பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

ஹென்றி மார்ட்டின் (1781 - 1812)


("இதுவரை நான் ஒரு கர்த்தருடைய ஊழியனாக இல்லாமல் ஒரு மூடனைப்போல வாழ்வில் எந்த ஒரு நோக்கமில்லாமல் வாழ்ந்துவிட்டேன். இனிமேல் என் இயேசு இரட்சகருக்காக நான் எரிந்து பிரகாசித்து தணிந்து சாம்பல் ஆவேனாக")

 

18 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுப்புதல்

உலகப்பிரகாரமான சரித்திர ஆசிரியன் ஒருவன் தேவனுடைய கிரியையின் மகத்துவத்தை அறிந்து கொள்ளுவது என்பது அத்தனை சாத்தியமான காரியம் அல்ல. ஆனால் 18 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தேச சரித்திரத்தில் நிகழ்ந்த காரியத்தை அந்த சரித்திர ஆசிரியன் மறுக்கவோ அல்லது அசட்டையாக விட்டுவிடவோ இயலாது. ஜாண் வெஸ்லி, ஜியார்ஜ் விட்பீல்ட் என்ற இரு மாபெரும் பரிசுத்தவான்களின் பெயர்களைத் தெரியாத இங்கிலாந்து நாட்டின் பள்ளி மாணவன் எவனுமே இருக்க முடியாது. இங்கிலாலந்து தேசத்தின் சமுதாய வாழ்வையே மாற்றி அமைத்த அந்தச் சரித்திரம் யாவரும் வெட்ட வெளிச்சமாக மிகவும் சாதாரணமாக அறிந்த ஒரு காரியமாகும்.

குறிப்பாக கார்ன்வால் என்ற இடத்தில் அந்த நாட்களில் ஏற்பட்ட உயிர் மீட்சி சிறப்பானதொன்றாகும். விபச்சாரம், வேசித்தனம், குடிவெறி, கொலை, களவு போன்ற கொடிய பாவப்பழக்க வழக்கங்களுக்கு ஒரு காலம் அடிமைப்பட்டுக்கிடந்த அங்குள்ள சுரங்கத் தொழிலாளிகள், குடியானவர்கள், மீன்பிடிக்கும் செம்படவர்கள் போன்றவர்கள் எல்லாரும் தேவ வல்லமையால் பிடிக்கப்பட்டார்கள். இங்கிலாந்தில் அந்த நாட்களில் பற்றிப்பிடித்து எரிந்த எழுப்புதல் தீயைக் குறித்து ஜாண் வெஸ்லி இவ்விதமாகக் குறிப்பிட்டார். "இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் எந்த ஒரு பகுதியையும் நான் அறிந்த மட்டிலும் தேவ ஆவியானவர் சும்மா விட்டு வைக்கவில்லை. மூன்று தேசங்களிலும் முழுமையான பரிசுத்த மாற்றம் ஏற்பட்டது"

மேற்கண்ட எழுப்புதலின் அக்கினி நாவு இங்கிலாந்திலுள்ள டிரரொ என்ற இடத்தையும் விடவில்லை. டிரரொவிலுள்ள சாமுவேல் வாக்கர் என்ற குருவானவர் அந்த நாட்களில் மனந்திரும்பி ஆண்டவரின் பிள்ளையானார். அதின் பயனாக அவருடைய சபையில் எழுப்புதல் ஏற்பட்டது. ஓய்வு நாட்களில் அவருடைய தேவாலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. "டிரரொ கிராமத்தின் ஒவ்வொரு தெருவிலும் நீங்கள் ஓய்வு நாளில் பீரங்கி மூலம் குண்டுமாரி பொழிந்தாலும் ஒருவர் கூடச் சாகமாட்டார்கள்" என்ற வழக்கச் சொல் இருந்தது. காரணம், கிராமத்திலுள்ள எல்லாரும் தேவாலயத்தில் ஒன்று கூடி தேவனைத் துதித்துக் கொண்டிருப்பார்கள் என்று அக்கிராமம் புகழ்ந்து பேசப்பட்டது.

 

ஹென்றி மார்ட்டினின் பிறப்பு

டிரரொ கிராமத்து சபையின் கண்ணியமான, செல்வமிக்க, பக்தி நிறைந்த அங்கத்தினனான ஜாண் மார்ட்டின் என்பவரின் இரண்டாம் மனைவிக்கு (முதல் மனைவி இறந்து போனார்கள்) மகனாக 1781 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் ஹென்றி மார்ட்டின் பிறந்தார். ஹென்றி மார்ட்டின் இரண்டு வயதினனாக இருக்கும் போதே அவருடைய தாயார் மரித்துவிட்டார்கள். அந்த தனது தாயாரிடமிருந்துதான் ஹென்றி மார்ட்டின் மிகவும் மோசமான தேக சுகத்தை சுதந்தரித்துக் கொண்டிருந்தார். ஆம், காச நோய் அவரைப் பற்றிக் கொண்டது. அவருடைய உடன் பிறந்த இரண்டு மூத்த சகோதரிகளும் அதே காச நோயினால் மாண்டு போனார்கள். அவருடைய பூவுலக வாழ்வான 31 ஆம் வயதில் ஹென்றியும் அதே வியாதியினாலேயே பீடிக்கப்பட்டு இறந்தார்.

 

புத்திசாலிப் பையன்

ஹென்றி மார்ட்டினின் தந்தையான ஜாண் மார்ட்டின் தனது மகனைக் குறித்துப் பெரிய நம்பிக்கைகளை வைத்திருந்தார். திறம்பட்ட கல்வி ஞானமும், படிக்க வேண்டுமென்ற தணியாத ஆசையும் அவருக்கு இருப்பதைக் கண்டறிந்து அவர் அளவில்லாத ஆனந்தம் கொண்டார். மார்ட்டின் ஏழு வயதினனாக இருக்கும்போது அவருடைய தந்தை அவரை டிரரொவிலுள்ள புகழ்பெற்ற பாடசாலைக்குக் கல்வி கற்க அனுப்பி வைத்தார். அந்தப் பாடசாலையின் அனைத்து மாணவர்களையும் விட அவர் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கினார். ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுப்பதை மாத்திரம் நன்கு கவனித்துக் கேட்பார். மற்றப்படி புத்தகங்களை அவர் அதிகமாக எடுத்துப் படிப்பதே இல்லை. எனினும் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களிலும் அவர் புத்தி கூர்மையான மாணவனாகக் காணப்பட்டார். தனது 15 ஆவது வயதில் கிறிஸ்டி கல்லூரியில் நடந்த ஒரு பெரும் அறிவுப் போட்டியில் மார்ட்டின் கலந்து கொண்டார். எனினும், மயிரிழையில் அவர் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. அதில் அவர் வெற்றி பெற்றிருந்தால் விசேஷித்த சலுகையில் ஆக்ஸ்ஃபோர்டு சர்வ கலாசாலைக்குச் செல்லக்கூடிய அருமையான வாய்ப்பு இருந்தது. அதுவும் ஒரு தேவச் செயலாகவே அவருக்கு அமைந்தது. காரணம் என்னவெனில், மேற்கண்ட வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட அவர் கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலைக்குச் சென்றார். அந்த கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலையில்தான் ஆண்டவர் மார்ட்டினைச் சந்தித்துத் தமது அடிiமாக மாற்றினார். அவர் கணிதத்தில் மகா வல்லுனனாகக் காணப்பட்டார். ஆங்கில இலக்கியங்கள், பிரயாண அனுபவங்கள் போன்றவைகளை வாசிப்பது அவருக்கு அலாதிப் பிரியம். துப்பாக்கிச் சுடுவதிலும் அவருக்கு ஆசை இருந்தது. கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலையில் முதல் மாணவனாக அவர் படிப்பில் விளங்கினார்.

 

கோபக்கார இளைஞன்

ஹென்றி மார்ட்டின் தன் சுகயீனமான தாயாரைப் போன்று மிகவும் ஒடிசலான நோஞ்சான் சரீரத்தைக் கொண்டிருந்தார். வெட்கமும், கூச்சமும் அவருக்கு அதிகமாக இருந்தது. பாடசாலையில் சிறுவனாகப் படித்துக் கொண்டிருந்தபோது முரடர்களான மற்ற பெரிய சக மாணவர்களின் கரங்களிலிருந்து அவரைப் பாதுகாக்க ஜாண் கெம்ப்தார்ன் என்ற திடகார்த்தமான பெரிய பையன் ஒருவனின் வசத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டிருந்தார். "கடுகு சிறுத்தாலும் அதின் காரம் சிறுக்காது" என்ற முது மொழிக்கு இணங்க மார்ட்டின் நோஞ்சான் சரீரத்தைக் கொண்டவராயிருந்தபோதினும் அவருடைய கோபம் பெரியதாகவிருந்தது. வேளா வேளைகளில் அவருடைய கோபம் கொந்தளித்துப் பொங்கிவிடும். ஒரு சமயம் அவர் மிகுந்த கோப வீரா வேசத்தில் கத்தி ஒன்றை எடுத்துத் தனது சக மாணவன் ஒருவன் மேல் வீசினார். ஆனால், தெய்வாதீனமாக அது குறி தவறி சுவரின் மேல் பட்டு அங்கு குத்திக் கொண்டு நின்றது.

 

அருமை இரட்சகரின் அடிமை ஆனது

கல்வி ஞானத்தில் மார்ட்டின் கரை கண்ட விற்பனனாகவிருந்த போதினும் கோபம், எரிச்சல், சுய கட்டுப்பாடின்மை, பெருமை போன்ற தீய குணங்கள் தன் மகனின் வாழ்வில் தலை விரித்து ஆடுவதைக் கண்டு அவரது தந்தை ஜாண் மார்ட்டின் பெரிதும் துயரம் கொண்டார். தன் மகனின் ஆவிக்குரிய வாழ்வின் சீர்கேடான நிலை அவருக்கு மிகுந்த துயரத்தைக் கொடுத்தது. அதைவிட மிகவும் துயரம் அடைந்தது ஹென்றி மார்ட்டினின் சிறிய தங்கை "ஷாலி" என்பவள்தான். அவள் ஆண்டவர் இயேசுவின் இரட்சிப்பின் பாத்திரம். மார்ட்டின் தனது நாட்குறிப்புப் புத்தகத்தில் இவ்வாறு எழுதி வைத்திருக்கின்றார்:-

"1799 ஆம் ஆண்டு கோடை காலத்தில் கல்லூரியிலிருந்து வீடு சென்றேன். தங்கை ஷாலி முதன் முறையாக கிறிஸ்தவ மார்க்க சம்மந்தமான காரியங்களை என்னிடம் பேசினாள். சுவிசேஷத்தைக் குறித்து அவள் என்னிடம் கூறி என்னை எச்சரித்தது என் காதுகளுக்குக் கர்ண கடூரமான கசப்பான அனுபவமாக இருந்தது" என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

அந்த கோடை காலத்தின் நாட்களில் அவர் தனது கெட்ட கோபம், நான் என்ற அகங்காரத்தின் காரணமாகத் தனது தந்தையையும், தங்கை ஷாலியையும் கடுமையான வார்த்தைகளால் தாக்கிப் பேசினார். ஆனால், அந்த அன்புத் தந்தை நீடிய பொறுமையோடிருந்தார். அண்ணன் மார்ட்டின் கல்லூரிக்குப் புறப்படும் முன்னர் "தினமும் ஒழுங்காக வேதம் வாசிப்பேன்" என்ற உறுதி மொழியை ஷாலி தனது அண்ணனிடமிருந்து வாங்கிக் கொண்டாள். தன் அண்ணனின் மனந்திரும்புதலுக்காக அவள் பாரத்தோடு தினமும் ஜெபித்தும் வந்தாள்.

ஷாலியின் கண்ணீர் நிறைந்த ஜெபங்கள் பெருமைக்கார ஹென்றி மார்ட்டினை அவனது முழங்கால்களில் விழ வைத்தது. "என் தங்கையின் மன உருக்கம் நிறைந்த, இருதய பாரம் கொண்ட ஜெபங்கள் என் இரட்சிப்பின் காரியத்தில் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றது" என்று மார்ட்டின் குறிப்பிட்டிருக்கின்றார்.

1800 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் மார்ட்டினின் அருமைத் தந்தை ஜாண் மார்ட்டின் மரித்துப் போனார். அவருடைய மரணம் மார்ட்டினின் உள்ளத்தை உலுக்கிவிட்டது. தந்தையின் மரணத்தால் தனித்து விடப்பட்ட அவர் தந்தை சென்ற அமைதியான, கண் காணாத மறு உலகத்தைக் குறித்து ஆழமாகச் சிந்திக்கலானார். தனது தகப்பனார் சென்ற அதே நாட்டிற்குத் தானும் ஒரு நாள் நிச்சயமாகப் போகவிருப்பதை எண்ணியபோது அவர் கடின இருதயம் நொறுங்கிப் போனது. மரணத்தைக் குறித்த பயத்தால் தனக்கு விருப்பமான கணித பாடத்தில் சிந்தையை வைக்க இயலாமல் தன்னுடைய வேதாகமத்தைத் தேடி எடுத்து அதிலே தன்னுடைய நித்திய ஆறுதலையும், வாழ்வுக்குத் தேவையான முழு நம்பிக்கையையும் கண்டு அகமகிழ்வுற்றார். அந்த நாளின் இரவில் தானே வாழ்வில் முதன் முறையாக முழங்காலூன்றி "தேவனே, உமது நேச குமாரனாம் இயேசு கிறிஸ்துவை உலகத்திற்குத் தந்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம்" என்ற உருக்கமான வார்த்தைகளுடன் தன் ஜெபத்தை ஆரம்பித்துப் பின்னர் தன் பாவங்களுக்காகப் பட்சாதாபப்பட்டு ஆண்டவருடைய பிள்ளையானார்.

 

மறுபிறப்பினைத் தொடர்ந்து

அருமை இரட்சகரைத் தன் ஆத்தும மணவாளனாக ஏற்றுக் கொண்டதன் பின்னர் மார்ட்டினுக்கு வேதாகமம் என்றால் தேனைப் பருகுவதைப் போலிருந்தது. புதிய ஏற்பாட்டில் தன் அன்பின் இரட்சகர் திருவாய் மலர்ந்தருளிய வார்த்தைகளை எல்லாம் அப்படியே அள்ளி எடுத்து மகா பூரிப்புடன் புசித்து மகிழ்ந்தார். மறுபடியும் பிறந்த மறு பிறப்பின் அனுபவத்திற்குள் வருவதற்கு முன் இயேசு என்றால் ஒரு கற்பனையின் உருவமாகத் தெரிந்த மார்ட்டினுக்கு இப்பொழுது அந்தக் கர்த்தர் பிரத்தியட்சமான, உண்மையின் உருவமாகத் தெரிந்தார். இப்பொழுது அவரைத் தன் அன்புத் தந்தை என்று அழைக்கும் விசுவாசத்தின் துணிச்சல் அவருக்கு உண்டாயிற்று. ஜெபம் என்பது தன் அன்புக் கண்மணியாம் அருமை நேச இரட்சகர் இயேசுவோடு முகமுகமாய் பேசும் ஆனந்த அனுபவமாகத் தெரிந்தபடியால் ஜெப வேளைகளை அதிகமாக வாஞ்சித்து அவற்றில் ஆனந்தப் பரவசம் கொண்டார். அந்த ஜெப மணி நேரங்களில் தன்னை மகிழ்வுடன் ஆண்டவருக்குச் சமர்ப்பணம் பண்ணி அவருடைய திருவுளச் சித்தம் ஒன்றை மாத்திரம் செய்யத் துடித்து நின்றார். அந்த நாட்களிலிருந்து தேவன் மார்ட்டினை படிப்படியாகத் தம்முடைய பரிபூரண ஆளுகையின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தார். அவருடைய குணாதிசயம், அவருடைய திறமைகள், தாலந்துகள் மற்றும் அவருடைய முழுமையான வாழ்க்கையையும் கர்த்தர் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

இந்த ஆனந்தமான மறுபிறப்பின் அனுபவத்தைக் குறித்து ஹென்றி மார்ட்டின் பின் நாட்களில் பேசுகையில் "ஓ, அது என்னில் நிகழ்ந்த தேவனின் வெளிப்படையான, உண்மையான கிரியையாகும். நிர்ப்பந்தமும், துயரமும், சாபக்கேடானதுமான ஓர் வாழ்விலிருந்து நம்பிக்கையும், சமாதானமும், ஒளியும் நிறைந்ததோர் பரிசுத்த வாழ்விற்கு அன்பின் ஆண்டவர் என்னை மாற்றியமைத்தார்" என்று கூறினார்.

 

ஹென்றி மார்ட்டின் உள்ளம் கவர்ந்ததோர் பரிசுத்தவான்

வெளி உலகத்திற்குச் சென்று அங்கு பாவ இருளில் முழ்கிக்கிடக்கும் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களுக்கு கர்த்தராகிய இயேசுவில் தான் பெற்ற இரட்சிப்பின் சந்தோசத்தையும், உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தையும் கூறி அறிவிக்க வேண்டுமென்ற கட்டுக்கடங்காத ஆவல் அவர் உள்ளத்தில் பிரவேசித்ததே ஒரு அற்புதமான தேவ நடத்துதலாகும். 1802 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் தற்செயலாக அவருடைய கரங்களில் அமெரிக்காவில் செவ்விந்தியர்களின் மத்தியில் மிஷனரியாகப் பணி புரிந்த பரிசுத்தவான் டேவிட் பிரைய்னார்ட் என்பவரின் நாட் குறிப்பு நடபடிகளின் புத்தகம் ஒன்று கிடைத்தது. அதைப் படிக்கப்படிக்க அவர் உள்ளம் களிப்பால் பூரித்தது. தன்னுடைய உள்ளத்தில் எந்த எந்த பரிசுத்த ஆவல்களும், தாகமும், ஏக்கமும் இருந்ததோ அவைகளே டேவிட் பிரைய்னார்ட்டிடமும் குடி கொண்டிருந்ததைக் கண்டு அவர் ஆச்சரியத்தால் திகைப்புற்றார்.

தேவனோடு எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கி ஜீவிக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு நெருங்கி ஜீவிக்கத் தான் கொண்டிருக்கும் மட்டற்ற ஆவலே பிரைய்னார்ட்டிடமும் காணப்பட்டதையும், மாமிச சுய நேசம், திருக்குள்ள கேடுபாடான நெஞ்சம், போன்றவற்றுடன் தான் நடத்திய கடும் போராட்டங்களையே பிரைய்னார்ட் பக்தன் நடத்தியுள்ளதையும், ஜெப மணி நேரங்களில் தான் எவ்வண்ணமாகத் தன் அன்பின் கர்த்தாவுடன் ஒன்றரக் கலந்து ஒருமித்து விடுவாரோ அவ்வண்ணமாகவே பக்தசிரோன்மணியின் ஜெப ஜீவியமும் இருந்திருப்பதைக் கண்டு மார்ட்டின் பேரதிசயம் கொண்டார்.

அத்துடன் காரியம் முற்றுப் பெற்றுவிட்டதா? இல்லை, தன்னைப் போன்றே டேவிட் பிரைய்னார்ட்டும் மிகவும் நோய் கொண்ட பெலவீனமான சரீரத்தை உடையவர். தன்னுடைய சரீரத்தை தாக்கிய அதே கொடிய காச நோய்தான் அவரையும் தாக்கிக் கொன்றது. தான் கல்லூரியில் இருந்த நாட்களில் ஆண்டவரின் இரட்சிப்பைக் கண்டடைந்ததைப் போன்றே பிரைய்னார்ட்டும் தன்னுடைய இரட்சிப்பைக் கல்லூரி நாட்களில்தான் பெற்றவர்.

டேவிட் பிரைய்னார்ட் என்ற அந்த பரிசுத்த பக்தனின் பெயர் ஹென்றி மார்ட்டினின் நாட் குறிப்புப் புத்தகத்தில் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றது. "நான் டேவிட் பிரைய்னார்ட்டைப் போலவே இருக்கத் தவிக்கின்றேன். நான் உலகத்தை உக்கிர பகையாய் வெறுத்து ஆண்டவருடைய மகிமையை வாஞ்சிக்கும் ஒப்பற்ற வாஞ்சையால் முற்றும் விழுங்கப்படுவேனாக. என் இருதயம் அந்த தேவ மனிதனுடன் ஒன்றாக இணைத்துக் கட்டப்பட்டிருக்கின்றதான ஒரு உணர்வு எனக்குள் ஏற்படுகின்றது. பரலோகத்தில் நான் அவரைச் சந்திக்கும் சமயம் எத்தனையானதொரு ஆனந்த பரவசத்தின் நேரமாயிருக்கும்" என்று எழுதியிருக்கின்றார்.

ஒரு தேவ ஊழியனின் பரிசுத்த வாழ்க்கை மற்றொரு தேவ ஊழியனின் பரிசுத்த வாழ்வை எப்படி அனலூட்டி எழுப்பிப் பிரகாசிக்கச் செய்து விடுகின்றது பாருங்கள்!

 

பரிசுத்தவான் நேசித்த ஒரு பரிசுத்த கன்னி

ஹென்றி மார்ட்டின் என்ற அந்த அருமையான பரிசுத்தவான் லிடியா கிரென்பெல் என்ற ஒரு பெண்ணை மனப்பூர்வமாக நேசித்தார். அந்தப் பெண்மணியும் அவரை உளமார விரும்பினாள். லிடியா, ஹென்றி மார்ட்டினை விட ஆறு வயது மூத்தவள். அந்த லிடியா அவருக்கு உறவின் முறையான பெண்தான். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் முழு மனதுடன் நேசித்தனர். லிடியாவும் அன்பின் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்று அவருடைய அன்பில் வாழ்ந்து கொண்டிருந்தவள்தான். அவளும் தன் இரட்சகரைத் தீவிரமாக நேசித்து அவருக்குத் தொண்டு செய்து கொண்டிருந்தாள். அவள் அன்றாடம் ஒழுங்காக எழுதி வந்த அவளின் தினசரி நாட்குறிப்புப் புத்தகத்தில் அவள் தனது ஆத்தும தற்பரிசோதனை விஷயமாகவும், ஆண்டவரோடு அதிகமாக நெருங்கி ஜீவிக்க அவள் கொண்டிருந்த பரிசுத்த வாழ்வின் ஏக்கங்களைக் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹென்றி மார்ட்டின் ஏறத்தாழ ஒரு மாத காலம் அந்தப் பெண்ணின் வீட்டில் தங்கி அவர்கள் இருவரும் ஒன்றாகச் சென்று நோயாளிகளுக்காக ஜெபிப்பதும், உலாவச் செல்லுவதும், ஆவிக்குரிய காரியங்களைக் குறித்துச் சம்பாஷிப்பதுமாக இருந்தார்கள்.

மார்ட்டின், லிடியாவின் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாகத் தன் ஆண்டவர் மீதான அவருடைய பரிசுத்த அன்பு மங்கி எரிவதைக் கண்ட அவர் பெரிதும் அதிர்ச்சியுற்று லிடியாவை தன் உள்ளத்திலிருந்து எடுத்துவிட எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. லிடியாவை மறந்துவிட அவர் பெரிதும் போராடினார். ஆனால் அது ஒரு வெற்றியற்ற போராட்டமாகவே அமைந்தது.

"நான் லிடியாவை முழு மனதுடன் நேசித்தேன். அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் பூரணமாக என்னை ஆட்கொண்டிருந்தது. என் சொப்பனங்களில் அவள் உருவம் திரும்பவும், திரும்பவுமாக வந்து தோன்றினது. என் உள்ளம் அவளின் சாயலால் நிரம்பிய நிலையில் இராக்காலங்களில் நான் கண்விழித்து என் கட்டிலில் அமர்ந்தேன்" என்று மார்ட்டின் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக ஆண்டவர் இயேசுவின் அன்பே வென்றது. தன்னுடைய மணவாழ்வு தன் அருமை இரட்சகரின் மிஷனரிப் பணியைப் பாதிக்கும் என்று திட்டமாக உணர்ந்த மார்ட்டின் தன் உள்ளம் கவர்ந்த பரிசுத்த கன்னி லிடியா கிரென்பெல்லை முடிவாக இங்கிலாந்தில் விட்டுவிட்டுக் கப்பலில் இந்தியாவிற்கு பயணமானார். அவர் கப்பலில் பயணப்பட்ட அன்றைய தினம் இரவு லிடியாவை நினைத்து ஒரு குழந்தையைப் போலக் கதறிக் கதறி அழுததாக எழுதியிருக்கின்றார்.

தன்னை ஆட்கொண்ட தன் அருமைக் கண்மணி இயேசுவுக்காகவும், அவருடைய ராஜ்யத்தை பூமியில் பரப்புவதற்காகவும் தன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை உருவாக்கித் தர முன்வந்த தன் ஆசை மணவாட்டி லிடியாவை நமது ஹென்றி மார்ட்டின் பலிபீடத்தில் முற்றுமாக வைத்தார். என்னே அவரது தியாக அன்பு!

பின் வந்த நாட்களில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கடிதங்களைப் பறிமாறிக் கொண்ட போதினும் அந்தக் கடிதங்களில் மாமிச சிற்றின்ப ஆசை இச்சையின் எந்த ஒரு அச்ச அடையாளமும் தென்படவே இல்லை. இன்று அந்தக் கடிதங்களை வாசிப்போரும் பரிசுத்தம், பக்தி, சுயவெறுப்பு, கிறிஸ்து இரட்சகருக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யும் தியாக அன்பில் வளர ஏதுவான பரிசுத்தக் கடிதங்களாக அவைகள் உள்ளன!

 

"ஆண்டவரே, இந்தியாவை எனக்குத் தாரும்,
இல்லையேல் நான் சாகிறேன்"

ஹென்றி மார்ட்டின் தேவனுடைய சுவிசேஷத்தை எடுத்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்தார். தான் பிரயாணப்பட்டு வந்த கப்பல் இந்தியாவை நெருங்க, நெருங்க ஆண்டவர் அவருக்கு "நான் கர்த்தர், இது என் நாமம், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்" (ஏசாயா 42 : 8) என்ற தேவ வாக்கைக் கொடுத்தார். அவர் அந்த வார்த்தையை தியானித்துக் கொண்டே வந்தார். "ஒருக்கால் இந்தியாவிலுள்ள தற்போதைய தலைமுறையினர் சாத்தானின் கோட்டைகள் தகர்ந்து அவன் சிங்காசனம் ஆட்டம் கண்டுவிட்டதைக் காணக்கூடாதவர்களாயினும் நிச்சயமாக இந்திய நாட்டிற்கு இரட்சகர் இயேசுவின் இரட்சிப்பின் ஆசீர்வாதம் இருப்பதைப் வரப்போகும் பின் சந்ததியினர் காணுவார்கள்" என்று ஹென்றி மார்ட்டின் அன்று தீர்க்கத்தரிசனமாகக் கூறினார்.

பாஷைகளை மிக விரைவாகக் கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மகா விசேஷித்த ஞானத்தை ஆண்டவர் தமது தாசனுக்கு அருளியிருந்தார். ஏற்கெனவே அவர் எபிரேய, கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தார். இந்தியாவிற்கு வந்ததும் இந்துஸ்தானி, வங்காளி, பெர்சியன், அரபி மொழிகளைக் கற்று அவர் பாண்டித்தியம் பெற்றார். உலகத்து மக்கள் உள்ளத்தைக் களிப்பூட்டும் நாவல் புத்தகங்களை இனிமையுடன் வாசித்து மகிழ்வது போல மார்ட்டின் பிற மொழிகளின் கடினமான இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து அவைகளில் களிகூர்ந்தார். பூலோகத்தின் அனைத்து மொழிகளையும் நான் கர்த்தருடைய கிருபையால் கற்றுக் கொள்ளுவேன்" என்று அவர் ஒரு சமயம் கர்த்தருக்குள் பூரிப்புடன் கூறினார்.

இந்துஸ்தானி, வங்காளி மொழிகளில் அவர் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் சுவிசேஷங்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். ஏராளமான சுவிசேஷத் துண்டுப் பிரசுரங்களையும் அவர் எழுதி விநியோகித்தார். இந்து மக்கள் விக்கிரகங்களுக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதையும், பக்தி பஜனைகள் பாடுவதையும் அவர் கண்டபோது கண்ணீர் சொரிந்தார். பூரி ஜெகநாதர் கோவிலின் பிரமாண்டமான விக்கிரக ஊர்வலத்தையும், இந்து மக்கள் விக்கிரகங்களுக்கு முன் விழுந்து தரையில் தங்கள் தலைகளை பலமாக மோதுவதையும் அவர் கண்ணுற்றபோது அங்கலாய்த்து அழுது ஓலமிட்டு "ஓ இந்திய மக்களே, ஏன் இந்த அறியாமையின் காரியங்களை எல்லாம் செய்கின்றீர்கள்?" என்று கேட்டுப் புலம்பினார்.

வங்காளத்தில் ஓரிடத்தில் மரித்த தன் புருஷனுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்ணைத் தீயில் பாய்ந்து காப்பாற்ற மார்ட்டின் முயற்சித்தார். ஆனால், அந்தோ அவள் அதற்கு முன் மாண்டு விட்டாள். அந்த துயரக்காட்சியை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம். இந்திய மக்களின் இந்தவிதமான அநாகரீகமான கொடிய செயல்களை எல்லாம் கண்டு அவர் கண்ணீர் விட்டார். "ஆண்டவரே, இந்தியாவை எனக்குத் தாரும், இல்லையேல் நான் சாகிறேன்" என்று ஆண்டவருக்கு முன்பாகக் கூறி கங்கை ஆற்று மணலில் கிடந்து அவர் அழுது புரண்டார்.

பகல் முழுவதும் வட இந்திய பட்டணங்களான கான்பூர், தீனாபூர், பாட்னா, கல்கத்தா போன்றவற்றில் வீதி வீதியாகச் சென்று தெருப் பிரசங்கங்கள் செய்தார். விக்கிரக வழிபாடுகளையும், சிருஷ்டிகளைத் தொழுவதையும் தவறு என்று அவர் மக்களுக்குக் கண்ணீருடன் உணர்த்திக் காட்டினார். வட இந்தியாவின் வாட்டி வறுத்தெடுக்கும் வெயிலில் காய்ந்து, உயிரைக் குடிக்கும் இரவின் கொடிய குளிரில் நடு நடுங்கி ஆங்கிலேய இளைஞனான அவர் பட்ட பாடுகள் கொஞ்சமல்ல. வட இந்திய பட்டணங்கள் ஒன்றின் தெருவில் மார்ட்டின் நின்று கொண்டு வானத்தையும், பூமியையும் படைத்த தேவன் ஒருவரே என்று வானத்திற்கு நேராகத் தன் விரலை ஏறெடுத்து வைராக்கியமான இந்து சாதுக்கள், சந்நியாசிகள் மத்தியில் தேவனுடைய சுவிசேஷம் அறிவிப்பதை நீங்கள் இந்த தேவ எக்காள இதழின் முகப்பு அட்டையில் காணலாம்.

அவருடைய அயராத சவிசேஷ ஊழைப்பால் இயேசு இரட்சகரை தங்கள் ஜீவாதிபதியாக ஏற்றுக் கொண்டோர் இந்துக்களிலும், முகமதியர்களிலும் பல மக்களுண்டு. ஒரு தடவை மார்ட்டின் கான்பூர் பட்டணத்தில் ஒரு கூட்டம் பிச்சைக்காரர்களுக்கு பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அந்த பிச்சைக்காரர்களுக்கு அவர் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் ஏராளமான பிச்சைக்காரர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று பண உதவி மற்றும் இதர உதவிகளையும் பெற்றுச் சென்றனர். அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்தப் பிச்சைக்காரர்களின் கூட்டத்துடன் ஒரு சிறிய கூட்டம் முகமதிய இளைஞர்கள் மார்ட்டினுடைய வார்த்தைகளைக் கேட்க ஆர்வத்துடன் வந்து நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஷேக் சாலே என்ற முகமதிய வாலிபன் அவருடைய வார்த்தைகளில் மிகவும் ஆர்வம் காண்பிப்பவனாக இருந்தான். அவன் முகமதிய மார்க்கத்தில் மிகவும் வைராக்கியமுள்ளவனும், இஸ்லாம் மார்க்கத்தில் தீவிர பற்றுள்ளவனாகவும் காணப்பட்டான். இந்திய சமஸ்தான முகமதிய மன்னர்களில் ஒருவருடைய பொன், வெள்ளி உடமைகளுக்கு அவன் பாதுகாவலனாகவும் இருந்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மார்ட்டினுடைய பிரசங்கத்தால் தொடப்பட்ட அவன் தன் மட்டாக ஒரு சுவிசேஷத்தை வாங்கி வாசித்து கிறிஸ்தவ மார்க்கத்திற்கு நெருக்கமாக வந்து கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில் ஷேக் சாலே என்ற அந்த முகமதிய வாலிபனுக்கு ஹென்றி மார்ட்டின் அவர்களுடைய அலுவலகத்தில் மொழி பெயர்ப்பாளர்களின் குழுவிலேயே ஒரு வேலை கிடைத்தது. ஆம், பெர்சியன் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருந்த பெர்சியன் மொழி புதிய ஏற்பாட்டை புத்தக ரூபமாக அச்சிடும் பொறுப்பு அவனுக்கு கொடுக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தை அவன் நன்கு பயன்படுத்திக் கொண்டு மத்தேயு முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரைக்குமான புதிய ஏற்பாடு முழுவதையும் பெர்சியன் மொழியில் மிகவும் கருத்தோடு வாசித்தான். தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் பண்படுத்தப்பட்ட ஒரு நல்ல நிலமான ஷேக் சாலேயின் இருதயத்தில் விழுந்தபடியால் அவன் உடனே ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்று ஞானஸ்நானமும் பெற்றுக் கொண்டான். ஞானஸ்நானத்திற்குப் பிறகு அவன் தனது பெயரை "அப்துல் மசி" அதாவது "கிறிஸ்து பெருமானின் அடிமை" என்று மாற்றிக் கொண்டான். அந்த அப்துல் மசி என்ற வாலிபன் பின் நாட்களில் நல்லதொரு தேவ ஊழியனாக மாற்றம் பெற்று 60 இந்து மக்களை ஆண்டவர் இயேசுவண்டை வழிநடத்தி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். இப்படி ஹென்றி மார்ட்டினுடைய தேவ ஊழியம் காட்டுத் தீ போலப் பரவத் தொடங்கியது. முஸ்லீம் வாலிபனான ஷேக் சாலே என்பவன் தேவ ஊழியர் அப்துல் மசியாக மாற்றம் பெற்றது நமக்கு ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா? அவரது படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டையும், ஆண்டவர் இயேசுவின் உவமைகளையும், மார்ட்டின் இந்துஸ்தானியில் மொழி பெயர்த்தார். அதே போல புதிய ஏற்பாட்டையும், சங்கீதங்களையும் பெர்சிய மொழியில் மொழியாக்கம் செய்து அவற்றை ஈரான் என்ற வைராக்கியமான முகமதிய நாட்டுக்குள் கொண்டு சென்றார். 1812 ஆம் வருடம் பெப்ரவரி மாதம் பெர்சிய மொழி புதிய ஏற்பாட்டு வேலை முடிவடைந்ததும் அவற்றில் 2 பிரதிகளை பெர்சியா என்றழைக்கப்படும் ஈரான் நாட்டின் மன்னர் ஷாவுக்கும் அவருடைய குமாரனுக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கும்படியாக குறிப்பிட்ட அந்த இரண்டு புதிய ஏற்பாட்டு பிரதிகளையும் கையெழுத்து மிகத் திறமையாக எழுதக்கூடிய சில பெர்சிய மொழி வல்லுனர்களிடம் கொடுத்து அழகாக எழுதி வாங்கிக் கொண்டார். அந்த எழுத்து வேலை முடிவடைவதற்கு அந்த வல்லுனர்களுக்கு 3 மாத காலம் சென்றது. 1812 ஆம் ஆண்டின் மே மாதம் 11 ஆம் தேதி அவர் டாப்ரிஸ் என்ற இடத்திற்கு பிரயாணப்பட்டார். பெர்சியாவிலிருந்து அது 700 மைல்கள் தொலைவில் உள்ள ஒரு இடமாகும். அந்தப் பட்டணத்திலிருந்த ஆங்கிலேய அரசாங்கத்தின் தூதுவர் சர்.கோரே ஆஸ்லி என்பவரின் உதவியுடன் பெர்சிய மன்னர் ஷாவை சந்திக்க நமது ஹென்றி மார்ட்டின் திட்டமிட்டார். ஒரு மாத காலத்துக்குள்ளாக அவர் தனது பயணப் பாதையான 700 மைல்கள் தூரத்தைக் கடந்து சென்றுவிட்டார். உயர்ந்த மலை கணவாய்களின் வழியாக அவருடைய பாதை சென்றது. அந்தப் பிரயாணம் அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. சீதோஷ்ணம் குளுமையாக அமைந்திருந்தது. "நான் கடந்து சென்ற எனது பயணப்பாதை பள்ளத்தாக்குகளும், கானகங்களும், வயல்வெளிகளும் நிறைந்ததாக இருந்தது. கோடை காலத்தின் மத்திய பகுதியிலேயே ஏரிகளில் உறை பனி தேங்கியிருப்பதை நான் காண முடிந்தது. ஆசியாவில், நான் இங்கிலாந்து நாட்டின் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டேன்" என்று மார்ட்டின் தனது டயரியில் எழுதினார். தனது வழித்தடத்தில் தான் சந்தித்த முகமதிய மக்களிடம் தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவர் தவறவில்லை. அவர் தனது பாதையில் இஷ்பஹான் என்ற இடத்தில் அர்மீனிய கிறிஸ்தவர்களைச் சந்தித்தார். அந்த கிறிஸ்தவர்களின் சடங்காச்சார ஆராதனைகளும், தேவனுடைய மெய்யான இரட்சிப்பின் அனுபவமில்லாத அவர்களுடைய மாய்மாலமான கிறிஸ்தவ வாழ்க்கைகளும் அவரை வேதனைப்படுத்துவதாக இருந்தது.

இறுதியாக, மார்ட்டின் பெர்சிய மன்னர் ஷாவுடைய மிக உயர்ந்த அதிகாரியின் உதவியுடன் ஷாவை, சந்தித்தார். பெர்சிய மன்னருடனான அவரது முதலாவது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகக் காணப்பட்டது. அந்த 2 மணி நேர சந்திப்பில் மார்ட்டின் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மை, அவரது அற்புதங்கள். திரித்துவம் மற்றும் குரானைக் குறித்துப் பேசினார். அவருடைய அந்த சம்பாஷணை முற்றுப் பெறாததாகவிருந்தபோதினும் மன்னருடைய மனதில் நல்ல ஒரு அபிப்பிராயத்தை உண்டாக்கிவிட்டதாக அவர் எண்ணினார்.

இதன் பின்னர் மன்னர் ஷாவின் மேற்கண்ட மிக உயர்ந்த அதிகாரியின் ஆலோசனைப்படி மூன்று நாளைக்குப் பின்னர் ஒரு முகமதிய ஆலோசனைக்குழுவுக்கு முன்பாக மார்டின் வரும்படியாக கேட்டுக் கொள்ளப்பட்டார். அதின்படி மார்ட்டின் தான் மொழி பெயர்த்த அழகான பெர்சிய மொழி புதிய ஏற்பாட்டுடன் மகிழ்ச்சியோடு வந்து நின்றார். எந்த ஒரு ஞானமுமற்ற இரண்டு முகமதிய முல்லாக்கள் அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர். மார்ட்டின் பேசியதை ஷாவின் அதிகாரி ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகளுக்கு அந்த முல்லாக்கள் அவ்வப்போது தவறான பதில்களையும், கேவலமான தூஷணங்களையும் அவருக்கு எதிராகக் கூறிக் கொண்டிருந்தனர்.

இறுதியாக மன்னர் ஷாவின் அதிகாரி ஒரு நிபந்தனையை மார்ட்டினுக்கு விதித்தார். அதின்படி "கடவுள் ஒருவரே, அவரது இறைத் தூதுவர் முகமது" என்று நீ சொல்ல வேண்டும் என்று பிடித்துக் கொண்டனர். அது ஒரு நேரடியான சவாலாக இருந்தது. அதை அவர் சொல்லத் தவறும் பட்சத்தில் அதின் எதிர் விளைவுகள் எத்தனை கடூரமாகவிருக்கும் என்பதை மார்ட்டின் நன்கு அறிந்திருந்தபோதினும் "கடவுள் ஒருவரே" என்று கூறி "முகமது அவரது தீர்க்கர் (நபி)" என்று சொல்லுவதற்கு பதிலாக "இயேசு இரட்சகர் அவரது புதல்வன்" என்று சொல்லி முடித்தார். அந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் கோபத்தால் குமுறி எழுந்தார்கள். "இயேசு பிறக்கவுமில்லை, அவனை ஒருவனும் பெறவும் இல்லை" என்று அருவருப்பாகப் பேசிக் கொண்டே அவரைத் தங்கள் கால்களில் வைத்து மிதித்து சிதைத்து விடுபவர்களைப் போன்று தங்களது இருக்கைகளிலிருந்து வீராவேசமாக எழுந்தார்கள். "இந்த தேவ தூஷணத்திற்காக நாங்கள் உனது நாவை எரிக்கப் போகின்றோம்" என்று அவர்கள் மிகுந்த வீராவேசத்துடன் கூறினார்கள்.

ஆனால், மார்ட்டினோ மன்னர் ஷாவுக்கு கொடுக்க தன் வசம் வைத்திருந்த பெர்சிய மொழி புதிய ஏற்பாட்டை ஒரு துணியினால் சுற்றி எடுத்துக் கொண்டு அந்தப் பொல்லாத முகமதிய மக்களின் நடுவிலிருந்து அப்படியே எழுந்து சென்றுவிட்டார். அன்று அவர் உயிர் தப்பிப் பிழைத்தது நிச்சயமாக ஒரு தேவச் செயலாகும்.

இதற்கிடையில் ஆங்கிலேய தூதுவர் சர்.கோரே ஆஸ்லி என்பவர் தனது சுய முயற்சியால் மார்ட்டின் அவர்கள் பெர்சியன் மொழியில் மொழி பெயர்த்த புதிய ஏற்பாட்டை மன்னர் ஷாவிற்குக் கொடுத்தார். அந்த புதிய ஏற்பாட்டின் மத்தேயு சுவிசேஷம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை முழுவதையும் மன்னருடைய விருப்பப்படி அவருக்கு வாசித்துக் காட்ட மேன் மக்கள் தெரிந்தெடுக்கப்பட்டு அவருக்கு வாசித்துக் காட்டப்பட்டது. வேதத்தைக் குறித்த ஷா மன்னரின் ஆர்வம் உலகமெங்கும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. அதை அடுத்து உடனடியாகவே அந்த பெர்சிய மொழி புதிய ஏற்பாடு 5 தடவைகள் அச்சிடப்பட்டது. அதின் முதல் அச்சுப் பதிப்பை மேலே நாம் பார்த்த ஆங்கிலேய தூதுவர் சர்.கோரே ஆஸ்லி என்பவரே ஜெர்மன் தேசத்திலுள்ள பீட்டர்ஸ்பர்க் பட்டணத்தில் தனது முழுமையான மேற்பார்வையிலேயே அச்சிட்டார். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்குத் துதி உண்டாவதாக. தான் பெர்சிய மொழியில் மொழி பெயர்த்த புதிய ஏற்பாட்டை மன்னர் ஷாவுக்கு நேரடியாகக் கொண்டு போய் கொடுக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் நமது பரிசுத்த தேவ பக்தன் ஹென்றி மார்ட்டினுக்குக் கிடைக்காத போதினும், அவருடைய பெர்சிய மொழி புதிய ஏற்பாடு மன்னர் ஷாவுக்கும், அவரது அரண்மனையிலிருந்த அநேகருக்கும், அவருடைய பெர்சிய நாட்டின் பல்லாயிரக்கணக்கான மிக வைராக்கியமுள்ள முகமதியர்களுக்கும் போய்க் கிடைத்துக் கொண்டது. அந்தக் காட்சியைக் காண்கின்ற சந்தர்ப்பத்தை ஹென்றி மார்ட்டின் காணும் முன்னர் அவர் தனது நோயினால் மரித்துப் போனார்.

பக்திமானான ஆங்கிலேய தூதுவர் சர்.கோரே.ஆஸ்லி என்பவரும் அவரது பக்தியுள்ள மனைவியும் மார்ட்டினுக்கு எவ்வளவோ பணிவிடைகளைச் செய்து அவருடைய நோய்க்கு எத்தனையோ பரிகாரங்களைச் செய்தார்கள். இன்னும் கொஞ்ச காலம் தங்களோடிருந்து அவருடைய நோய்க்கு நன்கு வைத்தியம் செய்து, போதுமான இளைப்பாறுதலைப் பெற்றுக் கொள்ளும்படியாக எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் கேளாமல் தனது சுவிசேஷ பிரயாணத்தைத் தொடர்ந்தார்.

 

நித்திய விண் வீட்டிற்குப் பறந்து சென்ற பாக்கிய நாள்

கர்த்தருடைய ஊழியத்தின் பாதையில் பெர்சியா என்ற ஈரான் நாட்டின் டோகட் என்ற கிராமத்தில் இருந்தபோது ஹென்றி மார்ட்டினுக்கு மரணம் சம்பவித்தது. தான் மரிப்பதற்கு முன் கடைசியாக அவருடைய சுகயீனங்களைக் குறித்து அவர் எழுதிய வரிகளைக் கவனியுங்கள்:-

"என்னுடைய காய்ச்சல் கடூரமாக இருக்கின்றது. என் கண்களிலும், நெற்றியிலும் கடுமையான வெப்பத்தை உணருகின்றேன். அந்த தாங்க முடியாத உஷ்ணம் என்னைப் பித்துப் பிடித்தவனைப் போலாக்குகின்றது" என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

 

அவருடைய டயரியில் எழுதப்பட்டக் கடைசி வரிகள் இவைகள்தான்:-

"டோகட் கிராமத்திலுள்ள ஒரு பழத்தோட்டத்தில் நான் தரையில் அமர்ந்திருந்தேன். அந்த ஏகாந்தமான தனிமையிலும் என் ஆத்துமாவின் நேசர், என் தேற்றரவாளன், என் கூட்டாளியுமாகிய என் அருமை தேவன் என்னோடிருக்கின்றார் என்ற ஆனந்த நம்பிக்கையால் என் உள்ளம் இனிமையான தேவ சமாதானத்தாலும், சொல்லொண்ணா ஆறுதலாலும் நிரம்பிற்று. எனது இகலோகத்துப் பாடுகளின் வாழ்வு எப்பொழுது முடிவில்லா நித்திய பேரின்பத்துடன் இணையும்! நீதி வாசம் செய்யும் அந்தப் புதிய வானமும், புதிய பூமியும் என்று தோன்றும்! தீட்டுள்ளதும், பொய்யையும், அருவருப்பையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் பிரவேசிக்காத அந்த ஜோதி தோன்றும் இன்பக் கானான் தேசத்தில் நான் எப்போது சேருவேன்?"

பரிசுத்த தேவ பக்தனின் மேற்கண்ட பரலோக ஆவலை அவருடைய அன்பின் நேச கர்த்தர் சரியாக பத்தே நாட்களில் பூரணமாக நிறைவேற்றிக் கொடுத்தார்.

தேவ மனிதனாகிய ஹென்றி மார்ட்டின் 1812 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் தன்னுடைய இளமையின் 31 ஆம் வயதில் தான் மிகவும் அருமையாகத் தன் ஆவி, ஆத்துமா, சரீரத்தையே முழுமையாக அர்ப்பணம் செய்து நேசித்தத் தன் அன்பின் இரட்சகரின் மோட்ச இன்ப வீட்டிற்குப் பாடிப் பறந்து சென்றார்.

அந்த அருமையான பரிசுத்தவானை மரணம் சந்திக்கும்போது அவர் அருகில் எந்த ஒரு இரக்கமுள்ள மனிதனும் இருந்ததில்லை. ஜீவனற்ற அவரின் சரீரம் பூமியிலே சாயும்போது அதைத் தாங்கிப் பிடித்துக் கீழே கிடத்த எந்த ஒரு அன்பின் கரங்களும் அங்கு கிடையாது. கிறிஸ்தவ அன்பும், பரிவுணர்வும் உலகமெங்கும் எத்தனையோ ஆச்சரிய விதமாக வியாபித்துக் கிடக்க அந்தப் புனிதவானின் இறுதி யாத்திரையில் அவரைத் தாங்க ஒரு அன்பின் மார்பு கூட அங்கு இல்லாமற் போயிற்று. அவருக்காகப் பரிதாபப்பட்டு ஏங்கி அழ ஒரு குரலும் அங்கு எழும்பவில்லை. அவருக்கும், அவருடைய அன்பின் கர்த்தருக்கும் முற்றும் அந்நியர்களும், ஜென்ம சத்துருக்களுமான முகமதிய மக்கள் அவருடைய சரீரத்தைப் பூமியின் ஆழத்திலே நிர்விசாரமாகத் தள்ளிப் புதைத்தார்கள்.

பின் நாட்களில் அவருடைய சரீரம் புதையுண்ட இடம் கிழக்கு இந்திய கம்பெனியினரால் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியினரின் குருவானவராகவும் அவர் ஆண்டவருக்குத் தொண்டு செய்திருந்தார். ஹென்றி மார்ட்டினைக் குறித்து தாமஸ் பாபிங்டன் மக்காலே என்பவர் எழுதிய அருமையான கல்லறை வாசகத்தை அப்படியே ஆங்கிலத்தில் தருகின்றேன். அதின் தமிழ் வடிவத்தை உங்களுக்குத் தரக் கூடிய ஆங்கில ஞானம் எனக்கில்லை. மிகவும் மனம் வருந்துகின்றேன். ஆங்கிலம் தெரிந்த தேவ பிள்ளைகள் அதை வாசித்து மகிழுங்கள், கர்த்தருக்குத் துதி செலுத்துங்கள்:-

Here Martyn lies. In Manhood's early bloom
The Christian Hero finds a Pagan tomb
Religion, sorrowing o'ver her favourite son,
Points to the glorious trophies that he won
Eternal trophies! not with carnage red,
Not stained with tears by hapless captives shed,
But trophies of the cross! for that dear name,
Through every form of danger, death, and shame,
Onward he journeyed to a happier shore,
Where danger, death and shame assault no more.

 

பரிசுத்தவான் ஹென்றி மார்ட்டினின் சிறந்த தேவ பக்தி

ஒரு சமயம் கங்கை நதியிலே ஒரு பிராமணர் அந்த நதியை வணங்கி அதற்கு பூஜை செய்வதை நமது ஹென்றி மார்ட்டின் மிகுந்த துயரத்தோடு கவனித்தார். அந்தக் காட்சியைக் கண்ட அவரின் கண்கள் குளமாயின. உடன்தானே அவர் தன் இரட்சா பெருமானாம் கர்த்தருக்குத் தன் உள்ளத்தைப் பரலோகத்திற்கு நேராக ஏறெடுத்து அனந்தம் துதி ஸ்தோத்திரங்களை ஏறடுத்தார். ஆம், தேவன் தமது அநாதி தீர்மானத்தின்படி உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே தம்முடைய சொந்த பிள்ளையாகத் தன்னைத் தெரிந்து கொண்ட தயவுக்காக அவருக்கு நன்றி பலிகளை அந்த இடத்திலேயே செலுத்தினார். தேவன் தன்னைத் தமது சொந்த பிள்ளையாகத் தெரிந்து கொண்ட மட்டற்ற அன்பை அவர் அடிக்கடி எண்ணி உள்ளம் கசிந்தார்.

"யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கின்றாயா?" என்று தன்னுடைய அருமை இரட்சகர் பேதுருவிடம் கலிலேயோ கடல் ஓரம் அந்த அதிகாலை வேளை மனங்கசிந்து கேட்ட அந்த அன்பின் கேள்வியை நம்முடைய பக்த சிரோன்மணியான ஹென்றி மார்ட்டின் ஒரு வேளை உற்றுக் கேட்டிருப்பார் போலும்! அதினை மையமாகக் கொண்டே மார்ட்டின் ஆண்டவரை முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பெலத்தோடும் நேசித்து அன்பு கூர்ந்தார். பாவத்தில் அழியும் மனுக்குலத்தின் பால் அவருக்கு அளவற்ற அன்பின் கரிசனை இருந்தது.

தன் இரட்சகர் மேலுள்ள அவருடைய அளவற்ற அன்பானது ஏதோ கொஞ்ச காலம் மாத்திரம் நுரை தள்ளித் திரளாய்ப் பாய்ந்து ஓடிய பின்னர் அப்படியே அடங்கிக் கொள்ளும் பூமியின் நீர் ஊற்றாக இருக்காமல் கன்மலை வெடிப்பிலிருந்து பொங்கி வந்து ஆண்டாண்டு காலமாக எந்தவித மாற்றமின்றி ஒரே சீராக ஓடிக் கொண்டிருக்கும் கன்மலையின் நீர் ஓட்டமாக இருந்தது.

அவரின் கர்த்தருக்குப் பயப்படும் பயமும், இளகக்கூடிய மென்மையான மனச்சாட்சியும், தன்னுடைய சொந்த இருதயத்தை அவர் பாவத்தின் தாக்குதல்களுக்கு எதிராக மகா விழிப்புடன் பாதுகாத்துக் கண்காணித்த கரிசனையும் அத்தனை எளிதாக மற்றவர்கள் பின்பற்றக்கூடியவைகள் அல்ல.

இவை யாவற்றையும் விட அவருடைய மனத்தாழ்மையே மகா விசேஷித்த ஒன்றாகும். அவருடைய தேவ பக்தியின் நடத்தைகள், பரிசுத்தம், பக்தி அனைத்தும் அந்த மனத்தாழ்மை என்ற நெசவுப் பாகையுடன் ஒன்றிணைத்துப் பின்னப்பட்டிருந்தது.

ஜெபம், வேத வசன தியானம் என்ற இரண்டு இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து அவர் தினமும் ஜீவ தண்ணீரை மொண்டு எடுத்துக் கொண்டே வந்தார்.

"ஜெபத்தில் என் அருமை இயேசு இரட்சகரை மிகவும் மாட்சிமையான கோணத்தில் ஒரு சகோதரனாக அல்ல, என்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் என் ஆருயிர்த் தோழனாகக் காண்கின்றேன். ஓ, அவரை நோக்கி என் ஜெபத்தை ஏறெடுப்பது எத்தனை இனிமையான ஒரு நேரம்! என் இயேசுவுடன் ஜெபத்தில் இருக்கின்ற அந்த பேரானந்தத்தை விட வேறே சந்தோசமும், மற்றொரு மோட்ச பேரானந்த வாழ்வும் எனக்கு வேண்டவே வேண்டாம்" என்று அவர் சொல்லுவார்.

அவருடைய குறுகிய வாழ்நாட் காலம் முழுவதிலும் ஜனசஞ்சாரங்களிடமிருந்து முற்றும் தனித்து விலகி தன் அன்பின் கண்மணி இயேசு இரட்சகருடன் தனித்திருப்பதை மாத்திரமே அவர் வாஞ்சித்துக் கதறினார்.

கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாள் அவருடைய மனமகிழ்ச்சியின் நாள் ஆகும். அதை அவர் மிகவும் பரிசுத்தமாக ஆசரித்தார். அந்த நாள் முழுவதையும் அவர் தேவனுக்கென்று மாத்திரம் செலவிட்டார். ஓய்வு நாள் என்பது அவருடைய ஆத்துமாவுக்கு பூலோகிலே ஒரு பரதீசின் இன்ப நாளாகும்.

சங்கை கோரே என்பவர் ஹென்றி மார்ட்டினைப் பற்றிக் கூறும்போது "அவர் ஒரு பூரணமான சிறந்த தேவ பக்தன். அவரைப் போன்றதொரு பரிசுத்தவானை நான் கண்டதே இல்லை. இந்த உலகத்தில் இனி அப்படிப்பட்ட ஒருவரை நான் காண்பேன் என்று நினைக்கவுமில்லை. ஆறு தடவைகள் நான் அவரைச் சந்திக்கும் சிலாக்கியம் பெற்றுள்ளேன். ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்பாலுள்ள என் அன்பும், பயபக்தியும் மேலோங்கி வளர்ந்தே வந்திருக்கின்றது" என்று கூறுகின்றார்.

இந்தியாவிலுள்ள தீனாபூர் என்ற நகரத்தில் ஹென்றி மார்ட்டினை முகத்திற்கு முகம் சந்தித்த ஷெர்வுட் அம்மையார் என்ற கர்த்தருடைய பிள்ளை அவரைக் குறித்துக் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கின்றார்கள்:-

"அவரின் முகச் சாயல் மனுமக்களின் சாதாரண முகச்சாயல் அன்று. அந்த முகம் தெய்வீக அன்பாலும், பிரேமையாலும் பிரகாசிப்பதாகவிருந்தது. அவரின் முகத்தினை யார், யார் உற்று நோக்குவார்களோ அவர்களின் இருதயங்களை அந்தப் பரிசுத்தவானின் முகப்பார்வை ஊடுருவி நோக்குவதை துரிதமாகக் கண்டு கொள்ளலாம். இந்திய மக்களை மனந்திரும்பப் பண்ணுவதும், கிறிஸ்துவின் ராஜ்யத்தை இந்தியாவில் கட்டுவதுமாகிய இந்த இரண்டு பிரதான குறிக்கோள்களுக்காகவே அந்த தேவப் பிள்ளை உலகில் உயிர் வாழ்வதைப் போன்றிருக்கின்றது. அக்கிரமம், அநியாயம், பாவத்தில் கொந்தளிக்கும் இந்த உலகத்தில் இருதயம் நிறைந்த தேவ சமாதானத்துடன் இனிமையும், சாந்தமும், பரலோக சிந்தையுடன் நடமாடும் மெய் தேவ பக்தர்களில் அவரும் ஒருவர்" என்று கூறியுள்ளார்கள்.

எந்த ஒரு சந்தேகத்திற்கும் சற்றும் இடமின்றி தன் ஆண்டவர் இயேசுவுக்காகத் தனக்குள்ள எல்லாவற்றையும் மார்ட்டின் வெறுத்துத் தள்ளினார். மரணபரியந்தம் அவர் தனது ஜீவனை நேசிக்கவே இல்லை. இந்தியாவிற்கு மிஷனரியாக வந்த பூர்வ காலத்துப் பரிசுத்தவான் சீகன்பால்க், நவ உலகத்தின் பரிசுத்தவான் டேவிட் பிரைய்னார்ட் என்ற இரு பக்த சிரோன்மணிகளின் அடிச் சுவடுகளை மார்ட்டின் பின் தொடர்ந்து தன் அருமை நேசரின் சிலுவைக் கொடியை இந்தியாவிலும், அராபியர்களின் நாடுகளிலும் பட்டொளி வீசிப் பறக்கச் செய்து விட்டார்.

ஹென்றி மார்ட்டினின் ஆவிக்குரிய நண்பர் சிமியோன் என்பவரின் வீடு மேற்கு வங்காளத்திலுள்ள செராம்பூர் பட்டணத்தில் இருக்கின்றது. அவருடைய சாப்பாட்டு அறையில் மார்ட்டினின் படம் ஒன்று சுவரில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. மார்ட்டின் இந்தியாவிலிருந்து பெர்சியாவுக்குப் பிரயாணப்படும் சமயம் அவருடைய சாயலை கல்க்கத்தாவிலுள்ள ஒரு ஓவியக் கலைஞன் அழகான ஓவியமாகத் தீட்டினான். அந்தப் படம்தான் அங்கு தொங்கிக் கொண்டிருக்கின்றது.

சிமியோனைப் பார்க்க அவருடைய வீட்டிற்கு வருகின்ற அவருடைய நண்பர்களிடம் "அதோ சுவரில் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த பக்தனைப் பாருங்கள். அவருடைய முகச்சாயலில் பிரதிபலிக்கின்ற பக்தி பரவசத்தை உற்று நோக்குங்கள்! அவரைப் போன்று என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றவர் இந்த உலகத்தில் வேறு எவருமே கிடையாது. அவர் தனது கண்களை என்னைப் பார்ப்பதிலிருந்து ஒருக்காலும் விலக்கிக் கொள்ளுவதே இல்லை. அவர் அந்தவிதமாக என்னை ஓய்வில்லாமல் பார்க்கும் காரியமானது என்னுடன் அவர் ஒன்றைப் பேசுவதைப் போன்று எனக்குத் தெரிகின்றது. "விழிப்பாயிரு, எச்சரிக்கையாயிரு, உனது அழைப்பின் பாதையில் உனது ஊழியத்தை உத்தமத்தோடு நிறைவேற்ற மிகவும் கருத்தாயிரு. ஒருக்காலும் உனது வாழ் நாட் காலத்தை வீண் விரயமாக்கிவிடாதே, ஆம், வீண் விரயமாக்கிவிடாதே" என்று என்னிடம் மிகவும் அழுத்தம், திருத்தமாக சொல்லுவதைப் போன்றிருக்கின்றது.

சிமியோன் தனது நண்பர்களைப் பார்த்து பரிசுத்த புன்முறுவல் புரிந்தவண்ணமாக "நான் ஒருக்காலும் எனது வாழ் நாட் காலத்தை வீண் விரயம் பண்ணவே மாட்டேன், வீண் விரயம் பண்ணவே மாட்டேன்" என்று தனது நண்பர்களிடம் தொடர்ந்து கூறுகின்றார்.

 
 

என் மகனே மாம்ச பெருந்தீனிக்காரரை சேராதே

புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்கள் தான் இருந்தன. ஒரு பரிசுத்த தேவ பிள்ளையிடம் "புத்தாண்டு விழிப்பு ஆராதனைக்கு எங்கு செல்லுகின்றீர்கள்?" என்று நான் கேட்டேன். "இங்குள்ள ஒரு ஆவிக்குரிய சபைக்குத்தான் போக வேண்டும். ஆராதனை ஆரம்பிப்பதற்கு முன்னர் "பிராய்லர் கோழி பிரியாணி மற்றும் முட்டை சபை மக்களுக்கு பாஸ்டர் கொடுக்கின்றார்கள்" என்று சொன்னார்கள். "யாவருக்கும் இலவசமாக கோழி பிரியாணி கொடுக்கப்படுகின்றதா?" என்று நான் கேட்டேன். "இலவசமாக அல்ல, நபருக்கு ரூபாய் 25/- வீதம் (16 ஆண்டுகளுக்கு முன்பாக உள்ள ரூபாயின் விலை மதிப்பு) முன்கூட்டியே டிக்கெட்டுகள் வாங்கிக் கொள்ள வேண்டும். எங்களுக்கு 5 டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன" என்றார்கள். "வயிறு புடைக்க பிராய்லர் கோழியும், அவித்த முட்டையும் சாப்பிட்ட பின்னர் அந்த புத்தாண்டு விழிப்பு ஜெபத்தில் நீங்கள் தேவனிடமிருந்து என்ன தேவ ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள இயலும்?" என்றேன் நான். அந்த தேவ பிள்ளை ஒரு கணம் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

தேவ ஜனமே, இந்தவிதமான மாம்ச பெருந்தீனிக்காரர்களுக்கு விலகி ஓடு. மறந்து விடாதே, ஒவ்வொரு பெருந்தீனி விருந்துக்குப் பின்னரும் "நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்" என்று உனக்கு எதிராக சுவரில் எழுத தேவனுடைய கையுறுப்பு காத்துக் கொண்டிருக்கிறது.


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM