பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் (1859 - 1947)


(ஆதி அப்போஸ்தலருடைய காலத்திற்குப் பின்னர் 1859 முதல் 1947 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இங்கிலாந்து தேசத்தின் படிப்பறிவு இல்லாத ஒரு எளிய கொத்தனாரை (Mason) தேவன் தமது பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக, மனுப்புத்திக்கு எட்டாதவிதத்தில் வெகு வல்லமையாக எடுத்து பயன்படுத்தியிருக்கின்றார். அந்த தேவ மனிதர் தனது ஆண்டவரைப் போல மரித்தோரை உயிரோடு எழுப்பியிருக்கின்றார். குருடருக்கு பார்வையைக் கொடுத்திருக்கின்றார். முடவர்களை எழுந்து நடக்கச் செய்திருக்கின்றார். அவரால் சரீர சுகம் பெற்றோர் ஏராளம், ஏராளம். மனுஷர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய நெஞ்சின் நினைவுகளையும் அவர்களுக்கு உணர்த்திக் கூறியிருக்கின்றார். அவருடைய காலத்தில் ஒரு பெரிய எழுப்புதல் அவருடைய சொந்த தேசமான இங்கிலாந்தில் மாத்திரமல்ல முழு ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற பற்பல வெளிநாடுகளிலும் பரவியிருக்கின்றது. அவருடைய தேவச் செய்திகளைக் கேட்டு மனந்திரும்பினோர் அநேகர். அவருடைய தேவ ஊழியம் எத்தனை வல்லமையாக சிறப்பிற்று விளங்கினதோ அதே வண்ணமாக அவரது தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையும் தேவன் விரும்பும் நற்கந்த வாழ்க்கையாக பிரகாசித்து பரிமளித்திருக்கின்றது. யார் அந்த தேவ மனிதர்? ஆம், அவர்தான் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த். அவரது வாழ்க்கை வரலாறு குறித்து தெளிவான விவரணங்களை நாம் அறியக்கூடாதவர்களாயினும் அவரோடு வெகு நெருக்கமாக பழகிய அவரது பரிசுத்த சிநேகிதர் ஒருவர் நமது உள்ளம் களிகூரத்தக்கதான விதத்தில் அவரது பரிசுத்த வாழ்க்கைச் சாயலையும், அவரது பரிசுத்த பண்புகளையும், அவரை ஆண்டவர் பயன்படுத்திய விதத்தையும், அதின் இரகசியத்தையும் நமக்குத் தருகின்றார். தேவன்தாமே அந்த அற்புதமான வாழ்க்கைச் சரித்திரத்தை உங்களுக்கும் எனக்கும் ஆசீர்வதித்துத் தருவாராக)

மாபெரும் தேவ மனிதர் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்தை நான் (ராபர்ட் கிப்பர்ட்) நேரில் சந்திக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததுடன் அவருடைய தனிப்பட்ட வாழ்விலும் நான் கலந்து அவருடைய பரிசுத்த வாழ்வின் காரியங்களை நேரிடையாக காணும் பாக்கிய சிலாக்கியமும் எனக்குக் கிடைத்தது. பிரசங்க பீடத்தில் நாம் காண்கின்ற அநேக தேவ ஊழியர்களை அவர்களது இல்லங்களில் அதே பரிசுத்தமாக நாம் காண்பது என்பது முற்றும் அரிதான காரியமாகும். ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்தை பிரசங்க பீடத்தில் பார்ப்போர் அவரது கிறிஸ்துவின் மென்மையான சாயலை உடனே கண்டு கொள்ளுவது சற்று கடினமாகும். அழியும் ஆத்துமாக்களுக்காகவும், ஏழை எளியோருக்காகவும் மனதுருகி சிந்தும் அவரது கண்ணீரை நாம் காண வேண்டுமாயனால் அவரோடு நாம் நெருங்கிப் பழகியிருக்க வேண்டும். விக்கிள்ஸ்வொர்த் விசுவாசத்தின் மாபெரும் வீரன். அவரது விசுவாசமும், வல்லமையும் நிறைந்த தேவ ஊழியத்தின் காரணமாக மேற்கிலிருந்து கிழக்கிற்கும், வடக்கிலிருந்து தெற்கிற்கும் இங்கிலாந்து தேசத்தில் எழுப்புதல் காட்டுத் தீ போல பரவியது. அந்த எழுப்புதல் அக்கினியை இன்று வரை நம்மால் நன்கு உணர முடிகின்றது. விக்கிள்ஸ்வொர்த்துடன் ஐக்கியம் கொள்ளும் எவரும் தங்களில் ஒரு நிச்சயமான பரிசுத்த மாற்றம் பெறாமல் பழைய நிலையில் இருப்பது என்பது முற்றும் கூடாத காரியமாகும். அவர் 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறந்தார். ஆனால், அவர் விட்டுச் சென்ற அவரது வல்லமையான தேவ ஊழியம் இன்றும் ஆச்சரியத்தோடு தேவ மக்களால் நினைவுகூரப்படுகின்றது. உண்மையில் அது என்றும் அவர்களால் நினைவுகூரப்பட்டுக் கொண்டேயிருக்கும்.

எனக்கு வந்த மரணத்துக்கேதுவான நோயின் பிடியிலிருந்து நான் தேவனால் அற்புதமாக சுகம்பெற்ற ஒரு ஆச்சரிய நிகழ்ச்சியின் மூலமாக தேவ மனிதர் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் அவர்களுடன் எனக்கு நெருக்கமான பரிசுத்த சகவாசம் கிடைத்தது. அந்த அற்புத சுகத்தை ஆண்டவர் எனக்கு விக்கிள்ஸ்வொர்த்தின் மிக நெருங்கிய தேவ ஊழிய நண்பர் பாஸ்டர் ரிச்சர்ட்சன் என்பவர் மூலமாக எனக்குக் கொடுத்தார். அது ஒரு ஈஸ்டர் காலமாகும். திடீரென நான் சுகயீனம் அடைந்தேன். ஆரம்பத்தில் அந்த எனது வியாதி அத்தனை பெரியதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், பின்னர் அது இரட்டை நிம்மோனியாவாக விரிவடைந்து இறுதியில் நான் சுயநினைவிழந்து கோமா நிலைக்குள்ளானேன். என்னைப் பரிசோதித்த மூளை மருத்துவ டாக்டர் நான் திரும்ப சுயநினைவு அடைவது என்பது முற்றும் இயலாத காரியம் என்று கூறிவிட்டார். எனது மூளையானது வெகுவாக பாதிப்புக்குள்ளாகியிருப்பதால் ஒருக்கால் நான் திரும்ப சுயநினைவு பெறுவதானாலும் நான் மனநிலை பாதிப்பு அல்லது உடல் ஊனமுற்றவனாகத்தான் வாழ முடியும் என்று சொன்னார்.

ஈஸ்டர் தினத்தின் மாலை நேரம் எனது கோமா நிலை அதிகரித்துவிட்டது. என்னை பரிசோதித்த மருத்துவர் அந்த நாளிலேயே நான் மரணமடையக்கூடும் என்று திட்டமாகச் சொல்லிவிட்டார். நானும், என் தாயாரும் போய் வந்த தேவாலயத்தின் பரிசுத்த குருவானவர் ரிச்சர்ட்சன் என்பவரை எனக்காக ஜெபிக்கும்படியாக அழைத்து வந்தார்கள். அந்தச் சமயம் அந்த தேவாலயத்தில் ஒரு கன்வென்ஷன் நடந்து கொண்டிருந்தது. அதில் தேவச் செய்தி கொடுக்கும்படியாக அழைக்கப்பட்டிருந்த சார்லஸ் பெக்கரி என்பவரும் எங்கள் குருவானவருடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவர்கள் இருவரும் எங்கள் வீட்டிற்கு வரவும் எனக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் தனது வீட்டிற்குப் புறப்பட ஆயத்தமாக இருந்தார். சபையின் குருவானவர் ரிச்சர்ட்சன் அந்த டாக்டரிடம் எனது நிலையைக் கேட்டபொழுது "இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள்ளாக நான் மரித்துவிடுவேன்" என்று கூறினார். எனது நிலையை அறிந்த எனது குடும்பத்தினர் அனைவரும் எனது அறையில் ஒன்று கூடிவிட்டனர். நான் எனது பெற்றோருக்குக் கடைசி புதல்வன் மாத்திரமல்ல, நான் எனது குடும்பத்தினர் யாவருக்கும் செல்லப் பிள்ளையானதால் எனது உடன் பிறந்தவர்களுக்கும், பெற்றோருக்கும், எனது இனஜனத்தினருக்கும் டாக்டர் சொன்ன வார்த்தைகள் ஆறாத துயரமாக இருந்தது.

குருவானவர் ரிச்சர்ட்சனும், சார்லஸ் பெக்கரியும் நான் படுத்திருந்த அறைக்கு வந்தனர். அவர்களில் பெக்கரி என்ற தேவ மனிதர் அந்த அறையில் கூடியிருந்த எங்கள் குடும்பத்தின் மக்களைப் பார்த்து "இன்று ஒரு அற்புதம் நடைபெறப் போகின்றது என்பதை தேவன் எனக்குக் காண்பித்திருக்கின்றார். அப்படி ஒரு அற்புதம் நடைபெற்று இந்தச் சிறுவன் சுகம்பெறும் பட்சத்தில் ஆண்டவர் இயேசுவுக்கு உங்கள் நன்றி காணிக்கை என்ன?" என்று அவர் கேட்டார். கட்டுமஸ்தான அழகான வாலிபனான எனது உடன் பிறந்த அண்ணன் உடனே எழுந்து நின்று அவருக்குப் பிரதியுத்தரமாக "தேவன் எனது தம்பியை சுகமாக்கும் பட்சத்தில் நாங்கள் எல்லாரும் அவருக்கு தேவ ஊழியம் செய்வோம்" என்று சொன்னான். "நீங்கள் யாரிடம் பொருத்தனை செய்திருக்கின்றீர்கள்? என்பதை அறிந்திருக்கின்றீர்கள். என்னிடம் மட்டுமல்ல, தேவனிடம் வாக்கு கொடுத்திருக்கின்றீர்கள்" என்றார் பெக்கரி.

"யாரிடம் வாக்குக் கொடுத்திருக்கின்றோம் என்பதைக் குறித்து நாங்கள் நன்கு அறிந்திருக்கின்றோம்" என்று எனது அண்ணன் பதில் கொடுத்தான்.

அதின்பின்னர் பெக்கரி எனது சுகத்துக்காக உள்ளம் உருகி ஜெபித்துவிட்டு "உடனடியாக சிறுவனுக்கு சுகம் கிடைக்காதபோதினும் அதைக் குறித்து ஏமாற்றமடைந்து சோர்ந்து போகாமல் இருக்கும்படியாகக் கூறிவிட்டு" போய்விட்டார். அவர் சொன்னது போலவே அவர் ஜெபித்த உடன் ஒன்றும் நடைபெறவில்லை. எங்கள் தேவாலயத்தின் குருவானவர் ரிச்சர்ட்சன்னும், அவர் தம்முடன் அழைத்து வந்திருந்த சார்லஸ் பெக்கரியும் எனது சகோதரி எங்கள் வீட்டில் ஆயத்தம் செய்து வைத்திருந்த சிற்றுண்டியை அருந்திவிட்டு நேரடியாக கன்வென்ஷன் கூட்டத்தில் கலந்துகொள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டனர்.

இதற்கிடையில் எனது அண்ணன்மார்கள் எனக்கு வாங்கி வந்த சாக்லெட் மேஜையின் மேல் இருந்தது. திடீரென, நான் எனது மரணத்துக்கு ஏதுவான கோமாவிலிருந்து தெளிவு பெற்று பூரண சுய நினைவுடன் என்னை அறியாமலே "அம்மா, எனது சாக்லெட் எங்கே?" என்று சத்தமிட்டுக் கேட்டேன். அப்பொழுதே நான் பூரண சுகம்பெற்றேன். அதைத் தொடர்ந்து எங்கள் குடும்பம் முழுமையாக ஆண்டவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டது. எனது அற்புதமான சுகத்தை தாங்களாகவே தங்களது கண்களினால் பார்த்த எனது குடும்பத்தைச் சேர்ந்த 57 பேர்கள் இரட்சிக்கப்பட்டனர். எனது தகப்பனார்தான் அதில் முதலாவது ஆண்டவரை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.

தேவ பக்தன் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் எங்கள் வீட்டிலிருந்து 20 மைல்கள் தொலைவில்தான் இருந்தபோதினும் நாங்கள் அவரை அதுவரை சந்திக்கவே இல்லை. எனக்கு கிடைத்த அற்புத சுகத்தை தனது நண்பர் ரிச்சர்ட்சன் குருவானவர் மூலமாக அறிந்த அவர் எங்களை வந்து சந்தித்து அது குறித்து விபரமாகக் கேட்டறிந்தார். எனக்குக் கிடைத்த அற்புத சுகத்தை அறிந்து கர்த்தருக்குள் அவர் களிகூர்ந்தார். அதிலிருந்து எங்கள் தேவ ஐக்கியமும், நட்பும் வளர ஆரம்பித்தது.

(ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் குறித்து ராபர்ட் கிப்பர்ட் அவர்கள் கூறுவதை தொடர்ந்து நாம் கவனிப்போம்)

 

இரக்கமும், மனதுருக்கமும் நிறைந்த தேவ பக்தன்

ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் தனது ஆண்டவரைப் போல மக்களை அதிகமாக நேசித்து, கஷ்டம், கண்ணீரில் இருக்கிற மக்கள்மேல் மனதுருகி அவர்களுக்குத் தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் செய்தார். நான் ஒரு தடவை அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவருடைய மகள் அலீஸ் தனது தகப்பானாருடைய ஆச்சரியமான அனுபவத்தை இவ்விதமாக என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

(ஒரு குறிப்பிட்ட நாளில் அன்றைய தினம் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்துக்கு வந்த கடிதங்களில் ஒரு கடிதத்தில் "தயவுசெய்து நீங்கள் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் மிகுந்த வியாகுல மனக்கிலேசத்தில் இருக்கின்றோம்" என்று எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்த எனது தகப்பனாருடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. கண்ணீர் வடிந்தவாறே அந்தக் கடிதத்தை நான் வாசிக்கும்படியாக எனக்குக் கொடுத்தார்கள். எனது உள்ளத்தில் அந்தக் கடிதம் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. "என்ன காரியம் அப்பா?" என்று நான் அவர்களிடம் கேட் டேன். "நமக்கு தினமும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் உதவி கேட்டு வருகின்றன. ஆனால், அந்த எல்லாக் கடிதங்களைக் காட்டிலும் இது முற்றிலும் வித்தியாசமான ஒன்றாக உனக்குத் தெரியவில்லையா?" என்று என்னிடம் கேட்டார்கள்.

உடன்தானே தனது மேல் சட்டையை (கோட்டை) எடுத்துப் போட்டுக்கொண்டு கடிதத்தில் கண்ட முகவரியைத் தேடிக் கொண்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். இறுதியாக அவர்கள் தேடிச் சென்ற வீடு கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிலாந்து தேச புரதான கால அந்தக் கிராமப்புற வீடு ஒரு பெரிய அரண்மனையைப் போல காட்சியளித்தது. வீட்டிற்குச் சென்ற எனது தந்தை கதவின் மணியை அடிக்கவே மிகுந்த துக்கம் நிறைந்த முகத்தோடு ஒரு வாட்ட சாட்டமான மனிதர் அந்த வீட்டின் கதவைத் திறந்தார். அவரிடம் தனது வழக்கமான பாணியில் "நான்தான் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த். உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றேன்" என்று கூறினார்கள். அந்த மனிதர் எனது தந்தையின் கரத்தை அன்பொழுகப் பற்றிப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். பின்னர், எனது தந்தையின் தோள் மேல் தனது கையைப் போட்ட வண்ணமாக ஒரு வார்த்தை கூட பேசாமல் தரையில் அழகான கம்பளம் விரிக்கப்பட்ட ஒரு பெரிய விசாலமான அறைக்கு அப்பாவை அழைத்துச் சென்று அந்த அறையின் கதவைத் திறந்து அவர்களை உள்ளேவிட்டுவிட்டு அறையின் கதவை மூடிவிட்டு அந்த தனவான் போய்விட்டார்.

அறையின் உள்ளே சென்ற எனது அப்பா கண்ட காட்சியை அவர்கள் என்றுமே மறக்க இயலாது. 17 வயதான ஒரு அழகான வாலிபப் பெண்ணை 3 திடகாத்திர வாலிபர்கள் தரையோடு தரையாக வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தனர். அவள் முழுமையாக பிறந்த மேனியில்தான் இருந்தாள். அந்த வாலிபர்கள் அந்தப் பெண்ணைப் பிடித்து அடக்குவது மிகவும் கடினமாக இருந்தது. அவள் மிகுந்த வீராவேசத்தின் கோபத்தோடு சாத்தானுடைய முழுக்கட்டுப்பாட்டிற்குள் இருந்தாள். பிள்ளையின் தகப்பன் மிகுந்த செல்வச் சீமானாக இருந்தபடியால் தனது அன்பு மகளை ஒரு சிறிய அறையில் பூட்டி வைத்து அவளை வேதனைப்படுத்தாமல் இவ்விதமாக தனது வீட்டிலேயே ஆட்களை வேலைக்கு வைத்து அவளை அடக்கி வைத்திருந்ததுடன் அவள் தன்னையே லேகியோனைப் போல காயப்படுத்தி, கோரப்படுத்தி அழித்துக் கொள்ளுவதிலிருந்து பாதுகாத்து வந்தார்.

எனது தகப்பனார் அந்த அறைக்குள் வந்ததைக் கண்டதும் அந்தப் பெண் தனது கொந்தளிப்பின் குமுறலையும், போராட்டத்தையும் கைவிட்டு தனது முகத்தை எனது தந்தைக்கு நேராகத் திருப்பி "நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் உன்னத தேவனுடைய ஊழியக்காரரான ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்" என்று சொன்னாள். அதைக் கேட்ட எனது தந்தை "இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீ உனது வாயை மூடு" என்று கட்டளையிடவும் அவள் அந்த அறையின் ஒரு மூலைக்கு பின் நோக்கி நகர்ந்து சென்றாள். எனது தந்தையும் அவளைத் தொடரவே அந்தப் பெண் பயத்தில் நடுநடுங்கி "அவள் எங்களுடையவள்" என்று கூறினாள். "அசுத்தமான பிசாசுகளே, நான் உங்களிடம் வாக்குவாதம் செய்ய வரவில்லை. அவளை விட்டு வெளியே ஓடிப்போங்கள். இனி ஒருபோதும் அவளுக்குள் பிரவேசியாதேயுங்கள்" என்ற எனது தகப்பனாரின் வார்த்தைகளைக் கேட்டதும் அவைகள் மொத்தம் 12 பிசாசுகள் அவளிடமிருந்து ஓடிவிட்டன.

உடனடியாக அந்தப் பெண் பூரண விடுதலை பெற்று தான் பிறந்த மேனியின் அலங்கோலமாக இருப்பதைக் கண்டு பெரிதும் வெட்கமடைந்து அந்த அறையிலிருந்து வெளியே ஓடினாள். அதைக் கண்ட அவளுக்குப் பாதுகாவலாக இருந்த மூன்று வாலிபரும் அவளது பின்னாக ஓடத் தொடங்கிய போது எனது தகப்பனார் அவர்களைத் தடுத்து நடந்த தேவனுடைய அதிசய செயலை அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். 10 நிமிடங்கள் சென்ற பின்னர் ஒரு படுக்கை அறையின் கதவு திறக்கப்பட்டது. அந்த அறையிலிருந்து ஒரு இளம் பெண் வெளியே வந்தாள். அவளது காலடிகள் கீழே படிக்கட்டுகளில் இறங்கிச் செல்லுவது கேட்டது. அதற்கப்பால் எனது தகப்பனார் கீழ் அறைக்கு இறங்கிச் சென்றார். அங்கே அந்த வீட்டின் குடும்பத்தினருடன் அவர்கள் அளித்த சந்தோசமான தேயிலைப்பான விருந்தில் அவர்கள் கலந்து கொண்டார்கள். ஒரு தகப்பன், தாய், ஒரு அழகான இனிமையான இளம் குமாரத்தி. எத்தனை ஆனந்த பரவசக்காட்சி அது! பதினைந்து நிமிடங்களுக்கு முன்னர்தான் அவள் 12 கொடிய பேய்களின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து சின்னா பின்னமாக சீரழிக்கப் பட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் இப்பொழுதோ அவள் அடக்க ஒடுக்கமும், சாந்தமுமான அன்பு மகள்!

எனது தந்தை வீட்டுக்கு வந்ததும் "மகளே அலீஸ் எத்தனை மனோகரக் காட்சி அது என்று நீ எண்ணுகின்றாய்! ஆ, இயேசு இரட்சகர் எத்தனை அதிசயமான அன்பின் தேவன்!" என்று மிகுந்த பூரிப்புடன் சொன்னார்கள்.

பட்டணத்தின் எளிமையான சேரிப்பகுதிகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க விக்கிள்ஸ்வொர்த் செல்லும்போது அந்தப் பகுதியிலுள்ள மக்கள் உடுத்துவதற்கு போதுமான உடையில்லாமல் இருப்பதை அறிந்த அவர் தனது உடம்பிலும் குளிரைத் தாங்கிக் கொள்ளக் கூடிய ஓவர்கோட் போடாமல் சென்று அந்த ஏழை மக்கள் குளிரை அனுபவிப்பதைப் போலவே அவரும் அனுபவித்து இரட்சகர் இயேசுவை அவர்களுக்கு பிரசிங்கிப்பார்.

அவர் எந்த ஒரு மனிதனிலும் அவனது ஆள், அந்தஸ்து, பட்டம், பதவி பார்த்து மதிப்புக் கொடுப்பவரல்ல. ஏழையிடம் எப்படி அவர் நடந்தாரோ அப்படியேதான் ஐசுவரியவானிடமும் நடந்து கொண்டார். அவரிடம் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் கிடையாது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், ஏதுமற்ற ஒரு ஏழையைக் கண்டால் அவனுக்கு ஏதாவது உதவி செய்து அவனைப் போஷிப்பார்.

 

மிகவும் எளிமையான தேவ மனிதர்

தேவபக்தன் விக்கிள்ஸ்வொர்த் ஒரு பெரிய செல்வச் சீமானாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் தனக்கென்று எதையும் சொந்தம் பாராட்டிக் கொள்ளவில்லை. தானும், தனக்குள்ளதெல்லாம் தனது அருமை இரட்சகருக்கே சொந்தமானது என்று அவர் எண்ணினார். அவர் ஒரு அரண்மனையில் உலகப்பிரகாரமான எல்லா ஆடம்பரங்களோடும் வாழ்ந்திருக்க முடியும். ஆனால், இங்கிலாந்து தேசத்தில் யார்க்ஷையர் என்ற இடத்திலுள்ள பிராட்ஃபோர்ட் என்ற பகுதியில் ஒரு சிறிய கல் வீட்டில் வாழ்வதை அவர் பெரும் திருப்தியாகக் கொண்டார். அது ஒரு கல் வீடாக இருந்தபோதினும், தேவனுடைய சிங்காசனம் அங்கு இருக்கும் பட்சத்தில் அது எப்படிப்பட்ட மகிமையில் இலங்குமோ அந்த பரலோக மகிமையில்தான் அது இருந்தது. நான் அந்த தேவ மனிதரை அந்த சிறிய கல் வீட்டில் சந்திப்பதை ஒரு பரலோக ஆனந்தமாக எண்ணுவேன். தேவனுடைய ஆசரிப்புக்கூடாரத்தை மூடியிருந்த மகிமையின் மேகத்துக்குள் சென்று வருவதைப் போன்ற ஒரு பரலோக அனுபவம் ஒவ்வொரு தடவையும் எனக்குக் கிடைக்கும்.

விக்கிள்ஸ்வொர்த் மிகவும் நடை முறையான ஒரு தேவ மனிதனாவார். எனக்கு நன்கு நினைவிருக்கின்றது. ஒரு குளிரான நாளின் மாலை நேரம் நான் அவரது வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்துவிட்டு புறப்படும்போது அவர் தனது கரத்தை என் மீது வைத்து என்னை ஆசீர்வதித்ததுடன் "இதோ பார், உனது மேல் கோட்டின் பொத்தான்களை எல்லாம் சரியாக அதினதின் துவாரங்களில் போட்டு, கோட்டின் கழுத்துப்பட்டை காலரையும் குளிர் புகாத வண்ணம் மேலே தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டும். உனது உடல் நலத்தை நீ நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். உனது சரீரம் உனக்கு அல்ல, உனது ஆண்டவருக்குச் சொந்தமானது. நியாயத்தீர்ப்பு நாளில் அது குறித்து நீ தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்" என்று சொன்னார்.

விக்கிள்ஸ்வொர்த் எப்பொழுதும் சுத்தமாகவும், நேர்த்தியான ஒழுங்கோடும் தனது ஆடைகளை உடுத்தியிருப்பார். ஒழுங்கீனமான ஆடைகளை அணிவது ஆண்டவருக்கு மகிமை சேர்க்காது என்று அவர் சொல்லுவார். அவர் வாழ்ந்த சமுதாயத்தின் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அவர் அப்படியேதான் அழகாக தனது உடைகளை உடுத்தியிருப்பார். அது குறித்து மக்கள் அவரை குறை சொன்னதும் உண்டு. ஆண்டவர் இயேசுவுடைய முழு நேர தேவ பணிக்காக தனது கொத்தனார் வேலையை விட்டுவிட்டு வெளியே வந்த சமயம் தனது ஆண்டவரைப் பார்த்து "ஆண்டவரே, எனது சப்பாத்துக்கள் கிழிந்து பொத்தலாகி வேறு சப்பாத்துக்களை வாங்க எனக்கு வழியில்லாமல் போகும் பட்சத்தில் அல்லது எனது வஸ்திரங்கள் பழைமையாகி கிழிவுண்டாகி அதற்கு தையற்காரர் ஒட்டுப்போட தேவை நேரிடும் பட்சத்தில் நான் எனது பழைய கொத்தானார் வேலைக்கே போய்விடுவேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும்" என்று தனக்கே உரித்தான பரம தந்தை அவருடைய பிள்ளை என்ற பாசத்தில் கூறினார். அவருடைய வார்த்தைப்படியே எந்த ஒரு தாழ்ச்சியும் இல்லாமல் கர்த்தர் அவரை நிறைபூரணமாக வழி நடத்தினார். ஒரு மனிதன் தேவனை பூரணமாக நம்பும்போது அவன் அவரிடத்தில் எதையும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. அவனது தேவைகள் என்னவென்பதை அவர் அறிந்து அவரே அவைகளைச் சந்தித்து அவனை அற்புதமாக வழிநடத்துவார் என்று அந்த தேவ மனிதர் கூறுவார்.

அவரது வார்த்தைப்படியே அவர் தனது வாழ்வில் அதை நிரூபித்தும் காண்பித்தார். விக்கிள்ஸ்வொர்த் தனது தேவை குறித்து எந்த ஒரு மனிதனிடமும் ஒரு தடவைகூட கேட்டது கிடையாது. திரும்பவும் அவர் கொத்தனார் வேலைக்குப் போய்விடாதவாறு தேவனும் அவரைக் காத்துக் கொண்டார். இதற்கிடையில் தனது குடும்பத்தைப் போஷித்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கவே இருந்தது. தேவன் ஒரு கஞ்ச பிரபு அல்ல, அவர் தனது பரிபூரணத்திலிருந்து தமது மக்களுக்கு வாரி வழங்குபவர். அதைக் கொண்டு தேவ ஊழியன் தனது சுய தேவைகளை நிறைவு செய்து கொண்டு மற்றவர்களுக்கும் தாராளமாக உதவி செய்யலாம் என்று அவர் சொல்லுவார். அதை தனது வாழ்வில் மெய்ப்பித்தும் காண்பித்தார்.

 

ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை கொண்ட தேவ பக்தன்

விக்கிள்ஸ்வொர்த் எந்த ஒரு வேதாகம கல்லூரியிலோ அல்லது தபால் மூலமாகவோ வேதசாஸ்திரம் படித்து பட்டம் பெற்றவர் அல்லர். அவர் சேர்ந்திருந்த மெதடிஸ்ட் திருச்சபையில் தேவ ஊழியத்துக்கு மக்களை தெரிந்தெடுப்பது அவர் வசம் உள்ள வேதாகம பட்டப்படிப்புகளை வைத்தல்ல, அவர் ஆண்டவருக்காக எத்தனை ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணினார் என்பதின் அடிப்படையில்தான் தேவ ஊழியத்துக்கு மக்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

விக்கிள்ஸ்வொர்த் ஆத்துமாக்கள் பேரில் மிகவும் பாரம் உடையவர். அவரும் அவரது மனைவி மேரி ஜேனும் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை இரவிலும் அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமை தேவன் அவர்களுக்கு 50 ஆத்துமாக்களை கொள்ளைப் பொருளாக கொடுக்க வேண்டுமென்று கண்ணீரோடு ஜெபித்து வந்தார்கள். ஆண்டவரும் அப்படியே அவர்கள் ஆவலை நிறைவு செய்து வந்தார். தேவ மனிதர் 8 வயதிலேயே கர்த்தரின் இரட்சிப்பின் பாத்திரமாகி விட்டபடியால் இளம் பருவத்திலிருந்தே ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணும் பணியில் ஈடுபட்டுவிட்டார்.

ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணச் செல்லுவதானால் எந்த எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும், யார் யாரை சந்திக்க வேண்டும் என்ற விபரங்களை தனது ஆண்டவரிடம் கேட்டே அவர் செல்லுவார். அது அவருக்கு அற்புதமான அறுவடையைக் கொண்டு வந்தது. இப்படியாக அவர் சரியான இடத்தில், சரியான ஆத்துமாவை, சரியான நேரத்தில் சரியான தேவ வார்த்தையோடு சந்தித்தார். அவர் ஒரு சமயம் ஒரு நிகழ்ச்சியை கீழ்க்கண்டவாறு என்னிடம் கூறினார்:-

ஒரு சமயம் விக்கிள்ஸ்வொர்த் ஒரு ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அவர் சற்று வெளியே சென்று சற்று தூரம் நடந்து, உட்கார்ந்தே இருந்த அவர் தனது கால்களை நீட்டிவிட்டு சரிசெய்த பின்னர் திரும்பவும் தனது இருக்கைக்கு வந்தபோது ஒரு தாயும் அவளது மகளும் தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த இளவயது பெண்ணைப் பார்த்து "நீங்கள் மிகவும் பரிதாபகரமாக காணப்படுகின்றீர்களே" என்று அவர் கேட்டார்.

"அந்தவிதமாக நான் காணப்படுவதற்கு தகுந்த காரணம் இல்லாமலில்லை. எனது காலை மருத்துவ மனையில் மருத்துவர்கள் வெட்டி எடுப்பதற்காக நான் சென்று கொண்டிருக்கின்றேன்" என்று அந்தப் பெண் மிகுந்த துயரத்தோடு பதில் கொடுத்தாள்.

"கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை இரட்சிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறியீர்களா?" என்று தேவ மனிதர் அவளிடம் கேட்டார்.

"நீங்கள் சொல்லுவது இன்னதென்றே எனக்குப் புரியவில்லையே" என்று அவள் மறுமொழி கொடுத்தாள்.

அதின் பின்னர் விக்கிள்ஸ்வொர்த் அந்தப் பெண்ணிடத்திலும் அவளது தாயிடத்திலும் இயேசு இரட்சகரைக் குறித்து விபரமாகப் பேசினார். ரயில் நீண்ட தூரம் போவதற்கு முன்னரே அவர்கள் இருவரும் ஆண்டவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். அதின் பின்னர் அவர் அவர்களைப் பார்த்து "உங்கள் இருவருடைய ஆத்துமாவை இரட்சித்த அதே இரட்சகர் உங்களது சரீரத்தையும் பாதுகாத்து காப்பாற்றமாட்டாரா?" என்று கேட்டார். "ஆம்" என்று அந்த இளம் பெண் மலர்ந்த முகத்துடன் பதில் கொடுத்தாள்.

"மிகவும் நல்லது. நான் உங்களுக்காக இப்பொழுது ஜெபிக்கப் போகின்றேன்" என்று கூறி தன் வசம் இருந்த எண்ணெயை அவளது தலையில் பூசி இயேசுவின் நாமத்தில் உள்ளங்கசிந்து ஜெபித்தார். "இப்பொழுது நீங்கள் மருத்துவமனை சென்று உங்கள் காலை பரிசோதனை செய்ய மருத்துவரிடம் காண்பித்து எனக்கு காலை வெட்டி எடுக்க அவசியம் இல்லை" என்று கூறுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவருடைய வார்த்தைப் படியே அவள் செய்து அற்புதமான சுகம் பெற்றாள். தேவனுடைய திருவுள சித்தத்துடன் அவர் ஒன்றிணைந்து எத்தனை திட்டமாக செயல்பட்டார் பாருங்கள்!

ஒரு தடவை தன்னுடைய ஒரு கூட்டத்தில் தனது தள்ளு வண்டியில் வந்து கலந்து கொண்ட ஒரு நடக்க முடியாத அம்மாவைப் பார்த்து "உங்களுடைய மூட்டுகளில் ஏன் கம்பளி துணிகளைச் சுற்றியிருக் கின்றீர்கள்?" என்று தேவ மனிதர் கேட்டார்.

"எனது மூட்டுகளை சூடாக வைத்துக் கொள்ளுவதற்காகத்தான்" என்று அந்த அம்மா பதில் கொடுத்தார்கள். அந்தக் கம்பளி துணிகளை அநேக ஊக்குகளால் (Safety Pins) குத்தி அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்கள்.

"அந்த ஊக்குகளை எல்லாம் அப்புறப்படுத்துங்கள். இரும்புக் கடைக்காரர் கடையில் கூட இத்தனை ஊக்குகள் விற்பனைக்கு இருக்காது" என்று தேவ மனிதர் நகைச் சுவையுடன் கூறி அவைகளையும், கம்பளித் துணிகளையும் எடுக்கச் சொல்லிவிட்டு "உங்களுடைய தள்ளு வண்டியிலிருந்து வெளியே வாருங்கள்" என்று கூறினார்.

"என்னால் அது முடியவில்லையே" என்று அந்த அம்மாள் சொன்னார்கள்.

"உங்களுக்கு அது முடியுமா அல்லது முடியாதா என்று நான் உங்களிடம் கேட்கவில்லை. தள்ளு வண்டியிலிருந்து வெளியே வரத்தான் நான் உங்களிடம் கூறுகின்றேன்" என்று விக்கிள்ஸ்வொர்த் கூறினார். இப்பொழுது அந்த அம்மாள் எழுந்து நின்றார்கள்.

"இனி நடவுங்கள்" என்று சொன்னார்.

"எனக்கு நடக்க இயலாதே" என்று அந்த அம்மாள் கூறினார்கள்.

"நடக்க முடியுமா, முடியாதா என்பதை நீங்கள் பரிசோதித்துப் பார்க்க நான் உங்களிடம் சொல்லவில்லை. எனது வார்த்தைப்படி உங்கள் காலடிகளை எடுத்துவைத்து நடவுங்கள்" என்றார் அவர்.

"என்னால் அது கூடாது" என்று திரும்பவும் அவர்கள் கூறவே, தேவ மனிதர் அந்த அம்மாவுக்குப் பின்னால் வந்து அவர்களை சற்று முன்பாக தள்ளிவிட்டார். என்ன ஆச்சரியம், எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் நடக்கத் தொடங்கினார்கள்.

பின்னர், விக்கிள்ஸ்வொர்த் ஜனக்கூட்டத்தினரைப் பார்த்து "உங்களில் எவராகிலும் தேவனிடமிருந்து ஏதாவது எதிர்பார்த்தால் முன்னால் எழுந்து வாருங்கள்" என்று கூறினார். அதைக் கேட்டதும் ஒரு மனிதர் எழுந்து தேவ மனிதரிடம் சென்றார்.

"உங்களுடைய காரியம் என்ன?" என்று அவர் கேட்டார்.

"எனக்குக் கடுமையான தொண்டை வியாதி. அதற்காக நான் அறுவை சிகிட்சை செய்து கொண்டேன். ஆனால், என்னால் கடந்த 11 ஆண்டு காலமாக கட்டியான உணவு பதார்த்தங்கள் எதுவும் சாப்பிட முடிவதில்லை" என்று அந்த மனிதர் பதில் கொடுத்தார்.

"அப்படியானால் மனிதரே, எப்படி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்?" என்று விக்கிள்ஸ்வொர்த் கேட்டார்.

"சாப்பிடும் எல்லா பதார்த்தங்களையும் திரவ பதார்த்தமாக மாற்றி கஞ்சாகத்தான் குடிக்கின்றேன்" என்று அந்த மனிதர் துயரத்தோடு பதில் கொடுத்தார்.

அந்த மனிதனுக்காக தேவ மனிதர் ஜெபிப்பதற்குப் பதிலாக "நீங்கள் வீட்டுக்குப் போய் உங்கள் மனைவியிடம் இன்று இரவு ஒரு கொழுமையான இரா விருந்தை ஆயத்தம் செய்யச் சொல்லி அதை ஆசை தீர சாப்பிடுங்கள். ஆனால், ஒரு காரியத்தை நான் உங்களிடம் எதிர்பார்க்கின்றேன். கர்த்தர் உங்களுக்கு இரங்கிச் செய்த அற்புதத்தை நாளை இராத்திரி கூட்டத்திற்கு இங்கு வந்து மக்களுக்கு முன்பாக சாட்சியாகச் சொல்ல வேண்டும்" என்று சொன்னார்.

விக்கிள்ஸ்வொர்த் சொன்னபடியே அந்த மனிதர் தனது வீட்டிற்குச் சென்று தனது மனைவியிடம் கட்டியான ஆகாரம் சமைக்கக் கூறி 11 (பதினொரு) ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு மன நிறைவான ஆகாரம் சாப்பிட்டு அடுத்த நாள் இரவு கூட்டத்திற்கு வந்து திரளான ஜனங்கள் முன்பாக தேவனுக்கு மகிமையாக சாட்சி கூறினார்.

விக்கிள்ஸ்வொர்த் இப்படியான வெகு தைரியமான மிகுந்த துணிச்சலான நடபடிகள் எடுத்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர் இந்தக் காரியங்களை எல்லாம் தனது சுயமாக தனது மன விருப்பத்தின்படி செய்யாமல் கர்த்தருடைய ஆவியானவரிடமிருந்து அதைக் கேட்டே செய்தார். அடுத்தபடியாக இந்தக் காரியங்களை எல்லாம் வெறும் சரீர சுகத்தை மட்டும் மையமாக வைத்துச் செய்யாமல் ஆத்துமாக்களின் மனந்திரும்புதலை மாத்திரமே குறிக்கோளாக வைத்துச் செய்தார்.

ஒரு சமயம் விக்கிள்ஸ்வொர்த் ஸ்வீடன் தேசத்திற்குச் சென்றிருந்தபோது அவருடைய தேவச் செய்தியைக் கேட்கவும், வியாதிகளிலிருந்து சுகமடையவும் ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் இரட்சிப்பைக் கண்டடைந்தனர். ஸ்வீடன் அரசாங்க அதிகாரிகள் அவர் பணம் சம்பாதிக்கும் கோக்கத்தோடு வந்திருக்கின்றார் என்ற தவறான நோக்கத்துடன் அவரையும், அவரை ஸ்வீடன் நாட்டிற்கு அழைத்த அங்குள்ள 7000 சபை அங்கத்தினர்களைக் கொண்ட பிலதெல்பியா சபை பாஸ்டரையும் கைது செய்தனர். பின்னர், அப்படி கைது செய்ய இயலாது என்று அறிந்து அவர்களை விடுதலை செய்தனர். சுவிசேஷத்தை பிரசிங்கிப்போரை தடை செய்யக்கூடாது என்பது அந்த நாட்டின் சட்டமாக இருந்தது.

எனினும், மக்கள் சரீரத்தில் விக்கிள்ஸ்வொர்த் தனது கைகளை வைத்து ஜெபிக்கக்கூடாது என்று அரசாங்கம் தடை விதித்தது. அவருடைய அந்தக் கூட்டங்களில் 20000 மக்கள் வரை வந்து கலந்து கொண்டனர். அவர்களுக்கு அவர் பிரசிங்கித்துவிட்டு, அவர்களில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க விரும்பினார். ஆனால், அரசாங்க உத்தரவின்படி மக்கள் சரீரத்தில் அவர் கை வைக்கக் கூடாது. தேவ ஆலோசனையின்படி, வியாதியஸ்தர்கள் யாவரையும் கூடிவரச் செய்து அவரவர் தங்கள் சரீரத்தில் வியாதியுள்ள இடங்களில் கை வைத்துக் கொள்ளும்படியாக கேட்டுக் கொண்டு அவர்களுக்காக ஜெபிக்கத் தொடங்கினார். அவ்வளவுதான், தேவனுடைய வல்லமை வியாதியஸ்தர்கள் மேல் இறங்கிற்று. அநேக நூற்றுக்கணக்கானோர் அற்புத சுகம் பெற்றனர். அற்புத அடையாளங்கள் நடைபெற்றன. எந்த ஒரு அரசாங்கமோ அல்லது அதிகாரமோ ஆவியானவருடைய அசைவாடுதலை தடைசெய்ய இயலாமற் போய்விட்டது.

அவருடைய ஒரு பெரிய எழுப்புதல் கூட்டத்திற்கு திரளான மக்கள் வந்திருந்தனர். தேவ செய்திக்குப் பின்னர் வியாதியஸ்தர்கள் தங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாக விக்கிள்ஸ்வொர்த் அமர்ந்திருந்த முன் மேடைக்கு வரும்படியாக அழைக்கப்பட்டனர். ஏராளமான மக்கள் மேடைக்கு எழுந்து சென்றனர். அதில் அநேகம் இளம் பெண்களும் இருந்தனர். அவர்களில் ஒரு குறிப்பிட்ட வாலிபப் பெண்ணை அவர் பார்த்து "நீ போ, இனி பாவம் செய்யாதே. தேவன் உன்னை குணமாக்குவார்" என்று கூறி அனுப்பிவிட்டார். அவள் ஒரு விபச்சார வாழ்க்கை கொண்ட பெண்ணாக இருந்தாள். அவளுடைய பாவத்தை கூட்டத்தினருக்கு முன்னர் கூறி அவளை அவமானப்படுத்த விரும்பாமல் அப்படிச் சொன்னார். அடுத்த நாளும் அதே பெண் பெருங்கூட்டத்தோடு கூட்டமாக தனது சுகத்திற்காக மேடைக்கு எழுந்து சென்றாள். அந்த திரள் கூட்டத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்த பார்வையிலேயே "நேற்று இரவில் "நீ போ, இனி பாவம் செய்யாதே, தேவன் உன்னை குணமாக்குவார்" என்று கூறினேன். "வெளியே போய்விடு" என்று கூறிவிட்டார். கொடிய பாவங்களைச் செய்துகொண்டு தங்கள் சரீர சுகங்களைத் தேடி வரும் மக்களுக்கு அவர் பரம விரோதியாக இருந்தார். அந்த தெய்வீக சுகம் இன்னும் அவர்கள் தங்கள் பாவங்களில் நிலைத்திருக்க வழிசெய்யும் என்று தேவ மனிதர் அஞ்சினார் போலும்!

ஜேம்ஸ் சால்டர் என்ற அவருடைய மருமகன் தனது மாமா விக்கிள்ஸ்வொர்த்துடனான தனது அனுபவம் ஒன்றைக் கீழ்க்கண்டவாறு பகிர்ந்து கொள்ளுகின்றார்கள்:-

"ஒரு தேவ ஊழியத்தின் நிமித்தமாக நாங்கள் இருவரும் லண்டன் பட்டணத்திற்கு ரயிலில் வந்து அங்கிருந்து நாங்கள் போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு கிங்ஸ் கிராஸ் ஸ்டேஷனில் பஸ் பிடித்தோம். அந்தப் பேருந்தில் 2 இருக்கைகள் தான் காலியாக இருந்தன. அவர் என்னை காலியாக இருந்த பின் இருக்கையில் உட்காரச் சொல்லிவிட்டு அவர் முன் இருக்கையில் போய் உட்காரப் போன அவர் பிரயாணிகளுக்கு மத்தியில் எழுந்து நின்றவராக தனது புதிய ஏற்பாட்டைத் திறந்து "இதின் வார்த்தைகளைக் கவனித்துக் கேளுங்கள்" என்று கூறிவிட்டு அதில் ஒரு பகுதியை வாசித்துவிட்டு அதின் விளக்கத்தை அவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தார். அதைக் கேட்ட பேருந்து பிரயாணிகள் பாவ உணர்வடைந்து அழ ஆரம்பித்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் ஒரு பெரிய அசைவு அந்தப் பேருந்தில் உண்டாயிற்று. அதைத் தொடர்ந்து அவர் பயணிகளின் மேல் தனது கரங்களை வைத்து ஜெபித்தார். ஒரு பொது ஜனப் பேருந்தில் யாரால் இப்படிப்பட்ட செயலை செய்யக்கூடும்? தன்னுடைய தேவனாகிய கர்த்தர் அவரோடு இருந்தமையால் அவர் ஒரு அஞ்சாத சிங்கமாகவே காணப்பட்டார்".

மற்றொரு தடவை விக்கிள்ஸ்வொர்த் லண்டன் பட்டணம் செல்லுவதற்காக பிராட்ஃபோர்ட் என்ற இடத்தில் ரயில் ஏறினார். தேவ ஆவியானவரின் நடத்துதலின்படி ரயில் பெட்டியில் ஒரு மூலையான இடத்தைத் தெரிந்து கொண்டு அதில் அவர் உட்கார்ந்தார். அந்தப் பெட்டியில் அவருடன் ஐந்து பிரயாணிகள் இருந்தனர். அவர் தனது வழக்கப்படி தன்னுடைய புதிய ஏற்பாட்டைத் திறந்து வாசித்துவிட்டு அமைதியாக தனக்குள்ளாகவே ஜெபித்தார். தன்னோடு பயணம் செய்து கொண்டிருக்கும் அந்த சக பயணிகளிடம் அவர் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசவில்லை. லண்டன் பட்டணத்தை ரயில் எட்டிப்பிடிக்க இன்னும் 30 மைல்கள் தூரமே இருக்கும் வேளையில் அவர் ரயிலிலுள்ள ஓய்வு அறைக்குச் சென்றார். அங்கு சென்றுவிட்டு அவர் தனது இருக்கைக்கு திரும்பவும் வந்தபோது அவரது இருக்கைக்கு அருகில் உட்கார்ந்தருந்த மனிதன் விக்கிள்ஸ்வொர்த்தைப் பார்த்து "என்னை அறியாமலே ஒரு வித பயம் என்னை ஆட்கொண்டிருக்கின்றது. அது என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. நான் மரிக்கப்போகின்றேன் என்ற எண்ணம் என்னில் மேலோங்கி நிற்கின்றது" என்று கூறினான். மற்ற 4 பயணிகளும் தங்களுக்கும் அதுவேதான் அனுபவம் என்று சேர்ந்து கூற அந்த தேவ மனிதர் பாவ உணர்வையும், மனந்திரும்புதலையும், இரட்சண்யத்தையும் மிகவும் விபரமாக அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

விக்கிள்ஸ்வொர்த்தும் அந்த ஐந்து பேரும் அவர்கள் பயணம் செய்து வந்த ரயில் பெட்டியிலேயே முழங்காற்படியிட அங்கேயே அவர்கள் ஐவரும் இரட்சிப்பின் பாத்திரங்களானார்கள். இப்படிப்பட்ட ஆத்தும ஆதாய அனுபவங்கள் தேவ மனிதருக்கு நிறைய உண்டு.

விக்கிள்ஸ்வொர்த் எதை எல்லாம் செய்தாரோ அவைகளை எல்லாம் தனது அருமை இரட்சகர் இயேசுவின் மேல் அன்பு பொங்கி செய்தார். மக்களின் ஆரவார புகழ்ச்சி அல்லது ஏதாவது பிரதிபலன் எதிர்நோக்கி அவர் அவைகளை ஒருக்காலும் செய்யவில்லை. குழந்தைகள் பால் அவருக்கு மாபெரும் அன்பு இருந்தது. அந்த அன்பை இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் கண்டு கொள்ள நீண்ட காலம் பிடிக்கவில்லை. இங்கிலாந்திலுள்ள லிவர்பூல் துறைமுகம் அந்த நாட்களில் ஒரு பெரிய துறைமுகமாக இருந்தது. விக்கிள்ஸ்வொர்த் அந்த துறைமுகப் பட்டணத்துக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளை ஒன்று கூட்டி அவர்களுக்கு இயேசு இரட்சகரைக் குறித்துப் பேசுவார். அந்தக் குழந்தைகளில் அநேகர் ஏழைகளானதால் அவர் தமது பணத்தில் பெரும் பகுதியை அவர்களுடைய நல்வாழ்வுக்காக செலவிட்டார். அவர்களில் நூற்றுக்கணக்கானவர்களை அவர் கிறிஸ்துவுக்குள்ளாக வழிநடத்தினார்.

தனது தேவ ஊழியங்களின் மூலமாக உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆத்தும இரட்சிப்பையும், சரீர சுகத்தையும் தேவன் மூலமாக வாங்கிக் கொடுத்த அவர் வெளிநாட்டு மிஷன் ஊழியங்களுக்கு மிகவும் தாராளமாக வாரி வழங்கினார். ஆப்பிரிக்கா தேசத்திலுள்ள "காங்கோ சுவிசேஷ மிஷன் ஸ்தாபனம்" அவரது உள்ளத்திற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதற்கு அவர் ஏராளமாகக் கொடுத்தார். அந்த ஸ்தாபனத்தை அவரது மருமகன் ஜேம்ஸ் சால்ட்டரும், பர்ட்டன் என்பவரும் ஆரம்பித்திருந்தார்கள். அதற்கு இன்று 4000 சபைகள் உண்டு.

விக்கிள்ஸ்வொர்த்தின் ஆத்தும ஆதாயத்தின் இரகசியம் அவர் எப்பொழுதும் தேவனுடைய சிங்காசனத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததுதான். வேதசாஸ்திரத்தின் அடிப்படையில் ஆத்துமாக்களோடு வாதம் செய்ய அவருக்கு நேரம் கிடையாது. அவருடைய ஒரே குறிக்கோள் இழந்து போனதை தேடுவதுதான். ஆத்தும ஆதாயத்தில் தேவனுடைய வழிகாட்டுதலும் அவருடைய சித்தமும் என்ன என்பதை தேடிக் கண்டு பிடிப்பதே விக்கிள்ஸ்வொர்த்தின் கதறுதலாக இருந்தது. மற்ற தேவ ஊழியர்கள் ஆத்தும ஆதாயத்தில் கையாளுகின்ற மனுஷ ஞானத்திற்குரிய உபாயங்களும், நுணுக்கங்களும் அவருக்கு பிடிக்காத காரியங்களாகும். ஆத்தும ஆதாயத்தில் ஆண்டவருடைய ஒத்தாசையை மாத்திரம் அவர் தேடியதால் அவருக்கு ஆத்துமாக்கள் அவர் விரும்பிய வண்ணமாக கிடைத்தனர். தேவனும் தம்முடைய தாசனின் மேலான நோக்கத்தை கனம் பண்ணினார்.

சாலொமோன், இஸ்ரவேலிலே ராஜாவாக சிம்மாசனம் ஏறியபோது "உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும் அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்" (1 இரா 3 : 9) என்று தேவனிடம் கேட்டான். "ஞானமுள்ள" (Understanding) என்ற வார்த்தைக்கு எபிரேய பாஷையில் "கேட்கின்ற அல்லது கவனிக்கின்ற" என்பதுதான் அர்த்தமாகும். ஆத்தும ஆதாயத்தில், மாபெரும் தேவ மனிதர் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்தின் இதயத்தின் கதறுதலும் ஒரு துளிதானும் பிசகாமல் அப்படியேதான் இருந்தது. ஆண்டவரின் சத்தம் கேட்டு அவருடைய திருவுள சித்தம் செய்தார்.

"என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனுஷர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்" (மத் 4 : 19) என்று ஆண்டவர் சொன்ன வார்த்தைகள் ஆத்தும ஆதாய வெற்றிக்கான அடிப்படை அஸ்திபாரம் என்று விக்கிள்ஸ்வொர்த் கூறுவார். "என் பின்னே வாருங்கள்" என்ற வார்த்தையின் பொருள் "பரிசுத்த கர்த்தராகிய என்னைப் போலாகுங்கள்" (Be like me) என்பதாகும். "நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் போலாகிவிட்டால் நம்மைப் பார்ப்போர் எளிதாக அவரிடம் வந்து விடுவார்கள்" என்று அவர் சொல்லுவார். தன் ஆண்டவரைப் போல மாற்றம் பெற்ற விக்கிள்ஸ்வொர்த்தின் தேவ ஊழியம் மனுப்புத்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் அற்புதங்களை நடப்பித்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

 

பரிசுத்த தேவ மனிதர்

ஒரு கிறிஸ்தவன் தனது மன உணர்ச்சிகளுக்கு அதாவது மனோபாவங்களுக்கு ஒருபோதும் அடிமைப்பட்டு ஆளப்படக்கூடாது என்று விக்கிள்ஸ்வொர்த் சொல்லுவார். அநேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய கோபத்துக்கு அடிமைகளாக இருக்கின்றனர். ஏன்? விக்கிள்ஸ்வொர்த்தும் கூட ஒரு காலத்தில் இந்த அருவருப்பான கோபத்துக்கு அடிமைப்பட்டுத்தான் கிடந்தார். அதிலிருந்து ஒரு நிரந்தர விடுதலையைப் பெற்றுக் கொள்ள அவர் தனது ஆண்டவரோடு அதிகமாக தனித்திருந்து அதின்மேல் ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொண்டார். அதின் பின்னர் அவர் நீடிய பொறுமைசாலியாக விளங்கினார். தனக்கு விரோதமாக எழுந்த குற்றச்சாட்டுகள், உபத்திரவங்கள் யாவிலும் அவர் அசாதாரணமான பொறுமையை காண்பித்து தேவ நாமத்தை மகிமைப்படுத்தினார். அவர் எவரையும் குற்றங்கூறி குறைகள் பேசவில்லை.

"உலக கவர்ச்சி எனது ஆண்டவர் பேரிலுள்ள எனது அன்பை குளிர்ச்சியடையப் பண்ணி அனல் குன்றச் செய்துவிடும்" என்ற பக்தன் ஜாண் வெஸ்லியின் வார்த்தைகளை அப்படியே ஏற்று நடந்தார். அவர் மாபெரும் தேவ மனிதராக இருந்ததற்குக் காரணம், எது எதற்கு, எந்த எந்த வரிசையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தார்.

நான் ஒரு தடவை அவரைப் பார்த்து எப்பொழுதாவது அவர் செய்தித் தாட்களை வாசித்தது உண்டுமோ என்று கேட்டேன். அதற்கு அவர் "செய்தித் தாட்களின் தலைப்பு செய்திகளுக்கு மேல் நான் எதையும் வாசித்ததில்லை" என்று சொன்னார். நான் திரும்பவுமாக அவரைப் பார்த்து "ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? செய்தித் தாட்களை வாசிப்பதில் நம்பிக்கை இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர் மாறுத்தரமாக "அது எனது காரணம் அல்ல, செய்தி தாட்களை வாசிக்க எனக்கு நேரம் கிடையாது. அத்துடன் பாதி உண்மையை மாத்திரம் எனக்குக் கொடுக்கக்கூடிய செய்தி தாட்களை நான் ஏன் வாசித்து எனது பொன் போன்ற காலத்தை வீண் விரயம் செய்ய வேண்டும்? அதைக் காட்டிலும் முழு சத்தியத்தையும் நமக்குத் தெரிவிக்கக்கூடிய ஆண்டவருடைய வேத புத்தகத்தை வாசிக்கலாமே" என்றார். "மனிதனுடைய வார்த்தையைவிட தேவனுடைய வார்த்தையே தெரிந்து கொள்ளப்படத்தக்கது" என்று அவர் சொல்லுவது வழக்கம். தேவனுக்கு முற்றுமாக ஒப்புக் கொடுத்தலை அவர் விசுவாசித்தார். "நமது பழைய பாவ மனுஷனை நாம் அடக்கி ஆள முயற்சிக்கின்றோம். அது நம்மால் முடிவதில்லை. ஆனால் நாம் நம்மை முழுமையாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கும் போது அது இலகுவில் சாத்தியமாகும்" என்று அவர் சொல்லுவார். தனது அருமை இரட்சகர் இயேசுவைப் போல மாற்றம் அடைய வேண்டும் என்ற அவரது கட்டுக்கடங்கா தாகம் ஒன்றுதான் அவரது தேவ ஊழியங்களை வெற்றியாக்கிக் கொடுத்தது.

விக்கிள்ஸ்வொர்த் எந்த ஒரு பள்ளிக்கும் சென்று முறையாக கல்வி பயின்றவர் அல்ல. வீட்டின் வறுமை காரணமாக அவர் தனது பிஞ்சு வயதான 6 ஆம் வயதிலேயே தனது தாயாருடன் மற்றவர்களுடைய வயல்களில் முள்ளங்கி தோண்டச் சென்றார். அவரது 7 ஆம் வயதில் அவரது பெற்றோர் அவரை ஒரு நூற்பு ஆலைக்கு வேலைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தினமும் 12 மணியிலிருந்து 14 மணி நேரங்கள் வரை கடினமாக வேலை செய்தார். பள்ளிக்குப் போவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் தனது 26 ஆம் வயதில் தனது மனைவி மூலமாக எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டார். ஒரு காலத்தில் விக்கிள்ஸ்வொர்த்தின் மனைவி மேரி ஜேன் அம்மையார்தான் பிரசங்கியார் அம்மாவாக இருந்தார்கள். விக்கிள்ஸ்வொர்த், வீட்டின் மற்ற வேலைகளையும், ஏன், களிப்பறையை சுத்தம் செய்வது வரை அவரது வேலையாக இருந்தது. ஆனால், விக்கிள்ஸ்வொர்த் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டதும் நிலைமை தலை கீழாக மாற்றம் அடைந்தது. அடுத்து வந்த நாட்கள் ஒன்றில் தனது கணவருடைய பிரசங்கம் ஒன்றைக் கேட்டுவிட்டு மேரி ஜேன் அம்மையார் "இது எனது ஸ்மித் அல்ல (கணவரை "ஸ்மித்" என்றுதான் அழைப்பார்கள்) ஆண்டவர் அவரிலிருந்து பேசுகின்றார்" என்று கூறி கண்ணீர் விட்டு ஆனந்தத்தால் கதறி அழுதார்கள்.

1913 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் முதல் தேதி புது வருட பிறப்பு அன்று விக்கிள்ஸ்வொர்த்தின் அருமை மனைவி மேரி ஜேன் தேவ ஊழியம் காரணமாக வெளி ஊர் சென்றிருந்தார்கள். அவர் தனது மனைவியை "பாலி" என்றே அன்புடன் அழைப்பார். அந்த தேவ ஊழியப்பாதையில் அம்மையார் சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று மரித்துப் போனார்கள்.

அவருடைய உத்திரவின்படி அம்மையாரின் ஜீவனற்ற சடலம் அவர்களது அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அவர்களது படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டது. அவர்களின் சரீரத்தை சுமந்து வந்தவர்கள் கடந்து சென்றதும் விக்.கிள்ஸ்வொர்த் தனியனாக அம்மையாரின் அறைக்குச் சென்று, தனக்குப் பின்னாக அறையை மூடிவிட்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மரணத்தைக் கடிந்து கொண்டு தனது மனைவியைவிட்டு அது கடந்து செல்லக் கட்டளையிட்டதும் அம்மையார் தனது கண்களைத் திறந்து முதற் பார்வையாக தனது கணவனையே பார்த்து

"இதை ஏன் செய்தீர்கள் ஸ்மித்?" என்று கேட்டார்கள்.

"என் அன்பே பாலி, நீ எனக்குத் தேவை" என்றார் விக்கிள்ஸ்வொர்த்.

"ஸ்மித், எனது தேவப் பணி நிறைவு பெற்றுவிட்டது. தேவன் என்னை அழைக்கின்றார்" என்று அம்மையார் கூறினார்கள். அவர்கள் இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கப்பால் தேவ மனிதர் தன் மனைவியைப் பார்த்து "நல்லது பாலி, நான் உங்களைப் போக அனுமதிக்கின்றேன்" என்று சொன்னார். பின்னர் மேரி ஜேன் அம்மையார் தனது தலையை தலையணையில் வைத்துப் படுத்து தனது ஆண்டவரண்டை கடந்து சென்றார்கள். தனது மகிழ்ச்சிக்கும், வாழ்வின் தேவைக்கும் அவசியமான மிக முக்கியமான சந்தர்ப்பத்தில் விக்கிள்ஸ்வொர்த் தனது ஆண்டவருடைய திருவுளச் சித்தத்துக்கு மாறாக எதுவும் ஆண்டவரோடு பேசி வாதாடி தனது ஆவலை நிறைவுசெய்யாமல் தனது தலையைத் தாழ்த்தி தேவனுடைய சித்தத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

 

ஏனோக்கைப் போல எப்பொழுதும் தேவனோடு
சஞ்சரித்துக் கொண்டிருந்த தேவ மனிதர்

விக்கிள்ஸ்வொர்த், பாவ மாந்தர்பாலும், வியாதியஸ்தர்கள், பிசாசின் பிடியில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த மக்கள்பாலும் தனது ஆண்டவரைப் போல மனதுருக்கமும், அன்பும் கொண்டு அவர்களுக்காக உள்ளம் உருகினார். காரணம், அவர் தனது பெரும்பாலான நேரத்தை தனது ஆண்டவர் இயேசுவின் சமூகத்தில் செலவிட்டதுதான்.

யாரோ ஒருவர் அவரைப் பார்த்து, நீண்ட மணி நேரங்களை தேவனுடன் ஒழுங்காக ஜெபத்தில் செலவிட்டு வருகின்றீர்களா என்று கேட்டபோது அவர் பிரதியுத்தரமாக "நான் ஒரே சமயத்தில் அரை மணி நேரத்துக்கும் கூடுதலாக ஜெபிப்பதில்லை. ஆனால், அரை மணி நேர இடைவெளிக்கும் அதிகமாக என்னால் ஜெபிக்காமல் இருக்க முடிவதில்லை" என்றார். ஜெபமே அந்த தேவ மனிதரின் ஜீவனாக இருந்தது. எல்லாவற்றைக் காட்டிலும் ஜெபத்தையே அவர் அதிகமாக வாஞ்சித்துக் கதறினார். ஜெபம் ஒன்றே அவரது வல்லமையின் இரகசியமாக இருந்தது.

மரித்தோரை உயிரோடு எழுப்புவதே அற்புதங்களில் எல்லாம் மாபெரும் அற்புதம் என்று ஒருவர் நினைக்கலாம். எனினும் பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் அகிரிப்பா ராஜாவிடத்தில் பேசும்போது "தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?" (அப் 26 : 8) என்று கேட்பதை நாம் பார்க்கின்றோம்.

எனக்குத் தெரிந்த வரை 14 தடவைகள் விக்கிள்ஸ்வொர்த் மரித்தோரை உயிரோடு எழுப்பியிருக்கின்றார். சில வேளை அவர் மரித்தோருக்காக ஜெபித்து அவரை உயிரோடு எழுப்புவார். மற்ற வேளை தேவனுடைய வார்த்தையைக்கூறி அதிகாரத்தோடு மரணத்தைக் கடிந்து கொண்டு மரித்தோரை மீண்டும் உயிர்பெறச் செய்வார். இரண்டு சம்பவங்களை கவனியுங்கள்.

ஒரு தடவை விக்கிள்ஸ்வொர்த் 5 வயதான ஒரு சிறுவனுடைய மரண வீட்டிற்குச் சென்றிருந்தார். அந்த வீட்டின் மக்கள் அந்தக் குழந்தைக்காக அழுது கதறிக் கொண்டிருந்தனர். சிறுவன் வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டி அருகில் தேவ மனிதர் சென்றதும் அந்த சிறுவனின் தகப்பன் அவன் முகத்தை மூடியிருந்த துணியை விலக்கி குழந்தையின் முகத்தை அவர் பார்க்கும்படியாகச் செய்தான். அதைக் கண்டதும் மரணமானது ஒரு சிசுவின் மேல் செலுத்தியிருந்த ஆதிக்கத்தின் கொடுமையை அவர் கண்டு ஆவிக்குள் கலங்கினார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.

சற்று நேரம் சென்ற பின்னர் அந்தக் குழந்தையைச் சுற்றிலும் அமர்ந்து அழுது கொண்டிருந்த யாவரையும், ஏன், அதின் தந்தையையும் கூட அறையை விட்டு வெளியே போகச் செய்து கதவைத் தாழ்ப்பாழிட்டு உள்ளே இருந்து கொண்டார். மரித்துப் போன அந்த பாலகனை பிரேதப் பெட்டியிலிருந்து வெளியே தூக்கி எடுத்து அறையின் ஒரு மூலையில் அந்தச் சடலத்தை நிற்கும் விதத்தில் தலையணைகள், துணிகள் போன்றவற்றை பயன்படுத்தி வைத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் மரணத்தைக் கடிந்து கொண்டு அது பறித்துக் கொண்ட அந்தச் சின்னஞ்சிறு பாலகனின் உயிரை திருப்பிக்கொடுக்குமாறு கட்டளையிட்டபோது சிறுவன் உயிர் பெற்றான். அவனை அவனுடைய துயரம் நிறைந்த பெற்றோர்களிடம் ஜீவனுள்ளவனாக மகிழ்ச்சியோடு அவர் ஒப்புவித்துச் சென்றார்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் மரித்துப் போன ஒரு மனிதரை உயிரோடு எழுப்புவதற்காக விக்கிள்ஸ்வொர்த்தை மரித்துப் போன வீட்டினர் அழைத்தனர். தேவ மனிதர் அந்த மனிதனுக்காக ஜெபித்த போது அவன் உயிரோடு எழும்பிவிட்டான். எனினும், அவனை முன்பு கொன்ற அதே வியாதி திரும்பவும் வாதித்து வேதனைப்படுத்துவதை அந்த மனிதன் கண்டான். அதைக் கண்ட விக்கிள்ஸ்வொர்த் அந்த மனிதனின் குடும்பத்தினரைப் பார்த்து அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவாக வேண்டியவர்களோடு ஒப்புரவாகி தேவனுக்கு முன்பாக காரியங்களை சரி செய்யாத பட்சத்தில் அந்த மனிதன் திரும்பவும் மரித்துப் போவான் என்று கூறிவிட்டார். அவருடைய வார்த்தையின்படி அந்தக் குடும்பத்தினர் தங்களுடைய பாவ அக்கிரமங்களை தேடிக் கண்டு பிடித்து கர்த்தருக்கு முன்பாக அவைகளை அறிக்கையிட்டு காரியங்களை சீர் செய்ததின் காரணமாக அந்த உயிர்பெற்ற மனிதன் திரும்பவும் 30 ஆண்டு காலம் இந்த உலகத்தில் உயிர் வாழ்ந்தான். விக்கிள்ஸ்வொர்த் ஆண்டவருடைய ஊழியத்தில் இத்தனை வல்லமையாக விளங்கியது திடீரென்று அவருக்கு வந்து கிடைத்த ஒரு அதிசய அற்புதமல்ல. பல்லாண்டு காலமாக ஆண்டவருடைய பாடசாலையில் பற்பலவிதமான பாடுகள், போராட்டங்கள், தேவப் பகைஞரால் அவருக்கு நேரிட்ட நெருக்கங்களின் ஊடாக கடந்து கடந்து வந்து பெற்ற முதிர்ச்சியானதொரு தேவ ஊழியமாகும். "தேவனை நான் வாஞ்சித்துக் கதறாமல் இருந்த ஒரு காலத்தை என்னால் நினைவுகூர்ந்து பார்க்க இயலவில்லை. நான் ஆண்டவரை எப்பொழுதும் தாகத்தோடும் தவனத்தோடும் தேடிக்கொண்டேயிருக்கின்றேன். ஒரு பலசாலியான இளவயது வாலிபனைப் போன்று தேவ சமூகத்தில் நான் நின்று அவரது உதவிக்காக கெஞ்சிக்கொண்டே இருக்கின்றேன்" என்று ஒரு தடவை தேவ மனிதர் சொன்னார்.

 

கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும்
தியானமாயிருந்து அதற்கு நடுநடுங்கிய
தேவ மனிதர் (சங் 1 : 2, ஏசாயா 66 : 2)

இரண்டு காரியங்கள் விக்கிள்ஸ்வொர்த்தின் முழு வாழ்க்கையையும் அவரது தேவ ஊழியத்தையும் ஆளுகை செய்து கொண்டிருந்தது. ஒன்று அவர் தேவனுடைய வார்த்தையின் மேல் பட்சிக்கிற அக்கினியான வாஞ்சையும் விருப்பமும் கொண்டிருந்தார். இரண்டாவது, அந்த வார்த்தையின் அதிபதியாம் சர்வ வல்ல தேவனிடம் கட்டுக்கடங்கா நேசம் பாராட்டி அவரில் அன்புகூர்ந்தார்.

"உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்" (சங் 119 : 97)

"மிகுந்த கொள்ளையுடமையைக் கண்டு பிடிக்கிறவன் மகிழுகிறது போல நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன்" (சங் 119 : 162)

"உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்" (சங் 119 : 163)

"உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு, அவர்களுக்கு இடறலில்லை" (சங் 119 : 165)

மேற்கண்ட நான்கு வசனங்களும் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்தின் பரிசுத்த வாழ்வின் கருப் பொருளாகும். 15 நிமிடங்களுக்கு மேல் அவரால் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்காமல் இருக்க முடியாது. எந்த ஒரு இடத்தில் இருந்தாலும் எப்படிப்பட்ட மக்களின் சகவாசத்தில் அப்பொழுது இருந்தபோதினும் அவர் அதைச் செய்து வந்தார். ஆகாரம் சாப்பிடும் சாப்பாட்டு மேஜையிலும் அவர் அதைச் செய்தார்.

ஒரு தடவை எனது சகோதரன் அவரை தனது வாகனத்தில் அவர் தேவனுடைய செய்தியை கொடுக்க வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தான். அவர்கள் போய்க் கொண்டிருந்த போது அவர்கள் இருவரும் உலகத்தின் நடப்புச் செய்திகளை பேசிக்கொண்டு சென்று கொண்டிருந்த சமயம் தேவ மனிதர் திடீரென்று சத்தமிட்டு "நிறுத்துங்கள்" என்று கூறவும் எனது சகோதரன் மிகவும் பயந்து ஏதோ ஆகிவிட்டது என்று வாகனத்தை நிறுத்தியிருக்கின்றான். அப்பொழுது விக்கிள்ஸ்வொர்த் தலை குனிந்து "ஆண்டவரே, நான் மிகவும் துக்கமடைகின்றேன். நாங்கள் உம்மையும், உமது வார்த்தைகளையும், அழியும் ஆத்துமாக்களையும் குறித்துப் பேசாமல் மற்ற எல்லாக் காரியங்களையும் பற்றி பேசிக்கொண்டு வந்துவிட்டோம். எங்களை தயவாக மன்னியும்" என்று ஜெபித்திருக்கின்றார். அதின் பின்னர் மீதமுள்ள அவர்களது பயணத்தின் சம்பாஷணை ஆண்டவருடைய காரியமாக இருந்திருக்கின்றது.

"நான் கர்த்தரை அவரது வார்த்தையின் மூலமாக மாத்திரமே அறிந்து உணர்ந்து கொண்டிருக்கின்றேனே தவிர வெறும் உள்ளத்தின் உணர்ச்சிகள், மனதின் தூண்டுதல்களைக் கொண்டல்ல" என்று அவர் சொல்லுவார்.

"சிலர் ஆண்டவருடைய வார்த்தைகளை எபிரேய பாஷையில் வாசிக்கின்றனர். மற்றும் சிலர் கிரேக்க மொழியில் படிக்கின்றனர். ஆனால், நானோ அவற்றைப் பரிசுத்த ஆவியால் படிக்கவே விரும்புகின்றேன்" என்று அவர் கூறுவார். அவருக்கு எபிரேய, கிரேக்க மொழிகளில் ஒரு வார்த்தை கூட தெரியாத போதினும் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகையோடு அவர் கொடுக்கும் தேவச் செய்திகளில் மேற்கண்ட மொழிகளின் மூலக் கருத்துக்கள் அடங்கியிருப்பதைக் கண்டு அந்த மொழிகளின் வல்லுனர்கள் பிரமிப்படைந்திருக்கின்றனர்.

தேவமனிதர் தனது தூக்கத்திற்கு இரவில் செல்லுவதற்கு முன்பாக இறுதியாக ஒரு தடவை ஆண்டவருடைய பரிசுத்த வார்த்தைகளால் தன்னுடைய இருதயத்தை நிரப்பிக் கொண்டு இளைப்பாறச் செல்லுவார். அவரது தூக்கத்திலும் அவரது உள்ளம் தேவனுடைய வார்த்தைகளையே தியானித்துக் கொண்டிருக்கும். தேவனுடைய வார்த்தைகளைக் குறித்து ஆழமான ஆவிக்குரிய கருத்துகளுடன் அவர் அடிக்கடி தனது தூக்கத்திலிருந்து கண் விழிப்பார். ஒரேயடியாக படுக்கையிலிருந்து கண் விழித்து எழுந்ததும் திரும்பவும் வழக்கம்போல முழுமையாக கர்த்தாவின் வசனங்களுக்குள் பக்தன் சென்றுவிடுவார்.

விக்கிள்ஸ்வொர்த் தமது தேவ செய்திகளை கேட்க வரும் மக்களிடம் அவ்வப்போது சொல்லும் ஒரு வார்த்தை "இரண்டு காரியங்கள் உங்களை தேவனுடைய மாபெரும் வாக்குத்தத்தங்களை நீங்கள் சுதந்தரிக்க உங்களை வழிநடத்தும். ஒன்று, உங்களுடைய பரிசுத்தம். அடுத்தது தேவன்பேரிலுள்ள உங்களது உறுதியான விசுவாசம்" என்று அவர் கூறுவார். "பின்னிட்டுத் திரும்பிப் பார்க்கும் மனிதன், தனது எண்ணங்களில் இரண்டு நினைவுகளால் குந்தி குந்தி நடக்கும் மனிதன், தனது செயல்களில் இரட்டை நிலைப்பாடுள்ள மனிதர்களுக்கு தேவனிடம் இடமே கிடையாது" என்றும் அவர் சொல்லுவார்.

அவரது மருமகன் ஜேம்ஸ் சால்டர் தனது மாமா விக்கிள்ஸ்வொர்த்தின் அதிக துணிச்சலான விசுவாசத்தைக் குறித்துக் கூறும்போது "நாங்கள் அவரது மாபெரும் உயிர் மீட்சிக் கூட்டங்களில் கலந்திருக்கின்றோம். அப்பொழுதெல்லாம் பயமும், நடுக்கமும் எங்களைப் பிடிக்கும். காரணம், அடுத்து அவர் என்ன செய்வார் என்பதை நாங்கள் எண்ணிப் பார்க்கவே அஞ்சுவோம். அந்த அளவிற்கு அவர் மனித புத்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் எல்லை கடந்து தேவனுக்காக செயலில் களம் இறங்குவார். எங்களுடைய தடுமாற்றமான விசுவாசத்தைக் காணும் அவர் எங்களிடம் எப்பொழுதும் கூறும் ஒரு காரியம் "நீங்கள் எண்ணுவது போல இன்னும் நீங்கள் ஆண்டவரோடு அத்தனை தூரம் விசுவாசத்தில் முன்னேறி வரவில்லை. சொல்லப் போனால் நீங்கள் விசுவாசப் பாதையில் இன்னும் போதுமான தூரம் கூட வந்து சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்" என்பார்.

ஒரு தடவை விக்கிள்ஸ்வொர்த் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது அவர் அருகில் இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்களோடு அவர் பேசியபோது அவர்கள் இருவரும் தாயும், மகளும் என்பது தெரிய வந்ததுடன் அவர்கள் இருவருமே நோயால் அவதிப்படுபவர்கள் என்பதுவும் அவருக்கு தெரிய வந்தது.

"என்னிடம் எனது பைக்குள் உங்கள் இருவருடைய நோய்களுக்கான கைகண்ட மருந்து உண்டு. அதைச் சாப்பிட்டு வியாதி குணமாகாமல் போன எந்த ஒரு ஆளையும் நான் பார்க்கவில்லை" என்று தேவ மனிதர் அவர்களிடம் கூறினார். அவருடைய வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெண்கள் இருவரும் அப்படியானால் அந்த மருந்தில் தங்களுக்குச் சாப்பிட ஒரு வேளை மருந்து தரும்படியாக விரும்பிக் கேட்டுக் கொண்டனர். உடனே அவர் பையைத் திறந்து தனது வேதாகமத்தை எடுத்து "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" (யாத் 15 : 26) என்ற தேவனுடைய வார்த்தையை அவர்களுக்கு வாசித்துக் காண்பித்தார். அந்த இருவரையும் தேவன் வெகு சீக்கிரமாகவே குணமாக்கினார்.

இங்கிலாந்தில் தெற்கு வேல்ஸ்ஸிலுள்ள கார்ட்டிஃப் என்ற இடத்திலுள்ள ஒரு அம்மாள் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தில் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள வைப்பிரதிகள் எவை என்று அவரிடம் ஒரு சமயம் கேட்டார்கள். அதற்கு அவர் மாறுத்தரமாக "மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் சுவிசேஷங்கள்" என்று பதிலளித்தார். மேற்கொண்டு அவர் அதை விரிவுபடுத்திக் கூறவில்லை.

ஒரு வாலிபன் ஒரு சமயம் அவரிடம் "நான் உறுதியாகப் பிடித்து நிற்பதற்கு தேவனுடைய ஒரு வாக்குத்தத்தம் எனக்கு கொடுங்கள்" என்று கேட்டான். உடனே அவர் தமது வேதாகமத்தை எடுத்துத் தரையிலே வைத்து அதின் மேல் அவனை காலூன்றி நிற்கச் சொன்னார். அவன் மிகுந்த தயக்கத்தோடு அதின் மேல் ஏறி நன்றான்.

"நீ இப்பொழுது திரளான வாக்குத்தத்தங்கள் மேல் நின்று கொண்டிருக்கின்றாய். அவைகள் ஒவ்வொன்றையும் உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்து ஏற்றுக் கொள்" என்று அந்த வாலிபனிடம் அவர் சொன்னார்.

"நாம் அனுசரிக்க வேண்டிய நான்கு சத்தியங்கள் உள்ளன. முதலாவது, தேவனுடைய வார்த்தைகளை நாம் கவனமாக வாசிக்க வேண்டும். இரண்டாவதாக, நாம் அவைகளை ஆழ்ந்து தியானித்து அவைகளை நாம் கிரகிக்க வேண்டும். மூன்றாவதாக, நாம் அவைகளை அப்படியே விசுவாசிக்க வேண்டும். நான்காவதாக, நாம் அவைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்" என்று அவர் சொல்லுவார். "வேதாகமத்தின் ஒரு பகுதியோ அல்லது முழு வேதாகமமோ எனது சட்டைப் பையில் போகாத வரை நான் முழுமையாக எனது ஆடைகளை அணிந்திருக்கின்றேன் என்று நான் எண்ணுவதே கிடையாது" என்று அவர் கூறுவார்.

மற்ற மக்கள் தங்கள் பிரயாணங்களில் ஒரு நாவலோ அல்லது ஒரு செய்தி தாளோ அல்லது ஒரு புத்தகமோ வைத்து வாசித்துக்கொண்டு போகையில் விக்கிள்ஸ்வொர்த் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தைகளையே வாசித்துக் கொண்டு செல்லுவார். அவர் ஒன்றை வாசிக்கின்றார் என்றால் அது தேவனுடைய வார்த்தையாக மாத்திரமே இருக்கும். "தேவனுடைய வார்த்தையானது முழுமையானதாகவும், இறுதியானதுமாகவும், நம்பத்தகுந்ததாகவும், எக்காலத்துக்கும் ஏற்புடையதாகவும் உள்ளது. எந்த ஒரு நிபந்தனையற்ற விதத்தில் நாம் அவைகளுக்கு சரணாகதி அடைந்து கீழ்ப்படிவதே தேவன் நம்மில் எதிர்பார்க்கும் காரியமாகும். வேதத்தில் ஒரு காரியம் எழுதப்பட்டிருக்கிறது என்றால் அதை அப்படியே ஏற்று அதற்கு கீழ்ப்படிந்து நடப்பதே நமது கடமையாகும்" என்று விக்கிள்ஸ்வொர்த் சொல்லுவார்.

 

மனத்தாழ்மை நிறைந்த தேவ பக்தன்

விக்கிள்ஸ்வொர்த் தமது கூட்டங்களில் நடைபெற்ற எந்த ஒரு அற்புத சுகங்களுக்கும் தன்னைக் காரணம் காட்டி அந்தப் புகழ்ச்சியை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆண்டவர் இயேசு ஒருவர் மாத்திரமே எல்லா புகழ்ச்சிக்கும், கனம் மகிமைக்கும் பாத்திரர் என்று கூறியதுடன் தன்னைப் புகழ்ந்த மக்களை வன்மையாக கடிந்து கண்டித்தார். ஒரு தடவை தேவன் அவரிடம் "விக்கிள்ஸ்வொர்த், நான் உன்னை எரித்துச் சாம்பலாக்கப் போகின்றேன். ஆம், விக்கிள்ஸ்வொர்த் என்ற சுவடே இல்லாமல் நான் உன்னை எரிப்பதன் மூலமாக இயேசு ஒருவர் மாத்திரமே உன்னில் மகிமைப்படுவார்" என்று தேவன் தன்னிடம் சொன்னதாக அவர் கூறினார். அந்த தேவ மனிதரைப் பொறுத்த மட்டில் ஆண்டவர் அவரிடம் சொன்னதுதான் அப்படியே நடந்தது. அவர் எந்த ஒரு நிலையிலும் தன்னை வெளிக்கு காண்பிக்கவே இல்லை.

பெருமையினால் எழக்கூடிய கொடிய ஆபத்தை விக்கிள்ஸ்வொர்த் நன்றாக அறிந்திருந்தார். தனக்கும் தன் ஆண்டவருக்குமுள்ள பரிசுத்த உறவுக்குள் இந்தக் கொடிய பெருமை வந்து ஆக்கிரமிப்பு செய்துவிடாதபடி அதைக் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்தார். அதைக் கட்டுக்குள் வைத்து அடக்கி ஆள்வதற்காக அவர் தினமும் கர்த்தாவின் கல்வாரி அன்பை நினைப்பூட்டும் ராப்போஜனத்தை எடுத்து வந்தார். ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்களுக்கு கர்த்தருடைய ராப்போஜனம் என்பது கடமையும் அர்த்தமற்றதுமாக இருக்கின்றது. ஆனால், விக்கிள்ஸ்வொர்த் மிகுந்த பயபக்தியோடும், நடுக்கத்தோடும், ஆண்டவருடைய சிலுவைப் பாடுகளை மெய்யாகவே தனது கண்களுக்கு முன்னர் வைத்து கண்ணீரோடு அதை எடுத்தார்.

அதின் காரணமாக அவர் தன் ஆண்டவரோடு எந்த ஒரு இடைவெளியும் இல்லாத தொடர்ச்சியான ஐக்கிய சகவாசத்தில் செடியும் கொடியும் போல நிலைத்திருந்தார். இதின் நிமித்தமாக அவர் ஆண்டவருடைய ஊழியத்துக்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருந்தார். எந்த ஒரு ஊழிய அழைப்பும் ஆயத்தமில்லாத சமயத்தில் திடீரென்று அவருக்கு வரவில்லை.

"நீங்கள் உங்களை ஆயத்தம் பண்ணிக் கொள்ளுவதை விட்டு விடுவீர்களானால், ஊழியத்திற்காக வரும் சந்தர்ப்பத்தை கை நழுவ விட்டுவிட நேரிடும். அந்தப் பொன்னான தருணம் உங்கள் வாழ்வில் திரும்பவும் கிடைக்காது. நீங்கள் கால தாமதம் ஆகிவிட்டீர்கள்" என்று அவர் சொல்லுவார். தேவ ஊழியத்தின் பாதையில் அவருக்கு வரும் எந்த ஒரு அழைப்பையும் அவர் அல்லத்தட்டுவதில்லை. ஒரு உதாரணம் பாருங்கள்:-

ஒரு குறிப்பிட்ட ஒரு சபையின் குருவானவர் தனது சபையில் வியாதியாக இருந்த அங்கத்தினர் ஒருவரைச் சந்திக்க தன்னுடன் வரும்படியாக விக்கிள்ஸ்வொர்த்தை அழைத்தார். அழைப்பை உடனே ஏற்று அவர் அந்த குருவானவருடன் சென்றார். அந்த வீட்டை அடைந்ததும் அந்த வியாதியாக இருந்த அம்மையார் ஒரு செல்வந்தமான சீமாட்டி என்பதை விக்கிள்ஸ்வொர்த் கண்டு கொண்டார்.

அந்த இரு தேவ ஊழியர்களும் படுக்கையிலிருந்த அந்த சீமாட்டியின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த அம்மாவிற்கு அருகிலுள்ள பீரோக்களில் மருந்துகள் அடங்கிய பாட்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

"நாங்கள் உங்களுக்காக ஜெபிக்க வந்திருக்கின்றோம்" என்று குருவானவர் அந்த அம்மாவிடம் சொன்னார். ஆனால், தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த் அந்த அம்மையாரைப் பார்த்து "நான் உங்களுக்காக ஜெபிக்க வரவில்லை. ஏனெனில், நீங்கள் உங்கள் மருந்துகளோடும், மாத்திரைகளோடும் உங்கள் வியாதியில் ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றீர்கள். எனது ஜெபம் உங்களுக்கு அவசியம் இல்லை" என்று கூறிவிட்டு எழுந்து போய்விட்டார்.

அந்த அம்மாவை எப்படியோ சாந்தப்படுத்தி சமாதானப்படுத்தி அவர்களுக்காக ஜெபித்துவிட்டு குருவானவர் கடந்து வந்தார். குருவானவருடைய வருகைக்காக விக்கிள்ஸ்வொர்த் வெளியே காத்துக் கொண்டிருந்தார். குருவானவரின் முகம் கருகருத்துப் போயிருந்தது. "நீங்கள் தேவனுடைய திருச்சபைக்கு ஒரு பெரிய இடறு செய்துவிட்டீர்கள். அந்த அன்பான அம்மையார் நமது திருச்சபைக்கு எவ்வளவோ பணங்களை கொடுத்திருக்கின்றார்கள்" என்று சொன்னார்.

"அங்குதான் ஆபத்து இருக்கின்றது" என்றார் விக்கிள்ஸ்வொர்த்.

"நல்லது, நாம் அந்த அம்மாவை நமது தேவாலயத்தில் இனி பார்ப்பதிற்கில்லை" என்றார் குருவானவர்.

"நீங்கள் அப்படிச் சொல்லாதீர்கள். அவர்கள் சீக்கிரமாக, வெகு சீக்கிரமாகவே நமது ஆலயத்துக்கு வருவார்கள்" என்று மிகுந்த பொறுமையோடு தேவ மனிதர் கூறினார்.

அதின் பின்னர் தேவ ஊழியர்கள் இருவரும் மாலை தேயிலைப் பானம் அருந்திவிட்டு அந்த நாளின் இரவு ஆராதனைக்காக தேவாலயத்துக்குச் சென்றனர். என்ன ஆச்சரியம், மத்தியானம் மிகவும் சுகயீனமாக படுக்கையில் கிடந்த அந்த அம்மையார் தேவாலயத்துக்கு நடந்து வந்து ஜெபத்துக்காக முன்னே போனார்கள்.

"இப்பொழுது நீங்கள் ஆயத்தம்தானா?" என்று விக்கிள்ஸ்வொர்த் அந்த அம்மாவை கேட்டார்.

"ஆம், நான் ஆயத்தமாக இருக்கின்றேன். நீங்கள் எனது அறையைவிட்டு சென்ற பின்னர் நீங்கள் என்னிடம் சொன்ன வார்த்தைகளால் நான் உள்ளத்தில் குத்தப்பட்டேன். நீங்கள் சொன்னது சரியே" என்று கூறினார்கள். அந்த இராக்காலமே அவர்கள் பூரண சுகத்தை தேவனிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.

 

விசுவாசமும் வல்லமையும் நிறைந்த தேவ மனிதர்

"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" (அப் 1 : 8) என்று இயேசு தமது சீடர்களுக்கு வாக்கு கொடுத்தார்.

"பரிசுத்த ஆவி உங்களில் வரும்போது நீங்கள் பெலன் அடைவீர்கள்" என்ற வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் "வல்லமையைப் பெற்றுக் கொள்ளுவீர்கள்" (You will receive Power) என்று திருப்பப்பட்டுள்ளது. இந்த வல்லமை என்ற வார்த்தை கிரேக்க மொழியில் "டூனாமீஸ்" என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றது. இந்த "டூனாமீஸ்" என்ற வார்த்தையிலிருந்துதான் டைனோமிட், டைனோமோ என்ற வார்த்தைகளை நாம் பெற்றுக் கொண்டோம். இவைகள் எல்லாம் வெடித்துச் சிதறக்கூடிய வெடி பொருட்களை குறிப்பது என்பது நமக்கு நன்கு தெரியும்.

தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த் இந்த வல்லமை என்று அழைக்கப்படும் டூனாமிஸ்ஸை பெற்றிருந்தார். அவர் இங்கிலாந்தில் உள்ள பிராட்ஃபோர்ட் பட்டணத்தைச் சேர்ந்தவர். அந்த இடத்தில் தேவ ஊழியம் செய்ய அவர் மிகவும் கஷ்டப்பட்டார். தேவ ஊழியம் செய்ய மிகவும் கடினமான இடம் அது. விக்கிள்ஸ்வொர்த் வசித்து வந்த பிராட்ஃபோர்ட் பட்டணத்துக்குச் சமீபமாக உள்ள இடத்தில் மிச்சல் என்பவர் வாழ்ந்து வந்தார். அந்த மனிதருடைய ஆத்துமத்தின் காரியமாக அவர் அடிக்கடி பேசியிருக்கின்றார். ஆனால் எந்தவித பயனும் ஏற்படவில்லை. அதின் பின்னர் மிச்சல் வியாதிப் படுக்கையில் விழுந்த செய்தி அவரது காதுகளுக்கு வந்து எட்டினது. எப்படியாவது மிச்சலை ஆண்டவருக்குள் வழிநடத்திவிட வேண்டும் என்ற ஆவலில் விக்கிள்ஸ்வொர்த் அவரை சந்திக்க முயற்சித்தார். அந்த மனிதனின் ஆத்துமத்தின் காரியமாக உடனடியாக ஏதாவது செய்யாதபட்சத்தில் அவர் நிரந்தரமாக நஷ்டப்பட்ட பாவியாக மரிப்பார் என்பதை தேவ மனிதன் நன்கு அறிந்திருந்தார். ஆனால், மிச்சல் மிகவும் கடினப்பட்ட பாவியாக இருந்தார். விக்கிள்ஸ்வொர்த் தன்னை வந்து பார்ப்பதற்குக் கூட அந்த மனிதர் விரும்பவில்லை.

ஒரு நாள் விக்கிள்ஸ்வொர்த் ஒரு திறந்த வெளிப் பிரசங்கத்துக்கு சென்று விட்டு அப்பொழுதுதான் வீடு திரும்பியிருந்தார். வீட்டில் அவரது மனைவி இல்லை. வியாதிப்படுக்கையிலிருக்கும் மிச்சலுடைய வீட்டிற்கு அவர்கள் சென்றிருப்பதைக் கேள்விப்பட்டு அங்கு சென்றார். அவர் அங்கு சென்ற போது ஒரு பெண்ணுடைய கதறி அழும் சத்தம் அவரது காதுகளில் கேட்டது. மிச்சலுடைய மனைவியைச் சந்திக்க அவர் படுக்கட்டுகளில் ஏறிச்சென்றபோது சோகமே உருவான நிலையில் மிச்சலின் மனைவி படிக்கட்டுகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

"என்ன காரியம்?" என்று விக்கிள்ஸ்வொர்த் அந்த அம்மாவிடம் கேட்டார்கள்.

"எனது கணவர் மரித்துப் போனார்" என்று அந்த அம்மா அழுதுகொண்டே கூறினார்கள்.

விக்கிள்ஸ்வொர்த் நேராக மிச்சல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார். அவரது மனைவி மேரி ஜேன் அம்மையார் மரித்த மிச்சலின் அருகில் துக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். "முடிந்துவிட்டது ஸ்மித்" என்று அவர்கள் தனது கணவரிடம் கூறினார்கள்.

"மிச்சல் உயிரோடிருந்த நாட்களில் நான் அவரது ஆத்தும மீட்பின் காரியமாக எதுவுமே செய்ய இயலாமல் போய்விட்டது. அவர் எனது வார்த்தைகளை நம்பவே மறுத்துவிட்டார். எனினும் நான் அவரது இரட்சிப்பின் காரியமாக இப்பொழுது அவருக்கு உதவி செய்வேன்" என்று சொன்னார் விக்கிள்ஸ்வொர்த்.

"வேண்டாம் ஸ்மித், காரியங்கள் மிகவும் பிந்திப் போய்விட்டது" என்று மேரி ஜேன் சொன்னார்கள்.

அவர்கள் தனது கணவரை எவ்வளவோ முயற்சித்தும் அவரது தீர்மானத்திலிருந்து அவரை மாற்ற இயலாமற் போய்விட்டது. விக்கிள்ஸ்வொர்த் ஜெபித்தபோது மரித்த சடலம் உயிர்பெற்றது. அந்த மிச்சல் என்ற மனிதர் பின்னர் இரட்சிப்பை கண்டடைந்து அநேக ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.

விக்கிள்ஸ்வொர்த் தனது திராணிக்கு மிஞ்சிப்போவதாக அவரது குடும்பத்தினர் எண்ணி மிகவும் பயப்பட்டார்கள். ஆனால், தேவ மனிதர் தனது குடும்பத்தினரைப் பார்த்து "ஆண்டவருக்கு ஒரு பல் வலியை சுகமாக்குவது போன்ற காரியம்தான் மரித்த ஒரு மனிதனை உயிரோடு எழுப்புவதுமாகும். அதில் அவருக்கு எந்த ஒரு வித்தியாசமே கிடையாது" என்று கூறினார்.

விக்கிள்ஸ்வொர்த் 81 வயதினனாக இருந்தபோது தேவன் அவருக்கு முழுமையான புதிய பற்களைக் கொடுத்தார். அதில் எந்த ஒரு சொத்தை பற்களும் கிடையாது. "அந்தப் பற்கள் ஆண்டவரால் கொடுக்கப்பட்டவை அல்ல, அவைகள் வெறும் பொய் பற்கள் மாத்திரமே. அவரது திருட்டுத்தனத்தை நான் உலகத்துக்கு அம்பலப்படுத்துவேன்" என்று கங்கணம் கட்டிக் கொண்டு சுவிட்சர்லாந்து தேசத்திலிருந்து ஒரு பிரபலமான பல் மருத்துவர் விக்கிள்ஸ்வொர்த்திடம் வந்து அவரது பற்களை பரிசோதிக்க விரும்பினான். தேவ மனிதரும் அவனுக்கு உடனே சம்மதம் தெரிவிக்கவே அவன் அவருடைய பற்களை பரிசோதித்து பார்த்துவிட்டு "இத்தனை பூரண ஒழுங்கோடு பல் வரிசை அமைந்த பற்களை நான் ஒருக்காலும் காணவில்லை" என்று கூறி தேவனை மகிமைப்படுத்திச் சென்றான்.

 

தேவ மனிதரின் பரலோக யாத்திரை

நான் (ராபர்ட் கிப்பர்ட்) சென்று கொண்டிருந்த தேவாலயத்தின் குருவானவர் ரிச்சர்ட்சன் மரணம் அடைந்தார். நான் தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த்தை கடைசியாக சந்தித்து ஒரு வாரம் சென்ற பின்னர்தான் குருவானவர் ரிச்சர்ட்சனின் அடக்க ஆராதனை நடைபெற்றது.

ரிச்சர்ட்சனின் பிரேதப் பெட்டியை தூக்கிச் செல்ல எனது மூன்று அண்ணன்மார்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் நால்வரும் தேவாலயத்தின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தோம். தேவாலயம் திருச்சபை மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அப்பொழுது விக்கிள்ஸ்வொர்த் தேவாலயத்தினுள் வந்தார். கூடி வந்த மக்கள் யாவருடைய பார்வையும் அவர் மேலேயே இருந்தது. அவர் தேவாலயத்தினுக்குள் வந்து நாங்கள் அமர்ந்திருந்த முன் வரிசைக்குப் பின்னால் வந்து உட்கார்ந்தார்.

மரித்துப் போன குருவானவர் ரிச்சர்ட்சனை குறித்துப் பேசுவதற்காக எனது தகப்பனார் தேவாலயத்தின் குருவானவர் அறையில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் விக்கிள்ஸ்வொர்த்தும் தனது இருக்கையிலிருந்து எழுந்து படிக்கட்டுகளில் ஏறி குருவானவர் அறைக்குச் சென்றார். 87 வயதான அவர் 60 வயதான மனிதரைப் போன்று அத்தனை துடிதுடிப்பான வேகத்தில் நிமிர்ந்த நெஞ்சினனாக போனார். குருவானவரின் அறையில் அவர் என் தந்தையைக் கண்டதும் அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுவிட்டு அப்பொழுது சுகயீனமாக இருந்த எனது அக்காளுடைய சுக நலத்தை கேட்டு விசாரித்திருக்கின்றார். எனது தகப்பனார் அவரோடு பேசிக்கொண்டிருந்த வேளையில் தானே அவர் சற்று தடுமாறியிருக்கின்றார். எனது தகப்பனார் உடனே அவரை அரவணைத்துப் பிடித்து அப்படியே தரையில் தாழ்த்தி படுக்க வைத்திருக்கின்றார். அதற்குள்ளாக அவரது ஜீவன் பிரிந்துவிட்டது.

ரிச்சர்ட்சனின் அடக்க ஆராதனையை நடத்துவதற்காக வந்திருந்த விக்கிள்ஸ்வொர்த்தின் மருமகன் ஜேம்ஸ் சால்ட்டர் என்பவர் குருவானவர் அறையிலிருந்து நேராக பிரசங்க பீடத்திற்கு ஏறிச்சென்று "எனது மாமா விக்கிள்ஸ்வொர்த் சில நிமிடங்களுக்கு முன்பாக இங்கே நமது தேவாலயத்திலேயே மரித்து தன்னுடைய நித்திய பரம இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்துவிட்டார்கள் என்ற செய்தியை நான் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்" என்று கூடிவந்திருந்த திரள் கூட்டத்தினருக்கு அறிவித்தார். அது 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் நாளாகும்.

அதைக் கேட்ட திருச்சபை மக்களின் இருதயங்கள் உடைந்து நொறுங்கிப்போனது. ஆம், சற்று நேரத்திற்கு முன்பாகத்தான் கெம்பீரமாக ஆலயத்தின் நடுவாக நடந்து சென்று முன் இருக்கையில் தேவ மனிதர் உட்கார்ந்திருந்ததை அவர்களுடைய கண்கள் கண்டிருந்தன. அவருக்கு எந்த ஒரு உடல் நலக் குறைவும், வியாதி, வேதனையும் கிடையாது. மாபெரும் தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த் தனது பரம எஜமானரின் வீட்டுக்கு ஒரு நொடிப் பொழுதில் கடந்து சென்று விட்டார்.

எனக்கு நன்றாகத் தெரிந்த டாக்டர் ஒருவர் உடனடியாக தேவாலயத்துக்கு அழைக்கப்பட்டார். அவர் வந்து விக்கிள்ஸ்வொர்த்தை பரிசோதித்துவிட்டு "மானிடத்தின் எத்தனை அழகான மாதிரி உருவம். மரணம் அவரை சந்தித்ததற்கான எந்த ஒரு வெளிப்படையான காரணமே தென்படவில்லை. ஒரு வேலையாள் தனது வேலையை முடித்து வீடு வந்து தனது மேல் சட்டையை கழற்றி மாட்டி வைத்து விட்டு சற்று நேரம் ஓய்வு எடுப்பதற்காக படுத்திருப்பதைப் போன்றே விக்கிள்ஸ்வொர்த் காணப்படுகின்றார்" என்று கூறினார்.

விக்கிள்ஸ்வொர்த்தின் அடக்க ஆராதனையின்போது அவரது கல்லறையண்டை நான் நின்று கொண்டிருந்தேன். சுதேச மிஷன் ஸ்தாபனத்தின் சுவிசேஷகனாக தேவ ஊழியம் செய்யும் ஒரு சகோதரனும் என்னருகில் நின்று கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்து "அல்பர்ட், நாம் இனி என்ன செய்யப் போகின்றோம்?" என்று என்னைப் பார்த்து கேட்டார். அவருடைய குரலில் வேதனையின் துயரம் காணப்பட்டது. அவர் ஆண்டவர் பேரில் கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் தேவ மனிதரின் கல்லறையில் அவருடன் கூட அடக்கம் செய்யப்படப் போவதாக எனக்குத் தெரிந்தது.

மாபெரும் தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த்தை பார்த்து அவருடைய மாதிரியைப் பின்பற்ற தேவன் நம்மை விரும்பவில்லை. உண்மைதான், அவர் ஒரு விசேஷித்த தேவ பக்தன். அநேக விதத்தில் அவர் ஒரு ஒப்பற்ற உத்தம பக்தர்தான். ஆனால், தேவன் நம்மை நாமாகவே இருக்க விரும்புகின்றார். நாம் தேவனோடு இருக்கும்போது நாம் எத்தனை வல்லமையுள்ளவர்களாக இருப்போம் என்ற பரம தரிசனத்தை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க தேவன் நம்மைத் தூண்டுகின்றார். தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் கிரயத்தை நாம் செலுத்த ஆயத்தமாக இருக்கும் பட்சத்தில் அவர் நம்மை நம்முடைய ஊழியப்பணிகளிலே அந்த வல்லமையுள்ள தேவ மனிதர் விக்கிள்ஸ்வொர்த்தைப் போலவோ அல்லது அதற்கும் மேலாகவே நம்மை தமது நாம மகிமைக்காக பயன்படுத்த ஆயத்தமுடையவராக இருக்கின்றார்.

எந்த ஒரு முக்கியத்துவமும், சிறப்பான எந்த ஒரு திறமையுமற்ற ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் என்ற வெகு சாதாரணமான மனிதரைக் கொண்டு தேவன் இந்த உலகத்தை அசைத்தார். தன்னுடைய 26 ஆம் வயது வரை எழுதப்படிக்க தெரியாத ஒரு கல்வி ஞானமற்ற கொத்தனாரைக் கொண்டு வேதசாஸ்திர வல்லுனர்களையும், தேவ பண்டிதர்களையும் திகைப்படையச் செய்து, திரள் திரள் கூட்டமான மக்களை அவர்களுடைய வியாதிகளிலிருந்தும், பாடுகள், வேதனைகளிலிருந்தும், பிசாசின் பிடிகளிலிருந்தும் அவர்களை விடுவித்து அநேகரை ஆண்டவருடைய மந்தையின் ஆடுகளாக்கி அவர்களை நித்திய ஜீவனுக்கு பங்குள்ளவர்களாக்கினார். இத்தனை அற்புதமான விதத்தில் தேவன் அவரைப் பயன்படுத்த அவரிடமிருந்த ஒரே ஒரு எளிய காரணம் "தனது பரலோக எஜமானரின் பயன்படுத்துதலுக்கு அவர் எப்பொழுதும் தன்னை முழுமையாகக் கையளித்திருந்ததுதான்."

(ALBERT HIBBERT)


 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM