உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்
(சங்கீதம் 35 : 13)
(ஏழைப் பரதேசியின் உபவாச ஜெப வாழ்க்கை)
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. 1977 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்திலுள்ள திசையன்விளை என்ற சிறிய பட்டணத்திற்கு அருகிலுள்ள மடத்தச்சம்பாடு என்ற ஒரு சிறிய கிறிஸ்தவ கிராமத்தில் மூன்று நாட்கள் அங்குள்ள தேவாலயத்தில் கன்வென்ஷன் கூட்டங்களில் பேசும்படியாக என்னை அழைத்திருந்தார்கள். ஆலயத்திற்கு அருகிலுள்ள ஒரு கிறிஸ்தவ வீட்டில் நான் தங்கியிருந்தேன். அந்த வீட்டின் ஐயா (திரு.பால்துரை ஜேக்கப்) அவர்கள்தான் என்னை பேசும்படியாக கூப்பிட்டிருந்தார்கள். அவர்கள் அங்கிருந்த தங்கள் CSI கிறிஸ்தவ சபையின் முக்கிய அங்கத்தினராவார்கள். நான் அவர்கள் வீட்டில் மூன்று நாட்கள் உபவாச ஜெபத்தில் தரித்திருந்து சபை மக்களுக்கு தேவச் செய்தி கொடுத்தேன். மூன்று நாட்கள் இரவிலும் ஒரு சிறிய ஆகாரம் மட்டும் எடுத்துக் கொண்டு பகலில் தண்ணீர் கூட குடியாமல் உபவாச ஜெபத்தில் இருந்து கர்த்தருடைய செய்தியை சபை மக்களுக்குக் கொடுத்து வந்தேன்.
ஒரு நாள் நான் எனது முழங்கால்களில் நின்று ஜெபித்துக் கொண்டிருந்த வேளை என்னை அழைத்த அந்த ஐயா தனது வீட்டின் மாடிப்படிகளில் ஏறி மேலே வந்து கடைசி படியின் மேல் கீழே நின்று கொண்டு “கடந்த வருடம் நாங்கள் ஒரு பெரிய தேவ ஊழியரை எங்கள் ஊர் கன்வென்ஷன் கூட்டங்களில் பேச அழைத்திருந்தோம். அவரும் நீங்கள் இப்பொழுது தங்கியிருக்கும் இதே அறையில்தான் 3 நாட்கள் தங்கியிருந்து மக்களுக்கு தேவச் செய்தியை கொடுத்தார். உங்களை நான் மாடிப்படிகளில் ஏறி வந்து பார்க்கும் ஒவ்வொரு சமயத்திலும் நீங்கள் தேவனுக்கு முன்பாக முழங்கால்களில் நின்று ஜெபித்துக் கொண்டிருப்பதை நான் காண்கின்றேன். அது என்னைக் கர்த்தருக்குள் பரவசப்படுத்துவதாக இருக்கின்றது. ஆனால், அந்த ஊழியக்காரர் ஒரு தடவை கூட முழங்காலில் நின்று ஜெபித்ததை நான் கடைசி வரை காணவே இல்லை” என்று என்னிடம் மிகவும் துக்கத்தோடு சொன்னார்கள்.
ஒரு தேவ மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை உபவாசத்தால் ஒடுக்கி எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக முழங்கால்களில் நின்று கொண்டிருப்பானோ அந்த அளவிற்கு தேவன் தமது நாம மகிமைக்காகவும், அநேகருக்கு ஆசீர்வாதமாகவும் அவனை நிச்சயமாக எடுத்துப் பயன்படுத்துவார். இதிலே தேவனுக்கு வேண்டியதெல்லாம் தங்களை முழுமையாக அர்ப்பணம் செய்து முழங்கால்களில் அவருக்கு முன்பாக எப்பொழுதும் நிற்பவர்கள்தான். இதிலே ஆண்டவர் தனி மனிதனின் சிறந்த வேத அறிவையோ, அவன் மக்களுக்கு எடுக்கும் சிறப்பான வேதாகம வகுப்புகளையோ (Bible Studies) அல்லது அவனது உயர் கல்வி ஞானத்தையோ அல்லது அவனது சாதுர்ய பிரசங்கங்களையோ எதிர்பார்ப்பவர் அல்ல.
பாவியாகிய என்னில் காணப்பட்ட அந்த உபவாச ஜெப வாழ்க்கையின் காரணமாகத்தான் தேவன் என்னைத் தமது தேவ ஊழியத்தின் பாதையில் பரவலாக எடுத்துப் பயன்படுத்தினார். இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் அநேக இடங்களுக்கு அவர் என்னைக் கொண்டு சென்று பயன்படுத்தினார். அது குறித்த தெளிவான விபரங்களை கடந்த நாட்களின் தேவ எக்காள பத்திரிக்கைகளில் நான் விபரமாக எழுதி வந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
நேப்பாள தேசத்திற்கு சுவிசேஷத்துடன் 1981 ஆம் ஆண்டிலிருந்து 1987 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாகச் சென்று நேப்பாளத்தின் ஏராளம், ஏராளமான சிறிதும், பெரிதுமான கிராமங்களில் வாழ்கின்ற அநேக நேப்பாளி மக்களின் கரங்களில் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளை அவர்களின் நேப்பாளி மொழியில் கொடுக்க தேவ கிருபை பெற்றேன்.
இமயமலைகளில் உள்ள ஹரித்துவாரம், ரிஷிகேசம் என்ற இந்து சாதுக்கள், சந்நியாசிகள் திரளாக வாழும் இடம் என்னை வெகுவாகக் கவர்ந்த ஒரு இடமாகும். அந்த இடங்களில் செய்யப்பட்ட தேவ ஊழியங்கள் எல்லாம் அனந்தம், அனந்தமாகும். ரிஷிகேசத்திலுள்ள “திருப்பதி ஆந்திர ஆச்சிரமத்தில் ” தங்கியிருந்து கொண்டு இந்து சாதுக்கள், சந்நியாசிகள் மத்தியில் செய்யப்பட்ட தேவ ஊழியங்கள் எல்லாம் ஆண்டவருடைய ஞாபக புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. தேவ எக்காளங்களிலும் நான் கடந்த நாட்களில் அது குறித்து விபரமாக நான் எழுதினது உங்களுக்கு நன்கு ஞாபகமிருக்கும். தங்கள் உலக வாழ்க்கையை வெறுத்து, பிறந்து வளர்ந்த இடங்களைத் துறந்து, தங்களின் இன ஜன பெந்துக்களையும், அன்பானவர்களையும், அருமையானவர்களையும் மறந்து, முடிவில் எப்படியாவது முக்தியை பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்தோடு பரதேசிகளாக சுற்றி அலையும் அந்த மக்களை முதன் முதலாவதாக நான் என் வாழ்க்கையில் கண்டதும் நானும் கர்த்தருக்காக என் தாடியை வளர்த்து உலக நேசத்தை இன்னும் வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தேன்.
இந்து மக்களின் புண்ணிய ஸ்தலங்களான காசி, பத்ரிநாத், கேதார்நாத், உத்தர்காசி போன்ற இடங்களுக்கெல்லாம் நான் சென்று தேவ ஊழியம் செய்ய தேவ கிருபை பெற்றேன்.
சிக்கிம் மாநிலத்திற்குச் சென்று அதின் தலைநகரம் காங்க்டாக் என்ற இடத்திலும், மங்கன் என்ற இடத்திலுமுள்ள கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நல்லதோர் தேவ ஊழியம் செய்ய கர்த்தர் கிருபை செய்தார்.
பூட்டான் தேசத்திற்கும் இரண்டு தடவைகள் (1983 1984) ஆம் ஆண்டுகளில் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களுடன் சென்று அங்குள்ள பாரு (Paro) என்ற இடத்திலுள்ள பிரசித்திபெற்ற (Rimpung Dzong) என்ற புத்தமத மடாலயத்திற்கும், புனாக்கா (Punakha) என்ற இடத்திற்கும் சென்று ஊழியம் செய்துவிட்டுத் திரும்பினேன். அத்துடன் பூட்டான் நாட்டின் தலைநகரம் திம்புவிலும் நல்லதொரு தேவ ஊழியம் செய்ய கர்த்தர் உதவி செய்தார்.
“பனிப் பாலைவனம்” (Cold Desert) என்று அழைக்கப்படும் காஷ்மீரத்தின் தலை நகர் ஸ்ரீநகரிலிருந்து முழுமையான 2 நாட்கள் பிரயாண தூரத்திலிருக்கும் 450 கி.மீ. தொலைவிலுள்ள ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கிற்கும் (Zanskar Valley) சென்று தீபெத்திய புத்தமார்க்கத்தைப் பின்பற்றும் வைராக்கியமான புத்த மக்கள் மத்தியில் அவர்களின் கிராமங்களுக்கெல்லாம் தைரியமாகச் சென்று தீபெத் மொழி கிறிஸ்தவ பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்தேன்.
மேற்கு தீபெத் என்று அழைக்கப்படும் லடாக்கிலும் (Ladakh) அதைச் சுற்றியுள்ள புத்தமத கிராமங்களிலும் தீபெத் மொழி சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்து தேவ ஊழியம் செய்தேன்.
உத்தராஞ்சல் மாநிலத்தில் தனித்தும் 2 வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி நாங்கள் ஒன்பது பேர்கள் கொண்ட ஒரு குழுவாகவும் அந்த மாநிலத்தின் அநேக இடங்களுக்கு ஆண்டுதோறும் சென்று அங்குள்ள அநேகம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் (இண்டர் காலேஜ்) கிராமங்களிலும், சிறிய பட்டணங்களிலும் தேவனுடைய வார்த்தைகளை பல்லாயிரக்கணக்காக ஆத்தும பாரத்தோடு நாங்கள் வழங்கினோம் அந்தக் காரியங்களை எல்லாம் நான் நமது தேவ எக்காளம் பத்திரிக்கையில் ஒழுங்காக எழுதி வெளியிட்டு உங்கள் கரங்களில் தந்தேன். தேவனுக்கே மகிமை.
அப்படியே இமாச்சல் பிரதேசத்திலுள்ள சிம்லா, கசோலி, நார்கண்டா, கோர்ட்கர்ட், குளு, மணாலி போன்ற இடங்களுக்கு நான் தனித்தும், சகோதரன் நார்ட்டன் அவர்களோடு சேர்ந்தும் அதற்கப்பால் 2 வாகனங்களில் நாங்கள் குழுவாக இமாச்சல் பிரதேசத்தின் மற்ற இடங்களுக்கும் சென்று தேவ ஊழியத்தை மேற்கொண்டோம்.
மேற்கண்ட ஊழியங்கள் யாவுக்கும் முன்பாக எங்கள் நீலகிரி மலைகளில் எனது ஓய்வு நேரங்களில் ஓய்வுநாள் பள்ளி குழந்தைகளுக்கு கிறிஸ்தவ ஒட்டுப்படங்கள் (Flannel Graph Pictures) காண்பித்தும், தோட்டத் தொழிலாளிகளுக்கு இரவில் ஒளி விசித்திர (Magic Lantern) படங்கள் காட்டியும் தேவ ஊழியங்கள் செய்த நாட்கள் உண்டு. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எனது சொந்த ஊர் பகுதிகளிலும் மேற்கண்ட ஊழியங்களை நான் செய்திருக்கின்றேன்.
நம் தமிழ்நாட்டில் எந்த ஒரு தனி தேவ ஊழியனையும் அன்பின் ஆண்டவர் இந்த அளவிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தவே இல்லை. கர்த்தர் ஒருவருக்கே துதி,கனம், மகிமை. தனித்த ஒரு ஏழை தேவ ஊழியனை இந்த அளவிற்கு எடுத்துப் பயன்படுத்தினது கர்த்தாவின் அற்புதச் செயலாகும். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. அந்த அற்புதம் நிகழ்ந்த கதையை நான் இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே உங்களுக்கு எழுதி தெரிவித்துவிட்டேன். ஆம், பக்தசிரோன்மணி சாதுசுந்தர்சிங் வாழ்ந்த சுபத்து என்ற இடத்தில் உள்ள அவரின் கானக பங்களாவில் நான் என் கண்ணீரைக் கொட்டி “ஆண்டவரே, இந்த இடத்தில் வாழ்ந்த உமது அடியானை உமது நாமத்திற்கு மகிமையாக பயன்படுத்தினது போல பாவியாகிய என்னையும் சுவிசேஷம் எட்டாத பகுதிகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்தும்” என்று நான் அழுது ஜெபித்த எனது ஜெபத்திற்கான ஆச்சரியமான தேவனின் பதில்தான் கர்த்தர் என்னை இந்தவிதமாகக் கொண்டு சென்றதன் காரணம். தேவனுக்கே மகிமை.
இந்தவிதமாக அன்பின் ஆண்டவர் என்னைப் பயன்படுத்த ஏதுவாக இருந்த ஒரே காரியம் தேவ பெலத்தால் நான் மேற்கொண்ட எனது உபவாச ஜெபங்களாகும். ஊழியத்தின் எந்த ஒரு தேவைகளுக்கும் மனிதனை நோக்காமல், மனிதர்களுக்கு எனது தேவைகளை நேரிடையாகவோ அல்லது எழுத்து மூலமாக தெரிவிக்காமல், தேவ எக்காளம் பத்திரிக்கையில் அது குறித்து எதுவும் எழுதாமல் இங்கிலாந்தின் ராட்சத தேவ பக்தன் ஜியார்ஜ் முல்லரைப்போன்று எனது முழங்கால்களை இராப்பகலாக தேவ சமூகத்தில் ஊன்றிப் பெற்றுக்கொண்டேன். உபவாசத்தையும் பக்க பலமாக சேர்த்துக் கொண்டு புசியாமலும், குடியாமலும் இருந்தேன்.
வாரந்தோறும் ஒழுங்காக வெள்ளிக் கிழமைகளில் உபவாசிப்பேன். ஆண்டவருடைய சிலுவைப் பாடுகள், மரணத்தை தியானிக்கும் லெந்து கால நாட்களில் தொடர்ச்சியாக 40 நாட்கள் தேவ பெலத்தால் உபவாசிப்பேன். இந்த உபவாச நாட்கள் சுமார் 2 மாதங்கள் வரை கூட பின் வந்த நாட்களில் நீடித்தது.
வீட்டில் இருந்து உபவாசித்தால் உபவாச ஜெபத்திற்கு இடையூறு ஏற்படும் என்று நினைத்து எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த ஒரு மிஷனரி பங்களாவில் (Queen’s Hill Bungalow) அறை வாடகைக்கு எடுத்து உபவாசித்து ஜெபித்தேன். அந்த அழகான பங்களாவை இந்தச் செய்தியில் காணலாம்.
ஒவ்வொரு வடமாநில தேவ ஊழியத்திற்கு முன்பும் நீண்ட உபவாசங்களை கட்டாயம் தேவ பெலத்தால் மேற் கொள்ளுவேன். இரவில் மட்டும் ஒரு ஆகாரம், பகலில் தண்ணீரைக்கூட விலக்கினேன். இந்த உபவாச ஜெபங்களின் மூலமாக ஊழியத்திற்குத் தேவையான அனைத்து பொருளாதாரங்களும் பரத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. மக்களுடைய உள்ளங்களில் தேவன் அதிசய அற்புதமாக பேசி தேவைகளைச் சந்திக்கச் செய்தார்.
இந்த உபவாச ஜெபங்கள் எனது பொருளாதார தேவைகளை மட்டும் சந்திக்கவில்லை. நான் மேற்கொண்ட தேவ ஊழியங்களை தேவன் ஆசீர்வதிக்கும்படியாகச் செய்தது. அத்துடன், நான் மேற்கொண்ட நீண்ட தேவ ஊழியங்களில் என்னைச் சந்திக்கவிருந்த நிச்சயமான மரணத்திலிருந்து என்னை அவைகள் பாதுகாத்துக் கொண்டது. வைராக்கியமான தீபெத்திய புத்த மக்கள் வாழ்கின்ற பூட்டான் தேசத்தின் பாரு என்ற கிராமத்தில் என்னை நிச்சயமாக சந்திக்கவிருந்த மரணத்திலிருந்து நான் கடைசி நேரம் காக்கப்பட்டேன். நாய்கள் படுத்திருந்த ஒரு திறந்த வெளி தகர ஷெட்டில் நான் அந்த இடத்திற்குச் சென்ற முதல் நாள் இரவில் படுக்க முடிவெடுத்து எனது பொருட்களின் ஒரு பகுதியை வைத்துவிட்டு அடுத்த பகுதியை எடுக்க வரும் இறுதி நேரத்தில் நான் பொருட்களை வைத்திருந்த வீட்டின் ஸ்திரீ என்மேல் இரக்கமுற்று என்னை தன் வீட்டின் உள்ளே உள்ள நடைகூடத்தில் படுக்க அனுமதித்தாள். அன்று இரவு அவள் இடம் தர மறுத்திருந்தால் நான் அன்றைக்கே குளிரில் விரைத்து செத்து மடிந்திருப்பேன். அந்த ஸ்திரீயின் கணவர் எனக்காக அவளிடம் எவ்வளவோ பரிந்து மன்றாடியிருந்தார். அடுத்த நாள் காலையில் பார்த்தால் பூமி முழுவதும் பனி பெய்து வெண்பனி பூமியை மூடி மறைத்திருப்பதை நான் கண்டேன். வீட்டின் நடைகூடத்தில் படுத்திருந்தபோதினும் ஒரு கண்ணுக்கும் தூங்க முடியாமல் குளிர் என்னை வாட்டி வதைத்துவிட்டது.
ஸன்ஸ்கார் பனிப்பள்ளத்தாக்கில் நான் தேவ ஊழியம் செய்த காரணத்திற்காக என்னை கல்லெறியும்படி பொல்லாத மத வெறியர்களான தீபெத்திய புத்தமத லாமாக்கள் பாதம் (Padum) என்ற இடத்திலுள்ள புத்தமதத்தினரை ஏவிவிட்டபடியால், பள்ளத்தாக்கில் ஓடுகின்ற நதியில் நான் ஒரு நாள் குளித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் மேலே இருந்து சரமாறியாக கற்களை என் மீது வீசி எறிந்தார்கள். கற்கள் என்னைச் சுற்றிலும் தண்ணீரில் விழுந்து கொண்டிருப்பதை நான் கவனித்தேன். ஒரு கல் என் தலையில் பட்டாலும் நான் அந்த இடத்தில் துடிதுடித்து சாக வேண்டியதுதான். ஆனால், நான் தேவ கரத்தில் இருந்தபடியால் அதிசயமாக அன்று பாது காக்கப்பட்டேன். புத்தமத லாமாக்கள்தான் இந்தக் காரியத்தைச் செய்தார்கள் என்பதை பின்னர் நான் திட்டமாகக் கண்டு கொண்டேன். இந்தவித தேவ பாதுகாப்புகள் எல்லாம் தேவ ஊழியங்களுக்கு புறப்படுமுன்னர் நான் மேற்கொண்ட உபவாச ஜெபத்தின் பலனாக எனக்கு வந்து கிடைக்க கர்த்தர் கிருபை செய்தார்.
நேப்பாள ஊழியங்களில் அநேகமாக நாள் முழுமையும் மலைகளில் உள்ள நேப்பாள கிராமங்களிலேயே தேவ ஊழியம் செய்துவிட்டு அங்குள்ள சிறிய வீடுகளில் நான் இராத்தங்கினபடியால் சாத்தான் என்னை அதம்பண்ணி அழிக்க பெண்களை ஏவிவிட்டான். அந்த நாட்களில் அவன் எனக்கு முன்பாக ஆடிய ஆட்டம் கொஞ்சம் அல்ல. வறுமையில் வாடும் அந்த ஏழை நேப்பாள பெண் மக்கள் சில ரூபாய்களுக்குக்கூட தங்களை தத்தம் செய்யவும், நம்மை இணங்கப்பண்ணவும் வெகுவாக முயற்சிப்பதை நான் பல இடங்களிலும் கண்டிருக்கின்றேன். தேவ ஊழியங்களுக்கு புறப்படு முன்னர் நான் எடுத்த உபவாச ஜெபங்கள் காரணமாக தேவன் அந்த சமயங்களில் எல்லாம் அக்கினிமயமாக என்னைச் சுற்றியிருந்து என்னைக் கண்ணின் மணிபோலக் காத்துக் கொண்டார். ஏதோ ஓரிடத்தில் தவறு ஏற்பட்டிருந்தாலும் ஏழைப் பரதேசியின் சுயசரிதை உங்களுக்கு நிச்சயமாக கிடைத்திருக்காது. அத்துடன் நானும் நரக அக்கினிக்கு எப்பொழுதோ போய்ச் சேர்ந்திருப்பேன்.
தேவ ஜனமே, உபவாச ஜெபத்தை தேவ பெலத்தோடு உங்கள் கரங்களில் எடுங்கள். உபவாச ஜெபத்தை மேற்கொள்ள நீங்கள் முயற்சிக்கையில் சாத்தான் பலவித தந்திரங்களை, ஆம், மயக்கம், சோர்பு, ஆயாசத்தை உங்களுக்கு கொண்டு வருவான். பகல் வேளையில் எதையாவது குடித்துக்கொண்டு உபவாசத்தை தொடர உங்களை நயம் பண்ணுவான். சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள். பகலில் தண்ணீர் கூட குடியாதேயுங்கள். பெரிய தேவ ஆசீர்வாதம் காண்பீர்கள். பாவியாகிய என்னை அநேகருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்திய தேவன் உங்களையும் நிச்சயமாக பயன்படுத்துவார். உங்கள் குடும்பங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் தனிப்பட்ட வாழ்வைப் பரிசுத்தப்படுத்துவார். அதைப் பிரகாசிக்கச் செய்வார். உங்களால் மேற்கொள்ள முடியாத இரகசிய பாவங்களை இலகுவாக வெற்றியோடு நீங்கள் கடந்து செல்ல அவர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் வாழ்வில் பெரிய அதிசயங்களைக் காண தயை புரிவார். உபவாசமே உன் மாட்சியை என்னவென்று சொல்லுவேன்! அல்லேலூயா.