எனது இராஜஸ்தான் சுவிசேஷப் பிரயாண நினைவுகள் – 5
ஆள்வாரிலிருந்து ஜெய்ப்பூர் வந்த ரயில் இரவு 10 மணி சுமாருக்கு என்னைப் பாந்திகுயி ரயில்வே ஜங்ஷனில் கொண்டு வந்து சேர்த்தது. அங்கிருந்து பரத்பூர் மார்க்கமாக ஆக்ரா பட்டணம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் புறப்படவிருந்ததால் நான் பாந்திகுயி ஜங்ஷனில் உள்ள பிளாட்பாரத்தில் எனது கம்பளிப் போர்வையை நன்றாக மூடிப்படுத்திருந்தேன். கொடிய குளிர் என்னை வாட்டியது. நான்அப்போதைக்கப்போது கண் விழிக்கும் போதெல்லாம் ஒரு போலீஸ் அதிகாரி எனது முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்றேன். நடுநிசியில் நான் பரத்பூர் செல்லும் இரயிலுக்கு டிக்கெட் எடுக்கச் சென்றபோது என்னைப் பிளாட்பாரத்தில் உற்றுநோக்கிக்கொண்டிருந்த அதே போலீஸ் அதிகாரி என்னண்டை வந்து “நான் எங்கிருந்து வருகின்றேன்? என்றும் எங்கு செல்லுகின்றேன்?” என்றும் பற்பலவிதமான கேள்விகளைக் கேட்டார். நான் சொன்ன பதில்கள் அவருக்குச் சற்றேனும் திருப்தி அளிக்கவில்லை என்பதை அவரது முகநாடி காட்டினது. வண்டி, ஆக்ரா புறப்பட்டச் சில விநாடிகளில் அதே போலீஸ் அதிகாரியும், வேறு சில போலீஸ்காரர்களும் நான் ஏறி உட்கார்ந்திருந்த அதே பெட்டியில் வந்து ஏறிக்கொண்டார்கள். கிழக்கு வெளுக்கும் நேரத்தில் நான் பரத்பூர் பட்டணம் வந்து சேர்ந்தேன். நான் ரயில் வண்டியிலிருந்து இறங்கியபோது மேற்குறிப்பிட்ட அதே போலீஸ் அதிகாரி எனது டிக்கெட்டை வாங்கிக் கொண்டார். ரயிலில் தூக்கமற்றிருந்த நான் மிகுந்த களைப்புடனும், தூக்க மயக்கத்திலும் காணப்பட்டேன்.
பரத்பூரிலுள்ள பரசுராம் தர்ம சத்திரம் என்ற சத்திரத்தில் நான் தங்கினேன். அங்கு எனது பெட்டி மற்றும் பொருட்களை வைத்துவிட்டு களைப்பின் மிகுதியால் பகல் 10 மணி வரைக்கும் நன்றாக தூங்கிவிட்டேன். தூங்கி எழும்பியவுடன் காலை ஆகாரம் சாப்பிட்டு ஆயத்தமாகி மதுரா பட்டணம் செல்லும் ரஸ்தா மார்க்கமாக அநேக மைல்கள் தூரம் நடந்து சென்று சுவிசேஷ கைப்பிரதிகளைக் கொடுத்தும், தனி நபர்களைச் சந்தித்தும் கர்த்தரின் ஊழியத்தைச் செய்தேன். சேனாபலி, தியோங்கா என்ற இரு கிராமங்களைச் சந்தித்தேன். சேனாபலியிலுள்ள பள்ளி மாணவர்கள் மத்தியில் சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்தேன். இந்த மாணவர்களில் சிரில் குமார் என்ற வாலிப பள்ளி மாணவனிடம் இரட்சகர் இயேசுவின் அன்பை விரிவாகப் பகிர்ந்து கொண்டேன். பரிசுத்த ஆவியானவர் இவனுடைய உள்ளத்தில் கிரியை செய்ததை என்னால் நன்கு காண முடிந்தது. தனது கிராமத்தில் என்னை அவன் மிகவும் அன்போடு உபசரித்தான். நான் பரத்பூர் பட்டணம் புறப்படும் வரை அவன் என்னோடேயே இருந்து என்னை வழி அனுப்பி வைத்தான். நான் அங்கு தேவ ஊழியம் முடித்து தமிழ் நாடு வந்த பின்னரும் அவன் என்னுடன் கடிதத்தொடர்பு கொண்டான். பரத்பூரில் நமக்குக் கிடைத்த கனிகளில் சிரில் குமாரையும் நாம் நிச்சயமாகச் சேர்த்துக் கொள்ளலாம். கர்த்தருக்கே மகிமை.
பரத்பூரிலிருந்து ஆக்ரா பட்டணம் செல்லும் மார்க்கமாக ரஸ்தாவில் 8 மைல்கள் தூரத்திற்கும் அதிகமாக நடந்து சென்று அநேக கிராமங்களின் வெளிப்புறங்களில் மட்டும் தேவ ஊழியம் மேற்கொண்டேன். அந்தக் கிராமங்களின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. நான் எக்னர் என்ற கடைசிக் கிராமத்திற்கு வந்தபோது என் கால்களில் முழங்கால் வரை வெண் புழுதி சாந்து போல அப்பியிருந்தது. எக்னருக்கு நான்கு மைல்களுக்கப்பால் உள்ள ஒரு கிராமத்தில் போலோராம் என்ற வாலிபனைச் சந்தித்தேன். இரட்சிப்பின் சுவிசேஷத்தை இந்த வாலிபனோடு நான் பகிர்ந்து கொண்டபோது இவன் கண்களில் கண்ணீர் பெருகி நிற்பதை என்னால் காண முடிந்தது. இவனோடு நான் அல்ல, பரிசுத்த ஆவியானவரே பேசுவதை நான் கண்டேன். இரட்சிப்பின் வசனங்கள் ஹிந்தியில் சரளமாக என் வாயிலிருந்து அப்பொழுது புறப்பட்டு வந்தன. இதனை நீங்கள் ஒருக்கால் நம்ப சற்று மலைப்பீர்கள். ஆனால், இது உண்மை. அவருடைய உன்னத நாமங்களில் ஒன்று “அதிசயமானவர்” என்பதுதானே!
பரத்பூர் பட்டணத்திற்குள்ளும், அங்கிருந்த பண்டைய அரசனின் அரண்மனையிலும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்தேன். பரத்பூர் என்ற இராஜஸ்தான் சிறிய பட்டணத்தையும், அங்குள்ள அழகிய அரண்மனையையும் நீங்கள் படத்தில் காணலாம்.
பரத்பூரில் நான் தங்கியிருந்த சத்திரத்திற்கு அருகாமையிலேயே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அதின் மாணவர்கள் மத்தியிலும் நான் ஊழியம் மேற்கொண்டேன்.
இராஜஸ்தானியர் தங்கள் மதத்தில் மகா வைராக்கியம் உடையவர்கள். துணிந்து நாம் அவர்கள் மத்தியில் அவர்களது மதத்திற்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்யும்போது அதின் எதிர் விளைவுகள் பயங்கரமாகவிருக்கும். இராஜஸ்தானத்தில் எனது தேவ ஊழியங்கள் யாவும் மறைமுகமாயும், இரகசியமாயும் மட்டுமே செய்யப்பட்டன.
ஒரு நாள் காலையில் நான் எனது சுவிசேஷ ஊழியத்திற்காகப் புறப்பட்டுத் தெரு வழியாகப் போய்க்கொண்டிருந்த சமயம் பழைய அதே போலீஸ் அதிகாரி சாதாரண உடை அணிந்தவராய் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தார். இந்த அதிகாரியும், போலீஸ்காரர்களும் நான் ஒரு பாக்கிஸ்தான் உளவாளியாக இருக்கலாம் என்றெண்ணிப் பல இடங்களில் என்னைப் பின் தொடர்ந்தனர். அவர்கள் சந்தேகப்பட்டு உண்மையை கண்டறியும் பொருட்டு தங்கள் கையிலுள்ள வலுவான தடியால் என்னை ஒரு அடி அடித்திருந்தாலும் நான் அதோகதியாகியிருப்பேன். கர்த்தர் என்னைக் காத்துக் கொண்டார். அவருக்குத் துதி உண்டாவதாக.
இராஜஸ்தானத்தில் அடிமையால் அதுவரை செய்யப்பட்ட தேவ ஊழியங்களை ஆண்டவர் ஆசீர்வதிக்கவும், சந்திக்கப்பட்ட ஆத்துமாக்களில் கர்த்தர் தொடர்ந்து கிரியை நடப்பிக்கவும் ஒரு நாள் முழுவதும் நான் தங்கியிருந்த பரசுராம் சத்திரத்தில் ஜெபத்தில் தனித்திருந்து செலவிட்டுவிட்டு பாந்திகுயி என்ற இடத்திற்கு ஒரு நாள் இரவில் வந்து சேர்ந்தேன். பாந்திகுயி ஒரு சிறிய ரயில்வே ஜங்ஷனைக் கொண்ட சுமாரான சிறிய பட்டணம். ஆங்கிலேயர்கள் இருந்த காலத்தில் இந்த இடத்தில் ஒரு தேவாலயம் எல்லாம் கட்டப்பட்டு ஒரு கிறிஸ்தவ சபையும் இருந்திருக்கின்றது. ஆனால், காலப்போக்கில் அனைத்தும் மறைந்துவிட்டது.
எரிக்கும் பாலைவன வெயிலில் ஒரு நாள் காலை தொடங்கி மாலை வரை இங்கு தேவ ஊழியம் மேற்கொண்டேன். ஒரு சில கிராமங்களையும் சுவிசேஷத்துடன் சந்தித்தேன். இப்பட்டணத்தின் ஒரு திசை வழியாக நான் போய்க்கொண்டிருந்தபோது நரிகள் மத்தியான வேளையிலேயே பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டிருந்தன. ஆங்கிலேயர்களால் ஆரம்ப காலத்தில் கட்டப் பட்டுத் தற்சமயம் பாழடைந்த நிலையில் உள்ள ஓர் அழகிய தேவாலயத்தைக் கண்டு என் உள்ளம் உடைந்து நொறுங்கி உருகிற்று. எரிக்கும் வெயிலில் நான் நின்று அதின் ஸ்திதியைக் கண்டு பிரலாபித்துக் கொண்டிருந்தேன். “எங்கள் மத்தியில் தேவ ஊழியம் செய்ய ஒரு கர்த்தருடைய ஊழியன்கூடக்கிடையாது” என்று இங்குள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரி என்னிடம் சொன்ன வார்த்தை என் உள்ளத்தை இன்னும் அதிகமாகத் தகர்த்தது.
எனது கையில் மிகவும் சொற்பமான காசுகளிருந்தபடியால் பசியோடும், பட்டினியோடும் இந்த இடங்களில் தேவ ஊழியத்தை செய்யும் நிலை எனக்கு ஏற்பட்டது. இராஜஸ்தானில் சற்று மலிவாகக் கிடைக்கும் ஹூட் என்றழைக்கப்படும் ஒரு வித வெல்லத்தையே பசியெடுக்கும்பொழுதெல்லாம் வாங்கி உண்டு வயிறு நிறைய தண்ணீரைக் குடித்து ஆண்டவருடைய ஊழியத்தைத் தொடர்ந்தேன். கூடுதலான சரீரத்தின் பெலவீனம் காரணமாக எங்கு மயக்கமடைந்து கீழே விழுந்து விடுவோமோ என்று கூட நான் நினைத்ததுண்டு. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று திருவுளம்பற்றிய நம் தேவனின் மட்டற்ற அன்பால் நான் பாதுகாக்கப்பட்டே.ன். இதேவிதமாக பரத்பூரிலும் நடந்தது. பாந்திகுயியில் பெரும்பாலும் மாணவர்கள் மத்தியிலும், ஒரு சில கிராமப்பகுதிகளிலும் ஊழியம் செய்தபின்னர் பொழுது அஸ்தமித்துவிட்டது. அன்பின் ஆண்டவருக்கு துதி ஏறெடுத்துவிட்டு இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வந்து சேர்ந்தேன்.