பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

ஸ்காட்லாந்து தேச பரிசுத்தவான்
ராபர்ட் மர்ரே மச்செயின்
(1813 - 1843)


"நான் பரிசுத்த ஆவியானவரால் முற்றும் நிரப்பப்பட்டிருந்தால் தேவனுடைய வார்த்தைகளை அதிகமாக வாசிக்கவும், அதிகமான நேரத்தை கர்த்தரோடு ஜெபத்தில் செலவிடவும், பாவத்திற்கு எதிராக என் ஆத்துமாவை பரிசுத்தமாக காத்துக்கொள்ளுவதிலும் மிகுந்த விழிப்புடையவனாக இருப்பேன்"

"எல்லா நிலைகளிலும் என்னை இயேசுவைப்போல மாற்றும்"

"பரிசுத்தமும் சந்தோசமும், வெளிச்சமும் வெப்பமும் ஒன்றோடு மற்றொன்று இணைபிரியா ஜோடிகளாகும்"

"தேவ மைந்தன் உலகம் அளிக்கக்கூடிய ஒரு சிறிய பாவ இன்பத்தைக்கூட தன் வாழ்வில் அனுமதித்தது கிடையாது"

"நீ உலகில் ஜீவித்தாலும் அதில் ஜீவிக்காமல் உலகைவிட்டு பிரிந்து சென்றுவிட்டவன் போல வாழ்க்கை நடத்து"

"பகற் காலம் முழுவதும் என் இயேசுவுக்காக தேவப்பணி செய்துவிட்டு இரவில் அந்த அன்பரின் புன்னகைகளின் மத்தியில் படுத்து இளைப்பாறுவது எத்தனை ஆனந்தம்"

"உனது பரிசுத்தத்துக்குதக்கதாக உனது கிறிஸ்தவ வாழ்வின் வெற்றி அமையும்"

என்பது போன்ற ஏராளமான பரிசுத்த கனி மொழிகளை உதிர்த்தவரான ராபர்ட் மர்ரே மச்செயின் என்ற பரிசுத்த குருவானவர் ஸ்காட்லாந்து தேசத்தில் எடின்பரோ என்ற இடத்தில் 1813 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் பிறந்தார். பெற்றோருக்கு கடைசி பிள்ளையாகப் பிறந்த அவர் ராபர்ட் மர்ரே என்று குடும்பத்தில் அழைக்கப்பட்டார்.

 
இளம் பருவ கால நாட்கள்

ராபர்ட் மர்ரே சிறுவனாக இருந்தபோதே மிக இனிமையாகவும், பந்த பாசத்தோடும் யாவரிடமும் பழகும் குணசீலம் இருப்பதை அவரை அறிந்தோர் யாவரும் காண முடிந்தது. எளிதாக எந்த காரியத்தையும் கிரகிக்கக்கூடிய ஆற்றலும், நல்ல ஆலோசனைகளைக் கூறினால் அதைக் கேட்டு அவற்றின்படி கீழ்ப்படிந்து நடக்கும் சிறந்த சுபாவமும் அவரில் இருந்தது.

குழந்தைப் பருவத்திலேயே அவரது ஞானம் வெளிப்படலாயிற்று. அவர் 4 வயது குழந்தையாக இருந்தபோது வியாதி வந்து அந்த வியாதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுகம் பெற்றுக்கொண்டிருந்த நாட்களில் தனது ஓய்வு நேர பொழுது போக்காக கிரேக்க மொழி அரிச்சுவடியை நன்கு புரிந்து கொண்டு அதை ஒரு சிலேட்டில் வரிசைக் கிரமமாக குழந்தைக்கேற்ற விதத்தில் கோணல் மாணலாக எழுதலானார்.

ஆரம்ப பள்ளியில் படிக்கும்போது ஆங்கிலப்பாடத்தில் பள்ளி மாணவர்கள் அனைவரிலும் திறம்பட்டவராக விளங்கினார். தன்னோடு கல்வி பயின்ற அனைத்து மாணவர்களிலும் அவரது குரல் இனிய குழலோசையின் நாத குரலாக இருந்ததுடன் மனப்பாடம் செய்து பாடப்பகுதிகளை ஒப்புவிப்பதிலும் அவர் தன்னிகரற்று திகழ்ந்தார். எடின்பரோ என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் பள்ளி மாணவர்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டிய சங்கீதங்கள் மற்றும் வேத பகுதிகளை நம்முடைய மர்ரே மச்செயின் ஒரு பிழையின்றி கேட்போர் ஆச்சரியத்தால் பிரமிக்கும் அளவிற்கு மதுரமான குரலில் ஆலய ஆராதனைகளில் ஒப்புவித்ததை ஆலயத்திற்கு வந்த மக்கள் மறவாமல் என்றும் நினைவில் வைக்க வேண்டியதாகவிருந்தது.

 
தேவனுடைய படைப்பின் மாட்சியில் மயக்கம்

மர்ரே மச்செயின் தேவனுடைய அழகான படைப்புகளில் மிகவும் துரிதமாக தனது உள்ளத்தை பறிகொடுத்துவிடும் இயல்பு அவருடைய இளமை காலம் தொட்டே இருந்து வந்தது. ஸ்காட்லாந்து தேசத்தின் கிராமப்புற காட்சிகளில் அவருக்கு கொள்ளை பிரியம் இருந்தது. கோடை கால விடுமுறை நாட்களில் அவர் தனது நண்பர்களோடு "டம்பிரிஷையர்" "ரூத்வெல்" போன்ற அழகான இடங்களுக்குச் சென்று பல நாட்களை அங்கு செலவிடுவார். கவிதை எழுதும் வரம் பெற்றிருந்த அவர் மலைகள், ஏரிகள், பசுமைப் புல்வெளிகள் போன்ற இடங்களுக்குச் சென்று கவிதை எழுதுவதற்கு வசதியாக தனது உள்ளத்தை அந்த அழகுக்காட்சிகளில் நன்கு மெருகூட்டிக் கொண்டார்.

இப்படியான அழகுக்காட்சிகளை காணச்சென்ற பயணம் ஒன்றில் மர்ரே மச்செயினும் அவரது நண்பன் ஒருவனும் சரியாக அகப்பட்டுக் கொண்டார்கள். "டங்க்கெல்ட்" என்ற மலை உச்சிக்கு அவரும் அவரது நண்பன் ஒருவனும் கால் நடையாகப் புறப்பட்டார்கள். உயர்ந்த மலையின் அழகுக்காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு "ஸ்ட்ராத்டல்" என்ற இடத்தை குறுக்கிடும் மலைகளின் ஊடாகத் திரும்பி வரும்போது ஒரு அடர்த்தியான மூடுபனி அவர்களை முற்றுமாக மூடிக்கொண்டது. எந்த திக்கிலும் ஒரு அடி கூட அவர்களால் எடுத்து வைக்க இயலாமற் போன நிலையில் சூரியன் மேல் வானில் துரிதமாக தனது பொன் நிறக் கிரணங்களை வீசி மறைய ஆரம்பித்துவிட்டது. வேறு எந்த ஒரு வழியும் இல்லாமல் மர்ரே மச்செயினும் அவரது நண்பனும் அந்த மலை உச்சியிலேயே இராப் பொழுதை செலவிட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. தங்களை மூடிக்கொள்ள ஒரு போர்வை கூட அவர்களிடம் இல்லாமல் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்த நிலையில் குளிரான மலை உச்சியில் இராக்கால மணி நேரங்களை செலவிட்டனர். நள்ளிரவின் ஆழ்ந்த அமைதியும், தங்களுக்குக் கீழாக பரவி நின்ற மலைத் தொடர்களின் கருமைக் காட்சிகளும் அவர்களின் உள்ளங்களில் நடுநடுங்கும் பய உணர்வைத் தோற்றுவித்தன. கடைசியாக இருவரும் ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி கானகப் பறவைகள் தங்கள் சிருஷ்டிகரை துதித்துப்பாடும் இன்பக்குரல்களின் இனிய சத்தம் கேட்டு அதிகாலை நேரம் கண் விழித்தார்கள். இப்படிப்பட்ட அனுபவங்கள் எல்லாம் பின் வந்த நாட்களில் பரவசம் பொங்கும் சிறந்த கவிதைகள் எழுத அவருக்கு பெரிதும் பயன் உள்ளவைகளாக அமைந்தன.

 
நல்ல தாலந்துகளைப் பெற்றிருந்த இளைஞன்

மர்ரே மச்செயின் 1827 ஆம் ஆண்டு எடின்பரோ சர்வ கலாசாலையில் படிக்கச் சேர்ந்து தனது சிறப்பான கல்விக்காக பல பரிசுகளைப் பெற்றார். உடற்பயிற்சி விளையாட்டுகள் அவருக்கு மட்டற்ற சந்தோசத்தை அளிப்பதாக இருந்தன. தனது பென்சிலை அவர் எடுத்தால் அழகான சித்திரங்களை வரைந்து விடுவார். பாலஸ்தீனா தேசத்தின் பல்வேறு அழகுக்காட்சிகளை அவர் தனது பென்சிலால் நேர்த்தியாக வரைந்திருக்கின்றார்.

இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் இருந்தது. பாடல்களை சரியாகவும், இனிமையான குரலிலும் பாடும் வரத்தை கர்த்தர் அவருக்கு அளித்திருந்தார். பின் வந்த நாட்களில் அந்தப் பாடும் வரத்தை அவர் தேவ நாம மகிமைக்காக செலவிட்டார். இவ்விதமான எல்லா சிறந்த தாலந்துகளை அவர் உடையவராக இருந்தபோதினும் இயேசு இரட்சகரை தனது ஆத்தும நேசராக ஏற்றுக்கொள்ளாத பாவியாக எபேசியர் 2 ஆம் அதிகாரம் 12 ஆம் வசனத்தின்படி "கிறிஸ்துவைச் சேராதவரும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவரும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவரும், இவ்வுலகத்தில் தேவனற்றவருமாகவே வாழ்ந்து கொண்டிருந்தார்." இந்த நிலையில் அவர் தேவ பணியை எவ்வாறு பெற்றுக்கொண்டார்? "உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரளான தண்ணீர்களிலும் இருந்தது. உமது காலடிகள் தெரியப்படாமற் போயிற்று" (சங் 77 : 19) என்ற தேவ வசனத்திற்கு இணங்க மர்ரே மச்செயினின் இருதயத்தை பாவ உணர்விற்கும் அதைத் தொடர்ந்து ஆண்டவருடைய ஊழியத்திற்கும் ஏவி எழுப்பிவிட்ட காரியத்தை நாம் அறியோம்.

 
மர்ரே மச்செயினின் மனந்திரும்புதல்

மர்ரே மச்செயின் எவ்வண்ணமாக கர்த்தர் இயேசுவின் இரட்சிப்பின் பாத்திரமாக மாறினார் என்பது பற்றி திட்டமான ஒரு சந்தர்ப்பம் இல்லாதபோதினும் அவர் 18 வயதினனாக இருந்தபோது அவரது குடும்பத்தில் ஏற்பட்ட அவரது அண்ணன் டேவிட்டின் மரணத்தை ஒருவாறு உறுதியாக சொல்ல முடியும். டேவிட் சுமார் 8 வருஷங்கள் மர்ரே மச்செயினைவிட மூத்தவர். சில காலம் வியாதிப்பட்டு இறுதியில் இரட்சிப்பின் நிச்சயத்தோடு டேவிட் மரித்தார். டேவிட்டின் மரணத்தின் மூலமாகவே பரிசுத்த ஆவியானவர் மர்ரே மச்செயினின் உள்ளத்தில் தமது ஆழ்ந்த இரட்சிப்பின் கிரியையை தொடங்கியிருந்தார். அதற்குப் பின்னர் வந்த நாட்களில்தான் மர்ரே மச்செயின் தேவனைத் தேடவும், அவரது வசனங்களை கருத்தோடு வாசிக்கவும், ஓய்வு நாள் பள்ளி ஒன்றில் தனது பணிகளை செய்யவும் ஆரம்பித்தார்.

அண்ணன் டேவிட் இறந்த ஒரு ஆண்டுக்குப் பின்னர் அவர் தமது நாட் குறிப்பில் "போன வருடம் இதே நாள் காலையில் எனது உலப்பிரகாரமான ஆனந்த வாழ்வில் பேரிடி விழுந்தது. அந்த பெரிய இழப்பின் மூலமாக நான் கர்த்தரைக் கண்டடைந்தேன். ஆ, நான் எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்று எழுதினார். தனது அண்ணன் டேவிட்டின் மரணத்தை ஒவ்வொரு ஆண்டும் அந்த குறிப்பிட்ட மரண நாளில் பக்தி வினயத்தோடு மச்செயின் நினைவுகூர்ந்தார். பதினொரு ஆண்டுகள் கழித்து அந்த நாளை நினைவுகூர்ந்து ஒரு நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் "நான் அதிக பரிசுத்தமுடையோனாகவும், ஞானமுடையோனாகவும் மாறுவதற்கு எனக்காக ஜெபியுங்கள். எனது மனுஷ சாயல் மறைந்து என் பரலோக தகப்பனின் சாயல் என்னில் ஒளி வீசிப் பிரகாசிக்க எனக்காக மனறாடுங்கள். அப்பொழுது நான் என் ஜீவனைப் பொருட் படுத்தாமல் எனது ஓட்டத்தை ஆனந்த மகிழ்ச்சியோடே ஓடி முடிப்பேன். இந்த நாளில் 11 ஆண்டுகளுக்கு முன்னர் என்னை நேசித்த என்னால் நேசிக்கப்பட்ட என் அருமை சகோதரனை நான் இழந்தேன். அந்த நாளிலிருந்து என்றும் மரிக்காமல் இருக்கக்கூடிய ஒரு சகோதரனை (இயேசுவை) நான் தேட ஆரம்பித்தேன்" என்று எழுதினார்.

 
உலகத்தின் வாசனை இன்னும் கொஞ்சம்
ஒட்டியே இருந்தது

தனது மனந்திரும்புதலுக்குப் பின்னர் 1831 ஆம் ஆண்டு குளிர் காலத்தில் மர்ரே மச்செயின் வேதசாஸ்திர கல்லூரியில் சேர்ந்து புகழ்பெற்ற கிறிஸ்தவ பண்டிதர்கள் "சால்மர்ஸ்" மற்றும் "வேல்ஸ்" என்பவர்களிடம் இறையியல் பயின்றார். ஆரம்ப நாட்களில் உலகத்தின் வாசனை அவரோடு சற்று ஒட்டியிருக்கத்தான் செய்தது. அவ்வப்போது அவர் நடனசாலைக்குச் சென்று விடுவார். சீட்டாட்டமும் அவரிடம் இருந்தது. ஆனால் உடனுக்குடன் மேற்கண்ட பாவங்களிலிருந்து தேவ பெலத்தால் அவர் தன்னை விடுவித்துக்கொண்டார். அந்தப் பாவங்களுக்காக அவர் பெரிதும் மனஸ்தாபப்பட்டார். மச்செயினின் உலக நேசத்திற்குத் துணை போன அலெக்ஸாண்டர் சாமர்வெல் என்ற வாலிபர் பின் நாட்களில் கிளாஸ்கோ பட்டணத்தில் குருவானவரானார். இருவரும் தாங்கள் கர்த்தரை விட்டு சில காலம் பின்மாறிப் போனதற்காக பெரிதும் துயரம் அடைந்து மீண்டுமாகத் தேவனைத் தேடவும் இருவரும் ஒன்றாக வேத வசனங்களை ஆராய்ந்து பார்க்கவும் தங்கள் இருதயங்களை தேவனுக்கு நேராக ஒரு முகப்படுத்தினார்கள். அந்த நாட்களில் நேரிட்ட டாக்டர் ஆண்ட்ரூ தாம்சன் என்பவருடைய பரிசுத்தமான மரணமும், அவருடைய மரணத்தின் போது பட்டணத்தின் மக்கள் யாவரும் அவருக்கு காண்பித்த துயரத்தின் சோக நிலையும் மர்ரே மச்செயினுடைய மங்கிய இரட்சிப்பின் ஒளி தீபத்தை மிகவும் பிரகாசமாக எரிய தூண்டு கோலாக அமைந்தது.

 
கர்த்தரின் உண்மையும் உத்தமமுமான
பரிசுத்த தேவ ஊழியன்

"நமது பூவுலக ஓட்டம் முற்றுப்பெறும் காலம் மட்டாக நாம் இந்த உலகத்தில் சாவாமையுள்ளவர்கள்தானே!" என்று பரிசுத்த புன்னகையுடன் கேட்ட மாபெரும் தேவ மனிதன் மர்ரே மச்செயின் 1836 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள டண்டி பட்டணத்தில் அப்பொழுதுதான் புதிதாக கட்டி முடிக்கப்பட்டிருந்த பரிசுத்த பேதுரு தேவாலயத்தின் முதல் குருவானவராக தேவப்பணியை ஏற்றுக் கொண்டார். அப்பொழுது அவருடைய வயது 23 மாத்திரமேதான். அவர் அந்த ஆலயத்தின் குருவானவராக தேவப் பணியை ஏற்றபோது அவருடைய வடக்கு கடற்கரை பட்டணமான டண்டி பற்பலவிதமான பாவ அசுசிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அதற்கு இன்னும் பாவ அழகு சேர்க்கும் வண்ணமாக திருச்சபையில் கள்ளத் தீர்க்கத்தரிசிகள் எழும்பி கள்ளத் தீர்க்கத் தரிசனம் சொல்லி மக்களை வஞ்சித்துக் கொண்டிருந்தனர். அந்த கள்ளத் தீர்க்கத்தரிசனங்களை பாவ வாழ்க்கையிலிருக்கும் மக்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு வந்தனர். அந்த மக்களுக்கு நம் இளம் போதகர் பாவத்தின் நித்திய தண்டனையான "எரி நரகத்தை" குறித்து உள்ளத்தின் வியாகுலத்தோடு "இதோ இராக்காலம் வருகிறது" என்று எங்கும் சுற்றித்திரிந்து முழங்கினார்.

பரிசுத்த பேதுரு தேவாலயத்தின் குருவானவராக பதவி ஏற்ற மர்ரே மச்செயின் தமது சபை மக்களுக்கு "கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார்" (ஏசாயா 61 : 1) என்ற தேவ வசனத்தின் பேரில் தனது முதல் பிரசங்கத்தை பிரசங்கித்தார். அந்த பிரசங்க வசனத்திற்கு ஏற்றவிதமாக பின் வந்த சுமார் 7 ஆண்டு காலத்திற்கு அதாவது அவருடைய பரம கானான் அழைப்பின் காலம் வரை தேவனுடைய ஆவியானவர் அவர் மேல் இருந்து அந்த திருச்சபையிலே ஒரு மாபெரும் உயிர் மீட்சியை ஏற்படுத்திவிட்டார்.

மர்ரே மச்செயின் தனது பிரசங்கங்களை தனது முழங்கால்களில் நின்று தேவனிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதற்காக அவர் மணிக்கணக்கான நேரங்களை கர்த்தருடைய சமூகத்தில் செலவிட வேண்டியதாக இருந்தது. டண்டியில் அவர் குருவானவராக இருந்த நாட்களின் மாலை நேரங்கள் பலவற்றிலும் "இன்வர்கோர்" என்ற இடத்தில் அழிந்து கிடந்த பண்டைய தேவாலயம் ஒன்றிற்கு தனது குதிரையில் ஏறிச்சென்று ஜெபித்து வந்தார்.

பேதுரு தேவாலய அங்கத்தினர்களின் எண்ணிக்கை 1100 ஆகும். சுகயீனமாக கட்டில் கிடையாக இருப்போர் மற்றும் மரண படுக்கையில் இருப்போர் போன்றோரைச் சந்திப்பது என்பது மச்செயினுக்கு வெகு பிரியம். குருவானவர் மர்ரே மச்செயினுடைய சந்திப்பால் தங்களுடைய மரண கட்டில்களில் ஆண்டவர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று பரலோகம் சென்றவர்கள் பலராவார்கள்.

ஒவ்வொரு வாரமும் வாலிபருக்கு அவர் ஆவிக்குரிய கூட்டங்களை நடத்தினார். அவருடைய அந்த உயிர் மீட்சி கூட்டங்களின் மூலமாக தேவன் பெரிய இரட்சிப்பை வாலிபர்களின் நடுவில் உண்டாக்கினார். அவருடைய திருச்சபையில் அநேக ஓய்வு நாள் பாடசாலைகள் அவரால் நிறுவப்பட்டன. அந்த ஓய்வு நாள் பள்ளிகளில் பாடக்கூடிய அழகான பாடல்களை அவரே இயற்றினார். "தீவட்டிக்குத் தேவையான எண்ணெய்" என்று ஆரம்பிக்கும் அவரது பாடல் மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஓய்வு நாள் பள்ளிகளுக்குத் தேவையான அருமையான துண்டுப் பிரதிகளை எல்லாம் அவரே எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

 
குழந்தைகள் மேல் கொள்ளை அன்பு கொண்டோன்

குருவானவர் மர்ரே மச்செயினுக்கு குழந்தைகள் மேல் அவரது ஆண்டவரைப்போன்று அளவு கடந்த அன்பு உண்டு. அவர்களை அவர் அதிகமாக நேசித்தார். தனது திருச்சபையின் ஓய்வு நாள் பாடசாலை பிள்ளைகளுக்காக 1839 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று "இயேசு அப்பாவிடம் குழந்தைகள் ஏன் பாடிப் பறந்து வர வேண்டும்?" என்ற உள்ளத்தைத் தொடும் துண்டுப் பிரதியை அவரே எழுதி அச்சிட்டு குழந்தைகளுக்கு வழங்கினார். பின் வந்த நாட்களில் "மந்தையின் சின்ன ஆட்டுக்குட்டிகள்" என்ற துண்டுப்பிரதியை குழந்தைகளுக்காக வெளியிட்டார்.

ஒரு நாள் ஒரு சின்ன பையனுடைய கரத்தில் அவனுடைய சிறிய வேதாகமத்தை மச்செயின் கண்டார். உடனே அதை அவனது கரத்திலிருந்து வாங்கி வேதாகமத்திலுள்ள முகப்பு பக்கத்தில் காணப்பட்ட வெள்ளைத்தாளில் தனது உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் அந்த வேளை உணர்த்திய வரிகளை ஒரு சின்ன கவிதையாக வடித்துவிட்டார். அந்த பரிசுத்த தேவ மனிதன் அந்த சிறுவனின் வேதாகமத்தில் எழுதின ஆங்கில கவிதையைப் பாருங்கள்!

Peace be to thee, gentle boy
Many years of health and joy!
Love your Bible more than play,
Grow in wisdom every day,
Like the lark on hovering wing,
Early rise, and mount and sing,
Like the dove that found no rest,
Till it flew to Noah's breast,
Rest not in this world of sin,
Till the Saviour take thee in.

தனது திருச்பையின் ஓய்வு நாள் பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மெய்யான இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெற்றவர்களாக இருப்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார். அவர்கள் தங்கள் கரத்தின் கீழுள்ள தங்கள் ஓய்வு நாள் பள்ளிப் பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராக வழிநடத்த வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். ஒரு சமயம் அவருடைய திருச்சபையிலுள்ள பெண் ஒருத்தி மச்செயின் குருவானவரின் ஓய்வு நாள் பள்ளி ஒன்றின் ஆசிரிய பணிக்காக விண்ணப்பம் செய்திருந்தாள். அவளை ஆவிக்குரிய நிலையில் பரிசோதித்த குருவானவர் மர்ரே மச்செயின் அந்தப் பெண்ணுக்கு பரிந்துரை செய்த மனிதருக்கு "நீங்கள் பரிந்துரை செய்த பெண்மணி என் ஓய்வு நாள் பாடசாலையை நடத்த முற்றும் தகுதியற்றவள். மெய்யான இரட்சிப்பின் அனுபவம் அவளுக்குக் கிடையாது. ஆனால் தையல் மற்றும் பின்னல் வேலைக்கு அவள் கெட்டிக்காரி" என்று தபால் எழுதினார்.

 
சதா தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்த
தேவ மனிதர்

குருவானவர் மர்ரே மச்செயின் வீட்டின் உள்ளே செல்லும் எந்த ஒரு மனிதனும் தேவனுடைய ஊழியமானது எத்தனை மகிழ்ச்சி நிரம்பியது என்பதை இலகுவில் கண்டு கொள்ளத்தக்க விதத்தில் அவர் வீட்டின் பொருட்களும், காரியங்களும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அவருடைய அதிகாலை மணி நேரங்கள் முற்றுமாக ஜெபத்திற்கும், வேத வசன தியானத்திற்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. தினமும் தேவனைப் பார்ப்பதற்கு முன்பாக மற்ற எவர் ஒருவரையும் அவர் பார்ப்பதே இல்லை. படுக்கையில் அதிகாலை அவர் கண் விழித்ததும் ஏதாவது ஒரு சங்கீதத்தைப் பாட்டாகப் பாடி தனது ஆத்துமாவை கர்த்தரைத் துதிப்பதற்கு ஏதுவாக ஒருமுகப்படுத்துவார். தினமும் 3 அதிகாரங்களை அவர் வேதாகமத்தில் வாசிப்பார். வேதாகமம் அவருக்கு உலகின் எல்லா பொக்கிஷங்களைக் காட்டிலும் மிக அருமையானதாக இருந்தது. உலகத்து புத்தகங்கள் அனைத்திற்கும் மேலாக அதற்கு தலைமை ஸ்தானம் கொடுத்து, அதை நேசித்து, அதை கனப்படுத்தி, அதற்குக் கீழ்ப்படிந்து அவர் ஜீவித்தார். உலகத்து மற்ற புத்தகங்கள், சஞ்சிகைகள், தினசரி செய்தி தாட்களை வாசிக்கும் விஷயத்தில் ரசவாதி (கெமிஸ்ட்) தனது ஆராய்ச்சி கூடத்தில் விஷத்தைக் கையாள்வது போன்று தேவ மக்கள் தேவனுடைய வேதாகமத்திற்கு குறுக்காக நிற்கக்கூடியவைகளை ஜாக்கிரதையாக இனம் கண்டு கையாள வேண்டும் என்று கூறினார்.

"உனது வேதாகமத்தை நீ ஒழுங்காக வாசிக்க வேண்டும். வாசிப்பது மட்டுமல்ல அதைப் புரிந்து கொள்ளும்படியாக வாசிப்பதுடன் அதை அப்படியே அப்பியாசிக்கும் விதத்தில் கருத்தாய் வாசிக்க வேண்டும். ஒரு சமயத்தில் வேதத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிக்காமல் அங்கும் இங்குமாக கலந்து வாசிக்க வேண்டும். உதாரணமாக ஆதியாகமத்தை நீ வாசித்தால் ஒரு சங்கீதத்தையும் கூட வாசிக்க வேண்டும். மத்தேயு சுவிசேஷத்தை வாசிக்கும்போது நிருபங்களில் ஒரு அதிகாரத்தையும் வாசித்தல் அவசியமாகும். வேதாகமத்தை ஜெபமாக மாற்றிவிடு. முதலாம் சங்கீதத்தை வாசித்த பின்னர் வேதாகமத்தை உனக்கு முன்பாக உள்ள நாற்காலியில் விரித்து வைத்து "ஆண்டவரே, நீர்க்கால்களின் ஓரமாக நாட்டப்பட்டுத் தன் காலத்தில் தன் கனியைத் தரும் இலை உதிராதிருக்கிற அந்த முதலாம் சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசீர்வாதமான மனிதனாக என்னை மாற்றும்" என்று நீ ஜெபி. வேதத்தை நல்லவிதமாக புரிந்து கொள்ளும் விதமும், ஜெபிக்க கற்றுக்கொள்ளும் முறையும் இதுவேதான். உனது ஜெபத்தில் உன்னுடைய பாவங்களை ஒவ்வொன்றாகப் பெயர் சொல்லி தேவ சமூகத்தில் அறிக்கையிடு. உனக்காக உன் வீட்டிலுள்ளவர்கள் ஜெபித்து வருவார்கள் என்பது உனக்குத் தெரியும். அப்படியானால் நீயும் அவர்களுக்காக ஜெபிக்கலாம் அல்லவா? கட்டாயம் நீயும் அவர்களுக்காக ஜெபிக்க மறக்காதே. மற்றவர்களுக்காக நீ ஜெபிக்கும்போது உனது தனிப்பட்ட ஜெப வாழ்வும் சிறப்பாக வளர்வதை நீ காண்பாய்"

மேற்கண்ட விதமாக ஒரு கிறிஸ்தவ பள்ளி மாணவனுக்கு மர்ரே மச்செயின் ஒரு சமயம் கடிதம் எழுதினார்.

அவரது ஜெப வாழ்க்கைக்கு சாட்சிகளாக அவரது வீட்டின் அறையின் சுவர்கள் எழுந்து நிற்கின்றன. அந்த சுவர்கள் அவர் தேவ சமூகத்தில் வடித்த கண்ணீர்களையும், அவரது ஏக்க பெரு மூச்சுகளையும் கூட குறித்து சாட்சியிடக்கூடியவைகளாக உள்ளன. அதிகாலை வேளை நாம் அவரது அறையின் பக்கமாக செல்லுவோமானால் மிகவும் மதுரமான குரலில் சங்கீதங்களை அவர் பாடுவதை நாம் கேட்கலாம். அதைத் தொடர்ந்து வேதாகமத்திலிருந்து ஒரு பகுதியை அவர் தனது ஆத்துமாவின் பரிசுத்த நிலைக்காகவும் ஜெப மணி நேரம் ஆசீர்வாதமாக இருப்பதற்காகவும் கருத்தாக வாசிப்பதை நாம் செவிமடுத்து கேட்கலாம். அந்த ஜெப தியான மணி நேரங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பரிசுத்தவான்கள் யோனத்தான் எட்வர்ட்ஸ் என்பவரின் எழுத்துக்களையும், சாமுவேல் ரூத்தர்ஃபோர்ட் என்ற பரிசுத்தவானின் கடிதங்களையும் மிகவும் ஆர்வத்தோடு வாசிப்பதுண்டு.

அதிகாலை எழுந்து சில மணி நேரம் தேவ சமூகத்தில் இன்ப உறவாடிவிட்டு அவர் தனது மேல் அறையில் இருந்து தேவப்பிரசன்னத்தின் நிறைவோடு தனது காலை ஆகாரத்திற்காக கீழே இறங்கி வரும் காட்சி காண்போர் உள்ளத்தை ஆவிக்குள் பரவசப்படுத்தக் கூடிய ஒன்றாகும். அவர் எப்பொழுதும் ஏனோக்கைப் போல தேவனோடு சஞ்சரித்துக் கொண்டே இருந்தார்.

 
தேவ மனிதரின் பாலஸ்தின சுவிசேஷ பிரயாணம்

1839 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தேசத்து பொதுவான திருச்சபை மர்ரே மச்செயினையும் அவரோடு கூட 3 ஸ்காட்லாந்து தேச குருவானவர்களையும் பாலஸ்தீனா நாட்டில் புதிதாக வந்து குடியேறிய யூத மக்களுக்கு தேவனுடைய சுவிசேஷ நற்செய்தியை அறிவிக்கும்படியாக அனுப்பி வைத்தது. அந்த மூவரில் ஆண்ட்ரூ போனர் என்ற சிறந்த தேவ பக்தன் ஒருவராவார். மர்ரே மச்செயினின் நெருங்கிய ஆவிக்குரிய தோழன் அவர்.

அந்த பாலஸ்தீன பயணம் 6 மாத காலம் நீடித்தது. இயேசுவே மெய்யான மேசியா என்று நமது சுவிசேஷகர்கள் யூதர்களுக்கு பறைசாற்றினர். இப்போது இருப்பதைப் போன்று வசதியான விமான போக்குவரத்து எதுவும் இல்லாத நாட்கள் அவை. அதின் காரணமாக மர்ரே மச்செயினும் அவரது 3 நண்பர்களும் ஒட்டகங்களிலும், கழுதைகளிலுமாக தேவனுடைய பரிசுத்த நாட்டிற்கு பயணம் செய்தனர். சில சமயங்களில் நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் கூட அவர்கள் பாலைவனத்தில் பிரயாணம் போக வேண்டியதாக இருந்தது. ஐரோப்பாவை விட்டதும் அவர்களின் பயணம் பாலைவன மார்க்கமாகவே இருந்தது. மர்ரே மச்செயின் அந்த வனாந்திர பாலைவன யாத்திரை வாழ்வைக்குறித்து கீழ்க்கண்டவாறு தமது டயரியில் எழுதி வைத்துள்ளார்:-

"வனாந்திரமான பாலைவனத்தின் மணல் பரப்பில் இருப்பது என்பது ஒரு வித்தியாசமான அனுபவமாகும். உபவாச நாட்களில் வீட்டில் முற்றும் தனித்திருப்பதைப் போன்ற அனுபவம் அது. அந்த வனாந்திர தனிமை தேவனை வெகு அருகாமையில் அழைத்துக் கொண்டு வருவதாக இருக்கின்றது. கூடாரங்களில் குடியிருந்து கொண்டு பல நாட்கள் அந்த கூடாரத்தையே வட்டம் சுற்றி வருவது என்பது புது புது பரிசுத்த உணர்வுகளை உள்ளத்தில் தோன்றப் பண்ணுகின்றன. பாலைவனத்தில் நாங்கள் நால்வரும் ஒரு விந்தையான வாழ்வை மேற்கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். எங்களைச் சுற்றிலும் பாலைவன மணற் பரப்புகள் வட்ட வட்டமாக காட்சி தருகின்றன. பாலைவனத்தில் மாத்திரம் வளரக்கூடிய முட்புதர்களையும் நாங்கள் பார்க்கின்றோம். விரிந்து வியாபித்துக் கிடக்கும் நீல வான மண்டலத்தில் ஒரு சிறிய உள்ளங்கை அளவு மேகம் தானும் கிடையாது. வெளியில் சூரிய உஷ்ணம் 96 டிகிரி செல்சியஸ் என்று எங்கள் கூடாரத்திலுள்ள வெப்பமானி காண்பிக்கின்றது. அந்த தகிக்கும் வெயிலில் நாங்கள் எங்கள் கூடாரத்தில் முடங்கிக் கிடக்கின்றோம். மாலைப்பொழுது வருகின்றது. விஸ்தாரமான சமுத்திரத்தில் சூரியனின் அஸ்தமனம் எப்படி இருக்குமோ அவ்விதமாகவே பாலைவனத்தில் சூரிய அஸ்தமனமும் நடைபெறுகின்றது. சூரியன் அஸ்தமிக்கவும் வானமெங்கும் நட்சத்திரங்கள் தங்கள் முழு மகிமையிலும் பவனி வர ஆரம்பித்துவிடுகின்றன. இரவில் நாங்கள் நால்வரும் பெரும் பாலைவனத்தில் தனிமையாக இருக்கின்றோம். எங்களுக்கு அருகில் எங்கள் ஒட்டகங்களின் சொந்தக்காரர்களான பெடுயீன் என்ற பாலைவன அராபிய பழங்குடி மக்கள் தங்கள் கூடாரத்தில் இருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாம் அறிந்தவரும், எல்லாரையும் விட எங்களை அதிகமாக நேசிக்கின்ற எங்கள் ஆண்டவர் இயேசு எங்களுக்கு அருகில் உள்ளார். பொழுது விடிய விடிய நாங்கள் எங்கள் பாலைவன பயணத்தை தொடங்கிவிடுகின்றோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 
தேவ மனிதர் மர்ரே மச்செயினின் பாலஸ்தீன அனுபவங்கள் சிலவற்றை கவனியுங்கள்:-

"எகிப்து தேசத்தில் சோவான் என்ற இடத்திற்கு நாங்கள் வந்து எங்கள் கூடாரங்களை போட்டோம். இந்த சோவானில்தான் யோசேப்பு அடிமையாக இஸ்மவேலருக்கு விற்கப்பட்டார். இங்குதான் பார்வோனுக்கு முன்பாக மோசே அதிசயங்களைச் செய்து இஸ்ரவேலரின் மீட்புக்காக அவனிடம் வேண்டி நின்றார். நாங்கள் பாலைவன மார்க்கமாக பிரயாணம் பண்ணி வந்த இடங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் இந்த சோவானில் குடியிருந்த சுதேசிகளால்தான் நாங்கள் பெரிய ஆபத்தை எதிர்நோக்க வேண்டியதாக இருந்தது. சோவானின் குடிகள் குரூரமான காட்டு மிராண்டிகளாக இருந்தபடியால் எங்களது ஒட்டக ஓட்டிகளான அராபியர்கள் அவர்களுக்கு மிகவும் அஞ்சி இரா முழுவதும் எங்களையும், தங்கள் ஒட்டகங்களையும் கரங்களில் துப்பாக்கிகள் ஏந்தி கண் உறக்கமின்றி காவல் காத்துக்கொண்டிருந்தனர். இரவில் அவ்வப்போது தங்கள் துப்பாக்கிகளிலிருந்து பாதுகாப்புக்காக வேட்டுகள் எழுப்பிக் கொண்டிருந்தனர். இரவில் நிலவு வெளிச்சம் நன்கு காய்ந்து கொண்டிருந்தது. தேவன் எங்களில் எவர் ஒருவருக்கும் சேதமில்லாமல் எங்களை பத்திரமாக பாதுகாத்துக்கொண்டார்"

எகிப்தின் வனாந்திரத்தில் நாங்கள் கடைசியாக தங்கியிருந்த நாளுக்கு முந்தின நாளில் கோனாட்டர் என்ற இடத்தில் நாங்கள் கூடாரமிட்டிருந்தோம். அந்த இடத்தில் ஒரு மரம் கூட கிடையாது. வெப்ப நிலை 92 டிகிரியாக இருந்தது. கடுமையான வெப்பத்தின் காரணமாக ஈச்சம் பாயில் படுத்த நிலையிலேயே சங்கீதங்களை வாசித்து தியானித்துக் கொண்டிருந்தோம். அது ஒரு இனிமையான கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாள். கோனாட்டர் என்ற அந்த ஊருக்கு கவர்னர் ஒருவர் உண்டு. அந்த நாளின் மாலை நேரம் கவர்னர் எங்கள் கூடாரங்களுக்கே வந்துவிட்டார். சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு கவர்னருக்கும் அவருடன் வந்திருந்த சுதேசிகளான பெடுயீன்களுக்கும் கிறிஸ்து இயேசுவிலுள்ள நித்திய ஜீவனைக் குறித்து பிரசங்கித்தோம். எங்களது தேவச்செய்தியை இப்ராஹிம் என்ற சுதேசி அராபிய மொழியில் மொழி பெயர்த்துக் கூறினார்"

"அபுஜில்பானி என்ற இடம்தான் எகிப்தின் வனாந்திரத்தில் கடைசியாக நாங்கள் தங்கியிருந்த இடமாகும். அந்த நாளின் வெப்பம் கொடுமையாக இருந்தது. ஒரு சிறிய காற்று கிடைக்காதா என்று நாங்கள் மனதார ஏங்கிக்கொண்டிருந்தோம். எங்கள் வசம் இருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்து போனபடியால் ஆட்டுத்தோல் மூடிய ஒரு துருத்தி தண்ணீரை விலைகொடுத்து வாங்கி எங்கள் தாகம் தீர குடித்தோம். அபுஜில்பானியை நாங்கள் விட்டதும் பாலஸ்தீனா நாட்டின் யூதேயாவின் எல்லைகளை வந்தடைந்தோம். முற்றும் வறண்ட பிரதேசம் அது. முதல் முறையாக ஒரு நாள் மாலை நேரம் ஓநாயின் கூப்பிடுதலின் சத்தத்தை நாங்கள் கேட்டோம்.

தனது நண்பர் ஒருவருக்கு மச்செயின் எழுதிய கடிதத்தில் "எருசலேம் பட்டணத்தில் நாங்கள் 10 நாட்கள் தங்கியிருந்தோம். எருசலேம் பட்டணத்தை இரட்சகர் பார்த்து "உனக்கு கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் உனக்கு நலமாயிருக்கும்" என்று சொன்ன இடமாகிய கூட்டு ரஸ்தாக்களின் சந்திப்பிலிருந்து எருசலேமைப் பார்த்து நாங்கள் கண்ணீர் விட்டு அழுதோம்" என்று எழுதினார்.

தேவனுடைய பரிசுத்த தேசத்தைக் கண்டபோது மர்ரே மச்செயினுக்கு இருந்த சந்தோசத்தை வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் கிடையாது. எருசலேம் பட்டணத்திற்கு நேராக அவர்களின் ஒட்டகங்கள் சென்றதை மச்செயின் விவரிக்கும்போது "எருசலேம் சென்ற எனது மகோன்னத பயணத்தை என் வாழ்வில் என்றும் நான் மறப்பதற்கில்லை. சுமார் 4 மணி நேரம் நாங்கள் எங்களது ஒட்டகங்களில் மிகவும் பொறுமையோடு அந்த கற்பாறை மலை முகட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஏறி உச்சிக்குச் சென்றோம். அங்கு கண்ட மலைக் காட்சி எங்களது ஸ்காட்லாந்து தேசத்தின் உயரமான இடங்களில் காணப்படும் அழகுக்காட்சிகளாக எனக்குத் தெரிந்தது. எருசலேம் பட்டணம் செல்லும் வழியில் காணப்பட்ட மரங்களும், பூக்களும், காட்டுப்புறாக்களின் சத்தமும் நாங்கள் இம்மானுவேலரின் மலை நாட்டில்தான் இருக்கின்றோம் என்பதை எங்களுக்கு திட்டமாகச் சொல்லிற்று" என்று எழுதினார்.

மர்ரே மச்செயினின் வாழ்க்கை சரித்திரத்தை விரிவாக எழுதியுள்ள ஆண்ட்ரூ போனர் என்பவர் தனது வனாந்திர பயணத்தின் போது மர்ரே மச்செயினிடம் கண்ட காரியத்தை இவ்வாறு குறிப்பிடுகின்றார்:-

"எங்களுடைய பயணத்தின் போது மர்ரே மச்செயின் தனது வழக்கமான அதிகாலை ஜெப தியானங்களை தனது வீட்டில் இருக்கும்போது கடைப்பிடித்து வந்த வண்ணமாகவே வனாந்திர யாத்திரையிலும் கடைப்பிடித்து வந்தார். அத்துடன் பிரயாணம் முழுமையிலும் தேவனுடைய வசனங்களை அதிகமாகப்படித்து தியானித்து வந்தார்" என்று எழுதியுள்ளார். மேலும் அவர் எழுதுகின்றார்:-

"எகிப்து தேசத்தில் பால்டின் என்ற கிராமத்திற்கு நாங்கள் வந்து பாலைவனத்தில் கூடாரம் அடித்து தங்கியிருந்தபோது அந்த கிராமவாசிகள் எல்லாரும் எங்கள் கூடாரத்தை சுற்றி குழுமிவிட்டனர். அதைக் கண்ட மச்செயின் "ஓ எனக்கு இந்த அருமையான மக்களுடைய அராபிய மொழி மாத்திரம் தெரியுமானால் தேவனுடைய இரட்சண்யத்தின் நற்செய்தியை இவர்களுக்கு எத்தனை அருமையாக நான் பகிர்ந்து கொண்டிருப்பேன்" என்று மிகுந்த அங்கலாய்ப்புடன் சொன்னார்.

பாலஸ்தீனா தேசத்திலே மர்ரே மச்செயின் அநேக யூதர்களை சந்தித்து அவர்களுக்கு தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தியை கூறினார். அராபிய மொழி தெரியாத அவர் எபிரேய மொழியில் மக்களோடு பேசினார். ஒரு சமயம் ஒரு கூட்டம் யூதர்களுக்கு முன்பாக "அந்நாளிலே பாவத்தையும், அழுக்கையும் நீக்க தாவீதின் குடும்பத்தாருக்கும், எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்" (சகரியா 13 : 1) என்று மிகுந்த பரபரப்புடன் எபிரேய பாஷையில் மச்செயின் குரல் எழுப்பியபோது அந்த இடத்தில் ஒரு அசைவு உண்டானது.

இந்த பாலஸ்தீன சுவிசேஷ பிரயாணத்தின் காரணமாக மர்ரே மச்செயினின் சுக நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 12 முதல் 14 மணி நேர ஒட்டக பயணம் அவருக்கு முற்றும் ஒத்துக்கொள்ளவில்லை. அநேக தடவைகளில் ஒரு நாளின் பயணத்திற்குப் பின்னர் அப்படியே ஒரு மரத்தின் அடியில் செத்தவனைப்போல களைப்பின் மிகுதியால் படுத்துவிடுவார். அதில் அரை மணி நேரத்திற்கு அவர் முற்றும் தன்னறிவிழந்த நிலையில் இருப்பதுண்டு. அதின் பின்னர் அவர் எழுந்து ஜெபிக்கத் தொடங்குவார்.

தேவ மனிதர் மர்ரே மச்செயின் தனது பாலஸ்தீன பயணப் பாதையில் ஐரோப்பாவிலும் அதின் பல்வேறு பட்டணங்களிலும் பாலஸ்தீன தேசத்தின் பல இடங்களிலும் செய்திருக்கும் ஊழியங்கள் அநேகமாகும். அவற்றை எல்லாம் இந்த சிறிய இதழின் பக்கங்களுக்குள் கொண்டுவர இயலாது. எல்லா துதியும் நம் கர்த்தர் இயேசு ஒருவருக்கே.

 
பரிசுத்தமே வாழ்வின் மூச்சு

தேவன், ராபர்ட் மர்ரே மச்செயினை ஸ்காட்லாந்து தேசத்திலே அநேக ஆயிரங்களுக்கு பரலோக ஆசீர்வாதமாக எடுத்துப் பயன்படுத்தினதின் ஒரே இரகசியம் அவரது ஒப்பற்ற பரிசுத்த வாழ்க்கைதான். தேவ மனிதருக்கு பரிசுத்தம் ஒன்றேதான் உயிர் மூச்சாக இருந்தது. இளம் வயதிலேயே, ஆம், தனது 30 வயது பூர்த்தியாவதற்கு முன்னரேயே தனது ஆண்டவர் இயேசுவண்டை கடந்து சென்றுவிட்ட அவர் வெகு பரிசுத்தனாக தன்னைக் கர்த்தருக்குள் காத்துக் கொண்டார். வாலிபனான அவருக்கு வாலிபத்தின் சிற்றின்ப பாவங்கள் கடல் அலைகள் போல திரும்பத் திரும்ப வந்து மோதி அடித்தாலும் எந்த ஒரு பாவ அசுசிக்கும் தன்னுடைய சரீரத்தில் சற்றும் இடம் கொடுக்காமல் மிகுந்த பரிசுத்த நிலையில் தன்னை உறுதியான நிலையில் வைத்துப் பாதுகாத்துக் கொண்டார். பாவத்தின் விழம்பு வரை சென்று வந்ததான சந்தர்ப்பங்களை எல்லாம் மர்ரே மச்செயினின் நாட் குறிப்பில் நாம் காணலாம். தனது பரிசுத்த கர்த்தரைப்போன்று தனது வாழ்வின் இறுதி வரை அவர் மனைவி மக்களின்றி பரிசுத்த துறவியாகவே தனது கிறிஸ்தவ ஓட்டத்தை ஓடி முடித்து விட்டார்.

மர்ரே மச்செயினின் அசாதாரணமான பரிசுத்த நடக்கை, பரிசுத்த சம்பாஷணை, அழிந்து போகும் மனுக்குலத்தின் ஆத்தும பாரத்தால் உந்தப்பட்ட அவரது அனலூட்டப்பட்ட பிரசங்கங்கள் போன்றவை மக்களை கிறிஸ்துவுக்குள் கவர்ந்து இழுப்பனவாக இருந்தன. ஜனங்கள் அந்த தேவ பக்தனை குறித்துப் பேசுவதில் தனிப்பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஓர் இடத்தில் மர்ரே மச்செயின் திறந்த வெளியில் பிரசங்கிக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதைக் கேள்வியுற்ற சில துன்மார்க்கர் அவர் மேல் கற்களை வீசுவதற்காக கற்களுடன் வந்து காத்திருந்தனர். அவரது பிரசங்கத்தைக் கேட்பதற்காக மக்கள் திரண்டு வந்திருந்தனர். அந்த சமயம் மர்ரே மச்செயின் கூட்டத்தின் மேடைக்கு நடந்து வந்த தாழ்மையின் விதம், அவரது கனிவு நிறைந்த பரிசுத்த பார்வை, ஆத்தும பாரத்தால் நெருக்கப்பட்ட அவரது மன உருக்கமான கண்ணீரின் வார்த்தைகள் போன்றவற்றைக் கண்டதும், கேட்டதும் கற்களுடன் வந்திருந்த தீயவர்கள் தங்கள் திட்டங்கள் எல்லாவற்றையும் அப்படியே கைவிட்டுவிட்டு தேவ மனிதருடைய பிரசங்கத்தை மற்ற ஜனங்களைப்போல அமைதியாக உட்கார்ந்து கேட்கத் தொடங்கிவிட்டனர். அவரது கூட்டத்தில் அவர்மேல் ஒரு முறை சேற்றை வாரி வீசினவன் அவரது மரண நாளில் அந்தப் பரிசுத்தவானுக்காக கண்ணீர் வடித்து சத்தமிட்டு அழுதான்.

அவரது நிறைவான பரிசுத்தம் அநேகருடைய மனச்சாட்சியைத் தொடுவதாக இருந்தது. அவருடைய உயர்ந்த பரிசுத்த நிலை காரணமாக மக்கள் அவரை வைத்திருந்த சிறப்பான ஸ்தானத்தை அவர் கண்டு கண் கலங்கினார். பெயர், பிரஸ்தாபம் ஒரு தேவ ஊழியனுக்கு எத்தனையான கண்ணியோ அதைவிட பன்மடங்கு கொடிய பாதாள கண்ணி பரிசுத்த நிலையைக் குறித்து உண்டாகும் புகழ்ச்சி என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

மக்கள் தன்னை தங்களுடைய விக்கிரகமாக்கிக் கொள்ளும் போக்கை அறிந்து பின் நாட்களில் அவர் மிகவும் துயரம் அடைந்தார். மக்கள் தன்னை பெருமையாக பேசும் காரியத்தை அவர் கொஞ்சமும் விரும்பவே இல்லை. "சபை மக்கள் தங்கள் குருவானவரை மதிப்பதும், கண்ணியப்படுத்துவதும் உலக இயல்புதான். ஆனால் குருக்களை தங்கள் தெய்வமாக தலைமேல் தூக்கி வைத்துக் கொள்ளக்கூடாது. குருவானவர்கள் நிறுத்தப்பட்ட கோல்கள் மாத்திரம்தான். அந்தக் கோல்களைப் பார்க்காமல் அதின் மேல் வைக்கப்பட்டுள்ள வெண்கல சர்ப்பமாகிய கிறிஸ்து பெருமான் ஒருவரை மாத்திரம்தான் நோக்கிப் பார்த்து மக்கள் இரட்சிப்பை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் சொல்லுவார். தான் அடைந்து கொண்ட பரிசுத்த நிலையில் அவர் ஒருபோதும் திருப்தி அடைந்ததே இல்லை. இன்னும் அதிகமாக பரிசுத்தம் அடையக்கூடிய வழியையும், தேவ ஆலோசனைகளையும் யார் கூறுவதாக இருந்தாலும் அதை ஆவலோடு கேட்கவும், அதின்படி செய்யவும் அவர் எப்பொழுதும் ஆயத்தமாக இருந்தார். பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைய அவருக்கு அத்தனையான ஒரு வாஞ்சையும், தாகமும் இருந்தது.

 
சிறந்த பிரசங்கியார்

பிரசங்கிப்பது என்பது மர்ரே மச்செயினுக்கு விசுவாசத்தின் ஒரு பரிசுத்த தேவப்பணியாக இருந்தது. பிரசங்கிப்பதற்காக அவர் எடுக்கும் பிரசங்க குறிப்பு தாளின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ "எஜமானரே பரத்திலிருந்து ஒத்தாசை அனுப்பும்" "தேவனே சகாயம் பண்ணும்" "ஆசீர்வாதமான மழையை அனுப்பும்" "ஆவியானவரை பொழிந்தருளி மகிமையை உமக்கென்று எடுத்துக் கொள்ளும்" என்பது போன்ற வார்த்தைகளில் ஏதாவது ஒன்றை அவர் எழுதுவது வழக்கம்.

ஓய்வு நாட்களில் பரிசுத்த பேதுரு தேவாலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதாக இருந்தது. தற்கால குருவானவர்களைப்போல வாரத்தில் சனிக்கிழமை மாத்திரம் பிரசங்க ஆயத்தம் செய்து ஓய்வு நாளில் பிரசங்கம் செய்பவரல்ல மச்செயின். ஓய்வு நாள் அவருக்கு கர்த்தரில் களிகூரும் நாளாக இருந்தது. அவர் தனது பிரசங்கத்தை அந்த வாரத்தின் நாட்கள் அனைத்திலும் மிகுந்த கண்ணீரின் ஜெபத்தோடு ஆயத்தம் செய்து ஞாயிற்றுக் கிழமை பிரசிங்கித்தார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்பதற்காக மக்கள் தூரமான நாட்டுப்புற கிராமங்களிலிருந்தெல்லாம் வந்தனர். அவர்கள் திரும்பிச் செல்லும்போது கர்த்தர் தமது தாசன் மூலமாகக் கொடுத்த தேவச்செய்தியின் மூலமாக தங்கள் இருதயங்கள் கொழுந்துவிட்டு எரிந்த விபரங்களை மிகுந்த ஆனந்த களிப்புடன் ஒருவருக்கொருவர் பேசி சம்பாஷித்துக் கொண்டே சென்றனர். அவரது பேதுரு தேவாலயத்திலும் அவர் சென்று பிரசிங்கித்த மற்ற தேவாலயங்களிலும் உயிர் மீட்சி நடைபெற்ற வண்ணமாகவே இருந்தது.

பேதுரு தேவாலயத்தின் குருவானவர் அறையில் எந்த ஒரு தேவையற்ற வார்த்தைகளும் பேசப்பட மச்செயின் அனுமதிக்கமாட்டார். பிரசங்க பீடத்தில் அவர் ஏறி நின்று தனது பிரசங்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்துவிட்டு பிரசங்கத்தை ஆரம்பித்தால் அவருடைய வாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தேவ வார்த்தைகளாக வெளி வரும்.

பிரசங்கம் செய்வதென்றால் அவருக்கு அலாதியான தனிப்பெரும் மகிழ்ச்சியாகும். "பிரசங்கம் பண்ண வரும்படியாக என்னை அழைக்கும் எந்த ஒரு அழைப்பையும் நான் அல்லத்தட்டுவது என்பது மிகவும் அபூர்வமாகும்" என்று அவரே கூறியுள்ளார். பெரிய கூட்டத்தைக் கண்டு வெற்றிக் களிப்பின் பெருமிதத்தோடு அவர்களுக்கு பிரசங்கிப்பது என்பதல்ல. சாதாரணமாக நாட்டுப்புற சிறிய கிராமத்தின் மக்களுக்குக்கூட அவர் மட்டற்ற ஆர்வத்தோடு பிரசங்கிப்பார். வெகு தூரத்திலிருக்கும் ஒரு தனித்த ஆத்துமாவையோ அல்லது வியாதிப்படுக்கையில் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு துயரப்பட்ட நோயாளியையோ சந்தித்து தேவனுடைய ஆறுதலை அவர்களுக்குக் கூறுவதற்காக தனது குதிரை மீது ஏறி சவாரி செய்து கொண்டு வெகு தூரம் செல்லுவார். அதைக் குறித்து யாரும் அவரிடம் பேசினால் "என் ஆண்டவரும் அப்படித்தானே ஒரு ஆத்துமாவுக்காக அடிக்கடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார். கானானிய ஸ்திரீயின் சரித்திரத்தில் நாம் அதைக் காண்கின்றோமே" என்று கூறுவார்.

குறிப்பிட்ட ஓய்வு நாட்களில் குருவானவர் மர்ரே மச்செயின் நடத்திய கர்த்தருடைய இராப்போஜன ஆராதனைகள் என்றும் நினைவில் வைக்கப்பட வேண்டிய பரிசுத்த நாட்கள் என்று மக்கள் கூறுகின்றனர். பேதுரு ஆலயத்தில் நடைபெற்ற அந்தவிதமான ஆராதனைகள் முற்றுமாக சர்வ வல்ல தேவனே பொறுப்பெடுத்துக் கொண்ட ஆராதனையைப் போல அத்தனை பரிசுத்த அமைதி ஆலயத்தை மூடியிருக்கும் என்று கண்டோர் சொல்லுகின்றனர்.

பரிசுத்த தேவ மனிதர் ராபர்ட் மர்ரே மச்செயினுடைய பிரசங்கங்களைக் கேட்டோர் அனைவரும் கர்த்தருடைய ஆவியானவரால் நிச்சயமாக தொடப்பட்டனர் என்பதற்கு அநேக சாட்சிகள் உண்டு. ஸ்காட்லாந்து தேசத்து டங்கன் மாத்திசன் என்ற சுவிசேஷகர் அப்படிப்பட்ட சாட்சிகளின் வார்த்தைகளை புத்தக ரூபமாக தொகுத்திருக்கின்றார். மேற்கண்ட சுவிசேஷகர் தன்னுடைய சொந்த அனுபவத்தை இப்படிக்கூறுகின்றார்:- "ஸ்ட்ராத் போக் என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் மர்ரே மச்செயின் ஒரு தடவை பிரசங்கிப்பதை நான் கேட்டேன். அவருடைய முகம் ஒரு தேவ தூதனின் முகம் போல பிரகாசித்தது. அவருடைய நெற்றியில் முடிவில்லா நித்தியத்தின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது போன்ற பரிசுத்த உணர்வோடு அவர் பிரசங்கித்தார். நான் அந்த தேவ பக்தனின் வல்லமை நிறைந்த இனிமையான மதுரக்குரலைக் கேட்டேன். நான் அதைக் கேட்டு அப்படியே ஸ்தம்பித்துப் போனேன். அவரது ஒளி வீசும் முகத்தின் மேல் பதித்த எனது பார்வையை ஒரு கண நேரம் கூட அவரை விட்டு விலக்க என்னால் இயலாது போயிற்று. பவுல் அப்போஸ்தலனின் சரீரத்தில் கொடுக்கப்பட்ட முள்ளைக் குறித்து அன்று அவர் பிரசங்கித்தார். ஆ, எத்தனை வல்லமையான பிரசங்கம் அது! நான் நடுங்கினேன். தேவனுடைய பிரசன்னத்தை அத்தனை சமீபமாக அங்கு நான் என்னளவில் உணர்ந்தது போல வேறு எந்த ஒரு இடத்திலும் உணரவில்லை. மனந்திரும்பும்படியாக சபையினருக்கு அவர் விடுத்த உள்ளத்தை இளக்கச்செய்யும் வேண்டுகோள்கள் என் இருதயத்தின் ஆழத்தை பலமாகத் தொட்டு நின்றது" என்று கூறுகின்றார் டங்கன் மாத்திசன்.

1842 ஆம் ஆண்டு கோடை கால நாட்களில் ஸ்காட்லாந்து தேச பக்தியுள்ள குருவானவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து இங்கிலாந்து தேசத்தின் வட பகுதியில் உள்ள தேவாலயங்களிலும், திறந்த வெளிகளிலும் தேவனுடைய சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்காகப் புறப்பட்டனர். சபைப் பாகுபாடின்றி எல்லா ஆலயங்களிலும் அவர்கள் சென்று பிரசங்கித்தனர். நியூகாசல் என்ற இடத்திலுள்ள சந்தை வளாகத்தின் திறந்த வெளியில் பரிசுத்த நிக்கோலஸ் தேவாலயத்திற்கு அருகில் குருவானவர் மர்ரே மச்செயின் ஒரு நாள் பிரசங்கித்தார். அவரது பிரசங்கத்தைக் கேட்ட ஒரு மனிதர் கீழ்க்கண்டவாறு சாட்சி பகருகின்றார்:-

"அந்த திறந்த வெளி பிரசங்கத்தின் போது நானும் கூட்டத்தில் இருந்தேன். ஆயிரத்திற்கும் மேலான மக்கள் அந்த இடத்தில் கூடியிருந்தனர். அவருடைய தேவச் செய்தி அன்று ஒரு பெரிய அசைவை மக்கள் மத்தியில் கொண்டு வந்தது. கூட்டம் மாலையில் தொடங்கி இரவு 10 மணி வரை நீடித்தது. ஆனால் ஒருவர் கூட கூட்டத்திலிருந்து வெளியே எழும்பிச் செல்லவில்லை. வானில் பூரண நிலவு பகலைப்போல ஒளி வீசிக்கொண்டிருந்தது. நட்சத்திரங்களும் வானமெங்கும் ஜொலித்துக் கொண்டிருந்தன. "பெரிய வெள்ளைச் சிங்காசனம்" என்ற பொருளில் மச்செயின் அன்று பிரசங்கித்தார். அவர் தனது பிரசங்கத்தின் முடிவுரையாக "நாம் இனி இவ்விதமாக பூவுலகத்தில் இந்த இடத்தில் ஒன்று கூடப்போவதில்லை. நமது அடுத்த ஒன்று கூடும் இடம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்திற்கு முன்னர்தான். நமது தலைக்கு மேலாக உள்ள வானங்களும், அங்கு பிரகாசித்துக் கொண்டிருக்கும் பூரண நிலவும், நமது பக்கவாட்டில் எழுந்து நிற்கும் நிக்கோலஸ் தேவாலயமும் நான் உங்களுக்கு முன்பாக "மரணத்தையும் ஜீவனையும்" வைத்துப் பிரசங்கித்தேன் என்பதற்கு சாட்சிகளாக இருக்கின்றன.

அவருடைய அந்தப் பிரசங்கத்தைக் கேட்டவர்கள் அதை நித்தியம் வரை தங்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் கூறுகின்றார்.

 
பூவுலக வாழ்வின் இறுதி நாட்கள்

மர்ரே மச்செயின் அத்தனை வலுமையான ஆரோக்கியமான சரீரத்தை உடையவர் அல்ல. சரீரத்தில் பாடு நோவு உடையவராகவே அவர் இருந்தார். அதின் காரணமாக அவர் வெகு துரிதமாகவே நல்ல வாலிப வயதிலேயே தனது ஓட்டத்தை முடித்துக்கொண்டார். தனது மரணத்தைக் குறித்து அவருக்கு முன்னதாகவே நன்கு தெரிந்திருந்தது. வாழ்வின் இறுதி நாட்கள் நெருங்க நெருங்க பரலோகத்தைக் குறித்த ஒரு மட்டற்ற வாஞ்சை அவரை பூரணமாக ஆட்கொள்ளுவதாக இருந்தது. இலையுதிர் காலத்தின் மாலை வேளைகளில் சூரியன் மேல் வானில் மறையும் காட்சிகளை அவர் மிகவும் பரவசத்தோடு கவனித்தார். அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு நீதியின் சூரியனாம் கர்த்தரைக் குறித்துப் பேசுவார் அல்லது அவரது சமூகத்தில் சதா அவரை தரிசித்து அவருக்குப் பணிவிடை செய்யும் தேவதூதர்களின் ஆனந்த மகிழ்ச்சியைக் குறித்துப் பேசுவார் அல்லது தங்கள் சூரியன் ஒருபோதும் அஸ்தமிக்காத பரிசுத்த பக்தர்களைப் பற்றி சம்பாஷிப்பார். தேவன் தனது பரிசுத்த பிதாவும் தான் ஒரு சாந்தமும், மனத்தாழ்மையுமான அவருடைய சொந்தப் பிள்ளை என்பதை தனக்குள்ளாக எண்ணி சந்தாசம் அடைவார். அவரது இறுதி நாட்களில் அவருடைய காலை ஜெப தியான மணி நேரங்கள் முன்பு எக்காலத்தும் இருந்திராத அளவுற்கு அவருக்குச் சொல்லொண்ணா களிகூருதலின் நேரங்களாக இருந்தன.

தேவனுடைய சுவிசேஷத்தின் பாதையில் இங்கிலாந்தின் வடபகுதிக்குச் சென்ற மர்ரே மச்செயின் தனது தேவ ஊழியத்தை முடித்து தனது திருச்சபைக்குத் திரும்பும்போது சுகயீனமாகவே வந்து சேர்ந்தார். டைபாயிட் காய்ச்சல் அவருக்கு ஏற்பட்டது. 1843 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது பேதுரு தேவாலயத்தில் காலையில் எபிரேயர் 9 : 15 ஆம் வசனத்திலும், மத்தியானம் ரோமர் 9 : 22, 23 ஆம் வசனங்களிலும் அவர் பிரசங்கித்தார். அதுவே தனது சபை மக்களுக்கு அவர் செய்த கடைசிப் பிரசங்கமாகும். அன்று மாலை ஃபிராட்டி பெரி என்ற இடத்தில் "எழும்பிப் பிரகாசி" (ஏசாயா 60 : 1) என்ற வசனத்தில் அவர் பிரசங்கித்தார். அடுத்த நாட் காலையில் சரீரத்தில் சுகயீனமாகத்தான் அவர் கண் விழித்தார். அன்று இரவில் அவரது சுகயீனம் நன்கு அதிகரித்துக் கொண்டது. அதற்கப்பால் அவர் தனது படுக்கையிலிருந்து எழும்பவே இல்லை. அது அவரது மரணப்படுக்கையாயிற்று.

மறு நாள் அவர் சரீரத்திலும் மன நிலையிலும் முற்றுமாக சுய நினைவு இழந்து காணப்பட்டார். இந்நிலை நீண்ட நேரம் நீடித்தது. அவருடைய சபையின் ஜனங்கள் ஜெபத்திற்காக வழக்கமாக கூடிவரும் வரை இந்த நிலையில்தான் அவர் இருந்தார். அப்பொழுது அவருடைய அறைக்குள் பிரவேசித்த அவருடைய வேலைக்கார மனிதனைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி குரலில் அவர் "வேடன் கண்ணிக்கு குருவி தப்புவது போல என் ஆத்துமா கண்ணிக்குத் தப்பிற்று. கண்ணி தெரித்தது, நாம் தப்பினோம்" என்று கூறினார். அவர் இந்த வார்த்தைகளைச் சொன்ன போது அவருடைய இருதயம் நிறைந்த தேவ சமாதானத்தை அவருடைய முகம் எடுத்துச் சொல்லுவது போல இருந்தது. அதற்கப்பால் அவர் தனது படுக்கையில் மிகுந்த சந்தோசம் உடையவராகவே இருந்தார். இரவு சாப்பாட்டு வேளையின் போது கொஞ்சம் சிற்றுண்டி மாத்திரம் அருந்தினார். "எங்கள் பெலவீனத்தில் எங்கள் பெலனும், எங்கள் அந்தகாரத்தில் வெளிச்சமும், எங்கள் துயரத்தில் களிகூருதலுமாக இருந்து எங்களை நீர் வழிநடத்துவதால் எந்த ஒரு துன்ப துக்க சாகரத்தில் மக்கள் மூழ்கியிருந்தாலும் நீர் எங்களுக்கு அருளும் பரலோக ஆறுதல்களால் நாங்கள் அவர்களை ஆற்றித் தேற்றக் கூடியவர்களாக இருக்கின்றோம்" என்று தனது சிற்றுண்டியை புசிக்கு முன்னர் அவர் ஜெபித்தார்.

அந்த வாரக் கடைசியில் வந்த ஓய்வு நாளில் மர்ரே மச்செயின் பிரசங்கிக்க வேண்டுமென்று ஒரு கர்த்தருடைய பிள்ளை அவரிடத்தில் விருப்பம் தெரிவித்தார்கள். "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல" என்ற தேவ வசனத்தை அந்த தேவ பக்தன் அந்த மனிதனுக்குச் சொன்னதுடன் "தேவன் எனக்கு போதிய பெலனளித்து என்னை எழுப்பும் பட்சத்தில் நான் ஆலயத்தில் பிரசங்கிப்பேன்" என்று அவர் கூறினார்.

படுக்கையிலிருந்த அவருக்கு அவருடைய சகோதரி அநேக கிறிஸ்தவ பாடல்களைத் திரும்பத் திரும்பப் பாடினார்கள். சுய நினைவு முற்றிலுமாக இழந்து போகுமுன்னர் அவர் கடைசியாகக் கேட்ட பாடலானது பரிசுத்தவான் "கவ்பர்" என்பவர் இயற்றிய பாடல்களில் ஒன்றான "கிறிஸ்தவன் பாடிக்கொண்டிருக்கும் போதே பரலோக நாட்டின் பேரின்ப ஒளி ஆச்சரியப்படும் விதத்தில் அவனைச் சந்தித்தாலும் சந்திக்கலாமே" என்ற பாடல்தான். அதற்கப்பால் அவருடைய சுயநினைவு முற்றும் அகன்று போயிற்று.

அந்த சுய நினைவு இழந்த நிலையிலும் ஒரு முறை கண்விழித்து தனக்கு பணிவிடை செய்பவரைப் பார்த்து "நீங்கள் உறுதிப் பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக" (1 கொரி 15 : 58) என்று சொன்னார். ஒரு தடவை தான் தனது சொந்த திருச்சபையின் உடன் சகோதரர்களுடன் இருப்பதாக எண்ணிக் கொண்டு "திருச்சபை நீதிமன்றங்கள் நீதியாய் நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. அவ்வித நீதிமன்றங்களை நான் மனதார வெறுக்கின்றேன். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுவதும் உங்களிடத்தில் விரும்புவதும் என்னவென்றால் கர்த்தருக்கு நாம் உண்மையுடையவர்களாக இருக்க வேண்டும். அவருக்கு முன்பாக நாம் பரிசுத்தராக நடக்க வேண்டும்" என்றார். அவரது குரல் இப்பொழுது தெளிவானதாகவும், கம்பீர தொனியோடும் காணப்பட்டது. சுய நினைவுகள் வரும்போதெல்லாம் மச்செயின் தனது உதடுகளுக்குள்ளாக பேசுகிறவராகவும் தனது ஜனங்களுக்காக ஜெபிக்கிறவராகவும் காணப்பட்டார். "நீ கட்டாயம் சரியான சமயத்தில் உனது பாவ நித்திரையிலிருந்து நீதிக்கென்று விழித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் உனது முழுமையான குழப்பத்துடன் நித்திய நரக பாதாளத்தில் மகா துயரத்தோடு நீ கண் விழிக்க வேண்டியதாகும்" என்று அவர் ஒரு தடவை கூறினார். "இந்த சபை, தேவனே இந்த உமது ஜனம், இந்த முழுமையான இடம்" என்று மற்றொரு தடவை அவரது உதடுகள் பேசினது. பரிசுத்தவான்களுக்காக ஜெபம் ஏறெடுக்கின்ற பாவனையில் "பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்களை உமது பரிசுத்த நாமத்தின் மூலமாக காத்துக்கொள்ளும்" என்று பிறிதொரு தடவை சொன்னார்.

இவ்வண்ணமாக அவரது சுய நினைவு விட்டு விட்டு கொஞ்ச நேரம் திரும்பும் போதெல்லாம் தனது உதடுகளுக்குள்ளாக பேசுகிறதும், ஜெபிக்கிறதுமாக தேவ பக்தன் இருந்தார். அவரது முகம் தேவப்பிரசன்னத்தின் சந்தோசத்தால் எப்பொழுதும் மலர்ந்த வண்ணமாகவே காணப்பட்டது.

அவரது அன்பான டாக்டர் கிப்சன் அருகில் நின்று கொண்டிருக்க 1843 ஆம் ஆண்டு சனிக்கிழமை காலையில் அவர் தனது கரங்களை பரலோகத்திற்கு நேராக உயர்த்தி தனது திருச்சபையினரை ஆசீர்வதிப்பது போல கொஞ்ச நேரம் கரங்களை வைத்துவிட்டு அப்படியே கரங்களை தாழ்த்தி படுக்கையில் வைத்தார். அவ்வளவுதான், அவரது அருமையான ஜீவன் தன் ஆண்டவரண்டை கடந்து சென்றுவிட்டது. ஒரு சிறிய முணு முணுப்போ, வேதனை குரலோ, பெருமூச்சின் தொனியோ எதுவும் அவரிடமிருந்து புறப்படவில்லை. அவரின் பரிசுத்தமான உதடுகள் சற்று நேரம் துடித்து ஓயவும் அவரது ஜீவன் அருமையாகப் பிரிந்தது.

 
இஸ்ரவேலில் ஒரு இளவரசன் வீழ்ந்தான்

மர்ரே மச்செயினின் மரண செய்தி காட்டுத் தீ போல ஸ்காட்லாந்து தேசம் முழுமைக்கும் வெகு வேகமாக பரவத் தொடங்கிற்று. அவரது மரணச்செய்தியைக் கேள்விப்பட்ட அனைவரின் முகமும் துக்கத்தால் இருளடைய ஆரம்பித்தது. ஸ்காட்லாந்து தேசத்தில் இப்படியாக எந்த ஒருவரது மரணத்திற்கும் மக்கள் துக்கமடையவில்லை. தேவனது நித்திய ஜீவனின் மகிமையின் சுவிசேஷத்தை மக்களுக்கு பிரசங்கிக்கும் பணிக்காகவே தனது வாழ்நாள் காலத்தை அர்ப்பணம் செய்திருந்த அவரது மரணமானது பரிசுத்தவான்கள் யாவருக்கும் ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. அவரது ஜீவனற்ற சரீரத்தைக் கண்டு கண்ணீர் விடாதாவர் எவருமே கிடையாது என்று சொல்லலாம். அவர் மரிக்கும் போது 29 வயதைக் கூட அவர் முடித்திருக்கவில்லை. அவருடைய சரீர அடக்க நாளன்று பட்டணத்தின் எல்லா வியாபாரங்களும் மூடப்பட்டன. அவரது சரீரம் எடுத்துச் செல்லப்படவிருந்த தெருக்களும், மாடி வீடுகளின் பால்கனிகளும், வீடுகளின் ஜன்னல்களும் மக்கள் திரளால் நிரம்பி வழிந்தன. எந்த ஒரு கவலையும், எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று நிர்விசாரமாக வாழ்ந்த மனிதர்களின் இருதயம்கூட பட்டணத்தின் துக்கம் நிறைந்த ஜனத்திரளைக் கண்டதும் அவர்களது உள்ளங்களும் ஒருக்காலும் இல்லாதவிதத்தில் கிலேசத்தால் நிறைந்தது.

அவரது சரீரம் சுமார் 7000 மக்கள் புடைசூழ பேதுரு தேவாலய கல்லறை தோட்டத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. தூரத்திலும், சமீபத்திலுமாக இருந்து அநேக குருவானவர்களும், திருச்சபை மக்களும் அந்த இறுதி பவனியில் கலந்து கொண்டனர். கண்ணீரை வடிக்காத கண்களே இல்லை என்னும் அளவிற்கு எல்லாருடைய கண்களிலிருந்தும் அந்த இயேசுவின் சாயலை தனது முகத்திலும் தனது நடக்கையிலும் கொண்டிருந்த பரிசுத்த இளம் குருவானவர் ராபர்ட் மர்ரே மச்செயினுக்காக கண்ணீர் வடிந்தது. அவரது கல்லறை எல்லாரும் காணக் கூடிய விதத்தில் பரிசுத்த பேதுரு தேவாலய கல்லறைத் தோட்டத்தின் வடமேற்குத் திசையில் நடை பாதைக்கு அருகிலேயே உள்ளது. ஆம், அந்த பரிசுத்த தேவ மனிதர் தான் உயிரோடிருந்த நாட்களில் தனது சபை மக்களுக்கு உள்ளத்தின் பாரத்தோடு அழுது கொண்டு தேவ செய்திகளை பிரசங்கித்த பிரசங்க பீடத்திலிருந்து சில கெஜ தூரத்தில்தான் அவரது கல்லறை உள்ளது. மர்ரே மச்செயினின் கல்லறையும் அவர் குருவானவராக தேவ ஊழியம் செய்த பரிசுத்த பேதுரு தேவாலயத்தையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

 

 
பிரசங்கிமார்களுக்கு ஒரு தேவ வார்த்தை

ஸ்காட்லாந்து தேசத்தின் மேற்கண்ட தேவ பக்தி நிறைந்த பரிசுத்த குருவானவர் மர்ரே மச்செயின் மரித்த சில காலத்திற்குப் பின்னர் ஸ்காட்லாந்து தேசத்தின் பிறிதொரு குருவானவர் நமது மர்ரே மச்செயின் குருவானவர் வாழ்ந்த பேதுரு தேவாலயத்திற்கு சொந்தமான வீட்டையும் அவரது பிரசங்க பீடத்தையும் காண்பதற்காக தூரத்திலிருந்து வந்திருந்தார்.

மர்ரே மச்செயினுக்கு பேதுரு ஆலயத்தில் உதவி புரிந்த தேவாலய பணியாளன் அந்த குருவானவரை பக்தி வினயத்துடன் அழைத்துக் கொண்டு முதலில் அவரது புத்தகசாலைக்கு சென்றான். அவன் அந்த குருவானவரை ஒரு மேஜைக்கு முன்பாக இருந்த நாற்காலியில் அமரச் செய்து "நீங்கள் இப்பொழுது நாற்காலியில் அமர்ந்து உங்கள் முழங்கைகளுக்கு நடுவாக உங்கள் முகத்தின் தாடையை நன்கு வைத்துக் கொண்டு உங்கள் தலையைத் தாழ்த்துங்கள்" என்று கூறினான். மேலும் அவன் தொடர்ந்து "இப்பொழுது உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் தாராளமாக வடியட்டும். ஆம், அவ்விதமாகத்தானே கர்த்தருடைய நித்திய பரம இளைப்பாறுதலுக்குள் கடந்து சென்ற எனது பரிசுத்த குருவானவர் இந்த படிப்பு அறையில் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளையும் இதர ஆவிக்குரிய பரிசுத்த புத்தகங்களையும் வாசித்தார்" என்று சொன்னான்.

அடுத்தபடியாக அந்த பணியாளன் அந்த தவனமுள்ள குருவானவரை அழைத்துக்கொண்டு பேதுரு தேவாலயத்துக்குள் நுழைந்தான். குருவானவரை பிரசங்க பீடத்தில் ஏறச்செய்து பரிசுத்த வேதாகமத்தை அவருக்கு முன்பாக திறக்கும்படி வேண்டினான். திரும்பவுமாக அவரது கரங்களுக்கு நடுவாக முகத்தை வைக்க குருவானவரை கேட்டுக் கொண்டான். "இப்பொழுது உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் தாராளமாக வடியட்டும். அவ்விதமாகவே எனது குருவானவர் மர்ரே மச்செயின் பிரசங்க பீடத்திலிருந்து சபை மக்களுக்கு ஆத்தும பாரத்தோடு கண்ணீரை வடித்த வண்ணமாக பிரசங்கித்தார். ஜெபித்தார்" என்று சொன்னானாம். ஸ்காட்லாந்து தேசத்தின் டண்டி பட்டண பரிசுத்த குருவானவர் ராபர்ட் மர்ரே மச்செயின் வாழ்ந்த பரிசுத்த நறுமணம் கமழும் ஒளி வீசும் சாட்சியின் வாழ்க்கையையும், தேவ ஊழியத்தையும் அன்பின் கர்த்தர் உங்களுக்கும் தந்தருள்வாராக.


 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM