எனது இராஜஸ்தான் சுவிசேஷப் பிரயாண நினைவுகள் – 2
இராஜஸ்தானில் தேவ ஊழியம் செய்வது நான் நினைத்த அளவு எளிதான ஒரு காரியம் அல்லவென்பதை நான் அங்கு சென்ற பின்னர்தான் கண்டு கொள்ள முடிந்தது. காரணம் முதலாவது கொந்தளித்துக் குமுறும் பிசாசு, இரண்டாவது எரிக்கும் வெயில், மூன்றாவது மகா மத வைராக்கியம் கொண்ட இராஜஸ்தான் மக்கள், நான்காவது அந்த வறண்ட பீட பூமியில் அடிக்கடி வீசும் பாலைவன புழுதிக்காற்றுகள். இந்தியாவைப் பொறுத்த மட்டில் இராஜஸ்தான் மட்டுமே சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாத மிகவும் பின்னடைந்த ஒரு மாநிலமாகவே இன்றளவும் (1971) கருதப்பட்டு வருகின்றது.
ஆக்ராவிலிருந்து இரவு 8 மணிக்குப் புறப்பட்ட ஆமதபாத் எக்ஸ்பிரஸ் ரயில் பொழுது புலரும் வேளையில் ஜெய்ப்பூர் ஜங்ஷனை வந்தடைந்தது. ரயில் ஜங்ஷனை அடைந்ததும் எனது நெடு நாளைய சுவிசேஷ ஊழிய ஆசைக்கனவு பூர்த்தி செய்யப்பட்டதை எண்ணி கர்த்தருக்குள் மகிழ்ந்தவனாக அந்த தேவனற்ற அஞ்ஞான இருளின் பூமியிலே எனது பாதங்களைப் பதித்து ஆனந்தித்தேன். எனது பெட்டியையும் ஆயிரக்கணக்கான ஹந்தி மற்றும் ஆங்கில சுவிசேஷ துண்டுப் பிரதிகள் கொண்ட மற்றொரு பெட்டியையும் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு எனக்கு முன்பின் தெரியாத ஒரு கிறிஸ்தவ தேவ ஊழியரின் மேல் விலாசத்தின் பேரில் அந்தச் சகோதரனைத் தேடிக்கண்டு பிடிக்க அந்த அதிகாலையின் இருட்டில் ஜெய்ப்பூர் நகருக்குள் பிரவேசித்தேன்.
சைக்கிள் ரிக்ஷாவில் சிறிது தூரம் சென்றதும், அரசாங்க அதிகாரி ஒருவர் சைக்கிள் ஒன்றில் வந்து நான் பிரயாணம் செய்து கொண்டிருந்த ரிக்ஷாவின் முன்னர் தனது சைக்கிளை ஓட்டி எங்களை நிறுத்தினார். கைப்பிரதிகளடங்கிய அட்டைப்பெட்டியை சுட்டிக் காண்பித்து அதனில் இருப்பது என்னவென்று கேட்டார். இராஜஸ்தானில் சுவிசேஷத்தை அறிவிப்பது பிசாசுக்கு எத்தனையான வேதனையாக உள்ளது என்பதை அப்பொழுது உணர்ந்து கொண்டேன்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் பட்டணம் போய்ச் சேர்ந்த அன்றே நான் எனது சுவிசேஷப் பணியை தேவகிருபையால் ஆரம்பித்தேன். டில்லிப்பட்டணத்திலிருந்து வந்து ஜெய்ப்பூர் பட்டணத்தில் கர்த்தருடைய பரிசுத்த ஊழியத்தைச் செய்து கொண்டிருக்கும் கர்த்தருடைய தாசன் ராபர்ட்ஸ் அவர்களும், பாவியாகிய நானும் நூற்றுக்கணக்கான ஹிந்தி மொழி சுவிசேஷப் பங்குகளை எடுத்துக் கொண்டு ஜெய்ப்பூரிலுள்ள சாந்த்போல் என்ற ஜன நெருக்கடி மிகுந்த தெருவில் நின்று கொண்டு சுவிசேஷம் அறிவித்து சுவிசேஷங்களை விநியோகித்துக் கொண்டிருந்தோம். “இந்த உலகம் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது. சீக்கிரமாக இது தகனிக்கப்படும். அந்த அக்கினிக்கு தப்பும் மார்க்கம் இங்கே காட்டப்பட்டுள்ளது. இதை வாங்கிப்படியுங்கள்” என்று கூறி சுவிசேஷங்களை விற்பனை செய்தோம். ஜனங்கள் ஆவலோடு வாங்கினார்கள். விசேஷமாகத் தங்கள் முகங்களை முக்காடிட்டு மூடியிருந்த இராஜஸ்தான் பெண்கள் முன் வந்து சுவிசேஷங்களை விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.
ஒரு கூட்டம் மக்கள் எங்களைச் சூழக்கூடியிருந்தார்கள். கூட்டத்திலுள்ள ஒரு சில வாலிபர்கள் எங்களைப் பரிகாசம் செய்தனர். எங்களை அடிப்பதற்கு எத்தனித்த ஒரு வாலிபனின் கரங்களைப் பற்றிப்பிடித்து “உனது மார்க்கத்தில் நாங்கள் கூறும் நற்செய்தியிருந்தால் அதை எங்களுக்குச் சொல்லு. நாங்கள் அதைச் சந்தோசமாய்க் கேட்போம். ஏற்றுக்கொள்ளுவோம்” என்று சகோதரன் ராபர்ட்ஸ் அவர்கள் அவனிடம் சொன்னபோது அவன் வெட்கமடைந்து அமைதியாகிப் போய்விட்டான். ஏறத்தாழ நான்கு மணி நேரம் அந்த வீதியில் சுவிசேஷத்தை அறிவித்து, சுவிசேஷப் பங்குகளை தவனமுள்ள ஆத்துமாக்களுக்கு விற்றுவிட்டு நாங்கள் எங்கள் இருப்பிடம் திரும்பினோம். தார் பாலைவனப் புழுதிக் காற்று அடிக்கடி வீசி எங்கள் கண்களை மண்ணால் நிரப்பிற்று.
ஜெய்ப்பூரை அடுத்துள்ள கிராமங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்
இந்நாளைய ஊழியத்திற்குப் பின்னர் நான் ஜெய்ப்பூரை அடுத்துள்ள கிராமங்களுக்கு ஊழியம் செய்யப் புறப்பட்டேன். நான் கிராமங்களுக்கு கர்த்தருடைய ஊழியத்தைச் செய்யப் போவதைக் கேள்வியுற்ற ஜெய்ப்பூர் கிறிஸ்தவ விசுவாசிகள் குறிப்பாக பாஸ்டர் சகோதரன் ராபர்ட்ஸ் அவர்களின் சபையின் அன்பான தேவப்பிள்ளைகள் என்னை மிகவும் தடுத்தனர். “அவ்விதம் போனால், நிச்சயமாய் ஆபத்து நேரிடும். உயிருடன் திரும்புவது கடினமாகும்” என்று மிகத்திட்டவட்டமாய் கூறி என்னைத் தடுத்தனர். ஒரு சகோதரி தனது கரம் கூப்பி என்னைக் கும்பிட்டு அப்படிப் போகவேண்டாம் என்றார்கள். ஆனால், என்ன நோக்கத்தோடு இராஜஸ்தான் சென்றேனோ அதிலிருந்து நான் பின்னடையாதபடி அன்பின் ஆண்டவர் என்னைக் காத்துக் கொண்டார். அவருக்கே துதி உண்டாவதாக.
ஜெய்ப்பூரைச் சுற்றி ஆம்பர், சிங்புரா, குண்டான், சோடலா, ஜாங்கனீர் போன்ற இடங்களிலும் இன்னும் அநேக கிராமங்களிலும் சுவிசேஷ துண்டு பிரதிகளை விநியோகித்தும் தனிப்பட்ட மக்களிடம் இரட்சகர் இயேசுவின் அன்பைப் பற்றியும் கூறினேன். ஆம்பர் என்ற இடம் மிகவும் பிரபலமானது. அங்குள்ள புகழ் பெற்ற கோட்டையையும், அரண்மனையையும் காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் உலகம் முழுமையிலுமிருந்து வருகின்றனர். நானும் அந்தக் கோட்டையையும், அரண்மனையையும் கண்டு நிலையில்லா உலக வாழ்வின் காரியங்களை இன்னும் ஆழமாக என் உள்ளத்தில் பதித்துக்கொண்டேன். அந்த அரண்மனையிலும், கோட்டையிலும் ஒரு காலத்தில் ராஜபோகமாக வாழ்ந்த மக்கள் தங்கள் இல்லிடங்களை அப்படி அப்படியே விட்டுவிட்டு காலத்தால் மறைந்து போன காட்சிகளைக் கண்டு உள்ளங்கசிந்தேன். அந்தப் புகழ்பெற்ற ஆம்பர் கோட்டையை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.
இந்த அழகான கோட்டையையும், அரண்மனையையும் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும், கோட்டையையும், அரச அரண்மனையையும் பாதுகாத்து நிற்கும் காவலாளிகளுக்கும் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தேன். “அழகான கோட்டையும், கொத்தளங்களும் உள்ளன. ஆனால் இதனைக்கட்டின, இதில் சுகபோகமாக வாழ்ந்த அரசர்தான் இங்கில்லை” என்ற வார்த்தைகளோடு ஆரம்பித்து ஆம்பர் கோட்டையைப் பார்க்க வரும் பயணிகளிடம் சுவிசேஷத்தை அறிவித்தேன்.
சிங்புரா என்ற ஒரு ஏகாந்தமான கிராமத்திற்குச் சென்றவிடத்தில் ஒரு வாலிபனைச் சந்தித்து இரட்சகரின் சிலுவை அன்பைப் பகிர்ந்து கொண்டேன். எங்கள் பேச்சு மிகவும் நீடித்தது. அவன் என்னைத் தனது ஒட்டக வண்டியில் ஏற்றிக்கொண்டு 3 மைல்களுக்கப்பாலுள்ள தனது கிராமமாகிய குண்டானுக்குக் கொண்டு சென்றான். வழி நெடுகிலும் நான் அவனுக்கு ஆண்டவரைப் பற்றிக் கூறிக்கொண்டே சென்றேன். குண்டானில் தனது வீட்டிற்கு அழைத்தச் சென்று என்னை உபசரித்தான். சுத்தமற்ற அவன் வீட்டைப்பார்க்கவே எனக்கு கஷ்டமாகவிருந்தது. தன்னோடு இராத்தங்க என்னை மிகவும் வற்புறுத்தினான். கர்த்தர் நிச்சயமாகவே இவனிடத்தில் கிரியை செய்தார்.
சோடலா என்ற ஒரு இராஜஸ்தான் கிராமத்தில் நான் ஒரு மனிதனிடம் சுவிசேஷப்பிரதி ஒன்றைக் கொடுத்து என்னையும் அவனுக்கு அறிமுகப்படுத்திய போது அவன் என்னை தூஷித்து “இந்து மாநிலமாகிய மதராசிலிருந்தா இந்தச் செய்தியை இங்கு சுமந்து வந்தாய்? உனக்கு வெட்கமில்லையா” என்று அவன் என்னைப் பார்த்துக் கேட்டான். “நான் உன்னண்டை கொண்டு வந்துள்ள செய்தி சத்தியமானது. சத்தியத்தைக் கூற எனக்கு வெட்கம் எதற்கு?” என்றேன். அவன் எனது வார்த்தைகளைக் காதில் வாங்காமல் என்னைத் தூஷித்துக்கொண்டே இருந்தான். நான் கூடுதலாக அவனிடம் எதுவும் பேசியிருந்தால் அவன் என்னைச் செம்மையாக உதைத்திருப்பான்.
அவனுடைய கிராமத்தில் தொடர்ந்து நான் என் பணியை செய்து முடித்த பின்னர் 10 மைல்களுக்கும் அதிகமான ஜாங்கனீர் என்ற ஊருக்குக் கால் நடையாகவே சென்று வழியில் சந்திக்கும் மக்களிடம் இரட்சகரில் நான் கண்டு கொண்ட இரட்சிப்பின் சந்தோசத்தைக் கூறிக்கொண்டும், சுவிசேஷங்களை விநியோகித்துக் கொண்டும் சென்றேன். பெரும்பாலும் அனைவரும் அன்போடும், தாகத்தோடும் செய்திகளைக் கேட்டனர், பிரதிகளை வாங்கி வாசித்தனர் ரஸ்தாவில் ஒரு வாலிபன் தனது சைக்கிளைப் பள்ளமான இடத்திலிருந்து மேட்டுக்குத் தள்ளிப் போய்க் கொண்டிருந்தான். அந்த வாலிபனுக்கு நான் இரட்சகர் இயேசுவின் மூலமாவுள்ளதான பாவ மன்னிப்பையும், நிலையான சாந்தி என்ற தேவ சமாதானத்தையும் தேவ ஒத்தாசையோடு கூறினபோது உள்ளம் நெகிழ்ந்தான். அதின் பின்னர் அவன் தனது வீடு வரைக்கும் அதாவது 3 மைல்கள் தூரம் வரைச் சைக்கிள் சவாரி செய்யாமல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நான் கூறிய கர்த்தருடைய வார்த்தைகளை ஆவலோடு கேட்டுக் கொண்டு வந்தான். அவன் என்னைத் தனது கிராமத்திற்கு அழைத்துச் சென்று தனது வீட்டில் என்னை உபசரித்தான். தான் ஆசை ஆவலாகப் படிக்கும் பகவத் கீதையை வீட்டுக்குள்ளிருந்து எடுத்துக்கொண்டு வந்து “இதை நான் ஆர்வத்துடன் படிப்பதுண்டு” என்று என்னிடம் கூறினான். “உன்னைப்போல எனது மூதாதையர்களும் இந்த பகவத் கீதையைத்தான் ஒரு காலத்தில் ஆசை ஆவலாகப் படித்தார்கள். ஆனால், இந்தப் புத்தகம் அவர்களுக்குக் கடைசி வரை சாந்தி அளிக்கவே இல்லை” என்றேன்.
லால் பீஹாரி என்ற இவ்வாலிபனுடன் சில மணி நேரம் பேசிக் கர்த்தரை எப்படியும் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினேன். கர்த்தர் இவன் இருதயத்தில் கிரியை செய்ததையும் நான் கண்டேன். எப்படியாகிலும் கர்த்தர் இந்த வாலிபனைத் தொடர்ந்து பிடிப்பார் என்ற நிச்சயம் எனக்குண்டு. இவன் மேல் விலாசத்தை நான் பெற்றுக்கொண்டு அவனிடம் விடைபெற்றபோது தனது தோட்டத்திற்குப் போய் நிறைய பச்சைப் பட்டாணிகளைக் கொண்டு வந்து எனது வழிப் பயணத்தில் சாப்பிடக் கோரி எனது தோள் பையான ஜோல்னா பையை நிரப்பினான். ஆ, எத்தனை அன்பு பாருங்கள்!
பின்னர் ஜாங்கனீரிலும் ஆண்டவரின் ஊழியம் செய்தேன். ஜெய்ப்பூரிலும் அதினைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் 5 நாட்கள் ஊழியம் செய்தேன். ஆயிரக்கணக்கான சுவிசேஷப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. காலையிலிருந்து இரவு வரை நான் எனது சமயங்களை வீணாக்கமல் இப்பகுதிகளில் ஊழியம் செய்தேன். ஜெய்ப்பூரிலுள்ள அரசாங்க மந்திரிமார்கள், அரசர் மாளிகைகளைக் காவல்புரியும் காவலாளிகள், அதிகாரிகளுக்கு இரட்சகரின் சுவிசேஷப் பிரசுரங்களைக் கொடுத்தேன். இராஜஸ்தானத்தின் வெப்பமும், புழுதிக்காற்றும் எனக்கு வெகுவாக துன்பமளித்தன. எத்தனைதான் உபத்திரவங்கள் வந்தாலும் அதனில் கர்த்தாவின் அன்பைக் கண்டேன். ஆறுதலடைந்தேன். உன்னத பெலத்தால் இடைகட்டப்பட்டேன். கர்த்தருக்கே மகிமை.