“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்” (சங்கீதம் 119 : 97)
“உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை” (சங்கீதம் 119 : 165)
“உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்” (சங்கீதம் 119 : 92)
“அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப் படுகிறேன், அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலனுண்டு” (சங்கீதம் 19 : 11)
ஒரு கர்த்தருடைய பிள்ளை தனது உள்ளத்தில் ஏவப்பட்டு ஒரு அருமையான ஆங்கில புத்தகத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள். “கிறிஸ்தவ நற்பணி இயக்கம்” (Operation Mobilization) என்ற கிறிஸ்தவ புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அந்த புத்தகத்தின் பெயர் “தேவனுடைய வார்த்தையானது ஈடு இணையற்றது, வசீகரமானது, நித்தியமானது” (God’s word Unique, Magnetic, Eternal) என்பதாகும். அந்தப் புத்தகம் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்ததால் அந்தப் புத்தகத்தின் ஒரு சில பகுதிகளை உங்களுடைய ஆத்துமத்தின் ஆசீர்வாதத்துக்காக மொழி பெயர்த்து கீழே தருகின்றேன். கர்த்தர் அதை உங்களுக்கு ஆசீர்வதித்துத் தந்தருள்வாராக. அந்தப் புத்தகத்தின் ஆக்கியோன் தனது புத்தகத்தைக் குறித்து இவ்விதமாகக் கூறுகின்றார்:-
“இந்தப் புத்தகம் உங்களுக்கு மிகவும் விலையேறப்பெற்ற ஒன்றை வழங்குகின்றது. அந்த அழியா பொக்கிஷம் இந்தப் புத்தகத்தில் அல்ல மற்றொரு புத்தகத்தில் உள்ளது. அந்தப் புத்தகத்துக்காகத்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்த எளிய புத்தகம் உங்களைப்போன்ற மக்கள் தேவனுடைய புத்தகத்தை எவ்வாறு கண்டு கொண்டார்கள் அல்லது வேத புத்தகம் அவர்களை எவ்வாறு கண்டு பிடித்தது என்பதைக் குறித்துக் கூறுகின்றது. இதில் காணப்படும் செய்திகளை ஜெபத்தோடு வாசித்து உங்கள் வாழ்வின் முடிவை ஆசீர்வாதமாக்கிக் கொள்ளுங்கள்.
மரண வேதனை
இந்த உலகத்தின் ஒவ்வொரு காரியமும் தங்கள் இணைப்பிலிருந்து நழுவிக் காணப்படுகின்றது. மக்கள் மக்களைக் கொல்லுகின்றனர். எங்கும் இனக்கலவரங்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், குடும்பங்கள் இனக்கலவரங்கள் காரணமாக பூண்டோடு படுகொலை செய்யப்படுகின்றனர். குடிமக்கள் அவர்களுடைய சொந்த வீடுகளிலிருந்து துரத்தியடிக்கப்படுகின்றனர். இந்தப் பேரழிவுகளை தடுத்து நிறுத்த அரசியல் தலைவர்களால் முடிவதில்லை. காரணம், அவர்களும் நம்பகத்தன்மையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். 50 சதவீதத்துக்கும் கூடுதலான திருமணங்கள் விவாக ரத்தில் முடிவடைகின்றது. கணவன் மனைவிக்குள் உண்மை கிடையாது. தொழிலாளிகள் தங்கள் முதலாளிகளைப் பகைக்கின்றனர். அமெரிக்காவிலுள்ள பெரிய கம்பெனிகளில் ஏற்படும் ஒரு வேலை நிறுத்தம் 2 ஆயிரம் கோடி டாலர்கள் வரை நஷ்டப்படுத்திவிடுகின்றது. எத்தனை பேரிழப்புகள் பாருங்கள்!
இந்த உலகத்திலுள்ள ஒவ்வொன்றும் கடந்து மறைந்து கொண்டிருக்கின்றது. நாம் நமக்குச் சொந்தமான உடமைகள், செல்வங்கள், ஆஸ்தி ஐசுவரியங்கள் என்று வீராப்பு பேசிக் கொள்ளுபவைகள் எல்லாம் சொற்ப காலத்துக்கு நாம் கடனாகப் பெற்றவகைளேயன்றி பிறிதொன்றுமில்லை. நாம் நமக்குரியதென்று எண்ணி மிகவும் போற்றிப் பாதுகாப்பவைகள் எல்லாம் மற்றவர்களுக்கு நாம் விட்டுவிட்டுச் செல்லுபவைகள் என்பதை நாம் முழுமையாக மறந்து விடுகின்றோம். என்னுடைய வீடு என்று நான் ஒரு தடவை சொன்ன இடம் இப்பொழுது வெறும் சமதரையாக உள்ளது. அந்த வீடு புள்டோசர் வைத்து தகர்க்கப்பட்டு சம தரையாக மட்டப்படுத்தப்பட்டுவிட்டது. எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது.
ஆம் உண்மைதான், உலகில் காணப்படுபவைகள் அனைத்தும் நிலையானவைகள் அல்ல. அவைகள் அனைத்தும் கடந்து செல்லக் கூடியவைகள். அவைகளை நாம் பிடித்து வைத்திருக்க முடியாது. “நட்சத்திரங்களுக்கு கீழாக அத்தனை தாழ்வாக மாந்தர் தங்கள் வீட்டைக் கட்டியதே தவறாகிப் போய்விட்டது” என்று ஒரு புலவன் பாடினான். இந்த உலகத்தில் வாழ்ந்த மன்னர்களுக்கெல்லாம் மன்னாதி மன்னனாக வாழ்ந்த சாலொமோன் மாமன்னர் “மாயை, மாயை எல்லாம் மாயை” (பிரசங்கி 1 : 1) என்று கூறி வைத்துச் சென்றுவிட்டார்.
ஆசீர்வாதம்
தாம் சிருஷ்டித்த ஜனங்கள்தான் தேவனுக்கு முக்கியமானவர்கள். ஆகையால்தான் அவர் தமது ஒரே பேரான குமாரனை தந்தருளி இவ்வளவாய் நம்மேல் அன்புகூர்ந்தார் (யோவான் 3 : 16) அத்துடன் ஒருவராகிலும் கெட்டுப்போவதும் அவருடைய விருப்பமல்ல (2 பேதுரு 3 : 9)
ஆபிரகாம் தன்னளவில் அதை அறிந்துகொண்டவராக அந்நிய தேசத்திலே பரதேசியாக சஞ்சரித்தார். அவரது கண்கள், தேவன்தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்தை நோக்கியிருந்தன. “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும் தேவனால் கட்டப்பட்ட கைவேலையில்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கின்றோம்” என்றார் அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் (2 கொரி 5 : 1)
“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும், இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள். அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை. அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை” (மத் 6 : 19,20 ) என்று அருமை இரட்சகர் சொன்னார்.
ஆண்டவர் இயேசுவின் பேரிலுள்ள நம்பிக்கையானது நிரந்தரமானது. தேவனை விட்டுத் தூரமாக உங்களுக்கு ஆஸ்தி, ஐசுவரியம், வெற்றி, புகழ்ச்சி மற்றும் சிறப்பான சமுதாய அந்தஸ்துக்கள் போன்றவை திரள் திரளாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கை மாத்திரம் இல்லாதிருக்கும் பட்சத்தில் மேற்கண்ட உலக மேன்மைகளால் யாதொரு பயனும் கிடையாது. தேவன் தமது கிருபையால் தமக்குச் சொந்தமாக தெரிந்து கொண்டிருக்கும் தமது விசுவாச மக்களை அதிகமாக நேசித்து அவர்களுக்கு நித்திய இரட்சிப்பைக் கொடுத்திருக்கின்றார். அதின் காரணமாகவே அவர்கள் அந்த மகிமையின் நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள்.
“சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைக் குறித்து” (கொலோ 1 : 22) பவுல் சொல்லுகின்றார். சுவிசேஷத்தினாலேயன்றி வேறொன்றினாலும் நமக்கு நம்பிக்கை தரவியலாது. இந்த நம்பிக்கையை “நல் நம்பிக்கை” (2 தெச 2 : 16) என்றும் “ஜீவனுள்ள நம்பிக்கை” (1 பேதுரு 1 : 3) என்றும் “ஆனந்த நம்பிக்கை” (தீத்து 2 : 13) என்றும் வேதம் விவரித்துக்கூறுகின்றது. நம்பிக்கையானது சுவிசேஷத்தின் அலங்கார மகுடம் ஆகும்.
பரிசுத்தவான் டாக்டர் சாமுவேல் ஜாண்சன் முழுமையாக குருடராகிப் போன நிலையில் வியாதிகளால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார். “மானிட வாழ்க்கையானது ஒரு மாபெரும் போராட்டமாகும். அந்த துயரம் நிறைந்த போராட்டத்தில் நாம் ஒரு ஆனந்தத்திலிருந்து மற்றொரு ஆனந்தத்திற்கல்ல. ஒரு மகிமையின் நம்பிக்கையிலிருந்து மற்றொரு மாமகிமையின் நம்பிக்கைக்குச் சென்று கொண்டிருக்கின்றோம்” என்று எழுதினார். “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும், நல் நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும் உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல் வசனத்தினாலும், நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக” (2 தெச 2 :16, 17 ) என்று பவுல் கூறுகின்றார்.
மண்ணின் மாந்தர் தங்கள் வாழ்நாட் காலம் நீண்ட நெடுங்காலம் நீடித்திருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். கிறிஸ்து இரட்சகர் மேல் கொள்ளும் நம்பிக்கையானது மரணத்தின் மேல் வெற்றி கொள்ளுகின்றது. அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் நிருபத்தில் எழுதியுள்ள ஒரு வசனம் தனி மனிதனால் எழுதப்பட்டுள்ள மாபெரும் தேவதூது என்று கருதப்படுகின்றது. “தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” (ரோமர் 15 : 4) என்பதே அந்த வசனமாகும்.
முடிவாக
“பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோசத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக” (ரோமர் 15 : 13)
“ஆட்டுக்குட்டியானவரின் பரிசுத்த இரத்தத்தின் சுத்திகரிப்பின் மூலமாகக் கிடைக்கக்கூடிய கல்லறைக்கு அப்பாலுள்ள இந்த “மகிமையின் நம்பிக்கையை” முழுமையாக நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? உங்கள் காரியம் என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் எனது சரீரத்தின் ஒவ்வொரு தசை நாரும், அங்கமும் இந்த மகிமையின் நம்பிக்கையில்தான் ஆனந்தமாக குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றது” என்றார் ஜேம்ஸ் டாப்ஸன் என்ற தேவ பக்தன்.
ஏசாயா தீர்க்கன் நமக்காக இதை இந்த தெளிவான வார்த்தைகளிலே கொடுத்துள்ளார். “மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடே கூட எழுந்திருப்பார்கள். மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே விழித்து கெம்பீரியுங்கள். உம்முடைய பனி பூண்டுகளின் மேல் பெய்யும் பனி போல இருக்கும். மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்” (ஏசாயா 26 : 19)
எனது மனைவியின் சகோதரன் பால் ஒரு தேவனுடைய பிள்ளை. பால் தனது ஆப்த நண்பர்களான இருவருடைய கோர மரணங்கள் தன்னை எப்படியாக பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதை 1992 ஆம் ஆண்டு எங்களிடம் கூறியிருக்கின்றான். பாலும் அவனது நண்பர்கள்இருவரும் டெல்காட்டோ தொழிற் கல்விப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் ஆவார்கள். பால் அந்தப் பள்ளியில் 34 நீண்ட ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தான். வாழ்க்கையில் வெறுப்புற்று அவனது நண்பர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுவிட்டனர். வாழ்க்கையில் என்று ஆண்டவர் இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லையோ அன்றே அது இருள் சூழ்ந்து முற்றும் நிலை குலைந்து விடுகின்றது.
இந்த எனது சிறிய புத்தகம் உன்னை பரிசுத்த வேதாகமத்துக்கு நேராக உந்தித் தள்ளுவதாக. அந்த வேத புத்தகம் இந்த முழு உலகத்துக்குமான ஒரே ஒரு நிச்சயமான நம்பிக்கையை உனக்கு முற்றும் இலவசமாக அளிக்கின்றது. உனது கிறிஸ்தவ வாழ்வின் விடிவெள்ளி நட்சத்திரம், உனது கடைசி வார்த்தைகள் “எனது நம்பிக்கை, இரட்சகர் இயேசுவின் கல்வாரி இரத்தத்திலும் அவருடைய நீதியிலுமேயன்றி வேறொன்றிலும் கட்டப்படவில்லை” என்பதாக இருப்பதாக.
பால்டாடோனா – ஒரு சாட்சி
1947 ஆம் வருடம் நான் அர்ஜைண்டினா நாட்டில் பால்டாடோனா என்ற ஒரு மனிதரை சந்தித்தேன். பொலிவியா நாட்டிலிருந்து அவர் அங்கு வந்திருந்தார். தேவனுடைய வார்த்தை தன்னை எப்படி மாற்றியது என்பதைக் குறித்து அவர் என்னிடம் சொன்னார். அவர் இளைஞனாக இருந்தபோது அவருடைய பொலிவியன் கிராமத்துக்கு 1905 ஆம் ஆண்டு வேதாகமங்களையும், புதிய ஏற்பாடுகளையும் ஒரு மனிதர் விற்பனை செய்யக் கொண்டு வந்திருக்கின்றார். அதில் புதிய ஏற்பாட்டுடன் சங்கீதங்களும் சேர்ந்த ஒரு கையடக்கமான பாக்கெட் அளவு புதிய ஏற்பாட்டை பால்டாடோனா விலை கொடுத்து வாங்கினார். அதை அவர் வாசிக்காதபடி ஒரு உயரமான துணிமணிகளை வைக்கும் மர அலமாரியில் வைத்துவிட்டார். சில ஆண்டுகளாக அது அங்கேயே இருந்தது. இதற்கிடையில் பால்டாடோனா புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார்.
ஒரு நாள் அவர் வீட்டிற்கு வந்தபோது சிகரெட் பேப்பர் அவர் வசம் இல்லாது போயிற்று. என்ன செய்வதென்றே அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. எப்படியும் சிகரெட் பிடித்தாக வேண்டுமென்ற வெறி அவருக்கு தலைக்கு மேல் ஏறி நின்றது. திடீரென சில ஆண்டுகளுக்கு முன்பாக அலமாரியில் வைத்த சிறிய புதிய ஏற்பாட்டின் ஞாபகம் அவருக்கு வந்தது. உடனே அவர் அதை எடுத்து தூசி தட்டி அதின் ஒரு பேப்பரைக் கிழித்து அதற்குள் புகையிலையை வைத்து சுருட்டி ஒரு சிகரெட்டை உருவாக்கிவிட்டார். அந்தத் தாளானது சிகரெட் சுற்ற மிகவும் பொருத்தமாக இருந்தது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. பின்வந்த நாட்களில் அந்த புதிய ஏற்பாட்டின் தாட்களே அவருக்கு சிகரெட் சுற்ற பயன்பட்டு வந்தது. ஒவ்வொரு நாளும் அதைக் கிழித்துப் பயன்படுத்திவந்தார்.
ஒரு நாள் வழக்கம்போல சிகரெட் சுற்ற ஒரு தாளை அவர் கிழித்தார். கிழித்த தாளை தனக்கு முன்பாக வைத்திருந்தபோது அந்த தாளில் எழுதப்பட்டிருந்த “மனுஷ குமாரன் இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே வந்தார்” என்ற வார்த்தை அவருடைய கண்களில் பட்டது. பால்டாடோனா தனது கரத்திலிருந்த புகையிலையை ஒரு பக்கம் வைத்துவிட்டு அந்த தாள் முழுவதையும் வாசிக்க ஆரம்பித்தார். அதை வாசித்து முடித்தவுடன் அலமாரியிலிருந்து கிழிக்கப்பட்ட புதிய ஏற்பாட்டை எடுத்து மீதமுள்ள தாட்களை எல்லாம் வாசிக்கத் தொடங்கினார். மாலைப் பொழுதாகி இரவு வந்துவிட்டதால் 2 மெழுகுவர்த்திகளைக் கொழுத்தி தனது வாசிப்பைத் தொடர்ந்தார். அந்த மெழுகுவர்த்திகள் எரிந்து முடிந்து வேறு மெழுகுவர்த்திகள் மாற்றப்பட வேண்டியதானது. இரவு முழுவதும் அவர் அந்தப் புதிய ஏற்பாட்டை வாசித்துக் கொண்டே இருந்தார். கடைசியாக கீழ்த்திசையில் காலைச் சூரியன் தனது பொற் கிரணங்களை மேகக்கூட்டங்களின் ஊடாக வீசி வெளி வரும் காலையில் தனது நாற்காலியிலிருந்து பால்டாடோனா எழும்பி தனது முழங்கால்களில் வீழ்ந்து தனது இரு கரங்களுக்குள்ளும் தனது முகத்தைப் புதைத்து அன்பின் ஆண்டவர் இயேசுவை தனது இருதயத்துக்குள்ளாக வரும்படியாகவும், தனது பாவங்களை எல்லாம் மன்னிக்கும்படியாகவும் கெஞ்சிக் கதறி அழுதார். கர்த்தர் அவருடைய பாவங்களைமன்னித்து உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் அவருக்குக் கிருபையாக அளித்தார்.
அந்த நாளின் காலை வேளையில் தனது காலை ஆகாரத்திற்குப் பின்னர் புதிய ஏற்பாட்டின் மீதமுள்ள பகுதிகளை எல்லாம் படித்து முடித்த பின்னர் தனது கைவசமிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பக்கத்திலுள்ள ஒரு பெரிய கிராமத்திற்கு கால் நடையாக நடந்து சென்று தான் புகையிலை வைத்துப் புகைத்துத் தள்ளிய புதிய ஏற்பாட்டின் மத்தேயு,மாற்கு மற்றும் லூக்கா சுவிசேஷத்தில் 18 ஆதிகாரங்களையும் படித்து முடிப்பதற்காக ஒரு புதிய ஏற்பாட்டை விலை கொடுத்து வாங்கி வந்து வாசித்தார். ஆண்டவருடைய ஜீவனுள்ள வார்த்தைகளின் மேல் பால்டாடோனாவுக்கு கட்டுக்கடங்கா ஆவல் ஏற்பட்டது. பின்னர் அவர் முழு வேதாகமத்தையும் வாங்கி வாசித்தார். அதற்கப்பால் அவர் மக்களுக்குத் தனது அனுபவ சாட்சியைக் கூறி தேவனுடைய வார்த்தைகளை அவர்களுக்கு உபதேசித்தார். பால்டாடோனாவின் சாட்சி ஒரு ஆச்சரியமான ஜீவனுள்ள சாட்சியாகும்.
தேவனுடைய வார்த்தையானது நித்தியமானது
ஜாண் மக் ஆர்தர் என்ற சுவிசேஷகர் தனது சாட்சியை இவ்விதமாகக் கூறுகின்றார்:-
தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் நமக்குக் கொடுக்கக் கூடியதைக் காட்டிலும் மேலானதொன்றை இந்த உலகம் நமக்குக் கொடுக்கவியலாது. எனக்கு ஒரு நண்பன் உண்டு. வெகு அபூர்வமான வேதாகமங்களை சேர்ப்பதில் அவன் அலாதி பிரியம் கொண்டிருந்தான். ஒரு ஆச்சரியமான வேதாகம குவியல் அவனிடமிருந்தது. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வேதாகமும் கூட அவனுடைய வசத்திலிருந்தது.
ஆனால் என்னைக் கவர்ந்ததெல்லாம் அவன் வைத்திருந்த 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இங்கிலாந்தில்அச்சிடப்பட்ட மிகவும் பழமையான ஒரு பதிப்பான வேத புத்தகம்தான். அதைச் சொந்தமாக வைத்திருந்தவருடைய இரத்தத்தால் அந்த வேதாகமத்தின் மேற்பகுதி முழுவதும் மூடப்பட்டிருந்தது. அந்த வேதாகமத்தை எனது நண்பன் எனது கரங்களில் கொஞ்ச நேரம் வைத்துக் கொள்ள என்னை அனுமதித்தான். நான் அந்த வேதாகமத்தின் பக்கங்களைப் புரட்டினபோது கண்ணீர் துளிகள் எனது கண்களிலிருந்து வடிந்த வண்ணமாக இருந்தது.
அந்த வேதாகமத்தின் பக்கங்கள் எப்படி இரத்தத்தால் மூடப்பட்டிருந்தது? இங்கிலாந்து தேசத்தை இரத்த மேரி (Bloody Mary) என்ற கொடிய ராணி அரசாட்சி செய்த நாட்களில் அந்த வேதாகமத்தை வைத்து வாசித்த பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ மக்களை அவள் கொன்று குவித்தாள். அப்படி ஒரு போர் வீரன் கொன்ற ஒரு கிறிஸ்தவனின் இரத்தமே அவனுடைய வேதாகமத்தில் பட்டிருந்தது. பின்னர் அந்தப் போர்வீரன் அந்த வேதாகமத்தை எடுத்து முழுவதுமாக அந்த மனிதனுடைய இரத்தத்தில் தோய்த்தெடுத்தான்.
அந்த இரத்த மேரியின் காலத்திலுள்ள வேதாகங்களில் சில இன்று வரை பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவைகள் இரத்த சாட்சிகளின் வேதாகமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த வேதாகமங்கள் விஞ்ஞானிகளால் பரிசோதனையிடப்பட்டு அந்த வேதாகமத் தாட்களில் படிந்திருப்பவைகள் எல்லாம் மனித இரத்தம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தேவ மக்கள் தங்கள் சொந்த இரத்தத்தையே சிந்தி தங்கள் வேதாகமத்தை வைத்திருக்கின்றார்கள் என்ற உண்மையை கிறிஸ்தவர்களாகிய நாம் மறந்து அதற்கு நேர் எதிரிடையாக நாம் நமது வேதாகமங்களை வைத்திருக்கின்றோம்.
மேலை நாடுகளில் வாழ்கின்ற கிறிஸ்தவ விசுவாசிகளாகிய நாம் நமது கலாச்சாரங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம். கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை உலகப்பிரகாரமான மற்ற வியாபாரப் பொருளைப் போலப் பயன்படுத்துகின்றோம். ஒரு நல்ல புத்தகம் என்று நாம் அதைச் சொல்லுகின்றோம். நல்ல மலிவாகக் கிடைப்பதால் மற்ற உலகப் புத்தகங்களை நாம் வாங்கி நம்மிடம் வைத்துக் கொள்ளுவது போல அதையும் வாங்கி வைத்துக் கொள்ளுகின்றோம். கர்த்தருடைய வேதாகமம் ஈடு இணையற்றது, ஒப்பற்றது என்பதை நாம் மறந்து விடுகின்றோம். அந்த ஒப்பற்ற வேதாகமம் இல்லாதபட்சத்தில் நமது வாழ்வு பாழும், பயனற்றதாகிவிடுமே! நமக்கு நம்பிக்கையை கொண்டு வருவது அந்த வேத புத்தகம் மட்டுமே!
அன்பின் ஆண்டவர் இயேசு சொன்ன வார்த்தைகளைக் கவனியுங்கள் “வானமும், பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” (மத்தேயு 24 : 35)
அது ஒரு அழகான வசந்த காலத்தின் நாளான மே மாதம் 21 ஆம் தேதியாகும். சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் அது. நான் எனது நண்பனான பாப் ரெயின்மில்லர் என்பவரை நாப்ரஸ்கா விமான நிலயத்தில் சந்தித்தேன். பாப்ரெயின்மில்லர் கான்ஸாஸ் பட்டணத்திலுள்ள சுவிசேஷ மிஷனரி யூனியனின் தலைமையகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நானும் அதே ஸ்தாபனத்தில் அவரைப்போலவே இயக்குனராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவர்அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகி சொந்த இடத்திற்குச் செல்லுகின்ற நாளில் நான் அவரை விமான நிலயத்தில் வழி அனுப்பிவிட்டு வந்தேன்.
அவரை வழி அனுப்பி வைத்துவிட்டு வந்த 5 ஆம் நாளில் நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் “வரும் நாட்களில் நாம் இருவரும் ஒன்றாக மிகுந்த மனமகிழ்ச்சியோடு நேரம் செலவிட நிறைய காலம் இருக்கும் என்று நான் நம்புகின்றேன். நாம் இருவரும் ஒன்றாக மீன் பிடிக்கச் செல்லலாம், அத்துடன் இதைப்போன்று இன்னும் அநேக காரியங்களில் நாம் நமது நாட்களை மகிழ்ச்சியோடு செலவிடலாம் என்று நினைக்கின்றேன்” என்று நான் எனது கடிதத்தில் எழுதினேன்.
அந்த எனது கடிதத்தை நான் அவருக்கு எழுதி அனுப்பியபோது அவர் முடிவில்லா நித்தியத்திற்குள் பிரவேசித்து ஏற்கெனவே 2 நாட்கள் முடிந்து விட்டன என்பதை அப்பொழுது நான் கொஞ்சங்கூட நினைத்துப் பார்க்கவில்லை. பாப்ரெயின்மில்லர் அவர்களோடு நான் இந்த உலகத்தில் திரும்பவும் நேரம் செலவிட எனக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவரோடு சேர்ந்து மீன் பிடிக்கவோ அல்லது மற்ற எந்த ஒரு மகிழ்ச்சியான பொழுது போக்கு காரியங்களில் செலவிட என்னால் கூடாது போயிற்று.
நாம் அனைவரும் மிகவும் ஸ்திரமாகவும், உறுதியாகவும் அந்த முடிவில்லாத நித்தியத்தை நோக்கி முன்னேறிச்சென்று கொண்டிருக்கும் அதே நேரத்தில் அந்த நித்தியத்தை மகிழ்ச்சியோடு தைரியமாகச் சந்திப்பதைக் குறித்து நாம் கவலையற்றிருப்பது ஏன் என்று தெரியவில்லை? நித்தியத்தை நாம் தைரியமாகச் சந்திக்க தேவனுடைய பரிசுத்த வேதாகமம் நமக்கு வல்லமையைக் கொடுப்பதாக இருக்கின்றது.
“அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கின்றார், உலகத்தையும் (நித்தியத்தையும்) அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கின்றார்” (பிரசங்கி 3 : 11 ) “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? ” (மாற்கு 8 : 36)
செய்தி தாள் வாசிப்பும் வேத வசன தியானமும் ஒன்றாகப் பயணம் செய்யவியலாது
பண்டிதர் டோனால்ட் கிரே பார்ன்ஹவுஸ், தேவனுடைய ராட்சத பரிசுத்த மனிதராவார். இந்த நூற்றாண்டின் மாபெரும் வேதாகம வல்லுனர்களில் அவரும் ஒருவராவார். 1913 ஆம் ஆண்டு முதல் 1935 ஆம் ஆண்டு வரை அவர் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் பட்டணத்திலுள்ள ஒரு வேதாகம கல்லூரியில் வேதசாஸ்திரம் கற்றார். வேதாகமத்தைக் குறித்து அவர் கொண்டிருந்த மிகவும் உற்சாகமற்ற மனோபாவத்திற்கு எதிரிடையான ஒரு பெரிய திருப்பம் இந்தக் கல்லூரி ஆண்டுகளிலேயேதான் அவருக்கு ஏற்பட்டது. அப்படிப்பட்ட திருப்பத்திற்கான நிகழ்ச்சியைக் குறித்து நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு கீழே தருகின்றேன்:-
பார்ன் ஹவுஸ் தனது வயதுக்கு இரட்டிப்பான வயது மூத்தவரான டாம் ஹானி என்பவரைச் சந்தித்தார். டாம் ஹானி அப்பொழுது கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்கத்தின் காரியதரிசியாக இருந்தார். பார்ன் ஹவுஸ் தனது வழிகாட்டும் நட்சத்திரத்தை டாம் ஹானியில்தான் கண்டு பிடித்தார்.
அவர்கள் இருவரும் ஒரு கிறிஸ்தவ பக்தி முயற்சி சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதற்காக குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு ஒன்றாக இரயிலில் சென்று கொண்டிருந்தனர். ஹானி தனது வேதாகமத்தை ஆழ்ந்த தியானத்தோடு வாசித்துக்கொண்டிருந்தார். ஆனால், அதே சமயம் பார்ன் ஹவுஸ் அன்றைய நாளின் செய்தி தாளை மிகவும் கருத்தோடு படித்துக் கொண்டிருந்தார். கடைசியாக, பார்ன் ஹவுஸ் தனது செய்தி தாளை கீழே போட்டுவிட்டு டாம் ஹானியைப் பார்த்து “ஹானி, நீங்கள் தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தை ஆழமாக அறிந்திருக்கின்ற வண்ணமாக நானும் அதை அறிந்து கொள்ள அதிகமாக வாஞ்சிக்கின்றேன்” என்று கூறினார்.
பார்ன் ஹவுஸ் அதைக் குறித்துப் பின்னர் கூறும் போது “டாம் ஹானி எனது விருப்பத்தின் கேள்விக்கு என்னுடைய முகத்தைப் பார்த்து பதில் சொல்லாமல் “நீங்கள் செய்தி தாளை வாசித்துக் கொண்டு அதே சமயம் தேவனுடைய வேதாகமத்தையும் வாசித்து அதின் பரலோக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுவது என்பது முற்றும் கூடாத காரியம்” என்று கூறிவிட்டு மீண்டும் தன் இருக்கையில் பின்னால் சாய்ந்து தனது வேதாகமத்தை வாசித்து தியானிப்பதில் மூழ்கிவிட்டார். டாம் ஹானியின் அந்த வார்த்தைகளை நான் எனது வாழ்வில் என்றுமே மறக்கமாட்டேன்.
“அந்த நிமிஷமே நான் எனது கரத்திலிருந்த செய்தி தாளை கீழே போட்டுவிட்டு எனது பெட்டியைத் திறந்து எனது வேதாகமத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அந்த நாளில் நான் ஒரு மிகவும் முக்கியமான தீர்மானம் எடுத்தேன். ஆதாவது, நான் எனது தேவனுடைய வார்த்தைகளை வாசித்து தியானிப்பதிலிருந்து எனது கவனத்தைப் பிரிக்கக்கூடிய எந்த ஒரு காரியத்திற்கும் நான் இடம் கொடுக்கவே மாட்டேன் என்று பொருத்தனை பண்ணினேன். அன்று நான் தேவனுக்கு முன்பாக செய்த பொருத்தனையே முதலும் முடிவுமாக எனக்கு அமைந்தது. செய்தி தாட்கள் வாசிப்பும் அன்றுடன் முற்றுப்பெற்றுவிட்டது” என்கின்றார் பண்டிதர் டோனால்ட் கிரே பார்ன் ஹவுஸ்.
அன்று பார்ன் ஹவுஸ் செய்த முக்கியமான பொருத்தனை அவருடைய கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கையை ஒரு அற்புதமான வாழ்க்கையாக மாற்றி அமைத்தது. விசேஷமாக அவர் தனது காலங்களை தேவனுடைய மகிமைக்கு மட்டுமே செலவிட்டார். அதின் காரணமாக அவர் தனது நேரத்தின் பெரும் பகுதியை தேவனுடைய வார்த்தைகளை வாசித்துத் தியானிப்பதற்குச் செலவு செய்தார். அதின் பலனாக அவர் ஒரு மாபெரும் வேதாகம பண்டிதராக பின் நாட்களில் விளங்கினார்.
தேவனுடைய வேத புத்தகம் மனுஷரின் வாழ்க்கைகளை மாற்றியமைக்கும் அற்புத வல்லமையை எப்படி வர்ணிக்க முடியும்! அந்த பரலோக வார்த்தைகளின் வல்லமையை என்னவென்று சொல்லுவது? உலகத்திலுள்ள அனைத்துப் புத்தகங்களிலிருந்தும் தேவனுடைய பரிசுத்த வேத புத்தகம் மாத்திரம் ஏன் இத்தனை ஆச்சரிய அற்புத ஜீவனுள்ள மாற்றத்துடன் காணப்படுகின்றது?
தேவனுடைய பரிசுத்த வேதாகமத்துக்கு ஒப்பான ஒரு புத்தகம் இதுகாறும் இந்த உலகத்தில் எழுதப்படவில்லை. இயேசு இரட்சகரைப்போல பரலோகக் காரியங்களை அத்தனை அற்புதமாகக் கையாண்டவர் எவருமில்லர். அவருடைய பாவமற்ற பரிபூரண பரிசுத்த வாழ்க்கையைப் போல பிறிதொரு ஜீவிய சரித்திரம் மனுக்குலத்தின் சரித்திரத்திலேயே எழுதப்படவில்லை. தேவனால் மீட்கப்பட்ட அவருடைய மக்களின் சரித்திரங்களைக் குறித்து எழுதப்படும் புத்தகங்களை இந்த உலகத்தின் எந்த ஒரு புஸ்தகசாலையும் தங்கள் வசம் கொள்ள இயலாது. ஆம், அவைகள் அத்தனை திரள், திரளானவைகள்!
வாசிப்போனே, மேலே நாம் வாசித்த பார்ன் ஹவுஸ் அவர்களைப்போல தேவனுடைய வார்த்தைகளை நேசித்து வாசிப்பதற்கு நீ எப்பொழுதாவது தீர்மானம் எடுத்திருக்கின்றாயா? தேவனுடைய வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் பேராவலுடன் வாசிப்பதற்கு இப்பொழுதே தீர்மானம்எடு. காலங்கள் விரைந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. உனது சரீரத்தைப் போஷிக்க நீ எத்தனை அக்கறையும், கவலையும் எடுக்கின்றாயோ அதைப்போல உனது ஆத்துமாவை தேவனுடைய வார்த்தைகளால் போஷிக்கக் கருத்தாயிரு. தேவன் உன்னை மறுரூபமாக்குவார்.
தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்கு தேவனுடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்யுங்கள்
ஆண்டவருடைய வார்த்தைகளை திரள் திரளாக தங்கள் இருதயத்தில் மனப்பாடம் செய்து வைக்க வகை செய்யும் ஏவுகரணங்களை கொடுக்கும் கிறிஸ்தவ ஸ்தாபனமான (The Navigators) என்ற புகழ்பெற்ற கிறிஸ்தவ ஸ்தாபனத்தை தோற்றுவித்த டாவ்சன் டிராட்மான் (Dawson Trotman) என்ற தேவ மனிதர் ஒரு சமயம் ஒரு ராணுவ வீரனைப்பார்த்து எத்தனை தேவ வசனங்களை அவன் மனப்பாடமாகப் படித்திருக்கின்றான் என்று கேட்டார். அதற்கு அந்த ராணுவ வீரன் 1500 வசனங்கள் தனக்கு மனப்பாடமாகத் தெரியும் என்று கூறினான். “அந்த 1500 வசனங்களையும் இப்பொழுதே மனப்பாடமாக ஒப்புவிக்க முடியுமா?” என்று டிராட்மான் கேட்டார். “ஆம், இப்பொழுதே நான் அவைகளை மனப்பாடமாகச் சொல்ல முடியும்” என்று அந்த ராணுவ வீரன் பெருமையோடு கூறினான்.
அதைக்கேட்ட அந்த தேவ மனிதர் “நீங்கள் அந்த 1500 தேவ வசனங்களையும் என்னிடம் ஒப்புவிக்க வேண்டுமென்று நான் விரும்பாமல் அவைகளில் வெறும் 5 வசனங்களின்படி நீங்கள் உங்கள் கிறிஸ்தவ வாழ்வில் வாழ்ந்தால் போதுமென்றே நான் விரும்புகின்றேன்” என்று சொன்னாராம். அந்த ராணுவ வீரன் தலை அறிவு மாத்திரம் கொண்டிருந்தானேயல்லாமல் இருதயத்தில் தேவ அறிவைப் பெற்றவன் அல்ல. அதினால் அவன் துக்கத்தோடு சென்று விட்டான்.
அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ரஷ்யா தேசத்திலுள்ள கலோனாவாக்கா என்ற கிராமத்தின் குருவானவர் தட்டையான மூக்கைக் கொண்ட ஒரு வாலிபன் தான் மனப்பாடமாகப் படித்த வேத வசனங்களை மிகவும் பக்தி வினயமாக ஆலயத்தில் ஒப்புவிப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தார். அந்தக் குருவானவர் அந்த வாலிபனுக்கு நல்ல சன்மானங்களையும், இதரப் பொருட்களையும் பரிசாகக் கொடுத்து அவனை வேதாகமத்திலுள்ள நான்கு சுவிசேஷங்களையும் மனப்பாடமாகப் படிக்க வைத்துவிட்டார். அந்த வாலிபன் மனப்பாடமாகப் படித்த அந்த நான்கு சுவிசேஷங்களையும் ஒரு நாள் அந்த குருவானவருடைய தேவாலயத்தின் சபை நடுவில் ஒப்புவிக்க வைத்து அந்த குருவானவர் மிகவும் மனம் மகிழ்ந்தார்.
60 ஆண்டுகளுக்குப் பின்னரும் மேற்கண்ட அதே வாலிபன் தான் ஒப்புவித்த அதே நான்கு சுவிசேஷங்களைத் திரும்பவும் ஒப்புவிக்க விரும்பினான். அவன் யாரென்று கவனித்தால் அவர்தான் “கடவுள் இல்லை” என்ற தீவிரமான கொள்கையையுடைய ரஷ்ய தேசத்தின் கம்மியூனிச பிரதமந்திரியான நிக்கிடவ் குருஷேவ் (Nikita Khrushchev) என்பவராவார்.
ஜாண் அலெக்ஸாண்டர் என்ற அமெரிக்க சர்வ கலாசாலை கிறிஸ்தவ ஐக்கியத்தின் முன்னாள் தலைவர் தேவனுடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்வதைக் குறித்து ஒரு எச்சரிப்பை நமக்கு முன்பாக வைக்கின்றார். வெறுமனே ஆண்டவருடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்வதால் எந்த ஒரு ஆவிக்குரிய பயனும் நமக்குக் கிட்டாது. தேவன் இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு நாஸ்தீகன் தேவனுடைய வேத புத்தகத்திலிருந்து ஏராளமான வேத வசனங்களை மனப்பாடமாக படித்து வைத்திருக்கலாம். சாத்தானாம் பிசாசானவனும் கர்த்தருடைய வார்த்தைகளை திரள் திரளாகப் படித்து வைத்திருக்கின்றான். அன்பின் ஆண்டவரை சோதிப்பதற்காக அவன் அப்படி தேவ வசனங்களை மனப்பாடமாகப் படித்து வைத்திருந்ததை வேதாகமத்தில் நாம் காண்கின்றோம்.
“எனினும் தேவனுடைய வசனங்களை மனப்பாடம் செய்து இருதயத்தில் பொக்கிஷ வைப்பாக வைத்து அவைகளை தியானம் செய்து வாழ்க்கையில் அப்பியாசிப்பது ஒரு பெரிய ஆசீர்வாதமாகும்” என்று மேற்கண்ட ஜாண் அலெக்ஸாண்டர் தொடர்ந்து கூறுகின்றார்.
படித்த வேத வசனங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து கொண்டிரு
(வேத வசனங்களை மனப்பாடம் செய்யும் இரகசியம் இது ஒன்றேதான்)
எனது ஆரம்ப கால கிறிஸ்தவ வாழ்வில் தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த எனது அறிவு மிகவும் குறைவானதாகும். இரண்டாம் உலகப்போரின் போது நானும் என்னைப் போன்ற மற்றொரு டாக்டரும் ஒன்றாக ஒரு கப்பல் யாத்திரையில் இருந்தோம். அந்த டாக்டர் என்னைப் பார்த்து வேதாகமத்தைக் குறித்து தனக்கு ஏதாவது சொல்லும்படியாகக் கேட்டார்.
வேதாகமத்தைக் குறித்த அறிவு அப்பொழுது எனக்கு ஒன்றுமில்லையாதலால் நான் அவருக்கு எதையும் சொல்லக் கூடாதவனானேன். அது எனக்கு மிகவும் வேதனையான, வெட்கமான ஒரு அனுபவமாகவே அப்பொழுது இருந்தது. நான் எனது பள்ளிப்படிப்பை மற்றும் கல்லூரிப்படிப்பு இன்னும் கடினமான மருத்துவ படிப்பைக் கூட படித்து முடித்திருந்தேன். அந்தப் படிப்புகளின் போது நான் ஆயிரக்கணக்கான தத்துவ விளக்கங்களையும், விதிகளையும், சமன்பாடுகளையும், தண்ணீர்பட்ட பாடமாக மனப்பாடமாக படித்திருந்தேன். ஆனால் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளைக் குறித்த எனது அறிவு பூஜ்யமாகவிருந்தது. சொல்லப் போனால் தேவனுடைய வார்த்தையோடு நான் விளையாடிக் கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஆண்டவர் என்னைப் பார்த்து தேவ வசனங்களை மனப்பாடம் செய்யும்படியாகக் கூறினார். எனக்கும் (டாக்டர் ரால்ப் பைரன்) ஆண்டவருக்கும் இடையிலான சம்பாஷணை இவ்விதமாக அமைந்தது:-
பைரன்:- “ஐயா உம்முடைய வேத வசனங்களை என்னால் மனப்பாடம் செய்ய இயலாது.
ஆண்டவர்:- “உன்னால் கூடும்”
பைரன்:- “தகப்பனே, உம்முடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் என்னில் இல்லை”
ஆண்டவர்:- “உனக்கு அந்த ஆற்றல் நிச்சயமாக உண்டு”
பைரன்:- “அப்பா நான் விரைவில் மறந்து போகக்கூடியவன்”
ஆண்டவர்:- “நீ படித்தவற்றை திரும்பத் திரும்ப உன் நினைவுக்கு கொண்டு வந்து கொண்டிரு. அப்பொழுது நீ சிறப்பாக தேவனுடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொள்ளுவாய்”
எங்கள் இருவருடைய வாக்குவாதத்தின் இறுதியில் ஆண்டவரே வெற்றி பெற்றார். அவருடைய ஆலோசனையின்படி தேவ வசனங்களை ஒழுங்கும், கிரமமுமாகப் படித்து படித்த பகுதிகளை அடிக்கடி திரும்பத் திரும்ப எனது நினைவுக்குக்கொண்டு வந்து எனது நிலையை நான் நன்கு உறுதிப்படுத்திக்கொண்டேன். இப்பொழுது நான் தேவனுடைய அநேக வசனங்களை எனது இருதயத்தில் பொக்கிஷ வைப்பாக வைத்துக்கொள்ள முடிந்தது. கர்த்தருக்கே மகிமை.
(Taken from the Book:- God’s Word Unique, Magnetic, Eternal)