பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகள்

ஜாண் ஜி.பேட்டன் (1824 - 1907)


(ஜாண் ஜி.பேட்டன் 1824 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தேசத்தில் பிறந்தார். இவருக்கு முப்பத்திமூன்று வயதானபோது இவர் பசிபிக் சமுத்திரப்பகுதியிலுள்ள நியூ ஹெப்ரீடிஸ் தீவுகளுக்கு மிஷனரியாகச் சென்றார். பயங்கரமான காட்டுமிராண்டிகள் வாழ்ந்த தீவு அது! அவர்கள் நரமாமிசம் உண்ணுபவர்களாக இருந்தார்கள்!

அடுத்த ஆண்டே அவருடைய மனைவியும் புதிதாகப் பிறந்த மகனும் நோயினால் மரித்துப்போனார்கள். என்றாலும், அவர் தொடர்ந்து அபாயங்களின் மத்தியில் நான்காண்டு காலங்கள் ஊழியம் செய்தார். அடுத்த நான்காண்டு காலம் அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பிரயாணம் மேற்கொண்டு இந்த ஊழியத்திற்கான ஆதரவைத் திரட்டினார். 1864 ஆம் ஆண்டு திரும்பவும் திருமணம் செய்து கொண்டு தனது மனைவி மார்க்கரெட் ஒயிட்ரோஸ் அம்மையாருடன் அனீவா என்ற தீவுக்குச் சென்று தேவ ஊழியத்தை மறுபடியுமாகத் தொடங்கினார்.

காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தவர்களுக்கு அவர்கள் எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தார்கள். திருமதி பேட்டன் பெண்களுக்கு தையல் வேலை செய்யக் கற்றுக்கொடுத்தார். பேட்டன் தனது இராப்பகலான அயராத முயற்சிகளின் காரணமாக அனீவா மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து அச்சிட்டு அந்த மக்கள் கரங்களில் வழங்கினார். பதினைந்து ஆண்டுகள் கழித்து அந்த அனீவா தீவினர் முழுவதும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை கண்டு இவர்கள் தேவனைத் துதித்தார்கள்.

பேட்டன், மார்க்கரெட் பேட்டன் இருவருமாகச் சேர்ந்து அங்கே 41 ஆண்டு காலம் வல்லமையாக தேவ ஊழியம் செய்தார்கள். 1905 ஆம் ஆண்டு மார்க்கரெட் பேட்டன் அம்மையார் மரித்தார்கள். இரண்டாண்டுகள் கழித்து ஜனுவரி 28 ஆம் நாள் பேட்டன் கர்த்தருக்குள் நித்ரையடைந்தார். இன்று அந்த தீவுகள் வானாட்டு (Vanuatu) என்று அழைக்கப்படுகின்றன. இந்த தீவுகளின் மக்களில் 85 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள்! இவர்கள் பேட்டனின் தியாக அன்பின் தேவ ஊழியத்துக்கு இன்றும் வல்லமையான சாட்சிகளாக விளங்குகின்றனர்!)


இரத்தசாட்சிகளின் இரத்தத்தால் ஞானஸ்நானம்
பண்ணப்பட்ட நியூ ஹெப்ரீடிஸ்

1606 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெர்னாண்டஸ் டி குரோஸ் என்பவர் ஆஸ்திரேலியா கண்டத்தை ஒட்டிய தென் பசிப்பிக் சமுத்திரத்தில் தொடர்ச்சியாக சங்கிலி கோர்வையாக 80 தீவுகள் இருப்பதை கண்டு பிடித்தார். 1773 ஆம் ஆண்டு கேப்டன் ஜேம்ஸ் குக் என்ற பிரசித்திபெற்ற ஆராய்ச்சியாளர் இந்த தீவு கூட்டத்தை ஆராய்ந்து அதற்கு வரைபடம் தயாரித்து நியூ ஹெப்ரீடிஸ் என்ற பெயரை அதற்குச் சூட்டினார். ஸ்காட்லாந்து தேசத்தின் வடமேற்கு கடற்கரை பிராந்தியமான ஹெப்ரீடிஸ் என்ற இடத்தைப் போன்று இந்த இடம் அழகாக காணப்படுவதால் அதற்கு நியூ ஹெப்ரீடிஸ் என்று பெயரிட்டார். இந்த சங்கிலி கோர்வையான 80 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டம் 450 மைல்கள் நீளம் கொண்டது. அதின் ஜனத்தொகை 190000 ஆகும். இவர்கள் நரமாமிச பட்சிணிகள் என்று அழைக்கப்பட்டனர். 1839 ஆம் ஆண்டு வரை இந்த தீவுக்கூட்டத்தில் தேவனுடைய சுவிசேஷத்தின் வாசனை என்பது துளி கூட இல்லாமல் இருந்தது. 1839 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் லண்டன் மிஷனரி சங்கம் இந்த தீவு கூட்டங்களில் தேவனுடைய சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக ஜாண் வில்லியம்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஹாரீஸ் என்ற இரண்டு மிஷனரிகளை இந்த தீவு கூட்டத்திலுள்ள எரமான்கா என்ற தீவிற்கு முதன் முதலாவதாக அனுப்பி வைத்தது. அவர்கள் இருவரும் தீவில் தரையிறங்கவும் நரமாமிசபட்சிணிகளான அந்த மக்கள் அவர்களைக் கொன்று தின்றுவிட்டனர். மிஷனரிகள் இருவரையும் ஏற்றி வந்த கப்பல் இன்னும் கடற்கரைக்கு அருகிலேயே நின்று கொண்டிருக்க இந்த பயங்கரமான காரியம் நடந்து முடிந்தது. இந்த சம்பவம் நடந்து 48 ஆண்டுகள் சென்ற பின்னர் மிஷனரி ஜாண் பேட்டன் இவ்விதமாக எழுதினார் "இந்தவிதமாக நியூ ஹெப்ரீடிஸ் தீவுக்கூட்டம் இரத்தசாட்சிகளின் இரத்தத்தால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு இயேசு கிறிஸ்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டார். இப்பொழுது இந்த தீவுக்கூட்டம் முழுமையும் ஆண்டவர் இயேசுவுக்குச் சொந்தம் என்று முழு உலகமே கண்டு கொண்டு விட்டது" என்று களிகூருதலுடன் எழுதினார்.

 
எனது இளம் பிராயம்

ஸ்காட்லாந்து தேச மக்களால் "தென் பகுதியின் ராணி" என்று அழைக்கப்படும் தெற்கு ஸ்காட்லாந்து டம்பிரைஸ் நகரில் நான் என் இளம் பருவத்தை கழித்தேன். நான் அங்குள்ள பிராட் என்ற பண்ணையில் ஒரு சிறிய வீட்டில் 1824 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாள் பிறந்தேன். என்னுடைய தந்தை ஜேம்ஸ் பேட்டன் காலுறைகள் செய்யும் தொழிலைச் சிறிய அளவில் செய்தார். எனது பெற்றோர்கள் அந்தப் பண்ணையின் சொந்தக்காரர்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்ததால் அவர்களின் மகனின் பெயரான ஜாண் கிப்ஸன் என்ற பெயரையே எனக்கும் சூட்டினார்கள். நானும் அந்தப் பண்ணை வீட்டில் தத்தித் தத்திச் சென்று அவர்களது பாசத்துக்குரியவனானேன்.

நான் ஐந்து வயதை அடைந்தபோது எனது பெற்றோர் லாக்கர்பைக்குச் செல்லும் வழியில் இருந்த மிகவும் பழமையான டார்தர்வால்ட் என்ற கிராமத்திற்கு வந்து அந்த இடத்தில் குடியேறினார்கள். அங்கு பலவகையான தொழில் செய்பவர்கள் இருந்தபடியால் அந்த கிராமம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருந்தது. இந்த அருமையான கிராமச் சூழலில் எனது பெற்றோர் நாற்பது ஆண்டு காலம் வாழ்ந்தார்கள். இங்கு அவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. 6 சகோதரிகளும் 5 சகோதரர்களுமாக நாங்கள் மொத்தம் 11 பிள்ளைகள். எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று அறைகள். ஒன்று சமையல் செய்யவும், உணவருந்தவும் சமயத்தில் படுக்கையறையாகவும் பயன்பட்டது. மற்றொன்று எனது தந்தையின் காலுறைகள் செய்யும் தொழிற்கூடமாக இருந்தது. இவை இரண்டுக்கும் இடையில் ஒரேயொரு படுக்கையும் சிறிய மேஜையும் நாற்காலியும் போடும்படியாக ஒரு சிறிய அறை இருந்தது. அதுவே எங்கள் வீட்டில் மகா பரிசுத்த ஸ்தலமாக விளங்கியது.

பொதுவாக ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தை பல தடவைகள் அந்த அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்ளுவது வழக்கம். முற்காலத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரதான ஆசாரியன் எப்படி மக்களின் பாவங்களுக்காக வேண்டிக்கொண்டானோ அதுபோல எங்களுக்காக ஜெபிப்பதற்காக எங்கள் தந்தை அந்த அறைக்குள் சென்றார் என்பதை பிள்ளைகளாகிய நாங்கள் அறிந்திருந்தோம். எங்களுடைய இரட்சிப்பிற்காக அவர் நடுங்கும் குரலில் மன்றாடும் ஜெபத்தைக் கேட்கும்போது அந்த ஜெபத்திற்கு தடை ஏதும் ஏற்பட்டுவிடாதபடி நாங்கள் எங்கள் வீட்டில் சந்தடியின்றி அமைதியாக நடப்போம். வெளி உலகத்தார் எங்கள் தந்தையின் புன்னகையின் இரகசியத்தை அறியாத போதும் நாங்கள் அதை அறிந்திருந்தோம். அது அவர் எப்போதும் தேவ சமூகத்தில் ஆண்டவரோடு வாழ்வதால் ஏற்படும் பிரதிபலிப்பேயாகும். ஒரு ஆலயத்திலோ அல்லது மலையின் உச்சியிலோ அல்லது பள்ளத்தாக்கிலோ ஒருபோதும் கண்டுகொள்ளப்படாத தேவப்பிரசன்னத்தையும், தேவன் மக்கள் மத்தியில் பேசுவதையும், சஞ்சரிப்பதையும் எங்கள் எளிய வீட்டின் கூரையின் கீழ் உணர முடிந்தது. அதின் காரணமாக நரமாமிச பட்சிணிகளான காட்டுமிராண்டிகளின் நடுவில் கொடிய ஆபத்துக்களில் சிக்கித் தவித்த ஒவ்வொரு சமயத்திலும் கர்த்தர் என்னை ஒருக்காலும் கைவிடமாட்டார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எங்கள் வீட்டின் சிறிய அறைக்குள் என் பக்தியுள்ள தகப்பனார் தனது பரிசுத்த ஸ்தலமாகிய அந்த இடத்தில் தேவனை நோக்கி கதறிய கதறுதல்களின் எதிரொலிப்பை நான் கேட்கச் செய்யும். அதினால், என் தகப்பனார் தேவனோடு நடந்ததுபோல என்னால் ஏன் நடக்கக் முடியாது என என் ஆத்துமாவை தைரியம் கொள்ளச் செய்யும்.

 
நான் பெற்றுக்கொண்ட கல்வி

எனது பாலிய பருவத்தில் எங்கள் டார்தர்வால்ட் கிராமத்தில் ஸ்காட்லாந்து தேசத்தின் பழம் பெரும் திருச்சபை பள்ளிக்கூடங்களில் ஒன்று இருந்தது. அங்கே ஏழையும், செல்வந்தனும் பூரண சமமாக மதிக்கப்பட்டனர். அந்தப் பள்ளியில் கர்த்தருடைய பரிசுத்த வேதாகமமும், ஞானோபதேச வினாவிடையும் (Catechism) மற்ற முக்கியமான பள்ளிப் பாடங்களைப்போல பிரதான முக்கியத்துவத்துடன் கற்றுக் கொடுக்கப் பட்டது. ஏழை எளிய வீடுகளிலிருந்து வந்த மாணாக்கர் அந்தப் பள்ளியில் லத்தீன், கிரேக்கு, கணிதம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து நேரடியாக சர்வ கலாசாலை வகுப்புகளில் போய் கல்வி கற்கும் தகுதியைப்பெற்றனர். நானும் எனது ஆரம்பக் கல்வியை அந்தப் பள்ளியில்தான் கற்றதுடன் எனக்குப் பின்னர் எனது சகோதரர்களும், சகோதரிகளும் கூட அந்தப் பள்ளியிலேயேதான் பயின்றனர். எனது உடன் பிறந்த சகோதரன் வில்லியம் அந்தப் பள்ளியிலேயே படித்து தனது 14 ஆம் வயதில் கிளாஸ்கோவிலுள்ள சர்வகலாசாலையில் போய்ச் சேர்ந்தான்.

எனது வகுப்பு ஆசிரியர் ஸ்மித் என்பவர் பாடங்களை சரியாக ஆயத்தம் செய்யாத மாணவர்களை கொடூரமாக, சொல்லப்போனால் மிருகத்தனமாக அடித்து தண்டிப்பார். ஆனால், மிகவும் இரக்க குணமும் உள்ளவர். எனக்கு போடுவதற்கு பேண்ட், சேர்ட் இல்லாததை அறிந்த அவர் அவைகளை வாங்கி ஒரு நாள் இரவு எங்கள் குடும்ப ஜெபத்தில் எனது தகப்பனார் உள்ளம் உருகி தனது தேவைகளை ஆண்டவருக்கு ஜெபத்தின் மூலமாக தெரிவித்துக்கொண்டிருந்த வேளையில் மெதுவாகக் கதவைத் திறந்து வந்து அந்த துணிப் பொட்டலத்தை வைத்துவிட்டு நழுவிவிட்டார். அதை எனது பெற்றோர் என்னிடம் சொல்லவில்லை. நான் அடுத்து வந்த நாளில் அவருடைய வஸ்திரங்களைப் போட்டுக்கொண்டு வகுப்புக்குச் சென்ற போது அவர் என்னை மலர்ந்த முகத்துடன் வரவேற்று "ஜாண், உனக்கு ஏதாவது தேவைப்படுமானால் உனது அப்பாவிடம் சொல்லி தேவனிடம் ஜெபிக்கச் சொல்லு. அவர் ஜெபம் கேட்டு வேண்டியதைத் தருவார்" என்று என்னிடம் சொன்னார். ஆனால் அவருடைய மிருகத்தனமான கண்டிப்பு காரணமாக அவருடைய இந்த நல்ல அன்பின் செயல்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாமல் போய்விட்டன. எனது வகுப்பு ஆசிரியர் ஸ்மித்தின் காட்டுமிராண்டித்தனமான அடிகளின் காரணமாக நான் எனது கல்வியை அத்துடன் முடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

 
தந்தையின் தொழிலுக்கு திரும்பினேன்.

நான் இன்னும் 12 வயதினனான சிறுவனாக இருக்கையிலேயே எனது தகப்பனாரின் காலுறைகள் செய்யும் தொழிலைக் கற்றேன். அதில் நான் சிறப்பான முன்னேற்றமும் காண்பித்தேன். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நாங்கள் குடும்பமாக இந்த தொழிலில் ஈடுபட்டிருந்தோம். காலை, மத்தியானம், இரவு சாப்பாட்டு இடை வேளைகளில் எனக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களை லத்தீன், கிரேக்க மொழிகளின் அடிப்படைப் பாடங்களை நான் கற்றதுடன் எனக்கு கிடைத்த ஓய்வு நேரங்களை எல்லாம் முழுமூச்சோடு புத்தகங்களில் செலவிட்டேன். காரணம், நான் என் இருதயத்தை ஆண்டவருக்கு முற்றுமாக ஒப்புக்கொடுத்தவனாக தேவனுடைய சிலுவையின் மிஷனரியாகயாகவோ அல்லது ஒரு சுவிசேஷ ஊழியனாகவோ ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டேன். காலுறைகள் செய்யும் தொழிலில் நான் செலவிட்ட காலங்கள் நான் மிஷனரியாக சென்ற இடங்களில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

 
தேவ பக்தனான எனது தந்தையின் ஜெபங்கள்

எனது பக்தியுள்ள தகப்பனாரின் ஜெபங்கள் என்னை எவ்வண்ணமாக ஆவிக்குள் பரவசப்படுத்திவிட்டன என்பதை என்னால் விவரிக்கவும் இயலாது, அப்படியே விவரித்தாலும் மற்றவரால் அதைப் புரிந்து கொள்ளவும் இயலாது. எனது தந்தை முழங்கால்களில் நிற்கும் வேளைகளில் நாங்கள் எல்லாரும் அவரைச் சூழ்ந்து முழங்கால்களில் நிற்போம். தேவனை அறியாமல் இருளான இடங்களில் வாழ்கின்ற அஞ்ஞானிகள் ஆண்டவர் இயேசுவை கண்டு கொள்ள வேண்டும் என்ற உள்ளத்தின் பாரத்தோடும், அங்கலாய்ப்போடும் அவர் கண்ணீரோடு ஏறெடுக்கும் ஜெபங்கள் அத்தனை உணர்ச்சிவசமாக இருக்கும். ஜெபம் முடிந்ததும் நான் எனது தந்தையின் முகத்தை கூர்ந்து நோக்குவேன். ஆ, தேவனுடைய பிரசன்னம் அவரது முகத்தில் அப்படியே படர்ந்திருக்கும். அவருடைய ஆத்தும தாகம் கொண்ட ஜெபங்களுக்கு மறுமொழியாக நானே ஒரு மிஷனரியாக அஞ்ஞானிகளின் மத்தியில் செல்ல வேண்டும் என்று நான் தீர்மானிப்பேன்.

 
பரத்திலிருந்து வந்த உதவி்

எனது பக்தி வாழ்வில் ஆழமான ஒரு அனுபவத்தை என்னில் உண்டாக்கிய ஒரு சம்பவத்தை நான் இங்கு கட்டாயம் சொல்லியே ஆகவேண்டும். நாங்கள் வாழ்ந்த இடத்தில் எங்களுடன் வாழ்ந்த மற்ற ஏழை குடியானவர்களைப்போன்றே நாங்களும் ஆழ்ந்த துயரங்களுக்குள் மூழ்கிய நாட்களும் இருந்தன. உருளை கிழங்கு விளைச்சல் ஏமாற்றம் அளித்த நாட்களிலும், இதர தானிய பயிர்கள் பொய்த்த போதும் நாங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டோம். எனது தந்தை வேலையினிமித்தமாக ஹாவிக் என்ற இடத்திற்குப் போய்விட்டார். அடுத்த நாள் மாலையில்தான் உணவுப் பொருட்களோடும், பணத்தோடும் திரும்பி வருவார். இதற்கிடையில் வீட்டில் பானையின் மாவும், கலயத்தின் எண்ணெயும் கொஞ்சம் கூட எடுக்க முடியாத அளவிற்கு தாழ்ந்து போய்க் கிடந்தது. எனது பக்தியும், விவேகமும் உள்ள என் அருமைத் தாயார் சமையல் அறையின் முழுமையான வறட்சியை பிள்ளைகளாகிய நாங்கள் எந்த ஒரு நிலையிலும் கண்டு கொண்டு எங்காவது தவறுதலாக உதவி கேட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக எங்களை நேர்த்தியாக சமாளித்து அடுத்த நாள் காலையில் தேவன் எப்படியாவது ஏராளமும், தாராளமுமாக உதவி அனுப்பி வைப்பார் என்றும், அவரிடமே எங்களது அனைத்து தேவைகளையும் அம்மா சொல்லிவிட்டதாகவும் கூறி எங்களை தூங்க வைத்துவிட்டார்கள்.

அம்மாவின் வார்த்தையின்படியே அடுத்த நாள் பரத்திலிருந்து உதவி வந்தது. ஆம், எங்களின் நெருக்கடியை சிறிதும் அறியாத என் தாயின் தகப்பனார் லாக்கர்பை என்ற இடத்திலிருந்து தனது மகளுக்கு வெகுமானங்களை அனுப்பி இருந்தார்கள். அப்பொழுதுதான் நிலத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஒரு சாக்குப்பை நிறைய உருளைக் கிழங்கு, வேண்டிய அளவு தானிய மாவு, வீட்டில் தயாரிக்கப்பட்ட பாலாடைக்கட்டிகள் எல்லாம் வந்து சேர்ந்தன. அவை எங்கள் தேவைக்கு சில நாட்களுக்குப் போதுமானதாக இருந்தது. தனது ஜெபத்துக்கு உத்தரவாக தனது ஆண்டவரிடமிருந்து தக்க சமயத்தில் வந்த பொருட்களை கண்டு அதிசயித்தவர்களாக எனது தாயார் எங்களை எல்லாம் தனக்கருகில் அழைத்து தன்னைச் சுற்றிலும் முழங்காலூன்றச் செய்து "ஆ என் அருமைக் குழந்தைகளே, உங்கள் பரலோக தேவனை அதிகமாக நேசியுங்கள். உங்கள் வாழ்வின் தனிப்பட்ட தேவைகள் அனைத்தையும் உண்மையான விசுவாசத்தோடு அவருக்குச் சொல்லுங்கள். அவர் தமது நாமத்திற்கு மகிமையாக தப்பாது உங்கள் ஜெபங்களுக்குச் செவி கொடுப்பார்" என்று கூறினார்கள்.

 
கல்வி மேல் இருந்த எனது தணியாத ஆர்வம்

வீட்டில் நான் கஷ்டப்பட்டு தயாரித்த காலுறைகள் மூலமாக சம்பாதித்த பணம் டம்பிரிஸ் பல்கலைக்கழகத்தில் ஆறு வார காலம் மட்டுமே படிப்பதற்குப் போதுமானதாக இருந்தது. எனவே, படிப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக வேறொரு வேலையை நான் தேடினேன். அப்படியே ஸ்காட்லாந்து தேச நில அளவைத் துறையில் எனக்கு வேலை கிடைத்தது. அது ராணுவ நிர்வாகத்துக்கு கட்டுப்பட்ட ஒரு வேலையாகும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நான் அந்த வேலையை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து 4 மைல்கள் தூரம் நான் நடந்து அந்த வேலை இடத்துக்குச் சென்றேன். அப்படியே மாலையில் அந்த தூரத்தை நடந்து வீட்டுக்கு வந்தேன். போகிற வருகிற வழியிலும் நான் படித்துக்கொண்டுச் சென்றேன். மதிய இடைவேளையிலும் எனக்கு ஓய்வு நேரம் கிடைத்தது. எனது சக பணியாளர்கள் அந்த வேளையில் கால் பந்து மற்றும் இதர விளையாட்டுகளில் தங்கள் நேரங்களை செலவிட்டனர். நானோ, அந்த நேரத்தை அங்கிருந்த "நீத்" என்ற நதிக்கரையில் அமைதியான ஓரிடத்திற்குச் சென்று அங்கமர்ந்து எனது பாடங்களை ஆழ்ந்து படிக்கலானேன். எனது ராணுவ உதவி தளபதி நான் இவ்விதமாக படிப்பதை தனது வீட்டிலிருந்து பார்த்துக் கொண்டே இருந்திருக்கின்றார். ஒரு நாள் அவர் என்னை தனது அலுவலகத்துக்கு அழைத்து நான் படிப்பதைக் குறித்து என்னிடம் விசாரித்தார். நான் எனது வீட்டின் ஏழ்மை நிலையையும், படிப்பின் மேல் உள்ள எனது ஆர்வத்தையும் திறந்த உள்ளத்தோடு அவரிடம் கூறினேன். நான் சொன்னதை எல்லாம் அவர் கவனமாகக் கேட்டுவிட்டு தனது சக அதிகாரிகளுடன் ஆலோசனை கலந்துவிட்டு கொஞ்ச நாட்களுக்குப்பின்னர் அவர் என்னை தனது அலுவலகத்துக்கு திரும்பவுமாக அழைத்து எனது வேலையில் எனக்கு பதவி உயர்வு அளிப்பதாகவும், அரசாங்க செலவில் "உல்விச்" என்ற இடத்தில் எனக்கு விசேஷ பயிற்சி அளிக்க முடிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். ஆனால், நான் 7 ஆண்டு காலங்கள் தொடர்ச்சியாக அந்த பணியை செய்ய வேண்டும் என்றும் என்னைக் கேட்டுக்கொண்டார். நான் அவருக்கு என் முழு மனதுடன் எனது நன்றியை தெரிவித்துவிட்டு 3 அல்லது 4 ஆண்டு காலங்கள் மட்டுமே அந்தப் பணியை என்னால் செய்ய இயலும் என்றும் ஏழு ஆண்டு காலங்கள் ஒருக்காலும் செய்ய இயலாது என்றும் சொன்னேன்.

எனது பதிலைக்கேட்ட அவர் ஆச்சரியப்பட்டு "நான் கொடுக்கும் இப்படிப்பட்ட அருமையான வேலை வாய்ப்பை ஏற்க நீ மறுப்பதன் காரணம் என்ன? எத்தனையோ மேன் மக்களின் புதல்வர்கள் கூட இந்த அற்புத வேலை வாய்ப்புக்காக ஆவலாக காத்திருக்கின்றார்களே" என்று என்னிடம் கேட்டார்.

"எனது வாழ்க்கையை வேறொரு எஜமானருக்கு நான் கையளித்து விட்டேன். எனவே 7 (ஏழு) ஆண்டு காலம் தொடர்ச்சியாக நான் இந்த வேலையை செய்ய இயலாது" என்று அவரிடம் கூறினேன்.

"உன்னுடைய அந்த எஜமானன் யார்?" என்று அவர் என்னைப் பார்த்து சுறுக்கென்று கேட்டார்.

""கர்த்தராகிய இயேசு கிறிஸ்து" என்ற எஜமானருக்கு நான் எனது வாழ்வை அர்ப்பணித்து விட்டேன். அவரது சேவைக்காக நான் என்னை ஆயத்தம் செய்து கொண்டு விரைவில் தேவனுடைய சுவிசேஷத்தை நான் பிரசங்கிக்க வேண்டும்" என்று கூறினேன்.

எனது பதிலைக்கேட்ட அவர் மிகுந்த கோபாவேசத்துடன் அந்த அறையின் குறுக்காக பாய்ந்தவராக "எனது நல்ல வாய்ப்பை ஏற்றுக்கொள், இல்லையேல் நீ உடனே வேலையிலிருந்தே வெளியேற்றப்படுவாய்" என்று சொன்னார்.

நான் எனது பழைய நிலையையே அவரிடம் சொன்னபோது உடனே எனது பணிக்கான சம்பளத்தை உடனே கொடுத்து எனது வேலையிலிருந்து அந்நிமிஷமே விலக்கிவிட்டார். நான் அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு உடனே புறப்பட்டுவிட்டேன். நான் அங்கிருந்து புப்பட்ட சமயம் அங்குள்ள சில ரோமன் கத்தோலிக்க அதிகாரிகள் காதுகொடுத்து கேட்க முடியாத மிகவும் அருவருப்பான தூஷண வார்த்தைகளால் என்னை ஏசினார்கள். நான் அதை அன்போடு பொறுத்துக்கொண்டு அவர்களுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறினேன்.

நான் கடந்து வந்த கண்ணீரின் அனுபவத்தைக் கேள்விப்பட்ட டம்பிரைஸ் பல்கலைக்கழக வேந்தர் மாக்ஸ்வெல் அவர்கள் தனது பல்கலைக்கழகத்தில் எந்த ஒரு கட்டணமுமின்றி இலவசமாக படிப்பதற்காக என்னை அழைத்தார்கள். ஆனால் மற்ற செலவுகளுக்கு நான் பணம் கொடுக்க வேண்டும். எனது தந்தைக்கு தொடர்ச்சியாக நான் பாரமாக இருக்கக்கூடாது என்பதற்காகவும், மற்ற சகோதரர்கள், சகோதரிகளையும் தந்தை படிப்பிக்க வேண்டும் என்பதற்காகவும் லாக்கர்பீ என்ற இடத்தில் தானிய அறுவடை வேலை செய்வதற்காகப் புறப்பட்டுச் சென்றேன்.

 
அறுவடைத் தொழிலாளி

நான் ஒரு பண்ணையின் அறுவடை நிலத்துக்குச் சென்றபோது அங்கு அறுவடை வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அந்தப் பண்ணையின் உரிமையாளர் நிலத்தில் அறுவடை செய்யப்பட்டுக் கிடந்த தானியப் பயிர்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டும்படியாக என்னைக் கேட்டுக்கொண்டார். நான் அப்படியே செய்தபோது நான் கட்டிய தானியக்கட்டை தனது கையினால் அவர் தூக்கிப்பார்த்தார். அவ்வளவுதான், அந்த தானியக்கட்டு முழுவதும் தனித்தனியாக சிதறுண்டு கீழே விழுந்தது. அவர் என்மீது எந்த ஒரு கோபமும் கொள்ளாமல் அதை எப்படியாகக் கட்ட வேண்டும் என்று எனக்குச் சொல்லித் தந்தார். திரும்பவும் நான் அவரது ஆலோசனைப்படி தானியக் கதிர்களை ஒன்றாகச் சேர்த்து அரிக்கட்டாகக் கட்டினேன். இப்பொழுது அவர் நான் கட்டின அரிக்கட்டை தனது கரத்தால் தூக்கிப்பார்த்து அதை அசைத்துப் பார்த்தார். ஆனால், கட்டு வலுமையாக அப்படியே இருந்தது. அவருடைய சந்தோசத்துக்கு அளவில்லை "அவ்வளவுதான், என் இளைஞனே, உனது வேலையைத் தொடர்ந்து செய்" என்று அவர் கூறினார்.

அது ஒரு கடினமான வேலையாக எனக்கு இருந்தது. எனது கைகள் இரண்டும் இரத்தக் கோர்வையாகிவிட்டது. எனினும் நான் எனது வேலையில் திடமாக முன்னேறினேன். கொஞ்ச நாட்களில் அங்கு பணி செய்த திறமையான அறுவடைப் பணியாளர்களில் நானும் ஒருவனாக விளங்கினேன். என்னோடு அறுவடை வேலை செய்த மற்ற வேலையாட்கள் நானும் அவர்களில் ஒரு அறுவடை தொழிலாளி அல்ல என்பதை கண்டு கொண்ட அவர்கள் என்னை ஒரு "சாயம் பூசுகின்றவன்" (Painter) என்று எண்ணிக்கொண்டனர். அவர்களில் சிலர் என்னை "தையல்காரன்" (Tailor) என்று முடிவெடுத்தனர். அவர்களில் திறமைசாலியான யூகிப்பாளர்கள் நான் தையல்காரனாக இருக்க முடியாது. காரணம், தொடர்ச்சியாக கத்தரிக்கோலை பயன்படுத்திய காய்ப்பு எனது பெரு விரலிலும் இதர விரலிலும் காணப்படவில்லை என்று அவர்கள் கண்டனர் ஒருக்கால் அவர்கள் என்னை ஒரு "துடைப்பம்" (Brush) என்ற அந்தஸ்தில் இனம் கண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

அறுவடைத் தொழிலாளிகள் அனைவருக்கும் இரவில் வைக்கோல் போரின் மேல் படுப்பதற்கு வரிசைக் கிரமமாக ராணுவ பாசறைகளில் உள்ளது போல படுக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. என்னைவிட வயது மூப்பான, முரடரான, நாகரீகமற்ற, கோபக்காரரான அவர்களுடன் நான் ஒன்றரக் கலந்து இரவில் இளைப்பாற துயரத்தோடு நான் யோசித்துக் கொண்டிருப்பதை பண்ணை வீட்டின் எஜமானி அம்மாவின் கூர்மையான கண்கள் துரிதமாகக் கண்டு கொண்டுவிட்டன. அவ்வளவுதான், மிகவும் இளவயதினான என்னைத் தன்னுடைய மகன் ஜியார்ஜ் உடன் தங்கள் வீட்டில் வந்து படுத்துக் கொள்ளும்படியாக என்னை அன்புடன் அழைத்தார்கள். அப்படியே அவர்கள் புதிதாக கட்டிய அந்த வீட்டில் நான் தங்கினேன்.

எனக்குக் கிடைத்த ஓய்வு மணி நேரங்களில் நான் தங்கியிருந்த பண்ணை வீட்டின் முன்பாக ஒரு அழகான பூந்தோட்டத்தை உருவாக்கினேன். எனது தாயாரிடமிருந்து நான் கற்ற தோட்டக் கலையை அங்கு நான் காண்பித்தேன். அந்த பண்ணை வீட்டார் அடைந்த மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. நான் அறுவடை வேலையை முடித்து அவர்களை விட்டு விடைபெறும்போது எனது அறுவடை பணிக்கான சம்பளத்துடன் ஒரு நல்ல அன்பளிப்பையும் அந்த அன்புள்ள மக்கள் எனக்குத் தந்து வழி அனுப்பிவைத்தனர்.

 
தேவ ஊழியத்தின் பாதையில்
கிளாஸ்கோ பட்டணம் நோக்கி்

கிளாஸ்கோ பட்டணத்தில் உள்ள பிரஸ்பிட்டேரியன் திருச் சபையில் சுவிசேஷ கைப்பிரதிகளை விநியோகிப்பதற்கும், ஓய்வுநாள் பள்ளி வகுப்புகளுக்கு வராமல் வீட்டில் இருந்து கொள்ளும் பிள்ளைகளை சந்தித்து அவர்களை வகுப்பில் கலந்து கொள்ளத் தூண்டுவதற்கும் ஒரு இள வயது வாலிபன் தேவை என்றும், தெரிவு செய்யப்படும் நபருக்கு ஒரு ஆண்டு கால இலவச வேதாகம கல்வி அளிப்பதுடன் ஆண்டுக்கு 50 பவுண்டுகள் சம்பளம் கொடுக்கப்படும் என்றும் விளம்பரப் படுத்தியிருந்தார்கள். அந்த தேவ பணிக்கு விண்ணப்பிக்கும் வாலிபர் தாங்கள் விரும்பிய எந்த ஒரு தலைப்பிலும் தங்கள் சொந்தக் கரங்களால் ஒரு கட்டுரை எழுதி தங்கள் விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர். எனக்கு கட்டுரை எழுதுவது என்பது மிகவும் கடினமாக இருந்தபடியால் கடந்த கால ராட்சத பக்த சிரோன்மணிகளைக் குறித்து இரண்டு நீண்ட கவிதைகள் எழுதி எனது விண்ணப்பத்துடன் அனுப்பியிருந்தேன். அந்தக் கவிதை திருச்சபை தேர்வு கமிட்டியினரின் உள்ளத்தை நன்கு தொட்டிருக்கும் என்று நினைக்கின்றேன். உடனடியாக எனது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நான் கிளாஸ்கோ வந்து சேரும்படியாக கேட்டுக் கொள்ளப்பட்டேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் எனது அமைதியான கிராமத்தை விட்டு கிளாஸ்கோ பட்டணம் நோக்கி பிரயாணப்பட்டேன். டார்தர்வால்ட் என்ற எங்கள் கிராமத்திலிருந்து கில்மார்நாக் வரை 40 மைல்கள் தூரத்தை நான் கால்நடையாகவும், அங்கிருந்து கிளாஸ்கோ பட்டணத்திற்கு இரயிலிலும் நான் செல்ல வேண்டும். அந்த நாட்களில் இரயில்கள் அதிகமாக கிடையாது. எனது கிராமத்திலிருந்து 40 மைல்கள் தொலைவை வறுமை காரணமாக நான் குதிரை வண்டியில் செல்ல இயலாமல் கால் நடையாக நடக்க வேண்டியதானது. எனக்குள்ள எனது அற்பமான உடமைகளை எனது அருமை வேதாகமத்துடன் ஒரு துண்டு துணியில் சுற்றிக் கட்டிக்கொண்டு எனது நீண்ட பிரயாணத்தை தொடங்கினேன். "நான் உனது தரித்திரத்தை அறிவேன். ஆயினும் நீ ஐசுவரியவான்" என்று சொன்னவரின் வாக்கை என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

எனது பாசமுள்ள தந்தை எனது 40 மைல்கள் கால் நடைப் பயணத்தில் ஆரம்ப 6 (ஆறு) மைல்கள் தூரம் என்னோடு கூட நடந்து வந்தார்கள். என்னுடைய அந்த பிரிவு பிரயாணத்தில் அவர்கள் எனக்களித்த தேவ ஆலோசனைகள், கண்ணீர்கள், பரலோக சம்பாஷணை யாவும் நேற்று நடந்த நிகழ்ச்சி போல எனக்குத் தெரிவதுடன் அந்த ஞாபகம் எனக்கு வரும்போதெல்லாம் அன்று வடித்த கண்ணீரைப் போல இன்றும் கண்ணீரை வடிக்கின்றேன். எங்கள் ஒன்றான (ஆறு) 6 மைல்கள் தூர பிரயாணத்தில் கடைசி அரை மைல் தூர நடை பயணத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் அமைதியாகவே நடந்து சென்றோம். எனது தந்தையின் வழக்கப்படி அவர் தனது தலைக் குல்லாவை பெரும்பாலும் தனது கரத்திலேயே வைத்துக் கொண்டு நடந்ததால் எனது தந்தையின் பொன் நிற தலை முடி ஒரு பெண்ணின் தோளில் கிடந்து புரள்வது போல காற்றில் அங்கும் இங்கும் புரண்டு கொண்டிருந்தது. அவருடைய உதடுகள் அமைதியாக எனக்காக தேவனிடத்தில் ஜெபதூபம் ஏறெடுத்துக் கொண்டே இருந்தது. நான் ஒவ்வொரு தடவையும் எனது தந்தையைப் பார்த்தபோது அவரது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் எனது தகப்பனார் எனது கரங்களை இறுகப்பிடித்து ஒரு நிமிட நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் "மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பார். அவர் உன்னை வர்த்திக்கப்பண்ணி, எல்லா தீமையினின்றும் அவர் உன்னை விலக்கிப் பாதுகாப்பார்" என்று கூறினார்கள். அதற்கு மேல் அவர்களால் பேச முடியாத நிலையில் அவரது உதடுகள் அமைதியான ஜெபத்தை ஏறெடுத்துக் கொண்டே இருந்தது. பின்னர் நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து இருவர் கண்களிலும் கண்ணீர் வடிய விடைபெற்றுக்கொண்டோம். நான் சற்று வேகமாக முன்னோக்கி ஓடி பின்நோக்கிப் பார்த்தேன். எனது தந்தை நாங்கள் பிரிந்த இடத்திலேயே இன்னும் நின்று கொண்டிருந்தார்கள். நான் எனது தொப்பியை உயர்த்தி அசைத்து அவர்களுக்கு காண்பித்து எனக்கு முன்னாலுள்ள வளைவான பாதையில் திரும்பி அங்கிருந்த ரஸ்தாவின் பாலத்தில் ஏறி எனது தந்தையைப் பார்த்தேன். என்னைப்போலவே எனது தந்தையும் ஒரு உயர்ந்த பகுதியில் நின்று கொண்டு என்னைக் கவனிப்பதை நான் பார்த்தேன். ஆனால் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை. பின்னர் எனது கண்களில் கண்ணீர் வடிய வடிய என் வழியே போனேன். இப்படிப்பட்ட பரிசுத்தமும், அன்புமான தந்தையை நமது வாழ்வின் எந்த ஒரு செயலாலும் ஒருக்காலும் துன்புறுத்திவிடவே கூடாது என்ற உறுதியான தீர்மானத்தோடு நான் நடந்தேன்.

மூன்றாம் நாள் நான் கிளாஸ்கோ பட்டணம் வந்து சேர்ந்தேன். எனக்கு சம அந்தஸ்தில் மற்றொரு இளைஞனும் அதே சுவிசேஷ பணிக்கு விண்ணப்பித்திருந்தபடியால் எங்கள் இருவரையும் வேலைக்கு எடுத்துக்கொண்டு எங்களுக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த சம்பளத்தை அதாவது 50 பவுண்டுகளை இருவரும் சரி சமமமாக பங்கிட்டுக்கொள்ள சபைக் கமிட்டியினர் எங்களைக் கேட்டுக் கொண்டனர். தேவனுடைய வேலையானதால் நாங்கள் எந்த ஒரு மறுப்பில்லாமல் அவர்களுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தோம். எங்களுக்கு இலவசமாக இறையியல் கல்வியும் அளிக்கப்பட்டது. நாங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இராப்பகலாக எங்கள் பாடங்களை கண்ணுறக்கமின்றிப் படித்தோம்.

பணப்பற்றாக் குறை காரணமாக நல்ல சத்தான ஆகாரங்களை நாங்கள் வாங்கி சாப்பிட முடியாமல் கடும் இன்னலுற்றோம், அதின் காரணமாக அந்த ஆண்டு முடிவதற்குள்ளாகவே நாங்கள் இருவரும் உடல் நலம் குன்றினோம். நான் காச நோயால் பாதிக்கப்பட்டேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் எனது பெற்றோர்களிடம் சென்று தங்கினேன். எங்கள் ஊர் மலைக்காற்றினாலும், எங்கள் வீட்டு பசும்பாலினாலும் தேவ பெலத்தால் நான் பாதுகாக்கப்பட்டேன். ஆனால், துக்ககரமான காரியம் என்னுடன் இணைந்து பணி புரிந்த சகோதரன் அப்படியே நோய் பாதிப்புக்குள்ளாகி மரித்துப் போனார்கள்.

 
கிளாஸ்கோவின் சேரிப்பகுதி ஊழியங்கள்

கிளாஸ்கோ நகர மிஷனரி ஸ்தாபனத்திற்கு நான் ஒரு மிஷனரியாக பணிபுரிய விண்ணப்பித்திருந்தேன். எனது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு நான் உடனே பணியில் சேர கேட்டுக்கொள்ளப் பட்டேன். அதின்படி நான் கிளாஸ்கோவின் சேரிப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு மிஷனரியானேன்.

அந்த கிளாஸ்கோ சேரிப் பகுதி மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுக்குள்ளே குடிவெறி, விபச்சாரம், வேசித்தனம், போன்ற அனைத்துப் பாவங்களும் குடிகொண்டிருந்தன. அந்த இடங்களில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள் ஆண்டவருடைய தேவாலயங்களுக்குச் சென்று 10, 16, 20 ஆண்டுகள் கூட ஆகியிருந்தது. அந்த ஏழை மக்களை திருச்சபையின் குருவானவர்கள் ஒருக்காலும் வந்து சந்திப்பதே கிடையாது. அவர்களுக்குள்ளே தேவனற்ற நாஸ்தீகர்களும், குடிகாரர்களும், ரோமானியர்களும் (கத்தோலிக்கர்களும்) இணைந்து வாழ்ந்து எல்லாப் பாவங்களுக்கும் உடந்தையாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இப்படிப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களை தேவனுடைய மந்தைக்குள் கொண்டு வருவதே எனக்குக் கொடுக்கப்பட்ட பணியாக இருந்தது. எனது ஒரு ஆண்டு கால கடினமான உழைப்புக்குப் பின்னர் ஆறு அல்லது ஏழு பேர்கள் மாத்திரம் ஒழுங்காக ஆண்டவருடைய ஆலயத்துக்குச் செல்லலானார்கள். அதே எண்ணிக்கையிலான மக்கள் வாரந்தோறும் ஒரு மாலைப் பொழுது ஒரு வீட்டில் கூடி ஒழுங்காக ஜெபித்தார்கள். அந்த வீட்டில் வாழ்ந்த பெண்மணி தனது பொல்லாத குடிகார கணவனால் விபச்சார வாழ்க்கைக்கு பலவந்தமாகத் தள்ளப்பட்டிருந்தாள்.

எனது ஊழியத்தில் சிறப்பான முன்னேற்றம் எதுவும் காணப்படாததால் என்னை அடுத்த மாவட்டத்திற்கு மாற்ற என்னை பணியில் அமர்த்திய கமிட்டியினர் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் நான் ஏழை எளிய மக்கள் மத்தியில் விதைத்த ஜீவ விதைகள் முளைத்துப் பலன் தர சற்று கூடுதலான நாட்கள் எடுத்துக் கொள்ளும். அதற்கப்பால் நீங்கள் ஆசீர்வாதமான அறுவடையை காண்பீர்கள். எனவே இன்னும் ஆறு மாத காலங்கள் எனக்கு தவணை கொடுங்கள் என்று கெஞ்சினேன். அதற்கு கமிட்டியினர் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தனர்.

அதற்கப்பால் எனது கூட்டங்களில் மக்களின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது. நான் அந்த ஏழை எளிய மக்கள் பால் எவ்வளவு கரிசனை உள்ளவனாக இருக்கின்றேன் என்றும் என்னை அங்கிருந்து விலக்கிக் கொள்ளப் போகின்றார்கள் என்பதை அந்த மக்கள் அறிந்தவுடன் தங்களுக்கு அறிமுகமானவர்கள் யாவரையும் தங்களுடன் எனது கூட்டங்களுக்கு அழைத்து வந்தனர்.

எனது ஊழியங்கள் தேவ பெலத்தால் ஆசீர்வாதமான பலனைக் கொடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு ஓய்வு நாளின் காலை 7 மணிக்கு நான் வேதபாட வகுப்பு எடுத்தேன். இந்த மிகவும் பயனுள்ள வகுப்புக்கு மிகவும் பரம ஏழை எளிய மக்களாக 70 முதல் 100 பேர் வரை கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றனர். இளவயது பெண்கள், வாலிபர்கள் போன்றோர் இதில் கலந்து கொண்டனர். உடுத்துவதற்கு தனிப்பட்ட வஸ்திரங்கள் எதுவும் இல்லாமல் தங்களது அன்றாடக உபயோகத்தில் பயன்படுத்திய வஸ்திரங்களையே ஆரம்பத்தில் உடுத்து வந்தனர். பெண் பிள்ளைகளுக்கு தங்கள் தலையை மறைக்க வஸ்திரம் கிடையாது. சிலருக்கு காலில் போட செருப்புகள் கூட கிடையாது.

என்ன ஆச்சரியம்! அந்த ஏழை பிள்ளைகள் எனது வேதபாட வகுப்புகளில் ஒழுங்காக வந்து கலந்து கொள்ள, கலந்து கொள்ள நாளடைவில் அவர்களுக்கு செருப்புகள் கிடைத்தன, ஒரு வஸ்திரத்தோடு வந்த அவர்களுக்கு கூடுதலாக மற்றொரு துணி கிடைத்துக்கொண்டது, பெண் பிள்ளைகள் பலருக்கும் தங்கள் தலையை மறைத்துக் கொள்ள மெல்லிய துப்பட்டாக்கள் கிடைத்தன. நாளடைவில் அவர்கள் தங்களுடைய அழகான ஆடைகளுடன் எனது வேதபாட வகுப்புகளில் கலந்து கொண்டனர்.
நான் கர்த்தருடைய பெலத்தால் எடுத்த வேதபாட வகுப்புகள் எனது எல்லா ஊழியங்களில் நான் கண்ட ஆனந்த மகிழ்ச்சிகளிலும் தலை சிறந்த மகிழ்ச்சியாக எனக்கு இருந்தது. எனினும், அதற்கு அயராத உழைப்பும், ஜெபங்களும் தேவையாக இருந்தது. ஓய்வு நாளின் காலையிலேயே நான் எழுந்து தெருத் தெருவாகச் சென்று ஒவ்வொரு வீட்டின் கதவைத் தட்டி தூங்கிக் கொண்டிருக்கும் கண்மணி செல்வங்களை வேதாகம வகுப்புக்கு வரும்படியாக அவர்களுடைய தூக்கத்திலிருந்து எழுப்பி அவர்களை ஆயத்தப்படுத்துவது எனக்கு அவசியமாகக் கண்டது. நாளடைவில் எனது இந்த பணியை எனது வேதபாட வகுப்புகளுக்கு வந்து கலந்து கொண்ட பெரிய ஆண், பெண் பிள்ளைகள் தங்கள் பொறுப்பில் எடுத்துச் செய்தனர்.

ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை இரவிலும் பெரியதோர் வேதபாட வகுப்பை நான் நடத்தினேன். அது வேதாகமத்தை வாசித்து அதின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஒன்றாகும். அந்த வகுப்பில் வயது வித்தியாசமின்றி ஆண் பெண் இரு பாலரும் வந்து கலந்து கொண்டனர். புதன் கிழமை மாலை யாவரும் கலந்து கொள்ளும் விதத்தில் ஜெபக்கூட்டம் நடத்தினேன். அந்த ஜெபக்கூட்டங்களில் தேவாலயத்தின் பாதி பகுதி நிரம்பும் அளவிற்கு மக்கள் வந்து கலந்து கொண்டனர். தேவனுடைய வார்த்தையிலிருந்து ஒரு பகுதியை வாசித்து அந்தப் பகுதியை தேவ ஒத்தாசையால் தேவ ஜனத்திக்கு நான் விளக்கிக் கூறினேன். அது அவர்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. வெள்ளிக் கிழமை தோறும் பாட்டு ஆராதனை நடத்தினேன். தேவாலயத்தில் பாடல்கள் பாடி கர்த்தரை ஆராதிக்க அந்த பாட்டு ஆராதனை ஒரு ஆயத்த ஆராதனையாக இருந்தது.

நான் பெருமைக்காக அல்லாமல் தேவனுடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன். கிளாஸ்கோ நகர மிஷனரி ஸ்தாபனம் தனது வரலாற்றில் கண்டிராத அளவு நான் நடத்திய வேதபாட வகுப்புகளுக்கும், பாட்டு ஆராதனைகளுக்கும் இதர கூடுகைகளுக்கும் 500 முதல் 600 பேர் வரை வாரந்தோறும் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றனர். எனது கூட்டங்களில் கலந்து கொண்ட மக்களை நான் ஒழுங்காக சந்தித்து, அவர்கள் விசுவாசத்திலிருந்து வழுகிவிடாமல் தேவனுடைய அன்பில் நிலைத்திருக்கவும், பாவத்திற்கு இடம் கொடாமல் தங்களைப் பரிசுத்தமாகக் காத்துக் கொள்ளவும் அவர்களைத் துண்டிக் கொண்டே இருந்தேன். அந்த மக்கள் கிளாஸ்கோ மாவட்டத்தை விட்டு வெளியிடங்களுக்குச் சென்றாலும் எங்காவது என்னைக் கண்டவுடன் உரத்த அன்பின் தொனியில் "என்னை உங்களுக்கு நினைவில் இருக்கின்றதா? நான் உங்கள் வேதபாட மாணாக்கன், எனது பெயர் இதுவாகும்" என்று கூறி கர்த்தருக்குள் ஆனந்தித்தனர்.

கிளாஸ்கோ நகர மிஷனரி ஸ்தாபனத்தினரின் கட்டளைப்படி நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் நான் வீடுகளைச் சந்திக்க வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால், நான் அந்த வேலைக்காக 8 மணி நேரத்தை தேவ பெலத்தால் செலவிட்டேன். எனது வேதபாட வகுப்புகளில் கலந்து கொள்ளும் வாலிபர்களும், வாலிபப் பெண்களும் தெருக்களில் சுவிசேஷ கைப்பிரதிகளை மக்களுக்குக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆண்கள் தனித்தும், பெண்கள் இருவர் இருவராகவும் அந்த வேலையைச் செய்தனர். மாதத்திற்கு 2 தடவைகள் அந்த சுவிசேஷ வேலையை அவர்கள் செய்தார்கள். எனது சுவிசேஷ பணியில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற ஐசுவரியவான்களான மக்களும், தொழில் அதிபர்களும் எனது வேதபாட வகுப்புகளில் கலந்து கொண்ட ஏழை எளியோருக்கும், கைப்பிரதிகளை விநியோகிப்போருக்கும் வேலை வாய்ப்புகளைக் கொடுக்க ஆவலாக இருந்தனர். கர்த்தருக்கு துதி ஏறெடுக்கின்றேன்.

கிளாஸ்கோ பட்டணத்திலுள்ள மதுபான கடைக்காரர்கள் எனக்கு சத்துருக்களாக இருந்தனர். காரணம், மதுபானம் அருந்துவதைக் குறித்தும், அதினால் ஏற்படும் கொடிய விளைவுகள் குறித்தும் நான் தெருக்கூட்டங்கள் நடத்திப் பிரசங்கித்தேன். முழுமையான மதுவிலக்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்று நான் போராடி வந்தேன். எனக்கு ஆதரவாக ஒரு பெருங்கூட்டம் மக்கள் என் பட்சத்தில் இருப்பதை நான் காண முடிந்தது.

 
கத்தோலிக்கர்களிடமிருந்து எனக்கு வந்த எதிர்ப்புகள்

கிளாஸ்கோ பட்டணத்தில் ரோமானியர்களான கத்தோலிக்கர்களும் அதிகமாக இருந்தனர். அந்த அன்பான மக்களில் பலர் என்னை அன்பாக தங்கள் வீடுகளுக்கு அழைத்து தேவனுடைய வார்த்தைகளை அவர்களுக்கு வாசித்து போதிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் என்னைக்கேட்டுக் கொண்டனர். எனது தொடர்ச்சியான இவ்வித பிரயாசங்களின் காரணமாக சில கத்தோலிக்கக் குடும்பங்கள் ஆண்டவருடைய இரட்சிப்புக்குள் வழிநடத்தப்பட்டனர். அப்படி இரட்சிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் கத்தோலிக்க ஆலயங்களுக்குச் செல்லுவதை நிறுத்திக் கொண்டனர். அத்துடன் அவர்கள் தங்கள் காணிக்கைகளை தங்கள் சபைகளுக்கோ அல்லது தங்கள் சாமியார்களுக்கோ கொடுக்காமல் அதை என்னிடம் கொடுத்து கர்த்தருடைய ஊழியத்தில் பயன்படுத்த என்னைக் கேட்டனர்.

இந்த நடபடிகளைக் கேள்விப்பட்ட மேல் இடத்திலுள்ள கத்தோலிக்கர்களிடமிருந்து எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. அதைக் குறித்து நான் அஞ்சாமல் எனது தேவப் பணியைத் தொடர்ந்தேன். ஒரு நாள் நான் தெருவில் சென்று கொண்டிருந்த சமயம் ஒரு கல் என் முகத்தில் என் கண்ணுக்கு அருகில் வந்து தாக்கியது. தெய்வாதீனமாக அது என் கண்ணைத் தாக்கவில்லை. இரத்தம் வடிந்து கொண்டிருந்த எனது காயத்தை உடனடியாக டாக்டர் சிகிட்சை அளித்து குணமாக்கினார். அந்த சம்பவத்துக்குப் பின்னரும் நான் தைரியமாக எனது தேவப் பணியை தொடர்ந்தேன். ஒரு தடவை நான் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கையில் மேலே மாடியிலிருந்து கொதி தண்ணீரை என்மேல் ஊற்றினார்கள். அதிலும் தேவ கரம் அற்புதமாக என்னைப் பாதுகாத்தது.

 
நான் கண்ட நாஸ்தீகர் ஒருவரின் நல் மரணம்

கிளாஸ்கோ பட்டணத்தில் ஒரு பிரபலமான நாஸ்தீக விரிவிரையாளர் (Lecturer) அதிக நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் கிடந்தார். அவருடைய மனைவி தனது கணவனை உடனே நான் வந்து பார்க்கும்படியாக எனக்கு தகவல் கொடுத்தார்கள். அந்த மனிதர் தன் வசம் நாஸ்தீக புத்தகங்கள் அடங்கிய ஒரு சுழலும் புஸ்தகசாலையை (Circulating Library) வைத்துக் கொண்டு தேவன் இல்லை என்று சொல்லுகின்ற நாஸ்தீக புத்தகங்களை மக்கள் படிப்பதற்காக சுற்றுக்கு விட்டு திடமில்லாத மக்களை அழிவின் பாதையில் வழி நடத்திக் கொண்டிருந்தார். தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்திற்கு எதிராக அவர் கூட்டங்கள் நடத்தி அவர் தனது நாஸ்தீக கருத்துக்களை மக்களுக்கு மிகுதியும் எடுத்துக் கூறிவந்தார். அவர் தேவனுடைய வேதபுத்தகத்தை வாசித்திருந்தார் என்பது உண்மைதான், ஆனால், அதின் மூலம் தனது ஆவிக்குரிய ஆகாரத்தை பெறுவதற்காக அல்லாமல் "தேவன் இல்லை" என்ற தனது நாஸ்தீக கொள்கைகளுக்கு சாதகமாக இருக்கக்கூடிய பகுதிகளை கண்டு பிடித்து அதை ஆராய்ந்து அதின் மூலமாக தேவனை தூஷிப்பதற்காக அவர் படித்து வந்தார்.

இப்பொழுது அவர் மரணப்படுக்கையிலானார். தனது மரணத்தை சந்திக்க அவருக்கு தைரியமில்லை. மரண பயமும், முடிவில்லாத நித்தியத்தை அக்கினியும், கந்தகமும் கலந்து எரியும் தீக் கடலில் சதாகாலமும் களிக்க வேண்டுமே என்ற திகிலும், அந்தகார இருளும் அவரை நன்கு சூழ்ந்து கொண்டது. எதிர்காலத்தை குறித்த கலக்கத்தால் அவர் நடுநடுங்கலானார். நான் அவரை சில தடவைகள் சந்தித்து தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை அவருக்கு ஜெபத்தோடு எடுத்துக்கூறி, அவர் தேவனுக்கு விரோதமாக செய்த கொடிய பாவங்களை கண்ணீரோடு தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு அழுது கெஞ்சும்படியாக கூறினேன். அவருக்காக அவரது கட்டிலின் அருகில் நான் முழங்காலூன்றி உள்ளம் கசிந்து ஜெபங்களை ஏறெடுத்தேன். எனது தேவ ஆலோசனைப்படியே அவர் தனது பாவங்களுக்காக மனங்கசந்து அழுது பாவ மன்னிப்புக்காகவும், தேவனுடைய சமாதானத்திற்காகவும் கெஞ்சி கதறினார். அப்படியே தேவனுடைய இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றுக்கொண்டார்.

தேவனுக்கு விரோதமாக தான் செய்த கொடிய பாவத்தவறை உணர்ந்து அவர் கதறி அழுதார். தனது நாஸ்தீக சுழலும் புத்தகசாலையில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் அவருடைய மனைவியும், மகளும் ஒன்று சேர்ந்து சுக்கு நூறாக கிழித்தார்கள் என்றும் அதின் பின்னர் தனது சொந்தக் கையால் அவற்றை தீ வைத்து கொளுத்தி சாம்பலாக்கியதாக அவர் என்னிடம் மகிழ்ச்சியோடு சொன்னார்.

தன்னை தனது படுக்கையில் காண வந்த தனது பழைய நாஸ்திக நண்பர்கள் யாவரிடமும் இரட்சகர் இயேசுவில் தான் கண்டு கொண்ட இரட்சிப்பின் சந்தோசத்தை கூறி மகிழ்ந்ததுடன் அவர்களும் ஆண்டவர் இயேசுவை ஏற்று அவருடைய பிள்ளைகளாக மாறி மோட்ச இன்ப வாழ்வைப் பெற்றுக்கொள்ள பரிவோடு அவர்களைக் கெஞ்சினார். எந்த ஒரு நிலையிலும் தேவன் இல்லை என்ற நாஸ்தீகத்திற்கு திரும்பக்கூடாது என்று அவர்களை மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அதற்கப்பால் தான் வாழ்ந்த நாட்களிலெல்லாம் தான் சந்திக்கும் யாவரிடமும் இரட்சா பெருமானில் தான் கண்ட இரட்சிப்பின் சந்தோசத்தையும், தனக்கு முன்னாலுள்ள மோட்சானந்த பாக்கியத்தையும் கூறி யாவரும் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள மன்றாடினார். அதின் பின்னர் அவர் கர்த்தருக்குள் மிகவும் ஆனந்த நம்பிக்கையோடு பரம இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்.

 
நான் கண்ட நாஸ்தீகர் ஒருவரின் பயங்கர மரணம்

கிளாஸ்கோ பட்டணத்தில் எனக்கு மற்றொரு நாஸ்தீகரை தெரியும். அவரின் மனைவி ஒரு கத்தோலிக்க பெண். அவரும் நோய்வாய்ப்பட்டு மிகுந்த பாடுகளை அனுபவித்து மரணத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அவருடைய துயரப் புலம்பல் சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது. எனினும், தேவனுக்கு விரோதமாக அவர் பேசிய அவரது தூஷணங்களால் அண்டை அயலகத்தார் எல்லாரும் நடுங்கி உறைந்து போயிருந்தார்கள். அவரது மனைவி தனது கணவனை வந்து பார்க்கும்படியாக என்னை வருந்தி அழைத்தார்கள். தங்களுடைய கத்தோலிக்க சாமியாரை கூப்பிட்டு ஜெபம் சொல்ல நான் அந்த சகோதரியை கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர்கள் அதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. தனது சொந்த திருச்சபை சாமியார் தனது வீட்டுக்குள் வரவே கூடாது என்று அவர்கள் பிடிவாதமாக நின்றார்கள். கடைசியாக நான் அவர்களுடன் வீட்டுக்குச் சென்றேன். நான் சொன்ன ஆவிக்குரிய எந்த ஒரு வார்த்தையையும் அவன் கொஞ்சமும் கண்டு கொள்ளவே இல்லை. மாறாக அவனது வாயிலிருந்து தூஷணங்களும், சகிக்கமுடியாத அசுத்த வார்த்தைகளும் புறப்பட்டதுடன் நான் "இயேசு" என்ற வார்த்தையை உச்சரித்த உடன் என் மேல் துப்பவும் செய்து விட்டான். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவனது மனைவியின் அன்பான வற்புறுத்துதல்கள் காரணமாக நான் அந்த மனிதனை தினமும் போய் சந்தித்து வந்தேன். ஆனால், அவன், தேவன் பேரில் கொடிய பகை கொண்டவனைப்போல அவரை சபித்து தூஷித்தான். அவன் தனது வெறியான கோபத்தில் தனது சொந்த படுக்கையின் துணிகளை எல்லாம் கிழித்துவிட்டான். அவனுடைய பயங்கர கூக்குரல் தெருவில் ஒரு கூட்டத்தையே கூடி வரச் செய்துவிட்டது. அவனது மூச்சொடுங்கும் கடைசி நேரத்தில் நான் அவனிடம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்க்கும்படியாக மிகவும் பரிவுடன் கெஞ்சினேன். அத்துடன் நான் அவனுக்காக அவனண்டை முழங்காலூன்றி ஜெபிக்கலாமா என்று அவனைக் கேட்டேன். தன்னுடைய பெலத்தை எல்லாம் ஒன்று திரட்டி "எனக்காக சாத்தானிடம் ஜெபி" என்று அவன் சொன்னான்.

தனது காலமெல்லாம் சாத்தான் என்று ஒருவன் உண்டு என்பதை மறுதலித்து வந்த அவன் இப்பொழுது சாத்தான் என்பவன் ஒருவன் உண்டு என்று அவன் அறிக்கையிடுவதை நான் அவனுக்கு சுட்டிக் காண்பித்தேன். அதற்கு மாறுத்தரமாக மிகவும் சப்தமாக "சாத்தான் என்பவன் ஒருவன் உண்டு என்று நான் நம்புகின்றேன். அப்படியே தேவன் ஒருவர், ஆம், மெய்யான தேவன் ஒருவர் உண்டு என்றும் நான் நம்புகின்றேன். ஆனால், நான் எனது ஜீவகாலமெல்லாம் அவரை பகைத்து தூஷித்துவிட்டேன். அப்படியே எனது மரண நேரத்திலும் நான் அவரை பகைக்கின்றேன்" என்ற பயங்கரமான வார்த்தைகளைக் கூறிக்கொண்டே முடிவில்லாத நித்தியத்துக்குள் கடந்து சென்றுவிட்டான்.

 
"ஜாண் சிம்" என்ற பாலகனின் பொன்னகர் பயணம்

எனது வேதபாட வகுப்புகளில் கலந்து கொண்ட வாலிப பையன்கள், வாலிப பெண்கள், சிறுவர்களின் கிறிஸ்துவுக்குள்ளான அருமையான மரணங்களைக் குறித்து நான் பின் நாட்களில் கேள்விப்பட்டிருக்கின்றேன். எல்லா துதியும் தேவாதி தேவன் ஒருவருக்கே. அவர்களில் 8 வயதான ஜாண் சிம் என்பவனுடைய மரணத்தை மட்டும் குறிப்பிடுகின்றேன். கொடிய காசநோய் காரணமாக அவன் மரணப்படுக்கையில் ஆனான். அவனது குழந்தை உள்ளம் ஆண்டவர் இயேசுவை விரைவில் மோட்சத்தில் சந்திக்கப் போவதை நினைத்து ஆனந்த மகிழ்ச்சி கொண்டது. அவனது சின்னஞ் சிறிய உதடுகள் "எனது பாவங்களை எல்லாம் பழுதற்ற தேவ ஆட்டுக்குட்டி மேல் வைத்துவிட்டேன்" என்ற தனது வேதபாட வகுப்பில் படித்திருந்த பாடலைப் பாடிக்கொண்டிருந்தது. அவன் மரிப்பதற்கு சற்று முன்னர் தனது பெற்றோரிடம் "நான் விரைவில் ஆண்டவர் இயேசுவோடு மோட்சத்திலிருப்பேன். ஆனால், நீங்கள் அங்கு வந்து சேருவீர்களா என்பதைக் குறித்து நான் பயப்படுகின்றேன்" என்று கூறினான். "என் பிள்ளையே நீ ஏன் அவ்வாறு கலங்குகின்றாய்?" என்று அவனது தாயார் அழுது கொண்டே கேட்டார்கள். "அப்படி நீங்கள் மோட்சம் வருவதாக இருந்தால் அதைக் குறித்து மற்றவர்களிடம் சாட்சி கூறியிருப்பீர்கள். ஜெபித்திருப்பீர்கள், பாடியிருப்பீர்கள், மகிழ்ந்திருப்பீர்கள். ஆனால் அந்த வித எந்த ஒரு அடையாளமும் உங்களில் இல்லாமற் போயிற்றே. ஆனால், எனது வேதபாட வகுப்புகளில் எனது ஆசிரியர் இவை எல்லாவற்றையும் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். ஆண்டவர் இயேசுவைப்பற்றி நீங்களோ அல்லது அப்பாவோ எதுவும் என்னிடம் சொல்லவில்லையே. நீங்கள் இயேசுவைச் சந்திப்பீர்களா?" என்று அந்த 8 வயது பாலகன் கேட்டான். அவனது தாயின் கண்ணீர்கள் தனது குழந்தையின் மேல் விழுந்தன. அந்த நேரத்தில் நானும் கூட ஜாண் சிம் அருகில்தான் நின்று கொண்டிருந்தேன். அவன் என்னைப் பார்த்து "என் அருகில் உட்காருங்கள். இயேசுவைப்பற்றி எனக்குச் சொல்லுங்கள். நான் விரைவில் அவரைச் சந்திக்கப் போகின்றேன். இயேசுவைப்பற்றி நீங்கள் அறிந்தவைகளையும், நீங்கள் கேள்விப்பட்டவைகளையும் எனக்குச் சொல்லுங்கள். அந்த மாசற்ற தேவாட்டுக் குட்டியை நான் சந்திக்கப் போகின்றேன்" என்று சொன்னான். சில தினங்களில் ஜாண் சிம் தனது இரட்சகரண்டை பறந்து சென்றுவிட்டான்.

 
ஆசீர்வாதமான ஊழியங்கள்

கிளாஸ்கோ நகர மிஷனரி ஸ்தாபனத்தில் தேவ பெலத்தால் நான் எந்த ஒரு மிஷனரியும் செய்ய இயலாத அருமையான தேவ ஊழியங்களை நிறைவேற்றினேன். எனது மிஷனரி ஊழியம் முழுமையான வெற்றியைப் பெற்றது. தேவனுடைய ஆசீர்வாதம் ஊழியங்களில் நிரம்பி வழிந்தது. நான் சேர்ந்திருந்த சீர்திருத்த பிரஸ்பிட்டேரியன் ஸ்காட்லாந்து திருச்சபை நியூ ஹெப்ரடீஸ் என்ற தென் சமுத்திரங்களிலுள்ள இடத்திற்கு ஒரு மிஷனரி தேவை என்று விளம்பரப்படுத்தியிருந்தது. ஏற்கெனவே அங்கு ஜாண் இங்கிளிஸ் என்பவர் இருந்தார். அவருக்கு உடன் ஊழியராக மற்றொரு மிஷனரி தேவைப்பட்டார். நரமாமிசம் உண்ணுகின்ற அங்குள்ள மக்களுக்கு மிஷனரியாக செல்லுவதற்கு ஒருவருமே முன் வரவில்லை. "என்னையே அந்த மிஷனரி பணிக்கு ஒப்புக்கொடுக்கும்படியாகவும், நானே அதற்கு தகுந்த கல்வி அறிவுடையவன்" என்றும் கர்த்தர் என் உள்ளத்தில் பேசினபடியால் "இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்" என்று ஆண்டவருக்கு நான் என்னை ஒப்புக்கொடுத்தேன். எனினும் எனது தீர்மானம் மாமிசத்தின்படியான ஒரு முடிவாக இருக்கக்கூடாது என்று நினைத்து எனக்குள்ளே நடுநடுங்கி சில தினங்கள் ஜெபத்தில் நான் தரித்திருந்து தேவனுடைய சித்தத்தை கண்டறிய பிரயாசப்பட்டேன். இறுதியில் நான் எடுத்த தீர்மானம் கர்த்தருடைய திருவுளத்திற்கு ஏற்றது என்று நான் கண்டு கொண்டேன்.

இறுதியாக நான் தென் சமுத்திரங்களுக்கு நரமாமிச பட்சிணிகளின் மத்தியில் மிஷனரியாகச் செல்லுகின்றேன் என்பதை அறிந்ததும் ஓரிருவரைத் தவிர அநேகமாக எல்லாரும் எனது முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது சம்பந்தமாக நான் எனது தாய் தந்தையரை கேட்ட பொழுது " மகனே, நீ எடுத்த நல்ல தீர்மானத்திற்காக கர்த்தருக்கு நாங்கள் துதி ஏறெடுக்கின்றோம். அப்பாவும் ஒரு காலத்தில் ஒரு தேவ ஊழியனாக ஆக வேண்டுமென்று மனதார ஆசைப்பட்டேன். ஆனால் வாழ்வின் இதர நெருக்கங்கள் அந்த பரிசுத்த நோக்கத்தை நிறைவேற்ற விடாமல் என்னை தடுத்துவிட்டது. நீ எங்களுக்கு கர்த்தரால் கொடுக்கப்பட்டபோது உனது தந்தையும், தாயும் முதற்பேரான உன்னை சிலுவையின் மிஷனரியாக தேவனுடைய பலிபீடத்தில் அவருக்கே அர்ப்பணித்துவிட்டோம். நீ அந்த சிலுவைப் பணிக்கு ஏற்றவாறு உன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள கர்த்தர் உனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபித்து வருகின்றோம். அன்பின் ஆண்டவர் உனது அர்ப்பணிப்பை அங்கீகரித்து, நீண்ட நாட்களுக்கு உன்னை எல்லா தீங்குக்கும் விலக்கிப் பாதுகாத்து, உனது பிரயாசத்திற்குப் பலனாக ஏராளமான ஆத்துமாக்களை தேவனை அறியாத காட்டுமிராண்டிகள் நடுவில் உனக்குத் தந்தருள்வாராக" என்று சொன்னார்கள். நான் கிளாஸ்கோ நகர மிஷனரி ஸ்தாபனத்தில் 10 ஆண்டு காலம் தேவனுக்கு கனி நிறைந்த தேவ ஊழியம் செய்திருந்தேன்.

கிளாஸ்கோ நகர மிஷனரி ஸ்தாபனத்தினர் எனது கனி நிறைந்த ஊழியங்களை கருத்தில் கொண்டு எனது சம்பளங்களை எல்லாம் கூட்டிக்கொடுத்து வாழ்க்கைக்கான எல்லா வசதிகளையும் சீரும் சிறப்புமாக செய்து தர முன் வந்தார்கள். நான் அவைகள் எல்லாவற்றையும் மறுக்கவேண்டியதாயிற்று. எனது அருமையான தாலந்துகளையும், விலையேறப்பெற்ற என் ஜீவனையும் வீணும் விருதாவுமாக நரமாமிசபட்சிணிகளின் கரங்களில் கொடுத்து ஒரு நொடிப் பொழுதில் பட்சிக்கப்பட்டுப் போவதைப் பார்க்கிலும் தங்களுடனேயே தங்கியிருந்து இதுவரை செய்யப்பட்ட கனி நிறைந்த தேவ ஊழியங்களை தொடரும்படி என்னை அன்புடன் வற்புறுத்தினார்கள். அவர்களில் வயதான டிக்சன் என்ற அன்பான மனிதர் "நீங்கள் நரமாமிச பட்சிணிகளால் நொடிப் பொழுதில் சாப்பிடப்பட்டுவிடுவீர்கள்" என்று கூறினார். நான் அவருக்கு மாறுத்தரமாக "நீங்கள் முதிர்ந்த விருத்தாப்பிய வயதில் இருக்கின்றீர்கள். விரைவில் நீங்கள் மரித்து கல்லறைக்குள் வைக்கப்படுவீர்கள். அங்கே புழுக்கள் உங்களை சாப்பிட்டு முடிக்கும். நான் கர்த்தருடைய ஊழியத்தின் பாதையில் அவரைக் கனம்பண்ணி அவருக்கு ஊழியம் செய்து நரமாமிசபட்சிணிகளால் நான் சாப்பிடப்பட்டாலும் பரவாயில்லை. நமது இருவரின் சரீரங்களும் உயிர்த்தெழுதலின் நாளில் மாட்சிமையாக மருரூபமாக்கப்படும். புழுக்கள் சாப்பிட்டால் என்ன? மனுஷரை மனுஷர் சாப்பிடும் மக்கள் சாப்பிட்டால் என்ன?" என்று கூறினேன்.

"நான் கிளாஸ்கோ பட்டணத்தில் மிஷனரியாக பணி செய்த நாட்களில் கொடிய காலரா நோயினால் தாக்குண்ட திருச்சபையின் மக்களையும், வேதபாட வகுப்புகளுக்கு வருவோரையும் தைரியமாகச் சென்று பார்த்து வந்தேன். கர்த்தர் என்னை அற்புதமாக நிச்சயமான அந்த கொள்ளை நோய் மரணத்திலிருந்து பாதுகாத்தார். அப்படிப்பட்ட அதிசய கர்த்தர் நரமாமிச பட்சிணிகளிடமிருந்தும் என்னை நிச்சயமாகப் பாதுகாப்பார்" என்று அவர்களிடம் சொன்னேன்.

நான் கிளாஸ்கோ பட்டணத்தை விட்டதும் எனது வேதபாட வகுப்புகளில் கலந்து கொண்ட பெண்களும், ஆண்களும் தங்களுடைய எளிமையான காசுகளை ஒன்று சேர்த்து நான் மிஷனரிப் பணி செய்த நரமாமிச பட்சிணிகளின் ஆண்கள் பெண்களுக்கான ஆடைகளை வாங்கி என்னண்டை அனுப்பியிருந்தனர். இந்தக் காரியத்தை அவர்கள் ஆண்டுதோறும் செய்து வந்தனர்.

 
நியூ ஹெப்ரடீஸ் தீவுக்கூட்டங்கள் நோக்கி:

1857 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி எனது 33 ஆம் வயதில் நானும் எனது நண்பனும் ஸ்காட்லாந்து பிரஸ்பிட்டேரியன் சீர்திருத்த சபையினரால் "சுவிசேஷ பிரசங்கிகளாக" பிரகடனம் செய்யப்பட்டோம். அதின் பின்னர் நாங்கள் நான்கு மாத காலங்கள் அந்தச் சபையைச் சேர்ந்த ஒவ்வொரு திருச்சபையையும், ஓய்வு நாள் பள்ளிகளையும் சந்தித்து தேவ வசனத்தைப் பிரசங்கித்து எங்களுக்கு முன்னாலுள்ள சவால் நிறைந்த நரமாமிச பட்சிணிகள் வாசம் செய்யும் மிஷனரிப் பணிகளைக் குறித்து எடுத்துரைத்தோம். 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் நாள் கிளாஸ்கோ பட்டணத்திலுள்ள தேவாலயத்தில் ஒரு பெரிய கூட்டத்திற்கு முன்னர் "எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்" (அப் 16 : 9) என்ற தலைப்பில் ஒரு வல்லமையான பிரசங்கத்துக்குப் பின்னர் நாங்கள் இருவரும் மிஷனரிகளாக அபிஷேகம் செய்யப்பட்டோம். அதின் பின்னர் 1858 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 16 ஆம் நாள் கிரீன்நாக் என்ற இடத்திலிருந்து குலுத்தா என்னும் கப்பலில் பசிப்பிக் கடல் நோக்கி பயணித்தோம். ஆஸ்திரேலியாவின் தலை நகர் மெல்போர்ன் நோக்கிய எங்கள் கடற்பயணம் சற்று கடினமாக காணப்பட்டது. ஸ்காட்லாந்து தேசத்தவரான பிராட்போர்ட் என்பவர் கப்பல் தலைவனாக இருந்தார். எங்களுடைய வசதிக்கான எல்லா காரியங்களையும் அவர் கருத்தோடு கவனித்துக் கொண்டார். துதி ஆராதனையை அவரே முன்னின்று நடத்தினார். அது எனக்கு மனோகரமாக இருந்தது. கப்பலின் பணியாளருக்கும், பயணிகளுக்கும் வேதபாட வகுப்புகளை நடத்தும் படியாக அவர் என்னைக் கேட்டுக் கொண்டார். அநேகருக்கு அந்த வகுப்புகள் ஆசீர்வாதமாக அமைந்தன. 30 ஆண்டு காலங்களுக்குப் பின்னர் நான் ஸ்காட்லாந்து சென்றிருந்த போது அங்கு நான் நடத்திய கூட்டம் ஒன்றிற்கு வந்திருந்த ஒரு மனிதர் குலூத்தா கப்பலில் பல்லாண்டு காலங்களுக்கு முன்னர் தான் பயணித்த சமயம் நான் எடுத்த வேதபாட வகுப்பில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றதை மிகுந்த மகிழ்ச்சியோடு என்னிடம் நினைவுகூர்ந்தார். அந்த இடத்தில் தான் கேட்ட தேவ சத்தியம் இன்றும் தனது நினைவில் மாறாமல் உள்ளது என்ற வார்த்தை எனக்கு சந்தோசமாக இருந்தது.

எங்கள் கப்பல் மெல்போர்ன் வந்ததும் அங்குள்ள எங்கள் சீர்திருத்த பிரஸ்பிட்டேரியன் சபையைச் சேர்ந்த குருவானவர்கள் சிலர் எங்களை அன்போடு வரவேற்றனர். எனது இள வயது மனைவியும் நானும் குருவானவர்களின் வீடுகளுக்குச் சென்று சில நாட்களை செலவிட்டோம். பின்னர் மெல்போர்னிலிருந்து பிநாங் என்ற இடத்திற்குப் புறப்பட்ட "சேஜ்" என்ற அமெரிக்க கப்பலில் நாங்கள் ஏறினோம். நாங்கள் முன்பு பயணித்த குலூத்தா என்ற பரிசுத்த கப்பலுக்கும் இதற்கும் தலை கீழான வித்தியாசம் இருந்தது. கப்பல் பணியாளர்கள் எல்லாரும் அருவருப்பான தூஷண வார்த்தைகளை எப்பொழுதும் பேசுகிறவர்களாக இருந்தனர்.

எங்கள் கப்பல் டாணா என்ற நரமாமிசபட்சிணிகளின் தீவுக்கு நேராக காற்றால் அடிபட்டு இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த தீவுக்கு நாங்கள் செல்லும் பட்சத்தில் எங்கள் பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு நாங்களும் அந்த தீவினரால் கொல்லப்பட்டு சமைத்து சாப்பிடப்பட்டிருப்போம். ஆனால், இரக்கமுள்ள ஆண்டவரின் கிருபையால் சமுத்திரம் அமைதியாகி எங்கள் பயணத்திற்கு ஏற்ற மென்மையான கடற் காற்று வீசத்தொடங்கியது. மிகுந்த துயரங்கள், பாடுகள், கஷ்டங்கள் நடுவில் நாங்கள் 4 மாதங்கள் 14 நாட்கள் கடினமான கப்பல் யாத்திரைக்குப் பின்னர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு சூரிய ஒளியில் அனீத்தியம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். எங்களை அன்புடன் வரவேற்க அங்கிருந்த சில மிஷனரி குடும்பங்கள் மற்றும் அனீத்தியத்திலுள்ள சில சுதேச கிறிஸ்தவர்கள் வந்திருந்தனர். அனீத்தியத்திலிருந்து 96 கி.மீ. தூரத்தில் உள்ள பெரிய தீவான டாணா எங்கள் ஊழிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த தீவினர் எங்களை அங்கு குடியேற சம்மதித்தனர். நாங்கள் குவாமேரா என்ற இடத்திலும், நோவாஸ்காட்டியாவிலிருந்து வந்த திரு மாத்தீசன் தம்பதியினர் அத்தீவின் எதிர்பகுதியிலும் தங்கி மிஷனரி பணிபுரிய முடிவெடுத்தோம். அந்த மக்கள் மிகவும் பரபரப்பானவர்களும், நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழ இயலாதவர்களாக இருப்பதை நாங்கள் கவனித்தோம். தொடர்ச்சியான சண்டைகள் அவர்களிடயே நடைபெற்றுக் கொண்டிருந்தன. தொலை தூரத்திலுள்ள பழங்குடி மக்களுடனோ அல்லது பக்கத்திலுள்ள கிராமவாசிகளுடனோ அல்லது அண்டை அயலகத்தாருடனோ சண்டைகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நரமாமிசபட்சிணிகளின் தலைவர்கள் நாங்கள் தங்கியிருந்த இரு இடங்களிலும் நாங்கள் வீடு கட்டுவதற்கு தங்கள் நிலங்களை விற்பதற்கு தயாராக இருந்ததுடன் மிஷனரிகளாகிய நாங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டனர். எங்கள் வசமிருந்த கோடரிகள், கத்திகள், தூண்டில் முட்கள், போர்வைகள், துணிமணிகள் போன்றவற்றை எங்களிடமிருந்து விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணத்தில் அப்படி விரும்பினார்களே அல்லாமல் தேவனுடைய சுவிசேஷத்தை கேட்க வேண்டும் என்ற தாகம் எல்லாம் அவர்களுக்கு கிடையாது. ஏனெனில் அவர்கள் காட்டு மிராண்டிககள், நரமாமிச பட்சிணிகள். தீவின் மற்ற பகுதியில் உள்ள மக்கள் எங்களுக்கு தீங்குசெய்தாலும், அவர்கள் தங்கள் கைப்பட எங்களுக்கு எந்த ஒரு துன்பமும் செய்வதில்லை என்று எங்களுக்கு உறுதி அளித்தார்கள்.

நான் முதன் முறையாக அந்த தீவில் வாழும் பழங்குடி மக்களைப் பார்த்தபோது மிகவும் பயந்து போய்விட்டேன். அந்த மக்கள் பல வண்ணங்களை தங்கள் உடம்பில் பூசிக்கொண்டு நிர்வாணிகளாக இருந்தார்கள். மிகவும் ஏழ்மையானவர்களாக அவர்கள் காட்சியளித்தார்கள். எனது இருதயம் பெரும் வெறுப்பினாலும் மறுபக்கம் பரிதாபத்தினாலும் நிறைந்திருந்தது. இப்படிப்பட்ட காட்டு மிராண்டி மக்களுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பதற்காக நான் எனது கனி நிறைந்த, களிகூருதலான கிளாஸ்கோ மிஷனரி ஊழியத்தை உதறித்தள்ளி விட்டு இங்கு வந்தேன். இவர்களுக்கு சரி எது? தவறு எது? என்று போதிப்பதற்கு முன்போ அல்லது கிறிஸ்துவைப்பற்றிப் போதிப்பதற்கு முன்போ அவர்களுக்கு சிறிது நாகரீகத்தையாவது போதிப்பது சாத்தியமாகுமா என்ற எண்ணம் என்னில் ஒரு கணம் தோன்றி மறைந்தது. எனினும், நான் என்னை உடனே தேற்றிக் கொண்டு அந்த அநாகரீகமான மக்கள் மேல் ஆழமான அன்பும் பரிதாபமும் கொண்டவனாக எப்படியும் இந்த மக்களுக்கு இரட்சகர் இயேசுவின் அன்பை எந்த விலைக்கிரயத்தைக் கொடுத்தாகிலும் நான் கூறியே தீருவேன். கிளாஸ்கோ பட்டணத்து மக்களுக்கு எத்தனை தேவ அன்பின் பாரத்தோடு தேவனுடைய அன்பை பகிர்ந்து கொண்டேனோ அதைபோலவே இவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுவேன் என்ற முடிவுக்கு வந்தேன்.

 
டாணா தீவில்

டாணா தீவில் இறங்கியவுடன் என்னையும், டாக்டர் இண்கில்ஸ்சையும் அத்தீவினர் அதிசயமாகப் பார்த்தார்கள். நாங்கள் இறங்கிய சமயம் அங்கிருந்தவர்கள் ஆயுதங்களையும் நாட்டுத் துப்பாக்கிகளையும் தூக்கிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். துறைமுகப் பகுதியில் இருந்த மக்கள் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு தீவின் உட்பகுதியிலிருந்து வந்த மக்களை துரத்திக் கொண்டு சென்றார்கள். நாட்டுத்துப்பாக்கிகளின் முழக்கமும், வெறுப்பூட்டும் ஊளையிடுதலும் உயிருக்குக் கேடு விளைவிக்கக்கூடிய சண்டை அங்கு நடக்கிறது என்பதை காட்டியது. ஆயுதம் தரித்த ஆண்கள் எல்லா திசைகளிலும் ஓடினர். தங்கள் தலை மயிரைப் பின்னி அதில் இறகுகளை செருகியிருந்த அவர்களுடைய முகங்களில் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணம் பூசப்பட்டிருந்தது. மதியம் வரை துப்பாக்கிச் சூடுகளும் சண்டைகளும் தொடர்ந்தன. பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினர்.

ஆகவே நாங்களும் எங்களுக்குத் தாற்காலிகமாகத் தங்கும்படி கொடுக்கப்பட்ட வீட்டிற்குள் சென்று அவர்களுக்காக தேவனிடம் மன்றாடினோம். சிறிது நேரத்தில் சப்தங்களும், வெடி முழக்கங்களும் குறைந்தன. தீவின் உட்பகுதி மக்கள் பின் வாங்கி ஓடிவிட்டனர். நாங்கள் இருந்த கிராம மக்கள் மாலையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பினர். சண்டையில் ஐந்து ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்களை இரவு உணவாக இந்த மக்கள் சாப்பிடுவார்கள் என்பதும் எங்களுக்குப் பிறகு தெரிய வந்தது.

மறு நாள் காலை எங்களுக்கு தேநீர் தேவைப்பட்டது. எங்களுக்கு உதவி செய்ய வந்திருந்த பையனிடம் தேநீர் கேட்டோம். "இந்த மக்கள் வெந்நீர் ஊற்றுகளில் இறந்த மனிதர்களைக் கழுவி உண்பதற்காக சமைத்துவிட்டார்கள். தண்ணீரை எல்லாம் அழுக்காக்கிவிட்டார்கள். ஆகவே நான் உங்களுக்கு தேநீர் செய்ய சுத்தமான தண்ணீரைக் கொண்டு வர முடியவில்லை. நான் என்ன செய்வது" என்று கேட்டான். அத்தீவினர் ஒருவரையொருவர் கொல்லுவதும், கொல்லப்பட்டவர்களை சமைத்துச் சாப்பிடுவதுவும் ஏதோ அற்பமான காரியம் போலவும், அந்த தண்ணீரை அழுக்காக்கிவிட்டதுதான் பயங்கரமான காரியம் போலவும் அந்தச் சிறுவன் பேசியதைக் கேட்டு நாங்கள் அதிர்ந்து போனோம்.

 
மொழியை கற்றுக் கொண்டோம்

நாங்கள் அவர்கள் தீவில் வந்திறங்கியதும் அந்த காட்டு மிராண்டிகளான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து எங்களைப் பார்த்தனர். அவர்கள் பேசுகின்ற மொழியைக்குறித்து ஒரு வார்த்தை கூட எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அவர்களைப் பார்த்தோம், அவர்கள் எங்களைப் பார்த்தார்கள். அவர்கள் எங்களைப் பார்த்து சிரித்தார்கள், நாங்களும் பதிலுக்கு அவர்களைப் பார்த்து சிரித்து எங்கள் தலைகளை அசைத்தோம். நாங்கள் ஒருவருக்கொருவர் கைகளை அசத்துக் கொண்டோம். அவ்வளவுதான். ஒரு நாள் அவர்களில் இருவர் எங்கள் பொருட்களில் ஒன்றை கரத்தில் எடுத்துக் கொண்டு "நான்ங்சி நாரி எனு" என்றான். நான் அவன் இது என்ன என்று கேட்கிறான் எனக் கருதி ஒரு மரத் துண்டை கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் கூறியதையே திரும்பவும் கூறினேன். இருவரும் சிரித்துக்கொண்டு அதன் பெயரைக் கூறினார்கள். இப்படி அவர்களிடம் ஒவ்வொன்றாக மெதுவாக கேட்டு அந்த ஒலியை எப்படி உச்சரிப்பது போன்றவற்றை எழுதி மொழியைக் கற்றோம். ஒரு நாள் அவர்களில் இரு ஆண்கள் ஒருவரையொருவர் சந்தித்தனர். அவர்களில் ஒருவன் அந்நியன். அவன் என்னைச் சுட்டிக்காண்பித்து "சீ நான்கின்" என்றான். அவன் எனது பெயரைக் கேட்கின்றான் என்பதைப் புரிந்து கொண்ட நான் அவர்களில் ஒருவனைப் பார்த்து "சீ நான்கின்" என்றேன். உடனே அவர்கள் இருவரும் சிரித்துகொண்டே தங்களது பெயர்களை எனக்குக் கூறினார்கள். இவ்விதமாக நாங்கள் மக்களின் பெயர்கள், பொருட்களின் பெயர்கள் போன்றவற்றை அவர்கள் பேசும் வார்த்தைகளைக் கொண்டு புரிந்து கொண்டு அவற்றை கவனமாக எழுதிக் கொண்டோம். இந்த வார்த்தைகளைக்கொண்டு நாளடைவில் அந்த மக்களுடன் பேசி ஒரு சில வார்த்தைகளுடன் ஒரு சிறிய சம்பாஷணையும் கூட செய்யக் கற்றுக்கொண்டோம். அவர்களில் நல்ல புத்திசாலி பையன்கள், பெண் பிள்ளைகளை எங்களுடன் வந்து அமரச் செய்து அவர்கள் மூலமாக இன்னும் விரிவாக அவர்கள் மொழியை நாங்கள் அறிந்து கொண்டோம். இது விஷயத்தில் நோவார் மற்றும் நொவிகா என்ற வயது முதிர்ந்த இரு தலைவர்கள் எங்களுக்கு அதிகமாக உதவினார்கள்.

 
எனது அருமை மனைவியின் மரணம்

டாணாவில் இருந்த எங்கள் முதல் வீடு கடற்கரையை ஒட்டி 200 அடிகள் உயரத்தில் ஒரு குன்றின் மேல் இருந்தது. எங்கள் உடல் நலத்திற்கு ஏற்ற ஒரு உணர்வைத் தருவது போல அது காணப்பட்டது. எங்கள் வீட்டைச் சுற்றிலும் பெரிய தென்னை மரங்களும், பலா மரங்களும் சூழ்ந்திருந்தன. அந்த மரங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தபோதினும் கடற்கரையிலிருந்து வரும் எங்கள் உடல் நலத்திற்கு அத்தியந்த அவசியமான ஆரோக்கியமான கடற்காற்றை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியாமல் செய்துவிட்டது. அத்துடன் கடற்கரையின் முகத்துவாரத்திலிருந்த ஒரு உளையான கடற் களி எங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மலேரியா கொசுக்களை உண்டாக்கக் கூடியது என்பதை நாங்கள் அறியாதிருந்தோம். ஒரு சமயம் நாங்கள் மலேரியாவினால் நன்றாகத் தாக்கப்பட்டபோது ஒரு பழங்குடி தலைவன் என்னைப் பார்த்து "மிஸி, நீங்கள் இந்த இடத்தில் குடியிருந்தால் சீக்கிரத்திற்குள்ளாக செத்துப்போவீர்கள். உளையான கடற் களி பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ணத்தில் நீங்கள் படுத்திருப்பதைப் போல டாணாவிலுள்ள எங்கள் எந்த ஒரு குடிமகனும் இவ்வளவு தாழ்வான பகுதியில் படுக்க மாட்டான். படுத்தால் அவன் நிச்சயமாக சாவான். மேடான உயர்ந்த பகுதியில் நாங்கள் நித்திரை செய்வதால் வர்த்தகக் காற்று (Trade-wind) எங்களைப் பாதுகாத்து எங்களுக்கு உடல் நலம் தருகின்றது" என்று சொன்னான். அவனுடைய வார்த்தைப்படியே உடனடியாக எனது குடியிருப்பை மேடான பகுதிக்குக் கொண்டு செல்ல நான் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டேன்.

எனது அருமை இளம் மனைவி மேரி ஆன் ராப்சன் - மிகவும் கண்ணியவானான பீட்டர் ராப்சன் என்பவரின் மகளும் நானும் 1858 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி டாணாவில் மிகச் சிறந்த சுகதேகிகளாக வந்து தரையிறங்கினோம். நாங்கள் எங்கள் அன்பின் ஆண்டவரின் சேவைக்காக உயர்ந்த நோக்கங்களையும், ஒளி வீசும் நம்பிக்கைகளையும் கொண்டவர்களாக இருந்தோம். அதற்கு ஏற்றாற்போல எங்கள் உடல் ஆரோக்கியமும் சுடர்விட்டு பிரகாசித்தது. 1859 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் நாள் அவர்கள் ஒரு பாலகனை பிரசவித்தார்கள். தாயும், சேயும் நல்ல உடல் நலத்துடன் முன்னேற்றம் காட்டுபவர்களாகக் காணப்பட்டனர். எங்களுடைய தீவாந்தர வாழ்க்கை ஆனந்தத்தில் மிதப்பதைப்போன்று எங்களுக்குத் தெரிந்தது. அந்த சந்தோசத்தின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்தே மாபெரும் துயரம் வந்து சேர்ந்தது. பிரசவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் என் மனைவியை வந்து தாக்கிய குளிரும், காய்ச்சலும் ஒவ்வொரு இரண்டு நாட்கள் இடைவெளியில் மிகவும் கோரமாக வந்து தாக்கியது. இப்படி 15 நாட்களுக்கு நீடித்தது. அத்துடன் வயிற்றோட்டமும் சேர்ந்து கொண்டது. நிம்மோனியாவுக்கான அறிகுறிகளும் காணப்பட்டதுடன் அவ்வப்போது சுயநினைவும் இழந்து காணப்பட்டது. இந்நிலையில் ஒரு நாள் ஒரு நொடிப்பொழுதில் மார்ச் 3 ஆம் நாள் அவர்கள் மரித்துவிட்டார்கள். எனது துயரத்திற்கு கிரீடம் சூட்டினாற்போலவும், எனது தனிமையை நிறைவு செய்வதைப் போலவும் எனது அருமை ஆண் குழந்தை பீட்டர் ராபர்ட் ராப்சன் (எனது மனைவியின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டவன்) மார்ச் மாதம் 20 ஆம் நாள் இறந்து எனது தனிமையை முழுமையாக பூர்த்தி செய்தான்.

அதிர்ச்சியூட்டும் இந்த இரண்டு இழப்புகளினால் நான் பிரம்மை பிடித்தவன்போல் என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்றேன். குளிரும், காய்ச்சலும் என்னையும் மிகவும் கடுமையாக வாட்டியது. எனினும், அன்பின் பரம தகப்பன் தமது அளவற்ற கிருபையால் என்னைத் தாங்கினார். மரித்துப்போன மனைவியையும், மகனையும் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே எனது சொந்தக் கரங்களால் கல்லறையைத் தோண்டி அடக்கம் செய்து பவழப்பாறைகளை அதற்கு மேல் வட்டவடிவமாக வைத்து கல்லறையின் உச்சியில் வெண்மையான பவழப்பாறைகளைப் பொடித்து தூளாக்கிப் பூசினேன். நரமாமிச பட்சிணிகள் வாழும் அத்தேசத்தை தேவனுக்காக ஆதாயப்படுத்த உதவும்படி உரிமை பாராட்டி இடைவிடாத ஜெபத்தோடும், கண்ணீரோடும் தேவனை நோக்கி கதறினேன். இரக்கமுள்ள கர்த்தர் தமது சொல்லி முடியாத ஆறுதலையும், தேறுதலையும் எனக்கு தராமல் இருந்திருப்பாரானால் நான் பைத்தியம் பிடித்தவனாகி அந்த தனிமையான கல்லறையின் அருகிலேயே நானும் மரித்துப் போயிருப்பேன்.

எனது மனைவியின் மரணத்திற்குப் பின்னர் பிஷப் செல்வினும் சங்கை பேட்டர்சனும் என்னைக் கண்டு ஆறுதல் சொல்லும்படியாக மிஷனுக்குச் சொந்தமான கப்பலில் என்னண்டை வந்திருந்தார்கள். அனீத்தியம் தீவுக்கு முதல் முறையாக என் மனைவியும் நானும் வந்திருந்தபோது அவர்கள் என் மனைவியை நன்கு பார்த்திருக்கின்றார்கள். அப்பொழுது அவர்கள் பூரண சுகதேகியாக தனது முழுமையான ஆரோக்கியத்தில் காணப்பட்டார்கள். அதின் பின்னர் பிஷப் செல்வினும், சங்கை பேட்டர்சனும் எனது மனைவி, மகன் கல்லறை அருகில் நின்று மனதுருகி ஜெபித்தார்கள். எனது துயரம் தாங்க முடியாததால் நான் சத்தமிட்டு கதறி அழுதேன். அவர்கள் இருவரும் அவ்வப்போது ஏங்கி ஏங்கி அழுதவர்களாக கண்ணீரோடு ஜெபித்து எனது தலையிலும் தங்கள் கரம் வைத்து ஜெபித்தார்கள். அவர்களின் ஜெபங்கள் என்னை மிகுதியும் ஆறுதல் படுத்தியது. தொடர்ச்சியாக அந்த இடத்தில் எனது கொடிய துயரத்துடன் தனிமையில் இருக்காமல் கொஞ்ச நாட்கள் தங்களுடன் வந்து தீவின் மற்ற இடங்களையும் பார்த்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு திரும்பி வரும்படியாக என்னை வெகுவாக அன்புடன் வற்புறுத்தினார்கள். அவர்களுடைய அன்பின் ஆலோசனையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் "ஒரு தடவை நான் இந்த இடத்தைவிட்டு வெளியேறினால் சுதேசிகள் வந்து இதைப் பிடித்துக் கொள்ளுவார்கள். நான் உங்களுடன் வந்து விட்டு திரும்பி வந்தால் அவர்கள் என்னை திரும்பவும் இந்த இடத்தில் குடியிருக்க அனுமதிக்கமாட்டார்கள். கர்த்தர் எனக்குக் கொடுத்த இந்த இடத்தில் அவருக்கு சாட்சியாக நான் தொடர்ந்து கடைசி வரை நிலைத்து நிற்பேன்" என்று கூறி அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.

 
என்னைத் தாக்கிய கடும் காய்ச்சல்

இதற்கிடையில் ஜூரம் என்னை பதினான்கு முறை கடுமையாகத் தாக்கியது. உயரமான இடத்தில் உறங்கினால் தான் இதைத் தவிர்க்க முடியும் என்பதை உணர்ந்தேன். ஆகவே தற்போதுள்ள வீட்டின் பின்னால் 200 அடி உயரம் உள்ள மலையின் மேற் பகுதிக்கு எனது வீட்டை மாற்ற விரும்பினேன். ஏனென்றால் அதின் எல்லா பக்கங்களும் பள்ளத்தாக்குகள் சூழ்ந்ததும், வர்த்தக காற்று வந்து மோதும் இடமாகவும், கடலிலிருந்து குறுகலான நிலப்பகுதியால் பிரிக்கப்பட்டதாகவும் இருந்தது. அங்கு மிஷன் வீட்டையும், ஆலயத்தையும் கட்ட போதுமான இடம் இருந்தது. அப்பகுதிக்கு உரிமையாக இருந்தவர்களிடம் பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கினேன். அங்கு படுக்கை அறை, சமையல் அறை மற்றும் இரு வரவேற்பு அறைகளை உள்ளடக்கிய ஒரு வீட்டைக் கட்டி நான் அங்கே குடியேற நினைத்தேன்.

இந்நேரத்தில் ஜூரம் என்னை மிகவும் குடுமையாக தாக்கியது. நான் மிகவும் பெலவீனமடைந்தேன். எனக்கு உதவ வந்த உண்மையுள்ள ஆசிரியர் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி இருவரின் உதவியால் மலையின் மீது மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து ஏறினேன். நான் கீழே உருண்டு விழுந்துவிடாதபடி அங்கிருந்த ஒரு மரத்தின் வேரைப் பற்றிப் பிடித்தபடி அப்படியே படுத்துவிட்டேன். நான் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினேன்.

என் நிலையைப் புரிந்து கொண்ட ஆபிரகாமும் அவரது மனைவி நபாடும் என்னை மலை உச்சிக்கு சுமந்து சென்றார்கள். அங்கே என்னைத் தரையில் தென்னை ஓலைகளின் மேல் படுக்க வைத்தனர். இந்த இரண்டு உண்மையுள்ள ஆத்துமாக்களும் வெறுமனே மனுஷீகப் பிரகாரமான இரக்கத்தினால் அல்லாமல் தேவ அன்பால் ஏவப்பட்டவர்களாக எனக்கு இளநீரையும், அவர்களது ஆகாரத்தையும் கொடுத்து நான் மரிக்காதபடி என்னைக் காத்துக் கொண்டனர். பல நாட்கள் இவ்வாறே தொடர்ந்தது. நான் செத்துப்போய்விட்டதாக அத்தீவினர் கருதியதால் அநேக நாட்கள் எவரும் என்னைத் தேடி வரவேயில்லை. தேவனுடைய கிருபையால் ஆச்சரியப்படும் விதத்தில் நான் பெலனடைந்தேன். அதினால் அம்மலையின் மீது நான் கட்ட விரும்பிய எனது புதிய இல்லத்தைப்பற்றி திட்டமிட்டேன்.

ஆபிரகாம் மற்றும் அவரது மனைவியின் உதவி மட்டும் இல்லையென்றால் நான் மரித்துப் போயிருப்பேன். அந்த இருவரும் அங்கு கட்டப்படும் வீட்டிற்குத் தேவையான பலகைகள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் சுமந்து வந்தனர். ஆபிரகாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். நான் எங்கெல்லாம் செல்ல வேண்டியதாக இருந்ததோ அங்கெல்லாம் அவரும் துணையாக என்னுடன் வந்தார். அவர் இயேசுவின் மேல் கொண்டிருந்த உண்மையான அன்பினால் மட்டுமே அதை செய்தார். அவரைப்போல ஆழ்ந்த தேவ அன்பை கொண்டிருப்போர் மிகச் சிலரே.

 
அநேகந்தரம் மரண இருளின் பள்ளத்தாக்கின்
ஊடாக கடந்து சென்றேன்

இந்த நேரத்திற்குள்ளாக எங்களது ஓய்வுநாள் ஆராதனையில் ஏறத்தாழ நாற்பது பேர் கலந்து கொண்டனர். அங்குள்ள கிராமங்களில் நல்ல செல்வாக்கைப் பெற்றிருந்த இவர்கள், எங்கள் பேரிலும், இவ்வாராதனைகளிலும் விருப்பமுள்ளவர்களாக இருந்தனர்.

ஒரு நாள் அதிகாலையில் என் வீட்டைச் சுற்றி ஆயுதம் தாங்கிய மனிதர்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டேன். ஒரு தலைவன் என்னிடம் வந்து அவர்கள் என்னைக் கொல்ல வந்திருப்பதாகக் கூறினான். என் ஜீவன் முற்றிலும் அவர்கள் கரத்திலிருப்பதைக் கண்ட நான் முழங்காற்படியிட்டு என் ஆத்துமாவையும், சரீரத்தையும் கர்த்தராகிய இயேசுவின் கரங்களில் ஒப்புவித்தேன். அந்த சூழ்நிலையில் பூமியில் என் ஜீவன் இருக்கும் கடைசி நேரம் அதுதான் எனக் காணப்பட்டது. பின்னர் நான் எழுந்து அவர்களிடம் சென்று நான் அவர்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளும்போது அவர்கள் என்னிடம் இரக்கம் இல்லாமல் நடப்பது ஏன் என்று அமைதியாகக் கேட்டேன். அவர்களின் இக்கொடூரமான நோக்கம் நிறைவேற்றப்பட்டால் அதினால் ஏற்படக்கூடிய துக்ககரமான பின் விளைவுகளை அவர்களுக்கு வெளிப்படையாக கூறினேன். இறுதியில் அவர்களுடன் வந்திருந்தவர்கள் உங்களுக்காக சண்டையிட்டு உங்களை வெறுப்பவர்களை கொன்றுபோடுவோம் என்று வாக்களித்தனர். என் நிமித்தமாக யாரையும் கொல்லக்கூடாது என்று நான் அவர்களிடமிருந்து வாக்குறுதியைப் பெற்றேன்.

ஆனால் மிகச் சீக்கிரத்தில் எங்களைக் கொன்று போட அவர்கள் கூட்டங்களில் மீண்டும் தீர்மானித்தனர். அவர்கள் மிஷனரிகளையும், தேவ ஆராதனைகளையும் வெறுத்தனர். அவர்களுக்காக ஜெபித்து சத்தியத்தைப் பேசுவதை விட்டுவிட்டால் அவர்கள் மத்தியில் நான் தங்கி வியாபாரம் செய்ய எனக்கு அனுமதி அளிப்பதாகக் கூறினர். ஏனெனில் அவர்கள் மிஷனரிகளை வெறுத்து வியாபாரிகளையே விரும்பினார்கள்.

அவர்களிடம் நான் பேசும்போது, உண்மையுள்ள ஜீவ தேவனாகிய யேகோவாவை அவர்கள் கண்டுகொள்ள செய்து அவரை சேவிக்க கற்றுத் தரும் ஒரே நோக்கத்துடன்தான் நான் அங்கே இருக்கிறேனேயன்றி மற்றபடி வேறு எந்த ஒரு உலக ஆதாயத்திற்காகவோ அல்லது உலக இன்பங்களை அனுபவிக்கவோ அல்ல என்றேன்.

சில நாட்களுக்குப் பின் திரள் கூட்டமாக அம்மக்கள் திடுமென என் வீட்டின் முன் வந்து கூடினர். அவர்களில் ஒருவன் தனது கோடரியை ஆவேசமாக ஓங்கியபடி என்னைத் தாக்க வந்தான். அதே சமயத்தில் நான் கையில் வைத்திருந்த மண்வெட்டியை ஒரு தலைவன் பிடுங்கி மிகவும் சாமர்த்தியமாக அதைப் பயன்படுத்தி நான் உடனடியாக கொல்லப் படாதபடி ஆச்சரியமாக என்னைப் பாதுகாத்தான். என் வாழ்வில் இதுபோன்ற பயங்கரமான சூழ்நிலைகள் கர்த்தராகிய இயேசுவை நான் இறுகிப்பற்றிக்கொள்ள என்னை வழிநடத்தின. ஆனபோதிலும் என் சோர்ந்து போன கரங்களை கல்வாரியில் ஆணிகளால் கடாவப்பட்ட கரங்கள் இறுகப்பற்றிக் கொண்டபடியால் என் ஆத்துமாவில் சொல்லொண்ணா அமைதியும் இவைகளை மகிழ்ச்சியோடு சகிக்கும் தேவ பெலத்தையும் எனக்கு அளித்தது. நான் எல்லாவற்றையும் அவருடைய கரங்களில் விட்டுவிட்டு எனது தேவ ஊழியங்கள் முடியும் வரை எனக்கு மரணமே இல்லை என்பது போன்ற தைரியத்துடன் செயல்பட்டேன்.

சோதனைகளும், மயிரிழையில் நான் தப்பிப் பிழைத்த சம்பவங்களும் என் விசுவாசத்தை பெலப்படுத்தியதோடு இன்னும் வரப்போகின்ற அநேக நாச மோசங்களுக்கும் என்னை ஆயத்தப்படுத்தவும் செய்தது. இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்ற அன்பரின் வார்த்தைகள் எனக்கு தத்ரூபமாக இருந்தது. அதினால் இப்படிப்பட்ட கொலை மிரட்டல் காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடையாமல், ஸ்தேவானைப்போல இரட்சகர் இயேசுவின் பொன் முகம் நோக்கிப் பார்க்க உதவிசெய்தது. என் உயிருக்கு எதிராக துப்பாக்கியோ, கூர்மையான கல்லோ, கோடரியோ, தடியோ எதுவாக இருந்தபோதினும் அதின் மூலமாக பாதுகாக்கும் கர்த்தாவின் இனிய முகத்தை என்னால் காண முடிந்தது. என்னைச் சுடவந்தவர்கள் எங்கள் இடங்களை தீயிட்டு கொளுத்த திட்டமிட்டார்கள். தேவன் அதிலிருந்தும் எங்களைக் காத்தார்.

அனீத்தியம் என்ற தீவிலிருந்து வந்த ஆசிரியர்களில் ஒருவரான நாமுரி எங்களுக்கு மிக அருகில் இருந்த கிராமத்தில் தங்கி இருந்தார். அங்கே அவர் அக்காட்டுவாசிகளின் மத்தியில் வீட்டைக்கட்டிக் கொண்டு எளிமையும், பரிசுத்தமுமான கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலம் அவரைச் சூழ்ந்திருந்த காட்டுமிராண்டிகளான மக்களுக்கு தேவ ஆலோசனை வழங்கி ஆராதனைகள் நடத்தி போதித்து வந்தார். அங்கு அவரது தேவ ஊழியம் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் காலை ஒரு பூசாரி, பிறரைக் கொல்லப் பயன்படும் பதினெட்டு அல்லது இருபது அங்குல நீளமுள்ள "கவாஸ்" எனப்படும் கல்லை அவரை நோக்கி எறிந்தான். அவரது வலது கரத்தை அது ஆழமாக வெட்டிவிட்டது. தனது தடியை ஓங்கியபடி அந்த பூசாரி அவர்மேல் பாய்ந்தான்.

அவர் அநேக அடிகள் அடிக்கப்பட்டதால் இரத்தம் ஒழுக மயங்கிய நிலையில் எங்கள் இல்லத்தை வந்தடைந்தார். அவரைப் பின் தொடர்ந்து கூக்குரலிட்டபடி ஒரு கொலைபாதக கும்பல் வந்தது. இச்சத்தம் கேட்டு நான் வெளியே ஓடினேன். இரத்தம் ஒழுக தள்ளாடியபடி வந்த அவர் மேற்கொண்டும் நடக்கமுடியாமல் அங்கிருந்த ஒரு மரத்தில் சாய்ந்தபடி "மிஸி, மிஸி, நீங்கள் சீக்கிரம் தப்பிக்கொள்ளப்பாருங்கள். உங்களைக் கொல்ல அவர்கள் வருகின்றார்கள். நம் யேகோவாவையும், அவருடைய ஆராதனைகளையும் இவர்கள் வெறுப்பதால் இன்றைக்கு நம் எல்லாரையும் கண்டிப்பாகக் கொன்றுவிடத் தீர்மானித்து முதலாவது என்னைத் தாக்கியிருக்கின்றனர்" என்றார்.

நான் அவரை உள்ளே கொண்டு வந்து அவரது காயங்களைக் கழுவி மருந்து வைத்துக்கட்டினேன். தேவன் தமது அற்புதமான தயவால் அந்த மூர்க்கமான மக்கள் மேற்கொண்டு வராமல் கடற்கரையிலேயே நின்று போகச் செய்தார். நாமுரியை மிஷன் வீட்டில் வைத்து மிக கவனமாகப் பணிவிடை செய்தோம். நான்கு வாரங்களுக்குப் பின்பு மீண்டும் அவர் எழுந்து நடக்கத்தக்கதான வகையில் நன்கு குணம் அடைந்தார். அவர் இருந்த கிராமத்தின் மக்களில் சிலர் அவரை திரும்ப அக்கிராமத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர். ஆனால் நான் கடற்கரைப் பகுதியில் உள்ள சில தலைவர்களுடன் பேசி அவருக்கு இப்படிச் செய்தவனை தண்டிக்க வேண்டும் என்றேன். அத்தலைவர்கள் அவனைப் பிடித்து ஒரு கயிற்றினால் அவனைக் கட்டி வைத்து அவன் தண்டிக்கப்படுவதை நான் பார்க்க வரும்படி என்னை அழைத்தனர். இதனால் இன்னும் அதிக இரத்தக் களறி ஏற்பட வாய்ப்பு இருந்ததால் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்று நான் அங்கு சென்று அவர்களுடன் பேசி அநேக வாக்குறுதிகள் பெற்ற பின் அவனைக் கட்டவிழ்த்து விட்டோம்.

எல்லாம் சில காலத்திற்கு நன்றாக இருப்பதாகக் காணப்பட்டது. நாமுரி தனது தேவ ஊழியத்தை தொடர தனது கிராமத்திற்குப் போக விரும்பினார். அவர் எங்களுடன் தங்கியிருக்க தேவ ஆலோசனை கூறினேன். ஆனால் அவரோ "மிஸி, அவர்கள் என் இரத்தத்தை சிந்த துடிப்பதைக் காணும்போது எனது தீவிற்கு மிஷனரி முதன் முதலாவதாக வந்தபோது நான் துடித்ததையே இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். என்னை இவர்கள் எப்படி கொல்லப் பார்க்கிறார்களோ அப்படியே நானும் அவரைக் கொல்லப்பார்த்தேன். இப்படிப்பட்ட அபாயத்தைக் கண்டு அவர் வராமல் இருந்திருந்தால் நான் ஒரு நரமாமிசம் உண்ணும் காட்டு மிராண்டியாகவே இருந்திருப்பேன். ஆனால் அவர் தொடர்ந்து வந்து எங்களுக்கு சுவிசேஷத்தைப் போதித்தார். தேவ கிருபையால் நான் இன்று இருக்கும் வண்ணமாக மாற்றம் பெற்றுள்ளேன். ஆகவே என்னை இவ்வாறு மாற்றிய தேவன் அங்குள்ளவர்களையும் அவரை நேசித்து அவரைச் சேவிக்கும்படி மாற்ற முடியும். ஆகவே அவர்களுக்கு உதவாமல் நான் இங்கு தங்கியிருக்க என்னால் முடியாது. வேண்டுமானால் இரவில் இங்கு வந்து தூங்குகின்றேன். பகல் முழுவதும் அவர்களை இயேசுவண்டை கொண்டு வர என்னால் முடிந்தவற்றை செய்வேன்" என்றார். நானும் சரி என்று அவரை அனுப்பிவிட்டேன்.

 
நாமுரி என்ற அந்த தேவ ஊழியரின்
இரத்த சாட்சி மரணம்

அநேக வாரங்கள் காரியங்கள் எல்லாம் நம்பிக்கை ஊட்டுவதைப் போல நடந்து கொண்டிருந்தன. அந்த தீவினர் எங்கள் மீதும், எங்கள் ஊழியத்தின் மீதும் அதிக ஆர்வம் காண்பித்தனர். ஒரு நாள் காலை நாமுரி ஓய்வு நாள் ஆராதனை நேரத்தில் ஜெபிக்க முழங்கால்படியிட்டபோது, முன்பு கல் எறிந்து தடியால் அடித்த அதே மூர்க்கமான பூசாரி அவர் மீது பாய்ந்து, தனது பெரிய தடியால் அவர் மரித்துப்போகும்படி அடித்து இரத்தம் ஒழுக மயங்கிய நிலையில் கிடக்கும்படி அவரைப் போட்டுவிட்டு ஓடிப்போய்விட்டான். அங்கு ஆராதனையில் கலந்து கொண்ட மக்கள் எல்லாரும் தங்களையும் இந்த கொலையில் சம்பந்தப்படுத்திவிடுவார்களோ என்று பயந்து ஓடிவிட்டனர். நாமுரிக்கு ஓரளவுக்கு சுய நினைவு இருந்ததால், தேவ கிருபையால் அவருடைய இடத்திலிருந்து தவழ்ந்தபடியே நகர்ந்து நகர்ந்து மத்தியான நேரத்தில் எங்கள் இல்லத்திற்கு மரிக்கும் நிலையில் வந்து சேர்ந்தார். அவரண்டை ஓடிய என்னைப் பார்த்து "மிஸி, நான் மரித்துக்கொண்டு இருக்கிறேன். உங்களையும் அவர்கள் கொன்றுவிடாதபடி தப்பிச் சென்றுவிடுங்கள்" என்றார். நான் அவரை ஆறுதல்படுத்தியவாறே அவருடைய காயங்களுக்கு மருந்து வைத்துச் சிகிட்சை செய்தேன். அவரது வலியும், வேதனையும் பெரியதாக இருந்தாலும் அதை அவர் மிக அமைதியாக சகித்துக் கொண்டார். "இவை யாவும் என் இயேசுவுக்காக, இவை யாவும் என் இயேசுவுக்காக" என்று மட்டும் அவர் சொல்லிக் கொண்டே இருந்தார்.

இறுதியாக அவர் தன்னைக் கொல்ல முயன்றவர்களுக்காக ஜெபித்தார். "ஓ, ஆண்டவராகிய இயேசுவே, அவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாததால் அவர்களை மன்னியும். டாணாவில் இருந்து உமது ஊழியக்காரர்களை எடுத்துவிடாதேயும். இந்த இருளான தேசத்திலிருந்து உமது ஆராதனையை எடுத்துவிடாதேயும். ஓ, தேவனே! இந்த டாணா மக்கள் அனைவரும் இயேசுவை நேசிக்கவும் அவரைப் பின்பற்றவும் அவர்களுக்கு இரக்கம் செய்யும்" என்று ஜெபித்தார்.

நாமுரிக்கு இயேசுவே எல்லாவற்றிலும் எல்லாமாக இருந்தார். அவரது மரணத்தின் போது எந்தவித இசையும் இசைக்கப்படவில்லை. அவர் கர்த்தரின் மகிமைக்குள் பிரவேசிக்கும் நிச்சயமான நம்பிக்கையுடன் இந்த உலகத்தை விட்டுக் கடந்து சென்றார். உலகத்தின் பார்வையில் அவர் அற்பமாக இருந்தாலும் இரத்தசாட்சிகளின் தைரிய சேனையில் தனது ஸ்தானத்தைப் பெற்றுக்கொள்ளும்படி இயேசுவின் ஊழியத்தில் இருந்து ஒரு பரிசுத்த மனிதர் பரலோகம் சென்றுள்ளார் என்று நான் ஆனந்த களிகூருதலோடு உணர்ந்தேன். மிகுந்த கண்ணீரின் ஜெபங்களோடும், மகிழ்ச்சியான உயிர்த்தெழுதலின் நம்பிக்கையோடும் எங்கள் டாணாவின் மிஷன் வளாகத்தினுள் அவரை அடக்கம் செய்தோம்.

இதன் பிறகு அந்த தீவினரை வேலைக்கு அமர்த்தி ஆலயமாகவும், பள்ளிக்கூடமாகவும் பயன்படும் ஒரு கட்டிடத்தை நிர்மாணித்தோம். இந்த ஆலயத்திற்கான அஸ்திபாரத்தை தோண்டும்போது ஒரு பெரிய வட்டவடிவக்கல் அடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. அதைப் பார்த்த டாணா மக்கள் அதிர்ந்து போயினர். ஏனெனில் அது அவர்களின் முன்னோர்களால் பலிகளைச் செலுத்தி வழிபட்ட கல் கடவுள் ஆகும். அவர்கள் மதியீனமான கருத்துக்களில் உள்ள பைத்தியக்காரத்தனத்தை அவர்களைவிட்டு துரத்தியடிக்க அந்த கல்லை அவர்கள் கண்களுக்கு முன்பாகவே போட்டு உடைத்து நொறுக்கினேன்.

 
ஒரு ஆச்சரியமான கூட்டம்

எனக்கு மிக நெருக்கமானவரும், எங்களால் பெரிதும் நம்பப்பட்ட தலைவருமான நோவார், என்பவர் யேகோவா ஆராதானைக்கு ஆதரவை உண்டாக்க அக்கடற்கரைப் பகுதியை சுற்றியுள்ள அனைத்துத் தலைவர்களையும், மக்களையும் அவர் ஒரு கூட்டத்திற்கு அழைத்தார். ஏறத்தாழ 16 கி.மீ. சுற்றளவில் வாழ்ந்த அனைவரும் அழைக்கப்பட்டனர். அத்தீவில் கூடிய கூட்டங்களிலேயே இதுதான் மிகவும் பெரியது என்று சொல்லத்தக்க வகையில் அந்தக் கூட்டம் கூடியது. எல்லாம் ஆயத்தமானபோது நானும் எனது ஆசிரியர்களும் அங்கு சென்றோம். 14 தலைவர்கள் அங்கு கூடியிருந்த மக்களோடு பேசினர். அவர்கள் பேசியது யாதெனில்:-

"டாணாவில் சண்டையையும், யுத்தத்தையும் விட்டுவிட வேண்டும். பில்லிசூனியமும், மந்திர வித்தைகளும் பொய்களானதால், மக்கள் எவரும் கொல்லப்படக்கூடாது. மழையும், காற்றும், வறுமையும், செழிப்பும், வியாதியும், மரணமும் பூசாரிகளால்தான் வருகின்றது என்ற டாணாவின் மூடப்பேச்சுக்கள் நம்மைவிட்டு ஒழிக்கப்பட வேண்டும். மிஷனரியால் கற்றுக்கொடுக்கப்படும் யேகோவா ஆராதனையை இங்கு கூடியுள்ள யாவரும் பின்பற்ற வேண்டும். பூசாரிகளால் தண்டிக்கப்பட்டு விரட்டப்பட்ட நமது ஜாதி மக்களை மீண்டும் அவரவர் கிராமங்களில் வந்து சமாதானத்துடன் வசிக்க அனுமதிக்க வேண்டும்" என்பதே.

இந்த பரவசமான பேச்சுக்களை எதிர்க்கும் ஒரு குரலும் கூட்டத்திலிருந்து எழும்பவில்லை. அந்த கூட்ட முடிவில் அவர்கள் எல்லாரும் நன்றாக உணவருந்தி மகிழ்ச்சியாகச் சென்றார்கள்.

 
அனீவா தீவில் தேவ ஊழிய ஆரம்பம்

இருளின் பிடியில் சிக்கியுள்ள டாணாவை வருங்காலத்தில் ஆதாயப்படுத்த உதவும் ஒரு ஊழிய மையமாக இருக்க தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட இடமாக அனீவா தீவு இருந்தபடியால் நான் ஆறுதல் அடைந்தேன். நியூஹெப்ரட்டிஸ் தீவுக்கூட்டத்தில் அனீவா சுற்றிலும் பவளப்பாறைகள் நிறைந்த கடற்பகுதியைக்கொண்டதொரு தீவாகும். இங்கு மழைப் பொழிவை உண்டாக்கக்கூடிய உயரமான மலைகள் இல்லாவிட்டாலும் பனிப்பொழிவும், ஈரப்பதமான காற்றும் இருந்து கொண்டே இருந்ததால் அவை பயன்தரும் பசுமையான மரங்கள் வளர உதவின. இத்தீவின் கடற்பகுதி கப்பல்கள் வந்து தங்குவதற்கு ஏற்றதாக இல்லை.

நாங்கள் இங்கே கரை இறங்கியபோது அத்தீவினர் எங்களை கனிவுடன் வரவேற்றனர். அவர்களும், அனீட்டியத்திலிருந்து வந்த ஆசிரியர்களும் எங்களுக்குத் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அது ஒரே ஒரு அறை மட்டுமே கொண்டதாக இருந்தபடியால் நாங்கள் கொண்டு சென்ற பொருட்களை எல்லாம் அங்கேயே வைக்க வேண்டிதாயிற்று. இத்தீவில் உள்ள மக்கள் டாணாவில் உள்ளவர்களைப்போல கொடூரமும், மூர்க்கமானவர்களாக காணப்படாவிட்டாலும் தங்கள் தேவைகளைத் தந்திரமான மிரட்டல்கள் மூலமாகவோ அல்லது அச்சுறுத்தல்கள் மூலமாகவோ சாதிக்கும் திறமை பெற்றவர்கள். அவர்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும் வரை அவர்களிடம் அமைதியாகவும், கனிவுடனும் நடந்து கொள்ளுவது அவசியமாயிற்று. இத்தீவினரின் மொழி டாணா மொழியிலிருந்து வேறுபட்டு இருந்தது. இந்த தீவில் மரங்கள் சூழ்ந்த அழகிய தோற்றம் அளித்த ஒரு சிறு குன்று பகுதியை எங்களுக்கு நிரந்தரமான ஒரு வீட்டைக்கட்ட நாங்கள் தெரிந்தெடுத்தோம். அங்கிருந்து பார்த்தால் டாணா தீவும், எரோமாங்கோ தீவும் தெளிவாகத் தெரிந்தன. ஆனால் அத்தீவினர் அங்கு நாங்கள் வீட்டைக் கட்டாதபடி ஏதேதோ காரணங்கள் சொல்லி தடுத்து, ஏறத்தாழ அதற்கு ஒத்த கடற்கரையோரமாய் இருந்த ஒரு மண் திட்டின்மேல் கட்டும்படி அதிகம் வலியுறுத்தினர். என்ன நோக்கத்திற்காக அவர்கள் அதைச் சொல்லியிருந்தபோதினும் அந்த இடமே பின் நாட்களில் தேவ ஊழியத்திற்கான மிகச் சிறந்த இடமாக மாறியது.

அங்கு நாங்கள் வீட்டைக் கட்டும்போது அந்த வீட்டுடன் இரண்டு அநாதை ஆச்சிரமங்களை ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக அமைத்தோம். ஏனெனில், இங்கு கணவன்மார்கள் இறந்த உடன் அவர்களுடைய மனைவிகள் கொல்லப்படுவதால் அவர்களது பிள்ளைகளைப் பாதுகாத்து வளர்க்க நினைத்தோம். நாங்கள் அவர்களது மொழியை ஓரளவு கற்ற உடனேயே இயேசுவைப்பற்றி அவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தோம். டாணா மொழியை எவ்வண்ணம் கற்றோமோ அவ்வாறே அனீவா மொழியையும் கற்றோம்.

எங்களது புதிய வீட்டிற்கு பொருட்களை எடுத்துச் சென்று வைக்க இரு வாலிபர்களை ஏற்பாடு செய்தோம். அவர்கள் இருவரும் எங்கள் பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்தவுடன் இரத்தவாந்தி எடுக்க ஆரம்பித்தனர். அதில் ஒருவன் மரித்துவிட்டான். அவன் எரோமாங்கா தீவைச் சேர்ந்தவன். மற்றொருவனின் தந்தை தன் மகனும் அப்படி மரித்துவிட்டால் மிஷன் வீட்டில் உள்ள எல்லோரையும் கொன்றுவிடுவதாக மிரட்டிக் கொண்டிருந்தான். தேவன் கிருபையுள்ளவராய் இருந்து அவனை குணமாக்கினதால் நாங்கள் உடனடியான அபாயத்திலிருந்து தப்பினோம்.

இத்தீவில் நாங்கள் தங்கும்படி முதலில் கேட்ட இடத்தை ஏன் தரவில்லை என்ற காரணம் அத்தீவின் தலைவன் நமாகீ கிறிஸ்தவனாகி சாட்சி கூறியபோதுதான் தெரிய வந்தது. அவர் தமது சாட்சியில்:-

"மிஸி, நமது தீவிற்கு வந்தபோது அவர் தன்னுடன் நமக்குத் தேவையான போர்வைகள், காலிகோ துணி, கோடரி, கத்தி, மீன் தூண்டில் முட்கள் இன்னும் பல பொருட்களைக் கொண்டு வந்ததைப் பார்த்தோம். அவரை நாம் இங்கு தங்க அனுமதிக்காவிடில் நமக்கு அந்தப் பொருட்கள் ஒன்றும் கிடைக்காது. ஆகவே, அவரை நமது தீவில் இறங்க அனுமதித்தோம். ஆனால் அவர் தங்கும்படி அவர் கேட்ட இடத்தை நாம் கொடுக்காமல் நமது தீவில் சாபக்கேடான இடம் என்று நம்மால் கருதப்பட்ட இடத்தைக் கொடுத்தோம். காரணம், அவர் அங்கு தங்கும்போது நமது தேவதைகள் அவரைக் கொன்றுவிடும். அவ்வாறு இறந்துவிட்டால் அவரது பொருட்கள் அனைத்தும் நமக்கு உரியதாகிவிடும் என எண்ணினோம். ஆனால் அவரும் அவரோடு இருந்தவர்களும் அங்கு தங்கினார்கள். அவரை நம் தேவதைகள் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கு வாழை மரங்களையும் பல கனி தரும் மரங்களையும் நட்டார்கள். அந்த மரங்களில் விளைந்த கனிகளை புசிக்கும்போது அவர்கள் மரித்தவிடுவார்கள் என்று நாம் எண்ணினோம். ஏனென்றால் அங்குவிளைந்த எப்பொருளையும் நமது தீவினர் புசித்தபோது மரித்துப் போனதை நாம் கண்டிருந்தோம். ஆனால் அவர்கள் மரிக்கவில்லை. ஆகவே நமது மூதாதையர் சொன்னது தவறு என்றும், நமது தேவர்கள் அவர்களைக் கொல்ல முடியாது என்றும் அறிந்துகொண்டோம். மேலும் அனீவாவில் நாம் நம்பும் தேவர்களை விட அவர்கள் நம்பும் தேவனாகிய யேகோவா ஒருவரே பெரியவர் என்பதையும் நான் விளங்கிக் கொண்டேன்" என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து நான் பேசும்போது நமாகீ சொன்ன கருத்தை வலியுறுத்தி "அந்த வல்லமையுள்ள யேகோவாதான் இன்று நீங்கள் அனுபவிக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் தந்து இப்போது நீங்கள் அவரை அறிந்து கொள்ளும்படி உங்களுக்கு அவரைப் போதிக்க எங்களை உங்களிடம் அனுப்பியுள்ளார்" என்று கூறினேன். அத்தீவினர் இவற்றை ஆர்வத்துடனும் அமைதியுடனும் கேட்டனர்.

இம்மக்கள் பருத்தி ஆடைகளையோ அல்லது முழங்கால்வரை தொங்கும் கம்பளி ஆடைகளையோ அணியத்தொடங்கினால் அது அவர்கள் கிறிஸ்துவண்டை வந்திருக்கின்றார்கள் என்பதற்கான அடையாளமாகக் காணப்பட்டது. அவர்கள் "அப்பா, பிதாவே" என்று பரத்தை நோக்கி விண்ணப்பித்தபோது அவர்களது வேண்டுதல்கள் கிறிஸ்தவ மார்க்கத்தில் தங்களைப் பெரிய பரிசுத்தவான்கள் என்று எண்ணியிருப்பவர்களின் ஜெபங்களை விட அதிகமான களிகூருதலை பரலோகத்தில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆகவே நான் இவ்வாறு உணரும்போதெல்லாம் காட்டுமிராண்டிகளான, நாகரீகமற்ற அந்த மக்களைக் குறித்து நொறுங்குண்ட இருதயத்தோடும், கண்ணீரோடும் தேவனில் களிகூருகின்றேன்.

 
அனீவா தீவினரின் பழிவாங்கும் பழக்கங்களும் சுவிசேஷத்திற்கு செவிசாய்க்கும் உத்தம குணமும்

இத்தீவினரின் ஒரு பகுதியினர் நம்பகத்தன்மையற்றவர்களும், ஒதுங்கிப்போகிறவர்களுமாய் இருந்தனர். தீவின் உட்பகுதியில் இருந்தவர்கள் வீம்பும், கர்வமும் நிறைந்தவர்களாக இருந்தனர். இவர்கள் ஆடையே அணிவதில்லை. ஆனால் குடும்ப பெண்களும், வயோதிபப் பெண்களும் புல்லினால் ஆன மேலாடையை உடுத்தியிருந்தனர். இத்தீவின் தலைவர்களுக்குள் ஒருவராகிய நமாகீ என்பவர் எங்கள் ஊழியத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் பெரும்பாலானோர் எங்களிடம் உள்ள பொருட்களின் மீது மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தனர். இப்பொருட்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்பினர்.

நான் அவர்களது மொழியை ஓரளவு கற்றவுடன் அவர்களது கிராமங்களைச் சந்தித்து இயேசுவையும், அவரது அன்பின் சுவிசேஷ நற்செய்தியையும் கூறும்படி தொடர்ச்சியாகச் சென்றேன். அந்த தீவில் நாசி என்ற மனிதனும் அவனுடன் இருந்த இழிந்த குணம் படைத்தவர்களும் நான் இயேசுவைப் பற்றிப் பேசும்போது எங்களுக்கெதிரே அமர்ந்தபடி தங்கள் கோபமான முகபாவனை மூலமாகக் காண்பித்தனர். அல்லது துப்பாக்கியால் எங்களைச் சுடும்படி எங்களைப் பின் தொடருவார்கள். இவர்கள் மத்தியில் மிகவும் எச்சரிக்கையோடு நாங்கள் தேவனுடைய ஊழியங்களை செய்து கொண்டு வந்தோம். என்னை அடிக்கடி தாக்க உயர்த்தப்பட்ட தடிக்கும், கொல்லுவதற்காக குறி வைக்கப்பட்ட துப்பாக்கியின் முனைக்கும் முன்பாக நான் சிக்கிக் கொள்ளும் பேதெல்லாம் "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, நான் உன்னைக் கைவிடுவதுமில்லை" என்ற தேவனுடைய வாக்குத்தத்தின் மேலேயே சார்ந்து நின்று தேவன் எனக்குத் தந்த பாதுகாப்பை உணர்ந்தேன்.

 
ஊழியத்தில் கனிகள்

இத்தீவில் முதலாவதாக தேவனைக் குறித்த அறிவைப் பெற்றது நமாகி என்ற வயதான தலைவர்தான். அவரது சகோதரனோ எங்களுக்கு விரோதமாக இருந்தான். மற்றபடி அவரது கூட்டத்தினர் அனைவரும் எங்களோடு இணக்கமாக இருந்தனர். நாஷ்வாய் என்ற தலைவனும் அவனது மனைவி காட்வாயும் இரட்சகரை அறியும் அறிவுக்குள்ளாக தங்களை எங்களுடன் இணைத்துக் கொண்டனர். அதனால் காட்டுமிராண்டித்தனமான அவர்களது குணாதிசயங்கள் மாறி பெருந்தன்மையான நேச சுபாவங்கள் இவர்களுக்குள் வந்ததால் நாங்கள் இவர்களை எங்கள் உயிரினும் மேலாக நேசித்தோம். நமாகி ஒரு நாள் தனது ஒரே மகளான லிட்சிசோர் என்பவளை அழைத்து வந்து "என் மகள் இயேசுவைப்பற்றி நன்றாக அறிந்து கொள்ள உங்களுடனேயே இருக்கட்டும்" என்று கூறி எங்களிடம் அவளை விட்டுப் போனார். அவள் அதிக புத்திக்கூர்மையுள்ளவளாக இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாள். அவள் என் மனைவிக்கு ஒரு தோழியைப்போல இருந்தாள். என்னை எதிர்த்து வந்த நமாகியின் சகோதரன் தன்னுடைய மகளையும் எங்களிடம் வளர்வதற்காக கொண்டு வந்து விட்டான். அவர்கள் இங்கு மகிழ்ச்சியாக இருந்ததை தங்கள் பெற்றோர்களிடம் சொன்ன போது அவர்கள் நாங்கள் செய்யும் தேவ ஊழியத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். இதினால் தேவனுடைய சுவிசேஷத்தின் வல்லமை எல்லா பக்கமும் பரவ ஆரம்பித்தது. அதின் காரணமாக தாய் இல்லாத அநேகப்பிள்ளைகள் எங்களிடம் வளரும்படி விடப்பட்டனர்.

எங்கள் வீடு இயேசுவின் பள்ளியாக மாறியது. ஆண் பிள்ளைகள் எனக்கு உதவியாளர்களாக எழும்பினார்கள். என் மனைவி பெண் பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும், குடும்ப பொறுப்புகளையும் கற்றுக்கொடுத்து வந்தார்கள். பின் நாட்களில் இப்பிள்ளைகளில் அநேகர் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களாகவும், சுவிசேஷகர்களாகவும் எழும்பினர்.

இத்தீவினரின் மத்தியில் எங்களது ஆரம்ப கால ஊழியத்தின் போது ஏற்பட்ட நாச மோசங்கள், மரண ஆபத்துக்கள், எங்களைக் கொல்லுவதற்கான கொடூர சதித்திட்டங்கள் இவற்றினின்று எங்கள் அநாதை இல்லத்துச் சிறுவர்கள்தான் முன்கூட்டியே எங்களை எச்சரித்து எங்களைக் காப்பாற்றினர். எந்த சூழ்நிலையிலும் எங்களுக்கு உதவும் இந்தப் பிள்ளைகளை நாங்கள் காட்டிக் கொடுக்காததால் எங்கள் மீது அவர்களுக்கு ஏற்பட்ட பூரண நம்பிக்கையால் எங்கள் ஜீவனைக் காக்கும் பாதுகாவலர்களாக அவர்கள் செயல்பட்டனர்.

இந்த தீவிலுள்ள மக்கள் பாம்பை வணங்கினார்கள். அவர்கள் மத்தியில் குழந்தைகளைக் கொல்லுவது சர்வசாதாரணமாக இருந்தது. அதை ஒழிக்க நாங்கள் தேவ பெலத்தால் கடுமையாகப் போராடினோம். அதினால் எழுந்த பல்வேறு எதிர்ப்புகளையும் வெளிப்படையாகவே நாங்கள் சந்தித்தோம். இறுதியில் தேவன் எங்கள் போராட்டத்திற்கு வெற்றி தந்தார். எந்தக் கரங்கள் சிறுபிள்ளைகளைக் கொன்றதோ அதே கரங்கள் அப்பிள்ளைகளை பாசத்துடன் வளர்க்கக் கூடியவைகளாக தேவன் அவர்களை தொட்டு மாற்றினார். அதே போல மனைவிமார்களைக் கொல்லுவதும் சட்டத்திற்கு உட்பட்டதாகக் கருதப்பட்டது. இவ்வாறு தன் மனைவியையே கொன்றுவிட்ட ஒரு மனிதனை விவாகம் செய்து கொண்ட வேறு ஒரு பெண் எங்களது கூட்டத்திற்கு தனது பிள்ளைகளுடன் வந்து கலந்து கொண்டாள். இறுதியில் அவளது கணவனும் அவளுடன் வந்து மனம்மாறினான். அவனது மாற்றம் மிக வெளிப்படையாகக் காணப்பட்டது. இருவரும் தங்கள் பிள்ளைகளை சரியான தேவ பயத்தில் வளர்க்க பொருத்தனை செய்து கொண்டு அதின்படியே ஜீவித்தனர். அப்பம் பிட்கும் பந்தியில் அவர்கள் கலந்துகொள்ளும்போதும் அவர்கள் எப்பொழுதும் அதிக மனத்தாழ்மையுடன் காணப்பட்டனர்.

 
ஒரு கிணற்றினால் உண்டான அதிசய மாற்றம்

அனீவா தீவிலுள்ள காட்டுமிராண்டி மார்க்கத்தின் முதுகெலும்பை முறித்துப்போட்ட ஒரு கிணற்றின் கதையை நான் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அனீவா, பவளப்பாறைகள் நிறைந்ததும், மேகங்களைக் கவரக்கூடிய மலைகள் அற்றதுமான தட்டையான நிலப்பரப்பை உடைய தீவாக இருந்ததால் மற்ற தீவுகளைக் காட்டிலும் இங்கு மழைப் பொழிவு குறைவானதாகவே இருந்தது. அப்படியே தப்பித் தவறி பெருமழை பெய்தாலும், மழை நீர் நிலத்தில் தங்கி நிற்காமல் சுண்ணாம்பு பாறைகள் வழியாக ஓடி கடலில் கலந்துவிடும். மேலும் அங்குள்ள உறுதியற்ற மணற்பரப்பு தண்ணீரை தேக்கிவைக்க லாயக்கற்றதாய் இருந்ததால் நீரெல்லாம் பூமிக்குள் சென்றுவிடும். இங்கு டிசம்பர் முதல் ஏப்பிரல் வரை மழை காலமாகும். அப்போது விஷஜூரம் இத்தீவு முழுவதும் பரவி விடும். அனீவாவில் ஊற்றுத் தண்ணீர் கிடைக்கும்படி நீரூற்றோ அல்லது ஓடையோ ஏரியோ இல்லாததால் சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். ஆகவே நான் மிஷன் வீட்டின் அருகில் தேவ ஒத்தாசையுடன் ஒரு கிணறு தோண்ட நினைத்தேன். எனக்கு எப்படிப்பட்ட இடத்தில் கிணறு தோண்ட வேண்டும் என்று அறிவியல் பூர்வமான ஞானமெல்லாம் கிடையாது. தேவன் எனக்கு உதவி செய்வார் என்ற முழு நம்பிக்கையுடனும், ஜெபத்துடனும் முப்பது அடிக்கும் மேலாக தோண்டினேன். அதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை. அப்படியே நீர் கிடைத்தாலும் அது உப்பு நீராக இருந்துவிடுமோ என்ற பயமும் எனக்குள் இருந்தது. எப்படியிருப்பினும் தேவ குமாரன் மகிமைப்படும்படி தேவன் உதவி செய்வார் என்ற விசுவாசத்தோடு நான் தோண்டிக் கொண்டே இருந்தேன்.

ஒரு நாள் நான் நமாகீயிடமும் அவரது நண்பரிடமும் "நம் தேவன் பூமிக்கடியில் இருந்து நல்ல தண்ணீரைத் தருவாரா என்று பார்க்கும்படி ஒரு கிணறு தோண்டப் போகிறேன்" என்றேன். அவர்கள் என்னை ஆச்சரியத்துடன் பார்த்து இரக்கம் தோய்ந்த குரலில் " ஓ மிஸி! மழை வரும் வரை காத்திருங்கள். நாங்கள் உங்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்து வைப்போம்" என்றனர்.

நானோ "நாம் எல்லாரும், தண்ணீர் இல்லாவிடில் மரித்து விடுவோம். எங்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்கா விட்டால் இங்கிருந்து போய்விடுவோம்" என்றேன்.

வயது முதிர்ந்த நமாகீ மிகுந்த பரிதாப உணர்வுடன் என்னை நோக்கி "ஓ மிஸி, உங்களுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கின்றேன். அதனால்தான் இப்படிப் பேசுகின்றீர்கள். பூமியிலிருந்து மழை வரும் என்று இங்குள்ளவர்கள் யாராவது பார்க்கும்படி பேசிவிடாதீர்கள். நீங்கள் இப்படிப் பேசுவதை யாராவது கேட்டுவிட்டால், அதின் பிறகு யாரும் உங்களை மதிக்கமாட்டார்கள்" என்றார்.

நமாகீ என்னைப் பரிதாபமாகப் பார்த்து "பாவம் மிஸி, பைத்தியம் பிடித்துவிட்டால் எல்லாரும் இப்படித்தான் நடப்பார்கள். யார் புத்தி சொன்னாலும் இவர்களுக்கு ஏறாது. அதனால் நான் பொறுத்திருந்து பார்க்கின்றேன். நீங்கள் களைத்துப் போகையில் தானாகவே இதைவிட்டுவிடுவீர்கள்" என்றார்.

பூமத்தியரேகை வெப்ப மண்டலப் பகுதியில் இந்த தீவுக்கூட்டம் இருப்பதால், இங்கு சூரிய வெப்பம் கடுமையாக இருக்கும். அதினால் நான் என் வேலையில் சீக்கிரம் களைத்துப் போனேன். நான் வீட்டிற்குள் சென்று என் பாக்கெட்டை மீன் பிடிக்கும் தூண்டில் முள்களால் நிரப்பிக் கொண்டு வெளியே வந்து அங்கே வேடிக்கை பார்க்க கூடியிருந்தவர்களைப் பார்த்து "இக்குழியில் இருந்து மூன்று பக்கெட் மண்ணெ வெட்டி வெளியில் போடுகிறவர்களுக்கு இந்த பெரிய தூண்டில் முள் ஒன்று இலவசம்" என்றேன். ஏனென்றால் அவர்களுக்கு தூண்டில் முள்களின் மீது அலாதிப் பிரியம். அதினால் பெரிய கூட்டமே என் முன் கூடிவிட்டது. அவர்கள் ஆர்வமாக தோண்டினார்கள். அநேகர் தூண்டில் முள்களின் மீதிருந்த ஆர்வத்தால் திரும்ப திரும்ப வரிசையில் வந்து நின்றனர். அன்று ஒரே நாளில் 12 அடி தூரம் கிணறு தோண்டியிருந்தோம். அடுத்து வந்த நாட்களிலும் எங்கள் பணி தொடர்ந்தது.

முப்பதாவது அடியில் பவளப்பாறைகளும் மண்ணும் ஈரக்கசிவுடன் காணப்பட்டது. ஆகவே நான் தண்ணீர் ஊற்றுக்கு அருகில் வந்துவிட்டதை உணர்ந்தேன். தேவன் இங்கு ஊற்றைத் திறப்பார் என்று நம்பினேன். அதே சமயம் ஒரு வேளை உப்புத் தண்ணீர் வந்துவிட்டால் என்னவாகுமோ என்ற அவிசுவாசமும் இடையிடையே எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது. ஆனாலும், தேவன் கிருபையாக எங்கள் தேவையைச் சந்திக்க புதிய நல்ல தண்ணீரைத் தருவார் என்ற பிரகாசமான எதிர்பார்ப்பின் ஒளி இருதயத்தில் பளிச்சிட்டுக் கொண்டே இருந்தது. அதினால் அன்று மாலையில் நமாகீயைப்பார்த்து "நாளை தேவன் நமக்கு இந்த கிணற்றிலிருந்து சுத்தமான தண்ணீரைத் தரப்போகின்றார்" என்றேன்.

 
யேகோவா தேவன் தந்த மழை

அவரோ அதை ஒத்துக் கொள்ளவே இல்லை. நானோ "நாளைக்கு நீங்கள் வந்து பாருங்கள். யேகோவா நாளைக்கு நமக்குப் பூமிக்கடியில் இருந்து தண்ணீர் அனுப்புவார்" என்றேன். கர்த்தர் இந்தக் காரியத்தில் என்னைக் கைவிடார் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக இருந்தது. மறு நாள் காலை பொழுது விடிந்தவுடனே நான் கிணற்றில் இறங்கி தரையில் இரண்டடி ஆழத்திற்கு ஒரு குறுகலான குழியைத்தோண்டினேன். அப்போது தரையில் இருந்து ஊற்று நீர் எழும்பி அக்குழியை நிரப்பியது. எனது நடுங்கும் கரங்களால் குனிந்து தண்ணீர் சேறு கலந்து இருந்தாலும் அதை மொண்டு ருசி பார்த்தேன். அங்கேயே முழங்காற்படியிட்டு தேவனுக்கு நன்றியுடன் துதி ஸ்தோத்திரம் ஏறெடுத்தேன். ஆம்! அது புதிய சுவையான நல்ல தண்ணீராக இருந்தது. கிணற்றிற்கு மேலே எல்லாரும் மிகுந்த எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருந்தனர். வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் தேவைக்கு மோசே கன்மலையை அடித்து தண்ணீரை பொங்கிப் புரண்டு வரவழைத்த ஆச்சரிய சம்பவத்திற்கு ஒத்ததாக இந்தச் சம்பவம் இருந்தது.

சேறு அடியில் தங்கி தண்ணீர் தெளிந்தபின் நான் அவர்கள் பார்வைக்கு முன்பாக மேலிருந்து கொண்டு வந்திருந்த காலியான குவளை நிறைய இந்த புதிய தண்ணீரை மொண்டு கொண்டு மேலே எடுத்துச் சென்று "யேகோவா தேவன் தந்த மழையை" எல்லாருக்கும் காட்டினேன். நான் மீண்டும் அவர்களிடம் "நம் யேகோவா தேவன் நம் ஜெபம், நம் பிரயாசம் ஆகியவற்றிற்குப் பலனாக பூமியிலிருந்து இந்த தண்ணீரை நமக்குத் தந்திருக்கின்றார். அதை நீங்களே கிணற்றுக்குள் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்" என்றேன்.

அங்கிருந்த ஒவ்வொருவரும் தைரியசாலிகளாய் இருந்தாலும், இந்தக் கிணற்றைப் பார்க்க மட்டும் யாரும் முன்வரவில்லை. அவர்களுக்கு அது விநோதமாய்க் காணப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவராய் கிணற்றை எட்டிப் பார்த்தனர். நமாகீ வழக்கம்போல "மிஸி இது அற்புதம்! உங்கள் யேகோவா தேவன் செய்வதெல்லாம் அற்புதம்தான். அனீவாவின் தேவர்கள் ஒருவர் கூட இதைச் செய்ய முடியாது. உங்கள் யேகோவா அனீவாவிற்கு வந்த பிறகு எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது" என்று கூறியபின் சற்று பொறுத்து ஆழ்ந்த சிந்தனையுடன் "மிஸி, இந்த மழை தொடர்ந்து இருந்து வருமா? அல்லது மேகங்கள் தரும் மழையைப்போல அவ்வப்போது வந்து போகுமா?" என்று கேட்டார்.

"யேகோவா இதை நமக்கு ஒரு ஈவாக தந்து இருப்பதால் அது தொடர்ந்து நமது உபயோகத்திற்கென சுரந்து கொண்டே இருக்கும்" என்றேன். நமாகீ, தயங்கியபடியே "மிஸி, இந்த மழை எல்லாவற்றையும் நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களும் குடித்துவிடுவீர்களா? அல்லது எங்களுக்கும் கொஞ்சம் கொடுப்பீர்களா?" என்று கேட்டார்.

"நீங்களும் உங்கள் இனத்தவரும், இந்த தீவில் உள்ள அனைவரும் வந்து இதை மொண்டு குடிக்கலாம். உங்களுக்குத் தேவையான நீரை, வேண்டிய அளவு மொண்டு எடுத்துச் செல்லலாம். எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் மொள்ளுகின்றீர்களோ அந்த அளவுக்கு தண்ணீர் கிணற்றில் சுரந்து கொண்டே இருக்கும்" என்றேன் நான்.

இப்பதிலினால் நமாகீ மிகுந்த திருப்தியடைந்தவராக "அப்படியானால் இது நமது தண்ணீர். நமது சொந்தத்திற்கு எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், அப்படித்தானே?" என்று கேட்டார். நான் "ஆம்" என்றதும் நமாகீ ஏதோ ஒரு பெரிய பொக்கிஷத்தை அடைந்ததைப்போன்ற உற்சாக மிகுதியால் "சரி மிஸி, இப்போது நாங்கள் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் சொல்லுங்கள். உடனே செய்கின்றோம்" என்றார்.

நான் உடனே இதுதான் சமயம் என்று அவரிடம் "ஆம், நாம் இந்த கிணற்றின் மேல் மண் சரிந்து ஊற்று தூர்ந்து போகாதபடி உள்ளே பவளப்பாறைகளை வைத்து கீழேயிருந்து மேல்வரைக்கும் வட்ட வடிவில் சுவர் கட்ட வேண்டும். ஆகவே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களால் சுமக்கக்கூடிய அளவிற்கு பவளப்பாறைகளைக் கொண்டு வந்தால் யேகோவா நமக்குத் தந்த ஈவை பாதுகாக்க உதவியாக இருக்கும்" என்றேன். நான் இதைச் சொல்லிக்கூட முடிக்கவில்லை. அதற்குள் அங்கிருந்த அனைவரும் கடற்கரைக்கு ஓடி தாங்கள் வழக்கமாக சுமக்கக்கூடிய அளவைக்காட்டிலும் பெரிய கற்களை சுமந்து வந்து குவித்தனர். அந்தக் கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து வட்டமான கிணற்றுச் சுவரை நான் அமைத்துக் கொண்டு வந்தேன். அச்சுவர் மூன்றடி அகலமுள்ளதாய் இருந்தது. இவ்வாறு கிணறானது இடிந்து விழாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு வலுமையான கற்சுவர் எழுப்பப்பட்டுவிட்டது. அத்துடன் கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. பெண்களும் சிறுவர்களும் கூட கர்த்தர் அனீவாவிற்கெனக் கொடுத்த இந்த ஆசீர்வாதத்திற்காக நன்றியுடன் அக்கிணற்றைக்கட்ட தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டனர். சிலர் தங்கள் பகுதியிலும் இதே போன்ற கிணறு தோண்டினர். ஆனால் அவர்கள் தோண்டிய இடமெல்லாம் அவர்களால் உடைக்க முடியாத பவளப்பாறைகளோ அல்லது உப்பு நீர் ஊற்றோ வந்ததேயொழிய நல்ல தண்ணீர் கிடைக்கவில்லை. அதைக் கண்ட அவர்கள் "மிஸி, கடப்பாரை மற்றும் மண் வெட்டியைப் பயன்படுத்தியது மட்டுமல்ல அவர் தன் தேவனை நோக்கி ஜெபித்தார். நாமோ அவரைப்போல தோண்ட கற்றுக்கொண்டோமே தவிர ஜெபிக்கக் கற்றுக்கொள்ளவில்லை. அதினால்தான் மிஸிக்கு மழையைக்கொடுத்த யேகோவா நமக்கு மழையைக் கொடுக்கவில்லை" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

கிணறு அழகாகக் கட்டப்பட்டுச் சுற்றிலும் வேலி அடைக்கப்பட்டு எல்லா வேலையும் முடிந்தபின் நமாகீ என்னிடம் வந்து "மிஸி, அடுத்த ஓய்வுநாளில் நான் உங்களுக்கு உதவப்போகின்றேன். நான் இந்தக் கிணற்றைப் பற்றி பிரசங்கிக்க நீங்கள் என்னை அனுமதிப்பீர்களா?" என்றார்.

நான் அவரிடம் அவர் செய்யும் பிரசங்கத்தைக் கேட்க அவரது ஆட்கள் அனைவரையும் அவர் அழைத்து வந்தால் அவரைப் பிரசங்கிக்க அனுமதிப்பேன் என்றேன். அவரும் சரியென ஒப்புக்கொண்டார். இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவியது. நமாகீ அடுத்த ஓய்வுநாளில் பிரசங்கிக்கப்போகின்றார் என்பதை அறிந்த அனைவரும் பரபரப்புடன் அவர் என்ன சொல்லப் போகின்றார் என்பதை அறிய ஆவலாயிருந்தனர்.

ஓய்வு நாளின் காலையில் அனீவாவின் மக்கள் கூட்டமே எங்கள் வீட்டுக்கு முன் கூடி இருந்தது. நான் கூட்டத்தை ஜெபித்து ஆரம்பித்து வைத்தேன். பாடல்கள் மற்றும் வேதவாசிப்பிற்குப் பின் நமாகீயை பேசும்படி அழைத்தேன். அவர் தனக்குள் ஏற்பட்ட உணர்ச்சி நிறைவை கட்டுப்படுத்த இயலாமல் தனது நாவு தழுதழுக்க பேச ஆரம்பித்தார்:-

 
நமாகீயின் பிரசங்கமும் விக்கிரகங்கள் அழிப்பும்

என் அன்பான நண்பர்களே, அனீவாவில் உள்ள சிறியோர் முதல் பெரியோர்களே, என் வார்த்தையைக் கேளுங்கள். மிஸி இங்கே நமது தீவுக்கு வந்ததிலிருந்து அவர் நம்மிடையே நாம் அறியாத அரிய பெரிய காரியங்களைப் பேசி வந்திருக்கின்றார். அவைகளை நாம் பொய் என்று எண்ணினோம். நாமெல்லாரும் இதுபோன்ற விஷயங்களில் வெள்ளைக்காரர்களைவிட புத்திசாலிகள் என்று எண்ணினோம். அவர் சொன்ன செய்திகள் எல்லாவற்றிலும் பூமிக்கு அடியில் இருந்து மழையைக் கொண்டு வரலாம் என்பது அதிக விந்தையாக இருந்தது. மிஸிக்குப் பைத்தியம் பிடித்து ஏதோ உளறுகிறார் என்று நாம் பேசிக்கொண்டோம். ஆனால் மிஸியோ ஜெபித்து கிணறு தோண்ட ஆரம்பித்தார். அவர் பைத்தியம் பிடித்தவரா? அவர் சொன்னது போல பூமிக்கு அடியிலிருந்து மழையைக் கொண்டு வரவில்லையா? ஆரம்பத்தில் அவர் சொன்னபோது நாம் அவரைப் பரிகசித்தோம். ஆனால் அவர் சொன்னபடி தண்ணீர் இருந்ததே. இதேபோல மிஸி சொல்லுகிற யேகோவா தேவனின் காரியங்களையும் நாம் பார்க்காததால் அவரைப் பரிகசித்து வருகிறோம். ஆனால், நான் இப்போது இந்த நாளில் அவர் யேகோவா தேவனைக் குறித்துச் சொல்லும் அனைத்து காரியங்களும் உண்மையென நம்புகின்றேன். இன்றைக்கு பூமிக்கடியில் இருந்து வந்த மழையை நாம் எப்படிப் பார்த்தோமோ அதேபோல அவர் சொல்லுகின்ற தேவ காரியங்களை நாம் ஒரு நாள் பார்க்கக்கூடும் என்று நம்புகின்றேன். என் மக்களே! என் மக்களே! இந்த தேசத்திற்கு யேகோவா தேவன் வந்ததிலிருந்து எல்லாம் மாறிவிட்டது. பூமிக்குள் இருந்து மழை வரும் என்று யாராவது எதிர்பார்த்தோமா? மேகங்கள் வந்து மழை பொழிவதைத்தான் பார்த்திருக்கின்றோம். யேகோவா தேவனின் கிரியைகள் மிக அற்புதமானது. மிஸியின் தேவன் ஜெபங்களுக்கு பதில் கொடுப்பது போல் அனீவாவின் எந்த தேவரும் இதுவரை பதில் கொடுக்கவில்லை. அனீவாவின் தேவர்கள் மிஸியின் தேவனைப்போல கேட்கவோ, பார்க்கவோ, உதவி செய்யவோ முடியாதவைகள். ஆகவே நான் இது முதற்கொண்டு யேகோவா தேவனையே பின்பற்றுகிறவன். என்னைப்போல இந்த தேவனை பின்பற்ற உங்களில் விரும்புகிறவர்கள் உங்கள் வீடுகளுக்கு உடனே போய் அங்குள்ள விக்கிரகங்களை, நாம் கடவுள் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தவைகளை மிஸியின் காலடியில் கொண்டு வந்து போடுங்கள். இந்தக் கல்லும், கட்டைகளுமாகிய இவைகளை நாம் இன்றைக்கு தீ வைத்து கொழுத்திப்போடுவோம். பூமிக்குள் இருந்து நமக்கு மழையை அனுப்பிய யேகோவா, நம்மை மீட்கும்படி தம்முடைய குமாரனை ஏன் அனுப்பியிருக்க மாட்டார். ஆகவே நமாகீயாகிய நான் இனி இந்த யேகோவா தேவனுக்காக ஜீவிப்பேன்" என்று கூறி தனது உரையை முடித்தார்.

நமாகீயின் பிரசங்கமும் தோண்டப்பட்ட கிணறும் அனீவாவின் விக்கிரக ஆராதனையை முறித்துப் போட்டது. அன்று மதியமே நமாகீ மற்றும் அவரது ஆட்கள் அனைவரும் தங்கள் விக்கிரகங்களைக் கொண்டு வந்து எங்கள் வீட்டின் முன் போட்டுவிட்டனர். இந்த நிகழ்ச்சி பல வாரங்களுக்கு தொடர்ந்தது. மக்கள் தங்கள் உள்ளங்களில் ஆழமாக உணர்த்தப்பட்டவர்களாக கூட்டம் கூட்டமாக வந்து தங்கள் விக்கிரகங்களை கொண்டு வந்து எங்கள் வீட்டின் முன் போட்டபடியே இருந்தனர். வந்த அனைவரின் கண்களிலும் மனந்திரும்புதலின் கண்ணீரும், அவர்கள் உதடுகளில் யேகோவா என்னை இரட்சியும், யேகோவா என்னை இரட்சியும் என்ற ஒலியையும் தவிர வேறு எதையும் காணவோ, கேட்கவோ முடியவில்லை. அந்த விக்கிரகங்களில் எரித்துப் போடக்கூடியவற்றை எரித்துச் சாம்பலாக்கினோம். சிலவற்றை ஆழமாகக் குழி தோண்டி புதைத்துப் போட்டோம். மூடநம்பிக்கைகளை அதிகமாக தூண்டிவிடக் காரணமாக இருந்தவைகளை ஆழ் கடலுக்கு எடுத்துச் சென்று அவைகளை அமிழ்த்துப்போட்டோம். எந்தக் கண்களும் அவைகளை மீண்டும் காணாதபடி முற்றிலும் அவைகளை அழித்து ஒழித்தோம்.

அதுமுதல் அந்த மக்கள் தங்கள் ஒவ்வொரு வேளை ஆகாரத்திற்கு முன்பும் தேவனை நோக்கி ஜெபித்து அவருக்கு நன்றி செலுத்தும் பழக்கத்தைக் கற்றுக்கொண்டனர். அவ்வாறு செய்யாதவர்கள் புறஜாதியாராக எண்ணப்பட்டனர். அடுத்ததாக ஒவ்வொரு இல்லத்திலும் காலையும், மாலையும் குடும்ப ஜெபம் செய்ய ஆரம்பித்தனர். கர்த்தரின் நாளைக் குறித்த உணர்வும் அவர்களுக்குள் உண்டாயிற்று. நாங்கள் எப்படி கர்த்தருடைய ஓய்வுநாளை ஆசரித்தோமோ அதைப்போலவே தீவிலுள்ள எல்லா கிராமங்களிலும் ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்க முற்பட்டனர். சனிக்கிழமையே மறு நாளைக்குத் தேவையான ஆகாரத்தை ஆயத்தப்படுத்திவிட்டு, ஓய்வு நாளில் தேவனை முழுமையாக ஆராதிக்க தலைப்பட்டனர்.

நான் அடிக்கடி நமாகீ தன் மக்களிடையே ஆற்றிய உரையை யோசித்துப் பார்ப்பதுண்டு. எவ்வளவு அருமையான சத்தியத்தை தன் மக்களுக்கு எளிதாகக் கூறி புரிய வைத்தார். பூமிக்குள் இருந்த தண்ணீரை நாம் காண முடியாமல் இருந்ததுபோல தேவனைக் காணமுடியாமல் இருந்தோம். இப்போது தண்ணீரைக் கண்டோம். அதைப்போல யேகோவா தேவனையும் நாம் கண்டு கொண்டோம். என்ன அருமையான வார்த்தைகள்!

 
அனீவாவில் நாங்கள் ஒழுங்கு செய்த
முதல் திருவிருந்து ஆராதனை

அனீவாவில் நாங்கள் ஒழுங்கு செய்த முதல் திருவிருந்து ஆராதனையைப் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஓய்வு நாளில் அந்த நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் வாழும் மண்ணில் கர்த்தருடைய இரத்தத்தின் விலைக்கிரயத்தால் மீட்கப்பட்ட சிலரோடு எங்களுக்காக பிட்கப்பட்ட அவரது மாம்சத்திலும் இரத்தத்திலும் பங்கு கொள்ளும்படி கர்த்தரின் மேஜையண்டைக்கு நாங்கள் வந்தபோது தேவதூதர்களும், மீட்கப்பட்டவர்களின் சபையிலிருந்து மேகம் போன்ற திரளான சாட்சிகளின் கூட்டத்தில் இருக்கும்படி மகிமைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்களும் இக்காட்சியை பரலோகிலிருந்து ஆவலோடு கண்டு களித்திருப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். இந்த திருவிருந்து அதாவது கர்த்தருடைய இராப்போஜன வகுப்புகள் மிகவும் கடுமையான ஒழுங்குகளையும், நிபந்தனைகளையும் கொண்டிருந்ததால் வெறும் 20 பேர் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். அதிலும் 12 பேர் மட்டுமே திருவிருந்தை எடுப்பதற்குப் பாத்திரர்களானார்கள்.

ஆகவே அன்றைய ஓய்வுநாள் ஆராதனையில் எனது தேவ செய்தியின்போது பத்து கட்டளைகளைப்பற்றியும் சுவிசேஷத்தின் மூலமாக நமக்குக் கிடைத்துள்ள இரட்சிப்பைப்பற்றியும் மிகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் கூறினேன். நமாகீக்கு முதலாவதாகவும் அதின் பின்பு மற்றவர்களுக்கும் திருமுழுக்கு கொடுத்தோம். அப்போது மிகுந்த பயபக்தியோடு ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன. நான் 1 கொரிந்தியர் 11 ஆம் அதிகாரம் 23 முதல் 31 வரை உள்ள பகுதியை வாசித்து கர்த்தரின் பந்தியைக் குறித்து அவர்களிடம் பேசினேன். அதின் பிறகு அனீவா தீவில் முதன் முறையாக இராப்போஜனம் பரிமாறப்பட்டது. புதிதாக ஞானஸ்நானம் பெற்றவர்களுடன் நானும், என் மனைவியும், ஆறு ஆசிரியர்களும் இப்பந்தியில் பங்கு பற்றினோம். இயேசு எங்கள் மத்தியில் இருந்தார் என்று நான் நிச்சயமாகவே சொல்லுவேன்.

இந்த ஆராதனையின் போது அத்தீவினர் அனைவரும் தங்கள் வழக்கத்திற்கு மாறாக முற்றிலும் அமைதியோடு இருந்து இந்தக் காரியங்களை ஆச்சரியத்தோடு பார்த்தபடி இருந்தனர். சிலர் கருத்தோடு அங்கு செய்யப்பட்ட காரியங்களைக் குறித்து விசாரித்து அறிந்து கொண்டனர்.

அன்று மதியம் நாங்கள் திறந்தவெளி ஜெபக்கூட்டத்தை நடத்தினோம். இம்மக்களுக்குள் கர்த்தரைக் குறித்த அறிவும், விசுவாசமும் பெருகப் பெருக காட்டுமிராண்டிப் பழக்கங்கள் மிக வேகமாக மறைவதையும், கிறிஸ்துவுக்குள்ளான ஒரு புதிய வாழ்க்கை முறை எங்களைச் சுற்றி மலர்ந்ததையும் நாங்கள் கண்டோம். கிறிஸ்தவர்களாக தேவ சித்தத்தை செய்வதுவும் அவரைப் பிரியப்படுத்துவதும்தான் அவர்கள் எல்லாருடைய நடக்கைக்கென விதிக்கப்பட்ட தேவ ஒழுங்காக இருந்தது.

அவர்களில் சிலருக்கு ஆசிரியர்களாக கற்பிக்கவும், மற்றும் பிறருக்கு கருவிகளைக் கையாளவும், நோயாளிகளுக்குச் சிகிட்சை அளிக்கவும், மருந்துகளைக் கொடுக்கவும் பல்வேறு வகைகளில் பயிற்சி அளித்தோம். புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து அச்சிடுவதுடன் வேதவசனங்களுக்குரிய விளக்கங்களையும் அச்சிட்டுக் கொடுத்தோம். சட்டம், ஒழுங்கு போன்றவற்றைக் குறித்தும் நாங்கள் அவர்களுக்குப் போதித்தோம். இவற்றின் விளைவாக சில குறைபாடுகள் இருந்தாலும் இந்த அடிப்படை நாகரீகமற்ற மக்களின் மத்தியில் தேவனுடைய இராஜ்யம் வந்திருப்பதற்கான அடையாளத்தை வெளிப்படுத்தும் தேவனுடைய ஒரு புதிய சமுதாயம் உருவாகி வளர்ந்தது.

 
கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாள் ஆசரிப்பு

அனீவாவில் எங்களுடைய வாழ்க்கை முறை மற்றும் ஊழியம் எப்படி இருந்தது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக ஓய்வுநாட்களில் எங்களது பணியைக் குறித்து சுருக்கமாக குறிப்பிட விரும்புகின்றேன். பொழுது விடிந்தவுடன் எங்களது காலை சிற்றுண்டியை முடித்து விடுவோம். உடனே ஆலயத்தின் மணி அடிக்க ஆரம்பிக்கும். தூரமான இடங்களில் இருந்து ஆராதனைக்கு வருபவர்கள் தாமதமாக வராதபடி தங்கள் இருப்பிடங்களிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு வரும்படி பயிற்றுவிக்கப்பட்டிருந்ததால், ஆலய மணி ஓசை அடங்கும் முன்பாகவே ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டிய அனைவரும் வந்து சேர்ந்திருப்பார்கள். முதல் ஆராதனை ஒரு மணி நேரம் நடக்கும். பின்னர் சற்று இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மணி அடிக்கப்பட்டு இரண்டாவது ஆராதனை நடக்கும். அதின் பின்னர் கர்த்தருடைய பந்தியில் பங்ககெடுக்க தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வசதியாக வாலிபருக்கும், பெண் பிள்ளைகளுக்கும் வேதபாட வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே கொண்டிருக்கும். குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டவர்களே கர்த்தருடைய பந்தியில் பங்குபெற அனுமதிக்கப் படுவார்கள்.

இந்த வகுப்பிற்குப் பின்னர் சனிக்கிழமை சமைக்கப்பட்ட உணவு மதிய உணவாக எல்லாருக்கும் பரிமாறப்படும். இதற்கான ஒரு மணி நேர இடைவெளிக்குப்பின்னர் ஓய்வுநாள் வகுப்புகள் ஆரம்பிக்கும். அதில் கிராமங்களில் உள்ள முதியோர் முதல் சிறியோர் வரை எல்லாரும் வந்து கலந்து கொள்ளுவார்கள். நான் அதற்கு தலைமை ஏற்று அந்நாளில் நடத்தப்படும் வேதபாடத்திலிருந்து கேள்விகள் கேட்பேன். எனது மனைவி வாலிப பெண்களுக்கான வகுப்புகளை நடத்துவார்கள். சிறு பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் மூப்பர்கள் வகுப்புகளை நடத்துவார்கள். சரியாக மதியம் ஒரு மணிக்கு ஓய்வுநாள் பாடசாலை முடிவுபெறும்.

அதின் பிறகு நாங்கள் கிராம சந்திப்பு ஊழியங்களுக்காக குழுகுழுவாகப் புறப்படுவோம். ஒவ்வொரு குழுவிலும் ஆசிரியர்களுடன் அனுபவம் வாய்ந்த மூப்பர் ஒருவர் செல்லுவதுண்டு. நாங்கள் செல்லும் கிராமத்தின் திறந்த வெளியிலோ அல்லது அங்கு அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளிலோ கூட்டங்களை நடத்துவோம். இவ்வாறு கூட்டம் நடத்தி திரும்பி வரும் குழுக்களின் தலைவர்கள் தாங்கள் சந்தித்த பகுதியின் ஊழிய வளர்ச்சி மற்றும் அங்கு ஜெப உதவி தேவைப்படும் வியாதியஸ்தர்கள் பற்றிய விபரங்களை என்னிடம் கூறுவர். இவ்வாறு அந்த தீவு முழுவதும் தொடர்ச்சியாகவும், முறைப்படியும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் எங்களது கிராம சந்திப்பு நிறைவடைந்து நான் வீட்டிற்கு வருவேன். இருள் சூழத்தொடங்கும்போது அத்தீவில் உள்ள எல்லா கிராமங்களிலும் கிராம முரசு கொட்டப்படும். அப்போது அக்கிராமத்தில் உள்ள அனைவரும் மாலை ஜெபத்திற்காக அக்கிராமத்தின் பொதுவான மைதானத்தில் வந்து கூடுவார்கள். இந்தக் கூட்டங்களை அங்குள்ள மூப்பரோ அல்லது ஆசிரியரோ முன்னின்று நடத்துவர். இனிய பாடல் ஒலியுடன் அந்த ஓய்வு நாள் முடிவடையும்.

இதைப் போலவே எங்கள் வார நாட்களின் வாழ்க்கையும் மிக மும்முரமானதாக இருக்கும். ஒவ்வொரு திங்கள் காலையிலும் அனீவாவின் ஒவ்வொரு கிராமத்திலும் முரசு அடிக்கப்படும். அங்குள்ளவர்கள் காலை வகுப்பிற்கு வந்து கலந்து கொள்ளுவார்கள். அதின் பிறகு அவர்கள் தங்கள் வயல்களில் வேலையைக் கவனிக்கத் தோட்டங்களுக்குச் சென்று விடுவார்கள். நான் சிற்றுண்டி அருந்தியபின் புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்பு வேலைக்கோ அல்லது அச்சிடுவதற்கோ அல்லது கிராமத்திலுள்ள நோயாளிகளைச் சந்திப்பதற்கோ சென்றுவிடுவேன். இரண்டு மணிக்கு தங்கள் வேலையிலிருந்து கிராமத்தினர் திரும்பி வந்து கடலில் நீராடிவிட்டு மதிய உணவை உண்பார்கள். மூன்று மணிக்கு மணி அடித்தவுடன் மாலை வகுப்புகள் நடக்கும். அதில் ஆசிரியர்கள் மற்றும் நன்றாக எழுதப்படிக்க கற்றுக்கொண்டவர்களுக்கு நானும் எனது மனைவியுமாக ஒன்றரை மணி நேரம் வகுப்புகள் எடுப்போம். பின்னர் அந்த தீவினர் தங்கள் இரவு உணவைத் தயாரிக்க சென்றுவிடுவார்கள்.

சூரியன் அஸ்தமிக்கும்போது கிராமத்தின் முரசு ஒலிக்கும். அப்பொழுது அனைவரும் பொது இடத்தில் கூடி பாடல்கள் பாடி, கர்த்தரைத் துதித்து அன்றைய நாளை முடிப்பார்கள். இதேபோன்று ஒவ்வொரு நாளும் இனிமையாக, அமைதியாக கர்த்தருக்குள் வாழ்க்கை கழிந்தது.

 
நமாகீ, நாஸ்வாய், நெர்வா என்ற
அருமையான கிறிஸ்தவ தலைவர்கள்

அனீவாவை கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தவும் அவரது கிரீடத்தில் ஒரு வைரமாகவும் பிரகாசிக்க தேவன் எங்களைச் சுற்றிலும் அருமையான மக்களை எழுப்பினார். அவர்களுள் நமாகீயும் ஒருவர் என்பதை கண்டிப்பாக குறிப்பிட்டேயாக வேண்டும். மெல்ல ஆனால் உறுதியாக சுவிசேஷத்தின் ஒளி அவரது ஆத்தமாவை ஊடுருவிச் சென்றது. தான் கற்றுக்கொண்ட சத்தியத்தை தமது காட்டுமிராண்டிகளான மக்களுக்கும் கற்பிப்பதில் அவர் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார். மனந்திரும்பாத நாட்களில் ஒரு நரமாமிசம் சாப்பிடுபவராகவும் பெரிய யுத்த வீரராகவும் விளங்கிய அவர் ஆரம்பம் முதற்கொண்டே எங்கள் ஊழியத்தின் மீது மிகுந்த ஆர்வமும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார்.

எங்களுக்கு ஒரு மகன் பிறந்தபோது இந்த வயோதிப தலைவர் பெரு மகிழ்ச்சி கொண்டதோடு இறந்து போன தனது மகனுக்குப் பதிலாக எங்களது மகனே அவரது வாரிசு என்றும் அக்கிராம மக்கள் அவனை இளைய நமாகீ என அழைக்கவும் மரியாதை செலுத்தவும் உத்தரவிட்டார்.

நாங்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமற்றிருந்தாலும் எங்களது மகன் வளர்ந்து வருகையில் அவன் நமாகீயின் கைகளைப் பற்றிக்கொண்டு அவர்களது பாஷையை சரளமாக பேசிக் கொண்டு அக்கிராமத்தைச் சுற்றி வந்தது எங்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஊட்டியது. இதின் மூலம் அப்பகுதி மக்கள் எங்களிடமும் கர்த்தருடைய ஊழியங்களிலும் நெருங்கி இணைய முடிந்தது.

ஒரு முறை எங்களைக் கொன்றுபோட வேண்டும் என்ற வெறித்தனமான உணர்வோடு எங்களது மிஷன் வீட்டை சூழ்ந்து கொண்ட காட்டுமிராண்டிகள் கூட்டத்தை எங்களது இதே மகனே அற்புதமாக அடக்கினான். நாங்கள் அறியாவண்ணம் வீட்டிலிருந்து அவன் வெளியே போய் எங்களது மிஷன் வீட்டை சூழ்ந்திருந்த அந்த ஆயுதந்தரித்த காட்டு மிராண்டிகளின் மத்தியில் மகிழ்ச்சி பொங்க நடனம் ஆடுவதைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். அந்த காட்டுமிராண்டிகள் ஆச்சரியப்படத்தக்கதாய் இவன் அவர்கள் ஒவொருவரையும் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்தான். இறுதியில் அக்கூட்டத்தின் தலைவனின் மடியில் அமர்ந்து கொண்டு அவனோடு வேடிக்கையாகப் பேசிக்கொண்டு இருந்தான். நாங்கள் இதை எங்கள் வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டு பயந்திருந்தோம். அவன் அவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து செல்லமாக துஷ்டன், துஷ்டத்தனம் என்று கடிந்து கொண்டான். இதைக்கேட்ட அவர்களது கோப முகம் மாறி புன்னகை பூக்கத்தொடங்கியது. கடைசியாக அவர்கள் ஒவ்வொருவராக அந்த இடத்தைவிட்டு நழுவிப்போய்விட்டனர். அன்று எங்கள் சின்னஞ்சிறு பாலகனால் ஒரு கொலைபாதக தீச்செயல் முறியடிக்கப்பட்டது. "ஒரு சிறு பையன் அவர்களை நடத்துவான்" ஏசாயா 11 : 6 என்ற கர்த்தருடைய வார்த்தைக்கு இது ஒரு அற்புதமான எடுத்துக்காட்டாக விளங்கியது.

 
நாஸ்வாய் என்ற காட்டுமிராண்டி தலைவன்

நமாகீயின் நண்பர் நாஸ்வாய் அனீத்தா தீவின் உட்பகுதியில் தலைவராக இருந்தவர். அவரும் அங்குள்ள அனைவராலும் மதிக்கப்பட்டவர். அவரது மனைவி காட்வா அங்கிருந்த எல்லாரையும்விட தனது தோற்றத்திலும், குணநலன்களிலும் சிறந்தவர். அமைதியான பெண்மணி. அவளது முன் மாதிரி சுவிசேஷம் மற்ற பெண்களிடம் பரவுவதற்கு உதவக்கூடிய செல்வாக்கைக் கொண்டதாயிருந்தது. அவள் தனது கணவனுக்கு உறுதுணையாக இருந்ததுடன் அவர் எங்கு சென்றாலும் இவளுடம் அவருடன் செல்லுவாள். நாஸ்வாய் கர்த்தரின் ஊழியத்தில் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார். ஓய்வு நாளின் ஆராதனை நேரத்தில் ஆலயத்தில் எல்லா ஏற்பாடுகளும் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்துக்கொள்ளுவதும், எனது வேதாகமத்தை மிஷன் வீட்டிலிருந்து ஆலயத்தின் பிரசங்க மேடையில் கொண்டு வந்து வைப்பதும் அவருக்குப் பிடித்தமான வேலைகளாக இருந்தன.

அவர் கிராமப்பள்ளியில் ஆசிரியராகவும் சபையில் மூப்பராகவும் பணியாற்றினார். அவரது பிரசங்கங்கள் படவிளக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். அவரது ஜெபங்கள் மிகவும் ஊக்கமுடையதும் நம்மை ஆவியில் உன்னதத்திற்கு உயர்த்துவதுமாயிருக்கும். ஆனால், அந்த தீவில் தேவனுடைய சுவிசேஷம் பரவாதபடி தடுத்து தொல்லை கொடுத்தவர்களும், சுவிசேஷத்தை மிகவும் காலதாமதமாக ஏற்றுக் கொண்டவர்களும் அவரது இன மக்கள்தான்.

நாங்கள் 1875 ஆம் ஆண்டில் எங்களது ஆண்டு விடுமுறைக்காக வெளியே சென்றிருந்தபோது நாஸ்வாய் இறந்துபோனார். அவர் இறந்துபோன சொற்ப நாட்களிலேயே அவரது மனைவி காட்வாவும் மரித்துப்போனாள். நாஸ்வாய் மரிக்கும் தருவாயில் தனது மக்கள் மத்தியில் பேசிய தேவ செய்தி அவர்களை அசைத்தது. தான் தற்போது கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டி என்றும், தன்னை இரட்சித்த ஆண்டவர் இயேசுவிடம் தான் செல்லப் போவதைக் குறித்து தான் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த வார்த்தைகள் அவரது மக்களை கிறிஸ்துவின்பால் ஆழமாக இழுத்தது.

இந்த தருணத்தில் நான் நாஸ்வாயின் பிரசங்க சாதுரியத்தையும், அவரில் காணப்பட்ட தேவ வல்லமையையும் கண்டிப்பாக நினைவுகூர வேண்டும். ஒரு முறை அனீவா தீவில் உள்ள மக்களிடம் சுவிசேஷத்தால் ஏற்பட்ட மாற்றத்தைக் காண புட்டூனா என்ற தீவில் இருந்த அநேகர் வந்திருந்தனர். ஒரு ஞாயிறு வழக்கமான ஆராதனை முடிந்தபின் புட்டூனா தீவிலிருந்து வந்தவர்களிடம் நாஸ்வாய் பேசினார். அப்போது நாஸ்வாய் அவர்களைப் பார்த்து:-

"அனீவா தீவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்க நீங்கள் வந்திருக்கின்றீர்கள். இம்மாற்றத்தை ஏற்படுத்தியவர் யேகோவா தேவன்தான். நாங்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்தபோது சண்டைபோட்டுக்கொண்டு, கொலை செய்து ஒருவரையொருவர் தின்று கொண்டிருந்தோம். இதினால் எங்குமே சமாதானமோ, சந்தோசமோ இல்லை. ஆனால் இப்பொழுது நாங்கள் சகோதரர்களாக வாழ்வதால் எப்போதும் சந்தோசமாக இருக்கின்றோம். நீங்கள் உங்கள் தீவிற்கு சென்றபின் அங்குள்ளவர்கள் உங்களிடம் கிறிஸ்தவம் என்றால் என்னவென்று கேட்பார்கள். அதற்கு நீங்கள் "அனீவாவில் உள்ள மக்களை மாற்றியதுதான் கிறிஸ்தவம் என்று சொல்லுங்கள். அனீவா தீவினர் நாகரீகம் கற்றுக்கொண்டு சண்டைபோடுவதைக் கைவிட்டு சகோதரர்களாக ஒருவரையொருவர் நேசித்து வாழும்படி செய்திருப்பதுதான் கிறிஸ்தவம் என்று கூறுங்கள். கிறிஸ்தவத்தின் கிரியைகளை மட்டும்தான் உணர முடியும். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்று கூறுங்கள். நாம் நமது தேவர்கள் தேவதைகளுக்கு பலி கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஒரு பலனும் இல்லை. ஆனால் மிஸி யேகோவாவிடம் ஜெபிப்பதினால் அவருக்கு பலன் அதிகமாக கிடைக்கின்றது. அவரது பழங்களும், காய் கறிகளும் பெரிதாக விளைகின்றன. நாங்களும் யேகோவாவிடம் ஜெபிப்பதினால் மிகவும் மகிழ்ச்சியாகவும், சமாதானத்தோடும் வாழ்கின்றோம். எங்கள் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் தருவது அவர்தான் என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். நாங்கள் உங்களுக்கு அன்பளிப்பாக அளித்த இந்த பெரிய சேனைக்கிழங்கைப் புட்னா தீவில் உள்ளவர்கள் பார்க்கும்படி கொடுங்கள். ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் யேகோவாவின் ஆசீர்வாதத்தால் விளைந்ததை அவர்கள் பார்த்து அவர் ஒருவர் மட்டுமே இதுபோன்ற பெரிய சேனைக் கிழங்கை விளைவிக்க முடியும் என்று அவர்கள் அறிந்து கொள்ளட்டும்" என்றார்.

 
நெர்வா என்ற காட்டுமிராண்டி தலைவன்

அனீவா தீவில் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு தலைவர் நெர்வா ஆவார். இவர் தர்க்க ரீதியில் பேசுவதில் சிறந்தவர். நான் இவர்களது மொழியை ஓரளவு கற்றுக்கொண்டு சுவிசேஷத்தை பிரசங்கித்த ஆரம்ப நாட்களில் தேவ சத்தியமானது இந்த மக்களின் பழக்க வழக்கங்களை எதிர்த்ததால் நான் பிரசங்கித்ததை தடுத்தவர் இவர்தான். ஒரு நாள் என்னிடம் மிகவும் கோபமாக "நீங்கள் எங்களிடம் வந்து யேகோவா தேவன் என்று சொல்லுவதெல்லாம் பொய். நாங்கள் உங்கள் பேச்சை நம்பமாட்டோம். நீங்கள் உங்கள் தேவனைப் பார்த்ததும் கிடையாது. அவர் பேசுவதை கேட்டதும் கிடையாது. ஆகவே இனியும் அதைப் பற்றி எங்களிடம் வந்து பேசினால் என் கைகளில் உள்ள ஈட்டி உங்கள் நெஞ்சை பிளந்துவிடும்" என்று கூறி தனது கிராமத்திலிருந்து எங்களை விரட்டிவிட்டார்.

ஆனால் வெகு சீக்கிரத்திலேயே நெர்வாவின் கிராமத்திலிருந்து அநாதையான ஒரு சிறு பெண் எங்களிடம் தங்க வந்தாள். அவளில் காணப்பட்ட இரட்சிப்பின் ஒளி அவளது கிராமத்திலும் பிரகாசிக்க ஆரம்பித்தது. அவள் தனது பக்தி வாழ்க்கையின் மூலமாக எங்கள் ஊழியத்தின் மேலும் எங்கள்மேலும் தனது கிராம மக்களை ஆர்வம் கொள்ளச் செய்தாள். அதேபோல ஒரு அநாதை சிறுவனும் சாட்சியாக இருந்தான். ஒரு நாள் நெர்வாவின் மனைவி என்னிடம் வந்து "உங்களைப் பற்றிய எதிர்ப்பு நெர்வாவிடம் குறைந்து வருகின்றது. அநாதை சிறுவர்களின் வாழ்க்கை எங்களைக் கவர்ந்துள்ளது உங்கள் ஆராதனையில் கலந்து கொள்ள என்னை அனுப்பினார்" என்றாள்.

அந்த கிராமத்தில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு நாங்கள் கற்றுக்கொடுத்திருந்த சில கிறிஸ்தவ பல்லவிகளை அந்தப்பிள்ளைகள் தங்கள் மொழியிலேயே இனிமையாக பாடியது அநேகரை எங்களிடம் வரவழைத்தது. ஆண்களும் பெண்களுமாக அக்கிராமத்தினர் எங்களிடம் தொடர்ந்து வர ஆரம்பித்தனர். நெர்வாவும் மெள்ள மெள்ள வந்து ஆராதனைகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். அவர் நல்ல ஞானமுள்ளவராக இருந்தபடியால் நாங்கள் கூறிய சத்தியத்தின் விஷயங்களை சீக்கிரமே கற்றுக் கொண்டார். நாஸ்வாய் இறந்தவுடன் நெர்வா அவரது ஸ்தானத்தில் நின்று எனது தேவ பணிகளில் எனக்கு உதவினார். தனது சொந்த மொழியில் எப்பொழுது புதிய ஏற்பாடு வருமென்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார். நாங்கள் அதை அச்சிட்டவுடன் அதை உடனடியாக வாசிக்க ஆரம்பித்து சீக்கிரத்தில் அதை சரளமாக வாசித்தார்.

சீக்கிரமே அவர் அவருடைய கிராமத்துப் பள்ளியின் ஆசிரியரானார். பிறருக்குக் கற்றுக்கொடுப்பதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அவர் தனது பிரகாசமான கிறிஸ்தவ ஜீவியத்தின் மூலம் ஆதாயப்படுத்திய ரூவாவா என்பவன் அவருக்குத் துணையாக இருந்தான். அவர்கள் இருவரும் பின் வந்த நாட்களில் எங்கள் சபையின் மூப்பர்களாகவும் அனீவா தேவ ஊழியத்தின் பெரும் உதவியாளர் களாகவும் காணப்பட்டனர். நெர்வாவுக்கு மிகவும் பிடித்தமான கிறிஸ்தவப்பாடல்கள் "ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு" மற்றும் "உம்மண்டை தேவனே நான் சேரட்டும்" போன்ற பாடல்களை தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு எல்லாம் பாடிக்காண்பித்து ஆனந்திப்பார்.

நான் நெர்வாவை கடைசியாக சந்தித்தபோது அவர் மிகவும் பெலன் குன்றிக் காணப்பட்டார். அவர் தன்னைச் சுற்றியிருந்த வாலிபர்களைக் கூப்பிட்டு "நான் போன பிறகு உங்களில் யாரும் நாம் விட்டுவந்த நமது பழைய அஞ்ஞான மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டாம். யேகோவா தேவனை வாழ்த்தும் பாடல்களைப் பாடுங்கள். அவரை நோக்கி எப்பொழுதும் ஜெபியுங்கள். என்னைக் கிறிஸ்தவ முறையில் அடக்கம் செய்யுங்கள். நான் இயேசுவோடு இருக்கப்போகின்றேன்" என்று கூறினார்.

அவர் சொன்னபடியே நாங்கள் செய்து அவர் விரும்பிய பாடல்களையே அவரது ஜீவன் பிரியும் நேரத்திலும் அவரது அடக்க ஆராதனையிலும் மென்மையாகப் பாடினோம்.

 
அனீவா மொழியில் புதிய ஏற்பாடு (விசுவாசம் என்ற பதத்திற்கு விளக்கம் கிடைத்த அற்புத வரலாறு)

அனீவா மொழியில் நான் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்க்கும்போது "விசுவாசம்" என்ற பதத்திற்கு இணையான சொல்லைக் கண்டுபிடிக்க நான் நீண்ட நாட்களாக முயற்சித்தேன். நீண்ட காலமாகவே இந்த விசுவாசம் என்ற வார்த்தைக்குப் பொருத்தமான சொல் அம்மொழியில் கிடைக்காததால் எனது மொழிபெயர்ப்புப் பணி பெரிதும் தாமதிக்கப்பட்டதுடன் பாதிக்கவும் பட்டது. ஏனெனில் அந்த தீவின் மக்கள் விசுவாசிப்பது என்ற பதத்திற்குக் "கேட்பது" என்ற வினைச்சொல்லையே பயன்படுத்தி வந்தனர். யாரையாவது பார்த்து நீ ஆண்டவரை விசுவாசிக்கின்றாயா? என்று கேட்டால் அவர்கள் "ஆம், நான் ஆண்டவரைக் கேட்டேன்" என்பார்கள். விசுவாசிக்கவில்லை என்றால் "இல்லை நான் ஆண்டவரைக் கேட்கவில்லை" என்று சொல்லுவார்கள். இது விசுவாசம் என்ற பதத்தில் உள்ள ஆழ்ந்த சத்தியத்தை வலியுறுத்துவதாக இல்லாததால் அந்த வார்த்தைக்கு உரிய பொருளைத்தரும் சரியான சொல் கிடைக்க நான் அதிகமாக ஜெபித்தேன். அந்த தீவில் இருந்த அநேக புத்திசாலியான மக்களும் கூட எனக்கு உதவி செய்ய முடியவில்லை.

ஒரு நாள் நான் மிஷன் வீட்டில் இந்த வார்த்தைக்கு உரிய சொல்லைக் கண்டு அறியும்படி சமையலறை நாற்காலியில் அமர்ந்தபடி அதைக்குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் அந்த தீவைச் சேர்ந்த ஒரு புத்திசாலியான பெண்மணி வந்தாள். அப்போது தேவன் இந்த வார்த்தைக்கான சரியான சொல்லை அறியும்படி இப்பெண்மணியிடம் கேட்கும்படியாக என்னை உணர்த்தினார். நான் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தபடியால் இந்த எண்ணம் திடீர் என வந்தது. ஆகவே அப்பெண்ணிடம் "நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன்" என்றேன். அதற்கு அவள் பதிலாக "கோய்காயி அனா மிஸி" (நீங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்கள் மிஸி) என்றாள்.

உடனே நான் தரையில் ஊன்றியிருந்த என் கால்களை நாற்காலியின் குறுக்கு சட்டத்தில் வைத்துக் கொண்டு முழுமையாக நாற்காலியில் சாய்ந்து இளைப்பாறுவது போல் அமர்ந்தபடி அவளைப்பார்த்து "இப்போது நான் என்ன செய்கின்றேன்" என்றேன்.

அவள் "பக்காரோன்ங்ரோன்ங்கோ மிஸி" (நீங்கள் உங்களை எல்லா ஆதாரத்திலிருந்தும் விடுவித்துக்கொண்டு முழுவதுமாக நாற்காலியில் சாய்ந்து இருக்கிறீர்கள்) என்றாள்.

"ஆ அதுதான்!" என்று நான் மகிழ்ச்சி பரவசத்துடன் ஆனந்தமாக குதித்தேன். எனது ஜெபம் கேட்கப்பட்டது என்று உணர்ந்தேன். இயேசுவின் மீது முழுவதுமாக சாய்ந்திருப்பதே இரட்சிக்கும் விசுவாசத்திற்குச் சரியான இணைச்சொல்லாக இருக்கமுடியும் என உணர்ந்தேன். "பக்காரோன்ங் ரோன்ங்கோ ஜெசு இயா அனியா மோரி" (நித்தியம் மட்டாக இயேசுவின்மேல் முழுமையாக சார்ந்திருப்பது) என்பதே அந்த தீவின் கிறிஸ்தவ மக்களின் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இதின் மூலம் விசுவாசத்தின் ஆழ்ந்த பொருளை அந்த தீவின் மக்கள் முழுமையாக விளங்கிக் கொள்ள முடிந்தது. அல்லேலூயா.

 
உலக சுவிசேஷ பயணம்

1899 ஆம் ஆண்டு ஜாண் ஜி.பேட்டன் உலக சுற்றுப் பயணம் செய்ய அழைக்கப்பட்டார். 76 வயது நிரம்பிய வயோதிபராக இருந்தபோதும் தேவன் வழிநடத்துகின்ற எதற்கும் கீழ்ப்படிய பூரண ஆயத்தமாக இருந்தார். அமெரிக்காவிலும், கனடாவிலும் அவர் நீண்ட தூரம் ரயில்களில் பிரயாணம் செய்ய வேண்டியதாக இருந்தது. தாம் பேசிய கூட்டங்களில் நியூ ஹெப்ரீடிஸ் தீவுகளில் வாழ்கின்ற மக்களுக்கு வெடி மருந்து பொருட்களையோ அல்லது போதை வஸ்துக்களையோ அங்குள்ள எவரும் விற்காதபடி தடைவிதிக்க அந்த மக்களிடம் மன்றாடினார். அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் ஆழ்ந்த கரிசனையோடு அவரது செய்திகளைக் கேட்டதோடு அவரது அருமையான ஊழியங்களுக்காக மக்கள் நன்கொடைகளையும், காணிக்கைகளையும் தாராளமாகக் கொடுத்தனர். அவரது நீண்ட பயணங்கள், தொடர்ச்சியான கூட்டங்களால் அவரது உடல் சோர்ந்து போயிற்று. அதினால் அவரை ஓய்வெடுக்க யாராவது வேண்டினால் அவரது தீர்மானமான பதில் "நான் மரிக்கும்வரை உழைப்பேன்" என்பதே.

அவர் கனடா, ஸ்காட்லாந்து தேசங்களின் சபைகளுக்கு தனது உள்ளம் நிறைந்த அன்பையும், நன்றியையும் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள சபைகளும் அதுவரை அவரது தேவ ஊழியத்தின் பொறுப்புகளை சுமந்து வந்திருந்ததினால் அவைகளுக்கும் தனது நெஞ்சார நன்றியைத் தெரிவித்தார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போதுதான் டாணாவில் ஊழியம் செய்த அவரது மகன் பிராங்கை அங்குள்ள காட்டு மிராண்டிகள் கொல்ல முயன்றனர். தேவகிருபையால் மயிரிழையில் குண்டின் குறி தவறிவிட்டது. அதே நேரத்தில் அனீவாவில் இருந்த பிராங்கின் மகன் இறந்துவிட்டான். இந்த செய்திகளால் பேட்டனின் இருதயம் துயரத்தால் நிறைந்தது.

 
உடல்நிலை பாதிப்புக்குள்ளானது

எக்கு போன்ற மனமும், எளிதில் விட்டுக்கொடுக்காத மன உறுதியும், கடைசி சொட்டு இரத்தம் இருக்கும்வரை விரட்டி விரட்டி உடலை வேலை வாங்கி வலி சோர்பு களைப்பு போன்றவற்றை சிந்திக்கவிடாமல் தொடர்ந்து அவைகளை மறுத்து வந்ததால் பேட்டனின் உடல்நிலை முழுவதும் பெலவீனமானது. தனது உடலில் ஏற்படும் கடும் உபாதைகளை உணர்ந்தும் அவர் தனது சரீரத்தைக் கூட்டங்களுக்கும், ரயில் பயணங்களுக்கும் இழுத்துச் சென்றார். என்னதான் முயன்றாலும் அவரது உடலின் உபாதைகளை அவரால் இனியும் மறைக்க இயலவில்லை.

 
தீவுகளை நோக்கி மீண்டும் பிரயாணம்

இந்த சூழ்நிலையில் 1902 ஆம் ஆண்டில் பேட்டன் மீண்டும் அனீவாவிற்கு பயணமானார். அவரது மகிழ்ச்சியை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. தனது ஆவிக்குரிய பிள்ளைகளிடம் தான் செல்லப் போகின்றோம் என்ற நினைவே அவரை மீண்டும் இளைஞராக்கியது. அனீவாவை அடைந்ததும் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:-

"நான் கரையை அடைந்தபோது எனக்குள் ஏற்பட்ட கர்த்தருக்குள்ளான ஆனந்த உணர்வுகளை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது மனைவியும் அத்தீவில் கரை இறங்கியபோது எங்களுக்காக காத்திருந்த இளைஞர்களும், முதியோரும் தங்கள் கரங்களைத் தட்டியபடியே எங்களை வரவேற்க ஓடி வந்தனர். அநேகருடைய கண்களில் கண்ணீர் வடிந்தது. ஆலயத்தில் நடைபெற்ற துதி ஆராதனை எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. அவர்கள் எங்கள் வருகையைக் குறித்து தேவனைத் துதித்து பாடிய பாடல்களையும் அவர்களின் நெஞ்சங்களிலிருந்து நன்றியுடன் புறப்பட்ட வார்த்தைகளையும் தேவனது மகிமைக்காக கனி கொடுக்க ஆவிக்குரிய வல்லமையையும், அர்ப்பணிப்பையும் தரும்படி தேவ ஆசீர்வாதத்திற்காக அவர்கள் ஏறெடுத்த ஜெபங்களையும் கேட்டபோது அவைகள் பரத்திலிருந்து வரும் ஆசீர்வாதத்தைப் போலிருந்தது. நாங்கள் அங்கு இல்லாதபோதும் அங்கிருந்த ஆசிரியர்கள் உண்மையுடன் உழைத்திருந்தனர். அங்கிருந்த பிள்ளைகள் எல்லாரும் அனீவா மொழியில் உள்ள தங்கள் புதிய ஏற்பாட்டை பிழையில்லாமல் வாசிக்கக் கற்றுக்கொண்டிருந்தனர். நாங்கள் அவர்கள் எல்லாருக்கும் புதிய பாடல் புத்தகங்களைக் கொடுத்தோம்.

 
கிரேட் பிரிட்டனிலிருந்த தனது
ஆவிக்குரிய நண்பர்களுக்கு பேட்டன் எழுதியது:-

"நீங்கள் எங்களது மிஷன் ஊழியத்திற்கென முறுமுறுப்பில்லாமல் தியாக அன்புடன் செய்த அனைத்து உதவிகளையும், கொடுத்த காணிக்கைகளையும் நினைக்கையில் கண்ணீர் என் கண்களை மறைக்கிறது. கர்த்தர் அதற்கான நிறைவான பிரதிபலனை உங்களுக்குத் தந்தருள்வாராக.

இந்த தீவுகளில் நடைபெறும் ஊழியம் எங்களை அதிகம் உற்சாகப்படுத்துகிறது. பள்ளிகள், ஆசிரியர்களால் முறையாக நடத்தப் படுகின்றன. இரட்சிக்கப்படாதவர்களை இரட்சிப்பிற்குள் கொண்டு வர உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இரட்சிக்கப் பட்டவர்கள் கிறிஸ்தவ கிராமங்களை அமைத்து உள்ளனர். அனைவரும் ஆடைகள் அணிந்து உள்ளனர். அவர்கள் தங்களுக்கென கட்டியுள்ள வீடுகள் மிக நேர்த்தியாக உள்ளன. மகிழ்ச்சியின் இல்லங்களாக அவைகள் விளங்குகின்றன. அங்குள்ள இரட்சிக்கப்படாதவர்களுக்கு கிறிஸ்துவின் மூலமாகவே மகிழ்ச்சியும், சமாதானமும் கிடைக்கும் என்ற ஆவிக்குரிய பாடத்தை போதிப்பது கிரமமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

தற்போது எனது மனைவி இங்கு மிகவும் சுகயீனமாக உள்ளதால் அவர்கள் நிமித்தம் நாங்கள் ஆஸ்திரேலியா செல்ல உள்ளோம். இல்லாவிடில் நான் இயேசுவிற்காக அனீவாவில் இருக்கவே விரும்புகிறேன். நான் இடுப்பு வலி நோயால் பாதிக்கப்பட்டு இப்போது ஓரளவு குணமாக உள்ளேன். எனது கால்கள் மிகவும் தளர்ந்துபோய் நடுங்குகின்றன. ஆனால் தேவனுக்குச் சித்தமான காலம் மட்டும் இந்த ஆசீர்வாதமான ஊழியத்தைச் செய்ய தேவன் எனக்கு பெலன் தருவார் என்று விசுவாசிக்கின்றேன்"

 
அனீவா தீவிலிருந்து விடைபெற்றார்

1903 ஆம் ஆண்டு பேட்டன் அனீவாவில் இருந்து விடைபெற்றார். அந்த தீவு முழுவதும் கண்ணீரோடு அவருக்கு விடையளித்தனர். அவரை அந்த மக்கள் தேவன் தங்களுக்கு அளித்த தகப்பனாக எண்ணினர். திருமதி பேட்டனும் இதுவே தனது இறுதிப்பயணம் என்று உணர்ந்ததால் தனது அன்பிற்குரியதும் தனது பிள்ளைகளுடன் அநேக ஆண்டுகள் வாழ்ந்ததுமான அந்த தீவை விட்டு பிரிய மனமற்றிருந்தார்கள். இந்தச் சமயம் பேட்டன் தனது 80 ஆம் வயதை எட்டினார்.

தங்களது அன்பான மிஸி அவர்களிடம் இருந்து விடைபெறும் போது அந்த தீவில் அழாதவர்கள் எவருமே இல்லை.

 
நரமாமிசபட்சிணிகளின் ராஜா

பேட்டன் தனது உலக சுற்றுப் பயணத்தின் சமயம் ஒன்றில் இங்கிலாந்து தேசம் சென்றிருந்தபோது "பிரசங்க வேந்தன்" (Price of Preachers) என்று அழைக்கப்படுகின்ற இங்கிலாந்து தேச தேவ பக்தன் ஸ்பர்ஜனை சந்தித்தார். பேட்டனைக் கண்டதும் ஸ்பர்ஜன் அளவில்லா ஆனந்த மகிழ்ச்சி கொண்டு "நரமாமிச பட்சிணிகளின் ராஜா" (The King of Cannibals) என்று தமக்கு முன்பாக கூடியிருந்த மக்களுக்கு பேட்டனை ஆனந்த களிப்புடன் அறிமுகப்படுத்தினார். பேட்டனுடைய அருமையான தேவ ஊழியத்திற்காக ஒரு நல்ல காணிக்கையை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததுடன் "தாவீதின் பொக்கிஷம்" (The Treasury of David) என்ற தலைப்பில் சங்கீதங்களின் புத்தகத்திற்கு தான் எழுதிய புகழ் பெற்ற வியாக்கியான புத்தகங்களின் தொகுப்பையும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 
இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.

நரமாமிச பட்சிணிகளான காட்டு மிராண்டிகள் வாழும் தீவில் எனது ஜீவன் எப்பொழுதும் எனக்கு முன்பாக ஊசல் ஆடிக் கொண்டிருப்பதாக காணப்பட்டது. இரவோ, பகலோ எந்த நேரத்திலும் அந்த காட்டுமிராண்டிகள் எனது வீட்டைச் சூழ்ந்து கொண்டு என்னைக் கொல்லுவதற்கு ஆயத்தமாக எனக்கு நேராக தங்கள் துப்பாக்கியையோ அல்லது வில் அம்பையோ பிடித்துக்கொண்டு நிற்பார்கள். தீவில் மழை இல்லையா? தீவில் வேளாண்மை விளைச்சல் ஏமாற்றம் அளித்துவிட்டதா? மரங்களில் போதிய கனிகள் இல்லையா? தீவில் கொள்ளை நோயா? எல்லாவற்றிற்கும் அங்குள்ள கொடிய பூசாரிகள் எனக்கு நேராக தங்கள் கரங்களை சுட்டிக் காண்பிப்பார்கள். அவ்வளவுதான், காட்டுமிராண்டிகள் எனது வீட்டைச் சுற்றி வளைந்து நிற்பார்கள். அவர்களைப் பார்த்ததும் "இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" (மத்தேயு 28 : 20) என்ற நம் கர்த்தாவின் வாக்கையே மனதில் நினைத்தவனாக முழங்கால்களில் விழுவேன். அப்படிப்பட்ட ஒவ்வொரு சமயங்களிலும் இந்த தேவ வாக்கே என்னைப் பாதுகாத்து நின்றது.

ஒரு சமயம் என்னைக் கொல்லுவதற்கு ஆயத்தமாக வந்த காட்டுமிராண்டிகளிடமிருந்து நான் உயிர் தப்புவதற்காக எனக்கு நம்பகமான ஒரு காட்டுமிராண்டி தலைவனின் வார்த்தையை ஏற்று அவனது பண்ணை தோட்டத்திலிருந்த அடர்த்தியான ஒரு கஷ்கொட்டை மரத்தில் (Chest Nut) ஏறி ஒரு இரா முழுவதும் அந்த மரத்திலேயே மறைந்திருந்தேன். அந்த மரத்தை அந்த தலைவனின் மகன் எனக்குக் காண்பித்தான். இரவில் நிலவு தோன்றி நான் மறைந்திருந்த கஷ்கொட்டை மரத்தின் இலைகளில் எல்லாம் நிலாவின் வெளிச்சம் பட்டுக்கொண்டே இருந்தது. அந்த மரத்தில் நான் மறைந்திருந்த வேளையிலும் "இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" என்ற கர்த்தருடைய வார்த்தைகளே என் உள்ளத்தில் தொனித்து என்னை களிகூரப்பண்ணிக்கொண்டிருந்தது. அன்பின் ஆண்டவருடைய நிறைவான பிரசன்னத்தின் ஒளியை நான் அந்த மரத்தில் உளமார அனுபவித்து ஆனந்தித்தேன்.

 
தேவமனிதரின் கல்லறை வாசகமும் அதுவேதான்

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் பட்டணத்திற்கு வந்த பேட்டனின் உடல் நலம் மிகவும் கவலைக்குரியதானது. 1907 ஆம் ஆண்டு ஜனுவரி 25 ஆம் நாள் பேட்டன் தான் மரித்துக்கொண்டிருப்பதை நன்கு உணர்ந்ததால் தனது மகன் பிரங்கை அருகில் அழைத்து தனது எல்லா பிள்ளைகளுக்காகவும் அவர்களின் பிள்ளைகளுக்காகவும் ஊக்கமாக ஜெபித்தார். அவர்கள் அனைவரும் கர்த்தருடைய பேரின்ப மோட்சானந்த மகிமைக்குள் சேர்க்கப்படவேண்டும் என்றும், ஒருவராவது இழக்கப்பட்டுப் போய்விடக்கூடாது என்றும் அவர் உள்ளம் உருகி மன்றாடினார். இந்த உருக்கமான ஜெபம் அவர்களுக்கு இம்முழு உலகத்தின் ஆஸ்தியைவிட விலையேறப்பெற்ற ஆசீர்வாதமாக இருந்தது.

ஞாயிறு மாலை பேட்டன் நினைவிழந்தார். அவரது படுக்கையைச் சுற்றியிருந்த அனைவரும் அவரது முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்து அமைதியாக ஜெபத்தில் தரித்திருந்தனர். 1907 ஆம் ஆண்டு ஜனுவரி 28 ஆம் நாள் பேட்டன் தமது 83 ஆம் வயதில் தாம் அதிகமாக நேசித்த தனது அன்பின் ஆண்டவருடைய நித்தியானந்த பேரின்ப சமூகத்திற்குள் பிரவேசித்தார். அவரது மூச்சு பிரியும் நேரத்தில் அவரது முகத்தில் தோன்றிய பிரகாசம் பிதாவானவர் தாமே வந்து தமது கரத்தால் அவரை ஏந்திக் கொண்டதால், தனது அன்பின் நேசர் இயேசுவைத் தரிசித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பதைப்போல இருந்தது. அங்கிருந்த அனைவரும் அந்தநேரத்தில் தாங்கள் ஒரு பரிசுத்த ஸ்தலத்தில் இருப்பதைப்போன்று உணர்ந்தனர். தேவ பிரசன்னத்தையும், ஆனந்தத்தையும் அவர்கள் ஆத்துமா உணர்ந்து களிகூர்ந்தது.

மறு நாள் மாலை அவரது உடல் கிவி பிரஸ்பிட்டேரியன் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்க ஆராதனை நடந்தது. அந்த அடக்க ஆராதனை வந்திருந்தோர் யாவரின் உள்ளங்களையும் கர்த்தருக்குள் அசைப்பதாக இருந்தது. அந்த பரிசுத்தவானின் அடக்க ஆராதனையில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து இங்கிலாந்து தேச பிரதமர் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தார். அதை டாக்டர் கெய்ரன் அங்கு வாசித்தார். மனிதனை மனிதன் கொன்று தின்னும் நரமாமிச பட்சிணிகள் வாழும் தீவுகளுக்கு தனது ஜீவனை தனது நேச கர்த்தருக்காக பணயம் வைத்துச் சென்று அவர்களின் மொழியை கற்று அவர்களுக்கு தேவனுடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவித்து, நரமாமிச பட்சிணிகளின் மொழியிலேயே தேவனுடைய புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்துக் கொடுத்து, காட்டுமிராண்டிகளாகவும், நிர்வாணிகளாகவும் நரிகளைப்போல கானகங்களில் ஊளையிட்டுத் திரிந்த அந்த கானக ஜீவிகளின் வாயில் தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அளித்து, அவர்கள் தேவ சமாதானத்தோடும், மனமகிழ்ச்சியோடும் நிலையாக வீடுகளில் வாழவும் இரவும் பகலும் அந்த வீடுகளில் தேவனைத் துதிக்கும் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கவும், ஓய்வுநாட்களில் ஆலயங்களில் கூடி வந்து யேகோவா தேவனை ஆராதித்து ஆனந்திக்கும் சிலாக்கியம் அளித்து, நித்திய ஜீவனுக்கு அவர்களை சுதந்திரவாளிகளாக்கிய அந்த மாபெரும் பரிசுத்த தேவ மனிதர் ஜாண் கிப்ஸன் பேட்டனை கிறிஸ்தவ உலகம் உள்ளவரை ஆனந்தக் களிகூருதலோடு நினைவுகூரும் என்பதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. எல்லா துதி ஸ்தோத்திரத்துக்கும் பாத்திரமானவர் பேட்டனும் அவருக்கு கர்த்தர் கொடுத்த தென் சமுத்திரத் தீவுகளில் உள்ள அவரது பிள்ளைகள் ஆராதித்த யேகோவா தேவன் ஒருவருக்கே.

பேட்டனின் சரீரம் ஆஸ்திரேலியாவின் தலைநகர் மெல்போர்னில் உள்ள போரூன்டாரா (Boroondara) என்ற கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது கல்லறையின் வாசகமாக காலமெல்லாம் அவரை எதிர்முகமாக சந்தித்த மரண நிழலின் பள்ளத்தாக்குகளில் அவரது கிறிஸ்தவ வாழ்க்கையை ஜெயகெம்பீரமாகவும், பாதுகாப்பாகவும் வழிநடத்திச் சென்ற வழிகாட்டி நட்சத்திரம் "இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" (மத்தேயு 28 : 20) என்ற அவருடைய உள்ளத்தை கொள்ளைகொண்ட அருமையான தேவ வசனம் எழுதப்பட்டுள்ளது.


 

எனது தேவனுக்கு முன்பாக உள்ள எனது உத்திரவாதம்

டேனியல் வெப்ஸ்டர் என்ற அமெரிக்கர் தனது முழு அமெரிக்க தேசத்திலும் மாபெரும் மனிதராக ஒரு காலத்தில் கருதப்பட்டார். டேனியல் வெப்ஸ்டர் தலைசிறந்த ராஜதந்திரியாகவும், புகழ்பெற்ற வழக்கறிஞராகவும், மாந்தரின் தலைவனாகவும், சிறப்புமிக்க பேச்சாளருமாகவும் விளங்கினார். அந்த நாட்களில் டேனியல் வெப்ஸ்டருக்கு அமெரிக்க தேசத்தின் மேன்மை பொருந்திய 25 தலைவர்கள் அவரை கௌரவித்து ஒரு சிறப்பான விருந்தை அளித்தனர். அந்த விருந்திற்கு வந்திருந்த 25 பேரில் ஒருவர் அவரைப்பார்த்து "ஐயா, உங்கள் உள்ளத்தில் தோன்றிய மிகவும் பிரதானமான எண்ணம் எது?" என்று கேட்டார். ஒரு கணம் கூட தாமதியாமல் வெப்ஸ்டர் "எனது உள்ளத்தில் தோன்றிய மிகவும் பிரதானமான எண்ணம் என்னவெனில் நான் எனது ஆண்டவருக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்பதே" என்றார்.

அந்தப் பதிலை அவர் கூறிவிட்டு கண்ணீர் பொங்கி வழிய அழுதார். அழுகையின் காரணமாக விருந்திலிருந்து வெளியே செல்ல அனுமதி கேட்டு வெளிச்சென்றுவிட்டு திரும்பவுமாக உள்ளே வந்து அந்த விருந்தினருக்கு "தேவனுக்கு மனிதனின் உத்திரவாதம்" என்ற பொருளில் 30 நிமிடங்கள் உணர்ச்சி ததும்ப உள்ளம் பொங்கிப்பேசினார்.


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM