பக்த சிரோன்மணிகளின் தேவச்செய்திகள்

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்,
அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் (மத் 5 : 8)
ஜாண் சார்லஸ் ரைல்


"என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா" (நீதி 23 : 26)

"உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் செம்மையாக இல்லை" (அப் 8 : 21)

கிறிஸ்தவ பக்தி வாழ்வில் மனுஷனின் இருதயம் சிரேஷ்ட மானதாகும். அதின் காரணமாக இருதயத்திற்கு தேவ மக்கள் பிரதானமான கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று நான் அவர்களைக் கேட்பதைக் குறித்து நான் அவர்களிடம் எந்த ஒரு மன்னிப்பும் கேட்க மாட்டேன். இருதயத்தைக் குறித்து நான் உங்களுக்கு சில காரியங்களைப் பேசப் போகின்றேன். நீங்கள் உங்கள் கிறிஸ்தவ மார்க்க சம்பந்தமான காரியங்களில் தெளிவாகவும், சரியாகவும், வெகு நிச்சயமாகவும் இருக்கலாம். இருப்பினும், இதுகாலம் வரை நாசத்திற்கு நேராக வழிநடத்தக்கூடிய விசாலமான பாதையில் நீங்கள் சென்றிருக்கின்றீர்கள். உங்கள் இருதயமே மிகவும் முக்கியமானதாகும். "உங்கள் இருதயம் கர்த்தருடைய பார்வையில் செம்மையானதாக இருக்கின்றதா?"

உங்களுடைய வெளிப்படையான ஜீவியம் உங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மக்களுடைய கண்களுக்கு முன்பாக நல்லொழுக்கமுடை யதாகவும், திருப்திகரமானதாகவும், அழகாகவும், கனம் பெற்றதாகவும் காணப்படலாம். உங்களுடைய வாழ்வின் பொது நடத்தையைக் குறித்து உங்கள் சபைப் போதகரோ, நண்பர்களோ, அண்டை அயலகத்தாரோ உங்களில் முக்கியமாக எந்த ஒரு தவறும் காணாதிருக்கலாம். உங்களுடைய இருதயம்தான் பிரதானமாகும். அந்த இருதயம் தேவனுடைய பார்வையில் செம்மையானதாக இருக்கின்றதா?

மனதின் விருப்பங்களும், வாஞ்சைகளும் ஒருவனை உண்மைக் கிறிஸ்தவனாக மாற்றிவிட முடியாது. உனது ஆத்துமாவில் நல்ல வாஞ்சைகள் உனக்கிருக்கலாம். "நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக, என்னுடைய முடிவு அவனுடைய முடிவுபோல இருப்பதாக" (எண் 23 : 10) என்று கூறிய பிலேயாமைப் போல உனக்கு மேலான பரலோக ஆசை இருக்கலாம். தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து நீ நினைக்கும் போது நீ உன்னளவில் வேளாவேளைகளில் நடுநடுங்குகிறவனாக இருந்திருக்கலாம். அல்லது, தேவ மைந்தனின் கரைகாணா எல்லையற்ற கல்வாரி அன்பை நீ நினைக்கும் வேளைகளில் உன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து நீ உள்ளம் கசிந்து உருகியிருக்கலாம். இவை யாவும் இருந்தபோதினும் இவைகளுக்கு மத்தியில் நீ நரகத்தின் பாதையில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்திருக்கலாம். உன்னுடைய இருதயமே பிரதானமாகும். உனது இருதயம் தேவனுடைய பார்வையில் செம்மையானதாக உள்ளதா?

இருதயத்தைக் குறித்து மூன்று சிரேஷ்டமான காரியங்களை உன் மனதில் மிகவும் ஆழமாக நான் அழுத்திக் கூற விரும்புகின்றேன்.

முதலாவது, கிறிஸ்தவ பக்தி வாழ்வில் இருதயமே மகா பிரதானம் என்பதை நான் உனக்குக் காண்பிக்க விரும்புகின்றேன்.

இரண்டாவது, தேவனுடைய பார்வையில் செம்மையாக இராத இருதயத்தைக் குறித்து நான் உனக்கு விளக்க விரும்புகின்றேன்.

இறுதியாக, கர்த்தர் விரும்பும் உத்தம இருதயத்தின் குணநலன்களை நான் உனக்கு முன்பாக வைக்க ஆசைப்படுகின்றேன்.

தேவன் தாமே இந்தக் கருப் பொருளைக் குறித்து வாசிக்கும் ஒவ்வொரு ஆத்துமாவோடும் பேசி அவர்களை ஆசீர்வதிப்பாராக. பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை, அசைவாடுதலின்றி எல்லா பிரசங்கங்களும், எழுத்துக்களும் வீணும் விருதாவுமாகும். அந்தப் பரிசுத்த ஆவியானவர் தாமே இதை வாசிக்கின்ற அநேகருடைய மனச்சாட்சிகளோடு பேசி அநேகருடைய இருதயங்களை இந்த தேவச் செய்தியின் மூலமாக அம்பு போல ஊடுருவிச் செல்லுவாராக!

கிறிஸ்தவ பக்தி வாழ்வில் இருதயமே மகா பிரதானம் என்பதை நான் உனக்குக் காண்பிக்க ஆசைப்படுகின்றேன். அதை நான் உனக்கு எப்படியாக ரூபகாரப்படுத்துவேன்? அதை நிரூபிக்க நான் எங்கிருந்து வார்த்தைகளைக் கொண்டு வருவேன்? தேவனுடைய வார்த்தைகளுக்கு மட்டுமே நான் என் முகத்தை நோக்குவேன். இந்தவிதமான வாதங்களில் உலகம் எதை தனது கருத்தில் கொள்ளுகின்றது என்பதை நான் ஏறிட்டுக்கூட பார்க்கப் போவதில்லை. சத்தியத்தைப் பரிசோதிக்க ஒரே ஒரு நிச்சய வழி உண்டு. வேத வாக்கியங்கள் என்ன சொல்லுகின்றது? கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? பரிசுத்த ஆவியானவரின் சிந்தை யாது? என்பதே அது. நம்முடைய தீர்மானங்களையும், நம்முடைய கணிப்புகளையும் மேற்கண்ட நிலைமாறா தேவனுடைய நடுவர் மன்றத்தில் நாம் வைக்காத பட்சத்தில் நாம் நமக்கு பக்தி உண்டு என்று கூறிக் கொள்ளுவது எல்லாம் வெறும் பாசாங்கே தவிர வேறொன்றுமில்லை.

இருதயம் என்ற அந்தப் பகுதியில் நமது ஆத்துமா அண்டிக் கொண்டிருக்கின்றது என்ற ஒரு காரியத்தைக் குறித்து கர்த்தருடைய வேதாகமம் போதிக்கின்றது. "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்" (நீதி 4 : 23) என்று அது சொல்லுகின்றது. நம்முடைய அறிவு, உணர்வு, மனச்சாட்சி, பற்று பாசங்கள் யாவும் நமது இருதயத்திற்கு அடுத்த ஸ்தானத்திலுள்ள காரியங்கள் மாத்திரமே. இருதயமே மனிதனாவான். நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் இருப்பிடம், அதின் ஆரோக்கியம், அதின் சத்துவம், அதின் வளர்ச்சி யாவும் இருதயத்திலேயே உள்ளது. ஆத்துமாவை தன் வசம் அங்குமிங்கும் நகர வைத்துக் கொண்டிருக்கும் கீல் இணைப்பு இருதயமாகும். தேவனுக்கு நேராக இருதயம் உயிரோடிருந்து ஆவியானவருடைய ஒவ்வொரு ஏவுதலுக்கும் விரைந்து கீழ்ப்படிபவனே ஒரு ஜீவனுள்ள கிறிஸ்தவனாவான். இருதயம் தன்னளவில் செத்து ஆவியில்லாத மனுஷன் தேவனுக்கு முன்பாக செத்த மனிதனாவான். இருதயமே மனிதனாவான். ஒரு கிறிஸ்தவன் என்ன சொல்லுகின்றான்? அவன் எதை வெளியரங்கமாக ஒத்துக் கொள்ளுகின்றான்? ஓய்வு நாளில் அவன் எந்த ஆலயத்துக்கு கர்த்தரை தொழுது கொள்ளச் செல்லுகின்றான்? தனக்கு முன்பாக வரும் காணிக்கைத் தட்டில் எவ்வளவு காணிக்கை படைக்கின்றான்? என்பது போன்ற காரியங்களை எல்லாம் நீ எனக்குச் சொல்ல வேண்டாம். அவனுடைய இருதயம் எப்படிப்பட்டது என்று நீ எனக்குச் சொல், அவன் யார் என்று நான் உனக்குச் சொல்லிவிடுவேன். "அவன் இருதயத்தின் நினைவு எப்படியிருக்கிறதோ அப்படியே அவன் இருக்கின்றான்" (நீதி 23 : 7)

மனிதனின் இருதயத்தையே கர்த்தர் விசேஷமாக உற்றுக் கவனிக்கின்றார். என்று வேதாகமம் நமக்குக் கூறுகின்றது. "மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன், மனுஷன் முகத்தைப் பார்ப்பான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" (1 சாமு 16 : 7) "மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும், கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப் பார்க்கிறார்" (நீதி 21 : 2) மனிதன் பக்தி வாழ்வின் வெளிப்படையான காரியங்களில் திருப்தி அடைந்து விடுகின்றான். ஆனால், கர்த்தரின் கண்கள் இன்னும் ஆழமாக ஊடுருவி நோக்குகின்றது. நம்முடைய நோக்கங்களை அவர் கனப்படுத்துகின்றார், ஆனால் அவர் ஆவிகளை நிறுத்துப் பார்க்கின்றார்" (நீதி 16 : 2) "கர்த்தராகிய நானே இருதயத்தை ஆராய்கிறவரும், உள்ளந்திரியங்களை சோதித்தறிகிற வருமாயிருக்கின்றேன்" (எரேமியா 17 : 10)

இருதயத்தையே முதன்மையாகவும், முக்கியமாகவும் தமக்குக் கொடுக்கும்படியாக தேவன் கேட்பதாக பரிசுத்த வேதாகமம் சொல்லுகின்றது. "என் மகனே உன் இருதயத்தை எனக்குத் தா" (நீதி 23 : 26) நாம் தேவனுக்கு முன்பாக நமது தலையைத் தாழ்த்தி பக்தியே பொங்கி வழியும் ஒரு வாஸ்தவமான முகத்தையும், நமது சரீரத்தையும் அவருடைய ஆலயத்தில் அவருக்கு நாம் கொடுத்து ஒரு சத்தமான "ஆமென்" குரலையும் நாம் எழுப்பலாம். ஆனால் நாம் நம் தேவனுக்கு நமது இருதயத்தைக் கொடுக்காத வரை நாம் கொடுக்கும் மற்ற எந்த காரியமும் செப்புக்காசுக்கு உதவாதவை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஏசாயா தீர்க்கனின் நாட்களிலும் யூத மக்கள் ஏராளமானதும், விலை மதிப்புள்ளதுமான பலிகளை தேவனுக்குச் செலுத்தினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் வாயால் அவரண்டை சேர்ந்து தங்கள் உதடுகளினால் மாத்திரம் கர்த்தரைக் கனம் பண்ணினார்கள். அந்த மக்களின் இருதயங்கள் கர்த்தரிடமிருந்து வெகு தொலைவில் இருந்ததால் அவைகள் எல்லாம் வீணும் வியர்த்தமுமானவைகளாகப் போயிற்று (மத் 15 : 8) விக்கிரக ஆராதனைக்கு விரோதமாக யெகூவின் வைராக்கியம் மிகவும் மெச்சிக் கொள்ளப்படத்தக்கதாகவிருந்தது. பாகாலின் சிலைகளை எல்லாம் தகர்த்து, கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி, பாகால் தீர்க்கத்தரிசிகளை எல்லாம் ஒருவரும் தப்பவிடாமல் வெட்டிப்போட்ட காரியங்கள் எல்லாம் வெளிப்படையான வெகுமதிகளுக்கு உரிய செயல்கள்தான். அந்த நல்ல செயல்களை எல்லாம் அவனுடைய வாழ்வில் இருந்த ஒரு மாபெரும் கறை அழித்து நாசமாக்கிவிட்டது. "ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்க கவலைப்படவில்லை" (2 இரா 10 : 31) என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லுகின்றது. தன்னுடைய மனைவியிடம் கணவன் எதிர்பார்க்கும் இருதயம், தங்கள் பிள்ளையிடம் பெற்றோர் எதிர்பார்க்கும் இருதயம், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று உலகுக்கு கூறிக்கொள்ளும் தமது ஜனத்திடம் தேவன் எதிர்பார்க்கும் இருதயம் அது.

மனிதனின் சரீரத்தில் இருதயம் எப்படிப்பட்டது? அவனுடைய சரீரம் முழுமைக்கும் இருதயம் மிகவும் கேந்திரமான பகுதியாகும். ஒரு மனிதன் வியாதி கொண்டவனாக அல்லது அவயவங்கள் இல்லாதவனாக அல்லது காயப்பட்டவனாக பல ஆண்டு காலம் ஒரு வேளை உயிர் வாழலாம். ஆனால், ஒரு மனிதனுடைய இருதயத்தை நீ காயப்படுத்திவிட்டால் அவனால் உயிர் வாழ இயலாது. கிறிஸ்தவத்தில் இருதயமும் அப்படிப்பட்டதேயாகும். வாழ்வின் ஜீவ ஊற்று இருதயமாகும்.

ஒரு மரத்திற்கு அதின் வேர் எப்படிப்பட்டது? அந்த மரத்தின் உயிர் வாழ்க்கைக்கும், அதின் வளர்ச்சிக்கும், அதின் கனி கொடுத்தலுக்கும் அதின் வேர் ஜீவாதாரமாகும். நீ அதின் கிளைகளைத் தறித்துப் போடு. அதின் அடிமரத்தை வெட்டிச் சேதப்படுத்து, அந்த மரம் இன்னும் உயிர்பெற்று வளரக்கூடும். ஆனால், நீ அதின் வேரை துண்டிப்பாயானால் அது உடனே முற்றும் பட்டுப்போகும். அதைப் போல இருதயம் வாழ்வின் ஆணி வேராகும்.

ஒரு கடிகாரத்திற்கு அதின் பிரதான கம்பிச் சுருள் (Main Spring) எத்தகையது? அந்தக் கடிகாரத்தின் எல்லா அசைவுகளுக்கும், இயக்கங்களுக்கும் அது ஆதி காரணமானது. அந்தக் கடிகாரத்தின் எல்லா பிரயோஜனங்களுக்கும் அந்தக் கம்பிச் சுருள்தான் இரகசியம். கடிகாரத்தின் முகப்பும், எண்களும் திறமையாகச் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் பிரதான கம்பிச் சுருளில் ஏதாவது பழுதிருந்தால் அதின் முழு ஓட்டமுமே ஸ்தம்பித்துவிடும். அதைப் போலவே கிறிஸ்தவ பக்தி வாழ்வில் இருதயமும் இருக்கின்றது. அது ஜீவ வாழ்வின் பிரதான கம்பிச் சுருளாகும்.

நீராவி எந்திரத்திற்கு நெருப்பு எப்படிப்பட்டது? அதினுடைய எல்லா இயக்கங்களுக்கும், சக்திக்கும் அதுவே காரணமாகும். நீராவி எந்திரத்தின் பாகங்கள் கனகச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கலாம். அதின் ஒவ்வொரு திருகாணியும், வால்வுகளும், இணைப்புகளும், வளைந்த அச்சுகளும் அதினதின் இடத்தில் நேர்த்தியாகப் பொருத்தப் பட்டிருக்கலாம். ஆனால், சூடுண்டாக்கும் அடுப்பும் நீராவியை உற்பத்தி செய்கின்ற அங்குள்ள தண்ணீரும் குளிர்ச்சியாக இருந்தால் அந்த எந்திரத்தால் எந்த ஒரு பயனும் கிடையாது. அந்த நீராவி எந்திரத்தைப் போலவே கிறிஸ்தவ பக்தி மார்க்கத்தில் இருதயமும் உள்ளது. பரத்திலிருந்து அக்கினி இறங்கி வந்து இருதயத்தை அனல் மூட்டாவிட்டால் அதினால் எந்த ஒரு பயனும் கிடையாது.

உங்களைச் சுற்றிலும் உள்ள திரள் கூட்டமான ஜனங்கள் பக்தி வாழ்க்கைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதை நீங்கள் எப்பொழுதாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? அவர்களுக்கு உண்மையில் தேவனைப் பற்றியோ அல்லது கிறிஸ்துவைப் பற்றியோ அல்லது வேதாகமம், மோட்சம், நரகம், நியாயத்தீர்ப்பு, முடிவில்லாத நித்தியம் எதைக் குறித்தும் அவர்களுக்கு கொஞ்சமும் கவலையும், அக்கறையும் கிடையாது. தாங்கள் புசிப்பதைக் குறித்தும், தாங்கள் குடிப்பதைக் குறித்தும், தாங்கள் உடுத்துவதைக் குறித்தும், எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் அல்லது எந்த அளவிற்கு உலக இன்பங்களை அனுபவிக்கலாம் என்பதைக் குறித்துமே தவிர அந்த மக்களுக்கு வேறு எதைக் குறித்தும் கவலை கிடையாது. அவர்களுடைய இருதயம் செம்மையானதாக இல்லாதிருப்பதே அதற்கான காரணமாகும். தேவனுக்கடுத்த காரியங்களைக் குறித்து அவர்களுக்கு கிஞ்சித்தும் பசி தாகம் கிடையாது. ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து ஒரு நாட்டமோ அல்லது தேட்டமோ எதுவும் அவர்களுக்குக் கிடையாது. கடிகாரத்தைப் போல அவர்களுக்கு ஒரு பிரதான கம்பிச் சுருள் தேவையாகும். ஆம், அவர்களுக்கு ஒரு நவமான இருதயம் தேவை. "ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையில் ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனதில்லையே" (நீதி 17 : 16)

வருடத்திற்கு வருடம் எத்தனையோ சுவிசேஷப் பிரசங்கங்களைக் கேட்ட போதினும் மக்கள் அதினால் தொடப்படாமல் அப்படியே இருப்பதின் காரணம் உங்களுக்குத் தெரியுமா? "மோட்சப் பிரயாணம்" புத்தகத்தில் "நம்பிக்கையிழவு" என்ற ஒரு இடத்தைக் குறித்து நாம் வாசிக்கின்றோம். அந்த உளையில் கிறிஸ்தியான் தவறி விழுந்து வெகு பாடுபடுகின்றான். அந்த உளையைச் சரிப்படுத்த லட்சாதி லட்சம், கோடானுகோடி வண்டிப் பாரம் கொண்ட ஆரோக்கியமான உபதேசங்களைக் கொண்டு வந்து கொட்டின போதினும் அந்த இடம் இன்னும் அப்படியே இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதுபோல மேலே கண்ட மக்கள் அவ்வப்போது மனச்சாட்சியில் குத்தப்பட்ட போதினும், அவர்கள் உணர்வுகள் விழித்துக் கொண்ட போதினும் அவர்கள் ஏன் இன்னும் இரட்சிப்பைக் கண்டடைய கால தாமதம் செய்கின்றனர்? அதின் ஒரே காரணம் அவர்களின் இருதயங்கள் சரியில்லை என்பதுதான். சில இரகசிய பாவச் சங்கிலிகள் அவர்கள் எந்தவிதத்திலும் அங்கும் இங்கும் நகராதபடி அவர்களை பூமியோடு இழுத்துக்கட்டி வைத்திருக்கின்றது. அவர்களுக்கு ஒரு நவமான இருதயம் அவசியம் வேண்டும். அவர்களுடைய சித்திரம் எசேக்கியேல் தீர்க்கனால் தெளிவாக வரையப்பட்டுள்ளது. "ஜனங்கள் கூடி வருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து உனக்கு முன்பாக என் ஜனங்கள் போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள், ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை" (எசே 33 : 31)

பல்லாயிரக்கணக்கான பெயர் கிறிஸ்தவ மக்கள் கடைசியில் பரிதாபகரமாக நஷ்டப்பட்டு நித்திய நரகத்துக்கு செல்லுவதற்கான காரணம் உங்களுக்குத் தெரியுமா? தேவன் தங்களுக்கு இரட்சண்யத்தைத் தரவில்லை என்று அவர்களால் சொல்ல முடியாது. கிறிஸ்து இரட்சகர் தங்களுக்கு அழைப்புகள் கொடுக்கவில்லை என்று அவர்களால் பேச இயலாது. இல்லவே இல்லை. "எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள்" (லூக்கா 14 : 17) என்று இரட்சகர் அழைத்ததை அவர்கள் அறிக்கை செய்தே ஆக வேண்டும். அவர்களுடைய அழிவுக்கு அவர்களே காரணம் என்று அவர்கள் இருதயங்களே அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியிடும். ஜீவ இரட்சைப் படகு அவர்களின் உடைந்த கப்பலுக்கு அருகில் வந்த போதினும் அவர்கள் அதில் ஏறித் தப்பித்துக் கொள்ள விரும்பவில்லை. இரட்சகர் எத்தனை தரமோ அவர்களைத் தம்மண்டை கூட்டிச் சேர்த்துக் கொள்ள அழைத்தபோதினும் அவரண்டை செல்லுவதற்கு அவர்களுக்கு மனதில்லாமல் போயிற்று (மத் 23 : 37) அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளையே அதிகமாக நேசித்தார்கள். அவர்கள் இருதயம் செம்மையானதாக இருக்கவில்லை.

கிறிஸ்தவ பக்தி வாழ்வில் இருதயத்தின் மகா முக்கியத்துவத்தைக் குறித்து நான் போதுமான அளவு உங்களுக்கு விளக்கிவிட்டேன் என்று நினைக்கின்றேன். இந்தப் பொருளைக் குறித்து நான் இத்தனை அழுத்தமாகக் கூறியதில் காரணம் இருக்கவே செய்கின்றது. உங்கள் இருதயம் செம்மையானதாக இருக்கின்றதா? உங்கள் இருதயம் உங்கள் ஆண்டவருக்கு முன்பாக செம்மையாக இருக்கின்றதா?

இரண்டாம் நிலையில் தேவனுக்கு முன்பாக சரியில்லாத இருதயத்தைக் குறித்து நான் உனக்குக் காண்பிக்க விரும்புகின்றேன். சரியான இருதயம் அடுத்தது தவறான இருதயம் ஆகிய இரண்டு விதமான இருதயங்கள்தான் இருக்கின்றன.

தவறான இருதயம் ஜென்ம சுபாவமான இருதயமாகும். அந்த இருதயத்தோடேயேதான் நாம் எல்லாரும் இந்த உலகத்தில் வந்து பிறந்திருக்கின்றோம். சில அறியாமை கொண்ட மக்கள் சில மனிதர்களை "நல்ல இருதயம் கொண்டவர்கள்" என்று அழைப்பதை நாம் காண்கின்றோம். ஆதாமும் ஏவாளும் என்றைக்கு பாவத்தில் வீழ்ந்தார்களோ அன்றைக்கே பாவம் உலகில் பிரவேசித்துவிட்டது. அதின் பின்னர் உலகத்தில் வந்து பிறக்கும் ஆணும், பெண்ணும் பாவத்திலேயே, பாவ சுபாவத்துடன் வந்து பிறக்கின்றனர். ஒவ்வொரு இயற்கையான இருதயமும் தவறான இருதயமாகும். நீ பிறந்ததிலிருந்து இதுவரை பரிசுத்த ஆவியானவரால் நீ மாற்றப்படாத பட்சத்தில் உன் இருதயம் நல்லதோர் இருதயம் அல்ல என்பதை இந்த நாளில் நினைவில் வைத்துக் கொள்.

ஜென்ம சுபாவ இருதயத்தைக் குறித்து தேவனுடைய வார்த்தை என்ன சொல்லுகின்றது? மிகவும் பயபக்தியான ஆழ்ந்த உண்மைகளையும், அதே சமயம் வேதனையான சத்தியத்தையும் அது நமக்குத் தெரிவிக்கின்றது. "எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாயிருக்கிறது" (எரேமியா 17 : 9) என்றும் "இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாதது" (ஆதி 6 : 5) என்றும் "மனுப்புத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது" (பிரசங்கி 9 : 3) என்றும் "மனுஷனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத் தனங்களும், கபடும், காம விகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டு வரும்" (மாற்கு 7 : 21, 22) என்றும் சொல்லுகின்றது. உண்மையில் மனித இருதயத்தை மிகவும் அதிகமாக தாழ்த்திச் சொல்லுகின்ற ஒரு படம்தான் இது! இந்தக் காரியங்களின் வித்துக்கள் இந்த உலகத்தில் ஒரு தடவை பிறந்த யாவருடைய இருதயத்திலும் இருக்கின்றது. ஜென்ம சுபாவம் கொண்ட இருதயம் ஒவ்வொன்றும் நிச்சயமாக முற்றும் தவறானது என்று நான் சொல்லுவேன்.

ஜென்ம சுபாவம் கொண்டதும், தேவனால் மாற்றப்படாததுமான பொல்லாத இருதயத்தைக் குறித்த பொதுவான அடையாளம் ஏதாகிலும் உண்டுமா? நிச்சயமாக உண்டு, பொல்லாத இருதயத்தைக் குறித்து தேவ ஆவியானவர் "கல்லான இருதயம்" (எசே 11 : 9) என்ற மிகப் பொருத்தமானதும், போதனைகள் நிறைந்ததுமான உதாரணத்தை நமக்குத் தந்திருக்கின்றார். நான் அதைக் குறித்து சில வார்த்தைகள் உங்களிடம் பேச விரும்புகின்றேன். கர்த்தர் தாமே அதைப் புரிந்து கொள்ளத்தக்கதான ஞானத்தை உங்களுக்குத் தந்தருள்வாராக.

 

கல்லானது கடினமானது

உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் கல்லானது கடினமானது என்பது நன்கு தெரியும். அது இணக்கமற்றது, வளைந்து கொடுக்காதது, அழுத்தி அமுக்க முடியாதது. கல்லானது உடைந்து நொறுங்கும், ஆனால், அது ஒருக்காலும் வளைந்து கொடுக்காது. "கல்லைப் போன்ற கடினம்" என்ற வழக்கச் சொல் உலகம் எங்கும் உள்ளது. கார்ன்வால் கடற்கரையை ஒட்டி நீண்ட நெடுஞ் சுவராக நின்று கொண்டிருக்கும் சலவைக் கல் பெரும் பாறைகளை நீங்கள் கவனித்தீர்களா? கடந்த 4000 ஆண்டு காலமாக மாபெரும் அட்லாண்டிக் சமுத்திரமானது அதை இரவும், பகலும் 24 மணி நேரமும் தொடர்ந்து மோதி அடித்து தாக்கிக் கொண்டிருக்கின்றபோதினும் அது எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இன்றும் அப்படியே நின்று கொண்டிருக்கின்றது. 4000 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த அந்தப் பாறைகளின் பழைய கடினம், மாற்றமில்லாத தன்மை, சற்றும் அசைந்து கொடுக்காத நிலை நீடித்துக் கொண்டே இருக்கின்றது. அந்தக் கருங்கல் பாறைகளைப் போன்றதுதான் ஜென்ம சுபாவமான இருதயமாகும். வாழ்க்கையில் பாடுகள், உபத்திரவங்கள், இழப்புகள், சிலுவைகள், பிரசங்கங்கள், தேவ ஆலோசனைகள், ஆவிக்குரிய புத்தகங்கள், நெஞ்சைத் தொட்டு நிற்கும் கிறிஸ்தவ பிரசுரங்கள் இப்படியான எதுவும் அந்தக் கல்லான இருதயத்தை இளகச் செய்ய முடிவதில்லை. தேவனே பரத்திலிருந்து இறங்கி வந்து அதை மாற்றமடையப் பண்ணும் வரை அது அசையாமல் அப்படியே இருக்கின்றது. உண்மைதான், தேவனுடைய வார்த்தையின்படி ஜென்ம சுபாவமுள்ள இருதயம் கல்லான இருதயம்தான்.

 

கல்லானது குளிர்ச்சியானது

ஒரு கல்லை நீங்கள் தொடுவீர்களானால் உடன் தானே "ஜில்" என்ற ஐஸ் கட்டியைத் தொடுவது போன்ற ஒரு குளிர்ச்சியின் உணர்வு உங்களுக்கு உண்டாவதை நீங்கள் உணருவீர்கள். ஒரு சரீரத்தையோ அல்லது ஒரு மரத்தையோ அல்லது பூமியையோ தொடுவது போல கல்லைத் தொடுவது இருக்காது. "கல்லைப் போன்ற குளிர்" என்ற பழமொழி எல்லாருடைய வாயிலும் உள்ளது. மேற்கத்தைய நாடுகளில் பெரிய பெரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் பளிங்கு கற்களினால் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் பண்டைய சிலைகள் அந்த தேவாலயங்களில் கொடுக்கப்படும் ஆயிரக்கணக்கான பிரசங்கங்களைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. எத்தனை எத்தனை பிரசங்கங்களை அவைகள் கேட்டாலும் அவைகள் எந்த ஒரு உணர்ச்சியையும் காண்பிப்பதில்லை. அந்தச் சிலைகளின் முகமோ அல்லது அதின் தசைகளோ அந்தப் பிரசங்கங்களைக் கேட்கும் போது சுருங்குவதோ அல்லது அசைவதோ இல்லை. அதைப் போலவேதான் ஜென்ம சுபாவம் கொண்ட இருதயமும் இருக்கின்றது. ஆவிக்குரிய உணர்வுகள் அனைத்திற்கும் அது அநாதையானது. இரட்சகர் இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்த சரித்திரம் அதற்கு எந்த ஒரு கவலையையும் உண்டாக்காது. உலகத்தில் கடைசியாக எழுதப்பட்ட ருசிகரமான நாவலில் அதற்கு விருப்பம் கிடையாது. ஒரு கொடிய ரயில் விபத்து, பல நூற்றுக்கணக்கான மக்களை மூழ்க்கடித்த ஒரு கப்பற் சேதம் அல்லது துயரமான ஒரு தூக்குத் தண்டனை எதிலும் அதற்கு உணர்ச்சிப் பெருக்கு கிடையாது. தேவன் பரத்திலிருந்து அக்கினியை அனுப்பி அதை சூடுண்டாக்கும் நாள் மட்டாக ஜென்ம சுவாவ இருதயமுள்ள மனிதன் பக்தி வாழ்வில் எந்த ஒரு வாஞ்சையற்றவனாகவே இருக்கின்றான். அந்த இருதயம் கல்லான இருதயம் என்று அழைக்கப்படுவதற்கு முற்றுமாக பாத்திரமானதே.

 

கல்லானது சாகுபடிக்கு உதவாத பாழ் நிலம்

எந்தவிதமான பாறைகளானாலும் சரி, அதில் நீங்கள் பயிரிட்டு விளைச்சலைக் கண்டு கொள்ள முடியாது. நம் இங்கிலாந்து தேசத்திலுள்ள ஸ்னோடவுன் மற்றும் நெவிஸ் மலை உச்சிகிளில் தானியங்களைப் பயிரிட்டு உங்கள் களஞ்சியங்களை நிரப்ப இயலாது. கருங்கல்லானாலும், சலவைக் கல்லானாலும், சுண்ணாம்புக் கல்லானாலும் எந்த ஒரு கல்லிலும் நீங்கள் கோதுமையை அறுவடை செய்யக் கூடாது. அதே சமயம் நம் நாட்டின் செழிப்பான பகுதிகளான நார்ஃபோக், ஸஃபோக், கேம்பிரிட்ஜ் ஷயர் போன்ற இடங்களில் நீங்கள் பொறுமையோடு பயிரிட்டு நல்ல விளைச்சலைக் கண்டடைவீர்கள். ஆனால், கல்லில் பயிரிட்டு ஒரு பைசா மதிப்புள்ள தானியத்தைக் கூட உங்களால் பெற்றுக் கொள்ள இயலாது. ஜென்ம சுபாவத்தை உடைய இருதயமும் அதைப் போன்றதேதான். அந்த இருதயம் பச்சாதாபம், விசுவாசம், அன்பு, தேவ பயம், பரிசுத்தம், மனத்தாழ்மை போன்ற எந்த ஒரு பக்தியின் அறிகுறியே தெரியாத பாழான விடாய்த்த பூமி. தேவன் அந்த இருதயத்தை உடைத்து அதை ஒரு புதிய சீருக்கு கொண்டு வராதவரை அது அவருக்கு புகழ்ச்சியாக எந்த ஒரு கனியையும் பிறப்பிக்க மாட்டாது. ஜென்ம சுபாவம் கொண்ட இருதயம் கல்லானதோர் இருதயம் என்று அழைக்கப்படுவது எத்தனை உண்மை என்று பாருங்கள்!

 

கல்லானது செத்ததாகும்

கல்லானது பார்க்காது, கேட்காது, அசையாது மட்டுமல்ல அது வளரவும் செய்யாது. பரலோக ராஜ்யத்தின் மாட்சிகளையும், மகிமைகளையும் அதற்கு விவரித்துச் சொல்லுங்கள், அவைகளின் மேல் அது பிரியம் கொள்ளாது. அக்கினியும், கந்தகமும் ஓய்வின்றி எரிந்து கொண்டிருக்கும் நரக பாதாளத்தைக் குறித்து அதை எச்சரியுங்கள். அதினால் அது பயமடையாது. கெர்ச்சிக்கின்ற சிங்கம் வருகின்றது அல்லது கொடிய பூமி அதிர்ச்சி வருகின்றது, அதற்கு ஓடித் தப்பித்துக் கொள் என்று அதினிடம் சொல்லுங்கள். அது சலனமடையாது. நம் நாட்டிலுள்ள பேஸ் கன்மலை மற்றும் மவுண்ட் பிளாங் மலைகள் கடந்த 4000 ஆண்டுகளுக்கு முன்பாக எப்படி இருந்தனவோ அப்படியே இன்றும் இருக்கின்றன. சாம்ராஜ்யங்கள் எழும்பினதையும், அவைகள் தரைமட்டாக வீழ்ச்சியடைந்ததையும் அவைகள் கண்டவைகள். ஆனால், அவைகள் கொஞ்சம் கூட மாற்றமடையாமல் அப்படியே நின்று கொண்டிருக்கின்றன. அவைகள் உயரமாகவோ அல்லது அகலமாகவோ அல்லது விரிவடைந்தோ செல்லாமல் நோவா பேழைய விட்ட நாளில் அவைகள் எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் இருக்கின்றன. அந்த மலைகளைப் போலவேதான் ஜென்ம சுபாவ இருதயமும் உள்ளது. ஆவிக்குரிய வாழ்வின் ஒரு சிறிய நெருப்புப் பொரி கூட அதில் கிடையாது. தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை அனுப்பும் நாள் மட்டாக மெய்யான பக்தி வாழ்வைக் குறித்த எந்த ஒரு அசைவும் இல்லாமல் அந்த இருதயம் கடினமான கருங்கல்லாகக் கிடக்கின்றது. கல்லான இருதயம் என்று தேவன் அதை அழைப்பது எத்தனை உண்மை என்று பாருங்கள்.

கல்லான ஜென்ம சுபாவ இருதயம் உங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த இருதயத்தை நீங்கள் பாருங்கள். அந்த இருதயத்தைக் குறித்து நீங்கள் சிந்தியுங்கள். நான் வரைந்த படத்தின் வெளிச்சத்தில் அதை உங்கள் மட்டாகப் பரிசோதியுங்கள். ஒருக்கால் உங்கள் இருதயம் இதுவரை மாற்றமடையாமல் இருக்கலாம். ஒருக்கால் அது நீங்கள் இந்த உலகத்தில் வந்து பிறந்த பொழுது எப்படி இருந்ததோ அதைப் போன்றே இன்றும் இருக்கலாம். அப்படியானால் நான் உங்களுக்குச் சொல்லுவதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இருதயம் தேவனுடைய பார்வையில் செம்மையானதாக இருக்கவில்லை.

இந்த உலகத்தில் நன்மை செய்வதற்கு மக்களுக்கு அத்தனையான ஒரு கஷ்டம் இருப்பதன் காரணத்தை நீங்கள் அறிவீர்களா? மிகவும் சொற்பமான மக்கள் மாத்திரமே தேவனுடைய சுவிசேஷத்தை விசுவாசித்து அவருடைய உண்மையான தேவப் பிள்ளைகளாக இருப்பதை நீங்கள் கவனிக்கின்றீர்களா? மனிதனின் ஜென்ம சுபாவம் கொண்ட அவனது கல்லான கடின இருதயமே அதற்குக் காரணமாகும். தனக்கு நலமானது எது என்பதை அவனால் காணவும் முடியவில்லை. அவனால் உணர்ந்து கொள்ளவும் இயலவில்லை. ஜென்ம சுபாவமுடைய இருதயம் தவறானது என்பதை நான் கண்ணீரோடு நினைவு கூறுகின்றேன்.

மனிதர் தங்கள் பாவங்களில் மரித்தால் அவர்களின் நிலைமையானது மிகவும் பரிதபிக்கப்படத்தக்கதாகும் என்பதன் காரணத்தை நீங்கள் அறிவீர்களா? மெய்யான தேவ ஊழியர்கள் தேவனைச் சந்திக்க ஆயத்தமில்லாமல் பாவத்தில் மரிக்கின்ற மக்களைக் குறித்து நடுநடுங்குவதன் காரணத்தை நீங்கள் யோசிக்கின்றீர்களா? ஜென்ம சுபாவம் கொண்ட மாந்தரின் கடினமான இருதயமே அதின் காரணமாகும். கல்லான இருதயம் மாற்றப்படாத ஒரு மனிதன் பரலோகத்திற்குள் எப்படியோ பிரவேசித்துவிட்டால் அவனால் அங்கு என்ன செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? எந்த பரிசுத்தவான்களுடன் அவன் கூடி உட்கார்ந்து ஆனந்தம் கொள்ள முடியும்? தேவனுடைய சமூகத்திலும், அவருடைய பரிசுத்தவான்களின் சங்கத்திலும்அவன் என்ன மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்? ஒரு ஆனந்தத்தையும் அவனால் பரலோகத்தில் அனுபவிக்க முடியாது. தனது கல்லான இருதயம் மாற்றப்படாமல் ஜென்ம சுபாவத்துடன் மரணமடையும் மனிதனுக்கு பரலோகத்தில் எந்த ஒரு மகிழ்ச்சியுமே கிடையாது. இந்தக் காரியத்தை நீயே சிந்தித்துக் கொள்ளும்படியாக உனது மனச்சாட்சிக்கு நான் விட்டு விடுகின்றேன். உனது இருதயம் சரியானதாக இருக்கின்றதா? உனது இருதயம் தேவனுடைய பார்வையில் செம்மையானதாக இருக்கின்றதா?

கடைசியாக நான் உனக்கு நல்ல இருதயத்தைக் காண்பிக்க விரும்புகின்றேன். அந்த நல்ல இருதயத்தைக் குறித்து வேதாகமம் அநேக படங்களை வைத்திருக்கின்றது. அந்தப் படங்களில் சிலவற்றை நான் உனக்கு முன்பாக வைக்க ஆசைப்படுகின்றேன். நல்ல இருதயத்தின் அடையாளங்களையும் அதின் தோற்றங்களையும் நீயே வந்து பார்.

 

உத்தம இருதயம் ஒரு நவமான இருதயமாகும்

"உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுப்பேன்" (எசேக்கியேல் 36 : 26)

மனிதன் இந்த உலகத்தில் பிறக்கும்போது அவனிலிருந்த இருதயம் அல்ல அது. பரிசுத்த ஆவியானவரால் அவனில் வைக்கப்பட்ட மற்றொரு இருதயமாகும் அது. அந்த இருதயம் புதிய ஆவல்களையும், புதிய சந்தோசங்களையும், புதிய நம்பிக்கைகளையும், புதிய கவலைகளையும், புதிய விருப்பங்களையும், புதிய வெறுப்புகளையும், தனனகத்தே கொண்டி ருக்கின்றது. அந்த இருதயம் ஆத்துமாவைக் குறித்தும், இரட்சிப்பைக் குறித்தும், பாவத்தைக் குறித்தும், பரிசுத்தத்தைக் குறித்தும், தேவனைக் குறித்தும், வேதாகமத்தைக் குறித்தும், ஜெபத்தைக் குறித்தும், மோட்சத்தைக் குறித்தும், கடந்து செல்லும் மாய உலகத்தைக் குறித்தும் புதிய தரிசனத்தைக் கொண்டிருக்கின்றது. சீரழிக்கப்பட்டுக் கிடந்த பரிதாபகரமான ஒரு விவசாயப் பண்ணையத்துக்கு அதை சீரும் சிறப்புமாக திரும்பவும் எடுத்து நிறுத்திப் பேணிப் பராமரிக்கும் ஒரு நல்ல விவசாயக் குடும்பம் அதைப் பொறுப்பெடுத்ததைப் போன்றதாகும் அது. "பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2 கொரி 5 : 17)

 

உத்தம இருதயம் நொறுங்குண்டதும்
நறுங்குண்டதுமான இருதயமாகும் (சங் 51 : 17)

உத்தம இருதயமானது பெருமை, மாய்மாலம், சுய நீதி போன்றவைகளுக்கு உடைந்து நொறுங்கிப்போன ஒரு இருதயமாகும். ஒரு காலத்தில் அது தன் சுயத்தைப் பற்றி உயர்வாகக் கொண்டிருந்த எண்ணங்கள் எல்லாம் இப்பொழுது அது தன்னைக் குற்றவாளியாகவும், தகுதியற்றவனாகவும், களங்கமுடையவனாகவும் காண்கின்றது. அந்த இருதயத்தின் கடந்த கால பிடிவாதம், முறுமுறுப்பு, வாக்குவாதம், இருதயக்கடினம் எல்லாம் பகலவனைக்கண்ட பனி போல உருகிக்கரைந்து இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது. தேவனைத் துக்கப்படுத்தும் காரியங்களைக் குறித்து அது மிகவும் விழிப்பாக இருக்கின்றது. அந்த இருதயம் இப்பொழுது இளகியதும், ஞானமுடையதாகவும், பாவத்தினுள் செல்லுவதைக் குறித்து பயந்து நடுங்குவதாகவும் இருக்கின்றது (2 இரா 22 : 19) அந்த இருதயம் சாந்தமும், மனத்தாழ்மையுடையதாகவும், சுயம் முற்றும் வேர் அறுக்கப்பட்டதாகவும் எந்த ஒரு நன்மையும் தன்னில் வாசம் பண்ணகிறதில்லை என்று தன்னைத் துயரத்துடன் காண்கின்றதாகவும் உள்ளது.

 

உத்தம இருதயம் கர்த்தர் இயேசுவை
அண்டின ஒரு இருதயமாகும்

விசுவாசத்தினாலே கிறிஸ்து தனது இருதயத்தில் வாசமாயிருக்கிறார் என்பதை அறிந்து தனது இரட்சண்யத்திற்காக கிறிஸ்து ஒருவரையே அது அண்டிக் கொண்டிருக்கின்றது. இரட்சகரின் சிலுவை மரணம், பரமேறுதல், பிதாவுடனான அவரின் மத்தியஸ்தம், அவருடைய பரிந்து மன்றாடுதலின் பேரில் தனது அனைத்து நம்பிக்கைகள், தனது பாவ மன்னிப்பு, நித்திய ஜீவன் எல்லாவற்றையும் அது வைத்திருக்கின்றது. துர்மனச்சாட்சி நீங்க தெளிக்கப்பட்ட இருதயமுள்ளதாயும் அது இருக்கின்றது (எபி 10 : 22) காந்த ஊசி எந்த நேரமும் வட திசையை நோக்கி நின்று கொண்டிருப்பது போன்று அந்த இருதயம் எப்பொழுதும் கிறிஸ்துவையே நோக்கியி ருக்கின்றது. அந்த இருதயம் தன்னுடைய அனுதின தேவ சமாதானம், கிருபை, இரக்கம் தயவு போன்றவற்றிற்காக சூரிய காந்தி மலர் சூரியனுக்கு நேராகத் தனது முகத்தை திருப்பி நிற்பது போல இரட்சகருக்கு நேராக தனது முகத்தை வைத்திருக்கின்றது. வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அனுதினமும் மன்னாவால் போஷிக்கப்பட்டது போல அந்த இருதயமும் கிறிஸ்துவால் அன்றாடகமும் பிழைப்பூட்டப்படுகின்றது. அந்த ஆத்துமா அவரில் சார்ந்திருக்கின்றது. அது அவரை தனது பரம பரிகாரியாக, தனது மோட்சலோக வழிகாட்டியாக, தனது ஆத்தும மணவாளனாக, தனது பிராண சிநேகிதனாக அண்டி நிற்கின்றது.

 

உத்தம இருதயம் சுத்திகரிக்கப்பட்டதொரு இருதயமாகும்

அந்த இருதயம் பரிசுத்தத்தை வாஞ்சித்து பாவத்தை வெறுக்கின்றது. ஆவி, ஆத்துமா, சரீரத்தை அசுசிப்படுத்தக்கூடிய சகல காரியங்களிலிருந்தும் அது தன்னை விடுவித்துக் கொள்ள அனுதினமும் கடுமையாகப் போராடுகின்றது (2 கொரி 7 : 1) அது தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக் கொள்ளுகின்றது. தேவனுடைய வேதத்தில் அது மனமகிழ்ச்சி கொள்ளுகின்றது. அதை மறந்துவிடாதிருக்க அதை தனது இருதய பலகையில் எழுதிக் கொள்ளுகின்றது. தேவனுடைய வேதத்தை நன்மையும், செம்மையுமாக காத்து நடக்க அது வாஞ்சிக்கின்றது. அந்த இருதயம் தேவனையும், மனிதனையும் நேசிக்கின்றது. அதின் ஏக்கமும், தாகமும், வாஞ்சையும் பூமிக்குரியவைகளையல்ல, மேலானவைகளையே தேடுவதாகவும், நாடுவதாகவும் இருக்கின்றது. பரிசுத்தத்தில் அது உயரமும் உன்னதமுமான நிலையில் இருந்தாலும் அதைக் குறித்து சந்தோசம் அடையாமலும், அந்த பரிசுத்த நிலையில் திருப்தி கொள்ளாமலும் தான் சென்றடையப் போகும் பரலோகத்தையே அது ஆனந்தத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

 

உத்தம இருதயம் எப்பொழுதும் ஜெபித்துக்
கொண்டே இருக்கும் இருதயமாகும்

அப்பா பிதாவே, என்று கூப்படப்பண்ணுகிற புத்திர சுவீகாரத்தின் ஆவி அந்த இருதயத்துக்குள் இருப்பதால் (ரோமர் 8 : 15) உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே (சங் 27 : 8) என்று அந்த இருதயம் சொல்லுகின்றது. ஆவிக்குரிய காரியங்களையும், பெலவீனமானதும், பூரணமற்றதும், எதுவானாலும் அது அதை கர்த்தரிடம் கட்டாயம் சொல்லி விடும். அந்த இருதயம் தேவனிடத்தில் தனது இரகசியங்கள் அனைத்தையும் சொல்லுகின்றது. அவருக்கு மறைவாக எதையும் அது தனக்கென்று வைத்துக் கொள்ளுவதில்லை. மூச்சுவிடாமல் இருக்கும்படியாகக் கடினமாகப் பிரயாசப்பட்டு ஒரு மனிதனை நீங்கள் அவ்வாறே இருக்கும்படியாகச் செய்துவிடுவீர்களானால் உத்தம இருதயத்தைக் கொண்ட ஒரு கர்த்தருடைய பிள்ளையை ஜெபிக்காமல் இருக்கச் செய்துவிடலாம். உத்தம இருதயத்திற்கு ஜெபமானது ஜீவ மூச்சாகும். அது எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டே இருக்கும்.

 

உத்தம இருதயம் தன்னளவில் போராட்டத்தை
உணரும் இருதயமாகும்

மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக் கிறவைகளைச் செய்யாதபடிக்கு இவைகள் ஒன்றுக்கு ஒன்று விரோதமாயிருக்கிறது (கலா 5 : 17) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுலும் தனது அனுபவத்திலிருந்து இந்தக் காரியத்தைக் குறித்துப் பேசும்போது "என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கின்றேன்" (ரோமர் 7 : 23) என்கின்றார். ஜென்ம சுபாவம் கொண்ட பொல்லாத இருதயம் மேற்கண்ட போராட்டங்கள் எதையும் அறிவதில்லை. பொல்லாத இருதயத்தை ஆயுதம் தரித்த பலவான் காக்கிறபோது அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும். ஆனால், அந்த இருதயத்தின் உண்மையான ராஜா அதை மேற்கொள்ளும் போது அவனுடைய சகல ஆயுதத்தையும் பறித்துக் கொள்ளுகின்றான். அன்றிலிருந்து மரணபரியந்தம் அந்த இருதயத்தில் ஒளிக்கும், இருளுக்கும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கின்றது.

 

உத்தம இருதயம் மேன்மையான இருதயமாகும்

இறுதியாக உத்தம இருதயமானது தனித்தும், உண்மையானதும், மேன்மையானதுமான இருதயமாகும். அந்த இருதயத்தினிடத்தில் பொய், மாய்மாலம், இடத்திற்கு ஏற்றபடியான நடிப்பு ஜோடிப்பு எதுவும் இருக்காது. அது இரட்டையானதோ அல்லது தன்னளவில் பிளவுபட்டதோ இல்லை. அதினுடைய விசுவாசம் ஒருவேளை தடுமாற்றமுடையதாகக் காணப்படலாம். அதினுடைய கீழ்ப்படிதல் பூரணமற்றதாக இருக்கலாம். ஆனால் உத்தம இருதயத்தின் சிறப்பான வெளிப்பாடு என்னவெனில், அதினுடைய பக்தி போலியில்லாத சுத்தமான மெய் பக்தியாகும். அது பூரணமானது. உண்மையானது.

அவர்கள் எந்த பாஷைக்காரரானாலும், எந்த தேசத்தவராயினும் நான் இப்பொழுது உங்களுக்கு விவரித்துக் காண்பித்த உத்தம இருதயமேதான் மெய்யான ஆண்டவருடைய பிள்ளைகள் அனைவரின் இருதயமாகும். அவர்கள் ஒருவரிலிருந்து மற்றவர்கள் அநேக காரியங்களில் முற்றும் வேறுபட்டுக் காணப்படுவார்கள். ஆனால், அவர்கள் யாவரும் உத்தம இருதயமுடையோராவார். அவர்களில் சிலர் தாவீது ராஜாவைப் போலவோ அல்லது பேதுரு அப்போஸ்தலனைப் போலவோ ஒரு குறிப்பிட்ட காலம் வீழ்ச்சியடைந்தபோதினும் அவர்களின் இருதயம் ஒருக்காலும் தங்கள் ஆண்டவரிலிருந்து விலகிச் சென்றிருக்காது. அவர்கள் ஆண்களோ, பெண்களோ, வயது மூப்பின் காரணமாக அவர்கள் பெலவீனராக இருந்தபோதினும் அவர்கள் இருதயங்கள் கர்த்தரின் பார்வையில் செம்மையானதாகவிருக்கும். இந்தப் பூமியில் அவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களின் ஆவிக்குரிய அனுபவங்கள் எங்கு சென்றாலும் ஒன்றாக இருப்பதை ஆச்சரியத்துடன் கண்டு கொள்ளுவார்கள். இனி வரப்போகும் உலகத்தில் இன்னும் பூரணமாக அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுவார்கள். அவர்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாக மாசில்லாத உத்தம இருதயத்தைப் பெற்ற தேவ மக்களாவார்கள்.

 

உங்கள் இருதயத்தைக் குறித்து
சில பொதுவான தேவ ஆலோசனைகள்

இதை வாசிக்கின்ற ஒவ்வொருவரையும் நான் இந்த நாளில் திறந்த மனதோடு கேட்கும் ஒரு கேள்வி என்னவெனில் "உங்களுடைய இருதயம் எப்படியிருக்கிறது? உங்களுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக சரியாக இருக்கின்றதா? அல்லது தவறாக இருக்கின்றதா?" உங்களுடைய இருதயம் சரியாக இருந்தால் அது உங்களுக்கு நலமானது. "நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால் நாம் தேவனிடத்தில் தைரியம் கொண்டிருக்கலாம்" (1 யோ 3 : 21) ஆனால், உங்கள் இருதயம் சரியாக இல்லாதபட்சத்தில் அதின் தவறைக் கண்டு பிடித்து ஒரு பரிசுத்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு இதுவே சரியான தருணமாகும். வாழ்நாட்காலம் மிகவும் குறுகியது. ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. எனவே, இந்த நாளில்தானே "என் இருதயம் சரியாக இருக்கின்றதா? அல்லது தவறாக இருக்கின்றதா?" என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்.

"இந்தவிதமான கேள்விகளை என் இருதயத்தினிடம் கேட்க எனக்குத் தேவையில்லை. நான் ஆலயத்திற்கு ஒழுங்காகச் செல்லுகின்றேன். நான் ஒரு கண்ணியமான வாழ்க்கை நடத்துகின்றேன். நான் ஒரு உத்தமன் என்று இறுதியில்தான் நான் என்னை நிரூபிக்க முடியும்" என்று ஒரு வேளை உனக்குள்ளாக நினைத்துக் கொள்ளாதே. இந்தவிதமான நினைவுகளை நீ நினைக்க வேண்டாம் என்று நான் உன்னைக் கெஞ்சிக் கேட்கின்றேன். நீ எப்பொழுதாவது உனது வாழ்வில் மனந்திரும்பித் தேவனை அண்டிக்கொள்ள வேண்டும் என்று நீ நினைப்பாயானால் இந்தவிதமான இறுமாப்பான எண்ணங்களுக்கு இடம் கொடாதே. நீ இந்தப் பூவுலகத்திலுள்ள ஆலயங்களிலே மிகவும் முதல்தரமான ஆவிக்குரிய தேவாலயத்திற்குச் சென்று சிறந்த பிரசங்கிமார்களின் பிரசங்கம் கேட்கலாம். கர்த்தருடைய ஆலய அனுசரணைகளில் நீ சிறந்தவர்களுக்குள் சிறந்தவராக இருக்கலாம் அல்லது உனது ஆலயத்தின் அங்கத்தினர்களில் நீயே சிரேஷ்ட அங்கத்தினனாக இருக்கலாம். இவை யாவிலும் உன் இருதயம் தேவனுடைய பார்வையில் சரியாக இராதபட்சத்தில் நீ அழிவின் விசாலமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றாய் என்பதை நினைவில் வைத்துக் கொள். உனக்கு முன்பாக உள்ள கேள்வியை உத்தமமான இருதயத்தோடு ஆராய்ந்து பார். உனது இருதயம் தேவனுக்கு முன்பாக சரியாக இருக்கின்றதா அல்லது தவறாக இருக்கின்றதா?

"தன்னுடைய இருதயம் எப்படிப்பட்டது என்பதை ஒருவராலும் அறிய முடியாது. எந்த ஒரு மனிதனும் முழுமையான நிச்சயத்தோடு தனது ஆத்துமத்தின் நிலையைப் புரிந்து கொள்ளக் கூடாது" என்று நீ உனக்குள்ளாக சிந்திக்கவும், பேசவும் செய்யாதே. நான் உனக்குத் திரும்பவுமாகச் சொல்லுகின்றேன். இந்தவிதமான நினைவுகளைக் குறித்து நீ எச்சரிக்கையாயிரு. இருதயத்தை அறிந்து கொள்ள முடியும். அதினுடைய எண்ணங்களை நம்மால் வகையறுக்கக்கூடும். உன்னோடு நீ நேர்மையாகவும், ஒளிவு மறைவின்றியும் நடந்து கொள். உனது உள்ளான மனிதனின் நிலையைக் குறித்து அறிந்து கொள்ள ஒரு நியாய சபையைக் கூட்டு. அதில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கக்கூடிய குழுவை ஏற்படுத்து. கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம் நியாய சபையின் நீதிபதியாக இருப்பாராக. சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வா. உன்னுடைய இருதயத்தின் ஆவல்கள் என்ன என்பதை விசாரித்துக் கேள். உன்னுடைய ஆசைகள் எதைப்பற்றியதாக இருக்கின்றது? உன்னுடைய பொக்கிஷம் எங்கே இருக்கின்றது? நீ எதை அதிகமாகப் பகைக்கின்றாய்? நீ அதிகமாக நேசிப்பது எது? உன் உள்ளத்தை அதிகமாகப் பூரிக்கப்பண்ணுவது யாது? உன்னை அதிகமாகத் துக்கப்படுத்தும் காரியம் என்னவோ? இந்தக் காரியங்களைக் குறித்து உன் இருதயத்திடம் பாரபட்சமற்ற ஒரு விசாரணை நடத்தி அதற்கான பதில் என்ன என்பதை பதிவுசெய்து கொள். "உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" (மத் 6 : 21) ஒரு மரம் அதின் கனியினால் அறியப்படும் (மத் 7 : 20) ஒரு உண்மையான கிறிஸ்தவன் அவனுடைய பழக்கவழக்கங்கள், ஆசை ஆவல்கள், விருப்பங்களால் அறியப்படுகின்றான். உண்மைதான், உன்னுடைய இருதயம் எப்படிப்பட்டது என்பதை நீ உண்மையும், பாரபட்சமற்ற நேர்மையான விதத்தில் உன்னைச் சோதித்துப் பார்த்தால் துரிதமாகக் கண்டு கொள்ளலாம். உன்னுடைய இருதயம் சரியாக இருக்கின்றதா அல்லது தவறாக இருக்கின்றதா?

"நீங்கள் சொல்லுவதை நான் அப்படியே ஒத்துக் கொள்ளுகின்றேன். ஆனால், நான் என் இருதயத்தின் நிலையை ஆராய்ந்து பார்க்க எனக்கு வசதியான ஒரு நாளைத் தெரிந்து கொள்ளுகின்றேன். அதைச் செய்ய இப்பொழுது எனக்கு நேரமில்லை. ஒரு வசதியான நேரத்தைக் கண்டு பிடிக்கக் கூடாதவனாக இருக்கின்றேன்" என்று நீ உனக்குள் நினையாதிருக்க நான் உன்னைக் கேட்டுக் கொள்ளுகின்றேன். இந்தவிதமான எண்ணங்களைக் குறித்து நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நான் இதை திரும்பவும் சொல்லுகிறேன். பூவுலக வாழ்க்கை அநித்தியமானது. இருப்பினும் நீ ஒரு வசதியான நேரத்தைக் குறித்துப் பேசுகின்றாய் (அப் 24 : 25) முடிவில்லாத நித்தியம் உனக்கு வெகு அருகில் இருக்கும் இந்த நேரத்தில் தேவனைச் சந்திக்கும் காரியத்தை நீ தள்ளிப் போடுவதைக் குறித்துப் பேசுகின்றாய். அந்தோ, இந்தவிதமான தள்ளிப்போடும் பழக்கத்தினால் கோடிக்கணக்கான மக்கள் முடிவில்லாத நித்திய அழிவை சுதந்தரித்து இன்று நரக அக்கினியில் இருக்கின்றனர். நிர்ப்பந்தமான மனிதனே, காரியங்களைத் தள்ளிப் போடு என்று உனக்கு தீய ஆலோசனை கொடுக்கும் தந்திரப் பிசாசினிடமிருந்து யார் உன்னை விடுவிப்பார்? உனது கடமையைச் செய்ய விழித்துக் கொள். உன்னைச் சூழ்ந்து சுற்றியிருக்கும் உனது பெருமை, சோம்பேறித்தனம், உலக நேசம் என்ற சங்கிலிகளை உதறிப்போட்டு வெளியே வா. எழுந்திருந்து உனது கால்களில் தரித்து நில். உனக்கு முன்பாக உள்ள கேள்வியைத் திறந்த உள்ளத்தோடு உற்றுப் பார். உனது இருதயம் தேவனுக்கு முன்பாக சரியாக இருக்கின்றதா அல்லது தவறாக இருக்கின்றதா?

தங்கள் இருதயம் சரியாக இல்லாதபோதினும் அதைத் திருத்திக் கொள்ள மனமற்றிருக்கும் மக்களுக்கு நான் இரண்டாம் கட்டமாக ஒரு உறுதியான எச்சரிக்கையைக் கொடுக்க விரும்புகின்றேன். அதை நான் கிறிஸ்துவுக்குள்ளான எல்லா தேவ அன்போடும், பாசத்தோடும் செய்ய விரும்புகின்றேன். தேவையற்ற விதத்தில் நான் உங்களை பயமுறுத்த வேண்டும் என்று நான் விரும்புவதில்லை. ஆனால், உங்களுக்கு முன்பாக உள்ள ஆபத்தான நிலை குறித்து உங்களுக்கு விவரித்துச் சொல்ல முடியாதவனாக நான் இருக்கின்றேன். உங்களுடைய இருதயம் தேவனுக்கு முன்பாகச் சரியாக இல்லாவிட்டால் எரி நரகத்தின் ஓரத்தில் நீங்கள் நிர்ப்பந்தமாக தொங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று நான் உங்களை எச்சரிக்கின்றேன். உங்களுக்கும், நித்திய மரணத்துக்கும் இடை வெளி ஒரு அடி தூரம் மட்டுமே என்பதை நீங்கள் உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு மனிதனும், ஸ்திரீயும் சரியான இருதயமில்லாதவர்களாக மோட்சத்தில் பிரவேசிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? மனந்திரும்பாத ஒரு ஆத்துமா பரலோகத்திற்குச் செல்லும் என்ற உங்கள் பொய் வசனிப்பை உங்களிடமிருந்து உடனடியாகவும், என்றென்றுமாகவும் நீங்கள் அகற்றிப் போடுங்கள். கர்த்தருடைய வார்த்தை என்ன சொல்லுகின்றது? "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்" "நீங்கள் மனந்திரும்பி பிள்ளைகளைப் போலாகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்" "பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே" (யோவான் 3 : 3, மத்தேயு 18 : 3, எபிரேயர் 12 : 14) அநேகர் நினைப்பது போல நமது பாவங்கள் மாத்திரம் மன்னிக்கப்பட்டால் போதுமானதல்ல, நமது பாவ மன்னிப்புடன் நவமான இருதயமும் கிடைக்கப் பெற்றிருக்க வேண்டும். நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவ இயேசு இரட்சகரின் இரத்தமும், நம்மைப் புது சிருஷ்டிகளாக மாற்ற பரிசுத்த ஆவியானவரும் நமக்கு உண்டு. கழுவப்படுதலும், புதிதாக்கப்படுதலும், இரட்சிக்கப் படுதலுக்கு அவசியமான ஏதுக்களாகும்.

தேவனுக்கு முன்பாகச் செம்மையான இருதயமில்லாமல் பரலோகத்தில் நீ பிரவேசித்தால் அங்கு நீ சந்தோசமாக இருக்கக் கூடுமா என்பதை நீ ஒரு கணம் யோசித்துப் பார்த்ததுண்டுமா? இந்தவிதமான பொய்யான மாயைகளை உன்னிலிருந்து உடனடியாக விலக்கிப்போடு. ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் நீ பங்கடைந்து அதை அனுபவித்து ஆனந்திக்க வேண்டுமானால் அதற்கான தகுதி உனக்கு வேண்டும் (கொலோ 1 : 12) உனது இருதயத்தின் ஆவல்கள், வாஞ்சைகள், விருப்பங்கள், எல்லாம் பரலோகத்திலுள்ள பரிசுத்தவான்கள், தேவ தூதர்களுக்கு ஒப்பாக மாற்றம் அடைந்தால்தான் அந்த பரிசுத்த சங்கத்தின் கூட்டத்தில் நீ ஆனந்தம் கண்டடைய முடியும். தண்ணீரில் வீசப்பட்ட ஒரு ஆடு அங்கு சந்தோசமாக இருக்கவியலாது. தரையில் வீசப்பட்ட மீன் அந்த காய்ந்த தரையில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. தேவனுக்கு முன்பாக சரியான இருதயங்கள் இல்லாமல் பரலோகத்தில் பிரவேசிக்கும் புருஷரானாலும், ஸ்திரீகளானாலும் அங்கு சந்தோசமாக இருக்க முடியாது. அந்த இடத்திற்கு அவர்கள் செல்ல விரும்பவுமாட்டார்கள். அவர்களால் அங்கு செல்லவும் கூடாது. "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்" (யோவான் 3 : 20)

என்னுடைய எச்சரிப்பு உங்களுக்கு முன்பாக இருக்கின்றது. இந்தச் சத்தியத்திற்கு விரோதமாக உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள். அதை விசுவாசியுங்கள். அதின்படி காரியங்களைச் செய்யுங்கள். கால தாமதமில்லாமல் புது வாழ்வுக்கு விழித்தெழும்புங்கள். ஒன்று நிச்சயமான உண்மையாகும். நீங்கள் தேவனுடைய எச்சரிப்பைக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தேவன் தாம் சொல்லிய வார்த்தைகளிலிருந்து ஒருக்காலும் பின் செல்ல மாட்டார். "நாம் உண்மையில்லா தவர்களாயிருந்தாலும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார், அவர் தம்மைத் தாமே மறுதலிக்கமாட்டார்" (2 தீமோ 2 : 13)

அருமை இரட்சகர் இயேசு பலஸ்தீனா தேசத்தில் இருந்த நாட்களில் நீயும் அவர் வாழ்ந்து கொண்டிருந்த அந்த இடத்தில் இருந்திருந்தால் நீ சுகயீனமாக இருக்கும்போது இரட்சகரண்டை போய் உனது சுகத்துக்காக அவருடைய உதவியைத் தேடி இருப்பாய். கப்பர்நகூம் பட்டணத்திலுள்ள ஏதாவது ஒரு குறுகலான சந்துக்கடுத்த தெருவிலுள்ள வீட்டிலோ அல்லது நீலக் கலிலேயா கடலின் அருகிலுள்ள உனது சிறிய வீட்டில் நீ இருதய பெலவீனத்தால் கடுமையாகத் தாக்குண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பாயானால் உனது சுகத்துக்காக நிச்சயமாக இரட்சகர் இயேசுவண்டை சென்றிருப்பாய். அன்பின் ஆண்டவர் தினந்தோறும் செல்லும் வழித்தடத்தில் நாள்தோறும் உட்கார்ந்து அவர் உனக்குத் தென்படும் வரை ஆவலாகக் காத்திருப்பாய். அவர் உனக்குத் தென்படாவிட்டால் நீயே அவரைத் தேடிச் சென்று அவரைக் கண்டுபிடித்து உனது இருதய பெலவீனத்தைக் கண்ணீருடன் அவரிடம் சொல்லி உனது சுகத்தை எப்படியாயினும் பெற்றுக் கொள்ளுவாய். அதைச் செய்யும் வரை நீ அமர்ந்திருக்கமாட்டாய். அத்தனை விடா முயற்சியுடன் உன் சரீரப் பிணிக்காகச் செய்யும் நீ உனது விலையேறப்பெற்ற ஆத்துமத்தின் நோய்க்காக ஏன் அப்படிச் செய்யக்கூடாது? பரலோகத்தில் இருக்கும் பரம பரிகாரியிடம் "உனது கல்லான இருதயத்தை எடுத்துவிட்டு சதையான இருதயத்தை உனக்குத் தரும்படியாக நீ ஏன் கெஞ்சிக் கேட்கக்கூடாது" (எசே 11 : 9) மீண்டுமாக நான் உன்னை வருந்தி அழைக்கின்றேன். உனக்கு ஒரு நவமான இருதயம் வேண்டுமானால் உன்னுடைய சொந்த பெலத்தால் அதைப் பெற்றுக் கொள்ளும்படியாக உனது காலத்தை வீண் விரயமாக்கிக் கொண்டிராதே. உன்னுடைய சொந்த பெலத்தால் அதைச் செய்யவே முடியாது. ஆத்துமாக்களின் மாபெரும் பரம வைத்தியன் இரட்சகரண்டை வா. ஆம், இயேசு கிறிஸ்துவண்டை உடனே எழுந்து வா.

தேவனுடைய பார்வையில் செம்மையான இருதயத்தைக் கொண்டிருப்போருக்கு நான் தேவ ஆலோசனை கொடுக்க ஆசைப்படுகின்றேன். ஆம், எல்லா உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் நான் அதைக் கொடுக்கின்றேன்.

உங்களுடைய இருதயம் கர்த்தருடைய பார்வையில் உத்தமமாக உள்ளதா? அப்படியானால் நீங்கள் ஆண்டவருக்கு நன்றியுள்ளவர்களாக இருங்கள். "உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளிக்குள் வரவழைத்த" (2 பேதுரு 2 : 9) தேவனுக்கு துதி ஸ்தோத்திரங்களை செலுத்துங்கள். ஒரு காலத்தில் நீங்கள் எப்படிப்பட்ட கொடிய பாவ சுபாவத்தில் இருந்தீர்கள்? உங்களுக்காக தேவன் பாராட்டிய கிருபையின் இரக்கத்தால் நீங்கள் இப்பொழுது எப்படி இருக்கின்றீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். நீங்கள் இந்த உலகத்தில் பிறந்த கல்லான கடின இருதயத்தோடு இப்பொழுது இருக்கவில்லை. நிச்சயமாக தனது இருதயம் புதிதாக்கப்பட்டதோர் மனிதன் முழுமையும் துதியால் நிறைந்திருப்பான்.

உன்னுடைய இருதயம் செம்மையாக இருக்கின்றதா? அப்படியானால், நீ தாழ்மையோடு விழித்திரு. நீ இன்னும் மோட்சத்தில் இல்லை. பூமியில்தான் இருக்கின்றாய். நீ இன்னும் மாம்ச சரீரத்தில்தான் இருக்கின்றாய். தந்திர சாத்தான் உன் அருகிலேயேதான் இருக்கின்றான். அவன் தூங்கப் போவதில்லை. ஓ, எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். சோதனைக்குட்படாதபடிக்கு நீ விழித்திருந்து ஜெபம்பண்ணு. உன்னுடைய இருதயத்தை கிறிஸ்து இரட்சகரே உனக்காகப் பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள அவரை நோக்கி மன்றாடு. அவரே அதில் வாசம் செய்யவும், அவரே அதை ஆளுகை செய்யவும், அவரே அரணைப் பாதுகாக்கும் படைத் தளபதியாக இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், அதற்கு எதிராக எழும்பும் சாத்தானின் ஒவ்வொரு தாக்குதலையும் தமது கால்களின் கீழ்வைத்து மிதித்து நசுக்கவும் அவரைக் கெஞ்சிக் கேள். உனது இருதயக் கோட்டையின் சாவிகளை அந்த ராஜாவின் கரங்களிலேயே எப்பொழுதும் வைத்துக் கொள்ளச் சொல்லி அவருக்கே கொடுத்துவிடு. "தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்" (நீதி 28 : 26) என்று ஞானி சாலொமோன் சொன்ன வார்த்தையை நாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டியது அவசியமாகும்.

உன்னுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையானதாக இருக்கின்றதா? அப்படியானால் மற்றவர்களுடைய இருதயங்களைக் குறித்து நம்பிக்கை கொண்டிரு. உன்னுடைய இருதயத்தை செம்மையாக மாற்றியவர், உன்னை புது சிருஷ்டியாக மாற்றியவர் அவர்களையும் ஏன் மாற்ற முடியாது? அதற்காக நீ கிரியை நடப்பி. அதற்காக ஜெபி. அதற்காக பேசு. அதற்காக நீ எழுது.

உன்னுடைய இருதயம் செம்மையானதாக இருக்கின்றதா? அப்படியானால், அதினிடமிருந்து பெரிய காரியங்களை நீ எதிர்பார்த்து விடாதே. அது பெலவீனமாக இருக்கிறதையும், அடிக்கடி பயத்திற்கும், சந்தேகத்திற்கும் அது இடமாவதையும், அது மயங்குவதையும், தடுமாற்றம் கொள்ளுவதையும் நீ பார்க்கும்போது ஆச்சரியம் கொள்ளாதே. உங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு மீண்டும் வரும் வரை உங்கள் மீட்பு பூரணமாகவில்லை. பூரண இரட்சிப்பு இன்னும் வெளியாகவில்லை (லூக்கா 21 : 28, 1 பேதுரு 1 : 5) உங்களுடைய இருதயம் மாற்றப்பட்டும், புதிதாக்கப்பட்டும், பரிசுத்தமாக்கப்பட்டதுமாக இருந்தபோதினும் அது ஒரு மனுஷ இருதயமாகவும், பொல்லாங்கனுடைய உலகத்தில் அது இன்னும் இருந்து கொண்டிருப்பதையும் நீங்கள் மறப்பதற்கில்லை.

இறுதியாக, செம்மையான இருதயமுடைய உத்தம மார்க்கத்தாரை நான் கெஞ்சிக் கேட்பது என்னவென்றால் நீங்கள் எல்லாரும் ஆண்டவருடைய இரண்டாம் வருகையின் ஆனந்த நாளுக்காக உங்கள் முகங்களை ஆகாய மேகத்திற்கு நேராக உற்று நோக்குங்கள். கர்த்தருடைய பிள்ளைகள் களிகூரவும், சாத்தான் நித்திய சங்கிலிகளால் கட்டப்படப் போகும் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த நாளுக்காக நாம் காத்திருப்போம், விழித்திருப்போம், ஜெபித்துக் கொண்டே இருப்போம். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. இரவு சென்று போயிற்று, பகல் சமீபமாயிற்று. மெய்யாகவே நமது இருதயங்கள் தேவ சமூகத்தில் செம்மையானதாக இருந்தால் நாம் அடிக்கடி கர்த்தராகிய இயேசுவே வாரும். நீர் தாமதமின்றி விரைந்து வாரும் என்று கதறுகிறவர்களாக இருப்போம். அல்லேலூயா.

 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM