உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் (1 கொரி 1 : 9)
“இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை, தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை, மனம் மாற அவர் மனுஷன் அல்ல” (1 சாமுவேல் 15 : 29)
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி என்ற அழகான மலை வாசஸ்தல பட்டணத்திற்கு அருகிலுள்ள கில்மெல்போர்ட் என்ற தேயிலைத் தோட்டத்திலிருந்த அலுவலகத்தில் நான் சுமார் 20 ஆண்டு காலம் வேலை செய்தேன். பின் வந்த நீண்ட ஆண்டுகளில் நான் செய்யவிருந்த விசாலமான தேவ ஊழியத்தை நான் தேவ நாம மகிமைக்காக செய்து முடிக்க எனக்கு நல்லதொரு பயிற்சி கொடுக்கும் நோக்கத்தோடு தேவன் அந்த இடத்தில் என்னை வைத்திருந்தார். அதைக் குறித்த முழு விபரத்தையும் இந்தப் புத்தகத்தின் மற்றொரு இடத்தில் நான் எழுதியிருக்கின்றேன்.
அந்த தேயிலை தோட்டத்தில் எனக்கு கொடுக்க வேண்டிய பயிற்சி முற்றுப் பெற்றதும் அதை விட்டு நான் வெளியே வரும்படியாக தேவன் என்னோடு அதிகமாக போராட வேண்டியதாக இருந்தது. நான் அந்த அன்பருக்கு அசைந்து கொடுக்கவே இல்லை. நீண்ட நாட்கள் நான் ஆண்டவரோடு போராடிக் கொண்டிருந்தேன். சுகயீனமான எனது மனைவி மற்றும் 13, 12 வயதுடைய என்னுடைய சிறு பாலகர்கள் இருவர், ஊரில் எனது கரத்தை மாதந்தோறும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் எனது வயது சென்ற ஏழைப் பெற்றோர் போன்றவர்களை போஷிக்க வேண்டியது என்மேல் விழுந்த தலையாய கடமையாக இருந்தது. வேலையை விட்டுவிட்டு நான் என்ன செய்வது? ஆனால், தொடர்ந்து கர்த்தர் என் உள்ளத்தில் நான் எனது உலக வேலையை விட்டுவிடும்படியாகவும், தாம் என்னை பாதுகாப்பாக வழி நடத்தப்போவதாகவும் பேசிக் கொண்டே இருந்தார். நாட்கள் கடந்தன. நான் முரட்டாட்டம் பிடித்துக் கொண்டிருந்தேன். இருப்பினும் கர்த்தர் என்னை விட்டபாடில்லை. ஒரு நாள் இரவு எங்கள் இருவருக்கும் போராட்டம் வலுத்தது. இறுதியாக நான் அந்த அன்பருக்கு அடிபணிந்தேன். 1976 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் அது. அந்த மாதத்தின் ஒரு நாள் இரவின் பிந்திய நேரம் அது. நான் எனது நித்திரையில் இருந்தேன். அந்த இரவிலும் என் உள்ளத்தில் பேராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது நான் ஆண்டவரிடத்தில் நான் எனது வேலையை விட்டுவிட்டு கஷ்டப்படும் நாட்கள் எனக்கு வந்தால் உமது வாக்குத்தத்தத்தை வைத்து நான் உம்மோடு போராட வசதியாக நீர் எனக்கு உம்முடைய வாக்குத்தத்தத்தை தர வேண்டும் என்று நான் ஆண்டவரிடம் கேட்டேன்.
உடன்தானே எனது உள்ளத்தில் வேதாகமத்தில் தமது வாக்கை எனக்குத் தருவதாகவும், அதை உடனே எடுத்து வாசிக்கும்படியாகவும் என் உள்ளத்தில் கர்த்தர் உணர்த்தவே நான் எனது தலையணை அருகில் இருந்த வேதாகமத்தை எடுத்து திறந்து அதில் எனது டார்ச் விளக்கினைப்போட்டுப் பார்த்தேன். டார்ச் விளக்கின் ஒளி ஏசாயா 60 ஆம் அதிகாரம் 19 ஆம் 20 ஆம் வசனங்களின் மேல் விழுந்தது. வசனங்களை கவனியுங்கள் “இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், உன் துக்க நாட்கள் முடிந்து போம்” ஆ, இதைவிட நமக்கு என்ன உத்தரவாதம் தேவை? மறு நாளே எனது வேலையை நான் ஜெபத்தோடு ராஜிநாமா செய்துவிட்டு வடக்கே இமயமலைகளிலுள்ள ரிசிகேஷத்துக்கு தேவ ஊழியத்தின் பாதையில் புறப்பட நான் ஆயத்தமானேன்.
ஒரு மகா பெரிய ஆச்சரியமான காரியத்தை நீங்கள் இங்கு கவனிக்க வேண்டும். நான் எனது உலக nலையை விட்டதும் ஆண்டவரிடம் அவர் கொடுத்த மேற்கண்ட வாக்குத்தத்ததை நான் அவருக்குக் காண்பித்து ஜெபிக்க வேண்டிய தேவையே எனக்கு ஏற்படவில்லை. அல்லேலூயா. நான் உம்முடைய வாக்கை உமக்கு காண்பித்து உம்மோடு போராட வேண்டும் என்று நான் ஆண்டவரிடம் சொன்னேன். ஆனால், அந்த அன்பர்தான் தாம் கொடுத்த வாக்கை அவ்வப்போது எனக்கு சுட்டிக் காண்பித்து நான் உனக்குக் கொடுத்த வாக்கை என் நினைவில் வைத்திருக்கின்றேன். என் வாக்கின்படி உன்னை வழி நடத்துவேன், நான்உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று அந்த அன்பின் கர்த்தர்தான் என்னை நினைப்பூட்டிக் கொண்டே வந்தார்.
ஒரு சம்பவத்தை கவனியுங்கள். எனது மூத்த மகன் சுந்தர்சிங்கை பாளையங்கோட்டையிலுள்ள புனித யோவான் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ப்பதற்காக நான் அழைத்துக் கொண்டு சென்றேன். எவ்வளவோ முயற்சித்தும் மகனுக்கு அங்கு இடம் கிடைக்கவில்லை. இறுதியாக, மிகவும் மனச்சோர்புடன் மகனைக்கூட்டிக் கொண்டு நான் கால் நடையாக திரும்பிக் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் பாளையங்கோட்டையை அடுத்துள்ள சமாதானபுரம் என்ற இடத்திற்கு வரவும் ஒரு வீட்டின் தலை வாசலில் கர்த்தர் எனக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை அப்படியே பிரேம் பண்ணி போட்டிருந்ததை என் கண்கள் கண்டன. பச்சை போர்டில் பெரிய வெள்ளை எழுத்துக்களாக அது பளிச்சிட்டு மின்னிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் தேவன் என் உள்ளத்தில் “மகனே கலங்காதே, நான் எனது வாக்கின்படி உன்னை வழிநடத்துவேன்” என்று கூறினார். என்ன ஆச்சரியம், அந்தப்படியே அந்த நாளிலேயே மகனுக்கு நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் (Scott Christian College) இடம் கிடைத்தது. அங்குதான் அவர்கள் தனது எம்.ஏ. வகுப்பு வரை படித்து முடித்தார்கள்.
ஏதாவது மனச்சோர்பான நேரம் வரும்போது வேதாகமத்தை திறந்த உடன் அவர் எனக்கு கொடுத்த அந்த ஆச்சரிய வார்த்தைகளே அங்கு காணப்படும். அந்த வார்த்தைகளைக் கண்டதும் என் உள்ளம் கர்த்தருக்குள் பூரிக்கும். ஆ, தேவன் தமது வார்த்தைகளில் எத்தனை உண்மையுள்ள கர்த்தராக இருக்கின்றார் பாருங்கள்.
பரிசுத்த வேதாகமத்தில் 40 என்ற இலக்கம் நீண்ட பரிபூரணமான இலக்கமாகும். இந்த 40 என்ற எண் வேதாகமத்தில் பல இடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றது என்பதை நாம் நன்கறிவோம். தாவீது ராஜா, சாலொமோன் ராஜா போன்றவர்கள் தேவ ஜனத்தை நீண்ட 40 ஆண்டு காலமாக அரசாட்சி செய்ததை நாம் காண்கின்றோம். அந்த நிலையில் அந்த 40 ஆண்டுகாலத்தையும் கடந்து 46 ஆண்டு காலம் பாவியாகிய நான் அன்பின் ஆண்டவருக்கு தேவ ஊழியம் செய்ய என்னைப் பெலப்படுத்தினார். அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக என்னை தமது கரத்தின் கருவியாக எடுத்து தயவாக பயன்படுத்தினார்.
2012 ஆம் ஆண்டுதான் நான் தேவ ஊழியத்தின் பாதையில் கடைசியாக இமயமலைப் பகுதிகளுக்குச் சென்றதாகும். அந்த ஆண்டில் 1000 ஹிந்தி மொழி வேதாகமங்கள், 5000 இந்தி மொழி புதிய ஏற்பாடுகள், 20000 ஹந்தி மொழி லூக்கா சுவிசேஷங்கள், 50000 இந்தி மொழி சுவிசேஷ துண்டு பிரதிகள், 1000 இந்தி மொழி சாதுசுந்தர்சிங் வாழ்க்கை சரித்திர புத்தகங்கள் “மெய்ச்சமாதானத்தைத் தேடிக்கொண்டு” (The search for True Peace) 800 புத்தகங்கள் போன்றவற்றை அநேக ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கும், பட்டணங்கள், கிராமங்களில் வசிக்கின்ற அநேக மக்களுக்கும் 2 வாகனங்களில் நாங்கள் மொத்தம் 9 பேர்கள் கொண்ட குழுவாகச் சென்று ஜெபத்தோடு சுமார் ஒரு மாத காலம் கொடுத்தோம். அந்த மாட்சியான ஊழியத்திற்குப் பின்னர் நான் தேவ ஊழியத்தின் பாதையில் வடக்கே செல்ல இயலாத வகையில் கடும் நோய் பிணி என்னைத் தாக்கினது. சர்க்கரை நோயின் கடுமை காரணமாக பாதங்கள் இரண்டிலும் உணர்ச்சியற்ற நிலை காணப்படுகின்றது. சற்று நேரம் கூட நிற்பது என்பது எனக்கு கஷ்டமாக இருக்கின்றது. அதற்கான மருத்துவ சிகிட்சைகளை தொடர்ந்து நான் எடுத்து வருகின்றேன். நீண்ட நேரம் கம்பியூட்டரில் உட்கார்ந்து தேவ எக்காளத்திற்கான செய்திகளை டைப் செய்ய இயலாதவனாக இருக்கின்றேன். கால்கள் இரண்டும் நன்கு வீங்கிக் கொள்ளுகின்றன. அதின் காரணமாக தேவ எக்காளம் பத்திரிக்கையை தொடர்ந்து என்னால் அச்சிட்டு வெளியிட முடியவில்லை. இவை யாவுக்கும் மத்தியில் தேவன் தமது காயப்பட்ட கரத்தை நீட்டித் தொட்டு ஒரு தெய்வீக சுகத்தை பரத்திலிருந்து எனக்குக் கட்டளையிட இரவும், பகலும் அவரை நோக்கிப் பார்த்தவனாக இருக்கின்றேன். தேவப்பிள்ளைகளாகிய நீங்களும் அதற்காக தயவாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
வடக்கே ஆண்டவருடைய ஊழியத்திற்கும் செல்லவில்லை, தேவ எக்காளமும் அச்சிட்டு வெளியிடவில்லை. அதின் காரணமாக நமது தேவ எக்காள சந்தாதாரர்கள் பலரும் தங்கள் உதவிகளை நிறுத்திக் கொண்டுவிட்டனர். அதற்காக நான் அந்த அன்பான தேவ மக்கள் மேல் எந்த ஒரு மன வருத்தமும் அடையவில்லை. தொடர்ந்து நான் அவர்களை நேசிக்கின்றேன். ஒழுங்காக நான் அவர்களுக்காக ஜெபித்து வருகின்றேன் என்பதையும் கர்த்தர் அறிகின்றவராக இருக்கின்றார். ஒரு காலத்தில் தேவ ஊழியத்தை எத்தனையாக ஆதரித்த, ஊழியங்களுக்காக ஜெபித்த அன்பு மக்கள் அல்லவா அவர்கள்! அப்படி நான் அவர்களை பகைப்பவனாக இருந்தால் நான் அன்பின் ஆண்டவரின் பிள்ளை அல்லவே!
நண்பர் விட்டோடினும் மாறிடா நண்பரே,
கொண்டாயுன் இரத்தத்தால் கொற்றவா ஸ்தோத்திரம்
என்ற பக்தனின் பாடலின்படி நண்பர்கள், அன்பர்கள், பிராண சிநேகிதர்கள், அரணாக நின்று அரவணைத்துக் கொண்டிருந்த யாவரும் கைவிட்டபோதினும், மலைகள் விலகி, பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், தமது விலையேறப்பெற்ற இரத்தக்கிரயத்தால் என்னை எனது 18 ஆம் வயதில் தமது சொந்தமாக்கி, தமது இரட்சிப்பின் சந்தோசத்தை என் உள்ளத்தில் ஊற்றிய என் அருமை நேசர் மாறாத கர்த்தராக இருந்து அதிசயம் அற்புதமாக என்னை வழிநடத்தி ஆதரித்து வருகின்றார். உண்மைதான், “இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் நம்முடைய தேவன், மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” (சங்கீதம் 48 : 14 ) என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லுகின்றது அல்லவா?
எனினும், தேவ எக்காளத்தின் ஒரு சிறு கூட்டம் தேவ மக்கள் தொடர்ந்து தங்கள் அன்பின் உதவிகளை மாதந்தோறும் ஒழுங்காக எனக்கு அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர். சிலர் அவ்வப்போது தேவ அன்புடன் காணிக்கைகள் அனுப்பி அன்பின் பாசத்தோடு கடிதங்கள் எழுதி கர்த்தருக்குள் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். “நான் முன்புபோல தேவ ஊழியத்திற்கு வடக்கே செல்லுவதில்லை, தேவ எக்காளமும் அச்சிட்டு வெளியிடுவதில்லை, எனக்கு காணிக்கைகள் எதுவும் அனுப்ப வேண்டாம்” என்று நான் அவர்களை அன்பாகக் கேட்டாலும் அவர்கள் அதற்கு சம்மதிப்பதில்லை. “கடந்த காலங்களில் நீங்கள் தேவனுடைய சுவிசேஷத்தை தேவனை அறியாத இந்தியாவின் வட பகுதிகளில் அறிவிப்பதற்காக பட்ட பாடுகளும், பிரயாசங்களும், கண்ணீர்களும் எங்களுக்கு நன்கு தெரியும். உங்கள் ஜீவனையே அர்ப்பணம் செய்து அந்த தேவ ஊழியங்களை எல்லாம் அன்பின் ஆண்டவருக்காக உண்மையோடும், உத்தமத்தோடும் மேற்கொண்டீர்கள். உங்களின் சரீர பெலன் ஒடுங்கிய இந்த வியாதி பெலவீன விருத்தாப்பிய நாட்களில் நாங்கள் இன்னும் அதிகமாக உங்களுக்கு உதவி செய்து உங்களை தாங்கி ஆதரிக்க கர்த்தருக்குள் கடமைப்பட்டிருக்கின்றோம். வடக்கே நீங்கள் ஊழியங்களுக்கு போகாவிட்டாலும், வேதாகமங்கள், புதிய ஏற்பாடுகள், சுவிசேஷங்கள், கைப்பிரதிகள் போன்றவற்றை தேவ ஊழியம் செய்வோருக்கு இலவசமாகக் கொடுத்து நீங்கள் உங்கள் ஊழியத்தை இப்பொழுதும் தொடர்ந்து கொண்டேதான் இருப்பீர்கள். அது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
தேவ ஊழியத்தை நாங்கள் கவனத்தில் கொள்ளாவிட்டாலும் உங்களை நாங்கள் கர்த்தருக்குள் எங்கள் குடும்பத்தின் சொந்த பரிசுத்த தகப்பனாராக நினைத்து தொடர்ந்து உங்களுக்கு அன்பு செய்யவே செய்வோம்” என்று எழுதுகின்றீர்கள். அந்த வரிகளை நான் வாசிக்கும் போது என் உள்ளம் கர்த்தருக்குள் பூரிக்கின்றது. என் கண்களில் கண்ணீர் மல்கின்றது. உண்மைதான், “ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்” (யோ 12 : 26) என்ற தேவ வார்த்தை எத்தனை உண்மையும், சத்தியமுமானவைகள் என்று பாருங்கள்! அதுமட்டுமல்ல, எனது உலக வேலையிலிருந்து என்னை தமது வாக்குத்தத்தம் கொடுத்து தமது ஊழியத்திற்கு வரும்படியாக அழைத்தபோது அவர் எனக்குக் கொடுத்த அற்புத வாக்கு “உன் துக்க நாட்கள் முடிந்து போகும்” (ஏசாயா 60 : 20) என்ற வார்த்தைதானே! அல்லேலூயா.
ஒரு பேராச்சரியம் என்னவெனில், நான் என் முழு மூச்சோடு தேவ எக்காள ஊழியத்தை செய்த நாட்களைவிட இப்பொழுதுதான் அன்பின் கருணாகரக் கர்த்தர் பரதேசியாகிய என்னை நன்மையினாலும், கிருபையினாலும் முடிசூட்டி நிறைபூரணமாக ஆசீர்வதித்து வழிநடத்தி வருகின்றார். உண்மைதான், “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்” ( நீதி 4 : 18 ) என்று தேவ வார்த்தை கூறுகின்றதல்லவா? அந்த அன்பரின் காருண்யத்தால் தான் இத்தனை நிறைவான பக்கங்களோடு அதிகமான பணச் செலவில் எனது சுயசரிதையை சிறப்பாக அச்சிட்டு உங்கள் அன்பின் கரங்களில் முற்றும் இலவசமாக தந்து மகிழும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எல்லா துதியும், கனமும், மகிமையும் நம் அருமை நேசர் ஒருவருக்கே உண்டாவதாக. ஆமென்.