பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

வில்லியம் ஆஷ்லி சன்டே (1862-1935)


"ஒரு பக்தியுள்ள தாயின் கரங்களிலிருந்து அவளுடைய குமாரனை வலுக்கட்டாயமாக இழுத்துப் பறித்துக் கொள்ளும் அளவிற்கு நரகத்தில் நிறைய பிசாசுகள் இல்லை"

"உலகத்தில் நீ தவறாக வாழ்ந்து விட்டு சரியாக நீ மரிக்க முடியாது"

"ஒரு மனிதன் தனது கரத்தை மோட்ச வாசற் கதவின் கைப்பிடி மேல் வைத்த வண்ணமாகவே எரி நரகத்துக்குள் நழுவிச் செல்ல முடியும்"

"ஜெபத்துக்கு நீ அந்நியனாக இருந்தால் தேவனுடைய வல்லமைக்கும் நீ அந்நியனாக இருப்பாய்"

"உனது பெயர் புகழ் உன்னைச் சுற்றிலும் உள்ள மக்கள் உன்னைக் குறித்து புகழ்ந்து பேசுவதைப் பொறுத்ததாகும். ஆனால் உனது குணநலனானது ஆண்டவரும், உனது மனைவியும் அறிந்து வைத்திருப்பதாகும்"

"தேவன் தமது நாமத்தை மகிமைப்படுத்த வேத பண்டிதர்களை மாத்திரம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. பாம்புகளையும், கோல்களையும், வேறு எந்த ஒன்றையும் கூட தம்முடைய நாம மகிமை பிரஸ்தாபத்திற்காக பயன்படுத்தலாம்"

"உனது மரண அழைப்பு வரும்போது உனக்குப் பின்னால் அதிகமானவற்றை பிற மக்களுக்கு விட்டுச் செல்ல கருத்தாயிரு. உனது கல்லறையில் என்ன வாசகம் பொறிக்கப்பட வேண்டுமென்ற கல்லறை வாசகத்தையும், செய்தித்தாளில் போட வேண்டிய இரங்கல் செய்தியையும் மட்டும் பின் வைத்துச் செல்லாதே"

"உன் மகனை பக்தியின் பாதையில் வளர்க்க முயற்சிக்கும் நீ முதலாவது உனது மகனுக்கு முன்பாக அந்த பக்தி வாழ்க்கையை வாழ்ந்து காட்டு"

"சகோதரியே, தவறான மனிதனை கலியாணம் செய்வதைப் பார்க்கிலும் கடைசி வரை கன்னிப்பெண்ணாகவே இருந்து நீ மரிப்பது உனக்கு பாக்கியமாகும்"

"செல்வம் இதுவரை எந்த ஒரு மனிதனுக்கும் உலகில் சமாதானத்தையும், இளைப்பாறுதலையும் கொடுத்தது கிடையாது"

"பாவச் சோதனை என்பது பிசாசானவன் கதவின் கண்ணாடி துவாரம் வழியாக உன்னைப் பார்ப்பதற்கு ஒப்பானதாகும். பாவத்திற்கு இணங்குவது என்பது கதவைத் திறந்து நீ அவன் தோள் மேல் கைபோட்டு அவனை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு வருவதற்கு ஒப்பாகும்"

"நான் பாவத்திற்கு எதிரானவன். எனக்கு கால்கள் இருக்கும் வரைக்கும் நான் அதை உதைத்துத் தள்ளுவேன். கைகளின் முஷ்டி எனக்கு இருக்கும் வரை நான் அதை மூக்கில் அறைந்து துரத்துவேன். தலை எனக்கு இருக்கும் வரை நான் அதை என் தலையால் முட்டி விரட்டுவேன். எனக்குப் பற்கள் இருக்கும் வரை நான் அதைக் கடித்துக் குதறி ஓடச் செய்வேன். நான் கிழவனாகி கால்கள், முஷ்டி, பற்கள் இல்லாத நிலையில் எனது வாயின் எயிறு (Gum) மூலமாக பாவத்தை கடித்து அதின் இடமான நரகத்தின் அழிவுக்கு கொண்டுபோய் தள்ளிவிட்டுவிட்டு நான் என் ஆண்டவருடைய மகிமைக்குள் பிரவேசிப்பேன்"

"வாழ்நாட் காலம் முழுவதையும் பிசாசுக்காக வாழ்ந்துவிட்டு மரணப்படுக்கையில் தனது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பி பரலோகம் போக முயற்சிப்பது என்பது வாழ்க்கை என்ற மெழுகுவர்த்தியை பிசாசின் மனமகிழ்ச்சிக்காகவும், அவனுடைய சேவைக்காகவும் எரித்து முடித்துவிட்டு அது எரிந்து முடிந்ததும் எழும்பும் வெளிச்சமற்ற விரும்பத்தகாத வெண் புகையை ஆண்டவருடைய முகத்துக்கு நேராக ஊதி விடுவதைப் போன்ற கொடிய செயலாகும்"

இப்படியாக அநேக பரிசுத்த மணி மொழிகளை உதிர்த்தவர்தான் வில்லியம் ஆஷ்லி சன்டே அல்லது பில்லி சன்டே (BILLY SUNDAY) என்ற தேவ மனிதராவார். பில்லி சன்டே 1862 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் ஒரு போர் வீரரின் மகனாக அமெரிக்காவிலுள்ள லோவா என்ற இடத்திலுள்ள ஏம்ஸ் பகுதியில் பிறந்தார். அவர் பிறந்த ஒரு மாதத்திற்கும் சற்று கூடுதலான நாட்களுக்குள்ளாக அவருடைய தகப்பனார் கொடிய தொற்று நோய் காரணமாக மரித்துப் போனார். ராய், எட்வர்ட் மற்றும் வில்லியம் என்ற தனது மூன்று புதல்வர்களையும் மிகவும் ஏழ்மையான அவருடைய தாயார் வளர்த்துக் கொண்டு வர கடும் இன்னல்களை அனுபவித்தார்கள். இரண்டே இரண்டு அறைகளைக் கொண்ட ஒரு மரப் பெட்டிதான் அவர்களுடைய வீடாக இருந்தது. வாளால் அறுக்கப்பட்ட மரத் துண்டுகளால் அந்த வீடு அமைந்திருந்தது. அதை அவர்கள் தங்கள் வீடு என்று அழைத்துக் கொள்ளுவதில் மிகுந்த சந்தோசம் அடைந்தார்கள். அந்த ஆரம்ப கால நாட்களில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த அவருடைய தாத்தா கோரே தனது மருமகளையும், மூன்று பேரக் குழந்தைகளையும் அளவற்ற விதத்தில் அன்பு பாராட்டி போஷித்துப் பேரக்குழந்தைகளை சிட்சித்து பயிற்சி கொடுத்து நடத்தி வந்தார். தாத்தா, பள்ளி ஆசிரியரானதால் எப்பொழுதும் தனது கரத்தில் பிரம்புடன் காணப்பட்டதையும், அதினால் தாங்கள் சிட்சிக்கப்பட்டதையும் பில்லி சன்டே பின் நாட்களில் நினைவு கூருவார். வறுமை, கடின உழைப்பில் பில்லி தனது வாழ்வின் அடிப்படை அஸ்திபாரப் பாடங்களைக் கற்றுக் கொண்டார். தனது வாழ்க்கையை கிறிஸ்தவ பக்தியிலும், நல்லொழுக்கத்திலும் வடிவமைத்துக் கொண்டு வந்த தனது பரிசுத்த தாயைக் குறித்து பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும் மேடைகளிலிருந்து அருமை பெருமையாக சாட்சி கொடுத்துப் பேசியிருக்கின்றார்.

பில்லி சன்டே 12 வயதினனாக இருந்தபோது அவரது தாயார் அவரையும் அவரது அண்ணன் எட்வர்டையும் கிளன்வுட் என்ற இடத்திலிருந்த ராணுவ அநாதை இல்லத்துக்கு தனது கொடிய வறுமை காரணமாக பராமரிப்புக்காக அனுப்பி வைத்தார்கள். அந்த அநாதை இல்லம் பின் நாட்களில் எட்வர்டையும், பில்லியையும் அங்கிருந்து தேவன்போர்ட் என்ற இடத்திலிருந்த மற்றொரு அநாதை இல்லத்துக்கு அனுப்பி வைத்தது. மொத்தத்தில் சகோதரர்கள் இருவரும் இரண்டு ஆண்டு காலம் ராணுவ அநாதை இல்லங்களில் இருந்தார்கள். தனது கஷ்டப்பட்ட இளம் பருவ நாட்களைக் குறித்து பில்லி இவ்வாறாகக் கூறுகின்றார்:-

"நான் லோவாவில் உள்ள ஏம்ஸ் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தேன். நான் பட்டிக்காட்டானிலும் பட்டிக்காட்டானாக இருந்தேன். என் தலைக்கு தேய்ப்பதற்கு எண்ணெய் கூட இல்லாமல் வாத்துக் கொழுப்பினால் தயாரிக்கப்படும் ஒரு வித மசியல் கலவையை தலைக்குப் பூசினேன். எனது பொத்தலான சப்பாத்துக்களை கருமைப்படுத்தும் பொருட்டாக காஸ் அடுப்பில் படியும் அடர்த்தியான கருமைப் புகையை தேய்த்தேன். நீண்ட மூக்கோடு கூடிய எனது முகத்தை துடைக்க சணலினால் நெய்யப்பட்ட கரடு முரடான சாக்குத் துண்டை பயன்படுத்தினேன். கரண்டி வாங்க பணம் இல்லாத காரணத்தால் எனது கத்தியைக் கொண்டு நான் சாப்பிட்டேன். கோப்பையின் அடித்தட்டில் ஊற்றப்பட்ட சொற்பமான காப்பியைக் குடித்தேன். தரித்திரம் என்ற சர்வ கலாசாலையின் வழியாக நான் ஊர்ந்து தவழ்ந்து வந்தேன். நான் ஆறு வயதினனாக இருந்த நாளிலிருந்தே எனது உயிர் வாழ்வுக்குப் போராட வேண்டிய ஒரு கொடிய நிலை எனக்கு ஏற்பட்டது. நான் பெற்றுக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு காரியத்துக்காகவும் நான் கடினமாகப் பாடுபட வேண்டியதாக இருந்தது. அதின் காரணமாகத்தான் நான் எனது சட்டையில் சிகப்பு, வெள்ளை மற்றும் நீல நிற பொத்தான்களை அணிகின்றேன். அவைகளை நான் பார்க்கும் வேளையில் எனது வாழ்வின் கடந்த கால நாட்களின் இருண்ட பகுதிகள் என் கண்களுக்கு துலாம்பரமாகத் தெரிகின்றது.

நாங்கள் குடியிருந்த எங்கள் சிறிய மர வீட்டின் கதவை ஒரு நாள் இரவில் ஓநாய் வந்து பலமாக தனது கால்களின் நகங்களால் கீறத் தொடங்கியது. அதைக் கண்டு பயந்த என் அருமைத் தாயார் "பிள்ளைகளே, நான் உங்களை இராணுவ அநாதை இல்லத்துக்கு அனுப்பப் போகின்றேன்" என்றார்கள். சிறுவர்களாக இருந்த என்னையும் எனது அண்ணன்மார்களையும் ஓநாய் கவ்வித் தூக்கிக் கொண்டு சென்று விடும் என்ற நோக்கத்தில் ஓநாய் அவ்விதமாகச் செய்ததை அறிந்த எனது ஏழைத்தாயார் உடனே இராணுவ வீரர்களின் அநாதை இல்லத்திற்கு எங்களை அனுப்ப ஆயத்தமானார்கள்.

நாங்கள் ஏம்ஸ் என்ற இடத்தில் இரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தோம். ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு நாங்கள் சென்றோம். ரயில் நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் வருவதாகச் சொன்னார்கள். "ரயிலுக்கு ஆயத்தப்படும்படியாக அம்மா எங்களிடம் சொன்னார்கள்" நான் எனது தாயாரைப் பார்த்தேன். அவர்கள் கண்கள் இரத்தச் சிவப்பாகக் காணப்பட்டது. அவர்களின் தலை மயிர் ஒழுங்குபடுத்தப்படாமல் முகத்தில் அங்குமிங்குமாக விழுந்து கிடந்தது. "அம்மா, என்ன காரியம் என்று நான் அவர்களைக் கேட்டேன்?" எனது அண்ணன் எட்வர்ட்டும் நானும் தூங்கிக் கொண்டே இருந்தோம். அந்தச் சமயம் எனது அருமை பரிசுத்த தாயார் ஜெபித்துக் கொண்டே இருந்தார்கள். சற்று நேரத்தில் ரயிலும் வந்தது. நாங்கள் ரயிலுக்குள் ஏறி அமர்ந்தோம். எனது தாயார் ஒரு கரத்தால் என்னையும் தனது அடுத்த கரத்தால் அண்ணன் எட்வர்ட்டையும் அணைத்துப் பிடித்து தனது இருதயமே உடைந்து நொறுங்கிப் போகும் அளவுற்கு ஏங்கி ஏங்கி அழுதார்கள். எங்களைக் கடந்து சென்ற மக்கள் இந்தக் கண்ணீரின் காட்சியைக் கண்டபோதினும் ஒரு வார்த்தை கூட பேசாமல் தங்கள் மட்டாகச் சென்று கொண்டிருந்தார்கள். ஏன், எந்த ஒரு பரிதாப உணர்வும் இல்லாமல் அவர்கள் அப்படிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்? நம்முடைய கண்ணீரின் காரியம் அவர்களுக்குத் தெரியாது. உண்மையில் அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவர்கள் வந்து நம்மைத் தேற்றுவார்கள் என்று நாம் நினைக்க முடியாது. ஆனால், ஏழைத்தாயாருக்கு யாவும் தெரியும். இப்பொழுது தனது பிள்ளைகளை விட்டுப் பிரிந்து செல்லும் அவர்கள் பல ஆண்டுகள் அவர்களை பார்க்க இயலாது என்பதுவும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

"தாயே நாங்கள் உங்களிடம் விடைபெறுகின்றோம்" என்று அம்மாவுக்கு விடை கொடுக்கவும் எங்கள் ரயில் புறப்பட்டது. நாங்கள் கவுன்சில் கிளிஃப் என்ற இடம் வந்து சேர்ந்தோம். மிகவும் குளிராக அப்பொழுது இருந்தமையால் நாங்கள் எங்கள் பழைய கோட்டுகளைப் போட்டுக் கொண்டு குளிரில் நடுநடுங்கிக் கொண்டிருந்தோம். நாங்கள் அங்கு இறங்கி மேட்டிலிருக்கும் ஒரு ஹோட்டலைக் கண்டு அங்கு ஏறிச் சென்றோம். அந்த ஹோட்டலிலிருந்த ஒரு அம்மாவிடம் நாங்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுக்கும்படியாகக் கேட்டோம். "உங்கள் பெயர் என்ன?" என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள். "எனது பெயர் வில்லியம் சன்டே, இதோ இவன் என்னுடைய அண்ணன் எட்வர்ட்" என்றேன்.

"நீங்கள் எங்கு செல்லுகின்றீர்கள்?"

"கிளன்வுட் என்ற இடத்திலிருக்கும் இராணுவ அநாதை இல்லத்துக்குச் செல்லுகின்றோம்"

அந்த அம்மையார் தனது கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு "எனது கணவர் ஒரு போர் வீரனாக இருந்தார். போருக்குச் சென்ற அவர் ஒருக்காலும் திரும்பி வரவே இல்லை. அவர் தன்னண்டை உதவி கேட்டு வந்த எவரையும் வெறுமையாக அனுப்பியது கிடையாது. பிள்ளைகளே, நானும் உங்களை வெறுமையாக அனுப்பப் போவதில்லை என்று கூறிய வண்ணமாக தனது கரங்களை எங்கள் மேல் போட்டு அரவணைத்து "உள்ளே வாருங்கள்" என்று எங்களை அழைத்துச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்கு அந்த நாளின் காலை ஆகாரத்தை சாப்பிடக் கொடுத்ததுடன் அந்த நாளின் மத்தியான ஆகாரத்தையும் கூட தயார் செய்து கொடுத்தார்கள்.

நாங்கள் செல்ல வேண்டிய கிளன்வுட் என்ற இடத்திற்கு பிற்பகல் வரைக்கும் எந்த ஒரு ரயிலும் இல்லை என்று அறிந்து அங்கு செல்லக்கூடிய ஒரு சரக்கு ரயிலின் கார்ட் (Guard) பயணம் செய்யும் பெட்டியில் நாங்கள் ஏறி அமர்ந்தோம். ரயிலின் கண்டக்டர் எங்களண்டை வந்து "உங்களுடைய பயணக்கட்டணம் எங்கே? அல்லது உங்கள் டிக்கெட் எங்கே? " என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்.

"எங்களிடம் எதுவும் இல்லை"

"அப்படியானால், நான் உங்களை கீழே இறக்கி விடுவேன்"

நாங்கள் இருவரும் அழத் தொடங்கினோம். என் அண்ணன் "ராணுவ அநாதை இல்லத்தின் மேலாளருக்கு தன் வசம் வைத்திருந்த ஒரு கடிதத்தை" அந்த மனிதரிடம் கொடுத்தான். அதை அவர் வாசித்து விட்டு திரும்பவும் அதைக் கொடுத்துவிட்டார். அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் தாராளமாக அவருடைய கன்னங்களில் வடிந்து கொண்டிருப்பதை நாங்கள் நன்கு கவனிக்க முடிந்தது. அவர் எங்களைப் பார்த்து "பிள்ளைகளே நன்றாக உட்கார்ந்து கொள்ளுங்கள். எனது ரயிலில் நீங்கள் பிரயாணம் செய்து வருகிற வரைக்கும் நீங்கள் ஒரு செப்புக் காசு கூட கொடாமல் முற்றும் இலவசமாக வரலாம்" என்று சொல்லிவிட்டார். நாங்கள் சென்ற சரக்கு ரயில் 20 மைல்கள் தூரம் ஓடி மிகவும் பெரிதான ஒரு வளைவைக் கடந்து வரும்போது எங்களோடு அமர்ந்திருந்த அந்த ரயிலின் கண்டக்டர் மலை உச்சியிலுள்ள ஒரு இடத்தைக் காண்பித்து "நீங்கள் செல்ல வேண்டிய இடம் அதோ அந்த மலை உச்சியில் இருக்கின்றது" என்று எங்களிடம் காண்பித்தார்.

"எனது இருதயத்தின் சுவர்களில் பிரகாசமாக இன்றும் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு படத்தை நான் உங்களிடம் சொல்ல ஆசைப்படுகின்றேன். ஏம்ஸ் என்ற இடத்திலுள்ள எங்களுடைய சிறிய மர வீட்டில் எனது பக்தியுள்ள தாயார் ஜெபித்துக் கொண்டிருக்கும் வேளையில் நானும் அவர்களண்டை முழங்கால்களில் நின்று ஜெபிக்கும் காட்சி தான் அது.

மாலைச் சூரியனின் செவ்வொளி கதிர்கள் பள்ளத்தாக்கு எங்கும் மூடி நிற்கின்றது. ஆட்டு மந்தைகள் தங்கள் மேய்ச்சலுக்குப் பின்னர் வீடு நோக்கி மெதுவாக ஏறி வந்து கொண்டிருக்கின்றன. ஆடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சிறிய மணிகளின் ஓசை ஒலித்த வண்ணமாக இருக்கின்றது. அந்த ஒலியை சேவல் கோழிகளின் கூவும் குரல்கள் மட்டுப்படுத்துகின்றன. அத்துடன் கிராமத்துச் சின்னஞ்சிறார்களின் பல குரல் பாட்டுச் சத்தமும் ஓங்கி ஒலிக்கின்றன.

திரும்பவும் என் அன்புத்தாயார் ஒரு பெரிய படுக்கைக்கு உள்ளாக உள்ள ஒரு சிறிய படுக்கையை வெளியே இழுத்து எடுத்து பையன்களாகிய நாங்கள் இரவில் படுப்பதற்காக படுக்கையை ஆயத்தம் செய்கின்றார்கள். நாங்கள் அந்த படுக்கை அருகே முழங்காலூன்றி, எங்கள் சிறு கரங்களைக் கூப்பி "ஆண்டவரே, நான் இப்பொழுது எனது படுக்கைக்குச் செல்லுகின்றேன். என் ஆத்துமாவை நீர் காத்துக் கொள்ளும். நான் அடுத்த நாள் காலை கண் விழிப்பதற்கு முன்பாக மரிப்பேனானால் என் ஆத்துமாவை உம்மண்டை எடுத்துக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கின்றேன். ஆமென்" என்று ஜெபித்து படுக்கைக்குச் செல்லுகின்றோம்.

"நான் உங்களிடம் வெட்கத்தோடும், துக்கத்தோடும் சொல்லுவது என்னவெனில் நான் எனது பக்தியுள்ள தாயின் பரிசுத்த அன்பின் தளைக்கட்டை அது அறுந்து போகும் அளவிற்கு முரட்டாட்டமாக ஓங்கி இழுத்தேன். எனது தாயாரின் ஜெபங்களும், பரிந்து மன்றாடுதல்களும் ஓய்ந்து போகும் அளவிற்கு நான் பாவத்துக்குள்ளும், அசுத்தத்திற்குள்ளும் வழி விலகிச் சென்று கொண்டிருந்தேன். நான் எனது தாயின் முகத்தை மறந்துவிட்டேன். இன்னுமொரு அடி எடுத்து வைத்திருந்தால் அத்துடன் நான் எனது தாயின் பாச அன்பின் கயிற்றை ஒரேயடியாக அறுத்தெறிந்து கொண்டு அதல பாதாளத்தில் விழுந்து நஷ்டமடைந்த பாவியாக அழிந்தே போய் இருப்பேன். கர்த்தருக்கு நன்றி துதி கூறுகின்றேன், நண்பர்களே, நான் அந்த கடைசி அடியை தேவ கிருபையால் எடுத்து வைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அந்த பரிசுத்த தாயாரின் பசுமையான நினைவுகளுக்கு நான் என்னை ஒப்புவித்தேன். அதின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் அதல பாதாளத்துக்கு நான் விலகி சிக்காக்கோ பட்டணத்தில் ஒரு இரவு வேளையில், புயற்காற்று வீசிக்கொண்டிருந்த நேரத்தில் ஆண்டவர் இயேசுவின் விரிக்கப்பட்டிருந்த ஆணி கடாவுண்ட கரங்களுக்கு நேராக வந்து விழுந்து முழங்காலூன்றி "தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்று கதறினேன்."

பில்லி சன்டே தனது விளையாட்டுத் தோழர்கள் பலரைப் போன்று தனது கல்வியை பல முறையும் இடை நிறுத்தம் செய்து கொண்டார். எப்படியோ உயர்நிலைப் பள்ளி கல்வி வரை சென்றுவிட்டார். ஆனால் ஒருக்காலும் பட்டாதாரி ஆகவில்லை. வாழ்க்கையின் ஆரம்ப கால நாட்களிலேயே அவர் தனது வாழ்வுக்காகப் பாடுபட வேண்டியதாக இருந்தது. அந்த நாட்களில் அவர் செய்த வேலையையும் தனது அனுபவம் ஒன்றையும் கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்:-

"நான் 14 வயதினனாக இருந்தபோது ஒரு பள்ளிக்கு வேலைக்கு விண்ணப்பம் செய்தேன். அங்கு எனக்கு வேலை கிடைத்தது. அங்கு நான் அதிகாலை 2 மணிக்கெல்லாம் எழும்பி 14 அடுப்புகளை நிலக்கரி சுமந்து கொண்டு வந்து நிரப்பி அவைகளை எரிய வைக்க வேண்டும். நெருப்பு அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்கூட வகுப்பு அறைகளை எல்லாம் நான் கூட்டி சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு அவர்கள் எனக்கு மாதம் 25 டாலர்கள் சம்பளம் கொடுத்தார்கள். ஒரு மாதம் பள்ளி நிர்வாகம் எனது சம்பளத்தை பணமாகக் கொடுக்காமல் செக்காகக் கொடுத்து விட்டார்கள். நான் அதை வங்கிக்கு கொண்டு மாற்றச் சென்றேன். நான் எனது செக்கை குடியானவர்களின் கூட்டுறவு வங்கியில் கொடுத்த போது எனக்கு அருகிலிருந்த ஒருவர் தனது செக்கை அந்த சமயம் கொடுத்தார். அவருடைய செக் 40 டாலர்களுக்கானது. வங்கி குமஸ்தா தெரியாமல் 40 டாலர்களை எனக்குக் கொடுத்தான். நான் அதை வாங்கிக் கொண்டு வந்தேன். 15 டாலர்கள் என்னுடையது அல்ல என்று நான் அறிந்திருந்த போதினும் எனது நண்பன் ஒருவனுடைய தீய ஆலோசனையாலும் வற்புறுத்துதலாலும் அதை நான் எனக்கென்று வைத்துக்கொண்டு அதைக் கொண்டு ஒரு கோட்டும் சூட்டும் வாங்கிக் கொண்டேன். அதுதான் நான் வாங்கிய முதல் கோட்டும், சூட்டுமாகும். அவைகளின் நிறங்கள் என்ன என்பதை இப்பொழுது கூட நான் உங்களிடம் சொல்ல முடியும்.

வருடங்கள் கடந்து சென்று நான் ஆண்டவரை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்னர் ஒரு நான் நான் முழங்காலூன்றி ஜெபித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஆண்டவர் என் முதுகைத் தட்டி "பில்லி, நீ அந்த குடியானவர்களின் கூட்டுறவு வங்கிக்கு 15 டாலர்கள் நீ அதை தவறாகப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து இதுவரைக்குமான வட்டியோடு திரும்பச் செலுத்த வேண்டும்" என்று என்னிடம் கூறினார். "ஆண்டவரே, நான் அவர்களிடமிருந்து 15 டாலர்கள் கூடுதலாகப் பெற்றுக் கொண்ட காரியம் அவர்களுக்குத் தெரியாது" என்று நான் கூறினேன். "வங்கிக்கு அந்தக் காரியம் தெரியாது என்பது உண்மைதான், அது எனக்குத் தெரியும்" என்று ஆண்டவர் எனக்கு பதில் கொடுத்தார். இந்தக் காரியத்தைக் குறித்து நான் என் உள்ளத்தில் போராடிக் கொண்டிருந்தேன். நான் ஜெபிக்க தேவ சமூகத்தில் முழங்காலூன்றும் ஒவ்வொரு சமயமும் "வட்டியுடன் 15 டாலர்கள் நெவாடா கிராம குடியானவர்களின் கூட்டுறவு வங்கி" என்ற வார்த்தை என் உள்ளத்தில் பலமாகத் தொனித்துக் கொண்டிருந்தது. கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து பல வருடங்களுக்கு பின்னர் நான் அந்த 15 டாலர்களையும் அதற்கான வட்டியையும் வங்கிக்கு அனுப்பி விபரமான கடிதம் எழுதினேன். அவர்களும் உடனே எனது கடிதத்தை அங்கீகரித்து பதில் கொடுத்தார்கள். அந்தக் காரியத்தை நான் செய்ததும் என் உள்ளம் தேவ சமாதானத்தால் நிறைந்தது. நான் யாருடைய பணத்தையும் திருடிக் கொள்ளவில்லை"

 

புகழ்பெற்ற பேஸ்பால் விளையாட்டு நட்சத்திரம்

அந்த நாட்களில் புகழ்பெற்று விளங்கிய பேஸ்பால் என்ற விளையாட்டில் பில்லி சன்டே நட்சத்திரமாக ஜொலித்தார். அணிக்கு 9 பேர்களாக 2 அணிகளாக வீராவேசத்துடன் விளையாடும் அந்த விளையாட்டில் அவர் மிகுந்த வேகப் பந்து வீச்சாளனாக விளங்கினார். அவருடைய புகழ் எங்கும் பரவி நின்றது. அவருடைய திறமையான விளையாட்டைக் குறித்து தினசரி பத்திரிக்கைகள் தங்களுடைய விளையாட்டுப் பக்கங்களில் ஏராளமாக எழுதிக் குவித்தது. அவர் சிக்காக்கோ பட்டணத்து அணியின் வீரனாக 5 ஆண்டு காலம் பெரும்பாலும் அதின் வலது கைப்பக்க மற்றும் மையப் பகுதி வீரனாக நின்று விளையாடினார். பேஸ்பால் பந்து விளையாட்டில் வேகமான ஓட்டம்தான் ஒரு சிறப்பான அம்சமாகும். அந்த வகையில் பில்லி சன்டேயின் மின்னல் வேக ஓட்டம் அவரது சிக்காகோ அணிக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது.

ஒரு சமயம் அவர் விளையாடிக் கொண்டிருந்த பேஸ்பால் பந்து விளையாட்டை கண்டு களிக்க வந்திருந்த கிளீவ்லாண்ட் பட்டணத்து மேயர் டாம் ஜாண்சன் என்பவர் அவரது அற்புதமான ஆட்டத்தைக் கண்டு மனம் மகிழ்ந்து அந்த விளையாட்டு நடந்து முடிந்ததும் அவருக்கு 1500 டாலர்களை அன்பளிப்பாகக் கொடுத்து "பில்லி, நாளையத்தினம் நீ சிக்காக்கோ பட்டணத்திற்குள் சென்று பட்டணத்திலேயே மிகவும் விலையுயர்ந்த கோட், சூட் துணிகளை உனக்கு எடுத்துக் கொள்" என்று கூறினார்.

பில்லி சண்டே 1887 ஆம் ஆண்டு அன்பின் ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். அதிலிருந்து அவர் எந்த ஒரு நிலையிலும் ஓய்வு நாட்களில் நடைபெறும் பேஸ்பால் பந்து விளையாட்டு போட்டிகளில் அவர் விளையாடவே இல்லை. பொதுவாக, ஞாயிற்றுக் கிழமை விளையாட்டுகளுக்குத்தான் ஏராளமான மக்கள் கூடி வருவார்கள். பிலடெல்பியா அணியில் சேர்ந்து 4 ஆண்டு காலம் ஆடிய எந்த ஒரு ஆட்டத்திலும் ஞாயிற்றுக் கிழமை வந்த பேஸ்பால் ஆட்டங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதின் காரணமாக பில்லி சன்டேயின் ஆசை ஆவல் எல்லாம் உலகப் பிரகாரமான விளையாட்டுகளில் அல்ல, அவர் கர்த்தர் இயேசுவுக்கு ஊழியம் செய்யும் காரியத்தில் உள்ளது என்பதை அந்த நாட்களில் மக்கள் திட்டமாகக் கண்டு கொள்ள முடிந்தது.

அவருடன் விளையாடிய விளையாட்டு வீரர்கள் எல்லாம் தங்கள் விளையாட்டுகளில் ஏராளமான பணங்களை குவித்து வீடு வாசல்களை வாங்கி சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் பில்லி சன்டே தனது அற்புதமான விளையாட்டை கர்த்தருக்காக விட்டுவிட்டு மாதத்திற்கு சுமார் 84 டாலர்களே சம்பளம் கொடுக்கும் சிக்காக்கோ பட்டணத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. என்ற கிறிஸ்தவ நிறுவனத்தில் போய்ச் சேர்ந்து கொண்டார்.

 

பில்லி சன்டேயின் மனந்திரும்புதல்

எந்த ஒரு மனந்திரும்புதலுக்குப் பின்னரும் நடைபெறும் ஆச்சரியமான காரியங்களுக்கு பாத்திரமான நபர் யார் என்பதை சொல்லுவது கூடாத காரியமாகும். எனினும், அந்தக் காரியத்தின் பின்னணியத்தில் யார் இருந்தார் என்பதை ஓரளவு நாம் அனுமானமாகக் கூற முடியும். அந்தவிதமாகவே தனது 200 ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டங்களின் வாயிலாக சுமார் 300000 மக்களை ஆண்டவராகிய இயேசு இரட்சகரின் இரட்சிப்புக்கும், மனந்திரும்புதலுக்கும் நேராக வழிநடத்தியவரும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மதுவிலக்குச் சட்டம் வர காரண கர்த்தருமாக இருந்த தேவ மனிதர் பில்லி சன்டே என்ற தேவ மனிதரை ஆண்டவருடைய இரட்சிப்புக்குள் வழி நடத்திய பெருமை சிக்காக்கோ பட்டணத்திலுள்ள பசிபிக் கார்டன் மிஷன் ஸ்தாபனத்தைத் தோற்றுவித்த கலோனல் கிளார்க் என்பவரின் பரிசுத்த மனைவியைத்தான் சேரும்.

1887 ஆம் ஆண்டு ஒரு மாலை வேளையின் பிற்பகுதியில் பில்லி சன்டேயும் அவரது ஐந்து பேஸ்பால் விளையாட்டு வீரர்களான நண்பர்களும் சிக்காக்கோ பட்டணத்திலுள்ள வான் பரேன் தெருவில் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு அப்பொழுது அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பசிபிக் கார்டன் மிஷன் ஸ்தாபனத்தின் ஒரு குழுவினரின் பாடல்களையும், அவர்களுடைய உள்ளங்கசியும் சாட்சிகளையும் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மிஷன் ஸ்தாபனத்தின் ஊழியர் ஒருவர் தங்களுடைய ஸ்தாபனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எழுப்புதல் கூட்டங்களில் வந்து கலந்து கொள்ளும்படியாக பில்லி சன்டேயை அன்புடன் அழைக்கவே அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அவர் அங்கு சென்றார். அங்கு அவர் கேட்ட பரவசமான அனுபவ சாட்சிகளைக் கேட்ட அவர் திரும்பத் திரும்ப அங்கு சென்று வந்தார். அவருடைய உள்ளத்தில் கர்த்தருடைய ஆவியானவர் கிரியை செய்யத் தொடங்கினார். இறுதியாக திருமதி கலோனல் கிளார்க் என்பவரின் ஜெபத்தாலும், அவர்களுடன் பில்லி சன்டே மேற் கொண்ட சம்பாஷணையின் காரணமாகவும் பில்லி சன்டே தன்னை முழுமையாக ஆண்டவருக்கு ஒப்புவித்து அவருடைய மெய் அடியானானார்.

பில்லி சன்டே, தான் எவ்விதமாக ஆண்டவருடைய சொந்தப் பிள்ளையாக மாற்றமடைந்தேன் என்ற தனது அனுபவத்தை தனது சொந்த வார்த்தைகளால் கீழ்க்கண்டவாறு சொல்லுவார்:-

"27 ஆண்டு காலங்களுக்கு முன்பாக நானும், உலகப் புகழ்பெற்ற எனது பேஸ்பால் விளையாட்டு வீரர்களான எனது நண்பர்களும் சிக்காக்கோ பட்டணத்திலுள்ள ஒரு தெருவின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தோம். என்னுடன் வந்த அந்த வீரர்களில் சிலர் மரித்து இந்த உலகத்தைவிட்டு கடந்து சென்று விட்டனர். நாங்கள் எல்லாரும் ஒரு மதுபானக் கடைக்குச் சென்று நன்றாக மது அருந்திவிட்டு அந்தத் தெருவின் ஒரு மூலையில் போய் அமர்ந்தோம். அது ஒரு ஓய்வு நாளின் மாலை வேளையாகும். பின் வந்த நாட்களில் நான் அந்த தெரு வழியாகப் போகும் ஒவ்வொரு சமயங்களிலும் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆண்டவர் என்னை அந்த தெருவில் தம்முடைய சொந்த பிள்ளையாக சந்தித்த காரணத்தால் அவருக்கு நான் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி துதி ஏறெடுக்காமல் சென்றதே இல்லை. தெரு ஓரமாகக் கிடந்த ஒரு பெரிய பாராங்கல்லில் நாங்கள் அமர்ந்திருந்தோம். தெருவுக்கு குறுக்காக ஒரு கூட்டம் மக்கள் தங்கள் வாத்தியக் கருவிகளை வாசித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் புல்லாங்குழல், ட்ராம்ப்போன், கொம்பு வாத்தியங்கள் மற்றும் பிற இசைக் கருவிகளை இசைத்து பூர்வ காலத்து சுவிசேஷ ஞானப் பாடல்களை உருக்கமாகப் பாடிக் கொண்டிருந்தனர். நானும் எனது சகோதரர்களும் சிறுவர்களாக எங்கள் பண்டைய மர வீட்டில் எனது தாயாருடன் லோவாவில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் எனது தாயார் பாடிய பாடல்களையும், எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த தேவாலயத்தில் நான் எனது ஓய்வு நாள் பாடசாலையில் கேட்ட பாடல்களையும் அவர்கள் பாடிக் கொண்டிருந்தனர்.

தேவன் எனது மனத்திரையில் நான் எனது கடந்த கால நாட்களில் அறிந்தும், அறியாமலும் செய்த அனைத்து பாவ அசுத்தங்களையும் தெளிவான விதத்தில் படம் வரைந்து காண்பித்தார். அந்தப் படத்தில் பலருடைய முகங்களையும் நான் கண்டேன். அவர்களில் பலர் மரித்து மண்ணாகிவிட்டனர். நான் எனது பாவங்களுக்காக, ஏங்கி ஏங்கி கதறி அழுதேன். அந்த நேரத்தில் அங்கு பாடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் எங்களண்டை வந்து நின்று "பசிபிக் கார்டன் மிஷன்" நடத்தும் எழுப்புதல் கூட்ட சபா மண்டபத்துக்கு நாங்கள் செல்லப் போகின்றோம், நீங்களும் வாருங்கள். அங்கே நீங்கள் குடிகாரர்கள் தாங்கள் எவ்விதமாக தங்கள் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலைபெற்று கர்த்தரைக் கண்டு கொண்டார்கள் என்பதையும், பெண்கள் தாங்கள் எப்படி தங்கள் வேசித்தன வாழ்விலிருந்து மனந்திரும்பி கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளார்கள் என்பதையும் நீங்கள் உங்கள் காதுகளால் கேட்கலாம்" என்று சொன்னார்.

உடனே நான் எழுந்து எனது சக விளையாட்டு வீரர்களைப் பார்த்து "பையன்களே, நான் என்னளவில் நிச்சயித்துக் கொண்டு விட்டேன், நான் ஆண்டவர் இயேசுவண்டை செல்லப் போகின்றேன். நாம் நம்முடைய வழிகளிலிருந்து ஒருவரைவிட்டு ஒருவர் என்றுமாகப் பிரியப் போகும் வேளை வந்தது என்று சொன்னேன்" நான் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு எனது நண்பர்களில் சிலர் பலமாகச் சிரித்தார்கள். வேறு சில நண்பர்கள் என்னைப் பார்த்துப் பரிகாசம் செய்தனர். சிலர் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக இருந்தனர். ஆனால், ஒரே ஒருவன் மாத்திரம் எனக்கு உற்சாகமான வார்த்தைகளை கூறினான். நான் எனது நண்பர்களை விட்டுப் பிரிந்து சுவிசேஷக் கூட்டம் நடக்கும் சபா மண்டபத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்கே சென்ற நான் என் முழங்கால்களில் வீழ்ந்து என் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது புலம்பி பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றவனாக இரட்சகரின் அறை கூவி அழைக்கும் அன்பின் கரங்களுக்கு நேராக ஓடிச் சென்று விழுந்தேன்"

என்னோடு கூட பேஸ்பால் பந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்களுடைய பின் நாட்களில் பெரிய பெரிய பந்தயங்களில் விளையாடி பெரும் செல்வந்தர்களாகி, வீடு வாசல்களைக் கட்டி, வாழ்வில் எல்லா இன்பங்களையும் அநுபவித்து குடிவெறிகளுக்கு அடிமைப்பட்டு இறுதியில் நிர்ப்பந்தமாக தேவனற்றவர்களாக மரித்தார்கள். ஆனால், நான் தேவனை எனது சுதந்திரமும், பாத்திரத்தின் பங்குமாக தெரிந்து கொண்டு உலக மேன்மையைப் புறக்கணித்துத் தள்ளிய காரணத்தால் இறுதியில் நானே நித்திய விளையாட்டில் வெற்றி பெற்று பந்தயப் பொருளைத் தட்டிச்சென்றுவிட்டேன். அல்லேலூயா!"

 

பூர்வ காலத்து சத்தியத்தைப் பிரசிங்கித்த
பூர்வ காலத்துப் பிரசங்கியார்

"தன்னளவில் குளிர்ந்து அனலற்று அழிவில் கிடக்கும் பாவ உலகத்தை கடந்த 2000 வருட காலங்களாக சூடேற்றிக் கொண்டிருக்கும் பூர்வ மார்க்கத்தின் சத்தியத்தைப் பிரசங்கிக்கும் பூர்வ காலத்துப் பிரசங்கியார் நான்" என்று பில்லி சன்டே அடிக்கடி சொல்லுவார். அவருடைய பிரசங்க முறைகள் நவநாகரீக காலத்தின் மிகவும் சமீபத்தியதாகக் காணப்பட்டாலும் அவருடைய தேவச் செய்திகள் எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமின்றி பூர்வ காலத்து தேவ சத்தியங்களாகும். அவருடைய பிரசங்கத்தில் எந்த ஒரு மாற்று கொள்கைகளுக்கும் இடமே கிடையாது. கிறிஸ்து இரட்சகரில்லாத ஒரு மனிதன் நஷ்டப்பட்ட பாவி என்பதையும், பாவ நாசராம் கர்த்தராகிய இயேசு இரட்சகரை ஏற்றுக் கொள்ளாத பாவ மனுக்குலத்திற்கு மீட்பு என்பதே இல்லை என்பதையும் அவர் அடித்துப் பேசினார். மோட்சத்தைக் குறித்து அவர் எத்தனை நிச்சயமுடையவராக இருந்தாரோ அத்தனை நிச்சயத்தை என்றும் அவியாத நித்திய எரி நரகத்தைக் குறித்தும் கொண்டிருந்தார். ஒரு மனிதன் பரிசுத்தமடைவதற்கு பரிணாமத்தில் வளரும் வளர்ச்சியையல்ல, கர்த்தராகிய இயேசுவின் சிலுவை மரண மீட்பின் மூலமாக உண்டாகும் பரிசுத்தத்தையே அவர் நம்பினார்.

தற்கால நவநாகரீக கொள்கைக்காரர்கள் பில்லி சன்டேயின் ஊழியத்தைக் குறித்து அவரை காரி உமிழ்ந்து, அவரை பரிகாசம் பண்ணி, அவர்மேல் பற்களைக் கடித்து எதிர்த்து நின்றார்கள். ஆனால் அவரோ திரள் திரளான ஆண்களையும், பெண்களையும் தேவனுடைய இரட்சிப்புக்கு நேராகவும், பரிசுத்தமான புது வாழ்வுக்கு நேராகவும், தேவ சமாதானத்துக்கு நேராகவும், இரட்சண்யத்தால் உண்டாகும் மனமகிழ்ச்சிக்கு நேராகவும் வழிநடத்திக் கொண்டிருந்தார். அவருடைய நாட்களில் அவருடைய தேவச் செய்திகளால் தேவனுடைய திருச்சபைகள் சிலுவையின் இரத்தக் கறை படிந்த பாதைகளின் மூலமாக நீதிக்கு நேராகச் சென்றது. அவருடைய பிரசங்கங்களுக்குப் பின்னால் உண்டான உயிர் மீட்சிகள் அப்போஸ்தலர் நடபடிகளில் காணப்படும் பலத்த பரிசுத்த மாறுதல்களுக்கு இணையாகக் காணப்பட்டது. "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" என்ற பரிசுத்த பேதுரு அப்போஸ்தலனின் ஜெய கெம்பீர தொனியே பில்லி சன்டேயின் வேதசாஸ்திரமாக இருந்தது.

"நரியும், முயலும் ஒன்று சேர்ந்து மேஜைப் பந்து விளையாட்டு விளையாடின விளையாட்டின் கதையைக் காட்டிலும் மேலாக வேதசாஸ்திரம் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் எனது மகிமையின் பாதையில் சென்று கொண்டிருக்கின்றேன்" என்று பில்லி சன்டே சொல்லுவார். நரியும், முயலும் ஒன்று சேரும் சேர்க்கை ஆபத்தான சேர்க்கை என்பதை நாம் அறிவோம். நரி முயலை விழுங்கி ஏப்பம்விடக்கூடியது. பில்லி சன்டேயின் முழுமையான எண்ணத்தின் உட்பொருள் என்னவெனில் வேதசாஸ்திரம் கிறிஸ்தவ மார்க்கத்துடன் பின்னிப் பிணைந்து இருக்க வேண்டும். எப்படி தாவர சாஸ்திரம் மலர்களுடன் இணைந்திருக்கின்றதோ, எப்படி வானசாஸ்திரம் நட்சத்திரங்களுடன் ஒன்று சேர்ந்திருக்கின்றதோ அவ்வாறே வேதசாஸ்திரம் மெய்க் கிறிஸ்தவத்துடன் ஒட்டியிருக்க வேண்டும். தாவர சாஸ்திரத்தை நாம் எப்படி மாற்றி மாற்றி எழுதினாலும் மலர்கள் எந்த ஒரு மாற்றமின்றி அப்படியேதான் இருக்கும். வானசாஸ்திரத்தை நாம் எப்படி வித்தியாசப்படுத்தி எழுதிக்கொண்டாலும் நட்சத்திரங்கள் அதினதின் அயனங்களில் மாட்சியாக பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். உங்களுடைய வேதசாஸ்திரங்கள் எத்தனை மாற்றங்களைக் கொண்டிருந்தாலும் கிறிஸ்தவ மார்க்கம் தனது நற்கந்தத்தை இழக்காமல் அப்படியேதான் பரிமளித்துக் கொண்டிருக்கும். ஒருவருக்கு வேதசாஸ்திரம் தெரியவில்லை என்று அவர் மோட்சத்திலிருந்து அப்பால் விலக்கி வைக்கப்படுவதில்லை. வேதசாஸ்திரமல்ல, கிறிஸ்து ஒருவரே நம்மை இரட்சிப்பவர்.

முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை தேவனுடைய வார்த்தையை நான் அப்படியே விசுவாசிக்கின்றேன். தன்னுடைய பிரசங்கத்தில் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசித்தப்படுத்திக் காண்பிப்பவனை தேவன் கனம் பண்ணுவார். பரிசுத்த பக்தர்கள் ஜாண் வெஸ்லி, ஜியார்ஜ் விட்ஃபீல்ட், சார்லஸ் ஃபின்னி, மார்ட்டின் லூத்தர் போன்றவர்களின் பெயர்கள் திருச்சபை சரித்திரத்தில் சிறப்புற்று விளங்குவதன் காரணம் அவர்கள் பாவத்தைக் கண்டித்து உணர்த்திப் பேசி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எந்த ஒரு பயமுமின்றி பிரசங்கித்த காரணம்தான்.

உங்களில் சிலர் எழுப்புதல் முறை தவறியது, விபரீதமானது என்று சொல்லுகின்றீர்கள். நீங்கள் சொல்லுவது பொய்யாகும். தேவனற்ற, சீட்டாட்டம் ஆடுகின்ற, குடித்துக் கும்மாளம் போடுகின்ற, விபச்சாரம் வேசித்தனம் நிறைந்த சூழ்நிலைகள் திருச்சபையில் இருப்பதை சீரான, ஒழுங்கான நிலை என்று நீங்கள் என்னிடம் சொல்லுகின்றீர்களோ?

நமக்குத் தேவையானது பூர்வ காலத்து உயிர் மீட்சியாகும். அதுவே உங்கள் அண்டை அயலகத்தாரை நேசிக்கவும், அவர்களைக் குறித்து தீது பேசாமலும் இருக்க உங்களுக்கு வகை செய்யும். அந்த பூர்வ காலத்து எழுப்புதலே நீங்கள் உங்கள் கடன்களை திருப்பிச் செலுத்த உங்களுக்கு உதவி செய்யும். நீங்கள் உங்கள் குடும்ப ஜெபங்களை ஒழுங்காக நடத்த அது உங்களுக்கு உதவி செய்யும். மெய்க்கிறிஸ்தவம் என்பது திருச்பையின் அங்கத்தினராக இருப்பதை விட அநேக படிகள் உயர்ந்த மேன்மையான ஒன்றாகும். சீட்டாட்டம் ஆடுகின்ற, தேவனற்ற, பீர், ஒயின், மது வகைகளைக் குடிக்கின்ற ஏராளமான ஓய்வு நான் பள்ளி ஆசிரியர்கள் இருக்கும்போது குழந்தைகள் சாத்தானுக்கு நேராகச் சென்று கொண்டிருப்பது ஆச்சரியமான காரியம் அல்ல. உங்கள் வீட்டில் ஒழுங்கான குடும்ப ஜெபங்கள் இல்லாமலிக்கையில் உங்கள் பிள்ளைகள் மிருகங்களைப் போல வளருவதைக் குறித்து நீங்கள் ஆச்சரியமடைய ஒன்றுமில்லை.

 

கரணம் போடும் கழைக்கூத்தாடி பிரசங்கியார்

இந்த உலகத்தில் தோன்றிய பரிசுத்த தேவ பக்தர்களில் பில்லி சன்டே முற்றும் வித்தியாசமான ஒரு தேவ பக்தனாவார். சுவிசேஷ பிரசங்கிமார்கள் யாவரும் தங்களுக்கு முன்னால் நிரம்பியிருக்கும் தேவ ஜனங்களுக்கு முன்பாக அமரிக்கையாக மேடையில் எழுந்து நின்று சுவிசேஷ நற்செய்தியைப் பிரசங்கிப்பார்கள். அநேகர் தாங்கள் பிரசங்கிக்கும் பிரசங்க மேடையில் அங்கும் இங்கும் நடந்து கரங்களை ஆட்டி அசைத்து, உயர்த்தி தேவச் செய்தியைக் கொடுப்பார்கள். ஆனால், பில்லி சண்டே இந்த வரம்புகளுக்கெல்லாம் மிகவும் அப்பாற்பட்டவர். அவர் மேடையில் ஏறினால் அவ்வளவுதான், மேடையே அதிரும்படி அங்கும் இங்கும் ஓடி, துள்ளிக் குதித்து பிரசங்கிப்பார். அவர் பேஸ்பால் விளையாட்டுக் காரனாக இருந்த நாட்களில் காண்பித்த அவருடைய விரைவான ஓட்டம் மற்ற நடபடிகள் எல்லாம் இப்பொழுது அவருடைய பிரசங்க மேடையில் அரங்கேற்றம் பெற்றது. அவருடைய தேவச்செய்தியை முதன் முதலாகக் கேட்கும் எந்த ஒரு அந்நிய மனிதனும் பெருத்த ஆச்சரியம் அடையாமல் இருக்கவே முடியாது.

அவர் பேசுகின்ற பல மேடைகளிலும் அவருடைய பிரசங்கத்தைக் கேட்பவர்கள் மூச்சுத்திணறும் அளவுக்கு அவருடைய நடபடிகள் அமைந்திருக்கும். அவருடைய பிரசங்க மேடையில் இங்கும், அங்கும், குறுக்கும் நெடுக்குமாக அவர் விரைந்து ஓட்டம் பிடிப்பார். தனது உடம்பை வில்லாக வளைத்து ஒரு நொடியில் அதை பழைய நிலைக்கு கொண்டு வந்து விடுவார். தான் நின்று கொண்டிருக்கும் மேடையை தனது காலால் மிதித்து தகர்த்து விடுபவரைப் போல பல தடவைகளும் அவர் அதை ஓங்கி ஓங்கி மிதிப்பார். தனது ஒரு கரத்தை மற்றொரு கரத்துடன் ஓங்கி பலமாக அடித்துக் கொள்ளுவார். தனது கரத்தை ஓங்கி பிரசங்க மேடையிலுள்ள நாற்காலியைக் குத்தும்போது அவருடைய கரத்தின் எலும்புகள் நொறுங்கி இரத்தம் பீறிட்டுப் பாய்வதைப் போன்றிருக்கும்.

ஜெபிக்கும் ஒரு கிறிஸ்தவனைக் குறித்துப் பேசும்போது நொடிப் பொழுதில் அவர் நெடும் முழுங்கால்களில் விழுந்து எழுந்துவிடுவார். மரணப் படுக்கையில் தனது பாவங்களுக்காக மனங்கசந்து அழுது பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் கடைசி நேரப் பாவியைக் குறித்துப் பேசும் போது அவனுடைய மரித்த சடலத்தை பாதுகாப்பதற்காக அவனுடைய சரீரத்திற்குள் பம்பின் மூலமாகச் செலுத்தப்படும் திரவத்தை கூட்டத்தினருக்கு முன்பாக தன் வாயிக்குள்ளே செலுத்தி தன்னையே அந்த மரித்த மனிதனாக அவர் காண்பித்து விடுவார்.

தன் காலம் எல்லாம் பாவத்தில் வாழ்ந்து, பிசாசுக்காக தனது வாழ்நாட் காலத்தைச் செலவிட்டுவிட்டு தனது மரணப் படுக்கையில் ஆண்டவரைத் தேடி பரலோகம் போக முயற்சிப்பது என்பது "தனது வாழ்நாட்காலம் என்ற மெழுகுவர்த்தியைப் பிசாசின் மகிழ்ச்சிக்காக எரிய வைத்துவிட்டு, அது எரிந்து முடிந்ததும் வெளி வரும் தேவையற்ற வெண் புகையை ஆண்டவருடைய முகத்துக்கு நேராக ஊதி விடுவதாகும்" என்று அவர் கூறுவார். அவர் அப்படிச் சொல்லும் போது அந்தக் கடைசி வார்த்தையான ஆண்டவருடைய முகத்தில் வெண் புகையை ஊதிவிடும் வார்த்தையை உண்மையாகவே புகை ஊதிவிடுவது போன்ற நிஜமான சத்தத்துடன் ஊதுவார்.

தனது நீண்ட தூர பந்தய ஓட்டத்தில் வெற்றியோடு ஓடி இலக்கை அடைந்த ஓட்ட வீரன் தனது வெற்றி இலக்கில் விழுகின்ற பரவசமான காட்சியை தானே கூட்டத்தினருக்கு முன்பாக ஒரு கணம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து அவர் காண்பிப்பார். அவர் பிறவியிலேயே ஒரு நடிகனாக விளங்கினார். உண்மையை மக்களுக்கு தத்ரூபமாக விளக்கிக் காண்பிப்பதற்காக அவர் பல காரியங்களையும் நடித்துக் காண்பித்தார். தனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை உலக மாய்கைகளுக்குக் கையளித்து நஷ்டப்பட்டுப் போகும் பாவியை அவர் கடலிலே கப்பலில் பயணம் செய்யும் ஒரு மனிதனுக்கு ஒப்பிட்டு அவன் தனது விலையேறப்பெற்ற முத்தை கப்பலின் மேல் தட்டில் நின்று கொண்டு அதை தன் கை விரலினால் அடிக்கடி சுண்டி விளையாடுவதையும் இறுதியில் அது அவன் கரத்திலிருந்து நழுவி கடலில் விழுவதையும் ஒரு குறு நாடகமாகவே நடித்துக் காண்பித்து விடுவார். அதற்காக அவர் தனது கரத்தில் ஒரு போலியான முத்தையும் வைத்திருப்பார். அந்தக் காட்சியை பார்க்கும் கூட்டத்தினர் நிஜமான காட்சியைக் கப்பலிலிருந்து பார்ப்பவர்களைப் போன்று தங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு பார்ப்பது போன்று இருக்கும்.

"நான் ஒரு பைத்தியக்காரன் அல்ல என்பதை நீங்கள் என்னுடன் ஒத்துக் கொள்ளுவீர்கள் என்று நம்புகின்றேன். நான் என்னளவில் ஒரு பைத்தியக்காரனாகவும் நடிக்க விரும்பவில்லை. எனது முதலாம் ஆசீர்வாதம், இரண்டாம் ஆசீர்வாதம், மூன்றாம் ஆசீர்வாதம் அல்லது நூறாம் ஆசீர்வாதத்தை நான் உங்கள் மேல் பொழிய இங்கு வரவில்லை. முழுக்கு ஞானஸ்நானம், தெளிப்பு ஞானஸ்நானத்தைக் குறித்து நான் உங்களுக்குப் பிரசங்கிக்கவும் நான் இங்கு எழுந்து நிற்கவில்லை. நான் இந்த இடத்தில் எழுந்து நிற்பது "இயேசுவோடு நீ இருந்தால் நீ இரட்சிப்பைக் கண்டடைவாய், நீ இயேசுவோடு இல்லாவிடில் நீ நஷ்டப்பட்ட பாவியாக எரி நரகத்துக்குச் செல்லுவாய்" என்பதுதான். நீ இரட்சிக்கப்பட்டிருக்கின்றாயா? அல்லது நீ ஒரு நஷ்டப்பட்ட பாவியா? நீ மோட்சம் செல்லுவாயா? அல்லது நீ நரகத்துக்குச் செல்லுவாயா? நான் பிரசங்கிக்கும் ஒவ்வொரு பிரசங்கமும் இந்தக் கேள்விகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. இதற்கு அப்பால் நான் செல்லவில்லை"

பில்லி சன்டே ஒரு கூட்டத்தில் பிரசங்கிக்கின்றார் என்றால் அவர் அந்த மேடையில் அங்கும் இங்குமாக குறைந்த பட்சம் 1 மைல் தூரம் நடந்துவிடுவார் என்று ஒரு பத்திரிக்கை எழுதினது. அவரும் பிரசங்கித்தார், அவரது சரீரத்தின் ஒவ்வொரு அவயவங்களும் பிரசங்கித்தன. ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் மக்களுக்கு அவர் பிரசங்கித்தார். பெரும் பிரசங்க பேச்சாளிகளைப் போன்று பில்லி சன்டேக்கு அழகான குரல் வளம் கிடையாது. செவிக்கினிக்காத, கடூரமான குரல்தான் அவருக்கிருந்தது. திறம்பட பேசும் பேச்சாற்றலும் அவருக்கில்லாதிருந்தது. எனினும், தேவ ஆவியானவர் அவரோடிருந்தபடியால் அவரது வார்த்தைகள் கேட்கும் மக்களுடைய உள்ளங்களை ஊடுருவிச் சென்றது. மக்கள் திரள் கூட்டமாக ஆண்டவருக்குத் தங்களை ஒப்புக் கொடுத்தனர்.

 

பில்லி சன்டேயின் எழுப்புதல் கூட்டங்கள்

அமெரிக்காவின் பெரிய பெரிய பட்டணங்களில் பில்லி சன்டே எழுப்புதல் கூட்டங்களை நடத்தினார். அந்த கூட்டங்கள் தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கு மிகவும் மகிமை சேர்ப்பதாக இருந்தது. இந்த விதமான எழுப்புதல் கூட்டங்கள் நடத்துவதற்காகவே அவர் தம்மோடு ஒரு பாடகர் குழுவையும் இதர உதவியாளர்களையும் வைத்திருந்தார். அவர்கள் வாத்திய இசை, தனித்து ஆத்துமாக்களைச் சந்தித்து அவர்களுக்கு தேவ ஆலோசனை வழங்குதல், மற்றும் பின் தொடர் ஊழியம், நிர்வாகம் போன்ற காரியங்களைக் கவனித்தனர். இந்தவித உதவியாளர்கள் பல ஆண்டு காலமாக அவருடனேயே இருந்தனர். இந்த வித எழுப்புதல் கூட்டங்களை அவர் நடத்துவதற்கு முன்னரே அதற்காக ஏராளமான ஜெப குழுக்களை எழுப்பி ஜெபிக்கச் செய்வார். பிட்ஸ்பர்க் என்ற இடத்தில் பில்லி சன்டே தமது உயிர் மீட்சி கூட்டங்களை 25 நாட்கள் நடத்தினார். அந்தக் கூட்டங்களின் ஆசீர்வாதத்திற்காக அவர் 4137 வீட்டு ஜெபக் குழுக்களை எழுப்பி கூட்டங்கள் ஆரம்பமாவதற்கு வெகு முன்னர் இருந்தே அவர்களை ஜெபிக்கச் செய்திருந்தார். அந்த வீட்டு ஜெபக்குழுக்களில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை 68,360 பேர்களாக இருந்தார்கள் என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. ஆனால், 1915 ஆம் ஆண்டு ஜனுவரி 3 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் தேதி முடிய பிலடெல்பியா என்ற பட்டணத்தில் நடந்த அவருடைய எழுப்புதல் கூட்டத்திற்காக தோற்றுவிக்கப்பட்ட ஜெபக் குழுக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று சொல்லப்படுகின்றது. அந்த நாட்களில் நடந்த அவருடைய கூட்டங்களுக்கு ஒவ்வொரு இரவும் நூறு ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர் என்றும் மொத்தத்தில் 20 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் பங்குபெற்றனர் என்றும் கூறப்படுகின்றது. 41,724 பேர்கள் தங்கள் இரட்சிப்பில் அக்கரை கொண்டு இரட்சிப்பைக் குறித்து கூடுதலான விபரங்கள் அறியும்படியாக கார்டுகளை நிரப்பிக் கொடுத்தனர். கடைசி நாள் கூட்டத்தில் 1858 பேர்கள் அந்தக் கூட்டத்தின் காரியங்களை கவனிக்க வேண்டிய பொறுப்பில் இருந்தனர். வாஷிங்டன் பட்டணத்தில் நடந்த பில்லி சன்டேயின் கூட்டத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதி அவர்களே அவரை வரவேற்று கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் எந்த ஒரு பட்டணத்தில் உயிர் மீட்சி கூட்டங்களை நடத்தினாலும் அந்தப் பட்டணத்தில் உள்ள எல்லா சபைகளையும் ஒன்றிணைத்து அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் ஜெபங்களோடு நடத்தினார். மிகுதியான ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும் கர்த்தருடைய மகிமைக்காக அவர் நடத்திய எழுப்புதல் கூட்டங்கள் திரண்ட ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தன. அவருடைய இந்தவிதமான கூட்டங்களின் மூலமாக லட்சக்கணக்கான மக்களுக்கு தேவனுடைய சுவிசேஷம் அறிக்கப்பட்டது. பில்லி சன்டே மரித்த 1935 ஆம் ஆண்டு காலம் வரை அவர் 200 பிரமாண்டான எழுப்புதல் கூட்டங்கள் நடத்தி ஏறக்குறைய 3 லட்சம் மக்களை ஆண்டவருடைய இரட்சிப்புக்கு நேராக வழிநடத்தியிருந்தார். இந்தவித கூட்டங்களுக்கான பணத் தேவைகளை எல்லாம் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களே தங்கள் காணிக்கைகளின் மூலமாக சந்தித்தனர்.

 

தனித்தாள் ஊழியத்தை வாஞ்சித்த தேவ பக்தன்

தேவ மனிதர் பில்லி சன்டே பிரமாண்டமான எழுப்புதல் கூட்டங்களை நடத்தி அதில் கலந்து கொண்ட லட்சாதி லட்சமான மக்களின் எண்ணிக்கையுடன் திருப்தியடைந்தவர் அல்ல. தனிப்பட்ட பாவ மனிதனையும் மிகுந்த தேவ அன்பின் பாரத்தோடு கர்த்தரண்டை வழிநடத்தி அதின் மூலம் கிடைத்த மகிழ்ச்சியில் களிகூருபவராகக் காணப்பட்டார். சிக்காக்கோ பட்டணத்தில் தான் செய்த தனித்தாள் ஊழியத்தைக் குறித்து பில்லி சன்டே மேற்கோளாகக் கூறின உண்மை நிகழ்வுகள் பலவற்றை ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டிருக்கின்றனர். அவைகளில் ஒன்றை அவர் மக்களுக்குச் சொன்னவாறே உங்களுடைய பார்வைக்குக் கீழே தருகின்றேன்:-

(சிக்காக்கோ பட்டணத்தின் தெரு ஒன்றில் ஒரு ஞாயிற்றுக் கிழமை இரவில் நான் நின்று கொண்டு அந்த பட்டணத்தில் ஃபேர்வல் ஹாலில் அப்பொழுது நடந்து கொண்டிருந்த ஆண்கள் கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளும்படியாக இலவச அனுமதி சீட்டுகளை நான் கொடுத்துக் கொண்டிருந்தேன். மக்கள் அவைகளை வாங்கிக் கொண்டிருந்த வேளையில் ஒரு வாலிபன் அவர்களுடன் சேர்ந்து வந்து என்னண்டை நெருங்கினான். நான் அவனை 30 வயது வாலிபனாக கணக்கிட்டபோதினும் தனது வயதுக்கு அதிகமான மூப்புடையவனாக அவன் எனக்குக் காணப்பட்டான். அவன் என்னைப் பார்த்து "நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், நீங்கள் எனக்கு ஒரு டைம் (அமெரிக்க வெள்ளி நாணயத்தின் பத்தில் ஒரு பகுதி) தருவீர்களா?" என்று கேட்டான்.

"இல்லை ஐயா, நான் உங்களுக்கு தருவதற்கில்லை" என்று நான் சொன்னேன்.

"நான் சாப்பிட ஏதாவது வாங்க வேண்டும்" என்று அவன் என்னிடம் கூறினான்.

"உங்களைப் பார்க்கும் போது நீங்கள் ஒரு குடிப்பழக்கம் உள்ளவரைப்போன்று எனக்குத் தெரிகின்றது" என்று நான் சொன்னேன்.

"மெய்தான், நான் ஒரு குடிகாரனே"

"நான் உங்களுக்கு பணம் கொடுக்கமாட்டேன், ஆனால் உங்களுக்கு இன்றைய இராச்சாப்பாட்டை வாங்கித் தருவேன்"

"நல்லது, சாப்பாட்டைக் கொண்டு வாருங்கள். நான் ஆகாரம் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகின்றன" என்று அவன் என்னிடம் சொன்னான்.

"இரவு 10 மணி வரைக்கும் எனக்கு நேரம் கிடையாது. அதுவரை மேல் மாடியில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். அதற்கப்பால் நான் உங்களுக்கு இராச்சாப்பாடு வாங்கிக் கொடுப்பதுடன் நீங்கள் சுகமாக இரவில் நித்திரை செய்ய நல்ல சுத்தமான, சூடான படுக்கையையும் உங்களுக்கு ஆயத்தம் செய்து கொடுப்பேன். ஆனால், பணம் மட்டும் உங்களுக்கு நான் தரப் போவதில்லை"

"நன்றி ஐயா, உங்கள் வார்த்தைப்படியே நான் மேல் மாடியில் நடக்கப்போகும் கூட்டத்திற்குச் செல்லுகின்றேன்"

அவனுடைய வார்த்தையின்படியே அவன் எனது கூட்டத்தில் கலந்து கொண்டான். கர்த்தர் அவனுடைய உள்ளத்தில் கிரியை செய்வதை நான் கவனிக்க முடிந்தது. கூட்டம் முடிவுற்றதும் நான் அவனண்டை சென்று அவனருகில் நின்றேன். அவனது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. நான் அவனுக்கு கர்த்தராகிய இயேசு இரட்சகரைப் பகிர்ந்து கொண்டேன். அப்பொழுது அவன் தன்னுடைய சரித்திரத்தை எனக்குச் சொல்ல ஆரம்பித்தான்.

குடும்பத்தில் அவர்கள் 3 சகோதரர்கள். அவர்கள் பாஸ்டன் பட்டணத்தில் வாழ்ந்து வந்தார்கள். தகப்பனார் மரித்து விட்டார். அவருடைய உயிலின்படி அவரது சொத்துக்கள் 3 பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. தனக்குக் கிடைத்த பங்கை குடித்து வெறிப்பதிலும், சூதாட்டத்திலும் அழித்து முடித்து தனது பணம் முடிந்ததும் அவன் டென்வர் பட்டணத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு அவனுக்கு ரயில்வே பணி மனையில் தீயணைக்கும் படையில் பணி கிடைத்தது. அவன் அங்கிருப்பதை அறிந்த அவனுடைய தாயார் அவனுக்குக் கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார்கள். தனது தாயாரிடமிருந்து தனக்கு வரும் கடிதங்களை அவன் ஒருபோதும் திறந்து வாசிப்பதில்லை என்றும், கடிதத்தின் கையெழுத்தையும் அதினுடைய தபால் நிலைய முத்திரையையும் கண்ட மாத்திரத்திலேயே அந்தக் கடிதத்தை உடனே நெருப்பில் போட்டு விடுவதாக அவன் என்னிடம் சொன்னான். ஒரு நாள் அப்படி அவனுடைய தாயாரிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை தன்னை அறியாமல் திறந்து அவன் வாசித்தான். அதில், அவனுடைய தாயார் "மகனே .................... நீண்ட நாட்களாக உன்னிடமிருந்து எந்த ஒரு பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை. வெகு தொலைவான மேற்குப் பகுதியில் வாழும் உனக்கு தாயின் உதவி அவசியம் தேவை என்பதை நான் அறிவேன். குறிப்பிட்ட காலத்திற்குள் நீ எனக்கு பதில் தெரிவிக்காவிட்டால் நானே உன்னை நேரில் காண நீ இருக்கும் டென்வருக்கு வருகின்றேன். உன் பாசமுள்ள தாயார்" என்று எழுதியிருந்தது.

அந்தக் கடிதத்தையும் நான் நெருப்பில் வீசி எறிந்து விட்டேன். அந்தக் கடிதத்தின் செய்திகளைக் குறித்து நான் எந்த ஒரு அக்கரையும் கொள்ளவில்லை என்று அவன் என்னிடம் சொன்னான். 2 வாரங்களுக்குப் பின்னர் ஒரு நாள் ரயில்வே தண்டவாளத்தின் வழியாக ஒரு அம்மாள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். நான் எனக்கு அருகில் அமர்ந்திருந்த ரயில் என்ஜினின் ஓட்டுநரிடத்தில் அதோ ரயில் தண்டவாளத்தின் மேல் நடந்து வந்து கொண்டிருப்பது எனது தாயைப் போன்றிருக்கின்றது என்று சொன்னேன். அவர்கள் அருகில் வரவும் "ஆம், அவர்கள் என்னுடைய தாயார் தான்" என்று சொன்னேன். நான் என்ன செய்திருப்பேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? என்று அவன் என்னைப் பார்த்துக் கேட்டான்.

"நீ ரயில் என்ஜினில் இருந்து கீழே இறங்கி உனது தாயாரிடம் ஓடிச் சென்று அவர்களை முத்தமிட்டு அவர்களின் மன்னிப்புக்காக நீ மன்றாடியிருப்பாய் என்று நான் நினைக்கின்றேன்" என்று சொன்னேன்.

"அந்தவிதமான எந்தக் காரியத்தையும் நான் செய்யவில்லை. அவர்களிடம் நான் பேசக் கூடவில்லை. அந்த நாளில் அவர்கள் நான் தங்கியிருக்கும் எனது இருப்பிடம் தேடி எனது அறைக்கே வந்து விட்டார்கள். அவர்களைக் கண்டதும் நான் எனது மேல் அறைக்குச் சென்று எனது ஆடைகளை மாற்றிக் கொண்டு கீழே வந்து என்னோடு பேச முயன்ற எனது தாயை அப்பால் தள்ளிவிட்டு எனது பாவ வாழ்வுக்குத் திரும்பினேன். அடுத்து வந்த 4 நாட்கள் எனது அன்புத் தாயார் நான் தங்கியிருந்த இடத்திற்கு ஒவ்வொரு நாளும் வந்து "மகனே பிராங், என்னண்டை வந்து என்னோடு பேசு" என்று கெஞ்சினார்கள். நான் அவர்களுக்கு செவி சாய்க்கவில்லை. கடைசியாக அவர்கள் என்னைப் பார்த்து "பிராங், நீ என்னுடைய இருதயத்தை உடைத்து நொறுக்கிவிட்டாய். நாளைய தினம் நான் புறப்பட்டுச் செல்லுகின்றேன்" என்று சொன்னார்கள்.

நான் ஏறியிருந்த ரயில் என்ஜினுக்கு அடுத்த பெட்டியில்தான் மறு நாள் எனது தாயார் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் தனது பெட்டியின் ஜன்னலை உயர்த்தி என்னைப் பார்த்து "மகனே பிராங், என்னை முத்தமிட்டு விடை பெற்றுக் கொள்" என்று தனது சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினார்கள். நான் அதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. என்னருகில் இருந்த எனது குடிகார மற்றும் சூதாடி நண்பர்களில் ஒருவன் "மூட பிராங்கே, உன்னுடைய தாயை இவ்விதமாகவா நடத்துவது? போய் அவர்களை முத்தமிட்டு விடைபெற்று வா" என்று சொன்னான். நான் அவனுடைய வார்த்தைகளை எல்லாம் புறக்கணித்து விட்டேன். இந்த நேரத்தில் ரயில் என்ஜினின் நடத்துநர் ரயில் புறப்பட்டுச் செல்லுவதற்கான அறிகுறியை தெரிவிக்கும் வண்ணமாக "யாவரும் பெட்டிகளில் ஏறி அமர்ந்து விட்டீர்களா?" என்று கேட்டார். அத்துடன் அவர் மணியை அடிக்கவே இரயில் நகரத் தொடங்கியது. அந்த வேளை என் தாயார் என்னை நோக்கி "ஓ பிராங், நீ என்னை முத்தமிட்டு வழி அனுப்பாவிட்டாலும் உனது முகத்தைத் திருப்பி என்னைப் பார்க்கமாட்டாயா?" என்று அழுதார்கள்.

"ஓ சன்டே அவர்களே, ரயில் டென்வரிலிருந்து பர்லிங்டன் பட்டணம் செல்லும் வரை என் முகத்தை அல்ல எனது முதுகையே நான் எனது தாயாருக்குக் காண்பித்துக் கொண்டிருந்தேன். இது நடந்து 9 வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கப்பால் நான் எனது தாயைக் காணவே இல்லை" என்று அவன் கூறி முடித்தான்.

நான் பிராங்கை ஆண்டவருடைய இரட்சிப்புக்குள் வழிநடத்தி அவனை ஆண்டவருடைய பிள்ளையாக்கினேன். அதுமட்டுமல்ல, நான் அவனுக்கு ஒரு நல்ல வேலையையும் ஓரிடத்தில் எடுத்துக் கொடுத்தேன். அவன் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை என்னிடம் கொடுத்து அதைப் பத்திரமாக வைத்துக் கொள்ளும்படியாக என்னைக் கேட்டுக் கொண்டான். என்னுடைய கூட்டங்களுக்கு அவன் ஒழுங்காக வந்து கொண்டிருந்தான். சில சமயத்திற்குப் பின்னர் அவன் என்னிடம் வந்து தனது பணத்தைப் பெற்றுக் கொண்டான். அதின் பின்னர் நான் அவனைத் திரும்பச் சந்திக்கவே இல்லை.

1893 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான் அவனை நான் நடத்திக் கொண்டிருந்த ஒரு எழுப்புதல் கூட்டத்தின் போது சந்தித்தேன். "பிராங், நீ சுகமாக இருக்கின்றாயா?" என்று நான் அவனைக் கேட்டேன். அவன் என்னைப் பார்த்து "நீங்கள் என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டுவிட்டீர்கள்?" என்று அவன் என்னைப் பார்த்துக் கேட்டான். நான் அவனைப் பார்த்து "நான் உன்னை ஒருக்காலும் மறக்கவே இல்லை. உன்னுடைய தாயார் எப்படி இருக்கின்றார்கள்?" என்று கேட்டேன்.

அவன் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். துரிதமாகவே அவனுடைய புன்னகை துக்கமாக மாறினது. "எனது தாயார் மரித்துவிட்டார்கள். அவர்கள் மரணமடைவதற்கு முன்னரே நான் அவர்களை காலிபோர்னியோ பட்டணத்துக்கு அழைத்துச் சென்று அவர்களுடைய இறுதி நாட்களில் நான் அவர்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டேன். அவர்கள் மரிப்பதற்கு முன்னர் தனது மரணப் படுக்கையைண்டை என்னை அழைத்து என்னை முத்தமிட்டு "பிராங், என் அருமை மகனே, நான் மிகவும் களிகூருதலோடு இப்பொழுது மரணமடையப் போகின்றேன். காரணம், நீ ஆண்டவருடைய சொந்தப்பிள்ளை. நான் உன்னிடம் விடைபெற்றுக் கொள்ளுகின்றேன்" என்று கூறி தனது மோட்ச இன்ப வீட்டிற்குக் கடந்து சென்றார்கள். அவனுடைய வார்த்தைகள் கர்த்தருக்குள் என்னைப் பரவசமடையப்பண்ணுவதாக இருந்தது.

 

சாத்தானை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்

பில்லி சன்டேயின் புகழ்பெற்ற எழுப்புதல் பிரசங்கங்களில் பாவத்தின் கொடிய விளைவுகள், மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு, பரிசுத்தம் போன்றவைகள் நீங்கலாக அவர் மதுபானம் அருந்துவதால் ஏற்படும் அழிவுகள் மற்றும் சாத்தானைக் குறித்துக் கொடுத்த தேவச் செய்திகள் மிகவும் புகழ் பெற்றவைகளாகும். அந்த பரிசுத்த மனிதர் வஞ்சக சாத்தானைக் குறித்து மக்களுக்குக் கொடுத்த எச்சரிப்பின் செய்தி ஒன்றை நீங்கள் கீழே காணலாம்:-

"சாத்தான் தன்னை உண்மையோடும், உத்தமத்தோடும் சேவிக்கும் தன்னுடைய அடியார்களுக்கு அவர்களுடைய வாழ்வின் முடிவில் கொடுக்கும் மிக உயரிய வெகுமதி நித்திய எரி நரகம்"

"சாத்தான் எனக்கு மிகவும் பழக்கமானவன். அதற்கான காரணங்கள் இரண்டு உண்டு. முதலாவது, தேவனுடைய வார்த்தை அவன் உலகில் இருக்கின்றான் என்று திட்டமும் தெளிவுமாகப் பறைசாற்றுகின்றது. அடுத்தபடியாக நானே அவனோடு நீண்ட காலமாக தொழில் செய்து வந்திருக்கின்றேன்" என்று பில்லி சன்டே சொல்லுவார். இருளின் அதிபதியாகிய சாத்தானை மாபெரும் தேவ மனிதர் மார்ட்டின் லூத்தர் நேருக்கு நேராக கண்டு அவருடைய மிகுந்த சினத்தால் தனக்கு முன்னாலிருந்த மை பாட்டலை எடுத்து அவன் மேல் வீசி எறிந்திருக்கின்றார் என்று நாம் அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் வாசிக்கின்றோம். அந்த அளவிற்கு பில்லி சன்டேயும் சாத்தானை பிரத்தியட்சமாகக் கண்டு அவனது தந்திரங்களை அறிந்தவராவார்.

அவர் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து ஒருவரையே மிகவும் உயர்த்தி, மேன்மைப்படுத்திக் கூறுவார். தேவ மக்கள் சாத்தானை தங்கள் வாழ்வில் அடையாளம் கண்டு கொண்டு அவனது கொடிய தந்திரங்களுக்கு தங்கள் ஆத்துமாக்களை விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும் என்று தனது பிரசங்கங்களில் அவர் அவ்வப்போது விவரித்துக் கூறுவார். சாத்தானைக் குறித்து பில்லி சன்டே கூறும் வார்த்தைகளைக் கவனியுங்கள்:-

"சாத்தான் யாருடைய முட்டாளுமல்ல. நீங்கள் அதை வெகு நிச்சயமாக நம்பலாம். ஏராளமான மக்கள் பிசாசு என்பவன் இல்லை என்றும், அது ஒரு வார்த்தையின் வர்ணனை என்றும் நமது பாவ சுபாவத்தைக் குறித்த ஒரு கவிதையின் பாடல் பல்லவி என்றும் கூறுகின்றனர். அப்படிச் சொல்லுகின்ற மக்களும் விசேஷமாக அதைச் சொல்லுகின்ற வயிற்றுப் பிழைப்புக்காக ஊழியஞ்செய்கின்ற மாய்மாலக்கார தேவ ஊழியர்களும் பொய்யர்களாவார்கள். அவர்கள் தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தைப் பொய் என்று சொல்லுகின்றார்கள். இந்தக் கள்ளப் போதகர்களின் பிரசங்கங்களை நான் கேட்பதற்கு வெகு முன்பதாகவே கர்த்தருடைய பரிசுத்த வேதாகம வார்த்தைகளை நான் விசுவாசித்து வருகின்றேன். அன்பான ஐயாமாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கவனிக்க வேண்டும். அங்கே நீங்கள் சாத்தானை, ஆம், மனுஷ கொலை பாதகனை முழுமையான ராட்சத உருவத்தில் காணலாம்.

எனினும், சாத்தான் மிகவும் மென்மையானவன். அவன் அன்றும் அப்படியேதான் இருந்தான், இன்றும் மென்மையானவனாகவே இருக்கின்றான். குளிர் காலமோ, கோடை காலமோ அவன் தனது வேலையில் இரவும் பகலும் முழு மூச்சோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். அன்பின் இரட்சகரை வனாந்திரத்தில் எந்தவிதமாகவோ சோதனையில் வீழ்த்தி அவருடைய மகிமையான இரட்சிப்பின் திட்டத்தை நிர்மூலமாக்கக் கொந்தளித்துக் குமுறினானோ அதே விதமாக இந்த எழுப்புதல் கூட்டக் கூடாரத்திலும் உங்கள் ஆத்துமாக்களுக்கு எதிராக போர்புரிந்து உங்கள் விலையேறப்பெற்ற ஆத்துமாவைத் தன் கைவசப்படுத்திக் கொள்ள தீவிரமாக இருக்கின்றான். பாவிகளின் மீட்புக்காக தன்னை தியாக பலியாக ஒப்புவித்த கிறிஸ்து பெருமானின் எல்லையற்ற அன்பை அசட்டை பண்ணி புறக்கணிக்க உங்களை ஏவுகின்றான். ஆண்டவராகிய இயேசு இரட்சகருக்கு தங்களை முழுமையாக ஒப்புவிப்போர் நான் நின்று கொண்டிருக்கும் மேடைக்கு முன் எழுந்து வரும்படியாக நான் அழைப்பு விடுக்கும் போது நீங்கள் உங்கள் இருக்கைகளிலிருந்து எழும்புகின்றீர்கள். ஆனால், உங்கள் உள் மனதுக்குள் "நான் இப்பொழுது என்னை கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க அவசியமில்லை. நான் அப்படிச் செய்ய எனக்கு இன்னுமொரு தருணம் வரும். என்னில் ஏற்படும் இந்த அற்பமான திடீர் உணர்த்துதலுக்கு இப்பொழுது நான் கீழ்ப்படிய தேவை இல்லை" என்று நினைக்கின்றீர்கள். அந்த எண்ணத்தை உங்களுக்கு உருவாக்கிக் கொடுப்பவன்தான் நிஜமான, நூற்றுக்கு நூறு உண்மையான, எரிபந்தமான கண்களை உடையவனும், பன்றியின் பிளவுண்ட கால்களைப் போன்ற நகங்களையுடையவனும், கூர்மையான ஈட்டி போன்ற நீண்ட வாலை உடைய பழைய வலுசர்ப்பமான பிசாசு. உன்னுடைய எல்லா பலவீனங்களையும் அறிந்தவன் அவன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீ உனது புகைப்பழக்கத்திற்காக நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த 60 டாலர்களை பாழாக்கி உனது வீட்டையும், தெருக்களையும் அசுத்தப்படுத்தினது அவனுக்குத் தெரியும். கடந்த இரண்டு வருடங்களாக நீ உனது மனைவிக்கு ஒரு நல்ல வஸ்திரம் கூட உனது பண நெருக்கடி காரணமாக வாங்கிக் கொடுக்கவில்லை என்பதையும் அவன் அறிவான். உனது பணங்களை சூதாட்டத்திலும், குடியிலும், வேசித்தனத்திலும் செலவிடுவதை அவன் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றான். மனந்திரும்பாத பெண்ணே, நீ உனது கணவனுக்கு அரைகுறை வேக்காட்டு ஆகாரங்களை செய்து கொடுத்து அனுப்பினதையும், உனது பிள்ளைகள் தெருக்களில் கெட்ட பழக்கவழக்கங்களைப் படித்து சீர்கெட்டு அலைவதையும் அவன் அறிந்திருக்கின்றான்.

தேவனுடைய சபையில் உயிர் மீட்சி ஊற்றப்படுவதை காண்கின்ற சாத்தான் அதற்கு எதிரான தனது காரியங்களையும் துரிதம் துரிதமாகச் செய்வான். பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர் மேல் வல்லமையாக இறங்கிய போது சாத்தானால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது. எனினும் அவன் சும்மாயிருக்கவில்லை, "இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம் பண்ண" தன்னுடைய ஆட்களை ஏவிவிட்டான்.

இங்கு பிட்ஸ்பர்க் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் இப்பொழுது நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கின்றேன். நரக பாதாளத்திலுள்ள எல்லா பேய்களும், இந்த பிட்ஸ்பர்க் பட்டணத்திலுள்ள பேய்கள் அனைத்தும் ஒன்றாகக் கூடி இந்த ஆலயத்தின் இருக்கைகளில் எனக்கு முன்பாக உட்கார்ந்து என்னை பரியாசம் பண்ணி, எள்ளி நகையாடிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். தேவ ஜனங்கள் பிசாசைக் குறித்தும் அவனது தந்திரங்களைக் குறித்தும் பொதுவாக மிகவும் கொஞ்சமாக அறிந்து வைத்திருக்கின்றார்கள். ஐயகோ, அவன் மகா பயங்கரமான சத்துரு. அன்பின் ஆண்டவர் அவனை தேவனுடைய வசனத்தை சுட்டிக் காண்பித்து "எழுதியிருக்கிறதே" என்று கூறி முறியடித்தார். நாமும் அவனை தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தால் வெட்டி வீழ்த்த வேண்டும். அவனுக்கு முன்பாக நாம் தேவனுடைய வார்த்தையையே வைக்க வேண்டும். தேவனுடைய வசனம் ஒன்றுக்குத்தான் அவன் நடு நடுங்குவான். தேவனுடைய வார்த்தையைக் கண்டதும் அவன் தனது வலு செட்டைகளை அடித்து மேலே கிளம்பி விடுவான்.

 

பில்லி சன்டே தேவனுடைய நித்திய
இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தது

உலகப் பிரசித்தி பெற்ற சுவிசேஷகர் பில்லி சன்டே 1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி தனது மைத்துனர் வில்லியம் தாம்ஸன் அவர்களுடைய வீட்டில் சிக்காக்கோ பட்டணத்தில் இறந்தார். அதற்கு முந்திய நாள் விடியற்காலம் 2 மணிக்கு அவருக்கு ஒரு மாரடைப்பு வந்தது. அதில் அவர் கிருபையாகப் பாதுகாக்கப்பட்டார். நல்ல பூரணமான விடுதலையைப் பெற்றுக் கொண்ட அவருக்கு அடுத்த நாள் இரவு 9:15 மணிக்கு திரும்பவும் அதே மாரடைப்பு வந்து கர்த்தருடைய பரம ராஜ்யத்தைச் சென்றடைந்தார். ஏற்கெனவே அந்த ஆண்டின் மே மாதம் 15 ஆம் தேதி அவருக்கு ஒரு மாரடைப்பு வந்ததுண்டு. அதிலிருந்தே அவருடைய தேக சுகத்தில் அத்தனையான சுறுசுறுப்பு பின் நாட்களில் காணப்படவில்லை. அப்பொழுதே மருத்துவர்கள் அவரை திரும்பவும் பிரசங்கிக்கக் கூடாது என்று திட்டமாக எச்சரித்திருந்தனர். மரணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் அடுத்த ஆண்டில் வினோனா லேக் என்ற இடத்தில் நடைபெறக்கூடிய எழுப்புதல் கூட்டங்களைக் குறித்த அட்டவணையை அவர் சம்பந்தப்பட்ட தேவ ஊழியர்களோடு கலந்தாலோசித்து முடித்திருந்தார்.

சிக்காக்கோ பட்டணத்திலுள்ள ஹெலன் என்ற பெண்ணை அவர் மணந்து 4 பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்தார். அவர்களில் இருவர் இறந்துவிட்டனர். ஜியார்ஜ் மற்றும் பால் என்ற மற்ற இருவர் மட்டுமே உயிரோடிருந்தனர். பில்லி சன்டே மிகுந்த கொடையாளி. தேவனுடைய ஊழியங்களுக்கு அவர் ஏராளமான பணத்தை வாரி வளங்கினார். அவர் நடத்தும் பெரிய எழுப்புதல் கூட்டங்களில் கிடைக்கும் காணிக்கைகள் முழுவதையுமே அவர் மிஷன் ஊழியங்களுக்கு கொடுத்ததுண்டு.

பில்லி சன்டே முற்றும் பண ஆசையற்ற தேவ மனிதர். தனது 10 ஆண்டுகள் தேவ ஊழியத்திற்குப் பின்னர் தனக்கென்று சொந்தமான ஒரு சிறிய வீட்டை வினோனா லேக் என்ற இடத்தில் வாங்கி தனது எழுப்புதல் கூட்டங்களுக்குப் பின்னர் அங்கு போய் தங்கி இளைப்பாறி வந்தார்.

 

தேவ மனிதரின் அடக்க ஆராதனை

பில்லி சன்டேயின் அடக்க ஆராதனை சிக்காக்கோ நகரிலுள்ள மூடி ஞாபகார்த்த தேவாலயத்தில் வைத்து நடத்தப்பட்டது. அவருடைய பிரேதப் பெட்டியானது மலர்க் கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரேதப் பெட்டியிருந்த மேடையில் மூடி தேவாலய குருவானவரும், புகழ்பெற்ற சுவிசேஷகர் ஐயர்ன்சைட் என்பவரும் மற்றும் பிரபலமான தேவ ஊழியர்கள் பலரும் அமர்ந்திருந்தனர். அந்த நேரம் மூடி தேவாலயத்தில் 3500 பேர்கள் தங்கள் கண்களில் கண்ணீர் வடிய கூடி அமர்ந்திருந்தனர். அவர்களில் அநேகர் "நான் பில்லி சன்டே அவர்களின் பிரசங்கத்தின் மூலமாக ஆண்டவரண்டை வழி நடத்தப்பட்டேன்" என்று கண்களில் கண்ணீர் வடிய கூறினார்கள்.

 

பில்லி சன்டேயைக் குறித்து சுவிசேஷகர்
அயர்ன்சைட் அளித்த தேவச் செய்தி

ஏறத்தாழ ஒரு வருட காலத்திற்கு முன்பாக இப்படிப்பட்டதொரு பெருங்கூட்டம் மக்கள் இந்தக் கட்டிடத்திலேயே சகோதரன் பில்லி சன்டே அவர்களை வாழ்த்தி வரவேற்க திரண்டு வந்தீர்கள். கொஞ்சம் குறைய 7000 மக்கள் அப்பொழுது இங்கு வந்திருந்தீர்கள். இந்தச் சிலுவை தூதரின் தேவச் செய்தியைக் கேட்க அப்பொழுது ஒருக்கால் அதிகமாகவும் கூடி வந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கின்றேன். தனது வியாதிப் படுக்கையிலிருந்து எழுந்து வந்து ஒரு வியாதியஸ்தனாக அப்பொழுது அவர் நம் மத்தியிலே கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்து கொண்டார். அவர் தன்னளவில் வியாதிப்பட்டவராக இருந்தபோதினும் சிலுவை வீரனுக்குரிய வீரா வேசத்துடன் கூட்டத்தைப் பொறுப்பெடுத்து தனது தேவச் செய்தியால் நம்மைப் பரவசப்படுத்தி ஆவியில் அனல் மூட்டி நம்மை எழுப்பி விட்டார். அந்த தேவ மனிதரின் செய்தியைக் கேட்க நமக்குக் கிடைத்த அந்தச் சந்தர்ப்பத்திற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.

சகோதரனுடைய அடக்க ஆராதனையான இந்த நேரத்தில் அவரைக் குறித்து ஒரு சில வார்த்தைகள் பேசும்படியாக என்னைக் கேட்டிருக்கின்றார்கள். அவர்களைக் குறித்து நான் பேச முயற்சிக்கையில் நான்கு வேத பகுதிகள் மிகவும் தெளிவாக எனது மனத்திரையில் தெரிகின்றது. எனக்குத் தெரிகின்ற அந்த நான்கு வேத பகுதிகள்தான் நம்மைவிட்டுக் கர்த்தருடைய சமூகத்திற்குக் கடந்து சென்றிருக்கும் நம்முடைய சகோதரனுடைய ஆவிக்குரிய வாழ்வின் மிகவும் தெளிவான ஒரு சரித்திரமாக நம் எல்லாருக்கும் முன்பாக இருக்கின்றது. முதலாவது வேதபகுதி என்னவெனில் "நீங்கள் அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தின் உடன்படிக்கைக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்கள்" (எபேசியர் 2 : 12) "கிறிஸ்துவைச் சேராதவர்களும்" என்ற விளக்கமானது மனந்திரும்பாமல் நாம் ஒவ்வொருவரும் நமது பாவ வழிகளில் நடந்த நமது மனந்திரும்பாத கடந்த கால நாட்களை நமக்கு துலாம்பரமாக நினைப்பூட்டுகின்றது. அதுவேதான் நமது சகோதரன் பில்லி சன்டேயின் காரியமுமாகும். தற்கால உலகின் ஒரு துடுக்கான இளைஞனாக அவர் காணப்பட்டார். விளையாட்டு உலகின் பெயர் பெற்ற ஒரு பேஸ் பால் வீரராக (BASE BALL) அவர் திகழ்ந்தார். அவர் ஒரு நல்ல நண்பனாக, ஒரு ராஜாங்க விளையாட்டுக்காரனாக, ஒரு நகைச்சுவை பேர்வழியாக, அதே சமயம் நிச்சயமாக இரட்சகர் இயேசு தன் வாழ்வில் இல்லாத ஒரு தேவனற்ற மனிதனாகக் காணப்பட்டார். தேவனற்ற அந்த ஆரம்ப கால நாட்களை அவர் நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு சமயத்திலும் அவர் மிகவும் ஆழ்ந்த துயருற்று தான் எத்தனையான ஒரு தேவ துரோகியாக வாழ்ந்துவிட்டேன் என்று மிகவும் அங்கலாய்த்து உணர்ச்சி வசப்பட்டார்.

உண்மையில் அந்த அளவிற்கு அவர் அத்தனை கெட்டவராக தனது வாலிபத்தில் இருக்கவில்லை. அவர் ஒரு ஊறிப்போன, நம்பிக்கையற்ற குடிகாரனாக இருக்கவில்லை. அவருடைய வாயிலிருந்து அருவருக்கப்படத்தக்க தூஷணங்கள் புறப்படவில்லை. உண்மையில் சொல்லப்போனால் "மோட்சப் பிரயாணம்" புத்தகத்தின் ஆக்கியோனான மாபெரும் தேவ பக்தன் ஜாண் பன்னியனைப் போன்று தனது பாவ உணர்வினைக் குறித்த அம்புகள் அவரது ஆத்துமாவை ஊடுறுவிச் செல்ல ஆரம்பித்ததும் அவர் தனது நிர்ப்பந்தமான நிலையை உணர ஆரம்பித்தார். பரிசுத்தத்தில் பயங்கரமான தேவனுக்கு முன்பாக தான் எத்தனையானதொரு நிர்ப்பந்தமான பாவி என்பதை கண்டு கொள்ளத் தொடங்கியதும் தனது ஆத்துமாவின் நிர்ப்பந்தமான நிலையையும், தனது பாவ வாழ்வின் மோசத்தையும் எண்ணி நடுநடுங்கி அமர்ந்துவிட்டார். தேவனுடைய பரிசுத்தத்தின் மேன்மையைக் குறித்த சரியான அறிவில்லாத மக்களே தங்களுடைய பாவ நிலையைக்குறித்தும் அத்தனையாகக் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், தேவனுடைய பரிசுத்தத்தின் அலங்காரமாகிய வாசஸ்தலத்தின் ஒளியைக் கண்டு கொண்ட மனிதன் தனது சொந்த ஆத்துமத்தின் நிர்ப்பந்தத்தை நினைத்து வியாகுலத்தோடு கதறி தன்னைக் கர்த்தர் கிருபையாக மீட்டுக் கொள்ளும் வரை அமர்ந்திருக்கக் கூடாமல் புழுவாகத் துடி துடித்துக் கொண்டிருப்பான். கிறிஸ்தற்ற மனிதராக பில்லி சன்டே இருந்த நாட்களில் தனது ஆத்துமத்தின் ஆழமான பாவ நிலையை எண்ணி இவ்விதமாகத்தான் அவர் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.

இந்தப்பட்டணத்தில் "பசிபிக் கார்டன் மிஷன்" தேவாலயத்தில் தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை அவர் கேட்டு மனந்திரும்பி ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு ஒரு மகத்தான பரிசுத்த மாற்றத்தைக் கண்டு கொண்ட கிறிஸ்துவுக்குள்ளான அவரது புதிய வாழ்க்கைதான் நான் குறிப்பிடப்போகும் இரண்டாம் வேத பகுதியான 2 கொரிந்தியர் 5 : 17 ஆகும். "இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான், பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" என்று அந்த வசனம் கூறுகின்றது. இதை வேதாகமம் "மனந்திரும்புதல்" என்றும் "மறுபடியும் பிறத்தல்" என்றும் அழைக்கின்றது. உண்மையாகவே மனந்திரும்பிய ஒவ்வொரு தேவப்பிள்ளையின் வாழ்விலும் நிகழும் இந்த மகா அற்புத மாற்றம் பில்லி சன்டேயின் வாழ்விலும் ஏற்பட்டது. ஒரு கணம் கிறிஸ்து அற்ற நிலையில் வாழ்ந்த அவர் அடுத்த கணம் மிகுந்த களிகூருதலின் அற்புத ஆனந்தமாக ஆண்டவர் இயேசுவின் செல்லக் குழந்தையாகிவிட்டார். சந்தேகத்துக்கு இடமின்றி அவர் தனது அற்புதமான மனமாற்றத்தின் காரியங்களை அந்த ஆரம்ப நாட்களில் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாதவராக இருந்த போதினும் பின்வந்த ஆண்டுகளில் கர்த்தர் அவரை தம்முடைய நாமத்திற்கு மகிமையாக அற்புதம் அதிசயமாக எடுத்துப் பயன்படுத்தின விதத்தின் மூலமாக அதின் முழுமையான பரலோக உண்மையை புரிந்து கொண்டார்.

பில்லி சன்டே தனது ஆண்டவருக்குள் நித்திய பாதுகாப்பைக் கிருபையாகக் கண்டடைந்து கொண்டதும் அவர் அத்துடன் தன் மட்டாகத் திருப்தியடைந்துவிடவில்லை. பாவ வாழ்க்கையில் தான் இருந்த நாட்களில் எத்தனை நிர்ப்பந்தனாக, நம்பிக்கையற்றவனாக, தேவ சமாதானமற்றவனாக இருந்தாரோ அதே நிலையில் இருக்கும் நிர்ப்பந்தமான மக்களை தனது இரட்சகரண்டை கொண்டு வர அவருடைய இருதயம் ஏக்கம் கொண்டு நின்றது. அவர்களுக்காக அவர் பரிதாபம் கொண்டார். அதின் காரணமாக அவர் தனது மீட்கப்பட்ட வாழ்க்கையை கிறிஸ்து இரட்சகரைக் குறித்து அறியாத மக்களை ஆண்டவருடைய அன்புக்குள்ளும், சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தும் பரிசுத்த பணியில் செலவிட்டார். இந்தக் காரியமானது நான் எனது கருத்தில் கொண்டிருக்கும் மூன்றாம் வேத பகுதிக்கு அதாவது 2 கொரிந்தியர் 5 ஆம் அதிகாரம் 20 ஆம் வசனத்துக்கு என்னைக் கொண்டு வருகின்றது "ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக் கொண்டு புத்தி சொல்லுகிறது போல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்"

அநேக ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துவண்டை மனந்திரும்பிய பில்லி சன்டே என்ற இளைஞன் தன்னை இரட்சித்த ஆண்டவர் தனது முழு வாழ்வையும் தனக்கே அர்ப்பணிக்க ஆவல் கொண்டுள்ளார் என்பதை தன்னளவில் உணர்ந்து கொண்டார். இயேசுவானவர் இரட்சகர் மாத்திரமல்ல, அவர் கர்த்தரும் கூடத்தான். ஆண்டவரண்டை மனந்திரும்பிய ஆரம்ப நாட்களில் பில்லி சன்டே மிகவும் பெலவீனனாக இருந்தார். எனினும், மற்றவர்களை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தும் காரியத்தில் கர்த்தர் தன்னை முழுமையாக எடுத்து பயன்படுத்த வேண்டுமென்று அவருடைய உள்ளம் ஏங்கிக் கிடந்தது. தான் முற்றிலும் கிறிஸ்துவானவருக்கே சொந்தம் என்ற பரிசுத்த ஆவல் அவரில் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதும் கர்த்தர் அவரை ஆச்சரியம், அற்புதமான கிருபையைக் கொடுத்து பரலோகத்தின் பெரிய ஸ்தானாபதியாகச் செய்தார். தேவனுடைய திருச்சபை சரித்திரத்தில் திரளான பேர்களை ஆண்டவரண்டை வழி நடத்திய பரிசுத்த பக்தர்களில் பில்லி சன்டேயும் ஒருவராவார். அவர் ஆத்துமாக்களை கர்த்தரண்டை வழிநடத்த கைக்கொண்ட அவருடைய வழிமுறைகள் நமக்கு புதுமையாகத் தெரியலாம். அவருடைய மொழி ஆற்றல் பிரசங்க பீடத்திற்கும், திருச்சபைக்கும் சில சமயம் விந்தையாகக் காணப்படலாம். ஆனால் அவர் அழிந்து போகும் ஆத்துமாக்களை ஆண்டவரண்டை கொண்டு வரும் ஒரே காரியத்திலேயே வாழ்வா, சாவா என்று அத்தனை பிடிவாதமாக காணப்பட்டார். "பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்கு பலவீனனைப் போலானேன், எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்" (1 கொரி 9 : 22) என்ற பவுல் அப்போஸ்தலனுடைய வார்த்தையின்படி அவர் தமது தேவ செய்திகளை ஏழை எளிய மக்களும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அத்தனை எளிய விதத்தில் சுவிசேஷத்தை பிரசங்கித்தார். திரள்ஜனக்கூட்டம் நிரம்பி வழியும் பெரிய கட்டிடங்களிலும், பிரசங்க கூடாரங்களிலும் அவர் எப்படி பிரசங்கித்தாரோ அந்த விதமாகவே ஞானவான்கள் நிரம்பிய சர்வ கலாசாலைகளிலும் பிரசங்கித்தார். பிரசங்கிப்பதற்காக அவர் எழுந்து நின்றால் தேவ குமாரனுடைய பிரதிநிதியாக தான் வந்திருப்பதாக தன்னை உணர்ந்து மிகுந்த வைராக்கியத்தோடு பாவத்தைக் கண்டித்து உணர்த்திப் பேசுவார். பில்லி சன்டே தனது ஊழியத்தில் தனக்கெதிராக குற்றம் கண்டுபிடிக்கும், குறை காண்கின்ற ஏராளமான சத்துருக்களையும் கொண்டிருந்தார். ஒரு சமயம் ஒரு பிரான்சு தேசத்தைச் சேர்ந்த சுவிசேஷகர் ஒருவர் என்னிடம் "நான் பில்லி சன்டேயை நேசிக்கின்றேன். காரணம், அவர் நிறைய சத்துருக்களை தனக்கென்று சம்பாதித்து வைத்திருக்கின்றார்" என்று கூறினார். நான் எனது அறையில் ஒரு வாசகம் எழுதப்பட்ட ஒரு அட்டையை தொங்க வைத்திருக்கின்றேன். அந்த வாசகம் இதுதான் "குற்றம் குறை காண்பவர்களிடமிருந்து நீ தப்பிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு எதிராக உன்னைக் காத்துக்கொள்ள ஒன்றும் பேசாதே, ஒன்றும் செய்யாதே, நீயும் ஒரு பொருட்டாக உன்னை எண்ணிக்கொள்ளாமல் ஒன்றுமில்லாதவனாக இருந்து விடு" என்பதே.

பில்லி சன்டே இப்பொழுது தனது ஓட்டத்தை முடித்து விசுவாசத்தைக் காத்துக் கொண்டார். இப்பொழுது அவர் தனது பரம தந்தையின் வீட்டில் இருக்கின்றார். "துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது, பெலனற்று விடாய்த்துப் போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள். கட்டுண்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமைந்திருக்கிறார்கள், ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுவதில்லை" (யோபு 3 : 17, 18) என்ற தேவ வாக்கின்படி அவர் இப்பொழுது துன்மார்க்கனுடைய தொந்தரவுகள் நீங்கி சமாதானமாக உள்ளார். பிலிப்பியர் 1 : 23 ஆம் வசனத்தில் நாம் பார்க்கின்றபடி அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் ரோமச் சிறைக்கூடத்தில் ஒரு குழப்பமான நிலையில் இருக்கின்றார். அதாவது தனக்கு விடுதலை கிடைத்து தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை தொடர்ந்து செய்யக் கூடுமா? அல்லது அந்த சிறைக்கூடத்திலிருந்தவாறே சிரச்சேதம் செய்யப்பட்டு தனது மோட்ச இன்ப வீட்டிற்கு செல்லப் போகின்றோமோ? என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. "தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனே கூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்" என்று அந்த பரிசுத்த அப்போஸ்தலன் ஆவிக்குள்ளாக களிகூர்ந்து ஆரவாரிக்கின்றார். மறுபடியும் பிறந்த மெய் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் மரணம் என்பது இந்த பாக்கிய நிலைதான். அந்த பரிசுத்த பாக்கியம்தான் இப்பொழுது நமது பில்லி சன்டேக்கும் கிடைத்துள்ளது. நம்மை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் நமது அருமை சகோதரனின் நினைவுகூருதலாக நமது இறுதி மரியாதைகளையும், கனத்தையும் செலுத்துவதற்காக இங்கே கூடி வந்திருக்கும் நாம் இதைக் குறித்து மிகவும் நிச்சயமுள்ளவர்களாக இருக்கலாம். அஸ்திபாரங்களுள்ள நகரத்தில் கிறிஸ்துவுடன் கூட அவர் இப்பொழுது இருக்கின்றார்.

எத்தனை ஆச்சரியமான சரித்திரம் இது! ஒரு காலத்தில் கிறிஸ்து இரட்சகரில்லாத வாழ்க்கை, அதற்கப்பால் கிருபையின் மூலமாக கிறிஸ்துவுக்குள்ளான புதிய வாழ்வு, அதின்பின்னர் அநேக ஆண்டுகளாக கிறிஸ்துவுக்கான ஸ்தானபதி. இப்பொழுது அவருடைய பிரயாசங்கள் முற்றுப்பெற்றது, ஜீவ கிரீடம் சுதந்தரிக்கப்பட்டாயிற்று, மோட்ச இன்ப வீட்டில் கிறிஸ்துவுடன் ஒன்று சேர்ந்து விட்டார். மீட்கப்பட்ட யாவரும் பரம தகப்பனுடைய வீட்டில் ஒன்று கூடும் ஆனந்த வேளைக்காக இப்பொழுது அவர் காத்துக் கொண்டிருக்கின்றார்.

நான் மற்றுமொரு வார்த்தையை இத்துடன் சேர்த்துக் கொள்ள விரும்புகின்றேன். பில்லி சன்டே இப்பொழுது தனது வாயைத் திறந்து பேசக்கூடுமானால் அவர் நிச்சயமாக என்னிடம் உங்களுக்குச் சொல்லும்படியாக கேட்டுக் கொள்ளும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்:- "இன்று இந்தப் பெரும் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் உங்களில் யாராவது பில்லி சன்டேயின் அருமை இரட்சகரை அறியாமல் இருப்பீர்களானால், ஓ, நான் உங்களை கெஞ்சி மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகின்றேன், நீங்கள் பாவிகளின் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சகரண்டை உடனே வாருங்கள். நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அப்படியே வாருங்கள். உங்களை நீங்கள் எந்தவிதத்திலும் பெரிதுபடுத்த முயற்சிக்க வேண்டாம். தேவனுக்கு முன்பாக ஒரு பாரஞ்சுமந்த ஏழைப் பாவியாக அவரண்டை வந்து நீங்கள் ஒரு பாவி என்றும் உங்களுக்காக இயேசு மரித்தார் என்றும் கூறி பில்லி சன்டே பெற்றுக் கொண்ட அந்த இரட்சண்யத்தையும், மறுபிறப்பின் ஆசீர்வதிக்கப்பட்ட ஆனந்த மாற்றத்தையும் பெற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறுங்கள். அதை இன்றைக்கே, இப்பொழுதே அவரிடம் சொல்லுங்கள். அதை நீங்கள் நாளைக்கென்று ஒத்திப்போடாமல், எனது அடக்க ஆராதனை முடிவதற்குள் அந்தக் காரியத்தை செய்துவிடுங்கள். இந்த அடக்க ஆராதனையிலிருந்து இன்று புறப்பட்டுச் செல்லும் நீங்கள் "ஆண்டவரே நான் உமக்கு நன்றி சொல்லுகின்றேன், நானும் கூட பில்லி சன்டேயின் இரட்சகரை என் சொந்த இரட்சகராக என் உள்ளத்தில் அறிந்து கொண்டேன் என்று சொல்லிக் கடந்து செல்லுங்கள்"

வரப்போகும் மகிமையில் பில்லி சன்டே உங்களைச் சந்திக்க எத்தனை மகிழ்ச்சியாக இருப்பார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அப்பொழுது நீங்கள் அவரைப் பார்த்து "சகோதரன் பில்லி சன்டே அவர்களே, உங்களுடைய அடக்க ஆராதனை தினத்தன்று நான் என் இருதயத்தை இரட்சகர் இயேசுவுக்கு ஒப்புவித்து உங்களுடைய இரட்சகர் மேல் என் நம்பிக்கையை வைத்தேன், அவருக்கே எனது வாழ்வையும் தத்தம் செய்தேன்" என்று கூறுங்கள்.

 
 

ஒரு கிறிஸ்தவன் எப்பொழுது வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றான் என்பதை என்னால் கூற முடியும் என்று டாக்டர் ஆண்ட்ரூ போனர் என்ற பரிசுத்தவான் ஒரு சமயம் கூறினார். தேவ கிருபையில் அவன் எவ்வளவுக்கெவ்வளவு வளர்ந்து பெருகுகின்றானோ அந்த அளவுக்கு அவன் தன் பரம எஜமானனை மாத்திரம் உலகுக்கு உயர்த்திக் காண்பிப்பான். தன்னைப் பற்றியும், தான் செய்வதைப் பற்றியும் மிகவும் சுருக்கமாக அவன் பேசுவதுடன் தனது மதிப்பீட்டில் அவன் தன்னை எக்காலத்தும் தாழ்வாகவே எண்ணி எண்ணி இறுதியில் அருணோதய சூரியனுக்கு முன்னர் முற்றுமாக மறைந்து போய் விடும் விடிவெள்ளி நட்சத்திரத்தைப் போலிருப்பான் என்றார்.


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM