பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

டி.எல்.மூடி (1837 - 1899)


"உன் கையில் அற்பமான எது இருந்தாலும் ஆண்டவர் இயேசுவால் அதை பயன்படுத்த முடியும். எரி நரக பாதாளத்தின் ஜனத்தொகையில் 20 இலட்சம் மக்களை டி.எல்.மூடி தேவ பக்தன் தனது சுவிசேஷ ஊழியத்தின் மூலமாகக் குறைத்துவிட்டார் என்று உலகப்பிரகாரமான என்சைக்ளோபீடியோ (Encyclopedia) ஒன்று கூறுகின்றது. ஆங்கிலம் சரியாகக் கூட பேச வராத அமெரிக்க தேசத்தின் நியூ இங்கிலாந்து என்ற இடத்தில் இருந்த மூடி என்ற ஒரு மனிதனிடம் "உன்னுடைய கரத்தில் இருக்கும் அது என்ன?" என்று ஆண்டவர் ஒரு நாள் கேட்டார். "வெறும் செருப்புகள் மாத்திரமே" என்று மூடி ஆண்டவருக்கு பதில் அளித்தார். மூடி ஒரு செருப்பு விற்பனை செய்யும் தொழிலாளி மட்டுமே. மூடியிடம் கேட்ட அதே கேள்வியை இந்தியாவின் மாபெரும் முன்னோடி பாப்திஸ்து மிஷனரியான வில்லியம் கேரியிடம் ஆண்டவர் ஒரு நாள் கேட்டார். "அற்பமான செருப்புகள் மட்டுமே" என்று அவர் கர்த்தருக்கு மறுமொழி கொடுத்தார். வில்லியம் கேரி செருப்புகள் தைக்கும் ஒரு செம்மான். "அவைகளை என்னிடம் கொடு" என்றார் ஆண்டவர். ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு அவர் கீழ்ப்படிந்து அவைகளை அவரிடம் கொடுத்தார். நீ செருப்புகள் உண்டாக்கும் செம்மானாக இருந்தாலும் சரி அல்லது செருப்புகள் விற்கும் தொழிலாளியாக இருந்தாலும் சரி தேவன் உன்னைத் தமது நாம மகிமைக்காக வெகு வல்லமையாகப் பயன்படுத்த கூடும்" (ஜியார்ஜ் வெர்வர்)

("மூடி பிரசங்கியார் வாழ்க்கை சரித்திரத்தை ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் வாசிக்க வேண்டும். நான் அந்த அருமையான புத்தகத்தை குறைந்த பட்சம் 6 தடவைகள் வாசித்திருக்கின்றேன். அந்தப் புத்தகத்தை வாசிக்கின்ற எந்த ஒரு மனிதனும் மிக அற்புதமாக பரவசமடையாமலும், தேவனால் ஆழமாக தொடப்பட்டவனாகவும், கர்த்தருக்காகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டுமென்ற பரிசுத்த உணர்வடையாமல் தப்பிக் கொள்ளுவதும் கடினமான காரியமாகும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனது வாழ்வில் கட்டாயம் வாசிக்க வேண்டிய சில புத்தகங்களில் இந்தப் புத்தகமும் சேர்ந்திருக்க வேண்டும் என்று நான் திட்டமாகச் சொல்லுவேன்.

மாபெரும் கிறிஸ்தவ விசுவாச வீரர்களில் ஒருவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை இந்தப் புத்தகம் பதிவு செய்துள்ளது. இந்தப் புத்தகம் என்னை இத்தனையாகப் பரவசப்படுத்தியதின் காரணம் என்னவெனில், தேவன் மிகவும் சாதாரணமான மூடியை பயன்படுத்தியவர் எந்த ஒரு சாமான்ய மனிதனையும் தமது நாம மகிமைக்காக மிகவும் வல்லமையாக இன்றும் பயன்படுத்த முடியும் என்பதுதான். அந்த சாமான்ய மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வில் ஆழமான பரிசுத்தம், நல்ல ஜெப வாழ்க்கை, மிகுந்த மனத்தாழ்மை, தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த தீராத தாகம், தன் அன்பின் ஆண்டவரைக் குறித்த பற்றி எரியும் வாஞ்சை, அழியும் ஆத்துமாக்களைக் குறித்த சொல்லொண்ணா கண்ணீரின் ஆத்தும பாரம் இருந்தால் போதுமானது என்பதுதான்") (லூயிஸ்)

மூடியின் பிறப்பும் - அவரின் குடும்ப பின்னணியமும்

குடை காளான் வடிவமான மலையில் 17 வயதினனான ஒரு கட்டு மஸ்தான வாலிபன் தனக்குக் கீழாக அடிவாரத்தில் வளைந்து வளைந்து ஓடும் கனக்டிகட் ஆற்றின் பெருமிதமான வளைவை வாழ்வில் இறுதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைப் பார்க்கவும் அவனது கண்கள் கண்ணீரால் நிரம்பியது. அந்த வாலிபன் அந்த நதிப்பள்ளத்தாக்கை விட்டுப் போகப்போவதைக் குறித்து மிகவும் கலக்கமுற்றான். ஒரு வேளை தான் இனிமேல் அந்த மலையில் ஏறி அஸ்தமனமாகும் சூரியனையும், வளைந்து ஓடும் கனக்டிகட் ஆற்றின் மேல் விழும் மாலைச் சூரியனின் அடர்த்தியான செங்கதிர்களையும் இனி பார்க்கப் போவதில்லை என்று அவன் யோசித்திருக்கலாம்.

ஆம், அந்த வாலிபன் தான் டுவைட் லைமான் மூடி என்று பெயரிடப்பட்டு டி.எல்.மூடி என்று அழைக்கப்பட்ட உலகப்பிரசித்தி பெற்ற அமெரிக்க நாட்டின் பிரசங்கியாராவார். அவன் திரும்ப திரும்ப அங்கும் இங்குமாகப் பார்த்தான். தனக்கு முன்பாக கீழாக உள்ள வயல் வெளிகளைப் பார்த்தான். ஆங்காங்குள்ள மரக்காடுகளைப் பார்த்தான். நார்த்ஃபீல்ட் என்ற அந்த இடத்திலுள்ள வீடுகளைப் பார்த்தான். மலைச்சாரலில் பட்டை, பட்டையாக வெண்பனி படிவுகளை அவன் கண்டான். அது 1854 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் ஒரு நாள். கீழாக உள்ள வெண்மை மரச்சட்டங்கள் போட்ட பெரிய வீட்டிலுள்ள புகைபோக்கி வழியாக புகையானது வளைந்து வளைந்து செல்லுவதையும் அவனால் காண முடிந்தது. ஆம், அதுதான் அவனது வீடு. அங்குதான் அவன் 1837 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் நாள் பிறந்தான். அவனது அழகான பெரிய வீட்டை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

நியூஹாம்ப்ஷைர், வெர்மாண்ட் என்ற எல்லைப்புறங்களின் அருகிலிருந்த நார்த்ஃபீல்ட், மாசாசூட்ஸ் ஆகிய இடங்கள் கொடிய செவ்விந்தியருடைய தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காக இருந்துவந்த ஒரு காலமிருந்தது. ஆனால், இப்பொழுது அந்த பயங்கள் எல்லாம் முற்றுமாக அற்றுப்போய் மிகவும் சமாதானமான இடங்களாக சுமார் ஆயிரம் ஆத்துமாக்கள் வாழும் பட்டணமாக காட்சியளித்தது. வீடுகள் தோறும் பூந்தோட்டங்கள், நதியின் கரை வரை பண்ணை விளை நிலம், நிரம்ப அறைகள் வைத்துக் கட்டப்பட்ட வீடுகள், வீடுகளுக்கு முன்பாகச் செல்லும் பெரு வழிச்சாலையின் இருமருங்கிலும் "எல்ம்" மற்றும் " ராக் மேபிள்" மரங்கள் நின்று கொண்டிருந்த காட்சி எல்லாம் மிகுந்த வனப்பாக இருந்தது.

கனக்டிகட் நதி பள்ளத்தாக்கில் குடியேறியிருந்தவர்கள் எல்லாம் மூடி உடைய தாய் தந்தையரின் மூன்றாம் நான்காம் தலைமுறையாவார்கள். 17 ஆம் நூற்றாண்டிலேயே அவர்கள் அங்கு குடியேறிய முன்னோடி ஆவார்கள். மூடிக்கு இந்தவிதமான சந்ததி தலைமுறையினர்களின் வம்சாவழி எதுவும் தெரியாது. பாலிய பருவத்திலேயே தகப்பனை இழந்துவிட்ட அவர் பிழைப்பைத் தேடி பாஸ்டன் பட்டணத்துக்குச் செல்ல வேண்டியதாக இருந்தமையால் குடும்பத்தின் பூர்வோத்திரங்களை குறித்து அறியவேண்டுமென்ற ஆவல்கள் எல்லாம் அவருக்கு கிஞ்சித்தும் ஏற்படவில்லை.

மூடியின் தந்தை எட்வின் மூடி பட்டணத்தின் வடக்குப் பகுதியில் தனது சிறிய பண்ணை நிலத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு கல் தச்சனாக வேலை செய்தார். எட்வின் மூடி யாவருடனும் அன்பாகப் பழகுகின்ற நற்குணசாலியாக இருந்தபோதினும் மதுப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தமையாலும், சோம்பலுக்கு இடம் கொடுத்தமையாலும் மிகுதியாகக் கடன்பட்டுப் போனார். 1841 ஆம் ஆண்டு மே மாதம் அவர் சடுதியாக மரித்துப்போனார். அப்பொழுது மூடிக்கு4 வயது மாத்திரமே. எட்வின் மூடிக்குக் கடன் கொடுத்த ரிச்சர்ட் கோல்டன் என்ற மனிதர் உடனடியாக வந்து தன்னால் கைப்பற்ற முடிந்த யாவையும் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றுவிட்டார். மேஜைகள், நாற்காலிகள் போன்ற மர ஜாமான்கள், குதிரை, அது இழுத்துச் செல்லும் வண்டி, பால் கறக்கும் பசுக்கள் எல்லாம் போய்விட்டன. எப்படியோ ஒரு கன்று குட்டி தப்பித்துக் கொண்டது. மூடியின் அண்ணன்மார் தந்திரமாக தங்களுடைய தந்தையின் கல் தச்சு வேலைக்குரிய உபகரணங்களை ஒளித்து வைத்துக் கொண்டனர்.

எட்வின் மூடியின் மனைவி பெத்சி மூடி தனது கணவன் மரிக்கும்போது நிறை கர்ப்பிணியாக இருந்தார்கள். கணவன் மரித்த அடுத்த மாதமே இரண்டு குழந்தைகளுக்கு அவர்கள் தாயாரானார்கள். சாம் என்ற ஆண் மகவும் லிஸி என்ற அந்த பெண் குழந்தையும் சேர்ந்து இப்பொழுது பிள்ளைகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துவிட்டது. அந்த ஒன்பது குழந்தைகளில் நமது டி.எல்.மூடி ஐந்தாவது குமாரனாவார். 6 சகோதரர்களும் 2 சகோதரரிகளும் இருந்தனர்.

மூடியின் தாயார் பெத்சி மூடியின்
இன்னல் நிறைந்த வாழ்க்கை

இரட்டைக் குழந்தைகள் பிறந்த நான்காவது தினம் எட்வின் மூடி அடகு வைத்த அவரது பண்ணையின் காலக் கெடு பூர்த்தியானதால் ஐசுவரியமுள்ள எஸ்றா பர்பிள் என்ற மனிதன் தனது பணத்தை வசூலிக்க கனக்டிகட் ஆற்றைக் கடந்து பெத்சி அம்மையாரிடம் வந்து சேர்ந்தான். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றிருந்த பெத்சி மூடி இன்னும் படுக்கையில்தான் இருந்தார்கள். கடன்காரர் வீட்டிற்கு வந்திருக்கின்றார் என்பதை அறிந்த அம்மையார் தனது குழந்தைகள் பிறந்த அறைக்கே அந்த மனிதனை வருவதற்கு அனுமதி அளித்து, தான் படுக்கையிலிருந்து எழுந்ததும் எவ்வவளவு துரிதமாக கடனை செலுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக செலுத்திவிடுவதாக அந்த மனிதனுக்கு வாக்குறுதி கொடுத்தும் அவன் கேட்காமல் மரியாதை குறைவான வார்த்தைகளால் அம்மையாரைத் திட்டி விட்டுப் போய்விட்டான். அதைக் கேள்விப்பட்ட பட்டணத்து மக்கள் கொந்தளித்து எழும்பி கடன் கொடுத்த எஸ்றா பர்பிள் என்ற அந்த மனிதனை நன்றாக உதைத்து மண்ணில் புரட்டி எடுத்துவிட்டனர். நடந்த சம்பவம் அறிந்து பெத்சி மூடி மிகுந்த வருத்தம் அடைந்தார்கள். உடனே அவர்களுடைய உடன் பிறந்த உள்ளூர் சகோதரர்கள் இருவர் தேவையான பணத்தைத் திரட்டி அடகு பிடித்தவனுடைய பணம் முழுவதையும் கொடுத்து தீர்த்துவிட்டனர். தனது கணவனுடைய மரணத்துக்குப் பிறகு பெத்சி மூடியின் மற்றொரு துயரம் அவர்களது மூத்த குமாரன் ஏசாயா வீட்டைவிட்டே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய்விட்டான். 15 வயதினான அவன் என்ன காரணத்துக்காக ஓடினான்? ஏன் ஓடினான்? என்ற எந்த விபரமும் அம்மையாருக்குத் தெரியாது.

பெத்சி மூடியின் தலை மயிர்கள் துயரத்தால் வெண்மையாக மாறிவிட்டன. தன்னாலான மட்டும் தனது எளிய பண்ணையில் கடினமாக பாடுபட்டு தனது இள வயதிய குமாரர்களின் அற்பமான ஊதியங்களைக் கொண்டு கஷ்டத்தோடு குடும்பத்தை நடத்தி வந்தார்கள். தனது கைப்படவே நூலினால் துணிகளை நெய்து தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் உடைகளைத் தானாகவே தைத்துக் கொண்டார்கள். பண்ணையிலுள்ள மாடுகளின் பாலையும் அவர்களே கறந்து எடுத்தார்கள். கிழிந்து போன காலுறைகளை அவர்களே தைப்பார்கள். குடிகார கணவனின் கொடிய குடிப் பழக்கத்தால் குடும்பமே அல்லோகலப்பட்டுப் போயிற்று. கணவனின் குடிவெறிகளைக் கண்டு அதின் பலாபலன்களை வாழ்வில் கசப்போடு அனுபவித்த அந்த தாயார் தனது ஆண் மக்கள் அனைவரிடமும் அவர்கள் தங்கள் வாழ்வில் மதுவைத் தொடக்கூடாது என்று கூறி சத்திய பிரமாணம் வாங்கிக் கொண்டார்கள்.

பெத்சி மூடி தனது பிள்ளைகள் எல்லாரையும் கல்வி கற்பதற்காக பள்ளிக்கு அனுப்பி வந்தார்கள். எனினும் பொருளாதார தேவைகளின் காரணமாக பிள்ளைகள் தங்கள் கல்வியை சீராகத் தொடர முடியவில்லை. பிள்ளைகளின் சரீர உழைப்பு பண்ணைக்குத் தேவைப்பட்டது. டுவைட் லைமான் மூடிக்கு படிப்பு என்றால் எட்டிக்காய்தான். பாடப் புத்தகங்களை கண்டால் அவனுக்கு தலை தானாகச் சுற்ற ஆரம்பித்துவிடும்.

பெத்சி மூடி தனது பிள்ளைகள் எல்லாரையும் ஒழுங்காக தேவாலயத்துக்கும், ஓய்வு நாள் பாடசாலைக்கும் அனுப்பி வந்தார்கள். வீட்டில் ஓய்வு நாள் ஆசரிப்பு மிகவும் கடுமையாக அனுசரிக்கப்பட்டது. சனிக் கிழமை சூரிய அஸ்தமனத்தோடு ஆரம்பமாகும் ஓய்வு நாள் ஆசரிப்பு ஞாயிறு சூரிய அஸ்தமனத்தோடுதான் முடிவதாக இருந்தது. "எப்பொழுதுதான் ஓய்வு நாள் முடிவுபெறும் என்று காத்திருக்கும் நாங்கள் அது முற்றுப்பெற்றதும் சந்தோசத்தால் துள்ளிக் குதித்து எங்கள் குல்லாக்களை மேலே ஆகாயத்தில் வீசி எறிந்து ஓடுவோம்" என்று பிள்ளைகள் கூறுவார்கள். 1842 ஆம் ஆண்டு பிள்ளைகள் யாவருக்கும் ஒரே நாளில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. திருத்துவத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற ஒருத்துவ வணக்கத்தாரின் ஆலயத்துக்குத்தான் யாவரும் சென்றனர். அந்த தவறான ஒருத்துவ நாமத்தில்தான் பிள்ளைகள் எல்லாருக்கும் ஞானஸ்நானமும் கொடுக்கப்பட்டது. பெத்சி அம்மையார் தனது பிள்ளைகளை கிறிஸ்தவ நல்லொழுக்கத்தில் வளர்க்க அவ்வப்போது அவர்களை அடித்து வளர்க்க வேண்டியது அவர்களுக்கு அவசியமாக இருந்தது.

டுவைட் லைமான் மூடி என்ற டி.எல்.மூடி தனது 17 ஆம் வயதில் இறங்குமுகமாக உள்ள விசாலமான தோள்களையும், அகன்ற மார்பையும், உறுதியான தசைகளையும், நல்ல சரீர பெலனையும் கனத்த சரீரத்தையும் கொண்டிருந்தான். அவனது உயரம் 5 அடி 10 அங்குலமாகும். கண்கள் கருமையான சாம்பல் நிறத்திலும், தலை முடி கிட்டத்தட்ட கருமையுமாகவுமே இருந்தது. உதடுகள் வெளி பிதுக்கமுடையதாகவும் அவனது கரத்தின் சுண்டு விரலும் அதை அடுத்த விரலும் ஒன்றோடொன்று ஒட்டியவாறு முன்னோக்கி வளைந்துமிருந்தது.

வீட்டிலுள்ள பையன்கள் சம்பாதிக்கக்கூடிய திறமையோடிருந்தனர். உணவு சொற்ப விலைக்குக் கிடைக்கக்கூடிய காலம். விறகு முற்றும் இலவசம். இந்தச் சூழ்நிலையில் பெத்சி மூடியின் வீட்டில் எப்பொழுதும் சிரிப்பின் ஆரவார ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் மூடிக்கு பண்ணையின் நிலங்களில் அதைக் கொத்திக் பண்படுத்தும் வேலைகள் எல்லாம் வெறுப்பானவைகளாகும். வெறுங்கால்களோடு முதிர்ந்த தானியக்கதிர்கள் மேல் நின்று தானியத்தை வேறு பிரிப்பது, பனி காலங்களில் விறகு வெட்டுவது, தங்களுடைய கிழட்டு குதிரை வண்டியை மெதுவாக ஓட்டிச் செல்லுவது, அந்தக் குதிரையின் கழுத்திலுள்ள மணியின் ஒலி எல்லாம் மூடியை பைத்தியம் பிடிக்க வைக்கும் காரியங்களாகும். தனக்கு எந்த ஒரு பயனுமில்லாமல் தான் செய்யும் மேற்கண்ட வேலைகள் எல்லாம் அவனுக்கு படுபயங்கரமானதாகத் தெரிந்தது. தனக்கென சொந்தமாக காசுகளை வைத்துச் செலவு செய்ய வேண்டுமென்ற ஆசை அவனுக்கு இருந்தபோதினும் தனது தாயாரிடம் ஒரு பென்னி நாணயம் தனக்குத் தரும்படி கேட்டுக் கொண்டதே கிடையாது.

மூடி 11 வயதினனாக இருந்தபோது அவன் இருந்த நியூ இங்கிலாந்தின் நார்த்ஃபீல்டுக்கு ரயில் வண்டிப் பாதை அமைக்கப்பட்டு ரயில் வண்டிகள் ஓடத் தொடங்கின. ரயில் வண்டி ஓடத் தொடங்கியதும் நார்த்ஃபீல்ட் மற்றும் நியூ இங்கிலாந்திலுள்ள கிராமப்புற இளைஞர்களும், திடகாத்திர மனிதரும் கிழக்கு அல்லது மேற்கு திசைகளுக்கு நிலபுலங்களைக் கொள்ளவும், திரவியம் தேடவும் ஓடத் தொடங்கினார்கள். 1853 ஆம் ஆண்டின் பனிக் காலத்தில் மூடியும் வீட்டைவிட்டு கிளம்புவதென்று தீர்மானித்தான். அப்படியே பனிகாலத்தின் பனி உருகத் தொடங்கியதும் தனது அற்பமான உடமைகளை ஒரு படுதா பையில் போட்டு எடுத்துக் கொண்டு புறப்படலானான். அதைக் குறித்து தாயார் பெத்சி மிகவும் துயரம் அடைந்தார்கள். மூடியின் மூத்த சகோதரர்கள் ஜியார்ஜ், எட்வின், லூத்தர் மூவரும் முடியை எவ்வளவோ கடுமையாக கடிந்து கொண்டு தடுத்தபோதினும் அவனை நிறுத்த இயலவில்லை. கடந்த 2 தடவைகள் மூடி இப்படிச் சென்றும் அவனது முயற்சிகள் பரிதாபகரமாக முடிந்து வெட்கத்துடன் வீடு திரும்பிய நிலையை எடுத்துக்கூறியும் மூடி கேட்பதாகத் தெரியவில்லை. அண்ணன்மார்களின் வார்த்தைக்குச் செவி கொடுக்காமல் அவன் வீட்டைவிட்டுக் கிளம்பினான். தான் ஒரு புகழ்பெற்ற மனிதனாக மாறுவேன் என்ற எண்ணத்தில் மூடி கிஞ்சித்தும் கூட சந்தேகம் கொள்ளவே இல்லை. இந்த தடவை தான் எப்படியும் வேர் ஊன்றிவிடுவேன் என்ற நிச்சயமான நம்பிக்கை அவனில் பிரகாசிக்கத் தொடங்கியது.

பாஸ்டன் நகர் வாழ்க்கை

நார்த்ஃபீல்ட் என்ற தனது பட்டணத்திலிருந்து மூடி, பாஸ்டன் என்ற பட்டணத்துக்கு வந்து சேர்ந்தான். பாஸ்டன் பட்டணத்திலே சாமுவேல் சாக்ரட்டீஸ் என்ற பெயருடைய இனத்தார் ஒருவர் அவனுக்கு இருந்தார். அவர் நல்ல தனவந்தனான செருப்பு வியாபாரியாக இருந்தார். அவருக்கு 37 வயது மாத்திரமே. அவருடைய கடையில் வேலை பார்க்க விருப்பம் தெரிவித்த மூடியைக் குறித்து முதலில் நார்த்ஃபீல்டில் உள்ள அவனுடைய அண்ணன் ஜியார்ஜிடம் கேட்ட போது அவன் நல்ல திருப்தியான பதில் கூறாதபடியால் தன்னிடம் வேலை எதுவும் கொடுக்க அவர் மறுத்துவிட்டார். மனம் உடைந்த மூடி அதே பட்டணத்தில் உள்ள லேமுவேல் என்ற மற்றொரு இனத்தவருடைய செருப்புக்கடையில் வேலை கேட்டான். முதலில் குறிப்பிட்ட சாமுவேல் சாக்ரட்டீஸ் என்பவருடைய கிளைக் கடைதான் (பிராஞ்ச்) அது.

இந்தக்கடையிலும் வேலை கொடுக்கப்படாத போதிலும், மூடி ஒரு வேலையை தன் மட்டாகத் தேடி கண்டு பிடிக்கும் வரை தன்னுடன் தங்கிக்கொள்ள லேமுவேல் நமது மூடியை கேட்டுக் கொண்டார். பாஸ்டன் பட்டணத்துக்கு வந்து 2 நாட்கள் ஆகிவிட்டன. எனினும் வேலை எதுவும் கிடைக்கவில்லை. மூடி மிகவும் மனம் சோர்ந்து போனான். பாஸ்டன் துறைமுகத்துக்கு நேராகப் போய் கப்பல் வேலைக்கு தன்னை பதிவு செய்தான். நார்த்ஃபீல்டிலிருந்து தினமும் பாஸ்டன் நகருக்கு தபால் வருமாதலால் தனக்கு ஏதாகிலும் கடிதம் வந்துள்ளதா என்று பார்க்க மூடி தபால் நிலையம் சென்றான். அன்று அவனுக்கு ஒரு கடிதம் அவனுடைய 12 வயது தங்கை லிஸியிடமிருந்து வந்திருந்தது. அதில் "அண்ணா, அங்குள்ள பிக்பாக்கெட் திருடர்களைக் குறித்து எச்சரிக்கையாயிரு" என்று எழுதப்பட்டிருந்தது. பாக்கெட்டில் பணம் இருந்தால் தானே திருடர்களுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மூடியின் சட்டைப் பைதான் காலியாக உள்ளதே! எனினும், தனது காலியான சட்டைப் பையை மூடி துயரத்தோடு ஒரு முறை தடவிப் பார்த்துக் கொண்டான். வேலையில்லாத நிலை, தனிமை, ஏமாற்றம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மூடியை தரையோடு தரையாக நசுக்குவதாக இருந்தது. தனது இருளான அந்த இரண்டு நாட்களை மூடி மறக்கவே மாட்டான். தனது ஆழ்ந்த துயரத்தில் அவன் தனது ஆண்டவரிடம் அன்று ஒரு பொருத்தனை செய்தான். "ஆண்டவரே, நீர் எனக்கு ஒரு வேலை தருவீரானால் நான் உம்மை நேசித்து உமக்கே தொண்டு செய்வேன்" என்றான். ஆனால் அந்த பொருத்தனையை மூடி விரைவாக மறந்தும் விட்டான்.

தனது இனத்தவரான லேமுவேலிடம் போய் தனக்கு எப்படியாவது வேலை கொடுங்கள் என்று திரும்பவும் கேட்கவே அவர் மூடியை திரும்பவுமாக சாமுவேல் சாக்ரட்டீஸ் என்பவரிடமே வேலை கேட்கும்படியாக அனுப்பினார். ஆரம்பத்தில் அவரிடம் வேலை கேட்டும் கிடைக்கவில்லையே இனி அவர் எப்படி தருவார் என்று மூடி ஒரு கணம் யோசித்தான். எனினும் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு மறுபடியும் அவரிடமே போய் வேலை கேட்டுப் பெற்றுக் கொண்டான். சப்பாத்துக்களை ஒழுங்காக காகிதத்தில் சுற்றி அலமாரிகளில் அடுக்கி வைக்கும் வேலை அவனுக்குக் கிடைத்தது.

செருப்புக் கடையின் மூன்றாம் மாடியில் அவனுக்கு தங்க இடம் கொடுக்கப்பட்டது. அங்குதான் அவன் படுத்திருப்பான். "எனது அறையின் ஜன்னலை திறந்தால் 3 பெரிய கட்டிடங்கள் தெரியும். அங்குள்ள அறைகளில் பெண்களாகவே இருப்பார்கள். பட்டணத்தின் அழகுப்பெண்களை எல்லாம் அங்கே பார்க்கலாம்" என்று மூடி கூறுவான். மூடி தனது ஆகாரத்தை ஒரு ஹாஸ்டலில் சாப்பிட்டான். "அங்கு 25 கிளார்க்குகள் இருந்தனர். அவர்களில் பெண்களும் உண்டு. அவர்களுடன் ஜாலியாக பேசி மகிழ்ந்த நாட்களும் உண்டு" என்று நமது மூடி சொல்லுவான்.

ஒண்டிக்கட்டையான வாலிபனான அவன் பாஸ்டன் பட்டணத்திலே தனது வாலிப முறுக்கை காண்பிக்கத் தவறவில்லை. தனது வேலை நேரம் போக தனக்குக் கிடைத்த மிகக் குறைவான ஓய்வு நேரத்தை ஓட்டசாட்டத்திலும், நீந்தி விளையாடுவதிலும், பனிச் சறுக்கி விளையாடுவதிலும் மூடி செலவிட்டான். "என்னிடம் இருந்த பயங்கரமான கெட்ட குணம் சத்தியம் செய்வதாகும். என் சகாக்களான வாலிபர்களோடு வாய்த்தர்க்கம் வந்து அவைகள் கைகலப்பிலும் முடிவடைவதுண்டு. நான் மிருக வாழ்க்கையேதான் வாழ்ந்தேன் என்று சொல்ல வேண்டும். பகலெல்லாம் செருப்புக் கடையில் வேலை செய்துவிட்டு இரவில் கண் விழத்தவாறே படுத்துக்கொண்டே யாரிடம் என்ன கேலிக் கூத்து செய்து வேடிக்கை பார்க்கலாம் என்று சிந்தித்துக் கொண்டே படுத்திருப்பேன். எனது கேலிக்கூத்தை நான் முதன் முதலாவதாக என்னுடன் வேலை பார்த்த ஒரு இத்தாலிய இளைஞனிடம் காண்பித்தேன். அதாவது நான் ஒரு பெண்ணுக்கு ஒரு செருப்பை அவள் காலில் அணிவித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து அவனிடம் ஒரு ஜோக்கை கூறிவிட்டேன். மிகவும் கோபக்காரனான அவன் அந்தப் பெண்ணுக்கு போடவிருந்த அடுத்த புதிய செருப்பை தனது கரத்திலிருந்த கத்தியால் இரண்டாக வெட்டிவிட்டான். மற்றொரு தடவை அப்படியே நான் அவனிடம் ஒரு கேலி பரிகாச வார்த்தை பேசியபோது அவன் தனது கத்தியுடன் என்மேல் பாய்ந்து என்னைக் குத்தினான். முற்றிலும் தேவகிருபையால் நான் அப்பொழுது தப்பிக் கொண்டேன்" என்கின்றான் மூடி.

மூடி தான் சம்பாதித்த சொற்ப வருவாயிலும் தனது தாயாருக்கும் ஒரு பங்கை தவறாது அனுப்பி வந்தான். பணம் மாத்திரமல்ல குடும்பத்தினருக்குத் தேவையான செருப்புகளையும், சப்பாத்துக்களையும் குறைந்த விலைக்கு தான் வேலை பார்த்த செருப்புக் கடையில் வாங்கி அனுப்புவான்.

மூடி தேவனுடைய இரட்சிப்பைக் கண்டடைந்தது

சாமுவேல் சாக்ரட்டீஸ் தனது செருப்புக் கடையில் தனது சொந்தக்காரனான மூடிக்கு வேலை கொடுப்பதற்கு முன்பாக ஒருநிபந்தனையும் அவனுக்கு விதித்தார். அதாவது வாரந்தோறும் ஒழுங்காக தான் செல்லுகின்ற திரித்துவ தேவாலயத்துக்கும் அங்கு நடைபெறும் ஓய்வு நாள் பள்ளிக்கும் தவறாது வந்து கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. அப்படியே மூடி தனது வாக்குறுதியைக் காத்துக் கொண்டான். மனந்திரும்பாத மூடிக்கு தேவாலயத்தின் பிரசங்கங்கள் உப்பு சப்பு இல்லாமல் இருப்பதாகத் தெரிந்தது. அதின் காரணமாக மூடி தேவாலயத்தின் பின் காலரியில் அமர்ந்து நன்றாகத் தூங்கிவிடுவான். நாட்கள் செல்ல செல்ல ஆலயத்தின் குருவானவர் எட்வர்ட் நாரீஸ் கிர்க் என்பவரின் பிரசங்கங்கள் அவனுக்கு அருமையாக இருந்தன. குருவானவர் ஆவியிலே அனலாக பிரசங்கித்தார். தேவனுக்கு முன்பாகப் பாவஞ்செய்து தேவ சமூகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பாவ மாந்தனையும், பாவத்தையும் அவர் மிகவும் கண்டித்துப் பேசினார். பாவ மனுக்குலத்தை அதிகமாக நேசிக்கும் இயேசு இரட்சகரையும், அவர் மூலமாக உள்ள இலவச இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் குறித்து அவர் உள்ளம் உருக எடுத்துரைத்தார். யார் யார் இரட்சகரை விசுவாசிப்பார்களோ அவர்களுக்கு அவர் நீங்காத நேச நண்பனாக இருந்து அவர்களை வழி நடத்துவதையும், முடிவில் ஜீவகரை கொண்டு போய்ச் சேர்ப்பதையும் அவர் விளக்கினார். பாவத்தில் ஜீவித்துக் கொண்டு ஆலய ஆராதனைகளை அற்பமாக எண்ணி கேலிக்கூத்தாக நேரம் போக்க வரும் வாலிபர்களுக்கும் அவரது பிரசங்கங்களில் சாட்டையடிகள் இருந்தன.

மூடி முதன் முதலாவதாக அன்றுதான் தனது வாழ்வில் ஓய்வு நாள் பாடசாலை வகுப்புக்குச் சென்றான். அது அந்த ஆலயத்தின் வளாகத்தில்தான் இருந்தது. அந்த ஓய்வு நாள் பாடசாலை வகுப்பை நடத்தியவர் பெயர் கிம்பால் என்பதாகும். ஏற்கெனவே வகுப்பு ஆரம்பமாகிவிட்டது. புதிதாக வந்த வாலிபனை புன்னகை பூத்த முகத்தோடு ஆசிரியர் கிம்பால் வரவேற்று ஒரு ஆசனத்தில் அமர்த்தினார். யோவான் சுவிசேஷத்தில் அப்பொழுது பாடம் நடந்து கொண்டிருந்தது. கிம்பால் ஒரு வேதாகமத்தை மூடியின் கரத்தில் கொடுத்து யோவான் சுவிசேஷத்தை எடுத்துக் கொள்ளும்படியாகக் கூறினார். வேதாகமத்தை வாங்கிக் கொண்ட மூடி ஆதியாகமத்திலிருந்து பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். ஓய்வு நாள் பள்ளியிலிருந்த இதர மாணவர்கள் நமது மூடி செய்யும் காரியத்தை ஆச்சரியத்தோடு உற்று நோக்கும் வேளையில் ஓய்வுநாள் பள்ளி ஆசிரியர் கிம்பால் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு தனது வேதாகமத்தில் தான் எடுத்து வைத்திருந்த யோவான் சுவிசேஷ பகுதியை அப்படியே அவனது கரத்தில் கொடுத்துவிட்டு தான் ஆரம்பத்தில் கொடுத்த வேதாகமத்தை தனக்கென வாங்கிக் கொண்டார். மூடியை ஆச்சரியத்தோடு பார்த்த கண்களை அப்படியே ஒரு கடினப் பார்வை பார்த்து புதிதாக வந்த இளைஞனுக்கு எந்த ஒரு வெட்கமும், பயமுமில்லாமல் நிலைமையை வெகு அருமையாக சமாளித்துக் கொண்டார் கிம்பால்.

அடுத்துவந்த 11 மாதங்களில் குருவானவர் எட்வர்ட் நாரீஸ் கிர்க்கின் பிரசங்கங்களும் ஓய்வுநாள் பாடசாலை ஆசிரியர் கிம்பாலின் வேதபாடங்களும் மூடிக்கு உள்ளத்தில் ஒரு பெரிய ஆவிக்குரிய அனலை மூட்டிவிட்டிருந்தது. ஆண்டவரை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டுவிட வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம் சாத்தான் அவருக்குள் இருந்து கொண்டு "மரிக்கும்போது மனந்திரும்பிக் கொள்ளலாம், அல்லது ஏதாவது குணமாகாத வியாதிகண்டு கட்டில் கிடையாக ஆகும் போது இரட்சிப்பைத் தேடிக் கொள்ளலாம், அதுவரை உலகம் கொடுக்கக்கூடிய எல்லா இன்பங்களையும் முடிந்த அளவு அனுபவித்துவிடு" என்ற தந்திரமான ஆலோசனை கொடுத்து வந்தான். 1855 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் கடும் பனிப் பொழிவு இருந்தது. அதின் காரணமாக பாஸ்டன் நகரத்திலிருந்த சார்லஸ் நதி அப்படியே கல்லாகிப் போய்விட்டது. மூடியின் நண்பர்களுக்கெல்லாம் ஒரே சந்தோசம். துடிதுடிப்பான தங்கள் சகாவான மூடியுடன் சேர்ந்து நதியிலே பனி சறுக்கி விளையாடலாம் என்ற ஆனந்தமான எண்ணங்கள் அவர்களுக்கு ஏற்பட்டன. ஆனால், மூடிக்கோ உள்ளத்திலே தன்னைக் கர்த்தருக்கு ஒப்புவிக்க வேண்டுமென்ற பலமான கிரியை அப்பொழுது நடந்து கொண்டிருந்தது. மூடிக்கு அப்பொழுது வயது 18 ஆகும்.

1855 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் மவுண்ட் வெர்னோன் தேவாலயத்தில் உயிர் மீட்சி கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அந்தக் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்த நாட்கள் ஒன்றில் அதாவது 1855 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21 ஆம் நாள் டுவைட் லைமான் மூடியின் ஓய்வு நாள் பள்ளி ஆசிரியர் கிம்பால் தனது மாணவனான மூடியைச் சந்தித்து அவனது ரட்சிப்பைக் குறித்து அவனோடு பேசவேண்டுமென்ற தாகத்தோடு மூடி வேலை செய்த செருப்புக் கடைக்கு வந்தார். அவருடைய உள்ளத்திலே அப்பொழுது ஒரே குழப்பமாக இருந்தது. செருப்புக்கடையிலிருப்போர் தன்னை யார் என்றும், மூடியை சந்திக்கப்போவதன் காரணத்தையும் கேட்டால் தான் என்ன சொல்லுவது என்ற போராட்டத்தோடு சென்ற அவர் நேராக மூடி வேலை செய்து கொண்டிருந்த அறைக்கே சென்றார். அப்பொழுது மூடி செருப்புகளை காகிதத்தில் சுற்றி அலமாரிகளிலே வரிசை கிரமமாக அடுக்கிக் கொண்டிருந்தான்.

"நான் மூடிக்கு நேராகச் சென்று எனது கரத்தை மூடியின் தோளில் போட்டவாறே சாய்ந்தவாறாக அருகிலிருந்த சப்பாத்து ஸ்டாண்டின் மேல் எனது காலை வைத்தவாறு மூடியின் முகத்தையும், கண்களையும் பார்த்தவாறு ஆண்டவராகிய இயேசு இரட்சகரண்டை மூடி உடனே வரவேண்டியதன் அவசியத்தையும் அந்த ஆண்டவர் அவனை எத்தனை அதிகமாக நேசிப்பதையும், அவனுடைய அன்பு அந்த இரட்சகருக்கு எவ்வளவு தேவை என்பதையும் எனது கண்களில் கண்ணீர் வழிந்தோட கூறினேன்" என்கின்றார் கிம்பால்.

அந்தப் பெரிய சப்பாத்துக் கடையின் பின்புறமான தனித்த அறையிலேயே மூடி தன்னை ஆண்டவருக்கு அந்த நிமிஷமே முற்றுமாக ஒப்புக் கொடுத்தான். மூடியிடம் அவனது இரட்சிப்பின் காரியத்தை குறித்து பேசிவிட்டு கிம்பால் சற்று நேரத்திற்குள்ளாக சப்பாத்துக் கடையிலிலிருந்து வெளியே போய்விட்டார். அடுத்த நாள் கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாள். மூடி தனது அறையிலிருந்து கீழ் வானில் உதித்து வரும் பாஸ்டன் பட்டணத்து சூரியனைப் பார்த்தார். அது முன் ஒருபோதும் இருந்திராத அளவுக்கு அதிகமான ஒளி பிரகாசத்தோடு உதயமாகி வருவதைப் போன்று அவருக்குத் தெரிந்தது. "அந்தக் காலை சூரியன் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தது போன்று எனக்குத் தெரிந்தது என்றும் பாஸ்டன் பட்டணத்து தெருக்கள் வழியாக அன்று நான் புறப்பட்டுச் சென்றபோது மரங்களிலே பாடிக் கொண்டிருந்த பறவைகள் எனக்காகவே ஒரு சிறப்பு பாடலைப் பாடிக் கொண்டிருப்பதைப் போன்று எனக்குத் தெரிந்தது. நான் அவைகள் மேல் எத்தனை அன்பு வசப்பட்டிருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆண்டவருடைய அனைத்துப் படைப்புகளின் மீதும் எனக்கு அன்பின் பாசப் பிணைப்பு ஏற்பட்டிருப்பதைப் போன்று எனக்குத் தெரிந்தது. உலகத்தில் எந்த ஒரு மனிதனைக் குறித்தும் எனக்கு கசப்பான எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லா மனுஷரையும் என் இருதயப் பூர்வமாக நேசிக்கின்றேன்" என்று மூடி கூறினான். மூடியின் மனந்திரும்புதலுக்குப் பின்னர் அவனது வாழ்க்கை முற்றும் மாற்றம் பெற்றது. அவனிடம் காணப்பட்ட எல்லா பாவ காரியங்களும் பகலவனைக் கண்ட பனி போல விலகி ஓடிவிட்டன. தான் மனந்திரும்பாத காலத்தில் உலகத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்களிலும் தனக்கு வறட்சியாகவும், இருண்டதுமாகத் தெரிந்த கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம் இப்பொழது அவனுக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும், களிகூருதலையும் அளிப்பதாக இருந்தது.

மூடி தனது இரட்சிப்பை பெற்றுக் கொண்டதும் தனது குடும்பத்தினரைக் குறித்த நினைவுதான் முதலாவது அவனுக்கு வந்தது. தனது அருமைத் தாயார், சகோதரிகளுக்காக குறிப்பாக தனது அப்பாவுடைய மரணத்துக்குப் பிறகு பிறந்த இரட்டையரான சாமுவேல், லிஸிக்காக அவன் ஜெபிக்க ஆரம்பித்தான். இதற்கு முன் அவன் இப்படி ஜெபித்தது கிடையாது. தான் தன் ஆண்டவரில் பெற்றுக் கொண்ட இரட்சிப்பையும், தேவ சமாதானத்தையும் தனது தாயாரும் உடன் பிறந்தவர்களும் பெற்றுக் கொளள வேண்டுமென்ற தாகம் அவனுக்கு அதிகமாக ஏற்படவே வெகு துரிதமாக லீவு எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்து தனது இரட்சிப்பின் சந்தோசத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான். ஆனால், அவர்களுக்கு மூடியுடைய வார்த்தைகள் ஒன்றுமே புரியவில்லை. "அப்படி நீ என்ன புதுமையை நீ பெற்றுக் கொண்டாய்?" என்று எல்லாரும் மூடியை விந்தையாய்ப் பார்த்தார்கள். "நீ சொல்லுவது எதுவும் எனக்கு வேண்டாம் மகனே, நான் சாகும் வரை எனது பரம்பரை மார்க்கமான ஒருத்துவ வணக்கத்திலேயே (பிதா, குமாரன் பரிசுத்த ஆவியாகிய திரித்துவத்தை மறுதலிக்கும் மார்க்கம்) இருந்துவிடுகின்றேன்" என்று தாயார் சொல்லிவிட்டார்கள். மூடி தனது குடும்பத்தினரின் வார்த்தைகளை கடினமாக எடுத்துக் கொள்ளாமல் சில நாட்கள் அவர்களோடிருந்து அப்பொழுது பண்ணையில் நடைபெற்றுக் கொண்டிருந்த உருளைக் கிழங்கு விவசாயத்தையும், மே மாதக் கடைசியில் பயிரிடப்படும் தர்பூசணி நாற்றுக்கள் நடுதலிலும் உதவி செய்துவிட்டு பாஸ்டன் பட்டணத்துக்குத் திரும்பினான்.

செல்வம் தேட சிக்காக்கோ பட்டணம் சென்ற மூடி

பாஸ்டன் பட்டணம் வந்த மூடி அங்கிருந்து சிக்காகோ பட்டணம் சென்றார். அந்தப் பட்டணம் அவரது மனதுக்கு மிகவும் பிடித்தமான பட்டணமாக இருந்தது. செல்வ செழிப்புமிக்க அந்தப் பட்டணத்தில் பாவமும் பெருகியிருப்பதை மூடி கண்டார். "பாஸ்டன் பட்டணத்தில் பணம் சம்பாதிப்பதைவிட வெகு துரிதமாகவும் ஏராளமாகவும் சிக்காக்கோ பட்டணத்தில் பணம் சேர்க்க முடியும்" என்று தனது தாயாருக்கு கடிதம் எழுதினார். அப்படியே அவர் பணம் சம்பாதிக்கவும் செய்தார். விரைவாக அவர் கோடீஸ்வரனாகி விடக்கூடிய அறிகுறிகள் பிரகாசமாக தென்பட்டன. எனினும் மூடியைக் குறித்த தேவ நோக்கம் வேறுவிதமாக இருந்தது. 1857 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சிக்காகோ பட்டணத்தில் ஒரு உயிர் மீட்சி ஏற்பட்டது. அதைக் குறித்து மூடி இவ்வாறு எழுதுகின்றார். "பட்டணத்திலே பெரியதோர் எழுப்புதல் ஏற்பட்டது. நான் ஒவ்வொரு நாள் இரவும் கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஆ, அந்த கூட்டங்கள் என் ஆத்துமாவுக்கு எத்தனை ஆனந்த பரவசமாக இருந்தது. வானத்தையும், பூமியையும் படைத்த தேவனே அந்தக் கூட்டங்களில் பிரசத்தியட்சமாக பங்கு எடுத்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது." இந்தக் கூட்டங்களில் பங்கெடுத்து பரவசமடைந்த மூடி தான் சம்பாதித்து கோடீஸ்வரனாக மாற வேண்டுமென்ற தனது பிரதான எண்ணத்தை தனக்கு பின்னால் தள்ளி வைத்தார்.

சிக்காகோ பட்டணத்தில் இருந்த பிளைமவுத் தேவாலயத்தின் ஆராதனையில் பங்கெடுக்கும் ஒவ்வொருவரும் தாங்கள் அமரும் ஆசனத்துக்கு பணம் கொடுத்தே அமர வேண்டும். பணமில்லாத ஏழை மக்கள் ஆராதனையில் பங்கெடுக்க இயலாது. அதை அறிந்த மூடி அந்த தேவாலயத்தின் நான்கு இருக்கைகளுக்குத் தானே பணம் கொடுத்து வாங்கி அதில் அமரும்படியாக ஏழை எளிய மக்களை அழைத்துக் கொண்டு வந்தார். மூடியும் அவரைவிட சற்று வயது கூடிய மற்றொரு வாலிபனான ஸ்டில்சன் என்ற கட்டிட கலைஞரும் தேவனுடைய சுவிசேஷ துண்டுப்பிரதிகளை துறைமுகத்திலுள்ள மாலுமிகளுக்கும், பட்டணத்து விடுதிகளில் தங்கியிருப்போருக்கும், சேரிகளில் வாழும் ஏழை எளியோர்களுக்கும் விநியோகம் செய்தனர்.

ஒரு ஓய்வு நாள் காலை நேரம் மூடி சிக்காகோ நகரின் தெருவில் சென்று கொண்டிருந்தபோது கந்தை கட்டிய ஒரு போக்கிரி வாலிபன் தனது நண்பர்களான மற்ற நான்கு போக்கிரி பையன்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை அவர் கண்டார். உடனே அந்தப் பையன்களைப் பார்த்து:-

"பையன்களே, நீங்களும் என்னோடு கூட ஓய்வு நாள் வகுப்புக்கு வரக்கூடாதா?" என்று மிகுந்த அன்போடும், பணிவோடும் அவர்களை விரும்பிக் கேட்டார்.

"நீ ஒரு பிக்னிக் பார்ட்டிக்குப் போகின்றாயா?" என்று அவர்கள் கேலியாக மூடியைத் திருப்பிக் கேட்டனர்.

"நீங்கள் என்னோடு மாத்திரம் வாருங்கள். கட்டாயம் நீங்கள் பிக்னிக் பார்ட்டியை கண்டு கொள்ளலாம்" என்று மூடி சொன்னார்.

உடனே அவர்கள் எல்லாரும் மூடியை பின் தொடர்ந்து தெருக்கள், நீதிமன்றங்கள், தோட்டங்கள் போன்றவற்றை எல்லாம் கடந்து வேர்வை சொட்ட சொட்ட வெல்ஸ் தெருவிலுள்ள தேவாலய ஓய்வு நாள் பாடசாலைக்கு வந்து சேர்ந்தனர். கந்தை ஆடைகளை அணிந்து கால்களில் செருப்புகள் கூட இல்லாமல் மொத்தம் 18 பேர்களை மூடி அன்றைய ஓய்வு நாள் பள்ளிக்கு அழைத்து வந்திருந்தார். "நான் அறிந்திருந்த மகிழ்ச்சியான ஓய்வு நாட்களிலே அதுதான் பிரதானமானது" என்று மூடி பின்னர் குறிப்பிட்டார். "எனது பணி என்ன என்பதை இப்பொழுது நான் கண்டு கொண்டு விட்டேன்" என்றார் மூடி. அந்தப் பணியை அவர் பின் வந்த நாட்களில் தொடர்ந்து செய்து கொண்டு வந்தார். மூடியும், அவரது கூட்டாளி ஃபார்வெல்லும் ஓய்வுநாள் பாடசாலைக்கு அழைத்து வந்து சேரிப் பகுதிகளிலுள்ள ஏழை எளிய மாணவர்களுடன் காணப்படுவதை படத்தில் நீங்கள் காணலாம்.

சிக்காகோ நகரில் மூடி தோற்றுவித்த வேதாகமப் பள்ளி

நூறு ஆயிரம் தங்க டாலர்களுக்கு (100000) அதிபதியாக வேண்டும் என்று ஒரு சமயம் மூடிக்கு இருந்த ஆசை எல்லாம் இப்பொழுது கொஞ்சம்கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஒரு ஜூன் மாத அருமையான இராக்காலத்தில் மூடியுடைய வாழ்வில் போராட்டம் எழுந்தது. அதைத் தீர்த்து வைக்க அவருக்கு மூன்று மாதங்கள் ஆனது. வேதாகம புதிய ஏற்பாட்டின் முதல் மனிதராக நாம் காண்கின்ற மத்தேயு என்பவரது வாழ்வில் ஏற்பட்ட அதே பிரச்சினைதான் அது. செல்வம் தேடும் தனது உலகப்பிரகாரமான எண்ணத்தை மூடி கைவிடும்படியாக தேவன் அவரோடு பலமாக இடைபட்டார். மூடி அதைக் குறித்துப் பேசும்போது "ஐயோ, நான் தேவனுடைய அந்த தீர்மானத்துக்கு எதிராக எத்தனை ஆவேசமாகப் போராடினேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்! அது ஒரு பயங்கரமான யுத்தம். எனினும் என் கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்திரிக்கின்றேன், என்னைக் குறித்த தேவனுடைய அந்த பரிசுத்தமான பரலோக சித்தத்துக்காக அவருக்கு அநேக தடவைகள் நன்றி செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்" என்கின்றார்.

பணமும், புகழும், பகட்டான வாழ்வு மட்டுமே மனிதனின் வாழ்வின் ஒரே இலட்சியம் என்று போற்றப்பட்ட நகரத்தில் தனது உயர்வான அந்தஸ்தையும், வியாபாரத்தில் தனக்குக் கிடைத்து வந்த ஏராளமான லாபங்களையும், தனது சக வியாபாரத் தோழர்களில் தனக்கே முதலாவது கோடீஸ்வரன் என்ற பட்டம் கிடைக்கவிருந்த அந்த அருமையான சந்தர்ப்பத்தையும், தனது திடீர் முடிவின் காரணமாக தனது திருமணத்தை தள்ளிப்போட வேண்டிய காரணத்தையும், அதை முன்னிட்டு தனது வருங்கால அழகிய மனைவி எம்மாவிடம் இரந்து கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டதையும், செல்வம் தனக்குக் கொண்டு வரக்கூடிய லோக மேன்மையை இழப்பதால் உண்டாகக் கூடிய கடினமான சூழ்நிலைகளையும் தன்னை ஆட்கொண்ட தன் ஆண்டவர் இயேசுவுக்காக அற்பமும் குப்பையுமாக எண்ணி இறுதியில் அதை நஷ்டமென்று விட்டுவிட மூடிக்கு 3 மாத காலம் சென்றது. மூடியின் மனைவி எம்மா மூடியை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

உலகப் பிரகாரமான செல்வம் கொழிக்கக்கூடிய தனது வியாபாரத்தை மூடி விட்டுவிட்ட பின்னர் தனது சரீரத்தின் முழு வலிமையையும், தாலந்துகளையும், காலத்தையும் தான் சிக்காகோ நகரத்தில் தோற்றுவித்த "நார்த் ஹில் மார்க்கட் ஹால்" வேதாகம பள்ளிக்காக செலவிட்டார். அங்கு அப்பொழுது ஆண்களும் பெண்களுமாக 1200 பேர்கள் இருந்தனர். அவர்களில் அநேகர் மகா துஷ்டராயுமிருந்தனர். அவரோ அவர்களை அன்பொழுக பாசத்தோடு "ஆட்டுக்குட்டிகள்" என்றே அழைத்தார். மூடியோடு சில பக்தர்களான பெரியவர்களும் கூடிச் சேர்ந்து உழைத்து வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஃபேர்வல் என்பவரும் ஒருவர்.

ஆத்துமாக்களுக்காக பைத்தியம் பிடித்தவர் போல்
அலைந்து திரிந்த மூடி

ஞாயிறு வேதாகம பள்ளி ஒன்றில் ஒரு மாணவன் தனது ஆசிரியருக்கு மிகுந்த துன்பம் கொடுப்பதாகவும் அருகிலுள்ள மற்ற வகுப்புகளும் நடவாதபடி அவன் இடையூறு செய்வதாகவும் மூடிக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் மேற்குறிப்பிட்ட தனது சகாவான ஃபார்வல் என்பவரை அழைத்து "நான் இந்தவிதமாக அந்த மாணவனை குறித்துக் கேள்விப்படுகின்றேன். அவனிடத்தில் பேசுவதற்காக நான் போகின்றேன். ஆனால் ஒரு காரியம், நான் பள்ளிக்கு நேராகப் புறப்பட்டுச் செல்லுவதிலிருந்து நான் திரும்பி வரும் வரை நமது பாடல் புத்தகத்தில் குறிப்பிட்ட ஒரு பாடலை உரத்த குரலில் விடாது பாடிக் கொண்டே இருங்கள்" என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். அப்படியே அந்தப் பாட்டு உச்ச ஸ்தாதியில் திரும்பத் திரும்பப் பாடப்பட்டுக் கொண்டிருந்தது. மூடி தனது பணியைச் செய்வதற்காகப் போனார். அவர் திரும்பி வந்தபோது அவரது முகம் செக்க சிவேரென்றிருந்தது. அவர் திரும்பி வரும்போதும் பாடசாலையில் அந்தப் பாடல் உயர்ந்த குரலில் பாடப்பட்டுக் கொண்டே இருந்தது. ஒரு மாதம்தான் கடந்து சென்றிருக்கும். ஆசிரியருக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த மாணவன் ஆண்டவருடைய பிள்ளையாகி ஆசிரியருக்கு மிகுந்த ஆதரவாக இருந்தான். அது மாத்திரமல்ல, சில ஆண்டுகளுக்குப் பின்னர் சிக்காகோ நகரில் நடைபெற்ற மூடி பிரசங்கியாரின் எழுப்புதல் கூட்டங்களில் மிகவும் ஒத்தாசை செய்பவனாக அவன் காணப்பட்டான்.

மூடி தமது ஞாயிறு வேதாகம பள்ளிக்கு மாணவ மாணவிகளை கொண்டு வந்து அவர்களை ஆண்டவரின் அடியார்களாக்க வெறிபிடித்தவர் போலத்தான் தெருக்களில் அங்கும் இங்கும் சுற்றி அலைந்து திரிந்தார். நம்மைப் பரவசத்தில் மூழ்க வைக்கும் ஒரு ஆச்சரியமான உதாரணத்தை பாருங்கள். சிக்காகோ நகரில் ஒரு சிறு பெண் மூடியின் வேதாகம பள்ளிக்கு வருவதாகவும் அதற்கு தனது தாயாரின் அனுமதியை மூடி பெற்றுத் தர வேண்டும் என்றும் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டுக்கு வெளியே தெருவின் ஒரு மூலையில் அவரை சற்று நேரம் காத்திருக்கும்படியாக கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றவள் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. ஏழை மனிதன் 3 மணி நேரம் பொறுமையோடு காத்திருந்தும் அவள் வந்தபாடில்லை. அந்தச் சிறுமியின் வீடு எது என்று அவர் அடையாளம் காண முடியவில்லை. மூடி துக்கத்துடன் போய்விட்டார். கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் அந்த சிறுமியை அவர் தெருவிலே பார்த்தார். அவரைப் பார்த்ததும் அவள் ஓட்டம் பிடித்தாள். அவரும் அவளைப் பின் தொடர்ந்து ஓடினார். சிறுமி, பக்கவாட்டில் உயரமாக எழுப்பப்பட்டிருந்த பலகைகளின் மேல் ஏறி ஓடினாள். மூடியும் அதின்மேல் ஏறி ஓடி அவளைப் பின் தொடர்ந்தார். இப்பொழுது அவள் ஒழுங்கில்லாத படிக்கட்டுகளின் வழியாக சடசடவென்று ஓடினாள். அவரும் அவள் பிறகே சென்றார். அங்கே ஒரு குதிரை வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதைச் சுற்றி சுற்றி அங்குமிங்குமாக அவள் மூடியை ஏமாற்றுக் காட்டி ஓடிக் கொண்டிருந்தாள். அதற்கும் மூடி மசியவில்லை. அதன் பின்னர் அந்த சிறுமி ஒரு விசாலமான இருபுறமும் மரங்களடர்ந்த பெரும்பாதையில் சிட்டாக ஓடினாள். அவரும் அப்படியே ஓடி இருவரும் தெருவுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுடைய ஓட்டத்தைக் கண்டு தெரு நாய்களும், அங்கிருந்த பாட்டிமார்களும் ஒருமிக்கக் குரைத்தனர். இப்பொழுது அவள் ஒரு சாராயக்கடைக்குள் சென்று அதின் மெத்தைப்படிகளில் ஏறி மெத்தைக்கு ஓடிவிட்டாள். மூடியும் படிக்கட்டுகள் வழியாக ஏறி மெத்தையைப் பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. அங்கிருந்த கட்டிலின் கீழேபார்த்தபோது அவள் அங்கே ஒளித்துக் கொண்டிருந்தாள். மூடி வேர்த்து விறுவிறுக்க மூச்சு வாங்கிய நிலையில் கட்டிலின் கீழாக ஊர்ந்து சென்று அவளது காலைப் பிடித்து வெளியே இழுத்தார். அவளை எப்படியோ அன்பொழுக பேசி கண்ணே, மணியே, கற்கண்டே, முத்தே, மரகதமே என்று ஆசை வார்த்தைகள் கூறி அவளை நயம்பண்ணி தனது ஞாயிறு வேதாகம பள்ளிக்கு ஒழுங்காக வரச் செய்துவிட்டார். மேற்கண்ட அசாதாரணமான நிகழ்வை குறித்து ஒருவர் பேசும்போது "மூடி பிரசங்கியார் ஒரு தனிப்பட்ட சிறுமியை மாத்திரம் அவளது கட்டிலின் கீழிருந்து இழுக்கவில்லை. அந்தச் சிறுமியின் முழுக்குடும்பத்தையே அவர் பரலோகத்துக்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்" என்று குறிப்பிட்டார்.

மூடி தமது பைகளை தின் பண்டங்களாலும், ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களாலும் நிரப்பிக் கொண்டு தெருக்களின் வழியாகச் சென்று பிள்ளைகளுக்கு அவைகளைக் கொடுத்து தனது ஞாயிறு பள்ளிக்கு அவர்களைக் கொண்டு வருவார். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள்ளாக யார் அதிகமாக ஓய்வு நாள் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அழைத்து வருவார்களோ அவர்களுக்கு ஒரு அழகான அணில் பரிசாக தருவதாக கூறும் மூடி தான் சொன்னவாறே அதிகமாக பிள்ளைகளை அழைத்து வந்த மாணவனுக்கு ஒரு அழகான அணிலை ஒரு கூண்டுக்குள் அடைத்தவாறு பரிசளிப்பார்.

ஒரு பெண் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொள்ளுகின்றாள். "ஏதோ எதிர்பாராத காரணங்களின் நிமித்தமாக நானும் எனது சகாக்கள் சிலரும் மூடியின் ஓய்வு நாள் வேதாகமப் பள்ளிக்கு சில காலமாக செல்லவில்லை. ஒரு நாள் நான் அவரை தெருவில் சற்று தொலைவில் வருவதைப் பார்த்தேன். அவரது பார்வையிலிருந்து தப்பிக்கொள்ளும்படியாகவும், அவரது அன்பான கடிந்து கொள்ளுதல்களுக்கு இடங்கொடாதவாறும் நான் அவரை விட்டு விலகி மாற்றுப் பாதையில் எனது வீடு சென்றேன். என்ன ஆச்சரியம், நான் வீடு போவதற்குள்ளாக அவர் எனது வீட்டிற்கு விரைவாகச் சென்று நான் வீட்டிற்குள் நுழையவும் கண்களில் கண்ணீர் மல்க தனது இரு கரங்களையும் எனக்கு நேராக விரித்தவாறே கனிவான குரலில் "ஜெனி இவ்வளவு நாட்களும் நீ எங்கு சென்றிருந்தாய்? உன்னை எனது பள்ளியில் காணாதது எனக்கு எப்படியோ இருக்கின்றது. ஜெனி நீ நல்ல தேக சுகத்தோடு இருக்கின்றாயா? உனது தோழிகள் யாவரும் நலம்தானா? வருகிற ஓய்வு நாளில் நீங்கள் எல்லாரும் ஓய்வு நாள் பாடசாலைக்கு தவறாது வந்து விடுங்கள். எனது ஆவலான எதிர்பார்ப்பை நீச்சயமாக நீங்கள் நிறைவு செய்வீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்" என்று அன்பொழுகக் கூறிச் சென்றார்.

ஒரு நாள் மூடி ஏழை மக்கள் வாழும் ஒரு சேரி பகுதிக்குச் சென்றார். குறிப்பிட்ட ஒரு வீட்டிற்குச் சென்றபோது வீட்டின் தலைவன் வீட்டில் இல்லை. ஆனால் அவன் குடிக்கும் மது ஜாடி வீட்டில் இருந்தது. அந்த வீட்டிலுள்ள சிறு பிள்ளைகளை தன்னுடன் வேதாகம வகுப்புக்கு அழைத்துச் சென்றதுடன் அந்த வீட்டில் தான் கண்டு பிடித்த மது நிறைந்த ஜாடியை தெருவில் போட்டு உடைத்து நொறுக்கிவிட்டுப் போய்விட்டார். அடுத்த தடவை மூடி அதே வீட்டிற்கு வந்தபோது வீட்டின் தலைவன் அங்கே இருந்தான். அவன் அவரைக் கண்டதும் கடுங் கோபம் கொண்டு தனது கரங்களின் சட்டையை மேலே இழுத்துவிட்டுக் கொண்டு அவரை அடிப்பதற்காக முயற்சித்தான். அதைக் கண்ட தேவ மனிதர் மூடி சாந்தமான அன்பின் குரலில் "உனது நன்மைக்காவும், உனது குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவும் நான் அன்று உனது மது ஜாடியை உடைத்தது மெய்தான். அதற்காக நீ என்னை அடிப்பதானால் உனது ஆசை தீர இப்பொழுது என்னை அடித்துக் கொள். ஆனால், முதலில் நான் உங்கள் யாவருக்காகவும் முழங்காலூன்றி ஜெபித்ததன் பின்னர் என்னை அடி" என்று கூறிவிட்டு அந்தக் குடும்பத்துக்காக உள்ளம் உருகி ஜெபித்து எழுந்தபோது அந்த மனிதன் வெட்கத்தால் தலை குனிந்து தனது குழந்தைகளை தமது வேதாகம பள்ளிக்கு அழைத்துச் செல்ல மூடிக்கு சந்தோசத்துடன் அனுமதி அளித்தான்.

கனத்த சரீரமுடைய மூடி தனது பழுவான சரீரத்தோடு தெருத்தெருவாக கஷ்டத்தோடு நடந்து சென்று ஞாயிறு வேதாகம பாடசாலைக்கு பிள்ளைகளைச் சேர்ப்பது கடினம் என்று உணர்ந்த அவரது நண்பனான ஜாண் ஃபேர்வெல் என்பவர் தனது 23 வயதான கருமை வெண்மை நிறமுடைய ஒரு இந்திய மட்டக் குதிரையை மூடிக்குக் கொடுத்தார். அதற்குப் பின் வந்த நாட்களில் மூடி அந்தக் குதிரையில் அமர்ந்து கொண்டு தனக்கு பின்னாக ஒரு ஆரஞ்சுப் பழக் கூடையையும் வைத்துக் கொண்டு தெருக்களிலுள்ள பிள்ளைகளைத் தேடிச் சென்றார். சில சமயங்களில் ஏழைச் சிறுவர் சிறுமிகளும் அவருக்குப் பின்னாக குதிரையில் அமர்ந்திருப்பார்கள். சற்று வயது வந்த ஏழைப் பையன்கள் தங்கள் அழுக்கான வஸ்திரங்களோடு மூடியின் குதிரைக்குப் பக்கவாட்டில் மகிழ்ச்சியோடு நடந்து சென்று கொண்டிருப்பார்கள். அவ்விதமாக மூடி ஒரு நாள் தனது மட்டக் குதிரையில் தனது கால் பாதங்கள் வரை நீண்டிருக்கும் ஒடுக்கமான கால் சட்டையைப் போட்டுக்கொண்டு தலையில் உயரமான கோமாளி குல்லா போன்ற குல்லாவையும் வைத்தவராக கிளார்க் தெருவில் போவதை "விட்டல்" என்ற ஒரு மனிதர் (விட்டல் என்பவர் பின் நாட்களில் மூடியின் மிகவும் நெருங்கிய ஆப்த நண்பனாகி தேவ ஊழியத்தில் அவருக்கு உதவி செய்தார்) ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அதே தெருவில் சென்று கொண்டிருந்த மற்றொரு மனிதன் "அதோ பைத்தியக்கார மூடி போகின்றான்" என்று கூறினானாம். உண்மைதான், தேவ ஞானம் உலகத்துக் பைத்தியம்தான்.

ஆண்டவருடைய பயனுள்ள பாத்திரமாக
மூடியை மாற்றிய ஒரு வார்த்தை

"விசுவாசத்தால் நீதிமான பிழைப்பான்" என்ற தேவ வாக்கு மார்ட்டின் லூத்தரை தேவனுக்கென்று மகத்தான காரியங்களை சாதிக்க வைத்தது. "தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பார். தேவனுக்காக பெரிய காரியங்களை முயற்சி செய்" என்ற வார்த்தை மிஷனரி வில்லியம் கேரியை கர்த்தருக்காக மாபெரும் பணிகளை செய்ய ஏவிவிட்டது. அவ்வாறே தேவ பக்தன் மூடியையும் கூட ஒரு வார்த்தை மாற்றிவிட்டது என்று சொன்னால் நீங்கள் ஆச்சரியம் கொள்ளுவீர்கள்.

1872 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் மூடியும் மற்றும் 20 தேவ மக்களும் ஒரு இரவு முழுவதையும் தேவ சமூகத்தில் செலவிட்டனர். அவர்களில் ஒருவர் வார்லி என்பவராவார். அடுத்த நாள் காலை மூடியும், வார்லியும் தூக்க மயக்கத்தோடு இருந்தபோதினும் ஆவியில் அனல் மூண்டவர்களாக அருகிலிருந்த மரங்களடர்ந்த பெவ்லி மைதானத்துக்கு நடந்து சென்றனர். அவர்கள் இருவருடைய சம்பாஷணையின் போது வார்லி முன்பின் யோசியாமலும், சொல்ல வேண்டுமென்ற முன் தீர்மானம் எதுவுமில்லாமலும் எப்படியோ நாவு தவறி "Moody, the world has yet to see what God will do with a man fully consecrated to Him" "தன்னை முழுமையாக தேவனுக்கு அர்ப்பணித்த ஒரு மனிதனை அவர் பயன்படுத்தும் மகத்துவத்தை உலகம் இன்னும் காண வேண்டியதாக இருக்கின்றது" என்று கூறிவிட்டார். அந்த வார்த்தையை எவ்விதமாகவோ தட்டுத்தடுமாறி சொல்லிவிட்டு வார்லி அதை அப்படியே மறந்தும் போனார். ஒரு வருடத்துக்கும் அதிகமான நாட்கள் சென்ற பின்னர் மூடி அந்த வார்த்தையை வார்லிக்கு திரும்பவுமாக நினைப்பூட்டியபோதுதான் வார்லி தான் தடுமாற்றத்துடன் சொன்ன வார்த்தை மூடியை எப்படி ஆட்கொண்டுவிட்டது என்று நெஞ்சார நினைத்து கர்த்தரை மகிமைப்படுத்தினார்.

வார்லி சொன்ன அந்த வார்த்தை மூடியை ஆச்சரியத்துக்குள்ளாக மூழ்க்கடித்தது. அதைக் குறித்து அவர் அப்பொழுது ஒன்றும் வார்லியிடம் பேசிக் கொள்ளவில்லை. எனினும், அவர் சொன்ன வார்த்தையை அப்படியே தன் இருதயத்துக்குள்ளாக திரும்ப, திரும்பக் கூறி அதை மனப்பாடமாக்கிக் கொண்டு அதைக் குறித்து தேவ சமூகத்திலே ஆழமாக சிந்திக்கத் தொடங்கினார். நாட்கள், வாரங்கள், மாதங்களாக அதையே அவர் தியானித்தார். "ஒரு மனிதனை" என்று வார்லி குறிப்பிட்டது அவன் எந்த மனிதனாகவும் இருக்கலாம் என்பதாகும். அவன் நல்ல கல்வியறிவு உடையவனாகவோ அல்லது படித்த மாமேதையாகவோ இருக்க வேண்டும் என்று வார்லி சொல்லவில்லையே. நல்லது, எனக்குள் குடிகொண்டிருக்கும் தேவ ஆவியானவரின் ஒத்தாசையால் வார்லி சொன்ன மனிதன் நானாகவே இருப்பேன் என்று மூடி அன்று முடிவெடுத்தார். அந்த பரிசுத்த முடிவுதான் அவரை உலகத்தின் மாபெரும் எழுப்புதல் பிரசங்கியாராக மாற்றி ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் கர்த்தரை கண்டடையத்தக்கதாக வழிநடத்திற்று.

இங்கிலாந்து தேசத்தில் ஏற்பட்ட உயிர் மீட்சி

1874 ஆம் ஆண்டு கோடை காலம் முழுவதும் ஸ்காட்லாந்து தேசத்தில் எழுப்புதல் தீ பற்றி எரிந்தது. பர்மிங்காம் நகரிலுள்ள கான்கிரிகேஷன் சபையின் போதகரும், வேதசாஸ்திரியுமான மேன்மைக்குரிய பண்டிதர் டேல் என்பவர் மூடி, ஸாங்கி என்பவர்களின் உயிர் மீட்சி கூட்டங்களின் ஆசீர்வாதங்களை கண்டு பரவசம் அடைந்தார். அவர் இங்கிலாந்து தேசத்திலே ஒரு உயிர் மீட்சி உண்டாக வேண்டும் என்றும், அப்படிப்பட்ட உயிர் மீட்சிக்கூட்டங்களின் ஆவிக்குரிய ஆசீர்வாதமான பலன் இரண்டு மூன்று ஆண்டுகள் வரை நீடித்து நிற்க வேண்டுமென்றும் வாஞ்சை கொண்டு ஜெபித்து வந்தார். எனினும் அப்படிப்பட்டதோர் எழுப்புதல் அந்நியர்களான இரண்டு அமெரிக்கர்களால் ஏற்படும் என்று அவர் கிஞ்சித்தும் நினைக்கவே இல்லை.

பிங்லி ஹால் என்ற இடத்தில் மூடியின் பிரசங்கத்தைக் கேட்க ஆசை ஆர்வத்தோடு குழுமியிருந்த கூட்டத்தைக் குறித்து அவர் இவ்வாறு எழுதுகின்றார்:-

"வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் சேர்ந்த மக்கள், அதாவது சிறியோரும், பெரியோரும், ஏழைகளும், ஐசுவரிய வான்களும், தங்கள் வியாபாரம் ஒன்றிலேயே மாத்திரம் கண்ணும் கருத்துமாகவிருக்கும் வியாபாரிகள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், தங்கள் கலாசாலை படிப்பை அப்பொழுது தான் படித்து முடித்து வந்த இளம் பெண்கள், பண்பாடுமிக்க கனமான ஸ்திரீகள், அத்துடன் நாய்கள், புறாக்கள் போன்றவற்றைப் பற்றி தெரியுமே தவிர வேறு எந்த ஒரு புத்தகத்தை குறித்தும் எதுவும் தெரியாத முரடர்களான பையன்கள் போன்றவர்கள் மூடியின் பிரசங்கத்தை கேட்க மிகுந்த வாஞ்சையோடு கூடி இருந்தார்கள்"

மேற்கண்ட டேல் என்பவர் மூடியிடம் "நீங்கள் செய்து கொண்டிருக்கும் ஊழியம் முழுமையாக தேவனுடையது. நீங்கள் செய்து முடித்திருக்கும் தேவப்பணிக்கும் தனிப்பட்ட மனிதனான உங்களுக்கும் எந்த ஒரு தொடர்புமே கிடையாது" என்று கூறினார். "சரியாக நிதானித்தீர்கள். அப்படி அது எனக்கு மாத்திரமே சம்பந்தப் பட்டிருக்குமானால் நான் நிர்ப்பந்தமான மனிதன்" என்று சிரித்துக் கொண்டே மூடி சொன்னார்.

மூடியின் உயிர் மீட்சி கூட்டங்களைக் கண்டு பலரும் பேராச்சரியம் அடைந்தார்கள். எழுப்புதலைத் தொடர்ந்து ஜெப ஆவியின் அலை மக்களை ஆட்டி அசைத்தது. எப்படி இந்த எளிமையான அமெரிக்க மனிதனால் இதனை சாதிக்க முடிந்தது என்று மக்கள் ஆச்சரியத்தால் மலைத்து நின்றார்கள். "மூடியின் மிக எளிமையான பிரசங்க நடையே அதின் இரகசியம் என்றும், எத்தனை ஆயிரம் மக்கள் தனக்கு முன்பாக கூடி வந்தபோதினும், தனக்கு முன்பாக வெறும் அரை டஜன் பேர்கள்தான் தனது வீட்டின் கனல் அடுப்புக்கு முன்பாக அமர்ந்து தனது வார்த்தைகளை கவனிக்கின்றார்கள் என்ற நிதானத்தோடு அத்தனை சாதுரியமாகவும், முழுமையாகவும், இயற்கையாகவும் அவர் தமது தேவச் செய்தியை அளிக்கின்றார்" என்று மேற்கண்ட டேல் பண்டிதர் கூறுகின்றார்.

பிரசங்க வேந்தரான தேவ மனிதர் ஸ்பர்ஜன் போன்றவர்களின் ஆழ்ந்த ஆங்கில அறிவைக் கொண்ட பிரசங்கங்களையும், அந்த பிரசங்கங்களிலே உவமானங்களுக்கு மேல் உவமானங்களைக் கேட்ட அந்த மக்களுக்கு மூடி இப்பொழுது மிகவும் எளிமையாகப் பேசுகின்றார். தனக்கு முன்பாக 13000 மக்கள் கூடியிருந்தாலும் அவர்களை வெறும் 13 பேர்கள் மாத்திரமே என்று எண்ணியவாறு அவர்களோடு வெகு நிதானமாக சம்பாஷிக்கின்றார். சிங்கக் கெபியிலே கிடக்கும் தானியேல் தனக்கு முன்பாக தன்னை பட்சிக்க காத்திருக்கும் சிங்கங்களுக்கு முன்பாக தனது கைக்கடிகாரத்தை எடுத்து எருசலேமுக்கு நேராக தனது கண்களை ஏறெடுத்து ஜெபிக்க வேண்டிய தனது ஜெப வேளை வந்து விட்டதோ என்று பயத்துடன் நேரத்தைப் பார்க்கின்றார் என்று அத்தனை சாதாரணமாக நகைச்சுவை குலுங்க பேசுகின்றார்.

நோவா காலத்தில் அவரை பரிகாசம் செய்த அக்காலத்திய பொல்லாத மக்கள் தெருக்களிலே, கடை வீதிகளிலே மாலைப்பொழுதிலே குழுமி நின்று "கிழவன் நோவாவின் மழை மேகம் வானத்திலே இன்னும் எழும்பி வரவில்லையாக்கும்" என்று கேலி பேசியதாக மூடி கூறுவார்.

பர்த்திமேயு குருடன் கண்கள் திறக்கப்பட்டதும் அவன் முதன் முதலாவதாக கண்டது தேவ மைந்தனை மாத்திரமேதான். அவன் எரிகோவுக்கு துரிதமாகப் புறப்பட்டுப்போனான். "என் கண்கள் திறக்கப்பட்டதை குறித்து எனது மனைவியிடம் நான் சொல்லப்போகின்றேன்" என்று அவன் சென்றான். ஒரு மனந்திரும்பிய மனிதன் தனது இரட்சிப்பைக்குறித்துத்தான் மற்றவர்களிடம் பேச ஆசை கொள்ளுவான்.

எரிகோவின் தெரு வழியாக உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியோடு செல்லும் பர்த்திமேயுவைக் கண்டு ஒரு மனிதன்:-

"பர்த்திமேயு நீங்கள்தான் என்று நினைக்கின்றேன்" அப்படித்தானே? என்றான்.

"நானேதான் அந்த பர்த்திமேயு"

"நல்லது, நானும் அப்படியேதான் நினைத்தேன். சரி, நீங்கள் எவ்வாறு உங்கள் கண் பார்வையைப் பெற்றுக் கொண்டீர்கள்?"

"ஓ, நான் நாசரேத் ஊர் இயேசுவை ஊருக்கு வெளியே சந்தித்து என்மேல் இரங்கும்படியாக கேட்டுக் கொண்டேன்"

"நாரேத் ஊர் இயேசுவா? அதுவும் நம் நாட்டுப் புறத்திலா?"

"நிச்சயமாகத்தான். நமது எரிகோ ஊரிலேதான்!"

"நானும் கூட அவரைப் பார்க்க வேண்டும்" என்று கூறிக்கொண்டே அவன் தலை தெறிக்க ஓடுகின்றான்.

ஆம், அவன்தான் சகேயு (சாக்குஸ் என்று மூடி அவனை அழகாக அழைப்பார்). காட்டு அத்தி மரத்தில் ஏற அவன் ஓடுகின்றான். இப்படியாக மூடியுடைய பிரசங்கம் தேவை நிறைந்த மற்றொரு மனிதனை நோக்கிச் செல்லுகின்றது. பாவம், இருள், அந்தகாரம் அகன்று ஒளி, சமாதானம், சந்தோசம் சகேயுவின் ஆத்துமாவில் வெடித்துப் பரவுகின்றது.

மூடியுடைய பிரசங்கத்தை கேட்கும் மனிதன் மூடியை அப்படியே மறந்துவிடுவான். அவருடைய செய்தி அந்தவிதமான முழுமையாகவும், தீவிரமாகவும், மனமார்ந்த விதத்திலும் அமைந்திருக்கும். தம்முடைய சொந்த வாழ்வின் அனுபவத்திலிருந்து அநேக காரியங்களை அவர் எடுத்துக் காட்டாகப் பேசுவார். இருப்பினும், பிரசங்கத்தில் அவர் தனது சுயத்தை அப்படியே ஆழமாக ஆழ்த்தி மறைத்துப் போடுவார். அவருடைய பிரசங்கங்களில் அவருடைய சொந்த சுயம் முற்றும் அறுபட்டு அவர் கொடுத்த தேவச் செய்தி மாத்திரமே நிலைத்திருக்கும். தன்னை உயர்த்தவே மாட்டார்.

கெட்ட குமாரனைக் குறித்து பேசும்போது அவன் வீடு வந்து சேர்ந்ததும் தேவகிருபை அவனை எதிர் கொண்டு ஓடோடி வந்து அணைக்கச் செய்தது. ஆனால், நியாயப் பிரமாணமோ அவனை கல் எறிந்து கொல் என்று கூறினது. தேவகிருபை அவனை அணைத்து முத்தமிடச் சொன்னது. ஆனால், நியாயப் பிரமாணமோ அவனை அடி என்றது. நியாயப் பிரமாணம் அவன் பிறகே சென்று அவனைக் கட்டும்படியாக சொன்னது. ஆனால் கர்த்தாவின் கிருபையோ கெட்ட குமாரனை கட்டவிழ்த்துவிடும்படியாகவும், அவன் சுயாதீனனாக செல்லட்டும் என்றும் கூறிற்று. நியாயப் பிரமாணம் நான் எத்தனையான கோணல் நாணலான புத்தியுடையவன் என்கின்றது. ஆனால், இரட்சகரின் அளவிடற்கரிய கிருபையோ என்னண்டை வந்து என்னை நேராக்கி என்னைத் தைரியத்தோடு தலை நிமிர்ந்து நடக்கச் செய்கின்றது" என்று கூறுவார்.

கிளாஸ்கோ நகரம் வெற்றி கொள்ளப்பட்டது

இங்கிலாந்திலுள்ள டண்டி என்ற இடத்தில் 3 வாரங்கள் எழுப்புதல் கூட்டங்கள் நடத்திய பின்னர் கிளாஸ்கோ என்ற பெரிய தொழிற்சாலைகள் நிரம்பிய பட்டணத்துக்கு 1874 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் தேதிமூடி பிரசங்கியாரும், அவரது பாடகர் ஸாங்கியும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் வந்து சேர்ந்தனர். மூடி குழுவினர் பட்டணத்துக்கு வருவதற்கு முன்னரே நடைபெறப்போகும் கூட்டங்கள் ஆசீர்வாதமாக இருக்க கிளாஸ்கோ பட்டணத்தின் சபைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒழுங்காக ஜெபிக்க ஆரம்பித்தனர். தனித்தனியாக அநேக ஜெபக்கூட்டங்கள் ஜெபிக்கத் தொடங்கியது. அத்துடன் கூட்டங்களுக்கு திரளான மக்கள் வருவார்கள் என்ற யோசனையில் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு அந்தந்த சபை போதகர்களிடம் கொடுக்கப்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போதுமான எண்ணிக்கையில் மாத்திரம் மூடி பிரசங்கிக்கும் "சிட்டி ஹால்" என்ற கட்டிடத்துக்குள் மக்களை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்தனர்.

கிளாஸ்கோ பட்டணத்தில் மூடி பிரசங்கியாரின் குடும்பம் புகழ்பெற்ற தேவ மனிதர் ஆண்ட்ரு போனர் என்ற பரிசுத்தவானின் வீட்டில் தங்கியிருந்தது. மூடியின் தேவ ஊழியம் இங்கிலாந்து தேசத்தில் ஒரு பெரிய அறுவடையை காண்பதற்காக பாடுபட்ட 2 தேவ மக்களில் ஆண்ட்ரு போனரும் ஒருவராவார். பரிசுத்தவானின் வீட்டில் தனது குடும்பத்தினருடன் மூடி தங்கியிருந்தது மூடிக்கு பெரிய சந்தோசத்தை அளிப்பதாக இருந்தது. குடும்பத்தின் சின்னஞ்சிறார்களை தனியே கவனித்துக் கொள்ள ஒரு நர்சரியும் வீட்டிலேயே இருந்தது. ஆனால் குளிப்பதற்கு மாத்திரம் சற்று வசதி குறைந்திருந்தது. கனல் அடுப்புக்கு அருகில் உட்கார்ந்து கொண்டேதான் குளிக்க வேண்டும். தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிக் குளிக்கவியலாது. மூடிக்கு அந்த குளிரான மாதத்தில்கூட குளிர்ந்த தண்ணீரில் ஸ்நானம் செய்வதுதான் ஆசை ஆவலாக இருந்தது. தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிக் குளிக்கக் கூடுமானாலும் மூடியின் கனத்த சரீரம் தண்ணீர் தொட்டியின் அளவைவிட பெரிதாக இருந்தது. அவரது சரீர எடை 260 பவுண்டுகளாகும்.

கிளாஸ்கோ பட்டணத்தின் கூட்டங்கள் 1874 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்குசிட்டி ஹாலில் தொடங்கியது. 3000 ஓய்வு நாள் பள்ளி ஆசிரியர்களும், மற்ற பள்ளிகளின் ஆசிரியர்களும் அங்கு அமர்ந்திருந்தனர். அவர்களில் டேவிட் ரசலும் ஒருவராவார். தனது கிழப்பருவத்தில் அந்தக் கூட்டத்தை குறித்து அவர் கூறும்போது "தேவ மனிதன் ஆண்ட்ரு போனர் ஜெபித்த பின்னர் "இயேசு என்னை நேசிப்பதை குறித்து அளவில்லா ஆனந்தம் அடைகின்றேன்" என்ற பொருளுடைய பாடலைத் தான் பாடப் போவதாக ஸாங்கி அறிவித்தார். ஓய்வு நாள் பள்ளி குழந்தைகள் பாடும் ஒரு சிறிய பாடல்தான் அது. இருப்பினும் அந்தப் பாடல் ரசலுடைய உள்ளத்தை களிப்பூட்டியதாக" அவர் கூறுகின்றார். மேலும் ரசல் தொடர்ந்து கூறும்போது:-

"நான் எனது வாழ்வில் இந்தவிதமானதொரு நேர்த்தியான பாட்டை கேட்கவே இல்லை. கர்த்தருக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட குரல். பாடகர் ஸாங்கியின் முகத்தில் தழும்பி வழிந்த ஆனந்தப் பெருக்கு, குழந்தைகள் தங்கள் எளிமையான வார்த்தைகளால் பாடுவதைப் போன்ற பாடலின் எளிமையான நடை எல்லாம் எனது இருதயத்தை அப்படியே கவர்ந்து கொண்டுவிட்டது. என்னை அறியாமலே எனது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. நான் இவ்விதமாக அழுவதை என்னோடுள்ள பிறர் கண்டால் என்ன நினைப்பார்கள் என்ற வெட்கத்தின் உணர்வு என்னை ஆட்கொள்ளும் வேளையில் நான் மற்றவர்களைப் பார்த்தபோது எனக்கு சற்று நேரத்துக்கு முன்னதாகவே அவர்களும் கண்ணீர் வடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதை என்னால் காண முடிந்தது. அவர்களுடைய முகத்திலும் கண்ணீர் துளிகள் விழுந்து ஓடிக்கொண்டிருந்தன. மூடிப் பிரசங்கியாருக்கு அறிமுகமே தேவை இல்லாதிருந்தது. காரணம், அவர் மூலமாக பற்றி எரிந்து கொண்டிருந்த எழுப்புதலின் தீயைக் குறித்து எல்லாருமே நன்கு கேள்விப்பட்டிருந்தனர். பிரசங்க மேடையிலே மூடியோடு கிளாஸ்கோ நகரத்தின் பல்வேறு திருச்சபை போதகர்கள் அமர்ந்திருந்தனர். மூடி தமது வலது கரத்தால் தன்னுடைய வேதாகமத்தை பிடித்திருந்ததே ஒரு சிறப்பான அழகாகும். வேதாகமத்தை அவர் பிடித்திருந்தார், வேதாகமம் அவரைப் பிடித்திருந்தது. மூடியைப் பார்த்த சில நிமிடங்களுக்கெல்லாம் என் மனம் அவரை விரும்பவில்லை. ஸ்காட்லாந்து தேசத்தவனான நான் எனது தேசத்தின் சீரிய பண்பாட்டைக்குறித்து எனக்குள் பெருமை கொண்டவனாக அமெரிக்க தேசத்தவனான மூடியைக் குறித்து தாழ்வாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், வேதாகமத்திலிருந்து அவர் சொன்ன ஒரு எளிமையான கதையின் மூலமாக எனது உள்ளத்தை அவர் தன் வசமாக முழுமையாக கவர்ச்சித்து இழுத்துக் கொண்டார். அந்தக் கதையை மூடியைத்தவிர வேறு எவராலும் அத்தனை உணர்ச்சிவசமாகக் கூறவே இயலாது. அந்தக் காலைக் கூட்டம் மிகுந்த தேவாசீர்வாதம் நிறைந்ததாக இருந்தது. மூடி பிரசங்கியார் நிச்சயமாகவே கிளாஸ்கோ நகரத்தை கிறிஸ்துவுக்காக வெற்றி கொண்டுவிட்டார்"

கிளாஸ்கோ நகரில் மூடியுடைய கூட்டங்கள் தேவாலயங்களிலும், சிட்டி ஹாலிலும், கிரிஸ்டல் பாலஸ் என்ற விசாலமான கட்டிடத்திலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடல் அலையென மக்கள் வெள்ளம் ஒவ்வொரு கூட்டத்திற்கும் திரண்டு வந்தது. சுவிசேஷத்தை கேட்க மக்கள் கால் நடையாகவும், குதிரைகள் இழுக்கும் டிராம் வண்டிகளிலும், கிரீச், கிரீச் என்று ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் பழமையான வாடகை வண்டிகளிலும், ரயிலிலும், குதிரைகள் இழுக்கும் நேர்த்தியான வண்டிகளிலும் கிளாஸ்கோ பட்டணத்துக்கு வந்து குவிந்த வண்ணமிருந்தனர். துறைமுகங்களிலிருந்தும், நூல்நூற்பு ஆலைகளிலிருந்தும், தொழிற்கூடங்களிலிருந்தும், மற்றவர்கள் கிட்ட நெருங்க முடியாத முரட்டாட்டமான மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து அந்த முரடர்களான மாந்தரும், தொழிற்சாலைகளின் கரும்புகை சூழ்ந்ததும் பனிக்காலத்தின் கொடுங்குளிர் வீசும் தெருக்களிலிருந்தும், செல்வ சீமான்கள் வாழும் ஹில்ஹெட் என்ற இடத்திலிருந்து பெருஞ் செல்வந்தர்களும், தங்கள் வீட்டிலுள்ள பியானோ வாத்தியக் கருவிக்கு முன்னர் "சேக்ரட் ஸாங்ஸ் ஆண்ட் சோலோஸ்" என்ற தலைப்பிலான பாட்டுப்புத்தகம் தவறாது வைக்கப்பட்டிருக்கும் பயபக்தியுள்ள நடுத்தர வர்க்கத்தினரும் திரள் திரளாகப் புறப்பட்டு வந்தனர். வந்த மக்கள் எல்லாரும் ஆசீர்வதிக்கப்பட்டனர். ஜேன் மாக்கினோன் என்ற ஒரு அம்மையார் தூரமான காம்பல் டவுணிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு கப்பல் உரிமையாளரின் செல்வ சீமாட்டியான மனைவி அவர்கள். பட்டணம் முழுவதும் எங்கும் எவ்விடத்திலும் மூடி பிரசங்கியாரின் உயிர் மீட்சி கூட்டங்களைப் பற்றிய பேச்சுத்தான் பேசப்பட்டது. தேவ மனிதன் மூடி காலை முதல் இரவு நெடு நேரம் வரை வேத வசனத்தைப் பிரசங்கிப்பதிலும், வேதாகம வகுப்புகள் எடுப்பதிலும், வாலிபர்களுக்கு தேவ ஆலோசனை கூறுவதிலும் செலவிட்டார். வாரத்தின் சனிக்கிழமை மாத்திரம் அவர் தனக்கென ஓய்வு எடுத்துக் கொண்டார். "மூடி தனது தேக பெலத்தையும் காலத்தை எல்லாம் தன் ஆண்டவர் இயேசுவுக்காக எந்த ஒரு பிடித்தம் இல்லாமல் அப்படியே கொடுத்துவிட்டார். கர்த்தருக்குக் கொடுக்கக்கூடியது இவ்வளவுதான் என்ற அந்த எல்லைக்கோடே அவரிடம் இல்லாமல் போயிற்று" என்று மக்கள் அவரைக் குறித்து பேசினர்.

பெப்ரவரி மாதம் 24 ஆம் நாள் செவ்வாய் கிழமை "எழுப்புதலின் 101 ஆம் இரவு" என்று ஸ்காட்லாந்து தேசம் முழுவதும் பேசிக் கொள்ளப்பட்டது. மூடி தனது உயிர் மீட்சி கூட்டங்களை சிட்டி ஹாலில் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார். தேவ மனிதர் மூடி கூட்டத்தில் பேசுவதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

அந்த 24 ஆம் தேதி கடைசி கூட்டம் வாலிபர்களுக்கென்று அமைந்திருந்தது. மூடி தன்னளவில் மிகவும் களைப்புற்றுக் காணப்பட்டார். எனினும், அந்த நாள் அவரது ஊழிய நாட்களின் ஆசீர்வாதமானதொரு நாளாகக் காணப்பட்டது. அன்று எடின்பரோ பட்டணத்திலிருந்து ஹென்றி டிரம்மண்ட் என்பவர் 5 மாணவர்களை மூடியுடைய கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார். பிரசங்கத்துக்குப் பின்னர் "கிறிஸ்தவர்கள் என்று தங்களுக்குள் நிச்சயமானவர்கள் எழுந்து நிற்கலாம்" என்று மூடி கூறவே நிறைய வாலிபர்கள் எழுந்து நின்றனர். அவர்களை அமரச் சொல்லி விட்டு "கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் இப்பொழுது எழுந்து முன் வரலாம். அவர்கள் வரும் பொழுது நாம் நமது தலைகளை தாழ்த்தி இருப்போம்" என்று மூடி சொன்னார். அதைக் குறித்து எடின்பரோவிலிருந்து வந்திருந்த 5 வாலிப மாணவர்களில் ஒருவனான ஜேம்ஸ் ஸ்டாக்கர் இவ்விதமாக சாட்சி கொடுக்கின்றான்:-

"மிகவும் அமைதியான அந்த நேரத்தில் அசாதாரணமான தொரு அசைவை நன்கு உணர முடிந்தது. கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு ஜீவ ஊற்று பாயத் தொடங்குவது போல காணப்பட்டது. மூடி தமது கண்களை வானத்துக்கு நேராக ஏறெடுத்து சப்தமாக ஜெபிக்க ஆரம்பித்தார். அவ்வளவுதான், ஒரு தெய்வீக வல்லமை கூடி வந்தோர் யாவரையும் மூழ்க்கடித்து விடுவதைப் போன்று தெரிந்தது. நான் எனது கண்களைத் திறந்து சுற்றுமுற்றும் மற்றும் பிரசங்க மேடையையும் ஒரு கணம் பார்த்துவிட்டு எனது கரங்களால் எனது முகத்தை மூடிக்கொண்டேன். அந்த பரிசுத்தமான தேவப்பிரசன்னத்தின் அசைவாடுதலை என்னால் தொடர்ந்து கண்விழித்துப் பார்க்கக் கூடாதவனானேன்" என்றான். கூட்டம் நடைபெற்ற ஹாலில் அமரும் ஆசனங்களை ஒழுங்குபடுத்தும் மனிதர் கர்த்தருக்கு தங்களை ஒப்புவித்து முன்சென்ற வாலிபர்களின் எண்ணிக்கை 101 என்று கணக்கிட்டிருந்தார். நள்ளிரவு 12 மணி வரை முன் வந்த தவனமுள்ள ஆத்துமாக்களுக்கு தேவ ஆலோசனைகள் கூறப்பட்டன. கூட்ட முடிவில் ஒரு வாலிபன் "ஆண்டவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நானும் இத்தனை நாளாக முயற்சித்தும் அந்தக் காரியம் கை நழுவிச் சென்று கொண்டே இருந்தது. அதின் காரணமாக ஒரு நீண்ட காலமும் கடந்து போய்விட்டது. அதை என்னால் செய்யவே முடியவில்லை. ஆனால் மூடி பிரசங்கியார் நேரடியாகவே எனக்கு முன்பாக வந்து எனது இரு கரங்களையும் அன்பாக பிடித்து என்னைப் பார்த்து "இயேசுவை இப்பொழுதாவது ஏற்றுக்கொள்" என்று சொன்னார். அவருடைய வார்த்தைக்கு நான் வாய் திறந்து பதில் கூறாத போதினும் எனது இருதயம் "ஆம் இப்பொழுதே நான் அவரை எனது ஆத்தும நேசராக அங்கீகரிக்கின்றது என்று மாறுத்தரம் கொடுத்தது" என்றான். கிளாஸ்கோ நகர கூட்டத்தில் பங்குபெற்ற மேலே குறிப்பிட்ட 5 வாலிபர்களும் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து விடியற்காலம் வரை முந்தின இரவு எழுப்புதல் கூட்டத்தில் தேவன் நடப்பித்த அதிசயமான காரியங்களை பரவசமாக ஒருவருக்கொருவர் பேசி ஆவியிலே களிகூர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்து வந்த தேவ மனிதர் ஹென்றி டிரம்மண்ட் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தோல் கட்டுமான அழகிய புதிய ஏற்பாட்டை பரிசளித்தார். அவற்றை அவர்கள் நன்றியோடுபெற்று தங்கள் தங்கள் பெயர்களை அதில் எழுதி பயன்படுத்த ஆரம்பித்தனர். அவர்கள் ஐவரும் தங்கள் புதிய ஏற்பாடானது கந்தல் கந்தலாக போகும் வரை தங்கள் வசம் வைத்திருந்து அத்தனை அருமையாக தேவனுடைய வசனங்களை வாசித்து தியானித்து ஆசீர்வாதம் பெற்றனர்.

கர்த்தருக்குத் தங்களை ஒப்புவித்து முன்சென்ற 101 வாலிபர்களின் பெயர்களும், முகவரிகளும் வில்லியம் ஓட்ஸ் என்ற மனிதனிடமிருந்தது. அவர் அந்த வாலிபர்கள் யாவரோடும் தொடர்ச்சியான கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டே இருந்து அவர்களை ஆவிக்குள் ஊக்குவித்துக் கொண்டிருந்தார். 50 ஆண்டுகளுக்குப்பின்னர் அவர் அந்த ஆத்துமாக்களைச் சந்தித்தார். என்ன ஆச்சரியம்! அவர்கள் எல்லாரும் கர்த்தரில் வளர்ந்த நல்ல உறுதியான கிறிஸ்தவர்களாக கிளாஸ்கோ, லண்டன், ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் இருந்தனர். அவர்கள் தாங்கள் மாத்திரம் கர்த்தருக்குள் நிலைத்து நின்றதுடன் மற்றவர்களையும் ஆண்டவருக்குள் வழிநடத்திக் கொண்டிருந்தனர். மூடி பிரசங்கியார் பிரசங்கங்களின் மூலமாக கர்த்தரண்டை வந்து சேர்ந்த ஆத்துமாக்களில் பெரும்பாலானோர் கடைசி வரை ஆண்டவருடைய உண்மையுள்ள சாட்சிகளாக எழும்பிப் பிரகாசித்துள்ளனர்.

பரிசுத்த அக்கினியால் அபிஷேகிக்கப்பட்ட
மூடி பிரசங்கியார்

மூடியை தேவன் பல ஆயிரமாயிரம் மக்களுக்கு ஆசீர்வாதமாகவும், அவர்களுடைய உயிர் மீட்சிக்கு ஏதுவாகவும் மிகுந்த வல்லமையாக பயன்படுத்தியதன் காரணம் அவர் பரிசுத்த ஆவியின் அக்கினியால் அபிஷேகிக்கப்பட்டிருந்ததுதான்.

1871 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிக்காகோ நகரத்தில் நடைபெற்ற மூடி பிரசங்கியாரின் ஒரு கூட்டத்தில் ஆனிகூக் அம்மையாரும் அவர்களது சிநேகிதியும் விதவையுமான ஹாவ் ஹர்ஸ்ட் அவர்களும் முன் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஆனிகூக் அம்மையார் இங்கிலாந்து தேசத்திலிருந்து சமீபத்தில்தான் அமெரிக்காவில் குடியேறியவர்கள். மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்த அவர்கள் மூடியைவிட 10 ஆண்டுகள் வயது முதிர்ந்தவர்கள். சிறந்த தேவ பக்தினி. மக்களுக்கு மிகுதியாக நற்கிரியைகளைச் செய்த அம்மையார். அவர்களை எல்லாரும் "ஆண்டி கூக்" என்று தான் அழைத்தனர். மூடி அன்று பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் ஊக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தனர்.

"நாங்கள் இருவரும் இன்று உங்களுக்காக ஜெபித்துக் கொண்டே இருந்தோம்" என்று அவர்கள் இருவரும் கூட்ட முடிவில் மூடியைப் பார்த்துச் சொன்னார்கள். மூடி அந்த வார்த்தையைக் கேட்டதும் உண்மையில் அவருக்கு எரிச்சலாகத்தான் இருந்தது.

"கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்ட மக்களுக்காக ஏன் ஜெபிக்கவில்லை" என்று மூடி அவர்களைத் திருப்பிக் கேட்டார்.

"உங்களுக்கு பரிசுத்தாவியானவரின் வல்லமை தேவை" என்று அம்மையார் இருவரும் சாந்தமாக அவருக்கு மாறுத்தரம் சொன்னார்கள்.

"எனக்கு வல்லமை தேவையா!" என்று மூடி நாசுக்காக கூறிவிட்டு அப்பால் நகரத் தொடங்கினார்.

ஆனால் அம்மையார் இருவரும் இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால் நமக்கு இனி ஒரு வாய்ப்பு கிடைப்பது முற்றும் கூடாத காரியம் என்று எண்ணியவர்களாக அவரைப் பின் தொடர்ந்தனர். கண்களில் கண்ணீர் நிறைந்தவர்களாக "பரலோக வேட்டை நாய்க்கு" பின்னால் அம்மையார்கள் இருவரும் பயபக்தியாக சென்றனர் என்று மூடி புத்தக ஆக்கியோன் எழுதுகின்றார். அவர்கள் இருவரும் ஆத்திரம் அவசரம் இல்லாமல் பரிசுத்தமான சாந்தத்தோடு என்னைத் தொடர்ந்து வருவதைக் கண்டதும் எனது தேவையை அது சிந்திக்க வைத்தது என்கிறார் மூடி. தொடர்ந்து அவர் "அவர்கள் இருவரையும் என்னை வந்து சந்தித்து இது விசயமாக பேசுங்கள் என்று அழைத்தேன். அப்படியே அந்த அன்பான மக்கள் இருவரும் என்னிடம் வந்து தங்கள் இருதயங்களை உடைத்து ஊற்றி ஜெபித்து எப்படியாவது நான் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தேவ சமூகத்தில் மன்றாடினார்கள். அதற்கப்பால் எனக்குள்ளாக ஒரு பெரிய தாகம் ஏற்பட்டது. அந்த தாகம் எனக்குள்ளாக எப்படி ஏற்பட்டது என்று எனக்குத் தெரியாது. அதற்கப்பால் நான் ஒருக்காலும் இல்லாத அளவுக்கு பரிசுத்த ஆவியின் நிறைவை வாஞ்சித்துக் கதறி அழ ஆரம்பித்தேன். தேவ ஊழியத்திற்குத் தேவையான பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் எனக்கு கிடைக்காதபட்சத்தில் நான் உயிர் வாழ்வதைவிட சாவதே நலம் என்ற முடிவுக்கு வந்தேன்" என்று கூறுகின்றார் மூடி.

இதன் பின்னர் 1871 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அதாவது மேற்கண்ட சந்திப்புக்கு 2 மாதங்களுக்குப் பின்னர் மூடி பிரசங்கியார், ஆண்டிகூக் அம்மையாரையும் அவர்களது சிநேதியையும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை பிற்பகலிலும் சிக்காகோ நகரத்திலுள்ள சென்ட்ரல் ஹாலுக்கு வந்து தனக்கு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை தேவன் தரும்படியாக ஜெபிக்க வரும்படியாக அழைத்தார். அப்படியே அம்மையார்கள் இருவரும் பிரதி வெள்ளிக் கிழமைகளிலும் அந்த இடத்திற்கு வந்து ஒருவர் மாற்றி ஒருவர் பலத்த சத்தத்தோடு தேவ சமூகத்தில் மூடிக்காக ஜெபித்தனர். அக்டோபர் 6 ஆம் தேதி மூடியின் இதய கதறல் அளவு கடந்து செல்லவே கண்களில் கண்ணீர் வடிய தரையில் கிடந்து "ஆண்டவரே, என்னை உமது பரிசுத்த அக்கினியால் அபிஷேகம் செய்யும்" என்று அழுது புரண்டார். ஆனால் ஒன்றும் நடந்தது போல தெரியவில்லை. வானம் அவருக்கு முன்பாக வெண்கலம் போலத்தான் இருந்தது. கர்மேல் பர்வதத்தில் பாகால் தீர்க்கத்தரிசிகள் செய்தது போல மூடி எவ்வளவோ சத்தமிட்டுக் கெஞ்சி கதறி அழுதாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை. மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. எனினும் தேவ மனிதன் சோர்ந்து போகாமல் அடுத்த 5 ஆண்டு காலமாக தேவ சமூகத்தில் தொடர்ந்து ஜெபித்து வந்தார்.

5 ஆண்டு காலத்திற்குப் பின்னர் மூடி ஒரு நாள் நியூயார்க் பட்டணத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். நியூயார்க் பட்டணத்தின் உயரமான சாலை மரங்கள் நின்ற ஐந்தாவது பெரு வீதி வழியாக பகற் காலத்தின் நல்ல வெளிச்சத்தில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அது ஜன நெருக்கமான சந்தடி நிறைந்த ஒரு வீதியாகும். தினசரி செய்தி தாட்களை விற்கும் பையன்கள் சத்தமிட்டு தங்கள் நாளேடுகளை விற்றுக் கொண்டிருந்தனர். குதிரைகள் இழுத்துக் கொண்டு ஓடும் சாரட்டு வண்டிகள் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. மக்கள் கூட்டம் மூடியை நெருக்கிக் கொண்டு போவதும் வருவதுமாகவிருந்தனர். மூடி தன்னை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்தவராக தனது காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். தனக்கும் தன்னை ஆட்கொண்ட கர்த்தருக்கும் எந்த ஒரு சிறிய தடையின் இடை வெளியும் இல்லை என்று அவர் தனக்குள் உறுதி செய்து கொண்டார். அந்த வினாடியில்தானே பரிசுத்த ஆவியானவரின் நிறைவான பிரசன்னம் மூடியுடைய இருதயத்துக்குள் ஒளி வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. "சர்வ வல்லமையுள்ள தேவன்தாமே எனது அருகில் வந்து விட்டதாகவும் எனக்கு உடனடியாக ஒரு தனிமை தேவை என்பதையும் நான் அத்தியந்தமாக உணர்ந்தேன்" என்கின்றார் மூடி. உடனே அவர் அருகிலிருந்த அவரது நண்பர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்று வாசலில் இருந்த ஒருவரிடம் தனது விலாச கார்ட்டை கொடுத்து நண்பனுக்கு அனுப்பினார். உடனடியாக நண்பன் ஓடோடி வந்து மூடியை அன்பொழுக வரவேற்று ஒரு தடபுடலான விருந்துக்கு ஆயத்தம் செய்தான். "எனக்கு ஒன்றும் வேண்டாம். நான் தனிமையில் சென்று என்னை மாத்திரம் உள்ளே வைத்து அறையைப் பூட்டிக் கொள்ள ஒரு தனித்த அறை வேண்டும்" என்று மூடி தனது நண்பனிடம் கேட்டார். நகைச்சுவையாக பேசும் மூடி பிரசங்கியார் இந்தச் சமயமும் தன்னை கேலி செய்வதற்காக இப்படிச் சொல்லுகின்றார் என்று நண்பன் எண்ணினான். ஆனால் அன்று நடந்தது வேறு.

தனித்த அறைக்குள் மூடி சென்று அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு அங்கு இருந்த இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார். அந்த அறையே தேவனுடைய அக்கினியால் நிறைந்திருப்பதைப்போல மூடி உணரவே அமர்ந்திருக்க இயலாமல் அந்த தெய்வீக அக்கினியில் மூழ்கியவராக தரையிலே விழுந்து புரண்டார். மறுரூப மலையில் தமது அன்பான சீடர் மூவருக்கு கொடுத்த அதே பரலோக அக்கினி அனுபவத்தை அன்று அவர் பெற்றதாக பின்பு கூறினார். அதைக் குறித்து அவர் சொல்லும்போது "தேவன் தம்மை அன்று எனக்கு வெளிப்படுத்தினார். அவருடைய பிரவாகிக்கும் பேரின்பப் பெருக்கு என் உள்ளத்துக்குள் பாய்ந்தோடியது. அந்தப் பரலோக ஆனந்தத்தை தொடர்ந்து அனுபவித்து மகிழ எனக்கு இயலாத காரணத்தால் "ஆண்டவரே, உமது கரத்தை என்னிலிருந்து எடுத்துப் போடும், இல்லாவிட்டால் உமது பரலோக சந்தோசத்தின் மிகுதியால் நான் செத்துப் போவேன்" என்று தேவனிடம் அபயமிட வேண்டியதாயிற்று" என்றார். மூடி தங்கியிருந்த வீட்டிற்குப் பக்கத்திலிருந்த தேவாலயத்தின் மணி கால், அரை, முக்கால், ஒரு மணி, இரண்டு மணி, மூன்று மணி என்று அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் மூடி வெளியே வரவில்லை. நீண்ட மணி நேரங்களுக்குப் பின்னர் "பைத்தியக்கார மூடி" என்று அழைக்கப்பட்ட அவர் "தேவனுடைய பரிசுத்த மனிதன் மூடி" என்ற பக்த சிரோன்மணியாக அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்.

மோசே சீனாய் மலையில் தேவனோடு 40 நாட்கள் தனித்திருந்துவிட்டு கீழே இறங்கி வரும்போது இஸ்ரவேல் மக்கள் அவரது முகத்தை பிரகாசிப்பதாக கண்டதுபோல அவருடைய நண்பரும், குடும்பத்தினரும் மூடியின் முகத்தில் வீசிய ஒளியை அன்று கண்டு தேவனை மகிமைப்படுத்தினார்கள். மூடியின் மாம்ச சரீரம் தேவ ஆவியானவருக்குமுன்பாக மெழுகு போல உருகி அந்த மாம்ச சரீரம் தேவ ஆவியானவர் தங்கும் ஆலயமாக வடிவமைக்கப்பட்டது. அவருடைய கொந்தளித்துக் கொண்டிருந்த மனம் தேவ சமாதானத்தால் நிரம்பி வழிந்தது. தனது விருப்பமோ இல்லை தனது வாஞ்சையோ அல்ல, தேவனுடைய ஆளுகைக்கு முற்றும் கையளித்த ஒரு குழந்தையாக இப்பொழுது அவர் காணப்பட்டார். தனது வழியை தானே பார்த்து தான் தெரிந்து கொண்ட பாதையில் நடவாமலும், பெருமை தன்னை ஆழுகை செய்யாமலும், தேவ சித்தம் ஒன்று மட்டுமே தன்னில் நிறைவேறத்தக்கதாக தேவன் தன்னை நடத்திச் செல்லவும், தேவைகளைச் சந்திக்கவும் ஆண்டவரது கரங்களில் மூடி அன்று விழுந்தார். இப்பொழுது மூடியின் தேவ ஊழியத்தில் எந்த ஒரு வறட்சியும் காணப்படவில்லை. "காலமெல்லாம் தண்ணீரை நானே கஷ்டப்பட்டு இழுத்து அதை சுமந்து சென்று கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுதோ என் உள்ளத்தில் பொங்கும் ஜீவ நதியின் பேரின்ப பெருக்கில் நான் சுமந்து செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்" என்று தனக்குக் கிடைத்த பரிசுத்த அக்கினி அபிஷேகத்தைக் குறித்து மூடி சொன்னார். அதற்கப்பால் அவரது தேவ ஊழியங்களில் ஒரு பெரிய உயிர் மீட்சி அலை வீசத் தொடங்கியது.

ஈடு இணையற்ற மூடி பிரசங்கியார்

மூடி தமது வாழ்வில் ஒரு புத்தகம் கூட எழுதவில்லை. அவருடைய சுவிசேஷ பிரசங்கங்கள், வேதாகம புருஷர்களைக் குறித்து அவர் கொடுத்த செய்திகள், வேதாகம சத்தியங்களைக் குறித்த பாடங்கள், தியானங்கள் எல்லாம் அவருடைய வாய்ப் பேச்சிலிருந்து மட்டுமே எடுத்து எழுதப்பட்டவையாகும். "மூடியின் மட்டான ஆங்கில மொழி அறிவு, அவரது பேச்சு நடையிலுள்ள குறைபாடுகளை அறிந்து அவரது தேவச் செய்திகளை நிறைவான ஆங்கில சுவையோடும், மூடி பக்தனுக்கு நான் செய்யும் பரிசுத்த தொண்டாகவும் கருதி அவரது பேச்சுக்களை புத்தகங்களாக வடித்தெடுத்தேன்" என்கின்றார் ஃபிட் என்ற தேவ மனிதர். இப்படி அச்சிடப்பட்டு வெளி வந்த ஒவ்வொரு புத்தகத்தையும் அது அச்சேறுவதற்கு முன்னர் மூடி தன் மட்டாக முழுமையாக வாசித்து அது அச்சிட அனுமதியளித்து தமது கையெழுத்தைப் போட்டார்.

மூடியின் புத்தகங்கள் உலகம் முழுமையையும் சுற்றி வந்துள்ளன. பரிசுத்த வேதாகமம் மற்றும் ஜாண் பன்னியன் என்பவர் எழுதிய மோட்ச பிரயாண நூலுக்கு அடுத்த படியாக மூடியின் புத்தகங்கள் உலகம் முழுவதிலுமுள்ள அநேக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. "எனது புத்தகங்கள் தேசாதேசங்களில் ஒரு பெரிய ஆவிக்குரிய அசைவை நிச்சயமாக கொண்டு வரும் என்று கர்த்தரில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்" என்று 1896 ஆம் ஆண்டு மூடி எழுதினார்.

சிக்காகோ நகரிலுள்ள ஒரு தேவ மனிதர் "மூடி இந்த அமெரிக்க தேசத்தின் ஒரு முனை தொடங்கி அதின் மறுமுனை வரை சுற்றி நடந்து தேசத்தின் திரள் கூட்டத்தினரை மாயையான பூமிக்குரிய காரியங்களிலிருந்தும், செல்வம், செழுமை போன்றவற்றைத் தேட வேண்டுமென்ற பேராசையிலிருந்தும் விலகி ஒதுங்கி ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் இரட்சிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்ள பிரயாசப்படவேண்டும்" என்று அறைகூவல் விடுத்தார் என்று கூறுகின்றார்.

1893 ஆம் ஆண்டு முதல் 1899 ஆம் ஆண்டு வரை மூடி வட அமெரிக்காவின் கனடா தேசம் முதல் மெக்ஸிகோ வரை தமது சுவிசேஷ ஊழியங்களை நிறைவேற்றினார். ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் அவர் பிரசங்கியாத நாடே இல்லை. எந்த ஒரு இடத்திலும் அவர் பல மாதங்கள் தங்குவதில்லை. நியூயார்க் மற்றும் பாஸ்டன் பட்டணங்களில் மட்டுமே 1896-1897 குளிர் காலத்தில் சற்று கூடுதலான காலம் அவர் தங்கும்படியாக நேரிட்டது. ஒவ்வொரு இலையுதிர் காலமும் மூடி நார்த்ஃபீல்டிலுள்ள தமது பிறந்த வீட்டிற்குச் சென்று தமது கிறிஸ்மஸ் காலத்தை அங்கு களிப்பது வழக்கம்.

"அவருடைய பிரயாணங்களில் அவர் தனது கஷ்டங்களில் தனது உடல் வலிமையை பயன்படுத்த வேண்டியதாக இருந்தபோதினும் அவர் அந்தச் சமயங்களில் சிரிக்கத்தான் செய்தார்" என்று அவரோடு பிரயாணம் செய்த பால் என்பவர் எழுதுகின்றார். மூடி சற்று வசதியாக இருக்க ஆசைப்படுவாரே தவிர ஆடம்பரத்தை அவர் ஒருக்காலும் விரும்புவதில்லை என்று தெரிகின்றது. தேவ ஊழியங்களுக்குச் செல்லும் இடங்களில் சிறிய ஹோட்டல்களிலேயே அவர் தங்கினார். ஆங்காங்கு செல்லும்போது ஜனக்கூட்ட நெரிசல்கள் அவருக்கு சற்று கோபத்தைக் கொடுக்கவே செய்தது. சுமை தூக்கும் போர்ட்டர்களிடம் அவர்களுடைய செயல்களுக்காக மூடி சற்று கோபப்பட்டாலும் அதற்காக அவர் பெரிதும் மனம் வருந்தினார். "நான் எனக்குள்ளாக மிகவும் வெட்கம் அடைகின்றேன்" என்று அவர் கூறுவார். "இந்தப் போர்ட்டர்களில் யாராவது என்னை அறிந்திருந்தால் என்ஆண்டவருடைய நாமம் என்னால் கனவீனம் அடையுமே" என்று அவர் புலம்புவார்.

ஒரு சமயம் மூடியும் அவருடைய கூட்டங்களில் பாட்டுப்பாடும் டவுனர் என்பவரும் ரயிலில் ஒரே பெட்டியில் பிரயாணம் செய்து சென்று கொண்டிருந்தனர். அந்த பெட்டியில் ஒரு குடிகார மனிதன் நன்கு குடித்து வெறித்து தன் கண்களில் ஒன்றின் அருகிலே காயத்தை எப்படியோ உண்டாக்கி வைத்து அமர்ந்திருந்தான். அவன் மூடியை அடையாளம் கண்டு கொண்டு மூடியின் கூட்டங்களில் பாடப்படும் பாட்டுகளை முணு முணுக்க ஆரம்பித்தான். "வாருங்கள், நாம் அடுத்த பெட்டிக்குப் போய்விடலாம்" என்று கூறி மூடி தனது பாடகர் டவுனரை அழைத்தார். எல்லா பெட்டிகளும் நிரம்பி வழிவதால் நாம் இந்த பெட்டியிலேயே இருந்துவிடுவோம் என்று டவுனர் சொல்லவே இருவரும் அதே பெட்டியில்தான் அமர்ந்து கொண்டனர். சற்று நேரத்துக்கெல்லாம் ரயில் பெட்டியின் கண்டக்டர் வந்தார். மூடி அவரிடம் அந்தக் குடிகார மனிதனை சுட்டிக் காண்பித்தார். கண்டக்டர் அந்த குடிகார மனிதனை கீழே இறக்கி விட்டுவிடுவார் என்று மூடி நினைத்தார். ஆனால் நடந்தது வேறு. அந்த மனிதனை தன்னுடன் அழைத்துச்சென்ற அந்த கண்டக்டர் அவனுடைய கண்ணின் காயத்தைக் கழுவி மருந்து போட்டு திரும்பவும் அதே பெட்டியில் கொண்டு வந்து விட்டுச் சென்றான். சிறிது நேரத்திற்குள்ளாக அந்தக் குடிகார மனிதன் ஆழ்ந்து தூங்கியும் விட்டான்.

"டவுனர் இது எனக்கு ஒரு பயங்கரமான கடிந்து கொள்ளுதலாகும். நேற்று இரவு நான் அந்தக் கூட்டத்தினருக்கு பரிசேயத்தின் மாய்மாலத்தை குறித்து பேசி நல்ல சமாரியனை புகழ்ந்து பிரசங்கித்தேன். பாருங்கள், இந்தக் காலை வேளையில் அதை எனது வாழ்வில் நடைமுறைப்படுத்திக் காண்பிக்க தேவன் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை எனக்குத் தந்தார். நான் பிரசங்கித்ததை எனது வாழ்வில் செயல்படுத்திக்காட்ட இயலாமல் எனது இரண்டு கால்களையும் காயப்படுத்திக் கிடந்த மனிதனை கண்டு கொள்ளாமல் அப்பால் விலகிச் சென்ற ஆசாரியன், வேவியனுடைய சப்பாத்துக்குள் நன்கு நுழைத்துவிட்டு மாட்டிக் கொண்டேன்" என்று துக்கத்தோடு கூறினார்.

"எரியும் விளக்கைச் சுற்றி விட்டில் பூச்சிகள் மற்றும் பக்கிகள் மொய்ப்பது போல தேவ பக்தன் மூடியை சுற்றி மக்கள் மொய்த்து நின்றனர். அவரை நெருங்கி அவர் அருகில் நிற்பதற்காக மக்கள் நொண்டி சாக்குப் போக்குகளைக் கூறினர்" என்கின்றார் காஸ் என்பவர். மூடி மக்களை கவர்ந்து இழுப்பதைப் பார்த்தால் அவரிடம் ஏதோ ஒரு கவர்ச்சித்து இழுக்கும் காந்த சக்தி இருக்கும் என்று நினைத்து மேற்கண்ட காஸ் என்பவர் மூடியிடம் அது குறித்து கேட்டார். மக்கள் என்னிடம் பெருந்திரளாக வருவது என்னிடமுள்ள கவர்ச்சித்து இழுக்கும் ஒரு வித காந்த சக்தியாக இருக்குமானால் நாளை தினமே நான் எனது பிரசங்கத்தை நிறுத்திவிடுவேன். என்னிடம் ஒரு வல்லமை இருக்குமானால் அது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்த ஒன்றேயாகும்" என்றார் மூடி.

மூடி தமது பிரசங்கத்தில் சம்பவங்களை விளக்குவது கேட்கப் பரவசமாக இருக்கும். டெட்ராய்ட் என்ற இடத்தில் மூடியுடைய பிரசங்கத்தை கேட்ட கிராஸ் என்பவர் இவ்வாறு கூறுகின்றார்:-

"அன்று அவர் எலியாவைக் குறித்துப் பேசினார். அவர் காரியங்களை விளக்கிக் காட்டினபோது அந்தப் பண்டைய கால சம்பவம் நாங்கள் கூடியிருந்த அறையிலேயே நடந்து கொண்டிருப்பதைப் போல எங்களுக்குத் தெரிந்தது. இறுதியில் வானத்திலிருந்து அக்கினி ரதம் தரை இறங்குவதையும், கிழ தீர்க்கனான எலியா அதில் ஏறுவதையும் அதையடுத்து அக்கினி ரதம் காற்றடங்கிய அந்த அமர்ந்த நேரத்தில் விண்ணை நோக்கிக் கிளம்புவதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவே மூடி பிரசங்கியார் தனது திறமையான பேச்சாற்றலால் "என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாக இருந்தவரே" என்று கூறிய போது கூட்டத்தில் நிலவிய பரிசுத்த பரவச நிலையை தாங்கிக் கொள்ள இயலாததாக இருந்தது" என்கின்றார்.

வருடங்கள் பல கழிந்தாலும் மூடியின் குரல் கணீரென்று இருந்தது. பிரசங்க நாட்களில் கருமையும், அழுத்தமுமான நீல நிற கால் சட்டைகளை அவர் அணிந்தார். தன்னுடைய கடிகாரத்தின் நீண்ட சங்கிலி, தனது நீண்ட சட்டையின் மணிக்கட்டுப் பாகத்தில் கட்டப்பட்டிருக்கும். சிறிய தங்க சங்கிலி எதையும் அவர் அணிவதில்லை. மக்களுடைய கவனத்தை அவைகள் திசை திருப்பிவிடக்கூடாது என்று அவர் பயந்தார்.

மூடிக்கு ஏராளமான கடிதங்கள் வருவதுண்டு. அவர் எங்கு கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தாலும் அவைகள் அங்கு அனுப்பப்பட்டு விடும். "அவருடைய பேனா, தொடர்ச்சியாக ஆயத்த நிலையிலேயே இருக்கும்." என்று பெர்சிஃபிட் என்பவர் குறிப்பிடுகின்றார். பெர்சிஃபிட்மூடிக்கு காரியதரிசியாக இருந்தவர். "எந்த ஒரு நிலையிலும் சுருக்கெழுத்தாளர்களுக்கு அவற்றைக் கொடுப்பதே இல்லை" என்கின்றார் அவர். "மூடி தனது கடிதங்கள் ஒவ்வொன்றையும் தானே தனது கைப்பட திறந்து முக்கியமான கடிதங்களுக்கு உடனே பதில் எழுதி விடுகின்றார். சற்று முக்கியத்துவம் இல்லாத கடிதங்களை தனது மனைவியிடம் கொடுத்து அவர்களை பதில் கொடுக்கக் கேட்கின்றார். இன்னும் முக்கியமில்லாத கடிதங்களை தனது குடும்பத்திலுள்ள ஒரு பயபக்தியான அங்கத்தினரிடமோ அல்லது பாடகர் குழுவிலுள்ள ஒருவரிடமோ அல்லது ஒரு நண்பனிடமோ கொடுத்து பதில் எழுதச் சொல்லுகின்றார். யாராவது அவரிடம் நான் இந்த கடிதத்துக்கு என்ன எழுதுவது என்று கேட்டால் மிகவும் தமாஷாக தனது மூக்கு கண்ணாடிக்கு ஊடாக அந்த நபரைப் பார்த்த வண்ணமாக "பதில் எழுதும்படியாக உங்களுக்குக் கொடுத்துவிட்டேன். நாயை வாடகைக்கு வாங்கிவிட்டு குரைக்கும் வேலையை நான் செய்வது போல இருக்கின்றது" என்று பேசுவார் என்பதாக அவருடைய நண்பர் பால் என்பவர் கூறுகின்றார்.

ஒரு கடிதம் வாசிக்கப்பட்டு பதில் கொடுக்கப்பட்டு ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டால் அத்துடன் அந்த காரியம் முடிந்தது. அவர் ஒருக்காலும் காலம் தாழ்த்தமாட்டார். அவருடைய மனம் குழப்பம் அடைவதே இல்லை. ஏமாற்றங்கள், பொருளாதார தேவைகள், இருண்ட சூழ்நிலைகள் போன்றவற்றிலும் அவர் தனது விசுவாசத்தைக் காத்துக் கொண்டு தைரியத்தோடு இருப்பார். அவருக்கு முன்பாக யாராவது தோல்வியுற்ற நிலையிலும், சோர்ந்து போன விதத்திலும் காணப்படுவதை அவர் விரும்பமாட்டார். அவர் எப்பொழுதும் ஜெபிக்கிறவராகவே இருந்தார். எல்லா வாசல்களும் அடைபட்டாலும் மூடி ஜெபித்துக் கொண்டே இருப்பார். அவருடைய ஜெப ஜீவியம் எல்லாவற்றிலும் மேலாக திகழ்ந்தது. அவருடைய ஜெப ஜீவியம் என்னுடைய வாழ்வில் ஒரு ஆழமான முத்திரையை பதித்துவிட்டது" என்கின்றார் கேலார்ட் என்பவர்.

கடந்து சென்ற பல நூற்றாண்டுகளாக திருச்சபை தலைவர்கள் பொதுவாக அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுரு அல்லது பவுல் அல்லது யோவான் போன்றவர்களைப் போன்ற குணாதிசயங்களை உடையவர்களாக வார்ப்பிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மூடி மேற்கண்ட மூன்று அப்போஸ்தலர்களின் குணநலன்களை ஒருமிக்க தன் வசம் பெற்றவர். பேதுருவைப் போன்ற துணிச்சல், நியாயமான துரித கோபம், முரட்டுத்தனமான மனுஷீகம், நிறைவான தேக பெலன் எல்லாம் அவருக்கு இருந்தது. பவுலைப் போன்ற ஒரே நோக்கம், சுவிசேஷத்தை விசாலமாக அறிவிப்பதில் பவுலுக்கு இருந்த திறமை, திருச்சபையைக்குறித்த உறுதியான நம்பிக்கை, பவுலைப்போன்ற துடுக்குத்தனம் எல்லாம் மூடிக்கு இருந்தது. பவுல் கற்றறிந்த ஞானியாக இருந்தார். ஆனால் மூடி அது ஒன்றில் மட்டும் குறைவுள்ளவராக காணப்பட்டார். யோவானுடைய அளவற்ற அன்பு அவருக்கு இருந்தது. அவரைப்போன்ற ஆவிக்குரிய பசி தாகம், ஜெப தியானத்தில் உறுதியான தொடர் வளர்ச்சி எல்லாம் மூடியிடம் இருந்தன.

பண ஆசையற்ற மூடி

மார்ட்டின் லூத்தரை போப் ஆண்டவர் "இந்த ஜெர்மானிய மிருகம் பணத்தை விரும்புவதில்லை" (This German beast does not love gold) என்று சொன்னார். அப்படியே மூடியைக் குறித்தும் திட்டமாகக் கூறலாம். இந்திய நாணய மதிப்பின்படி கோடிக்கணக்கான பணம் அவரது புகழ்பெற்ற பாட்டுப் புத்தகங்களின் விற்பனை மூலமாகவும், இதர வகைகளிலும் அவருக்கு வந்து சேர்ந்தது. நியூயார்க் பட்டணத்திலுள்ள வில்லியம் டாட்ஜ் என்ற பெரும் தனவந்தனும், கொடையாளியுமான ஒரு மனிதர் மூலமாக மூடி ஒரு அறக்கட்டளையை (டிரஸ்ட்) நிறுவி அப்பணத்தை எல்லாம் அதிலே போட்டு வைத்தார். அடுத்த பத்து ஆண்டுகளில் 357,00 டாலர்களுக்கும் அதிகமாக பணம் சேர்ந்திருந்தது. மூடி மரிக்கும்போது 12,50,000 டாலர்கள் அதில் இருந்தது. மூடி தனது சொந்த செலவுகளுக்காக அதில் பணம் எடுப்பதே இல்லை. தனது புத்தகங்கள் விற்பனை மூலம் கிடைத்த பங்குவீத உரிமை (ராயல்டி) பணத்தைக் கொண்டு அவர் தனது குடும்பத்தை நடத்தினார். அந்தப் பணத்தையும் அவர் தன் கைவசம் வைத்து அவரே செலவு செய்யாமல் தனது மனைவியிடம் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தார். மூடி எளிமையாக வாழ்ந்தார். தன்னைச் சுற்றிலும் இருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும் பழக்கம் எல்லாம் அவருக்குக்கிடையாது. எளிமையாக உடை அணிந்தார்.

மூடி ஏற்படுத்திய அறக்கட்டளையின் வழக்கறிஞர் மூடியுடைய மகன் பால் என்பவரைப் பார்த்து "உங்கள் அப்பா அறக்கட்டளையின் பணத்தை குறித்துகொஞ்சமும் கவலை கொள்ளுவதோ அல்லது அதை நேசிப்பதோ கிடையாது" என்று சொன்னபோது பால் பிரதியுத்தரமாக "அப்பா, பணத்தைக் குறித்து கவலைப்படுவதோ அல்லது நேசிப்பதோ கிடையாது என்பது மட்டுமல்ல, அவர் பணத்தைக் கண்டால் பயந்து ஓட்டம் பிடிப்பவர்" என்றார். உண்மையும் சத்தியமுமான வார்த்தைகள் அவைகள்.

1884 ஆம் ஆண்டு விட்டல் என்ற இடத்தில் "நான் செல்வந்தனாக வேண்டுமென்று நினைத்திருந்தால் நிச்சயமாக மார்ஷல் ஃபீல்ட், லைட்டர் போன்ற கோடீஸ்வரர்களில் ஒருவரைப் போல ஆகியிருக்க முடியும். அவர்களே ஆகியிருந்தால் நான் தனவந்தனாவது எனக்கு மிகவும் சுலபமான காரியம். அந்த கோடீஸ்வரர்களையும், அவர்களது குடும்பங்களின் செழிப்பான ஆடம்பர வாழ்வையும் நான் நினைக்கும்போது அதின் காரணமாக நான் மகிழ்ச்சியடையவில்லை. காரணம், செல்வம் நிலையற்றது. தேவன் எனக்கு என்றும் நிலைத்திருக்கும் ஐசுவரிய சம்மன்னராக இருக்கின்றார். அவர்களுக்குள்ள செல்வம் எனது பாட்டுப்புத்தகங்களின் மூலமாக வரும் மேன்மையான செல்வத்துக்கு முன்னர் ஈடு கொடுத்து நிற்க இயலாது. உலகப்பிரகாரமான ஒரு ஐசுவரியவானாக தேவன் என்னை மாற்றாமல் இருந்தமைக்காக நான் அவருக்கு அனந்தம் கோடி நன்றி தெரிவிக்கின்றேன்" என்று மூடி கூறினார்.

புகழை வெறுத்து, நிந்தை அவமானங்களை ஏற்று
தேவனை மகிமைப்படுத்திய உத்தம தாசன்.

ஆண்டவர் தம்முடைய பிள்ளை மூடியைக் கொண்டு பெரிய எழுப்புதல்களையும், உயிர் மீட்சிகளையும், திரண்ட தேவாசீர்வாதங்களையும் கட்டளையிட்ட போதினும் அந்த தேவ மனிதனுக்கும் அவரது சக ஊழியரான பாடகர் ஸாங்கிக்கும் அடுத்த கோணத்தில் தேவ பகைஞர்களால் பலமான எதிர்ப்புகளும், அக்கினியாஸ்திரங்களும் வந்து விழுந்தவண்ணமாகத்தான் இருந்தன.

இங்கிலாந்தின் பிரபலமான பத்திரிக்கைகள் மூடியுடைய பிரசங்கங்களை தரக்குறைவாக தாழ்த்தி எழுதி வந்தன. "மார்னிங் போஸ்ட்" என்ற பத்திரிக்கை "அவர்களுடைய போதனைகள் நாகரீகமற்றதும், ஒழுங்கற்றதுமானவைகள். அந்தப் போதனைகளுக்கு அஸ்திபாரம் கிடையாது. மூடியும், ஸாங்கியும் காற்றுக்கு முன்பாக உள்ள சிறு புகை" என்று எழுதியிருந்தது. "மூடி ஒரு இழிவான ஆரவார பேச்சாளர். கிறிஸ்தவ மார்க்கத்தை இழிவுபடுத்தி வந்தவர்" என்று "ஸாட்டர்டே ரிவியூ" எழுதியது. புகழ் பெற்ற "பஞ்ச்" என்ற பத்திரிக்கை தேவ மக்கள் இருவரையும் "கோமாளி சுவிசேஷகர்கள்" என்று குறிப்பிட்டு அவர்களைக் குறித்த ஒரு நையாண்டி கவிதையையும் எழுதியிருந்தது. சில பத்திரிக்கைகள் அவர்களைக் குறித்து சிரிக்கத்தக்கவிதத்தில் கேலி சித்திரங்களையும் வரைந்திருந்தன.

தேவ மனுஷர் மூடிக்கும், ஸாங்கிக்கும் விரோதமாக பொல்லாதோர் கட்டுக் கதைகளை தாராளமாக எடுத்துவிட்டனர். "மூடியும், ஸாங்கியும் சுயநலவாதிகள் என்றும், மாய்மாலக்காரர்கள் என்றும், மோக இச்சை நிறைந்தவர்கள் என்றும், தேவனுடைய சத்தியங்களை தங்களுடைய திறமையால் பல்வேறு விதமாக ஜோடித்து அதனை சீரழிப்பவர்கள் என்றும் கூறினதுடன் ஸாங்கி ஒரு காலத்தில் நீக்ரோக்கள் மத்தியில் காசுக்காக பாடிக் கூத்தாடி பணம் தேடியவர் என்றும், அந்த தொழிலைவிட இந்த தொழில் பணம் ஏராளமாகக் கொடுப்பதால் இதைத் தாவிப் பிடித்தார்" என்றும் கூறினார்கள். "இருவரும் பாட்டுப் புத்தகங்கள், ஆர்கன்கள் விற்பனைகளின் மூலமாகவும், தெருக்களிலே விற்கப்படும் அவர்களுடைய புகைப் படங்களாலும் அப்பாவி ஏமாளிகள் மதிமயங்கிக் கொடுக்கும் அன்பளிப்புகளாலும் வேண்டிய செல்வத்தை தேடிக் குவித்துவிட்டனர். தங்களுடைய "நித்தியமான டாலர்களின் தேசத்துக்கு" (அமெரிக்காவுக்கு) திரும்பிச் செல்லும்போது இங்கிலாந்து தேசத்து சுத்தப் பொன்னால் வாங்கப்பட்ட சொகுசான பண்ணை வீடுகளைக் கண்டு தங்களுடைய உள்ளத்தின் ஆனந்தத்தால் தங்களுடைய கண்ணிமைகளை துடுக்காக அசைத்து "நிச்சயமாக நாம் அந்த எகிப்தியர்களை (இங்கிலாந்து தேசத்தினரை) கொள்ளையிடவே கொள்ளையிட்டோம் என்று நினைக்கின்றோம்" என்று நோட்டீசுகளை அச்சிட்டு வெளியிட்டன. தேவ மக்கள் அதையிட்டு மனம் கலங்கவில்லை. மூடி தமக்காக அனுதாபங்களை கொள்ளும் அன்பான மக்களைப் பார்த்து:-

"இவ்விதமான எதிர்ப்புகளை நாம் எதிர்பார்த்தே இருக்க வேண்டும். இந்த இங்கிலாந்து தேசத்தில் தேவனுக்காக ஒரு பெரிய காரியத்தை செய்ய வேண்டுமென்று பெரிதும் ஆசைப்படும் நாம் அந்த அளவுக்குத்தக்கதான எதிர்ப்பையும் சந்தித்தே ஆகவேண்டும். அப்படியான எதிர்ப்பு நமக்கு கசப்பான ஒன்றுதான். எங்கள் ஊழியங்களை குறித்து அநேக கசப்பான காரியங்கள் பரப்பப்பட்டுள்ளன. எங்களைக் குறித்துப் பேசப்பட்ட அநேக பொய்யான வதந்திகள் உலகத்தைச் சுற்றி வலம் வரத் தொடங்கிவிட்டன. யாரோ ஒருவர் சொன்னது போல "சத்தியம் தனது பாதங்களை தரையில் எடுத்து வைப்பதற்கு முன்னரே பொய்யானது உலகத்தில் பாதியை சுற்றி முடித்துவிடும் என்பது மெய்தான்" என்று கூறினார்.

இங்கிலாந்து தேசத்தின் விக்டோரியா மகா ராணியே, மூடி, ஸாங்கியின் எழுப்புதல் ஊழியங்களை அங்கீகரிக்கவில்லை என்றால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். மூடி, ஸாங்கியின் தேவச் செய்திகளைக் கேட்க இங்கிலாந்து தேசத்தில் பெருந்திரளான மக்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும், மகா ராணியாரும் அதை கேட்க விருப்பமானால் தகுந்த ஏற்பாடுகள் செய்து ராணியார் அமர்ந்து கேட்க வசதியாக ராஜ இருக்கை வைக்கப்படும் என்று கேட்டு எழுதிய ஃபானி கெயின்ஸ்பரோ என்பவருக்கு விக்டோரியா மகா ராணியார் எழுதிய பதில் இதுதான்:-

"அன்பான ஃபானி, அமெரிக்க சுவிசேஷகர்களான மூடி, ஸாங்கியை குறித்து நீங்கள் எழுதிய கடிதம் நேற்று கிடைக்கப் பெற்றேன். அவர்களுடைய செய்திகளை போய் கேட்க எனக்கு விருப்பம் இல்லை. உண்மைதான், அவர்கள் மிகவும் நல்ல பண்பான மக்கள்தான். எனினும் அவர்கள் செய்யும் ஊழிய முறைகள் என் உள்ளத்துக்கு உகந்ததாக தெரியவில்லை. வெளிப்படையான உணர்ச்சி வசப்பட்ட நடபடிகளும், எழுப்புதல் என்று கூறிக்கொள்ளும் பரபரப்பும் கிறிஸ்தவ மார்க்கத்துக்கு பயனுள்ள நன்மையை செய்யாது. எளிய, திறமிக்க, தெளிவாக புரிந்து கொள்ளக்கூடிய தேவச் செய்திகளே மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு நிலைத்து நின்று பயன் கொடுக்கும். இதை மட்டுமே புராட்டஸ்டெண்ட் தேவாலயங்கள் எல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று எழுதினார்.

உலகத்தை ஆளும் மகா ராணியே தன்னைக் குறித்து நயம்படி எழுதவில்லை என்று மூடி சற்றும் மன உளைச்சல் கொள்ளவில்லை. தேவ சித்தம் ஒன்றை மாத்திரமே அவர் செய்து தம்மை ஆட்கொண்ட கர்த்தரை மகிமைப்படுத்தினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது கூட்டங்களுக்கு வந்து தேவாசீர்வாதம் பெற்றுச் சென்றனர். சுமார் 17 ஆயிரம் மக்கள் கூடியிருந்த மக்கள் நடுவில் மூடியின் பிரசங்கத்தை குண்டூசி விழும் சப்தம் கூட கேட்கும் அளவுக்கு மக்கள் அமைதியாக இருந்து கேட்டதாகவும், அவ்வப்போது மக்களின் இருமல் சத்தம் தவிர பிறிதொரு சத்தம் கேட்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

ஒரு சமயம் வயது முதிர்ந்தவரும், புகழ்பெற்ற சுவிசேஷகருமான "அங்கிள் ஜானி" என்பவரை மூடி பிரசங்கியாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். "இரட்சகர் இயேசுவுக்காக இத்தனையான ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய தேவன் பயன்படுத்திய மனிதனை சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்" என்று அங்கிள் ஜானி கூறினார். "அங்கிள் ஜாண் அவர்களே, தேவன் பயன்படுத்தின மனிதன் என்று சரியாக நிதானித்தீர்கள்" என்றார் மூடி. அதற்கப்பால் மூடி முன்னால் குனிந்து தனது கை நிறைய மண்ணை அள்ளி அதை தனது விரல்களின் இடையாக மெதுவாக சிந்திவாறே "தேவன் பயன்படுத்தாதிருந்தால் இந்த மூடியின் காரியம் இந்தக் கைப்பிடி அளவு மண்ணுக்கு மேலாக ஒன்றும் இல்லை" என்று சொன்னார்.

கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும்

இங்கிலாந்திலுள்ள டூப்ளின் நகரத்தில் மூடியுடைய உயிர் மீட்சி கூட்டங்களின் மூலமாக ஆண்டவரை தங்கள் தந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களாகும். அவைகளைக் குறித்த தனிப்பட்ட அனுபவ சாட்சிகள் ஏராளமுண்டு. அவைகளில் ஒன்றை மட்டும் இங்கு கவனிப்போம். டூப்ளின் பட்டணத்தில் உயிர் மீட்சி கூட்டங்கள் நடந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா தேசத்திலிருந்து ஒரு வாலிபன் எதோ ஒரு காரணமாக டூப்ளின் பட்டணம் வந்து அங்குள்ள ஒய்.எம்.சி.எ. ஸ்தாபனத்தை அணுகி தனக்கு ஒரு வாரம் தங்கிச் செல்ல இட வசதி அளிக்குமாறு கேட்டான். அந்த ஸ்தாபனத்தின் நிர்வாகி அந்த அமெரிக்க வாலிபனை பக்கத்திலுள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று அந்த வாலிபனை அவர்களோடு தங்க வைத்துக் கொள்ள அனுமதி கேட்கவே அந்த வீட்டின் மனிதர் "நாங்கள் கொஞ்ச காலமாக யாரையும் பணம் கொடுத்து தங்கிச் செல்லும்படியாக அனுமதிப்பதில்லை" என்று கூறி ஒரேயடியாக மறுத்துவிட்டார். ஒய்.எம்.சி.எ. ஸ்தாபன நிர்வாகி "இந்த வாலிபன் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கின்றான்" என்று வீட்டுக்காரரிடம் கூறவே அந்த வீட்டின் அம்மாள் "ஓ நீங்கள் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கின்றீர்களா? அப்படியானால் நீங்கள் கட்டாயம் எங்கள் வீட்டில் தங்கித்தான் செல்ல வேண்டும். உள்ளே வாருங்கள்" என்று கூறி அந்த அம்மையார் அவனை அழைத்துச் சென்றார்கள்.

அந்த வாலிபன் அந்த வீட்டில் ஒரு வாரம் எல்லா வசதிகளோடும், மனமகிழ்வோடும் தங்கிவிட்டு வாரக் கடைசியில் தான் தங்கியிருந்த அறைக்கான வாடகை, ஆகார செலவுகள் குறித்த பில் தொகை எவ்வளவு என்று கேட்டபோது அந்த அம்மையார் "எந்த ஒரு செலவுகளும் எனக்கு ஏற்படவில்லை என்றும், நீங்கள் எனக்கு கொடுக்கும் தொகை யாதெனில் நீங்கள் அடுத்த ஒரு வாரமும் எங்களோடு இலவசமாக தங்கிச் செல்லுவதுதான்" என்று கூறிவிட்டு அதற்கான காரணத்தை கீழ்க்கண்டவாறு வர்ணித்தார்கள்:-

"ஒரு காலத்தில் எனது வீடு ஒரு குடிகாரனின் வீடாக இருந்தது. உங்கள் அமெரிக்கா தேசத்தின் மனிதர்களில் ஒருவரான மூடி தேவ பக்தன் என்பவருடைய பிரசங்கத்தை எனது குடிகார கணவர் கேட்டு மனந்திரும்பி ஆண்டவருடைய அடியானாகி இன்று எங்களுடைய வீடு தேவ சமாதானம் நிறைந்ததாகவும், இயேசு எங்கள் இல்லத்தில் வாழ்பவராகவும் இருக்கின்றார். மூடி பிரசங்கியார் எங்களுக்குச் செய்த தயவுக்கு நாங்கள் கைம்மாறாக உங்களுக்குச் செய்த காரியம் மிகவும் அற்பமாகும். நாங்கள் உங்களுக்குச் செய்த அற்பமான உபசரிப்பில் மகிழ்ச்சி கொள்ளும்படியாக நீங்கள் எங்களுக்கு இந்த சந்தர்ப்பத்தை தந்து எங்களை சந்தோசப்படுத்துங்கள்" என்றார்களாம்.

மூடி பிரசங்கியாரின் இறுதி நாட்கள்

1899 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் சிக்காகோ நகரிலுள்ள தமது சொந்த தேவாலயத்திலேயே மூடி பிரசங்கம் செய்தார். அப்பொழுது அவரைப் பார்த்த ஒரு பத்திரிக்கை ஆசிரியர் "மூடியின் சரீர பெலன் குன்றியுள்ள அறிகுறிகள் காணப்படாதபோதினும் அவர் இன்னும் பல ஆண்டுகள் உயிரோடிருந்து தேவ ஊழியத்தைச் செய்வார் என்ற எந்த ஒரு அடையாளமும் தெரியவில்லை" என்று நிதானித்துக் கூறினார். அவரது கணிப்பு நூற்றுக்கு நூறு சரியாகவே இருந்தது. தமது சொந்த சிக்காகோ தேவாலயத்தில் மூடி கொடுத்த தேவ செய்தியின் ஒரு துணிக்கை இதுதான்:-

"30 ஆண்டுகளுக்கு முன்னர் நான் எதைப் பிரசிங்கித்தேனோ அதையேதான் நான் இன்றும் பிரசங்கிக்கின்றேன். அதில் ஒருவேளை நான் எதுவும் மாற்றங்கள் செய்வேனானால் எனது வேதாந்தத்தை மூட்டை கட்டி அமெரிக்காவின் மாபெரும் மிஸிஸிபி நதியில் ஆழ்த்தி அது மெக்சிகோ வளைகுடாவில் போய் ஒன்றரக் கலந்துவிடச் செய்து விடுவேன்" என்றார் மூடி.

பின்னர் மூடி தனது சொந்த ஊரான நார்த்ஃபீல்ட்டுக்கு வந்து சேர்ந்தார். அவருடைய பேரக் குழந்தை ஐரின் காச நோய் காரணமாக மரணத்துக்கு ஏதுவாக இருந்தாள். மூடிக்கு பேரக் குழந்தைகள் மேல் அலாதிபிரியம். ஐரினையும் அவளது தாயார் மேரியையும் தனது குதிரை வண்டியின் மேல் ஏற்றி ஐரினுக்கு நல்ல சுத்தமான காற்று கிடைக்க வேண்டுமென்பதற்காக குதிரை வண்டியை மிக மிக மெதுவாக ஓட்டிச் சென்றார். சில இடங்களில் குதிரை வண்டியை நிறுத்தி ஐரினுக்காக ஜெபித்துவிட்டு திரும்பவுமாக வண்டியை ஓட்டிச் செல்லுவார். இப்படியாக பல இடங்களில் வண்டியை நிறுத்தி, நிறுத்தி ஜெபித்து ஓட்டிச் சென்றார். ஒரு நாள் மூடி தனது பேரக் குழந்தை ஐரினை ஒரு இரவு முழுவதும் தனது தோளிலேயே தூங்கும்படிச் செய்தார். அவள் தனது தோளில் தூங்கும் வேளையில் அவரும் சற்று தூங்கிக் கொள்ளுவார். அந்த ஐரினை அவர் அத்தனையாக நேசித்தார். தேவன் அவளுக்கு நல்ல சுகத்தைக் கொடுக்க மூடி எவ்வளவோ மன்றாடி ஜெபித்துக் கதறினார். ஆனால், அவளுக்கு சுகம் கிடைப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவே இல்லை. ஐரின் மரிப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னர் மூடி தன்னுடைய பண்ணை வீட்டின் தானிய அறையின் பரணில் முழங்காலூன்றி "ஆண்டவரே, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக" "ஆண்டவரே, உம்முடைய சித்தம் ஒன்று மாத்திரம் நிறைவேறினால் போதும்" என்று கதறி அழுது ஜெபிப்பதை அருகில் பால் கறந்து கொண்டிருந்த டான் என்பவர் கேட்டுக் கொண்டே இருந்தார். ஐரினைப் பார்க்க வந்த பெரிய தேவ பக்தனான எஃப்.பி.மையர் என்பவரிடம் தனது பேத்தி ஐரினுடைய செல்ல ஆட்டுக்குட்டியை மூடி காண்பித்துக் கொண்டிருந்த போதே கவலைதாளாது மயங்கி கீழே விழுந்துவிட்டார். மூடியும் அவரது மனைவி எம்மா மூடியும் தங்கள் கண்மணி பேரக்குழந்தைகளுடன் இருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

ஐரின் 1899 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி மரணம் அடைந்தாள். ஐரினுடைய சரீரம் வைக்கப்பட்டிருந்த அறையில்தான் மூடி அமர்ந்திருந்தார். "வில் (மூடியின் மகன்/ஐரினுடைய தந்தை) நாம் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமுண்டு" என்று கூறி தனது மகனை அறைக்கு வெளியே அழைத்து ஐரினுடைய அடக்கத்திற்கான வேலைகளை இருவரும் கவனித்தார்கள். திறந்த வெளி அடக்க ஆராதனையில் தனது பேரப்பிள்ளையின் அடக்க ஆராதனையில் மூடி எதுவுமே பேசமாட்டார் என்று எல்லாரும் திட்டமாக நினைத்தார்கள். காரணம் மூடியின் கவலை அவரை பேசவொட்டாது என எண்ணினார்கள். ஆனால், நடந்தது வேறாக இருந்தது. சற்றும் எதிர்பாராதவிதமாக அவர் எழுந்து எலியா தீர்க்கனைக்குறித்துப் பேசினார்:-

"பல நூற்றாண்டு காலங்களுக்கு முன்னர் யோர்தான் பள்ளத்தாக்கில் காத்திருந்த எலியாவை பரலோக வீட்டிற்கு அழைத்துச் செல்ல தேவனுடைய ரதம் அங்கு வந்து இறங்கியது. அதைப்போலவே, திரும்பவுமாக தேவனுடைய அந்த இரதம் நேற்று காலை 6 : 30 மணிக்கு கனக்டிகட் பள்ளத்தாக்கில் ஐரினை மேலோக வீட்டுக்கு கூட்டிச் செல்ல வந்து இறங்கியது" என்று மூடி தனது பிரசங்கத்தை தொடர்ந்தார்.

அடக்கத்திற்கு வந்திருந்த தேவனுடைய பரிசுத்த மனிதர்களான டாரி, வில்பர் சாப்மன், காம்பல் மார்க்கன், மையர் போன்றவர்களோடு அமர்ந்திருந்த அவர் மிகவும் களைப்புற்றவராகவும், கட்டுக்கடங்கா கிலேசத்தோடும் காணப்பட்டார். ஐரின் இறந்து சரியாக 4 மாதங்களில் மூடியும் பரலோகத்துக்குக் கடந்து சென்றார்.

நாட்கள் செல்லச் செல்ல மூடி தனது சரீரத்தில் பெலவீனங்களை உணர்ந்ததோடு தன்னுடைய ஜீவிய ஓட்டமும் விரைந்து ஒரு முடிவுக்கு வரப்போவதை நன்கு உணர்ந்திருந்தார். இந்த பெலவீனங்களின் மத்தியிலும் அவர் பிரசங்கித்துக் கொண்டுதான் இருந்தார். 1899 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி கான்சாஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் 15000 மக்கள் திரண்டனர். கூட்டம் நடைபெற்ற இடம் ஒரு காலம் குதிரைகளின் காட்சிசாலை மற்றும் விற்பனை கூடமுமாகும். மூடி தனது வழக்கமான பரிசுத்த ஆவியானவரின் அக்கினி அபிஷேகத்தோடேயே தேவச் செய்தி கொடுத்தார். தனது தேவச் செய்தியின் உச்ச கட்டமாக தனது பெலவீனமான கரங்களை வானத்திற்கு நேராக உயர்த்தி:-

"அதோ அப்பாலுள்ள பரலோக நாட்டை நோக்கிப் பாருங்கள். அங்கு மரணம் இல்லை, வேதனை இல்லை, துயரங்கள் இல்லை. முதிர் வயதின் கொடுமைகள் இல்லை, வியாதி இல்லை, கூன் விழுந்த சரீரம் இல்லை, மங்கலாகப் பார்க்கும் கண் பார்வை இல்லை, கண்ணீர் இல்லை. அதற்குப் பதிலாக அங்கு சந்தோசம், சமாதானம், பேரானந்தம் உண்டு, அங்கே நரை முடி கிடையாது. அங்கிருப்போர் யாவரும் இளவயதினரே. அதை யோசித்துப் பாருங்கள். ஜீவன், ஜீவன், முடிவில்லாத நித்திய ஜீவன் அங்கே உள்ளது. இருப்பினும் இந்த உலகத்திலுள்ள பெரும்பாலான மக்கள் அந்த அற்புதமான மோட்ச வாழ்வுக்குப் பதிலாக பூலோக வாழ்க்கையைத்தான் தங்களுக்கென தெரிந்து கொள்ளுகின்றனர். ஐயகோ! நித்திய ஜீவனுக்கெதிராக உங்கள் இருதயக் கதவுகளை மூடிக்கொள்ளாதீர்கள். தேவன் இலவசமாக அருளும் இந்த நித்திய ஜீவனை ஆண்டவருடைய கரங்களிலிருந்து இலவசமாக இன்றே பெற்றுக் கொள்ள மாட்டீர்களா? அதைச் செய்வீர்களா?" என்று பேசினார்.

மேற்கண்ட பிரசங்கத்துக்குப் பின்னர் தனது அறைக்கு வந்த மூடி அறையிலிருந்த ஒருவரிடம் "டேவிட் நான் முடித்துவிட்டேன்" என்றார். அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் 2 மணி நேரம் அப்படியே அசைவற்று அமர்ந்திருந்தார். அன்று இரவு அவருக்கு ஜன்னி வந்தது. மூடியின் தேக சுகயீனம் குறித்து உடனடியாக நார்த்ஃபீல்டில் இருந்த அவரது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் தந்தி மூலமாகத் தெரிவிக்கப்பட்டது.

மூடி தனது சொந்த ஊரான நார்த்ஃபீல்ட் என்ற இடத்துக்கு ரயில் மூலம் செல்ல ஆவன செய்யப்பட்டன. ஆனால் அவர் செல்ல வேண்டிய ரயில் யந்திர கோளாறு காரணமாக மிகவும் கால தாமதமாகத்தான் சனி இரவு டெட்ராயிட்டை வந்து சேர்ந்தது. வண்டி சரியான நேரத்தில் அடுத்த நிலயத்தை சென்றடையாத பட்சத்தில் அதற்கிணையான அடுத்த ரயிலை பிடிப்பது மிகவும் கடினம் என்று மூடியுடன் அவருக்குத் துணையாக பயணம் செய்த வைனிங் என்பவர் அஞ்சினார். "15 ஆண்டுகளுக்கு முன்னர் மூடியின் பிரசங்கம் ஒன்றின் மூலமாக ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட நான் முழுமையாக மூடிக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். நான்தான் அவர் ஏறி வரும் ரயிலின் என்ஜினியராக இருக்கின்றேன். அவர் அதிக சுகயீனமாக இருப்பதையும் அவர் அடுத்த இணை வண்டியை தக்க நேரம் பிடிக்க வேண்டும் என்பதையும் நான் நன்கு அறிந்து கொண்டேன். என்னால் முடிந்த அளவு விரைவாக ரயிலை ஓட்டி ஆவன செய்வேன்" என்று ரயிலை ஓட்டிச்செல்லப்போகும் என்ஜினியர் மூடிக்கு செய்தி அனுப்பினார். அப்படியே அந்த பக்தியுள்ள என்ஜினியர் சரியான நேரத்திற்கு ரயிலை கொண்டு வந்து சேர்த்தார். மூடியும் கால தாமதம் இல்லாமல் ஏற்ற நேரம் வீடு போய்ச் சேர்ந்தார்.

இம்மானுவேலர் நாட்டுக்கு (பரலோகத்துக்கு)
நித்திய கால இளைப்பாறுதலுக்குச் சென்ற மூடி

மூடி தனது 62 ஆண்டு கால உலக வாழ்வில் தான் தனது ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 18 ஆம் வயதிலிருந்து அடுத்த 34 வருட காலமாக கர்த்தருக்காக செய்த ஊழியத்தை வெறும் அற்பமான முகவுரை மட்டுமே என்று கூறி வந்தார். அதாவது தன் இரட்சகருக்காக தான் பெரிதாக ஒன்றையும் சாதித்துவிடவில்லை என்பதை விளக்க அவ்வாறு சொன்னார். 1899 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வெப்பமான ஓய்வு நாளில் நியூயார்க் பட்டணத்தில் "வரவிருக்கும் ஏதாவது ஒரு நாளில் தினசரி செய்தி தாட்களில் மூடி மரித்துப்போனார் என்ற செய்தியை நீங்கள் வாசிக்கும் போது அதை நீங்கள் கொஞ்சம் கூட நம்ப வேண்டாம். இப்பொழுது எவ்விதமாக நான் உயிரோடு இருக்கின்றேனோ அதைவிட கூடுதலாக அப்பொழுது நான் உயிரோடு இருப்பேன். மாம்சத்தின்படி 1837 ஆம் ஆண்டு நான் பிறந்தேன். ஆவிக்குள்ளாக 1855 ஆம் ஆண்டு நான் மறுபடியும் பிறந்தேன். மாம்சத்தின்படி நான் பிறந்த எனது முதல் பிறப்பு சாகவே சாகும். ஆவிக்குள்ளாக பிறந்த எனது மறு பிறப்பு என்றென்றுமாக நிலைத்திருக்கும்" என்று தனது பிரசங்கத்தின்போது குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் தான் பிறந்த நார்த்ஃபீல்ட் என்ற இடத்திலுள்ள தனது வீட்டில் 1899 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் மாலை நேரம் மரணக்கட்டிலில் படுத்திருந்தவாறே ஒரு பென்சிலை கொண்டு தனது உறுதியான கரத்தின் பிடிப்புடன் ஒரு தாளில் "அவருடைய நட்சத்திரத்தைக் காண்பது நல்லதுதான். ஆயினும், அந்த இரட்சா பெருமானை முகத்துக்கு முகம் நேருக்கு நேர் காண்பது என்பது ஆனந்தம், பரமானந்தமே" என்று எழுதினார்.

குளிர் காலத்தின் மறு நாள் அதாவது 1899 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் நாள் காலை தனது ஆழ்ந்த ஒரு மணி நேர தூக்கத்திலிருந்து மூடி திடீரென்று கண் விழித்துக் கொண்டார். முந்தின இரவு முழுவதும் ஒரே சீராக அவர் கண்ணயர இயலாதவாறு அவருடைய சரீர பெலவீனம் அவரைத் தாக்கியது. திடீரென மூடியின் மகன் வில் தனது தகப்பனாரிடமிருந்து வரும் மெல்லிய குரலை கவனித்தான். "உலகம் பின்வாங்குகின்றது, பரலோகம் எனக்கு முன்பாக திறந்திருக்கின்றது" என்று மூடி கூறினார். வில் தனது தகப்பனாரண்டை ஓடிச் சென்றான். "மகனே வில் இது சொப்பனம் அல்ல. அது அழகானது. இதுவே மரணமாக இருக்குமானால் மிகவும் இனிமையாக இருக்கும். தேவன் என்னை அழைக்கின்றார். நான் கட்டாயம் போக வேண்டும். மகனே, நீ என்னை திரும்ப அழைக்காதே" என்று சொன்னார்.

அந்தச் சமயம் பார்த்து மூடியின் மனைவி எம்மா மூடி அங்கே வந்தார்கள். "அப்பா, இதோ அம்மா வந்திருக்கின்றார்கள்" என்றான் மகன் வில். அதற்கு மாறுத்தரமாக மிகவும் தாழ்ந்த குரலில், ஆனால் நல்ல தெளிவாக "அம்மா, நீங்கள் ஒரு அன்பான மனைவியாக இருந்து வந்தீர்கள்" என்று மூடி கூறினார். அதைக்கூறி சில வினாடிகளுக்குள்ளாகவே அவர் தன்னறிவு இல்லாத நிலைக்குள்ளானார். "வேதனை இல்லை, பள்ளத்தாக்கு இல்லை, அது பேரின்பமாகவே இருக்கின்றது" என்று அவர் தனக்குள்ளாக முணுமுணுத்தார்.

மூடியுடைய அறையில் அவருக்கு வைத்தியம் செய்த டாக்டர் உட் அவர்களும், மூடியின் மனைவி எம்மா மூடியும், அவருடைய பிள்ளைகள் பெர்சி, பால், வில், ஜியார்ஜ் யாவரும் அவரது படுக்கையைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அறைக்கு வெளியே கொட்டிக் கிடந்த பனிப் பொழிவில் சூரிய கதிர்கள் பட்டு எதிர் ஒளி வீசி அந்த வெளிச்சம் மூடியின் அறையை பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது. அந்த நாளில் மூடியின் மனைவி தனது டயரியில் இவ்வாறு எழுதி வைத்திருக்கின்றார்கள்:-

"மூடிக்கு சற்று சுய நினைவு வந்தபோது அவர் தன்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து "இவர்கள் எல்லாம் ஏன் என்னைச் சுற்றி நின்று கொண்டிருக்கின்றனர்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார். "மோட்ச பட்டணத்தின் தலைவாசல் வரை நான் சென்றிருந்தேன். ஆ, எத்தனை அதிசயம், ஆச்சரியம்! பிள்ளைகளையும் அங்கே நான் பார்த்தேன்" என்றார் மூடி. அப்படிச்சொல்லவே அவருடைய மகன் வில் "ஓ என் தந்தையே, நீங்கள் அவர்களைப் பார்த்தீர்களா?" என்றான்.

"ஆம், ஐரினையும், டுவைட்டையும் நான் பாhர்த்தேன்" என்றார். அதைக் கேட்டதும் மகன் வில் அழத் தொடங்கினான். "வில் நீ கட்டாயம் அழவே கூடாது. நீ உலகத்தில் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உண்டு" என்றார் மூடி.

"நான் மோட்சத்துக்குப் போவதாக இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்" என்று வியாகுலத்தின் பெரு மூச்சோடு வில் பேசினான்.

"அப்படி இல்லை வில், உலகத்தில் நீ செய்ய வேண்டிய நிறைய வேலைகள் உனக்கு முன்பாக உள்ளது" என்று சொன்னார் மூடி.

"எங்களைவிட்டு போக வேண்டாம் அப்பா" என்று மூடியுடைய மகள் அழுதாள்.

"எனது வாழ்க்கையை ஏனோதானோவென்று வீசி எறிந்துவிட்டு நான் செல்லவில்லை. எவ்வளவு காலம் இந்த உலகத்தில் உயிர் வாழ தேவன் எனக்கு நியமித்திருக்கின்றாரோ அவ்வளவு நீண்ட நாட்கள் இருக்க எனக்கு ஆசை உண்டுதான். ஆனால், எனது வேளை வந்துவிட்டது. நான் ஆண்டவரண்டை செல்ல ஆயத்தமாக இருக்கின்றேன்" என்றார் மூடி. மரணத்தின் விழிம்பு வரை அவரது நகை சுவை பேச்சும் அவரோடு இருந்தது. "முதற்காரியமாக டாக்டரை (அவருக்கு மருத்துவ சிகிட்சை அளித்த உட் அவர்களை) வீட்டுக்கு அனுப்பி வைத்தாக வேண்டும்" என்றார்.

"படுக்கையில் மரிப்பது போல ஒரு நாற்காலியிலும் நான் அமர்ந்தவாறே மரிக்கலாம் அல்லவா?" என்று டாக்டரைப் பார்த்துக் கேட்டார். சற்று நேரத்திற்கெல்லாம் படுக்கையிலிருந்து எந்த ஒரு உதவியும் இல்லாமல் தன் மட்டாக எழும்பி தனக்கு முன்பாக இருந்த நாற்காலியை பிடித்தவாறே மூடி அமர்ந்திருந்தார். தனது தலை சுற்றுவதாகவும் தன்னை மீண்டும் படுக்கையில் கிடத்தவும் அருகில் நின்ற தனக்கு அன்பானவர்களை அவர் கேட்டார். படுக்கையில் கிடத்தவே நித்தியத்துக்குச் செல்லுவதற்கான அவரது வேளை வந்தது. அதற்குள்ளாக அவரை அவருடைய அன்பான இயேசு இரட்சகரண்டை அழைத்துச் செல்லுவதற்காக அக்கினி ரதமும், அக்கினி குதிரைகளும் அந்த அறையில் வந்து இறங்கிற்று. அல்லேலூயா.

தேவ மனிதர் மூடி மரித்த அவரது வீட்டின் அறையையும், அவரது சரீரம் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM