பக்த சிரோன்மணிகளின் தேவச்செய்திகள்

ஜாண் பன்னியன் (1628 - 1688)


ஜாண் பன்னியன் தனது மரணத்துக்கு 12 நாட்களுக்கு முன்னர் "ஓயிட் சாப்பல்" என்ற இடத்தில் தன் வாழ்வில் கடைசியாக செய்த பிரசங்கம்.

"அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள்" (யோவான் 1 : 13)

மேலே குறிப்பிட்ட தேவனுடைய வசனமானது அதற்கு முன்னாலுள்ள வசனங்களுடன் தொடர்புடையது. ஆகையால் அந்த வசனங்களையும் நீங்கள் கவனிக்க விரும்புகின்றேன். "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்" (யோவான் 1 : 11, 12) "அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள்" நமக்கு முன்னாலுள்ள இந்த வசனங்களிலே இரண்டு காரியங்கள் உண்டு.

முதலாவது, ஆண்டவர் தமக்குச் சொந்தமானதிலே வந்து தமது சொந்தமானவர்களுக்கு தம்மைக் கையளித்த போது அவரை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணித்துத் தள்ளினார்கள்.

இரண்டாவது, அப்படித் தம்மை ஏற்றுக்கொள்ளாதவர்களை தம்மைவிட்டு அப்பால் கடந்து போகச் செய்துவிட்டு தம்மை ஏற்றுக்கொண்ட மக்கள் அவருடைய சொந்த மக்களாகும்படிக்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். இவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல் தேவனாலே பிறந்தவர்கள். அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மாம்சத்தினாலும், இரத்தத்தினாலும் பிறந்தவர்கள். அவரை ஏற்றுக்கொண்டவர்கள் தேவனை தங்களுக்குத் தகப்பனாகக் கொண்டவர்கள். அத்துடன் கிறிஸ்து இரட்சகரைக்குறித்து தணிக்க முடியாத பரலோக வாஞ்சை கொண்டவர்கள்.

"இரத்தம்" என்று கர்த்தர் குறிப்பிட்டக்காரியத்தை நான் உங்களுக்கு விளக்க விரும்புகின்றேன். கர்த்தரை விசுவாசிக்கின்றவர்கள் அவருடைய சுதந்திரத்துக்குப் பங்காளிகளாக கர்த்தரால் பிறந்தவர்கள் ஆவார்கள். கிறிஸ்தவ குடும்பங்களில் வம்சாவாளிகளாக பிறப்பதே இரத்தத்தினால் பிறப்பதாகும். ஓ, நான் ஒரு பக்தியுள்ள மனுஷன் அல்லது ஸ்திரீயின் மகன் என்று வெறும் உரிமை பாராட்டலை இந்த இரத்தமானது குறிக்கும். மாம்சபிரகாரமாக நாம் உரிமை பாராட்டும் காரியங்களை தேவன் வெறுத்து உதறித் தள்ளுகின்றார். யூத ஜனங்கள் தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்று எக்களிப்பு கொண்டார்கள். அப்பொழுது ஆண்டவர் அவர்களைப் பார்த்து "ஆபிரகாம் எங்கள் தகப்பன் என்று வீண் எண்ணம் கொண்டு இறுமாப்பாக இருக்க வேண்டாம். பரலோக ராஜ்யத்துக்குள் நீங்கள் பிரவேசிக்க வேண்டுமானால் நீங்கள் தேவனால் பிறந்திருக்க வேண்டும்" என்று கூறினார்.

"மாம்ச சித்தம்" என்பது ஒரு மனிதன் தன் முழு பெலத்தோடு தனது மாம்ச பிரகாரமான காரியங்களையும், மாம்ச இச்சைகளையும் தன்னளவில் நிறைவேற்றிக்கொண்டும், கட்டுப்பாடற்ற நிலையில் வாழ்ந்து கொண்டும் இருக்கும் அதே நேரத்தில் அவ்வப்போது ஜெபிப்பதும், பக்திக்கடுத்த புத்தகங்களை வாசிப்பதும், மரிக்கும்போது பரலோகத்துக்கு கட்டாயம் சென்றுவிடவேண்டும் என்றும் ஆசைகொள்ளும் ஒரு நிலையைக் குறிப்பதாகும். இப்படிப்பட்ட மக்கள் தாங்கள் எத்தனை பாவியாக இருந்தாலும் தாங்கள் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யத்துக்கு பங்காளிகளாகிவிட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்ளுவார்கள்.

இவர்களுடைய எண்ணங்கள் ஒருக்காலும் சித்திபெறுவது இல்லை. ஏனெனில் "விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்" (ரோமர் 9 : 16) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. ஒரு மனிதன் தான் இரட்சிப்பைக் கண்டடைய வேண்டும் என்ற ஆவல் அவனில் இருப்பினும் தேவனுடைய கிருபை அவனுக்கு இல்லாதபட்சத்தில் அவன் இரட்சிப்பைப் பெறவே இயலாது. தேவனுடைய கிருபை இல்லாத ஒரு மனிதன் தான் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற சித்தம் கொண்டிருந்தாலும் தேவனுடைய சித்தம் அதுவாக இராதபடியால் அவனால் அதை அடையக்கூடாது. நாம் மனம் திரும்பி இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுவது நமது சித்தத்தின்படி நடக்கும் ஒரு காரியமாக இருக்குமானால் உங்கள் எல்லாரையும் நான் பரலோகத்திற்கு முதற்காரியமாக அனுப்பி வைத்து விடுவேன். எத்தனையோ கிறிஸ்தவ மக்கள் தங்களுடைய பிள்ளைகளுடைய இரட்சிப்புக்காக அழுகின்றார்கள், அங்கலாய்க்கின்றார்கள், கதறுகின்றார்கள். ஆனால் அவர்களுடைய விருப்பம் நிறைவேறுவதில்லை. காரணம், தேவனுடைய சித்தம் மாத்திரமே இதில் ஆளுகை செய்கின்றது. அவரது சித்தம் ஒன்றே சட்டமாகவும் உள்ளது. இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனுடைய குடும்பத்தில் பிறப்பவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறப்பவர்கள் அல்லர்.

கர்த்தராகிய இயேசுவை தங்கள் உள்ளங்களில் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் முழுமையாக அவரில் விசுவாசம் வைக்கின்றனர். இவர்களே தேவனுடைய குடும்பத்தில் பிறந்திருக்கின்றனர். அவர்கள் தேவனுடைய குடும்பத்தில் பிறப்பார்கள் என்று சொல்லாமல் பிறந்தவர்கள் என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. அவர்கள் தேவனுக்கும், தேவனுடைய உன்னதமான காரியங்களுக்கும் என்று தேவனால் பிறந்தவர்கள். "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டான்" (யோவான் 3 : 3) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. தேவனால் ஒருவன் பிறந்தாலன்றி அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணவியலாது. தேவனுடைய ராஜ்யம் குறித்த காரியத்தை அவன் சுவிசேஷ பகுதியில் வாசிக்கலாம். ஆனால் அவன் தேவனால் பிறக்கும்போதுதான் அந்த ராஜ்யத்தின் மகத்துவத்தை தனது சொந்த வாழ்வின் அனுபவத்தில் கண்டானந்திக்கின்றான். இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது, புருஷனுடைய சித்தத்தினாலாவது அவன் அதை சுதந்தரிக்காமல் கிறிஸ்துவின் மீது வைக்கும் விசுவாசத்தின் மூலமாக அந்த புதிய பிறப்பின் மாட்சிகளை கண்டானந்திக்கின்றான்.

ஒன்று அல்லது இரண்டு உதாரணங்களின் மூலமாக நான் அதை உங்களுக்கு ரூபகாரப்படுத்த ஆசைப்படுகின்றேன். ஒரு குழந்தை இந்த உலகத்தில் வந்து பிறப்பதற்கு முன்னர் தனது தாயின் இருண்ட கர்ப்பப் பையில் இருக்கின்றது. அதைப்போலவே ஒரு தேவனுடைய பிள்ளையும் மறுபடியும் பிறப்பதற்கு முன்பாகப் பாவப்படு குழியின் இருண்ட ஒளிப்பிடங்களில் வாழ்கின்றது. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து அந்த ஆத்துமாவுக்கு எதுவுமே தெரியாது. எனவேதான், அந்தப் பிறப்பை ஒரு புதிய பிறப்பு என்று அழைக்கின்றனர். அந்த ஆத்துமா, தான் உலகத்தில் இருந்தபோது உலகத்தை எத்தனையாக நேசித்தது என்பதையும், அது மறுபடியும் பிறந்ததின் பின்னர் ஆவிக்குரிய கோணத்தில் தேவனுக்கடுத்த காரியங்களை எவ்வண்ணமாக வாஞ்சிக்கின்றது என்பதையும் நாம் பார்க்கின்றோம்.

இருள் சூழ்ந்த தாயின் கர்ப்பப் பையிலிருந்து வெளிப்படும் குழந்தையின் பிறப்புக்கு மறுபடியும் கர்த்தருக்குள் பிறக்கும் பிறப்பானது மேலே ஒப்பிடப்பட்டது போல பாவக் குழியாகிய கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பும் ஒரு காரியத்துக்கும் நாம் அதினை ஒப்பிடலாம். "தூங்குகிற நீ விழித்து மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னை பிரகாசிப்பிப்பார்" (எபே 5 : 14) என்று தேவ வசனம் சொல்லுகின்றது. "மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவர்" (வெளி 1 : 5) என்று நாம் நம் ஆண்டவரைக் குறித்து வாசிக்கின்றோம். நீ மறுபடியும் பிறந்து பூமிக்குரியவைகளையல்லாமல் மேலானவைகளை நாடுபவனாக இருப்பாயானால் மரித்தோரிலிருந்து முதற் பிறந்த கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கும் உனது மறபடியும் பிறந்த புதிய பிறப்புக்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. மறுபடியும் பிறந்தவர்கள் சாத்தானுடைய இருளின் அந்தகார ஏகாதிபத்திய உலகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டவர்களாவார்கள். காப்பாற்றப்பட்டது மாத்திரமல்ல, தேவனுடைய நேச குமாரனாம் இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்தில் ஒரு புதிய பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்காக உருவாக்கப்பட்டவர்கள். தாயின் உதவியால் தாயின் இருண்ட கர்ப்பத்திலிருந்து காப்பாற்றப்பட்டதுபோல மறுபடியும் பிறந்தவனும் பாவப்படுகுழியாம் உளையான சேற்றிலும், கல்லறையிலுமிருந்து இரட்சகர் இயேசுவால் வெளியே தூக்கி எடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கின்றான். மறுபடியும் பிறந்த ஒரு ஆத்தமாவுக்கு ஏற்படக்கூடிய பரிசுத்த மாற்றங்களை நான் உங்களுக்கு விவரித்துக்கூற விரும்புகின்றேன்.

