விரும்புவதில்லை. ஏனெனில், தேவ ஊழியங்களுக்காக அனுப்பப் பட்ட பணம் எந்த ஒரு நிலையிலும் அவர்களுக்கு பிரயோஜனப் படாது, மாறாக தேவையில்லாத இதர செலவினங்களையும், வியாதி வேதனைகளையும் அது தங்களுக்கு கொண்டு வரும் என்பது மெய்யான இரட்சிப்பின் பாத்திரங்களாகிய அவர்களுக்கு நன்கு தெரியும்.
உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்
(ஏசாயா 54 : 13)
நான் வேலை செய்த தேயிலைத்தோட்டத்தின் அலுவலகத்தில் என்னோடு வேலைசெய்த யாவரிலும் நான்தான் மிகவும் குறைவாக சம்பளம் வாங்கினேன். அதின் காரணமாக, நான் எனது புதல்வர்கள் இருவருக்கும் ஆரம்ப முதல் நல்ல தரமான ஆங்கில கல்வி கொடுக்க முடியாமல் போய்விட்டது. அதற்காக நான் மிகவும் மனம் வருந்தினேன். என்னோடு பணி செய்தவர்கள் தங்கள் பிள்ளைகளை வெள்ளைக்கார ஆசிரியர்கள் படித்துக் கொடுக்கும் மிகவும் தரமான ஆங்கில வழி கல்விசாலைகளில் சேர்த்தனர். எனது பிள்ளைகள் இருவரும் தினமும் பேருந்தில் கோத்தகிரி சென்று அங்குள்ள கத்தோலிக்க பள்ளியில் தமிழ் வழியான எளிய கல்விசாலையில் படித்து வந்தனர்.
நான் எனது 10 ஆம் வகுப்பை முடித்ததும் பாளையங்கோட்டையிலுள்ள புனித யோவான் கல்லூரியில் என்னை படிக்க வைக்குமாறு எனது தந்தையிடம் அழுது கண்ணீர் சிந்தினேன். பரம ஏழையான என் தந்தைக்கு எனது விருப்பத்தை நிறைவேற்றக்கூடாமற் போயிற்று. நாம்தான் கல்லூரி சென்று படிக்கவில்லை, மகன் சுந்தரையாவது கல்லூரிக்கு அனுப்பி பட்டதாரியாக்கிவிட வேண்டும். அவர்கள் கல்லூரியில் படித்து பட்டம் வாங்காவிட்டாலும் பரவாயில்லை. கல்லூரிக்குள் கால் அடி எடுத்து வைத்து விட்டாலே போதுமானது. அவர்களின் பெயருக்கு பின்னால் B.A., போட்டு அதற்குமேல் ஒரு கோடு போட்டுக் கொள்ளுவேன், அதுவே எனக்கு போதுமானது என்று என் உள்ளத்தில் மனதார எண்ணினேன். ஆனால், என்னை ஆட்கொண்ட அன்பின் கன்மலை பின் வந்த நாட்களில் அவர்களுடைய பெயருக்குப் பின்னால் 5 பட்டங்களை நான் போட தயைபுரிந்தார். அத்தனை படிப்பையும் நான் கையினால் எழுதுவது எப்படி? ஆம். ரப்பர் ஸ்டாம்பைத்தான் நான் பயன்படுத்த வேண்டும். கர்த்தருக்கே மகிமை.
ஆங்கில மீடியத்தில் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலேயர் களிடத்தில் படிக்க வைத்த எனது சக ஊழியர்களின் பிள்ளைகளைவிட ஏழை பரதேசியின் பிள்ளைகள் சிறப்பாக கல்வி கற்றுத் தேர்ந்து நல்ல ஆசிரிய பணிகளில் அமர்ந்தார்கள். எல்லா துதிக்கும், ஸ்தோத்திரத்திற்கும் பாத்திரமானவர் நம் தேவன் ஒருவரே.
எனக்கு அருகிலேயே எனது பிள்ளைகளை வைத்து என்னைப் போஷிக்க திருவுளம் கொண்ட காருண்ய காந்தன்
இந்த நாட்களில் அநேக மக்கள் தங்கள் பிழைப்பினிமித்தம் பெற்றெடுத்த பாசமுள்ள தாய் தந்தையரையும், இனஜனங்களையும் விட்டு விட்டு உலகின் பல்வேறு நாடுகளில் சென்று வேலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பது நமக்குத் தெரியும். அந்த மக்கள் ஆண்டுக்கு ஒருதடவை ஊருக்கு வந்து தங்கள் பெற்றோருடன் ஒரு சில தினங்கள் மட்டும் தங்கி இருந்துவிட்டு கடந்து சென்று விடுகின்றனர். அதற்கப்பால் அந்த அன்புள்ள பெற்றோர் ஆண்டு முழுவதும் தனிமையில் வாழ்ந்து வாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். அநேக குடும்பங்களில் பெற்றோரின் நிலை இதுவேதான். இந்த தனிமையை தாங்கிக் கொள்ள முடியாத கிறிஸ்தவ பெற்றோர் பலர் தங்களுக்கு வரும் பென்ஷன் பணத்தை அப்படியே முதியோர் இல்லத்தில் கொடுத்து முதியோர் இல்லங்களில் போய் சேர்ந்து விடுகின்றனர். அதை நீங்களும் நன்கு அறிவீர்கள்.
எனக்குத் தெரிந்த சில அருமையான தேவப்பிள்ளைகள் பண வசதி இருந்தும் தங்கள் விருத்தாப்பியத்தில், பிள்ளைகளின் ஆதரவில்லாத காரணத்தால் தங்களுக்கான ஆகாரங்களை செய்து சாப்பிட கூட முடியாமல் மிகவும் கஷ்டப்படுவதுடன் அநேக நேரங்களில் சாப்பிட்டும், சாப்பிடாமலும் இருக்கின்றனர்.
அன்பின் கருணாகர கர்த்தர் ஏழைப் பரதேசியின் காரியத்தில் பாராட்டிய எல்லையற்ற அன்பின் காரணமாக என் பிள்ளைகள் இருவருக்கும், அவர்கள் மனைவியருக்கும் கோத்தகிரிக்கு அருகான ஊட்டியிலும், அதற்கு அருகிலுள்ள இடங்களிலும் ஆசிரிய பணிகளைக் கொடுத்து எனக்கு அருகிலேயே அவர்களை வைத்திருக்கின்றார். ஒரு மணி நேர பிரயாண தூரத்தில் பிள்ளைகள் இருவரின் குடும்பங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் பிள்ளைகள் ஓரிரு நாட்கள் என்னோடு வந்து தங்கி சந்தோசமாக இருந்துவிட்டு கடந்து செல்லுகின்றனர். ஏதாவது அரசாங்க விடுமுறையானாலும் உடனே இங்கு என்னண்டை வந்து விடுவார்கள். பிள்ளைகள் செய்து வைக்கும் ஆகாரங்களை நான் வாரம் முழுவதும் சாப்பிடும் பாக்கியத்தையும் கர்த்தர் எனக்கு தந்திருக்கின்றார்.
பிள்ளைகள் நால்வருக்கும் அரசாங்கம் தமிழ் நாட்டின் வெவ்வேறு ஜில்லாக்களில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஆசிரியப் பணிகளைக் கொடுத்திருந்தால் அவர்களின் குடும்ப நிலைகள் என்ன ஆகும் என்பதை நீங்கள் எண்ணிப்பாருங்கள். சொல்லி முடியாத கஷ்டங்களை அவர்கள் சந்திக்கவேண்டியதாகும். அவர்களைவிட எனது நிலை இன்னும் பரிதாபகரமாக ஆகியிருக்கும். ஆனால், அன்பின் நேசர் எங்களுக்கு ஆச்சரிய தயை பாராட்டினார். பிள்ளைகளுக்கு கர்த்தர் வேலை வாய்ப்புகளைக் கொடுத்ததே ஒரு பேரதிசயமாகும். “இதோ கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்” (சங் 128 :4) என்ற தேவ வாக்கு எங்கள் மேல் வந்து பலித்தது. உண்மைதான், “என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்” (1சாமு 2 : 30) என்ற கர்த்தருடைய வார்த்தை நேற்றும் இன்றும் என்றும் மாறாததாக இருக்கின்றது. அல்லேலூயா.