உத்தராஞ்சல் மாநிலத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களின் கடந்த கால நினைவுகள் (5)
(கர்த்தருடைய கிருபையால் உத்தராஞ்சல் அல்லது உத்தராகாண்ட் என்று அழைக்கப்படும் மாநிலத்தில் நாங்கள் 9 பேர் கொண்ட தேவ ஊழியர் குழுவாக அநேகமாக ஒவ்வொரு வருடமும் அந்த மாநிலத்தின் அநேக இடங்களில் உள்ள கிராமங்கள், பட்டிணங்களிலெல்லாம் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை மேற்கொண்டோம். ஆரம்ப நாட்களில் கிறிஸ்தவ பாடல் பல்லவிகளை குழுவாகப் பாடிப் பின்னர் நாங்கள் வாங்கியிருந்த ஒலி பெருக்கி கருவி மூலமாக தேவனுடைய இரட்சிப்பின் நற் செய்தியைக் கூறினோம். மாநிலத்திலுள்ள அநேக பள்ளிகளில் கல்வி பயிலும் ஏராளமான மாணவர்கள், மாணவியர்களுக்கும், அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கும் தேவனுடைய வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. அவைகளைப் பற்றிய முழு விபரங்களையும் நமது “தேவ எக்காளம்” பத்திரிக்கையில் நான் கடந்த நாட்களில் ஒழுங்காகப் பகிர்ந்து கொண்டேன். அதை உங்களில் அநேகர் வாசித்திருக்கின்றீர்கள். எனது சுய சரிதையை எழுதும் இந்த நேரத்தில் அதின் ஒரு சில பகுதிகளை எழுதினால் தேவ எக்காளம் பத்திரிக்கையை படிக்க வாய்ப்பில்லாமல் போன கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்ற நோக்கத்தோடு எழுத கர்த்தருக்குள் தீர்மானித்தேன்)
“ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 9 : 10)
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. ஆமென். கடந்து சென்ற ஆண்டுகளைப்போல 2012 ஆம் ஆண்டிலும் நாங்கள் 9 பேர்கள் கொண்ட ஒரு குழுவாக 2 வாகனங்களை ஒரு முழுமையான மாதத்திற்கு வாடகைக்கு அமர்த்தி உத்திராஞ்சல் மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேவனுடைய பரிசுத்த ஊழியத்தை கர்த்தருக்கு மகிமையாக செய்து முடித்தோம். தேவனுடைய பிரசுரங்கள் கடந்த எல்லா ஆண்டுகளையும் விட மிக மிக அதிகமாக இருந்தபடியால் இந்த தடவை நாங்கள் 10 பேர்கள் கொண்ட குழுவாக தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு 10 ஆவது தேவ ஊழியரும் தூர இடத்திலிருந்து அன்றைய நாள் முழுவதும் பிரயாணம் செய்து மாலை வேளையில் எங்களண்டை வந்து சேர்ந்து விட்டார்கள். அடுத்த நாள் காலையில் அவர்களும் ஊழியத்தில் கலந்து கொள்ள வேண்டிய இறுதி நேரத்தில் அவர்கள் வந்து சேர்ந்த அன்று இரவில் அவர்கள் மனைவியிடமிருந்து உடனடியாக புறப்பட்டு வரும்படியாக தொலை பேசி அழைப்பு வரவே அடுத்து வந்த நாளின் அதிகாலையில் முதல் பேருந்தைப் பிடித்து அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். அதற்கப்பால் அவர்களால் ஒரு நாள் கூட எங்கள் தேவ ஊழியத்தில் கலந்து கொள்ள முடியவே இல்லை. ஆண்டவருடைய வழிகள் நமக்குத்தெரியவில்லை.
கடந்து சென்ற எல்லா ஆண்டுகளைக் காட்டிலும் நம் அன்பின் ஆண்டவர் தமது ஊழியத்தை இந்த தடவை ஒரு மாட்சிமையான திருப்பு முனையில் பரதேசிகளாகிய எங்களைக் கொண்டு நிறைவேற்றினார். இந்த தடவை நடைபெற்ற தேவ ஊழியங்களில் தேவன் எங்களை மிகுதியும் பள்ளி மாணவ மாணவியர்களின் மத்தியிலேயே ஆச்சரியமாகப் பயன்படுத்தினார். அரசாங்க விடுமுறை நாட்களில் பள்ளிகள் மூடப்பட்டுக் கிடந்த நாட்களில் நாங்கள் கிராமங்களிலும், பட்டணத்து வீதிகளிலும் தேவனுடைய பிரசுரங்களை மக்களுடைய கரங்களில் கொடுத்தோம். மற்றப்படி பெரும்பாலும் நாங்கள் மேல் நிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், ஆரம்ப பள்ளிகள், ஆங்கிலப் பள்ளிகள் (பப்ளிக் ஸ்கூல்) நர்சரி பள்ளிகளையே குறிக்கோளாக வைத்து ஆண்டவருடைய ஊழியங்களைச் செய்தோம். கர்த்தாவின் அளவிடற்கரிய அன்பின் கிருபையால் நாங்கள் எங்கள் ஒரு மாத கால தேவ ஊழியத்தில் 24 மேல் நிலைப் பள்ளிகள், 7 உயர் நிலைப்பள்ளிகள், 14 நடு நிலைப்பள்ளிகள், 41 ஆரம்பள்ளிகள், 5ஆங்கில பள்ளிகள் 6 நர்சரி பள்ளிகளைச் சந்தித்துக் கர்த்தருடைய வார்த்தைகளை ஜெபத்துடன் கொடுத்திருந்தோம்.
கடந்த கால நாட்களில் எல்லா பள்ளிகளுக்குள்ளும் தைரியமாக நுழைந்து சென்று தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்க நாங்கள் மிகவும் தயங்கின நாங்கள் இந்த ஆண்டு கர்த்தருடைய பெலத்தால் நேரடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரின் அறைக்கே சென்று அவர் அனுமதி பெற்று பள்ளியின் பிள்ளைகள் அனைவருக்கும், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியப் பெரு மக்களுக்கும் ஜெபத்தோடு ஆண்டவருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். பல பள்ளிகளில் காலையில் நடக்கும் மாணவர்களுக்கான அசெம்பிளியில் ஆண்டவர் இயேசு இரட்சகரைக்குறித்து சில வார்த்தைகள் கூறி அதின் பின்னர் பிள்ளைகளுக்கு தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்கும்படியாக பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அத்துடன் ஆசிரியர்களே தங்கள் மாணவர்களை அவர்கள் கரங்களிலுள்ள தேவனுடைய வார்த்தைகளை கவனமாகப்படித்து பயன் அடையும்படியாகவும், எந்த ஒரு நிலையிலும் அவைகளை வீணாக்காதிருக்கவும், தாங்கள் படித்த பின்னர் அவைகளை மற்றவர்கள் படிக்கும்படியாக கொடுக்கவும் அசெம்பிளியிலேயே வேண்டுகோள் விடுத்தார்கள். இந்தக் காரியம் எங்கள் அற்பமான அறிவுக்கு எட்டாத உயரமாக இருக்கின்றது.
ஒவ்வொரு பள்ளியிலுள்ள தலைமை ஆசிரியரையும், அவருடைய சக ஆசிரியர்களையும் சந்திக்கச் செல்லுகையில் நமது தேவ ஊழியர்கள் தங்கள் கரங்களில் ஹிந்தி மொழி வேதாகமங்கள், ஹிந்தி புதிய ஏற்பாடுகள், தரமான ஹிந்தி கைப்பிரதிகள், பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய படங்களுடன் கூடிய புத்தகங்கள் போன்றவை பலவற்றையும் ஏந்திச் சென்று அவைகளை அவரிடம் காண்பித்து அவரது முன் அனுமதியைப் பெற்றுக் கொண்டார்கள். கர்த்தருடைய கிருபையால் எந்த ஒரு பள்ளியிலும் நாங்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்கக் கூடாது என்று எங்களுக்கு அனுமதி மறுக்கப்படவே இல்லை. எல்லா துதிக்கும் பாத்திரர் நம் தேவன் ஒருவரே.
தேவனுடைய ஊழியத்திற்காக அச்சிடப்பட்ட, விலை கொடுத்து வாங்கப்பட்ட சுவிசேஷப் பிரசுரங்களின் விபரம்
கடந்து சென்ற அனைத்து ஆண்டுகளைக்காட்டிலும் கர்த்தருடைய பேரன்பால் நாம் நமது இமயமலை தேவ ஊழியங்களுக்கு இந்த தடவை அதிகமான எண்ணிக்கையில் தேவனுடைய பிரசுரங்களை அச்சிட்டும், விலை கொடுத்து வாங்கவும் செய்தோம்.
உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள இந்திய வேதாகம சங்கம், அலகபாத்திலிருந்து 1000 (ஆயிரம்) ஹிந்தி மொழி வேதாகமங்களை நாம் விலைக்கு வாங்கினோம். ஒரு வேதாகமத்திற்கு ரூபாய் 150 கட்டாயம் வாங்குகின்ற இந்திய வேதாகம சங்கத்தினர் ஆண்டுதோறும் நாம் அவர்களிடம் வாங்கும் ஏராளமான தேவனுடைய பிரசுரங்களை மனதில் கொண்டு ஒரு வேதாகமத்திற்கு ரூபாய் 120 மட்டுமே நம்மிடம் வாங்கினார்கள். ஒவ்வொரு தடவையும் 15000 இந்தி மொழி லூக்கா சுவிசேஷங்களை நாம் அவர்களிடமிருந்து வாங்குவோம். இந்த தடவை நாம் 20000 இந்தி மொழி லூக்கா சுவிசேஷங்களை நமது தேவ ஊழியர் பாஸ்டர் என்.சாமுவேல் அவர்களின் முகவரியையும் வழக்கம்போல அதில் நாம் அச்சிட்டு வாங்கினோம். பெங்களூரில் அவைகளை அச்சிட்டு நமக்கு அனுப்பியிருந்தார்கள். ஒரு லூக்கா சுவிசேஷத்திற்கு ரூபாய் 6 (ஆறு) கட்டாயம் வாங்கும் அவர்கள் நமக்காக ஒரு பிரதிக்கு 5 மாத்திரம் பெற்றுக்கொண்டார்கள். லாரி வாடகைக்கும் இதர செலவுகளுக்குமாக ரூபாய் 15000 நம்மிடம் பெற்றுக்கொண்டு ஒரு தனி லாரியில் நமது பிரசுரங்களை தொலை தூரமான உத்தர் பிரதேசத்திலுள்ள அலகாபாத் பட்டணத்திலிருந்து நமது பாஸ்டர் சகோதரன் சாமுவேல் அவர்களுக்கு உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள அவர்கள் வீடு வரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.
மும்பையிலுள்ள சுவிசேஷ கைப்பிரதி கழகத்தில் (Gospel Literature Service) பண்டிட் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்கள் எழுதிய “மோட்ச வாசல்” என்ற இந்தி மொழி கைப்பிரதி 20000 மும் மேற்கண்ட கைப்பிரதி கழகத்தினர் வெளியிட்டுள்ள “தேவனின் சமாதானம்” என்ற கைப்பிரதி 20000 மும் நாம் நமது ஊழியத்திற்காக அச்சிட்டுப் பெற்றுக்கொண்டோம். அதற்காக அவர்கள் நம்மிடம் சுமார் ரூபாய் 35000 பெற்றுக்கொண்டு அதை லாரியில் அனுப்பும் செலவை எல்லாம் அவர்களே ஏற்றுக்கொண்டு உத்தராஞ்சல் மாநிலத்திற்கே பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.
பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் மூலமாக அவர்களுடைய பித்தோர்கார்ட் பட்டணத்திலுள்ள ஒரு அச்சுக்கூடத்தினருக்கு ஏற்பாடு செய்து பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்கள் எழுதிய “தீர்த்த யாத்திரை” என்ற இந்தி மொழி கைப்பிரதி 25000 மும் “ஆண்டவரே, நித்திய ஜீவனை எனக்குத் தாரும்” என்ற இந்தி மொழி கைப்பிரதி 25000 மும் நாம் அச்சிட்டுப் பெற்றுக்கொண்டோம். மேற்கண்ட 2 கைப்பிரதிகளையும் அந்த அச்சுக்கூடத்தினர் உத்தர் பிரதேசத்திலுள்ள லக்னோ பட்டணத்திலுள்ள ஒரு அச்சுக்கூடத்தினருக்கு ஆர்டர் கொடுத்து அழகாக நமக்கு அச்சிட்டுக் கொடுத்தார்கள். “உங்களுடைய ஆர்டருடன் உத்தராஞ்சல் மாநில அரசாங்கம் எனக்குக் கொடுத்த ஆர்டரும் எனக்கு உள்ளது. அரசாங்க ஆர்டரில் எனக்கு நல்ல லாபம் கிடைத்துக்கொண்டது. உங்களுடைய 2 கைப்பிரதிகளும் வெகு சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அவைகளைப் படிக்கின்றவர்கள் எவராயினும் கட்டாயம் பயன் அடைவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த நல்ல பணிக்கு எனது காணிக்கையாக ரூபாய் 5000 தருகின்றேன் என்று கூறி நம்மிடமிருந்து ரூபாய் 50000 பெறவேண்டிய அச்சுக்கூடத்தினர் ரூபாய் 45000 மட்டுமே பெற்றுக்கொண்டனர். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.
டில்லியிலுள்ள “மசிஹி சாஹித்ய சன்ஸ்தா” (Masihi Sahitya Sanstha) என்ற கிறிஸ்தவ இலக்கிய ஸ்தாபனத்தினரிடமிருந்து படங்களுடன் கூடிய சாதுசுந்தர்சிங் அவர்களின் வாழ்க்கை சரிதைப் புத்தகங்கள் 1000 மும் “மெய்ச் சமாதானத்தைத் தேடிக்கொண்டு” (The search for true peace) என்ற அருமையான புத்தகம் 800 ம் விலை கொடுத்து வாங்கினோம். இவைகள் இரண்டும் ஹிந்தி மொழியில் உள்ளவைகள். அதிகமான விலைக் கிரயமுடைய இந்த புத்தகங்களுக்கு நமது அருமையான தேவ ஊழியங்களை தங்கள் மனதில் கொண்டு ரூபாய் 36000 மட்டும் நம்மிடம் வாங்கினார்கள். அவர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.
உத்திரபிரதேச மாநிலம் மொரதாபாத் பட்டணத்திலுள்ள சகோதரன் நீலாம்பர் டாட் அவர்கள் 600 கிதியோனியர் ஹிந்தி மொழி புதிய ஏற்பாடுகளை நமக்கு இந்த தடவை ஊழியத்திற்கு இலவசமாகக் கொடுத்தார்கள். சுமார் 4400 கிதியோனியரின் ஹிந்தி மொழி புதிய ஏற்பாடுகள் பாஸ்டர் சாமுவேல் சகோதரன் வசிக்கும் பித்தோர்கார்ட் பட்டணத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ வழக்கறிஞர் மூலமாக நமக்கு முற்றும் இலவசமாகக் கிடைத்தது. மேற்கண்ட இரண்டு அன்பான மக்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக.
நாம் அச்சிட்டுப் பெற்றுக் கொண்ட லூக்கா சுவிசேஷங்கள், கைப்பிரதிகள், மற்றும் விலைகொடுத்து வாங்கிய புத்தகங்களின் படங்களை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். அத்துடன் இந்தத் தடவை தேவ ஊழியத்திற்காக நாம் பெற்றுக்கொண்ட அனைத்து தேவனுடைய பிரசுரங்களும் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் வீட்டில் பித்தோர்ட்கார்ட் பட்டணத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் செய்தியில் காணலாம்.
2012 ஆம் ஆண்டு நமது வாகன சுவிசேஷ தேவ ஊழியத்தில் பங்கெடுத்த தேவப்பிள்ளைகள்
2012 ஆம் ஆண்டு நமது வாகன சுவிசேஷ தேவ ஊழியத்தில் பங்கெடுத்த கர்த்தருடைய பிள்ளைகள் சகோதரன் D.T.நார்ட்டன் (நாசரேத்) பாஸ்டர் என்.சாமுவேல் (பித்தோர்கார்ட்) சகோதரன் என்.சாமுவேல் (கோத்தகிரி) சகோதரன் பாக்கேலால் (ருத்ரபூர்) சகோதரன் சுனில் (சண்டாக்) பாஸ்டர் ஓபேத் (கதர்பூர்) சகோதரன் விக்ரம்சிங் (கதர்பூர்) வாகன ஓட்டுநர்கள் மனோஜ் (பித்தோர்கார்ட்) நரேஷ் (பித்தோர்கார்ட்) ஆவார்கள். அந்தப்படத்தை நீங்கள் செய்தியில் காணலாம்.
வழக்கம்போல இந்த தடவையும் நமது வாகன ஓட்டுநர்கள் சகோதரன் மனோஜ் அவர்களும் சகோதரன் நரேஷ் அவர்களுமாவார்கள். எதிர்பாராதவிதமாக மனோஜ் அவர்கள் கடுமையான மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டு டில்லியில் மருத்துவ சிகிட்சை பெற்று கர்த்தருடைய பேரன்பால் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். 2 சிறிய பெண் பிள்ளைகளுக்கு தந்தையான அவர்கள் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த வேளையில் அவருடைய பெற்றோர் தங்கள் குலதெய்வங்களான கடவுளர்களைப் பற்றிக்கொள்ளும்படியாக எவ்வளவோ முயற்சித்தும் மனோஜ் அதை முற்றும் நிராகரித்து அந்த தெய்வங்களை கண்ணேறிட்டும் பார்க்காமல் தனது முழு நம்பிக்கையையும் ஆண்டவர் இயேசு ஒருவர் மேலேயே வைத்து கர்த்தர் தனக்கு நல்ல பூரண சுகம் தருவார், அவர் தன்னை ஒருபோதும் கைவிடவேமாட்டார் என்று கூறி தனது விசுவாசத்தில் உறுதியாக இருந்து பரத்திலிருந்து விடுதலையை ஆச்சரியமாகப் பெற்றுக் கொண்டார்கள். அல்லேலூயா. மனோஜ் தன்னுடைய ஆச்சரியமான சுகத்தைக் குறித்து ஒரு நாள் தனது கண்களிலிருந்து கண்ணீர் வடிய வடிய எங்கள் ஜெபக்கூடுகையில் அழுதுகொண்டே சாட்சி பகர்ந்தார்கள். கர்த்தர் ஒருவருக்கே மகிமை. மஞ்சள் காமாலை நோயால் தாக்குண்ட நிலையில் மிகவும் பெலவீனமாக காட்சி தரும் மனோஜ் சகோதரனை படத்தில் காணலாம்.
ஆரம்பத்தில் ஒரு வாரம் டில்லிக்கு சிகிட்சைக்காக சென்றபடியால் அவர்களால் எங்களுடன் ஊழியத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலாக மற்றொரு ஓட்டுநர் கலந்து கொண்டார். அதற்கப்பால் மீதமுள்ள நாட்கள் அனைத்திலும் மனோஜ் தனது வாகனத்தை எந்த ஒரு பெலவீனமும் இல்லாமல் ஓட்டி கர்த்தருடைய ஊழியத்தை மகிழ்ச்சியோடு செய்தார்கள். வாகன ஓட்டுநர்கள் மனோஜ் மற்றும் நரேஷ் இருவரின் படங்களை அவர்களுடைய வாகனங்களுடன் காணலாம்.
ஆச்சரியவிதமாக இந்த தடவை நமது 2 வாகனங்களின் ஒரு மாத கால வாடகையை ஒரு கர்த்தருடைய பரிசுத்த பிள்ளை ஆண்டவருடைய திட்டமான ஏவுதலால் சந்தித்தார்கள். ஆ, ஆண்டவருடைய வழிகளையும், அவருடைய அதிசய நடத்துதல்களையும் யாரே அளவிட முடியும்? யார் யார் ஆண்டவருடைய ஊழியங்களை பண ஆசையின்றி, மனுஷருடைய புகழ் ஆரவாரங்களை எதிர் நோக்காமல், சிலுவை நேசரை மட்டும் உலகுக்கு உயர்த்திக் காண்பிப்பார்களோ அந்த மக்களை தேவன் இன்றும் தமது நாமத்திற்கு மகிமையாக எடுத்துப் பயன்படுத்த வல்ல கர்த்தராக இருக்கின்றார்.
எங்களை ஏற்றி வந்த டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் காதகோடம் ரயில் நிலையத்திற்குள் காலை 7 :30 மணிக்கு வந்து சேரவும் நம்முடைய சகோதரர்கள் எல்லாரும் எங்கள் வரவை எதிர்நோக்கி எங்களைச் சந்திப்பதற்காக ரயில்வே பிளாட்பாரத்தில் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் இரயிலிலிருந்து இறங்கவும் அவர்கள் அனைவரின் சந்தோசம் பொங்கிப் பூரிப்பதாக இருந்தது. கர்த்தருக்கே மகிமை. எனினும், நமது டிரைவர் சகோதரன் மனோஜ் அவர்கள் மஞ்சள் காமாலை வியாதியால் தாக்குண்டு எலும்பும், தோலுமாக இருப்பதை நாங்கள் கண்டபோது எங்கள் கண்கள் குளமாயின. நாங்கள் எல்லாரும் ஓய்வு விடுதிக்குச் சென்று குளித்து எங்களை ஆயத்தம் செய்து கொண்ட பின்னர் எங்களைச் சந்திக்க ஹல்த்வானி பட்டணத்திலிருந்து வந்திருந்த பாஸ்டர் சகோதரன் ஜேம்ஸ் அவர்கள் வரவிருக்கும் நீண்ட தேவ ஊழியங்களுக்காக ஜெபித்து எங்களை வழி அனுப்பி வைத்தார்கள்.
எங்கள் வாகனத்திற்கு டீசல் நிரப்பியதும் நாங்கள் அனைவரும் 220 கி.மீ. தொலைவிலுள்ள பித்தோர்கார்ட் பட்டணம் நோக்கி ஜெபத்துடன் பயணப்பட்டோம். கர்த்தருடைய கிருபையால் சுமார் 8 மணி நேர பயணத்திற்குப் பின்னர் மாலை 5 மணி அளவில் நாங்கள் பித்தோர்கார்ட் பட்டணம் வந்து சேர்ந்து வழக்கமாக நாங்கள் தங்கும் அங்குள்ள உல்க்கா என்ற விடுதியில் தங்கினோம். நாங்கள் தங்குவதற்கு வசதியாக சில மாதங்களுக்கு முன்பாகவே அது முன் பதிவு செய்யப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
இந்த தடவை நாங்கள் பெரும் எண்ணிக்கையான தேவனுடைய பிரசுரங்களை சரியாக ஒரு மாத காலத்திற்குள்ளாக மக்களுடைய கரங்களில் கொடுத்து முடித்துவிட வேண்டியது அவசியமாக விருந்ததால் அவைகளை மக்களுக்குக் கொடுக்கும் விதத்தில் குழுவாக உட்கார்ந்து வகைப்படுத்தும் பணியில் சில நாட்களை செலவிடும் காரியத்தை தவிர்ப்பதற்காக பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் குடும்பத்தினர் சில நாட்களாக இராப்பகலாக உட்கார்ந்து 20000 ஹிந்தி மொழி லூக்கா சுவிசேஷத்துக்குள் பண்டிட் தர்ம்பிரகாஷ் சர்மா அவர்கள் எழுதிய 3 விதமான கைப்பிரதிகளையும், மும்பையிலிருந்து நாம் அச்சிட்டுப்பெற்ற பிரதிகளையும் வைத்து அவைகளைப் பெட்டிகளில் நேர்த்தியாக வைத்துக் கட்டி வைத்துவிட்டார்கள். அவர்களின் அந்த அன்பின் செயலால் நாங்கள் எங்கள் தேவ ஊழியங்களை உடனே ஆரம்பிக்க அனுகூலமாக இருந்தது. அவர்களுக்கு நாங்கள் கர்த்தரில் பெரிதும் நன்றி கடன்பட்டுள்ளோம்.
நாங்கள் பித்தோர்கார்ட பட்ணம் வந்து சேர்ந்து ஒரு நாள் இளைப்பாறுதலுக்குப் பின்னர் உடனடியாக 83 கி.மீ. தொலைவிலிருந்த டார்ச்சுலா என்ற பட்டணம் நோக்கிப் பயணப்பட்டோம். இந்த டார்ச்சுலா பட்டணம் சீனா மற்றும் நேப்பாள நாடுகளின் எல்லைகளில் உள்ளது. நாங்கள் எங்கள் இரு வாகனங்களிலும் சாமுவேல் சகோதரன் வீட்டிலுள்ள கைப்பிரதி பெட்டிகளில் வேண்டியவற்றை டார்ச்சுலா பகுதிகளில் ஊழியத்திற்காக ஏற்றிக்கொண்டாம். பெட்டிகள் எங்கள் வாகனங்களில் ஏற்றப்படுவதை நீங்கள் காண்பதுடன் நாங்கள் அனைவரும் டார்ச்சுலா புறப்படு முன்னர் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் வீட்டின் முன்னர் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சியையும் நீங்கள் காணலாம்.
நாங்கள் டார்ச்சுலா சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருந்து அந்தப் பட்டணத்திலும் அதைச் சுற்றிலுமிருந்த இடங்களில் இருந்த சில மேல் நிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகளிலெல்லாம் அன்பின் ஆண்டவருடைய சுவிசேஷப் பிரதிகள், லூக்கா சுவிசேஷங்கள். புதிய ஏற்பாடுகள், இதர கிறிஸ்தவ புத்தகங்கள் மற்றும் வேதாகமங்களை ஜெபத்தோடு விநியோகித்தோம். அதைக் குறித்த தெளிவான விபரங்களை பள்ளிகளின் படங்களோடு நமது தேவ எக்காளம் ஜனுவரி/மே 2013 இதழில் நான் எழுதினதை தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் வாசித்திருப்பீர்கள்.
தயாசாகர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேவ ஊழியம்
பித்தோர்கார்ட் பட்டணத்தில் “தயாசாகர்” என்ற ஒரு பெரிய ஆங்கில மேல் நிலைப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் அந்தப் பட்டணத்தைச் சுற்றிலும் உள்ள அநேக இமயமலை கிராமங்களிலிருந்து பல நூற்றுக்கணக்கான ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் வந்து கல்வி பயிலுகின்றனர். சற்று வசதியான குடும்பத்திலுள்ள பிள்ளைகள் இங்கு வந்து ஆங்கில வழி கல்வி பயிலுகின்றனர். பெரும்பாலும் அந்தப் பிள்ளைகள் யாவரும் இந்துக்களேயாவார்கள். இந்த மேல் நிலைப்பள்ளியின் நிர்வாகி திரு.லூயிஸ் என்பவர் ஒரு கிறிஸ்தவராவார். பணம் ஒன்றை மட்டும் வாழ்வின் குறிக்கோளாக வைத்து அவர் தனது கல்வி நிறுவனத்தை நடத்துகின்றார். பள்ளியின் பிரதான நுழை வாயிலில் எம்மதமும் ஒன்றே என்பதைக் காண்பிக்கும் வகையில் சிலுவை சின்னம் அடுத்து முகமதியர்களின் பிறைச்சின்னம் அடுத்து “ஓம்” என்ற இந்து மார்க்கச் சின்னம் ஆக மூன்றும் ஒரே இரும்பு போர்டில் பொறிக்கப் பட்டுள்ளதை நாம் ஆச்சரியத்துடன் காணலாம்.
அந்தப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு எப்படியாவது தேவனுடைய சுவிசேஷப் பிரதிகளைக் கொடுத்து ஊழியம் செய்துவிட வேண்டும் என்ற ஆவலில். நமது பாஸ்டர் சகோதரன் என்சாமுவேல் அவர்கள் அந்த லூயிஸ் என்ற மனிதரைப் போய்ச் சந்தித்தார்கள். நமது சகோதரனைப் பற்றி அவருக்கு நல்லதொரு அன்பு உண்டு. அத்துடன் சகோதரனின் மகன் சாலோமும் அந்தப் பள்ளியில் படித்தவன்தான். நாங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கவிருக்கும் அனைத்துக் கிறிஸ்தவ பிரசுரங்களையும் ஆசிரியர்களுக்குக் இலவசமாகக் கொடுக்கக்கூடிய இந்தி மொழி வேதாகமத்தையும் எடுத்துச் சென்று அவைகளை அவரிடம் காண்பித்தார்கள். அவைகள் அனைத்தையும் அவர் கவனமாகப்படித்துப் பார்த்தார் அந்த மனிதரின் உள்ளத்தில் கர்த்தர் பேசினபடியால் அன்று ஒரு அற்புதம் நடந்தது. தனது பள்ளியிலுள்ள அனைத்து மாணவ மாணவியருக்கும் அவைகளைக் கொடுக்க சம்மதம் தெரிவித்ததுடன் ஆண்டவர் இயேசுவைக் குறித்தும் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் ஒரு செய்தி கொடுக்கவும் அவர் நமது சகோதரனை அன்பாகக் கேட்டுக்கொண்டார்கள். என்னே ஆண்டவரின் அன்பு! என்னே அவரின் வழிநடத்துதல்!
அந்த மனிதர் சொன்ன நாளில் அவரது மேல் நிலைப்பள்ளிக்கு நாங்கள் தேவனுடைய பிரசுரங்களை திரளாக எடுத்துக்கொண்டு ஜெபத்துடன் பறப்பட்டுச் சென்றோம். நாங்கள் கொண்டு சென்ற வேதாகமங்கள் தனியாக ஒரு மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டது. ஒரு நாள் காலை வேளையில் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் 550 மாணவ மாணவியர்கள், 28 ஆசிரிய பெருமக்கள் மத்தியில் அன்பின் ஆண்டவர் இயேசு இரட்சகரைக் குறித்து அசெம்பிளி மேடையில் நின்று பேசினார்கள். சகோதனுடைய வார்த்தைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் கேட்டுக்கொண்டிருக்கும் மாணவ உள்ளங்களில் ஆண்டவர் பேசவும் நாங்கள் ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தோம்.
10, 11, 12 ஆம் வகுப்பு பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஹிந்தி மொழி புதிய ஏற்பாடுகள் கொடுக்கப்பட்டன. அந்த பள்ளியில் மொத்தம் 400 புதிய ஏற்பாடுகள் வழங்கப்பட்டன. 28 ஆசிரிய பெருமக்களுக்கு 28 ஹிந்தி மொழி வேதாகமங்கள் முற்றும் இலவசமாக வழங்கப்பட்டன. கர்த்தருக்கே மகிமை. நமது சகோதரன் மேடையிலிருந்து தேவனுடைய செய்தியை கொடுப்பதையும், திரளான பள்ளிப் பிள்ளைகள் அதை ஆவலுடன் கேட்பதையும், வேதாகமங்கள் கொடுப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் நீங்கள் செய்தியில் காணலாம்.
பித்தோர்கார்ட் பட்டணத்திலுள்ள தயாசாகர் என்ற பெரிய மேல் நிலைப்பள்ளியில் நாங்கள் எங்கள் தேவ ஊழியங்களை செய்து முடித்த பின்னர் அந்தப் பட்டணத்திலுள்ள ஒரு பெரிய பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்குச் சென்றாம். மேலே கண்ட “தயாசாகர்” பள்ளியில் கல்வி பயிலும் வசதியான பிள்ளைகள் இங்கில்லை. பட்டணத்தை சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் வாழ்கின்ற ஏழைப் பெற்றாரின் எளிய குழந்தைகளே ஹிந்தி வழியில் இங்கு கல்லி பயிலுகின்றனர். பள்ளியை நடத்துகின்றவர்கள் பெயருக்கான வெறும் கிறிஸ்தவர்களே தவிர அவர்களின் வாழ்க்கையானது புறமதஸ்தர்களைப் போலவே உள்ளது. ஆனால், கல்வி பயிலும் மாணவிகள் 95 சதவீதத்திற்கு மேல் முழுமையான இந்துக்களே.
ஒரு நாள் காலை ஆகாரத்திற்குப் பின்னர் தேவ ஊழியர்களாகிய நாங்கள் மேற்கண்ட பள்ளிக்கு தேவ ஊழியத்திற்காகச் சென்றோம். அப்பொழுது அந்தப் பள்ளியை நிர்வாகித்துக் கொண்டிருந்த உதவி தலைமை ஆசிரியை தனது பள்ளியில் உள்ள பிள்ளைகளுக்கு தேவனுடைய பிரசுரங்களை நாங்கள் கொடுக்க அனுமதித்ததுடன் பள்ளி மைதானத்தில் பிள்ளைகளுக்கு ஆண்டவர் இயேசுவைப் பற்றிக் கூறவும் கேட்டுக் கொண்டார்கள். அதின்படி பிள்ளைகள் யாவரும் பள்ளி மைதானத்தில் கூடி வரவே நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் பிள்ளகளுக்கு தேவனுடைய வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் தேவனுடைய செய்தியைப் பகிர்ந்து கொள்ளுவதையும் மேல் நிலைப்பள்ளியின் மாணவிகள் ஆவலோடு அதைக் கவனிப்பதையும் நீங்கள் படங்களில் காணலாம்.
அந்தப் பள்ளியில் இருந்த 500 மாணவிகளுக்கு தேவனுடைய பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன. 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளில் கல்வி பயிலும் 400 மாணவிகளுக்கு 400 ஹிந்தி புதிய ஏற்பாடுகள் ஜெபத்துடன் வழங்கப்பட்டன.
“மூனாகோட்” என்ற இடத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
மேற்கண்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேவ ஊழியம் முடிந்ததும் நாங்கள் பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலுள்ள மூனாகோட் என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றோம். இந்த இடத்திலுள்ள ஓரிரு பள்ளிகளில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுக்கும் வாய்ப்பை தேவன் எங்களுக்குத் தந்தார். இங்குள்ள ஒரு பெரிய பெண்கள் மேல் நிலைப்பள்ளி மலை மேல் இருப்பதை நாங்கள் கவனித்தோம். நாங்கள் எங்கள் இரண்டு வாகனங்களுடன் நேரடியாக அந்தப் பள்ளிக்கே ஜெபத்துடன் சென்றோம்.
அந்தப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை டாக்டர் ஆஷா ஜோஷி எங்களை அன்புடன் வரவேற்று தனது மேல் நிலைப்பள்ளியில் கிறிஸ்தவ பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்ய எங்களை அன்புடன் அனுமதித்தார்கள். இந்திய ஜனாதிபதியின் நல்லாசிரியை விருது பெற்ற அவர்களை அவர்களது பள்ளி அலுவலகத்தில் நாங்கள் போய்ச் சந்தித்து ஹிந்தி வேதாகமம் மற்றும் இதர தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் அவர்களுக்குக் கொடுத்தோம். நாங்கள் கொடுத்த வேதாகமம் போன்றவைகள் அவர்களுக்கு முன்பாக இருப்பதை படத்தில் நீங்கள் காணலாம். மிகவும் அன்போடு அவர்கள் எங்களிடம் பேசினார்கள்.
தனது பள்ளி மாணவிகள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவைக் குறித்துப் பேசி அதின்பின்னர் கிறிஸ்தவ பிரசுரங்களைக் கொடுக்க எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் விருப்பப்படியே பிள்ளைகள் எல்லாரும் பள்ளி மைதானத்துக்குக் கூடி வந்தார்கள். பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் பிள்ளைகளுக்கு சுவிசேஷம் அறிவித்த பின்னர் கூடி வந்திருந்த 214 பிள்ளைகளுக்கும் 214 ஹிந்தி மொழி புதிய ஏற்பாடுகளையும் இதர தேவனுடைய பிரசுரங்களையும் சேர்த்து ஜெபத்துடன் கொடுத்தோம். வந்திருந்த 21 ஆசிரியைகளுக்கும் 21 ஹிந்தி மொழி வேதாகமங்களையும் இதர பிரதிகளையும் வழங்கினோம். சகோதரன் சாமுவேல் அவர்கள் பிள்ளைகளுக்கு தேவனுடைய வார்த்தைகளைக் கூறுவதையும், பிள்ளைகள் அதை ஆர்வமாகக் கேட்பதையும் நீங்கள் படங்களில் காண்பதுடன் இந்த ஊழியத்தை நாங்கள் நிறைவேற்ற முழுமையான இருதயம் நிறைந்த அன்புடன் அனுமதி வழங்கிய தலைமை ஆசிரியை டாக்டர் ஆஷா ஜோஷி அம்மையாரையும் நீங்கள் காணலாம்.
“முனிசியாரி” என்ற இடத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து முனிசியாரி என்ற இடம் 127 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் இரு வாகனங்களிலும் தேவனுடைய பிரசுரங்களை நிரப்பிக்கொண்டு ஜெபத்தோடு அங்கு புறப்பட்டோம். நாங்கள் அங்கு சென்ற பயங்கரமான மலை ரஸ்தாக்களை குறித்து வெறும் எழுத்துக்களால் எழுத இயலாது. அத்தனை சாநிழலின் பாதைகள் அவை. கொஞ்ச தூரத்திற்கு மலைப்பாதை நன்றாக இருக்கும், பின்னர் வலது அல்லது இடது கைப்பக்கங்களில் சில ஆயிரம் அடிகள் கெடு பாதாளமாகக் காணப்படும். வாகனத்தின் ஓரமாகக் கூட நாம் உட்கார இயலாத வகையில் கெடு பாதாளம் நமது தலையை சுழலச் செய்யும். செங்குத்து மலையை மத்தியில் வாகனத்தின் நான்கு டயர்கள் மட்டும் தொட்டுச் செல்லும் அளவிற்கு வெட்டி பாதையை அமைத்திருக்கின்றார்கள். அந்தப் பாதை வழியாகத்தான் நாங்களும், எங்கள் வாகனங்களும் தேவனுடைய கிருபையால் கடந்து வந்தோம் என்று சொன்னால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியம் கொள்ளுவீர்கள். இதைப் போன்ற அநேக பாதைகளின் வழியாகத்தான் நாங்கள் நாள் முழுவதும் பயணித்து மாலை நேரம் முனிசியாரி என்ற இடத்தை வந்தடைந்தோம். வரும் வழியில் முனிசியாரிக்கு முன்பாக 30 கி.மீ. தொலைவில் பீர்த்தி (BIRTHI) என்ற புகழ்பெற்ற ஒரு நீர் வீழ்ச்சி 400 அடிகள் உயரத்திலிருந்து விழுகின்றது. அதைக் காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக ஓரிரு தேநீர் கடைகள் அங்கிருக்கின்றன. ஒரு சிறிய கிராமமும் அங்குள்ளது. அந்த இடத்தில் நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தி தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்தோம். அங்குள்ள கிராமத்திற்கும் நமது தேவ ஊழியர்கள் சென்று ஊழியம் செய்து திரும்பினர். அந்த பீர்த்தி என்ற நீர் வீழ்ச்சியை நீங்கள் படத்தில் பார்ப்பீர்கள்.
முனிசியாரி என்ற 7200 அடி உயரமான அந்த அழகிய சிறிய மலைப்பட்டணத்துக்கு நாங்கள் மாலை நேரம் வந்து சேர்ந்தோம்.. அந்த இடத்திலிருந்து பார்த்தால் நித்திய பனி மலைகள் சிப்பாய்கள் அணி வகுத்து நிற்பது போல தூரத்தில் அடுக்கடுக்காக ஒன்றன் பின் ஒன்றாக நின்று கொண்டிருப்பதை நாம் ஆச்சரியத்துடன் காணலாம். அந்த அழகிய முனிசியாரி யை படத்தில் நீங்கள் காணலாம்.
ஒரு நாள் காலை 9 : 15 மணிக்கெல்லாம் முனிசியாரி என்ற இடத்தின் மலை உச்சியில் உள்ள ஒரு பெரிய மேல் நிலை பள்ளிக்கு தேவ ஊழியம் செய்வதற்காக நாங்கள் எங்கள் வாகனங்களுடன் புறப்பட்டோம். பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னரே நாங்கள் எங்கள் வாகனங்களை ஓரிடத்தில் பள்ளிக்கு அருகில் ஒதுக்கி நிறுத்தி ஆசிரியர்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தோம். நம்முடைய தேவ ஊழியர்கள் தங்கள் கைகளில் வேதாகமங்கள், புதிய ஏற்பாடுகள் மற்றும் தேவனுடைய பிரசுரங்களை எடுத்துக் கொண்டு பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகினார்கள். கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் அந்த அன்புள்ளம் கொண்டோன் தனது பள்ளி பிள்ளைகளுக்கு அவைகளைக் கொடுக்க அனுமதி அளித்தார். ஆனந்த் சிங் பிஸ்த் என்ற அந்த தலைமை ஆசிரியர் பிள்ளைகள் எல்லாரையும் அசெம்பிளி மைதானத்தில் கூடி வரச்செய்தார். கொடுக்கப்படும் புத்தகங்கள், பிரதிகள் எல்லாம் கடவுளுடையவைகள் என்றும், எந்த ஒரு நிலையிலும் அவைகளை சேதப்படுத்தக் கூடாது என்றும், படித்த பின்னர் அவைகளைப் பிறருக்கும் படிக்கும்படியாக அவைகளைக் கொடுக்கும்படியும் மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். அந்த மேல் நிலைப் பள்ளியில் அன்று மொத்தம் 680 பிள்ளைகள் ஆஜராகி இருந்தார்கள். அவர்கள் எல்லாருக்கும் ஹந்தி லூக்கா சுவிசேஷங்கள், ஹிந்தி புதிய ஏற்பாடுகள் மற்றும் இதர தேவனுடைய பிரசுரங்கள் ஜெபத்துடன் கொடுக்கப்பட்டன.
அந்த மேல் நிலைப் பள்ளியில் மொத்தம் 35 ஆசிரியப் பெருமக்கள் இருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் 35 ஹிந்தி வேதாகமங்கள் மற்றும் இதர கிறிஸ்தவ பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தேவ ஊழியர்களாகிய எங்கள் எல்லாரையும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது மாணவர்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தி பேசியதுடன் நாங்கள் அவர்களுக்கு எடுத்துச் சென்ற கிறிஸ்தவ பிரசுரங்களுக்காக அவர் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்ததுடன் திரும்பவும் நாங்கள் அந்தப் பள்ளிக்கு ஆண்டவருடைய புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும்படியாகவும் அவர் எங்களை அன்புடன் கேட்டுக் கொண்டார். அதின் பின்னர் தேவ ஊழியர்களாகிய எங்கள் எல்லாருக்கும் டீ எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. முனிசியாரி மேல் நிலைப்பள்ளியின் அருகில் எங்கள் இரண்டு வாகனங்களும் போய் நிற்பதையும், தேவனுடைய பிரசுரங்களை வாங்கிய மாணவ மாணவியரின் காட்சிகளையும் படங்களில் நீங்கள் காணலாம்.
“மத்கோட்” என்ற இருள் சூழ்ந்த மலை கிராமத்தில் நடந்த ஊழியங்கள்
ஒரு நாள் காலை நாங்கள் முனிசியாரி என்ற இடத்திலிருந்து சில கி.மீ. தொலைவிலுள்ள மத்கோட் என்ற இடத்திற்கு பயணப்பட்டோம். அந்த உயரமான இடத்திலிருந்து மத்கோட் ஒரு பள்ளத்தாக்கில் இருள் சூழ்ந்த கானகத்தின் நடுவே உள்ளது. அந்த இடத்திற்குப் போகிற பாதையும் வலது இடது பக்கங்களில் கருங்கானகமாகவே இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட இடம் நாங்கள் வரவும் அங்கிருந்து உயரத்தில் மத்கோட் கிராமம் தெரிந்தது. அந்தக் கிராமத்திற்குச் செல்லும் வழி மண் ரஸ்தாவாக இருந்தமையால் நாங்கள் எங்கள் வாகனங்களை மிகவும் கவனமாக கொண்டு செல்ல வேண்டியதாகவிருந்தது. சற்றுக் கவனக்குறைவானாலும் வாகனம் தடம் புரண்டு பள்ளத்தாக்கினுள் விழுந்துவிடும். கர்த்தருடைய கிருபையால் எங்கள் வாகனங்களை ஊருக்குள் கொண்டு வந்துவிட்டோம். மத்கோட் கிராமத்து வீடுகளைச் சுற்றிலும் வாழை, கொய்யா போன்ற மரங்கள் நிற்பதை நாங்கள் ஆச்சரியத்துடன் கவனித்தோம். கிராமத்தை ஒட்டி பெரிய மலைகள் அடர்ந்த கானகத்துடன் காணப்படுகின்றது. இமயமலைகளின் நானாவித பறவைகள் எழுப்பும் விநோதமான குரல் ஒலிகள்அங்கு கேட்கின்றன. அங்குள்ள ஒரு பெரிய மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுப்பதற்காக நாங்கள் அங்கு சென்றோம். எங்கள் வாகனங்கள் செல்ல வழி இல்லாததால் ஓரிடத்தில் அவைகளை நிறுத்திவிட்டு தேவனுடைய பிரசுரங்களை பெட்டிகளில் எடுத்துச் சுமந்து கொண்டு ஒற்றையடிப்பாதை வழியாக நாங்கள் பள்ளிக்குச் சென்றோம்.
பள்ளிக்கான பெரிய கட்டிடங்கள் அங்கு இருந்தபோதினும் குளிரின் காரணமாக அவைகளில் பாடம் நடத்த முடியாமல் கட்டிடம் வெறிச்சோடி கிடப்பதை நாங்கள்கவனித்தோம். நீங்களும் அதைப் படத்தில் காணலாம்.
வெளியே புல் மைதானத்தில் நல்ல சூரிய ஒளியில்தான் அப்பொழுது வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அந்தப் பள்ளியின் பிள்ளைகள் யாவருக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுக்கும்படியாக தலைமை ஆசிரியர் அனுமதி கொடுத்துவிட்டபடியால் நமது தேவ ஊழியர்கள் அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஹிந்தி புதிய ஏற்பாடுகள், சாந்தி மார்க்கம் என்ற லூக்கா சுவிசேஷம் உட்பட இதர பிரதிகளையும் மைதானத்திலேயே நமது ஊழியர்கள் கொடுத்தார்கள். அவர்கள் அப்படி தேவனுடைய வார்த்தைகளை கொடுக்கும் காட்சியையும், கொடுக்கப்பட்ட பிரதிகளை பள்ளிப் பிள்ளைகள் கரங்களில் வைத்திருப்பதையும், படிப்பதையும் நீங்கள் படங்களில் காணலாம்.
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் ஹிந்தி மொழி வேதாகமங்கள் கொடுக்கப்பட்டன. அவர்கள் அவைகளைப் பெற்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். பரதேசிகளாகிய எங்களுக்கு தங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்தார்கள். கர்த்தர் ஒருவருக்கே மகிமை.
மத்கோட் மேல் நிலைப்பள்ளியை ஒட்டியே ஒரு நடு நிலைப்பள்ளியும் இருந்தது. அதிலுள்ள பிள்ளைகளுக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம்.
“ரின் பிச்சூல்” என்ற இடத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் வாகனங்களுடன் பித்தோர்கார்ட் என்ற பட்டணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் மலை உச்சி ஒன்றில் அடர்ந்த காடுகளின் நடுவாக அமைந்திருக்கும் “ரின் பிச்சூல்” என்ற இடத்திலுள்ள உயர் நிலை பள்ளி ஒன்றினுக்குச்சென்று ஆண்டவருடைய ஊழியங்களை மேற்கொண்டோம். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெயர் திரிலோக் சிங் மேஹ்ரா என்பதாகும். நாங்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியருடைய அனுமதி கேட்டபோது அவர் உடனடியாக எங்களுக்கு அனுமதி வழங்கியதுடன் பிள்ளைகளை உடனடியாக கூடி வரச் செய்து நம்முடைய தேவ ஊழியர்களை பிள்ளைகளுக்கு ஆண்டவரைப் பற்றிப் பேசும்படியாகக் கேட்டுக்கொண்டார்.
அப்படியே அந்தப் பள்ளிப் பிள்ளைகளுக்கு நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் இரட்சகர் இயேசுவின் மீட்பின் நற்செய்தியை சொன்ன பின்னர் கூடி வந்த 98 பிள்ளைகளுக்கும் 17 ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரதிகளை வழங்கினோம். ஆசிரியர்களுக்கு 17 ஹிந்தி மொழி வேதாகமங்கள் கொடுக்கப்பட்டன. கருங்கானகத்துக்குள் இருக்கும் அந்தப் பள்ளியையும், நமது சகோதரன் அவர்கள் பேசுவதையும், பிள்ளைகள் ஆவலோடு கேட்பதையும் படங்களில் நீங்கள் காணலாம்.
முனிசியாரியில் செலவிடப்பட்ட ஓர் கர்த்தருடைய ஓய்வு நாள்
வடமாநில தேவ ஊழிய நாட்களில் வாரத்தின் மற்ற நாட்களில் எல்லாம் நாங்கள் ஆண்டவருடைய ஊழியத்தைச் செய்துவிட்டு கர்த்தருடைய ஓய்வு நாளில் எந்த ஒரு இடங்களுக்கும் ஊழியம் செய்யச் செல்லாமல் அந்த நாளின் காலை ஆகாரம் எதுவும் புசியாமல் நாங்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி கர்த்தரைப் பாடல்களால் பாடித் துதித்து தனித்தனியாக நாங்கள் ஒவ்வொருவராக ஜெபித்து தேவனுடைய செய்தியையும் யாரோ ஒருவர் பகிர்ந்து கொள்ளுவோம். அந்த வாரம் முழுவதும் செய்யப்பட்ட தேவ ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், எங்களிடமிருந்து தேவனுடைய வார்த்தைகளைப் பெற்றுக் கொண்ட மக்கள் உள்ளங்களில் கர்த்தர் கிரியை நடப்பிக்கவும் மன்றாடுவோம். நம்முடைய பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் ஆண்டவரை ஓய்வு நாளில் துதிப்பதற்காக ஹிந்திப்பாட்டுப் புத்தகங்களை மறவாது தன்னுடன் கொண்டு வந்து விடுவார்கள்.
அப்படியே நாங்கள் சென்ற முனிசியாரி என்ற இடத்திலும் அப்பொழுது வந்த கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளில் ஒன்றாகக் ஜெபத்திற்காகக் கூடி வந்தோம். நாங்கள் எல்லாரும் ஒன்றாக தரையில் உட்காருவதற்கான வசதி நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இல்லாதபடியால் இரண்டு இடங்களில் தனித்தனியாக உட்கார்ந்து கர்த்தரைப் பாடித் துதித்தோம். அந்த ஆராதனை வேளை காட்சியை நீங்களும் இந்தச் செய்தியில் காணலாம்.
நாங்கள் முனிசியாரியில் எங்கள் தேவ ஊழியங்களை முடித்து பித்தோர்கார்ட் பட்டணம் திரும்புவதற்கு முன்னர் தேவ ஊழியர்களாகிய நாங்கள் எல்லாரும் முனிசியாரி என்ற அந்த இடத்தின் ஒவ்வொரு தெருத் தெருவாகச் சென்று மக்களுக்குத் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை ஜெபத்தோடு வழங்கினோம். ஒரு நாள் காலையிலிருந்து நண்பகல் வரை நாங்கள் அந்த ஊழியத்தில் ஈடுபட்டிருந்தோம். கர்த்தருக்கே மகிமை.