முதலாவதாக:- ஒரு குழந்தை இந்த உலகத்துக்குள் பிரவேசித்ததும் அழ ஆரம்பித்து விடுகின்றது. குழந்தையானது தாயின் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதும் எந்த ஒரு சத்தமும் அது கொடுக்கவில்லையானால் அதாவது வீறிட்டு அழவில்லை என்றால் அது செத்துவிட்டதாகக் கருதுகின்றனர். மறுபடியும் தேவனால் பிறந்தவர்களே, கிறிஸ்தவர்களே, நீங்கள் கதறுகிறவர்களாக இல்லாதபட்சத்தில் உங்களில் எந்த ஒரு ஜீவனுமே கிடையாது. நீங்கள் தேவனால் பிறந்தவர்களானால் நீங்கள் ஒரு கதறுகிற கூட்டத்தினர். பாவத்தின் படு பாதாளத்திலிருந்து நீங்கள் தேவனால் தூக்கி எடுக்கப்பட்ட உடனேயே "ஆண்டவரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கூறி கதறுவதைத் தவிர உங்களால் வேறு என்னத்தைச் செய்ய முடியும்? சிறைச்சாலைக்காரனை தேவன் தொட்ட அந்த ஷணத்தில்தானே "ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கதறி அழுகின்றான். ஒருக்காலும் ஜெபிக்காத, ஜெபமற்ற எத்தனை கிறிஸ்தவர்கள் லண்டன் பட்டணத்தைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றனர்! அவர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் ஆகாரங்களுக்கு முன்பாக ஜெபிப்பதில்லை. தாங்கள் தங்கள் இளைப்பாறுதலுக்குச் செல்லும் இரவு நேரம் ஜெபித்துவிட்டு படுக்கைக்குச் செல்லுவதில்லை. காலையில் தங்கள் படுக்கையிலிருந்து எழும்பும்போது தங்களை இரா முழுவதும் கண்ணின்மணி போல பாதுகாத்த தங்கள் அன்பின் தேவனுக்கு நன்றி ஜெபம் ஏறெடுப்பதில்லை. அவர்களுக்கும், ஜெபத்துக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால், தேவனால் பிறந்த உன்னால் அவர்களைப்போல அப்படி நடந்து கொள்ள இயலாது. நீ உயிர் வாழ்வதே ஜெப ஆவியில்தான். எப்பொழுதும் ஜெபத்தில் தேவனுக்கு முன்பாக கதறிக்கொண்டிருப்பதே உன் காரியமாகும்.

இரண்டாவதாக:- புதிதாக பிறந்த ஒரு குழந்தை பொதுவாக அழுகிறது மாத்திரமல்ல, அது தனது தாயின் மார்பகத்தை வாஞ்சிக்கின்றது. தாயின் மார்பகம் இல்லாமல் அது உயிர் வாழ இயலாது. அதை மனதில் கொண்டுதான் அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுரு தேவனால் புதிதாக பிறந்த குழந்தையும் தான் வளரும்படி களங்கமில்லாத ஞானப்பாலை வாஞ்சித்துக் கதறுவதாக எழுதுகின்றார். நீயும் தேவனால் பிறந்திருந்தால் தேவனுடைய மார்பகத்தை வாஞ்சித்துக் கதறுவதன் மூலம் உனது பரிசுத்த பிறப்பை உலகத்துக்குக்கூறுவாய். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் என்ற ஞானப்பாலைப் பருக நீ ஆசை ஆவலாக இருக்கின்றாயா? ஆண்டவரைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் முன்னர் ஒருவன் உலகத்தானாக வாழ்கின்றான். ஆனால் அவன் தேவனுடைய பிள்ளையாகும் போது அவனது வாழ்வு தலை கீழ் மாற்றம் அடைகின்றது. நீ மறுபடியும் பிறந்த அனுபவத்துக்குள் வந்திருந்தால், களங்கமில்லாத ஞானப்பாலாகிய தேவனுடைய வசனத்தைத் தவிர வேறு எதுவாலும் உனது ஆத்துமாவை திருப்தி செய்ய இயலாது. ஒரு உலகத்தானுக்கு ஒரு வேசியின் வீடு திருப்தி அளிக்கும். அது அவனுக்கு மிகவும் இன்பம் சுரப்பதாக தெரியும். ஆனால், மறுபடியும் பிறந்த ஒரு ஆத்துமாவுக்கு தேவனுடைய வசனமாகிய பால் இல்லாமல் உலகில் உயிர் வாழ இயலாது. ஒரு ஸ்திரீயின் மார்பகம் ஒரு குதிரைக்கு எதற்குத் தேவை? ஆனால், அதே மார்பகம் ஒரு குழந்தைக்கு எப்படிப்பட்டது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்! அந்த மார்பகம் ஒன்றே அந்தக் குழந்தைக்கு இரவும் பகலும் ஆறுதல் அளிக்கும். அதின் உயிர் வாழ்வு இராப்பகலாக அதினிடமிருந்துதான் சுரந்து வந்து கொண்டே இருக்கும். அந்த மார்பகத்தை அந்தக் குழந்தையிடமிருந்து எடுத்துவிட்டால் அது அதோகதியாகிவிடும். பரலோக காரியங்கள் ஒரு உலகத்தானுக்கு பைத்தியமாகவும், அற்பமாகவும், குப்பையுமாகவும் காணப்படும். அதே வேளையில் ஒரு மறுபடியும் பிறந்த ஆண்டவருடைய பிள்ளைக்கு அந்த பரலோக பாக்கிய எண்ணம் மட்டும்தான் அதற்கு ஆறுதலும், ஆனந்தமும், களிகூருதலுமாகவும் இருக்கும்.

மூன்றாவதாக:- புதிதாக பிறந்த ஒரு குழந்தை தனது தாயின் கர்ப்பத்தில் எவ்வண்ணமாக உஷ்ணமான நிலையில் இருந்ததோ அதே வண்ணமாக அது பிறந்த பின்னரும் நல்ல வெதுவெதுப்பாக மூடி வைத்துப் பாதுகாக்கப்படாத பட்சத்தில் அந்த சிசு மரித்துப்போகும். அதை நன்கு சுற்றி மூடத் துணிகள் வேண்டும். கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக புதிதாகப் பிறந்தவர்களுக்கு தேவன் தமது வாக்குத்தத்தங்களாகிய வஸ்திரங்களால் அவர்களை நன்கு மூடுகின்றார். அந்த வாக்குத்தத்தங்களே அவர்களை ஜீவனோடு பாதுகாக்கின்றது. உலகப் பிரகாரமான மக்கள் தங்களுக்குத் தேவையான உஷ்ணத்தை உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்து பெற்றுக்கொள்ளுகின்றனர். ஆனால், தேவனால் பிறந்த மக்களுக்கு அப்படிச் செய்ய இயலாது. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மட்டுமேதான் அவர்களை உயிரோடு காக்கின்றது. "உன்னை இரத்தமற ஸ்நானம் பண்ணுவித்து உனக்கு எண்ணெய் பூசி சித்திரத் தையலாடையை உனக்கு உடுத்தினேன்" (எசேக்கியேல் 16 : 9, 10) என்று தேவ வார்த்தை கூறுகின்றது. ஒரு தாய் தனது குழந்தையோடு இருக்கும்போது அந்தக் குழந்தைக்கு என்ன, என்ன அருமையான காரியங்களை எல்லாம் செய்கின்றாள். தன் குழந்தையைப் பார்க்கின்ற யாவரும் அதை மெச்சிக் கொள்ளும்படியாக அதை அவள் ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கின்றாள். அந்தக் காரியத்தையேதான் தேவனும் தமது பிள்ளைகளுக்கு செய்வதை நாம் பார்க்கின்றோம். "உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன்" (எசே 16 : 11, 12) அதின் 13 ஆம் வசனத்தில் "ராஜ்யத்தை சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் நீ பெற்றாய்" என்றதோர் பொன்னான வாக்குத்தத்தமும் உண்டு. கிறிஸ்து இரட்சகரின் நீதியும், பரிசுத்த ஆவியின் திரண்ட கிருபைகள் மாத்திரமே நித்திய மோட்ச ராஜ்யத்தை நாம் சுதந்தரிக்க நமக்கு வகை செய்து கொடுத்தது.

நான்காவதாக:- ஒரு குழந்தை அதின் தாயின் மடியில் இருக்கும்போது அந்த தாயானவள் அந்தக் குழந்தையைக் குறித்து மகா ஆனந்தம் கொள்ளுகின்றாள். தாயின் மடியானது அந்தக் குழந்தைக்கு எத்தனையோ பாதுகாப்பும், ஆறுதலுமாக இருக்கின்றது. தேவனும் அதைப்போலவே தமது அன்பு குழந்தைகளுக்கும் செய்கின்றார். அவர்களைத் தமது முழங்கால்களில் வைத்து தாலாட்டுகின்றார். "ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி நீங்கள் சூப்பிக் குடித்து மனமகிழ்ச்சியாவீர்கள்" (ஏசாயா 66 : 11) "ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல நான் உங்களைத் தேற்றுவேன்" (ஏசாயா 66 : 13) என்று தேவன் கூறுகின்றார். தேவனால் பிறந்தவர்களுக்கேயன்றி இந்தக் காரியங்கள் எல்லாம் உலக மண்ணின் மாந்தருக்குத் தெரியாது.

ஐந்தாவதாக:- பொதுவாக ஒரு குடும்பத்தில் தகப்பனுக்கும் மகனுக்கும் நெருங்கிய முகச்சாயல் இருப்பதை நாம் பார்க்கின்றோம். மகன் தனது தகப்பனுடைய முகரூபத்தை தாங்கி நிற்கின்றான். அதைப்போலவே, மறுபடியும் பிறந்த தேவ மக்கள் தங்கள் ஆண்டவர் இயேசுவின் சாயலைத் தரித்துக்கொண்டிருக்கின்றார்கள். "என் சிறு பிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்ப வேதனைப்படுகின்றேன்" (கலா 4 : 19) தங்களை நேசிக்கும் பிள்ளைகளை பெற்றோர் அதிகமாக நேசிப்பதை நாம் பார்க்கின்றோம். அவ்விதமாகவே, தம்மை நேசிப்போரை தேவனும் அன்புகூர்ந்து நேசிக்கின்றார். அதின் காரணமாக அவர்கள் கர்த்தருடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகின்றனர். தேவனால் பிறவாத மக்கள் அவரது சாயலைக் கொண்டிராததால் அவர்கள் சோதோமியர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். பிசாசின் பிள்ளைகளை தேவன் அவர்களது முகச்சாயல் மூலம் வர்ணிக்கின்றார். பிசாசின் மக்கள் தங்கள் தந்தையாம் பிசாசின் கிரியைகளையே செய்வார்கள். அநீதியான எல்லா செயல்களும் சாத்தானுடைய கிரியைகளாகும். நீ பூமிக்குரியவனானால் உனது சாயல் பூமிக்குரிய சாயலாக இருக்கும். நீ பரலோகத்திற்குரியவனானால் உனது சாயல் பரலோகத்துக்குரிய சாயலாக இருக்கும்.

ஆறாவதாக:- ஒரு மனிதனுக்கு ஒரு குமாரன் இருப்பானானால் அவன் அவனை தன்னைப்போலவே வளர்க்கப் பிரயாசப்படுகின்றான். அந்த குமாரன் தனது தகப்பனுடைய வீட்டு ஒழுங்குகளை கற்றுக்கொள்ளுகின்றான். தேவனால் பிறந்தவர்களும் அப்படித்தான் தங்கள் ஆண்டவருடைய பரிசுத்த ஒழுங்குகளையும், அவருடைய கட்டளைகளின் வழியையும் படித்துக்கொள்ளுகின்றனர். இந்த உலகத்தில் இருக்கும் காலம் வரை தங்கள் ஆண்டவராம் தேவனுடைய வீட்டிலே எவ்விதமான பரிசுத்த நிலைகளில் வாழ வேண்டுமென்பதை அவர்கள் தெள்ளந் தெளிவாக அறிந்து கொள்ளுகின்றனர். அங்கு அவர்கள் அப்பா பிதாவே என்று தங்கள் பரம தகப்பனைக் கூப்பிடவும் கற்றுக்கொள்ளுகின்றனர்.

ஏழாவதாக:- பிள்ளைகள் தங்களுடைய தேவைகளுக்கு தங்கள் தகப்பனைச் சார்ந்து கொள்ளுவது இயல்பான காரியமாகும். தங்களுக்கு ஒரு ஜோடி பாதரட்சைகள் தேவையானால் அவனிடம் போய்ச் சொல்லுகின்றனர். புசிக்க ரொட்டி வேண்டுமானால் தகப்பனிடம் தெரிவிக்கின்றனர். தேவனுடைய பிள்ளைகளும் அப்படித்தான் இருக்க வேண்டும். உனக்கு ஆவிக்குரிய ரொட்டி தேவையா? உன் ஆண்டவரிடம் அதைக்கூறு. தேவ கிருபையின் பெலன் உனக்குத் தேவையா? உன் கர்த்தரிடம் அதைச் சொல்லு. சாத்தானுடைய பாவச் சோதனைகளை மேற்கொள்ள உனக்கு உன்னதத்தின் பெலன் வேண்டுமாயின் அதை உன் பரம தகப்பனிடம் தெரிவி. சத்துருவாம் பிசாசானவன் உன்னை பாவத்தில் வீழ்த்தும்படியாக சோதிக்கின்றானா? உன் வீட்டுக்கு ஓடோடிச் சென்று உன் முழங்கால்களை முடக்கி உன் பரலோக தந்தையிடம் நடந்தவற்றை கூறு. தங்களுக்கு யாராயினும் தவறு செய்தால் அதை தங்கள் தகப்பனிடம் குழந்தைகள் சொல்லுவது இயல்பான காரியமாகும். அவ்வாறுதானே தேவனால் பிறந்த மக்களும் பிசாசின் சோதனைகளை சந்திக்க நேரிடும்போது அதை தங்கள் தேவனுக்குச் சொல்லுகின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் உன்னிடம் சற்று கண்டிப்புடன் கேட்கும் ஒரு காரியம் யாதெனில், நீ தேவனால் பிறந்தவனா? இல்லையா? என்பதுதான். தேவனால் பிறந்த மனிதனுக்கும், உலகத்து மனிதனுக்கும் முன்பாக நான் வைக்கும் காரியங்களை நீ கவனமாக ஆராய்ந்து பார். பாவத்தின் படு குழியிலிருந்து நீ கிறிஸ்துவானவரால் கை தூக்கி எடுக்கப்பட்டவனா? "என் பிதாவே" என்று ஆண்டவரை நோக்கி நீ சத்தமிட கற்றுக்கொண்டாயா? "நீ என்னை நோக்கி என் பிதாவே என்று அழைப்பாய்" (எரேமியா 3 : 19) என்ற கர்த்தருடைய வசனத்தின்படி தேவ மக்கள் யாவரும் தங்கள் கர்த்தரை "என் பிதாவே" என்று உரிமை பாராட்டி சொந்தம் கொண்டாடிக் கூப்பிடுகிறவர்களே. தேவனுடைய களங்கமில்லா ஞானப்பாலாம் வேத வசனங்களால் உனது வயிற்றை நிரப்பாவிட்டாலும் நீ அவைகளைக் குறித்து அக்கறை கொள்ளாதவனா? அவைகளில் உனக்கு வாஞ்சையில்லையா? தேவனோடு நீ சமாதானமாக இராதபட்சத்திலும் உன்னளவில் திருப்தி அடைந்துவிடக்கூடியவனா? இந்தக் காரியங்களைக் குறித்து தீவிரமாக நீ ஆராய்ந்து இவைகளைப்பற்றி நீ உன் இருதயத்திடம் கேள்வி எழுப்ப நான் உன்னை கெஞ்சிக் கேட்கின்றேன். மேலே நான் குறிப்பிட்ட அடையாளங்கள் உன்னில் காணப்படவில்லை என்றால் தேவனுடைய பரம ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க நீ குறைவுள்ளவன் என்பதை நீ நிச்சயம் செய்து கொள்ளலாம். அந்தக் காரியங்களைக் குறித்து உனக்கு எந்த ஒரு விருப்பமோ, நாட்டமோ இருக்காது. இப்படிப்பட்டவர்கள் "ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்க வேண்டும்" என்பார்கள். அவர் அந்த மக்களுக்குப் பிரதியுத்தரமாக "உங்களை அறியேன் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்பார். தேவனுடைய பிள்ளையாக இல்லாதபட்சத்தில் பரலோகத்தின் சுதந்திரவாளியாக நீ இருக்க இயலாது.

நம்முடைய குழந்தைகளாக இல்லாதபோதினும் நாம் சில சமயங்களில் மற்ற குழந்தைகளுக்கு நம்மிடமுள்ள ஏதாவது ஒன்றைக் கொடுப்போம். ஆனால், அவர்களுக்கு நமது நிலபுலங்களை ஒருக்காலும் கொடுக்கமாட்டோம். நீங்கள் பிள்ளைகளைப்போல வாழ்ந்தால்தான் பிள்ளைகளுக்குரிய சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு அரச குமாரன் தெருவிலுள்ள ஒரு பிச்சைக்கார மனிதனோடு விளையாடிக் கொண்டிருப்பதை நாம் காண இயலுமா? அதை நாம் நினைத்தே பார்க்க வேண்டியதில்லை. நீ ராஜ குமாரனானால் ராஜ குமாரனாக வாழ்ந்து காட்டு. நீ கிறிஸ்துவோடு கூட எழுந்ததுண்டானால் மேலானவைகளைத் தேடு. பூமியிலுள்ளவைகளை அல்ல, மேலானவைகளை நாடு. தேவனுடைய பிள்ளைகளாக நீங்கள் கூடி வரும்போது உங்களுடைய பிதா உங்களுக்கு வாக்குப்பண்ணியவைகளை குறித்து களிகூர்ந்து பேசுங்கள். நீங்கள் அனைவரும் தேவனுடைய திருவுள சித்தத்தை மாத்திரம் நேசிக்க வேண்டும். நீங்கள் தேவனுடைய பிள்ளைகளானால் ஒருவரோடு ஒருவர் அன்புகூர்ந்து கூடி வாழுங்கள். உலகம் உங்களோடு சண்டையிட்டால் அது மிகவும் அற்பமான காரியமாகும். ஆனால், நீங்கள் ஒருவரிலொருவர் சண்டையிடுபவர்களாக இருந்தால் அது மிகவும் விசனத்துக்குரிய காரியமாகும். உங்கள் நடுவில் சண்டையிருப்பின் அது நீங்கள் தேவனால் பிறந்த மறுபிறப்பின் காரியத்தைக் குறித்து சந்தேகத்துக்குரிய கேள்வியை எழுப்ப வகை செய்யும். அப்படிப்பட்ட செய்கை தேவனுடைய வசனத்துக்குப் பொருந்தாத ஒரு செயலாகும். தேவனுடைய சாயலை தனது முகத்தில் தாங்கிய ஒரு தேவ பிள்ளையை நீ காண்பாயானால் அந்த சகோதரனை முழுமையான தேவ அன்போடு நேசி, அதிகமாக நேசி. இந்த மனிதனும் நானும் ஒன்றாக எங்கள் பரலோகத் தந்தையின் வீட்டில் ஒரு நாள் ஒன்றாகக் கூடுவோம் என்று உனக்குள்ளாக நீ சொல்லிக் கொள். ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்யுங்கள். உன் சகோதரரில் ஒருவன் உனக்கு தீங்கு செய்தால் அதை அவனுக்கு அன்பாக மன்னித்து இன்னும் அதிகமாக அவனை நேசிக்கத்தக்க நல்ல அன்பின் இருதயத்தை கர்த்தர் உனக்குத் தரும்படியாக ஜெபம் செய்.

கடைசியாக நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருந்தால் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். பரிசுத்தமுள்ள தேவன் உங்கள் தேவன் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொண்டு தேவனுடைய பிள்ளைகளைப்போல வாழ்ந்து அவருடைய வருகையின் நாளிலே சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

 

ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன்
கொடுத்த தேவச் செய்தி

ஜெபம் பண்ண ஆரம்பிப்பதற்கு முன்பாக உனது ஆத்துமாவிடம் இவ்விதமாக கேள்விகள் எழுப்ப வேண்டும். "ஓ என் ஆத்துமாவே, நீ என்ன நோக்கத்தோடு இந்த இடத்துக்கு வந்தாய்? ஜெபத்திலே உன் ஆண்டவரோடு உறவாட வந்தாயா? உன் ஆண்டவர் உனது ஜெபத்தைக் கேட்க பிரசன்னராகி இறங்கி வந்திருக்கின்றாரா? அவர் உனது ஜெபத்தைக் கேட்பாரா? அவர் உனக்கு இரங்கி உதவி செய்வாரா? நீ ஜெபத்திற்காக வந்த காரியம் உனது ஆத்துமத்தின் நித்திய நன்மைக்கான காரியத்துக்காகவா? உனது ஜெபத்தில் எந்தெந்த வார்த்தைகளைக் கூறி உனது ஆண்டவரை உன்மேல் மனதுருகப்பண்ணப் போகின்றாய்?"

ஜெபத்திற்கான உனது ஆயத்தங்கள் முழுமையடையவும், பூரணப்படவும் வேண்டுமானால் நீ உன்னை தூசியாகவும், சாம்பலுமாகவும் எண்ணிக் கொள். கர்த்தராகிய நமது ஆண்டவர் மகாபெரியவரும், வானங்களைத் திரையைப் போல விரித்து, ஒளியை வஸ்திரமாக தரித்து, மேகங்களைத் தமது இரதமாக்கி காற்றினுடைய செட்டைகளின் மேல் செல்லும் மகத்துவமும், மாட்சியும் பொருந்திய மகா பெரிய தேவன் என்பதை நீ கண்டு கொள்ளல் வேண்டும். பரிசுத்தமுள்ள கர்த்தருக்கு முன்பாக நீ ஒரு நீசப்பாவி என்பதை உணரவேண்டும். சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவனுடைய சமூகத்தில் நீ ஊர்ந்து செல்லுகின்ற ஒரு அவலட்சணமான புழு மாத்திரமே என்பதை நீ ஞாபகத்தில் வைத்துக்கொள்ளல் மிகவும் அவசியமாகும்.

உனது ஜெபங்களில் எல்லாம் கர்த்தர் உனக்கு உனது வாழ்வில் பாராட்டின தயவுகள், இரக்கங்கள், எல்லையற்ற தாயடைவான அன்புகள், பாதுகாவல்களுக்காக அவருக்கு நன்றி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்க ஒருக்காலும் மறந்துவிடக்கூடாது.

நீ ஜெபிக்கும்போது உனது இருதயமானது தேவனுக்கு ஏறெடுக்க நன்றிப் பெருக்கோடு கூடிய புகழ்ச்சி வார்த்தைகள் இல்லாதிருந்தாலும் அதைப்பற்றிப் பரவாயில்லை. ஆனால் நீ தேவனுக்கு ஏறெடுக்கும் மன்றாட்டு வார்த்கைளில் உனது முழுமையான இருதயக் கவனம் இல்லாமல் போய்விட அனுமதித்துவிடாதே.

ஜெபம் ஒரு மனிதனை பாவம் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தும் அல்லது பாவமானது ஒரு மனிதனை ஜெபிக்கக்கூடாதவாறு நயங்காட்டி ஜெபத்தை தடை செய்யும்.

ஒரு மனிதனுக்குள்ள தேவனைத்தேட வேண்டும் என்ற ஜெப வாஞ்சையின் ஆவியானது அநேக ஆயிரம் பொன் வெள்ளியைக் காட்டிலும் அளவிட இயலாத மாபெரும் பொக்கிஷமாகும்.

லோக மாந்தரே, அடிக்கடி ஜெபம்பண்ணுங்கள். ஏனெனில், அது ஒன்றே நமது ஆத்துமாவை வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளின் தாக்குதலின்று நம்மைப் பாதுகாக்கும் கேடயமாகும். ஜெபமானது நாம் தேவனுக்கு செலுத்தும் ஜீவபலியாகவும், சாத்தானை அடித்து விரட்டி ஓட்டும் கண் எரிச்சலின் தீப்புகையாகவும் உள்ளது என்பதை நாம் ஒருக்காலும் மறந்துவிடக்கூடாது.

 

பரலோக பேரின்பங்கள் குறித்து
ஜாண் பன்னியன் கூறியவை

இந்த ஜீவனில் எந்த ஒரு நன்மையுமே இல்லை. இந்த உலகத்தில் நாம் இன்பம் என்று சுவைத்து அனுபவிப்பது எல்லாம் துன்பம் சேர்ந்தவையாகும். தீங்கில்லா உலக இன்பமே கிடையாது. உலக மேன்மைகளும், பெயர், புகழ், பட்டம், பதவி, செல்வம் அனைத்தும் நிலையாமை உள்ளவைகளும், குழப்பங்களையும், வேதனைகளையும் உண்டுபண்ணக்கூடியவைகளுமாகும். உலகின் ஐசுவரியம் தனக்கு இறக்கைகளை உண்டுபண்ணிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து போய்விடும். உலகம் அளிக்கும் சரீர இன்பங்கள் மானிட தேகத்துக்கு நோய் நொடிகளைக் கொண்டு வரக்கூடியவைகள்.

ஆனால், மோட்ச இன்ப நாட்டில் நாம் காணக்கூடிய ஆசீர்வாதங்கள் அனைத்தும் மாசற்றதும், பூரண பொலிவும், சம்பூரணமும் உடையவைகளாகும். அந்த பரலோக இன்பங்களில் கலந்திருக்கும் பொருட்கள் அவைகளை மென்மேலும் இனிமைதான் ஆக்குமே தவிர அவைகளை சற்றுகூட கசப்பாக்க இயலாது.

ஆ, மனுஷருடைய இருதயத்தால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க இயலாத அந்த பரலோக பேரின்பங்களை யாரால் ஆராய இயலும்! "தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளை கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை" (1 கொரி 2 : 9) அவைகளை தங்கள் மட்டாக ருசித்து அனுபவித்தவர்களுக்கேயல்லாமல் வேறு ஒருவருக்கும் மோட்சத்தின் முன் ருசி தெரியாது. தேவனே, இந்த மாய உலகத்தின் மோசம்போக்கும் வஞ்சக கானல் நீர் இன்பங்களுக்கு நாங்கள் பெரும் மதிப்பு கொடுத்து வாடாததும், மாசற்றதும், என்றும் அதின் பூரண அழகிலே நிலைத்து நிற்கக்கூடிய நித்தியானந்த மோட்ச பாக்கியங்களை நாங்கள் கை நழுவ விடாதபடி எங்களைக் கிருபையாகக் காத்துக்கொள்ளும்.

ஆட்டுக்குட்டியின் மணவாட்டியாகிய பரிசுத்த திருச்சபை தனது மணவாளனாம் கிறிஸ்துவோடு நித்திய நித்திய காலமாக மோட்சலோகில் வாழ்வதற்காக வரும்போது பரலோகம் எப்படியாக ஆனந்தித்து ஆரவார முழக்கமிட்டு களிகூரும்!

இயேசு இரட்சகர் ஒருவரே நாடுகளின் வாஞ்சையும், தேவதூதர்களின் களிகூருதலும், பரம பிதாவின் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது அவரை தனது ஆத்தும நேசராக என்றென்றைக்குமுள்ள சதா காலங்களுக்கும் தனது இருதயத்தில் பெற்றுக்கொண்ட மாந்தனின் மனமகிழ்வுக்கு எல்லை எங்கே! சாத்தானாம் பிசாசு, அந்திக்கிறிஸ்து, காயீனின் சந்ததி போன்றவையால் வரக்கூடிய எல்லா பயங்களுக்கும் என்றுமாக நீங்கிய அனைத்து தேவனுடைய பிள்ளைகளும் பரலோகத்தில் ஒன்று சேரும் காலம் எத்தனை குதூகலமான ஆனந்த நாள்!

நீதிமான்கள் துன்மார்க்கரைப் பார்த்து "பூமியில் உங்கள் இன்பங்களால் நீங்கள் அடைந்த லாபம் என்ன?" என்றும் "உங்களுடைய எல்லா மேன்மைகளாலும் நீங்கள் பெற்ற ஆறுதல் யாது?" என்றும் "பூலோகத்தில் நீங்கள் மேற்கொண்ட உங்கள் பிரயாசங்கள் யாவற்றாலும் உங்களுக்கு கிடைத்த பலன் என்ன?" என்றும் கேட்கும் காலம் வராமல் போய்விடும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

வாசிக்கும் ஆத்துமாவே, இவைகளை எல்லாம் உனது சொந்தக் கண்களால் நீ காண வேண்டுமானால் உனது பாவங்களுக்காக உனது மார்பில் அடித்து மனந்திரும்பி, உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் இன்றே உன் உள்ளத்தில் பெற்று தேவ பெலத்தால் அனுதினமும் நீ பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும்.


 
 

இன்ப துன்ப நேரத்திலும் உன் அன்புள்ள இயேசுவைப் பார்!

பேசில் என்ற தேவ பக்தன் தீக்கிரையாக்கப்பட்ட சில இரத்தசாட்சிகளை குறித்து இப்படி சொல்வார். அக்கினியில் வைத்து கொளுத்தப்படுவதற்கு முந்தின நாள் அவர்கள் எல்லாரும் பிறந்த மேனியுடன் இரத்தத்தை உறைய வைக்கும் குளிரில் நிறுத்தப்பட்டனர். அப்பொழுது அந்த இரத்தசாட்சிகள் தங்களை இவ்விதமாக தேற்றிக்கொண்டனர். "குளிர் கொடிது, ஆனால் பரலோகம் இனிமையானது. இங்கு குளிரில் விறைத்து நடு நடுங்குகின்றோம். ஆனால் பரதேசில் ஆபிரகாமின் மடியின் இதமான வெம்மை இந்த குளிரை விரட்டியடித்த ஓட்டிவிடும்."

கேலான் என்ற பரிசுத்த மனிதன் உரன்ஆஸ்கோபஸ் என்ற மீனைப் பற்றி குறிப்பிடும்போது அதற்கு ஒரே ஒரு கண்தான் உண்டு. அந்த கண்ணும் கூட சதா வானத்தையே தான் நோக்கியிருக்கும் என்பார். துன்ப துயரம் அனுபவிக்கும் கிறிஸ்தவனின் கண்கள் எப்பொழுதும் பரலோகத்தையே நோக்கிக் கொண்டிருந்தால் அவனது ஆத்துமா ஒருபோதும் சோர்பே அடையாது.

(தாமஸ் புரூக்ஸ்)


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM