உத்தராஞ்சல் மாநிலத்தில் நடைபெற்ற சுவிசேஷ ஊழியங்களின் கடந்த கால நினைவுகள் (1)
“தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான் (மாற் 8 : 35)
ஆண்டவர் இயேசுவுக்காகவும், அவருடைய மகிமையின் சுவிசேஷத்திற்காகவும் அவரால் அழைக்கப்பட்ட அவருடைய தேவ ஊழியன் தன் ஜீவனை இழந்து போக வேண்டுமென்பது தேவனுடைய கட்டளையாகும். ஆனால் ஆச்சரியமான காரியம், அவருடைய ஊழியன் இன்று அவருடைய நாமத்தைக் கொண்டும், சுவிசேஷத்தைக் கொண்டும் தன்னுடைய இம்மை வாழ்வினை உலக மக்களைவிட மேலான விதத்தில் ஆதாயப்படுத்தி உலக மக்களைவிட சுகபோகமாக மிகுந்த ஆடம்பரத்துடன் வாழ்கின்றான்.
“உனது குழந்தை வீட்டிலே மரித்துக் கிடக்கின்றது. அது அங்கே மரித்துக் கிடக்கும்போது நீ நன்றாக உடுத்தி எந்த ஒரு கவலையும் இல்லாமல் நானாவித சுவையான சாப்பாடுகளைச் சாப்பிட்டு உன்னால் எப்படி உல்லாசமாக வாழ முடிகின்றது? ” என்று அழியும் ஆத்துமாக்களைக் குறித்த எந்த ஒரு ஆத்தும பாரமும் இல்லாமல் தங்கள் மட்டாக உலக வாழ்வினை அனுபவித்து கவலையில்லாமல் வாழ்கின்ற, பேர் புகழுக்காகவும், தங்களுக்காகவும் தங்கள் சந்ததிகளின் உலக வாழ்வின் செழுமை கொழுமைக்காகவும் ஊழிய வியாபாரம் செய்கின்ற ஊழியர்களைப் பார்த்து ஒரு தேவ மனிதர் தனது புத்தகத்தில் கேட்டு எழுதியிருக்கின்றார்.
உண்மையோ உண்மைதான், நம்முடைய பெற்றோர், நம்முடைய கண்மணி பிள்ளைகள், உடன் பிறந்தோர், கணவன் மனைவி, அன்பான இனஜனங்கள் நஷ்டப்பட்ட பாவிகளாக தேவ கோபாக்கினையின் தீச்சூழையாம் எரிமலைக் குழம்பான அக்கினிக் கடலுக்குள் மூழ்கி நித்திய நித்திய நீடூழி காலமாக அந்த இடத்தை விட்டு எந்த ஒரு நிலையிலும் வெளியேற இயலாமல் வெந்து துடிதுடித்துக் கொண்டிருக்கச் செல்லும் போது அவர்களைக் குறித்த எந்த ஒரு ஆத்தும பாரமும், அங்கலாய்ப்பும் இல்லாமல் தேவ ஊழியன் என்ற போர்வையை நீ தரித்துக் கொண்டு உன்னால் உல்லாசமாக வாழ முடிகின்றதா? நேரத்திற்கு நேரம் ஆடம்பரமான ஆடைகளை அணிந்து கொண்டு, அறுசுவை உண்டிகளை உண்டு மகிழ்ந்து கொண்டு, சரீரம் எந்த ஒரு நிலையிலும் பாடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக அதற்கு போதிய ஓய்வுகளைக் கொடுத்து அதைப் பேணிப் பாதுகாத்து சீராட்டிக் கொண்டிருக்க உன்னால் முடிகின்றதா? உலகம் முழுவதையுமே சுற்றி வளைத்து அதை ஆதாயப்படுத்த நீ துடிதுடித்துக் கொண்டிருக்கும் போது அழியும் ஆத்துமாக்களுக்காக ஜெபிக்க உனக்கு நேரம் எங்கு கிடைக்கும்? உன் வசமுள்ள உனது உலக ஆஸ்திகளையே பராமரிக்கவும், பாதுகாக்கவும், அதின் வருமானங்களை சேர்க்கவும் உனக்கு நேரம் போதாதே ! அப்படியிருக்க நீ தேவனுக்கு ஊழியம் செய்வது எங்கனம்? தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய உன்னால் கூடாது (லூக்கா 16 : 13) என்று ஆண்டவர் திட்டமும் தெளிவுமாக சொல்லியிருக்க நீ அவரைப் பார்த்து “இருவருக்கும் ஊழியம் செய்ய என்னால் கூடும்” என்று அவரைப் பார்த்து குரல் கொடுக்கின்றாய். உண்மைதான், நீ ஆண்டவரைவிட அதிக புத்திசாலி.
இந்தக் காரியங்களை நமது இமயமலை தேவ ஊழியத்தின் ஆரம்ப வரிகளாக நான் எழுதுவதன் ஒரே காரணம், கர்த்தருடைய ஊழியங்கள் ஆத்தும பாரத்தோடும், மிகுதியான ஜெபத்தோடும், உபவாசங்களோடும், கண்ணீரோடும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகத்தான். தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்காக ஆயத்தம் செய்து வைத்துள்ள மோட்சானந்த பாக்கியங்கள் (1 கொரி 2 : 9) (மத் 25 : 34) நஷ்டப்பட்ட ஆத்துமாக்கள் எரி நரகத்தில் அனுபவிக்கக்கூடிய சொல்லொண்ணா வேதனைகள் (மத் 25 : 41) (எபிரேயர் 10 : 31) தேவ மைந்தன் அதற்காக சிந்திய கண்ணீர்கள் (லூக்கா 19 : 41) ( லூக்கா 22 : 44) யாவையும் ஒரு மெய்யான தேவ ஊழியன் தனது இருதயப் பலகையில் எழுதியவனாக, அவைகளை எப்பொழுதும் தனது கண்களுக்கு முன்பாக நிறுத்தி வைத்துக் கொண்டு ஆண்டவருடைய ஊழியத்தை மிகுந்த பயத்தோடும் நடுக்கத்தோடும் செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு நாம் மேற்கொண்ட நமது இமயமலை வாகன தேவ ஊழியங்களும் அதிகமான ஜெபத்தோடும், உபவாசத்தோடும் மேற்கொள்ளப்பட்டதாகும். முற்றும் வெறுமையான நிலையில் கரங்களில் எந்த ஒரு முன் பணமும் இல்லாத வெறுமை நிலையில் இந்த ஆண்டும் நமது வாகன ஊழியத்தை எடுத்துச் செய்ய வேண்டும் என்று நாங்கள் கர்த்தருக்குள் தீர்மானித்தோம். வழக்கமாக நமது ஊழியத்தில் பங்கு கொள்ளும் தேவ பிள்ளைகள் சிலர் இதற்காக உபவாசம் எடுத்து ஜெபித்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.
உங்கள் சகோதரனாகிய நானும் தேவ பெலத்தால் எனது உபவாச ஜெப நாட்களைத் தொடங்கினேன். உபவாசத்தை ஆரம்பிப்பதற்கு வெகு முன்னதாகவே கர்த்தர் எனக்கு ஒத்தாசையாக நின்று உபவாச நாட்கள் முழுவதையும் ஆசீர்வதித்துத் தரவும், எந்த ஒரு நிலையிலும் சரீரம் பெலவீனப்பட்டுவிடாதிருக்கவும் அதிகமாக மன்றாடி உபவாசத்தை தொடங்கினேன். வயது செல்லுவதாலும், சரீரத்தில் சர்க்கரை நோய் கொடூரமாக இருப்பதாலும், எந்த ஒரு நீர் ஆகாரமும் இல்லாமல் பகல் முழுவதும் சரீரத்தை வெறுமையாக வைப்பதினால் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் எந்த ஒரு பெலவீனத்தையும் உடம்புக்கு கொடுக்கா திருக்கவும் அதிக பாரத்தோடு தேவ சமூகத்தில் மன்றாடி ஜெபித்து என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன். உபவாச நாட்கள் ஒவ்வொன்றிலும் அதிகமான மணி நேரங்களை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிடக் கிருபை பெற்றேன். கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக. உபவாச நாட்கள் அதிகரிக்க, அதிகரிக்க தேவனுடைய கிருபையும் என்னைத் தாங்கி அரவணைப்பதைக் கண்டு அகமகிழ்ந்தேன். நமது வாகன ஊழியத்திற்கான தேவைகளுக்காக அதிகமாக ஜெபியாமல் நஷ்டப்படும் ஒரு ஆத்துமா நரக பாதாளத்தில் எவ்வளவாக கொடிய பாடுகளை அனுபவிக்கும் என்பதை உணர்ந்து அவர்கள் எப்படியாவது ஆண்டவரை அண்டிக் கொள்ளும்படியாக மன்றாடினேன். மக்களுடைய கரங்களில் எந்த விதத்திலும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் போய்ச் சேர்ந்து விடவேண்டும், சத்துருவாகிய பிசாசினிடமிருந்து எந்த ஒரு எதிர்ப்புகளும் ஊழிய நாட்களில் வந்துவிடாதிருக்க பாரத்தோடு ஜெபித்தேன். எனது உபவாச நாட்களில் பெரும்பகுதியான நாட்கள் கழிந்து சென்றிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு அன்பான தேவப் பிள்ளையிடமிருந்து நமது வாகன தேவ ஊழியத்திற்கான ஒரு உதவி வந்து சேர்ந்தது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக. அந்த உதவியானது இந்த ஆண்டிலும் நமது வாகன தேவ ஊழியத்தை கர்த்தரை முன் வைத்து எடுத்து நடத்த முடியும் என்பதற்கான நிச்சயமான அடையாளமாக எங்களுக்குத் தெரிந்தது. நாட்கள் கடந்து செல்லச் செல்ல நமது ஊழியங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அற்புதம் அதிசயமாக வரத் தொடங்கினது. ஆனால், அதற்காக நான் எனது உபவாச ஜெப நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களிலும் அதிகமான நேரத்தை தேவ சமூகத்தில் முகங்குப்புற விழுந்து மன்றாட வேண்டியது அவசியமாக இருந்தது. அநேக இராக்காலங்களிலும் நமது முற்பிதா யாக்கோபைப்போல நமது ஊழியங்களின் ஆசீர்வாதத்திற்காக ஊக்கமாக நம் ஆண்டவரோடு ஜெபத்தில் போராட கர்த்தர் உதவி செய்தார். நம்முடைய தேவைகளை ஆண்டவருடைய சமூகத்தில் போராடி ஜெபித்துப் பெற்றுக் கொள்ளுவது ஒரு பரவசமான அனுபவமாகும். அந்த பரிசுத்த அனுபவத்துக்குள் கடந்து வந்த ஒரு தேவ பிள்ளை தனது வாழ்வில் தன் தேவைகளை ஆண்டவர் ஒருவருக்கே அறிவித்து அவருடைய வாக்குத்தத்தங்களை பற்றிப் பிடித்து அவர் அதை நிறைவேற்றிக்கொடுக்க மன்றாடுமே தவிர மனுஷருடைய கரங்களை ஒருக்காலும் எதிர் நோக்கி நிற்காது. இதற்கு பிரகாசமான முன் மாதிரியாகவும் உதாரணமாகவும் பரிசுத்தவான் ஜியார்ஜ் முல்லர் அவர்கள் நமக்கு விடிவெள்ளி நட்சத்திரமாக திகழ்கின்றார்.
இந்தச் சமயம் நாம் முற்றும் எதிர்பாராத இடங்களிலிருந் தெல்லாம் நம் அன்பின் தேவன் நமது ஊழியங்களுக்கு ஒத்தாசையை அனுப்பினார். வாகன ஊழியத்திற்கு காணிக்கைகளை என் பெயருக்கு அனுப்பாமல் ஊழியத்திற்குத் தேவையான தேவனுடைய வார்த்தைகளை பல்லாயிரக்கணக்கில் நமக்கு அச்சிட்டுத் தரும் “இந்திய வேதாகம சங்கம்” சிவகாசியிலுள்ள “ஓரேப் அச்சுக்கூடத்தினர்” போன்றவர்களுக்கும், 2 வாடகை வாகனங்களுக்கு ஒரு முழுமையான மாதத்திற்குத் தேவையான வாடகைகளை வாகனங்களின் உரிமையாளர் பெயருக்கும் டிராப்ட் எடுத்து அனுப்ப தேவ பிள்ளைகளைக் கேட்டுக் கொண்டேன். ஒருக்கால் என் பெயருக்கு காணிக்கை அனுப்பினால் அதை மேற்கண்ட காரியங்களுக்கு டிராப்ட் எடுத்து அவைகளின் ஜெராக்ஸ் நகல்களை காணிக்கைகள் அனுப்பிய தேவ பிள்ளைகளுக்கு அனுப்பி வைத்தேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
ஊழியத்திற்குத் தேவையான தேவனுடைய சுவிசேஷப் பிரசுரங்கள்
ஒரு மாத கால தேவ ஊழியத்தில் நாங்கள் மக்களுக்கு கொடுப்பதற்காக இந்த தடவை சுவிசேஷ பிரசுரங்களுக்கு மாத்திரம் ஒரு பெருந்தொகையை செலவிட வேண்டியதாகவிருந்தது. கடந்த எல்லா ஆண்டுகளையும் விட இந்த ஆண்டு கூடுதலான பணத்தைக் கொடுத்து நல்ல தரமானதும், அழகானதுமான பிரதிகளைப் பெற்றுக்கொண்டோம். 15000 இந்தி மொழி லூக்கா சுவிசேஷங்கள் (சாந்தி மார்க்கம்) நாம் அலகாபாத்திலுள்ள இந்திய வேதாகம சங்கத்தில் ஆர்டர் கொடுத்து ஹல்த்வானி பட்டணத்திலுள்ள பாஸ்டர் சகோதரன் எம்.சி.ஜேம்ஸ் அவர்களின் தொடர்பு முகவரியை ஒவ்வொரு இந்தி லூக்கா சுவிசேஷத்திலும் அச்சிட்டு வாங்கினோம். இந்த அழகான சுவிசேஷங்கள் பெங்களூரில் அச்சிடப்பட்டு அனுப்பப்பட்டன. இந்தச் சமயம் ஒரு காரியத்தை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந்திய வேதாகம சங்கத்தின் அலகாபாத் கிளைக்கு காரியதரிசியான சகோதரன் ஜோஹன் ஜாண் அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நமது தேவ ஊழியத்தை அதிகமாக நேசிப்பவர்களாவார்கள். ஒவ்வொரு தடவை நாம் மேற்கொள்ளும் வாகன ஊழியத்தில் பங்கு பெற தங்களுடைய விருப்பத்தை அதிகமாக தெரிவிப்பார்கள். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற காரணத்தால் தமிழை அழகாக பேசக்கூடிய தேவ பிள்ளையாவார்கள். அவர்களுடைய அன்பின் பிரயாசத்தால் நமக்கு அவர்கள் மிகவும் குறைவான பணத்தையே நாம் அவர்களிடம் வாங்கிய லூக்கா சுவிசேஷங்களுக்கு பெற்றுக் கொண்டார்கள். இதை நாம் வெளியில் அச்சிடுவோமானால் மிக அதிகமான பணம் கொடுத்தாக வேண்டும். சகோதரன் ஜோஹன் ஜாணை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. நீண்ட ஆண்டு காலமாக குழந்தைச் செல்வம் இல்லாதிருந்தபோதினும் கணவனும் மனைவியுமாக மிகுந்த தேவ சமாதானத்துடனிருந்து கர்த்தருக்கு உத்தமமாக ஊழியம் செய்து வருகின்றார்கள். அவர்களை உங்கள் ஜெபங்களில் நினைத்துக் கொள்ளுங்கள்.
ஒட்டன்சத்திரத்திலுள்ள டாக்டர் செல்வின் ஐயா அவர்கள் எழுதிய மிகவும் பயனுள்ள “சமாதான காரணர்” (இயேசு கிறிஸ்து) என்ற இந்தி மொழி சிறு புத்தகப் பிரதிகள் 11500 மும் “உங்கள் வாழ்வின் உற்ற நண்பர்” என்ற இந்தி மொழி துண்டுப் பிரதிகள் 12000 மும் ” நீங்கள் அறிய வேண்டும் என்று தேவன் விரும்பும் நான்கு காரியங்கள் ” என்ற இந்தி மொழி பிரசுரங்கள் 12000 மும் சிவகாசியிலுள்ள “ஓரேப் அச்சுக்கூடத்தில்” நாம் அச்சிட்டு வாங்கினோம். அச்சகத்தின் உரிமையாளர் கர்த்தருடைய பரிசுத்த தேவ பிள்ளை தர்மராஜ் அவர்கள் வழக்கம்போல குறைந்த செலவில் மிகவும் தரமான காகிதம் பயன்படுத்தி கர்த்தருக்காக அச்சிட்டுக் கொடுத்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.
“சத்திய மார்க்கம்” என்ற இந்தி மொழி யோவான் சுவிசேஷம் நிறைய படங்களுடனும், விளக்கவுரைகளுடனும் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வட இந்தியாவிலுள்ள பட்டணங்களில் நடக்கும் கும்பமேளாவில் இந்து யாத்ரீகர்களுக்குக் கொடுப்பதற்காக இந்திய வேதாகம சங்கத்தினரால் அழகாக அச்சிடப்பட்டிருக்கின்றது. அதின் ஒரு பிரதி விலை ரூபாய் 8 ஆகும். 2006 ஆம் ஆண்டில் ஒரு பிரதி விலை ரூபாய் 6 வீதம் நமக்கு கொடுத்த வேதாகம சங்கத்தினர் இந்த தடவை வெறும் ரூபாய் 2 க்கு 5000 பிரதிகள் நமக்குக் கொடுத்தார்கள். நமது ஊழியத்தை அதிகமாக நேசிக்கும் மேற்கண்ட அலகாபாத் வேதாகம சங்க காரியதரிசி ஜோஹன் ஜாண் அவர்கள் இந்த அன்பை நமக்குச் செய்தார்கள்.
கடந்த தடவையைப் போன்று இந்த தடவையும் டில்லியிலுள்ள “கிறிஸ்தவ சுவிசேஷப் பணி இயக்கம்” (Operation Mobilization) என்ற மிகப் பெரிய கிறிஸ்தவ ஸ்தாபனம் மிகவும் குறைந்த விலையில் அழகான விதவிதமான சுவிசேஷ பிரசுரங்களை நமக்கு கொடுத்து உதவினார்கள். நிறையப்படங்களாலான அந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் அநேகமாக மோட்சம், நரகம் படங்கள் இறுதியில் போடப்பட்டிருந்ததை நாங்கள் ஆச்சரியத்துடன் கவனித்தோம். “வேதாகமத்தின் மொத்த அடக்கம்” (ஹிந்தியில் “பைபில் சார்”) என்ற மிகவும் பயனுள்ள இந்தி மொழி புத்தகங்களையும் அவர்கள் எங்களுக்கு சொற்பமான விலைக்குக் கொடுத்தார்கள். அந்த அழகான பிரசுரங்களை எல்லாம் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் டில்லி பட்டணம் சென்று மேற்கண்ட ஸ்தாபனத்தினரிடம் இருந்து நமக்காகப் பெற்றுத் தந்தார்கள். அவைகளை அந்த ஸ்தாபனம் வேறு எவருக்கும் விலைக்குக் கொடுப்பதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். சகோதரன் சாமுவேல் அவர்கள் அந்த ஊழிய ஸ்தாபனத்துடன் சேர்ந்து கடந்த நாட்களில் சுவிசேஷ ஊழியம் செய்ததால் அவர்களுக்கு மட்டும் இந்த அன்பைச் செய்கின்றனர். நாங்கள் இந்த தடவை எங்கள் வாகன தேவ ஊழியத்தில் பயன்படுத்திய அழகான பிரசுரங்கள் ஒவ்வொன்றின் மாதிரியை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள். கடந்த ஆண்டிலும் இந்தப் படங்களை நமது தேவ எக்காளத்தில் வெளியிட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பாஸ்டர் சகோதரன் எம்.சி.ஜேம்ஸ் அவர்கள் சில நூறு கிதியோன் ஹிந்தி மொழி புதிய ஏற்பாடுகளும், ஆண்டவருடைய வாழ்க்கைச் சரித்திரம் அடங்கிய குமானி மொழி படக் கேசட்டுகள் கொஞ்சமும் நமக்கு இலவசமாகக் கொடுத்து உதவினார்கள். அந்தக் கேசட்டுகளை ஆசிரிய பெருமக்கள் எங்களிடமிருந்து கேட்டு வாங்கிப் பெற்றுச் சென்றார்கள்.
திரும்பவும் உத்தராஞ்சல் மாநிலத்தில் வாகன தேவ ஊழியங்கள்
நாம் நினைப்பது போல இந்த நாட்களில் தேவனுடைய ஊழியங்களை விரிவான அளவில் செய்ய முடியாத வகையில் சத்துருவாகிய பிசாசு தேவ மக்களுக்கு எதிராக கடுமையாகப் போர் செய்து கொண்டிருக்கின்றான். நம்முடைய தமிழ் மாநிலத்திலேயே அந்தவிதமான எதிர்ப்புகள் ஆரம்பித்திருப்பதை நாம் கேள்விப்படும் போது முழுமையாக இந்து மக்கள் நிரம்பிய வட இந்திய மாநிலங்களைக் குறித்து நாம் பேசுவதற்கு என்ன இருக்கின்றது?
இருப்பினும், கர்த்தருடைய பரிசுத்த பிள்ளைகளாகிய உங்களுடைய ஊக்கமான ஜெப மன்றாட்டுகளின் காரணமாக இந்த ஆண்டும் நாங்கள் 2 வாகனங்களை கடந்த ஆண்டுகளைப் போல 30 நாட்களுக்கு வாடகைக்கு அமர்த்தி நாங்கள் மொத்தம் (2வாகனங்களின் டிரைவர்களையும் சேர்த்து) 9 பேர்களாக இணைந்து பல்லாயிரக்கணக்கான தேவனுடைய பிரசுரங்களையும், ஆண்டவருடைய ஜீவனுள்ள வார்த்தைகளையும் (லூக்கா சுவிசேஷங்கள்) ஜெபத்தோடு மக்களுடைய கரங்களில் கொடுத்து வந்திருக்கின்றோம். இது மனுஷ முயற்சியால் ஒருபோதும் நடைபெற்ற காரியமல்ல. உங்களுடைய உருக்கமான ஜெபங்களே இந்த அற்புதத்தை நமக்குச் செய்து தந்தது. எனக்கு வந்த கடிதங்களிலும், தொலைபேசி அழைப்புகளிலும் நமது வாகன தேவ ஊழியங்களுக்காக தேவ பிள்ளைகள் மிகுந்த பாரத்தோடு ஒவ்வொரு நாளும் ஜெபித்ததாக சொன்னார்கள். உங்களுடைய ஜெபங்களின் வல்லமையை எங்கள் ஊழிய நாட்கள் ஒவ்வொன்றிலும் நாங்கள் அதிகமாக உணர்ந்தோம். உங்கள் ஜெபங்களின் காரணமாக இந்த தடவை நாங்கள் கொண்டு சென்ற தேவனுடைய பிரசுரங்கள் அனைத்தையும் கர்த்தருக்கு மகிமையாக கொடுத்து முடித்தோம். ஊழியம் முடிய இன்னும் ஒரு நாள் பாக்கி இருந்த வேளையில் சில பெட்டிகள் மீதியாகிவிடும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், ஆச்சரிய அற்புதமாக கடைசி நாள் ஊழியத்தில் நாங்கள் திட்டமிட்டுச் செல்லாத ஒரு வழித்தடத்தில் எங்களுக்கு எதிர்ப்பட்ட சில பள்ளிகளிலும் ஒரு மேல்நிலைப் பள்ளியிலும் எங்கள் வசம் இருந்த அனைத்துப் பிரசுரங்களையும் கொடுத்து முடிக்க கர்த்தர் உதவி செய்தார். அவருக்கு நாம் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்?
உங்களுடைய ஜெபங்களின் காரணமாக அன்பின் ஆண்டவர் செய்த ஒரு அதிசய காரியம் என்னவெனில், இந்த தடவையும் நாங்கள் உத்தராஞ்சல் மாநிலத்திற்கே தேவ ஊழியத்தின் பாதையில் சென்ற போதினும் நாங்கள் கடந்த நாட்களில் சென்ற பழைய இடங்களுக்குச் செல்லாமல் முற்றும் புதிய இடங்களிலேயே ஊழியங்களைச் செய்ய கர்த்தர் உதவி செய்தார். கடந்த காலங்களில் நாங்கள் மையமாக வைத்து ஊழியம் செய்த அதே இடங்களை நாங்கள் இந்த தடவையும் எங்களுடைய தளங்களாக வைத்துத் தங்கிக் கொண்டாலும் நாங்கள் சுவிசேஷ ஊழியம் செய்த இடங்கள் அனைத்தும் முற்றும் புதியவைகள் ஆகும். கடந்த கால நாட்களில் கூட நான் தேவ எக்காளத்தில் நாம் இனி உத்தராஞ்சல் மாநிலத்தில் ஊழியம் செய்ய இடங்கள் இல்லை. அநேகமாக எல்லா இடங்களிலும் ஆண்டவருடைய ஊழியத்தை செய்து முடித்துவிட்டோம் என்று எழுதியிருந்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அது முற்றும் தவறானது, உத்தராஞ்சல் மாநிலத்தில் நாம் சுவிசேஷம் அறிவிக்க வேண்டிய இன்னும் அநேக இடங்கள் உண்டு என்பதை பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் என்னிடம் சொல்லி நீங்கள் தேவ எக்காளத்தில் எழுதின அந்த தகவல் தவறானது என்பதை என்னிடம் சொன்னார்கள். எனவே இந்த தடவையும் நாங்கள் உத்தராஞ்சல் மாநிலத்திற்குச் சென்றபோதினும் முற்றும் புதிய இடங்களிலேயே கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ய தேவன் எங்களுக்கு வழி வாசல்களைத் திறந்து கொடுத்தார். கர்த்தருக்கே மகிமை.
தேவ ஊழியத்தில் கலந்து கொண்டவர்கள்
இந்த தடவை நாங்கள் மேற்கொண்ட கர்த்தருடைய ஊழியத்தில் பாஸ்டர் சகோதரன் எம்சி.ஜேம்ஸ், பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல், சகோதரன் நார்ட்டன், சகோதரன் என்.சாமுவேல், சகோதரன் விஜய்சிங், சகோதரன் பாக்கேலால், பாஸ்டர் சகோதரன் ஓபேத், வாகனங்களின் டிரைவர்கள் மனோஜ் மற்றும் நரேஷ் ஆவார்கள். வாகனங்களின் இரு டிரைவர்களும் நம்முடைய ஊழியத்தில் மிகவும் பொறுப்பாக இருந்து தேவனுடைய பிரசுரங்களை கொடுத்தார்கள். அதில் மிகவும் இளவயதினானவரும், சமீபத்தில் கலியாணம் ஆகி ஒரு சிசுவுக்குத் தந்தையுமான நரேஷ், காடு மேடு மலை ஏறி ஆண்டவருடைய பிரசுரங்களை அதிகமாகக் கொடுத்தார்கள். நம்முடைய குழுவில் தேவனுடைய பிரசுரங்களை மிக அதிகமாகக் கொடுத்த ஒரு சகோதரன் விஜய்சிங் ஆவார்கள். மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுப்பதற்கு அங்கும் இங்குமாக மான் போன்று ஓடி உழைத்தார்கள். டணக்பூர் என்ற இடத்திலிருந்து வந்த அந்த சகோதரன் ஒரு சுவிசேஷகராக அவர்கள் ஊரில் தேவ ஊழியம் செய்து கொண்டிருக்கின்றார்கள். ராம்பூர் என்ற இடத்திலிருந்து வந்த சகோதரன் பாக்கேலால் அவர்களும் அதிகமாக தேவனுடைய பிரசுரங்களை கொடுத்தார்கள். சமீப நாட்களில் இந்துக் குடும்பத்திலிருந்து ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட அவர்கள் கர்த்தருக்காக மிகுந்த வைராக்கியத்தோடு ஊழியம் செய்தார்கள்.
சகோதரன் நார்ட்டன் அவர்களும் நானும் மிகுந்த ஜெபத்தோடு கோவையிலிருந்து புறப்பட்டு சென்னை போய்ச் சேர்ந்தோம். நாங்கள் சென்னையை நெருங்க நெருங்க நல்ல மழை பிடித்துக் கொண்டது. அந்த மழைக்குள்ளாக எங்களை சந்தித்து சென்னையிலிருந்து மிகவும் தொலைவிலுள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஒரு பரிசுத்த தேவப் பிள்ளை சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்து காத்திருந்தார்கள். அன்று இரவில் அவர்கள் எங்களை அருமையாக கவனித்து அன்பு செய்து அடுத்த நாள் காலையில் எங்களை ரயில் நிலையம் வரை கொண்டு வந்து வழி அனுப்பி வைத்து விட்டு அந்த தேவ பிள்ளை சென்றார்கள். தேவன் தாமே அவர்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள் சென்னையிலிருந்து உத்தராஞ்சல் மாநிலத்திற்கே நேரடியாகச் செல்லும் டேராடூன் விரைவு ரயிலில் பயணமானோம்.
நாங்கள் பயணப்பட்ட ரயில் 6 மணி நேர கால தாமதத்துடன் மூன்றாம் நாள் மத்தியானம் டேராடுன் பட்டணம் வந்து சேர்ந்தது. டேராடூன் ரயில் நிலையத்திலேயே அங்குள்ள ஓய்வு அறையில் தங்கி இளைப்பாறி விட்டு அங்கிருந்து அன்று இரவில் புறப்படும் ராணிகேத் விரைவு வண்டியில் நாங்கள் காதகோடம் என்ற இடத்திற்கு பிரயாணப்பட்டோம். அடுத்த நாள் காலை சரியான நேரத்திற்கு எங்கள் ரயில் காதகோடம் ரயில் நிலையம் வந்தடைந்தது. எங்கள் வாழ்க்கையில் தேவன் அவருக்கு இமயமலைப் பிராந்தியங்களில் ஊழியம் செய்யத்தக்கதான ஒரு மகத்தான சந்தர்ப்பத்தை மீண்டும் ஒரு முறை எங்களுக்கு அளித்த தயவுக்காக அவருக்கு எங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து துதி ஸ்தோத்திரங்களை அந்த காலை வேளையில் ஏறெடுத்துவிட்டு வண்டியிலிருந்து இறங்கினோம். ரயில் நிலையத்தில் எங்களை சந்தித்து அழைத்துச் செல்ல நாம் வாடகைக்கு அமர்த்தியிருந்த 2 வாகனங்களும், ஊழியத்தில் கலந்து கொள்ளவிருந்த தேவப் பிள்ளைகளும் வந்திருந்தனர்.
பாஸ்டர் சகோதரன் என்.சுhமுவேல், மனோஜ், நரேஷ் மூவரும் 225 கி.மீ. தொலைவிலுள்ள பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து அப்பொழுதுதான் வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்களின் முகங்களை நம்மால் பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் முகங்கள் கறுகறுத்தும், தூக்கமின்மை காரணமாக அவர்கள் கண்கள் சிவந்து போயும் இருந்தன. அவர்கள் மூவரும் முந்தின நாள் மாலை நேரமே ஹல்த்வானி பட்டணம் வந்து சேர வேண்டியவர்கள் மழை காரணமாக இடையில் சிக்கி தங்கள் வழியில் கிடந்த சிறிதும் பெரிதுமான எத்தனையோ பாராங் கற்களைப் புரட்டித் தள்ளி இரா முழுவதும் ஆகாரம், தூக்கமுமில்லாமல் மிகுந்த கஷ்டத்துடன் தங்கள் வாகனங்களை ஓட்டிக்கொண்டு காதகோடம் ரயில் நிலையம் வந்து சேர்ந்திருந்தனர். ஒரு கட்டத்தில் தங்கள் வாகனங்களுடன் திரும்பிப் போய்விடலாமா என்று கூட தங்கள் கொடிய இன்னல்களின் நடுவில் எண்ணியிருக்கின்றார்கள். ஓரிடத்தில் தங்கள் வழியில் சாய்ந்து கிடந்த ஒரு பெரிய மரத்தின் இரு பக்கங்களிலும் பெரிய, பெரிய கற்களை அடுக்கி மரத்தின் மேலேயே மிகுந்த ஜாக்கிரதையாக தங்கள் வாகனத்தை ஓட்டிக் கடந்திருக்கின்றார்கள். அந்த இடத்தில் சிறிது தவறினாலும் வாகனங்கள் அதல பாதாளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஆழமான காலி கங்கை என்ற நதிக்கு வந்து மூழ்கி விடும். தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் எங்களுக்காக ஏறெடுத்த உங்கள் கண்ணீரின் ஜெபங்களை கர்த்தர் கேட்டு அவர்கள் மூவரையும் பத்திரமாக எங்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்த்ததுடன் எந்த ஒரு நிலையிலும் ஊழியம் தடைப்பட்டுவிடாமல் நாங்கள் கர்த்தருக்குள்ளாக திட்டமிட்டபடி ஊழியங்களை கொண்டு செல்ல அன்பின் ஆண்டவர் கிருபை செய்தார். ஒரு நாள் தவறியிருந்தாலும் நாங்கள் அரசாங்க விடுதிகளுக்கு முன்கூட்டியே கட்டின அதிகமான பணம் திரும்பக் கிடைக்காததுடன் எங்களுடைய முழு ஒழுங்குகளே தடைப்பட்டுப் போயிருக்கும். அன்பின் தேவன் நம்முடைய இமயமலை தேவ ஊழியங்கள் மேல் எத்தனை கரிசனையாக இருக்கின்றார் என்பதை இதன் மூலம் நீங்கள் நன்கு அறியலாம்.
தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை வகைப்படுத்திக் கொண்டோம்
இந்த தடவை எங்களுக்கு ஹல்த்வானி பட்டணத்தில் நாங்கள் வழக்கமாக தங்கும் இடமான “ஓகே” லாட்ஜில் இடம் கிடையாதபடியால் ஹல்த்வானி பட்டணத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள காதகோடம் என்ற இடத்தில் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த அரசாங்க ஓய்வு விடுதியில் தங்க வேண்டியதானது. நாங்கள் ரயிலிலிருந்து இறங்கியதும் அந்த ஓய்வு விடுதிக்குச் சென்று குளித்து எங்களை சுத்தம் பண்ணிக் கொண்டு நேராக ஹல்த்வானி பட்டணம் சென்று அங்கு கர்த்தருக்கு ஊழியம் செய்து வரும் பாஸ்டர் சகோதரன் எம்.சி.ஜேம்ஸ் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் எங்களுக்காக மிகுந்த தேவ அன்புடன் ஆயத்தம் செய்து வைத்திருந்த நம் தமிழ் நாட்டு காலை ஆகாரமான இட்லியை சாப்பிட்டுவிட்டு எந்த ஒரு ஓய்வும் எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக எங்களுடைய சுவிசேஷ ஊழியத்திற்குத் தேவையான சுவிசேஷப் பிரசுரங்களை உட்கார்ந்து வகைப்படுத்த தொடங்கிவிட்டோம்.
வழக்கம்போல இந்தி மொழி லூக்கா சுவிசேஷத்துடன் “சமாதான காரணர்” “நீங்கள் அறிய வேண்டும் என்று தேவன் விரும்பும் நான்கு காரியங்கள்” “உங்கள் வாழ்வின் உற்ற நண்பர்” போன்ற மூன்று பிரதிகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து ஒழுங்குபடுத்தினோம்.
கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பாஸ்டர் சகோதரன் ஜேம்ஸ் அவர்கள் தங்கள் வீட்டில் ஒரு அம்மாவை உதவிக்கு அழைத்து வைத்துக் கொண்டு 2 நாட்களும் எங்களுக்கு நல்ல உணவளித்து எங்களைக் கவனித்துக் கொண்டார்கள். அந்த மலை நாட்டில் காலையில் எங்களுக்கு சூடான இட்லி, சாம்பார், காரமான சட்னி கொடுத்தார்கள். மத்தியான ஆகாரங்களும் அருமையாக இருந்தது. நாங்கள் 9 பேர்களும் ஹல்த்வானி பட்டணத்திற்குச் சென்று அங்குள்ள ஹோட்டல்களில் 2 நாட்கள் சாப்பிட்டிருந்தால் ஒரு பெரிய தொகை ஆகியிருக்கும். அந்தப் பெரிய பணச் செலவு தேவ கிருபையால் தவிர்க்கப்பட்டது. அது மட்டுமல்ல, இரண்டு தினங்கள் நல்ல சுவையான வீட்டுச் சாப்பாடு எங்களுக்கு கிடைத்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
இந்த தடவை கர்த்தருடைய ஊழியத்தில் கலந்து கொண்ட எங்கள் குழுவினரின் படங்களையும், நாம் நமது ஊழியத்திற்காக வாடகைக்கு அமர்த்திய 2 வாகனங்களையும், அதின் டிரைவர்கள் மனோஜ் மற்றும் ரமேஷ் இருவரையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அத்துடன் நாங்கள் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை மக்களுக்குக் கொடுக்க வகைப்படுத்தும் படங்களையும், நம்முடைய ஊழியங்களுக்காக நாம் வாங்கிய ஏராளமான சுவிசேஷப் பிரசுரங்கள் அடங்கிய பெட்டிகளின் படங்களையும் நீங்கள் காண்பீர்கள். அன்பின் ஆண்டவருடைய ஊழியங்களுக்காக தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் தியாக அன்போடும், ஆத்தும பாரத்தோடும் கொடுக்கப்பட்ட காணிக்கைகள் தேவனுடைய திருவுளத்திற்கு முற்றும் உகந்த இந்த தேவ ஊழியங்களில் எவ்விதமாக பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் தெளிவாகக் கண்டு கர்த்தருக்கு துதி செலுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகப் படங்களைத் தந்திருக்கின்றேன்.
இந்த தடவை நாங்கள் எங்கள் வாகன தேவ ஊழியங்களை நான்கு கட்டமாகச் செய்தோம். கௌசானி, பேஜ்நாத், பாகேஷ்வர் மற்றும் கோசி என்ற நான்கு இடங்களை எங்களுடைய பணித் தளங்களாக வைத்துக் கொண்டு அந்த இடங்களைச் சுற்றியுள்ள பல இடங்களுக்குச் சென்று தேவ ஊழியம் செய்தோம். காலையில் எங்களுடைய வாகனங்களுடன் புறப்பட்டு ஊழியம் செய்துவிட்டு மாலையிலோ அல்லது முன்கூட்டியோ நாங்கள் திரும்பிவிடுவோம். பின்னர் அடுத்த நாள் ஊழியங்களுக்கு ஜெபத்துடன் ஆயத்தமாவோம்.
கௌசானி பணித் தளம் நோக்கி
நாங்கள் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்கள் யாவையும் மக்களுக்குக் கொடுக்கும்படியாக ஆயத்தப்படுத்தி அவைகளை அட்டைப் பெட்டிகளில் போட்டுக் கட்டி முடித்துக் கொண்டோம். எங்கள் இரண்டு வாகனங்களில் எவ்வளவு பெட்டிகளை ஏற்ற முடியுமோ அவ்வளவையும் ஏற்றிக் கொண்டு பட்டணத்திற்குச் சென்று ஒரு மினி லாரியை வாடகைக்கு எடுத்து மீதியுள்ள அனைத்துப் பெட்டிகளையும் அதில் ஏற்றிக் கொண்டோம். நாங்கள் எல்லாரும் கூடி எங்களையும், எங்கள் வாகனங்களையும், எங்களுக்கு முன்னாலுள்ள ஒரு மாத கால தேவனுடைய ஊழியங்களையும் கர்த்தருடைய கரங்களில் உள்ளத்தின் பாரத்தோடு ஒப்புவித்து ஜெபித்து விட்டு ஹல்த்வானியிலிருந்து 98 கி.மீ. தொலைவிலுள்ள அல்மோரா நோக்கிப் பயணப்பட்டோம்.
சாத்தானின் தாக்குதலிலிருந்து தப்பினோம்
ஹல்த்வானியிலிருந்து அல்மோரா பயணப் பாதை எங்களுக்கு மிகவும் பழக்கமான ஒன்றாகும். ஹல்த்வானியிலிருந்து காதகோடம் சென்று அங்கிருந்து ஒரே செங்குத்து மலை ஏறி மலை உச்சியிலுள்ள பீம்தால் என்ற ஏரியைக் கடந்து பொவ்வாலி என்ற அழகிய ஊரைக் கடந்து கரம்பானி, கேர்னா வழியாக அல்மோரா செல்ல வேண்டும். வழியில் கேர்னா என்ற இடத்திற்கு வந்த போது அங்குள்ள ஹோட்டலில் எங்கள் நண்பகல் ஆகாரத்தை அருந்தினோம். 2006 ஆம் ஆண்டு நாங்கள் கேர்னாவை மையமாக வைத்து ஊழியம் செய்த நாட்களில் ஒவ்வொரு நாள் மத்தியானம் மற்றும் இரவு ஆகாரங்களை நாங்கள் சாப்பிட்ட அதே ஹோட்டலில்தான் இப்பொழுதும் அருந்தினோம். கேர்னாவிலிருந்து அந்த ஹோட்டலுக்கு வரவேண்டுமானால் சுமார் சுமார் 2 கி.மீ. வாகனத்திலேயேதான் வரவேண்டும். எங்கள் இரண்டு வாகனங்களையும், நாங்கள் வாடகைக்கு அமர்த்தி வந்த மினி லாரியையும் அந்த ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்திவிட்டு உணவருந்தினோம். ஹோட்டலுக்கு முன்பாக எங்கள் வாகனங்கள் நின்று கொண்டிருப்பதை நீங்கள் படத்தில் காணலாம்.
நாங்கள் அங்கு உணவருந்திவிட்டு அல்மோரா பட்டணத்தின் உச்சிப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். எங்கள் வாகனத்தில் ஒன்று முன்கூட்டியே சென்றுவிட்டது. அடுத்த வாகனம் மினி லாரிக்கு பின்னால் போய்க் கொண்டிருந்தது. அதில் சகோதரன் நார்ட்டன், சகோதரன் விஜய்சிங் மற்றும் நானும் அமர்ந்திருந்தோம். மினி லாரியில் ஏராளமான தேவனுடைய பிரசுரங்கள் அடங்கிய பெட்டிகள் இருந்ததால் அதைக்குறித்து காவல் துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் ஏதாகிலும் கேட்பார்கள் என்ற காரணத்திற்காக அதற்கான தஸ்தாவேசுகளை கரத்தில் எடுத்துக் கொண்டு பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் அதே மினி லாரியில்தான் போய்க் கொண்டிருந்தார்கள்.
மினி லாரி முன்பு போய்க் கொண்டிருந்தது. அல்மோரா இன்னும் 7 கி.மீ. தொலைவில் மலை உச்சியில் இருக்கும்போது எங்களுக்கு எதிரே வளைவில் மிக விரைவாக வந்து கொண்டிருந்த உத்தராஞ்சல் அரசாங்க போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று வந்து நேருக்கு நேராக நமது மினி லாரியுடன் மோதி நின்றது. தேவனுடைய அளவற்ற கிருபையாலும், தேவ பிள்ளைகளாகிய உங்களுடைய உருக்கமான ஜெபங்களின் காரணமாகவும் நமது சகோதரனுக்கோ அல்லது டிரைவருக்கோ எந்த ஒரு அடியும்படவில்லை. ஆனால், மினி லாரியின் முன்னாலுள்ள வலுமையான நீண்ட பட்டைக்கம்பி உடைந்து போயிற்று. எதிரே வந்த பேருந்தின் டிரைவர்மேல்தான் குற்றம் முழுமையாக இருந்தது. காரணம், மினி லாரி டிரைவர் கீழிருந்து எவ்வளவோ ஒலி எழுப்பியும் கவனிக்காமல் தனது வாகனத்தை அரசு பேருந்தின் டிரைவர் கொண்டு வந்து மோதிவிட்டார்.
குற்றத்தை அரசு பேருந்தின் டிரைவர் ஒத்துக் கொள்ளாததால் நமது மினி லாரி டிரைவர் சமீபத்திலிருந்த காவல் துறை அலுவலகத்தில் சென்று புகார் தெரிவிக்கவே காவல் துறை அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிளில் கொஞ்ச நேரத்தில் வந்துவிட்டார். அதே சமயத்தில் அரசு போக்குவரத்து கழகத்திலிருந்தும் உயர் அதிகாரிகள் வந்தனர். அரசு போக்குவரத்து அதிகாரிகள் தங்கள் டிவைருக்கு சாதகமாகவே பேசினார்கள். ஆனால், அந்த காவல் துறை அதிகாரி சொற்ப வயதினனாக இருந்தபோதினும் நீதியுள்ளவராக இருந்தபடியால் பட்சபாதம் இல்லாமல் அடித்துப் பேசி ரூபாய் 800 நஷ்ட ஈடாக நம்முடைய மினி லாரி டிரைவருக்கு அந்த இடத்திலேயே வாங்கிக் கொடுத்து விட்டுச் சென்றார். அரசு போக்குவரத்து பேருந்தின் டிரைவர் மிகவும் ஏழ்மையானவர், மது அருந்தியிருக்கின்றார் என்ற காரணத்திற்காக அதிக தொகை கேட்கவில்லை என்று எங்களிடம் சொன்னார்.
கர்த்தருடைய கிருபையால் நாங்கள் அந்த இடத்தில் சுகமாகப் பாதுகாக்கப்பட்டு அல்மோரா வந்து சேர்ந்தோம். அல்மோரா வரும் பொழுது மாலைப் பொழுதாகிவிட்டது. நாங்கள் நேராக அல்மோரா பட்டணத்திலுள்ள குஷ்டரோக மருத்துவமனை சென்று அங்குள்ள அறை ஒன்றில் நாம் மினி லாரியில் கொண்டு சென்ற நமது பெட்டிகளை எல்லாம் வைத்தோம். மினி லாரி மருத்துவமனையினுள் நிற்பதையும் நமது பெட்டிகள்அங்கு இறக்கப்பட்டு கீழே அமைந்துள்ள ஒரு அறைக்கு எடுத்துச் செல்லப்படுவதையும் நீங்கள் காணலாம்.
கௌசானி வந்து சேர்ந்தோம்
அல்மோராவிலிருந்து கௌசானி என்ற இடத்திற்கு 51 கி.மீ. தூரமாகும். நாங்கள் அங்கிருந்து கால தாமதம் இல்லாமல் உடனே பிரயாணப்பட்டோம். காரணம், அன்று இரவு கௌசானியிலுள்ள அரசாங்க ஓய்வு விடுதியில் தங்குவதற்கான பணம் முன்கூட்டியே கட்டப்பட்டுவிட்டது. நாங்கள் கௌசானி வரும்பொழுது நன்றாக இருள் சூழ்ந்து இருட்டிவிட்டது. அரசாங்க ஓய்வு விடுதி மலை உச்சியில் மரங்களடர்ந்த சோலைக்குள்ளாக இருக்கின்றது. கௌசானி என்ற இடத்திலிருந்து சில கி.மீ. தூரம் செங்குத்தாக மேலாக பயணப்பட்டு வர வேண்டும். பல தனித்தனி அறைகள் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் நாங்கள் தங்குவதற்கு நான்கு அறைகள் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் கழிப்பறை யாவருக்கும் பொதுவானதாக இருந்தது. அந்தக்கட்டிடத்தில் சில கழிப்பறைகள் இருந்தபடியால் எங்களுக்கு அதிக கஷ்டமாகத் தெரியவில்லை. எனினும், இராக்காலங்களில் எங்கள் அறைகளைத் திறந்து கொண்டு குளிரான அந்த இடத்தில் வெளி வருவது எங்களுக்கு மிகவும் கடினமானதாகவே காணப்பட்டது. கௌசானியில் நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதியை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
அந்த உயரமான இடத்திலிருந்து கீழே பள்ளத்தாக்கைப் பார்த்தால் மிகவும் அழகாக இருக்கின்றது. இமயமலைகளின் 350 கி.மீ. நீளத்திற்கு வெண் பனிச் சிகரங்கள் தெரிகின்றன. நாங்கள் தங்கியிருந்த அந்த இடத்தின் உயரம் சுமார் 8000 அடிகளாகும். அங்கிருந்து காணப்படும் அழகான பள்ளத்தாக்கின் காட்சியை நீங்கள் இந்தச் செய்தியில் பார்ப்பீர்கள்.
அந்த இடத்தின் உயரத்தையும், குளிரையும் நாங்கள் முன்கூட்டியே அறிந்து எங்களுக்கு அவசியமான கம்பளிச் சட்டைகளை எல்லாம் எங்களுடன் எடுத்துச் சென்றிருந்தோம். அந்த இடத்தின் ஒரு விசேஷம் என்னவென்றால் நாம் சற்று ஏமாந்தாலும் அட்டைகள் நம் உடம்பின் இரத்ததைக் கடித்து உறிஞ்சிவிடும். ஒரு நாள் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் ஒரு பாதத்தின் மேற் பகுதியில் அட்டை ஒன்று கடித்து இரத்தம் தாராளமாக சிதறியிருப்பதை நாங்கள் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.
நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்ததும் எங்கள் எல்லாருக்கும் அதிக பசியாக இருந்தபடியாலும் இரவில் அதிக நேரம் ஆகிவிட்டபடியாலும் அங்குள்ள அரசாங்க ஓய்வு விடுதியிலே எங்களுக்கான சாப்பாட்டிற்கான ஆர்டர் கொடுத்தோம். அவ்வளவுதான், அங்கு நாங்கள் சாப்பிட்டதால் ஒரு பெரிய தொகை கொடுக்க வேண்டியதாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் தலைக்கு சராசரியாக ரூபாய் 80 வந்திருந்தபோதினும் நாங்கள் திருப்தியாக சாப்பிட இயலாமல் போய்விட்டது. அதுவே அரசாங்க விடுதியில் எங்கள் முதலும் கடைசி சாப்பாடுமாக ஆகிவிட்டது. எங்கள் எல்லாருக்குமே அங்கு சாப்பிட்ட காரணத்தால் மிகவும் துக்கமாக இருந்தது. காரணம், போதுமான ஆகாரம் கொடாமல் ஒரு பெரிய தொகைக்குப் பில் கொடுத்துவிட்டார்கள் என்பதுதான். அதிலிருந்து நாங்கள் அங்கு ஆகாரம் சாப்பிடுவதை நிறுத்தி கீழே அடிவாரத்திலுள்ள கௌசானி வந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். அங்கு ஆகாரம் விலை குறைவாக இருந்த போதினும் சாப்பாடு சுத்தமாகத் தெரியவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு கீழாக அரசாங்க ஓய்வு விடுதியின் சாப்பாட்டு அறையை ஒட்டி பள்ளத்தில் ஒரு வயதான மனிதர் தனது வாலிப மகனோடு ஒரு ஹோட்டலை நடத்தி வருவதை நாங்கள் கண்டு அந்த மனிதரிடம் சென்று எங்களுக்கு ஆகாரம் கொடுப்பதைக் குறித்து நாங்கள் கேட்டோம். அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு எங்களிடம் நியாயமான பணத்தைப் பெற்றுக் கொண்டு நல்ல தரமான திருப்தியான ஆகாரத்தை தினமும் மூன்று வேளையும் எங்களுக்கு செய்து கொடுத்தார். அன்பின் ஆண்டவர் அந்த மனிதரை அந்த இடத்தில் எங்களுக்காக ஆயத்தம் செய்து வைத்திருந்தார். அவர் அந்த இடத்தில் எங்களுக்கு கிடைத்திராதபட்சத்தில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டிருப்போம். இந்த தடவை எங்களுடைய தேவ ஊழியத்தின் பாதையில் அன்பின் தேவன் எங்கள் ஆகாரத்திற்கான காரியங்களை நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் அருமையாக கவனித்துக் கொண்டார். தேவப் பிள்ளைகளாகிய உங்களுடைய ஜெபங்கள்தான் இந்தக் காரியங்களை எல்லாம் எங்களுக்கு நடத்திக் கொடுத்தது.
கௌசானியைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
நாங்கள் கௌசானியில் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். ஒவ்வொரு நாள் காலையிலும் நாங்கள் எங்கள் வாகனங்களில் தேவனுடைய பிரசுரங்களை எடுத்துக்கொண்டு மிகுந்த ஜெபத்துடன்கௌசானியைச் சுற்றி பள்ளத்தாக்கில் இருந்த 39 கிராமங்களில் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்தோம். அதற்காக நாங்கள் கௌசானியிலிருந்து 37 கி.மீ. தொலைவு வரை பிரயாணம் செய்தோம். சென்ற இடங்களில் நாங்கள் 2 மேல் நிலைப் பள்ளிகளிலும், சில ஆரம்ப பாடசாலைகளிலும் தேவனுடைய பிரசுரங்களை பிள்ளைகளுக்குக் கொடுத்தோம்.
பிந்தா என்ற இடம் கௌசானியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. அது ஒரு அழகான மலைக் கிராமம். நாங்கள் எங்கள் வழித்தடத்தில் ஜாலோங், ரேத், குட்டல்கார்ட், கிஷன்பூர், சூக்கல் சோரா, பூராலி, பாலி, சுக்ரோட், லோட் என்ற கிராமங்களிலும் எங்கள் வாகனங்களை நிறுத்தி நிறுத்தி ஆண்டவருடைய பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டே வந்தோம். பிந்தா வந்ததும் அங்குள்ள நதிப் பாலத்துக்கு அருகே இருந்த ஒரு ஹோட்டலில் நாங்கள் எல்லாரும் டீ குடித்தோம். அங்கு கூடியிருந்த மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்ததுடன் அருகில் இருந்த ஒரு ஆரம்ப பள்ளியிலிருந்து மதிய இடை வேளை சமயத்தில் அங்கு வந்திருந்த பள்ளிப் பிள்ளைகளுக்கும் பிரதிகளைக் கொடுத்தோம். நண்பகல் கடந்து அதிக நேரம் ஆகிவிட்டபடியால் அத்துடன் நாங்கள் அந்த இடத்திலிருந்து கௌசானிக்குத் திரும்பி விட்டோம். பிந்தாவில் ஒரு பெரிய மேல் நிலைப் பள்ளி மேட்டின்மேல் இருக்கிறது என்று நாங்கள் கேள்விப்பட்டபடியால் அடுத்த நாள் காலை பள்ளி ஆரம்பிக்கும் நேரத்தில் அங்குள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் ஆண்டவருடைய பிரசுரங்களை எப்படியாவது கொடுத்து விடவேண்டும் என்ற ஆவலில் காலையிலேயே எங்கள் வாகனங்களில் போதுமான ஆண்டவருடைய பிரசுரங்களை எடுத்துக் கொண்டு ஜெபத்துடன் பிந்தா வந்து சேர்ந்து ஓரிரு கி.மீ. தொலைவில் மேட்டிலிருக்கும் மேல் நிலை பள்ளிக்கு எங்கள் வாகனங்களை கொண்டு சென்று ஆங்காங்கு பக்கத்து கிராமங்களிலிருந்து பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும் முக்கியமான பாதைகளில் நாங்கள் கரங்களில் போதிய அளவு சுவிசேஷப் பிரதிகளை ஏந்தியவர்களாக நின்று கொண்டோம். அதற்கு ஏற்றாற்போல எங்கள் வாகனங்களையும் மேட்டில் ஒன்றும் பள்ளத்தில் ஒன்றுமாக நாங்கள் நிறுத்தினோம். நேரத்திலேயே நாங்கள் அங்கு வந்துவிட்டபடியால் பிள்ளைகளுடைய வரவுக்காக காத்துக் கொண்டிருந்தோம். பள்ளி ஆரம்பமாகும் நேரத்தில் பள்ளி மாணவ மாணவிகள் பற்பல இடங்களிலிருந்து சாரை சாரையாக வரத் தொடங்கினர். கர்த்தருடைய கிருபையால் ஓரளவு எல்லா மாணவ மாணவியருக்கும், ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் வழங்கினோம். பிந்தா மேல் நிலைப் பள்ளியில் மொத்தம் 250 பிள்ளைகள் படிப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். எந்த ஒரு எதிர்ப்பும் முறுமுறுப்புமில்லாமல் யாவரும் பிரசுரங்களை அமைதியாக வாங்கிச் சென்றனர். கர்த்தருக்கே மகிமை. பிந்தாவிலுள்ள மேல் நிலைப்பள்ளியின் முகப்பு தோற்றத்தையும், பிள்ளைகள் தேவனுடைய வார்த்தைகளை வாங்கிச் செல்லுவதையும் நீங்கள் காணலாம்.
எங்களிடம் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளைப் பெற்றுச் சென்றிருக்கும் பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களோடு ஆண்டவர் தமது வார்த்தைகளின் மூலமாக பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாள் கௌசானியிலிருந்து 18 கி.மீ.தொலைவிலுள்ள டோலட் என்ற இடம் வரை சென்றோம். கௌசானியை தாண்டி சில கி.மீ. தூரம் சென்றதும் ஒரு ரஸ்தா சந்திப்பு வந்தது. அக்கம் பக்கத்து ஊரிலிருந்து அந்த இடத்திற்கு வந்து பேருந்தை பிடிக்கும் ஒரு இடமாக அது இருந்தது. அந்த இடத்திற்கு உசிரியா பெண்ட் என்று பெயர். அப்பொழுது அந்தச் சந்திப்பில் கொஞ்ச பேர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு தேவ்சால், டோட்டா ஷிலாங், சேட்டக், குரோட்டா, ஜன்மோடா, கானி என்ற கிராமங்களில் எல்லாம் எங்கள் வாகனங்களை நிறுத்தி நிறுத்தி மக்களுக்கு சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டே சென்று டோலட் என்ற இடத்திற்கு வந்து அந்த கிராமத்தில் ஊழியம் செய்த பின்னர் அங்கிருந்து சற்று தொலைவிலிருந்த அந்த ஊர் ஆரம்ப பாடசாலைக்குச் சென்றோம். அங்கிருந்த தலைமை ஆசிரியர் தனது பள்ளி மாணவர்களுக்கு படம் காட்டி தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்க தனது சம்மதம் தெரிவிக்கவே பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் அந்தப் பள்ளியில் தன் வசம் இருந்த படச்சுருளைக் காண்பித்து ஆண்டவருடைய சுவிசேஷத்தைக் கூறினார்கள். அத்துடன் தேவனுடைய பிரசுரங்களை நாங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்தோம். டோலட் ஊர் ஆரம்ப பாடசாலையையும் அங்கு சுவிசேஷம் அறிவித்துக் கொண்டிருக்கும் நமது ஊழியர்களையும் படத்தில் நீங்கள் காணலாம்.
நாங்கள் பள்ளத்திலிருந்த பள்ளியில் கர்த்தருடைய ஊழியத்தை முடித்து மேலே வரவும் நாங்கள் கிராமத்தில் கொடுத்த தேவனுடைய பிரசுரங்களில் சிலவற்றை நாங்கள் காணும்படியாக ரோட்டில் கிழித்துப் போட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். அதைக்காண எங்கள் மனதுக்கு சற்று கஷ்டமாக இருந்த போதினும் கோதுமை பயிருக்குள் களையை விதைக்கும் சாத்தானுடைய போராட்டங்கள் எங்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று எங்களை நாங்களே கர்த்தருக்குள் தேற்றிக் கொண்டோம்.
அந்த நாளில் நாங்கள் கௌசானியிலிருந்து டோலட் வரைக்கும் சென்ற எங்கள் வழித்தடத்திலுள்ள கிராம மக்களுக்கும், கடை வீதியிலுள்ள மக்களுக்கும், வழியில் நாங்கள் கண்ட பலருக்கும் தேவனுடைய பிரசுரங்களை அதிகமாகக் கொடுத்திருந்தோம். வழியில் நாங்கள் கொடுத்த பிரசுரங்களை எவரும் கிழித்துப் போடவில்லை. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
ஒரு நாள் காலையில் நாங்கள் கௌசானியிலிருந்து 37 கி.மீ. தொலைவிலுள்ள ஜாயாலி என்ற இடத்திற்கு ஜெபத்துடன் புறப்பட்டோம். எங்கள் வழித்தடத்தில் லைலாகாட், பாரி, ரோட்ரி, ஹஸ்தினாபூர், குவால்போக்கர், டங்கல்காம், டவ்காட், கடி போன்ற கிராமங்கள் இருந்தன. அந்தக் கிராமங்களில் எல்லாம் நாங்கள் தேவனுடைய பிரசுரங்களை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தோம். நாங்கள் சென்று கொண்டிருந்த எங்கள் வழித்தடத்தில் அப்பொழுது நெல் அறுவடை நடந்து கொண்டிருந்தது. நெல் அறுவடையில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளைக் கொடுத்துவிட வேண்டும் என்ற தாகத்தில் நமது தேவ ஊழியர்கள் வயல்களுக்குள் இறங்கி அவர்களுக்கு பிரசுரங்களைக் கொடுத்ததுடன், அங்கு வேலை செய்து கொண்டிருந்த மக்களுக்கு ஆண்டவர் இயேசு இரட்சகரைக் குறித்தும் பேசினார்கள். அறுவடை வேலையில் இருந்த மக்கள் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு செவி சாய்த்தார்கள். நமது தேவ ஊழியர்களில் சகோதரன் விஜய்சிங் அவர்கள் வயல் நிலங்களில் மானைப் போல துள்ளிக் குதித்து ஓடி கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுத்தார்கள். அவர்கள் அப்படி வயல்களில் ஓடிச் சென்று பிரசுரங்களைக் கொடுக்கும் காட்சிகளை நீங்கள் காண்பதுடன், பாஸ்டர் சகோதரன் எம்.சி.ஜேம்ஸ் அவர்கள் ஒரு குடியானவ மனிதனண்டை அமர்ந்து சுவிசேஷத்தை அவனுக்கு பகிர்ந்து கொள்ளுவதையும் நீங்கள் காணலாம்.
அன்று அன்பின் ஆண்டவர் எங்களுக்கு ஒரு அருமையான ஊழியத்தை தந்தார். தேவனுடைய பிரசுரங்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மக்கள், சுவிசேஷ செய்தி கேட்ட மக்கள் யாவரையும் கர்த்தர் கிருபையாக சந்திக்க அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
நாங்கள் 4 நாட்கள் மாத்திரமே கௌசானியில் தங்கி இருந்து தேவ ஊழியம் செய்தபோதினும் ஒரு பயனுள்ள ஊழியத்தை அன்பின் ஆண்டவர் அங்கு எங்களுக்குத் தந்தார். நாங்கள் அங்கு செய்த ஊழியங்களின் முழு வர்ணனையையும் உங்களுக்கு கொடுக்க இயலாதவர்களாக இருக்கின்றோம். அது எங்களால் கூடவும் கூடாது. மிகவும் மேலெழுந்தவாரியாக ஒன்றிரண்டை இங்கு குறிப்பிட்டிருக்கின்றோம். அங்கு செய்யப்பட்ட ஊழியங்கள், நாங்கள் எடுத்துக் கொண்ட பிரயாசங்கள் எல்லாம் கர்த்தருடைய ஞாபக புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. நாங்கள் கௌசானியை விட்டுப் புறப்படு முன்னர் நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதியிலுள்ள பணியாளர்கள் யாவருக்கும் நாங்கள் கொண்டு சென்ற பிரதிகள் யாவிலும் வகைக்கு ஒன்றாக பிரதிகளை ஜெபத்துடன் அவர்களுக்குக் கொடுத்ததுடன், எங்களுக்கு அன்பொழுக நியாயமான பணத்தைப் பெற்றுக் கொண்டு சுவையான உணவளித்த அந்த வயோதிப மனிதருக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். நாங்கள் அங்கிருந்து புறப்படுகின்றோம் என்றதும் அந்த மனிதருக்கு கண் கலங்கியது. உண்மையாகவே அவரது கண்களில் கண்ணீர் துளிர்த்தன என்று நான் நினைக்கின்றேன். காரணம், நாங்கள் அவருடன் மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டோம். நாங்கள் அவரிடம் விடைபெறும்போதும் அவருக்கு ஒரு சிறிய அன்பளிப்பைக் கொடுத்தோம். அத்துடன் கௌசானி கடை வீதியில் நாங்கள் சாப்பிட்ட ஹோட்டல்காரருக்கும் தேவனுடைய பிரசுரங்களை மறவாது கொடுத்தோம்.
அதின்பின்னர் நாங்கள் அங்கிருந்து 17 கி.மீ. தொலைவிலுள்ள பேஜ்நாத் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தைகளை எங்கள் கரங்களிலிருந்து பெற்று ஆவலோடு படிக்கும் சில புகைப்படங்களை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள். அவர்கள் வாசிப்பது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகள். அவைகள் ஒருக்காலும் வெறுமையாகத் திரும்பாது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கர்த்தர் தம்முடைய வார்த்தைகளின் மூலமாக அந்த மக்களுடன் பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.